Sunday, July 29, 2007

இரமணிதரனும்,மாலனும்...

இரமணிதரனும்,மாலனும்...



-சில கவனக் குறிப்புகள்.


//என் முன்னைய
இடுகை ஒன்றிலே குறிப்பிட்டதுபோல, "யார், எதை, எப்போது, எங்கே செய்தார்" என்பதற்கான
சரியான தரவுக்கோவை முறையான வரலாறாகத் தொகுக்கப்பட்டுப் பதிவாகுவதுகூட அவசியமில்லை.
ஆனால், தவறான, திரிந்த, உறுதியற்ற, மழுங்கிய முன்வைப்புகள் வரலாற்றுத்தரவுகளாகத்
தரப்படும்போது, "யார், எதை, எங்கே, எப்போது, எங்கே செய்யவில்லை" என்பதற்கான
எதிர்த்தரவுக்கோவை முறையாக முன்வைக்கப்பட்டேயாகவேண்டும்.//-/பெயரிலி.


கருத்துகட்குட்பட்ட எல்லைகளிலிருந்து ஒரு வகைப்பட்ட மையத்தைத் தேடுவதும் பின்பு அதன் சாத்தியத்தைக் குறித்து எந்தவகைத் "தெரிவும்" ஒரு எல்லையைத்தாண்டிச் செல்வதும்,அங்ஙனம் செல்லும் வழியில் எவரோ,எப்போதோ வீசியெறிந்தவைக்காக விழிகசக்கிச் சிந்தித்து வருவதும், அந்தச் செயலில் மாண்டு-மூழ்காது போவதும் அவசியம்.இந்த அவசியத்தில் ஆர்த்தெழும்போதும் அங்கே அந்தவுலகம் மிகப் பெரிதாக இருக்கிறது.இன்றையவுலகத்தில் வரலாற்றைத் திருடுவது பின்பு அதைத் தமதாக்குவதும் பண்டுதொட்டு மானுடம் ஆற்றும் செயற்பாடுதாம்.அங்ஙனமின்றி இந்தவுலகத்தில் உண்மையான வரலாறாக எந்த வரலாறுமில்லை.அன்றைக்குஞ்சரி இல்லை இன்றைய அதிபுரட்சிகரமான தகவற்றொழில் நுட்ப வலுவிலுங்சரி உண்மைகளை உரக்கச் சொல்வது சாத்தியமில்லை.இது மனித செயற்பாட்டின் அனைத்துத் தடங்களையுங்வுட்கொண்டே சொல்லப்படுகிறது.ஆக பொத்தாம் பொதுவாகத் தமிழ்ச் சமுதாயத்தின்மீதான வரலாற்றுத் திருட்டுத்தனங்கள் அவர்களை வரலாறற்ற அல்லது வரலாறு தெரியாதவர்களாக்கிய செம்மையான அந்நியத் தலையீடு அந்தச் சமதாயத்தின் இருப்பையே அழித்து விட்டதென்பதை எல்லோரும் உணரக்கடவது.இந்தவகையில் தங்கள் "தெரிவு"அவசியமென்பதை மறுபதற்கில்லை.என்றபோதும் இரமணி இந்த வட்டம் பெரிதென்பதை நீங்கள் உணர்திருப்பீர்கள்.இதுள் பாரபட்சமற்று மனித செயற்பாட்டின் அனைத்துத் தளங்களையும் ஒருவர் கடந்தேகவேண்டும்.இது தொழில் நுட்பத்துக்குள்ளோ அன்றிக் கணினியியல் கருவூலங்களுக்குள்ளோ குறுகிவிட முடியாதல்லவா?அப்போ இது ஒரு சிறு பகுதிதாம்.அந்தத் "தெரிவின்"பாரிய பக்கம் இன்னும் இருள் சூழ்ந்தே கிடக்கிறது.அங்கே மக்கள்தம் உண்மையான வரலாற்றைப் பேராடும் பல்கலைக்கழகங்கள்கூட விஞ்ஞான பூர்வமாய் கற்கை நெறியாக்குவதுமில்லை.அப்படிச் செயற்படுத்தும் வரலாற்றுக் கற்கையும் அதுசார்ந்த தேடுதல்களும் ஆளும் அதிகாரத்தின் எல்லைகளையும் அவற்றைத் தக்கவைக்கும் முனைப்புகளுக்கிசைவானவையாக இருக்கும,; இந்தச் சூழலில் உங்களின் மேற்காட்டிய இந்தக் கூற்று எந்தத் காரணத்துக்கும் பொருந்துமென்றே கருதுகிறேன்.



//மேலே கூறிய காரணத்தினைவிடவும் எனக்கு - ஈழத்தமிழனென்ற அளவிலே- முக்கியமாகும்
இன்னொரு காரணமுண்டு. ஒரு சமூகம் தன் வரலாற்றினை இயன்றவரை தொடர்ச்சியாகவும்
கோவையாகவும் (அது மிகத்திருத்தமாகக்கூட அமைய வேண்டியதில்லை) பதிந்துகொள்வதன் தேவையை
ஈழத்தமிழரின் இன்றைய (வரலாற்று)நிலை உணர்த்தியிருக்கின்றது.//

