மனோ கணேசன் வருந்துகிறார்-நியாயமானதுதாமா?
" மனிதர்கள் உன்னதமாகவிருக்கவேண்டும்
கருணை நிறைந்ததும் மற்றும் சிறப்புமாகும் இது.
இந்தவொன்றே அவர்களை
மற்றெல்லா உயிரினத்திடமுமிருந்து வேறுபடுத்திக் காட்டும் ." -Goethe
[„Edel sei der Mensch,
hilfreich und gut!
Denn das allein
unterscheidet ihn
von allen Wesen,
die wir kennen.“- Goethe]
இங்கு திரு.மனோ கணேசன் அவர்கள் தொட்டிருக்கும்-சுட்டும் பிரச்சனைகள் கடந்த 20 வருடங்கட்கு முன்னமேவுணரப்பட்டது!புலிவழிப் போராட்டமென்பது புதிய இராணுவக் குடியேற்றங்களைச் செய்யுமென்பதை யாழ்"இடப் பெயர்வோடு"அதிகமாகவழுத்திச் சொன்னோம்.50 ஆயிரம் சிங்கள இராணுவத்தினர் காலவோட்டத்தில்50 ஆயிரம் குடும்பங்களை அமைப்பதும்,அதன் வழி இராணுவக் குடியிருப்புகள் குடும்பங்களாகிக் குடிசார் இணக்கத்துள் வரும்போது அவை ஒரு இனத்தினால் விடப்பட்டு,பாழாய்ப்போன வாழ்விடங்களுக்குள் உள்வாங்கப்படும்.அப்போது,சிங்களமயப்படுத்தலது விருட்ஷம் நமது முகத்தில் ஓங்கியறையும் என்றாகச் சொல்லியே "தமிழீழப்போராட்டம்"வழி தந்துரோபாய இடப்பெயர்வு-தள மாற்றமெனப் புலிகள் செய்த போராட்டத்தைக் குறித்து விமர்சனம் வைத்தோம்.
சிங்கள இராணுவம் கூலிப்படையாகவிருந்த 80 இன் ஆரம்பப்பகுதிகளுக்குள்"தமிழீழப் போராட்டக்காரர்கள்"தம் போராட்டம் வெகுவாகவுயர்கிறது!அங்கே,தமிழ்க் குடியிருப்பு-கிராமம்,நகரம்,மாவட்டமென நகர்ந்த புலிவழி இராணுவத்தாக்குதல்கள் மக்களைக் குடிப்பரம்பலிலிருந்து சிதறடித்துக்கொண்டது-கொன்றது!உயிர்காத்து ஓடவைத்தது.
இராணுவமானது முகாமை விட்டுக் குடியிருப்புகளுக்குள் நுழையவும்,அங்காங்கே உறுப்புத் தளங்களை அமைக்கவும் ஒத்திசைவாகவிருந்த இந்த "ஈழப்போராட்டமானது"தமிழ்ச் சமுதாயத்தின் குடிசன மதிப்பீட்டையும்,அவர்களது வாழ்விடங்களையும் ஒருபோதும் கணக்கெடுத்ததே கிடையாது!
இதன் உச்சம்: "ஒரு தமிழன் உயிருடன் இருக்கும்வரை போர் தொடரும்,விழ விழ எழுவோம்"
என்று கதை விட்டவர்கள்,தாம் எந்தக் காட்டுக்குள் இடம் பெயர்கிறார்களோ அதுதாம் தமிழர்களது வாழ்விடம்-வலயம் என்று மக்களையும் துரத்தி அடித்துத் தம்மோடு அழைத்துச் சென்றனர்(இதைத் தட்டிக் கேட்டால், " இதுதாம்மக்கள் போராட்டம்.மக்கள்தாம் புலிகள்,புலிகள்தாம் மக்கள்" என்று படம் காட்டினார்கள்!).யாழ் இடப்பெயர்வும் அப்படியேதாம் நிகழ்ந்தது. எனினும், சில மாதங்களிலேயே கணிசமான மக்கள புலியிடமிருந்து தப்பி;, இராணுவம் தங்கிய-பிடித்த யாழ்ப் பாணத்துக்குள்ளே தமது இயல்பு வாழ்வை ஏற்படுத்தலாகினர்.இத்தகைய மக்கள் புலிகள் வன்னிக்குள் "தமிழீழ அரசு அமைத்து ஆட்சி" நடாத்தியபோது தமக்கும்,இதற்கும் சம்பந்தமில்லாமலே துண்டுபட்டு வாழ்ந்தனர்.இது முதல் வெற்றி அரசுக்கு!மெல்லக் குடியேற்றம்,கூடிக் கலத்தல்,மணவழி ஒன்றித்தலென தமிழ்த் தேசியவின அடையாளமெல்லாம் மெல்லத் தகர்ந்தன(இனக் கலப்பும்,ஒன்றிந்துப் போதலையும் நான் வரவேற்பேன்.வரலாறு பூராகவும் மனிதர்கள் கலந்து போயினர்).
