Sunday, April 20, 2008

உணவுப் பற்றாக்குறையின் காரணங்களோடு...

தானியங்களைக் குறிவைக்கும் ஊக வணிகம்.


உலகம், வர்த்தகத்தில் மனித அத்தியாவசியத் தேவைகளையே ஏலமிட்டுக்கொள்கிறது.அது, குறித்து இலக்காக வைத்திருக்கும் அதிமானுடத்தேவையான உணவு "இன்று" புவிப்பரப்பெங்கும் மட்டுபடுத்தப்பட்ட நிலையில், அதன் உற்பத்திப் பொறிமுறை இயங்குகிறது.எங்கும் விலைவாசி-தானியப் பற்றாக்குறை, பண்டமாற்றுக்கான ஊடகத்தின் மிகமிக பற்றாக்குறையான சுற்றோட்டம் உலகத்தில் பலகோடி மானுடரைப் பதம்பார்த்துவருகிறது.எங்கு நோக்கினும் உணவுப் பொருட்களின் விலை வானைத் தொடும் நிலைக்குச் சென்றபடி.ஆப்பிரிக்காவில் மணிக்குப் பல்லாயிரம் உயிர்கள் பட்டுணிக்கு இரையாகிவருகிறார்கள்.90 கோடி ஆபிரிக்க இன மக்கள் வரும் பத்தாண்டுகளில் சரி அரைவாசியாகக் குறைவார்கள்!இதற்கு,எய்ட்சும் உணவுமே காரணமாக இருக்கும்.

இது உண்மையிலேயே ஒரு சோகமான நிலையா?,

உலகின் தானிய உற்பத்தியில் தேக்கமுள்ளதா?

அல்லது, போதாத விளைச்சல் மிகுதியாக உலகை வேட்டையாடுகிறதா?

உண்மையில் தானியத்தின் கையிருப்பும்-விளைச்சலும் திட்டமிட்டு அமுக்கப்படுகிறது!.

செயற்கையான தானிய அழிப்பால் சந்தையைத் தக்க வைக்க முனைந்த சந்தைப் பொருளாதாரமானது இன்று தானியத்தை உலகின் ஊக வணிகத்துக்குள் கொணர்ந்தபின் பங்குச் சந்தைச் சூதாட்டமானது தானியத்தின் செயற்கையான பற்றாக் குறையைவேண்டி நிற்கிறது.ஊக வணிகத்தைச் சூதாட்டமாக வைத்தியக்கும் உலக மூலதன மாபியாக்கள் இன்று தமது வர்த்தகத்தில் தானியங்களைக் குறித்த கவனக்குவிப்பை மேன் மேலும் வளர்த்து,அதைப் பணங் கொழிக்கும் ஊக வணிகமாக்கிப் பங்குகளைவிற்றுப் பணமாக்கி, மூலதனத்தைப் பெருக்கும் குறிக்கோளோடு மனித உணவுத் தேவையையும் சூறையாடிவருகிறது.

இதை முன்னிறுத்தியியங்கும் மேற்குலக ஊக வணிகத் துறையானது தத்தமது பங்குதாரர்களைக் கவரும் மூலோபாயமாகத் தானியத்தின் விலையை மிகமிக உயரத்துக்கு எடுத்துச் செல்வதற்காகவே இன்றைய தானிய விளைச்சலைத் திட்டமிட்டு செயற்கையாக அழிப்பதும் அதன் தொடர்ச்சியாகத் தானியத்திலிருந்து பயோ டீசல்;(Ethanol-E10)உற்பத்தியைத் திட்டமிட்டு ஊக்குவித்து வருகிறது. பெற்றோலோடு இவ்வெண்ணையை;(Ethanol-E10) 10 வீதம் கலந்து விற்பனையை ஊக்குவிக்கிறது.இத்தகைய உற்பத்திக்குப் பெயர் சூழல் மாசுபடுவதைத் தடுத்தலென்று மேற்குலக அரசுகள் கூறுகின்றன.ஆனால்,இது அப்பட்டமான பொய் என்பதை உலக உயிரியல் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

சாரம்சத்தில் தானியத்திலிருந்து பெறப்படும் எரிபொருளானதன் உற்பத்திச் செலவானது அதை விற்பதைவிடப் பலமடங்காகும்.அத்தோடு, அதன் இறுதி மூலமான CO2வின் வெடிப்பானது பெற்றோலியத்தைவிட மிகமோசமாகச் சூழலைப்பாதிக்மென்றும் கூறப்படுகிறது!

