Thursday, March 26, 2009

புலம்பெயர்ந்தோம் அகதியென...


ரச-புலி வன்னியுத்த்துக்குப் பின்னான அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொருவரும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப்படுத்துகிறார்கள்.இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துத் தினமும் செத்துமடியும் மக்களது நலன் எதுவென்பதில் நமக்குக் குழப்பமாக இருக்கிறதா? அப்படி இருப்பதில் தவறில்லை.காரணம்:"நமக்குள்தாம் எதிரிகள் இருக்கிறார்கள்-வெளியில் இல்லை"என்பதால் இது முற்றிலும் ஒரு குழப்பகரமான சூழல்தாம்.



இங்கே,தொடர்-தொடராகச் செய்திகளை-பேட்டிகளை அள்ளிவரும் ஊடகங்கள் தத்தமது வரும்படியோடு மிகவும் கவனமாகவொரு அரசியலை நமக்காகக் காவி வருகிறார்கள்.அழியும் மக்களது வாழ்விலிருந்து விரிவுறும் பண வரும்படிக்கான-பதவிகளுக்கான அரசியல் தெரிவு,மீளவும் நமது மக்களது விடுதலைக்கு வேட்டு வைப்பதில் புலிகளது பாணி அரசியலே தெரிவாக்குகிறது.இது,சுயநிர்ணயவுரிமையெனக் கத்திக்கொண்டே கடைவிரிக்கும் புரட்சிகரக் குரல்,போலித்தனமாக, மக்களது விடுதலை-நலன் குறித்துக் குத்தகைக்கு எடுத்து வானொலிகளில் கட்டுரை வாசிக்கிறது-இணையத்தில் போட்டியிட்டுப் புரட்சி பேசுகிறது!


இங்கே, எவர் வேண்டுமானாலும் புலிகளை எப்படியும் மதிப்பிடலாம்.


தேசியச் சக்தியாகவோ,ஐயக்கிய முன்னணி அமைக்கத்தகு அமைப்பாகவோ அன்றிப் புரட்சிகரச்
சக்தியாகவோ மதிப்பிடலாம்.ஆனால்,விடுதலைப் புலிகள் அமைப்பின் வரையறை
ஒன்றேயொன்றென்பதை அவர்கள் மிக இலகுவாக உணர்த்தி வருபவர்கள்.தங்களைத் தவிரப்
போராட்டப்பாதையில் எவர் பிரவேசிக்கிறாரோ அவரைப் பூண்டோடு துரோகி சொல்லி
ஒழித்துக்கட்டுவதே அது.




மிகத் தெளிவான அவர்களது வரையறை இன்றுவரையும் தொடர்கதையாக நீள்வதும்,மக்களின் எந்த உரிமையையும் "ஈழவிடுதலை"சொல்லி ஆயுத முனையில் பறிப்பதும் நாம் காணும் வரலாறாகவே இருக்கிறது.இவர்களே, வன்னியில் மக்களைத் தமது தேவைக்கேற்றபடி இலங்கை அரசிடம் பலியிட்டுவருபவர்கள் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.


நடசேனின் பேட்டியாக இருந்தாலென்ன இல்லைப் பிரபாகரனின் "மாவீரர்தின"உரையாகவிருந்தாலென்ன அனைத்தும் மிகப் பித்தலாட்டமான அரசியலைப் பேசுகிறது.நிபந்தலையின்றி இலங்கை அரசசோடு பேச விரும்புவதாகத் தோல்வியின் விளிம்பிலுள்ள புலிகள் சார்பாக நடசேன் அறிக்கைவிட்ட கையோடு,அவுஸ்த்திரேலிய வானொலிக்குப் பேட்டியளிக்கிறார்.அதையும் ஐரோப்பியத் தமிழ் வானொலி ஜேர்மனியிலிருந்து மறு ஒலிபரப்புச் செய்கிறது!