இங்கேதாம் இரமணி ஒரு உண்மை மிகக் காட்டமாக உணர்வில் உறைகிறது.ஈழத் தமிழர்களின் வரலாறென்பது அவர்களது தொடர்ச்சியான குடிப்பரம்பலாலும்,மானுட வர்க்கப் போராட்டங்களாலும் மிக யதார்த்தமாகப் பதியப்பட்டிருக்கவேண்டும்.ஆனால்,ஈழத் தமிழர்கள் பொத்தாம் பொதுவாகத் தமிழ்ச் சமுதாயமென்றழைக்கும் தகுதியைத் தமது இழி நிலைகளால் இழந்தர்ர்கள்.இது ஒரு மொழி பேசும் மக்கள் தொகுதிக்குள் இயல்பானதாக இருக்கவில்லை.ஒத்த மக்கள்தம்மை ஒருவகையொடுக்குமுறைக்குள் வற்புறுத்தி வெற்றி கொண்டது பொருள் சார்ந்த நலன்களை அவர்களோடு பங்கீடு செய்யாதிருப்பதற்காகவென்பதை நாம் வெறும் பொருளாதார நலன்களுக்குள்மட்டும் குறுக்கிவிடமுடியாது.அங்கே பண்பாட்டுத் தளத்தில் பாரிய பார்ப்பன நெருக்குதல் மனிதப் பண்பையே சாகடித்திருக்கிறது.அரியரெத்தினத்தை அரியம் என்பதும்,கந்தசாமியை கந்தன் என்ற பதிவுகளும்-கந்தன் தோட்டஞ் செய்தான் என்று பாடத்தில் எழுவாய் பயனிலை கற்பிக்கப்பட்டதும் நீங்கள் அறிந்தது.வரலாற்றைச் செம்மையாகக் குறித்துவிட முடியாது.ஆனால,; அங்ஙனம் முனையும்போது மிகத் தெளிவாகச் சில வரையறைகளையும் நாம் செய்து கொள்வது அவசியமாகிவிடும்.ஏனெனில், மனிதர்கள் வர்க்கமாக பொருள்களைக் கவர்ந்து தமது வாழ்வைக் கட்டிவைத்திருக்கும் தரணத்தில் ஒவ்வொரு வர்க்கமும் தத்தமது வர்க்கத் தளத்திலிருந்து மற்றையத் தளத்திற்குக் கல் வீசுவது இதுவரை நாம் காணும் தொடர்ச்சிதாம்.ஈழத் தமிழ்ச் சமுதாயத்தை-குறிப்பாக யாழ்பாணச் சமூக அமைப்பின் அரசியல் தன்மை இயல்பு,வர்க்கப் பிளவுகள்,முதலியவற்றை ஒருவர் தனக்குக் கிடைக்கக்கூடிய தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்ய முனைதல் இதுவரை சாத்தியமாகி வருகிறது.இது மிக ஆபத்தானது.இந்த முயற்சி நம்மை நடுத்தெருவில் நிறுத்தியிருப்பது இன்றைய மெய்ப்பாடு.ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிக் கற்றுக் கொள்வோரையும்,அவர்கள் மத்தில் அரசியல் வேலைகளைச் செய்பவர்களையும் உண்மையை அறியுமாறு இன்றுவரை தூண்டும் ஒரு அரசியல் சமூக விஞ்ஞானத் தூண்டலில் நீங்கள் வைத்திருக்கும் கால் மிக நீண்ட வெளிகளைக் கொண்டிருக்கிறது.தம்பி வெற்றி இணையத்தில் எடுத்துவைக்கும் சிறுபிள்ளைத் தனமான விளக்கங்களைப்போன்று நீங்கள் நிச்சியம் செய்யமாட்டீர்களென்ற நம்பிக்கை எனக்குண்டு.எனினும்,இயன்றவரை வரலாற்றுத் தரவுகளை எந்த வர்க்கத்தையும் திருப்பத்திப்படுத்தாது காலத்தைச் சார்ந்து-காலத்தில் எழுதுவது மிகப் பொருத்தமானது.தமிழ்ச் சமுதாயம் தன்னைத்தான் ஆளுவதற்குத் தகுதியற்றதென்ற தந்திரோபாயத்தோடு இதுவரை வரலாறுற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு,தனக்குள்ளேயே அது உள்ளியல்புக் காலனித்துவப் பண்புகளை கொண்டிருக்கிறது.இதற்கு எங்கள் வித்துவான்களும்,நாவல்லவர்களும்,பேராசிரியப் பெருந்தகைகளும் காரணம் மட்டுமல்ல.நிலுவுகின்ற பொருளாதார அமைப்புக்கேற்ற நலன்களும்தாம்.அரசியல் அதிகாரம் என்பது ஒரு அவசியமான தேவையாகும்.அதன் தொடர்ச்சியுள்தாம் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவதும்,கூடியவரை-சாத்தியமானவரை விஞ்ஞான பூர்வமாகப் பதிவதும் நேரிடும்.ஆனால், அந்த அதிகாரத்தை மக்கள் தொகுதியிலுள்ள எந்த வர்க்கம் கைப்பற்றுகிறதென்ற போக்கில்தாம் அது உண்மையாகத் திரிவின்றியுள்ளதாவென்று தீர்மானிக்க முடியும்.நமது சாபக்கேடு நாம் அதிகாரத்தை வெறும் மொழிசார்ந்த மதிப்பீடுகளால் போட்டுக் குழப்பி எமது மக்களை இணைக்க விரும்புகிறோம்.அங்கே தமிழ் மக்களைச் சாகடித்து,அவர்கள்தம் வரலாற்றையே தாம் விரும்பும்போக்கில் சிதைத்தவர்கள் நமது வீரதீரத் தலைமைகளும் அவர்கள் வழி சிந்தித்த புத்திசீவிகளும்தாம்.இதைச் சுட்டுவது இந்தத் தரணத்தில் எமக்கு நன்மையே பயக்கும்.


//இதன் அவவிளைவே, பரணவிதாரண போன்றோரின் கைகளிலே இலங்கையின் 'தொல்பொருளியலாய்வும்
அகழ்வும்' சென்றதும், அதன்பின்னான 'கண்டுபிடிப்புகள்' சிங்களக்குடியேற்றங்கள் முதல்
இன்னோரன்ன மொழிசார் இனவமைப்பு ஒடுக்குமுறைகளுக்கு, தமிழ்பேசும் சமூகங்கள் ஈழத்திலே
உள்ளாகவும் காலாயிருந்திருக்கிறன; காலாயிருக்கின்றன. தமிழ்ப்பௌத்தர்கள்
இருந்திருக்கலாமென்ற வாதத்தைக்கூட முன்வைத்து, சிங்களப்பேரினவாதத்தின்
வரலாற்றாக்கத்தை மறுத்துப்பேசமுடியாத நிலையிலே கந்தரோடை, வல்லிபுரம், நயினாதீவு,
திரியாய் ஆகிய இடங்கள் 'பௌத்தர்கள்=சிங்களவர்கள்' என்ற சமன்பாட்டினாலே
எழுதிவைக்கப்படுகின்றன. இங்கேதான் ஈழத்தமிழர்கள் சந்த்யானாவின் 'தமது கடந்த
காலத்தினை நினைவுகூரமுடியாதவர்கள் எதிர்காலத்திலே அதை வாழ்ந்தாக வேண்டிய
கட்டாயத்துக்குள்ளாக்கப்படுவார்கள்' என்ற நிலைக்கு ஆளாகியிருக்கின்றோம்.
இந்நிலையிலேதான் வரலாற்றினைப் பதிவுசெய்தலென்பது வாழ்தலின் இருத்தலின் தொடர்ச்சியாக
ஒரு சமூகத்துக்கு ஓர் அவசியமான அத்திவாரக்கூறாகின்றது. இன்னமும், வரலாற்றின்
தேவைதான் - கடந்த காலத்திலிருந்து எமது இன்றைய நிலையைச் சரிபார்த்துக்கொள்தலும்
போகும் பாதைக்குக் கடந்தகாலத்தின் தவறுகளைத் தவிர்த்தலுமே -
கற்றுக்கொள்ளவைக்கின்றது; இதன் அடிப்படையிலேயே பொதுவரலாறு ஒரு பாடமாக பாடசாலைகளிலே
கற்பிக்கப்படுவதும், இராணுவ,போர்வரலாறு இராணுவக்கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுவதும்
அமைகிறன. வரலாற்றின் பதிவின்றி உடோல்ஸ்டோயின் பாதையிலே மோஹன்தாஸ் காந்தியும் அதன்
தொடர்ச்சியாக மார்டின் உலூதர் கிங்கும் அடியொற்றி நடக்க
முயன்றிருக்கமாட்டார்கள்.//

