Sunday, December 31, 2006
வருமாண்டைக் குறித்து...
அன்பு வாசகர்களே,
அருமை நண்பர்களே-தோழர்களே!
இன்றும் தொலையும் 2006,
இனியும் வரக் காத்திருக்கும்
ஒரு புது வருடத்தில்
புலம்புவதற்குப் பல இருக்கின்றன.
பசியும் பட்டுணியும்
பாருக்குள் கொலையும்,அநீதியும்
பண்டத்தைக் குறித்தே...
இவை அநுதினம் மலிய
அன்பாய்-ஆதரிப்பாய்
எப்படி அளவளாவ?
இருந்தும்,
ஒரு செக்ற்(உவையின்) போத்தலைத்
தனிமையில் திறந்தபோது
"நான் சமைக்க இருக்கிறன் நீ குடி"என
என் தோழி-துணைவி புலம்ப
புது வருடம் வரப்போகுது.
வெடிகள் கொஞ்சம் வேண்டினேன்
என் மழலைகள் மகிழ்வதற்கென!
எல்லாம் சேர்த்து,
பதினைந்து பொருள்களென
என் சின்னவன் கல்குளேற்றரில் பார்த்துச் சொன்னான்.
அவர்கள் வெடிப்பதற்குத் தயாராக...
நான் இரவு பன்னிரெண்டுவரையும் பொறுக்கச் சொன்னேன்.
இதுதாம் நமது
மகிழ்வு,அழுகை,வருத்தம்,தைப் பொங்கல்,
எல்லாம்!
உங்களோடு
உறவாடும் ஒரு பொழுதைத் தவிர
எனக்கென்று எந்த விருப்புமில்லை!
இந்தவுலகத்தில்
மானுடம்
அமைதி,சாந்தம்
இன்பம்,
சுகம்
இதயம் மலர்வாய்
இருப்பதைத் தவிர
எதுவும் நாம் கேட்கவில்லை!
எல்லோரும் இன்புற
இனியவொரு உலகைத் தவிர
எது வேண்டும் எமக்கு?
நானொரு குடிகாரன்.
நல்லதற்காய்,
கெட்டதற்காய் நடுச் சாமத்திலும் குடிப்பேன்.
குடிப்பதனால்
வாழ்கிறேன்,
குரைப்பதனால் நோகிறேன்.
எனக்கும்
நாய்க்கும்
வித்தியாசம் உருவத்தில்...
எல்லாம் தொலைக!
இதயம் மலர்வாய்
இருப்பவர் வாழ
ஏனிந்தவுலகம் எதுவும் செய்வதில்லை?
என்றபோதும்
ஒரு "குடி"பொழுதில்
ஏதோவொரு பாசத்தோடு
எல்லோருக்கும்
அன்பு,அமைதி,ஆரோக்கியம் சேர
வரும் புத்தாண்டு பொறுப்பாக
வாழ்த்துகிறேன்!
போதும்
என் புலம்பல்,
போதை ஏறும் தரணமிது;
பொல்லாத உணர்வு பிதற்றச் சொல்லும்.
"................................"
எனவே,
சந்திப்போம் தொடர்ந்து,
இன்புற்றிருங்கள்!
உலகில் எதுவும் நடக்கும்,
எம்மால்
முடிந்தது...
நட்போடு,
ஸ்ரீரங்கன்.
31.12.2006.
Saturday, December 30, 2006
படுகொலை செய்யப்பட்ட சதாம் !
கொலையாகிய சதாமின் அரசியல் வாழ்வு கூறுவது என்ன?
1:அரபு மொழி பேசுபவர்கள் எல்லோரும் ஒரு தேசிய இனமல்ல.
2:இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒரு தேசிய இனமல்ல.
3:அரபு தேசத்தில் வாழும் முஸ்லீம்,அரபு மொழி பேசுபவர்கள் யாபேரும் ஒரு தேசிய இனமல்ல.
4:எண்ணை வயல்களைச் சொந்தமாக்கிய அரேபியர்கள் எந்தச் சொத்துமற்ற அரேபியர்களுக்கு பாதுகாவலர்களில்லை.
5: எண்ணை டொலர்களே ரிம்மில் ஓடும் அமெரிக்கப் பாசிச இராணுவத்தின் இருப்புக்கு மிக உந்து சத்தியாகும்.
6: உலக ஏகாதிபத்தியத்தின் கனி வளத் தேவைக்கு எந்தத் தேசத்தின் இறமையும் ஒரே நொடியில் சிதைக்கப்பட்டு,பிற தேசங்களின் வளங்களை ஒட்டச் சுரண்டும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய மூலதனம்.
7:இந்த ஒழுங்குக்காகவே தமது அடிவருடிகளைப் பயன்படுத்தும் அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் பிற சமூக ஏகாதிபத்தியங்கள்,அந்த அடிவருடியைத் தமது தேவைக்காக ஒரு சந்தர்ப்பத்தில் கொலைகளைச் செய்வதற்குக் தூண்டித் தேவையுருவாகும்போது அதையே காரணமாக்கித் தமது அடிவருடியைக் கொல்லவும் முனையும்(இந்த இடத்தில் இந்தியச் சமூக ஏகாதிபத்திய-தரகு முதலாளியத்தை ஞாபகப்படுத்துவோம்:இந்திய ஆளும் வர்க்கம் புலிகளின் தலைவரைக்கொண்டே அநுராதபுரத்தில் அப்பாவிச் சிங்கள மக்களை வெட்டிக் கொலை செய்ய வைத்தது.இராஜீவ் காந்தியையும் படுகொலை செய்வித்தது.இது பல நேரங்களில் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு மிக அவசியமானதாக இருக்கிறது).
மக்கள் இந்தக் கொடுமையான முதலாளித்துவ உலகில் வர்க்கங்களாக இருக்கிறார்கள்.வர்க்கச் சமுதாயமாக இருக்கும் மக்கள் கூட்டத்துள் வர்க்க அரசியலே அடிப்படை.
வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலான யுத்தமே.
இந்த அடிப்படையிலேயே உலகத்தின் வளங்களைச் சுருட்டி வைத்திருக்கும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் பெரும் பான்மையான மக்களை அனைத்து வகை ஒடுக்குமுறை அலகுகளாலும் அடக்கி ஒடுக்கி வருகிறார்கள்.அதை இங்கே பார்க்கவும்.
மக்களின் விபத்தாக உருவாகிய அனைத்துப் பிரத்தியேகியக் கூறுகளையும்(மொழி,மதம்,பண்பாடு)கூர்மைப்படுத்தி மக்களைக் கூறுபோட்டு ஒருவரையொருவர் பகையாக்கி இன-மதப் போர்களை உருவாக்கித் தமது சுரண்டலை நிறுவிக்கொள்ளும் இன்றைய நவ பாசிஸ்ட்டுக்கள் ஜனநாயத்தின் பெயரால் மக்களைக் கொன்று குவிப்பது தமது தொழிற்சாலைகளுக்கு வளங்களை-மூலவளங்களைத் தொடர்ந்து தங்கு தடையின்றிக் கிடைப்பதற்கே!
சதாமின் கொலையை ஆதரிப்பதற்காக ஒரு சிறுபான்மைச் சனத்தை அமெரிக்கா தனது தேவைக்கேற்றபடி தயாரித்துப் படம் காட்டுகிறது.இது ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித் தனத்தை நியாயப்படுத்தச் சிறுபான்மை இனத்தின் உரிமையைப் பயன்படுத்துவதாகும்.
1965-1970 ஈராக் சிரியா மற்றும் குர்தீஸ் போராளிகளுக்கிடையிலானB-1 இரக யுத்தம் கூடவே 1974-1975,மற்றும்1976-1979 வரையான ஈராக் குர்தீஸ் பிரிவனைவாதப் போராளிகளுக்குள் இடம் பெற்ற B-2 வகையிலான யுத்தம்கூட அமெரிக்க அரசின் தூண்டுதலோடுதாம் நடை பெற்றது.
இது போலவே 1980 இல் நடைபெற்ற ஈரான்,ஈராக் யுத்தம் C-2 வகையிலானது,இதுவும் அமெரிக்க-ருஷ்சியப் பலப் பரீட்சையாகவே இந்த மண்களில் நடைபெற்றது.
இத்தகைய இன்னொரு யுத்தமானது 1961 இல்B-1 இரகம், அமெரிக்காவுக்கும் இருஷ்யாவுக்குமானதான யுத்தமாக எத்தியோப்பியாவுக்கும் எரித்திரியாவுக்குமான சுதந்திரப் போராகப் படம் காட்டப்பட்டு பல இலட்சம் மக்கள் பலியாக்கப்பட்டதற்கும் இந்த அமெரிக்காவே முதல் காரணமாக இருக்கிறது.
ஈரக்கின் முன்னாள் அதிபர் சதாமைக் கொல்வதற்கு எவருக்கும் உரிமைகிடையாது.அது சதாமால் பாதிக்கப்பட்ட மக்களுக்குஞ்சரி அல்லது சதாமின் தேசத்து மக்களுக்குஞ்சரி இந்தக் கடமை இல்லை.
சதாம் மக்களின் உண்மையான அதிகாரத்தின் முன் விசாரணைக்கு உட்பட வேண்டியவர்.அவரை எந்த அதிகாரத்தினதும் முடிவும் கொல்வதற்கு தீர்ப்புக் கூறமுடியாது.இது எந்த வர்க்கத்தின் நலனுக்கும் பொருந்தும்.மக்கள் விரோதிகளைத் தூக்கில் போடுவதல்ல மக்கள் நலனின் நோக்கு.எதிரியையும்,அவ(ள்)ன் வாழும் உரிமையைக் காத்து ,அந்த எதிரியின் வாழ்வைத் திருத்துவதே மக்களினதும் ஜனநாயகத்தினம் உண்மையான நோக்காக இருக்கும்.இதுதாம் இன்றைய புதிய ஜனநாயகக் கோரிக்கைகளில் அதி முக்கியமான மனிதவுரிமைக் கோரிக்கையாகும்.
இந்த நோக்கற்று சதாமின் இருப்பை இல்லாதாக்குவது அமெரிக்க அதிகாரத்தினதும்,அவர்களினது தேசம் கடந்த ஆதிக்கத்தினதும் மிகக் கொடுமையான அச்சுறுத்தலாகும் இது.இத்தகைய கொலைக்கூடாகத் தம்மை எதிர்க்கும் எந்தத் தேசத்துத் தலைவர்களுக்கும் இதுவே கதியென்ற மனோவியல் தாக்குதல் இதுவாகும்.தமது சுரண்டல் நலனுக்குக்கு குறிக்கே நிற்கும் தேசங்களுக்கும்,அந்த் தேசத்து வளங்களைக் காக்க முனையும் அரசுகளுக்கும் அமெரிக்க-ஐரோப்பிய முதலாளிகளால் விடப்படும் மிகப் பெரிய கொலை அச்சுறுத்தல் இதுவாகும்.
இந்தத் திமிர்தனமான அதிகாரம் அமெரிக்க முதலாளித்துவத்தோடு இணைந்த உலகத்தின் அனைத்து முதலாளிய நாடுகளுக்கும் விடப்படும் அச்சுறுத்தலாகும். அமெரிக்க-ஐரோப்பிய நலன்களுக்கு எதிராக இத்தகைய நாடுகளின் அரசியல் மாற்றமுறுமானால் அத்தகைய நாடுகளை அமெரிக்க-ஐரோப்பியர்களான நாம் சதாமின் நிலைக்கு உந்தித் தள்ளுவோம் என்று அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியம் விடும் சவால் இது!
இதை மீறிய எந்தத் தேசத்தின் முடிவும் இந்த ஈராக்கின் நிலைக்கு மாறியே தீருமென்று உலகப் பகாசூரக் கம்பனிகளின் அடியாளாகிய அமெரிக்கப் பயங்கரவாத அரசினூடாக இன்று உலக மக்களுக்கும், அவர்களின் இறைமைக்கும்,அவர்களின் தேசங்களின் வளங்களுக்கும் விடப்படும் பாரிய அச்சுறுத்தலாகும் இது.
இத்தகைய உலகப் பயங்கரவாதக் கம்பனிகளால் மக்களின் நலன்கள் எங்ஙனம் இல்லாதொழிக்கப்படுகிறதென்பதை பக்கம் பக்கமாக எழுத வேண்டியதில்லை.உலகமயப் பொருளாதாரத்துக்கு முன்பே இவர்களின் காலனித்துவக் காட்டுமிராண்டித்தனங்களையும்,கொலைகளையும் அனுபவித்தவர்கள் நாம்.உலகத்தின் எத்தனையோ யுத்தங்கள்,அழிவுகள்,அணுக் குண்டுத் தாக்குதல்கள் யாவும் மிகப் பெரும் உண்மையை நமக்கு உணர்த்தி நிற்கின்றன.அவை இந்தக் காட்டுமிராண்டித் தனமான முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையென்ற மக்கள் விரோதத் தனியுடமைச் சர்வதிகாரத்தின் சர்வ வல்லமை படைத்த பாசிச வெளிப்பாடே.
