தேசத்தின் வடக்குத் தெற்கு இருமுனையிலும்
யுத்தக் கயிற்றைக் கட்டியது காலம்
ஒரு முனையில் கட்டப்பட்ட யுத்தம்
இப்போது பகிரங்கமாகக் குத்தகைக்கு எடுக்கப்படுகிறது
"யுத்தத் தளபாடங் கொள்முதலுக்கான உதவி"எனும் பெயரில்
மறுபுறம்,
மரணத்தைத் தடுத்தாட்கொள்வதற்கான"தேச விடுதலை" எனும் பெயரில்!
எவருக்குத் தெரியும்
தாய்மையின் பிரசவ வலி?
சுருங்கக் கூறிவிடலாம்,
சுண்ணத்துஞ் செய்துவிடலாம் விடுதலையில் பெயரில்
சில வெற்றிகளில் யுத்தமுனைகள் இரண்டும்
சிலகாலம் உயிர்த்திருக்கும்
மறுபடியும் "ஏலங்கள் விடப்படும்"குத்தகையை வேண்டுவதற்காக
பொடிமெனிக்கே காமனிக்காய்ப் புத்தரிடம் பூக்கொண்டோட
பொன்னம்மாள் கருணைதாசானுக்காய்க் கும்பிடுபோட்டபடி
தேசங்கள் தேவ தூததர்களின் தயவில்
இரும்புகளைக் காவித் திரிவதில்
மக்களின் வயிற்றையும் உயிரையும் பறித்தபடி
புதுக்கணக்கிட்டு யுத்தத்தின் எல்லைகளை நீட்டும்
எலிக் கறியுண்பவன் தேசம்
சந்திரனுக்கு ரொக்கெட்டு விடும் கனவில்
அம்பாணியின் நோட்டுத்தாள்களை வட்டியில் நனைத்தபடி
இலங்கையின் இறைமையை ஏந்தி
பக்ஷவின் மடிக்குள்"போர்ட் மீட்டிங்"நடாத்தும்
யுத்தக்களத்தில் போராளிகளின் மன நிலையையும்
விசாரித்து வைக்கும் சில ஊனத்துப் பிறவிகள்
"விடுதலைப் போராளிகளும்"ஜந்திரமான கூலிப்படையாய்
மெல்ல மாறியதான சாட்சியாய் விரியும் அந்த விசாரிப்பு!
அன்றுமின்றும் குண்டுகள்தான் ஓடுபிரித்து உயிர் கொல்லும்
இப்போது"தேசிய விடுதலையும்"ஓடு பிரிக்கும்,
ஒடுங்கிய சிறுசுகளை அள்ளிச் செல்லும்
சில ஆயிரம்
"டொலருக்கு முன் சிறார் இராணுவம் டொலரல்லாதபின் மாவீரர்" என்ற
புதிய பதிவு தொடரும் பெட்டிகளாய்!
வரலாறு எவ்வாறு எழுதப்படுமோ?
தவித்துப் போவது தாய்மை மட்டுமல்லத் தேசமும்தான்!
தட்டிப் பறித்த சில்லறைகளுக்குப் பதிலாக
உலகம் உயிர்களை எண்ணிக்கொள்ள முனைகிறது
யுத்தின் பெயரிலும்
உணவுத் தேவையின் பெயரிலும்
இங்கு ஒழுங்குற இயங்கும் வியாபாரம்
என்றபோதும்,
எனது நெஞ்சில்
"இறுதிப் போராளி உள்ளவரை
விடுதலைப் போர் தொடரும்"ரீல் விடும் காலம்
மலந் துடைக்கும் காகிதங்களாய் தாய்மையின் வலிகள் ஒதுங்கும்
வறுமையில் அவளது உயிரோ ஊசலாடும்
நம்பிக்கை மட்டும்"பெட்டி"வரும்வரை
மகவுகளின் உடலில்
உயிர் நிலைத்திருக்கும் கனவை விதைத்தபடி...
ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.08
No comments:
Post a Comment