சேதுவுக்கு ஒரு முகம்-"செய்தியாளன்".
-சேது ரூபன்: சில கருத்துகள்
சேது ரூபன் கேட்கின்றார்"ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா?-குற்றமா?" என.
இதை யாரிடம் கேட்கின்றார்?
பொதுவானவொரு மக்கட்டொகுதியின்முன்!
நன்று.
இதுவரை,புலிகளுக்கும் உங்களுக்குமானவுறவு,தனியே"செய்தியாளன்"என்பதாக இருக்கின்றதெனப் புலம் பெயர் மக்களுக்குச் சொல்கிறீர்கள் இதன் மூலம்!நீங்கள் புலியினது அரசியலை"தமிழீழத்தின்"பொருட்டு ஏற்று,அவர்கட்காகக் கருத்துக்கட்டியதென்பதை பலரும் அறிவர்.இந்த அரசியற்போக்கில் உங்களுக்கும் அரசுக்குமானவுறவு தனியே"செய்தியாளன்"என்பதுவரை நீடித்ததாகவிருந்தால், இலங்கை அரசு சசிகரனை-திச நாயகத்தைக் காரணமின்றித்தாம் கைது செய்து கூட்டில் அடைத்திருக்கிறது என்றாகிறது!
சேது ரூபன் என்ற "செய்தியாளன்"புலிகளையும்,அவர்களது கொலை அரசியல்-போராட்டத்தையும்"நியாயப்படுத்தியது அவரது(சேதுவின்) ஜனநாயக உரிமையென இலங்கை அரசுகொள்ளும்பட்சத்தில், அதை, ஏன் சசிகரனுக்கும்-திசநாயகத்துக்கும் வழங்கவில்லை என்ற கேள்வி எனக்கு விடையளிக்கிற அளவுக்குப் புரிதற்பாட்டை ஏற்படுத்தவில்லை!
இன்று,இலங்கை அரசுக்காகச்"செய்தி கேரிக்கும்-கருத்தூன்றும்"சேதுவுக்கு எங்கிருந்து"புலிகள் வேறு-செய்தியாளன் வேறு"என்ற தத்துவம் சரியாக இருக்கோ, அதை அவர்சார்ந்த அன்றைய புலியும் இன்றைய இலங்கை அரசும் கவனத்தில் கொள்ளாதது சேதுவின் பிரச்சனை இல்லை!அது,அமைப்பினது-அரசினதும் பிரச்சனை.எனவே,சேது சொல்லும்போது அதைப் புரியாதவர் கற்றுக்குட்டி.
இந்தப்பிரச்சனையை மேலும் விருத்திக்கிட்டுச் செல்ல முனையும்போது,சில கேள்விகள் எழுவது தற்செயலானது இல்லை.அது,வர்க்க அரசியலில் வர்க்கஞ்சார்ந்த கொள்கைகளுடைய நமது உணர்வில் அறுதியான-கறாரான புரிதற்பாடு.
என்றபோதும்,சேது,"செய்தியாளன்".
இதன் தெரிவில், இன்று பாசிச இலங்கை அரசோடு கைகுலுக்கும்போது அது தமிழ் பேசும் மக்களது பிரச்சனையுள் கையாண்ட இலங்கையினது பாசிசத்துக்கும் சேதுவுக்கும் எந்த முரண்பாடுமில்லை.காரணம்: சேது வெறும்"செய்தியாளன்"-உலகினால் அங்கீகரிக்கப்பட்ட "செய்தியாளன்". இத்தகைய "செய்தியாளன்" புலிகள் வலுவாக இருந்தபோது, புலிக்காகக் குரல் கொடுப்பது அவரது தார்மீகக் கடமையாகிறது அது குற்றமில்லை!-இதைக் குற்றமென்று எவனும்-எவளும் உரைக்கமுடியாது-இது சேது அவர்களது வாதம்!
நன்று, அன்பா-நன்று!
இதை,இன்று உரக்கக் கூறும் காலமொன்று உருவாகியுள்ளது.
நீங்கள் கைகுலுக்கும்"விரிந்த"தளங்களின் மூலம் உங்களைப்போன்றவொரு செய்தியாளனான திச நாயகத்தை உங்களுடன் உறவாடும் இலங்கை அரசு 20 வருடச் சிறையுள் தள்ளியுள்ளதே! அது, குறித்து உங்களது குரலைக் காணவில்லையே?-இது, ஏன்?
உங்களால் இலங்கை அரசிடம் இவ்வாதத்தைக்(செய்தியாளன் வேறு-புலிகள் வேறு) கறாராகச் சொல்லமுடியுமா? அங்ஙனம், முடியாதுபோனால் உங்களது ஊடகவியல் தர்மத்துக்கமைய அதை உலகத்தில் அம்பலப்படுத்திப் போராடமுடியுமா?-இது உங்களது கடமை இல்லையா?