இங்கே இன்னொரு அவசியமான கேள்வி எழுகிறது.பாடசாலைகளில் மாணவர்கள் கற்கும் வரலாற்றுக் கல்வி உண்மையில் வர்க்கஞ் சாராத முழுமொத்த மக்களின் வாழ்வியற் தொடர்ச்சிகளைப் பதிந்துள்ளதா?அதிகாரத்தை நிலைப்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இருப்பை நிலைப்படுத்த எடுத்த-எடுக்கும் முயற்சி யாருக்கு எதிரானது?யாரை ஒடுக்கிய இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றுப்படமாகவுள்ளது?போர் வரலாறு என்றும் முழுமொத்த மக்களையும் சார்ந்த வரலாறாக இருப்பதில்லை.அது தொடர் வருத்தல்களை ஒரு இனத்துக்குள்ளேயே வற்புறுத்தி அந்த இனத்துள் கணிசமானவர்களையொடுக்கி வருவது.வரலாற்றில் இயங்கும் சக்திகளைச் சரியான வர்க்கப்பார்வையின்றி மதிப்பீடு செய்வது கும்பல்ல கோவிந்தாப்போடுவதாக இருக்கும்.இதுதாம் சொல்கிறது நமது தேசயவாதம் "தற்காப்புத் தேசியவாதம்"என்று.இப்படியும்,இதற்கு மேலும் அது கடைவிரிக்கும்.ஆனால்சிங்களப் பேரனவாதத்தையும் அதன் வரலாற்றுப் புரட்டுக்களையும் மறுத்துப் பேசும் தகுதியைத் தமிழ் அறிவாளிகள் இழந்ததென்பது சிங்கள அதிகாரத்தால் அல்ல.அது திட்டமிட்ட தமிழ்வரலாற்றுக் குருடாகளால் முன்னெடுக்கப்பட்டதும்,அதைப் பிழைப்புக்காக அரசியலாக்கிய அந்தப் பெருங்குடிப் பிறப்புக்களாலுமே.பொதுவாகத் தமிழ்ப் பெளத்தர்கள் இலங்கையின் வடபுலத்துள் வாழ்ந்தார்கள் என்பதும் அவர்கள் அநுராதபுரம்வரைத் தமது தொடர்ச்சியான குடிப்பரம்பலைக் கொண்டிருந்ததும் உண்மையான வரலாறகவே இருக்கிறது.இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடு குறித்த ஆழமான ஆய்வொன்றைப் கலாநிதி சி.க.சிற்றம்பலம் செய்தும் உள்ளார்.பூனா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்டத்துக்கான ஆய்வு இது.இதில் எமது வரலாற்றை அவர் விஞ்ஞான பூர்வமாக நிறுவுவதில் பல சான்றுகளை முன்வைத்துள்ளார்கள்.சிங்களச் சமுதாயம் இப் பெருங்கற்காலப்பண்பாட்டின் முகிழ்பபென்பதும்,அது தென்னிந்தியாவில் எங்ஙனம் தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மலையாளும் என்று தோற்றுவித்ததோ அவ்வண்ணமே தமிழ்,சிங்களம் என்று இலங்கையில் தோற்றுவித்துள்ளதென்பது பரவலாக ஏற்புடையது.ஆரிய வம்சம் எனும் புரட்டுச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு அவசியமாகலாம்.இது புத்தமத மறுமலர்ச்சியைத் தூக்கி நிறுத்திய சமூகக் காரணி மிகக் கூர்மையாக விளங்கத் தக்கது.அது காலனித்துவத்துக்குப் பின்பான இலங்கையில் கிறித்துவத்தின் வாய்ப்புக்களையும்.வசதிகளையும் தட்டிப்பறிப்பதற்கும் கூடவே அந்த மத்தால் பயனுற்ற படித்தவர்களை ஓரங்கட்டுவதற்காவும் இருந்ததை நாம் அறிய முடியும்.இது ஒருகட்டத்தில் முழுமொத்தச் சிறுபான்மை இனங்களுக்கும் எதிராகக் கிளம்பியதை இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியோடு ஒப்பிட்டறிவதே சாலச் சிறந்தது.கந்தோரடை பற்றிய அகழ்வராச்சியில் அன்றீடுபட்ட(1967 என்றே நினைக்கிறேன்) பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்து அரும்பொருளக ஆய்வாளர்கள் யாழ்ப்பாணத்தில் பெருங்கற்காலப்பண்பாடு நிலவியதை முதன்முதலில் விஞ்ஞானபூர்வமாக வெளிப்படுத்தினார்கள்.விமலா பேக்கிலி மற்றும் பென்னற் புறொன்சன் போன்றோர்களின் ஆய்வுகள்-வெளிப்படுத்தல்கள் யாவும் இதை உறுதிப்படுத்துபவை.ஆனால் அந்த அகழ்வாராச்சியின் முடிவுகள்-அறிக்கைகளை இதுவரை நாம் கண்ணிலும் காணவில்லை.ஏன்-எவரால் முடக்கப்பட்டதென்பதை நம் தமிழ் வரலாற்றாய்வாளர்களால் இதுவரை குறித்துச் சொல்லப்படவில்லை.இங்கேதாம் நம் வரலாற்றாளர்களின் தவறுகளும்,மதிப்பீடுகளும் சிங்கள பெளத்த பொய்மையையும்,பெளத்த மதத்தைப் பற்றிய தளம்பலிலிருந்து விட்டு வேறொரு தொலைவுக்கு உயர்த்தியது.இது தமிழரென்பவர்கள் சைவத்தை மதமாகக்கொண்டவரென்பதும்,பெளத்தம் சிங்களருக்கே உரித்ததுமாகக் கற்பனையில் மூழ்கடித்தது.அங்கே வலுவுறும் தரணம் சிங்களவருக்கானது.கடந்தகாலத்துத் தவறுகளைத் தவிர்த்துக்கொள்வதற்கான முன் நிபந்தனை எனஇன?அந்தத் தவறுகளைப் பகிரங்கமாக விமர்சனத்துக்குள்ளாக்குவது.அதை நாம் சரியாகச் செய்வதாக இருந்தால் இன்றைய போராட்டத்தவறுகளும் பகிரங்கமான விமர்சனத்துள் மையங் கொண்டிருக்கவேண்டும்.ஒரு சமுதாயம் தனக்குள் ஒடுக்குமுறையை ஏவிவிட்டுத் தன் சொந்தத்தையே குட்டிச் சுவராக்கும்போது அந்நியப் புறச்சக்தி எம்மை ஒடுக்குவது வியப்புக்குரியதல்ல.

//அடுத்தது, உளம்சார், சிந்தைசார்தளத்திலே நிகழும் விடுதலையென்பது; இதற்குப் பௌதீக,
புவியமை எல்லையில்லை. இவ்விடுதலையென்பது புவிகட்டுப்படுத்தும் வரையறைகளுள்ளே
அவற்றினை முறித்துத் தனித்துவம் காண்பதற்காக நிகழ்வதல்ல. கருத்துத்தளத்திலே
தன்மீதான அடக்குமுறைகளிலிருந்து தம்மை உடைத்துக்கொண்டு, விட்டுவிலகிச்
சிட்டுக்குருவியாகப் பறக்கும் நோக்கிலே பிறப்பது; தமிழர் என்ற கருத்துநிலையிலே
ஈழத்தமிழர், மற்றும் அவர்கள்போன்ற நிலையிலுள்ள ஏனைய உட்கூற்றுத்தமிழர்களின்
தம்மடையாளங்களை, 'தமிழினை மேம்படுத்தியவர்கள் நாம்' என்ற கருத்துநிலை
மேலாதிக்கத்தாக்குதலின்மூலம், கருத்துநிலை அரசியல்மூலம் இதுவரைநாள் நிலைநிறுத்தி
நிற்கின்றவர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு காணும் சுதந்திரம்
இவ்வகைப்படும்.//


