Sunday, November 15, 2009

நீட்சேக்கு "நான்" முகவுரை எழுதியபோது...

அச்சமுடையவர்கள்,
அதிகாரத்துவமுடையதொரு சமூதாயத்தைக்
குறித்துக் கனவு காண்கின்றனர்!


னிதர்களாக இருப்பதற்கு மனிதர்கள் ஏன் முயற்சிக்கவேண்டும்?
 
நீ,உனது சுயத்தில், மனித நடாத்தையில்தானே வாழ்கிறாய்-பின்னெதற்கு மனிதர்களாக இருப்பது?
 
இந்த மனிதர்கள் என்பதன் கற்பிதம் எங்கிருந்து தொடர்கிறது?
 
உன்னை மேல்நிலைப்படுத்தும்போது நான் உனது கற்பிதத்திலிருந்து விலகிவிடுகிறேன்.
 
உன்னிலிருந்து நான் கீழ்மைப்பட்டதாக நீ கற்பிக்கும்போது, எனக்கு மேலான சாதியாகவோ அன்றி இனமாகவோ நீ நிலைத்திருக்க விரும்புகிறாய்.உனது விருப்பம் எதன் பொருட்டும் உனக்கு விருப்பமற்றதை அழிப்பதில் அந்த "மேல்நிலையை"(Übermensch)உருவகப்படுத்துகிறது.உன்னிலிருந்து ஆரம்பமாகும் உலகாக நீ,உனக்கும்-புறவுலகுக்குமான புரிதலைக் கொள்வதில் என்னைத் தொடர்ந்து அழிக்கிறாய்.எனினும்,நீ,கனவுகளுக்குத் தீனி போடும் எமது"வடிவ"மனித விருப்புக்கு உகந்தவனாகும்போது,அப்பப்ப உன்னைப் பிரதி செய்வதில் நான் நிறைவடைகிறேன்.
 
நீட்சேக்கு "நான்" முகவுரை எழுதியபோது,நடுத்தெருவில் நின்றது எனது சந்ததி.அன்றைய பொழுதொன்றில் எலிசபெத் நீட்சே அவசரமாகக் கைத்தடியைக்கொடுத்தாள் கிட்லருக்கு-ஒருத்தி!
 
ஏனென்றாள்,எதற்கென்றாள் தனக்குள்!
 
அவளது விருப்பத்துக்குரிய மேல்நிலை மனிதன் வந்துவிட்டான்-பிறந்துவிட்டான்.அவனது பின்னால் அவனைத் தகவமைத்த ஈ.ஜீ.பார்ப்பன்(I G Farben) இரசயானத்தை உலகுக்கு வழங்கியபோது,அதன் தெரிவில் உலகாளும் மேல்நிலை அவசியத்தைப் பிரதி பண்ண நீட்சேக்கு நன்றிக்கடனாகத் தடியைத் தன் கனவானுக்குக் கொடுத்தாள் அவன் தங்கை(Therese Elisabeth Alexandra Nietzsche).
 
 
 
எல்லோரும் வாருங்கள் வாசல் வரையும் வந்து தரிசிப்போம்
எங்கள் மேலவனை-வெல்வதற்காகவே நாம் சூரியக் குழந்தைகளாகப் படைக்கப்பட்டோம்.
 


 
கடவுளது கட்டளைக்காரர்களுக்கு(Der Rat der Götter;Die Aufsichtsratsmitglieder der I. G. Farben nannten sich im internen kreis "Der Rat der Götter"ஈ.ஜீ.பார்ப்பன் என்ற இரசாயனத் தொழிலகத்தின் மேற்பார்வையாளர்கள்-கட்டுப்பாட்டாளர்கள் தம்மைத் தாமே உள்ளக ரீதிய அழைத்துக்கொண்ட வார்த்தை"கடவுளின் கட்டளையாளர்கள்"என்பது..),கடவுள் செத்துவிட்டான் என்றவன் சாக,அவனது தெரிவின் மேல்நிலை மனிதன் கனவினது வடிவத்தில் ஆரியக் குழந்தைகளாவும் அகலக் கால்வைக்கும் ஆண்டவக் குழந்தைகளாகின.
 
இதன் தெரிவில் செத்தவன்போக,சிறந்தவன் கிட்லர் என்றே இன்றும் ஜெர்மனியர்களில் பலர் அக மகிழக் கூட்டம் வான் நோக்கிக் கை அசைக்க, "மேல்நிலை" அவர்களுக்குள் தெளிவாகவே புரிகிறது.நீ,எங்கு-எது செய்தாலும் நீ வெல்வோனாக இருவென ஆண்சார் புடை நெஞ்சு அகவ,அத்தனைக்கும் ஆரியமே ஆளுந்தகமையுள்ள அதி மானுடத்தின் திசையில் மேல் நிலையுள் மெலிதானவர்களைப் புதைத்தே ஆகவேண்டும்.
 
