Tuesday, November 02, 2010

"எதிரியின் எதிரி நண்பன்"

"எதிரியின் எதிரி நண்பன்"

சோபாசக்தியின் "முகப் புத்தகம்" கட்டுரையை இரயாகரன் தனது தமிழரங்கத்தில் மீள் பதிவேற்றிவிட்டார்.அப்பாடா தொலைந்தான் எதிரி!


//EPRLF கட்சியின் தலைவராக இந்தியாவால் உருவாக்கப்பட்டவர் வரதராஜப் பெருமாள்’ என்பது வரதராஜப்பெருமாளின் அரசியற் போராட்ட வரலாறை அறியாத தவறு என்றே சொல்ல வேண்டும். தனது 17வது வயதிலேயே 1972ல் போராட்டத்தில் இணைந்துகொண்ட வரதராஜப்பெருமாளின் அரசியல் வரலாறு நெடியது. EPRLF உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் தலைவர்களில் ஒருவராக வரதராஜப்பெருமாள் இருந்தார். அருள்எழிலன் தனது நூலில் 1985ல் திம்புப் பேச்சுவார்த்தையில் போராளிகளால் முன்வைக்கப்பட்ட தமிழ்த் தேசியம் / தாயக நிலக் கோட்பாடு / சுயநிர்ணய உரிமை / பிரிந்து செல்லும் உரிமை என்பவற்றை உள்ளடக்கிய நான்கு கோட்பாட்டுரீதியான கோரிக்கைகளை மிகவும் சிலாகிக்கிறார். அந்தக் கோரிக்கைகளை வடிவமைத்து எழுதியவரே வரதராஜப் பெருமாள்தான். அவர் எழுதியதைச் செம்மைப்படுத்திய கேதீசும் இறுதி வடிவம் கொடுத்த அ.அமிர்தலிங்கமும் பின்னாட்களில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது வேறு கதை. வரதாஜப்பெருமாளும் புலிகளின் அதி உயர்பட்சக் கொலை இலக்காகவே இருந்தார். இதிகாசப் பெருமாளுக்காவாது 14 வருட அஞ்ஞாதவாசம். இந்தப் பெருமாள் 15 வருடங்கள் அஞ்ஞாதவாசமிருக்க நேரிட்டது. வரதராஜப் பெருமாளை வெறுமனே இந்தியாவால் உருவாக்கப்பட்ட பொம்மையெனச் சித்திரிப்பது புலிகளின் ஆதரவு நோக்கே தவிர தமிழ் மக்களின் நலன் சார்ந்த நோக்குக் கிடையாது.//

//இலங்கை - இந்திய உடன்படிக்கை இந்திய நலன்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான். எனினும் இந்திய - இலங்கை உடன்படிக்கையை நிராகரித்ததாலும் யுத்தம் செய்ததாலும் நாம் பெற்றது என்ன, இழந்தது என்ன? சிறு துரும்பைக் கூட நாம் பெற்றுக்கொள்வில்லை. ஆனால் எல்லாவற்றையுமே நாம் இழக்க நேரிட்டது. “ஆனால் மானத்தை இழக்கவில்லையே” என இந்தக் கட்டுரையை மேற்கு நாடொன்றில் இருந்து படித்துக்கொண்டிருக்கும் ஒருவர் மீசையை முறுக்கியபடியே முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. கவரிமான்களோடு எனக்குப் பேச்சில்லை. நான் இரத்தமும் ஆன்மாவும் உள்ள மனிதர்களிடமே பேச விரும்பகிறேன்.// -By Shobasakthy

- http://www.shobasakthi.com/shobasakthi/?p=760

சோபாசக்தி அந்த மாதிரிப் புள்ளி விபரத்தோடு அருள் எழிலனை-அவர்கொண்டுள்ள அரசியலை நொருக்கித் தள்ளியுள்ளார்.

சோபா சக்தி மிக நுணுக்கமாகத் தனது இதுவரையான அரசியல் பாதையின் முக்கியத் தளத்தை மெல்லவுடைத்திருக்கிறார்.அது,அருள் எழிலனையும் தாண்டித் தனது அரசியல் இலக்கை எட்ட முனைந்த வொரு திருப்பு முனைக் கட்டுரையாக இருப்பதற்கேற்ற புள்ளியை அங்கே தொட்டுச் செல்கிறார்.

இந்தத் தெரிவு அவருடையது.

அது,அவரது சுதந்திரமான தேர்வு.இன்றைய ஜனநாயகத்தில் அவரது உரிமையுங்கூட.அதை நாம் ஏற்க வேண்டுமென்பது இல்லை.

இரயாகரன் தனது தளத்தில் ஆயிரத்தெட்டுக் கட்டுரைகளை வரதராஜப்பெருமாளை நோக்கியும் அவரது அரசியல் நோக்கியும் எழுதியிருக்கிறார்.மண்டையன் குழுத்தலைவர்களது(...) அரசியல் நீட்சியை நியாயமுற வைப்பதில் சோபாசக்தியை விஞ்சிய செயலே இந்த மீள் பிரசுரம்.(தமிழரங்கம்,இரயாகரன் கோஷ்டியானது புரட்சிகரச் சக்தி அல்லவென்றும் அது புலிகளது பினாமிகள் என்றும் அந்தக் கோஷ்டியின் இலக்கு அந்நிய ஆர்வங்களால் தகவமைக்கப் பட்டதென்றும் நான் மீள,மீளச் சொல்வதும் இன்றுவரை தொடரவே செய்கிறது).


இப்போது புரிகிறதா?

இந்திய அரசியல் வியூகம்?

வரதராஜபெருமாள் எங்கவோ காட்டுக்குள் உண்ண உணவின்றி,உடுக்க உடையின்றி உயிருக்குப் போராடியதுபோல அவரது அஞ்ஞாத வாசத்துக்காகச் சோபாசக்தி பொருமுகிறார்.
அவரது நியாயத்தின்வழி அது சரிதாம்!இந்தியாவானது கிலுக்கட்டியை இப்படியும் எமக்குக் காட்டுகிறது-அப்பு!



17 வயதில் அரசியலில் இறங்கியவர்கள் போராட்டப்பாதையில் எந்த இலக்கோடு மக்களைச்சார்ந்தார்கள்?அவர்களது தெரிவில் இந்தியா போராட்டத்துக்குக் குறுக்கே வரும்,ஒப்பந்தம் போடும்.அதை ஏற்றுக்கொண்டு தமிழ்பேசும் மக்களது உரிமைகளைக் காற்றில் பறக்கவிடுவோமென்றா தொடர்ந்தார்கள்- முள்ளிவாய்க்காலில் கப்பலுக்குக் காத்திருந்த பிரபாகரன் போல?

சோபாசக்திபோலத்தாம் அரசியல்-வரலாறு பேசப்படவேண்டும். இதுவரையான மக்களின் அழிவிலிருந்து இந்தியாவானது திம்புப் பேச்சுவார்த்தை (1985 http://archiv.ub.uni-heidelberg.de/savifadok/volltexte/2007/69/pdf/nr4_lkfrieden_1.pdf ) .

அதன் பின், ஜே.ஆர்.-இராஜீவ் ஒப்பந்தம் (1987 http://www.hsfk.de/downloads/rep0803.pdf) எனத் தனது "தர்மீக"ஆதரவைத் தமிழ் பேசும் மக்களுக்காகத் தந்துதவியபோது புலிகளும் ஏற்காது யுத்தம் புரிய-பிரமதாசாவும் ,புலிகளும்- முற்பட்டபோது செயற்பாட்டிலிருந்த வடக்கக்கிழக்கு மாகணம்சரியானதாக மாறுகிறது சோபாசக்திக்கு-வரதராஜப்பெருமாளது அரசியலை புலிகளது இன்றைய நிலையோடு பொருத்தி அன்றைய இந்திய-இலங்கை ஒப்பந்தஞ் சரியானது"ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை" என வாதாடி நியாயமானதாக ஏற்பவர்கள் இந்தியாவினது சதியை ஏற்பவர்கள்.இன்றைக்குத் தமிழ்பேசும் மக்கள் நிர்க்கதியாக நிர்ப்பதற்குப் பின்னே புலிகள் மட்டுமல்லக் காரணம்.அந்த அமைப்பை அங்ஙனம் வளர்த்து, அதை ஒட்ட அறுத்தெறியும்வரை நமது அரசியலைச் சீரழித்ததே இந்த வரதராஜப்பெருமாளைக் காத்த பாரத நாயகன் -நாயகியும்தாம் காரணமாகிறது.

"வரதாராஜப் பெருமாளை வெறுமனவே இந்தியாவால் உருவாக்கப்பட்ட பொம்மை என்பது புலிகளின் ஆதரவு நோக்கே தவிர தமிழ் மக்களது நலன்சார் நோக்கு அல்ல"
என்று ஒரு போடு போடுகிறார் சோபாசக்தி.

மேலேயுள்ள இந்த வாக்கியம் தரும் அரசியல் விளக்கம் என்ன?

இதைப் புரிந்துகொள்பவர்கள் எவரோ அவரே சோபாசக்தியின் இதுவரையான அரசியலையும்உள்ளபடி புரிந்து கொண்டு,சோபாசக்தி எந்தத் தளத்தில் அரசியல் செய்கிறாரென்று அவரோடு"தோலர்"ஆகலாம்.

ஆக,பாசிசப் புலிகளது அழிவில் எத்தகைய அரசியலும் அரங்கேற முடியும் என்பதற்கு நாம் வரதராஜப் பெருமாளையும்,அவரது வனவாசத்தையுங்குறித்துக் கவலையுறும் சோபாசக்தியின் குரலின்வழி புரிந்துதாம் தீரவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.11.2010

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...