Monday, December 22, 2008

சில குறிப்புகள்

தமிழ்மக்களும் புலிகளும்,இலங்கை அரசும்


புலிகளின் அடிமட்டப் போராளிகளைக் காத்து நமது மக்களின் அடுத்த கட்டப் போராட்டப் பாதையைத் தகவமைப்பது குறித்து,நமது மக்கள் இன்று நடைபெறும் போருக்கெதிராகக் குரல் கொடுக்கவும்-அது,இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வெடித்துக் கிளம்பியாக வேண்டுமெனக் கூறிய நான், இப்போது பிரமைக்குள் காலத்தைக் கடத்துகிறேன்!

புலிகள் இயக்கத்தை உலகநாடுகள் பல எதிர்க்கின்றன-தடைசெய்கின்றன,அவைகளுக்கான நலன் அடிப்படையில் இவை நிகழ்கின்றன.இது, புலிகளுக்குப் பாதமாக இருப்பினும்,சாரம்சத்தில் புலிகள்சார்ந்த மக்களின் ஆதரவு இருக்குமாயின்-மக்களோடு மக்களாக இருக்கும் பட்சத்தில் எவரும் எந்த அமைப்பையும் அழித்துவிடமுடியாதென்பது உண்மை.ஆனால்,சொந்த மக்களே இப்போது புலிகளுக்கெதிராக ஊர்வலம்-ஆர்ப்பாட்டஞ் செய்கிறார்களென்றால் புலிகளின் நிலை என்ன?அதுவும் பல்லாயிரக்கணக்காகத் திரண்டு புலிகளை எதிர்த்து ஊர்வலம் போகிறார்கள்!இது, நமது போராட்ட வரலாறில் எப்பவும் நிகழ்ந்தது இல்லை.

கடந்தகாலங்களை, இராணுவம் கைப்பற்றிய வலயத்துள் வாழநேரிட்டதன் அடிப்படையில், தமது அன்றாட வாழ்வைக் கவனித்தார்களேயொழிய ஈழப்போராட்டத்துக்கெதிராக ஆர்ப்பாட்டவூர்வலுஞ் சென்றதாக நான் அறியேன்.இப்போது நடந்தேறும் ஊர்வலத்துக்கு இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்பு இருக்கிறதாக இருக்கலாம்.ஆனால்,இவ்வளவு பெருந்தொகையாக மக்களை இராணுவம் திரட்டமுடியாது.அல்லது, டக்ளஸ் போன்ற அரசியல்வாதிகளோ இவ்வகை ஊர்வலங்களைச் சொல்லி மக்களை இவ்வளவு பெருந்தொகையாகக் கடந்தகாலத்தில் அணிதிரட்சிகொள்ளத் தூண்டுதல் சாத்தியமற்றிருந்தது.இன்றிவை சாத்தியமெனும்போது புலிகளின் ஆதிக்கம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்டதென்றாகிறது.ஆதிக்கத்தை இழந்து வெறும் வன்முறைசார்ந்த யுத்த ஜந்திரத்தைத் தமது இயக்கத்தைக்காக்க வைத்திருக்கும் இந்த அமைப்பையும்,மக்கள்மீதான ஆயுத அடக்குமுறைக் கடந்தகாலத் தவறுகளையும் மக்கள் இனிமேலும் பொறுத்திருக்க முடியாமற்றிப்போது துணிந்து எதிர்க்கிறார்களாயின், புலிகளின் தோல்வி நிச்சியமாக்கப்பட்டுள்ளது.அது,இன்னொரு முறை மக்களாண்மைமிக்க அமைப்பாக உருக்கொண்டு,புரட்சிகரமான படையணியாக மாற்முறுவதாயின் அடுத்த ஐம்பதாண்டுகளுக்குச் சாத்தியமில்லை என்றாகிறது இந்த நிகழ்வுகளினூடாக!

சொந்த மக்களே பெருந்திரளாக எதிர்கிறதான இந்தப் புலிகளின் நிலை மாற்றமுறுவதானது"ஈழப்போராட்டம்-தமிழீழம்"எனும் பொய்மைக் கோசங்களுக்குக்கிடைத்த பெருந்தோல்வி மட்டுமல்ல இதன் மூலந்தொலைக்கப்பட்ட வாழ்வைத் தேடுகிற பயணமாகவும் இருக்கலாம்.ஆனால்,எத்தகைய சக்திகளோடிணைந்து இந்தத் தேடுதலைச் செய்வதென்பதில் தமிழ்பேசும் மக்கள் மீளவும் பெருந் தவறிழைக்கின்றார்கள்!இது,வரலாற்றில் தம்மை அடிமைகொள்ளும் ஆதிக்கத்துக்குத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுப்பதாக இருப்பதை அவர்கள் அறியக்கூடிய அரசியல் தெளிவு இல்லாதிருப்பதன் தொடர்ச்சியாக மக்கள் வெறும் மந்தைகளாகப் பின் தொடர்வதில் இந்த அடிமை அரசியல் உச்சம் பெறுகிறது!

