Wednesday, November 11, 2009

கிழக்கு ஜேர்மனியின் மதில்கள்...

மதில்கள் வீழ்ந்தன...
 
 
மக்களுக்கும்,
தமக்கும் இடையில்
இரும்பைக்கொண்டு வேலி அமைத்தபடி
தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்,
ஐரோப்பா,
கிழக்கு ஜேர்மனியின் மதில்கள் வீழ்ந்ததன்பொருட்டு
புதிய உலகைத் திறந்ததென.
 
 
சுதந்திரம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் தமது புதிய உலகத்தின்
அத்திவாரம் என்பதும் அவர்கள் கூற்று.
 

 
இரும்பு வேலிக்குப் புறமாக
மக்கள் ஆரவாரித்துக் கரம் கொட்ட
மக்கள்முன் மதில்கள் அமைத்துத்
தம்மைப் பாதுகாத்தனர் தலைவர்கள்!
 
 
இவர்களிடமிருந்து
தம்மைப் பாதுகாக்க
மதில்கள் அமைத்தனர் அன்றைய கிழக்கு ஜேர்மனியத் தலைவர்கள்...
 
எல்லாஞ் சரிதாம்!
 
எதற்க்கெடுத்தாலும் அமைதி
சமாதானம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் சொல்லும் தலைவர்கள்
யாரிடமிருந்து தம்மைப் பாதுகாக்க வேலி அமைக்கின்றனர்?
 
 
எல்லோருக்குமான ஒரு வீதியில்
யாரோ சிலர் கார் ஒட்ட
அடைப்புகள் இட்டார்கள்.
பின்னாளில்,
வீதியில் தமது கார்கள் மட்டுமே செல்ல முடியுமெனவும் சொன்னார்கள்.
 
 
இதை,
ஜனநாயகம் என்றும்,தனியுடமை என்றும் சொன்னார்கள்.
எனக்கும்,எனது கூட்டத்துக்கும்
நச்சுவாயு அறைகள் கட்டியவர்கள்
நடுத்தெருவில் நின்று நறுமணமிக்க தமது வரலாற்றைச் சொல்கிறார்கள்!
 
 
பழைய ஐரோப்பா
பாட நூலிலிருந்து மாயமாய் மறைந்துபோகிறது...
 
 
மக்களது தெரிவில்
இவர்கள் மீட்பர்கள் என
ஊடகங்கள் பேசுகின்றன-அவை
கெட்டியாய் சொல்வதெல்லாம் விடுதலை என்பதாகத்
தலைவர்கள் தமக்குத்தாமே மொழி பெயர்த்தார்கள்.
 

கொட்டும் மழையில்
தலைகளை நனையக்கொடுத்தவர்கள்
கொடும் புயலில் சிக்கிய
தமது உறவுகளை மறந்து
,
மதில்களின் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்!
 
 
மதில்கள்,இரும்பு வேலிகள் சிறைகளெனின்
வன்னியிலும்,வேறு பல பரப்புகளிலும்
சிறைகள் வேலிகளாக விரிகின்றன
மதில்களை வீழ்த்தும் வல்லமையுள்ள தலைவர்கள்
சிறையுடைக்க...
 
 
மதில்கள் வேண்டாம்,
இரும்பு வேலிகள் வேண்டாம்...
இவர்கள் இவற்றை வீழ்த்துவதெனும் பெயரில்
புதிய இரும்பு வேலிகளை
எமக்கும் தமக்கும் இடையில்
கட்டிவிடுவர் ஜனநாயகத்தின் பெயரில்!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
11.11.2009
 

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...