சில கருத்துகள்.
இன்று நமது புலம்பெயர் வாழ்வில் எங்கு நோக்கினும் உளவு அமைப்புகளுக்குத் தொண்டூழியஞ் செய்யவே "இலக்கிய-புத்தக வெளியீட்டுச் சந்திப்பு"ச் செய்பவர்களாகவும் ,எழுத்தாளர் மாநாடு செய்பவர்களாகவும்,அவை-மேம்பாட்டு முன்னணி,சாதியச் சங்கம்,தலித்துவப் பேரவை,சங்கம்,கழகம்,கட்சி அமைப்பவர்களாகவும் தமிழ் மக்களது "துரோகிகள்" தமது அரசியலைத் தமிழ்பேசும் மக்களது பெயரில் முன் தள்ளுகிறார்கள்.
இவர்களது எஜமானர்களால் பழிவாங்கப்பட்டுத் தமது உறவுகளைப் பலிகொடுத்தும் தமது வாழ்வை இழந்தும் தடுப்பு முகாமுக்குள்ளும் திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் பரதவிக்கும் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீளவும் துரோகமிழைத்திட தமக்குள் ஒன்றிணைகிறார்கள்.இதிலிருந்து தமது எஜமானர்களது அரசியலுக்கு வெளியில் மாற்று அரசியல் மையமுறுவதைக் கண்காணிக்கவும்,தடுத்து உடைத்தெறியவும் எதிரிகள் மிக நிதானமாகத் தமக்குள் வலுவடைகிறார்கள்.இது குறித்துப் பரவலாக விளங்க முற்படுவேண்டும்.
சமீபத்தில் இலங்கையிலிருந்து இராகவன் மற்றும் தேவதாசன் போன்றோர்களது பேட்டிகள்,அவர்களது வாயினால் கொட்டபட்ட நச்சு அரசியலானது தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் மகிந்தாவின் நிகழ்ச்சி நிரலுக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவே இருக்கிறது.இவர்களது வெகுளித்தனமான அரசியலானது இன்றைய காலத்தின் திசை நகர்வில் தமிழ்பேசும் மக்களது மத்தியமான அரசியல் நகர்வின் தொடர்ச்சியாவும் அதுசார்ந்த குழுவாதமாகவும் சுருங்கிப் போகிறது.கூடவே,இலங்கைக்குள் இரண்டு தேசங்களை உருவாக்கப் புறப்பட்ட பிரபாகரனது தேசியத்தலைமை உலகத்தின் பொருளாதார இலக்குக்காக உருவாக்கப்பட்டு,இறுதியில் அதன் தேவையோடு இல்லாதாக்கப்பட்ட அரசியலில் புலிகளது மிச்சசொச்சங்கள் மக்களையும் குழப்பித் தம்மையும் குழப்பித் தமது வளங்களைக் குறித்தே இயங்குகிறார்கள்-அரசியல் செய்கிறார்கள்,இவர்களிற் கணிசமானவர்கள் மகிந்தாவோடு கூட்டுப் பிராத்தனை செய்கிறார்கள்.இதன் தாத்பரியம் தமிழர்களைப் படுகொலைசெய்து குவித்ததுபோகச் சிங்கள அரசினது கொலைக்காரக் குண்டுகளுக்கும் கொத்துக்கொத்தாக அழிந்து போவதுவரையான எல்லைகள் நீண்டுபோவதற்கான அரசியல்வரை இவர்களது பணி தொடர்ந்தே இருந்தது.இப்போதும், அதையே இன்னொரு வழியில் பின்பற்றுகிறார்கள்.
இன்றைய புதிய உலகவொழுங்கில் நாம் அரசு என்ற அமைப்புக்குள்ளிருந்து விடுபட்டுவிட்டோம்.இங்கு அரசுகளெனும் வடிவம் நம்மையும் நமது நலன்களைத் தவிர்க்க முடியாது சர்வதேச நலன்களுடன் பின்னிப்பிணைத்துள்ளது.இதன்தொடராக நாம் ஏமற்றப்பட்ட வரலாற்றில் இழந்தவை மிகப் பெரியதாகும்.நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழிபறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது. இதன் குறைந்தபட்சத் தேடுதலாவது புரட்சிகரப்பாத்திரத்தில் நமது மக்களைக் காப்பதற்கான முன் நிபந்தனைகளாக இருக்கும்.எனவே,இன்றைய சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே.