ஈழத்தமிழ் மக்களின் சிறந்த பெரியோர்கள்-கல்வியாளர்கள் எல்லோரும் பலியாகிப்போனார்கள்.தமிழீழத்தைச் சொல்லிப் போராடிய நாசகார இயக்கங்கள் தத்தமது அந்நிய விசுவாசத்துக்காக நமது கல்வியாளர்களைத் துரோகி சொல்லிச் சுட்டுக்கொன்றுவிட இந்த மக்கள் சமுதாயம்போதிய அறிவற்று அழிவுவாதிகளின் பின்னே அள்ளுப்பட்டுப்போகிறது.அதன் முன்னறிவிப்பே இன்று புலிகளுக்கெதிரான பெருந்திரளான மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம்.பூனகரியின் இராணுவவெற்றியை யாழ் முற்றவெளியில் கொண்டாட ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் தமிழர்கள் திரண்டதாகவும் சொல்லப்படுகிறது!

தமிழரின் கலாச்சாரக் குறியீடான யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த நாட்களின் புலிகளுக்கெதிரான ஆர்பாட்ட ஊர்வலத்தை யாழ்மக்கள் இலங்கை இராணுவத்தோடு இணைந்து பாரியமுறையில் நடாத்தியுள்ளார்கள்.சுமார் 16.000.மக்கள் கலந்துகொண்ட இந்தப் பாரிய பேரணி புலிகளையும்,அவர்களது போராட்டத்தையும் எதிர்த்துக் குரல்கொடுத்த பேராணியாக உலகில் காட்டப்பட்டுள்ளது.

உண்மையில், யாழ்ப்பாண மக்கள்மட்டுமல்ல கிழக்கிலும்,வன்னியிலும் மக்கள் புலிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டப் பேரணிகளை இலங்கை அரசோடிணைந்து செய்து முடிக்கும் மன நிலையை எங்ஙனம் புரிந்துகொள்வது?

இலங்கையில், புலிகளை இலங்கை அரசோ அல்லது இந்திய அரசோ தோற்கடிக்கவில்லை-அது,மக்களால் தோற்கடிக்கப்படுவதாகச் சமூகவியலாளர் தோழர் இரயாகரன் தொடர்ந்து எழுதிவருவருவதை இந்த மக்களின் செயற்பாடு மிகவும் உறுதிப்படுத்தி வருகிறது.நாம்,மிகவும் காத்திராமகச் சிந்தித்தபோது தோழர் இரயாவை சில கட்டத்தில் நிராகரிப்பதில் எமது கருத்துக்களைக் கக்கி வந்துள்ளோம்.எனினும்,அவர் எதைக்கூறுகிறாரோ அது நிசத்தில்-யதார்த்தத்தில் நடந்தேறி முடிகிறது.

இன்று,பாசிச இலங்கை அரசை இலங்கைத் தமிழர்களில் பெரும்பகுதி மக்கள் ஆதரிக்கும் காரணி என்ன?-ஏன் ஆதரித்து, இலங்கை வன்கொடுமை இராணுவத்தின் பின்னே செல்கிறார்கள்? இத்தகைய கேள்வி மனதில் பெரும் அச்சத்தைத் தந்தாலும் உண்மை மிக இலகுவானது.இதன் தார்மீகப் பொறுப்பு அனைத்தும் ஈழ விடுதலையை முன்னெடுப்பதாகக்கூறும் பாசிசத் தமிழ் இயக்கங்களுக்களையே சார்ந்தது.இவர்களால் பழிவாங்கப்பட்டு, மக்கள் சந்தித்த அடக்குமுறைகளே இப்போது ஆர்ப்பாட்டப் பேரணியாக இலங்கையெங்கும் தமிழ்மக்களால் நடாத்தப்படுகிறது.இப் பேரணிகள் புலிகளை எதிர்த்தும் ,இலங்கை அரசை ஆதிரித்தும் நடை பெறுகிறது என்பது மிகவும் கூர்ந்து நோக்கத் தக்கது!

