முனியன்,உம்மாண்டி,புதியோன்:பெடியன்களை நோக்கி...
இன்றெமது காலச் சூழலானது மெலினப்பட்டவொரு கருத்தியற்றளத்தையும்,புரிதற்தடுப்புக்கான மாறாட்டங்களையும் கொண்டிருக்கிறது.இதன் பன்முகத் தாக்குதலானது பின் தங்கிய சமூகச் சக்திகளிடம் மிகவும் மோசமாகவொரு உள-உடலரசியல் வகைப்பட்ட 'மாதிரி பரப்புரைகள்'மலிந்து கிடக்கிறது.இந்தக் கருத்தியற் தளத்தின் எல்லையிலிருந்துகொண்டு மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை அணுகுவது மிகப் பெரும் ஆபத்தானது.இதை முன் நிபந்தனையாகக் கொள்வோமானால் கருத்துகளின் மைய வலுவானது அந்தந்தச் சமுதாய இருப்பை ஆட்டிப் படைக்கும் அனைத்துக் கூறுகளையும் மட்டுப்படுத்துவதும்-புரட்டிப்போடுவதும் உணரப்படும்.எனவே இதன்பாலான புரிதல், மீள் கருத்தியற் சுதந்திரம்,மக்களாண்மைத்துவ திரட்சிப் பெருங்கூட்டக் கருத்தாளுமை,பன்மைத்துவ வெளிபாட்டுச் சுதந்திரம்போன்ற ஜனநாயகக் கூறுகளையும்,அதன் விளைவாகவெழும் தெளிந்த அறிவுக்கட்டமைப்பையும் வலியுறுத்தி நாம் செயலூக்கம் பெறவும்-மாற்றுச் சிந்தனைக்கும் வழிதோன்றும்.
எனவே கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதும் அதன் வாயிலாகவொரு நீண்ட வலுவுள்ள சிந்தனைக்கான தோற்றுவாயைத் திறப்பதும் சமுதாய வளர்ச்சிக்கும்,அதன் இருப்புக்கும் அவசியமானது.இந்தப் பொறுப்புணர்வை நோக்காகவுணர்வோமானால் எமது செயற்பாடுகளில் அறிவைப் 'பெறுதலும்-வழங்குதலும்' சமூக சீவியமாக உருப்பெறுவதும்,அதற்காக நீண்ட திட்டங்கள்-படிப்பு வட்டங்கள்,செயற்கூட்டு முன்மாதிரிகள் தோன்றிக் கொண்டேயிருக்கும்.இந்த மாதிரியைக் கொண்டவொரு கூட்டு வடிவமே வலைப் பதிவுகளும்,அதை இணைக்கும் தமிழ் மணமும்.இந்த எல்லையை ஏற்றுக்கொண்டோமானால் இதன் அளப்பெரிய பயன்பாடும்,சமூகப் பொறுப்பும் மனித மனப் பரப்பில் விசாலாமானவொரு புரிதலையும்,பொறுப்புணர்வையும் தோற்றுவிக்கும்.இந்த வெளியில் உலாவரும் வாசகர்-வலைப்பதிவாளர் தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும்,கருத்துக்கும் நீண்ட நிதானிப்பையும்,கடப்பாட்டையும் இலகுவாகக் கண்டடைவார்.இதுவே வெளிப்பாட்டூடகங்களின் இயக்கப்பாடாகும்.
இங்கு சமீப காலமாக நடந்துவரும் செயற்கைத்தனமான கருத்துருவாக்க முயற்சிகள்,காழ்புணர்வையும்,மந்தப் புத்தியையும் உருவாக்குவதில் நம்மைக் கடைக்கோடி நிலைமைக்குள் தள்ளியுள்ளது.ஏலவே நம்மிடமிருக்கும் பிரபுத்துவ எண்ணக் கலவைகள் தத்தமது வீராப்புக்களையும்,தனிநபர் வாதங்களையும் அபரிமிதமாகத் தூண்டுகிறது.இதன் பலாபலன் கூட்டுணர்வு-தோழமையுணர்வு,நட்பாடல் வலுவிழந்து வம்புபண்ணுவதின் உச்சக்கட்டமாக,அநாமதேயங்கள் உருவாகிறார்கள்.இந்த வகைக் கூறு, மக்கள் சமூகத்துள் மலினப்பட்டுக் காணும்போது அந்தச் சமுதாயம் குறைவிருத்திச் சமுதாயமாகவும்,அதன் சமூக உளவியல் குறுகிய பண்பாட்டுணர்வையும் உடையதாகப் பார்க்கப்படுகிறது.இத்தகைய சமுதாயத்தின் உறுப்பினர்கள் நாளாந்தச் சமூகவாழ்வில் தன்னைப்பிணைத்திருப்பினும் அவர்கள் ஒற்றை மனிதர்களாகவும்-மனப்பிறழ்வுக்கு உட்பட்டவர்களாகவுமிருப்பார்கள்.இவர்களிடம் பலமான சமூகவலு இருப்பதற்கான எந்தச் சாத்தியமும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கும்.
