"தமிழர்கள் ஜனநாயகத்துக்கான தகுதி பெறு வேண்டும்"என்று இப்போது அழகலிங்கம் கம்பனி தீர்ப்பெழுதுகிறது.இதன்மூலம் இலங்கையின் இன்றைய அரசும்,அதன் பின்னாலுள்ள சிங்கள ஆளும் வர்க்கமும் ஏலவே ஜனநாயகத்துக்கான"தகுதியில்"தேறியுள்ளதன் பயனாகப் புலியழிப்பினூடாகக் கொல்லப்பட்ட தமிழ் மனிதவுயிர்கள் ஜனநாயகத்தைக் காப்பதற்கென்றதான அரசியலில் சாகடிக்கப்படவேண்டியவர்களாகிறார்கள்.மகிந்தாவும் அவரது தம்பி கோத்தபாயவும் இதையேதாம் உரைக்கின்றனர்.இந் நிலையில் அழகலிங்கமும் இவர்களது கூற்றுக்கொப்பச்"சோசலிசம்"பேச நாம் கட்டுப்பெட்டியானோம்.இவர்கள் பெரும்பாலும் இலங்கை அரசுக்கு ஜனநாயகம் கற்பித்துத் தேசியவொடுக்குமுறைக்குத் துணைபோவதைப் புரட்சியின் பெயரால் செய்வதுதாம் இன்றைக்குப் பெருந் தீங்காக இருக்கிறது.புலிகள் மேற்குலகத்துக்கு அடியாளாக இருந்து நமது மக்களைக் காட்டிக்கொடுத்து அடிமைப்படுத்தியதுபோன்று, அதே இடத்தில் இவர்கள் ஆசிய மூலதனத்துக்கு அடியாளாக இருக்கும் மகிந்தா குடும்பத்துக்குக் கூஜாத் தூக்கிக் காட்டிக்கொடுக்கும் அரசியலுக்கு"ஜனநாயக"முகமூடி தயாரிக்கின்றார்கள்?
இந்த வகையில் அழகலிங்கம் தமிழரெனும் முறையில் அவரது கருத்துக்கொப்ப-நியாயத்தின்படியான "ஜனநாயகத்தில்"மகிந்தா குடும்பத்துக்கு இணையாகவே ஜனநாயகத்தில் தகுதி பெற்றுள்ளார் என்பது அவரது கட்டுரையூடாக நாம் அறியும் நல்லதொரு செய்தி.இதையிட்டுத் தமிழ்பேசும் நான் பெருமை அடையலாம்-நம்மிடமும் ஒருவர் "ஜனநாயகத் தகுதி பெற்று"வாழ்வதையிட்டு!
இன்றையபொழுதில்,நமது அரசியல் முன்னெடுப்புகளை நாமே தீர்மானிக்க முடியாதவகையில் அந்நிய ஆதிக்கங்களிடம் நமது அரசியல் திட்டமிடல்களையும் அது சார்ந்த வியூகங்களையும் பறி கொடுத்துவிட்ட இந்தப் பயங்கரமான புலியழிப்புக்குப்பின்பான சூழலில் எமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் "அதிகாரப் போட்டி அரசியல்"எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கப்படுமென்று எதிர்பார்க்க முடியாது.இந்தவொரு அறுதியான சமூகச் சூழல் பற்றிய கணிப்பை உறுதிப்படுத்தும் வகையிலான சிங்கள அரசியல் நகர்வு இப்போது எமக்குள் திணிக்கும் கருத்தியல் "வாழ்வதற்கான இயல்பு நிலை"என்பதாகவும்,அதைக் குழப்பும் "புலிப் பயங்கரவாதம்"முற்றாக அழித்தொழிக்கப்பட்டுத் தேசத்தில் அனைவரும் "தேசமகளது குழந்தைகளே-ஒருதாய் பிள்ளைகளே"என்பதாகவும் திட்டமிட்ட வகையில் மக்களின் தேவையை அறிந்து பரப்பப்பட்டு, கருத்தியல் ஒற்றுமை ஏற்படுத்தப்படுகிறது.இது ஆசிய மூலதனத்தை இலங்கைக்குள் பிணைத்து அறுவடை செய்ய முனையும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கோசம்.இது முற்றுமுழுதாக இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களையும் அவர்களது அடையாளங்களையும் இல்லாதாக்கும் முயற்சியின் ஆரம்பத் தொடர்.இதையே அழகலிங்கம் கம்பனி "தமிழர்கள் ஜனநாயகத்துக்குத் தகுதி பெறத் தயாராகவேண்டும்"என்று கூறிச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது கயமைமிகு இனவொடுக்குமுறை அரசியல் நகர்வுக்கு ஜனநாயகம் கற்பிக்கும் முயற்சி.நமது அரசியல் நடாத்தையில் இவ்வளவு அழிவுக்கும் புலிகளுக்குள் காரணந் தேடுபவர்கள், புலிகளுக்கு அப்பால் விரிகின்ற மூலதனத்துக்குச் சோரம் போகும் அரசியலை-இனவழிப்புத் தொடரைத் தமிழ்பேசும் மக்கள் அடிபணிந்து ஏற்பதற்கு"ஜனநாயகத்துக்குத் தயாராகும் தகுதி"என்கின்றனர்.
