"புதிய இணைய மாத சஞ்சிகைக்கு எழுதுமாறு உங்கள் அனைவரையும் கேட்கிறோம்! ஆரோக்கியமான கருத்துபரிமாற்றத்திற்கும் கருத்தியல் வாதம்,உரையாடல் வெளிக்குமான புதிய கதவினை திறப்போம்! "-by Mahroof Fauzer
பௌசர்,உங்களிடம் சில விளக்கங்களைக் கேட்பது அவசியமெனக் கருதுகிறேன்.
1: "தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்" என்கிறீர்கள்.இந்தச் செயற்பாடுகள் எதை நோக்கியது?ஏனெனில்,இன்று மொழி,மதம்,பண்பாடு சார்ந்த ஒடுக்குமுறைகள்-பௌதிக இருத்தலை மறுக்கும் ஒடுக்குமுறைகள்அனைத்தையுஞ் செய்தபடி அதற்கும் மேலாக மனிதர்கள் வர்க்க ரீதியாக ஒடுக்கப்படுபவர்களாகவும்,ஒடுக்குபவர்களாகவுமிருக்கிறார்கள்.இதுள் நீங்கள் எந்த வகைமாதிரியை உணர்கிறீர்கள்?
2: செயற்பாட்டகம் என்பதன் பொதுப்படையான புரிதலென்ன?செயற்பாடு வினையுறும் திசைவழியின் செல் நெறி என்ன-எதைச் சார்ந்து செயற்பாடு விரிகிறது?
3:"தமிழ் மொழிச் சமூகங்கள்" என்பதன் விளக்கமென்ன?சமூகம் என்றால் என்ன-சமுதாயம் என்றால் என்ன?இதுள் மொழிகள்-மதங்கள்,பண்பாடு,பால் வேறுபாடுகள் கடந்து இயங்க முனையும் மனிதர்களின் இடம் என்ன?
4:"ஜனநாயக அடிப்படை"என்கிறீர்கள் நீங்கள் குறித்தியங்கும் ஜனநாயகம் குறித்த புரிதல் என்ன?
5:துருவமயப்பட்டு நிற்கும் சிந்தனைக்கு மாற்றாகச் செயற்படுதல் "மாற்று-கருத்து நிலைகள்"இல்லையா?;இயங்கு தளத்துக்கு நகர்த்தலென்பதன் அர்த்தம் என்ன?-"இயங்குதல்-தளம்"இருண்டுக்குமான இயங்கிற்றொடர்பில்இயங்குதல் எந்த வடிவத்தின் மறுப்பை மறுத்து உருமாறதலைக் கொணர?அது,எதன் பொருட்டிலான தளத்தை மையப்படுத்துக்கிறது அல்லது கருதுகோளாக்கிறது,அன்றியும் நோக்கை உணர்த்துகிறது?
6: ஒவ்வொரு மாதமும் எடுக்கப்படும் " பேசுபொருள்"எத்தகைய நோக்கத்தைச் சார்ந்தியங்குகிறது அதன் அடிப்படையான அரசியல் என்ன?(நாம் அரசியல்-இயக்கம்சாராதவர்கள் என்று சொல்லிவிடாதீர்கள்).
7: ஒருவர் ஒற்ற நிலைக் கருத்துடையவரென எந்த அளவுகோல் அடைப்படையில் வரையறை செய்கிறீர்கள்?அந்த ஒற்றை நிலைக்கெதிரான பன்முகத் தன்மையைக் கோருவது"மாற்றாக"-கருத்தாக இருக்க முடியாதா?
8: ||நாம் ஒரு அரசியல் இயக்கமோஃகட்சியோ இல்லை.ஒரு அரசியல்கொள்கையைஃநிலைப்பாட்டினை முன்னிறுத்தி அவற்றினை நியாயம் காணசெய்வதற்கும் அவற்றினை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்வதற்கும் ஏனைய கருத்துக்களை கேள்விக்குள்ளாக்குவதும் எமது நோக்கமன்று.|| ஒரு அரசியல் இயக்கம்-கட்சி குறித்த உங்கள் கணிப்பீடுகள் என்ன?அரசியற்கொள்கை-நிலைப்பாடுகள்,அவற்றைத் தவிர்கக்கும் நீங்கள்-நியாயம் செய்ய மறுக்கும் நீங்கள்,எந்தக் கருத்தையும் கேள்விக்குட்படுத்தாத நீங்கள், "துருவமயப்பட்டு நிற்கும் சிந்தனைக்கு"மாற்றாக இயங்குவதாக இருப்பின் அது,துருவமயப்பட்ட கருத்துக்களைக் கேள்வி கேட்பதாகதா?அப்போது எங்ஙனம் மேற்காணும் உங்கள்கொள்கையை உருவகப் படுத்துவதில் முனைப்படைகிறீர்கள்?
