அந்நிய வேட்டைக்காடு இலங்கை:
அதற்கான தெரிவில்"இலங்கை சென்று திரும்பிய குழுவின் மாநாடு" ஜேர்மனியில்!
நமது அரசியற் சூழலில் புதிய புதிய அணிதிரட்சிகளும்,சேர்க்கைகளும் தோன்றிக்கொள்ள வியூகங்கள் அமைக்கப்பட்டாச்சு.இதன் முதற்கட்டமானது புலிகளின் தலைமையை-இராணுவவலுவை அழித்தாகிவிட்டது.இங்கே, தமிழ்பேசும் மக்களைக் கூறுபோட்டுப் பிரித்தெடுப்பதில் இலங்கையின் முஸ்லீம் மக்களையும் அவர்களுள் இருக்கும் பிழைப்புவாதத் தலைமைகளையும் பயன்படுத்தும் இந்தியா, ஜே.வி.பியை அடுத்த காய்யாகப் பயன்படுத்தித் தமிழர்களுக்கு அற்ப சலுகைகளைக்கூட வழங்கமுடியாத சூழ்நிலையைச் சிங்களமக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது.இதை எந்தச் சந்தர்பத்திலும் வெற்றிகொள்ள முடியாத கருத்தியற்றளமாக உருவாக்குவதில் இந்திய மேலாண்மை கச்சிதமாக் காரியஞ் செய்ய நமது மக்களுள்(தமிழ்-சிங்கள) உறைந்துபோய்கிடக்கும் மனமுடக்கமும்(இன ஐக்கியமின்மை) அவர்களுக்கு வாய்பாக இருக்கிறது.
இனவாதச் சிங்கள அரசானது தனது பாரளுமன்றக் கட்சி நலனுக்காகப் போட்ட அரசியல் வியூகத்தில் செயற்கையாக வளர்த்தெடுக்கப்பட்ட இனவாதமானதுஇனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியில் பாரிய முரண்பாடாகியது. அதுவே,ஒரு கட்டத்தில் இதுவரையான யுத்த அரசியலாகவிரிந்து இலட்சம் தமிழ் மக்களை-முஸ்லீம் மக்களை-சிங்கள மக்களை வேட்டையாடியுள்ளது. இலங்கையை அந்நிய வேட்டைக்கு உட்படுத்தி அதை முழுமையாக மொட்டையடிப்பதிலும் இஃது முடிந்துள்ளது.இதை, இலங்கை ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான கடந்தகாலப் புனைவுகளால் இலங்கையினது முழு உழைக்கும் வர்க்கமும் சந்தித்தே ஆகவேண்டியுள்ளது.ஒரு புறம் இனவழிப்பு, மறுபுறும் அபிவிருத்தி என்று சிங்கள ஆளும் வர்க்கத்தோடிணைந்து அந்நியச் சக்திகள் செய்யும் மோசடியோ தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களையும் வேட்டையாடப்போகிறது.
இது,முழுக்கமுழுக்க உழைக்கும் மக்களையே வேட்டைக்குள் உட்படுத்தி அவர்களுக்குச் சிறைக்கூடமாக இலங்கையை மாற்றியுள்ளது.இதன் புரிதலிருந்து புலிகளின் அழிவுக்குப்பின் சிலவற்றைச் சுருக்கமாகப்பார்ப்போம்.அப்படிப்பார்க்கும்போதுமட்டுந்தாம் இந்த"இலங்கை செல்லும்-சென்று திரும்பும் குழுக்கள்"பற்றித் தெளிவான பார்வை கிடைக்கும்.