தமிழ்பேசும் மக்கள் மட்டும்தாம் ஜனநாயகத்துக்குத் தகுதி அற்றவர்கள் எனும்போது,இலங்கையில் சிங்கள அரசும் அதன் ஆதிகத்துக்குள் வாழும் அனைத்து மக்களும் தகதியுடையவர்களாகவே இருக்கிறார்கள் என்றாகிறது.இதன் தொடரில்தாம் கோத்தபாய மக்களது உரிமைகளைக் காலில் மிதித்தபடி அவர்களைக் கிள்ளுக் கீரையாகக் கிள்ளுறான்.இது,ஜநாயகத்தின் பெயரால் நடாத்தப்படுவதில் அழகலிங்கம் தமிழ் மக்களுக்குச் சோறுபோடும் அரசு அதுவென்று அடித்துச் சொல்லி-சோறு போடும் அரசுகள் "ஜனநாயக அரசு"என்ற புதிய இலக்கணத்தை ஒடுக்குமுறை வர்க்கத்துக்குக் கற்பிக்கும்போது"அழகலிங்கம் ஜனநாயகத்துக்குத் தயராகி"விட்டதன் இயக்கப்பாடு அவருக்குள் விரிகிறது-அது,தேர்தலில் புரட்சிகரமாகச் சிவில் உரிமைகள் காணும்போது, புதிய புரட்சிப்பாடமொன்று அன்னார் அரசியலில் மகிந்தாவே மானுடத் தேவன் என்பதாக...
கடந்த முப்பதாண்டு புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள்.இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில் கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் மகிந்தா அரசு மிக உயர்ந்த அறிவார்ந்த முறையில் அரசியல் செய்கிறது.இது,கணிசமான தமிழ் மக்களிடம் ஏற்புடைய உளவியலைப் பலத்தகாரமாகத் திணித்து, உருவாக்கி வருகிறது.இந்தத் தருணத்தில் "புரட்சி"கரமாகவும் இதை நியாயப்படுத்துவதற்கு அழகலிங்கம் "தமிழர்கள் ஜனநாயகத்துக்குத் தகுதி" பெற வேண்டுமென்றொரு போடுபோட்டுக் கருத்தியல் ஆயுதந்தாங்கிய கோத்தபாயவாக நம்முன் வருகிறார்.விட்டால் தமிழர்கள் எல்லோருமே பயங்கரவாதிகள்தான் என்றுஞ் சொல்லிவிடுவார்.இதன் தொடராகவோ என்னவோ அவர் புரட்சிகரமானவொரு கட்சியைக் கட்டும்"ஜனநாயக மறுப்பிலிருந்து"விடுதலையாகி இலங்கையில் பெரும் கட்சியில் சேர்ந்து புரட்சியைத் தோற்றுவிக்கும் புறநிலைகளை உருவாக்க முனைகிறார்.இதன் தொடரில் தமிழ்க் கட்சிகளையும் சிங்களப் பெருங்கட்சிகளுக்குப் பின்னாலுள்ள மூலதனத்தொடு இணைய வற்புறுத்துகிறார்.இனம்-இனத்தோடு சேர்வதில் வியப்பில்லை!
