Saturday, November 11, 2006

"மாமனிதர்களும்"...

"மாமனிதர்களும்"
மடியும் மழலைகளும்!


"மாமனிதர்",
"மாவீரர்",
"பூமிப் புத்திரர்"
"தேசப் பற்றாளர்".

யாரடா இவன்கள்?

மக்களை மாய்க்கும்
மந்தைக் கூட்டமெல்லாம்
மடையர்களின் சபையில்
மதிக்கப்பட்டால்
மக்களின் மரணத்துக்கு மதிப்பு என்னடா??

மரணங்களும் மறைவதாகவில்லை!


மெளனித்திருக்கவும் முடியவில்லை
மனதும் கேட்கிறதாயில்லை
எத்தனை உயிர்கள் இழந்தாலென்ன
எந்தன் தேசம் யுத்தத்தில் கோடியுழைக்கும்

இருந்தும்,

கட்டைவிரலை வெட்டிக்கொடுக்கும்
ஏகலைவன்கள் துணையாய் வாய்க்கப் பெற்ற
துரோணர் இராஜபக்ஷ துடியாய்த் துடிப்பது
தமிழர் பட்டுணி திறப்பதற்காம்


வஞ்சக நெஞ்சுடையோரே!

எத்தனை காலம் எய்திடுவீர்
எம் தலையில் ஏவுகணையும்
ஏய்த்திடும் அரசியல் வஞ்சனையும்
மாய்த்திடும் கொடும் பஞ்சத்தையும்?

பட்டோம் கோடி துன்பம்
ஈழமென்ற கோசமொன்றால்!
ஊரிழிந்தோம் உறவிழந்தோம்
நாடிழந்தோம் அகதியானோம்
அவதிப்பட்டோம்

ஆத்தையும்
அப்புவும் ஆச்சியும் அடுப்பெரிக்க
வெள்ளைத் தேசங்களின் நெருப்பிலுருகினோம்...

எங்கள் மழலைகளும்
அப்பு ஆச்சி
உறவறியா அகதியாக...

சொன்னவன் எவன்டா
தேசத்துக்காய் செத்தான் சொல்!!

பதவிவெறிக்கும்,பகட்டு வாழ்வுக்கும்
பாதிவழியில் தட்டிப் பறிக்கும் பதவிப் போட்டிக்கும்
மரிப்பவனெல்லாம் மக்களுக்காய்ச் செத்தவனென்றால்
இரஞ்சன் விஜெயரெத்தின முதல்
அத்துலத்து முதலியீறாய்
காமினியும் பிரேமாவும் மக்களுக்காய் மடிந்தவரே!

சோரம் போனவ(ள்)ன்கள் சொல்லிய சொற்ப நொடியுள்
சோக்காய்ப் பறந்த சிங்கக் கொடியுள் தோரணைகட்டி
சொகுசு வண்டி,மெய்கும் சிங்களப் படையின்
செல்லப் பாதுகாப்பாய் பவனி வந்து செத்தாலும்

மெல்லச் சொல்லும் ஒரு கூட்டம்:
"மக்களுக்காய் குரல் கொடுத்த" மாவீரன் என்றபடி...
பச்சைத் துரோகிகளின் இச்சையெல்லாம் இப்படியே!
"தன்வினை தன்னைச் சுடும்"தர்மத்தின் விதியுள்
மாய்ந்துபோகினும்"மாமனிதர்"பட்டமொன்றை
மளமளவென்று கொடுத்திடுவான் தேசியத்தின் தலைவனாம்!

மக்களென்ன மண்ணாங்கட்டியென்ன
மரணித்த கையோடு காடாத்திச் சாம்பலையும் ஆற்றிலிட்டு
அடுத்த இழவைப் பார்த்துவொரு நகர்வை
நன்றாய்த் திட்டத்தோடு வகுத்து வை!

கொத்துக் கொத்தாய்ச் செத்து மடியும் செல்லக் குஞ்சுகள்
சூழ்ச்சிகளின் சூத்திரத்தைப் புரிவதற்கில்லை
அந்த நொடியிலும் ஒரு குவளை சோற்றுக்கு அழுதபடியே மாண்டிருப்பார்கள்
அதைச் செய்து முடிக்கும் அரசியலுக்கு நீயோ
அல்லது அவர்களோ பொறுப்பில்லை

மாமனிதர்கள் இல்லைத்தானே
மழலைகள் மண்டையிலிருந்துதிரும் மயிர்தானே?
மக்களென்றால் "மாமனிதரின்"மசிரைவிட முக்கியமா??
மருந்துக்கும் மதிக்காதே, விசாரணைக் கமிஷன் போதும்

ஜனநாயகத்தின் தொட்டில் நாடாளுமன்றம்
நல்ல"மாமனிதர்கள்"மக்களுக்காய் ஓடாய் உழைக்கும்
உலகுக்கு உரக்கச் சொல்லும்
உரிமைக்கு குரல் ஒலிக்கும் கூடம்

ஒருவராய் இருவராய்
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட "மாமனிதர்கள்" அவர்கள்
மடியும்போதும் மக்களுக்காய் செய்த பணி
மக்களுக்கு "மரணத்தைத் தடுக்குமொரு
தக்க அரசியலே!",இல்லை???

தக்க தரணத்தில்
தவறின்றிப் போற்றுதலும்"போடுதலும்"
பொய்யின்றிப் மக்களுக்குப்"பூச் சுற்றுவதும்"
இந்தப் புண்ணிய புத்தனின் பூமியில்
பொழுதெல்லாம் பூஜையென கொள்க!

"மாவீரருக்கு",
"தேச புத்திரருக்கு",
"மாமனிதர்களுக்கு",
"தேசப் பற்றாளர்களுக்கு"
ஆயுதமும்,அதிகாரமும் துணையிருக்கு

அவதிப்பட்டு அழியும் மக்களுக்காய்-
மரணிக்கும் மழலைகளுக்காய்
இந்த மெளனங் கலைத்த
உணர்வுக் கொதிப்பு அர்ப்பணமாகுக!!!



ப.வி.ஸ்ரீரங்கன்
11.11.2006

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...