தமிழ் மக்களது அரசியல் அபிலாசையென்ற பொய்மை:
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளென்பவை அதிகாரத்துவத்தை உள்ளார்ந்து நேசித்த தமிழ் மேட்டுக்குடிகளின் கோரிக்கையென்பதை நாம் பல முறைகள் கூறியிருக்கிறோம்.இந்த அதிகாரத்துக்கான நேசிப்பிடம் மக்களின் வாழ்வியல் சார்ந்த மதிப்பீடுகள்,அவர்களது உயிராதாரமான பொருள் வாழ்வு சார்ந்த கோரிக்கைகள் சிறிதளவும் அவர்களது நோக்கு நிலையிலிருந்து முன்வைக்கப்படவில்லைஇத்தகையவர்களின் இருண்ட அரசியல் சூழ்ச்சிகளால் பலிகொள்ளப்பட்ட தமிழ்பேசும் மக்களின் பொருளாதார உயிர்வாழ்வானது சிதைந்து சின்னாபின்னமாகியபோது, நாம் அதைத் தொடர்ந்து அநுமதித்து வருவதற்கானவொரு அரசியலைப் புலிகளது தலைமையில் ஏற்படுத்திக்கொண்டது அந்நியச் சக்திகள்.அதே அந்நியச் சக்திகள் மக்களை வேட்டையாடியும்,அரசியல் அநாதைகளாக்கியும் தமிழ்ச் சமுதாயத்தின் அறிவுப்பரப்பையும்,சமூகவுணர்வையும் ஒட்டக்காயடிக்கப் புலிகளது இருப்பைப் பலமாக விரும்பிக்கொண்டது.இதன் இறுதிக்கட்டத்தில் புலிகள் பயணித்தபோது அவர்களது பாத்திரம் இல்லாதாகவேண்டிய பொருளாதார வியூகமானது கணிசமான மக்களை அழித்துப் புலியையும் வேட்டையாடியது இன்றைய புதிய கூட்டுக்களைப் புரிவதற்கான வரலாறாகும்.
ஒரு அவலமான அரசியலைக் கடந்த காலத்துத் தமிழர்களின் ஓட்டுக் கட்சி-இயக்கப் போராட்ட அரசியல் செய்து வந்ததின் தொடர்ச்சியாகப் பற்பல அழிவுகள் நமக்கு வந்து சேர்ந்தன.அவை தனித் தமிழீழப்போராட்டம் என்ற கோதாவில் இலட்சம் மக்களது உயிர்பறிப்போடும்,தமிழ்பேசும் அனைத்து மக்களினதும் சமூக சீவிச்சிதைவோடும் ஒரு முடிவுக்குவந்து, புதிய குழிப்பறிப்புகள் தமிழர் சமுதாயத்தின் குருதி குடிக்கும் முன்னாள் ஆயுதக்குழுக்களது தலைமையில் மீளவும் தொடர்கதையாகிறது. நமது மக்களில் மிக மிகக் கரிசனையான தலைவர்களாகவும்,அமைப்புகளின் செயற்பாட்டாளர்களாகவும் ஒளிவட்டம் கட்டிக்கொண்டு உலாவருகின்றனர்.இந்தத் தளபதிகளையும்,தலைவர்களையும் தத்தெடுத்துக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம் தனது பிராந்திய நலனை புலிகள் அழிப்பில் இலங்கைக்குள் உறுதிப்படுத்திய நிலையில்,இப்போது புதிய ஓடுகாலிகளை உருவாக்கித் தனது அபிலாசைக்குகந்த தமிழ்க்கட்சிகளை இலங்கையில் ஏற்படுத்தி,அதன் வாயிலாகத் தமிழர்களது உரிமைகளுக்கு அற்ப சலுகைளால் வேட்டுவைக்கும் காரியத்தில் இறங்கியுள்ளது.இத்தகைய மக்கள்-சமூகவிரோதிகள் "இலங்கை சென்று திரும்பிய குழுவின் மாநாடு" ஜேர்மனியில் செய்து பார்க்க வெளிக் கிளம்பியுள்ளனர்.இவர்கள் தமது எஜமானர்களுக்கான அரசியலில் இலங்கைமட்டுமல்ல அனைத்து உலகத்துக்குஞ் சென்று திரும்ப முடியும்.