இந்த நோக்கத்திலான இலங்கை அரச விய+கம் மென்மேலும் மேல் நோக்கி உந்தப்பட்டு,மக்களின் சுயவிருப்பாக மாற்றப்பட்டும் வருகிறது.இதனால் நமது மக்களின்மீது இயக்கங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த பலாத்தகரமான அதிகாரத்துவ மேலாண்மை மெல்ல உடைபட்டு வருவதும் கூடவே அந்தவொரு சந்தர்ப்பத்தை மக்களே மேலும் வலுப்படுத்தும் தருணத்தில் "தேசிய விடுதலைப் போரை" பிற்போக்கான வகையில் முன்னெடுத்த இயக்கவாத மாயை தகர்ந்து தவிடுபொடியாகும் தருணம் புலிகளது அழிவோடு நெருங்குகிறது.இதை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிப் புறச் சக்திகள் மெல்லத் தமது நலன்களை மையப்படுத்திய அரசியற் கருத்தாக்கங்களையும்,அதுசார்ந்த பொருளாதாரத் தாக்குதல்களையும் எமது மக்களின்மீது திணித்து நமது மக்களை நவீனமான முறையில் அடிமை கொள்கிறார்கள்.இதற்கான நியாயப்பாடுகளை அழகலிங்கம் போன்ற மேதைகளுடாகச் செவ்வனே செய்யும் இலங்கை-ஆசிய மூலதனக்கூட்டு,தமது இன்றைய இனவழிப்பு அரசியல் நடாத்தையை "ஜனநாயகம்"என்ற முகமூடியினது துணைகொண்டு தமிழ்பேசும் மக்களைக் காட்டுமிராண்டிகளாக்குவதில் அனைத்து வழிகளையும் பாவிக்கின்றது.இந்தவொரு வழியில் சிக்குண்ட அழகலிங்கம் கம்பனிக்குச் சிங்கள மூலதனம் போடும் இலாப நட்டக்க கணக்குத் தமிழர்களின் தலைகளைக் கொய்தால் அது"ஜனநாயகம்" பிறப்பிக்கும் முறைமையாகிறது!
இத்தகையவொரு நிலையை இலங்கை இனவாத அரசு முன்னெடுக்குமென்பதை நாம் பல முறைகள் கட்டுரைகளுடாகப் பேசியுள்ளோம்.இந்தவொரு மையப் பிரச்சனையில் மக்கள் கிடந்து அல்லலுறும்போது எந்தத் தியாகமும்,தீரமும் கருத்தில் கொள்ளப்படாது போகும்.இந்தச் சூழலே இலங்தை மற்றும் அந்நியச் சக்திகளுக்கு மிக உறுதியானவொரு அரசியல் நகர்வையும்,அந்த நகர்வுக்கேற்ற வகையான கருத்தியல் வெற்றியையும் தமிழ்பேசும் மக்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது.இதை இனங்காணமுடியாதவொரு தரித்திரமான அரசியல் வெறுமையோடு நமது "இனவிடுதலைப் போராட்டம்"தொடர்ந்து யுத்தத்துள் மூழ்கடிக்கப்பட்டு,அதன் அரசியல் விய+கம் முற்று முழுதாக முடமாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டது.அநுராதபுரத்தில் சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டிய "தமிழ்-பிரபாகர" வீரத்துக்குச் சிங்களக் துட்டக்கைமுனு வன்னிக்குள்-நந்திக் கடற்கரையில் பிரபா உச்சி பிளந்து காட்டிய துட்டக்கைமுனு நமது மக்களது அடிமை சாசனத்தை உறுதிப்படுத்தும் சிங்கள உளவியலாக வெளிபட்டது.ஆனால்,இதையெல்லாம் அழகலிங்கம் புலிப் பாசிசத்தின் மடியில் கணக்கு வைத்துச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் மடியில் "ஜனநாயக"க் குழந்தையைப் போட்டுக் கொலைகளை அதன் உணவாக ஊட்டும்போது அழிவது அப்பாவித் தமிழர்கள்தானே-அதில் அழகலிங்கத்துக்கு என்ன வந்துவிடப்போகிறது?
