Tuesday, November 28, 2006
எனது அன்பார்ந்த மக்களே!
...தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது...
//ஆனால்,எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி,நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.//
...ம்...இம்முறை நம்மட தேசியத் தலைவர் "காலம்"குறித்த கடுமையானவொரு ஆய்வைச் செய்து,அதன்வழி தான் கண்டடைந்த தரவுகளோடு,ஞானம்பெற்ற கையோடு,இவ்வாண்டின்"மாவீரர்"தினவுரையை வீடியோக் கமிராவுக்கு முன்னால் வாசித்துக் கொண்டிருந்தார்.எனக்கு இந்தக் கதம்பத்துரையில்(விடலைக் குஞ்சுகள் வினைதீர்க்கக் கொதிக்காதீர்) எந்தவொரு கண்றாவியையும் விமர்சிக்க-விவாதிக்க விருப்பமில்லை,என்றபோதும் தலைவர் தனிநாட்டுக்கான போரை இலட்சம் மக்கள் இறந்த பின்பும் முன்னெடுக்கிறபோது நாம் கொஞ்சமாவது கதைக்கத்தானே வேணும்-இல்லையா?
நம்ம தலைவர் தன்பாட்டுக்குப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்."அது,இது"வென்று மனிதர் பட்டியலிட்டே உலக அரசியலை விமர்சித்துப் புரட்சிகரமானவொரு பொருளாதாரப் புதுயுகத்தைத் தனது வழியில் நிறுவி, ஈழத்தை விடுவிக்கப் போகிறார்.
(மறுபுறத்தில் உணவுத் தடை, மருந்துத்தடை, பொருளாதாரத்தடை, போக்குவரத்துத்தடை, மீன்பிடித்தடை என எம்மக்கள் உயிரோடு வாட்டி வதைக்கப்படுகிறார்கள். பி/கு:தலைவரைப் பார்த்துப் புரியவும்)
இதுவரை நடந்தவைகளைப் பட்டியலிட்டுக்கொண்டிருப்பதைக் கடமையாக ஏற்றுப் புலிகளின் ஊதுகுழல்கள்- பல ஊடகங்கள் இதுநாள்வரை பட்டியலிடும் இவ்வேலையைச் செய்தே வருகின்றன.மீளவும் அந்த ஊடகங்களின் பட்டியலிடலில் திருப்த்தியுறாத "நம் தலைவர்"தன்பாட்டுக்குப் பட்டியலிட்டு,இறுதியில் கால்நூற்றாண்டுக்குப் பின்பாகவும் அதே பல்லவியோடு, "தனியரசு"தனிநாடு என்று கூறிக்கொண்டு,"புலிகளின் தாகம்"சொல்லி உரையை முடித்தார்.
அப்பாடா அருமையான உரை!அவசரப்படாத ஆய்வு!அள்ளவள்ள அறிவாய்ச் சொரியும் அற்புதவுரை.
சிங்களவனிடம் சினக்கிறார்,பின் அவனிடம் மக்களுக்காக உணவுக்கு மடிப்பிச்சை கேட்கிறார்.திரும்பக் கோடானகோடி குற்றங்களைச் சுமத்தி சிங்களவரசுகள் "நீதியான"முறையில்"தீர்வு"தராதென்று சாத்திரம் சொல்லித் தமிழீழப்போரை செய்வாதாகச் சொல்கிறார்.இவர் தமிழீழப் போர் செய்யும் சூழலிலும் சிங்களவனே சாப்பாடு நமக்குப் போடணுமாம்.இவர்போடார்.இவர் அதற்கான முயற்சியோடு ஸ்ரீலங்காவின் ஆதிக்கத்தை உடைத்துத் தனது மக்களின் வயிற்றுப்பாட்டைத் தனது மண்ணிலேயே உற்பத்தியாக்கிக் கொள்ளார்.சுயசார்புடைய பொருளாதார இலக்குகளைச் செய்யாத தலைவர் தமிழீழத் தனியரசு நோக்கிய போரைத் தொடர்கிறாராம்.தனிநாடமைத்த கையோடு உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து உலருணவுகள் வழங்குவாராக்கும்!யாரூ கண்டார்?
இப்படியாகத் தலைவர் தனிநாட்டுப் போரில் முனைப்படையும்போது, மரணம் பற்றி மகத்தானவொரு விளக்கத்தைச் சொன்னார்: >>>...தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது...ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள். <<<
இதைக் கேட்டபடி வேலைக்குப் போன நான்,பின் இரவு வந்து ரீ.ரீ.என்.தொல்லைக் காட்சியைப் பார்த்தேன்.
அடேங்கப்பா!
என்னவொரு ஆரய்ச்சி!! போராடிச் செத்த இராணுவங்களின் புதைகுழிகள் பற்றியொரு நீண்ட ஆய்வுரையை ஒரு தமிழர் செய்து கொண்டிருக்கிறார்.அப்பாடா,இரண்டாம் உலக யுத்தத்தில் தமது நாட்டிற்காகப் போராடிச் செத்த ஜேர்மனிய "இராணுவீரர்கள்"63 ஆண்டுகளாக உறங்குவதாகக் குழிகளைக் காட்டிச் சொன்னார்.
நல்ல ஆராய்ச்சி!தலைவனுக்கேற்ற தொண்டன்!
அவனவன் உற்பத்திகளை எங்ஙனம் உயர்த்துவதென்றும்,தாம் செய்யும் உற்பத்திகளில் எப்படிப் புதுமைகளைப் புகுத்திச் சந்தையைக் காப்தென்றும் யோசிக்கிறபோது-ஆராய்ச்சிகள் செய்கிறபோது,நாம் கல்லறைகள் குறித்து ஆய்வு செய்வது சரிதானே?அவரவர் எதைச் செய்கிறார்களோ அதில்தாம் ஆர்வம் அதிகமாகி மூளை சிந்திக்க ஆரம்பிக்கும்.
அட பாவித் தமிழர்களே!
உங்களுக்கு கருக்கு மட்டையால அடிக்கிறதுக்கு ஆளில்லையா?
இரண்டாம் உலகில் நாடுபிடித்து இனவழிப்பைச் செய்த பாசிச இராணுவங்கள் வீரர்களா?தாய் நாட்டுக்காகப் போராடினதா இந்த நாசிய ஜேர்மனியின் ஈனப்படைகள்?
அதென்னடா "அமைதியான" உறக்கம்?
செத்து மண்ணோடு மண்ணாகி, மக்கிப்போன பிண்டங்கள் இன்னும் உறங்குதோ?
>>>...ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள். <<< இப்பிடிச் சுத்திச் சுத்தியே பல்லாயிரக்கணக்காகப் பறிகொடுத்தாச்சுத் தலைவரே!
அதைவிட இன்னும் கொடுக்கிறதுக்காக நார்மண்டிப் புதைகுழிகளை உங்கட தொண்டன்கள் போற்றிப் புகழ்ந்து ஆய்வு செய்து அடுக்கித் தள்ளும் அற்புத வரிகள் மாவீரர் துயிலும் குழிகளை ஒப்பிட்டு உயர்த்துவது இன்னும் அத்தகைய குழியளைத் தோண்டுவதற்குத்தாம் என்பதை நாம் அறிகிறோம்.ஐயா தலைவரே!அப்பாவிகளின் தலையில் இப்பிடி மிளாகாய் அரைக்கலாமோ?
எங்கட வாரீசுகள் பேராடும் பல்கலைக் கழகங்களுக்குள் தூங்கி வழியும்போது அப்பாவிகள் புதைகுழிகளுக்குள் அமைதியாய் துயின்று வரலாற்றில் மகத்தானவர்களாக வரவேண்டுமென்ற உங்கட பெரிய மனசு யாருக்கு வரும்?
நார்மண்டியில செத்தவர்களுக்கும் ஜேர்மனியில் செத்தவர்களுக்கும் வைக்கப்பட்ட தூபிகள்,கல்லுகள் வரலாற்றில் இத்தனை பேர்களை அழித்தது கொடிய யுத்தம் என்பதைச் சொல்வதற்கே!போற்றுவதற்கல்ல,மாறாகப் போரைத் தடுப்பதற்கு!
புதைகுழிகளைப் போற்றும் தொண்டர்கள் நார்மண்டியை மட்டுமல்லை வியாட்நாமிலும் போய் புதைகுழிகளை ஆய்வு செய்து,"மாவீரர்களை"த் தயார் செய்வது மகத்தான தமிழ் தேவைதாம்!
வாழ்க:
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!"
ப.வி.ஸ்ரீரங்கன்
27.11.2006
Saturday, November 25, 2006
ரீ.பீ.சீ: வானொலிக்கான தோழமை!
பாசிசம் எந்து ரூபத்தில் வந்தாலும் அதைக் கைகட்டிப் பார்த்திருக்க முடியாது.தமிழ்பேசும் மக்கள்கூட்டத்தில் மிகவும் கேவலமான-இழி நிலையுடைய உலகப் பார்வை நிலவுகிறது.இது தனக்கெதிரான எந்தக் கருத்தையும் சகிக்க முடியாத தளத்தில் தனது அராஜக மேலாண்மையை நிலைநாட்ட முனைகிறது.அரசியல் மேலாண்மை பெறத் துடிக்குமொரு வர்க்கம் தனது படுகேவலமான அரசியல் சூழ்ச்சிகளுக்காக மாற்றுக் கருத்துகளுக்குச் சாவுமணியடிப்பதும்,அதைத்தொடர்ந்து தாம் சொல்லுவது மட்டுமே தமிழ் பேசும் மக்களின் நலன்பால் அக்கறையுடையதாகவும் மக்கள் மத்தியில் கருத்துக்கட்ட முனைகிறது.
இதுவொரு சாபக்கேடான இழி நிலை.
