Saturday, March 06, 2010

நித்தியாநந்தா பாலியல் வல்லுறவுக்காரனா?

திருச்சபைகள் மற்றும் நிதி நிறுவனங்கள்:
பாலியல்,மனித ஒடுக்கு முறைகள்.



ஜேர்மனிய அதிகார வர்க்கத்தின் ஊழல்கள் அம்பலமாகும் தருணம் பாலியல் பலாத்தகாரம் அதை விஞ்சும் அளவுக்குத் திருச்சபைகளைச் சந்திக்கு இழுத்து வருகின்றன.இதற்குள் நித்தியானந்தாவின் போலிப் பிரமச் சாரியம் அம்பலத்துக்கு வரும்போது அனைத்தும் ஒன்றினது தொடர்ச்சியாகவும்,பிளவுமாக நம்மை அண்மிக்கிறது.


பிரமச் சாரியத்தைப் பரப்பிய நித்தியானநந்தா என்ற மனிதன் பெண்களோடு(பெண்ணோடு?) பாலியல் உறவை வைத்துக் கொண்டதும்,அவன் வெளியல் தன்னைப் பிரமச் சாரியகக் காட்டிக் கொண்டதும் இந்தியாவில் தொடர்கதைகளில் ஒன்று.நித்தியாநந்தா"பிரமச் சாரியம்" பேசாது ஆச்சிரமங்களை நடாத்தியிருந்தால் அவரது பாலியல் உறவுகள் குறித்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

அவரோடு பாலியல் உறவுகளைச் செய்வதற்கு விரும்புவது அல்லது மறுப்பது சம்பந்தப்பட்டவர் உரிமை-சுதந்திரம்.அதுள் தலைபோட எவருக்கு உரிமையுண்டு?

இத்தகைய நித்தியானந்தாக்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் பூராகவுமே இப்போது அம்பலத்துக்கு வருகிறார்கள்.

ஜேர்மனியக் கத்தோலிகத் திருச்சபைகளுக்குள் "தமது உடலைப் பாலியற் சுரண்டலுக்குக் கட்டாயமாகக் காவு" கொடுத்த பெண்கள்-ஆண்களெனப் பலர் இப்போது பேச முனைகிறார்கள்.ஐம்பது ஆண்டுகளுக்குமுன் பாலியல் வதைக்குட்பட்டவர்கள்கூட இப்போது அதைக் குறித்துப் பேசுகிறார்கள்.நித்தியானந்தா இந்த விஷயத்தோடு ஒப்பிடும்போது ஒரு ஜுஜிப்பி.

கத்தோலிக்க திருச்சபைகள்,அவர்களது பாடசாலைகள்,கோவில்களெனப் பாலியல் சேட்டைகள்-வதைகள் தொடரும் வதைக் கூடமாகக் கத்தோலிக்க மதஞ் சீரழிந்து போகின்றது.ஜேர்மனியில் பல பத்தாண்டுகளாகப் பாலியல்-காமச் சேட்டைகளெனப் பாலகர்களைப் பந்தாடும் பரம விரோதிகளாகக் கத்தோலிக்மதப் "பாதர்கள்"(பாதகர்கள்?) இருக்கின்றார்கள். இவர்களோடிணைந்து ஜேர்மனியப் பொருளாதாரப் புலிகளும் மக்களையொடுக்கும்போது அப்பாவி மக்கள் எங்கே செல்வார்கள்?

ஜேர்மனியப் பொருளாதாரத்தையும் அந்த நாட்டின் அரசியலையும் தீர்மானிப்பவர்களாக இருக்கும் அதிகாரவர்க்கம் மிகக்கபடத்தனமாக உழைப்பவர்களை ஏமாற்றி வருகிறது.உடல் ரீதியாகவும்,உளரீதியாகவும் மக்களை வேட்டையாடும் பெரும் பொருளாதார-மத நிறுவனங்கள் பொதுவாகச் சீரழித்துவரும் மக்கள் தொகை பெருகி வருகிறது.நாளாந்தம் திடுக்கிடும்படியாகப் பாலியல் வல்லுறுவுக் கதைகளை திருச்சபைகளில் படித்த பெண்களும்-ஆண்களும் அவிழ்த்துவருகிறார்கள்.

