இலங்கையின் இரண்டாவது சுனாமி.
கிட்டத்தட்ட இது சுனாமி அழிவைவிட மிகமோசமான அழிவைத் தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தியது.அதன் கோராத்தாண்டவத்தின் அதிர்வு வன்னியில் தடுப்பு முகாங்களாக விரிந்துகொண்டது.அதிர்ச்சியான யுத்த அழிவுகள் திட்டமிடப்பட்ட பொருளாதாரஞ்சார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்கு அவசியமாக இலங்கை அரசினது அந்நியப் பங்காளிகளால் முன்னெடுக்கப்பட்டபின் வன்னி மண்ணில் நிகழும் அரசிலானது மிகவும் கெடுதியானது.இது,மாறிவரும் உலகப் பொருளாதார இலக்குகளால் பந்தாடப்பட்ட வரலாற்றை எமக்கு விட்டுச் சென்ற புலிகளது "தமிமீழ"ப் போராட்டமாக எம் முன் நிற்கிறது.ஆனால், இதற்குள் பல உள்நோக்கங்கள் நிலவுகிறது.குறிப்பாக அந்நியத் தேசங்களதும்,தென்னாசியப்பிராந்தியத்தின் அரசியல் எதிர்காலமும் அதுசார்ந்த தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியும் இவற்றுக்குள் புதைந்துபோய்க் கிடக்கிறது.
கடந்தகாலத்தில் இலங்கையில் ஜே.வி.பி.யை இரண்டு முறைகள் அழித்த இலங்கை அரசும் அதன் அந்நிய எஜமானர்களும் நிச்சியம் இன்னொரு படுகொலைக் களத்தை இந்தத்"தமிழீழ"போராட்டத்துக்குச் செய்யத் துணியுமென்பதை நாம் ஏலவேஅறிந்தேயிருந்தோம்.இது, குறித்துப் பல தடவைகள் உரையாடினோம்.எனினும்,தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புலிகளது இராணுவப்பல மாஜை,அத்தகைய அழிப்பு அரசியலைக் கவனத்தில் எடுக்கவில்லை!ஆனால்,அதை(படுகொலைக் களத்தை) வன்னியில் எந்தக் குற்றமுமின்றிச் செய்து முடித்தது சிங்கள அரச பாசிசம்.
வன்னியைச் சுடுகாடாக்கிய யுத்தம்:
தமிழ் மக்களைத் தமது மண்ணிலிருக்கும்போதே உயிருடன் புதைக்கும் இந்தச் சூழ்நிலை எங்ஙனம் தோன்றுகிறது?
இத்தகைய யுத்தக்கொலைகளின் பின்னே இலங்கை ஆளும் வர்க்கம் அடையவிருக்கும் இலக்கென்ன?
இலங்கைத் தேசியவொருமைப்பாட்டை இதனால் காத்திடுவதா இலங்கை அரசினது நோக்கு?
அல்லது, தமிழ்த் தேசியவாதத்தைத் தோற்கடிக்கும் உளவியல் நெருக்கடித் தாக்குதலாகச் செய்வதா இலங்கையின் பௌத்த தர்மம்?
இவை மேலோட்டமான எளிய கேள்விகள்.பதில்களைப் பல முனைகளில் தேடலாம்.இன்றைய ஆசிய-மேற்குலக ஏகாதிபத்தியங்களின் பொருளாதார முன்னெடுப்பை இலங்கைத் தேசத்துக்குள் இனங்காணாது பதில்களைத் தேடமுடியாது.
தமிழ் "மார்க்சிய" நண்பர்கள் சிலர் கீழ்வரும்படி எதிர்வு கூறுகிறார்கள்:"இலங்கையின் புரட்சிக்கான சூழலுக்கு, ஆசிய மூலதனத்தின் வரவோடு புதிய பாட்டாளிய வர்க்கத்தை அது தோற்றுவிக்கும் என்றும், உற்பத்திச் சக்திகளை(தொழில்மயப்படுத்தும் உற்பத்தி ஜந்திரங்கள்) உருவாக்கி அதுசார்ந்த உறவுகளை வலுப்படுத்தும்.இதனால் தொழிற்சங்கம்வரும்,பாட்டாளிகள் தமக்குள் இனங்கடந்து ஒன்றுபடுவார்கள்-இனவாதம் செயலிழக்கும்,இனங்கலந்து தொழில் ஈடுபடும்போது அங்கே இனவொற்றுமை வலுக்கும்,இது புரட்சிகரமான சூழலைத் தகவமைக்கும்." என்று பகற் கனவுகாணும் நண்பர்கள்,அதன் பாதகமான பக்கங்களை மறுப்பது ஒருவகையில் ஏகாதிபத்தியங்களிடம் சரணடையும் அரசியலாகவே இருக்கும்.இதைக் கவனப்படுத்தும்போது,நிலைமை கட்டுக்கடங்காத திசை நோக்கிச் செல்வதை இனங்காண முடியும்.இதைச் சற்றுப் புரிய முனைவோம்.