நீ,நஞ்சை உற்பத்தி செய்திடினும்-அது
கீழ்நிலையானுக்குப் பிணியகற்றும் ஓளடதம்
கொன்றழித்தலென்பது விருப்ப-வடிவத்தின் வினை என்ப
உனக்கே எனது அண்ணனின் திசையைத் தெரிவாக்கிறேன்!
 
கைத்தடிதாம் இது?
இல்லை,உலகை ஆள்வதற்கான செங்கோல்
செஞ்சேனை கட்டிக்காத்த இருஷ்சிய மண்ணில்
சோகமாய் கிட்டலர் காலில் தொங்கிய மானுடம் கீழ்நிலை
 
கொடிய வதைகள் எல்லாம்
விருப்ப மானுடத் தெரிவில் உலகைக் கடைந்தேற்றும்
கோபுரமுள்ள கோவில்கள் என்று கொடியை ஏற்று-அது
ஆரிய சாம்பிராஜ்யத்தை அழகு என்று சொல்லும் அதிமானுடன் வணங்க!
 
 
தத்துவத்துக்கும்,நடைமுறைக்குமான புள்ளியில் அறுபது மில்லியன் மக்களுக்குச் சமாதிகட்டக்கூடிய வலுவுக்கு உரம் போட்டது இந்த "மேல்நிலை"மனித நிலை-விருப்பு.இந்த உரத்தோடு வளர்தெடுத்துச் செல்வத்தின் இருப்பைக் கொள்ளையிட முனைந்தவர்கள் மேல்நிலையை விரும்பியவர்கள்.அப்போது,விருப்பமென்பது ஒரு நிலை.அது,ஒரு குழுவுக்குரிய விருப்பாகவே என்றும் இருப்பதால் அந்தக் குழுவிலிருந்து அந்நியப்படும் பெரும்பகுதி மக்கள் கீழ்நிலையை அடைகிறார்கள்.
 
அதீத புனைவுக்கு எது அவசியமான தெரிவாக இருக்கிறது?
 
அச்சமுடையவர்கள்,அதிகாரத்துவமுடையதொரு சமூதாயத்தைக் குறித்துக் கனவு காண்கின்றனர்!
 
அந்த அதிகாரம் நம்மிடம் புலிவடிவிலும்,பிரபாகரன் வடிவிலும் நிலைத்திருந்தது.அதன் முடிவு,கிட்லரது முடிவோடு நெருங்கும்போது எஞ்சியது ஏமாற்றம் மட்டுமல்ல.அது,நோக்கிய விருப்பின் தெரிவில் கற்பனைக்குள் "அழ்மன விருப்பு" அதி மானுட நடாத்தையும் தான்.இந்த விருப்பு இன்றுவரையும் ஜேர்மனியர்களை எங்கும்-எதிலும் முதன்மை பெறவேண்டுமென்ற துடிப்புக்கும்,மற்றவர்களை ஏற்காது-பரிகாசிக்கும் பண்புக்கும் விரட்டிக்கொண்டிருக்கு.
 
 
கட்டுக்குள் இருக்கும் அதிகாரம்,கண்டுகொள்ளவதற்கு நீட்சே சொன்ன வடிவ-விருப்பு"மேல்நிலை"மனித நடாத்தை புரியத்தக்கபோது புரியாத புதிராக நம்மை ஆட்டும்.மதத்தினதும்,பெண்ணினதும் இயல்புகளைச் சதா வருத்தத்துக்குரிய பகுதிகளாகக் கண்ட நீட்சேக்கு சரதுஷ்டரா துணைக்கு வருகிறான்.சொல்லாத பக்கங்களென்ற ஒன்றிக்கு அவன் கொடுத்த "ஊபமென்ஸ்"தன்முனைப்பின்பாற்பட்டதென்று சொல்வதிலும் சிக்கலொன்று உண்டாக்குவதற்கு அவனுக்குக் கைகொடுத்தது"அதிகாரத்தின் ஆண்மை"இது திரும்பத்திரும்ப வரும்.அழியும் அழிந்து மீளத் தன்னைத் தகவமைக்கும்.இந்த நிகழ்வூட்டத்தோடு திசை நோக்குகிறது இன்றைய புதிய நாசிகளது திசைவழி.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
 
15.11.2009

Thursday, November 12, 2009

சமூக விரோதிகளின் திசையமைவு

உண்மைகளை இனங்காணும் பாதை...
 
 
னவுகளைக் காவுகொள்ள ஒரு வினாடியை ஒதுக்கிவிடுவோம்.கனவினால் ஆனது எதுவுமில்லை.தூங்கிய பொழுதெல்லாம் எமது வாழ்வு பறிபோனது.ஆயிரக்கணக்கான மைல் தாண்டி நம் மண்ணையிழந்து புகலிடம் தேடிய வாழ்வு, தாயகத்தை நோக்கிய திசையில்...
 
யார் யாருக்காகவோ மனிதர்கள் செத்தார் நம்மிடம்.
 
