Sunday, December 03, 2006

தொடரும் யுத்தம் சொல்வதென்ன?

அழியும் மனிதவளம்:

எந்தப் பக்கம் திரும்பினாலும் கொலைகள்,மனித வெடிக் குண்டுகள்,தனிநபர்-அரச-இயக்கப் பயங்கரவாதக் கொலைகள் என்றபடி மிகப்பெரும் சமூக அவலம் என்றுமில்லாதவாறு மிகக் காட்டமாக இலங்கையில் இயங்குகிறது-நிலவுகிறது.அப்பாவி மக்களைக் கேவலமாக நடாத்தும் இந்த அரசியலானது தனது பாசிசக் கட்டமைப்பை இலங்கை மண்ணில் வலுவாகக் கட்டமைத்து, வளர்த்து வருவதும்,அத்தகைய இராணுவவாதச் சர்வதிகாரத்தை நிலைப்படுத்தி, மக்களின் சகல உரிமைகளையும் நசுக்கி வருகிறது.

இத்தகையவொரு நிலைமையில் இலங்கையின் எதிர்காலமானது வெறும் இராணுவவயப்பட்ட கட்சியரசியலை முன்னிறுத்தி அதையே மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற முகமூடியை வலுகட்டாயமாக அணிவிக்கும் போக்குக்கு, இந்த உலகமயச் சூழலில் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகள் அனுமதி வழங்குவதும்,அதையே ஜனநாயகத் தன்மையானதென்றும் பரப்புரை செய்வதுமாக நிலமை மாற்றமுறுகிறது.

இவ்வகை அரசியலை அடித்தளமாக நிறுவிக்கொண்டு, தமிழ்பேசும் மக்களுக்கான அரசியலை முன் தள்ளும் "ஜனநாயக"ச் சக்திகளெனும் போர்வையில் இன்னொரு கட்சியரசியலைக் கனவு காணும் தமிழ்த் தரப்புகளிலொன்றுக்கு(புலிகளின் எதிர் தரப்பு) இந்தக் கொலைக்கார அரசியல் வெறும் "பயங்கரவாதத்துக்கு எதிரானவொரு நடவடிக்கையாக" மலினப்படுகிறது.எனினும் இத்தகைய மறைமுகமான மர்ம அரசியலைக் கைக்கொண்டிருக்கும் "அகிம்சை"ப் பேர்வழிகள் தமிழ் பேசும் மக்களின் இதுவரையான துன்பத்துக்கு-சமுதாயச் சிதைவுக்கு எந்தவிதமானவொரு ஆரோக்கியமான அரசியலை இதுவரை முன் மொழிவதாகவுமில்லை!



முடிந்தால் தனிநாடு இல்லையேல் சமஷ்ட்டி!இதற்கப்பால் மக்களுக்கான எந்த அரசியலும் இல்லையென்றும் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறைமைக்கப்பால் வேறொரு உற்பத்திப் பொறிமுறை கிடையாதென்று அவர்கள் புரிந்துள்ளார்கள் போலும்.

மக்களின் யுத்தக்கால அவல நிலையைத் தமது நலனுக்கான கருவியாக்கி எதிர்ப்புக் குரலிடுகிறார்கள்.ஒவ்வொரு வர்க்கமும் தத்தம் நிலையிலருந்துகொண்டு சிந்திக்க முடியும்.இன்று இலங்கை மக்களின் அரசியலை ஆக்கிரமித்துள்ள தரகு முதலாளிய வர்க்கம் தனது இருப்புக்கும்,எதிர்காலத்துக்கும் இலங்கையின் இனப் பிரச்சனையைக் கருவியாக்கி,அந்த வர்க்கத்தின் நலனிலிருந்து சிந்திக்க முனைகிறது.மக்களையும் அங்ஙனம் சிந்திக்கத் தூண்டுகிறது,"வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியலே அடைப்படையாக இருக்கிறது".இது உலகமயப் பொருளாதார நகர்வால் மிகவும் உந்தப்பட்டு மக்களின் அடிப்படையுரிமைகளைத் தமது அரசியல் ஸ்த்திரத்தைக் காப்பதற்காகக் கையகப்படுத்தி, கயமைத்தனமான அரசியல் பேரங்களோடு யுத்தம் செய்வதற்கு முனைப்புறுகிறது.