இதைத்தாம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டுக் கல்வியமைப்பு முறைமையும்,காலனித்துவக் கல்விப் பாடநெறிகளும் தந்துகொண்டிருக்கின்றன.
இதை உடைத்தெறிந்து சமுதாய ஆளுமையையும்,மக்களாண்மையும் நிறுவுதல் ஒரு படிநிலை வளர்ச்சியாகும்.இவ்நோக்கு நிலையிலிருந்துகொண்டே நாம் கருத்தாடலுக்குத்தயாராகிறோம்.இங்கு 'பெடியன்கள்' பதிவில் உம்மாண்டியிட்ட பதிவிற்கான எதிர்வினையாக நாம் முன்வைப்பது 'பொறுப்புணர்வையும்-கூட்டுணர்வையுமே'.இதன் தாத்பரியம் நமக்குள் நிலவுகின்ற காழ்புணர்வுகளைக் கலைத்துவிட்டு,உடைந்துபோன எமது சமூகசீவிய ஒழுங்கிற்கும்-பெருவாழ்விற்கும் வழி சமைக்கும் எழுத்துக்களையும்-நோக்கங்களையும் முன்வைப்போம்.
இங்கெவரையும் கையை நீட்டி'நீயே குற்றவாளி' நான் மட்டுமே தங்கக்கம்பி' என்றுரைக்கவில்லை.பெடியன்களின் வருகைக்குப் பின் அநாமதேயங்கள் உருவாகிவிட்டார்களெனும் தொனி நமது கட்டுரையில் இருப்பதை நாம் உணர்கிறோம்.அதை மறுக்கவில்லை.ஆனால் தங்களின் அபரிதமான யுக்திகளின் பின்பு ,அக்கருத்துக்களைக் காவிவரும் பின்னூட்டங்களின் வலுவைத்தாம் அதில் கூறியிருந்தோம்.
இங்கு யாரையும் கழுமரத்திலேற்றும் மனப்பரிமாணம் நம்மிடமில்லை. அத்தகைய எண்ணவோட்டத்தை எமது கட்டுரையாற்றுமானால் நாம் மிக வருந்துகிறோம்.அத்தகைய நோக்கத்தோடு நாம் ஒருபோதும் காரியமாற்றுபவர்களில்லை.மக்களின்-நமது வாழ்வின் சீர்கேடுகள் ஒழிந்து நிம்மதியானவொரு அகப் புறச் சூழலைக் கனவு கண்டுவரும் நாம்,அதற்காக தோழமைகளையும் கூட்டுவாழ்வாதாரத்தையும் தேடியலைகிறோம்.
இங்கு நாம் முழுமையானவொரு புரிதலையும்,அதனூடாகவெழும் மனிதப் பலத்தையும்,சமூகவெழிச்சியையும் கனவு காண்கின்றோம்.இதன் வாயிலாக நமது பாரம்பரிய பூமியில் விலங்கொடித்த வாழ்வையும்-துய்ப்பையும் நிறுவ முனைகிறோம்.
இங்கு எல்லோருமே ஒரு தோழமையோடு-நட்புணர்வோடு உறவாடுகிறோம்.பல்வகைக் கருத்துக்களை நாம் கொண்டிருப்பினும்,மனிதவுணர்வுகளுக்கு முக்கியமளித்து அவற்றைத் தாண்டி மனிதர்களை நேசிக்கிறோம்.இவ் உயரியமதிப்பீடுகளேதாம் நமது வாழ்வையும்-வலுவிழந்த அறிவியற்றளத்தையும் மீளுருவாக்கஞ்செய்து நம்மையும்,நமது இருள்சூழ் நிலைமைகளையும் செப்பனிடும்.எனவே கூடுதலும்,குழம்புதலும் மீளவும் கூடுதலும்... தவிர்க்கமுடியாத விதியாகச் செல்கிறது.
தோழமையுடன்
ப:வி.ஸ்ரீரங்கன்
29.06.05
வூப்பெற்றால்.