இது குறித்து எமது மக்கள் மிகவும் தெளிவற்றே அரசியல் செய்கின்றார்கள்.அவர்களது ஆன்ம விருப்பு இன்று புலி எதிர்ப்பாக விரிவடைவதற்கான காரணிகளைப் புலிகள் மறுதலித்த மக்கள் நலன்களிலிருந்தும், மொன்னைத் "தமிழ்த் தேசியம்"பேசியபடி அவர்களை ஒடுக்கியதன் விளைவிலிருந்தும் சமூக ஆவேசமாக மக்கள் கிளர்ந்தெழுகிறார்கள்.இதுவே ஒரு கட்டத்தில் மக்கள் இராணுவத்தின் பின்னே தமது தெரிவுகளைச் செய்து பின்தொடர ஈழப்போராட்டம் மரணப் படுக்கைக்குப் போகிறது!அப்பாடா என்றபடி புலிகளை எதிர்த்துப் பேரணிகள் எழுகின்றன!


இது குறித்து,மிகவும் ஆழ்ந்து நோக்கும்போது சில விடைகளை நாம் கண்டடைய முடியும்:


1: சமாதானக் காலக்கட்டத்தில் ஓர் அரச வடிவத்தைக்கொண்டியங்கிய புலிகள், தமிழ்பேசும் மக்களை ஓடுக்கிப் பலாத்தகாரமான ஆட்சியை நிறுவியது(இதை எதிர்பார்த்த அந்நிய சக்திகளுக்குப் புலிகளின் தனிகாட்டுத் தர்பார் பெரும் அனுகூலமான இன்றைய நிலையை முன்கூட்டியே தெரிவுக்குள்ளாக்கியது இதன் வழி).

2:மிகவும் கொடுமையாக மக்களைக் கருவறுக்கும் வரிகளை மக்களின் அதிமானுடத்தேவைகள்மீது விதித்தது.

3:மக்களைச் சுயமாகச் செயற்பட அனுமதிக்காது அவர்களை ஆயுத ரீதியாக அடக்கி ஆளமுனைந்தது.

4:மக்களின் எந்த விருப்பையும் தமிழ்த் தேசியப் போராட்டத்தைச் சொல்லி நிராகரித்தது,அவர்களின் குழந்தைகளை வலுகட்டாயமாகப்பிடித்துச் சென்று களமுனையில் சிங்கள இராணுவத்திடம் பலியாக்கியது(இதற்கு ஆதாரம்: வன்னியில் வாழும் என் உறவினர்களின் பல குழந்தைகள் செத்து மடிந்தது).


இந்த நான்கு முக்கிய கூறுகளும் இன்று இலங்கை இராணுவத்தை நோக்கி மக்கள் பின்தொடரும் கதவைத் திறந்துள்ளது.


புலிகளின் கொடுமையான ஒடுக்குமுறைக்குள் முகங்கொடுதத் தமிழ்மக்கள் இனம்காணும் இராணுவப் பக்கமுள்ள சாதகமானது:


அ):புலிகளின் ஆயுத அடக்குமுறைக்கொப்ப இலங்கை இராணுவமும் அதே செயலைச் செய்யத்தாம்போகிறது.எனினும்,இலங்கை அரசு தனது மக்களுக்கு இதுநாள்வரை வழங்கிய அதிமானுடத்தேவைகளை நிச்சியம் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கும் செய்யத்தாம் போகிறது எனும் நம்பிக்கை-அதை இலங்கை செய்யத் தொடங்குகிறதென்பது கண்கூடு.

ஆ):மக்கள்மீது கொடிய வரி மற்றும் உணவுப்பொருட்களுக்கான கெடுபிடிகள், மற்றும் அதன்மீதான எதேச்சை வரிவிதிப்பு இலங்கை அரசிடம் இல்லாதிருப்பது

இ): பாரிய யுத்த நடவடிக்கைகளை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதும் மற்றும் அத்தகையவொரு சூழலை இனியும் எதிர்கொள்ள விருப்பற்றதுக்கும் இராணுவ வலயம் சாத்தியமானது.

ஈ): யுத்தத்தைச் சொல்லித் தமது வாழ்வாதாரங்களை இழந்து அகதியாக அலைவதில் மக்கள் உடன்பாடற்றதும் தமது இளைய தலைமுறையை புலிகளுக்கு அடியாளாக அனுப்புவதை-பறிகொடுப்பதைத் தவிர்ப்பதும் இலங்கை அரசைச் சாரும்போது நிகழ்கிறது.