ரீ.பீ.சீ.வானொலியானது புலிக்கு எதிரானவொரு வானொலியாகக் கருதப்பட்டாலும் அந்த வானொலியானது முழுமொத்த தமிழ்பேசும் உழைக்கும் மக்களுக்கும் எதிரான புலிகள் அமைப்பைப்போலவே உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகச் செயற்பட்டது.எனினும் அந்த வானொலியின் குரல் வளையை நெரித்தெறியும் உரிமை எந்தக் கொம்பர்களுக்கும் கிடையாது.அந்த வானொலி மீதான பாசிசக்குண்டர்களின் தாக்குதலானது மீளவும் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கத்துடிக்கும் மேலாண்மையுடைய இயக்கங்களின் இழிசெயலாக இருக்கலாம்.அல்லது இத்தகைய செயல்களால் அந்த வானொலியைப் பிரபலப்படுத்த முனையும் ஒரு தந்திரமாகவும் இருக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் எந்தக் காரணத்துக்காகவிருந்தாலும் அதை நாம் வன்மையாகக் கண்டிப்பதும்,மாற்றுக் கருத்துக்கள்-அது எவையாக இருந்தாலும், அதை வெளிப்படுத்துவதற்கான உரிமையை எவரும் காவுகொள்ள அனுமதித்து வாளாதிருக்கமுடியாது.
இன்று, நாம் பொல்லாதவொரு அரசியல் அராஜகத்துள் வாழுகிறோம்.தமிழின் பெயரால் கட்டவிழ்த்துவிடப்படும் அராஜகமானது தேசம் கடந்து தனது கோரப் பல்லை நீட்டிக் கொண்டிருக்கிறது.இத்தகைய கொடிய பற்கள் எங்கள் மக்களின் எத்தனை தலைகளை உருட்டியது!இன்னும் எத்தனை தலைகளை உருட்டப்போகிறது?
தமிழ்த் (வி)தேசியவாதமானது அப்பாவி முஸ்லீங்கள்மீது அத்துமீறி அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து,அவர்களை நாதியற்றவர்களாக்கி, அடித்து வெருட்டுகிறது.எதிர்க்கருத்துடைய தமிழ்பேசும் மக்களை நாயிலும் கேவலமாககச் சுட்டுக் கொல்கிறது. இதுவென்ன அரசியல்?,இதை இன்னும் அனுமதிக்க முடியுமா-தமிழின் பெயரால்,இனத்தின் பெயரால்,தேசத்தின் பெயரால் அனுமதிக்கமுனையும் ஒவ்வொருகணமும் நமது மக்களின் அழிவைத் துரிதப்படுத்துகிறோம்!
இது ,நாம் ஆற்றும் மிகப்பெரிய துரோகமான இழி செயல் இல்லையா?
எங்கள் மண்ணில் குருதியாறைத் திறந்துவிட்ட தமிழ் விதேசிய அதிகாரமையங்கள் அராஜகத்தை-பாசிசத்தை உலகம் முழுவதற்குமான சங்கிலித் தொடர் நகர்வாக்கிக் கருத்தியல் பரப்புரையைச் செய்வதற்கான தடைக்கல்லாகச் செயற்படும் மாற்று ஊடகங்களை, இல்லாதாக்கும் நகர்வில் தனது வலுக்கரத்தைப் பதிப்பது நமக்கு புதிதில்லைத்தாம்.என்றபோதும் இந்தத் தமிழ் மொழி ஊடாகக் கோடு கிழித்து,மக்களின் உரிமைகளைக் காவுகொண்டு தமது நலனை அடைய முனையும் தமிழ்ப் பாசிஸ்ட்டுகள்-மற்றும் ஆளும் வர்க்கமானது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவரும் தொடர் காரியத்தைத் தன்னையும் அறியாது ஆற்றிவருகிறது.ரீ.பீ.சீ.வானொலிமீதான நேற்றைய (24.11.2006)காட்டுமிராண்டித் தாக்குதலானது மிகவும் கொடூரமானதாகும்.இது மக்களின் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் பாசிசச் செயற்பாடுதாமென்பதில் இருவேறு கருத்து நிலைக்க முடியாது.
இத்தகைய தாக்குதல்களைப் பாசிசப் புலிகள் போன்றவொரு அமைப்பினால் மட்டுமே ஐரோப்பாவில் நிகழ்த்த முடியுமென்பதும்,சாதரணமான மக்களின் எந்த முனைப்பும் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்குவதற்கான எந்தச் சாத்தியமும் மேற்குலகில் இல்லையென்பதும் நாம் புரிந்துகொள்ளத்தக்கதே!
ரி.பீ.சீ. வானொலி மீதான இந்தத் திடீர் தாக்குதலானது "மாவீரர்"தினக் கூத்துகக்ளை அது(ரீ.பீ.சீ.) கறாராக அம்பலப்படுத்துவதும் கூடவே பிரபாகரனின் அம்மணமான அறிவிலித்தனமானவுரைகளைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு சூழலை இல்லாதாக்குவதாகவுமே செயற்படுத்தப்பட்டுள்ளது.நெருங்கிவரும் இன்னொரு கொடிய சூழலை நாம் மௌனமாக வரவேற்க முடியாது.
அந்த வானொலி(ரீ.பீ.சீ)வரும் 27.11.2006க்கு முன்பாக-விரைவாக வருவது மாற்றுக் கருத்துகளற்றவொரு கொடும் பாசிசச் சூழலுக்குள் இருக்கும் தமிழ்பேசும் மக்களுக்கு அவசியமானது.இத்தகையவொரு நிலையில் ரீ.பீ.சீ.வானொலிக் கெதிரான தமிழ்ப் பயங்கரவாதமானதை நாம் உலக அரங்கில் அம்பலப்படுத்தி,அந்த வானொலிமீதான தாக்குதல் மாற்றுக்கருத்துக்கு-ஜனநாயகத்துக்கு,மக்களுக்கெதிரானதாகவே நாம் பிரகடனப்படுத்துவோம்.
இந்தவொரு தளத்தில் நாம் ரீ.பீ.சீ.க்கு ஆதரவாகக் கத்தவில்லை,மாறாக மாற்றுககருத்துக்கெதிரான-மக்களின் ஜனநாயகத்துக்கெதிரான அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிராகவுமே குரல் கொடுக்கிறோம்.அந்தவகையில் எமது தோழமைக் கரம் ரீ.பீ.சீக்கு உண்டு.அது அவர்களின் கருத்துகளுக்கானதல்ல.மாறாக அவர்கள் கருத்தாடும் உரிமைக்கானது.
ப.வி.ஸ்ரீரங்கன்
25.11.2006.
Sunday, November 19, 2006
பச்சைத் துரோகிகளின்...
தமிழ் பேசும் மக்களின் பரம விரோதிகள் சிங்கள ஆளும் வர்க்கமும் உலக ஏகாதிபத்தியங்களும், புலித்தலைமையுமென்றே நாம் பல் முனைகளில் உரையாடியுள்ளோம், இப்போது இவர்களின் ஏவல் நாய்கள் பலரைப் பச்சையாக இனம் காணத்தக்க சந்திப்பொன்று கடந்த 11, 12 நவம்பர் 2006 இல் ஜெர்மன் ஸ்ருட்காட் நகரில் "இலங்கைத் தேசிய இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வும், புலம்பெயர் வாழ் தமிழ்பேசும் மக்களினது பங்களிப்பும்"
என்ற தலைப்பில் ஒன்றுகூடிய பதவிவெறிப்பிடித்த ஓடுகாலிகள்,ஒட்டுண்ணிகள்,கைக்கூலிகள்,மற்றும் கடைந்தெடுத்த அரசியல் விபச்சாரக இடைத் தரகர்கள், இலங்கைத் தேசத்தின் முழுமொத்த மக்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வுவேண்டிச் சிந்தித்து "ஆய்வுக்" கட்டுரைகள் வாசித்தும் கூடவே தமிழர்களின் "ஜனநாயகத் தலைவர்"(புகலிடத் தமிழரிடம் தட்டிப்பறித்த "கடிதக் காசுப் புகழ்" ஆந்தைச்சங்கரி)ஆனந்த சங்கரியார் தலைமையில் "தீர்மானங்களும்" பத்து அம்சக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டனவாம்.இது சரியான புல்லரிக்கும் ஒரு "ஜனநாயக"
ஒன்று கூடலாகும்!
புல்லர்கள்கள் பலர் ஒன்றுகூடித் தமிழ்பேசும் மக்களின் மிச்சசொச்ச அமைதியையும் 'எங்ஙனம் கெடுத்துத் தமது தேவைகளை நிறைவுப்படுத்தலாமெனச்' சந்தித்துப் பேசிய இந்த நிகழ்வையும்,இவர்கள் பம்மாத்துப்பண்ணிய "தீர்மானத்தையும்,பத்து அம்சக் கோரிக்கைகளையும்" நாம் உடைத்துப்பார்ப்பது மிக மிக அவசியமாகும்.
இந்தப் புல்லர்களுக்குள்-அரசியல் கிரிமனல்களுக்குள்,கைதேர்ந்த தொழில் முறை அரசியல் மாபியாக்களுக்குள் அப்பாவித்தனமாகச் சரடுவிடும் பிரான்ஸ் வாழ் நம்ம கூட்டாளிகளும் பம்பலாகக் கருத்துக்கள் சொல்லியிருக்கினம்.இந்த இவர்களின் பம்பலான வருகையையும்,
கட்டுரைகள் வாசிப்பையும் கண்டு, உச்சத்தில் உசக்கப்போய் ஆனந்தசங்கரி,குமாரதுரை போன்ற எச்சில் பேய்கள் தம்மையும் அறியாது தமது எஜமான விசுவாசத்தைச் செவ்வனவே செய்து முடிக்க,அதையும் மக்களின் மகத்தான வெற்றி,அவர்களின் அபிலாசைகளின் எதிரொலியெனப் புலம்பும் ஆனந்தசங்கரியின் தேனீ இணையமும் இன்னொரு புதுக் குழிப்பறிப்புக்கு உடந்தையாகக் கொட்டும் கேணைத் தனமான இந்தத் "தீர்மானங்களையும்,பத்து அம்சக் கோரிக்கைகளையும்"(கோரிக்கைகள் யாரிடம் விடப்படுகிறதென்று தெரியாதிருப்பினுங்கூட) நாம் சற்று உடைத்துப் பார்ப்பதும் அதனு}டே இந்தத் துரோகிகளும் புலித்தலைமையைப் போன்றே தமிழ்பேசும் மக்களின் எதிரிகள்தாமென்று நாம் நிறுவிக்காட்டுவது மக்களின் விடுதலைக்கு அவசியமாகும்.