அன்றைய கொலம்பஸ் முதல் இன்றைய ஜோர்ச் புஷ்வரை முதலாளித்துவ நலன்களுக்கான-தனியுடைமைச் சுரண்டலுக்கான அடியாட்களேயென்பது நாம் அறிய வேண்டிய உண்மையாகும்.இந்தப் பேய்களின் பின்னே தங்கு தடையின்றி சுரண்டிக்கொண்டிருக்கும் பாரிய தொழிற்கழகங்கங்கள் சதாமைமட்டுமல்ல இப்படி பல கோடி சதாம்களை-மக்களை தமது கனிவளத் தேவைக்காக நாளாந்தம் கொன்று குவித்து வருகிறது.
ஈராக்கின் எண்ணை இருப்பானது 490 கோடிகள் தொன்களாக இருக்கிறது.இது இன்னும் பத்தாண்டுகளுக்குள் கொள்ளையிடப்பட்டு விடும்.ஈராக்கைவிட ஈரானில் கிட்டதட்ட 780 கோடிகள் தொன்களுடைய எண்ணையிருப்பு இருக்கிறது.இதையும் கண்ணைத் துருத்திக்கொண்டு கொத்துவதற்குத் தயாராகும் அமெரிக்கக் கழுகு ஈரானியப் பிரதமரையும் வேட்டையாடக் காத்திருக்கிறது.
சதாம் என்பவர் பாசிச வாதியென்பதும் மக்கள் விரோதியென்பதும் ஒரு புறமிருக்கட்டும்.ஆனால் அவரொருவர் மட்டுமேதாம் ஈராக்கிய நாட்டின் எண்ணைக் கிணறுகளைத் தனது சொத்தாக மாற்றாமல் தன் தேசத்துச் சொத்தாக மாற்றியவர்.அரபு நாடுகளில் பெரும் பாலும் அனைத்து எண்ணை வயல்களும் தனியுடைமாயாகவும், பெரும் எண்ணைக் குடும்பங்களாக இருக்கும் சில அரபுக் குடும்பங்களுக்குச் சொத்தாக இருப்பதால்,இத்தகைய தேச விரோத அரேபியர்கள் எண்ணையால் வரும் முழுப் பணத்தையும் உலக வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.இப்பணம் பல பத்தாயிரம் றில்லியன்கள் டொலராகும்.இந்தப் பணமே அமெரிக்க ஆதிக்க இராணுவத்துக்கு தீனிபோடுவதற்குடைந்தையாக இருக்கிறது.அரபுத் தேசங்களை சில குடும்பங்களே ஆளுகின்றபடியால் தமது பணங்களை அமெரிக்கா தனதாக்கி விடும் என்ற காரணத்துக்காக தமது அயல் தேசத்தில் எது நடந்தாலும் மூச்சு விடாமல் இருக்கின்றன, பல அரப்புத் தேசங்கள்.இங்கே வர்க்க நலனே முதன்மையானது.மற்றும்படி முஸ்லீம்,அரபு என்பதெல்லாம் வெறும் பம்மாத்து இவர்களுக்கு.
உலகத்திலுள்ள எண்ணைச் சுரண்டல் கம்பனிகள் ஏழு.இவற்றுள் 5 பெரும் எண்ணைக் கொன்சேர்ன்கள் அமெரிக்காவுக்குச் சொந்தமானதாகும்.ஒன்று இங்கிலாந்து மற்றது அங்கேலோ-கொல்லாந்துக்குச் சொந்தமானது.மற்றெல்லாம் நடுத்தரமான சிறியவை.அவைகள் இந்தப் பெரும் பகாசூரக் கம்பனிகளால் மட்டுமே உயிர் வாழும் தகமையுடையவை.அமெரிக்காவின் எக்சோன்((Exon) மற்றும் அங்கேலோ- கொலன்ட் செல்(anglo-Hollaend Shell)உலகின் அனைத்து எண்ணை வயல்களையும் ஆளுகிறது.இவையேதாம் உலகத்தின் எண்ணை விலையைத் தீர்மானிக்கின்றன-சந்தையைக் கட்டுப்படுத்துகின்றன.இங்கேதாம் சதாம் குறுக்கே நின்றார்.அவர் தனது தேசத்தின் ஆளுமைக்குள் சந்தையைச் சுதந்திரமாக்க முனைந்தார்.அந்தோ அவர் கதையும் முடிந்தது.British Petrileum Company(BP)பிரித்தானியாவின் அரச நிறுவனமாகும்.எனவேதாம் எண்ணைச் சந்தை முரண்பாடுகள் உருவாகியபோது இரண்டாம் உலக யுத்தக்காலத்தில் வின்சன் சேர்ச்சில் பீ.பியை தேசப்பற்றுடைய நிறுவனமாகவும் செல் எண்ணை நிறுவனத்துக்கு மாற்றாகவும் சொன்னது ஞாபகம்.(அந்தோனி சிம்சன்: ஏழு சகோதரிகள் ஆங்கலப் பதிப்பில் எப்போதோ வாசித்ததாக ஞாபகம்.)
சதாம் அமெரிக்கா சொல்வது போன்று தன்னிச்சையாக மக்கள் விரோதியாக வாழ்ந்தவர் அல்ல.சதாமை உருவாக்கியது அமெரிக்காவே.சதாம் தனது இறுதிக் காலங்களில் அமெரிக்காவின் அடிவருடியாகச் செயற்பட மறுத்தபோது அவர் ஈராக்கின் வளங்களைத் தேசத்தின் வளமாக்க முனைந்து, அமெரிக்க அடிமைத்தனத்துக்கு குறுக்கே நிற்க முனைந்தார்.அதுவே அவரது அழிவுக்குக் காரணமாகவும் மாறியது.இங்கே ஈராக்குக்கு ஆதரவாக எழுந்த மக்கள் எழிச்சியையோ அல்லது ஜனநாயகக் குரல்களையோ அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒரு பொருட்டாக மதிக்காது, ஈராக்கை வேட்டையாடியது.இந்தப் படிப்பனவு அமெரிக்காவை வலுவான வகையில் ஆயுதம் மூலமாகப் பாட்டாளிய வர்க்கம் எதிர்காதுபோனால் இந்தப் புவிப்பரப்பில் உயிர்கள் நிலைக்க முடியாதென்பதே இன்றைய மிகப் பெரும் உண்மையாகும்!
இதற்குச் சதாம் அவர்களின் இன்றைய வாழ்வும் சாவும் நல்ல உதாரணமாகிறது.
அமெரிக்கா என்பது உலகப் பாசிசத்தின் அதியுச்சக் கொடுமுடியாகும்.இந்த அமெரிக்கா மனித சமூகத்துக்கே எதிரான விசச் செடியாகும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
30.12.2006
Tuesday, December 26, 2006
சுனாமியைச் சொல்லியழ...
ஒவ்வொரு நிகழ்வும்,அது துக்கமானதாகவிருந்தாலென்ன மகிழ்ச்சியானதாகவிருந்தாலென்ன அனைத்தும் இலங்கையில் சம்பிரதாயமாக மாறிவிட்டது!வார்த்தைகளுக்குக் கொடுக்கும் மதிப்பை மனிதவுணர்வுகளுக்கு எவரால் கொடுக்க முடிந்தது?இன்றைய இலங்கையில் சுனாமியலையால் அழிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்வதற்கு எந்தவொரு கட்சிக்கோ அல்லது இயக்கத்துக்கோ அருகதையுண்டா?மக்களின் மீதேறி யுத்தச்சவாரி செய்யும் இலங்கையரசுக்கோ அல்லது புலிகளுக்கோ இந்தத் தார்மீகக் கடமையைச் செய்யும் அருகதையுண்டா?எத்தனை தலைமுறை சென்றாலும் நீங்கா நினைவாக நெஞ்சில் நெருடும் இந்தச் சுனாமி அழிவானது, எம் தேசத்துக்கு மட்டும் சொந்தமில்லாத முழுவுலகுக்குமே பொதுவான நினைவு நாளாக இருக்கிறது.இங்கே கட்சி இயக்க வாத நலன்களைக் கடந்து, மக்களால் நினைவு கோரவேண்டிய இந்தக் கோரச் சம்பவத்தை, யுத்தத்தையே தொழிலாகக் கொண்ட அரசுகள்,கட்சிகள்-இயக்கங்கள் நினைவுகூர்ந்து தம்மை மக்களின் நண்பனாக்க முனையும் கபடத் தனத்தை என்னவென்பது!
கடந்த ஈராண்டுகளுக்கு முன் பல பத்தாயிரம் பிஞ்சுகள் சுனாமிக்கு இரையானபின் நடந்தேறிய இலங்கை அரசியலானது மிகவும் கீழ்தரமானது.அது மக்களின்-அழிந்தவர்களின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்த முனைந்ததேயொழியப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு மீள் நிர்மாணப் பணியையும் செய்யவில்லை.மக்கள் இயற்கையின் கோரத்தாண்டவத்துக்குப் பலியான கொடூரத்தைப் பக்கம் பக்கமாகக் காட்டிப் பணம் சம்பாதித்தவர்கள், இன்று பல்லாயிரக்கணக்கான மக்களை யுத்த்தால் கொன்று குவித்து வருகிறார்கள்.இவர்களின் மிகக் கேவலமான யுத்த முனைப்பால் வாகரையில் இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அகதியாக இடம்பெயர்ந்து அவலப்படும் இன்றைய பொழுதிலும்,யாழ்ப்பாணத்தில் அப்பாவி மக்கள் உண்ண உணவின்றிச் சாவதே மேலென்று ஒப்பாரியிட்டு,சிக்கன் குனியா நோய்க்குள் வதங்கும்போதும் யுத்தமே மக்கள் தலையில் குண்டைப்போட்டுக் கொல்லும்போது, இந்தச் சுனாமியில் செத்தவர்கள் பற்றிய புலிகளினது,இலங்கை அரசினது நினைவு கூரல்கள் எல்லாம் வெறும் வெற்றுத்தனமான சடங்கு நிகழ்வாகவே மாற்றப்படுகிறது.அப்பாவி மக்களை யுத்த ஜந்திரத்துக்குப் பலியாக்கி, அவர்களை மீளவும் கொன்று குவிக்கும் கட்சி-இயக்க நலன்கள் இலங்கைத் தேசத்து மக்களின் எந்த நலனையும் காக்கும் குடிசார் நலன்களை முதன்மைப் படுத்தவில்லை.மாறாக மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்தெறிந்து, அவர்களைப் பட்டுணிச்சாவுக்குள் தள்ளிவிட்டு,சுனாமியால் செத்தவர்களுக்கு இரங்கல் உரை நிகழ்த்துவது மகாக்கொடுமையிலும் கொடுமை!
இன்றைய நிலவரப்படி இந்த யுத்தமானது தமிழ் பேசும் முழுமொத்த மக்களையும் அவர்களின் வாழ்விடங்களைவிட்டொழுப்பியுள்ளது.இந்த யுத்தப் பேய்களால் பல்லாயிரம் மக்கள் நோய்கும்,பசிக்கும் இரையாகிவருகிறார்கள்.இடம் பெயர்ந்தலையும் மக்கள் ஒண்டுவதற்கு இடமின்றி அநாதைகளாகக் காட்டில் அலைகிறார்கள்.அப்படிக் காட்டில் தஞ்சமடைந்த மக்களை இலங்கையரசின் குண்டுகளும்,புலிகளின் பொல்லாத செல்லடிகளும் கொன்று குவித்துவருகிறது!எவரிடமும் முறையிடமுடியாத மக்கள் தம்முயிரைக் கையில் பிடித்தபடி மரணப் போராட்டம் செய்கிறார்கள்.இத்தகைய வாழ் சூழலை மக்களுக்கு வழங்கும் கொடூரமான அரசும்,புலிகளும் செத்தவர்களுக்காகக் கண்ணீர் வடிப்பது வடிகட்டிய அயோக்கியத்தனமானது.
யுத்தத்தை நிறுத்திச் சமாதானம் பேசுகிறோமென்று சொல்லிக்கொண்டே யுத்தம் செய்து, மக்களைக் கொல்லும் இந்த அரசியலானது இன்று நேற்றுத் தொடங்கிய கதையல்ல!
