"எலிக்கறி உண்பவன் தேசம்(இந்தியா) எடுத்துப்போடும் ஆயிரம்
கோடிகள் இலங்கையில் அழிப்பது உயிர்களை மட்டுமல்ல!"
உண்மைகளின் முன்னே எந்த வெக்கங்கெட்ட சமரசமும் கிடையாது.யுத்தம் தவிர்கப்படவேண்டும்.ஆளும் சிங்கள அரசின் மிலேச்சத்தனமான கொலைகள் நம்மை நடுங்க வைப்பவை.அதுபோலவே இயக்க அரஜகங்களும்.நமது தாயகத்தில் சுதந்திரமான-யுத்தமேயற்ற சூழலில்-அடிமைவிலங்கொடித்த வாழ்வைத் துய்க்க மனம் அவாவுற்றபடியே வாழ்வு நகர்கிறது!எமது மக்களின் அவலமானது வெறும் அரைவேக்காட்டுத் தனமான குறுந் தேசிய வெறியாகவும் அதுவே அரஜகமாகவும் மாறமுடியாது!ஆனால்,இதுவரையான அனைத்து நகர்வுகளும் எமது மக்களுக்கெதிரானதாகவே நடந்து முடிகிறது.எங்கும் அராஜகம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.வடக்கென்ன கிழக்கென்ன-அனைத்து மக்களும் அராஜ-இயக்கப் பயங்கரவாதத்துக்குள் தமது அடிப்படை உரிமைகளை மெல்ல இழந்து வருகிறார்கள்-குடும்ப ஆட்சிகள் நாட்டின் ஜனநாயகச் சூழலையே இல்லாதாக்கி வருகின்றது!இன்றைய கிழக்கு மாகாண அரசியற் சூழலில் புதிய புதிய அணித்திரட்சிகளும்,சேர்க்கைகளும் தோன்றிக்கொள்ள வியூகங்கள் அமைக்கப்பட்டாச்சு.இதன் முதற்கட்டமானது புலிகளின் ஆளுமையைப் படிப்படியாகச் சிதைத்துவிடுதலும்,அவர்களையும் வெறும் இயக்க நலனோடு பேரம்பேசத் தக்க பலவீனக்காரர்களாக்கித் தமிழர் நலனை முதன்மைப் படுத்த இலாயக்கற்ற குறுங்குழுவாகச் சிதைப்பதில் இந்திய வியூகம் மையங்கொள்கிறது.இங்கே தமிழ்பேசும் மக்களைக் கூறுபோட்டுப் பிரித்தெடுப்பதில் இலங்கை ஜனாதிபதியின் ஈரான் ஜனதிபதிக்கான வரவேற்புரை கச்சிதமாகச் செயற்படுகிறது.புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட இஸ்லாமியரை புத்தளத்தில் அம்போவென்ற கைவிட்ட இலங்கை அரசுகள் இப்போது அவர்களுக்காகக நீலிக் கண்ணீரோடு ஈரான் ஜனாதிபதிக்கு முறையிடுகின்றன. முஸ்லீம் மக்களையும் அவர்களுள் இருக்கும் பிழைப்புவாதத் தலைமைகளையும் பயன்படுத்தும் இந்தியாவோ ஜே.வி.பியை அடுத்த காய்யாகப் பயன் படுத்தித் தமிழர்களுக்கு அற்ப சலுகைகளைக்கூட வழங்கமுடியாத சூழ்நிலையைச் சிங்களமக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது.இதை எந்தச் சந்தர்பத்திலும் வெற்றிகொள்ள முடியாத கருத்தியற்றளமாக உருவாக்குவதில் இந்திய மேலாண்மை கச்சிதமாக் காரியஞ் செய்ய நமது மக்களுள்(தமிழ்-சிங்கள) உறைந்துபோய்கிடக்கும் மனமுடக்கமும்(இன ஐக்கியமின்மை) அவர்களுக்கு வாய்பாக இருக்கிறது.