இத்தகைய கெடுதியையும் பொருட்படுத்தாது தானியத்திலிருந்து எரிபொருள் எடுக்கும் உற்பத்தியையும் அதன் பாவனையையும் ஊக்குவிக்கும் அரசு அதன் பலாபலனாக வாகனங்கள் மிக விரைவாகப் பழுதடைவதையும் அதன் வாயிலாக மேலும் பல பக்க விளைவையும் திட்டமிட்டே ஊக்கப்படுத்துகிறது.இது, தேங்கிய கனரக உற்பத்தியை மேலும் விரிவாக்கவும் அதன் வாயிலாகத் தொடரும் சந்தைத் தேக்கத்தைத் தடுக்கவும் ஒரு விய+கமாக இதைக் கணிப்பிடுகிறது.இத்தகையவொரு உற்பத்திப் பொறிமுறையின் இன்னொரு வடிவாக உள்வாங்கப்பட்ட ஊக வர்த்தகத்தின் இரும்புப்பிடியில் சிக்கியுள்ள தானிய வர்த்தகம் தனது மிக உபரியைக் குறிவைத்தபடி தானிய உற்பத்தியை கட்டுப்படுத்தும்போது அங்கே செயற்கையான தட்டுப்பாட்டையும்,உலக உணப்வுப் பற்றாக் குறையையும் ஏற்படுத்தி ஊக வணிகத்தின் பொறிவைத் தடுத்துக்கொள்ள முனைகிறது.இதன் ஒரு பகுதி உண்மையைத் தினக்குரலில் கோகர்ணன் மறுபக்கம் வாயிலாகச் சொல்கிறார்.அவரது கட்டுரை முழுமையாக இதன் வர்த்தகப் பொறிமுறையை விளக்க முன்வரவில்லை.எனினும்,தானியங்களின் பற்றாக்குறை,விலையுயர்வு மற்றும் பயோ டீசலாக்க முனையும் தானியத்தின் அழிவால் பசி பட்டுணி உருவாகும் போக்குகளுக்குள் நிலவும் பொறி முறையானது சந்தைப் பொருளாதாரத்தின் தேக்கம்-பின்னடைவு,ஊகவணிகத்தின் பொறிவை தடுத்துக்கொள்ளும் விய+கத்தோடு நடந்தேறுகிறதென்பதை நாம் மறுத்தொதுக்க முடியாதபடி உலக வல்லுனர்களின் ஆய்வுகள் நம் முன் இருக்கிறது.

கடந்த காலங்களில் யுத்தத்தின் மூலமாக அழிவுகளை ஏற்படுத்திச் சந்தைத் தேக்கத்தை நிவர்த்தி செய்த சந்தைப் பொருளாதாரத் தாரளவாதிகள் இப்போது யுத்தத்தை மூலவளத் திருட்டுக்காகச் செய்தபடி, சந்தைத் தேக்கத்துக்கு யுத்தத்தைப்பின் தள்ளி உணவுத் தட்டுப்பாட்டை-தானியத்தை ஆயுதமாக்கி வைக்க முனைகிறது என்பதே உண்மையானது.