1):புலிகளை முற்று முழுதாக அழித்தபின் இலங்கையினது அரசியல் நகர்வானது ஆசிய மூலதனத்தைச் சுற்றியருப்பினும் அது சிங்கள மையவாதத்தில் மூழ்கியே கிடக்கிறது.பெருவர்த்தகங்கள் இலங்கையை நோக்கிப்படையெடுப்பதாகவிருந்தாலும் அங்கே அரசுக்கும் பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்குமான இடைவெளி மிக அதிகமாகவே இருக்கிறது.இது இலங்கை தழுவிய புரட்சிக்கான விசும்பு நிலையை அடைவதற்குத் தடையாகத் தமிழ்த் தேசிய இனத்தின் முரண்பாடுகள் ஒவ்வொரு வடிவங்களில் அணுகப்படுகிறது.இது,அந்நிய மூலதனத்துக்கிசைவான இலங்கையின் முன் நகர்வுகளில் ஒன்றானதே.
2):புலிகளென்பவர்கள் இன்று அழிக்கப்பட்டபின், ஒவ்வொரு களமுனையிலும் சாகடிக்கப்பட்ட எமது மக்களது குழந்தைகளின் அளப்பெரிய உயிர் பிழையான முறையில் அந்நிய நலன்களுக்காகப் பலியெடுக்கப்பட்டதாகவே போய்விட்டது.இத்தகைய நிலைமைகளில், புலிகளின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே நம் மக்கள் மத்தியில் அம்பலமாகியது.எனினும், புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட இனிமேல் முனைவதற்கில்லை.இதனால் இனங்களுக்கிடையில் தொடர்ந்து அவநம்பிக்கை வளர்க்கப்படுகிறது.
3):இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஆசிய-மேற்குலக ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்குவது.அதன்பின், இராணுவ வகைப்பட்ட ஆட்சியலகை நிலைப்படுத்துவது.இதற்குச் சிலியினது பினேசேவ் ஆட்சியை உதாரணமா எடுக்கலாம்(இது அமெரிக்கப் புதியலிபரல்களின் பொருளாதாரவாதியான மில்டன் பிறீட்மான் திசைவழிப்பட்டது.)
4):இதன் தொடராக வந்தடையும் இலங்கையின் அரசியலில்,இலங்கை மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு(பத்திரிகையாளர் திரு.திஸ்சநாயகத்துக்கு விதிக்கப்பட்ட இருபதுவருடச் சிறைத் தண்டனை இதை மேலும் உறுதிப்படுத்தும்).
5):இலங்கையை ஆளும் கட்சிகளும்,போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு,இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள்.
6):இன்றைய பின்போராட்டச் சூழலில்-போராட்டத் தோல்விக்குப்பின் இவைகளைக் கடந்து, நமது மக்கள் இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து-தமக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெதிராக-அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கில்லை என்றாகிறது இன்றைய சூழல்.என்றபோதும், இத்தகைய ஒருமைப்பாட்டை எட்டுவதற்கான பல தடைகளை இலங்கையின் கட்சி அரசியலுக்குள் நாம் இனங்காணமுடியயும்.இனஞ்சார்ந்த குறுகிய கதையாடல்களை வளர்த்துச் சதி அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு அந்நியச் சக்திகளது நிதி ஆதாரமாக இருக்கிறது.இதன் உண்மையில் திட்டமிடப்பட்ட உலக வல்லரசுகளது இலங்கைமீதான ஆதிக்கம்-அரசியல் இலபங்கள் குவிந்திருக்கிறது.இவற்றைத் தகர்ப்பதற்கான இலங்கையின் முழுமொத்த மக்களது எதிர்ப்புப் போராட்டம் இன்னமும் மையங்கொள்ளாது இனவாதத் தீயில் மூழ்கிக்கிடப்பதற்காக ஒவ்வொரு பொழுதிலும் ஏதோவொரு வகையில் படுகொலைகள் நடந்தேறுகிறது.அல்லது, குறைந்தபட்சமாவது இனவாத அவநம்பிக்கைப் பிரகடனங்கள் முன்னுக்குத் தள்ளப்படுகிறது.