பண்டுதொட்டு துரோகத்தையே அரசியல் தாரக மந்திரமாகக் கடைப்பிடித்துவரும் தமிழர் விடுதலைக்கூட்டணியானது அதன் தாய்க்கட்சியிடமிருந்து கைமாற்றிக்கொடுக்கப்பட்ட ஏகாதிபத்தியச்
சேவையை நன்றாக செய்துவருகிறது.தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைக்குச் சிங்களத் தேசியத் தலைவர்கள்(பண்டா செல்வா ஒப்பந்தம்) போட்ட ஓரளவு முற்போக்கான ஒப்பந்தங்களையெல்லாம் அமெரிக்காவோடிணைந்து செயலிழகச் செய்து, கிழித்தெறிய வைத்தவர்கள் இந்தக் கூட்டணியினரும் இவர்களின் முதுபெரும் தலைவர்களும்தாம்.நாம் வரலாற்றிலிருந்து இதை மறப்பது கொடுமை!இதைப்பிறிதொரு கட்டுரையில் பேசுவோம்.இனி விஷயத்துக்கு வருவோம்.
தமிழ்பேசும் மக்களின் உரிமைப்போர் இதுவரைகாலம் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்ப்பலியெடுத்துள்ளது.மக்களுக்காகப் போராடப் புறப்பட்ட அனைத்துவகை இயக்கங்களும் கணிசமானளவு மக்களை நரவேட்டையாடின.சிங்கள அரசோ தொழிமுறைப் படுகொலைகளையும்,திட்டமிட்ட குடியழிப்புகளையும் இவர்கள் மூலமாக ஒப்பேற்றியது-ஒப்பேற்றுகிறது.தமிழ்பேசும் மக்களின் அனைத்து வாழ்வாதாரமும் அழித்தொழிக்கப்பட்டு,அவர்கள் அகதிகளாகவும்,நாடோடிகளாகவும் உயிர்காக்கும் பொருட்டு அலையும்போது இந்தப் பேய்கள்"தீர்மானங்கள்"நிறைவேற்றுகிறார்களாம்-"கோரிக்கைகள்" விடுகிறார்களாம்!
உலக ஒடுக்குமுறையாளர்கள் தமது உள்ளுர் அடியாட்களுக்குப் பதவிகள்,பட்டங்கள்,அன்பளிப்புகள்,பரிசுகள் வழங்க அதையேற்கும் உள்ளுர் அடிவருடிகளிலொருவன் ஆனந்தசங்கரி!தான் தமிழ் பேசும் மக்களுக்குமட்டுமல்ல,இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரிதாமென நிரூபிக்கும் பரிசினை ஏற்கிறான்.
"1. இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்."
இதைத்தாம் காலகாலமாகச்"சோஷலிச ஜனநாயகக் குடியரசு"என்ற போர்வையில் இலங்கை அரச சாசனங்களும் நமக்குச் சொல்கின்றன.நம்ம ஆனந்த சங்கரியாரும் இந்தச் "சோசலிச"க் கனவினில்தாம் இப்படிச் சொல்கிறார் என்று நாம் எடுக்க முடியாது.அவரு ரொம்பக்கறாரான மனிதர்.மாமிசம் புசிக்காத மருக் கொழுந்து."இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை" உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்.
இத்தகைய உயர்ந்த மனித விழுமியங்களை இலங்கையில் ஏற்படுத்தப்படும் "சமஷ்ட்டி"முறைமையுள் உள்ளடக்கப்பட்ட முதலாளித்துவ எல்லைகள் காத்து,இலங்கை வாழ் அனைத்து மக்களையும் அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ அனுமதிக்குமா? "சமத்துவம்"என்பது என்ன?கூட்டணிப் பேய்கள் 70க்கு முற்பட்ட காலங்களில் காட்டிய சமபந்திப் போசனமா இந்தச் சமஷ்ட்டி,சமத்துவம்-மண்ணாங்கட்டி?
மக்களின் அன்றாட வாழ்க்கை இத்தகைய அதிகாரத்திலுள்ள கட்சிகளாலும்,அதன் பின்னால் ஒளிந்துள்ள ஆளும் வர்க்கத்தாலும் அவர்களில் வேட்டை நாய்களான ஆயுதம் தரித்த அடியாட் படையாலும்,சட்டங்களாலும்,உலக வல்லரசுகளின் பொருளாதார ஆர்வங்களாலும் அழித்தொழிக்கப்படும்போது-சிங்கள இனவாத அரசுகளின்,கட்சிகளின் அத்துமீறிய அதிகாரத் திமிரானது இலங்கைச் சிறுபான்மை இனங்களை இனத்துவ நோக்கோடு இரண்டாம்தரப் பிரஜைகளாக்கி அழித்தொழித்துவரும்போது,இதை அநுமதித்து ,இத்தகைய கட்சிகளோடு சகஜமாக உறவாடிப் பதிவிகளையும் வாழ்க்கை வசதிகளையும் தேடிய இத்தகைய ஆனந்த சங்கரிகளும், அவர்களின் அடிவருடிகளும் இன்று மக்களின் சமத்துவத்தை,இனவொற்றுமையை,வர்க்கபேதமற்ற மற்றும் இன,மத,மொழி,சாதி பேதமற்ற சமுதாயத்தை ஏற்படுத்தப் "புலிப் பயங்கர வாதம்தாம்" தடையாக இருப்பதாக பிதற்றுவது மிகவும் உள்நோக்கமுடையது.
இவர்கள் முன்வைத்த தீர்மானங்களே வெறும் வெற்று வார்த்தைகள்தாமென்பதை நாம் மிக இலகுவாக இனம்காணத்தக்க இவர்களின் அரசியல் அறிவே சாட்சியாக இருக்கிறது.மக்களின் சமத்துவமான வாழ்வும்,இன ஐக்கியமும்,பொருளாதார ஏற்றதாழ்வுகளும் நீங்கக்கூடியவொரு அரசியலானது ஓட்டுக்கட்சி அரசியலுக்கும்,பாராளுமன்றச் சட்டவாக்கத்துக்கும் அப்பாற்பட்டதாகும்.இல்லை இத்தகைய சமுதாயத்தை முதலாளித்துவ ஒட்டுக்கட்சி,பாரளுமன்ற அதிகாரங்களால் நிறுவ முடியுமென்றால் இவர்கள் அதை உதாரணத்தோடு முன் மொழிவதற்கும் இன்றையவுலகில் அப்படியெந்த அரசுகளுமில்லை.அடிக்கடி இத்தகைய துரோகக் கும்பல் இனம் காட்டும்,உதாரணப்படுத்தும் இந்தியாவையே உதாரணமாகக் கொள்வேமெனில்,உலகத்திலேயே மிகவும் கொடூரமான அடக்குமுறை நிலவும் நாடு நம்ம பாரத தேசம்தாம்.இந்திய அரசின் எந்தவொரு மாநிலமும் மக்களைச் சுரண்டாது,அடக்கியொடுக்காது,மத,சாதி,இன ஒடுக்குமுறையற்று நல்லாட்சியையும்,மக்களின் சமத்துவத்தையும் தரவில்லை!மாறாகச் சாதிய மற்றும் மத,இன, ஒடுக்குமுறையையும் ஒருங்கே வலுப்படுத்திக்கொண்டு உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டிக் கொழுத்துவரும் இந்தியத் தரகு முதலாளிய வர்க்கமானது மனித சமூகத்துக்கு மிகவும் எதிரானவொரு திசையில் சென்றுகொண்டிருக்கிறது.இத்தகைய நகர்வில் இந்திய
ஓட்டுக்கட்சி அரசியலே மிகவும் கொடூரமான அடக்குமுறைக் கிரிமனல்களால் வழிநடத்தப்பட்டுச் சட்டபூர்வக்கிரிமனல் அரச வன்முறை ஜந்திரத்தால் தூக்கி நிறத்தப்படுகிறது.
தமிழ்நாட்டை உதாரணமாகக் கொள்வோமானால் ஓட்டுக்கட்சி அரசியலானது மக்களின் அனைத்துவுரிமைகளையும் தட்டிப்பறித்து,பண்பாட்டு ஒடுக்குமுறையை எங்ஙனம் செய்கிறதென்பதை நாம் மிக இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.தமிழக ஓட்டுக்கட்சிகளிடம் திரண்டிருக்கும்(மக்கள் சொத்தைத் தமதாக்கியது) நிதியானது நம்மைத் திகைக்க வைக்கும் பெரும் மூலதனமாகும்.இத்தகைய மூலதனத்தைக் குடும்பச் சொத்தாக்கிய பெரும் கட்சித் தலைவர்கள்(கருணாநிதி,ஜெயலலிதா) பல இலட்சம் கோடிகளைத் தமது வாரீசுகளுக்குத் தாரவார்த்துக் கொடுத்துவிட்டு,மக்களை தினமும் பட்டுணிச் சாவுக்குள் தள்ளி ,அவர்களை அடிமைப்படுத்தும் பொருளாதார வாழ்வை உறுதிப்படுத்தும்போது நமக்கு இத்தகைய ஆனந்தசங்கரிகள் சொல்லும் சமத்துவம் என்னவென்பது புரிகிறது.இன்றைய ஓட்டுக்கட்சிகள் தமது எஜமானர்களுக்குச் சேவகம் செய்த காலம் போய் தாமே மிகப் பெரும் ஆளும் வர்க்கமாக மாறித் தமது பொருளாதார நன்களை முதன்மைப்படுத்தும் அரசியலில் மக்களின் உரிமையென்று என்ன மிஞ்சியுள்ளது?
சன் டி.வி மற்றும் ஜெயா டி.வி களைப் பார்ப்பவர்களுக்கு அநுபவமாவது என்ன?அவதிப்படும் மக்களின் வாழ்வைத் திவசம் செய்யும் இந்தக் கேடுகெட்ட ஓட்டுக்கட்சி அரசியலும் அதற்குச் சேவகஞ் செய்யும் அடியாட்படையும் நம்ம கண்களில் வெறும் காட்சிகளையாவுருவாக்கின்றன?அவை நமக்கு "அடங்கி வாழ்,இல்லையேல் அடக்கப்படுவாய்"என்று சொல்லவில்லையா?
கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒளிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிகத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இவற்றின் இயக்குனர்கள்.