புதிய புதிய உத்திகளுடாய் நகரும் மூலதனத்தின் பாய்ச்சல் மனிதவளத்தைத் தடுத்து நிறுத்துவதற்கானவொரு ஆயுதமாக அதையும் நாடுவதற்கானவொரு பகுதி உண்மையையும் அதற்குள் மறைத்தே வைக்கிறது.2050 ஆண்டளவில் உலகின் மொத்த சனத்தொகை 900 கோடியாக உயரவுள்ளது.இதைத் தடுப்பதற்கான பல ரூப மதிப்பீடுகளில் ஒன்று உணவு.மற்றவை:யுத்தம், நோய்க்கிருமிகள் உற்பத்தி,மருந்துத் தட்டுப்பாட்டைச் செயற்கையாக உருவாக்கல் என்று தொடருகிறது.இவை அனைத்தும் ஆபிரிக்கா மற்றும் ஆசியக் கண்ட மக்களைக் குறிவைத்தே இயங்குகிறது.இதை முறியடிப்பதற்கான குறைந்தபட்ச நடவடிக்கைகளோ இன்னும் மனித நலமேம்பாடு குறித்த பர்வையாளரிடம் மேம்போக்காகவே இருந்து வருகிறது.வர்த்தகச் சூதாடிகளின் பின்னே அணிவகுத்திருக்கும் உலக வர்த்தகக் கழகமானது மூன்றும் மண்டல உலகத்தை இங்ஙனம் வேட்டையாடுவதற்கான தொடர்ச்சியாகத் தானியங்களை ஆயுதமாக்கி வருகிறது.இதன் தொடர் தாக்குதலில் ஒன்று மூன்றாமுலக விவசாயிகளுக்கான அரச மானியத்தை அடியோடு குறைத்து இல்லாதாக்கி அவர்களை முடக்குவதால் மூன்றமுலகத்தின் மனித வளத்தைக் கட்டுப்படுத்திக் கணிசமாகக் குறைத்திட முடியுமென்று அதன் திட்டத்தின் ஒரு பகுதி இயங்கியே வருகிறது.


கோகர்ணனின் மறுபக்கக் கட்டுரையில் குறித்துரைக்கும் உணவுப் பற்றாக்குறையின் காரணங்களோடு இவற்றையும் பொருத்தும்போது இதன் யுத்த முனை மிக வலுவாக இயங்குவதை இனம் காண முடிமென்று கருதுகிறோம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
20.04.2008





மறுபக்கம்



இன்றைய உலக உணவு விலை உயர்வுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும், மனிதருடைய உணவுத் தேவையைக் கணிப்பில் எடுக்காமல் லாப நோக்கில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதனாலேயே உணவுப் பற்றாக்குறை உருவாகியுள்ளது என்ற அடிப்படை உண்மையை யாராலும் மூடிமறைக்க இயலாது.


உலக மயமாதலுடன் சேர்ந்து விருத்தி பெற்று வருகிற நுகர்வுப் பண்பாடு பல முக்கியமான வழிகளில் உலகின் தானியத் தட்டுப்பாட்டுக்குக் காரணமாக இருந்து வந்துள்ளது. மூன்றாமுலக நாடுகளில் உருவாகி வளர்ந்து வந்துள்ள புதிய நடுத்தர வர்க்கமும் புதிய பணக்காரப் பரம்பரையும் கைக்கொள்ளுகிற உணவுப் பழக்கங்களில் ஆடம்பரமான உணவுகளும் உணவின் விரயமும் முக்கியமானவை. பெருமளவிலான மாமிச உணவு நுகர்வு காரணமாக மனிதரது உணவுக்குத் தேவையான தானியம் கோழி, மாடு, பன்றி போன்ற விலங்குகளுக்கு தீனியாக்கப்படுகிறது. நான்கு முதல் எட்டுக் கிலோகிராம் வரையிலான தானிய உணவின் மூலமே ஒரு கிலோகிராம் மாமிசம் கிடைக்கிறது. இவ்வாறு பெறப்படுகிற பண்ணை மாமிசம் எவ்வளவு ஆரோக்கியமானது என்பது ஒரு புறமிருக்க, அதன் விளைவான தானியத் தட்டுப்பாடு மிகவுஞ் சமூகக்கேடானது.