இத்தகைய தருணத்துள்,அரசோடு ஒத்துழைத்த தமிழ்க் குழுக்கள்,பிளவுபட்ட புலியுறுப்புகள் யாவும் ஒரு புதிய இலக்காகக் கண்டடைந்த பிரதேசரீதியான பிளப்பு ஏலவே இந்திய-அமெரிக்க விருப்ப அரசியல் வியூகமாகவிருந்தபோது அதை அவர்கள் இத்தகைய தமிழர்வழி மிக நேர்த்தியாக அரசிலாக்கினர்.இதன்வழி , "கிழக்கு-வடக்கினால் ஒடுக்கப்படுவதாகப்பாடிப்" பிளவை அரசியல்ரீதியகச் சட்டமாக்கினர்.இஃது, தமிழ்பேசும் சிறுபான்மை இனத்தின் இதயத்தைப் பிளப்பதென்பதும்-இருப்பை அசைக்குமென்பதும் அனைத்துக் கிழக்கு வாதிகளுக்கும் தெரியும்.எனினும்,தமது வருமானங்கட்காகத் தமிழர்களது தலையிற் நெருப்பை அள்ளிக் கொட்டியதுமல்லாமற் முழுமொத்த இலங்கைச் சிறுபான்மை இனத்துக்குமே அது கொள்ளிக் கட்டையாகுமென அவர்கள் புரிந்திருந்தும் தமது நல்வாழ்வுக்காக அதைப் புறந்தள்ளினர்.எதிரி,ஒரு கையில் ஆயுதத்தையும்,இன்னொரு கையில் அரசியல் வியூகத்தையும் வைத்துச் செய்த சாணாக்கிய தந்திரத்துள் பலியானவர்கள் முழுமொத்த இலங்கைச் சிறுபான்மை இனங்களே.
இவர்களது இன்றைய கட்சி அரசியலானது மீளவும் சிங்கள மயப்படுத்திய சமூக அசைவாக்கத்துள் சட்டரீதியான உறுதிப்பாட்டையும்,அதற்கான தார்மீக நியாயத்தையும் சிங்கள அரசுக்கு உறுதிப்படுத்துவதும் அதுசார்ந்த இயக்கத்துள் இலங்கையில் பெரும்பான்மை மக்கள் தமக்கான ஐதீகப் பாரம்பரியப் புவியிற்றொhடர்ச்சியைக் காலப்போக்கில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்த நிலத்தில் வரலாற்று ரீதியாகவுறுத்திப்படுத்தும் அரச ஆதிக்கத்துக்கும் துணையாகவே நிற்கின்றனர்.எனவேதாம் சிங்கள அரச அதிகாரத்தைக் கிழக்கு மாகாணத்தின் வசந்தமென ஞானம்-பிள்ளையான் கூட்டு அதிகமாக வகுப்பெடுத்தனர்.டக்ளஸ் அதை வடக்குக்கும் வசந்தமாக மொழி பெயர்த்தார்.
இத்தகையவொரு மிகக் கெடுதியான அரசியற் சூழ்ச்சிக்குள் சிக்குண்ட தமிழ்பேசும் மக்கள், தமது வாழ்விடங்கள்-வரலாற்று ரீதியாகத் தம்மால் உணரப்பட்டதும்,உறவாடப்பட்டதென்பதற்கும்மேலாக அவற்றின் இன்றைய அவலத்தை உணர்வுரீதியாவுள்வாங்குகின்றனர்.