நாடு பிரிப்பதற்காய்ப் போராடி அனைத்தையும் இழந்து அடிமைப்பட்ட இனம்,பணத்தைக் குறிவைத்தும்,பதவியைக் குறிவைத்தும் எமக்கு எகத் தாளமாய் அரசியல் சொல்கிறது.கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மனிதர்கள் குறித்து அது மீளவும் நியாயப்படுத்துகிறது.இதுவரையான கொலைகளுக்கு உடந்தையானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
 
சமூக விரோதிகளின் திசையமைவு:
 
 
இத்தகைய கொலைஞர்கள் கட்டியமைக்கும் "தமிழர் நல அரசியல்" என்பது இலங்கைக்கு வெளியே புலம் பெயர்ந்து வாழும் மக்களை ஒட்டச் சுரண்டும் கயமையோடு,அவர்களது அறிவை மழுங்கடிக்கும் தமிழ்த் தேசிய வெறியை மீளவூட்டுவதாக இருக்கும்.இதற்காகப் பிரபாகரனை மீளத் துதிப்பதிலிருந்து இது ஆரம்பிக்கப் போகிறது.வரும்"மாவீரர்"நினைவு நாட்கள் இத்தகைய தெரிவின் முன்னே கட்டமைக்கப்படுகிறது.
 
துதி பாடும் அரசியல் இதுவரை செய்த தீங்குகள் குறித்து எவருமே அலட்டிக்கொள்ளவில்லை.தமிழின்பெயரால் தாயகம் தேவை என்பவர்கள், தாம் சேகரித்த செல்வத்தோடு மீதமாகவும் செல்வம் குவிக்கப் புறப்படும் திசை "தமிழர் நலம்,தேசம்,விடுதலை" என்று விரிகிறது.இவர்களைத் திருத்துவதென்பது அவசியமற்றது.இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும்,இதுவரை இலங்கையில் கொலைகளை "தமிழ் மக்கள் விடுதலை"யெனும் பெயரில் கட்டியமைத்தவர்கள் என்பதாலும் கிரிமினல் பேர்வழிகளாவார்கள்.
 

பெருந்திரளான மக்களது வாழ்வாதாரத்தையும்,உயிரையும் கொள்ளையடித்தவர்கள் என்பதால் இவர்களைக் கண்டிப்பாகத் தண்டித்தாகவேண்டும்.ஐரோப்பிய மண்ணில் பலாத்தகாரமகத் தமிழ்பேசும் மக்களை மேலும் குழப்பத்துக்கும்,மனமுடக்கத்துக்கும் உள்ளாக்கும் உளவியற் போரைச் செய்யும் இந்தச் சமூகவிரோதிகள், பழைய புலிகளது இன்றைய செயற்பாட்டாளர்களாக இனம் காணப்படுகிறார்கள்.இவர்கள் குறித்து நிறையப் பேசப்பட வேண்டும்.
 
1): இலங்கையில் கொலை அரசியலைச் செய்வதற்கு புலம் பெயர் மக்களைத் தமக்காகான வழிகளில் திரட்டி, அவர்களது எழிச்சியின் திசையில் கொலைகளை நியாயப்படுத்தியது,
 
2):புலம்பெயர் மக்களை தமிழீழ விடுதலை எனும் பெயரில் வெறியூட்டி அவர்களைப் பொருளாதார ரீதியாகவும்,பௌதிக ரீதியாகவும் சுரண்டியது,
 
3):இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கி அவர்களது சமூக வாழ்வைத் தொடர்ந்து திருடுவது,
 
4):இலங்கையில் யுத்தத்தில் சீரழிந்த சமூக வாழ்வைச் சீரமைப்பதற்குத் தடையாக மீளவும், தமிழ் தேசியவெறியைக் கிளறிவிட்டு,அவர்களை இலங்கை அரசுக்குக் காட்டிக்கொடுத்துப் பலியிட முனைவது,
 
5):நாடுகடந்த தமிழீழ அரசு,நாடாளுமன்றம் எனும் திசை வழியில் புலம்பெயர் தமிழ்-இளம் சந்ததியை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கி அவர்களது செயற்றிறனை மழுங்கடிப்பதும்,அவர்களை வைத்து இலங்கை அரசோடு பேரம்பேச முனைவது,
 