சேது ருபன் கேட்கிறார், புலிகள் ஏன் தன்னைத் துரோகியாகப் பார்க்கவேண்டுமென.அதாவது,தான் புலியின் உறுப்பினர் என்றால் மட்டுமே அஃது, துரோகமாம்.அஃதாவது, புலிகள் "துரோகி"சொல்லிப் போட்டவர்கள் அனைவரும் புலிகளது உறுப்பினர்தாம் என்று சொல்கிறார்.ஆகப் புலிகள்"துரோகி"என்று கொன்றவர்கள் அனைவரும் புலிகளது உறுப்பினர்களானால், புலிகள் தமது அரசுடனான உறவாடலில், முதலில் கொன்று தள்ளப்பட்டிருக்க வேண்டியவர் பிரபாகரனே.ஏனெனில், அவர்தாம் தனது சுமூகமான உறவாடலைப் பிரேமதாசாவுடன் செய்து,தனது தாய் தந்தையரை இலங்கை அரசின் விமானம் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கூட்டி வரச் செய்தவர்.
இது,வேறு-செய்தியாளனது கடமை வேறு!சொல்லக்கூடும்.சேது,இதைச் சொல்வார்.ஏனெனில்,அவர் புலி உறுப்பினரில்லை-மாறாகப் புலிக்கு ஆதரவாகக் கருத்துக்கட்டியது மட்டும்தாம்.இது,அவரது ஜனநாயக உரிமை!
புலிகளில் கணிசமான தலைவர்களுக்குக் கொள்கை-கோதாரி ஒன்றும் இருந்ததில்லை என்பதற்குச் சேது ரூபன் ஒரு உரைகல்.காற்றடிக்கும் திசைக்கேற்ப அவர்கள் பட்டம் ஏற்றிக்கொள்வர்கள்.இதுதாம,; அடியாட்சேவையின் இன்றைய உதாரணம்.
மக்களைச் சார்ந்து,அவர்களது விடுதலைக்காக இனவாத ஒடுக்குமுறை அரசை எதிர்த்துப்போராடும் அமைப்புக்கு-பத்திரிகையாளனுக்கு, ஒருபோதும் இத்தகைய நடிவடிக்கையைச் செய்ய எதிரி அநுமதிப்பதில்லை.
அரசுக்கும்,புலிக்கும் உறவுவைவைத்து அடுத்துக்கெடுக்கும் உளவாளிகள் மற்றும் ஒடுக்குமுறையாளர்களது ஏவல்படைகளுக்கேதாம் இத்தகைய நிலைப்பாடும்,உறவும் நிலைக்கமுடியும்.இன்றைய புலிகளது அழிவுக்குச் சேது போன்றவர்களது பாத்திரம் மிக நேர்த்தியாக இயங்கி இருக்கிறது.இதைப் பார்க்காத புலிகளது விசுவாசிகள், ஒடுக்கும் வர்க்கத்துச் செய்தியாளன்-பத்திரிகையாளன் இந்து இராமைப் போட்டுத் தாக்கினார்கள்.உள்ளிருந்து கருவறுத்த சேது போன்ற"செய்தியாளர்களை"கவனத்தில் எடுக்காது, தமது நட்பு சக்தியாகக் கனவுகண்டார்கள்.இப்போது,"செய்தியாளன்"உலகு தழுவி ஒடுக்கும் வர்க்கத்தோடு கைகுலுக்கும்போது அது"செய்தியாளன்"தார்மீக உரிமையாகிறது அன்பர் சேதுவுக்கு!
புலிகளின் கணிசமான புலம்பெயர் தலைவர்கள்-பினாமிகளும் இத்தகைய"கொள்ளை"யின் நிமித்தம் இப்போது இலங்கை அரசோடு கைகுலுக்குவது இந்த அர்த்தத்தில்தாம்.
வாசகர்களே,ஒன்றை வடிவாக இனங்காணுங்கள்!அதாவது,இலங்கைப் பாசிச அரசு மக்களைக் கொன்று புலிகளை அழித்ததுமட்டும் வரலாறு இல்லை.அத்தகைய அரசை மிக நேர்த்தியாகத் தாங்கும் இத்தகைய "செய்தியாளர்கள்"தாம் அதன் பாசிசப்போக்கின் கொலைக் களத்தை நியாயப்படுத்தும் முதற்றரமான உந்து சக்திகள்!