இது, சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளாக இதே கதையோடே யுத்தம் செய்து மக்களைக் கொல்கிறது புலியும்,சிங்கமும்!.மக்களை ஏமாற்றிக் கொலை புரியும் இந்த அரசியல், உயிர் வாழும் அப்பவிகளை இன்னும் ஒருபடி மேலே சென்று தமது பேரத்துக்காகப் பட்டுணி போட்டுக் கொல்லும் கொடூரம் இப்போது முனைப்பாக நடைபெறுகிறது.இன்றைய யாழ்ப்பாணத்து மக்கள் யாழ்பாணத்தைவிட்டு இடம் பெயரவும் முடியாது,பசிக்கும் நோய்க்கும் முகம் கொடுக்க முடியாது தற்கொலை செய்வதே மேலெனும் நிலைக்குள் தள்ளப்பட்டுக் கிடக்கிறார்கள்!இந்தவுண்மையைப் பாதிக்கப்பட்ட மக்களே கண்ணீரோடு கதிறிப் போனில்(தொலைபேசி) அழும்போது, நமக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை!
யாழ்ப்பாண நகரில் சீனியின்றிப் பரித்தித்துறைக்குச் சென்று, கால்கிலோ சீனிக்கு 100.ருபாய் கொடுத்து வேண்டப்படுகிறது.ஒரு லீட்டர் தேங்காய் எண்ணை 1400.ரூபாய்க்கும்,மாவு 350 ரூபாய்க்கும்,அரிசி 300 ரூபாய்கும், கத்தரிக்காய் கிலோ 400.ரூபாய்க்கும்,மீன்1400.ரூபாய்க்கும் கிலோ விற்கப்படும்போது, எவனால் யாழ்ப்பாணத்தில் வாழ ழுடியும்?உலகத்தில் பெரும் படைப்பலம் முடைய இந்தியா-சர்வ வல்லமை பொருந்திய இந்தியா இலங்கை அரசியலில் இத்தகைய கொடூரமான நிகழ்வுகளுக்கு இன்னும் எண்ணையூற்றி வருகிறது.மக்களின் அழிவைத் தடுத்து நிறுத்தும் தார்மீகக் கடமை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.அதைச் செய்ய வேண்டிய தரணத்தில் உலக மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
எனினும், இலங்கை அரசியலால் பாதிக்கப்படும் அப்பாவிகளைத் தத்தமது இயக்க-கட்சி அரசியல் நலனுக்காகப் புலிகளும்,இலங்கையை ஆளும் கட்சிகளும் திட்டமிட்டு மறைத்து வருகிறார்கள்.அப்பாவிகளின் அடிப்படையுரிமைகளைப் பறித்து அவர்களை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தும் இந்தக் கேடுகெட்ட அரசியல் மக்களின் மிகப்பெரும் துயரத்தைத் திரைபோட்டு மறைக்கிறது.யாழ்பாணத்திலும்,வாகரையிலும் மக்கள் செத்து மடியும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மூதூரில் ஒத்திகை பார்த்த மாபெரும் மனித அவலம் இப்போது தேசமெங்கும் அரங்கேற்றப்படுகிறது.அப்பாவி மக்களை இனத்தின்-மதத்தின் பெயரால் கொன்றுபோட முனையும் இந்தப் போராட்ட அரசியலைத் தடுப்பதற்கான எல்லா வகை அரசியல் நகர்வையும் நாம் ஆற்றவேண்டிய மிகக் கடினமான சூழலில் இருக்கிறோம்.
சமாதானம்,
புரிந்துணர்வு ஒப்பந்தம்
பேச்சு வார்த்தையென்று இந்தப் பயங்கரவாதிகள் பூச் சுற்றும் அரசியலில் உண்மையில் மக்களின் நலனைப் பின்தள்ளிய இயக்க-கட்சி நலனே முதன்மையுறுகிறது.இவர்கள் நடாத்தும் இந்த நாடகத்தை சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் அறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்:
"நாம் சமாதானத்தின் கதவுகளை அடைத்து விடவில்லை.சமாதான வழியில் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் பாதைகளை மூடிவிடவில்லை.சமாதான வழிமூலம் எமது மக்களுக்கு நீதி கிடைக்குமானால் நாம் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.சமாதானத்தை தோற்றுவிக்கும் நல்லெண்ண நோக்குடன் இங்குவரும் சமாதானத் தூதுவர்களை நாம் நேசக்கரம் நீட்டி வரவேற்று வருகிறோம்.போரை நிறுத்தி,சமாதான வழியில் பிரச்சனைக்குத் தீர்வுகாண எமது விடுதலை இயக்கம் தயாராக இருக்கிறதென்பதை நாம் இவர்களுக்கு மேலும் மேலும் வலியுறுத்தி வருகிறோம்.எமது நல்லெண்ணத்துக்குச் சான்றாக சமாதானச் சமிஞ்சிகளை காட்டவும் நாம் தவறவில்லை."(08.03.1994 அனைத்துலகப் பெண்கள் தினத்துக்கான பிரபாகரனின் அறிக்ககை.-எரிமலை ஆனி 1994.பக்கம்:14.)
இந்தக் கூற்றைக் கடந்த மாவீரர் தினவுரையிலும் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.ஏன் ஒவ்வொரு மாவீரர் தினவுரையிலும் எல்லோரும் கேட்டிருக்கிறோம்.ஆனால் இவர்கள் சொல்லும் மக்களுக்கு, இவர்கள் என்ன நீதியைக் கொடுத்துள்ளார்கள் இன்றுவரை?இவர்களே சமாதானம் என்று அடிக்கொரு தடவை சொல்லிக்கொண்டு, இன்று வரை மக்களுக்கெதிரான யுத்தங்களைச் செய்கிறார்கள்.என்னவொரு கபடத்தனமான அரசியல்?கடந்த பன்னிரெண்டாண்டுகளாகச் சமாதானஞ் செய்ய முடியாத மர்மம்தாமென்ன?மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் அரசியலானது நிச்சியமொரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கும்!அனால் இங்கே 2004 இல் இடம் பெற்ற இயற்கையின் கோரத் தாண்டவத்தில் எழுபதாயிரம் உயிர்களைப் பறி கொடுத்த இந்தத் தேசத்தின் அரச அமைப்புகள் இன்னும் அதேயளவு உயிர்களைக் கொன்றுபோடும் யுத்தத்தில் மூழ்கிக் கிடப்பதன் மர்மம்தாமென்ன?இவர்களில் எந்தத் தரப்புக்கும் மக்களின் அவதிகளில் அக்கறையில்லை.மாறாக மக்களின் அவலத்தில் அரசியல் பிழைப்பு நடாத்தும் மிகக் கேவலமான அரசியல் வியூகத்தை இவர்கள் மக்கள் நலனென்கிறார்கள்.இதையும் மக்களின் பெயரால் வரவு வைத்தபடி அந்த மக்களைக் கொன்று குவிக்கும்போது நாம் இந்தப் பாழாய்ப்போன யுத்த வெறியர்களைச் சபிப்பதைத் தவிர வேறுவழியின்றிக் கிடக்கிறோம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
26.12.2006
Sunday, December 24, 2006
ஒரு செம்பு சுடு தண்ணீர்.
மார்கழி மாதம் எனக்கு மனதுக்கேற்ற மாதமாகவே என்றும் இருந்து வருகிறது.ஊரிலிருந்தபோதும்சரி,இந்த அகதிய வாழ்வுக்காக ஜேர்மனிக்கு போடர்தாண்டி வந்தபின்புஞ்சரி எனக்கெப்பவும் மார்கழிமீதான விருப்பு பன்மடங்காகிச் சென்று கொண்டேயிருக்கு.சின்ன வயது, அம்மாவின் சேலைத் தலைப்போடு ஒன்றித் திரிந்தபோதெல்லாம் மார்கழியில் வரும் திருவெம்பாவைச் சங்கொலியும்,அதிகாலைத் தேவாரமும் என்னைத் தாலாட்டியிருக்கிறது.விடியலில் எழும்பித் திருநீறு வேண்டுவதற்காகத் திருவெம்பாவை பஜனைக்கூட்டத்தை நோக்கி ஓடுவோம்.எனது தம்பி மார்களும் நானுமாக இந்த மார்கழி மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருக்கிறோம்.இந்தப் பாசம் வரும் தைப் பொங்கலை நோக்கியே இருந்திருக்கிறது.
தைப்பொங்கல்!
இந்தப் பொங்கலில் எங்கள் புளியங்கூடல் சந்தி மிகவும் களைகட்டிச் சிரித்து நிற்கும்.கனகசபை மாமாவின் கடையில் மான்மார்க் வட்டப்பெட்டி வெடியும்,வாணங்களும் ஒரு பெரிய அலங்காரமாக அடுகப்பட்டிருக்கும்.பொங்கல் பானைகளெல்லாம் குவிந்திருக்கும்.ஊரே பொலிவுற்றுக் கிடக்கும்.அம்மா புதிய அடுப்புக் கல்லை மண்ணில் செய்து காயவைத்திருப்பார்.அப்பர் பொங்கலுக்காவே எங்களுக்கு உண்டியல் போடுவதற்கு நிறையக் காசுகள் தருவார்.நாங்கள் வெடிகள் வேண்டுவதற்காகவே உண்டியலிடுவோம்.பொங்கலுக்கு முந்திய இரவில் விடப்படும் வாணத்துக்காகவே நாங்கள் கனவுகளைக் காணத் தொடங்குவோம்.இப்படிப் பொங்கலுக்கான ஒரு புதியவுணர்ச்சி எங்களுக்குப் புதுவுலகாக எங்கள் கிராமத்தை மாற்றுவது வழமை.
ஊரெல்லாம்கூடிப் பொங்குகிற இந்தவொரு நிகழ்வு மார்கழி மாதத்தை மனதுக்கு விரும்பியவொரு மாதமாகவே எனக்குப் பழக்கப்படுத்தியது.இந்த மார்கழியில் ஜேர்மனியும் இவ்வளவு குதகலாகமாகி சிறப்புற்றுக் கிடக்கிறது.நத்தார் பண்டிகையோடு இந்த நாடே ப+ரித்துக்கிடக்கிறது.தேங்கிக்கிடந்த சந்தையெல்லாம் பெருநீர் கண்டு உடைபடும் கண்மாய்க் கரையைப்போல் உடைப்பெடுத்து நுகர்வோரால் நிறைந்து வழிகிறது. இந்த வ+ப்பெற்றால் பெருநகரின் அங்காடிகள் நிறைந்த பகுதியில் மெல்ல நடந்து கொள்ளும்போது ஊரின் ஞாபகம் உள்ளத்தைத் தாக்கியது.மெல்லச் சிந்தும் விழி நீர் அந்த மண்ணைச் சுற்றியே தொடரும் உணர்வின் ஒரு குறிப்பாய் நிலத்தில் வீழ்ந்து வெடிக்கிறது.மௌனித்திருப்பதற்கான எந்த மந்திரமும் என்னிடமில்லை.இப்பேதெல்லாம் தேசத்தின் கதை எப்படியோ போய்விட்டது!
எங்கள் ஊரின் மாரி மழையில் தோட்டம் துரவெல்லாம் மூடுண்டு போவதும்.பயிர் அழிவதும் அப்பப்ப நடப்பது.இந்த மாரிகாலத்து மார்கழியில் ஊர் பெருக்கெடுத்து ஓடும்.நீர் வடிந்தோடுவதற்கு அப்போதெல்லாம் பாரிய மதவுகள் குறைந்த எங்கள் கிராமத்தில் வெள்ளம் பல நாட்கள் தேங்கி நிற்கும்.வீதியைப் பிளந்து நீரை மறுபக்கம் ஓட வெருட்டுவார்கள் ஊர் பெரியவர்கள்.எங்களுக்கு கடலிலிருந்து வெள்ளத்தோடு அள்ளுப்பட்டுவரும் மீன் குஞ்சுகளைப் பிடிப்பதில் ஆர்வம் அதிகம்.நாங்கள் இப்படி நீராடி மகிழ்ந்த ஒரு வருஷம் 1970.அப்போது எங்கள் ஊருக்கு வாந்திபேதி வருத்தம் வந்து தொலைய,ஊரெல்லாம் பதட்டம்.கோலரா நோய் பரவியதாகப் பறையடித்துச் சொன்னார் நல்லான்.எங்கள் ஊரில் அப்போதெல்லாம் இப்படித்தான் செய்திகள் ஊருக்கு வரும்.நல்லான் அப்பு கிரமச் சங்கத்தில் உறுப்பினர்.அவர்தான் எப்பவும் எங்களுரின் செய்தித் தொடர்பாளர்.எங்களுக்குச் சந்தோசம் கரை புரண்டோடியது.எங்கள் பள்ளிக்கூடத்துக்கு காலவரையற்ற மூடுவிழா.
ஒவ்வொரு பகலிலும் பாடசாலைக்குள் வைத்தியர்களும்,பொலிசும் இருப்பார்கள்.அவர்கள் மருந்து கொடுப்பதும் ஜீப் ஓடுவதாகவும் இருப்பார்கள்.