இலங்கை அரசானது திமிர்த்தனமாகக் காரியம் ஆற்றுகிறது.தமிழ் பேசும் மக்களைக் கூட்டாகப் புலிகளோடு கொன்றுகுவித்த அரசானது தனது யுத்த வன் கொடுமைகளை மறைக்கவும் அதுசார்ந்த யுத்தக் குற்றங்களை இல்லாதாக்கவும் பெரும் படையெடுப்போடு கருத்தியற்போரை தொடக்கி வைத்திருக்கிறது.இதன் பகுதியாகப் புலம் பெயர்ந்த தமிழர்களில் கணிசமானவர்களை அது பயன்படுத்த முனைவதன் தொடரில் இராகவன்(முன்னாள் புலித் தலைவர்களில் ஒருவர்),தேவதாசன்(தலித்து மேம்பாட்டு முன்னணி-பிரான்ஸ்) போன்றவர்களை பயன்படுத்துகிறது.அவர்களும், "வேளளர்கள் தாழ்தப்பட்ட மக்களது குடியிருப்பைக் குலைத்து வெளியேற்றுவது" குறித்துப் பேசுவதற்கான புள்ளியில் கருத்தாடும்போது இதைவிடப் பல்லாயிரம் மடங்கு கொடுமை செய்த இலங்கைப் பேரினவாதம் குறித்துக் கிஞ்சித்தும் வாய் திறப்பதில்லை.இங்கு கவனிக்க வேண்டியது பல பத்தாண்டுகளாக நமது மக்கள் தலையில் குண்டுகள்போட்டும்,குடியிருப்புகளைக் குலைத்தும் ,பாலியல் வன் கொடுமையூடாக நமது மகளிர்களை மானபங்கப்படுத்தியவர்களும்,நமது மக்களது பூர்வீக வாழ்விடங்களைப் பூரணமாக அழித்துப் பெரும் இனவழிப்பைச் செய்தவர்களும் மிக இலகுவாக இந்தத் தலித்து மேம்பாட்டு முன்னணி தேவதாசன்களிடம்,மற்றும் இராகவன்களிடம் மறந்து போய்விடுகிறது.ஆனால்,சாதிய ஒடுக்குமுறை"வடூ" நிலைத்து நினைவைத் துரத்துகிறது.
சாதியவொடுக்குமுறைக்கெதிராகச் சளைக்காது போராடியே தீரவேண்டும்.அதைப் போலவேதாம் நமது பேரின வாதப் பேயோடும் போராடியே தீரவேண்டும்.இதில் ஒன்றை அங்கீகரித்தபடி இன்னொன்றை எதிர்ப்பது நியாயமற்றது.விடுதலை என்பதைக் கொச்சைப்படுத்துவது-நாணயமற்றது.இலங்கை அரசு தமிழ் மக்களை ஏமாற்றியபடி அவர்களைப் பூரணமாகக் கையலாகாதவர்களாக்கப் போடும் அரசியல் சுழிகளில் அகப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும், இனிமேற்காலத்தில் இலங்கையில் அடிப்படை உரிமைகளைபெறுவதற்கான எந்த அரசியற்பலத்தையும் பெற்றுவிடமுடியாதளவுக்கு இலங்கையின் இராணுவவாதம் இருக்கிறது.இதைக் கவனிக்காது நாம் புலிகளின் அழிவில் இலங்கைக்கு விமோசனமெனக் கருத்தாடமுடியாது.அது,மிகவும் கேவலமாக இலங்கையின் அரச தந்திரத்துக்குப் பலியாகிப் போவதாகவே இருக்கும்.
அராஜகங்களுக்குத் துணைபோவதும்,மனித வாழ்வுக்குக் குறுக்கே நிற்கும் அதிகார வர்க்கத்தோடும் நட்புறுவை வளர்த்துக் கொண்டுள்ள இந்தக்கூட்டம்,அன்று, தம்மை இலங்கை அரச யுத்தக் கிரிமினல்களுக்கு எதிரான சக்திகளாக்கக் காட்டிப் புலம் பெயர் நாடுகளில் திட்டுமிட்டுச் சதிவலை பின்னுவதற்கான முனைப்பை மாற்றுக் கருத்தாகக்காட்டுவதே இவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. எனவேதாம் திடீரெனப் பாசிச மகிந்தாவின் பின் அணிவகுக்க முடிந்திருக்கிறது.இதுவரை இலங்கை அரசினது இனப்படுகொலையை எதிர்காது புலிவழியான அழிவுகள் குறித்து டான் தொலைக்காட்சியல் பேசுகிறார்கள்-நீலி கண்ணீர் வடிக்கின்றார்கள்.பேரழிவு குறித்துத் தமது கவலைகளைத் தெரிவிக்கிறார்கள்.புலிகளால் இவை நேர்ந்துவிட்டதால் அது புலிகளது அழிவோடு போகட்டுமெனச் சமாதானஞ் சொல்லும் போது,இவற்றைச் செய்வதற்குக் காரணமான இலங்கை அரச பயங்கரவாதத்தைக் குறித்து மௌனிக்கிறது எதன் பொருட்டு?
எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது!
இலங்கை அரசினது திட்டமிடப்பட்ட தமிழினப்படுகொலையை எந்தச் சந்தர்ப்பத்திலுங் கேள்விக்குட்படுத்தாத இக்கூட்டத்தின் திட்டமிடப்பட்ட அரசியல் சூழ்ச்சியானது தீர்மானங்களினூடாக மிகக் கறாராக இலங்கை-இந்திய அரசியல் அபிலாசைகளின் தெரிவாகவே நம் முன் கொட்டப்படுகிறது.தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இவர்களுக்கு இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கழகங்களும்,மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் இருப்பைக் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டியுள்ளார்கள்.அது நாளாந்தம் மக்களை அழித்து,அந்நியர்களுக்கு அடிமைப்படுத்துகிறது.இத்தகைய அடிமை வாழ்வை சகஜமாக்க மக்களுக்கு "ஜனநாயகம்"சொல்கிறது இத்தக்கூட்டம்.அதுவும், யாழ்ப்பாணத்திலிருந்தபடி...இதுவே இலங்கை அரசினது வெற்றியாக மாறுகிறது.அது உலகுக்கு இவர்களின்வழி தன்னை நியாயப்படுத்துகிறது.
இவர்களுக்கும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் புலம்பெயர் மக்கள்மீதான காயடிப்பு அரசியலெனும் வியூகத்துக்கிணையவே தொடர்கிறது.இது, அடக்குமுறையாளர்களோடு,அ ஒடுக்கப்படும் மக்களைக் கட்டிப்போடும் அரசியலை ஜனநாயகத்தினும்,அபிவிருத்தியினதும் பெயரில் தொடர்கிறது. இதற்கான திட்டமிடப்பட்ட பரப்புரைகளுக்கிசைவாகவே "தீர்மானங்களும்"-உரையாடல்களும்,பயிற்சிப்பட்டறைகளும் கட்டியமைக்கப்படுகின்றனர்.இத்தகைய பண்பினது விருத்தியால்
பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்லிக்கொண்டு,இலங்கையினது இனப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.
இத்தகைய சதிகாரர்களுடுடன் ஒரே மேசையில் உட்காருவதற்கு மேலுங் சிலர் நமக்குள்ளும் இருக்கத்தாம் செய்கிறார்கள்.அவர்கள் சாதிரீதியாக ஒடுக்கப்படும் மக்களது மறைக்கப்பட்ட செய்திகளையும் தொடர்ந்து கொணர்வதே தமது கடமையென்றும் தம்பட்டம் அடிப்பதில் திருப்திப்பட்டும் இருக்கட்டும். இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் போராட்டச் சூழலில் இலங்கையில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.
தமிழ்பேசும் மக்களின் பிரச்சனையுள் மிக நெருங்கிய உறவுடைய நாடான இந்தியாவின் கபடத்தனமான பொருளாதார ஆர்வங்கள் இலங்கையைக் கூறுபோட்டுக் காரியமாற்றுவதல்ல.மாறாக, இனங்களின் -பிரதேசங்களின் முரண்பாடுகளைக்கூர்மைப்படுத்தி அந்தந்த இனத்தின் வீரியத்தை-படைப்பாற்றலை முழுமையாக அழித்து அந்தத் தேசத்தை முழுமையான தனது அரசியல் ஆதிக்கத்துக்குள் நிலைப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.இங்கே,ஓராயிரம் சாதியச் சங்கங்கள்-அமைப்புகள் உருவாக்கப்படும்.
அதில் ஒரு முனையை ஏந்துபவர்கள் இந்த இராகவன்-தேவதாசன் போன்றோர் என்பது உண்மையாக இருக்கலாம்-யார் கண்டார்?
உண்மையில் மக்களுக்கான அரசியலை அவர்கள் முன்னெடுத்தால் நிச்சியம் இலங்கையைக் குற்றக் கூண்டில் நிறுத்துவார்கள். இனவழிப்புக்கு எதிராகத் தமது குரலைப்பதிவு செய்வார்கள்.அட,பெருந்தொகையாக மக்கள் அழிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குள்ளேயே இவர்கள் இப்படிக் காவடியெடுத்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இவர்களது வாயில் "இனப்பிரச்சனை என்பது" என்னவென்ற கேள்வியாக மாறலாம்.இதுதாம், இன்றைய முன்னாள்புலி-தலித்துவ அரசியலது ஸ்த்தானம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.11.2010