இத்தகைய கட்சிகளின் ஆசியில் நலம்பெற்று,இன்னும் பதவி-பணம்பெற விரும்பும் இன்னுமொரு சமூகவிரோதக் கும்பல் மக்களின் உரிமைகளைத் தமது வரும்படிக்காகத் திட்டமிட்டுச் சிதைக்கிறர்¡கள்.இவர்கள் மக்களுக்குள் ஒளிந்திருந்தபடி அந்த மக்களையே கொலைசெய்து அவர்களின் குருதியில் தமது குடும்ப நலத்தைத் தக்க வைக்கிறார்கள்.இத்தகைய மனித விரோதக் கும்பலில் ஒன்றுதாம் ரீ.பீ.சீ.வானொலி மற்றும்"தேனீ-ஆனந்தசங்கரி" இணையத்தளம்.
"2.ஜனநாயக உ¡¢மைகள், மனித உ¡¢மைகள், அடிப்படைக்
குடியூ¢மைகள் ஆகியவற்றிற்கு உத்தரவாதம் செய்தல்."
ஐயோ பாவத்தை!
ஜனநாயகம் என்றால் என்னவென்றே புரியாத கொடும்பாவிகள் ஜனநாயகத்தையும், மனிதவுரிமையையும்,அடிப்படைக் குடிசார் உரிமையையும் ஒன்றுக்கொன்று எதிராகவுணருவதையும்,இவைகளைத் தனித்தனியலாகாக் காணும்போது இவர்கள் ஜனநாயகமென்றால் வெறும் அரசியல்வாதிகளின் கொழுப்பெடுத்த உளறுமொழியாக உறுதிப்படுத்துகிறார்கள்போலும்.இது என்னமாதிரியென்றால் முதலாளித்துவ ஆட்சி அதிகாரத்தில் ஜனநாயகமென்பது அவர்களது ஆர்வங்களைக் குறித்த நலன்களை வென்றெடுப்பதற்கான ஒரு கருதுகோளகவே அர்த்தப்பட்டிருக்கிறதென்பதை மிகத் தெளிவாக ஆனந்த சங்கரியார் தன் வாயால் குறித்துரைப்பதாகப் படுகிறது.அடிப்படைக் குடிசார்(சிவிலுரிமைகள்)உரிமைகளைத் தகவமைத்து மக்களின் பொருளாதார வாழ்வை அவர்களின் பரிபூரணமான சுயவெளிப்பாட்டோடு அவர்களே அனைத்து வளங்களையும் துய்ப்பதற்கும்,பாதுகாப்பதற்கும்,பங்கிடுவதற்குமாக அர்த்தப்படும் ஜனநாயகம்தாம் உண்மையான ஜனநாயகமாகவுணரப்படுகிறது.அது ஒரு வாழ்வு முறையாகப் பொருளாதாரவுற்பத்தியோடு மக்களின் மிகத் தெளிவான ஆன்மீகவாழ்வாக விருத்தியாகிறது.இதுவே மக்கள் தமக்கும் இந்தப் பொருளுலகத்துக்குமான தொடர்பாடலாகவும்,இடைச்செயலாகவும் பொருளுற்பத்தில் தனது ஆத்மீகத் தேவையை இனம் காணுகிறது.இதைச் செக்குமாடுகளான ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் தத்தம் பிழைப்புக்கான சொல் அலங்காரமாக நமக்குள் குறித்துரைக்கும்போது,இவர்கள் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் எங்கே நிற்கிறார்கள் என்று நம்மால் உணரமுடிகிறது.
"3. பாதுகாப்பு, நிர்வாகம் உட்பட சகல துறைகளிலும் இன விகிதாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படல்."
இங்கு பாதுகாப்பு என்பதைப் பார்த்தோமானால்,இவர்கள் கூறும் "பாதுகாப்பு" யாருடைய பாதுகாப்பு என்று தெள்ளத் தெளிவாகும்.இந்தப் பாதுகாப்பு தேசத்தினதோ(தேசிய அலகுகளைக் காத்தல்) அல்லது மக்களினதோ கிடையாது.மக்களையும் தேசத்தையும் அந்நிய முதலீட்டாளர்களும், அடிவருடித் துரோகக் கும்பலும் ஒட்டச் சுரண்டவும், வழிவகுத்துக்கொடுக்கவும் இந்த இலங்கை அரசியல் சட்டவாக்கம் மற்றும் ஓட்டுக்கட்சி அரசியலும் இங்கே பாதுகாப்பென்பதாகப் பூச் சுற்றுகிறது. அந்நிய மூலதனத்தைப் பாதுகாப்பதும் அவர்களுடைய கனவுகளை ஒழுங்கிற இயங்குவதற்குமான புறநிலையைத் தோற்றுவிப்பதும், அதைப் பாதுகாப்பாக நிலை நிறுத்துவதுமே பாதுகாப்பென்பதாகும்.மற்றும்படி உழைத்துவாழும் இலங்கைப் பிரஜைக்கு இந்தப் பாதுகாப்பு விலங்கைத் தீர்மானிக்கும் ஒழுங்குகளையே கொண்டிருக்கிறது.இத்தகைய பாதுகாப்பு,நிர்வாகத்துக்கு இன விகிதாசார அடிப்படையில் அடியாட்படைகளைத் திரட்டுவது எங்ஙனம் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வாகும்?ஒடுக்கப்படும் மக்களை இன்னும் வலுவாக ஒடுக்குவதற்கான முகாந்திரம் இந்தப் பாதுகாப்பு,இனவிகிதாசாரம் என்ற கோதாவுக்குள் நிலவுகிறது.மக்களைத் திட்டமிட்டு ஒடுக்கிவரும் இலங்கைத் தரகு முதலாளியக் கட்சிகளின் தார்ப்பாரில் தினம் பலிக்கடாவாக்கப்படும் உழைப்பாளிகளினது குழந்தைகளைப்"பாதுகாப்பு"எனும் போர்வையில் யுத்தத்துக்கு அணிதிரட்டுவது மற்றும் தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு படைகட்டுவதாகவே இந்தப்"பாதுகாப்பு"அர்த்தப்பட்டிருக்க இதை மக்களுக்கான பாதுகாப்பாகப் பம்மாத்துப் பண்ணும் ஆனந்தசங்கரிகளை மக்களாகிய நாம் நன்றாகவே இனம்கண்டு வருகிறோம்.
"4.அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளைக் களைந்து தமிழ் பேசும் மக்களை ஒருமுகப்படுத்தி பெரும்பான்மை சமூகத்துடன் சமூக கலாச்சார உறவுகளைப் பலப்படுத்துதல்."
மீண்டும் மந்திரத்தில் மாங்காய் பறிக்கிற கதையை விடுகிறான்கள் டோய்!"அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளைக்..."அனைத்து தமிழ் பேசும்...அட பாவிகளே! தமிழில் எத்தனை பிரிவுகளடா இருக்கு?என்ன சொல்ல வாறாங்கள்?தமிழ் பேசும் மக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள அனைத்து வேறுபாடுகளைக் களைந்து... என்று சொல்லிக் கொள்ளும் மொழித் திரணியற்றுத்"தீர்மானங்கள்"எழுதுகிறவன்கள் நம் மக்களின் உரிமைகளுக்காகக் கட்சி கட்டுகிறான்களாம்!
"கரியவன் புகையினும்,புகைக்கொடி தோன்றினும்,
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்,
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது,
ஆம்பியும்,கிழாரும்,வீங்கிசை ஏத்தமும்
ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக்
கழனி செந்நெல்,கரும்புசூழ் மருங்கிற்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும்,கனைகுரல் நாரையும்,
செங்கால் அன்னமும் பைகாற் கொக்கும்,
கானக் கோழியும்,நீர்நிறக் காக்கையும்,
உள்ளும், ஊரலும்,புள்ளும்,புதாவும்,
வேல்போர் வேந்தர் முனையிடம் போலப்,
பல்வேறு குழுஉக்குரல் பரந்த ஓதையும்..."
என்று இளங்கோவடிகள் ஒரு தேசத்தின் வளத்தைச் சிலம்பினில் சொல்வதுபோன்று ஒரு நிலைக்கு இந்த இலங்கை மாறுகிறபோதும் தமிழ்பேசும் மக்களுக்குள் பற்பல வேறுபாடுகள் நிலவியே தீரும். இது வெறும் கட்சியாலோ அல்லது அரசுகளாலோ தீர்க்கத் தக்க செயலல்ல. இதை மாற்றவேண்டுமானால் சமூகத்தை மாற்றியாகவேண்டும்.சமூகத்தை மாற்றுவதென்பது நிலவுகின்ற பொருளாதாரப் பொறிமுறையை அகற்றி அதற்கு மாற்றான பொருளாதாரப் பொறிமுறைகளை உற்பத்தியல் ஈட்டுவதாகும்.இங்கே எந்தவொரு சமுதாயமும்,தனது வேறுபாடுகளையும்,மக்கள் விரோதக் கருத்தியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தைத் தகர்க்கவேண்டுமாயின், அதை முற்றுமுழுதாகப் புரட்சிகரமாக மாற்றியமைக்கும் சமுதாயப் புரட்சியில் ஈடுபட்டாகவேண்டும்.இதுவே புதிய சமூகக் கண்டோட்டத்தையும்,மக்கள் பண்பாட்டையும் கோரிக்கொள்ளும் புதிய பொருளாதாரவுறுகளைக் கட்டியமைத்துத் தேசத்தை புதிதாகப்படைக்கும்.அங்கே மக்களை மந்தைகளாக்கும் ஓட்டுக்கட்சியரசிலுக்கு வேலையிருக்காது.இதைச் சொல்வதாக, ஆனந்த சங்கரியின் தீர்மானங்களைக் கருதிக்கொள்ளும் மனத்தில் மக்களிருப்பதாகக் கனவோடு வலம்வரும் எம் பெருமான் ஆனந்தசங்கரிக்குப் பதவியென்பது மக்களின் மரணத்தில் கொட்டிக் கொடுக்கப்படும் ஒரு பரிசுதாம்-யுனெஸ்கோ விருதுபோல! ஏகாதிபத்தியங்களின் தயவில் எவரெவரோ இடும் பிச்சையில்லைத் தமிழ்பேசும் மக்களின் வாழ்வியல் மதிப்பீடுகள்.அவற்றை அவர்களே தமது உழைப்பினால் தீர்மானிப்பதும்,மாற்றியமைப்பதும் அவர்களது ஜீவாதாரவுரிமையின் வெளிப்பாட்டில்தாம் நிகழுமே தவிர மாறாக எந்தத் தீர்மானங்களாலுமல்ல.மக்களை இன்னும் விட்டேந்திகளாகக் கற்பனையில் உலாவரும் இத்தகைய மோசமான மனிதர்களால் மக்கள் தமது வாழ்வையே இழந்து நடுத்தெருவுக்கு வந்ததுதாம் மிச்சமானது.இதை மாற்றியமைக்கும் எந்த முன்னெடுப்புமற்று ஓட்டுக் கட்சிகளுக்கே இருக்கும் நயவஞ்சகத்தனமான ஏமாற்றுத் தீர்மானங்களை மீளவும் கயிறுவிட்டுக் கருத்துக்கட்டும் இத்தகைய அரசியல் மாபியாக்களை நாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும் ஒரு அவசியத் தேவையாகும்.