ஒரு நாள் காலை நான் வீட்டிலிருந்து ரோட்டுக்கருகிலிருந்த பாடசாலை நோக்கி நடந்தேன்.
ஜீப்பையும்,ஊசிபோடும் ஆட்களையும் வேடிக்கை பார்ப்பதற்கு ஆர்வமாகி இருந்தது.என்னைக் கண்ட துப்பாக்கிதாங்கிய பொலிசார் இருவர்"தம்பி இங்கே வாங்க"என்றார்கள்.என்னையழைத்தவரின் தமிழ் கொச்சையாக இருந்தது.அவர் என்னிடம் "தம்பி உணு வத்துறு கொண்டு வாறீங்களா"என்றார்.மற்றவர் சுடுதண்ணி என்றார்.எனக்குச் சிங்களம் கொஞ்சம் தெரியும்.எனது தந்தையார்.பலாங்கொடையில் கடை வைத்திருந்தவர்.அவரது கடை 1967 இல் நட்டத்தில் போக ஊரில் சிறு விவசாயி ஆகியிருந்தார்.அப்பரின் மடியில் தூங்கும்போதெல்லாம் அப்பர் பலாங்கொடைக் கதைகளையும்,சிங்களத்தில் தானங்களையும், சிறு சிறு சொற்களையும் சொல்லித் தருவார்."உணு வத்துறுவும்"நான் அறிந்த வார்த்தைகளில் ஒன்றாய் இருந்தது.
இப்போதெல்லாம் யோசிக்கிறேன்.அன்றைக்குப் பொலிசைக் கண்டு பயம் கொள்ளவில்லை.அவர்களிடமிருந்த துப்பாக்கியும் அச்சம் தரவில்லை.எனக்கு அதன் உருப்படி பார்ப்பதற்கு ஆசையாய் இருந்தது.அம்மாவிடம் "சுடுதண்ணியாம் பொலிசுக்காரன்கள்"என்று சொல்லிக் கொண்டே துப்பாக்கி பற்றிய கேள்விகளைத் தொடுத்தேன்.அம்மா சுடுதண்ணியை அடுப்பில் வைத்து விட்டுச் செம்பைத் தேசிக்காய்த் தோலால் சாம்பல் சேர்த்து மினுக்கினார்.கூடவே சொன்னார்.துவக்கு ஆட்களைச் சுடும்.துவக்கு வைச்சிருக்கிறவர் ஒருத்தருக்கும் பயப்பட மாட்டார்.கள்ளர்கள் வீட்டுப்பக்கம் வரமாட்டார்கள் என்றும் சொன்னார்.
அன்று அம்மா சொன்னதன் அர்த்தம் பின்னாளில் அதைத் தாங்கியபோது புரிந்தது.துப்பாக்கி இருக்கும்போதும்,ஊருக்குள் உலாவரும்போதும் ஊரிலிருக்கும் எல்லோரும் எனக்கு மீன் குஞ்சுகள் போலவும்,காலுக்குள் நெளியும் மண் புழுப்போலவுமே தெரிந்தது.
அன்றைய சுடுதண்ணிக்குப் பின்னால் ஒரு சின்னப்பொறி உள்ளத்தில் கிடக்கிறது.அந்தப் பொறி இன்றுவரையும் இனிக்கிறது.
பொலிஸ்காரர்களில் அழகாய்த் தமிழ் பேசியவர் தமிழராகத்தான் இருக்கவேணும்.அவர் "டேய் அதைத் தொடதே!"என்று என்னை உறுக்கினார்.மற்றவர் கொச்சைத் தமிழ்பேசினாலும் மரியாதையாய் அன்று உரையாடியுள்ளார்.இன்றும் அதை உணரத்தக்கதாகவே இருக்கிறது."தம்பி வாருங்கள்",துவக்கைத் தொடாதீர்கள்!"என்றார்.எனினும் துவக்கைத் தொடுவதற்கு அநுமதித்தார்.பின்பு ஐம்பது சதத்தைத் தந்து,"அதோ அந்தக் கடையில் போய் ஐம்பது சதத்துக்கு சொக்லேட் வேண்டிக் கொண்டு வாங்கோ" என்றார்.
எங்கள் வீட்டுத் தெருவில் ஒரேயொரு பெட்டிக்கடைதான் இருக்கிறது.அது இராமனின் கடை.ரொம்ப ரொம்ப இருமியபடியேதான் அவர் கடை நடத்தியது இன்றும் ஞாபகம்.நாங்கள் இராமரின் கடையில்தான் பொரியுருண்டைவேண்டுவது,தோடம்பழ இனிப்பு வேண்டுவது.அம்மாவிடம் வேண்டும் ஐந்துசதமும்,பத்துச் சதமும்தான் இராமருக்கு வருமானம்.அப்பப்ப அவரிடம் அழி இரப்பர்,பென்சில்,இரட்டை றூள் கொப்பி,சிலேற்றுப் பென்சிகளையும் வேண்டுவோம்.இப்படிப் புதுக் கொப்பி,பென்சில்,அழி இரப்பர்களை வேண்டும்போது பள்ளிக்குப்போவது விருப்பமாக இருக்கும்.புத்தம் புது அழி இரப்பரை மோந்து,அதன் வாசத்திலொரு மகிழ்ச்சி எனக்கு வருவதையும் நான் அநுபவித்திருக்கிறேன்.கொஞ்சக் காலத்தில் அந்த இரப்பர் என் காற்சட்டைப் பையில் இருக்கும்.
இன்றைக்கு இந்த மண்ணில் இத்தனைகாலம் வாழ்ந்த மனிதர்களின் சுவடே காணக்கிடைப்பதில்லையாம்.எல்லோரும் இறந்தும்,இடம் பெயர்ந்தும் நாடோடிகளாகவும் தொலைந்து போய்யுள்ளார்கள்.போனவர்கள் போனவர்களாகவே இருக்கப் புதுப்புதுத் தலைகள் இந்தத் தீவுக்குள் கிடக்கும் மிச்சசொச்ச செல்வங்களைத் திருடிக்கொண்டிருக்க காலம் போகிறது.
நான் வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைத்தேன்.சோடினைகளைச் செய்தார்கள் சின்னவர்கள்.மரத்துக்கடியில் பரிசுப்பொருள்கள் வருமென்பது அவர்களின் கனவு.இந்தப் பண்டிகைகள் மனதுக்கு மகிழ்வைத் தந்திருந்தாலும் இறை நம்பிக்கையென்பது வேறு வகையானது.இந்தப் பொழுது இரம்மியமானதாக இருக்கலாம்.உலகத்தின் பலபாகத்தில் குருதிசிந்தப் பசியுறும் மானுடம் நோய்கும் நொடிக்கும் மரித்த காலம்போய், யுத்தத்தால் அழிவுற்றுச் செல்கிறது.தத்தம் வீடுகளில் பண்டிகைகளைக் கொண்டாடும் இவர்களது விருப்பம், தொடரும் யுத்த முனைப்புகளால் சிதறடிக்கப்படுவதும்,விருப்பத்தையுணரும் உடலும் உயிரையிழக்க நமக்கு எந்த மாதமும் காலப் போக்கில் மகிழ்வைத் தருவதற்கில்லாமல் போகலாம்.
இராமர் இரண்டு கையும் நிறையச் சொக்லேட்டுக்கள் தந்தார்.
கைகள் நிறைந்த சொக்லேட்டுக்களோடு அந்தப் பொலிஸ்காரரை அண்மித்து, அவரிடம் அவற்றை ஒப்படைக்க முனைந்தேன்.அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்:"எல்லாம் தம்பிக்குத்தான்"என்று, மழலைத் தமிழில் சொல்லிச் சிரித்தார்..எனக்கு மகிழ்ச்சி கரை புரண்டோடியது.தமிழ் பொலிஸ்காரர் "டேய்" என்றார் நான் வீடு நோக்கி நடக்க முனையும் போது, செம்பைத் தந்து, இன்னொரு செம்பு சுடுதண்ணீர் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.நான் காற்சட்டைப் பைகள் இரண்டிலும் சொக்லேட்டுகளைத் திணித்துச் செம்பை வாங்கினேன்.அவர் எனக்குச் சொக்கா தரவில்லை.இது எனக்கு எட்டுவயதில் அநுபவமானது.இரண்டு பொலிக்காரர்கள்.இருவரிடமும் இரண்டு வகை மனதிருந்திருக்கும்.இப்பவும் இந்த மகிழ்வை எனது குழந்தைகள் நான் கொடுக்கும் சில்லறைகளில் மகிழ்வார்கள்.ஆனால் மீன் குஞ்சுகளையும்,மாரித் தவக்கைகளையும் வெள்ளத்தில் மிதந்து கொண்டு நாம் கண்ட ஆனந்தம் இவர்களுக்கிருப்பதற்கில்லை.
குண்டுகள் வெடிக்கத் தலையில் கைவைத்துக் கொட்டும் குருதியைத் தடுத்தபடி, வானத்தைப் பார்க்கும் சிறுவர்களை இலங்கைத் தேசம் இன்று உருவாக்குகிறது.
அன்று, தைப்பொங்கல் வெடிகளில் மகிழ்ந்த சிறுவர்களை, இன்று குண்டுகளால் அச்சப்படுத்தும் ஒரு தேசமாயும்,சொக்லேட் தந்த பொலிசே இன்று தோட்டாவால் துளைக்கும் எதிரியாகவும் போனது எதனால்?
ப.வி.ஸ்ரீரங்கன்
24.12.2006
Saturday, December 23, 2006
சதிகாரக் கூகிள் கணக்கு...
"..........................................."
பிளக்கர் பேட்டாவுக்கு மாறிய பின் பரவலாகப் பதிவுகள் தமிழ் மணத்தில் தெரிவது இல்லை.மீளவும் பதிவைப் புதிதாகப் பதிந்த பின்பே பதிவு தெரிகிறது.
இந்த நிலையில் பேடித்தனமாகக் கொழுவியும்,பெடியன்களும் பதிவிட்டு,நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்.இதற்கு மேலால் இத்தகைய தலைமுறையால் என்னத்தைப் புதிதாகச் சிந்தித்திருக்க முடிந்தது?பெடியன்களின் பெயரால் சுவிஸ்,சிங்கப்ப+ர்,அவுஸ்திரேலியாவில் இருக்கும் பேடிகள் எழுதுவதற்கு வக்கற்று மற்றவர்களைக் கேலி பேசுவது ஒரு வகை மாபியத்தனத்தின் திமிர்தான்.இத்தகைய திமிரில் இவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பது ஊரறிந்த விடையம்.
23.12.2006
Thursday, December 21, 2006
அரசியல் அண்ணாச்சியும்...
ஆசியன் கடையும்.
டேய் சின்ராசா வாடா வா!என்னமாதிரிப்போச்சு?
அண்ணோய் மெல்ல.இது அவங்கட காசில நடக்கிற ஆசியன் கடை.உங்கட கதையள அடக்கி அவிழ்க்கிறதுதான் நல்லது.
சரி விடடா,எல்லாம் சிறப்புற நடந்தேறிவிட்டது,அப்பாடா!
என்னண்ணோய் சொல்லுறியள்?
அண்ணர்களின்,தம்பிமார்களின்-தோழர்களின்,நண்பர்களின் நல்லது,கெட்டதுகளின் நமக்குப்பட்டதைச் செய்தும் போட்டோம்-இல்லையா?
இனியென்ன?
பத்தரைமாதத்துத் தங்கம்,தோழமையின் தூண்,துரும்பு...என்ன அரிகண்டமோ,இப்படிக் கழுத்தில் கிடந்து நம்மைச் சீரழிக்கிறது!
எங்கு திரும்பினாலும் ஒன்று தாங்கள் கும்பிடுற தெய்வ வணக்கம்-இல்லையென்றால் மீனுக்கும்,பாம்புக்கும் தலை வால் காட்டும் புத்திசீவிகளின் புதுத் தத்துவங்கள் புருவங்களை உடைத்துப் புதுப் புனலாய் புண்ணிய நம் கண்களுக்குள்...
சீச்சீ, இப்படியெல்லாம் நாம கதைச்சால் நடுச் சாமத்தில் கெட்டகெட்ட கனவெல்லாம் வந்து நித்திரையைக் குழப்பிப்போடும்.பையப்பைய ஆராவது இப்படி வந்து, தன் பங்குக்குப் பாட்டோ அல்லது ஓரிரு பல்லவியோ பாடித் துலைக்கிறபோது,அப்பப்பப் பொடிவைக்கிறது வழமைதான் குஞ்சு.பகிடிக்குப் பொடிவைக்கிறமாதிரித்தான் இதுவும் குஞ்சு.நான் மனிதன்,எனக்கும் கவனிப்பும்,கண்ணீரும் உண்டெல்லோ,இல்லையாடி அப்பன்?