நுகர்வுப் பண்பாட்டின் இன்னுமொரு விளைவு ஏதெனில், உணவு பயிரிடப்படுகிற விளைநிலங்கள் வணிகப் பயிர்ச் செய்கைக்காகப் பயன்படத் தொடங்குகின்றன. ஏற்றுமதி வணிகத்தின் கவர்ச்சியால் ஒரு புறமும் பொருளாதார விருத்தி பற்றிய கோணற் பார்வையின் விளைவாகவும் சர்வதேச நிதி நிறுவனங்களின் நெருக்குவாரங்களின் விளைவாகவும் விவசாயிகள் தானிய உற்பத்தியையும் அத்தியாவசிய உணவுப் பயிர் உற்பத்தியையும் கைவிட்டு ஏற்றுமதி வணிகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுமாறு பல மூன்றாமுலக நாடுகளின் ஆட்சியாளர்களால் ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்போக்கு இன்னமும் தொடர்ந்து வருகிறது.


இவற்றைவிடப் பயிர்ச்செய்கைக்கான விதை விநியோகத்தின் மீது சில பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கி வருகிற ஏகபோகம் பல மூன்றாமுலக நாடுகளின் விவசாயத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. வீரிய விதைகள் என்ற பேரில், பாரம்பரியமாகப் பயிரிடப்பட்டு வந்த விதைகளின் இடத்தில், அதிக விளைச்சல் தருகிற புதிய, மரபணு மாற்றப்பட்ட அல்லது கலப்பின விதைகள் பயன்படுகிறபோது அவற்றுக்குத் தேவையான இயந்திரப் பசளை, பூச்சிக் கொல்லிகள், நோய்த்தடுப்பு மருந்துகள் போன்றவற்றின் செலவுகள் சராசரி விவசாயிகட்கும் கட்டுப்படியாவதில்லை. மேலதிகச் செலவுக்கு மேலதிகக் கடனும் கடனுக்குக் கடும் வட்டியுமாக விவசாயிகள் கடனாளிகளாகி மேலும் வறுமைக்குட் தள்ளப்படுகின்றனர். சிலர் போதிய பசளையும் மருந்துகளும் பாவிக்க இயலாமல் குறைவான விளைச்சலால் நட்டப்படுகிறார்கள். இன்று தகவல் தொழில்நுட்பத்தால் செழிக்கிறதாகச் சொல்லப்படுகின்ற இந்திய பொருளாதாரத்தின் கீழ் விவசாயிகளின் தற்கொலை விகிதம் உயர்ந்து வருகிறது.



கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்களை காப்பது நகரப் பொருளாதாரத்தின் செழிப்பல்ல. கிராமங்களின் பொருளாதாரத்தின் சிதைவு தான் அதற்கான முக்கிய காரணம். இத்தகைய ஒரு பின்னணியில் உலக உணவுத் தட்டுப்பாடு என்கிற அபாயம் பற்றி சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் அக்கறையுடையோர் பல ஆண்டுகளாகவே எச்சரித்து வந்துள்ளனர்.


இப்படிப்பட்ட ஒரு பின்னணியிலேயே அண்மைக் காலமாகச் சோளத்திலிருந்து சாராயம் உற்பத்தி செய்து அதைப் பெற்றோலுடன் கலந்து எரிபொருளாக்குகிற தொழில்நுட்பம் எழுச்சி காணத் தொடங்கியுள்ளது. உலக எண்ணெய் விலையின் அதிகரிப்பின் பயனாக அது லாபகரமானதாகவும் அமையலாம். ஆனால், மனித உணவுக்கான தானியமோ தாவர எண்ணெய்ப் பொருளோ எரிபொருளாக்கப்படுவது ஒரு சிலர் சொகுசாக வாழ்வதற்குப் பல கோடிப்பேரைப் பட்டினியிற் தள்ளுகிற காரியமாகும்.