முகமாலையில் நடந்த யுத்தம்வரை எமது குழந்தைகள் எம் விடிவிற்காய் தாம் மரிப்பதாக நம்பிக் கொண்டே "ஐயோ அம்மா"என்றபடி கத்திக்கொண்டு வெடித்துச் சிதறினார்கள்.அந்த நம்பிக்கை நிசமாகவேண்டுமானால் நாம் இலங்கை வாழ் சகல இனங்களுடனும் ஐக்கியப் பட்ட தோழமையைக் கட்டியொழுப்பி முழு இலங்கைக்குமான புரட்சிகர அரசியலை முன்னெடுப்பதே சரியானது.இதைவிட்ட அரசிலானது களத்திலுள்ள போராளிகளின் மனநிலையை அறிந்துகொள்ளப் பேட்டியெடுக்கிறது.இது முற்றிலுமானவொரு புரட்சிகரமான இராணுவத்துக்குப் பொருந்தாது.ஆனால்,இன்றைய புலிப் போராளிகளுக்கு இது பொருந்தவே செய்கிறது!புரட்சிகரமாகப் போராட்டத்தை முன்னெடுக்கும் சூழலை தமிழ் பேசும் மக்களினமீது ஆதிக்கஞ் செய்யும் அமைப்பாண்மை இடங்கொடுக்காதபோதும் முற்போக்குச் சக்திகளின் சாத்தியமான சிலவெற்றிகளின் உலகச் சூழ்நிலையால் தாம் யுத்தம் எதிர்ப்புக்குள்ளாகிறது.இந்த யுத்தம் தடுத்து நிறுத்தப்பட்டேயாகவேண்டும்.யுத்தத்தால் அழிவுறும் இளைய தலைமுறை தமிழ் பேசும் மக்களின் இருப்பையே அசைக்குமொரு வெற்றிடத்தைத் தந்துகொண்டேயிருக்கிறது.
புலியிலிருந்து பிரிந்த கருணா-பிள்ளையான் துரோகக் கும்பலெல்லாம், மக்கள் இயக்கங்களாக இப்போது கிழக்கிலங்கையில் தலைகாட்டுகின்றனர்.நமது மக்களையின்னும் உயிருள்ள ஜீவிகளாகக் கணிக்காத இவர்கள் மக்களை இளிச்ச வாயர்களாகவெண்ணிக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இந்த நோக்கமானது,புலிகளின் இன்றைய இருப்புக்கான போராட்டச் சூழலில் புலிகளைப் பலவீனப்படுத்துவதும்,அவர்களிடம் முழு அதிகாரமும் போய்ச்சேருவதைத் தடுத்துத் தமது கைகளுக்குள்ளும் சிலவற்றைப் பங்குபோடவெடுக்கும் நோக்கமும்,கூடவே தமது இருத்தலை ஆபத்தாக்காத-உயிருக்கு உத்தரவாதம்கோரும் தந்திரத்தோடு கிழக்கு மக்களையணுகிறார்கள்.
இவர்களேயிப்போது நமது மக்களில் மிக மிகக் கரிசனையான தலைவர்களாகவும்,அமைப்புகளின் செயற்பாட்டாளர்களாகவும் ஒளிவட்டம் கட்டிக்கொண்டு உலாவருகின்றனர்.இந்தத் தளபதிகளையும்,தலைவர்களையும் தத்தெடுத்துக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம் தனது பிராந்திய நலனை இலங்கைக்குள் ஏலவே உறுதிப்படுத்திய நிலையில்,இப்போது புதிய தலைமைத்துவத்தை உருவாக்கித் தனது அபிலாசைக்குகந்த ஆட்சியையும் இலங்கையில் ஏற்படுத்தி,அதன் வாயிலாகத் தமிழர்களது உரிமைகளுக்கு அற்ப சலுகைளால் வேட்டுவைக்கும் காரியத்தில் இறங்கியுள்ளது.அதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆயுதம் வேண்டுவதற்கான குறைந்த வீத வட்டியுடனான கடனைக் கொடுக்க முனைகிறது.இது உண்மையில் இந்தியாவிடமிருந்துமட்டும் எழுந்த கருணையில்லை.மாறாக உலக ஆயுதக் கம்பனிகள் மற்றும் அவைகளின் அரசுகளின் அரசியலோடு எழுந்த திட்டமாகவே இனம் காணத்தக்கது.தொடர்ச்சியான இலங்கை யுத்தத்தால் ஆதாயமடைய முனையும் உலக நலன்களுக்காக நமது மக்கள்-சிறார்கள் செத்தேயாகவேண்டியுள்ளது.தொடர்ச்சியான ஆயுத வழங்கல்கள் தங்கு தடையற்ற சிறார் இராணுவச் சேர்க்கையைச் செய்தே தீரும்.இத்தகைய தருணத்தில் உலகம் சிறார்களுக்காகக் கண்ணீர் வடித்தென்ன காலில் விழுந்தென்ன? எல்லாம் பொது இலாப வேட்கையின் வெவ்வேறு நாடகங்கள்.