இத்தகைய வினைகளின் பின்னே, இலங்கை அரசின் மிகச் சாதுரியமான அரசியல் வெற்றிகள் நிலை நாட்டப்படுகிறது.இது,புலிகளை மேலும் பலவீனப்படுத்தித் தனிமைப்படுத்தியுள்ளது.

இன்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்யோடும் தமிழர்கள் இராணுவத்தின் பின்னே தமது எதிர்காலத்தைத் தேடியோடுவதன் உண்மைகள் இங்ஙனம் இருக்கும்போது, புலிகள் தமது யுத்தம் மக்களின் பலத்தோடு நடைபெறுவதாகப் பூச்சுற்றுவதில் தமது எதிராளியை இன்னும் பலப்படுத்திவிடுகிறார்கள்.

இன்றையசூழலில், புலிக்கெதிராக உலக இராணுவவலுவோடு போர் செய்யும் இலங்கை அரசு புலிகளின் பகுதியிலிருந்து தப்பிவரும் மக்களை மிகவும் கண்ணியமாக நடாத்துவதாகக் காட்டிப் படம் போடுகிறது.உண்மையில் அந்த அரசு மக்களைத் தன்மானத்துடன் நடாத்துவதற்கான அரசியல் நடாத்தையை இந்திய மத்திய அரசு கண்காணிக்கிறது.இதன் அடிப்படையில் மக்களின் போர்கால அவலத்தை எதன்வடிவிலும் குறைக்கப்பட்டு அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வமாகச் செயற்படுத்தப்படும் இந்திய அரசின் இந்த முயற்சி, இலங்கை இராணுவத்தின் பின்னே மக்களை அலையலையாகப் பின் தொடர வைக்கிறது.

இங்கே,புலிகள் மிகவும் தனிமைப்படுத்தப்படுவதற்கான இந்த இந்திய-இலங்கை வியூகம் மிகவும் சூழலை மதிப்பிட்ட சரியான தெரிவாகவே இருக்கிறது.இதைப் புலிகளால் வெற்றிகொள்வது இனியொரு யுகத்திலும் முடியாது.

மக்கள் இலங்கை அரசின்மீதுகொள்ளும் ஆத்மீக உறவென்பது பலகாலத்தொடர்புகளின் விருத்தியாகும்.அதை ஒருசில கட்டத்தில் எழுந்தவொரு இயக்கத்தால் மிக இலகுவாகத் தேசியத்தைச் சொல்லி வீழ்த்த முடியாது.ஏனெனில்,மக்கள் இயக்கங்களை-தமிழ்த் தேசியவாதத்தை நம்பிக் குரல் கொடுத்துத் தமது சந்ததிகளைப் போரிடக்கொடுத்தும், தமது வாழ்வு இருண்டதைத் தவிர வேறெதையும் இந்த ஈழப்போராட்டம் வழங்கியதல்ல.எனவே,மக்கள் தமது வாழ்வின் பெறுமதியை உணரத்தொடங்குவதில் இலங்கை அரசின் சூழச்சிகள் சாதகமானதாகவும்,சமீபத்துக் கசப்பான அழிவுகளுக்கு வடிகாலாகவும் இருப்பதால் இலங்கை அரசின் பின்னே மக்கள் தொடர்ந்து செல்வார்கள்.இது,புலிகளை முழுமையாக அழிக்கும் போரில் இலங்கை-இந்தியக் கூட்டு இராணுவத்தை மேலும் உறுதியோடு போரிடத் தூண்டும்.


புலிகளை மக்கள்தான் தோற்கடிக்கிறார்கள் என்ற இரயாவின் சரியான மதிப்பீடு இதிலிருந்து உண்மையாகிறது.




ஜசிகரன்,திசநாயகம்,வளர்மதி:


இன்று இலங்கை அரசோ தன் பின்னே தொடரும் தமிழ் மக்களை மிகவும் கண்ணியமாக நடாத்துவதாகப் படம் காட்டுகிறது.யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு, மன்னார் எனத் தொடரும் இந்தப் படங்காட்டல் இன்னொருதளத்தில் மிகவும் ஒடுக்குமுறையாக விரிகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களைக் குறித்துப் பாதுகாப்பு அமைச்சுத் தனது இணையத்தில் கருத்துக் கூறியுள்ளது-புனைந்துள்ளது!இந்தப் புனைவுக்குத் தமிழ் மக்களுக்குள் இருக்கும் அரச சார்பு குழுக்களே உடந்தையாக இருப்பதும் அப்புனைவைத் தெளிவாக வாசிக்கும்போது புரிகிறது.