பரிதாபத்துக்குரிய அப்பாவி மக்கள் தமது அனைத்து உரிமைகளையும் இந்தக் கேடுகெட்ட அரசியல் சூழ்ச்சிக்கும் அது கொண்டிருக்கும் குறுந்தேசிய வெறிக்கும் அடகுவைத்து,விடிவுக்காகத் தவமிருக்கிறார்கள்-பிச்சையெடுக்கிறார்கள்-கொலையாகிப் போகிறார்கள்.அல்லது இதை இங்ஙனம் கூறலாம்: இராவணுவத்துக்கு-இயக்கத்துக்கு அடியாளாக மாற்றமுற்றுப் போகிறார்கள்.மக்கள் சமூகத்திலுள்ள முற்போக்குச் சக்திகளை நோக்கிய அரச-இயக்க வன்முறை ஜந்திரம் அவர்களைக் கொன்று தள்ளி, மக்களின் தன்னெழிச்சியை முடமாக்கியுள்ளார்கள்.

படு பிற்போக்குச் சக்திகளே மீளவும் மக்களுக்கான குரலாகத் தமது இலாபத்துக்காக மனிநேயம் பேசிப் பம்மாத்துப் பண்ணுகிறார்கள்.இங்கே இத்தகைய அரசியல் கிழார்கள் தம்மை உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அகிம்சா மூர்த்திகளாகவும் அப்பப்பச் சொல்வதற்குத் தயங்கவுமில்லை.மக்களை மந்தைகளாக்க முனையும் இவர்களின் சூழ்ச்சிகள் வெற்றிபெற்று வருவது இலங்கையின் முற்போக்கு சக்திகளின் வரலாற்றுத் தோல்வியாகவே நாம் காணுகிறோம்.

மிகக் கடினமான இந்தச் சூழ்நிலைமீதான முற்போக்குச் சக்திகளின் போராட்டப் பணி முற்று முழுதாகக் கொலையரசியலால் முடமாக்கப்பட்டுள்ள நிலையில்,கருத்தியல் தளத்திலான போராட்டத்தைக் கடந்த கால் நூற்றாண்டாகச் செய்துவரும் முற்போக்குச் சக்திகளில் தோழர் இராயாவின் பங்கு மகத்தானது மட்டுமல்ல,நமக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.இது முதுகு சொறியும் கருத்தல்ல.மாறாக இன்றைய மெய்பாட்டு உண்மையானது இப்படித்தாம் உள்ளது.

புலிகளும் யுத்தமும்:

புலிகளின் போராட்ட நெறிமுறைகள் யாவும் இந்த அரசியலை இருப்புக்குட்படுத்தவும்,அதை நிலை நிறுத்தி அன்றாட அரசியல் நெறியாக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இத்தகையவொரு நிலையில் புலிகளால் முன் தள்ளப்படும் போர்களும்,அதுசார்ந்த அரசியல் நகர்வுகளும் மேற்காணும் வியூகத்தின் வெளிப்பாடுகளாகவே அரசியல் நகர்வுகளுக்குள் செயலூக்கம் பெறுகிறது.இதிலிருந்து முகிழ்ப்புக்குள்ளாகும் மொழிவழி பேசப்படும் உரிமைகள் குறிப்பிட்ட மொழிபேசும் மக்களைச் சார்ந்து,அவர்களின் சமூகப் பொருளாதார விருத்திக்கும்,அவர்களின் வாழ்வாதாரக் குடிசார் உரிமைகளுக்குமான அர்த்தப்பாட்டைக் கொண்டிருப்பதற்குக் குறுக்கே நிற்கிறது.இவைகள் சமுதாயத்திலுள்ள அரசியலாதிக்கம் பெறத்துடிக்கும் வர்க்கத்தினது வர்க்கவுணர்வாக மேலெழுகிறது.

இந்தவுணர்வினது தான்தோன்றித்தனமான யுத்தப் பிரகடனம் கட்சி-இயக்க அரசியலின் சமூக மட்டத்திலான அதிகாரத்தின் வெளிப்பாடாகவும்,கட்சிகளின்-இயக்கங்களின் ஆயுட்காலத் தலைமையின் அதீதத் தன்முனைப்புக்கும் அந்த முனைப்புக்கு உறுதுணையாக இருக்கும் யுத்த ஜந்திரத்தின் மேலாண்மைக்குள் குவிந்திருக்கும் பொருள் நலத்திற்கும் அவசியமாக இருக்கிறது.இது மக்களின்-உழைக்கும் மக்களின் வர்க்கவுணர்வைச் சிதைத்துக்கொண்டே அந்த வர்க்கத்துக்குள் குறுந் தேசியவெறியைக் கட்டவிழ்த்துவிட்டு யுத்தத்துக்கு ஆளணியைத் திரட்டிக் கொள்கிறது.இங்கே மிகவும் வலுவாக இந்த யுத்த ஜந்திரத்தோடு அப்பாவி இளைஞர்களை இணைக்கும் வியூகமானது மொழிசார்ந்த அதீத வற்புறுத்தல்களாகும்.அது குறிப்பிட்டவொரு மொழிவழிசார்ந்த மனிதவுணர்வை அதன் கடைக்கோடிநிலைக்குத் தள்ளி மக்களுக்கிடையிலான அனைத்துச் சாதகமான ஒற்றுப்மைப் பண்புகளையும் வேரோடு வெட்டிச் சாய்க்கிறது.