இந்தவகை அரசியலுள் அப்பாவி மக்கள் அழியும் யுத்தம் தொடர்கிறதே-இதைத் தடுத்து நிறுத்த முடியாதா?ஈழம் என்பதன் முடிந்த முடிவான தீர்வுக்கு பேச்சு வார்த்தையென்பது சாத்தியமில்லை.எனினும்,புலிகளின் நடேசன்களும் மற்றும்,கோபால்சாமிகளும் கருணாநிதிகளும் பேச்சு வார்தையை நோக்கி அரசியல் செய்வதும்,அதன் தொடர்ச்சியான கருத்தாடல்களும் எதற்கானது?
உண்மையில் நமது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்!
இதை எங்ஙனம் தடுப்பது?
தற்போதைக்காகவேனும் இருதருப்பும்(புலி-சிங்கள அரசு) ஆத்ம சுத்தியோடுகூடிய ஜனநாயக அரசியற்சூழலை ஏற்படுத்த வேண்டும்.அது மக்களின் நலனையே மையப்படுத்தி உருவாகவேண்டும்.ஒருபோதும் பெரும்பான்மையின ஆதிக்கத்தைத் திணிக்காத-சிறுபான்மையினங்களையொடுக்கவொண்ணாத-முற்போக்கு அரசியலாக இருக்கவேண்டும்!இதற்காக யுத்தத்துக்கு எதிரானவொரு போராட்டத்தை மக்களே முன்வந்து செய்தாகவேண்டும்.இது சாத்தியமாகாத சூழலைத்தாம் உலக வல்லரசுகள் இலங்கையிற்தோற்றுவிக்கின்றன.குறிப்பாக இந்தியப் பிராந்திய வல்லரசு.இலங்கைக்கான நிதி உதவிகள் இலங்கை மக்களின் யுத்தச் சூழலைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒத்துழைப்பாக இருக்கவேண்டுமேயொழிய ஆயுதத் தளவாடங்கள் வேண்டுவதற்பான நிதி உதவியாக இருக்க முடியாது.