பத்திரிகையாளர்கள் திசநாயகம் மற்றும் யசிகரன் அவரது துணைவியார் வளர்மதி குறித்துக் கருத்துக்கூறியுள்ள இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு, மிகவும் கீழ்த்தரமாகச் சோடிக்கும் கதைகளோ அதன் பிற்போக்குத்தனமான அரசியலை விளங்கப்போதுமானதாக இருக்கிறது.

ஒரு வெற்றுவேட்டுப் பயங்கரவாத இயக்கம் தெரிவிக்கும் அதே கதையோடு இலங்கை அரசும் கதைவிடுகிறது.அரச பயங்கரவாதத்தை மறைப்பதற்குத் தேச நலன், பயங்கரவாதம் எனும் கதைகளுடாக நன்றாகப் புனைகிறது.மொத்தத்தில் இப்பத்திரிகையாளர்களைக் கொன்று போடுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைக்களுக்கானவொரு வெளியை அது தேடுகிறது.இப்பத்திரிகையாளர்களின் கைது சர்வதேசமயப்பட்டதன் விளைவாகத்தாம் அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.அன்றேல் எப்போதோ இவ்வரசு கொன்று குவித்திருக்கும்.

இலங்கையிலுள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களையும் தமது கொடுங்கோன்மை அரசுக்கு விசுவாசமாக நடக்கும்படி இத்தகையக் கதைச் சோடிப்பினூடாகக் கருத்துகட்டுகிறது மகிந்த குடும்பம்-அரசு.

யசிகரனையும் அவரது துணைவியாரையும் மட்டுமல்ல திசநாயகத்தையும் புலிகளோடு முடிச்சுப் போடுவதில் அதன் மானுட விரோதப்போக்கு மேலும் அம்பலத்துக்கு வருகிறது.இன்றுவரை இலங்கை அரசு செய்துவரும் மிகக் கெடுதியான பக்கங்களை இத்தகைய அதன் விளக்கத்திலிருந்து நமது மக்கள் புரிந்து கொள்ள முடியும்.

புலிகளின் பாபாவுடன் தொடர்பு படுத்தியகதை போதாதென காலஞ்சென்ற தாரகி சிவராமுடனும் தொடர்புகளை வைத்ததாகவும் அவுரோடிணைந்து புலிகளின் பிரச்சாரத்துக்கு மேற்காணும் பத்திரிகையாளர்கள் துணைபோனதாகவும் கதைவிடுவதிலுள்ள உண்மை என்னவென்றால் கைது பண்ணியிருக்கும் இப் பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதும்-முடிப்பதும் உண்மையாக வருகிறது.யசியின் விடுதலைக்காக ஜேர்மனியத் தெருவில் ஜேர்மனியர்கள் சில்லறை சேர்ப்பது வீணாகிவிடுமா?


யசீதரனை விடுவிப்பதற்காக விரும்பும் உலக மக்கள் அனைவருக்கும் தெரியும் அவரது உண்மையான செயற்பாடுகள் யாவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குமானதென்பதும்கூடவே,ஜனநாயகத்துக்கு எதிரான சக்திகளுக்கு எதிரானதென்பதும்.எனினும்,இலங்கை அரசோ மக்களின் நலனைத் தூக்கிப்பிடித்த பேனாக்களைப் புலிக்கு உடந்தையாக வர்ணித்துக் கஷ்ரடியில் போட்டுச் சித்திரவதை செய்கிறது.ஒரு புறம் மக்கள் நண்பனாகக் காட்டும் இராஜபக்ஷ அரசு மறுபுறும் மிகவும் கெடுதியான பாசிசமாக விரிகிறது.இதை நாம் புரிந்துகொள்ளும் மனது எம்மிடம் இப்போது அருகிவருவது எமக்கு ஆபத்தானது.


ப.வி.ஸ்ரீரங்கன்
22.12.2008

3 comments:

ரவி said...

இலங்கை அரசு தளத்தில் இருந்து போட்டோக்களை போட்டு அப்படி என்ன தான் எழுதுவீரோ ?

ஒருவேளை அவனுங்க மக்களை மிரட்டி இதை செய்யவைத்திருந்தால் ?

ஆமாம்...உங்களை யாரோ கொல்லப்போவதாக சொல்லியிருந்தீரே ? இன்னும் இல்லையா ? சொல்லிவிடவும்...

கொழுவி said...