மேற்காணம் சமூகவிரோதச் செயற்பாடுகளின்பொருட்டு இவர்களைத் தண்டித்தாகவேண்டும்.ஒரு இனக் குழுமத்தைத் தொடர்ந்து ஏமாற்றியபடி,அக் குழுமத்தின் சமூக இருப்பைக் கொந்தளிப்புக்குள்ளாக்குவதும்,அவர்களை பயங்கரவாதச் செயற்பாட்டுக்குள் தொடர்ந்து இருத்தி வைப்பதும் மிகப் பெரிய சமூ விரோதமாகும்.பொது மக்களது பரந்துபட்ட வாழ்வையும்,அவர்களது அமைதியையும் சீரழிக்கும் இக் கொடிய சமூக விரோதிகள், செல்வம் சேகரிப்பதற்காக ஒரு இனக் குழுமத்தைத் தொடர்ந்து வருத்துவதென்பது தண்டனைக்குட்பட்ட குற்றச் செயலாக இருப்பதால்,இவர்களைச் சர்வதேசச் சட்டங்களுக்குட்பட்ட வகைகளில் தண்டனைக்குட்படுத்த வேண்டிய தேவையும், அனைத்து மக்கள் நலச் சக்திகளுக்கும் உண்டு.இலங்கையில் அமைதிக்கும்,சகோதாரத்துவத்துக்கும் எதிராகச் செயற்படும் இலங்கையின் ஆளும் வர்க்கத்துக்கும்-இனவாதக் கட்சிகளுக்கும்,இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
 
சிந்தனைச் சோம்பல்:
 
நசிகேதன் என்ற ஒரு மகா ஞானி எமனிடம் பிரமத்தைப்பற்றிக் கற்றானாம்.அவன் எல்லா வகையான தத்துவங்களையும் கேள்விகளாலேயேதாம் வேள்வி செய்து,தன்வயப்படுத்தியதாகவொரு பண்டைய பாரதத்தின் நம்பிக்கை.
 
அறிவைப் பெறுவதற்கு"பிரத்தியட்சம்,ஊகம்,அநுபவவாக்கு"என்ற அடிப்படைப் பிரமாணங்கள் உண்டு.அதைத்தாம் பலர் படிப்படியாக வளர்த்து,"புற நிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுவதாகும்"என்றார்கள்.-இங்கு எந்தப் புற நிலையும் இந்தத் தமிழ்-ஈழ அநுதாபிகளைத் தூண்டுவதாவில்லை.அகத்தின் கருத்துப்பரப்பு:"ஆதிகேசன் போட்டான் கோடு,அது வழியே நமது பொடி நடை"என்ற மாதிரித் திரியும் ஒரு தலைமுறைச் சீர்கேடு.
 
"மக்களிடமிருந்து கற்று,அதை மக்களிடமே வழங்கல்"என்று எவனொருவன் கத்து,கத்தென்று கத்தித் தொலைத்தான்.கூடவே"கற்றறி,கற்றறி,இன்னுமொரு முறை கற்றுத் தெளிவுறு"என்றான்.-அவன் புரட்சிக்காரன்,சோவியத்தை நிறுவிக்காட்டினான்.
 
இங்கோ"தலைவர் சொன்னார்,தலைவர் செய்தார்,தலைவருக்குத் தெரிந்திருந்தது,தலைவர்...தலைவர்,தலைவர்..."
 
விளைவு?
 
அதோ கண்ணில் தெரியுது, கருங் குருதி!
 
 
வன்னி யுத்தத்தில் வடிந்த குருதி உலர்வதற்குள்,வாய் நெறையப் பொய்யுரைக்க நாம் உசாராகிறோம்.
 
புலம் பெயர் புலிகள் இன்னும் அந்நியச் சேவையில் தம்மை இணைத்தே உள்ளனர் என்பதும் புரியப்படவேண்டும்.
 
 
ஒரு தேசிய இனம்,இன்னொரு தேசிய இனத்திடம் ஒடுக்குமுறைக்குள்ளாகிய நிலையில்-அவ்வொடுக்குமுறைக்கெதிராகப் போராடித் தன்னை விடுவித்துக்கொள்ளச் செய்யமுனையும் விடுதலைப்போரை,அந்நியச் சக்திகள்-பிராந்திய நலனுக்கான தேசங்கள் அதன் ஆரம்பிலிருந்தே திட்டமிட்டுத் தொடக்கி ,அதைச் சீரழித்து-அழித்த வரலாறு ஈழத்தமிழர்களின் வரலாறாகவே இன்று இருக்கிறது.
 
இந்நிலையில்...
 
அ): மனித சக்தியை விரயமாக்கிப் புரட்சிக்கு எதிரானவொரு சூழலைத் தொடர்ந்திருத்திவைக்கும் சதியை உலகக்கூட்டோடு செய்துவரும் புலம்பெயர் புலிக் கயவர்களையிட்டுத் தமிழ் பேசும் இளைஞர் சமுதாயம் விழிப்படையவேண்டிய தேவை இப்போது மிகவும் அவசியமானது.இதையிட்டு இளைஞர்களிடம் இத்தகைய சதியைக் குறித்தான பரப்புரைகள்-ஆய்வுகளை முதலில் கொண்டு செல்வதும் காலத்தின் தேவைகளில் ஒன்று.தமிழீழப் போலி கனவுகள் மேலும் ஒரு இனத்தை மொட்டையடிப்பது என்பது தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமான பணி.
 