ஒருபுறம் பொருளாதாரத்தைத் தின்று ஏப்பமிடம் பெரும் தொழிற் குடும்பங்களது கறுப்புப்பண மற்றும் வரி ஏய்ப்புச் செய்திகள்.மறுபுறம் திருச்சபைகளின் பாலியல் வல்லுறுவுக்கதைகளென ஜேர்மனிய ஊடகங்களில் இவை மெல்லக் கசிக்கின்றன.மனித சமூகம் என்றுமில்லாதவாறு அடிமைகொள்ளப்பட்டு வருகிறது.எங்கும் அதிகாரமுடையவர்கள் மனிதர்களை ஒட்டச் சுரண்டி வருகிறார்கள்.இச் சுரண்டல் பல் முனைகளில் மனித விழுமியங்களைக் காவுகொள்கின்றது.இங்கே,நித்தியாநந்தா வேறு பாலியல் ரீதியாக அம்பலப்பட்டு பெரும் சர்ச்சையாக நமக்குள் கொட்டப்படுகின்றன.இந்த இளைஞனின் பாலியல் உணர்வை எவரும் கேலிக்குட்படுத்த முனையும்போது கொதிப்பு ஒரு புறம்,மறுபுறம் நித்தியாநந்தாவின் போலி வாழ்க்கை அதைவிடக் கொதிப்பை உண்டுபண்ணுவதாக மறுபுறம் நம்மைக் கொல்கிறது.இங்கே,"சரி-தப்பு" என்பது பாலியல் தேவைகளது தெரிவில் சரிப்பட்டு வராது.வலிந்து தூய்மைவாதம் பேசுபவர்கள் கள்வர்கள்.அதேதாம், நித்தியானந்தாவுக்கும் பொருந்தும்.

உலகு தழுவிய பொருளாதார மாபியாக்களால் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட கறுபுப்பண அனைத்து விபரங்களையும் அந்த வங்கியில் வேலைபார்ப்பவர்கள்-மற்றும் இணையக் கெக்கர்களென உலாவும் மனிதர்கள் சி.டி.யில் பதிந்து பல ஆயிரக்கணக்கானவர்களையும், அவர்களது கருப்புப் பண விபரங்களையும் ஏலத்தில் விடுகிறார்கள்.ஜேர்மனிய அரசோ 2.5 மில்லியன்கள் யூரோ வரை விலைகொடுத்த அந்தச் சி.டி.யை வேண்டுகிறது.அந்த அரசில் அமைச்சர்களாகவும்-பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் அதுள் அடக்கமென்பது உண்மையாகிறது.

அவ்வண்ணமே கத்தோலிக்கத் திருச்சபைகளது பாலியல் வல்லுறவுக்கதைகளும் ஏலத்தில் வருகிறது.திருச்சபைகள்-மடாலாயங்கள் என்பவை பரந்துபட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நிறுவனம் என்பது இடதுசாரிகளது கருத்து.இது நிரூபணமாகி வருகிறது.இதேதாம்,நித்தியாநந்தாவினது தெரிவிலும் பாலியல் சேட்டையாக விரிகிறது!


நவலிபரல் ஆட்சியாளர்களது நயவஞ்சகத்தனமான பொருளாதாரச் சீரமைப்பால் நாளும் பல்நூறு தொழிலாளிகள் வேலையிழக்கக் காரணமானர்வர்கள். இவர்களின்று தமது தேசப் பற்றைக் கிழித்து நடுத்தெருவில் எறிந்த கதை அம்பலமாகிவருகிறது! இவர்களைத் தூக்கி நிறுத்தும் திருச்சபைகளது பாலியல் சுரண்டலும் ஒரே திசையில் அம்பலமாகி வருகிறது.