தமிழருக்கு வழிகாட்டிகளாவதும்,அவர்கள் கூறுகின்ற தமிழர்கள் என்பவர்கள் யாரென்பதும் தங்கள் கூற்றுள் பொதிந்துணரப்படத்தக்கதாக இருப்பினும்,தென்னாசியச் சமுதாயங்கள் சார்ந்தெழுந்த கருத்து நிலைகள் வெறும் கருத்துக்களால் நிலை நிறுத்தப்படவில்லை.அவை குறிப்பிட்ட அதிகாரத்தின் மைய ஆளுமையை நிலைப்படுத்துவதற்கான சிந்தனைத் தளத்தைக் கொண்டிருப்பதற்காகக் கட்டபட்ட ஒரு பெரும் நிறுவனமான இந்துத்துவப் பார்ப்பன நிறுவனத்தின் நீட்சியாகும்.இங்கே மாலன் என்பவர் குறித்துரைத்தவை அவரையொத்த பலரின் கருத்துக்களாக இருப்பதாக அவரது கூற்றே தெளிவுப்படுத்தும்போது,அந்தத் தனிமனிதர் இந்த நிறுவனத்தின் உறுப்பினராகிறார்.அவரே நேரே வந்து ஒப்புதல் அளித்தும்விடுகிறார்.ஆக மொத்தத்தில் மாலன் வெறும் குறியீடாக இருக்கலாம்.ஆனால், தங்கள் கருத்துத் தளம் விரியும் இன்னொரு பரப்பு ப் பார்ப்பனியத்தின் உட்கூறுகளையும் அதன் ஆதிக்கக் கருத்தியல் தளத்தையும் நோக்கியதாக இருப்பதே சாலச் சிறந்தது.இத்தகைய தரணத்தில்மட்டுமே உளம்சார்,சிந்தைசார் விடுதலைக்கான வாசற்கதவு திறக்கப்படுகிறது.அதை நோக்கிய வழிகள் யாவும் ஆளும்வர்க்கத்துப் பெரும் ஊடககங்களாலும் காவி பூசிய கல்வியாலும் தடைப்படுத்தப்பட்டிருப்பதைச் சொல்லும் அறிவு நாணயம் அவசிப்படுந்தறுவாயில் விமர்சனம் செல்லும் என்று எதிர்பார்க்கிறோம்.இந்தச் சுதந்திரத்தை வலியுறுத்தும் நீங்கள் முதலில் அந்தச் சுதந்திரத்தின் எதிரிகளைத் திறம்பட இனம்காணத்தக்கபடி மக்கள் முன் நிறுத்தவேண்டும்.இத்தகையவொரு முன்னெடுப்பைக் கருத்தியற் தளத்தில் ஆழமாகச் செய்வது அவசியமானதாகும்.ஆதிக்க வாதிகளிடமிருந்து விடுவித்துக் கொள்வதுற்கு அந்த ஆதிகத்துக்கு மாற்றானதை முன்வைத்துப் போராடுவது அவசியமாகும்.பார்ப்பனியத்தின் ஆதிகத்துக்கு என்ன மாற்றீடு முன்மாதிரியாக இருக்கும?;.நமது பண்பாட்டைச் சிறைப்படுத்திய பார்ப்பனியத்துக்கு நாம் தொடர்ந்து படியளப்பதும் அதையே நமது பண்பாடாக உணர்ந்து, எமது உடல்களை அதற்காகத் தாரைவார்ப்பதும் இன்றைய சர்வசாதரண வாழ்வியலாக நமக்குள் முகிழ்க்கும்போது அதை நிலைப்படுத்தும் தரணங்கள் மிகுதியாகக் கொட்டிக்கிடக்கிறது எமது சிந்தையுள்.அதை விலக்கும் மாற்று என்ன?இத்தகைய வியூகமற்றுச் செய்யப்படும் விவாதம் எத்துணை தூரம் மேற்சொன்ன சிந்தை-உளசார் விடுதலையைச் சாத்தியமாக்கும்?


//மேற்கின் குடியேற்றவாதிகளை எமது சொந்தநாடுகளிலிருந்து வெளியேற்றுவதென்பது
உறைவிடம்சார் சுதந்திரப்படுத்துதலென்று கொண்டால், அவர்களின் கருத்தாக்கங்களும்
வரலாற்றுப்படுத்துதலுமே முற்றுமுழுதாகச் சரியென்ற கருத்துநிலையிலிருந்து எம்மை
விடுவிடுத்துக்கொள்வதிலான சுதந்திரம் கருத்துநிலைச்சுதந்திரமாகும். இதே
கண்ணோட்டத்திலேயே ஈழத்தமிழரின் சிந்தை மீதான மேலாதிக்கவாதிகளின்
சிறைப்படுத்துதலிலிருந்து விடுதலை பெறும் நிலையையும் நான் காண்கின்றேன். இவ்விரு
உறைவிடம்சார் விடுதலைப்போராட்டத்தினை ஈழக்களத்திலும், கருத்துநிலைசார்
விடுதலைப்போராட்டத்தினை பல்வேறு தகவலூடகக்களங்களிலும் சமகாலத்திலேயே
நிகழ்த்தவேண்டிய அவநிலைக்கு நாம் உள்ளாகியிருக்கின்றோம்.//


மிகச் சரியான வரையறுப்பு.நல்லது!இந்தக் குடியேற்ற வாதிகளை வெளியேற்றிவிடுவது மிக இலகுவானது.ஆனால், அவர்களது கருத்தாகங்களும் வரலாற்றுப்படுத்தப்பட்ட விஞ்ஞான விளக்கங்களையும் அவ்வளவு இலகுவாக விட்டொழிக்க முடியுமா?இன்றைய மேலாண்மைச் சிந்தனையானது வெறும் கருத்துகளால்மட்டும் ஆனதில்லை.அது அவர்களது பொருட்களிலும்,மருத்துவ மற்றும் விஞ்ஞானத்திலும் மெருக்கேற்றப்பட்டு நம்மைத் தாக்குபவை.இன்றைய வர்த்தகக் கலாச்சாரமென்பதை எங்ஙனம் மதிப்பிடுகிறீர்கள் பெயரிலி?இதன் போசாக்கென்பது மூன்றாம் உலகத்தை ஏப்பமிடுவதிலும்,நுகர்வடிமையாக்குவதிலுங் மையங் கொள்கிறதென்பது உண்மையா? அப்படியாயின் இதற்கெதிரான போராட்டம் எல்லையைத் தூய்மைப்படுத்துவதோடு நின்றுவிடுமா அல்லது எமது வரலாற்றைப் புரட்சிகரமான முறையில் உந்தித் தள்ளி மாற்றை வைத்துப் போராடுவதில் நிசமாகுமா?இலங்கையை உதாரணமாக எடுத்தால் நமது சிந்தனையை நாம் நமது நோக்கிலிருந்து இதுவரை முன்னெடுத்தபோதெல்லாம் எமக்கு எதிரான ஆதிக்கக் கருத்துக்கள் மெல்லத் தாக்குகின்ற வரலாறு வெறுமனவே நம்மை வந்தடையவில்லை.அவை நமக்குள் இருக்கும் வளங்களாலேயே முன்னெடுக்கப்படுவதை நாம் எதிர்கொள்ளும் இன்றைய யதார்த்தத்தில்- அதை மேன்மேலும் பலவீனப்படுத்தும் எதிர்ப்பியக்கம், அந்த மேலாதிக்கத்தைச் சார்ந்திருக்கும் தரணத்தில் எங்கே செல்லும்?அதை அப்பட்டமாக விடுதலைக்கான முன்னகர்வென்றழைக்க முடியுமா?

//இப்போராட்டங்களிலே எம் சுயத்தினையும் தேவைகளையும் அடையாளம் காணவேண்டும்; எம்
காலம் சார்ந்த இருப்பின் தொடர்ச்சியினையும் பங்களிப்பினையும் நிறுவவேண்டும்;
நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எமது புவிநிலை, கருத்துநிலைசார் விடுதலைகளை,
ஈழத்தமிழரென்று கொண்டிருக்க நாம் ஆரம்பித்துச் செய்யவேண்டியது இதுதான்:
"ஈழத்தமிழரின் சிங்களம் அண்டிய புவிசார் வரலாற்றோடு, கருத்துநிலைசார் அகிலத்தமிழர்
என்ற பெருங்கூட்டத்தினுள்ளேயும் எம் தொடர்ச்சியான இருப்பும் பங்களிப்பும் குறித்த
வரலாற்றினையும் ஆவணப்படுத்தவேண்டும்." எதிர்கால வரலாறு எம்மை விடுதலை
செய்யவேண்டுமானால், எம் கடந்த கால வரலாற்றினை நாம் விடுதலை செய்தாகவேண்டும்;
தங்கிநிற்கும் மோழைத்தனமும் இரண்டாம்நிலைச்சமூகமென்ற தாழ்வுணர்வும் நீங்கும்படியாக,
மற்றவர்களுக்கீடான எமது சாதனைகள், பங்களிப்புகள் பதியப்பட்டாக
வேண்டும்.//