இலங்கை அரசை ஆதரித்துச் செய்தி வெளியிடும் செய்தியாளர்களை நாம் கூறுகிறோம்"ஒடுக்குமுறை அரசினது கைக்கூலிகள்"என்று.
அது,பரந்துபட்ட மக்களது நலனினது அடிப்படையில்.
இப்போது,சேது ரூபன் இலங்கை அரசோடும்,அதன் அடக்குமுறை ஜந்திரத்தோடும் உறவாடித்தாம் செய்திகளை மக்களுக்குச் சொல்வதாகவிருந்தால் சேது ரூபன் பரந்துபட்ட மக்களுக்கு எதிரான அரசுசார்பு-ஒடுக்குமுறை ஜந்திரம்சார்பு ஊதுகுழல்.
இத்தகைய ஊடக தர்மம் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை இனங்களதும்,பரந்துபட்ட இலங்கை-உலக மக்களதும் எதிரி என்பது நிர்ணயமானது.
புலிகளின் பினாமிகளுஞ்சரி,புலித்தலைமையும்சரி ஒருபோதும் மக்கள் நலனுடனான கொள்கையுடன் இருந்தவர்களில்லை என்பதை சேதுவின் இன்றைய நிலையிருந்து உரைக்கும்போது,அவர்களில் கணிசமானோர் இன்று இலங்கை அரசின் பின்னேதாம் நிற்கின்றனர்.இது,எதனால் ஆனது?
இதுதாம் வர்க்க நலன் என்பது!
புலிகள் உழைக்கும் வர்க்கத்தின் பரம எதிரி-பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது வர்க்க எதிரி.இதுவேதாம் இன்றைய புலிகளது நிலைக்கான சரியான தெரிவு.இதுவேதாம்,அந்நிய அடியாட்படையென நாம் புலிகளை வரையறை செய்ததற்கான அடிப்படைக் காரணம்.அதன் உச்சபட்ச அரசியலை இன்றைக்குப் புரிவதற்குச் சேது ரூபன் ஒரு உதாரணம்.
சேது மீளவும், அடித்துக் கூறுகிறார்"சேது ரூபன் பாசிசக் கோட்டையின் உறுப்பினர் இல்லை"என.ஆகப் பாசிக் கோட்டை என்பது புலிகள்மட்டும்தாமென இந்தப் புத்திஜீவிச்"செய்தியாளர்"புரிவது புலனதகிறது.
இலங்கை அரசைப் பாசிசக் கோட்டை இல்லை என்று, இதன் மறுபுரிதலை அவர் சொல்லிச் செல்வது மிக அவசியமாகப் புரியப்பட வேண்டியது!
இன்று,புலிகளது விசுவாசிகள் தமக்குள் இருந்த விரோதிகளை இனங்காணாமல், நம்மைப் போட்டு"எட்டப்பன்-காக்கை வன்னியன்"என்று வாந்தியெடுக்கும்போது,முழுமொத்த தமிழ்ச் சமுதாயமே மிகப் பின்தங்கிய புரிதலில் உள்ளது புலனாகிறது.புலிகள் என்ற அமைப்பு, முழுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் தம்மைப்போலவே உருவாக்கித் தமது அடியாட்பாத்திரத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்துவிட்ட வரலாற்றுப்பாத்திரத்தில் சேது ஒரு உரைகல்.
இதற்குமேல், சேதுவுக்கு மக்கள் சமுதாயம் வர்க்கமாக இருப்பதால் அங்கு வர்க்க அரசியலும்-வர்க்க ஒடுக்குமுறையும் உள்ளதென்று கூற நாம் என்ன மூடர்களா?
சேதுவுக்குத் தனது வர்க்க நிலை நன்றாகவே புரிந்துள்ளது.அது,இனிவரும் அரசியலில், சேதுவை இலங்கையின் ஒரு தொகுதிக்குப் பாராளுமன்ற உறுப்பினராக்கும் அரசின் முயற்சியில் கொணர்ந்து நிறுத்தினாலும் ஆச்சரியமுண்டோ?
சேதுவிடம் இரட்டை முகமில்லை என்று அவரே உரைப்பது சரியானது!அது,ஆளும் வர்க்க-ஒடுக்குமுறை வர்க்கத்தின் ஒரே முகம் என்பது சரியானதுதாம் சேது.நான் அதை ஏற்கிறேன்!
நீங்கள்,உங்கள் பரந்துவிரிந்த உறவுகளைச் செவ்வனவே செய்வீர்கள் என்பது உங்களது கருத்திலிருந்துகொள்ளதக்கதே.
ப.வி.ஸ்ரீரங்கன்
29.12.09
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின்...
No comments:
Post a Comment