இருக்காதா அண்ணே!
எடுத்துவிடுங்கோ,எப்பவும் நீங்கள்தான் என்ர உதாரணப் புருஷர்.என்ர தேகத்தின் குரலும்,உணர்வும் நீங்கதான்.
ஏன்ரா தம்பி சின்ராசா,எங்கேயடா ஆளக்காணோம் இவ்வளவு நாளா?
அண்ணே,கோவியாதேங்கோ.நேற்றுத்தான் வந்தனான்.போன இடத்தில மாட்டுப்பட்டுப் போயிட்டன்.புண்ணாக்கன்கள் புடிச்சு உள்ள போட்டுட்டான்கள்.
எடா மசிராண்டி உன்னை ஆருடா ஊருக்குப் போகச் சொன்னது?கண்கடை தெரியாதா அவளுக்கு ?உன்ர பொண்டாட்டியும் உன்னோட வந்தவளா?(எனக்கு என்ர உறவுக்காரப் பெண்மீது எப்பவும் ஒரு கண்.அவளை இந்தப் பரதேசி கட்டிப்போட்டுக் காடாத்திறான் நெடுக).
எடச் சீ!இந்தக் கோதாரி புடிச்ச அண்ணைக்கு என்னத்துக்கும் ஊர் நினைவுதான். நான் சொல்லுற புண்ணாக்கன்கள் இந்த ஆசுப்பத்திரிக்காரன்கள் அண்ணை.
எட இழவு,என்னடா நடந்தது?
அண்ணோய்,அதுக்க கான்சர்,இதுக்க கான்சர் எண்டுறான்கள்.
உம்!இது பெரியாக்களுக்கு வாற வருத்தம்.இப்ப உனக்கும் வேறு அது வந்திட்டுது.நானென்டாலும் உனக்கு ஒரு பாட்டாவது பாடுவன் யோசிக்காத.
அண்ணோய் ஆட்டைக் கடிச்சு,மாட்டைக்கடிச்சு...இப்ப என்னையும் கடிச்சுக் குதறுகிற எண்ணமோ?மனுசன் படுகிற பாட்டுக்கு ஊர் வம்புகளெல்லாம் வேண்டாம்.பிறகு உங்களுக்கும்,எனக்கும் நித்திரையில் கெட்டகெட்ட கனவெல்லாம் வந்து துலையும் எல்லே!
எட அப்பன்,அவருக்குப் பின்னாலா அந்த ஆடு மேய்ஞ்சுகொண்டெல்லே இருந்தது,அந்த ஆட்டுக்கு இனியென்ன பென்சனோ?
ஆருக்கண்ண தெரியும்?அதெல்லாம் பெரும் தொகையளோட விளையாடுற விஷயங்கள் அண்ண,இந்தப் பயலுக்கு ஒண்டுமாய் விளங்குதில்லை.நீங்கள் ஏதாவது நினைச்சுக் கொட்டாவி விடுகிறியளோ?,போங்கண்ணை.உங்களுக்கு நோச் சான்சு!
சரி,சரி விட்டுத் துலையடா.ஏதாவொரு நப்பாசை இப்படிக் கிடந்து பழைய கள்ளுக் கொட்டில் கனவைக் காண வைக்கிறது, இந்தப் பாழாய்ப்போன மனசு.அவங்களுக்குப் பின்னால நிண்டாலாவது அப்பப்ப மூக்கு முட்ட விடலாமெல்லோ!
எதுக்கும் ஒருக்கால் நல்ல டொக்டரைப் பாருங்கோ அண்ணை.என்ர டொக்டர் ஒரு மனோதத்துவ டொக்டரும்கூட உங்களுக்கு அவரின்ர விலாசத்தைத் தரட்டோ?நாளைக்கு வீட்டுப் பக்கம் வாங்கோவன்,கூழ் காச்சிக் குடிச்சுக்கொண்டு உங்கட பிரச்சனைகளையும் விலாவாரியாக் கதைப்பம்.
ஓம்போலத்தான் இருக்கடாப்பா.கூழுக்கு என்ன போடப்போறாய்?என்ர மனுசியும் இண்டைக்கு ஆட்டிறிச்சியோடக் குத்தரசிச் சோறு காச்சிறாபோலக் கிடக்கு...
கூப்பிடமாட்டீங்களே... நிச்சியமா மனுசரின்ர தலைகளில்லை அண்ணோய்!பயப்படதேங்கோ.
தலையெண்டிறபோதுதான் ஞாபகம் வருகுது அந்த நாளைய யாழ்பாணத்தில எரிஞ்ச தலைகளும் ரயர்களுமாக் கண்ட கோலமெல்லாம் ஒரு காரணமான குரலுக்குச் சொந்தமெண்டு.
நல்லதடா பையா.உனக்காவது நானொரு கூழ்தாசனாக இருக்கிறேன் தானே?அதுக்காவது நாலு சிரட்டையைச் செதுக்கி வை.அப்பிடியே இன்னொரு தலையையும் கூட்டிக்கொண்டு வாறன்.
அண்ணோய்.இது சரி வராது.என்ர வீட்டில் உங்களுக்கு மட்டுதான் எலவ்ட்.தெரியுந்தானே?பிறகு மனுசி கலையெடுத்திடுவா.கூழ்ச்சிரட்டைக்குப் பதிலாக என்ர மண்டையோடுதான் உங்களுக்கு வரும்.அண்ணோய்,அடுப்படியில கிடக்கிறதுகளை உசுப்பக் கூடாதண்ணை.பிறகு கரடிக்கு வாற பலத்தைப்போல அங்கேயும் ஒரு பலம் வந்திடும்.பேந்து, எங்கட திண்ணைப் பேச்சுக்குப் பதிலாக கோழியை வெட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
உன்னைப் போல அனுபவஸ்தானாலதான் பட்டும் படாமலும்,பல்லில நாக்குப்படாமல் கதைக்க முடியுது.எங்கேயடா தம்பி இப்படிப் படிச்சாய்?
ஓ, அண்ணோய் என்ர படிப்புப் பற்றிக் கேட்டுப்போட்டீங்க.உங்களுக்குச் சொல்லாட்டி...பிறகு பெயருக்கு முன்னாலயாவது தமிழுக்குள்ளாவது போடாமல் போனால் என்ர ஆத்துமா அந்தரிக்குமெல்லோ!அண்ணோய் மந்திகையில எம்.ஏ.பிறகு அங்கொடயில கலாநிதிப் பட்டம்.எனக்கும் கலாநிதியைச் சேர்ப்பீங்களோ?
அதுதான் நீயாய்ச் சேர்த்து அடுப்படியில அலையவிட்டபிறகு இன்னொருக்கால் சேர்த்தால் உன்ர மடிதாங்காது.
மடிதாங்காட்டியும் மனசு தாங்கும் அண்ணோய்.பேசாமால் அதையும் சேர்த்துவிடுங்கோ.
சேர்க்கிறத விடு,இப்ப உன்ர வீட்டுக்க ஆரோவொரு வெளி நாட்டுக்காரனையும் போட்டிருக்கிறான்களாம்.ஏன்ரா உலகத்தில இவ்வளவு பேர்கள் இருக்க, இவனை ஏன்ரா கூப்பிட்டாய்?
நானா கூப்பிட்டானான்?அவையல்லோ அனுப்பினவை!
ச்சீ.அப்பிடிச் சொல்லாதை.உலகத்தில இவன் கெட்டிக்காரன்.குடும்பப் பிரச்சனையள நல்லாத் தீர்த்துப்போட்டு,முற்போக்காத் திரியிறான்.அதனாலதான் அவன் உன்னட்டையும் வந்தது எண்டு சொல்லு.
மண்ணாங்கட்டி.என்ன சொல்லுறியள்?உங்களையும் என்ர குரலெண்டு நான் சொன்னது தப்பாப் போச்சு!போங்கண்ணை.அவன் சோசல்காரன் தங்கட கட்டிடத்தில எவனையும் கொண்டுவந்து தள்ளுவான்.அதை அகதியாகி ஒண்டின நாங்கள் தடுக்கேலாது.நீங்கள் வேறு...
சரி,சரி.என்ர குரலும் வீட்டின்ர குரலாகக் கிடக்குது ஆரும்...
அண்ண அப்ப நாளைக்குக் கூழோடு சந்திப்பம்.நீங்க மட்டும் இல்லைக் கையிலவொரு போத்திலை...
போத்திலை?டேய் அப்பன் அது கஷ்டமடா கண்டியோ?
பேசாம எல்லாத்தையும் ஒரு பம்பலாச் சொல்லுங்கோ.பகிடியெண்டு நான் எடுக்கமாட்டன் கண்டியளோ.
ப.வி.ஸ்ரீரங்கன்
21.12.2006
Tuesday, December 19, 2006
பாட்டுக் குயில் பாடையில்...
பாட்டுக் குயில் பாடையில் போனது பற்றி...
இன்று, எழுதக்கூடியளவுக்கு ஒரு மரணம் என்னைத் தூண்டுகின்றது.கடந்த இரு கிழமைகளாக வைத்தியசாலையில் நான்.எனது தொண்டையில் அறுவைச் சிகிச்சை மூலமாக ஒருவித நோயைக் கட்டுப்படுத்திய பின் மீளவும் எழுதக்கூடிய நிலையில் நான் இல்லாதிருப்பினும்,இந்த மரணம் மிகவும் பாதிப்பைத் தருகிறது.
கடந்த 09.12.2006 இல் எனது கிராமத்தின் அதியற்புதக் கவிஞன்,சு.வி.என்ற சு.வில்வரெத்தினம் அவர்கள் அற்ப வயதில் காலமாகியுள்ளார்.இவரின் இழப்பானது ஈழத்துத் தமிழ் இலக்கியவுலகுக்கு மிகவும் ஈடுசெய்ய முடியாத இழப்பென்பது எனது கருத்து.தேசத்தில் எத்தனையோ கொடுமைகள் நிகழ்ந்துவிட்டன!இந்தக் கொடுமைகள் எல்லாம் எழுத்தில் வரமுடியாதளவுக்குக் காரணகாரியங்கள் மலிவுற்றுக் கிடக்கின்றன.இத்தகைய இடருக்குள்ளிருந்துகொண்டு-நெற்றிக்கு நேரே நிமிர்ந்து நிற்கும் துப்பாக்கியைத் தரிசித்தபடியே தமது குரலைப் பதிவிடவேண்டிய ஈழத்துச் சூழ்நிலையில், எவரொருவர் உருப்படியாக எழுதமுடியும்?எனினும் சு.வி. தன் அகத்தைப் பற்றவைத்துக்கொண்டு இந்தச் சூழலைத் தரிசித்திருக்கிறார்.அவரது படைப்புகள்மீதான விமர்சனங்களுக்கப்பால் அவர் மனித அவலங்களைப் பாடிய பாங்கு அளப்பெரியது.நம்பிக்கையையே அவர் மூலதனமாக்கியிருக்கிறார்.படைப்பின் உறுதிபோலவே நம்பிக்கையால் கட்டப்பட்ட வலுவான அத்திவாரமாக அவர் வாழ்ந்தும் இருக்கிறார்!-மறைந்தும் போய்விட்டார்!!
எங்கள் கிராமத்தின்(தீவின்) இடப்பெயர்வே ஈழத்தின் அனைத்து இடப்பெயர்வுகளுக்கும்,வலிகளுக்கும் முன்பாக நிகழ்தது(1991).சூரியக் கதிர் நடவடிக்கைக்குப் பின்பான யாழ் இடப்பெயர்வைக் குறித்துப் பற்பல ஒப்பாரிகள்,பரப்புரைகள் இடம்பெற்றளவுக்குத் தீவக இடப்பெயர்வு முக்கியம் பெறவில்லை.தீவகத்தில் வாழ்ந்த நாற்பதினாயிரம் மக்களும் தமது வாழ்விடங்களை-வளங்களைவிட்டு அகதியாகி இடம்பெயர்ந்த வலியானது சொல்லித் தீரக்கூடியதல்ல!
