கொசோவோ மற்றும்
அன்னிய நலன்காக்கும் தமிழ்த் தலைமைகள்.
"Today it might launch a new round of fragmentation in the region because if Kosovo can claim independence, why not western Macedonia, or Republic Srpska, or Herzegovina-Bosnia or Abkhazia, Ossetia? All around the world there are about 3,600 communities that are, all are I'm sure, this afternoon watching what is going to happen because it might set a precedent for similar movements all around," Predrag Simić, Serbia’s Ambassador to France said.
இன்று கொசோவா தனி நாடாகப் பிரகடனஞ் செய்துள்ளது!
இது, அதன் பதினேழு ஆண்டுகளான யுத்தத்தால் நிகழ்ந்த பெறு பேறா?
அதன் மக்களால் நடாத்தப்பட்ட புரட்சிகரமான பணியினால் செர்பிய இனவாத அரசு முறியடிக்கப்பட்டு,வெற்றிகொள்ளப்பட்டதன் பின்பான பிரகடனமா?
தமது மக்களின் அனைத்துரிமைகளையும் உள்ளடக்கியவொரு விடுதலைகொண்ட கொசோவோவா இந்தப் புதிய தேசம்?
இவை நமக்குள் எழும் கேள்விகள்!
இன்றைய(17.02.2008) தினக்குரலில் திரு.கோகர்ணன் என்ற புனை பெயர்கொண்ட (அறியப்பட்ட )பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அன்றைய தமிழ்த்தலைமைகள் தொடக்கம் இன்றைய தமிழ்த்தலைமைகள் வரை விமர்சனத்துக்குள் அடக்கியுள்ளார்கள்.பேராசிரியரின் கருத்துக்கள் மிக யதார்த்தமாக நாம் இனங்கண்ட உண்மைகளாகவே இருக்கிறது.இந்த நிலையில்-
எமது மக்களின் தலைவிதியை எவரும் தீர்மானிக்க முடியாதென்பதற்கு இன்றைய கொசோவோ நல்ல உதாரணமாக இருக்கிறது!
ஆனால்,தமிழர் தலைமைகள் அன்னியத் தேசங்களையும் அவர்களின் ஆசியையும் காத்திருக்கும்போது,அவர்களே கடந்தகாலத்திலிருந்து இன்றைய நிகழ்காலம்வரை நம்மை ஏமாற்றிச் சிங்கள ஒடுக்குமுறையை மிகவும் தந்திரமாக நம்மீது கட்டவிழ்த்துவிட்டதற்கான கடந்தகால அரசியல் நிலைமைகளைச் சொல்கிறார் நமது பேராசிரியர்.
போராட்டம்,கொலை, அழிவு,குருதி,பசி,பட்டுணி-வாழ்விடங்களைவிட்டகலும் அவலம்!இவையெல்லாம் நமது அன்றாட வாழ்வாக மாறிவிட்ட நிலையிலும் நம்மை எவரும் கண்டு கொள்வதே இல்லை!நமது மக்களின் அழிவுக்கும் குருதிதோய்ந்த வாழ்வுக்கும் நாம் நம்பும் இத்தகைய அன்னிய தேசங்களே காரணமாக இருக்கின்றவை என்பதை நாம் நமது கடந்தகால அனுபவத்திலிருந்தும்,இந்த மறுபக்கக் கட்டுரையாளரின் எழுத்திலிருந்தும் அறிய முடியும்!