ஏன் ஆதரித்து, இலங்கை வன்கொடுமை இராணுவத்தின் பின்னே செல்கிறார்கள்? //

நல்ல கேள்வி!
இதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து உதயன் பதில் சொல்லியிருக்கிறது.

//
அதேவேளை வடமராட்சி பருத்தித்துறை சிவன்கோவிலடிப்பகுதியிலிருந�
�து மந்திகை ஈ.பி.டி.பி.அலுவலகம் வரை இன்னொரு பேரணியும் நடத்தப்பட்டுள்ளது.
அங்கு "தேவையில்லை யுத்தம்" "தேவையெல்லாம் சமாதானம்"
"வன்னியில் உள்ள மக்களை விடுவிக்க வேண்டும்" ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு சில நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியில் சென்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பேரணியில் கலந்துகொள்ளாதவர்கள் நாளை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.//
http://www.uthayan.com/pages/news_full.php?nid=1189

சிறிரங்கன்! எந்தச் சில்லெடுப்பிலும் சிக்குப்படாமல் யாருடைய ஆக்கினையும் பெறாமல் ஏதோ இருந்து விட்டு போவோம் என்றிருக்கும் மக்கள் - வராவிட்டால் விசாரணை என அறியக் கிடைத்தால் - போய்த் தொலைவோம் - என்றே செல்வார்கள்.

90 ம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேறக் கூடாதென்று நமது தேசிய இராணுவம் ஒழுங்கு செய்த ஊர்வலங்களில் எத்தனை ஊர்வலத்தில் என்னைக் கலந்து கொள்ளச் செய்திருக்கிறார்கள்? அந்த இடத்தில் நான் புலியைத் தோற்கடித்தேனா ?
இல்லை. அவர்கள் தான்(ஒட்டுகுழுத் தேசிய இராணுவம்) என்னைத் தோற்கடித்தார்கள்.

அதே தான் யாழ்ப்பாணத்தில் நடக்கிறது. மக்களின் அபிலாசைகளுக்கு மாறாக - உயிர்/ விசாரணைப் பயங்களை ஏற்படுத்தி மக்களைத் தோற்கடிக்கிறார்கள்.

நீங்கள் வெற்றுத் தகவல்களூடாக தியரிகலாக உங்களை கட்டமைக்கிறீர்கள்.

பிரக்டிகல் ஒன்று உண்டு என்பதையும் - விசாரணைகளுக்காக இராணுவ - ஈபிடிபி வாசல் ஏற விரும்பாத/ வாழ்வு பிரக்டிகலாக சிந்திக்கும் என்பதையும் தாங்கள் உணர வேண்டும்

Sri Rangan said...

//இலங்கை அரசு தளத்தில் இருந்து போட்டோக்களை போட்டு அப்படி என்ன தான் எழுதுவீரோ ?

ஒருவேளை அவனுங்க மக்களை மிரட்டி இதை செய்யவைத்திருந்தால் ?

ஆமாம்...உங்களை யாரோ கொல்லப்போவதாக சொல்லியிருந்தீரே ? இன்னும் இல்லையா ? சொல்லிவிடவும்...//-செந்தழல்ரவி

வாங்க செந்தழல்ரவி,
கேள்வி கேட்ப்பதற்கு முதல் பதிவைப் பொறுமையோடு வாசியுங்களேன்!

அவங்க கொல்கிறார்களோ இல்லையோ நீங்க கொன்னுக்கிட்டிருங்கீங்க...ம்...கொல்வதிலொரு இன்பம்!


//நீங்கள் வெற்றுத் தகவல்களூடாக தியரிகலாக உங்களை கட்டமைக்கிறீர்கள்.

பிரக்டிகல் ஒன்று உண்டு என்பதையும் - விசாரணைகளுக்காக இராணுவ - ஈபிடிபி வாசல் ஏற விரும்பாத/ வாழ்வு பிரக்டிகலாக சிந்திக்கும் என்பதையும் தாங்கள் உணர வேண்டும்//-கொழுவி



கொழுவி,வாங்க-வணக்கம்!

தாங்கள் சொல்லும் பிரக்டிக்கல் சரியானதாக இருக்கவேண்டும்-இருந்தால் சந்தோஷம்! மற்றும்படி, என்ன த்தக் கட்டமைச்சு,மக்களுக்கு இதனால் என்ன வந்துவிடப்போகிறது?;பெரிய-பெரிய தலைகளே ஒண்ணும் பண்ணயில்லையாம்,நாம?

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...