முதலாளியச் சமுதாயமானது படு கேவலமான மனிதவிரோதிகளது கூடரம் என்பது அம்பலமாகிறது.மார்க்சினது கருத்துக்கள் இப்போது பரவலாகப் பொருளாதாரஞ் சார்ந்தும்-மனித நடாத்தை சார்ந்தும் மெய்யாகி வருவதில் எனக்கு மிகப் பெரும் ஆச்சரியம்.நித்தியானந்தா அந்த வகையில் ஒரு துரம்புதாம்.ரஞ்சிதா இங்கே தனது சுதந்திரமான தெரிவில் தனது பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கருவியாகக்கொண்ட மனிதனது நடாத்தையில் சமூகப் பிறவுள் உள்வாங்கப்பட்டவராக நம்முன் நிற்பது விசமத்தனமானது.

அப்பாவி மக்களை மிகக் கொடும் வரிகளைப்போட்டு வாட்டி வதைக்கும் ஜேர்மனிய-உலக அரசுகள்,தொழிலாளர்களை ஒட்ட மொட்டையடித்து,அவர்களை வேட்டையாடும் முதலாளிகளால் வழிநடத்தப்படும் அரசாகளாகவே இருக்கின்றன.மனசாட்சி என்பதெல்லாம் அதிகாரவர்க்கத்துக்கு,ஆளும் வர்க்கத்துக்கு-ரொப் மனேச்சர்களுக்குக் கிடையாதென்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தினமும் வறுமையோடும் வேலைப் பளுவோடும் ஜந்திரமாக வேலைவேண்டிப் பாவிக்கப்படும் ஒரு கருவியாகவே உலகத்தில் உழைக்கும் மனிதரை இன்றைய பொருளாதார அமைப்பு-உலக ஏகாதிபத்தியத் தொழிலகங்கள் உருவாக்கி வைத்து அடிமையாக்கியுள்ளது.இது ஒருவகையில் மறைமுகமான அடிமையுடமைச் சமுதாயமாகவே இருக்கிறது.

இத்தச் சமுதாயத்தில் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் நிதி நிறுவனங்கள் ஒருபுறம்,மறுபுறம் இவர்களுக்குக் கருத்தியல் மற்றும் உளவியற் பலத்தைக் கொடுக்கும் மத நிறுவனங்கள் மக்களுக்கு விரோதமான செயல்களில் இறங்கும்போது மக்கள்கூட்டம் அம்போவெனவிடப்படுகிறது.மனிதர்கள் பொருளாதாரம் முதற்கொண்டு விஞ்ஞானம்-ஆத்மீகமெனச் சுரண்டப்படும்போது இதை அனுமதித்து வருவதில் அரசு உடந்தையாக இருக்கிறது.பூர்ச்சுவாக்களது அரசு இதைவிட மேலாக எதையும் செய்யாதென்பது மார்க்சினது அறிவுரை.நாம்தாம் இதை மறந்து நப்பாசைகளில் கனவைக் காண முற்படுவது நமது புரிதலில் உள்ள குறைபாட்டின் தொல்லைதாம்.

அரசியல்-பொருளாதாரம் இவை இரண்டுக்கும் அப்பால் மனிதவுறவுகள் என்பது கிடையாதெனக் கத்தோலிக்கத் திருச்சபை மீள,மீளச் சொல்கிறதா?-மடாலயங்கள் இவை குறித்துச் சொல்லும் கருத்துக்கள் மோசமானவை.அவை கத்தோலிகமாக இருந்தாலென்ன இல்லை இந்துமதமாக இருந்தாலென்ன இவைகள் அனைத்தும் மனித விரோதமாகவே செயற்படுகின்றன.

இங்கே,அனைத்து மதங்களையும் கடந்து இஸ்லாமிய மதமே பாலியல் விசயத்தில் பெரும்பாலும் சிக்குப்படாமல் இருக்கிறது.மற்றும்படி அனைத்து மதங்களும் மனிதர்களை வௌ;வேறு வடிவங்களில் சுரண்டுகின்றன.இஸ்லாம் சரியாவின்வழி மக்களை அடக்குவது வேறு கதை.