இவர்களைப் புரிவதற்கு முதலில் மாறிவரும் இலங்கையின் பொருளாதார ஊக்கங் குறித்துப் புரிந்தாகவேண்டும்-மகிந்தா குடும்பத்து பொருளாதார வலைப்பின்னல்கள்,பிராந்திய நலன்கள் குறித்துப் புரிந்துகொண்டாற்றாம் இந்தத் தமிழ்மக்களது துரோகத் தலைமைகளைக் குறித்துச் சாதரண மக்கள் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் அந்நிய மூலதனத்தின் வரவுகளோடு தம் மக்களின் அதீத உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பொருளாதார நகர்வாகவே இன்று மாற்றப்பட்டிருக்கிறது.இலங்கையின் முழுமொத்தச் சமூக உற்பத்தியும் அந்நியர்களின் தயவில்(கடனுதவி மற்றும் அந்நியத் தனியார் நிதிமூலதனம்.குறிப்பாக, மைக்ரோ சொவ்ற் 450 மில்லியன் டொலர்கள் கடன் வழங்குவதுவரை நடந்தேறுகிறது.) உயிர்வாழும் தகமையுடைதாகவே யுத்தத்தின் பின்னான அரசியலில் இருத்தி வைக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் நடைபெறும் எந்தப் போராட்ட விய+கங்களும் வெளிநாட்டுச் சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு யுத்தமாக விரிவடைவதை நாம் எல்லோரும் ஓரளவேனும் நம்பித்தாம் ஆகணும்.இந்தவுண்மை மிகவும் நேர்மையான அரசியல் அறிவினூடாகவே புரிந்துகொள்ளத் தக்கதாகும்.இங்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி(இயக்க வாத-தமிழ்த் தேசியவாத மாயைகள் மற்றும் முஸ்லீம் தேசிய வாத- தலித்துவ வாதங்கள்) வர்க்கச் சமுதாயத்தின் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவே இலங்கையின் இன்றைய இனப் பிரச்சனையுள் அந்நிய சக்திகளின் மிகவும் கீழ்த்தரமான யுத்த மேலாதிக்கத்தைப் புரிய முடியும்.
"இலங்கை சென்று திரும்பிய குழு":
நாம் வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லுகிறது.இத்தகைய அரசியல் காயடிப்பைச் செய்த புலிகளின் அழிவில் தமிழர்களைச் சொல்லி-வன்னிய அவலத்தைச் சொல்லி இலங்கைப்பாசிச அரசினது நிகழ்கால இனவழிப்பு அரசியலை "அபிவிருத்தி-உதவி-புனரமைப்பு"எனப் பற்பல பெயரிட்டு நிறைவேற்றப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் முன்னாள் இயக்க அழிவுவாதிகள் இலங்கைக்கு-மகிந்தா குடும்பத்துக்கு ஆதரவு வழங்கித் தமது அரசியல்-பொருளாதார-உத்தியோக ஆதயங்களைப் பெற முனைகின்றனர்.இவர்கள் இப்போது உலகு தழுவி அகதியாக விரிந்துள்ள தமிழ்த் தரித்திரவாழ்வை இன்னுஞ் சிதைத்துத் தமது எஜமானர்களுக்கேற்ற அரசியலை நியாயப்படுத்த அமைப்புகள் உருவாக்குகிறார்கள்.இதன் அடிப்படையில் இன்னொரு நிதிதிரட்டல் மற்றும் சிந்தனை மழுங்கடித்தல் இலங்கை-இந்திய நலன்களுக்கிசைவாக நடந்தேறும் அபாயம் நம்மை நோக்கிப் படையெடுக்கிறது.இதற்குத் தோதான முறைகளில் முன்னாள் சகல ஆயுதக் குழுக்களது உறுப்பினர்களும் மிக வேகமாக இணைகிறார்கள்.அவர்களுள் நன்கு அறியப்பட்ட புளட் ஜெகநாதன்-சிவராசா மற்றும் இலக்கியச் சந்திப்புக்கூட்டம் ஜேர்மனியில் துடிப்பாகத் தமது துரோகத்தை எமது மக்களை நோக்கி நகர்த்துகிறார்கள்.இவர்களே ஐரோப்பா தழுவித் தமது கூட்டை இலங்கை அரசின் உதவியோடு மிக நேர்த்தியாக் கட்டுவதற்கு கூட்டங்கள் ஏற்பாடு செய்கின்றனர்.