இங்கு அனைவரும் முதலில் புரியவேண்டியது இன்றைய இலங்கையினதும் புலிகளினதும் மற்றும் குழுக்களினதும் யுத்தங்கள்-கோரிக்கைகள் அரசியல் சூதாட்டங்கள் யாவும் மக்களினது மீட்சிக்கானதோ அல்லது மக்களால் முன்வைக்கப்பட்ட விருப்புகளோ அல்ல. தமிழ்பேசும் இலங்கை மக்களின் நலனும் குறிப்பிட்ட இயக்கங்களின்-அரசுகளின் நலனும் ஒன்றல்ல என்பதே.இயக்கங்களின்-குழுக்களின்-கட்சிகளின் நலன்கள் தவிர்க்க முடியாது மக்கள் நலத்துடன் பிணைகிறது, அவ்வண்ணமே மக்கள் நலன்கள் குறிப்பிட்ட அமைப்புக்களின் நலனாய் தன்னுள் மயக்கமுறுகிறது. உதாரணமாகப் புலிகளை எடுத்தக்கொண்டால் புலிகள் நமது வரலாற்றில் தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது பலரிடம் உண்டு.எனினும், அது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத்தினதும்,இந்திய ஆளும் வர்க்கத்தினது கனவினதும் விளைபொருளாகத் தன்னை வெளிப்படுத்துகிறது.இதனால் பாசிசச் சிங்கள அரசினது தமிழ் மக்கள்மீதான அழித்தொழிப்பு யுத்தத்தை நிலைப்படுத்துவதற்கானவொரு சரியான உந்துதலைப் புலிகளின் இருப்பே தீர்மானிக்கிறது.தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய பிராந்தியவல்லரசின் புவியியற் அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம் புலிகள் அமைப்பின் நலனுள்ளது.இத்தகைய அரசியலை வைத்தே கோபால் சாமிபோன்றோர் இந்திய மத்திய அரசுக்குத் தூது விடுகிறார்கள்.கருணாநிதிகள் மத்திய அரசிடம் இலங்கைக்கான சமாதானத்தைக் கோருகிறார்கள்.இங்கேதான் சூத்திரதாரியின் உண்மை முகம் பளிச்செனத் தெரிகிறது.நோர்வேயில் நின்று நக்சலைட்டுக்களால் இந்தியாவுக்குப் பிரச்சனையெனக் கத்தும் கோபால்சாமிக்குப் புலிகளின் போராட்டம் விடுதலைக்கானதென்பதன் புரிதல் இருப்பது நியாயமானதுதான்!இனம் இனத்தோடு.
புலிகளிடம் இருக்கின்ற அரசியல் புரட்சிகரமற்றதென்பது அவர்களது கால் நூற்றாண்டுப் போராட்டச் செல் நெறியிலிருந்து இனம் காணக்கூடியதே.இதனாற்றான் கோபால் சாமிகள் இந்திய மத்திய அரசிடம் நமது பிரச்சனைக்கான தீர்வைத் தேடுகிறார்கள்.புலிகளும் இந்தியாவோடு பேரம் பேசுவதற்கான நிபந்தனையற்ற "விட்டுக் கொடுப்புகளுக்கு"கோபால்சாமி வடிவில் தூது விடுகிறார்கள்.இதுவே புலிகளைப் பிற்போக்கான முதலாளிய நலன்களுடன் உறவுடையது என்ற மிகக் கறாரான குற்றச் சாட்டுக்கு ஒப்புதல் மொழிவல்ல.எனினும்,புலிகளின் இன்றைய போராட்ட இலக்கு நமது மக்களுக்கு மீளவுமொரு பாரிய இழப்பைத் தந்துவிடப் போவதன் அறிகுறிகளைச் சொல்வதற்கானவொரு எடுகோள் மட்டுமே.
புலிகளால் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை எப்போதுமே தரமுடியாது. இது அவர்களது இயக்க நலனினால் தீர்மானக்கப்பட்டவொன்று.இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்கிறது என்பதைப் புரியாத இயக்கவாத மாயைக்கு முகம்கொடுப்பது பாரிய உபத்திரமானது.ஈழம் குறித்த கனவினது உடலுக்கு புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் போய்விடுகிறது. வெறும் தமிழ்ப் பாசம் இங்கு யாரையும் காப்பாற்றாது.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாகக் கிடக்கிறார்கள்.இதுகூடவொரு பாரிய உடலரசியற் உளவிற்றளத்தை ஏற்படுத்தி ,சமூகத்துள் உள்ளகக் காலனித்துவத்தைத் தோற்றி வைத்திருக்கிறது.இதுவே இன்றைய கிழக்கு மாகாண அரசியல் நகர்வுகளுக்குப் பாரிய ஒத்துழைப்பு நல்கிறது.இயல்புக்கு மாறான அணிச் சேர்க்கைகள் இங்கே நடைபெறவில்லை.அனைத்தும் இந்தப் போராட்ட முறைமைகளின் அறுவடையிலிருந்தே தோற்றம் பெறுகின்றன.புலிகள் அமைப்பு போட்ட குட்டிகளான கருணா-பிள்ளையான் தரப்புகளின் அணிச் சேர்க்கையானது புலிகளின் இயக்கத்துக்குள் உட்கட்சி ஜனநாயகமற்ற போக்குகளிலிருந்தே மையங்கொண்டது.இதையே இந்திய-உலக அரசியல் ஆர்வங்கள் தத்தமக்குச் சாதகமாக்கி வருகின்றன.தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற இந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்; அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போரை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்கிறோம். உழைப்பவர் நலன் முன் வைக்கப்படும் அரசியல் ஈழக்கோசத்தை முன்னெடுக்க முடியாது. அங்கே பெருந்தேசிய வெறிக்குப் பதிலாகக் குறுந்தேசியம் முன் தள்ளப் பட முடியாது.இரண்டும் சாரம்சத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதாம்.