இன்றைய பொருளாதாரக் கிரிமினல்கள் உலக அரச அதிபர்கள்-அமைச்சர்கள் வடிவினில்மட்டுமல்ல பெரும் தொழிலகங்களின் ரொப் மனேச்சர்களாகவும்,மதப் பீடாதிபதிகளாகவும்,வற்றிக்கான் போப்பாண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.இவர்களே பாலியல் வல்லுறுவுகளையும் கடவுளது பெயரால் நியாயப்படுத்துகிறார்கள்!

இந்த "அதியுயர் நிர்வாகிகள்-மதப் போதகர்கள்-திருச்சபைப் பிஷப்புகள்"செய்யும் திட்டங்கள் உலக மக்கள் அனைவரையுமே பாதிப்புக்குள்ளாகி விடுகிறது.உலக நாணய வங்கிய அதிபர் போடும் திட்டமானது இலங்கையில்-இந்தியாவின் விவசாயிகளின் வயற்றில் அடிப்பவையாக இருக்கென்றால் அதன் வீச்சு எவ்வளவு மனித விரோதமானதென்பதை நாம் அறிந்துவிடலாம்.

நாம் முன்பு ஜேர்மனியே அதிபரும் உலகப்பெரும் அதியுயர் நிர்வாகியான கிளவுஸ் சும்விங்கெல் எனும் ஜேர்மன் தபால் நிறுவனத்தின் (முன்னாள்) அதிபரின் வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப்பணம் குறித்து அறிந்தோம்.

இப்போது, இதைவிட அதிகமான தொழிற்குடும்பங்கள் அரசை ஏமாற்றி வரிப்பணத்தை அரசுக்கக்கட்டாது சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் பதுக்குவது அம்பலமாகி வருகிறது.

ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளிகள் வேலை பார்க்கும் அரச-தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தபால் நிறுவனத்தின் பெரும் அதிபர்.மாதமொன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் யுரோ சம்பளம் எடுக்கும் அதிகாரி தேசத்தை-நாட்டை ஏமாற்றியது மட்டுமல்ல தனக்குக் கீழே தொழில் பார்க்கும் அரை மில்லின் தொழிலாளிகளையும் உலகத்தின் மக்களையும் ஏமாற்றினான் அன்று.

கொடியவர்கள்!

குளிரினில் கைவிறைக்கக் கடிதங்கள் சுமக்கும் தொழிலாளிக்கு பட்டுணிச் சம்பளம் கொடுத்தபடி தனது வயிற்றுக்குக் கோடிகோடியாகச் சுருட்டிக்கொண்டான் கிளவுஸ் சும்விங்கல் என்ற கொடிய மிருகம்.

இத்தகைய திருடர்களே மக்களின் பெரும் பொறுப்பான அதிகாரிகளாக இந்த அரசுகள் ஒப்புவிக்கின்றனர்.


ஜேர்மனிய இறைவரிப் புலனாய்துறையின் தேடுதலில் வசமாக மாட்டுபவர்கள் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் வெளியில் வருகிறார்கள்.தம்மீது சுமத்தப்படும் குற்றத்துக்கான தண்டனையைப் பணமாகச் செலுத்தி வெளியில் வந்துவிடுகிறார்கள்.இவர்களே இன்றைய பொருளாதாரத்தைத் தின்று ஏப்பமிட்டு,அப்பாவிகளை வேட்டையாடுபவர்கள்.

இவர்கள் எங்ஙனம் மாட்டுப்படுகிறார்கள்?முதலாளித்துவப் பொருளாதார அமைப்பே சட்டரீதியாகக் கொள்ளையிடும் சட்டதிட்டங்களைத்தாமே உருவாக்கி உழைப்பவர்களைச் சுரண்ட ஜனநாயகம் என்கிறது!

எனினும்,இத்தகைய பொருளாதாரக் கிரிமினல்கள் எப்படி உருவாகிறார்கள்?

ஏன் உருவாகிறார்கள்?