இந்தச் சந்தர்ப்பத்தில்மேலுஞ் சிலதைச் சொல்வது பொருத்தம்.அதாவது, இலங்கை அனைத்து இனமக்களின் மொத்த எண்ணவோட்டமானது ஒருகிணைந்த ஒரு கட்சிக்கு-அமைப்புக்கு விசுவாசமாக இருப்பதற்குச் சாத்தியமில்லை.தொடர் துன்பங்கள்,பசி,பட்டுணி,சாவு,பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில்(உயிர் வாழ்வதே சாத்தியமில்லாத தேசத்தில் அதைச் சாத்தியப் படுதும் அவா)உருவாக்கும்.இப்போது விடுதலை,சுதந்திரம் என்பதெல்லாம் மக்களின் வாழ்வோடு சம்பந்தப்படாத விஷயமாக மக்களே உணரத்தலைப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.இதை இனம் கண்டவர்கள் எமது மக்களின் எதிரிகளே!நம்மைச் சுற்றி மதில்களை உருவாக்கிய விடுதலை இயக்கங்கள், நமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாது அவர்களையே ஆயுதப் பலாத்தகாரத்தால் ஒடுக்கித் தமது ஆதிகத்தை நிலைப்படுத்த முனைந்த இந்தக் கேடுகெட்ட அரசியலுக்குப் புலிகளையோ அல்லது மற்றைய இயக்கங்களையோ காரணம்காட்டிப் பேசுவதைவிட,நமது மக்களின் அரசியல் அறிவு நிலை சார்ந்து சிந்திப்பதே சாலச் சிறந்தது.இன்றோ புலிகளது தோல்வியிலிருந்து பாடங்கற்க வேண்டியவொரு ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமாக நாம் இருந்தும் அது குறித்து மேம்போக்கான மனநிலையோடு மிகக் கெடுதியாக வீராப்புப் பேசுகிறோம்!இலங்கை அரசவரலாற்றில் தமிழர்களை வெற்றிகொண்ட சிங்கள இராணுவ மாயை சிங்கள மக்களைத் தமிழ்பேசும் மக்களுக்கான எஜமான நிலைக்கு உயர்த்தியுள்ளது.இது,இனவாத அரசியலில் பின் தொடரும் பொருளாதார இலக்குகளோடு முற்றிலும் தொடர்புடையதாக மாறியுள்ளநிலையிலும் சிங்கள எஜமான உளவியலானது எந்தவிதப் பண்பு மாற்றத்தையும்கொள்வதற்குச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இலக்குகள் இடங்கொடுக்கவில்லை.அது,தொடர்ந்து இன மேலாதிக்கத்தைக் கடைப்பிடித்தபடியேதாம் ஆசிய மூலதனத்தோடான தனது உடன்பாடுகளைக் கொண்டியங்குகிறது.இது,அழகலிங்கம் போன்றவர்கள் கனவு காணும் "முதலாளித்துவ ஜனநாயக"நிலையை இலங்கையின் இராணுவ வாதத்துக்குள் என்றும் ஏற்படுத்தும் சுயகௌரவ-சுய மேல் நிலைப்படுத்தல்கள் இடமளிக்கப் போவதில்லை.தேர்தல்கள்-மாநகரசபைத் தேர்தல்களெனப் பங்குகொண்டு,அவைக்கான அதிகாரத்தின் பலனாகச் சிவில்-குடிசார்வுரிமைகள் கைகூடுமெனவும் சொல்லப்படும் இன்றைய மேம் போக்கான கருத்தாடலை உயர்த்தும் அழகலிங்கம் அவர்கள் ஒரேயடியாக இலங்கை அரசிடம் சரணாகதி அடையும் நிலைக்குத் தனது நிலையை எட்டுகிறார்.
எமது சமூகத்தின் உயிர்த்திருப்பே மாற்று இனத்திடம் அல்லது மாற்றார் தயவில் பொருளாதார நலன்களைக் கனவுகண்டது.இது முற்றிலும் சுய விருத்திக்கான எல்லாவகையான கதவுகளையும் இறுக மூடிவிட்டு மாற்றாரில் தங்கி வாழும் ஒரு உதவாக்கரை,கையாலாகாத இனமாக நமது மக்களை மெல்ல உருவாக்கிய சிங்கள மற்றும் அந்நியச் சக்திகள் இன்று நமது மக்களைப் படு குழியில் தள்ளிவிட்டுப் புலிகளைப் பயங்கரவாதிகளாக்கித் தமது வெற்றியை அரசியல் ரீதியாகப் பெற்று நிலைப்படுத்துகிறார்கள்.இதைத் தடுப்பதற்கு வக்கிலாத ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்து அடிமையாக்கிச் சென்றுள்ளது.இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த அழகலிங்கம் கம்பனி போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு ஜனநாயகத் தகுதி குறித்துப் பேசுவதில் தமது ஈனத்தனத்தை மூடிமறைக்கிறது.