தமிழ்பேசும் மக்களது சுகவாழ்வுக்கான மண்,சிங்கள ஆதிக்கத்தினது அதிகாரத்தின் தொடர் ஆக்கிரமிப்புக்கு மத்தியில்"தமக்கான வலயமாக" இல்லாதாக்கப்படுஞ் சூழலையும்,அந்த வலயத்துள் தமக்கான பொருண்மிய வாழ்வு இல்லாதாகப்படுவதும்,அந்த ஆதாரங்களைக் கட்டியமைக்காது திட்டமிடப்பட்ட சதியால் பின்தள்ளப்படும் புனரமைப்பு,அபிவிருத்தியானவை தமிழ் பேசும் மக்களது வாழ் சூழலைப் பலமாகப் பாதிக்கிறது.இது யுத்தத்தைவிட மோசமானது.
இத்தகைய சூழல் தொடர்ந்து நிலவும்போது, மக்கள் கப்பல் மூலமென்ன கால் நடையாகவாவது தாம் வாழ்வதற்கும்,தமது சுக வாழ்வுக்காகவும் எங்கும் இடம்-புலம் பெயர்ந்தே தீருவார்கள்.
அதைத் தடுப்பதற்கான ஒரே ஆயுதம், தமழ் பேசும் மக்களது வாழ்விடங்கள் யாவும் அவர்கள் உழைத்து உண்ணக்கூடிய வலயமாக முதலில் மாறியாகவேண்டும்.அதன் காரணமாகத் தொழில்ரீதியான முனைப்புகள் சிறிய குடிசார் அமைப்பாண்மைக்கு வித்திடும்.அப்போது இந்த மக்கள் அச்சமின்றி தாம் ஒரளவு வாழ்வதற்கான சூழல் தமக்கு வாய்த்ததாகவுணரும்போது இடப்பெயர்வு இல்லாமற் போகமுடியும்.
யாழ்ப்பாணத்தவர்கள் எப்போதும்,தமது மண்ணினது நிலைமைக்கேற்ப இடம்பெயர்ந்து உழைத்துப் பழக்கப்பட்டவர்கள்.குடும்பத்தைவிட்டுக் கொழுப்பிலும்,கண்டியிலும்,காலியிலும் பிழைக்கச் சென்ற அதே அகக் காரணிகள் இப்போதைய காலத்துக்கேற்கக் குடும்பங்களையும் துணைக்கழைத்து வெளி நாடுகளுக்கு இடம் பெயர்வதொன்றும் குற்றமானதல்ல!
"எங்கு மனிதர்கள் சுதந்திரமாக உழைக்க,உயிர்த்திருக்க,பாதுகாப்பாக வாழ முடியுமோ அந்தத் தேசமோ-வலயமோதாம் தாயகம்.அதைவிட்ட அனைத்தும் பொய்யானது-சேர்க்கையானது!"
இதுள் புலம் பெயர்ந்தவர்களை-பெயருபவர்களை நொந்தென்ன-கடிந்தென்ன? காலந்தாம் அனைத்தையும் பதிலாக்கி வைத்திருக்கிறது.அதுள் நமது கடந்த-நிகழ்காலப் பாத்திரங்கள் என்ன பங்குடன் நம்மைக் கடக்கின்றனவென்பதே உணரப்படவேண்டியது.இதுள் புலிவழி (வி)தேசியவாதப் போராட்டத்தைக் குறித்து நிறையவே உணரப்படவேண்டும்.அப்போதுதாம் சிங்கள அரச ஆதிக்கத்தையும் அதன் அதிகாரத்தையும் புரிந்துகொள்ள முடியும்.மனோ கணேசன் அவர்கள் அந்த பக்கமும் மெல்லக் கவனித்துவுணர்வது ஒடுக்கப்படும் சிறுபான்மை இலங்கை மக்களுக்கு அவசியமானது.மனோ கணேசனது இக் குறிப்பு அந்த வகையில்முக்கியமான-அவசியமான குறிப்பாகவே பர்க்கிறேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.10.2012
No comments:
Post a Comment