அரசியல்வாதியிலிருந்து அதிகாரத்திலிருப்பவர்கள்வரை ஊழலில் மிதக்கிறார்கள்!

திருச்சபைகள் இவர்களால் வளர்த்துவிடப்பட்டு,அப்பாவிகளை ஆத்ம ரீதியாகவும் பௌதிகரீதியாகவும்-பாலியல் சுரண்டல் செய்வதற்கு அரசு அனுமதித்து வருகிறது.சட்டம் பாராமுகமாக நடக்கின்றது.


அப்பாவித் தொழிலாளர்களை வேட்டையாடும் பொறிமுறைக்கு முதலாளித்துவ ஜனநாயகம் என்று வேறு பெயரென்றால் அவர்கள் இதைவிடவா வேறு வழியில் சிந்திப்பார்கள்?

வரியேப்புத் திமிங்கலங்களில் ஆயிரக்கணக்கான பெரும் தொழிற்கழகங்களிள் நிர்வாகிகள்-அதிகாரிகளின் பெயர்களை ஜேர்மனிய அரசு பணம் கொடுத்துப் பெற்றிருக்கிறது.வெளியுலக வங்கியில் பதுக்கப்பட்ட பணங்களின் தொகையும்,அதைப் பதுக்கியர்வர்களின் முழுவிபரமும் அடங்கிய சி.டி.றூம் ஒன்றிற்கு கமிசனாக 4.2 மில்லியன்கள் யுரோவை ஜேர்மனியப் புலனாய்வுத்துறை குறிப்பிட்டவொரு துப்புத்துலக்கிக்கு வழங்கியுள்ளார்கள்.இன்னொரு சி.டி.க்கு 2.5 மில்லியன் கொடுத்து வேண்டுவதற்கு அரசு ஆலோசித்து வருகிறது.இதையிட்டு அரசு விளம்பரப்படுத்தி செய்தியின் அடிப்படையில் பல வரி ஏய்ப்புத் திமிங்கலங்கள் தாமாகவே முன்வந்து தமது வரி ஏய்ப்பு விபரங்களைச் சொல்லி அரசுக்கு வரிகட்டிச் சமுதாயத்தில் தமது பெயர்கள் வெளிவராது தடுக்கின்றார்கள்.இதை அனுமதிக்கும் அரசு,தொடர்ந்து இத்தகைய அமைப்பைக் காப்பதற்கு முயற்சித்து வருவது கண்கூடு.

எனினும்,மதப் பீடாதிபதிகள் தமது அதீத செல்வாக்கை அரசுக்குக்கூடக் காண்பித்து இத்தகைய அரசையே முடக்குகின்றார்கள்.

இங்கே, எவர் மிகப் பலமாக இருக்கின்றனர்?

இதுதாம் இன்றைய இந்தியாவில் நடப்பதும்.

அரசைவிட இந்தியாவில் பலமானவர்கள் மதப் பீடாதிபதிகள் என்பதை காஞ்சிக்காமக் கோடியின் கொலை நடாத்தையிலும், பாலியல் வல்லுறவிலும் உரைத்துப் பார்க்கும்போது,நித்தியாநந்தா சட்டத்திலிருந்து மட்டுமல்ல சமுதாயத்திடமிருந்தும் தப்பித்துப் புதிய உருவில் வெளிப்பட முடியும்.

எனினும்,இந்த இளைஞனின் அடிப்படை ஆசைகளை மறுத்து அவனைக் கிரிமனலாகப் பார்க்கும் நிலைக்கு நாம் போவது எதனால்?

அவன்,வெளியில் தன்னைப் பிரமச்சாரியாகக் காட்டியதன் விளைவால்.

இங்கே,உலகம் உருண்டை என்பதைத் தவிர நாம் செய்யக் கூடியது எது?

இது,குறித்து யோசிப்பதே மேலானது.


ப.வி.ஸ்ரீரங்கன்

06.03.2010.

1 comment:

Anonymous said...

http://rebuilddam.blogspot.com/

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...