பெரும்பான்மைச் சமூகத்தோடா அல்லது பெரும்பான்மைச் சமுதாயத்தோடா,இனத்தோடா அல்லது இனக் குழுவோடா சமூக் கலாச்சாரவுறுவுகளைப் பலப்படுத்திப் பேணவேண்டும்?
இதை முதலில் தீர்கமாக முடிவெடுத்துக்கொண்டு அங்கே நிலவும் பொதுக் குழுமத்தை உறுதிப்படுத்திக் கொண்டு வரலாற்றில் தமிழினமும்,சிங்களவினமும் தற்போதைய நிலைக்கு எத்தகைய பங்களித்துள்ளனவென்ற சமூகப் புரிதலையும் விமர்சித்துக்கொண்டு-எங்கே,எப்படி இத்தகைய முரண்பாடுகள் தோன்றின?இவைகளைத் தோற்றுவித்த சமூகக்காரணியென்ன,இவற்றுக்கும் இன்றைய பொருளாதார நலத்துக்கும்,அதைக் காத்துவரும் அரசுக்கும் என்ன உறவுகள் என்றும் தீர்மானங்களில் மொழிந்தபடி கொஞ்சம் ரீல் விடலாமே?
மனிதவிரோதிகளின் இத்தகைய பொய்மைகளை அகநானூறில் இப்படிக் காணலாம்:
"புலிபுலி யென்னும் பூச றோன்ற
வொண்செங் கழுநீர்க் கண்போ லாயித
மூசி போகிய சூழ்செய் மாலையன்
பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி
வரிபுனை வில்ல னொருகணை தெரிந்துகொண்
டியதோ மற்றிம் மாதிறம் படரென
வினவி நிற்றித் தோனே..."அகம் 48
பத்தம்சக் கோரிக்கையின் உடைப்புத் தொடரும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
19.11.2006
Saturday, November 11, 2006
"மாமனிதர்களும்"...
மடியும் மழலைகளும்!
"மாமனிதர்",
"மாவீரர்",
"பூமிப் புத்திரர்"
"தேசப் பற்றாளர்".
யாரடா இவன்கள்?
மக்களை மாய்க்கும்
மந்தைக் கூட்டமெல்லாம்
மடையர்களின் சபையில்
மதிக்கப்பட்டால்
மக்களின் மரணத்துக்கு மதிப்பு என்னடா??
மரணங்களும் மறைவதாகவில்லை!
மெளனித்திருக்கவும் முடியவில்லை
மனதும் கேட்கிறதாயில்லை
எத்தனை உயிர்கள் இழந்தாலென்ன
எந்தன் தேசம் யுத்தத்தில் கோடியுழைக்கும்
இருந்தும்,
கட்டைவிரலை வெட்டிக்கொடுக்கும்
ஏகலைவன்கள் துணையாய் வாய்க்கப் பெற்ற
துரோணர் இராஜபக்ஷ துடியாய்த் துடிப்பது
தமிழர் பட்டுணி திறப்பதற்காம்
வஞ்சக நெஞ்சுடையோரே!
எத்தனை காலம் எய்திடுவீர்
எம் தலையில் ஏவுகணையும்
ஏய்த்திடும் அரசியல் வஞ்சனையும்
மாய்த்திடும் கொடும் பஞ்சத்தையும்?
பட்டோம் கோடி துன்பம்
ஈழமென்ற கோசமொன்றால்!
ஊரிழிந்தோம் உறவிழந்தோம்
நாடிழந்தோம் அகதியானோம்
அவதிப்பட்டோம்
ஆத்தையும்
அப்புவும் ஆச்சியும் அடுப்பெரிக்க
வெள்ளைத் தேசங்களின் நெருப்பிலுருகினோம்...
எங்கள் மழலைகளும்
அப்பு ஆச்சி
உறவறியா அகதியாக...
சொன்னவன் எவன்டா
தேசத்துக்காய் செத்தான் சொல்!!
பதவிவெறிக்கும்,பகட்டு வாழ்வுக்கும்
பாதிவழியில் தட்டிப் பறிக்கும் பதவிப் போட்டிக்கும்
மரிப்பவனெல்லாம் மக்களுக்காய்ச் செத்தவனென்றால்
இரஞ்சன் விஜெயரெத்தின முதல்
அத்துலத்து முதலியீறாய்
காமினியும் பிரேமாவும் மக்களுக்காய் மடிந்தவரே!
சோரம் போனவ(ள்)ன்கள் சொல்லிய சொற்ப நொடியுள்
சோக்காய்ப் பறந்த சிங்கக் கொடியுள் தோரணைகட்டி
சொகுசு வண்டி,மெய்கும் சிங்களப் படையின்
செல்லப் பாதுகாப்பாய் பவனி வந்து செத்தாலும்
மெல்லச் சொல்லும் ஒரு கூட்டம்:
"மக்களுக்காய் குரல் கொடுத்த" மாவீரன் என்றபடி...
பச்சைத் துரோகிகளின் இச்சையெல்லாம் இப்படியே!
"தன்வினை தன்னைச் சுடும்"தர்மத்தின் விதியுள்
மாய்ந்துபோகினும்"மாமனிதர்"பட்டமொன்றை
மளமளவென்று கொடுத்திடுவான் தேசியத்தின் தலைவனாம்!
மக்களென்ன மண்ணாங்கட்டியென்ன
மரணித்த கையோடு காடாத்திச் சாம்பலையும் ஆற்றிலிட்டு
அடுத்த இழவைப் பார்த்துவொரு நகர்வை
நன்றாய்த் திட்டத்தோடு வகுத்து வை!
கொத்துக் கொத்தாய்ச் செத்து மடியும் செல்லக் குஞ்சுகள்
சூழ்ச்சிகளின் சூத்திரத்தைப் புரிவதற்கில்லை
அந்த நொடியிலும் ஒரு குவளை சோற்றுக்கு அழுதபடியே மாண்டிருப்பார்கள்
அதைச் செய்து முடிக்கும் அரசியலுக்கு நீயோ
அல்லது அவர்களோ பொறுப்பில்லை
மாமனிதர்கள் இல்லைத்தானே
மழலைகள் மண்டையிலிருந்துதிரும் மயிர்தானே?
மக்களென்றால் "மாமனிதரின்"மசிரைவிட முக்கியமா??
மருந்துக்கும் மதிக்காதே, விசாரணைக் கமிஷன் போதும்
ஜனநாயகத்தின் தொட்டில் நாடாளுமன்றம்
நல்ல"மாமனிதர்கள்"மக்களுக்காய் ஓடாய் உழைக்கும்
உலகுக்கு உரக்கச் சொல்லும்
உரிமைக்கு குரல் ஒலிக்கும் கூடம்
ஒருவராய் இருவராய்
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட "மாமனிதர்கள்" அவர்கள்
மடியும்போதும் மக்களுக்காய் செய்த பணி
மக்களுக்கு "மரணத்தைத் தடுக்குமொரு
தக்க அரசியலே!",இல்லை???
தக்க தரணத்தில்
தவறின்றிப் போற்றுதலும்"போடுதலும்"
பொய்யின்றிப் மக்களுக்குப்"பூச் சுற்றுவதும்"
இந்தப் புண்ணிய புத்தனின் பூமியில்
பொழுதெல்லாம் பூஜையென கொள்க!
"மாவீரருக்கு",
"தேச புத்திரருக்கு",
"மாமனிதர்களுக்கு",
"தேசப் பற்றாளர்களுக்கு"
ஆயுதமும்,அதிகாரமும் துணையிருக்கு
அவதிப்பட்டு அழியும் மக்களுக்காய்-
மரணிக்கும் மழலைகளுக்காய்
இந்த மெளனங் கலைத்த
உணர்வுக் கொதிப்பு அர்ப்பணமாகுக!!!
ப.வி.ஸ்ரீரங்கன்
11.11.2006
Sunday, November 05, 2006
மக்கள்,யுத்தம் மற்றும் ஈழம்.
ஜெனிவாப் பேச்சு வார்த்தையின் தோல்விக்குப் பின்பு எந்த முன்னேற்றமும் இலங்கை இனப் பிரச்சனயில் ஏற்படவில்லை-அப்படியேற்படுமென்றெந்த நம்பிக்கையுமில்லைதாம்.இன்றுவரை இலங்கையின் இனமுரண்பாடானது கணிசமான தமிழ் பேசும் மக்களை நாடோடிகளாக்கியதும்,ஒரு இலட்சத்துக்கு மேலான தமிழர்களைப் படுகொலை செய்ததும்,அப்பாவிச் சிங்கள இளைஞர்களை அழித்ததுமே வரலாறாக நிலவுகிறது.இதன் மறைமுக நலனானது ஒருசில பெரும் முதலாளிகளைத் தமிழ் இயக்க வாதிகளுக்குள் தோற்றுவித்ததும் கூடவே ஒரு சிலகற்றுக்குட்டிகளை "தமிழரின் "மேன்மை"உடையவர்களாக்கியும் உள்ளது.சிங்கள தரப்பில் பாரிய தரகு முதலாளிகளையும்,தான்தோன்றித் தனமான அதிகார வர்க்கத்தையும் பெரும் செல்வச் செழிப்பிலாக்கியுள்ள இந்த இனப்போராட்டமானது, சாரம்சத்தில் தவறான பாதையில் சென்றதன் விளைவுகள் நமது முகத்தில் ஓங்கியடிக்கிறது.