இன்றைக்கு கொசோவோ எனும் தேசத்தை அங்கீகரிப்பதாகச் சொல்லும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையும்,மேற்குலகத்தின் ஐரோப்பிய ஒன்றியுமும் நேற்று 16.02.2008 அன்றே தமது நீதிபதிகளையும்,சட்ட வல்லுனர்களையும்,சுங்க அதிகாரிகளையும் மற்றும் இராணுவவல்லுநகர்களையும் கொசோவோ நோக்கி அனுப்பிவைத்தன என்கின்றன!ஆனால்,நாமறிய இவர்கள் 90களிலிருந்து அங்கே நிழல் அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொசோவோவின் வளங்களைத் தமது தேசங்களுக்குக் கொணர்ந்துள்ளனர்.இதற்காகவே அவர்கள் அன்றிலிருந்து கொசோவோவை ஒரு நவகாலனிய அரசாங்கத்தின் கீழ் கொணரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.இதன் பொருட்டு இன்றைய தனிநாட்டுப் பிரகடனத்தூடாகச் சட்டபூர்வமானவொரு தமது ஏஜென்டைக் காத்துத் தமது மூலவளத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும்,அதன் வாயிலாகத் தமது தொழிற்சாலைகளின் அதீத உற்பத்தியையும் தொடர்ந்து நிலைப்படுத்தும் ஒரு உறுதியான பங்காளியைத் தயார்ப்படுத்தும் அவசியத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்!
அன்னிய தேசங்களின் கொடிகளைத் தமது தேசத்தோடான நட்புறவுக் கொள்கைகொண்ட தேசங்களாக கொசோவோ மக்கள் கொண்டாடும் நிலையை ஊடகங்கள் உருவாக்கின.
இதே ஊடகங்களும்,அமெரிக்க அரசும் கொசோவின் விடுதலைக்காக அன்று போராடிய யு.சி.கே. அமைப்பை 1998 ஆம் ஆண்டு வரைப் பயங்கர வாத அமைப்பாகவே பிரகடனப்படுத்தி ஒதுக்கி வந்தது.இத்தகைய நிலையில் திடீரென யு.சி.கே அமைப்பானது விடுதலைப்படையாக இப்போது முன்னிறுதப்பட்டு அத் தேசம் தனிநாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது போன்று, நமது தேசத்தையும்,புலிகள் அமைப்பையும் அமெரிக்கா அங்கீகரிக்குமா?
பலரிடம் இக் கேள்விகள் இருக்கின்றன.இக் கேள்விக்கு முதலில் நாம் தெரிய வேண்டியவை பலவுண்டு!
புதிதாக மலர்ந்துவிட்ட கொசோவோ "மக்களினால் விடுவிக்கப்பட்ட தேசமாகவா" இருக்கிறது? என்ற கேள்விக்கு நியாயமாக விடை காண்பவருக்கு அன்னிய நலன்களின் கொடுமை மிக இலகுவாகப் புரியும்.
அத்தேசமானது அன்னிய இராணுவங்களின் துணையோடு,இன்று முழுக்கமுழுக்க அமெரிக்காவினது இராணுவத் தேவைக்கும்,ஐரோப்பியாவின் மூலவளத் தேவைக்குமாக அவர்களால் சேர்பியாவிலிருந்து வலு கட்டாயமாகப் பிரித்துத் தமது சட்டபூர்வமான கொலனிய நாடாக்கப்பட்டுள்ளதென்பதே உண்மையானதாகும்.
இத்தேச மக்கள் செர்பிய அரசின் இரும்பு விலங்குக்குப் பதிலாகச் சொந்த நாடெனும் பொன் விலங்கால் மாட்டப்பட்டுக் கிடக்கிறார்கள்.அவர்களின் இந்தத் தேசமலர்வுக்கான மகிழ்வானது நிரந்தரமற்றது!
இதைப் புரிவதற்குக் காலமெடுக்கத் தேவையில்லை.
அதை அந்தந்த அன்னியநாடுகளின் அரசியல் மற்றும் வியூகத்தின் போக்குகளிலிருந்தே நாம் அறிய முடியும்.
எங்கள் தேசத்துள் நிகழும் போராட்டமானது சுமார் கால் நூற்றாண்டாக யுத்தக்களத்தைத் தொடர்ந்து நடாத்துகிறது.இருந்தும் நமது தேசத்தை விடுவிப்பதற்கான எந்ததச் சர்வதேச அழுத்தங்களும் இதுவரை எமக்குச் சார்பாக எழவில்லை.இது ஏன்?