புலிகளது நிலை தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயத்துக்கான தமிழீழமே முடிந்த முடிவென்றுஞ் சொல்லும் நடேசன், இலங்கை அரசோடு எந்த மக்கள் நலன் சார்ந்து நிபந்தனையற்ற பேச்சுக்குச் சம்மதிக்கின்றார்?


ஒன்றுக்கொன்று மிக வியாபாரத்தனமாகக் கருத்துக்கூறும் புலிகளுக்குப் புதுப்புது விளக்கங்கள்-சித்தாந்தங்கள் சொல்லப் பலர் முழுநேரத் தொழிலாகப் பரப்புரை செய்துகொள்ளலாம்.எனினும்,மக்களுக்கும்,அவர்களது உயிர்த்திருப்புக்கும் குழிப்பறிப்பதில் புலிகளைக் காத்துச் சுயநிர்ணயத்தேடு முடிச்சுப் போடுவதில் கணிசமான மக்கள் அழிந்துபோவதையும் குறிகத்தவறுவது நியாயமாகிறதா?


தமிழீழத்தின் நீட்சி இப்போது சுயநிர்ணயவேடமாகிறது.இலங்கை அரசுக்குத் தமிழ்பேசும் மக்களது உரிமைக்குரல் எப்படிப் பயங்கரவாதமாகிறதோ அதே வண்ணத்தில்தாம் இதுவும் தமிழ்பேசும் மக்களது காதுகளில் பூச் சுற்றுகிறது?


எமது விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டபோது(மாற்றுப் போராட்டச் சக்திகளை அழித்தொழித்தது)எமது சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள் இந்த நடசேன் வகையறாக்கள்.அதாவது, தேசிய விடுதலைப் போரில் பிரவேசித்த அமைப்புகளைத் தோழமையோடு அங்கீகரித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டிய தருணம் முன்னிருக்கும்போது,ஏதோவொரு அரசின் நலனுக்காக அந்தந்த அமைப்புகளை அழித்ததென்பது சுந்தரத்தின் படுகொலையில் அதி உச்சம் பெற்றுப் புலிகள் ஏகாதிபத்தியங்களின் ஏவல் நாய்தாம் என்று உறுதிப்படுத்தியது அன்றைய வரலாறு அல்லவா?





இன்றோ அதே பாணி அரசியலைப் புலம்பெயர் தளத்தில் புலிகள் பற்பல வடிவத்தில் உருவாக்கி வருகிறார்கள்.இந்த அரசியல் எவரையும் விட்டுவைக்க மறுக்கிறது.பற்பல ரூபங்களில் இஃது அரசியல் முனைப்பைக்கொண்டிருப்பினும் இதன் தளம் பாசிசமே.இது,புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் இன்னொரு சக்தி உருவாவதை மிகக் கவனமாகத்தடுக்கப் புரட்சிகர அரசியலைக் கைலெடுத்து வைத்திருக்கிறது.கூடவே,மிகவும் கறாராக ஜனநாயக வேடந்தரித்து மாற்றுக் கருத்துச் சூழலைப் பூண்டோடு அழிப்பதில் புலிகளாகத் தமது இருப்பை நிறுவுகிறது.


இன்றைக்குப் புலிகளெனும் இயக்கத்தின் இருப்பைக் குறிவைத்து நகர்த்தப்படும் அரசியலானது இலங்கைமீதான இந்தியாவின் அபிலாசைகளில் பிரதிபலிக்கத்தக்கதாகும்.இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமானது இன்றைய ஈழத்து நிலைமைகளைக் உன்னிப்பாக உணரத் தலைப்பட்டதன் அடுத்தகட்டமாகக் காய்களை நகர்த்துகிறது,புலிகளாலும் மற்றும் இயக்கங்களாலும்-ஸ்ரீலங்கா அரசாலும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வை திசை திருப்புவதற்காகவும்,தொடர்ந்தும் இந்தியத் தேசத்தில் சார்ந்தியங்கும் எண்ணவோட்டத்தை முனைப்புற வைக்கவும் பற்பல செயல்களில் இன்றைய புலம்பெயர் மாற்றுக் கருத்துச் சூழல் அமிழ்ந்துள்ளது.இதற்கான முன் தயாரிப்பாக அது வன்னியுத்தத்தைப் பலவாறாகப் பயன்படுத்துகிறது.


