Saturday, October 23, 2010

இணைய மறுக்கும் தலித்து

தமிழ்த் தேசியத்துள் இணைய மறுக்கும் தலித்து

மிழ் பேசும் மக்களது பாரம்பரிய பூமியில்திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்களா,அன்றிப் புலிகள்வழித் தமிழ்த் தேசியத்துக்கான அணைவா,தமிழீழத்துக்கான தார்மீக ஆதரவா,எதுவானாலும் மொத்தமான"பொத்தாம் பொதுவான"தமிழ் அடையாளப்படுத்தல்களை நிராகரிக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் கணிசமான மக்கட்டொகையின் அரசியல் எதிர்ப்பார்ப்பும், அதுசார்ந்த அவர்களது முன்னெடுப்பும் மேலாதிக்கத் தமிழ்ச் சமூகவெண்ணவோட்டத்துக்கு எதிரான திசையில் பயணிப்பது தற்செயலானது இல்லை.அதுபோல்,இலங்கைச் சிங்களப் பேரினவாதத்தோடான சமரசப் போக்கும் பண்டுதொட்டுத் தொடர்வன அல்ல.வரலாற்றில் அரசியற் பலமற்ற தாழ்த்தப்பட்ட மக்கள்,உழைப்பவர்கள் இத்தகைய சமரசப் போக்கைத் தமது மொழிசார் அடையாள வெளிக்கு அப்பால் செய்வதற்கான வெளி அவர்களுக்கு இருக்கவும் இல்லை.

சிதறிப்போன தலைமகள்,ஏற்றத்தாழ்வுகளினாலும்,அகவொடுக்குமுறைகளாலும் பிளவுண்டு-பிரிந்து கிடக்கும் தமிழ் மக்களைக் கூட்டாகத் தேசிய கும்மிக்கழைத்த "ஏதோவொரு" தேவையையொட்டிய யாழ்பாணிய விருப்பு(எமது விருப்பு) இனி, மீண்டெழுவதற்கில்லை!

அதன் விருப்பத்தின் தெரிவு"தரகு-தொங்கு"மூலதனவூக்கமேயென உணரப்பட்டபின் தமது தங்கத் தலைவரையே முட்டுச் சந்திக்குள் வைத்துத் துவைத்தெடுத்தது இந்த இனம்.யார் யாரோடு கூட்டுச் சேர வேண்டாமெனப் பலரைப் போட்டுத் தள்ளியதோ அவர்களோடு சேர்ந்தே தமது தங்கத் தலைவரது தலையைப் பிளந்தது.இந்த "யாழ்ப்பாணிய விருப்பு"இப்போது எதையெதையோ கற்பனை பண்ணிக் கொண்டு, வேலியில் போனவோணானைப் பிடவைக்குள் மறைத்தபடி குடையுது,கடிக்குதெனச் சொல்வது சத்தியமாக உருப்படாத குணம்.

புலிகளாகிவுருவாகிறதாகச்சொன்ன"தமிழீழம்"முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டபோது,மேற்சொன்ன போட்டா போட்டிகளைத் தயார் படுத்திய இந்த இனம் தன்னை ஒருங்கமைப்பதற்குள் வீதியில் கூடித் தேரிழுத்துப் பார்த்தபோது, தனக்குள் தொடர்ந்த பிரிவினையானது தொடர்ந்து அகலித்து வருவதை இனம் காண மறுத்தபோது அதை இனம் கண்டவர்கள் இந்தத்"தமிழ்த் தேசிய"இனத்தின் பகைவர்களே.

மூன்றாமுலகக் கன்றாவிக் கதைகளுக்குள் எப்பவும் போலிப் புனைவுகள் அதிகமாகத் தலையைக் கொய்யக்கொடுப்பதில் ஒரு பிரபாகரன் சமீபத்து உதாரணம்.கடந்தகாலம் ஒரு முன்னூறு பேரோடு கடலிறயங்கிய வஸ்கொடகாமாவுக்கு முழு இந்தியத் துணைக்கண்டமே அடிமையானது.இப்படியாக...

