அது மிகவும் தெளிவான கடல்.பாசிகள் நிரம்பிக் கிடக்கக் கண்டோம்.பிறகென்ன தெளிவான கடல்?ஐரோப்பியர்கள் கருங்கடலுக்குச் சொல்லும் விளக்கம் தெளிந்த நீரென்பதாக இருக்கிறது.அந்தக் கடற்கரையொன்று பல்கேரியாவின் பெரு நகர் வார்னா நோக்கி விரிகிறது.அந்தக் கடற்கரையை நான் எனது மண்ணான வேலணை வெள்ளைக் கடற்கரையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.வெள்ளைக் கடற்கரையில் எவ்வளவோ நாட்கள் நேரம் போவதே தெரியாது எனது நண்பன் சிவகுமாரோடு உரையாடி இருக்கிறேன்.அந்தக் கடலில் குளித்துப் பள்ளிவாசற் கிணற்றில் அள்ளிய நன்னீரில் உப்புக் கசிவைப் போக்கி,வீடுமீளும் வழியில் கள்ளருந்திப் புகைத்து மகிழ்ந்திருக்கிறோம்.வீசியடிக்கும் காற்றுத் தென்னங் கீற்றில் கிழிபடும்.இங்கோ நாம் விரத்துக் கடற்கரையில் ஊன்றிய குடைகளை பிய்த்தெறிந்தது.
நீண்ட நேரமாக இரு இளைஞர்கள் எங்களைக் கவனித்தபடி தங்கள் அழகிய-கவர்சியுடைய காதலிகளுடன் கொஞ்சி மகிழ்வதும் பின்பு நம்மைப் பார்ப்பதுமாக இருந்தார்கள்.நான் அவர்களைத்தாண்டிக் கடலில் இறங்க முனையும்போது என்னிடம் பேசிக்கொண்டான் அதிலொரு இளைஞன்.
"நீங்கள் எங்கிருந்து இங்கு வந்துள்ளீர்கள்?"-அவன்.
"நான் இலங்கையைச் சேர்ந்தவன்,ஜேர்மனியிலிருந்து வந்துள்ளோம";.-இது நான்.
"இலங்கையில் அழகான கடற்கரைகள் உண்டென்பது எனக்குத் தெரியும்.எனினும்,எங்கள் கடற்கரைகள் எப்படியுள்ளது?"-அவன்.
எனக்குச் சிரிப்பு வந்தது,சிரித்தேன்.பின்பு சொன்னேன்:"கடற்கரைகள் எப்பவும் அழகுதாம்.அது இலங்கையென்ன பல்கேரியவென்ன எங்குமே இயற்கை விரிந்து மேவுகிறது.ஆனால், மனிதர்கள்தாம் அவற்றைக் கெடுக்கிறார்கள்."
"பல்கேரியாவுக்கோ அல்லது எந்தத் தேசத்துக்கோ இப்போது வித்தியாசம் இருப்பதில்லை.எல்லாமே உலகமய வர்த்தகத்துக்குப்பின் ஒன்றாகிவிட்டது.நான் பிரச்சனைகளைச் சொல்கிறேன்."என்று நறுக்காய் அவன் சொன்னான்.எனக்கு அவனிடம் கதைக்க இன்னும் இருப்பதாகவே பட்டது.
"நீ என்ன தொழில் புரிகிறாய்?" -நான்
"இங்கு கோட்டல் முகாமைத்துவம் படித்தபடி ஊர் சுற்றுகிறேன்!"என்றான் அவன்.
நல்லது.இந்தத் தேச மக்களையும் அவர்களின் இன்றைய வாழ்வையும் சொல்லேன் என்றேன்.
சிரித்தபடி சொன்னான்:பல்கேரியாவில் எழுபது இலட்சம் பல்கேரியர்களும்,வெளியுலகங்களில் ஒரு கோடி பல்கேரியர்களும் வாழ்கிறோம். படித்தவர்கள் பலர் வெளிநாட்டில். நாசாவில்மட்டும் 97 வீதமானவர்கள் வெளிநாட்டவர்கள்.அந்தத் 97 வீதத்தில் கணிசமானவர்கள் பல்கேரியர்கள்.