1996 இல் இடம் பெற்ற வலிகாமம் இடப்பெயர்வை"வலிகாமத்தின் முற்றத்திலிருந்து எம்மைக் குடியெழுப்பிக் கலைத்த..."(சூரியக்கதிர்,புலிகளின் வெளியீடு-பக்கம்:12.)என்று மிகவும் உணர்வு ப+ர்வமாகக் கருத்தாடுகின்ற புலிகளின் பரப்புரைகள் இந்தத் தீவின் இடப் பெயர்வைக் குண்டி மண்ணைத் தட்டியது போல"தீவுப்பகுதி எமக்கு கேந்திர முக்கியமற்ற பகுதி"என்றார்கள்.இவர்கள் தமது வளங்களைத் இந்தத் தீவுக்கூட்டங்களுடாகப் பெற்றுவிட்டு,அந்த மக்களை அம்போவென்று தவிக்கவிட்டுத் தமது வளங்களோடு ஓடித் தப்பியபோது, தீவுப்பகுதி மக்களின் அவலம் தொடர்கதையாகியது.கையில் கிடைத்ததோடு உயிரைக் கையில் பிடித்தபடி எனது உறவுகள் யாழ் மண்ணை நோக்கி அராலித்துறைய+டாக நடந்து-தரவைக்கடலைக் கடக்கும்போது, இராணுவத்தால் கொன்றழிக்கப்பட்டுத் தப்பியவர்கள், யாழ் பெரு நகரில் தெருவெங்கும் அலைந்தார்கள்.
இந்த மக்களின் மண்ணில் விளைந்து கிடந்தவற்றை இராணுவத்தோடு சேர்ந்து கொள்ளையடித்தவன் இன்று மந்திரியாகச் சிங்களப் பாராளுமன்றத்தில் இருக்கிறான்!தீவுப்பகுதி மக்களின் புகையிலையையும்,மிளகாயையும்,வெங்காயத்தையும் அவர்களின் வீட்டுக் கதவுகளை உடைத்துப் பாரிய பெட்டிகளாகச் செய்து, அவற்றை அதற்குளிட்டுக் கொழும்புக்குக் கடத்திப் பெரும் பணத்தைச் சம்பாதித்தான் டக்ளஸ் தேவானந்தா!ஆனால் அந்தப் பயிர்களைத் தமது குருதியால் விளைவித்த மக்களோ யாழ் மண்ணில் நாடோடிகளாக அலைந்தார்கள்-ஒரு சோற்றுப் பருக்கைக்குப் பேயாய் அடிபட்டார்கள்!
இந்தச் சோகத்தைச் சொன்னவன் அந்த மண் பெற்றெடுத்த புதல்வன் சு.வில்வரெத்தினம் மட்டுமே!
"சொல்லித்தானாக வேண்டும்
தத்தெடுப்பாரின்றி தனித்துப் போய்விட்ட எம் தீவுகளைப்பற்றி.
சஞ்சீவி மலையை அனுமன் காவிச்செல்கையில்
கடலிடைச்சிந்திய துண்டங்களாம்
இத்தீவுகளைக் கவனியாமலேக
கரைசேராத் திட்டுகளாய் தனித்திருந்தழுதனவாம்.
கைவிடப்பட்ட துண்டங்களை கரைசேர்க்க யாருமில்லை.
சஞ்சீவிமலையினின்றும் தூரித்த தீவுகளானோம் நாம்.
சஞ்சீவி மலையின் துண்டங்கள் நம் தீவுகள் என்றால்
விண்ணெழுந்து ராவணனைப் பொருதிய ஜடாயுவின்
துண்டாடப்பட்ட இறக்கைகளாய் நாம்
வெட்டுண்டோம்; வீழ்ந்தோம்
கடல்வெளித் தனித்தலைகிற மிதவைகளாய்
எக்கரையுமற்று எற்றுப்படுகின்றோம்.
ஆயினும்
வீழுமுன் விண்ணெழுந்து பொருதிய ஞாபகம்
வெட்டுண்ட இறக்கைகளுக்கு இல்லையெனலாமோ?
சஞ்சீவி மூலிக்காற்றே வா
வெட்டுண்ட இறக்கைகளுக்கு உணர்வின் தைலமிடு
எழுந்து பறந்ததாக வேண்டும்
எம் முந்தைப் புலம் நோக்கி
வெட்டுண்டு வீழுமுன் வீடிருந்த உச்சிப்புலம் அது.
இறந்தாரை எழுப்பும் சஞ்சீவி கொணர
அனுமனும் இங்கில்லை.
இராமர்அணையும் கடலுள் அமிழ்ந்தாச்சு
எம்முயிர்த்துவமே சஞ்சீவியாக
எழுந்து பறந்தாகத்தான் வேண்டும். "-(19.09.94, காற்றுவழிக்கிராமம் )என்று,எமது வதைகளைச் சொல்வதற்குத் அந்தத் தீவு பெற்றெடுத்த புதல்வனால் மட்டுமே முடிந்தது!
காற்றடிக்கலாம்,மழை சோவெனக் கொட்டலாம்,மண் விளைவதற்கு மனிதர்கள் இருந்தாக வேண்டும்.அதுபோலவே நாட்டில் அனைத்தும் நிகழலாம்-கிராமத்தில் குடிகளே அழியலாம்.அந்த வலியைச் சொல்வதற்கு அந்த மண்ணில் தப்பியவொரு உயிர் இருந்தேயாகவேண்டும்.எங்கள் மண்ணைப் பாடுவதற்கு இனியாருமில்லை!எங்களிடமிருந்தவொரு பாட்டுக்குயில் பறந்து,காத தூரம் போய்விட்டது.நமக்கென்றொரு வலியிருக்கிறது.அதைக் குறித்துப் பேசுவதற்கு வ.ஐ.ச.ஜெயபாலன்களால் முடிவதில்லை.ஆனாலும் நமது வலியை அதன் உண்மைத் தனத்தோடு சொல்லும் கொரிலாக்களையும் இந்த மண்பெற்றெடுத்துப் பாக்கியம் செய்தே இருக்கிறது.குறைந்த பட்சமாவது நம் வலியைப் பேசிய இந்தச் சு.வி. என்ற தீவுமகன் என் மனத்திலிருந்து நீங்கா அமரனாக நிலைத்தே இருப்பதற்காகக் காற்று வழி எனது கிராமத்தைப் பகிர்ந்து,ஒதுங்கியுள்ளான்.
"முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம்
பாத்திரங்களோடு தேய்படும் வளையல் ஒலி,
ஆச்சி, அப்பு, அம்மோயென
அன்பொழுகும் குரல்கள்-
ஒன்றையுமே காணோம்.
என்ன நடந்தது?
ஏனிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?
திகைத்து நின்றது காற்று
தேரடியில் துயின்ற சிறுவன்
திருவிழாச் சந்தடி கலைத்திருந்தமை கண்டு
மலங்க விழித்தது போல." -காற்றுவழிக்கிராமம்
"பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்பது போல நமது மண்ணை இராணுவத்திடம் பறிகொடுத்துவிட்டு,எங்கள் உறவுகள் நாயாய் அலைந்தபோது,நமது சோகம் சொல்ல எந்தவொரு ஊடகங்களும் முன்வரவில்லை!பெட்டிச் செய்திகளோடு பாம்பாய்ப் படுத்துறங்கிய கொடுமையை நாம் அறிவோம்.புலிகளின் பரப்புரையில் தீவின் இடப்பெயர்வு முக்கியமற்றவொரு விஷயமாகவே இருந்தது! இந்தப் பொழுதில்தாம்
சு.வி. தன் ஆன்மாவை வருத்திப் பாடுகிறான்.
"நீரறிவீரோ
என் நெஞ்சிலும்
கூடு கட்டி வாழும் குருவிகட்கு வாசலுண்டு
கூடிழந்து போனவரின்
நேசம் விட்டுப் போகாத நெஞ்சகத்தில் சோகமுண்டு
நீரறிய மாட்டீர்.
நீரறிதல் கூடுமெனில்
கோடைவழிப் போக்கில்
குளிர்த்தி வற்றிப்போன எங்கள் வாழ்நிலையின் சோகத்தை
எம்மவரைக் கண்டு இயம்புதல் கூடுமோ?
சற்றெமக்கு இரங்குங்கள்
நாளை நாளையெனக் காத்திருந்த நம்பிக்கை
முளைகருகிப் போகுமுன்னே வரவுண்டோ கேளுங்கள்".-காற்றுவழிக்கிராமம் .
இங்கேதாம் இந்த ஓரவஞ்சனையைக் கண்டு,கொதித்தெழும் சு.வி.,மக்களின் மனதைத் தனது பாடல்களுக்கூடாகக் காட்டி இந்தவுலகத்திடம் நியாயம் கோருகிறான்.அவன் கண்டடைந்த உண்மையானது,நம்மைக் கருவறுத்த அரசியல் சூழ்ச்சிகள் எங்கள் கிராமத்தையும் மக்களையும் நடாற்றில்விட்டுத் தப்பித்து விட்டதென்பதே!
இது கொடுமை!
நம் கிராமத்தின் முதுகெலும்பை உடைத்துத் தேசியம் பேசியவர்கள்,தேடுவாரற்று யாழ் மண்ணில் அலைந்த தீவாரைக் கண்டும் காணாததுபோல அரசியல் செய்தார்கள்.இந்த நல்ல மனிதர்களின் நரித்தனமான விடுதலைப் பண்ணுகள் எல்லாம் வலிகமத்தைச் சுற்றியே வந்தவை.அவை மருந்துக்கும் தீவுப்பகுதியைப் பாடியதில்லை.அந்த மண்ணை முடிந்தளவுக்குத் தமது வளர்ச்சிக்குப் பயன்படுத்திய அமைப்புகளெல்லாம் இறுதியில் அந்த மண்ணை இராணுவத்தோடு சேர்ந்து கொள்ளையடித்துக் கற்பழித்தார்கள்!இது வரலாறு.
"இன்று மாலையும்
படையினன் ஒருவன் வீசிச்செல்கிறான்
உடைத்தபெட்டகம் ஒன்றின்
ஒடிந்தகாலை.
கிராமதேவதையின் அணிகலன்கள் யாவுமே
களவாடப்பட்டு விட்டன.
ஒற்றைச்சிலம்பும் இவள் உடைமையாயில்லை.
பறிபோயின
பேச்சொலியும், கைவளையோசை வீச்சு நடையும்
பிறைநுதற் திலகமும்
அந்நியன் கைப்பட்டழிந்ததெனவாயிற்று.
சந்திவிருட்சங்களின் கீழே
இவளின் இதயஒளிர்வாய விளக்குகள் எரிவதில்லை
குந்தியிருந்தழுகிறாள் குமையும் இருள் நடுவே.
வல்லிருளின் ஆட்சி,
வழிப்போக்கிலும் இருள்தான்
வாழ்விடங்கள் எங்கும் இருள்.
பில்லிசூனியத்தில் பீடழிந்தனவாய் மனைகள்
எங்காவது ஓர் இடுக்கிடை
எட்டிப் பார்க்கின்ற ஆவிகள் போல
வாழ்வுறிஞ்சப்பட்ட வற்றல்மனிதர். "-காற்றுவழிக்கிராமம்
நம் தீவுமகள் திராணியற்றுக் கிடக்கிறாள்.அவளைத் தினம் புணரும் அந்த மகளின் புதல்வர்களே,அவளின் இன்றைய நிலைக்கும் காரணமானவர்கள்.எனது வீடும்,தோட்டமும்,துரவும் காடாகிவிட்டது.பெரு மரங்கள் வளர்ந்து, அனைத்துப் பகுதியும் காடுகளான பின்பும்,அந்த மண்ணை மறக்க முடியாது தவித்திருக்கும் ஒரு ஆன்மாவை எனது உடல் கொண்டிருக்கிறது.நிலத்தின் அனைத்துப் பரப்புகளிலும் புதைவெடிகள் கொட்டப்பட்டுத் தீவின் எந்தப் பகுதியும் மனித நடமாட்டத்துக்குத் தோதான பகுதியாகவின்றித் திருடர்களின்-காடேறிகளின்-பேய்களின் கூடாரமாக மாற்றப்பட்ட பெருங்கொடுமையைச் சொன்ன எங்கள் சு.வி. என்ற தீவின் பாட்டுக் குயில் பாடையில் போனது பற்றி நான் நொந்து கொள்வது,எனது கிராமத்தை எண்ணிக் கொள்வதற்காவும் இருக்கலாம்.
மனித வாழ்வின் ஒவ்வொரு பக்கமும் போராட்டம் நிகழ்ந்தபடியே இருக்கிறது.அது வாழ்வுக்கும்,வளர்வுக்குமாகப் பற்றிப்படர்ந்து தொடர்கதையாகிறது.இந்தத் தொடர்கதையில் ஒரு பாத்திரத்தைச் சு.வி. ஏற்றிருந்தார்.அவர் மனித வாழ்வின் ஒவ்வொரு திசையையும் கூர்ந்து கவனித்திருக்கிறார்.தனது மக்களினதும்,ஊரினதும் மகத்துவத்தை வேட்கையாகக் கொண்டு,பாட்டுக் கட்டியவர்.ஒரு கிராமத்தின் அழிவைப் படைப்பாக்கி, அதை அமர இலக்கியமாக்குவது அவரது நோக்காக என்றும் இருந்ததில்லை.மாறாகத் தனது கிராமத்தின் அழுகோலத்தை-அக்கிராமம் கற்பழிக்கப்பட்ட ஈனத்தனத்தை உலகறியச் செய்வதும்,அதற்காக நியாயம் கேட்பதும் அவரது பாரிய மனிதவிருப்பாக இருந்தது.