இலங்கை சென்று திரும்பிய குழுவின் மாநாடு ஜேர்மனியில். என இந்தத் தமிழ் மக்கள் விரோதக்கூட்டு இலங்கையினதும்,இந்தியாவினதும் நேரடியான மேற்பார்வையில் இன்னொரு புலித்தனமான சதியில் ஈடுபடுகிறது.இதற்குள் உலகு தழுவிய அரசுகளது உளவு முகவுர்கள் நமது மக்களது முகங்களோடு உறுவுகளை வலுப்புடுத்தியுள்ளனர்.இலங்கையையும் அந்த மக்களது வாழ்வையும் சூறையாடுபவர்கள் தத்தமக்கான முகவர்களைத் தமது நிதியுதவியோடு நமக்குள் தேடிப் பிடித்துள்ளார்கள்.இவர்கள் தமிழர்கள் வடிவிலுள்ள அந்நியச் சேவகர்கள் என்பதை வரலாற்றில் புலிகளது கடந்தகாலத்து நிகழ்காலத்து அரசியலில் இருந்து புரிவது சுலபம்.வன்னி மக்களைச் சொல்லியே இவர்கள் இப்போது நமக்குள்-புலம்பெயர் தமிழர்களுக்குள் தமது நரித்தனமான அரசியலைச் செய்வதற்கு நாயாய் அலைகிறார்கள்.இவர்களது அரசியலுக்குப் பின்னால் இலங்கையை வேட்டையாடும் அந்நியச் சதி இருக்கிறது இதைப் புரிவதற்கு இன்றைய இலங்கையினது பிராந்தியப் பாத்திரம் புரியப்பட வேண்டும்.
இலங்கையும் பிராந்தியக் கேந்திர வியூகமும்:
இலங்கைத் தீவில் எண்ணை வளமோ அன்றிக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குக் கனிப் பொருள் வளமோ கிடையாது.எனினும், இலங்கையின்மீது அமெரிக்காவுக்கும்,சீனாவுக்கும் நீண்ட நாள் கனவொன்றிருக்கிறது.இது,இலங்கை, இந்தியாவினது செல்வாக்கு மண்டலம் எனும் அந்தப் பிராந்திய உரித்தையும்தாண்டிய கனவு.இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் நிறைந்த துறைமுகங்களும் இலங்கையின் புவிகோள இருப்புமேயாகும் இந்தக் கனவுக்கான காரணி.
இந்தக் கனவில் அமெரிக்காவுக்கான நலனை முதன்மைப்படுத்தும் அந்தக் காரியம்(அமெரிக்க ஆதிக்கம் வலுத்த இலங்கையும் அதன் துறைமுகங்கள் அமெரிக்கக் கடற்படைத் தளங்களாவதும்) நிகழ்ந்துவிட்டால் அமெரிக்காவினதும் மற்றும் மேற்கு ஐரோப்பாவினதும் வணிகத்துக்கு இன்னும் வலுக்கூடிவிடும்.இந்த வலு இலங்கையின் இராணுவ முக்கியத்துவம் பெற்ற துறைமுகங்கள்மீதான ஆதிகத்தைச் சார்ந்தே இருக்கிறது.இது,அவ்கானிஸ்தானில் ஆட்டங்காணும் அமெரிக்க-ஐரோப்பிய இராணுவத் தோல்விக்கு முண்டுகொடுத்து இப் பிரதேசங்களைக் குறைந்தபட்சமாவது வளர்ந்துவரும் ஈரான்-சீனா பொருளாதார கூட்டு ஒத்துழைப்பைக் குலைப்பதற்கான தெரிவில் அமெரிக்க-ஐரோப்பிய சதி எமக்குள் ஒரு கைக்கூலிகளைத் தேடிக்கொண்டுள்ளது.இதில் இன்னொரு பிரிவு இந்தியாவினது நலனோடு இலங்கையில் மகிந்தவினதும்,அவர் குடும்பத்தின் பின்னால் நிற்கும் சீனாவையும் காப்பதற்கான அரசியலை இந்த அமெரிக்க-ஐரோப்பிய முகவர்களோடு முட்டிமோதி முன்னெடுக்க முனைகிறார்கள்.முன்னாள் ஆயுதக்குழுக்கள் இந்திய-சீன மற்றும் மகிந்தா குடும்பத்துக்குக்கூஜாத் தூக்க மறுபுறும் புலிகளது பினாமிகளும்,புலிகளால் மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியைத் தமது கட்டுப்பாட்டில்கொணர்ந்துள்ள முன்னாள் புலிவிசுவாச மேட்டுக்குடித் தமிழர்களும் மேற்குலக-அமெரிக்கக் கூஜாத் தூக்கிகளுமாக மாறியுள்ளனர்.