இந்த அவலமான சமூகச் சூழலை வலுகட்டாயமாக முன் தள்ளி அதைக்காத்துவருவதற்காகவே யுத்தம் மிகவும் அதி அவசியமாக இருக்கிறது.இத்தகைய யுத்தத்தால் ஆதிக்கத்தையும்,அதிகாரத்தையும் பகிர்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதிலும் அத்தகைய சந்தர்பங்காளால் பெறப்படும் அரசியல் மேலாண்மையைக் கட்டிக்காப்பதற்கும் அப்பப்ப மனித வெடிகுண்டுகளும்,தாக்குதல் யுத்தமும் அவசியமாகிறது.இலங்கையின் அரை இராணுவத் தன்மையான அரசவடிவத்துக்கு இதுவே எந்தக் காலத்துக்குமான கட்சி-இயக்க அரசியலாக இருத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த வகை அரசிலைத் தவிர்த்து ஒரு பெயரளவிலான முதலாளித்துவ ஜனநாக அரசியலையோ அல்லது குடிசார் உரிமைகளையோ இலங்கையைக் கருவறுக்கும் அந்நிய பொருளாதார நலன்கள் விரும்பவிலை.எனவே புலிகள்போன்ற இயக்க அரசியலும்,இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி அரசியலும் ஒன்றையொன்று ஆரத் தழுவியபடியே தனது எதிர்கால இருப்பை உறுதி செய்கிறது.இங்கே மக்களுக்கான அரசியல் உரிமைகளை கட்சி அரசியல் உரிமையாக மாற்றிக்கொண்ட இலங்கை அரசியல் நிர்ணயச் சட்டங்கள்,நீதிமன்றங்களால் மக்களின் பொருள்சார்ந்த பண்பாட்டு வாழ்வை,மொழிசார்ந்த சமூக ஒருங்கிணைந்த கூட்டுணர்வை வாழ்விடங்களால், புவித் தோற்றங்களால் கூறுபோட்டுப் பிரித்தெடுத்து, அவர்களின் ஒருங்கிணைந்த பலத்தைச் சிதைத்துத் தமது ஆதிக்கத்திற்குப் பலமான எதிரிகளற்ற அரசியலை முன்னெடுக்கின்றது.

இது மக்களின் பொதுப் பண்பாடுத் தேசிய அலகுகளைக்கூட அதன் ஒத்த தன்மைகளை அழித்து பிரதேச ரீதியாக உணரப்படும் சில எதிர் நிலைகளை முதன்மைப்படுத்தி மக்களை ஒரு பகுதிக்கு இன்னொரு பகுதி வேறுபாடானது என்று கற்பிக்க முனைகிறது.இதன் அடிப்படையிலெழும் அரசியல் நிர்ணய முனைப்பானது பிரதேசரீதியான நிர்ணயத்தைக் கோருகிறது.இது முற்றிலும் இலங்கைபோன்ற இனவாத அரசியலுக்கு மேற்குலகம் கற்பித்துக் கொடுத்த வியூகத்தின் வெளிப்பாடுதாம்.இந்தவகையிலான குரல்கள் மக்களின் உரிமைகளை அழிக்க முனையும் இன்றைய உலகமயப் பண்பாட்டுக்கு அவசியமாகிறது.

மக்களின் கூட்டு முயற்சிகளை அடியோடு சிதைத்து,அவர்களின் அனைத்து வாழ்வாதராங்களையும் மேற்குல முதலாளிகளின் ஜந்திரத்தின் கச்சாப் பொருள்களாக மாற்றப்படுகிறது.இதற்காக மக்கள் யுத்தக்களின் பேரால்-அரசியல் நிர்ணயங்களின் பெயரால் அழிக்கப்படுகிறார்கள்.இது கட்சி-இயக்க அரசியலின் மிகக் கடைக்கோடி நிலையாகும்.இந்த வினோதமான அரசியலையே மூன்றாமுலகத்துக்கு ஜனநாயகமாகக் கற்பிக்கிறது உற்பத்திச் சக்திகளுடைய மேற்குலகத் தொழில்வள நாடுகள்.