எங்களுரின் இதயம் எப்பவோ நின்று விட்டது.
அந்த இதயத்தை மீளவும் இயக்குவதற்குப் பாடுபட்ட இந்த மாபெரும் தீவு மைந்தன், தன் அமரகாவியத்தால் மடைதிறந்து என்றும் பேசுகிறான்,அந்தக் கிராமத்தின் நோய்களுக்கு மருந்திடும்படி விண்ணப்பித்தபடி...
"உற்றதுயர் சொல்லியழ
உரத்துப் பேச
ஒரு மனுவில்லாத் தனிக்காட்டில்
சிறகொடுக்கி குரலொடுக்கி
சீவியத்தைச்சிறைப்படுத்தி
பாடாய்ப்படுத்துகிற பாழும் மனத்தோடு போராடி
கிழிந்துபோன வாழ்வின்
இக்கரை நகலாய் நாங்கள்
எங்களதைப்போலவேதான் உங்களதும்
உங்களதைப்போலவேதான் எங்களதும்
யுத்தமுனைகளால் கிழிக்கப்பட்டு
குருதிப் பிசுக்கேறிப்போன வாழ்வின்பக்கங்களில்
எழுதப்படுமா ஒரு நற்செய்தி?
தெளிவற்றதாயிருக்கும் உங்கள் கடிதத்தின் வாசகங்கள்
மீண்டும் ஒருமுறை குரல்வழியாய் நடுங்குகின்றன.
எல்லாமே தெளிவற்றிருக்கிறது
ஆயினும்
ஒரு தீக்குச்சி உரசலின்
சிறு நம்பிக்கைத் துளியில் தெரியவரும் நற்செய்திக்காய்
காத்திருத்தல் மட்டும் தொடரும்."-காற்றுவழிக்கிராமம்
எங்களுக்குத் தெரியும் இன்றைய யுத்தங்களின் நோக்கங்கள் என்னவென்று.
நேற்றைய நிகழ்வுக்கு முந்த நாள் இட்ட தீ காரணமானது.
இன்றைய காட்டுத்தீக்கு நேற்றைய வினை காரணமாகிறது.
இன்றைய சூழ்ச்சி நாளை என்னத்தை எமக்களிக்குமென்பதை நாமறிவோம்!
எனினும், நமது வாழ்வின் விருப்புகள் வலியவொரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கானதாகவிருக்குமென்று நாம் பகற்கனவு காண்பதற்கில்லை.
இந்தவிடத்தில்தாம் வெறும் நம்பிக்கை மனித இருப்பின் ஒரு சாட்சியாகப் படர்கிறது.அந்த நம்பிக்கையப் பாடியதுதாம் சு.வி.யின் மகத்தான படைப்பாற்றலாகும்.நம்பிக்கையற்ற எந்த நோக்கமும் வெற்றி பெற்றதல்ல.நம்புவோம் நாம் இன்னும் மனிதர்கள்தாமென.
ப.வி.ஸ்ரீரங்கன்
19.12.2006
Sunday, December 03, 2006
தொடரும் யுத்தம் சொல்வதென்ன?
எந்தப் பக்கம் திரும்பினாலும் கொலைகள்,மனித வெடிக் குண்டுகள்,தனிநபர்-அரச-இயக்கப் பயங்கரவாதக் கொலைகள் என்றபடி மிகப்பெரும் சமூக அவலம் என்றுமில்லாதவாறு மிகக் காட்டமாக இலங்கையில் இயங்குகிறது-நிலவுகிறது.அப்பாவி மக்களைக் கேவலமாக நடாத்தும் இந்த அரசியலானது தனது பாசிசக் கட்டமைப்பை இலங்கை மண்ணில் வலுவாகக் கட்டமைத்து, வளர்த்து வருவதும்,அத்தகைய இராணுவவாதச் சர்வதிகாரத்தை நிலைப்படுத்தி, மக்களின் சகல உரிமைகளையும் நசுக்கி வருகிறது.
இத்தகையவொரு நிலைமையில் இலங்கையின் எதிர்காலமானது வெறும் இராணுவவயப்பட்ட கட்சியரசியலை முன்னிறுத்தி அதையே மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற முகமூடியை வலுகட்டாயமாக அணிவிக்கும் போக்குக்கு, இந்த உலகமயச் சூழலில் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகள் அனுமதி வழங்குவதும்,அதையே ஜனநாயகத் தன்மையானதென்றும் பரப்புரை செய்வதுமாக நிலமை மாற்றமுறுகிறது.
இவ்வகை அரசியலை அடித்தளமாக நிறுவிக்கொண்டு, தமிழ்பேசும் மக்களுக்கான அரசியலை முன் தள்ளும் "ஜனநாயக"ச் சக்திகளெனும் போர்வையில் இன்னொரு கட்சியரசியலைக் கனவு காணும் தமிழ்த் தரப்புகளிலொன்றுக்கு(புலிகளின் எதிர் தரப்பு) இந்தக் கொலைக்கார அரசியல் வெறும் "பயங்கரவாதத்துக்கு எதிரானவொரு நடவடிக்கையாக" மலினப்படுகிறது.எனினும் இத்தகைய மறைமுகமான மர்ம அரசியலைக் கைக்கொண்டிருக்கும் "அகிம்சை"ப் பேர்வழிகள் தமிழ் பேசும் மக்களின் இதுவரையான துன்பத்துக்கு-சமுதாயச் சிதைவுக்கு எந்தவிதமானவொரு ஆரோக்கியமான அரசியலை இதுவரை முன் மொழிவதாகவுமில்லை!
முடிந்தால் தனிநாடு இல்லையேல் சமஷ்ட்டி!இதற்கப்பால் மக்களுக்கான எந்த அரசியலும் இல்லையென்றும் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறைமைக்கப்பால் வேறொரு உற்பத்திப் பொறிமுறை கிடையாதென்று அவர்கள் புரிந்துள்ளார்கள் போலும்.
மக்களின் யுத்தக்கால அவல நிலையைத் தமது நலனுக்கான கருவியாக்கி எதிர்ப்புக் குரலிடுகிறார்கள்.ஒவ்வொரு வர்க்கமும் தத்தம் நிலையிலருந்துகொண்டு சிந்திக்க முடியும்.இன்று இலங்கை மக்களின் அரசியலை ஆக்கிரமித்துள்ள தரகு முதலாளிய வர்க்கம் தனது இருப்புக்கும்,எதிர்காலத்துக்கும் இலங்கையின் இனப் பிரச்சனையைக் கருவியாக்கி,அந்த வர்க்கத்தின் நலனிலிருந்து சிந்திக்க முனைகிறது.மக்களையும் அங்ஙனம் சிந்திக்கத் தூண்டுகிறது,"வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியலே அடைப்படையாக இருக்கிறது".இது உலகமயப் பொருளாதார நகர்வால் மிகவும் உந்தப்பட்டு மக்களின் அடிப்படையுரிமைகளைத் தமது அரசியல் ஸ்த்திரத்தைக் காப்பதற்காகக் கையகப்படுத்தி, கயமைத்தனமான அரசியல் பேரங்களோடு யுத்தம் செய்வதற்கு முனைப்புறுகிறது.
பரிதாபத்துக்குரிய அப்பாவி மக்கள் தமது அனைத்து உரிமைகளையும் இந்தக் கேடுகெட்ட அரசியல் சூழ்ச்சிக்கும் அது கொண்டிருக்கும் குறுந்தேசிய வெறிக்கும் அடகுவைத்து,விடிவுக்காகத் தவமிருக்கிறார்கள்-பிச்சையெடுக்கிறார்கள்-கொலையாகிப் போகிறார்கள்.அல்லது இதை இங்ஙனம் கூறலாம்: இராவணுவத்துக்கு-இயக்கத்துக்கு அடியாளாக மாற்றமுற்றுப் போகிறார்கள்.மக்கள் சமூகத்திலுள்ள முற்போக்குச் சக்திகளை நோக்கிய அரச-இயக்க வன்முறை ஜந்திரம் அவர்களைக் கொன்று தள்ளி, மக்களின் தன்னெழிச்சியை முடமாக்கியுள்ளார்கள்.
படு பிற்போக்குச் சக்திகளே மீளவும் மக்களுக்கான குரலாகத் தமது இலாபத்துக்காக மனிநேயம் பேசிப் பம்மாத்துப் பண்ணுகிறார்கள்.இங்கே இத்தகைய அரசியல் கிழார்கள் தம்மை உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அகிம்சா மூர்த்திகளாகவும் அப்பப்பச் சொல்வதற்குத் தயங்கவுமில்லை.மக்களை மந்தைகளாக்க முனையும் இவர்களின் சூழ்ச்சிகள் வெற்றிபெற்று வருவது இலங்கையின் முற்போக்கு சக்திகளின் வரலாற்றுத் தோல்வியாகவே நாம் காணுகிறோம்.
மிகக் கடினமான இந்தச் சூழ்நிலைமீதான முற்போக்குச் சக்திகளின் போராட்டப் பணி முற்று முழுதாகக் கொலையரசியலால் முடமாக்கப்பட்டுள்ள நிலையில்,கருத்தியல் தளத்திலான போராட்டத்தைக் கடந்த கால் நூற்றாண்டாகச் செய்துவரும் முற்போக்குச் சக்திகளில் தோழர் இராயாவின் பங்கு மகத்தானது மட்டுமல்ல,நமக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.இது முதுகு சொறியும் கருத்தல்ல.மாறாக இன்றைய மெய்பாட்டு உண்மையானது இப்படித்தாம் உள்ளது.
புலிகளும் யுத்தமும்:
புலிகளின் போராட்ட நெறிமுறைகள் யாவும் இந்த அரசியலை இருப்புக்குட்படுத்தவும்,அதை நிலை நிறுத்தி அன்றாட அரசியல் நெறியாக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இத்தகையவொரு நிலையில் புலிகளால் முன் தள்ளப்படும் போர்களும்,அதுசார்ந்த அரசியல் நகர்வுகளும் மேற்காணும் வியூகத்தின் வெளிப்பாடுகளாகவே அரசியல் நகர்வுகளுக்குள் செயலூக்கம் பெறுகிறது.இதிலிருந்து முகிழ்ப்புக்குள்ளாகும் மொழிவழி பேசப்படும் உரிமைகள் குறிப்பிட்ட மொழிபேசும் மக்களைச் சார்ந்து,அவர்களின் சமூகப் பொருளாதார விருத்திக்கும்,அவர்களின் வாழ்வாதாரக் குடிசார் உரிமைகளுக்குமான அர்த்தப்பாட்டைக் கொண்டிருப்பதற்குக் குறுக்கே நிற்கிறது.இவைகள் சமுதாயத்திலுள்ள அரசியலாதிக்கம் பெறத்துடிக்கும் வர்க்கத்தினது வர்க்கவுணர்வாக மேலெழுகிறது.
இந்தவுணர்வினது தான்தோன்றித்தனமான யுத்தப் பிரகடனம் கட்சி-இயக்க அரசியலின் சமூக மட்டத்திலான அதிகாரத்தின் வெளிப்பாடாகவும்,கட்சிகளின்-இயக்கங்களின் ஆயுட்காலத் தலைமையின் அதீதத் தன்முனைப்புக்கும் அந்த முனைப்புக்கு உறுதுணையாக இருக்கும் யுத்த ஜந்திரத்தின் மேலாண்மைக்குள் குவிந்திருக்கும் பொருள் நலத்திற்கும் அவசியமாக இருக்கிறது.இது மக்களின்-உழைக்கும் மக்களின் வர்க்கவுணர்வைச் சிதைத்துக்கொண்டே அந்த வர்க்கத்துக்குள் குறுந் தேசியவெறியைக் கட்டவிழ்த்துவிட்டு யுத்தத்துக்கு ஆளணியைத் திரட்டிக் கொள்கிறது.இங்கே மிகவும் வலுவாக இந்த யுத்த ஜந்திரத்தோடு அப்பாவி இளைஞர்களை இணைக்கும் வியூகமானது மொழிசார்ந்த அதீத வற்புறுத்தல்களாகும்.அது குறிப்பிட்டவொரு மொழிவழிசார்ந்த மனிதவுணர்வை அதன் கடைக்கோடிநிலைக்குத் தள்ளி மக்களுக்கிடையிலான அனைத்துச் சாதகமான ஒற்றுப்மைப் பண்புகளையும் வேரோடு வெட்டிச் சாய்க்கிறது.