புரையோடிப்போன யுத்தம்:
இலங்கையில் மீளவும் யுத்தம் தொடர்கதையாகிவிட்டது!கடந்த காலத்தில் நிகழ்ந்த யுத்தத்துக்கும் இன்றைய யுத்தத்துக்கும் உள்ளடகத்திலும், உருவத்தில் மிகப் பெரிய வேறுபாடு நிலவுகிறது.முன்பு இலங்கைப் பயங்கரவாத இராணுவம் இனவழிப்பைச் செய்யுமொரு இராணுவமாகக் கட்டமைக்கப்பட்டு வந்தது.இன்று அந்த இராணுவமானது தமிழர்களின் அரசியல் முன்னெடுப்பாளர்கள் பலராலும் பயங்கரவாதத்துக்கு எதிரான படையாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களுக்கான பிரச்சனையே என்னவென்றுவுணர முடியாதளவுக்குப் போராட்டம் நடைபெறுகிறது.இந்தப் "பயங்கரவாதத்துக்கு எதிரான"என்ற மொழியானது அமெரிக்கப் பாணியிலானதென்ற கருத்தியில் மெத்தனத்திலிருந்து விடுபட்டு, இலங்கைத் தேசத்துக்குள் நிலவும் சிறப்பியல்புகளை-கூறுகளை மையப்படுத்திய விமர்சனப் பண்பால் நாம் உள்வாங்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
"பயங்கரவாதத்துக்கு எதிரானது"என்றால், இலங்கைச் சமுதாயத்துள் எது பயங்கரவாதமாகிறதென்பதே எம் கேள்வியாகிறது? இந்தக் கேள்வியினூடு நாம் எமது அரசியல் முன்னெடுப்பைப் பார்த்தோமானால் தமிழ் பேசும் மக்களின் அரசியலானது எந்த முன்னெடுப்புமின்றி அநாதையாகக் கிடக்கிறதென்றவுண்மை முகத்தில் ஓங்கியடிக்கிறது!.மக்கள் அன்றாட வாழ்வியல் முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க முடியாது திண்டாடும்போது, தமது உரிமைகள் குறித்தவர்கள் சிந்திப்பதற்கான தார்மீக மனத்திடமும் அவர்களிடத்திலின்றி,அவர்கள் உயிர்வாழும் ஆதாரங்களுக்காக ஏங்கிகிடக்கிறார்கள்.இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களின் குடிசார் வாழ்வியல் பண்புகள் யாவும் இல்லாதொழிக்கப்பட்டுவரும் அரச-இயக்க ஆதிக்கங்களால் மக்கள் தினமும் பலிகடாவாக்கப்பட்டும் வருவது மிகக் கொடுமையானதாகும்.
இந்த நூற்றாண்டின் பொருள்வயப்பட்ட ஊக்கங்கள் யாவும் சாமானிய மக்களின் உரிமைகளைப் பறிப்பதிலும்,அவர்களைப் பன்முகப்படுத்தப்பட்ட கருத்தியல் மற்றும் வன்முறைசார்ந்த நடவடிக்கைகள்(சட்டவாக்கம்,யுத்தம்)மூலமாக அடக்கியொடுக்குவதில் மிக நுணுக்கமாகச் செயற்பட்டு வருகிறது.இது எந்தப் பகுதி மக்களானாலும், அவர்கள் உழைத்துண்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இத்தகைய அளவுகோலுக்கு இரையாவது தொடர்ந்தபடிதாம் இருக்கிறது.இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் மற்றும் தார்மீகப் பலம் இந்த மக்களிடமில்லை.இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பறித்து ஏப்பமிட்டு மக்களைத் தினமும் அடிமைகொள்வதும்,அடக்கியாளத் திட்டமிடப்படுவதும் தொடர்ந்தபடியே இன்றையப் பொருளாதார நகர்வு இடம் பெறுகிறது.
இந்தச் சூழலில்தாம் இலங்கையின் யுத்த மற்றும் அரசியல் நகர்வும்,புலிகளின் போராட்ட நிலைமையும் தமிழ்பேசும் மக்களை அடிமைகொள்ளும் அராஜகத்தைக் கடைப்பிடித்து ஒப்பேற்றப்படுகின்றன!இவைகளை நாம் போலித்தனமான அரசியல் கருத்துகளால் சமப்படுத்தி,அநுமதிப்பது எங்கள் மக்களுக்கான நலனாக இருக்கமுடியாது.காலம் கடந்த அரசியல் விய+கங்கள் எதுவும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தகமையைக் கொண்டிருக்க முடியாது.இந்தவுண்மை நமது தேசிய விடுதலைப் போராட்ட செல்நெறிய+டே நாம் படிப்பினைகளைக் கொண்டிருக்கும் இன்றைய யுத்தகால நகர்வில் வெகுவாக உணரத்தக்கவொரு படிப்பினையாகும்.எனவே நமது மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் இந்தவகை யுத்தங்காளால் நிறைவேற்றப்பட முடியாதென்பதும்,நமது அரசியல் உரிமைகள் வெறும் "போட்டி யுத்தங்காளால்" வென்றெடுக்கும் விடையமில்லையென்பதும் வெளிப்படையாக விமர்சிக்கப்பட வேண்டியதாகும்.அப்படி வென்றெடுக்கப்படுமென்றால் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறும் இந்தத் தீராத யுத்தத்தால் நாம் அரசியல் மற்றும் சமூக வலுவைப் பெற்றிருக்கவேண்டும்.இத்தகைய கண்ணோட்டத்தில் நமது சமுதாயத்தை விழிக்கும் பட்சத்தில் அந்தச் சமுதாயமானது எந்த நிலையில் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டை எதிர்கொள்கிறதென்று நமக்குப் புலப்படும்.
ஒருநேரக் கஞ்சிக்கு இலங்கை அரசிடம் மண்டியிடும் இந்தத் தமிழ் இனத்தால் எந்தவொரு வலுவான போராட்டத்தையும் செய்யமுடியாது!அப்படிச் செய்யும் மக்கள் திரள் போராட்ட அணித்திரட்சியும் அவர்களிடம் இல்லை.வெறுமனவே ஒரு இராணுவ யந்திரத்தை அதனது இன அடையாளத்துடன் அது தம் மக்களின் விடுதலைக்கான "விடுதலைப் படையாக"வர்ணிக்க முடியாது.அல்லது அத்தகைய இராணுவயந்திரத்திடம் ஒடுக்குமுறைச் சிங்கள அரச இராணுவ ஜந்திரத்தை வெற்றிகொள்ளும் புரட்சிகர வேலைத் திட்டம் இருப்பதாகவும் எவரும் நம்பி ஏமாற முடியாது.புரட்சியென்பதை விட்டுவிட்டு,இன்றைய நமது போர் வாழ்சூழலுக்கு மாற்று என்பதென்ன அல்லது நாம் எங்ஙனம் எமது இந்தப் போரழிவுத் தலைவிதையை மாற்றுவதென்று சிந்தித்தாகவேண்டும்.
ஈழமா அல்லது இயல்பு வாழ்வா?
எம் மக்களிடம் இருக்கும் இன்றைய கேள்வி:
"போர் எதிற்காக?"என்பதே.
இந்தக் கேள்வி மிகவும் பலவீனப்பட்டுப்போனவொரு இனத்தின் இருத்தலுக்குரிய கேள்வியாகும்.
இதை மறுதலித்துவிட்டு எந்தக் கொம்பரும் "விடுதலை,தியாகம்"என்று தத்தமது விசுவாசத்துக்குரிய தலைவர்களுக்குக் கொம்பு சீவ முடியாது.
நமது அரசியல் முன்னெடுப்புகளை நாமே தீர்மானிக்க முடியாதவகையில் அந்நிய ஆதிக்கங்களிடம் நமது அரசியல் திட்டமிடல்களையும் அது சார்ந்த விய+கங்களையும் பறி கொடுத்துவிட்ட இந்தப் பயங்கரமான யுத்தச் சூழலில் எமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் "அதிகாரப் போட்டி அரசியல்-யுத்தம்"எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கப்படுமென்று எதிர்பார்க்க முடியாது.இந்தவொரு அறுதியான சமூகச் சூழல் பற்றிய கணிப்பை உறுதிப்படுத்தும் வகையிலான சிங்கள அரசியல் நகர்வு இப்போது எமக்குள் திணிக்கும் கருத்தியல் "வாழ்வதற்கான இயல்பு நிலை"என்பதாகவும்,அதைக் குழப்பும் "புலிப் பயங்கரவாதம்"என்பதாகவும் திட்டமிட்ட வகையில் மக்களின் தேவையை அறிந்து பரப்பப்பட்டு, கருத்தியல் ஒற்றுமை ஏற்படுத்தப்படுகிறது.