எம்மைத் தொடுர்ந்து அரசியல்-யுத்த அழுத்தங்களுக்குள் இருத்திவைத்து ஒடுக்கும் முதற்தர ஒடுக்குமுறைத் தேசமாக இருப்பது இந்தியாவென்ற மிகப்பெரும் பாசிச அரசாகும்.இங்கே,நமது தலைவர்களோ அன்றி சாதாரணப் பொதுமக்களோ-ஊடகங்களோ அன்னியத் தேசங்களால் நாம் விடுவிக்கப்பட்டுவிடுவோமென முழங்குகின்றன.
சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டு,நமக்கான தேசத்தைச் சுதந்திரமாகப் பிரகடனப்படுத்தும் முறைமைக்கு உலகம் ஒருங்கே ஆதரவு தருமென எவராது சிந்தித்தால் அது மிகப் பெரும் தவறென்பதை கொசோவோவின் மீதான ஐரோப்பிய-அமெரிக்க ஆர்வங்களிலிருந்து நாம் அறிய முடியும்.
இதையே தினக்குரல் கட்டுரையாளரும் நிறைவாகச் சொல்கிறார்.
படித்துப் பாருங்கள்.
உலக நடப்புகளில் "நமது அரசியலும்" எங்கே,எப்படியான தளத்தில் நகர்வதென்பதை நாம் அறிந்து திருத்தி மீள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகலாம்.
அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
17.02.2008
>>>தமிழ்த் தேசியவாதத் தலைமைகள்
எந்தெந்தச் சமூக வர்க்கங்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கினவோ
அவற்றுக்கு நேரெதிரான நிலைப்பாட்டில்
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகட்காகப் போராடியவர்களாக இடதுசாரிகள் இருந்தார்கள்!<<< -கோகர்ணன்,தினக்குரலில்...
மறுபக்கம் :
//ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நின்றால் தமிழ் மக்களுக்கு
உரிமைகள் கிடையாமற் போகும் என்று நினைக்கிறவர்கள், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல்
வரலாற்றில் இன்று வரை ஏகாதிபத்தியம் யாருடைய தரப்பில் நின்று வந்துள்ளது என்று
நினைத்துப் பார்க்க வேண்டும்.
இலங்கையில் போர் தொடருவது தங்களுக்குப் பயனுள்ளது
என்றால் அதை வெற்றி தோல்வியின்றித் தொடரச் செய்ய அவர்கள் எதையுஞ் செய்வார்கள்.
இடையிடையே கண்டனங்களும் கனிவான சொற்களுங் கேட்கும். சீனா, பாகிஸ்தான், ஈரான் என்று
பூச்சாண்டி காட்டி எதையும் சாதித்து விடுகிறதாக யாரும் நினைத்தால், அவர்கள் படு
முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது தமிழர்கள் எல்லாரும் படு முட்டாள்கள் என்று
நினைக்கிறவர்களாக இருக்க வேண்டும். //
தமிழ் மக்களிடையே ஏகாதிபத்திய எதிர்ப்பு வலுவடைவதைத் தமிழ்த் தேசியவாதிகள் விரும்பியதில்லை. எனினும், இலங்கைத் தேசியம் என்ற கண்ணோட்டத்தில் கொலனிய ஆட்சிக்கு எதிரான சிந்தனையின் முன்னோடியாக இருந்தவர் பொன்னம்பலம் அருணாசலம். அவர் தொழிற்சங்கங்களின் உருவாக்கத்திலும் ஊக்கமளித்து உதவிய ஒருவர். சிங்களத் தேசியவாதிகளால் ஏய்க்கப்பட்ட அவர் அன்றைய சிங்களத் தேசியவாதத்தின் வர்க்கத் தன்மையையும் இலங்கை என்ற அடிப்படையில் சிந்திக்க இயலாமையையும் சரியாக மதிப்பிடத் தவறியதாலேயே விரக்திக்குள்ளானார். எனினும், அவரால் தனது `சகோதரர் இராமநாதன் போன்றோரின் பழைமைவாதத் .தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டுக்கு நகர இயலவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் வரவும் அதன் வேகமான வளர்ச்சியும் மட்டுமே தமிழ்த் தேசியவாதத்தின் பிற்போக்குத்தனமான கொலனிய- ஏகாதிபத்தியம் சார்பான சிந்தனைக்கும் காரணங்களல்ல.