மகிந்த அரசின் வன்னியுத்தமும் அதன் பின்னான புலியழிப்புத்திட்டம் மற்றும் சரணடைந்தவர்களைக் கொன்றுகுவிக்கும் அரச பயங்கரவாதம்,தடுப்பு முகாமுக்குள் முழுமொத்த வன்னி மக்களையும் தடுத்துவைத்துக் களையெடுக்கும் அற்பத்தனமான மனிதவிரோதக் காட்டுமிராண்டித்தனமானதை"barbarous"என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது!மேற்கூறிய தேவையில் இலகுவில் இனவாதத்தையும் இனவொற்றுமையின்மையையும் இதன்மூலம் செய்துமுடிக்க உலக வல்லரசுகள் முனைகின்றன.இனங்களுக்கிடையில் தொடர்ந்து அவநம்பிக்கையை வளர்ப்பதற்கான மூலவூற்றாக வன்னித் தடுப்பு முகாமும்,அதுசார்ந்த இலங்கை அரசினது கெடுபிடிகளும் இத்தகைய வல்லாதிக்கங்களின் மிகக்கூரிய எதிர்பார்ப்பின் தொடர்ச்சியாகவே இருக்கிறது.இதனால் பல்லின மக்களுக்குள் உள்ள உழைப்பாள வர்க்கம் தனக்குள் ஒன்றுபடுதல் தொடுர்ந்து தடுக்கப்படுகிறது.இது,இலங்கையின்-தென்னாசியப் புரட்சிகரச் சூழலை மட்டுப்படுத்தவும் அதன்வாயிலாக வர்க்க உணர்வை மழுங்கடிப்பதற்கானதாகவே நாம் பார்த்தாக வேண்டும்.
இஃது, இன்றைய உலகமயமாதலின் காலவர்த்மானத்தையும் மீறிய மிகப்பெரும் சமூகக் குற்றம்.கடந்த சில தினங்களுக்கு முன் அவ்ஹான் மக்கள்மீது,2000 கிலோ எடையுள்ள குண்டைக் கொட்டிய ஜேர்மனிய இராணுவத்தின் திமிர்த்தனமான படுகொலைக்குச் சற்றும் குறையாத திமிர் இலங்கை-ஆசிய மூலதனக்கூட்டுக்கு இருக்கிறது.அது,இருஷ்சிய-சீன சங்காய் கூட்டுழைப்பு ஒப்பந்தத்தில் ஏலவே சொல்லப்பட்டபடி,பிரிவினைவாதப் போராட்டங்களை தென்கிழக்காசியாவிலிருந்து அகவற்றுவதில் இலங்கையைப் பரீட்ச்சார்த்தமாக்கி வெற்றி கண்டுள்ளது.
தமிழர்மீதான யுத்தம்-இன அழிப்பு?:
ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.
இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது.
இதை மேலோட்டமாக விவரிக்க முனையும் "மார்க்சியர்கள்"இலங்கை தழுவிய தேசியத்துக்காக இலங்கை அரசு அரசபயங்கரவாதத்தைக் கைலெடுத்துள்ளதாகக் கருத்தாடுவது சமீபமாக-வன்னியுத்தத்தின்பின் கருத்தியற்றளத்தில் வலுவாகப் பேசப்படுகிறது.ஆனால்,இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு மெல்லத் தகர்ந்து வந்தது.என்றபோதும், இத்தகைய இன அழிப்பானது மாறிவரும் உலகப் பொருளாதார மற்றும் சந்தைப் பங்கீட்டுடனும் அதுசார்ந்து போக்குவரத்து,மூலப் பொருள் கையகப்படுத்தல் என்ற அந்நியக் கம்பனிகளின் அத்துமீறிய ஏகாதிபத்திய நலன்களின் தேவையோடு அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையை உருவாக்கி,அதன் இனஞ்சார்ந்த அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான யுத்தமாக(இலங்கையர்களைத் தவிர வேறொரு இனம் இல்லை என்பது) இலங்கையினது இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் வெடிக்கிறது.