மேற்கூறிய விதமான தாவர எரிபொருட் பாவனை என்றும் சூழலுக்குக் குறைவான தீங்கையோ விளைவிக்கும் என்பது ஒரு வாதமாக முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் அது பொய்யானது. இத்தாவர எரிபொருளிலிருந்து வெளியேறுகிற மாசின் அளவு சொற்ப அளவு குறைவாயிருந்தாலும், அதன் உற்பத்தியின்போது சுற்றுச் சூழலைச் சென்றடைகிற மாசின் அளவு பெரிது. எனவே மனிதருக்கு உணவாக வேண்டிய பொருட்களும் அவற்றை விளைவிக்கிற மண்ணும் ஒரு சிலரது லாப நோக்குக்காகப் பறிக்கப்படுகின்றன என்பதே உண்மை. இப்போக்குத் தொடருமேயானால் அது உலகின் பல நாடுகளை நிரந்தர உணவுப் பற்றாக்குறைக்கும் பொருளாதாரச்சிதைவுக்கும் ஆட்படுத்தி விடும்.


இன்று பல நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக கலவரங்கள் நடக்கின்றன. இந்தக் கலவரங்கள் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகளாகவும் சிலவேளை புரட்சிகர எழுச்சிகளாகவும் மாறலாம். ஏகாதிபத்தியத்துக்கு நண்பர்களாகவுள்ள எகிப்திய, பங்களாதேஷிய ஆட்சியாளர்களால் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதையே முக்கியமாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தை முன்னெடுக்க இயலாது. எனவே ஒருபுறம் பற்றாக்குறையும் கிளர்ச்சியும் இன்னொருபுறம் இராணுவ அடக்கு முறையுமாகவே இந்த நாடுகளின் உடனடியான எதிர்காலம் அமையும்.


இவ்விடயத்தில் மாஓ சேதுங் சீனப்புரட்சியின் வெற்றிக்கு முன்பும் பின்பும் தானிய உற்பத்திக்கு வழங்கி வந்த முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடுவது பொருந்தும். போதிய உணவு உற்பத்தி இல்லாமல் புரட்சிகர இயக்கத்தால் நின்று நிலைக்க இயலாது. எனவே போராட்டம் என்பது விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உணவு உற்பத்தியை மேம்படுத்துகிற போராட்டமாக நாட்டின் விடுதலைக்கு முன்பும் பின்பும் இருந்து வந்தது.
மக்களைச் சார்ந்து இயங்குகிற எந்த விடுதலை இயக்கமும் மக்களின் அடிப்படைத் தேவைகள் பற்றி மிகுந்த கவனஞ் செலுத்துவது அவசியமானது. அவ்வாறு செய்யத் தவறுகிறபோது, அது மக்களிடமிருந்து அந்நியப்படுகிறது. பின்பு அது மக்களுடன் முரண்பட்டு விடுதலை இலக்கையே இழந்து விடுகிறது.



இன்று ஏகாதிபத்திய கல உலகமயமாக்கலும் திறந்த பொருளாதாரமும் நுகர்வுக் கலாசாரமும் சேர்ந்து உருவாக்கியுள்ள உணவுப் பற்றாக்குறை, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் உணவு உற்பத்தியையும் ஒரு முக்கியமான ஆயுதமாக்கியுள்ளது. ஏகாதிபத்தியத்தை முழுமையாக எதிர்க்கிற ஒவ்வொருநாடும் உணவில் தன்நிறைவு என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.



ஏகாதிபத்தியமும் அடக்குமுறை ஆட்சியாளர்களும் பட்டினியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். மக்களின் அரசியல் விடுதலைக்கு அவர்களது அடிப்படையான தேவைகளிலிருந்தும் மக்கள் விடுதலைபெற வேண்டும். அது அவர்களது குறைந்த பட்சத் தேவைகள். முற்று முழுமையாகக் கவனிக்கப்பட வேண்டும். இதைச் செய்யத் தவறுகிற போராட்டத்தால் மக்களின் விடுதலையை உறுதிப்படுத்த இயலாது.
உணவுப் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டம் என்பது தவிர்க்க இயலாமல் இன்று ஏகாதிபத்திய உலக ஒழுங்குக்கும் உலக மயமாக்கலுக்கும் எதிரான ஒரு போராட்டமாகிவிட்டது.