அந்தத் தேசியவாதத்தால் தமிழ் பேசுகிற மூன்று வேறுபட்ட சமூகங்களை காலப்போக்கில் தம்மைத் தனித் தேசிய இனங்களாக அடையாளப்படுத்திக் கொண்டவற்றை இணைக்க இயலவில்லை. அதற்குப் பிரதேச வேறுபாடுகளை மீறித் தனது அரசியலை முன்னெடுக்க நீண்டகாலம் எடுத்தது. அதைக்கூட இன்னமும் சரிவர நிறைவேற்ற இயலவில்லை. தனக்குள் இருக்கிற சாதி , வர்க்கம் என்கிற ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகட்கு நேர்மையாக முகங் கொடுக்க இயலவில்லை.
இதற்கான பல காரணங்களைக் கூறலாம். பிரித்தானிய ஆட்சி போன பின்பே தமிழருக்கு எதிரான பாரபட்சம் வலுத்தது என்பதால், பிரித்தானியரை நம்புவதற்குரிய சூழ்நிலை இருந்தது என்று கூறுகிறார்கள். ஆனாலும், 1957 ஆம் ஆண்டு திருகோணமலை, கட்டுநாயக்க தளங்களை பிரித்தானியர் இலங்கையரிடம் மீளக் கையளிப்பதை நமது தமிழ்த் தலைவர்கள் எதிர்த்த போதும் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மகாராணியாருக்கு அடித்த தந்தி முதலாகக் கோடீஸ்வரன் வழக்கு மேன்முறையீட்டு வரை எதிலுமே பிரித்தானிய அரசு தமிழருக்கு ஆதரவாக எதையுமே செய்யவில்லை.
அமெரிக்கா- பிரித்தானிய - டச்சு எண்ணெய்க் கம்பனிகள் மூன்றும் 1960 இல் தேசியமயமாக்கப்பட்டபோது, அது தர்மமல்ல என்று தமிழரசுத் தலைவர் செல்வநாயகம் சொன்னார் . அந்த நன்றிக்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏதாவது செய்ததா? இல்லை. ஆனாலும், அத்தனை தமிழ்ப் பாராளுமன்றத் தலைமைகளும் இன்று வரை எந்த ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக வாய்திறந்ததில்லை.
1959 முதல் சீன- இந்திய எல்லைத் தகராறு மோதல்கட்கு வழி கோரியது. அவற்றைத் தவிர்க்க இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சீனப் பிரதமர் கையொப்பமிட்டு எழுதிய கடிதத்தை இந்தியா புறக்கணித்தது, பிரித்தானிய ஏகாதிபத்தியம் பறித்து எடுத்ததற்கெல்லாம் தானே வாரிசு என்றதும் போதாமல் சீன- இந்திய எல்லைப் படங்களை மாற்றி வரையும் இந்திய ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சிகள் பற்றியெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்குள்ளிருந்தே உண்மைகள் வெளிவந்துள்ளன. சீன - இந்திய மோதலைத் தொடக்குவதில் இந்தியப் படையினரது சீண்டலுக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது என்றும், சீனாவின் பதிலடி இந்தியா எதிர்பாராதளவு கடுமையாய் இருந்தது என்பதுமே இன்றைய தகவல்கள் கூறுகின்ற உண்மை. இவை 1959 முதல் 1961 வரை சீனத் தரப்புச் சொல்லி வந்தவற்றுடன், உடன்படுகின்றன. எனினும், எந்தப் பொருளாதாரப் பிரச்சினை பற்றியும் அக்கறையற்றதாகவும் எந்தவிதமான சர்வதேச அலுவல்களிலும் அக்கறையற்றதாகவும் காட்டிக் கொண்டு லுமும்பாவின் படுகொலை பற்றியோ கியூபா மீதான அமெரிக்கப் படையெடுப்புப் பற்றியோ அலட்டிக் கொள்ளாத தமிழரசுக் கட்சி யூ.என்.பி.யையும் மிஞ்சிச் சீனாவை ஆக்கிரமிப்பாளன் என்று கண்டித்து அறிக்கை விட்டது.