இவர்களால் நடாத்தப்படும் கூட்டங்கள்-சந்திப்புகள் யாவும் அந்தப் பெரும் வன்னி அழிவில் வதைப்பட்ட மக்களது பெயரினாலேயே நடாத்தப்படுகின்றன.இதன் சாதகமானது அப்பாவி மக்களுக்கு அவசரமாகத் தேவைப்பொடும் வரிழ்வாதாரத் தேவைகளோடு புலம் பெயர் மக்கள் மனங்கள் இசைவான ஒப்புதல் வழங்கும் மனிதாபிமானத்தை அரசியலாக்கும் வலு இதற்குள் நிலவுவதைக் குறிவைத்திருப்பதானாலேயே இலகுவாக நடந்தேறுகிறது.
இன்றைய உலக-பிராந்திய பல்தேசக் கம்பனிகளது வியாபாரப் போட்டியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்து துறைமுகங்களே நாளையச் சந்தையைத் தீர்மானிக்கும் வலுவுடையவை.உற்பத்தியானது இப்போது மேற்குலகை விட்டு வெளியேறி மூன்றாம் மண்டல நாடுகளின் கனிவளத்தையும்- குறைய+தியத்தையும் நீண்ட வேலை நேரத்தையும் குறி வைத்து இலங்கைபோன்ற நாடுகளுக்கு மாறி விட்டன.இத்தகைய நாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை கடற்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும்போது மட்டுமே சந்தையில் ஆதிக்கம் பெறும்"மார்க்" வெற்றியோடு இலாபத்தைக் குவிக்கும்.இங்கே இந்த அரசியல் மிகவும் அவசியமான தேவையாகப் பல் தேசியக் கம்பனிகளுக்கு இருக்கிறது.இதற்கான காரணம் வளர்ந்துவரும் சீனாவினது பாரிய உற்பத்தி ஊக்கத்திலிருந்து பரவலாக அறியப்பட்ட அவர்களது அதிவேகத் தயாரிப்புகளால் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.சீனா அம்பாந்தோட்டையில் தனது ஆதிகத்தை நிறுவியுள்ளது.அதன் துறைமுகக் கட்டுமானமானது அம்பாந்தோட்டையில் நடந்தேறுவதாகச் செய்திகள் வருகின்றன.இதிலிருந்து இந்த முக்கியத்தை நாம் புரிய முடியும்.
புரட்சிக்கான உணர்வைக் காயடித்தல்:
அந்நிய மூலதனத்துக்கு எதிரானதும் இலங்கையின் அந்நிய எடுபிடி ஆளும் வர்கத்துக்கு எதிரானதுமான இன்றைய இலங்கையின் உழைப்புப் பிரிவினையானது அந்த நாட்டில் தொழிலாள வர்க்க ஒருங்கிணைவுக்கும் அது சார்ந்த எழிச்சிக்குமான சூழலைக் கொண்டிருப்பதாலும் இந்தச் சூழலை உடைப்பதும் அந்நிய அமெரிக்க-ஐரோப்பிய ஆர்வமாகவும் இருக்கிறது.இதில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது.இந்தத் தெரிவில்,இடதுசாரிய முகாங்கள் மற்றும் வர்க்கக்கண்ணோட்டமிக்க அரசியல் நகர்வை உடைப்பதிலும் அதை இல்லாதாக்கவும் இந்தக் கூட்டுக்குள் முன்னாள் ஆயுதக்குழுக்களது உறுப்பினர்கள் வந்து சேர்வது மிகச் சாதகமான அம்சங்களைக்கொண்டிருக்கிறது.இது கருத்தியல்மட்டத்தில் புரட்சிகரமான கருத்துக்களை முன்தள்ளவும் அதே தருணத்தில் புரட்சிகர நடவடிக்கைக்கான புறநிலைகளை அழிக்கவும் இவர்களை வைத்துக் காரியமாற்றப்படுகிறது.இந்த அரசியல் இன்று புலிகளது தோல்வியில் புரட்சியை நலமடித்த புலிகளது வேலையினது வெற்றிடத்தை நிரப்பும் அதி அவசரத்தேவையாகவே நகர்த்தப்படுவதென்பதை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.இதுபெரும் பொறியை புரட்கரச் சக்திகளுக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