தமிழ்த் தேசியத்தை மறுப்பதென்பதும் ஏற்பதென்பதும் தமிழ் மொழியைப் பேசுபவர்கள் ஒவ்வொருவருக்கும் தான் வாழும் வாழ்நிலை தந்த அநுபவத்தின் வழியே இயலுமாக இருக்க முடியும்.

மொழிவாரியாகவும்,பிராந்திய வாரியாகவும் வாழமுனையும் இந்த மக்கள் பிரத்தியேகமாகத் தமக்குள் சாதிரீதியாகவும்,மதரீதியாகவும் பிளவுண்டே கிடக்கின்றனர்.இந்தவுண்மையில் எம்மால் சிதறிடிக்கப்பட்ட இந்த அகவொடுக்குமுறை ஜந்திரத்தை ஏற்பதில் எமது பாதிப்படையாத மனோ நிலையைப் பாதிப்படைபவர்களுக்கும் பொருத்துவதுதாம் இன்றைய முரண்நகை.
எம்மால் பாதிப்படைபவர்களை எமது நண்பர்கள்-எதிரிகள் யாவரும் தத்தமது நலனுக்கொப்பப் பயன் படுத்துவதையெண்ணி எமக்குக் கொதிப்பு மேலிடுகிறது.

அடடே, நமது தேசியச் சொத்துக்கள்-அலகுகள்,வாழிடங்கள்,வரலாற்று மண் பறிபோகிறதே,நமது இருப்புக்கு எதிராகக் குடியேற்றங்கள் நிகழ்கிறதே என்று அங்கலாய்ப்பதால் என்ன பலன் வந்தது?

யாழ்ப்பாணிய விருப்பானது தன்னை முன்நிலைப்படுத்தத் தனக்குள் இருக்கும் மெலியவரை ஒடுக்கியபடி மேற்சொன்னவற்றுக்காகப் பழிசுமத்தும் தரப்பைத் தம்மை இதுவரையான ஒடுக்குமுறைக் குள்ளாக்கிய ஆதிக்கத்தின் பக்கமே தள்ளிவிடும் இந்தச் சமூகவுளவியலானது இன்னொரு புறமான ஒடுக்குமுறையே. ஆகத் தாழ்த்தப்பட்டவர்கள் - ஒடுக்கப்பட்டவர்கள் விளிம்பு நிலை மக்கள் அனைவரும் ஒரு பக்கத்தில் யாழ்ப்பாணிய மேலாதிகச் சாதியக் கொடுமையையும், இன்னொரு புறம் தாம்சார் மொழிவழியான அடையாளத்துக்கான "தமிழர்கள்"என்பதாலும் இனவொடுக்கு முறைக்கும் முகம் கொடுக்கிறார்கள்.

இது, அநேகமாக ஐரோப்பியக் காலனித்துவக் கொடுமையின் கீழ்ப்பட்ட அதே முறைத் தாக்குதல்களை இந்த ஒடுக்கப்பட்ட மக்கள்-தாழ்த்தப்பட்ட சாதிய அடையாளமுடைய மக்கள் எதிர்கொள்கின்றனர்.இதைக்குறித்துச் சமூகரீதியான புரிதல் தமிழ்த் தேசிய கருத்தூக்கத்தின்வழி பாரா முகமாகத் தொடர்ந்து இருத்தி வைக்கமுனைகின்றபோது, அந்த மக்களைத் தமது தேவைக் கேற்றபடி பயன்படுத்தி, அவர்களுக்கு நமது சமுதாயம் வழங்க மறுக்கும் சில அடிப்படைத் தேவைகளையும்-மானுட அங்கீகரிப்புகளையும் எமது பகைவர்கள் அவர்களுக்குச் சலுகையாக வழங்கும்போது, தமிழ்த் தேசியக் குடைக்குள் அவர்கள் ஒதுங்க முடியாது திணறுவது எமது தவறுகளாலானவை என்றெப்போது உணர்கிறோமோ அன்றே ஒருபடி மேலெழ முடியும்.

"இதை வேறு நேரத்தில் தீர்க்க முடியும்,இப்போது தேசியப் பிரச்சனையே முதன்மையான பிரச்சனை" என்று புலிகள் பாணியிலுரைத்துக்கொண்டே மேற் சென்றால் நமது நிலைமை எப்படியாக இருக்கும்?