9:||நாங்கள் மாற்று செயற்பாட்டாளர்களுமல்ல. மாற்று உரையாடல்களை நடத்துவது தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் நோக்கமும் இல்லை. அனைத்து மாற்று உரையாடல்களுக்கிடையிலான பொது உரையாடல் வெளியினைத் திறப்பதே எமது நோக்கமாகும்.||(!;?)மாற்று உரையாடலை நடாத்துவது உங்கள் நோக்கமல்ல.மாற்றுச் செயற்பாட்டளருமல்ல.ஆனால், அதற்காக நீங்களொரு பொதுவெளியைத் திறக்கிறீர்கள்.அந்த வெளியை மீளவும்,மாற்று உரையாடல்களுக்காகவே-அதற்கானவொரு இடையில் நின்று ஒரு பொதுவெளியை(யூர்கன்காமர்மார்ஸ் சொன்னமாதிரி?) திறப்பதில் உங்கள் நோக்கம் இருக்கிறது.அப்படியாயின்"பொது உரையாடல்"என்பது என்ன?அது,ஒன்றிற்குச் சார்பானதா அல்லது அதற்கு மாற்றானதா?அல்லது நிலவுகின்ற அமைப்பைக் கடந்த"இயங்கு தளம்"ஒன்றைக் கணித்த பொதுவெளிச் செயலூக்கமா?
10:||நமது சமூகச் சூழலானது மிகமோசமான துருவநிலைப்பாட்டாலும்இபகை முரண்களாலும் ஒதுக்கங்களாலும் ஒருவரையொருவர் எதிர்நிலைக்கு தள்ளிஇஉரையாடல்களுக்கான சாத்தியங்களையும் நியாயப்பாடுகளை அலசி ஆராய்வதற்கான பொது வெளியையும் இல்லாதொளித்தே நிற்கிறது.இதன் விளைவுகளை பாடமாகவும் அனுபவமாகவும் கொண்டு புதியதோர் பண்பாட்டு தளத்தில் நகர வேண்டிய அவசியத்தின் தேவைப்பாட்டினை ஏற்றல் என்கிற அடிப்படையில்தான் நாம் இந்த பணியில் இணைந்து பணியாற்றுகிறோம்.திட்டமிடுகிறோம்இசெயற்படுகிறோம்.||புதியதொரு பண்பாடு குறித்துக் கணிக்கிறீர்கள்.அது,நிலவும் அமைப்பைக்கடந்து புதிதாக முன்னேறமுடியாது.புதிதாகக் கோடு கீறுதல் பண்பாட்டத்தளத்தில் இயலாது.அநுபவங்களைக்கடந்த இன்னொரு புதிய அநுபவ வெளி-வாழ்வு நிலை நிலைப்பதாயின் அது ஏலவே இருந்தவைகளிலிருந்து மாற்றைக் கோருவது.எனவே,"மாற்றுக் கருத்து-எண்ணம்"பண்பாட்டுருவாக்கத்துள் உருவாகிறது. அப்படியாயின் எதை மறுத்து"மாற்றுக் கருத்தாளர்கள் நாம் இல்லை"என்கிறீர்கள்? அப்படி இல்லாதிருக்கும் பட்சத்தில் நிலவும் அமைப்பில் உங்கட்கு என்ன முரண் நிலவ முடியும்?-பிறகெதற்கு இயங்கு தளம்,புதியதோர் பண்பாட்டத்தளத்துக்கு நகர்தல்?
உங்கள் கொள்கைப் பிரகடனமும்"இயங்கு தளமும்"தமிழ் மொழிச் சமூகங்களும் குறித்து விரிவாகச் சொல்லுங்கோ.இக்கேள்விகளை நாம் கேட்டு நமது நேரத்தை வீணாக்காதிருப்பதற்கு.
ப.வி.ஸ்ரீரங்கன்
31.03.2012
No comments:
Post a Comment