இந்தியாவுக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்குமான இலங்கை மீதான அரசியல் இலாபங்கள்-எதிர்பார்ப்புகள் முற்றிலும் முரண்பாடானது.இதில் இத்தகைய நாடுகள் முரண்படும்போது முன்னாள் புலிகள் பினாமிகளது அல்லது இலங்கை-இந்திய அரசுகளினது எடுபிடிகளது வலுக்கள் கூடும் குறையும்.இதை நாம் பற்பல வடிவங்களில் கடந்த காலத்துள் எதிர் கொண்டோம்.இந்தியா இலங்கையைத் தனது வழிக்குள் கொண்டுவருவதற்காக விடுதலை இயக்கங்களைத் தனக்காகப் பயன்படுத்தியதும் பின்பு இலங்கையோடு ஏற்பட்ட உடன்பாடுகள்-தேன் நிலவோடு இயக்கங்களை நிராயுதபாணிகள் ஆக்கியதும் வரலாறு.
இதுபோலவே இன்று, "புலிகளை மேற்குலகமும் அமெரிக்காவும் நிதி கொடுத்துத் தமக்கு வாலாட்ட வைத்தபோது" புலிகளைப் பூண்டோடு ஆசிய மூலதனம் அழித்து விட்டதும் இந்த முரண்பாடுகளது உச்சம்தாம்.இஃது, இலங்கையினது பிராந்திய முக்கியத்துவம்குறித்த அரசியலிலிருந்து எழுந்த அரசியல் என்பது உண்மையானது.அவ்வண்ணமே, புலிகளை வைத்துப் புரட்சிகரச் சக்திகளைக் கண்காணித்து அழித்தும் வந்தது.
"வளர்ப்பதும் பின்பு முதுகை உடைப்பதும்" முற்றிலும் அழிந்து போகாதிருக்க அப்பப்ப குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட யுத்த வெற்றிகளுக்குள் மிதக்க வைப்பதும் கூடவே இலங்கையில் இராணுவச் சமமின்மையை ஏற்படுத்துவதும், அதையே சாக்காக வைத்துத் தனது ஒத்துழைப்போடு இந்தியாவைக் கை கழுவ வைப்பதுமாக இந்த ஆர்வங்கள் புலிகளை வைத்துக் கடந்த காலத்தில் நடந்தேறிய வாரலாறு.இது, ஆயுதப்போராட்டத்தில் இங்ஙனம் நடந்தேற இப்போது புலிகளது இராணுவத்தைத் தோற்கடித்த ஆசிய மூலதனத்தைப் பழிவாங்க அமெரிக்க-மேற்குலகம் புலிப்பினாமிகளை வைத்துக் காரியமாற்ற முன்னாள் புலிச் சித்தாந்தவாதிகளையும், புலிகளுக்குப் பின்னாலிருந்த தமிழ் மேட்டுக்குடிகளையும் தமக்குச் சார்பாகக் காரியமாற்ற "வைக்கற் போர் நாடுகடந்த அரசாங்கம்" வைத்துச் சிலம்பாட்டாஞ் செய்வதில் பற்பல குழிப்பறிப்புகள் நமக்குள் நடந்தேறுவது வரலாறாகப் போகிறது.கண்டம்விட்டுக் கண்டம் பாயும் மூலதனமானது மத்திய ஆசியாவின் எரிவாயு-மற்றும் மசகு எண்ணையோடும் மற்றும் கனி வளங்களோடும் சம்பந்தப்பட்ட இராணுவக் கேந்திர வலயமொன்றை இலங்கையைச் சுற்றி பின்னிவைத்திருக்க விரும்புகிறது.இது வளர்ந்துவரும் இந்திய மற்றும் சீனப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தித் தமது உற்பத்திக்கு எதிரான போட்டியிலிருந்து தோற்கடிக்கப்பட வேண்டிய அரசியலோடு பின்னப்பட்ட விய+கமாகும்.இங்கே,தத்தமது இலாபங்களுக்காகத் தமிழ் மேட்டுக்குடிகள் இந்தத் தரப்புகளை அண்டித் தமிழ்பேசும் மக்களுக்குக் காயடிப்பு அரசியலை செய்து அவர்களைப் புரட்சிகரமாகச் சிந்திப்பதிலிருந்து தடுத்து வருவதற்கு முனைகிறது.இது,தமிழ்மேட்டுக்குடிகளது மூலதனத்துக்கு அவசியமான பணியாகவும் இருப்பதால் இனம் இனத்தோடு(வர்க்க நலனைக் குறிக்கிறேன்) nசுர்ந்து முழு இலங்கை உழைப்பவர்களுக்கும் வேட்டு வைக்கிறது.