சுருங்கக் கூறினால் மூன்றாமுலக மக்கள் சமுதாயம் உருப்படாது. சிதறுண்டுபோன நமது தலைமைகள்,போட்டா போட்டி,பழமைவாத ஏற்ற தாழ்வுகள் என்றெல்லாப் பிரச்சகைளோடும் முட்டி மோதும் நாம், நமக்குள்ளேயொரு தீர்மானகரமான முடிவுக்குள் வராதவரையும் இந்த நம் அபிலாசை(தமிழ்த் தேசிய இனம் விடுதலை அடைவது) கானல் நீராகவே இருக்கும்.

சாதிரீதியாகவும்,பிரதேச ரீதியாகவும்,மதரீதியாகவும்,உயிரின ரீதியாகவும் நமக்குள் பொருந்திவர முடியாத பல தடைகள் இருக்கின்றன.அவை ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு வகையான மீள் படைப்பாக மாற்றமடைகிறதேயொழிய அதை இல்லாதாக்கி, அணி வகுக்கும் எந்தச் சந்தர்ப்பமும் கட்டியொழுப்ப முடியவில்லை.பழமை பேணிகளான மேட்டுக்குடி யாழ்ப்பாணிய வேளாள மனமானது தான் சிங்கள அரசின் காலடியில் வீழ்ந்தாலும் சாதிய ஏற்றதாழ்வையகற்றத் தயாரில்லாது கிடக்கிறது.இந்த இரட்டை நிலையையே தலித்துக்கள் என்று தம்மை அழைக்கக் கோரும் அமைப்புகளது அரசியலாகவும் விரிகிறது.இவர்கள் தமிழ்த் தேசியம் சிதைந்து சின்னா பின்னமானாலுஞ்சரி தம்மை அடிமையாக்கும் வேளாள மேலாண்மைக்கு நிகராகத் தம்மை உருவாக்க எவரது காலிலும் வீழ்ந்து, அந்த மேன்மையை-அபிவிருத்தியை அடைய முனைகின்றனர். இங்கே,அதிகார வர்க்கங்களே அனைத்துக் குழுக்களையும் அரவணைத்துத் தமது நலன்களை எட்ட முனையும்போது ,அவர்களால் எந்த மேன்மையும் எவருக்கும் முழுமையாக வரமுடியாது-ஒரு சில தனி நபர்கள்,குடும்பங்கள் சிலவேளை தமது நிலைமைகளைச் சீர் செய்ய முடியும்.முழுமையான சாதியக்கட்டுமானச் சிதைப்பு-அகல்வு நடைபெறும் சந்தர்ப்பம் குறைவாகவும்,அந்த மக்களில் பலர் மீளவும் ஆதிக்கச் சக்திகளது காலடியில் மடிந்துபோகும் அபாயமும் நீடிக்கிறது.

"தமிழ்த் தேசிய விடுதலை" என்பது பற்பல சிக்கல்களுக்குள் கட்டுண்டு கிடக்கிறது.தமிழ்பேசும் மக்கள் தமக்குள் நிலவும் அகரீதியான முரண்பாடுகளைச் சீர் செய்வதிலிருந்தே ஒரு பொருண்மைசார் "தேசிய இன"அடையாளத்தோடான நட்புறவும் அதுசார்ந்த சுயநிர்ணயத்துக்கான செயலூக்கமும் கருக்கொள்ள முடியும்.

சாதியவொடுக்குமுறை,
பிரதேசவொடுக்குமுறை,
மதஞ்சார் காழ்ப் புணர்வு,
மலையக "இழிமை"-ஈழ "மேன்மை"சார் பாகுபாடுகள்,
பெண்சார் கற்பிதங்கள்,
கல்விசார் ஏற்றதாழ்வு,

என்ற விசக் கிருமிகளே தமிழ்த் தேசியவினத்தின் கருவையே சிதைக்கும் புற்று நோயக இருக்கிறது.இதை எங்ஙனம் புரிந்து,அந்தந்த நோய்க்கான ஒளடதங்களைப் பயன்படுத்த முனைகிறோமோ,அதையொட்டியப் புரிதலே இன்றுவரை நோய்வாய்ப்பட்டுக்கிடக்கிறது.