 
ஆ): எமது சமுதயாத்துக்காக, அப்பாவிகளாகப் போராடி மடிந்த அனைத்துச் சிறார்களுக்கும், தேசபக்தர்களுக்குரிய மரியாதையைச் செய்வதற்கு நாம் தயங்கக்கூடாது.அதே தருணத்தில், அவர்கள் அணிதிரண்ட அமைப்புகள் யாவும் அந்நியச் சக்திகளது ஊக்கம்-உந்துதலோடு கண்காணிக்கப்பட்டவை என்பதையும், அந்நியர்களுக்குப் புலிகள் போன்ற அமைப்புகள் அடியாளாக இருந்த இத்தகைய நடாத்தையின் பொருட்டே எமது போராளிச் சிறார்கள் அழிக்கப்பட்டார்கள் என்பதையும் வரலாற்றில் ஆய்ந்து கூறுவது எமது கடமையே.
 
 
இ): தமிழ்பேசும் மக்களின் தேசிய அடையாளமாயினும் சரி,அல்லது அவர்களின் சுயநிர்ணயமானாலும் சரி,அது பொதுவான ஜனநாயகத் தன்மைகளை மதிப்பதற்கு முனையும்போதே வலிவுற முடியும்.உலகத்தின் செயற்பாடுகள்-இவர்களைச் சார்ந்திருக்கும் ஊடகங்களின் பக்கச் சார்புகள் இன்று நேற்றைய கதைகளில்லை.தமிழ் மக்கள்,இலங்கையின் அனைத்து மக்களின் பன்முகத் தன்மையிலான வெளிப்பாடுகளை அங்கீகரித்து,அதையே புரட்சிகரமானமுறையில் இலங்கையினது மாற்றினங்களது தோழமையோடு,தமிழ்-சிங்கள இனவாதச் சியோனிசத்துக்கெதிரானதாக வளர்த்தெடுக்கும்போதுதாம் இலங்கையின் சிறுபான்மை இனமக்கள் தம் விடுதலைக்கான முதற்கல்லை எடுத்துவைப்பர் என்றே நாம் இப்போதும்-அப்போதும் கருதி வருகிறோம்.
 
 
இப்போதும்-அதுவும் பூண்டோடு புலித் தலைமையும்,போராளிகளும் அழிந்த பின்பும்,தமிழீழத்தைச் சொல்லியே"துரோகம்-தியாகம்"என்னுங் கருத்தாங்கங்களை மலினப்படுத்துகிறோம்.புலம்பெயர் "தமிழ் மனது"இதுவரை போட்டுத்தள்ளிய தமிழ்பேசும் மக்களின் உயிரோடு தேசக்கனவைத் தொடர்ந்து நிலைப்படுத்த எத்தனிக்கிறது.இந்தப் புலிவழித் தமிழீழப் போராட்டத்தில் நம்மால் இழக்கப்பட முடியாத மானுட இழப்பு நடந்தேறியுள்ளது.இது குறித்துப் பூசி மெழுகிவிடுகிறோம்!
 
நாம் மனிதர்களாகச் சிந்தித்தலென்பது அடியோடு மறந்துபோன விசயமாகப் போய்யுள்ளது.
 
 
இன்று, இலங்கையில் நம்மை இன்னொரு இனத்தின் ஆளும் வர்க்கம் அடிமை கொண்டுள்ளது.நாமும் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.இந்தக் காரணத்தால் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.வன்னியில் புலிகளை அழித்த கையோடு எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் வியூகத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான் இப்போது.நமது மக்கள் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.உழைத்துண்ட மக்கள் ஒரு குவளை சோற்றுக்காக வரிசையில் வெயிற் காய்கிறார்கள் இன்று.இந்தக் கொடுமையிலும் இங்கே நாடுகடந்த தமிழீழப் பிரகடனமும்,பங்கீட்டுச் சண்டையும் மக்களது பணத்தின் பொருட்டுத் தொடர்கிறது.
 
மக்களைத் தொடர்ந்து அந்நியமாக்கிய "தமிழீழப் போராட்டம்"சாரம்சத்தில் தவறானவர்களால் தவறான நோக்கத்துக்கமைய நடாத்தப்பட்டு அழிந்துபோனது.இதன் தொடரில், இப்போதும் பேராசை,பதவி வெறி பிடித்த புலம்பெயர் புலிப்பினாமிகள் தமது அற்ப வருவாய்க்காகவும்,பதவிச் சுகத்துக்காவும் மக்களையும் அவர்களது ஆன்ம விருப்பையும் அடியோடு மறுத்தொதுக்குவது என்றைக்கும் மகத்தான செயலாக இருக்கமுடியாது.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி
13.11.2009
 

Wednesday, November 11, 2009

கிழக்கு ஜேர்மனியின் மதில்கள்...

மதில்கள் வீழ்ந்தன...
 
 
மக்களுக்கும்,
தமக்கும் இடையில்
இரும்பைக்கொண்டு வேலி அமைத்தபடி
தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்,
ஐரோப்பா,
கிழக்கு ஜேர்மனியின் மதில்கள் வீழ்ந்ததன்பொருட்டு
புதிய உலகைத் திறந்ததென.
 