பெயரிலி,இங்கே இன்னொரு மனவிருப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.தமிழர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனமான பாசப்பொழிவு புலப்படும் சிந்தனை இதுள் தூக்கலாக இருக்கிறது.அங்ஙனம் நீங்கள் கூறாதபோகினும் இதுள்மையமிடும் உணர்வு அத்தகையவொரு உணர்வினைத் தூண்டமுடியும்.எவ்வளவுதாம் நாம் முயன்றாலும் தமிழ்பேசும் உலகம் ஒரு தேசிய இனமாக இருப்பதற்கான ஒழுங்கமைக்கு குறைவானது.தமிழ் பேசுபவர்களை பல் தேசிய இனங்களாக இலங்கைக்குள்ளேயே நம்மால் பார்க்கமுடியும்.எனவே, அகிலவுலகத்துத் தமிழரெனும் பெருங்கூட்டத்துள் எமது தொடர்ச்சியை நிலைப்படுத்துவது அவ்வளவு இலகுவல்ல.அதுவும் அவசியமற்றது.ஏனெனில், நம்மைத் தொழிலால் ஒன்றுபடுத்திவிடமுடியும்.மொழியால் கூறிடப்படும் மானுடம்,தன் தொழிலால்-படைப்பால் ஒன்றுபடும்போது அங்கே ஒருமித்த மக்கள்பலம் தன்னையொடுக்கும் பெரு நகர்வை மிக இலகுவாக-வெளிப்படையாகப் புரிகிறது.இங்கே ஒடுக்கப்படும் அந்தக் கூட்டம் ஒடுக்குபவர்கள் தத்தம் இனங்களுக்குள்ளேயும்,வெளியேயும் கரங்களை இணைப்பதைப் புரிந்திட வாய்ப்புண்டாகிறது.இதுவன்றி நமது மானுடத் தொடர்ச்சியைக் குறுக்கி இனம்சார்ந்த-மொழிசார்ந்த அலகுகளுக்குள் இனம்காணும்போது, நிகழ்வது வெறும் உணர்வு நிலைப் புள்ளியில் தங்கும் பெருமிதம்தாம்.அங்கே செயற்கரிய வியூகம் அடிபட்டுப்போகிறது.எதிரியும் நமது இனம் எனும் பச்சோதாபம் எம்மை விடுவிக்கப் பங்கஞ் செய்து படிமத்துள் தள்ளும் நம்மை.கோழைத்தனமும்,இரண்டாம் நிலைச் சமூகம் எனும் உணர்வு நிலை எங்ஞனம் தொடர்ச்சியை வற்புறுத்தி இதுவரை நம்மைத் தொடர்கிறது.தனிநபர் வழிபாடு,ஏன்-எதற்கு என்ற கேள்வி ஞானமின்றிய கட்சி-இயக்க விசுவாசம்,நக்கிப் பிழைப்பதே சாலச் சிறந்ததாக்கி வைக்கப்பட்டுள்ள அரசியல்,சினிமாத்தனமான கருத்தாடல்,தனிமனிதவாதம்.இவைகளெல்லாம் ஓட்டுமொத்தமாகவுள்ள ஒரு சமூகம் அதிலிருந்து விடுபடும் பண்பாட்டுப் புரட்சிக்கு எவர் தடைக்கல்லாக இருக்கிறார்கள்.அகவிடுதலையென்பது புறவிடுதலையோடுமட்டுமே சாத்தியமாகும்போது,அகத்தைப் புறத்திலிருந்து பிரித்தெடுதுப்பார்த்தல் அகவயக் குறைபாடுதாமே?எல்லைகளை விடுவித்துப் புவிநிலைசார் விடுதலையை ஒருபோதும் சாதிக்க முடியாது.எங்கே தேசியத்தன்மைகள் அழிகப்பட்டனவோ அங்கே அந்த அலுகுகள் மீளக் காக்கப்பட்டு,அது சார்ந்த பொருளாதாரச் சுதந்திரமின்றி புவிசார் விடுதலை கனவிலும் சாத்தியமில்லை.இது எல்லா வகைப்பட்ட விடுதலைக்கும் புறநிலையாக இருக்குமொரு முன் நிபந்தனை.அதை மறுதலித்தபடி நாம் சொல்லும்-செய்யும் விவாதம் உட்புறுத்துள் ஊனத்தைக்கொண்டபடி கருத்து நிலையில் தோல்விக்கான காரணங்களை வேறொரு பொருளில் பேச முற்படும்.

//இப்படியாக, எதிர்கால இருத்தலை, சமூகத்திலே எமக்கான பங்கை நிச்சயப்படுத்தும்
நோக்குடனேயே, நாம் இங்கே தமிழரின் வரலாற்றின் தொடர்ச்சியாக தமிழிணையவரலாற்றினையும்
காணவேண்டும். மகாவம்சமும் பரணவிதாரணவும் அடித்துப்போட்டுப் போட்டு நிலையற்று
அலையும் ஈழத்தமிழரின் கடந்த புவிசார்வாழ்வுக்கு ஈடான ஓர்
இரண்டாம்நிலை(இணைய)த்தமிழ்வாழ்வினையே 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' என்ற சொல்லாடல்,
இச்'சுதேசமித்திரன் பாரம்பரிய'த்தை, அதைச் சார்ந்திருக்கின்றவர்களின் கதைகளுக்கு
அப்பாலான எத்தமிழருக்கும் வழங்கும். மாலன் + லேனா தமிழ்வாணன் போன்றோரின் "வெறும்
ஆறுமுகமாக வந்தவருக்கு நாவலர் என்பதைக் கொடுத்தவர்கள் நாம்" என்ற சொற்றொடர் வெறுமனே
எஸ். பொன்னுத்துரை என்னும் ஒருவரின் நாவடக்கமுடியாத எதேச்சைப்பேச்சுக்கான
எதிர்வினையென மட்டுமே கருதிவிட்டுப்போகமுடியாது. அக்கூற்றின் அடியிலேயிருக்கும்
குமுதம்+கல்கண்டு ஆசிரியர்களின் நுண்ணரசியல், எம் சிந்தைத்தளத்தினை, அவர்கள் தருவதே
வரலாறு என்ற கருத்துநிலைத்தளத்திலே அடக்கி ஒடுக்கும் தன்மையிலேயே எள்ளலாக
வெளியிட்டுக் கக்குகின்றது.// "


...புவிசார் வாழ்வுக்கு ஈடான இரண்டாம் நிலை(இணைய)தமிழ்வாழ்வினையே சுதேசமித்திரன் பாரம்பாரியம் என்ற சொல்லாடல்..."பண்டுதொட்டு தமிழக வர்த்தகச் சஞ்சிகைகள் உலகு தழுவிய சந்தைக்காகத் தமிழ்பேசும் உலகத்தை மொட்டையடிப்பது வெறும் பொருட்தளத்தில் மட்டுமல்ல.அது அதைத் தக்க வைப்பதற்காகவே உள்ளேயும் வெளியேயும் பற்பல சிறப்பான மேலாதிக்க மனோபாவதைக் கருத்துக்களாகக் கொட்டுகிறது.இது வெறுமனவே ஒரு இனத்தின்மீதான காழ்புணர்வொடு சம்பந்தப்பட்டதல்ல.அதிகாரத்தைச் சந்தையை நிலைப்படுத்துவதற்கான சிந்தனா முயற்சியென்ற வகையில் பெயரிலியின் இக் கூற்றோடு உடன்படமுடியும்.அது மட்டுமன்றி ஒருகமைந்த செயற்கையான இந்தியாவில் தாம் கொண்டிருக்கும் ஆதிகத்தைத் திறம்படத் தக்கவைப்பதும்,ஒட்டச் சுரண்டுவதற்கும் இத்தகைய கருதாண்மை அவசியமாவும் இருக்கிறது.இது தமிழகத்தின் விடுதலையை மொட்டையடிப்பதற்காக ஈழத்தமிழ் மக்களின் சுய விடுதலையைக் கொச்சைப்படுத்தும்.இங்கே சோ இரமாசாமிபோன்ற காரியவாதப் பார்ப்பனர்கள் இதுள் முக்கிய பங்காற்றுவார்கள்.இவற்றுள் பற்பல அடுக்குகளாகப் பார்ப்பனக் கருத்தாண்மை நம்மைப் பலவீனப்படுத்திப் பண்பாட்டு ஒடுக்குமுறையையும்,உளவியற் தாக்குதலையுஞ் செய்கிறது.அந்தத் தளத்தின் உறுப்புக்களாக இருப்பவை இன்றைய ஊடகங்களே.


//சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் கொடுத்தனுப்பிய தமிழகம்போலவேதான்,
வீரகேசரிக்கு வந்த வரா உம், இராமநாதன் நுண்கலைக்கல்லூரிக்கு வந்த இசை கற்பித்த
மஹாராஜபுரம் சந்தானமும் பின்னாளிலே தமிழகத்திலே பெயர் பெறும்வரை வாழ இலங்கையும்
வழிசெய்ததென்பதை 'சுதேசமித்திரன் பாரம்பரியக்காரர்கள்' மறை/றந்துவிடுகின்றார்கள்.
(ஒரு வலைப்பதிவு நண்பர், தாம் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த கர்நாடக இசைச்செல்வி
ஒருவரிடம் ஈழத்தின் பிரபலமான சில இசைக்கலைஞர்களின் பெயர்களைச் சுட்டிப்பேசியபோது,
"யார் அவர்கள்?" அச்செல்வி கேட்டதாகச் சொன்னார்) தமிழக ஆதீனங்களுக்கு
ஆறுமுகத்தம்பிரான்களையும் ஈழம் தந்திருக்கின்றது (திருவண்ணாமலை ஆதீனம்)2;
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்துக்கு விபுலாநந்தரைத் தந்திருக்கின்றது;
கனகசுந்தரம்பிள்ளை, தமிழ் அகராதி கண்ட கதிரவேற்பிள்ளை ஆகியோரைத் தந்திருக்கின்றது; வி. கல்யாணசுந்தரம்
சொல்வதுபோல "சுவாமிநாதையர் கூரைபோட உதவிய தமிழ்ப்பதிப்புலகுக்கு, அடிக்கல்லிட்ட
ஆறுமுகத்தையும் சுவர்கட்டியெழுப்பிய தாமோதரம்பிள்ளையும்"
தந்திருக்கின்றது.
தமிழாராய்ச்சி மகாநாட்டினைத் தொடங்க, உழைக்க தனிநாயகத்தினைத் தந்திருக்கின்றது.
(அதன் தொடர்ச்சியான தமிழாராய்ச்சி மகாநாட்டிலே சிதம்பரத்திலே ஆறுமுகநாவலரின் சிலை
எழுப்பப்படும் என்று அன்றைய தமிழக அரசுத்தலைமைச்செயலர் சொல்லியும் அது
தவறிப்போயிருக்கின்றது.2 தொடர்ச்சியாக, ஜெயலலிதா முதல்வராகவிருந்தபோது,
ஈழத்திலிருந்து தமிழாராய்ச்சி மகாநாட்டுக்குப் போன தமிழறிஞர்களைச் சிறைவைத்த
சம்பவமும் நிகழ்ந்திருக்கின்றது. இஃதெல்லாம் எப்பாரம்பரியத்தின் வழிப்பட்டது?
சுஜாதா ரங்கராஜன்கூட "சிங்களத்தீவுக்கோர் பாலமமைப்போம்" எழுதினார். அந்நேரத்திலே
மாலன் என்ன செய்தார்? கற்கண்டு இலெட்சுமணன் என்ன செய்தார்?)
தமிழிலக்கியவிமர்சனத்துறையிலே மார்க்ஸிய அணுகுமுறைக்கு கைலாசபதியையும்
சிவத்தம்பியையும் காலத்தே முந்தியதாக ஈழம் தந்திருக்கின்றது; தலித் எழுத்து
முன்னோடியாக, 'பஞ்சமர்' டானியலைத் தந்திருக்கின்றது; கவிப்படிமத்துக்கும் ஒரு
பிரேமிளை, அவரைத் தமிழகத்தவரென்றே மயங்கிக்கொள்ளுமளவுக்குத்
தந்திருக்கின்றது.//


·பெரும்பாலும் பெயரிலி குறிப்பிடாத இன்னொருவிடயம் இங்கே உண்டு.ஆளும் வர்க்கக் கருத்தியல் தளத்தில் நிற்கும் அவர்களிடம் இவற்றைக் கோரிக்கையாகவோ அல்லது மறந்துவிடுகிறார்களென்றோ கூறுவதற்கில்லை.ஒவ்வொரு வர்க்கமும் தன் தன் வர்க்க நலனுக்குச் சாதிய நலனுக்கொப்பவே காரியமாற்றும்.இது அனைத்து மக்கள் கூட்டத்திடமும் நிலவும் விஷயம்.இதை இப்படியும் பார்க்கலாம்.ஈழத்து வடமாகாணத்தில் 1966-1970 காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களால் செய்யப்பட்ட ஆலயப்பிரவேசம்,தேனீர்கடை பிரவேசங்கள் போன்ற சுயகெளரவத்துக்கான வாழ்வாதாரப்போராட்டங்கள் சாதிவெறி வேளாளர்களால் எங்ஙனம் ஒடுக்கப்பட்டது என்பதும்,அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த தலித்துப் பெரியார்கள் எப்படி வரலாற்றில் மறைக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்பட்டார்கள் என்பதை ஆய்வுக்குட்படுத்தும்போது மேற்காட்டிய மனக் குமுறல் பொதுமையாக விரியவேண்டியுள்ளது.அதாவது, ஒடுக்குமுறையாளர்களுக்கு எந்த நிறமும் இல்லை.அவர்கள் சாரம்சத்தில் பொதுவானவொரு வர்க்கக் கூட்டைக் கொண்டிருக்கிறார்கள்.இன்று ஆறுமுகத்தைப்பற்றிக் கூறுகையில் அவர் ஆசான்,நாவலர் என்று ஒளிவட்டம் உண்டு.ஆனால், அவரது மறுபக்கமோ அப்பட்டமான சாதி வெறியன் என்பதாக விரியும்.ஊருக்கு ஊர் எழுந்த "சைவப்பிரகாச வித்தியாலயம்"எனும் ஆரம்பப்படசாலைகளுக்கூடாக நாம் காணும் சமூக யதார்த்தம் என்ன?இது தாழ்த்தப்பட்டவர்கள் அரச கலவன்பாடசாலையுள் உள்வாங்கப்பட்டதற்கு எதிர்க்கும் முகமாக எழுந்ததா இல்லையா? இந்த ஆறுமுகத்திடம் இருந்த ஆதிக்க-மேலாதிக்க மனம் எந்தக் கருத்தால் வடிவமைக்கப்பட்டது?தமிழரசுக் கட்சியும்,இராசலிங்கம் போன்ற தாழ்த்தப்பட்ட அரசியல் வாதிகளின் நிலையும் புரிந்துகொள்ளத்தக்கதே.ஏன் இன்றைய உண்மையானவொரு சமூக யதார்த்தம் பேராசிரியர் சிவத்தம்பியின் திறமைக்கு என்ன தகுதியை வழங்கியதென்பதைப் புரிவதில் தெளிவுறும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் முதல்வர் பதவிக்கு அவரைவிட அறிவிலும் வயதிலும் கீழ்மைப்பட்டவர்கள் வந்தபோதும் இவருக்கு மறுப்பு எந்தவடிப்படையில் நிகழ்ந்தன?அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதற்குத்தானே?