என்ன செய்ய?

தமிழீழம் அல்லது தமிழர்களுக்கான பிரிந்துபோகும் உரிமை என்ற வரையறையுள் உள்ளோட்டமாக நிகழும் சமூக ஆண்மையானது தமிழ்ச் சமுதாயத்தின் வசதிபடைத்த மேல்தட்டினது விருப்புகள்-தேவைகள்,சமூக ஆதிக்கம் தொடர்பாக உருவாக்கி வைத்திருந்த இது நாள்வரையான புலிவழித் தமிழ் தேசிய அடையாளமானது சாரம்சத்தில் சாதியப் பிளவுகளை மேலும் அகலிக்க வைத்ததேயொழிய அதைச் சுருங்க அனுமதிக்கவில்லை! அத்தகையவொரு தேவையில் கவனத்தைக் குவிக்காதிருந்தபோதும் பழமை பேணிகளான வேளாளச் சாதியத் திமிர், இந்தக் கோலத்தில் சிங்களப் பேரின வாதத்தோடு சமரசஞ் செய்கிற போக்கில் பிரபாகரனப் புதைத்துக்கொண்டது (பிரபாகரனோடு பாடையிற் போனவர்களில் அதிகமானோர் கீழ்த் தட்டு இளைஞர்களே என்பதும் கவனிக்கத் தக்கதே).அதன் அக விருப்பில் பிரபாகரனையே அவர்கள் சகிக்க முடியாதவொரு உள நெருக்கடிக்குள் இருந்தார்கள் என்றவுண்மையை நாம் எப்போது புரிவோம்?

இந்தப் புள்ளியிற்றாம் சோபாசக்தி,தேவதாசன் போன்றோர்கள் தலித் அமைப்பு-கட்சியென வடிவமெடுக்கும் ஒரு புற நிலையான யதார்த்தம் உருவாகிறது.தேவதாசனது தலித்துவ அமைப்புக்கு ரோ பின்புலமாக இருக்கோ இல்லையோ ,அவரது கோரிக்கை,அதுசார்ந்து நகரும் அரசியல் வியூகத்துக்குக் கடந்த காலத் தமிழ்ச் சமுதாயத்தின்(இந்தியத் துணைக்கண்டத்தினது-சிறப்பாகச் சொன்னால் இந்துமத வர்ண தர்மம்) நான்காம் உலகக் காலனித்துவக் கொடுமைகளே ஆசானாக இருக்கிறது.எனவே,எவ்வளவு சரிவுகள்-வசைவுகள் நேரிடும்போதும் அவரது கோரிக்கைகள் பரவலான ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களது அவசரமான மானுடவுரிமையாக நம்முன் திரண்டெழுகிறது.இதைச் சாதகமாக்கவே இப்போது சிங்களப் பேரினவாதம் சலுகைகள் தரச் சம்மதிப்பதும்,உறுதியளிப்பதுமாகக் காலத்தைக் கொண்டோடுகிறது.

இங்கேதாம் புலிவழித் தமிழ் தேசியத்தை மறுத்தும்,திட்டமிட்டச் சிங்களக் குடியேற்றம் பற்றி எதுவும் அலட்டாமல் அவர்கள் தமது முன் நகர்வை முன்னெடுக்கின்றனர்.இங்கே, தமிழ்க் கட்சிகளாலும்,நம்மாலும் சொல்லப்படும-உணரப்படும் பெரும் அபாயமான திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றம் என்பது தமிழ்ச் சமுதாயத்தின் சனத் தொகையில் சரி அரைவாசியாக இருக்கும் தாழ்தப்பட்ட மக்களால் உணர்வு ரீதியாகவே உணர முற்படாத அல்லது அதை உதாசீனப்படுத்தும் எதிர் கருதியலாக அவர்களால் அணுகப்படுகிறது.

"வேளாளன் தனது ஊருக்குள்ளேயே ஒரு முழத் துண்டுக் காணி தராதவன்,நம்மைக் குடியிருக்கப் புறம்போக்கு நிலத்தைத் தரச் சம்மதிக்காதவன்... " என்ற வடூ தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருக்கிறது-நிலைக்கிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.10.2010

No comments: