Wednesday, May 14, 2008

மகெஸ்வரி வேலாயுதம் மற்றும் கொலைகளும்!

பாசிசத்தின் உச்சக்கட்டம் இலங்கைத் தீவெங்கும்...


நேற்றுப் படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரி வேலாயுதம் போன்று பல்லாயிரம் உயிர்கள் "தேசிய விடுதலையின்"-இலங்கைத் தேசத்தின் பாதுகாப்பின் பெயரால் அந்நிய நலன்களுக்காக இலங்கையரசாலும் ஆயுததாரித் தமிழ் குழுக்களாலும் பறிக்கப்பட்டுவருவது மக்களின் எதிர்கால வாழ்வைக் கேள்விக்குறியாக்குகிறது! இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டினது "அரசியல் தீர்வு" எவ்வளவு நடத்தைகெட்ட ஆளும் வர்கத்தால் தமது இருப்புக்காக இழுத்தடிக்கப்பட்டு வருவதும் அதன் வாயிலாகக் கொலைகள் அரசியலாக மாற்றப்பட்டதென்பதை நாம் உணரும்போது,உண்மையில் தமிழ்பேசும் மக்களோ அல்லது சிங்களம் பேசும் மக்களோ இலங்கையில் எதுவித உரிமையுமற்ற மக்கள் கூட்டமாக மாற்றப்பட்டு, குடிசார் சமூகத்துக்குரிய அனைத்துப் பண்புகளையும் இழந்து வருகிறார்கள்.


இந்த நிலையில் நடந்தேறுகிற அரசியல் கொலைகள் நமது மக்களின் உண்மையான விடுதலையைக் கொச்சைப்படுத்தும் பாரிய சதியுடன் நடந்தேறுகிறது!தினமும் கொல்லப்படும் மனித உயிருக்கு விடுதலையின் பெயரால் "துரோகி"எனும் பட்டம் கொடுக்கப்படுகிறது.பாசிசத்தின் உச்சக்கட்டம் இலங்கைத் தீவெங்கும் படர்ந்து மனித இனத்தின் மகத்துவத்தையே வெறும் இனவாத-தேசியவாதப் புனைவுகளுக்குள் குறுக்கித்"தேசத் துரோகி"எனும் கருத்தாக்கத்தைத் திணிக்கிறது.இதை எந்த முறையிலும் தக்க வைப்பதற்காக எவரையும் "துரோகியாக்கும்"அரசியல் சூழ்ச்சியை இலங்கையரசும் அதைச் சுற்றி நக்கிப் பிழைக்கும் தமிழ் கட்சி-ஆயுததாரிகளும் நடாத்தி வருவதை இன்னும் உச்சத்தில் இனங்காண்பதாக இருப்பின் அது புலிகளின் அழிப்பு யுத்தத்தில் மிக இலகுவாக இனம் காணத்தக்கது!எத்தனை அரசியல் வாதிகளை மற்றும் சமூக நலத் தொண்டர்களை-கல்வியாளர்களை இந்த அரசியல் நடத்தை கொன்று குவித்துள்ளது!இனிமேலும் தொடரும் இந்த அரசியல் தந்திரம் தன்னை இனம் காட்டும் "தேசிய விடுதலை" மற்றும் சுயநிர்ணயவுரிமை என்பதலெல்லாம் வெறும் வெற்றுக் கோஷம் என்பதற்கு மேற்காணும் கொலைகள் சாட்சி.

கெடுதியான காலத்துக்குள் தமிழ்ச் சமூகம் மூழ்கியுள்ளது.இந்தச் சமுதாயமானது எந்தவொரு தர்க்க நியாயத்துக்கும் இடம் கொடுக்காது தன்னைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.இதன் எந்த நகர்வும் அறிவார்ந்த மக்கள் பிரிவால் அங்கீகரிக்க முடியாதவொரு இடர் நிறைந்த,முட்டுக்கட்டையிடும் செயலூக்கமாக மாற்றப்படுகிறது.



இங்கே பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும் அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு 'அரசியல்'செய்கின்றன.இந்த மக்கள் நலன் மறுத்த குழுக்கள் தமக்குள் முட்டிமோதும் 'அரசியல் இலாபத்துக்குள்'மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்து தமிழ் மக்கள் சமுதாயத்தைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கிறது. எந்தக் காரணத்தையும் கொலைகளுக்குச் சொல்ல முடியாது.

மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 'மக்களை'மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிகத் தயாராகிறது.இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.


மொழிக்காக,இனத்துக்காக,தேசத்துக்காக 'உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு'எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டே மனித ஆளுமையைக் காவு கொள்கிறது.இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற 'வர்க்க'அரசியலானது மண்ணையும்,மொழியையும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு மனித விழுமியத்தை ஒருநாளும் முதன்மைப் படுத்துவதில்லை.இது இந்தச் சிந்தனையை உயர்வாகவெண்ணுவதுமில்லை.வடிவமைக்கப்பட்ட நெகிழ்வுத் தன்மையற்ற ஒரு மனிதவடிவைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கும் இந்தத் 'தேசிய' அனுமானங்கள் மக்களின் உரிமைகளின் எல்லையில் தனது வலுக்கரத்தைப் பதிக்கிறபோது அங்கு அராஜகத்துக்கான முளை முகிழ்க்கிறது.இது எதனை முதன்மைப் படுத்த முனைகிறதென்ற புரிதலற்ற சாதாரணக் குடிமக்கள் தமது வாழ்வாதாரத்தைத் தொலைப்பதற்கானவொரு சூழலை, இங்ஙனம் இழப்பதைக்கூட ஒரு கட்டத்தில் 'வடிவ மனிதர்களாகி'பற்பல கதைகளைப் பேசிக்கொள்ளும் தியாகியாக(ஆற்றலுற்ற மனிதவுறுதி) மாறிப் போகிறார்கள்.இந்த ஆற்றலைப் பிழிந்தெடுக்கக் காத்திருக்கும் அதிகாரத்துவத்தின் கனவானது அந்தத் திசையை மிக ஆழமாகப் புரிந்து கொண்டு மக்களின் -இனத்தின் புற வாழ்வைப் பற்றியவொரு 'பொற்காலக் கற்பனைகளைத்'தயாhப்படுத்திக் கைவசம் வைத்துக் கொள்கிறது. இது மனித இயக்கத்தையே கட்டுப்படுத்தும் அல்லது அவர்களது சிந்தனையைப் பிம்பங்களின்(தேசம்,தேசியம்,இனம்,பண்பாடு,மொழி) பண்புக்கமையத் தயார்ப்படுத்தும் கருத்தியல் மனதை அவர்களிடம் தோற்றுகிறது.உண்மையான 'இருப்பானது'நிசத்தில் அழிக்கப்பட்டபின் எஞ்சுவது சுமைகாவும் ஒரு ஜந்திரமே,இந்த ஜந்திரமானது பல வர்ணக் கனவுகளோடு,பெருமிதங்களோடு உயிர் வாழக் கற்றுக் கொண்ட சூழலுக்குள் வந்துவிடும்போது இதன் 'வியாபித்த'மனிதமற்ற சமூகப்பங்களிப்பானது 'வர்க்க'அரசியலுக்கும் அதன் மிதமான எதிர் பார்ப்புகளுக்கும் எந்தப் பங்கமும் விளைவிக்காத பாதகமற்ற சமூக நிர்ணயத்தைக் உள்வாங்கிக் கொள்கிறது.


இங்கே எது நடந்தாலும்'தப்பித்தல்'சாத்தியமாகிறது.அல்லது ஏலவே 'தீர்மானிக்கப்பட்ட'அனுமானங்களுக்காகச் சகிப்புத் தன்மையை(ஜால்றா)மனமுவந்து ஏற்றுக் கொள்கிறது.இது புத்திஜீவிகளிடம் மிகுதியாகக் காணக்கூடியது.எது நடந்தாலும் இந்த மனம் மௌனித்துக்கிடக்கிறது.அல்லதுகவனத்தைத் திசை திருப்பி வேறுபக்கம் தன் ஆற்றலைத் திருப்புகிறது.இதுதாம் நடப்புப் பிரச்சனைகளைப் புறந்தள்ளிவிட்டு உலகக் கலைகளையும்,அவர்களின் உன்னதங்களையும் பேசுகிறது.தன்வீட்டில் சாக்கடை வழிந்து உட்புகப் போகும்போதுகூட இவர்கள் மாற்றானின் மகிமை பேசுவார்கள்.கிட்லார் காலத்தில் கூட அறிஞர்கள் இவ்வளவு கேவலமாகக் காயடிக்கப்படவில்லை. அந்தக்காலத்தில் ஐயன் ஸ்ரையின்(Albert EINSTEIN)
இப்படிக் கூறுகிறான்:


>>Die Welt ist
viel zu gefaehrlich,
um darin zu leben-
nicht wegen
der Menschen,
die Boeses tun,
sondern wegen
der Menschen,
die daneben stehen und
sie gewaehren lassen.<< -Albert EINSTEIN



"இவ்வுலகமானது
ரொம்ப அபாயகரமானது,
அதற்குள் வாழ்வதற்கு-
இந்நிலை
மனிதர்களாலோ,
போக்கிரிகளாலோ அல்ல,
மாறாக,
மனிதர்கள்
அருகினிலிருந்து
அவர்களை அநுமதித்து விடுவதாலேயே." -அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்





நம்ம சமூகத்தில் இன்று நிகழும் 'வன் கொடுமைகளை'இந்த ஸ்த்தானத்தில் இருக்கும் மனிதவுள்ளத்திடம் ஆப்பு வைத்தும் எடுத்துரைக்க முடியாது.இந்த வன்கொடுமை தவிர்க்க முடியாத 'அத்துமீறிய'அறமாகப் பண்பாக எடுத்துரைக்கக் காத்திருக்கும் இந்த மனித மனம்.



இன நலனுக்குக்காக எதுவும் செய்யலாம் எனும் ஒரு 'மொன்னைப் பேச்சு'அறிவுத்தளத்தைக் காவுகொண்ட பின் இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது.இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும்.சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது.இத்தகைய சந்தர்ப்பத்தில் மனிதவுயிருக்கான பெறுமானம் வெறும் அடியாட்படைக்குரிய பெறுமானமாகவும், தமது அரசியலுக்கு உடந்தையான மந்தைக் கூட்டமாகவே பயன்படுத்தப்படுகிறது!எனவே இன்னும் பல நூறு கொலைகளை இந்தத் தமிழ்ச் சமுதாயம் "தேசியவிடுதலை-தனிநாட்டுக்"கனவோடு "துரோகி"என்று அங்கீகரித்துக் கொலைகளை நியாப்படுத்தித் தொடர்ந்து கொலைகளையே செய்து வரும்.மக்களின் வாழ்வென்பது பாசிஸ்டுக்களிடம் மண்டியிடுவதாகவே இருக்கப் போகிறது.
ப.வி.ஸ்ரீரங்கன்
14.05.2008

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...