தமிழ்த் தேசியவாதத் தலைமைகளில் ஏகாதிபத்திய விசுவாசமே சுதந்திர கொங்கோ, கியூபா, சீனா என்பன பற்றிய பகைமையான பார்வைக்கு உதவியது என்பது சரியல்ல. மேலதிகமான காரணங்களும் இருந்தன. தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் எந்தெந்தச் சமூக வர்க்கங்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கினவோ அவற்றுக்கு நேரெதிரான நிலைப்பாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகட்காகப் போராடியவர்களாக இடதுசாரிகள் இருந்தார்கள். எனவே தான், சாதி ஒடுக்குமுறையான, ஊதியங்கட்கான போராட்டம் என்று எது வந்தாலும் தமிழ்த் தேசியவாதப் பாராளுமன்ற உறுப்பினர்கட்குக் கடைவீதியிலும் கம்யூனிஸ்ற்காரன் தான் எதிரி. தொழிற்பிணக்கு நீதிமன்றம் என்றாலும் கம்யூனிஸ்ற்காரன் தான் எதிரி.
1947 இல் மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பை ஒரு இடதுசாரியும் ஆதரிக்கவில்லை. மலையக தமிழர் நீங்கலாக பெரும்பாலான தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஆதரித்தனர். இந்தத் துரோக வரலாறு இன்னமும் தொடருகிறது. இவற்றைப் பற்றி ஆழமாக ஆராய்ந்தால் இன்று வரை தமிழ்த் தேசியவாதத்தை வழிநடத்திய சக்திகள் பற்றிக் கொஞ்சம் விளங்கும்.
ஏகாதிபத்தியவாதிகள் யாருடைய நண்பர்கள் என்பது 1977 க்குப் பிறகு தெளிவாகியிருக்கவேண்டும். ஆனால், 1983 இனப் படுகொலையைக் கண்டித்து மேலை நாடுகளின் கருத்துகள் வெளியிடப்பட்டதும் பெருமளவில் புலம்பெயர்ந்தவர்கள் மலிவான கூலி உழைப்பாளர்களாக அகதிகளாகவும் எந்தவித அந்தஸ்துமற்றுப் புகலிடம் பெறவும் ஏற்கப்பட்டதும் மீண்டும் ஏகாதிபத்தியம் பற்றிய நம்பிக்கைகள் துளிர்விட்டன. எனினும், கடந்த கால் நூற்றாண்டுக்கால ஏமாற்றங்களின் பின்னரும் இன்னமும் சர்வதேச சமூகம், ஐ.நா. குறுக்கீடு, ஐ.நா. அமைதிப் படைகள், ஐ.நா. கண்காணிப்பு என்ற நமது கனவுகள் அடிப்படையின்றி விரிகின்றன.
எங்கள் அனுபவங்களிலிருந்து நாங்கள் கற்றவை அனைத்தையுமே மறுக்கிற விதமாக எங்கள் தலைமைகளது அரசியல் நடத்தை அமைகிறது. அதற்கேற்றபடி ஊடகங்களிலும் `நிபுணர்கள்' எழுதி வருகிறார்கள். தமது பிரச்சினைக்கான தீர்விற்கான சாவி சென்னையில் இருக்கிறது என்று கூட அண்மையில் எழுதப்பட்டது. டில்லியில் தான் அது இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. கண்ணாடியை அணிந்து கொண்டே எல்லா இடத்திலும் அதைத் தேடுகிற ஞாபகமறதிக்காரர் போல நம்மிடமே உள்ளதை எங்கெல்லாமோ தேடுகிறோம்.