முன்னாள்ஆயுதக் குழு மக்கள் விரோதிகள்:
இந்திய ஆமியோடு சேர்ந்து மண்டையன் குழுவைத் தொடக்கி அப்பாபிவிகளின் கழுத்தையறுத்துச் சாக்கு மூட்டையில் திணித்த துரோகக் கும்பலெல்லாம், மக்கள் இயக்கங்களாக இப்போது தலைகாட்டுகின்றனர்.நமது மக்களையின்னும் உயிருள்ள ஜீவிகளாகக் கணிக்காத இவர்கள் நம் மக்களை இளிச்ச வாயர்களாகவெண்ணிக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இன்றைய காலம் தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.புலிகளை அந்நியர்களோடிணைந்து பூண்டோடு அழித்த கையோடு,நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்.
சரியான திசைவழியின்றிப் போரிட்ட அமைப்புகள் தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றத் தலைப்பட்டுள்ளார்கள்.இதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட வேஷம் புலிகளால் யுத்தத்தில் (வன்னி மக்கள் அழிக்கப்பட்டற்கு மகிந்தாவும்-அந்நியச்சக்திகளுக்கும் பங்குள்ளது என்பதை மறைத்தபடி)அழிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு உதவுவது-அபிவிருத்துக்கு உதவுவது-கல்விக்கு உதவுவது.இவையெல்லாம் ஒரு அரசு தமனது மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமை.எனினும், இன்றைய அந்நிய வேட்டையில் இதைத் தனிபட்ட அமைப்புகளுக்கூடாகச் செய்வதுபோன்று இலங்கை-இந்திய அரசுகள் தமது அடுத்தகட்ட அரசியல் போராட்டத்தை மிக நேர்த்தியாக முன்னெடுக்கின்றனர்.
இஃது போராட்டத்தால் நாசமாக்கப்பட்டு மிகக் கனலாகக் கொந்தளித்துள்ள மக்களை உணர்வு ரீதியாக மொட்டையடிக்கும் செயலாகவே விரிகிறது.மக்களைத் தமது இன்னல்களிலிருந்து காத்த அமைப்புகளெனும் போர்வையில், மக்களுக்குள் சதி அரசியலை விரிக்கும் இன்றைய இலங்கை அரசியலில் இன்னும் எத்தனை துரோகிகள் மக்களை வேட்டையாடுவார்களோ அவ்வளவுக்கும் நேர்மையான அரசியலைக்குறித்து வாய்திறக்காத கற்றறிந்த கயவர்களைச் சார்ந்ததே.இதை உடைத்து மக்களது நலனுக்கான நேர்மையான அரசியலைக் கோருவது எமது கடமையாகும்.
மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கவைத்தபடி அவர்களது வாழ்வாதாரங்களை அவர்களைவைத்தே போராடிப் பெறும் அரசியலானது முதலில் அந்நியச் சக்திகளின் சதியை முறியடித்தே எழும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
17.07.2009
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
No comments:
Post a Comment