இந்த நோக்கத்திலான இலங்கை அரச விய+கம் மென்மேலும் மேல் நோக்கி உந்தப்பட்டு,மக்களின் சுயவிருப்பாக மாற்றப்பட்டும் வருகிறது.இதனால் நமது மக்களின்மீது இயக்கங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த பலாத்தகரமான அதிகாரத்துவ மேலாண்மை மெல்ல உடைபட்டு வருவதும் கூடவே அந்தவொரு சந்தர்ப்பத்தை மக்களே மேலும் வலுப்படுத்தும் தரணத்தில் "தேசிய விடுதலைப் போரை" பிற்போக்கான வகையில் முன்னெடுத்த இயக்கவாத மாயை தகர்ந்து தவிடுபொடியாகும் தரணம் நெருங்குகிறது.இதை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிப் புறச் சக்திகள் மெல்லத் தமது நலன்களை மையப்படுத்திய அரசியற் கருத்தாக்கங்களையும்,அதுசார்ந்த பொருளாதாரத் தாக்குதல்களையும் எமது மக்களின்மீது திணித்து நமது மக்களை நவீனமான முறையில் அடிமை கொள்கிறார்கள்.இத்தகையவொரு நிலையை இலங்கை இனவாத அரசு முன்னெடுக்குமென்பதை நாம் பல முறைகள் கட்டுரைகளுடாகப் பேசியுள்ளோம்.இந்தவொரு மையப் பிரச்சனையில் மக்கள் கிடந்து அல்லலுறும்போது எந்தத் தியாகமும்,தீரமும் கருத்தில் கொள்ளப்படாது போகும்.இந்தச் சூழலே இலங்தை மற்றும் அந்நியச் சக்திகளுக்கு மிக உறுதியானவொரு அரசியல் நகர்வையும்,அந்த நகர்வுக்கேற்ற வகையான கருத்தியல் வெற்றியையும் தமிழ்பேசும் மக்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது.இதை இனங்காணமுடியாதவொரு தரித்திரமான அரசியல் வெறுமையோடு நமது "இனவிடுதலைப் போராட்டம்"தொடர்ந்து யுத்தத்துள் மூழ்கடிக்கப்பட்டு,அதன் அரசியல் விய+கம் முற்று முழுதாக முடமாக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களின் மொத்த எண்ணவோட்டமானது ஒருகிணைந்த ஒரு அமைப்புக்கு விசுவாசமாக இருப்பதற்குச் சாத்தியமில்லை.தொடர் துன்பங்கள்,பசி,பட்டுணி,சாவு,பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில்(உயிர் வாழ்வதே சாத்தியமில்லாத தேசத்தில் அதைச் சாத்தியப் படுதும் அவா)உருவாக்கும்.இப்போது விடுதலை,சுதந்திரம் என்பதெல்லாம் மக்களின் வாழ்வோடு சம்பந்தப்படாத விஷயமாக மக்களே உணரத்தலைப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.இதை இனம் கண்டவர்கள் எமது மக்களின் எதிரிகளே!நம்மைச் சுற்றி மதில்களை உருவாக்கிய விடுதலை இயக்கங்கள் நமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாது அவர்களையே ஆயுதப் பலாத்தகாரத்தால் ஒடுக்கித் தமது ஆதிகத்தை நிலைப்படுத்த முனைந்த இந்தக் கேடுகெட்ட அரசியலுக்குப் புலிகளையோ அல்லது மற்றைய இயக்கங்களையோ காரணம்காட்டிப் பேசுவதைவிட,நமது மக்களின் அரசியல் அறிவு நிலை சார்ந்து சிந்திப்பதே சாலச் சிறந்தது.எமது சமூகத்தின் உயிர்த்திருப்பே மாற்று இனத்திடம் அல்லது மாற்றார் தயவில் பொருளாதார நலன்களைக் கனவுகண்டது.இது முற்றிலும் சுய விருத்திக்கான எல்லாவகையான கதவுகளையும் இறுக மூடிவிட்டு மாற்றாரில் தங்கி வாழும் ஒரு உதவாக்கரை,கையாலாகாத இனமாக நமது மக்களை மெல்ல உருவாக்கிய சிங்கள மற்றும் அந்நியச் சக்திகள் இன்று நமது மக்களைப் படு குழியில் தள்ளிவிட்டுப் புலிகளைப் பயங்கரவாதிகளாக்கித் தமது வெற்றியை அரசியல் ரீதியாகப் பெற்று நிலைப்படுத்துகிறார்கள்.இதைத் தடுப்பதற்கு வக்கிலாத ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே செல்கிறது.இது எந்தத் தரணத்திலும் இனியொரு கூட்டு ஒத்துழைப்பாக மாறி மக்களிடம் முனைப்புப் பெறுமென்று எவரும் பகற்கனவு காணமுடியாது.
இங்கேதாம் "ஈழம்"குறித்த கனவுகள் தகரத்தொடங்குகிறது.இத்தகைய தகர்வில் மக்களே தமது உறுதியானவொரு நிலைப்பாட்டைத் தமது வாழ்வியல் நம்பிக்கைகளுடாகச் சாதிக்கும் சமூக அபிலாசையாக இது விருத்தியாகி போருக்கு அகப் புறமாக எதிர்ப்பிடும் தரணம் தோன்றுகிறது.இது வலியது!இதைத் தடுத்து மக்களின்மீது மீளவுமொரு போர்ச் சுமையைத் திணிக்கும் இயக்கவாதத் தந்திரங்கள் நிலைத்த வெற்றியை அடைவதற்கில்லை.இதுவே ஈழக் கோசத்தின் பொருள்வயப்பட்ட தோல்வியாகவும் கருத்தியல் தளத்திலான தகர்வாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் உட்புறத்தே பாரிய வெறுப்பாகவும் நிலவிக்கொண்டிருக்கிறது.இதுதாம் இன்றைய உண்மையான நிலைவரம்.இதைமீறித் தமிழ்பேசும் மக்கள் அணித்திரட்சியடைந்து ஒரு "வெகுஜன"எழிச்சியை செய்வதற்கில்லை.காலம் கடந்த ஞானத்தால் எந்தப்பலனுமில்லை.மக்களை மடையர்களாக்கிய மந்தைத்தனமான போராட்ட முறைமகள் அந்த மக்களாலேயே தோற்கடிக்கப்படும் தரணம் நெருங்கி வருவதைக்கூட அறிய முடியாத வகையில்"ஈழக்கனவு"ரீல்விட்டுக் கொண்டிருபதுதாம் இன்றைய பெரிய அவலம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
05.11.2006
Wednesday, November 01, 2006
நளாயினி தாமரைச்செல்வன்:உயிர்த்தீ.
"குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை
பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉம்
கல்லக வெற்பன்" - நற்.36 1-4
முன்னொரு காலத்தில்...பகிடிக்குப் பாடியவொரு கவிதையில் சுவைப்பதற்குப் பாவையின் அழகே முதலிடமாக...எனினும் மனதில் உரசி விரியும் ஒரு அற்ப உணர்வாக இந்த நெடி பண்டுதொட்டு வீசியபடிதாம் இருக்கிறது!இந்த நெடி மிகப் பழமையானது.அதன் சாரம் உயிரினது இருப்போடு உரசிக்கொண்ட அகாலப் பொழுதில்தாம் அது"காதல்"என்ற கோதாவில் நம்மிடம் அறிமுகமாகிறது.
"கவிழ்மயிர் எருத்திற் செந்நாய் ஏற்றை
குருளைப்பன்றி கொள்ளாது கழியும்
சுரன்"-ஐங்.397 1-3
எனக்குத் தெரிந்த இந்தச் சமாச்சாரம் வெறும் புணர்வின் உந்துதலால் எப்பவோ தோன்றி என்னைத் தாழ்த்தியபடி,தடவியபடி,எனது காலை வாரியபடி மெல்லக் கொல்லும்!எனக்கும் அப்பப்ப நேசிக்கத் தெரிந்திருக்கிறது.நான் எனக்குள் கும்மியடிப்பதற்காகக் "காதலித்த"வரலாறு மிகக் குறுகியது.அந்தக் குறுகிய பொழுதில் எனக்கு நானே எமனாக விரிந்ததும் உண்டு.ஒரு அப்பாவியாய் வாழ்வில் குறுக்கிட்டவளை வசமாக வதைப்பதில் நான் எமனுக்கு நிகரானவன் என்பது அந்தக்"காதலின்"மறு பக்கமாய் நிழல் பரப்பிய இன்றைய பொழுதில் ஒருசில "காதற் கவிதைகளை"நளாயினி தாமரைச் செல்வன் தந்திருக்கிறார்!
"நங்கூரம்"
"உயிர்த்தீ"
நளாயினியின் முதற் தொகுப்பு நங்கூரம்!அது கடலிலிட்ட நங்கூரமாகவே இருப்பதில் வியப்பில்லை.அங்குமிங்குமாகவே படித்துப்பார்த்தேன்.பிடித்ததென்று கூறுமளவுக்கு அவரது உணர்வுகள் எதுவும் என்னை ஒன்றுஞ் செய்யவில்லை.ஆரம்பக் காலத்து எழுத்துகளுக்கு எப்பவும் இந்தக் கதைதாம்.எனினும் அவை பேசுவது படிமங்களில்பட்டுச் சிந்திப்பதன் உணர்வு தரும்"ஏற்ற இறக்கங்களாக"இருப்பதும் சாத்தியமானதே.
"உன்னை என் விழிகள் கண்டதும்
என்னமாய்ப் படபடக்கும்
அதனோடு கூச்சமும்,காதலும்
என்னுள் பவனி வரும்.
எனக்கு அருகில்
நீ வரும் போது
பூகம்ப அதிர்வு..."-நங்கூரம்,நளாயினி.
காதல் என்பது காமத்தின் நெருக்குதல் தரும் தரும அடிதாம்.அதைமீறி அதற்கென்றொரு மண்ணுமில்லை.பச்சைக் கருக்கு மட்டையால சாத்தும் பருவக் கோளாறுக்கு புலம்பித்திரிதல் "எதிர்பால்"எழும் வினையோடு அலைந்து,சல்லாபத்துக்கான தோலின் தேடுதலோடு வண்டிகட்டி"காதற் சுமை"காவித் திரிவது மனித மொழிகளுக்குள் பல்வினைப் பயனாய்க் கிடந்தலைகிறது.
"காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றான்மதம் போலப்
பாணியு முடைத்தது காணுநர்ப் பெறினே" குறுந்தொகை.136
எந்தக் காலத்தில் நின்றாலும்,நிலைத்தாலும் சிந்தனைத் தொடர்ச்சிக்கு ஒரு குறுக்கு மதில் கட்டிக்கொள்ள முடிந்திருக்கா?எதைப்பற்றியுரைப்பினும்-"இது"பற்றியுரைப்பதும் சற்றுக் கடுப்பாகித் தணிவதற்கானதாக மேவுவது சாலப் பொருந்தும்-இடம்- எனக்கு சற்று அதிகமானதாகப் படும்போது, நான் காதல் என்றொரு கதையைக் கிளப்பி விடுவதுண்டு!அதுவும் சற்றுச் சிக்கல் நிறைந்த பருவத்தைக் கண்டால் "பட்டபாட்டுக்குக் கெட்டகேட்டுக்குப் பாயும்" உணர்வுக் கொதிக்கு நான் படும்பாடு அந்த"நாய்ப் பாடு",அப்படியொரு சக்கரத்தில் சுற்றிச் சுற்றி வரும் செக்கு மாட்டுச் சூழலை உடைத்தபடி நளாயினி எழ முனையும் தொகுப்பாக "உயிர்த்தீயை"படித்தபோது உணரத்தக்கதாக இருந்திருக்கிறது.