உலகமயப் பொருளாதார ஆர்வம்:


இந்த வகைமாதிரியானவொரு அரசியல் நகர்வில் மூன்றாம் உலகத்தைக் கட்டிப்போட்டு,மக்களின் அனைத்துரிமைகளையும் பறித்து அவர்களைக் கொலை செய்தபடி இந்த உலகமயப் பொருளாதார ஆர்வங்கள் தமது நிலைகளை வலுப்படுத்துகின்றன.ஏதோவொரு அவசியமான அதீத மனிதாயத்தேவையாக இலங்கையில் சமாதானம் பேசும் இந்தச் சக்திகள் மிகக் கபடமாக இலங்கை வாழ் மக்களை மொழியின் பெயரால்-இனத்தின் பெயரால் திட்டமிட்டுக் கூறுபோடுகிறார்கள்.இது இலங்கையின் கட்சி அரசியலையும்,நாடாளுமன்றப் போலி ஜனநாயகத்தையும் காத்துத் தமது அடிவருடிகளைக் காக்க முனையும் பாரிய கபடத்தனமாகும்.

இதற்குள் பேரங்களுக்காகப் போராட்டத்தைச் செய்யும் புலிகள் தமது அரசியல் மேலாண்மையை படைப்பலத்தாலோ அல்லது இலங்கை இராணுவத்தைக் கொல்வதாலோ நிலை நாட்டவில்லை. மாறாகத் தமிழ் மக்களைத் தமது எஜமானர்களுக்காக ஒடுக்குவாதால் மட்டுமே தக்க வைக்கிறார்கள் என்றவுண்மை கசப்பானது.


தொடர் தாக்குதல்களும்,தொடரிழப்புகளுமாக யுத்தம் நகர்வது, பேரத்துக்கானதாகவும்-உழைக்கும் இலங்கை மக்களை ஒடுக்குவதற்காகவும் நகர்கிறது.இந்த யுத்தங்கிளில்,ஒன்று ஈழத்துக்கானது,மற்றது அதைத் தடுப்பதற்கானது.இருதரப்பாலும் இட்டுக்கட்டிச் சொல்லப்படும் நியாயங்கள் மக்களின் எந்தப் பெறுமானத்தையும் பொருட்டுக்கும் மதிப்பதாகத் தெரியவில்லை!

மனிதாபிமானமற்று யுத்தத்தில் மூழ்கியுள்ள இந்தத் தேசத்தின் அரசுகள் மீளவும் மக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைப்பதில் முன்னணி வகித்து,உலகமயப் பொருளாதாரக் கனவுகளுக்கு தென் கிழக்காசியாவில் வாய்ப்புகளையும்,வளத்தையும் உறுதிப்படுத்தித் தமது வர்க்க நலனை உறுதிப்படுத்தித் தம் வர்க்கத்தோடு தோழமையாக ஜெனிவாவிலும்,தாய்லாந்திலும் கை குலுக்கிறார்கள். மக்களோ மாவீரர்-தேச புத்திரர்களுக்காகக் கண்ணீர் மல்கி,தமது மரணவோலத்துக்கு "பேச்சு வார்த்தை-தீர்வு" முடிவு கட்டாதோவென்றும்,தமது வயிற்றுக்காக உழைப்பதற்கு ஒரு தொழில் கிடைக்காதோ-யுத்தச் சூழல் விலகி நிம்மதியாய் ஒரு குவளை சோற்றை மெல்ல முடியாதோவொன்று ஏங்கி நிற்கிறார்கள்.

இந் நிலையில்,


இலங்கையில் இன்றுள்ள மிகப்பெரும் உயிராதாரப் பிரச்சனை "உயிர் வாழும் சுதந்திரத்தை" தீர்மானிப்பது யார் என்பதே!இன்றைய உலகமயமாதலில் அமெரிக்காவானதும் அதன் பங்காளிகளுமான ஐரோப்பிய யூனியனும் வெறும் பொருளியல் நலனை மையப்படுத்திய குவிப்புறுதியூக்கச் சமுதாயமில்லை.அவைகள் பிரபஞ்ச இயக்கத்தையே முடிந்தளவுக்கு தம் கட்டுப்பாட்டுக்குள் நிலவக்கூடிய சமாச்சாரமாகப் பார்க்கிறார்கள்.தோற்றம் அழிவு போன்ற அனைத்து பெளதிக இயக்கத்தையும் தமது சக்திக்கேற்றளவு கட்டுப்டுத்த முயற்சிக்கிறன.இந்த அமெரிக்காவினதும்,ஐரோப்பாவினதும் எடுபிடிகாளக மாறியுள்ள மூன்றாவதுவுலகமெனக் காண்பிக்கப்படும் பொருளாதார வளர்ச்சியற்ற தேசங்களிலொன்றான இலங்கையில் மனிதர்களின் உயிர்வாழும் உரிமையை யார் தீர்மானிக்கிறார்கள்?

இது கேள்வி.


இதற்கு விடை காண்பதுதாம் ஜனநாயகம் பேசும் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
03.12.2006

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...