இது ஒருவகையில் வளவுற்றுக் கூர்மையடையும் முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கும்,பாராளுமன்ற ஆட்சி நெருக்கடிக்கு மாற்றானவொரு பண்பாக வளரும் இலங்கை இனவொடுக்குமுறைக்குச் சாதகமான ஊற்றாகவும் இனம் காணப்பட்டுத் தமிழ்பேசும் மக்களதும் மற்றைய சிறுபான்மையினங்களதும் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் அதே வேளை, மிகவும் மலினப்படத்தப் பட்ட சிங்களத் தேசியவாதம் புதிய முகமூடியோடு நாம் எல்லோரும் இலங்கையர்களென்று தமக்குள் சிறுபான்மை இனங்கள் பணிவதைக் கோருகிறது.இது திட்டமிடப்பட்ட இனவழிப்பின் புதிய மாதிரி அரசியல்-யுத்தம்.
இனக் குரோதம்:
புலிகளது இராணுவ வாதம் தோல்வியில் முடித்து வைக்கப்பட்டபின்,மகிந்தாவால் பரப்பப்படும் ஒரே இனமக்கள்- ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்து பல படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன.அக்கொலைகளுக்குப் பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் வியூகமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும்.இனங்களுக்கிடையில் இனவாதக் குரோதத்தை வளர்த்தெடுத்து அதன்மூலம் தொழிலாள வர்க்கத்தைக்கூறுபோடும் திசையில், தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே நம்மில் பலருக்குள்ள அரசியலறிவாகும்.
இந்தத் தலைமைகளுக்குப் பின்னால் ஒளிந்துள்ள அந்நிய ஆளும் வர்க்கமானது புலிகள்-தமிழினக் கொலைகளினூடே தமது நலன்களை வலுவாகப் பாதிக்கும் தமிழ் மக்களது போராட்ட உணர்விடமிருந்து காக்க முனைவதுமட்டுமல்ல,மாறாகப் பொருளாதார ஏற்றவிறக்கத்தின் முரண்பாடுகளைத் திசை திருப்பித் தமது ஏவல் நாய்களான ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது ஆட்சியையும் தக்க வைப்பதே முதன்மையான நோக்கமாகும்.இதற்காகவே திட்டமிடப்பட்டு இனங்களுக்கிடையிலான இனக் குரோதம் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது.இது மேற்குலகினது சதி.இங்கே, ஆசிய மூலதனமும் இப்போதைக்குப் புலிகளை அழித்திருப்பினும் பின்னாளில் இனவொற்றுமைக்கு ஆப்பு வைத்தபடியேதாம் தமது பொருளாதார இலக்குகளுக்குத் தொழிலாளர் ஒற்றுமையைச் சீர் குலைக்கும்.
சமூக வளர்ச்சியானது எப்பவும் முரண்பாடுகளாலேயேதான் தீர்மானிக்கப்படுகிறது.இத்தகைய முரண்பாடுகள் மனிதர்களின் உழைப்பினாலும் அதன் பங்கீட்டினாலுமே ஆரம்பமாகிறது.இந்திய மக்களினங்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காலனித்துவத்தின் அதீத பாச்சலே காரணமாகிறது.இதனால் சமுதாயம் படிமுறையான வளர்ச்சியை இழந்து,திடீர்ப்பாச்சலுக்குள் வீழ்ந்தபோது பழைய எச்சங்கள்"அரை நிலப்பிரபுத்துவ அரை முதலாளித்துவ-உள்ளகக்காலனிதுவ(சாதிய ஒடுக்குமுறை) அமைப்பாகத் தோன்றி புதிய இரகப் பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கிறது.
இன்றை ஏகாதிபத்திய மூலதனமானது இன்னும் ஒருபடி மேலே போய் இலங்கை-இந்தியா போன்ற அபிவிருத்தியடையும் நாடுகளைத் தரகு முதலாளியமாகச் சீரழித்தபின் இந்த நாடுகளின் முரண்பாடுகள் மழுங்கடிக்கப்பட்டு-எச்சங்களாகக் காக்கப்படுகிறது.இத்தகைய எச்சமே இன்னும் இனங்களுக்கிடையிலான போட்டிகளையும்,தப்பெண்ணங்களையும் உருவாக்கி அதை வலுவான முறையில் ஆயுதமாகக் கைலெடுக்க முனைகிறது.
மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் அரச பயங்கரவாதக் கொடுமையானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்கு இசைவாகச் சரணடையும் அரசியலைப் பேசுவது மிகவும் கவலைக்கிடமானது.
ப.வி.ஸ்ரீரங்கன்
06.09.2009
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
No comments:
Post a Comment