உணவு மறுப்பு ஒரு ஒடுக்குமுறைக் கருவியாகிறபோது, உணவு உற்பத்தியும் உணவின் முறையான விநியோகமும் அதற்கு எதிரான விடுதலைக்கான போராட்டக் கருவிகளாகின்றன.


மக்களுடைய நலன்களை முதன்மைப்படுத்துகிற எந்த ஆட்சியும் எந்த விடுதலை இயக்கமும் உணவு உற்பத்திக்கு முதலிடம் வழங்குகிறபோது அது தவிர்க்க இயலாமலே ஏகாதிபத்தியத்திற்கு எதிர்மாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு உந்தப்படுகிறது. ஏகாதிபத்தியத்துடனான சமரசங்கள் மக்களுடைய அடிப்படைத் தேவைகளின் மறுப்பாகவே அமைய முடியும். இது வரலாறு மீண்டும் மீண்டும் மேலும் வலுவாகக் கூறிவருகிற பாடமாகும்.



http://www.thinakkural.com/news/2008/4/20/sunday/marupakkam.htm

3 comments:

மு. மயூரன் said...

தற்போது இலங்கையில் அரிசி விலை, அரிசி உற்பத்தி முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்தச்சூழலில் கோகர்ணனின் இந்தப்பத்தி தினக்குரலின் இலக்கு வாசகர்களிடம் தாக்கத்தினை உருவாக்கும்.

தாவர எண்ணெயை நேரடியாக வாகன எரிபொருளாகப்பயன்படுத்துவது குறித்த ஜெர்மன் நூல் ஒன்றை கடந்த வருடம் படித்திருந்தேன்.
அதில் இவ்வாறான எண்ணெய் உற்பத்தி தாம் (மேற்கு நாடுகள்) மேற்காசிய நாடுகளில் எணெய்க்குத்தங்கியிருப்பதை குறைக்கும் என்றும், இதனால் மேற்காசிய நாடுகளின் பேரம்பேசும் திறன், ஏகபோகம் குறைக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

தற்போது மேற்காசியாதாண்டி வெனிசுவேலா போன்ற நாடுகளின் அரசியல் மாற்றம் போன்றவற்றோடு "மாற்று" எரிபொருள் குறித்த "அறிவூட்டல்" பரவலாக இடம்பெற்று வருவதைப் பொருத்திப்பார்க்கவும் தோன்றுகிறது.

காட்டாமணக்கு போன்றவற்றிலிருந்து எமக்கான எரிபொருளைத்தயாரித்துக்கொண்டால், எதிர்காலத்தில் நாம் இன்னொரு நாட்டில் தங்கியிருக்கத்தேவையில்லை என்று வலுவாக நம்பிக்கொண்டு எனது நண்பர் ஒருவர் காட்டாமணக்கிலிருந்து வாகன எரிபொருள் தயாரிக்கும் பணிகளை இலங்கையில் தொடங்க மிகவும் முயன்றுகொண்டிருக்கிறார்.

Anonymous said...

The issue is not so simple. As oil prices zoom biofuels will be attractive in many countries. They are renewable and production costs can be controlled. You should ask why oil prices are so high and who gains from that.As an Indian I know that we depend much on oil from abroad and buying that eats away a good portion of our forex earnings. Middle east or Venuzuvela will benefit from higher oil prices but not India. If
National interest demands more biofuels and less import of oil let us go for it. We have suffered enough on account of the behavior of that cartel - OPEC.

Sri Rangan said...

அன்பு மய+ரன்,மற்றும் அநானி நண்பருக்கு வணக்கம்.தங்கள் கருத்துகளுக்கு நன்றி.மய+ரன் உங்கள் கருத்துக்கள் குறித்தும் சில வற்வறைச் சொல்லியாகவேண்டும்.எனினும்,இது குறித்து பின்பு எழுதுகிறேன்.தற்போது வேறொரு வேலையாக ஓடித்திரிகிறேன்.யாழ்ப்பாணத்தில் எனது உறவினர் ஒருவர் காலமான நிகழ்வால் மேற்கொண்டு எழுத முடியவில்லை...

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...