இங்கேதாம் ரொக்சிச வாதிகளின் கனவுகள் முழுமொத்த இலங்கை மக்களையும் ஏமாற்றும் தந்திரத்தோடு ஒரு சரணகதி அரசியலை ஜனநாயகத்தின்பெயரில் ஒப்பேற்றுகிறது.புலிகளது தகர்வுக்குப் பின்பான அரசியலில் மக்களே தமது உறுதியானவொரு நிலைப்பாட்டைத் தமது வாழ்வியல் நம்பிக்கைகளுடாகச் சாதிக்கும் சமூக அபிலாசையாக இது விருத்தியாகிப் தேசியவிடுதலைப் போருக்கு அகப் புறமாக எதிர்ப்பிடும் தருணம் தோன்றுகிறதாகவும்,அதன்படி இலங்கைப் பெரும்பான்மை மக்களோடு கைகோர்க்கும் முதல் நடவடிக்கையாகச் சிங்கள ஆளும் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பெரும்கட்சிகளோடு இலங்கைச் சிறுபான்மை இனங்களது அரசியல் கலந்து காணாமற்போவது ஜனநாயகத்துக்குத் தோதானதாகவும் கற்பிக்கப்படுகிறது.
இதன் வாயிலாகத் தமிழ்பேசும் மக்கள் பாரிய அபிவிருத்திகளைத் தமது பிரதேசங்களில் எட்டுவதற்கு இந்தப் பெரும் கட்சிகள் வழிசமைப்பதாக இன்னொரு கனவுக்குடத்தைத் தமிழ் பேசும் மக்களின் தலையில் சுமக்க வைக்கும் அழகலிங்கம்கம்பனி, அரசியல் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட கருத்தியலாக விரிகிறது.இதை நியாயப்படுத்தத் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை காங்கிரசு-காமராசார் ஊடாக எழுத முற்படும் ரொக்சிசக் கண்ணுக்குக் கட்சிகளுக்குப் பின்னாலுள்ள சக்திகளது நலனை அண்மித்த ஏதோவொரு உறுவு இருக்கவேண்டும்.இது,உலக நடப்பில் வர்க்கப் போராட்டத்தைத் தொடர்ந்து நடாத்துவதை மறுத்துச் சரணாகதியடைந்த ரொக்சியின் அரசியலோடு மீளவரும் ஒரு கபட நாடகம்தாம்.என்றபோதும், இவர்கள் குறித்துரைக்கும் காரணங்களால் இலங்கையில்"அவசரகாலச் சட்டம்"ஒருபோதும் எடுப்பதற்கான சூழலை உலகப் பொருளாதாரப் போக்குகள் தரப்போவதில்லை.
அழகலிங்கம் அவர்கள் வாழுகின்ற ஜேர்மனிய மண்ணில் உச்சமான முதலாளியப் பொருளாதார வளர்ச்சி நிலவுகிறது.அங்கே இவர்காணும் "ஜனநாயக-குடிசார்"பண்புகள் நிறையவே உருவாகியுள்ளது.எனினும்,சமீபகாலமாக நடைபெறும் விவாதமானது ஜேர்மனுக்குள் குறுகிவரும் ஜனநாயக விழுமியத்தை இனங்காணத்தக்கபடி "ஜேர்மனிய இராணுவத்தை உள்நாட்டுக்குள்-சிவில் பாதுகாப்புக்குப் பயன்படுத்தவேண்டுமெனும் அரசியல் கோரிக்கையை எந்த வர்க்கஞ் செய்கிறது-ஏன் செய்கிறது"-என்பதற்குப் பதில் என்ன?இலங்கை அரசியலை இத்தோடு தொடர்புப்படுத்தும் எல்லாவகைப் பண்பும் இன்று அத்தேசத்துள் மலிந்துகிடக்கிறது.அந்நிய மூலதனத்துக்கு வேட்டைக்காடாக மாறிய இலங்கை முதலில் தமிழினத்தை வேட்டையாட முனைந்த ஆசிய மூலதனத்துக்கு அடியாளாக இருந்தது மகிந்தா இராணுவமாகும்.இதை ஓரங்கட்டிவிட்டு,இந்த மகிந்தாவின் காலடியில் ஜனநாயகம் பிறந்து வளர்வதாகச் சொல்லிச் சரணடையும் ரொக்சியத்தை எங்கே வைத்துக் கணிப்பிடுவது?
இது,அரசியல் மோசடி!