 
சுதந்திரம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் தமது புதிய உலகத்தின்
அத்திவாரம் என்பதும் அவர்கள் கூற்று.
 

 
இரும்பு வேலிக்குப் புறமாக
மக்கள் ஆரவாரித்துக் கரம் கொட்ட
மக்கள்முன் மதில்கள் அமைத்துத்
தம்மைப் பாதுகாத்தனர் தலைவர்கள்!
 
 
இவர்களிடமிருந்து
தம்மைப் பாதுகாக்க
மதில்கள் அமைத்தனர் அன்றைய கிழக்கு ஜேர்மனியத் தலைவர்கள்...
 
எல்லாஞ் சரிதாம்!
 
எதற்க்கெடுத்தாலும் அமைதி
சமாதானம்,சகோதரத்துவம்,
ஜனநாயகம் சொல்லும் தலைவர்கள்
யாரிடமிருந்து தம்மைப் பாதுகாக்க வேலி அமைக்கின்றனர்?
 
 
எல்லோருக்குமான ஒரு வீதியில்
யாரோ சிலர் கார் ஒட்ட
அடைப்புகள் இட்டார்கள்.
பின்னாளில்,
வீதியில் தமது கார்கள் மட்டுமே செல்ல முடியுமெனவும் சொன்னார்கள்.
 
 
இதை,
ஜனநாயகம் என்றும்,தனியுடமை என்றும் சொன்னார்கள்.
எனக்கும்,எனது கூட்டத்துக்கும்
நச்சுவாயு அறைகள் கட்டியவர்கள்
நடுத்தெருவில் நின்று நறுமணமிக்க தமது வரலாற்றைச் சொல்கிறார்கள்!
 
 
பழைய ஐரோப்பா
பாட நூலிலிருந்து மாயமாய் மறைந்துபோகிறது...
 
 
மக்களது தெரிவில்
இவர்கள் மீட்பர்கள் என
ஊடகங்கள் பேசுகின்றன-அவை
கெட்டியாய் சொல்வதெல்லாம் விடுதலை என்பதாகத்
தலைவர்கள் தமக்குத்தாமே மொழி பெயர்த்தார்கள்.
 

கொட்டும் மழையில்
தலைகளை நனையக்கொடுத்தவர்கள்
கொடும் புயலில் சிக்கிய
தமது உறவுகளை மறந்து
,
மதில்களின் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்!
 
 
மதில்கள்,இரும்பு வேலிகள் சிறைகளெனின்
வன்னியிலும்,வேறு பல பரப்புகளிலும்
சிறைகள் வேலிகளாக விரிகின்றன
மதில்களை வீழ்த்தும் வல்லமையுள்ள தலைவர்கள்
சிறையுடைக்க...
 
 
மதில்கள் வேண்டாம்,
இரும்பு வேலிகள் வேண்டாம்...
இவர்கள் இவற்றை வீழ்த்துவதெனும் பெயரில்
புதிய இரும்பு வேலிகளை
எமக்கும் தமக்கும் இடையில்
கட்டிவிடுவர் ஜனநாயகத்தின் பெயரில்!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
11.11.2009
 

Monday, November 09, 2009

நவம்பர் இருபத்தியேழுக்கான ஒத்திகைச் செய்துவரும் ஜீ.ரீ.வி.

மக்களைக் கருவறுக்கும்
பணச் சேகரிப்பு அரசியல்
 
நவம்பர்: 27,நெருங்க-நெருங்க கட்டியமைக்கப்படும் பிம்பங்கள்
பணத்தைக் குவிப்பதற்கான பந்தையக் குதிரைகளாக...
 
"தமிழ்-பிரபாகர" வீரத்துக்குச் சிங்களக் துட்டக்கைமுனு வன்னிக்குள்-நந்திக் கடற்கரையில் பிரபா உச்சி பிளந்து காட்டிய துட்டக்கைமுனு நமது மக்களது அடிமை சாசனத்தை உறுதிப்படுத்தும் சிங்கள உளவியலாக அன்று வெளிபட்டது.இது, ஒரு வரலாற்றுத் தரிசனமாகவே உள்வாங்கப்படவேண்டும்.இத்தகையவொரு உளவியலைச் சமுதாய மனநிலையாக மாற்றிய இலங்கையின் இனவாதத்தத் தொடர்சியுள் உள்ள உண்மைகளை வெறுமனவே இனவாதக் கருத்தாக ஒதுக்கிவிட முடியாது.
 
என்றபோதும், எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.
 
 
ஒரு இயக்கத் தலைவனது சரணடைவுக்குப்பின்,அவனைக் கொலை செய்து மகிழ்ந்த அரசியல் இலங்கைக்குச் சொந்தமெனினும்,அதையே மறைத்து இன்னும் தமிழீழக் கனவு வீசும் கயமைமிகு புலம்பெயர் தமிழ் அரசியலானது ஆபத்தானது.
 