1:புலிகளை இராணுவரீதியாகப் பலவீனப்படுத்துவது,


2:அரசியல் பேரம் பேசமுடியாத தரகுக் கட்சியாக்குவது,


3:பிரபாகரனது தலைமைக்கு நிகராக புலிகளுக்குள் இருக்கும் ஒருவரை முன் நிலைப்படுத்துவது,


4:இலங்கை அரசோடு நிபந்தனையற்ற பேச்சுக்குச் சென்று அரைகுறைத் தீர்வோடு சரணாகதியடைய வைப்பது,


5:அத்தகைய நிலைமையில் அரசியல் அதிகாரத்தைப் புதியவகைப் புலிகளோடு பங்கீடு செய்வது எனும் அரசியல்.


வன்னி யுத்தத்துக்குப் பின் இத்தகைய நிலையைப் புலிகள் அடைந்து வருகிறார்கள்.



இதை நடசேன் அளித்த வானொலிப் பேட்டியில் நாம் குறித்துணர முடியும்.எனினும்,இதை அவர்கள் அடைவதற்காக இன்றுவரையும் மக்களைப் பலியிடுவதில் பேரம் தலைமையைக் காத்தலோடு சம்பந்தமுடையதாகவும் இருக்கிறது.இது,தமிழீழத்தின் பேரால் நடப்பது சுத்த அரசியல் மோசடி.இதைவிட மோசடி ஜனநாயகத்தினதும்,சுயநிர்ணயத்தினதும் பேரால் மக்கள் ஏமாற்றப்படுவது!

மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.


எமது மக்களை நம்பாத அரசியற் கொள்கைகள்-தலைமைகள் அந்நிய நாடுகளால் நமது மக்களின் "தேசிய"அபிலாசைளை, நாடமைக்கும் விருப்புறுதிகளைப் பெற்றுவிட முடியுமென ஒளிவட்டங்களை குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஜனநாயகத்தின் பெயரால் கட்டிவிடுகிறார்கள் புலிப்பாணித் தமிழ் அரசியல் தரகர்கள்.


புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் மக்களது அரசியல் வாழ்வில்-பிரக்ஜையில் சமுதாய
ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் "இனவொதுக்கலுக்கு"எதிரான தமிழ்த் தேசிய அபிலாசையானது
எந்தத் தடயமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது
இன்றைய நெருக்கடிமிக்க வன்னியுத்தக் காட்டுமிராட்டித் தனத்துக்குத் தீர்வாகாது!

இத்தகைய மக்கள் தமக்குள் இருக்கும் அரசியல் கயர்வகளை இனங்கண்டு,அவர்களது அரசியலை மறுக்காதவரையும் எவரும் புரட்சிகரச் சக்தியாகத் தம்மை இனங்காட்டி நம்மை ஏமாற்றித் தமது தரகு வேலையைச் செவ்வனவே செய்வார்கள்.இதுவே,நமது மக்களது விடுதலைக்கு முட்டுக்கட்டையான அரசியலாகவும் மீளவும் கொலைகளைச் செய்யும் இயக்கவாதமாகவும் நகர்கிறதுக்குக் கட்டியம் கூறுகிறது.