//இப்படியாகவே, கருத்துநிலையிலே தமது சொந்த(த் தமிழ்)ச் சமூகத்துள்ளேயே
இரண்டாம்நிலைக்குடிமக்களாக உணராதிருக்கும் சுதந்திரம்வேண்டியே எவ்வரலாற்றினையும் -
தமிழர் நிகழ்நிலை வரலாற்றையோ, மெய்நிகர் இணைய வரலாற்றினையோ - நாம் திருப்பியும்
திருந்தவும் சரியான தரவுகளைத் தாங்கி எழுத வேண்டிய அவசியமேற்படுகின்றது. எம்
மொழி,குடி, பண்பு வரலாற்றை நாம் மாலன் போன்றவர்களின் கைகளிலிருந்து விடுதலை
செய்யவேண்டியதாகின்றது. வாய்ஸ் ஆப் விங்க்ஸ் போன்ற நண்பர்களுக்கு (மீள)
வரலாற்றினையெழுதலின் தேவையின்மையும் அதன் முக்கியம் உணர்வதற்கு முடியாததாக வெறும்
உணர்வின் அடிப்படைப்பட்ட வெற்றுக்கூச்சலாகவும் படலாம். ஆனால், எனக்கு அப்படியாகத்
தோன்றவில்லை. இணையத்தமிழ்வரலாற்றைப் பேசுவது மாலனுடன் வாதத்தினை வெல்வதற்குமப்பால்,
தனக்கென்றே ஒரு வரலாற்றுத்தேவையமைந்தாயுள்ளது//



இங்கே எவர் எவரிடமிருந்து வரலாற்றை விடுவிப்பது?வரலாற்றைப் படைப்பவர்கள் எவர்கள்?எந்த வரலாற்றை விடுவிப்பது?மாலனின் கைகளில் வழமையாக இருப்பது ஊடகப் பலமும்,அவர் சார்ந்திருக்கும் வர்க்கத்தின் கருத்துநிலை ஆதிக்கப்பலமும்தாம்.இதைக் கடந்து மாலன் வரலாற்றைத் தடுத்திடவோ அல்லது திசை திருப்பிடவோ முடியாது.வரலாறு தன் ஓட்டத்தோடு நம்மை அழைத்துச் செல்கிறது.எம் மொழி,குடி,பண்பு வரலாற்றை நாம் மாலனிடமிருந்தல்ல விடுவிப்பது மாறாக நிலவுகின்ற இன்றைய சமுதாய அமைப்பிடமிருந்தே விடுவிக்க வேண்டும்.மாலன் சேவகன்.ஒரு மாலன் போனால் பற்பல மாலன்கள் பின்தொடர வாய்ப்புகள் அதிகம்.இந்த அமைப்பைத் தூக்கி நிறுத்தும் கருத்தியல் தளத்தை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மிகப் பெரும் பலம் பொருந்திய தளத்தை நமக்குள் பண்பாட்டு ரீதியாகவும்,அறிவியல் ரீதியாகவும்,சமூகவுளவியற்றளத்திலும் மிக ஆழமாகவூன்றியுள்ளன.இவற்றைக் கடந்து நாம் வரலாற்றை விடுவிப்பது என்பதைவிட அதைப்படைப்பவர்களாக ஒருமைப்பட வேண்டும்.ஏனெனில,; வரலாற்றைப்படைப்பவர்கள் உழைக்கின்ற மக்கள் கூட்டம்தாம்.வரலாறென்பதைத் தனிநபர் திருத்தலாக்கிவிட முடியாது.அங்ஙனஞ் செய்யப்பட்ட சிங்கள வரலாற்றுப் புனைவுகளின் இன்றைய இழி நிலையை நாம் ஆளும் வர்க்கத்தின் குருதி தோய்ந்து பற்களினு}டாகப் பல்லிளிப்பதைக் காணமுடியும்.எனவே, புனைவுகள்,புரட்டல்களைப் பண்டுதொட்டுச் செய்த வரலாற்றுக் காரணங்கள்,தேவைகள் இன்றும் நிலவுவதை இனம் காண்பதே சாலச் சிறந்தது.அதையொட்டியே பாரிய அறிவுத் தேடலையும்,குறிப்புகளையும் சமூகப் பொறுப்போடு செய்யவேண்டும்.அங்ஙனம் செய்யாத நிலையை எய்வதற்காக மாலன்கள் குறுக்கே நின்று கல்லெறிவதைக் குறித்து விவாதிக்க முடியுமேயொழிய அவரிடமிருந்து வரலாற்றை விடுவிப்பதென்பது மிகை மதிப்பீடு.


//எமது கருத்துகள் இந்திய இராணுவத்தின் இலங்கைக்கான வருகையின் பின்னால், ஒரு போதும்
இச்சஞ்சிகைகளிலே, ஊடகங்களிலே தெரியப்படுத்தப்பட்டதில்லை. கிட்டத்தட்ட ஈராக்குக்கு
படையினரோடு சென்ற அமெரிக்கப்பத்திரிகையாளர்கள்போலவே தமிழ்நாட்டின்
பத்திரிகையாளர்கள் செயற்பட்டுக்கொண்டார்கள். இராம், மாலன், சோ போன்ற இதழாசிரியர்கள்
இன்னமும் ஒரு படி மேலே சென்று இந்த அரசியலிலே தமக்கான ஒரு நிலைப்பாட்டினைக்கூட
எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு அப்படி எடுக்க இருக்கும் உரிமையை எவ்வகையிலும்
நான் மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் ஆசிரியர்களாகவிருக்கும் ஊடகங்கள், சஞ்சிகைகள்,
செய்திநிறுவனங்களிலே பணம் விட்டு வாங்கிக் காணும் எல்லா வாசகர்களுக்கும்
பேதமின்றிக் கருத்தினைச் சொல்லும் சந்தர்ப்பத்தினையும் செய்திகளைச் சரியான
தரவுகளோடு எவருக்குச் சாதகம்-பாதகம் என்றில்லாமலே தந்திருக்கவேண்டும். ஆனால்,
ஒருபோதும் செய்யவில்லை. எங்கள் குரலைக் கேட்கவிடவில்லை.//



இதுதாம் இன்றைய மிகப் பெரிய அப்பாவித்தனம்.யாரு யாருக்குக் குரல் கொடுப்பது,யாருடைய குரலைப் பதிவிடுவது?முடிந்தால் சோபா சக்தியைத் தமது தேவைக்காகப் பயன்படுத்த முனைவார்கள்.அங்கே, நமது குரல் பதிவிடப்படுவதல்ல நோக்கம்.தமது நோக்குக்கு உரம் சேர்ப்பது.அந்த வகையில், இவர்களிடம் போய் நம் குரலைக் கேட்கவில்லையென்பது அப்பாவித்தனமா இல்லைப் புத்திஜீவிதத் தொந்தரவா?என்றைக்குமே ஆதிக்கத்தை நிலைப்படுத்துபவர்களின் ஊடகங்களும்,அவர்களின் பரபலங்களும் தம்மிலும் கீழானவர்களுக்கு எந்த வகை உதவிகளைச் செய்துள்ளார்கள்.தொடர்ந்தும் எங்கள் கால்களில் விழுந்தொழும்வுவதற்கான தளங்களையும்,வலைகளையும் உதவி-மனிதாபிமானம் என்ற முகமூடிக்குள் ஒழிந்தாற்றும் கபடம் அறியத் தக்கதுதாமே?இதிலிருந்து இவர்களைப் பிரித்துப் பார்க்க முடியுமா?இத்தகைய ஒடுக்குமுறையாளர்களிடம் எந்தச்"சாதகம்-பாதகம்"என்ற அளவுகோல் முன்னிலைப்படும்?அதென்ன அவர்களுக்கிருக்கும் உரிமை?தமது எஜமானர்களுக்கு வாலாட்டும் உரிமையா?அந்த உரிமைக்குள் இருக்கும் நரித்தனம் இன்னொரு இனத்தின் விடுதலையைக் குழி தோண்டிப் புதைக்குமானால் அதைக் குறித்து என்ன வகைமாதிரியான அணுகு முறையை நாம் செய்யவேண்டும்.ஐயோ,அவர்கள் எங்கள் குரலைப் பதிவிடவில்லையே என்ற ஆதங்கமா?பெயரிலி இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது.அதை இங்கே மிகவும் கவனமாகச் சுட்டுகிறேன்!


