நீயும்-நானும்.
செத்தவர்கள் செத்தவர்களாகச்
சேறடிப்பதும் துரோகி சொல்வதற்கும்
இடப்பட்டவொரு வெளியில்
ஈழம் இருண்டுகிடக்க
பேருரைகள்
ஆய்வுகள் அவசரத்தில்
நீதி பகிர்ந்து...
தொடருகிற யுத்தக் காண்டம்
உடலங்களில் எண்ணிக்கை வைத்து
ஸ்ரீலங்காவின் ஒருமைப்பாட்டை
சிங்கக் கொடியால் பிணைத்தபடி
புலிக்கொடிக்கு நெருப்பிட்டு மகிழ்வதும் தொடர்ந்தபடி
கொடிகள் எரிக்கப்படலாம்
ஏற்றப்படலாம்
கம்பத்தில் மனிதம் தூக்கப்படுவதை
இனவொற்றுமை சொல்லியும்
ஜனநாயகஞ் சொல்லியும்
ஈழ விடுதலை சொல்லியும் நீ நியாயப்படுத்துவதை
இத்துடன் நிறுத்து!
ஒரு போரை
இன்னொரு போரால் நியாயப்படுத்தி
ஓரத்தில் நிற்கும் நீயோ
இலங்கையின் கருப்பு ஜுலை நெடுங்குருதிபற்றி
எல்லோருக்கும் வகுப்பெடுக்கிறாய்
அன்று
அடியாட்களை ஏவிய சிங்கள இனவாதம்
இன்று
உலகமகா ஜனநாயகக் காவலரின் ஆயுதங்களைக் காவி
தேசியக் கொடியைத் தமிழர்களின் பிணங்களின்மீது ஏற்றியபடி
இனப் பிரச்சனைக்குத் தீர்வு
நன்றாகவே புகட்டுகின்றனர்!
எனதுடலின் உயிரைக் குடிக்கும்
மிருகக் கொடிகளுக்குள் மறைந்துகிடக்கும் சாத்தான்கள்
புவிப் பரப்பில் வேதம் ஓதுகின்றன இலங்கைக்குச் சமாதானம் சொல்லி
கிழக்குக்கு ஜனநாயகம் கொணர்ந்த வக்கணையுள்
மகிந்தாவின் மண்டைக்குத் தொப்பி தைப்பதற்கு
நீ
ஸ்டாலினைக் கூட்டிவந்து ஒருமைப்பாட்டைச் சொல்லலாம்
அல்லது
மார்க்சைக் கூட்டி வந்து"இதுதாம் மாங்காய்"என்று
மந்திரஞ் சொல்லலாம்
ஆனால்
தொடரும் நரவேட்டையின் மந்திரக் கோலை
தேர்ந்தெடுத்த அரசுகளுக்காய் விட்டபடி
இதற்குள்
பிட்டுக்கு மண் சுமந்த
சிவன்களாகப் பலர் நமக்குள்ளும்
நித்தியாய்
நிர்மலாவாய்
ராஜேசாய்
ராகவனாய்
ரஞ்சித்தாய் வஞ்சித்து நெடுங்குருதி காணலாம்
வஞ்சித்தே வழக்கப்பட்டவர்களோ
அன்றுகொண்ட வேஷங்களின் கலைப்புக்கு
இன்றுவரை மருத்துவஞ்(சுய(...)விமர்சனம்) சொல்லாதவர்கள்
இன்று
வழிகள் அனைத்திலும்
பெரும் பொறிகள் அமைத்து
தெருவெங்கும் முகமூடியணிந்த முனிவர்களாக
நெடுங் குருதியாற்றில் அமிழ்ந்து தியானித்துக் கொல்(ள்)கிறார்கள்!
புலிக்குப் புசிப்பதற்கு மாவீரர்களும்
சிங்கத்துக்குப் புசிப்பதற்குத் தமிழர்களும் சிங்களவர்களும் மரித்துக்கிடக்க
ஸ்ரீராமச்சக்கரம் விரைவாகச் சுற்றிக்கொள்ளும்
இவ்விரண்டு மிருகங்களுக்கும் சேர்க்கஸ் வகுப்பெடுக்க
இனியென்ன?
செத்தவர்களைச் சொல்லிக்கொள்
ஞாபகப்படுத்திச் சில வினாடி மௌனித்துக்கொள்
இலங்கைக்குள் சமஷ்டி
மாகாணம்
மாநிலம் என்றும் மந்திரம் ஓதிக்கொள்
ஆனால்
ஸ்ரீலங்கா அரசை மட்டும் பகைத்துவிடாதே!
இன்னொரு பொழுதில் நீ அறுவடைக்குப் போவாய்
இருப்பவர்களின் உயிருக்கு உலையும் வைத்து
உனக்கான எலும்பை எறிந்துவிடும் ஸ்ரீலங்கா
சிரித்த முகத்துடன்
தமிழருக்கானவொரு புதைகுழியை
நீ
மாகாணங்களின் பெயர் சொல்லித் தோண்டிக்கொள்வாய்!
இதுதாம்
இன முரண்பாட்டுக்கான "தீர்வுப்பொதி"-இதுவரை நீ செய்ததும் இதுவே.
நாளை நன்றாகவே
நெடுங்குருதிக்குள் சமாதானத்தைப் பேண்
நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும்
தமிழரெனும் நாமத்துடன்
நன்றாகப் பேருரையை எஜமானரின் ஒப்புதலோடு இன்றே எழுதிக்கொள்
அப்போது
நீயே நமது மேய்ப்பன்.
ப.வி.ஸ்ரீரங்கன்
27.07.2008
இரவு மணி:00:34
P/S:படங்கள் பெயரிலிவழி ஈழப் படப்பிடிப்பாளர்களுக்குச் சொந்தம்.நன்றி என்பது உங்களுக்கான வெகுமதி.
No comments:
Post a Comment