"மைவளம் பூத்த மலரேர் மழைக்கண்ணார்
கைவளம் பூத்த வடுவொடு காணாய் நீ
மொய்வளம் பூத்த முயக்கம்யாம் கைப்படுத்தேம்
மெய்வளம் பூத்த விளைதகு பொன்னணி"-பரி.1816-19
பரிபாடலென்ன பண்டையப் பாட்டியின் பிதற்லென்ன எல்லாம் அந்தத் திசையை மேவுவதற்காகத் தெய்வத்தின்மீது "காதலாகிக் கசிந்து"தத்தம் காமத்தைக் குறியீடாக்கியது மட்டுமல்ல அதை வெளிப்படுத்துவதிலும் ஒரு புரட்சியைச் செய்து காட்டினாள் ஆண்டாள் என்ற சீமாட்டி.சிரித்து,இரசித்து,சுவைத்துத் தமிழை ஆண்டாள் அவள்.நளாயினிக்கு உரிய காலம் இப்போது தோன்றிவிட்டது.பெண் தனது உணர்வுகளை அசலாக வெளிப்படத்தும் ஒரு காலத்தைக் கனிய வைத்த மானுட வளர்ச்சிப்போக்கு இத்தககைய உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு ஆண்டாள்களை உருவகித்துள்ளது.இத்தகையவொரு சந்தர்ப்பத்தை எவரும் வருந்தித் தேடியதில்லை.எனினும் இதுவும் மிக முக்கியமானவுணர்தானே!இ·தின்றி உண்டோ உலக உய்வு? "காதல் காதல்,இல்லையேல் சாதல்,சாதல்"என்றெல்லாம் நம்மட ஆட்கள் பாடிச் சென்றுள்ளான்கள்.இப்படி எக்கச்சக்கமான வீராதி வீரன்கள் எல்லாம் பாடிய நிலையில் நாமும் நளாயினியின்"காதற் கவிதைகளோடு"ஒன்றியும் ஒன்றாமலும் ஓரத்தில் நின்றபடி கொஞ்சம் உரசிப் பார்ப்பதும்,துரத்திப் பிடிப்பதும் சாத்தியமே.
நளாயினி தனது மனதைக் காதலோடு கண்டடைந்த பொழுதொன்று கவிதையாகிறது.
"...இப்போதாவது
கண்டெடுத்தேன!!
காமக் கிளர்வுகள் ஏதுமின்றி
உன் பாதச் சுவடுகளையும்
நினைவுகளையும்
சிரிப்பொலிகளையும்
துன்பங்களையும்
தாங்கியபடி
நட்பா!?காதலா!?
பிரித்துப் பார்க்க முடியவில்லை..."-உயிர்த்தீ.பக்கம்:8
எப்படியோ நளாயினிக்கும் இந்தப் பிரச்சனை வந்துவிட்டது.
நட்பு-காதல்!காதலென்றால் அதற்கு"எதிர்பால்"எழும் வினையுண்டென்று உணரத்தக்கவொரு சூழலில்தாம் இந்தப் பிரச்சனை முகத்தில் ஓங்கியொரு உதைவிடுகிறது.சும்மா நட்பு,காதலென்று உருட்டிப் புரட்டியொரு ரீல்விடுவதில் எந்தப் பலனுமில்லை.எனக்குக் காதலென்றால் அது எப்பவும் உடல் சார்ந்த"எதிர்பால் வினை"தாம்.இப்பவெல்லாம் நல்ல நல்ல மெழுகுத் தோல்களில்-அதுவும் பொன்னிறத் தோல்கள் படுத்தும்பாடு பெரும்பாடு!தமிழ்ச் சினிமாவின்"பெண்"என்னையெல்லாம் உருட்டிப் புரட்டியெடுத்து எச்சிலூறும் பொழுதுகளுக்குள் தள்ளி அவமானப்படுத்துவதும் மனசில் உரசும்போது,மீளவும்"காதலா,நட்பா"என்ற கேள்வியெல்லாம் நரகலோகத்துக்குரியது.
"மக்கள் பயந்து மனை அறம் ஆற்றுதல்
தக்கது அறிந்தார் தலைமைக் குணம் என்ப
பைத்தரவு அல்குல் படிற்றுரை யாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றம் ஒன்றுஇன்றே."-வளையாபதி
எல்லோரும் நல்ல மனையாளோடு வாழ்வது...என்று பாடும்போது,நல்ல மனையானோடு(ஆண்பால்)வாழ்வதுபற்றி எந்தப் பெண்ணும் பாடித்தானாகவேண்டும்.அந்தக் காலத்துச் சுப்பர்களெல்லாம் தங்கட மனசில"பெண்டிர்களை"த் தகவமைத்தபோது"கொடியிடை,இஞ்சி இடுப்பழகி,நூலிடையாள்"என்று கக்கூசுக்குள்ளிருந்து யோசிச்சபோது,இந்தப் பெண்களும் தங்கட இரசனைகளை வலுவாகச் சொன்னாதாகச் சரித்திரமில்லை.கோகுலத்துப் பசுக்களெல்லாம் கோபாலனின் பேரைக்கேட்டே பலபடி பால் கறந்தபோது, நமது தேசத்துப் பெண்களெல்லாம் தத்தமது கோபாலர்களின் பெருமைகளைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
"...உன் அழகு
உன் எழில்
உன் நடை
உன் தோற்றம்
உன் மதிநுட்பம்
அப்பப்பா
இன்னும் இன்னும்
எப்படி உன்னில் மட்டும்?..."-நங்கூரம்,பக்கம்:37
எல்லோரும் சொன்ன "பெருமைகளில்"உருவமைத்த ஊனங்களில் மிகுதி இன்புறல்"காதலிக்கும்"நளாயினிக்கும் சாத்தியமாவது புரிந்துகொள்ளத் தக்கதே.நமது வாழ்சூழலை மீறித் திடகாத்திரமாக எழுந்து உணர்வுகளைப் பகிர்வதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும்.அதை நளாயினி உயிர்த்தீயில் இப்படிச் சொல்கிறார்:
"உன் அங்கவஸ்த்திரம் கொண்டு
என் உயிர் பறித்தவனே!!
வாத்தியக் கருவி
ஒன்றைக் கண்டெடுத்தேன்.
அடடே!!
பார்த்துக் கொண்டிருக்கவே
எனக்குள் எத்தனை நாதம்."-உயிர்த்தீ,பக்கம்:48
கவிதையை வாசித்துவிட்டு,கொஞ்சம் கற்பனையை விரியவிட்டால் இரசவாதம் ரொம்பக் கறாராகவிரியும்!ஆனால் இது அப்படியல்ல.நளாயினியின் குடும்பம் இசைக் குடும்பம்-இசைக்கும் குடும்பம்!அவரால் கண்டெடுக்கப்பட்ட வாத்தியக் கருவி எதுவென்று பெரிதாக யோசிக்கத் தேவையில்லை.
இப்போதெல்லாம் காதலென்பதை தமிழ்ச் சினிமா மொழியில் சொல்வதைத் தவிர வேறுபல கூறுகளைப் பேசமுடியாதுள்ளது.தமிழ்ச் சினிமாவில் ஒரு துண்டு துணியோடு ஓடவோட விரட்டிப் பிடித்து,பிசைந்தெடுக்கப்படும் நாயகி "உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு"என்று பிரக்டிக்கலாகாச் சொல்லும்போது,நாமும் அவளின் பொக்கிளின்(தொப்புள்) அழகோடு சங்கமித்து,நம்மை வருத்தும்போது-
"மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகை,அவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பல பல யோனிகள்
அற்றா யுழலும் அறிதற்கு அரிதே."-வளையாபதி.
இப்படி வளையாபதியில் பாடுகிறதையும் கொஞ்சம் யோசித்துக் கிடக்கத்தாம் வேண்டும்.ஆனால் நளாயினி காதலிப்பதின் சுகத்தையும்,வலியையும்-தன்னைப் புரிவதையும்,உணர்வதையும் உயிர்த் தீயில் சொல்லும்போது அதையும் செவிகொண்டு கேட்பதில் நான் எதையும் இழப்பதற்கில்லைத்தாம்.
"என் உடலுக்கு
உயிர் தா.
என் இதயத்திற்குச் சுவாசம் தா.
என் நரம்புகளுள்
உணர்வு சேர்.
என் விழிகளுக்கு
ஒளியூட்டு.
எனக்குள் கவிதை
ஊற்றாய் வா.
நீ தந்த உயிர் மூச்சு
என்னை விட்டுப் பிரியும்வரை
உன்னையே என் கவி
தொழுது நிற்கும்..." என்று எழுதிய நளாயினிதாம் இப்படியும் எழுதுகிறார்:
"என் எதிர்பார்ப்புகள் எல்லாமே
தொலைந்து போவதாய்.
கல்லெறிந்தே கொல்லும் மனிதர்
வார்த்தை அம்புகளால்.
என் இதயத்தால் வழிகிறது குருதி...
...என்னைச் சூழ இருந்த
நண்பரைக் காணவில்லை.
அவர்களின்(ஒருமை இங்கே பன்மையுற்றிருப்பினும்...)சாயலில்
மர்ம மனிதர் பலர்.
என்னை நரபலி எடுக்கத் துடிக்கும் அவசரம்..." - உயிர்த்தீ,பக்கம்:122
பறந்து பறந்து காதலைப் பாடினாலும் நாம் இந்தச் சமூதாயத்துள் கால் பதித்தேதாம் இருக்கிறோம் என்பதையும் நளாயினி புரிந்தே இருக்கிறார்.இந்தப் புரிதல் அவரிடம் நல்ல படைப்புகளைக் காலப்போக்கில் எதிர்பார்க்கத் தூண்டுகிறது.
"விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வாரி அல்குற் குறுமகள்
தோள் மாறு படூஉம் வைகலோ டெமக்கே."-(குறுந்தொகை:101)
ப.வி.ஸ்ரீரங்கன்
01.11.2006
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின்...