//இத்தனைக்குப் பிறகு, இப்படியான அவலச்சூழலிலே அவம்சுமக்கும் தன் ஊடகவியலாளர்
முகத்தினை இன்னமும் இணையத்திலே(யும்) காவி வந்து "விடுதலைப்புலிகளையா இந்துவையா
உலகம் நம்பும்?" என்று மாலன் வெட்கமின்றி எம்மிடம் கேட்கும்போது, இத்தனை ஆண்டுகளாக
குமுதத்துக்கும் இந்தியா ருடேக்கும் நான் விட்டழித்த காசின் பெயரினாலே,
தமிழகச்சஞ்சிகைகளில் இழந்த நம்பிக்கையின் பேரால், ஒரு வாசகனாக, ஏமாற்றப்பட்ட
வாடிக்கையாளனாக, அவரிடம், அவரது பத்திரிகாதர்மம் மேலே, இங்கே -அவர்
தப்பித்துப்போகமுடியாத,என் குரலும் அமுக்கமுடியாது கேட்கும் இணையத்திலே- கேள்வி
கேட்காமல், வேறெங்கே, வேறு யாரிடம், வேறெப்போது, வேறெதைப்பற்றி நான் கேட்பது? இதைக்
காழ்ப்புணர்விலே கேட்கின்றேன் என்று அவர் கருதினால், "இத்தனை நாள் உங்கள்
உற்பத்திகளைத் தரம், குணம், மணம் பற்றியேதும் கேட்காமல் வாங்கிக்கொண்டேயிருந்த
எங்களின் அவலங்கள் பற்றி ஒரு சொல் உங்கள் சஞ்சிகைகளிலே, செய்திகளிலே உங்கள்
நாட்டுக்கோ, இராணுவத்துக்கோ மாற்றானதாக விடாத உங்களின் உணர்விலே எம்மைப் பற்றிக்
காழ்ப்பிருந்திருக்கவில்லையா? ஓர் இரண்டாம்நிலைத்தமிழர்களென்ற கீழ்நோக்கிய
பார்வையிருக்கவில்லையா? " என்று நான் எதிர்க்கேள்வி கேட்கலாமா? //



பெயரிலி இது எங்களது தவறேயன்றி அவர்களது தவறில்லை.நாம் நம்மை அறிவதில் நாட்டமின்றிப் பொத்தாம் பொதுவான கருத்து நிலைகளால் சூழப்பட்டபோது இங்ஙனம் காரியமாற்றினோம்.குமுதம்,ஆனந்தவிகடன் எம்மைக் கவருவதற்கான அவர்களது தந்திரத்தால்மட்டுமே ஏமாற்றப்பட்டோம்.அவர்கள் ஒருபோதும் தம்மை நம்பும்படி நமக்குக் குரலிடவில்லை.அவர்களது நலனையும்,அவர்களது வர்க்கத் தளத்தையும்"தமிழர்கள்"எனும் பொதுக் கூப்பீடால் ஒதுக்கிவிட்டுப் பார்த்தோம்.ஒவ்வொரு அரசியல் முன்னெடுப்பிலும்-போராட்டப் பாதையிலும் முதலில் புரியப்பட வேண்டிய அரசியலறிவானது நாம் யார்?எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.இங்கே வர்க்க ஒடுக்குமுறை எந்தத் தளத்தில்,எப்படி நிகழ்வதென்பதே!இதைக்கடந்த எந்த உறுவுகளும் மானுட சமூகத்துள் நிலவ முடியாதென்பதற்கு இதுவொரு உதாரணம்.




//இப்போது, சொல்லுங்கள், மாலன், உங்களைப் போன்ற ஒரு தமிழ்ப்பத்திரிகையாளரிடம்,
வாய்ப்பாகிப்போன எனது-உங்களது என இருபக்கக்குரல்களும் கேட்கக்கூடிய இணையத்திலே,
கேட்காமல், வேறு யாரிடம் நான் இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே என் ஈழம்-இந்தியா பற்றிய
கேள்விகளையும் உங்களின் பத்திரிகாதர்மங்களின் இரட்டை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட
நிலைப்பாடுகளைப் பற்றியும் கேட்பதாம்?//


இங்கே கேள்விமட்டுமல்ல பெயரிலியின் சமூகப் பார்வையே முக்கியமாகும்.அவரது வர்க்க அறிவுப்பரப்பும், அதை அவர் எந்த வர்க்கஞ்சார்ந்து சிந்திக்கிறாரென்ற நோக்குமே இனி முக்கியம் பெறும்.இது நாள் வரை இப்படிச் சிந்தித்துவிட்டோம்.இனியும் இப்படியல்ல.அவர்களைத் தோலுரித்து ஆதிகத்தை-அதிகாரத்தை உடைப்பதற்கான அறிவை எழுத்து மூலம் வைப்பதே சாலப் பொருத்தம்.அப்படிச் செய்யும் ஆற்றலும்,அறிவும்,அநுபவமும் உங்களுக்கு உண்டு.அந்தப் பலங்களினு}டே நீங்கள் எழுதும்போது மாலனிடமிருந்தென்ன மற்றெல்லோரிடமிருந்தும் நாம்,நம்மை விடுவிக்க முடியும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
29.07.2007

3 comments:

theevu said...

//யாரு யாருக்குக் குரல் கொடுப்பது,யாருடைய குரலைப் பதிவிடுவது?முடிந்தால் சோபா சக்தியைத் தமது தேவைக்காகப் பயன்படுத்த முனைவார்கள்.அங்கே, நமது குரல் பதிவிடப்படுவதல்ல நோக்கம்.தமது நோக்குக்கு உரம் சேர்ப்பது.//

சரியாகச்சொன்னீர்கள்

-/பெயரிலி. said...

அன்பின் ஸ்ரீரங்கன்
நீங்கள் சொல்லியிருக்கும் சில கருத்துக்கள் பற்றி மேலோட்டமாக மாலனுக்குப் பதிலான முதற்பதிவிலே தொட்டிருக்கின்றேன்.

உங்கள் கருத்துகள் வருவது அகன்ற பார்வையிலே பிரச்சனைகளை அணுகும்போது; இங்கே மாலனுடனான என் கருத்துகளும் பதில்களும் அவர் பேசியவற்றின்மேலேமட்டுமே. அதனால், என் கருத்துகளை நீங்கள் நின்று பார்க்கும் உயரத்திலிருந்து பார்க்கையிலே தவறான புரிதலைத் தந்துவிடும்.

விளக்கமாகப் பின்னால்.

Sri Rangan said...

வணக்கம் தீவு,பெயரிலி.வருகைக்கு-கருத்துகளுக்கு நன்றி.

இரமணி,தாங்கள் தந்த சுட்டியின் மூலம் தங்கள் முன்னைய இடுகையை வாசித்தேன்.
கூடவே நீண்ட பதில்களைப் பின்னூட்டத்தில் தந்திருக்கிறீர்கள்.
ஆரோக்கியமாக இருக்கிறது.
எனினும் உங்கள் கருத்துக்களை எதிர்கொள்வதற்குப் பதிலாகப் பலர் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளைக்கொண்டு கருத்துக்களை உணர்ச்சியாகக் கொட்டியிருப்பது தங்கள் கருத்தின் சாரத்தை-அடிப்படையைத் திருப்பிடுவதற்காவேயென்பது புரியத்தக்கதாகவிருக்கிறது.
எனினும்,ஆரோக்கியமாகப் பதிலளித்திருக்கிறீர்கள்.தொடருங்கள்.

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...