எனக்குப் பல்கேரியர்களின் இன்றைய நிலைமைகள் ஓரளவு புரிந்திருந்தது.நான் அவன் பெருமிதத்தைப் பொடியாக்க விரும்பவில்லை.மேலும் தொடராது கடலில் இறங்க முனையும்போது அவன் விடுவதாக இல்லை.
பல்கேரியாவுக்கு வரும் உல்லாசப் பயணிகளில் அதிகமானோர் ஜேர்மனியர்கள்.
எத்தனையாண்டுகள் சென்றாலும் கடந்த காலத்தின் சாதகமானதும்,பாதகமானதுமான எல்லா நினைவுகளையும் அந்த இளைஞன் பகிர்ந்துகொண்டான்.எப்பவும்போலவே மௌனத்தை மட்டும் பதிலாக்க நான் விரும்பவில்லை.அவனோடு நட்புரீதியாக உணர்வுகளைப் பகிர்வது சாத்தியமாச்சு.இன்றைய பல்கேரியாவை அவன் மோசமான பல்கேரியாவாகவே பார்க்கிறான்.அதிகாரத்துவம் மாபியாத்தனத்துள் நிலைபெற்று,அரசாக மாறியுள்ளதாகவும்.அதிகாரத்திலிருப்பவர்கள் நடாத்தி முடிக்கும் அனைத்தும் பொய்யும் புரட்டுமிக்கதாகவும் இருப்பதென்றும், அன்று அரசவுடமைகளை நிர்வாகித்தவர்கள் இன்று அந்தவுடமைகளுக்குச் சொந்தக்காரர்களானபின் பல்கேரியாவில் பொருட்கள் குவிந்துகிடப்பதாகவும்,அதை நுகர்வதற்கான பணம் கண்ணில்படுவதில்லை என்றும் அலுத்துக்கொண்டான்.
வெய்யில் நம்மைச் சுட்டெரித்தது.
கடலலை வீசியடித்தது.எனக்குச் சிறிய சுனாமியாக அவைகள்பட்டன.குழந்தைகள் அலையோடு அள்ளுண்டு விளையாடினார்கள்.நான் நீருள் காலை விடுவதும் எடுப்பதுமாக நின்றேன்.கடற்கரை மனிதர்களால் நிறைந்திருக்கக் கடலலைகள் கவிதையாய் தெறித்தொதுங்கின.அமைதியாய் நீருள் அமிழ்ந்தபோது ஊர் ஞாபகங்கள் வழமைபோலவே வந்தன.மறுகணம் அடிக்கின்ற காற்றைப்போலவே அவை பறந்துஞ் சென்றபோது அங்குமிங்குமாக நீந்தினேன்.குழந்தைகள் நீந்துவதில் என்னைவிட வீரர்கள்.ஆழத்துக்குச் சென்றார்கள்.நானோ கால் எட்டும்வரை நீந்துவேன்.பின்பு எழுந்து நிற்பேன்.
அந்தக் கோட்டல் கடலின் மிக நெருக்கமான கரையோடு கட்டிமுடிக்கப்பட்டது.உல்லாசப் பயணிகளால் நிறைந்திருந்த கோட்டலில் குழந்தைகளுக்காவே பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தன.குழந்தைகள் அவற்றை மகிழ்வோடு அநுபவித்தார்கள்.கடற்கரை நிரம்பக் கோட்டல்களே முளைத்திருந்தன.மிகச் சிறபானதான கோட்டல்கள் உல்லாசப் பயணிகளைக் கவர்வதற்காவே கட்டப்பட்டதாகப்பட்டது.இத்தகைய பெரும்பாலான வலயங்கள் பல்கேரியாவின் உண்மை முகத்தை முக்காடிட்டு மறைப்பதாகவே உணர்ந்தேன்.
தொடரும்.
ப.வி.ஸ்ரீரங்கன்.
27.07.2007
No comments:
Post a Comment