இலங்கை இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தி வரும் உலக வல்லரசுகளின் அப்பட்டமான விருப்பை இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தின் உதவிகளுடாக அச்சொட்டாக இனம் காணமுடியும்.இத்தகைய இந்திய உதவிகளுக்கான மூலகாரணம் புலிகளின் புதிய வர்க்கத் தோற்றத்துடனேயே ஆரம்பமாகிறது.இன்றோ புலிகளின் மேல்மட்ட அமைப்பானது புதிய ஆளும் வர்க்கமாக மாறுகிறுது.அது தரகு முதலாளியமாகத் தன்னை உலகுக்கு இனம் காட்டுகிறது.உலகம் பூராகப் பரந்து வாழும் அகதித் தமிழ் மக்களிடம் வேண்டப்பட்ட யுத்தகால அவசர நிதிகள் மற்றும் மாதாந்த உதவிகள் பெரும் மூலதனமாகத் திரள்கிறது.இது ஏதோவொரு வடிவில் புதிய ஆதிகத்தைத் தமிழ் பேசும் மக்களிடம் ஆயுதப் போராட்டத்துக்கூடாகத் திணித்தே வந்துள்ளது-இதுவே,ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்சேர்ப்புக்கான கட்டாய இராணுவப் பயற்சியை விடுதலையின் பெயரால் முன்நிறுத்தித் தமது படையணிகளுக்கான கட்டாய ஆட்பிடியைச் செய்து வருகிறது.அத்தகைய நிலையில் பெற்றோர்களின் விருப்பத்துக்குமாறான ஆட்சேர்ப்பு தத்தம் பிள்ளைகளைமீளத் தரும்படி வற்புறுத்துவதாக இருக்கும்போது,அத்தகைய சூழலில் பிள்ளைகளை மீளக் கையளிப்பதற்கான அபராதமாகப் பணம் முன்னிறுத்தப்படுகிறது.இதன் அடிப்படையில் கணிசமான தொகை திரட்டப்பட்ட பின்பே பிடிக்கப்பட்ட சிறுவர்கள் மீளப் பெற்றோர்களிடம் கையளிக்கப்படுகிறார்கள்.பணம் கட்ட முடியாதவர்களின் குழந்தைகள் இந்த யுத்தத்தில்"மாவீரர்கள்"என அழிந்து போகிறார்கள்.இது மிக ஆபத்தானவொரு மனித அவலத்தைத் தமிழ்பேசும் குடும்பங்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது.தேசத்தின் விடுதலை என்ற பெயரினால் பட்ட துன்பங்கள் இப்போது மிகக் கொடுமையான மனித மனமுடக்கமாகி அவர்களது வாழ்வில் வெறுப்பை ஏற்படுத்தி வருவது மிக மோசமானதாகும்.இத்தகைய மக்களின் இருண்ட வாழ்வு இலங்கை அரசுக்கு மிகச் சாதகமான பக்கங்களை அரசியல் வரலாற்றில் ஏற்படுத்தி வருகிறது.இன்றைய யுத்தம் இன்னும் ஆயிரக் கணக்காக உயிர்களைக் குடிக்கும்.எனினும்,புலிகள் சொல்லும் தமிழீழம் என்பது கானல் நீரே!
ப.வி.ஸ்ரீரங்கன்
30.04.2008