Friday, March 02, 2007

அம்மாளாச்சி.

அம்மாளாச்சி.


கொட்டாத பனி கொட்ட
குப்பற விழுந்த சிறிய பையன்
மெல்லெழும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருக்க
முதுகினில் விரியும் அன்னைக் கரம்
மெல்லக் கொடுக்கும் உறு துணை!

அன்னை.

எனது குவளையுள்
நுரையொழுப்பும் பியரைப் போல்
நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!


நொந்துலர்ந்த இதயத்தோடு
நெடிய வாழ்வுக்குள்
குந்த இடமின்றி அகதியாய்
எந்தத் தெருவில் பேப்பர் பொறுக்கிறாளோ...

சுவரில் தொங்கும் கடிகாரத்தின்
ஈனக் குரலில்
இதயம் குழப்பும் ஒரு கும்மிருட்டில்
அவளை அணைத்தபடி அச்சம் தொலைத்து
கட்டிலில் கண்ணயர்ந்ததும்
வர்ண ஜாலத்துள் மிதக்கும் தலையணை.


முந்தைய பொழுதின்
கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைத் தீவாய் வேளைகள் செல்ல


மீளவும் பியரைக் கொள்ளும்
பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை
உறவுக்கான இரைமீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
பேசப்படும் தொ(ல்)லைபேசி அதிர


"குடும்பத் தகராறில் உன் தம்பிக்கு
மண்டையை உடைத்தாள் அவன் மனைவி
திருகுவேலைக் கட்டையால
மண்டையில் பலத்த அடி-ஆபத்து,
உடனே போன் செய்!"

முன்னைய பொழுதில்
ஒரு தம்பி நஞ்சுண்டு
மரிக்கப் போன் செய்தாள் அக்காள்
இன்னொரு இழவு
சொல்கிறாளா இப்போது?


அம்மா,
தலை வெடிக்குதண!


அடுப்படியில் வெந்துலர்ந்தவளின்
சேலைத் தலைப்பில் பதுங்கிய அச்சம்
மீளவும் அன்னைச் சேலையைத் தேடுவதும்
அரண்டெழுந்து அவதியுமாய்
புரண்டொதுங்கும் பொல்லாத பொழுதுகளுமாய்
மப்புக் கொண்ட புத்தியுமாய் நான்


வேடிக்கை மனிதர்கள் நாம்.


இன்றையப் பொழுதின்
யாழ்ப்பாணக் கதையும்
கட்டுண்ட மனிதரின் கண்போன வாழ்வும்
என்னத்தைச் சொல்ல
எதுபற்றித் தொலை பேச!


ஆத்தையைத் தேடிச் சிறையொன்றில் வீழ்ந்து
மெல்லத் தொலைத்த இளமையையும் தேடி
ஆடும் தசையும்
ஆட்டம் காட்ட அவதியுறும் மனமும்
தோளில் தொங்கிய ஏதோ வொன்றுக்கு ஏங்க
இந்தத் தம்பியையும் இழப்பேனோ நான்?



முந்தைய இரவுகளில்
ஆத்தையின் அரவணைப்பில்
அச்சம் விலக்கி
அகலக் கால் வைப்பதும்
அரண்டு போய் மெல்லத் தாய் மடியில் புரண்ட பொழுதும்
பட்டுப் போன தரணத்தில்


பொல்லாத செய்திகளைப்
போர்வையின் கணகணப்பில் புதைத்து
கள்ள நித்திரையில்
கண் துயில மறுக்கும் கோடி பொழுதுகள்
இரண்டுங் கெட்டான் உணர்வை
உடலெங்கும் விதைக்க
அம்மாக் கனவு மெல்ல விரியும் கொடிய இரவில்
அம்மாளாச்சி வெள்ளைச் சேலையில்
வேப்பிலை காவிக் கண்ணெதிரில்



என்ன சொல்வேன்!


அன்னை இனி வரமாட்டாள்.
அவளுக்கு வயசாகி விட்டது.
வந்தவிடத்தில் வருசம் இருபது
கட்டை
போகப் போவது இன்னும் சில வருடத்தில்
இதற்குள் என்ன பொல்லாத கனவுகள்?



தரையில் பட்டுத் தெறிக்கும்
ஒளி முறிவுகளில்
ஒரு கணமேனும் தேக்கமிருப்பதற்குச் சாத்தியமுண்டா?
ஆத்தையின்
தெம்பூட்டல்கள் இனியெதற்கும் வரப்போவதில்லை.

அன்னையும்
அவள் கைப் பிடிச் சோறும்
காணமற்போன ஒவ்வொரு பொழுதுகளும்
பொல்லாத உலகத்தின்
பொருளில்லா வாழ்வுத் தடமாய் அகதி வாழ்வு


அடங்க மறுக்கும் அரண்ட மனதுக்கு
அரைத் தூக்கத்தின் குறை துயில்
கொள்ளிக் குடமுடைத்த
அப்பனின் இழவு சொல்லி
மிச்ச சொச்சக் கனவையும் சிதைக்க
அன்றைய பொழுதில்
பிணைத்த கரங்களோடு அப்பனின் பிணத்தில்
விழுந்தழுத என் தம்பிகளின் முகங்கள் வந்து குத்தும்!


பிஞ்சுக் கரங்கள் இடித்த சுண்ணம்
நினைவில் குத்தும் இழப்பின் வலியாய்!


அன்னை!


எத்தனை இரவுகளில்
எங்களைத் தூக்கியணைத்து
துயரங்கலைத்த
தோழி நீ!


இந்தப் பொழுதில்
நீயும் இல்லை
நெடு நிலவும் இல்லை
நெஞ்சில் உரம் சேர்த்த
அப்பன் அறுமுகனும் இல்லை.


எல்லாம் இழந்த
இந்த இருட்டில்
அக்காள் சொல்லும் சேதி வேறு
மூச்சையடக்கும்
ஒரு பொழுதை மெல்ல அழைக்கும்
மெளனத்தின் இழப்பில்
அழுகி நாறும்
எனது உடலும் இந்த ஜேர்மனியக் கொடுங் குளிரில்...

அன்னை.

அம்மன் தாலாட்டை
அடியெடுத்துப் பாடி
என் நோய் மறக்க வைத்த அன்னை
மெல்லத் தலை கோதி
அள்ளியணைத்து
கிள்ளிய வீபூதியில் நெற்றியைத் தடவி
நெடிய வலி போக்கிய கிழவி
கிட்டவிருந்தால்
அகதிக் கோலத்தில் அடியும் போட்டிருப்பேன்


அள்ளிய சோறும்
மெல்ல முடியாத வாயோடு
உணர்வு மரத்த
மந்தை மனிதனாய்
நுரை வெடித்த வெற்றுக் கிளாசில்
வந்தமர்ந்த தேனீயின் இருப்பில்
என்னை இழந்தேன்!


அன்னை,அம்மாளாச்சியாய்...

ப.வி.ஸ்ரீரங்கன்
03.03.2007


No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...