இஃது, ஒரு சமுதாயத்தையே சதிராடிச் சீரழித்தபின் மீளவும், பணம்பறிக்கும் வியாபார உத்தியோடு அரசியல் செய்வதுதாம் எமக்குரிய பாரிய வெறுப்பாக அமைகிறது.கடந்த முப்பதாண்டுப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள்.இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்மண்ணைப் போக,எஞ்சியிருப்பவர்கள், தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில், கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் இனிவரும் நவம்பர் 27 கொலையையும்-சதியையும்,சரணாகதி அரசியலையும் புனிதப்படுத்தியபடி போர்க்கதை சொல்லப் போகிறது.
 
மக்களை ஒட்ட மொட்டையடித்து,அநாதைகளாக்குவதில் தொடரும் அரசியல் என்னவென்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும்!
 
 
இது,மற்றவர்களை ஏமாற்றிப்பிழைப்பதில் காலாகாலமாகப் பழக்கப்பட்டவொரு சமுதாயத்தின் அகவிருப்பாகவே இனங்கண்டாக வேண்டும்."ஊரை அடித்து உலையில் போடும்" ,யாழ்ப்பாணிய அரசியலுக்கு, அழிவு இன்னும் இல்லை என்பதை அழகாகக இனங்காணும் அரசியலை இப்போது ஜீ.ரீ.விக்குள் காணமுடியும்.வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லுகிறது.
 




 
 
எனினும்,இத்தகைய அரசியல் காயடிப்பைச் செய்த புலிகளின் அழிவில், தமிழர்களைச் சொல்லி-வன்னிய அவலத்தைச் சொல்லியும்,கூடவே, இலங்கைப்பாசிச அரசினது நிகழ்கால இனவழிப்பு அரசியலைச் சொல்லியபடி "வன்னி மக்களுக்கு உதவி-புனரமைப்பு"எனப் பற்பல பெயரிட்டு,பணப்பறிப்பை நிறைவேற்றப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் அரசியல் அநாதைகள் முயற்சிப்பது பணத்தை-செல்வத்தைத் மிக இலகுவாகத் திரட்டிக் கொள்வதற்கான எதிர்பார்ப்பிலிருந்தே தோன்றுவதாக எண்ணிக்கொள்வதற்கான சாதகமான போக்ககள் இப்போது உருவாகிறது.இதன் அடிப்படையில் இன்னொரு நிதிதிரட்டல் மற்றும் சிந்தனை மழுங்கடித்தல் இலங்கை-இந்திய நலன்களுக்கிசைவாக நடந்தேறும் அபாயம் நம்மை நோக்கிப் படையெடுக்கிறது.இதை மீளத் தொடக்கி வைப்பது ஜீ.ரீ.வீ என்றாக இருக்கும்.இது,பழைய புலிகளது"துரோகிகளின்"-இன்றைய "நாணயப் புலிகளது" ஊடகமாக உருபெறத் துடிக்கிறது.
 
 
"எமக்கு உருப்படியாய்ப் புலராத வாழ்வு
ஓடாய் உழைத்தும் கடன்பட்ட
நெஞ்சோடு சோற்றுக் கோப்பை
விரல் நனைத்த கணமே மறு வேலை
துரத்தும் எமை...
 
உங்களுக்கோ உலையேறும் அடுப்புகள்
எங்கள் அடுப்பில் பூனைகள் புரளும்
துள்ளும் குட்டிகள்
தூங்கும் சுகமாய்
 
குண்டடிபட்ட மனிதக் குழந்தை
குருதியுள் அமிழ்ந்து கருவாடாகியபோது
கம்பி வேலிக்குள் அதன் எச்சம் அடக்கப்பட்டது
இத்தனைக்கும் மத்தியில் மீள உண்டியலோடு
உருப்படாத ஜீ.ரீ.வீ. ஊடகக்காரர்!..."
 
 
தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்திலும்,எவரெவரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும், தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.
 
ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்தது.
 
அது, எமை அனைத்துக்கும் அடிமையாக்கிச் சென்றுள்ளது.
 
இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த முனையும் புலம் பெயர் எச்ச சொச்சங்கள் போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு "உரிமை"குறித்துப் பேசுகிறது.அதே பழைய பாணியில் கருத்தாடும் நபர்கள், கடந்த காலத்தில் அழியுண்டுபோன போராளிகளை மிக மலினப்படுத்திப் பூசிப்பதால் அவர்களது கொலைகளை தேசத்துக்கான தியாகமாக்கிவிட முடியாது.
 
நவம்பர் இருபத்தியேழுக்கான ஒத்திகைச் செய்துவரும் ஜீ.ரீ.வி.
 