ஒன்று மட்டும் விளங்க வேண்டும். இன்று தமிழகத்தில் ஈழத் தமிழர் பற்றிய அனுதாப அலையுள்ளது. ஆயினும், தமிழக அரசோ பிரதான கட்சி எதுவுமோ தமிழருக்கு ஆதரவாக எதுவுமே செய்யாது. ஈழத் தமிழர் பற்றி ஆவேசமாகப் பேசிக் கொண்டே விடுதலைப்புலிகளை ஒழிக்க வேண்டுகிற ஜெயலலிதாவின் கூட்டணி வைக்கச் சிலருக்கு முடிகிறது. அதேபோல, டில்லியின் முடிவுகளை மீற மாட்டேன் என்கிற கருணாநிதியுடன் ஒட்டிக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கவும் சிலருக்கு முடிகிறது. இது தமிழக தாயக மரபு.
ஈழத்தமிழருக்கு ஆதரவான மக்கள் அமைப்புகள் உள்ளன. அவை விடுதலைப்புலிகளை விமர்சனமின்றி ஏற்பவையல்ல. அதேவேளை, சென்னையும் டில்லியும் ஈழத் தமிழர் பிரச்சினையை வைத்து ஆடுகிற நாடகங்களை அவை அம்பலப்படுத்துகின்றன. மாறாக நாங்கள் கேட்க விரும்புகிற பொய்களைச் சொல்கிறவர்களின் மொழி இனியதாயிருக்கலாம். அவர்களது நட்பு சந்தேகத்துக்குரியது.
ஜே.வி.பி. இடையிடையே ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசும். இலங்கையின் உள் அலுவல்களில் அயலார் தலையீட்டை எதிர்த்தும் பேசும். இந்தியாவைக் கண்டித்தும் பேசும். மறுநாள் தூதரகத்தில் அதன் தலைவர்கள் விருந்துபசாரங்களில் சிரித்துப் பேசி மகிழ்வதைக் காணலாம். இந்தியாவும் அமெரிக்காவும் போருக்கு உதவ வேண்டுமென்று அது கோரும். விடுதலைப்புலிகட்கு எதிரான நடவடிக்கைகளை மெச்சியும் பேசும்.
அப்போதெல்லாம் ஜே.வி.பி. ஒரு இடதுசாரிக் கட்சியா என்ற கேள்வி நமது தமிழ்த் தேசியவாதிகட்கு நினைவுக்கு வராது. ஜே.வி.பி. தனது இடதுசாரி வேடம் கலையாதபடி ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசுகிற போது மட்டும் ஜே.வி.பி.யின் பச்சையான இனத்துவேஷமும் அது ஒரு `மாக்சியக் கட்சி' என்கிற கருத்தும் ஒன்று சேர்த்துத்தரப்படும். ஜே.வி.பி.யை இடதுசாரிகள் என்று திரும்பத்திரும்பச் சொல்லி வருகிற சிலர் ஜே.வி.பி. இடதுசாரிக் கட்சி என்று சொல்லத் தகுதியற்றது என்று அறியாமற் சொல்லவில்லை. அவர்கள் மனமறிந்தே பொய்யுரைக்கின்றனர்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நின்றால் தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடையாமற் போகும் என்று நினைக்கிறவர்கள், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் வரலாற்றில் இன்று வரை ஏகாதிபத்தியம் யாருடைய தரப்பில் நின்று வந்துள்ளது என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
இலங்கையில் போர் தொடருவது தங்களுக்குப் பயனுள்ளது என்றால் அதை வெற்றி தோல்வியின்றித் தொடரச் செய்ய அவர்கள் எதையுஞ் செய்வார்கள். இடையிடையே கண்டனங்களும் கனிவான சொற்களுங் கேட்கும். சீனா, பாகிஸ்தான், ஈரான் என்று பூச்சாண்டி காட்டி எதையும் சாதித்து விடுகிறதாக யாரும் நினைத்தால், அவர்கள் படு முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது தமிழர்கள் எல்லாரும் படு முட்டாள்கள் என்று நினைக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
கோகர்ணன்,தினக்குரலில்