இந்த அவலமான சமூகச் சூழலை வலுகட்டாயமாக முன் தள்ளி அதைக்காத்துவருவதற்காகவே யுத்தம் மிகவும் அதி அவசியமாக இருக்கிறது.இத்தகைய யுத்தத்தால் ஆதிக்கத்தையும்,அதிகாரத்தையும் பகிர்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதிலும் அத்தகைய சந்தர்பங்காளால் பெறப்படும் அரசியல் மேலாண்மையைக் கட்டிக்காப்பதற்கும் அப்பப்ப மனித வெடிகுண்டுகளும்,தாக்குதல் யுத்தமும் அவசியமாகிறது.இலங்கையின் அரை இராணுவத் தன்மையான அரசவடிவத்துக்கு இதுவே எந்தக் காலத்துக்குமான கட்சி-இயக்க அரசியலாக இருத்தி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த வகை அரசிலைத் தவிர்த்து ஒரு பெயரளவிலான முதலாளித்துவ ஜனநாக அரசியலையோ அல்லது குடிசார் உரிமைகளையோ இலங்கையைக் கருவறுக்கும் அந்நிய பொருளாதார நலன்கள் விரும்பவிலை.எனவே புலிகள்போன்ற இயக்க அரசியலும்,இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி அரசியலும் ஒன்றையொன்று ஆரத் தழுவியபடியே தனது எதிர்கால இருப்பை உறுதி செய்கிறது.இங்கே மக்களுக்கான அரசியல் உரிமைகளை கட்சி அரசியல் உரிமையாக மாற்றிக்கொண்ட இலங்கை அரசியல் நிர்ணயச் சட்டங்கள்,நீதிமன்றங்களால் மக்களின் பொருள்சார்ந்த பண்பாட்டு வாழ்வை,மொழிசார்ந்த சமூக ஒருங்கிணைந்த கூட்டுணர்வை வாழ்விடங்களால், புவித் தோற்றங்களால் கூறுபோட்டுப் பிரித்தெடுத்து, அவர்களின் ஒருங்கிணைந்த பலத்தைச் சிதைத்துத் தமது ஆதிக்கத்திற்குப் பலமான எதிரிகளற்ற அரசியலை முன்னெடுக்கின்றது.
இது மக்களின் பொதுப் பண்பாடுத் தேசிய அலகுகளைக்கூட அதன் ஒத்த தன்மைகளை அழித்து பிரதேச ரீதியாக உணரப்படும் சில எதிர் நிலைகளை முதன்மைப்படுத்தி மக்களை ஒரு பகுதிக்கு இன்னொரு பகுதி வேறுபாடானது என்று கற்பிக்க முனைகிறது.இதன் அடிப்படையிலெழும் அரசியல் நிர்ணய முனைப்பானது பிரதேசரீதியான நிர்ணயத்தைக் கோருகிறது.இது முற்றிலும் இலங்கைபோன்ற இனவாத அரசியலுக்கு மேற்குலகம் கற்பித்துக் கொடுத்த வியூகத்தின் வெளிப்பாடுதாம்.இந்தவகையிலான குரல்கள் மக்களின் உரிமைகளை அழிக்க முனையும் இன்றைய உலகமயப் பண்பாட்டுக்கு அவசியமாகிறது.
மக்களின் கூட்டு முயற்சிகளை அடியோடு சிதைத்து,அவர்களின் அனைத்து வாழ்வாதராங்களையும் மேற்குல முதலாளிகளின் ஜந்திரத்தின் கச்சாப் பொருள்களாக மாற்றப்படுகிறது.இதற்காக மக்கள் யுத்தக்களின் பேரால்-அரசியல் நிர்ணயங்களின் பெயரால் அழிக்கப்படுகிறார்கள்.இது கட்சி-இயக்க அரசியலின் மிகக் கடைக்கோடி நிலையாகும்.இந்த வினோதமான அரசியலையே மூன்றாமுலகத்துக்கு ஜனநாயகமாகக் கற்பிக்கிறது உற்பத்திச் சக்திகளுடைய மேற்குலகத் தொழில்வள நாடுகள்.
உலகமயப் பொருளாதார ஆர்வம்:
இந்த வகைமாதிரியானவொரு அரசியல் நகர்வில் மூன்றாம் உலகத்தைக் கட்டிப்போட்டு,மக்களின் அனைத்துரிமைகளையும் பறித்து அவர்களைக் கொலை செய்தபடி இந்த உலகமயப் பொருளாதார ஆர்வங்கள் தமது நிலைகளை வலுப்படுத்துகின்றன.ஏதோவொரு அவசியமான அதீத மனிதாயத்தேவையாக இலங்கையில் சமாதானம் பேசும் இந்தச் சக்திகள் மிகக் கபடமாக இலங்கை வாழ் மக்களை மொழியின் பெயரால்-இனத்தின் பெயரால் திட்டமிட்டுக் கூறுபோடுகிறார்கள்.இது இலங்கையின் கட்சி அரசியலையும்,நாடாளுமன்றப் போலி ஜனநாயகத்தையும் காத்துத் தமது அடிவருடிகளைக் காக்க முனையும் பாரிய கபடத்தனமாகும்.
இதற்குள் பேரங்களுக்காகப் போராட்டத்தைச் செய்யும் புலிகள் தமது அரசியல் மேலாண்மையை படைப்பலத்தாலோ அல்லது இலங்கை இராணுவத்தைக் கொல்வதாலோ நிலை நாட்டவில்லை. மாறாகத் தமிழ் மக்களைத் தமது எஜமானர்களுக்காக ஒடுக்குவாதால் மட்டுமே தக்க வைக்கிறார்கள் என்றவுண்மை கசப்பானது.
தொடர் தாக்குதல்களும்,தொடரிழப்புகளுமாக யுத்தம் நகர்வது, பேரத்துக்கானதாகவும்-உழைக்கும் இலங்கை மக்களை ஒடுக்குவதற்காகவும் நகர்கிறது.இந்த யுத்தங்கிளில்,ஒன்று ஈழத்துக்கானது,மற்றது அதைத் தடுப்பதற்கானது.இருதரப்பாலும் இட்டுக்கட்டிச் சொல்லப்படும் நியாயங்கள் மக்களின் எந்தப் பெறுமானத்தையும் பொருட்டுக்கும் மதிப்பதாகத் தெரியவில்லை!
மனிதாபிமானமற்று யுத்தத்தில் மூழ்கியுள்ள இந்தத் தேசத்தின் அரசுகள் மீளவும் மக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைப்பதில் முன்னணி வகித்து,உலகமயப் பொருளாதாரக் கனவுகளுக்கு தென் கிழக்காசியாவில் வாய்ப்புகளையும்,வளத்தையும் உறுதிப்படுத்தித் தமது வர்க்க நலனை உறுதிப்படுத்தித் தம் வர்க்கத்தோடு தோழமையாக ஜெனிவாவிலும்,தாய்லாந்திலும் கை குலுக்கிறார்கள். மக்களோ மாவீரர்-தேச புத்திரர்களுக்காகக் கண்ணீர் மல்கி,தமது மரணவோலத்துக்கு "பேச்சு வார்த்தை-தீர்வு" முடிவு கட்டாதோவென்றும்,தமது வயிற்றுக்காக உழைப்பதற்கு ஒரு தொழில் கிடைக்காதோ-யுத்தச் சூழல் விலகி நிம்மதியாய் ஒரு குவளை சோற்றை மெல்ல முடியாதோவொன்று ஏங்கி நிற்கிறார்கள்.
இந் நிலையில்,
இலங்கையில் இன்றுள்ள மிகப்பெரும் உயிராதாரப் பிரச்சனை "உயிர் வாழும் சுதந்திரத்தை" தீர்மானிப்பது யார் என்பதே!இன்றைய உலகமயமாதலில் அமெரிக்காவானதும் அதன் பங்காளிகளுமான ஐரோப்பிய யூனியனும் வெறும் பொருளியல் நலனை மையப்படுத்திய குவிப்புறுதியூக்கச் சமுதாயமில்லை.அவைகள் பிரபஞ்ச இயக்கத்தையே முடிந்தளவுக்கு தம் கட்டுப்பாட்டுக்குள் நிலவக்கூடிய சமாச்சாரமாகப் பார்க்கிறார்கள்.தோற்றம் அழிவு போன்ற அனைத்து பெளதிக இயக்கத்தையும் தமது சக்திக்கேற்றளவு கட்டுப்டுத்த முயற்சிக்கிறன.இந்த அமெரிக்காவினதும்,ஐரோப்பாவினதும் எடுபிடிகாளக மாறியுள்ள மூன்றாவதுவுலகமெனக் காண்பிக்கப்படும் பொருளாதார வளர்ச்சியற்ற தேசங்களிலொன்றான இலங்கையில் மனிதர்களின் உயிர்வாழும் உரிமையை யார் தீர்மானிக்கிறார்கள்?
இது கேள்வி.
இதற்கு விடை காண்பதுதாம் ஜனநாயகம் பேசும் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
03.12.2006
Friday, December 01, 2006
விடுதலையென வெடித்துச் சிதறும்!!!
வெடித்துச் சிதறும்!!!
மெல்லத் தொலைத்துவிடும் உயிரும்
ஊனுமாகத் தமிழ் சொல்லிக் கருப்பையில்
எல்லோருக்கும் அளவில்லாக் கொலைகளில்
அடுத்தவன் சாவதென்ற நிம்மதி
எங்கப்பன் பிள்ளைகளில்லை
என் பிள்ளைகூட இங்குதானே?
இனியென்ன நமக்கென்றொரு நல்ல தேசம்
தமிழ் வாழ அவள் கருப்பைக்குள் நீ மலர்ந்து
நாடுகாணச் சாவது சாவில்லை
நித்திய வாழ்வின் கரு முகிழ்ப்பென்று
இனிதாய் ஏற்று
உயிராயுதமாவாய்!
வெடித்துச் சிதறு
பொல்லாத"சிங்களவனை" ஓடோட விரட்ட!
எங்கள்-உங்கள்
உன்னதத் தலைவர்கள் அப்பாக்கள் ஆனவர்கள்!
உருவத்தில் எடைகூடிடினும்
உயிரைத் தமிழுக்காய் உருக்கும்
நன்றிமிகு தலைவர்கள்
மேன்மை தகு மெல்லிய இதயத்தால்
சொல்லிய உங்கள் கனவுகளைச் சிரசைக் கொடுத்தும்
சில வருடங்களில் நிசப்படுத்த
மனித வெடிகுண்டாய் வெடித்துச் சிதறு!
தலைவர்கள்,தளபதிகள் இறப்பினும்
மனிதரை வதைக்கும்
சுரண்டும் அமைப்பும் சட்டதிட்டங்களும்
நிலைத்தே இருக்கும்!
ஒரு இரஞ்சன் போக
ஒன்பதுபேர்கள் பினல்னால் வந்தார்கள்
ஜே.ஆர். போகப் பிரமேதாசா பின்...
எத்தனை தலைமைகள்?
அமைப்பை மாற்றாத அடிதடியெல்லாம்
மக்களைக் கொல்வதற்கு வழியே தவிர
விடுதலைக்கானதல்ல
தமிழிச்சி கருப்பையில்
தவழும் தற்கொடைக் குண்டுகளே!
இன்னும் பல"மாவீரர்"தினங்களோடு
உளமாறக் கொண்டாட நாமிருக்கிறோம்
நம்புங்கள் நம் எதிர்கால மா-வீரர்களே!
நாற்றமடிக்கும் புதைகுழிகள்
யுத்தங்களின் மலட்டுத்தனத்தையும்
மையங்களில் கொட்டிக்கிடக்கும் மறைந்த நலன்களையும்
மறைத்துக்கொள்ள
தேசியத்தின் பெயாரால்"வீரத்துக்கு"விழா எடுக்கும்
விடுதலையென வெடித்துச் சிதறும்!!!
விதைப்புக்கு இன்னும் தேடப்படும் மழலைகள்
விதைகளாய்மாற்றப்படும் ஒவ்வொரு நிமிடமும்
மனதுக்குள் அழுதுவடியும் சின்னக் கனவு
சில்லறைகளற்ற அம்மா மடியின் அந்தச் சுகத்தை!
தலைகள் தெறிக்கச் சாவு வந்து
தாய்மைக் கனவை உடைத்துக்கொள்ளும்
தமிழ் சொல்லும்
எல்லா வாய்களும்
தாலாட்டு மறந்து "ஒப்பாரி"சொல்லும் இனியெப்போதும்
இத்தனையாண்டுகள்
இலட்சம் தலைகளை உருட்டின பின்பும்
இதயம் மரத்த
இயக்க வாதம் இறப்பைத் தவிர
எதைத் தந்தது இந்தத் தேசத்தில்?
ப.வி.ஸ்ரீரங்கன்
01.12.2006
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...