புலிகளின் தோல்வி,ஈழக் கோசத்தின் பொருள்வயப்பட்ட தோல்வியாகவும் கருத்தியல் தளத்திலான தகர்வாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் உட்புறத்தே பாரிய வெறுப்பாகவும் நிலவிக்கொண்டிருக்கிறது புலிகளின் அழிவுதரும் வலி.இந்த வலிமிக்க வரலாற்றுப் பாத்திரத்தில் புலிகள் இல்லாத இன்றைய சூழலில், இன்னும் எத்தனை அழகலிங்கங்கள் இலங்கை அரசினது திட்டமிட்ட இனவழிப்பை ஜனநாயகத்தின் பெயரால் தமிழ்பேசும் மக்களைக்குட்டியபடி, சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு முண்டுகொடுப்பார்களோ அவ்வளவு பேரும் இனிப் "புரட்சி" பேசுவார்கள்.இவர்களை இனங்கண்டு அம்பலப்படுத்தாதுபோனால் தமிழ்பேசும் மக்களைச் சிங்கள-ஆசிய-மேற்குலக மூலதனத்துக்குத் தத்துக்கொடுத்து நிரந்தர அடிமைகளாக்குவதில் வெற்றி கண்டுவிடுவார்கள்.தமிழ்பேசும் மக்களுக்கு விடிவுவேண்டிச் சிந்திப்பவர்கள் இவ்வகைப் போராட்டத்தைக் கருத்தியல் தளத்தில் எதிர்கொள்வது அவசியமான பணி.
ப.வி.ஸ்ரீரங்கன்.
11.06.2009
P/S:
தேசம் நெற் வாசகர் ஒருவர் அழகலிங்கத்தின் கருத்துக்கு இங்ஙனம் விமர்சனம் வைத்திருக்கிறார்.அவரது கருத்தும் நியாயமானது:
//கட்டுரையாளர் (அழகலிங்கம்) இங்கு கூற வருவது என்னவெனில் தமிழ்கட்சிகள் தேர்தலில் பங்குபற்ற வேண்டும். தனியாக தமிழ்க்கட்சிகளாக இருப்பதைவிட பெரிய சிங்கள தேசியக்கட்சிகளுடன் இணையவேண்டும். இதனால் நாட்டில் ஜனநாயகம் மலரும். இது சோசலிசப்புரட்சிக்கு இட்டுச்செல்லும் என்பதுதான். அதற்கு அவர் சோசலிசம் உலகமயமாக்கல் புரட்சி என்னும் சிவப்பு சொற்களை பயன்படுத்தியுள்ளார். அவருக்கு லெனின் கூறிய சில வரிகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "பூர்சுவா வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளிவர்க்கம் பங்குபெறவேண்டும் பெரும்பான்மை பெறவேண்டும். அதன்பின்தான் அது அதிகாரத்தைப் பெறவேண்டும் என்று முட்டாள்கள் அல்லது கயவர்கள்தான் சிந்திப்பார்கள். வர்க்கப்போராட்டம் பாட்டாளிவர்க்கத்தின் தலைமை ஆகியவற்றின் இடத்தில் பழைய முறையிலான பழைய அதிகாரமுடைய வாக்களிப்பை வைப்பது முட்டாள்தனத்தின் சிகரமாகும். மாறாக பாட்டாளிவர்க்கம் அதன் பக்கத்து மக்களை வென்றெடுக்க பூர்சுவா வர்க்கத்தை முதலில் தூக்கியெறிந்து விட்டு அரசு அதிகாரத்தை முதலில் கைப்பற்ற வேண்டும். " இந்த அடிப்படையில் இலங்கையில் தேர்தல்களை பகிஸ்கரித்த தோழர் சண்முகதாசன் அவர்களின் கூற்றையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக்கோப்புக்குள் எந்தக்கட்சியும் அல்லது எந்தக் கூட்டனிகளும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல்நாயாக செயற்படும். அடக்குமுறையான பூர்சுவா வர்க்க இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையும் தீர்க்கமுடியாது."தமிழ்க்கட்சிகள் அரசாங்கக்கட்சியுடன் சேரவேண்டும் என்ற கருணாவின் விருப்பத்தை கட்டுரையாளர் கொண்டிருப்பதற்கும் அதை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு. அதை கருணாபோல் வெளிப்படையாக சொல்வதை விடுத்து தயவு செய்து மார்க்சிய சொற்களைப் பயன்படுத்தி மக்களையும் மார்க்சியத்தையும் ஏமாற்ற முயல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.-kannan on June 10, 2009 7:39 am // (தேசம் நெற் வாசகர் ஒருவரது கருத்து இது.)
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
No comments:
Post a Comment