இந்த ஊடகமோ,மேலும் தமிழ் பேசும் மக்களது முற்போக்கு நகர்வை முடக்குவதற்கானதான வாதங்களில் கருத்துக்களைத் தகவமைத்துக் கொள்கிறது.இதுவரையான எல்லாவிதப் போராட்ட முறைகளும் செய்து பார்த்த இவர்களது போராட்டத் தலைமையோ, இறுதியில் சரணடைந்து செத்த ஈனத்தனத்தை,இவர்கள் தியாகமாக்குவதில் மேலுஞ் சில்லறைகளைக் கவ்வுவதற்கேற்ப அரசியல் பேசுவது தமிழ் மக்களது ஞபகசக்தியோடு விளையாடுவதே.
 
மக்களோ எல்லாவற்றையும் விசாரிக்க முனையும்போது, மீளவும் அதே வித்iதாகளோடு புலம்பெயர் ஊடகங்கள் உருவேற்ற முனையாவிடினும்,ஒப்பாரிவைத்துக்கொண்டபடி தம்மீது பச்சோதாபங்கொள்ளும் ஒரு இனத்தின் ஒப்புதலைக் குறிவைப்பது, பணம் பொறுக்கும் பண்புக்குட்பட்டதென்பதற்கு ஜீ.ரீ.வீக்கு காசு சேர்க்கும்-பிச்சை கேட்கும் என்.ரீ. ஜெகனது பாங்கே உறுதிப்படுத்துகிறது.
 
அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது தமக்கு எதிரான எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிக்கிறது!இதைப் புதிய புலிக்காவடிகளும்,அதை ஆட்டுவிப்பவர்களும் தொடர்தே வருகிறார்கள்.தத்தமது இடத்தைத் தக்கவைப்பதில் மிகவும் நிதானமாகவே இந்தக்கூட்டு இருக்கிறது.
 
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள்படும் தொடர் துன்பங்கள்,பசி,பட்டுணி,சாவு,பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில்(உயிர் வாழ்வதே சாத்தியமில்லாத தேசத்தில் அதைச் சாத்தியப் படுதும் அவா)உருவாக்கும்.இப்போது விடுதலை,சுதந்திரம் என்பதெல்லாம் மக்களின் வாழ்வோடு சம்பந்தப்படாத விஷயமாக மக்களே உணரத்தலைப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
 
இதை இனம் கண்டவர்கள் எமது மக்களின் எதிரிகளே!நம்மைச் சுற்றி மதில்களை உருவாக்கிய விடுதலை இயக்கங்கள், நமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாது அவர்களையே ஆயுதப் பலாத்தகாரத்தால் ஒடுக்கித் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனைந்த இந்தக் கேடுகெட்ட அரசியலுக்குப் புலிகளையோ அல்லது மற்றைய இயக்கங்களையோ காரணம்காட்டிப் பேசுவதைவிட,நமது மக்களின் அரசியல் அறிவு நிலை சார்ந்து சிந்திப்பதே சாலச் சிறந்தது.
 
இன்றோ, புலிகளது தோல்வியிலிருந்து பாடங்கற்க வேண்டியவொரு ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமாக நாம் இருந்தும்... அது, குறித்து மேம்போக்கான மனநிலையோடு மிகக் கெடுதியாகத் தொலைக்காட்சியில் வீராப்புப் பேசுகிறோம்!
 
இலங்கை அரசவரலாற்றில் தமிழர்களை வெற்றிகொண்ட சிங்கள இராணுவ மாயை சிங்கள மக்களைத் தமிழ்பேசும் மக்களுக்கான எஜமான நிலைக்கு உயர்த்தியுள்ளது.இது,இனவாத அரசியலில் பின் தொடரும் பொருளாதார இலக்குகளோடு முற்றிலும் தொடர்புடையதாக மாறியுள்ள நிலையிலும் சிங்கள எஜமான உளவியலானது எந்தவிதப் பண்பு மாற்றத்தையும்கொள்வதற்குச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இலக்குகள் இடங்கொடுக்கவில்லை. அது,தொடர்ந்து இன மேலாதிக்கத்தைக் கடைப்பிடித்தபடியேதாம் ஆசிய மூலதனத்தோடான தனது உடன்பாடுகளைக் கொண்டியங்குகிறது.
 
புலம்பெயர்ந்த மண்ணிலோ,தமிழ்மக்களை ஒட்ட மொட்டையடித்து,அரசியல் அநாதைகளாக்குவதற்கென்றொரு கூட்டம்"நாடு கடந்த தமிழீழம்-நாடு கடந்த நாடாளுமன்றம்"என்று ஒப்பாரி வைத்துப் பணங்கறப்பதில் குறியாக...இதைத் தடுத்து நிறுத்துவதற்கு நாம் முனைந்து,இவர்களது மோசடி வித்தைகளை அம்பலப்படுத்தியாகவேண்டும்.இது எந்தவடிவிலுஞ் செய்து முடிக்கவேண்டிய அவசியப்பணி.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி
09.11.2009

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...