தமிழ் மக்களின் வரலாற்று வாழ்வாதாரங்களையும் அவர்களின் ஐதீகங்களையும் மெல்ல அழித்துவரும் அரசியலைத் தமிழ் மக்களைக்கொண்டே அந்நியச் சகத்திகளும் இலங்கையும் அரங்கேற்றி வருகின்றன.பேராசை,பதவி வெறி பிடித்த வலதுசாரித் தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தாம் சோரம் போகிறார்கள்.இவர்களிடம் இருக்கும் அரசியல் வெறும் காட்டிக்கொடுக்கும் அரசியல்தாம்.நிரந்தரமாகத் தமிழ் மக்களை ஏமாற்றித் தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதில் அவர்களின் நோக்கம் மையங் கொள்கிறது.ஆனால்,சிங்கள அரசின் அதீத இனவாதப் போக்கானது இலங்கையில் ஓரினக் கோசத்தோடு சிங்கள மயப்படுத்தப்படும் தூரநோக்கோடு காய் நகர்த்தப்படுகிறது.இந்தத் திட்டமானது மிகவும் இனவொடுக்குதலுக்குரிய மறைமுக நோக்கங்களை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்குள் வற்புறுத்தி வெற்றி கொள்கிறது.

இத்தகையவொரு சந்தர்பத்தில் இந்தியா,சிங்கப்பூர் என்று ஊர் சுற்றித் திரியும் புலியாதரவு-புலியெதிர்ப்புக் கபோதிகள் தங்கள் அரசியல் இலாபங்களுக்காகத் தமிழ்பேசும் மக்களக்கான "தீர்வுப் பொதிகளை"தயாரித்து தீர்வு நோக்கிச் செல்வதென்பது இந்தியாவின் நலனை முழுமொத்தத் தமிழ்மக்களது ஒத்திசைவோடு இலங்கையில் ஊன்றுவதற்கானதாகவே பார்க்கலாம்.

இப்போது, உலகஞ் சுருங்கிவிட்டது.இலங்கையின் இனப் பிரச்சனை வெறும் இரு இனங்களுக்கிடையிலான சிக்கலல்ல.அது, முழு மொத்த தென்னாசியப் பிராந்தியத்தினதும் பிரச்சனையாகும்.இங்கேதாம் தமிழ் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றித் தத்தமது எஜமானர்களைத் திருப்பத்திபடுத்தும் காரியத்தில் இறங்கி, நமது மக்களை அடியோடு கொன்றடிமையாக்கும் வன்னி யுத்த அரசியலை ஜனநாயகத்தின் பெயராலும்,புலிப் பாசிசத்தின் பெயராலும் ஒப்பேற்றி வருகிறார்கள்.இவர்களே தமது பழைய பெரிச்சாளிகளை ஐரோப்பாவெங்கும் சந்தித்து அனைத்து ஒத்துழைப்பையும் மக்களின் பெயரால் செய்து தரும்படி காத்துக்கிடக்கிறார்கள்?

இந்த அரசியல் நிரலுக்குள் புலிகளின் போராட்டம் தொடர்கிறது,மக்களைக் கேடயமாக்கியபடி!


இது, ஈழத்தைப் பெற்றுத் தருமெனப் பலர் நம்பிக்கிடக்கிறார்கள்!


இங்கே, மொழிக்காக,இனத்துக்காக,தேசத்துக்காக "உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டு, மனித ஆளுமையைக் காவு கொள்கிறது தமிழீழப் போராட்டம்.இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற "வர்க்க"அரசியலானது மண்ணையும்,மொழியையும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு மனித விழுமியத்தை ஒருநாளும் முதன்மைப் படுத்துவதில்லை.இது, இந்தச் சிந்தனையை உயர்வாகவெண்ணுவதுமில்லை.இதையேதாம் புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் "மாற்றுக் கருத்தாளர்கள்,ஜனநாயகவாதிகள்,புரட்சிகரச் சிந்தனையாளர்கள்"எனும் அட்டவணையுள் புலிகளதும்,இலங்கை-இந்திய அரசுகளதும் ஏவல்படைகள்-குழுக்கள் செய்துவருகிறார்கள்.இவர்கள் மத்தியில் நாம்...


ப.வி.ஸ்ரீரங்கன்
26.03.09

Tuesday, March 17, 2009

வன்னியுத்த அழிவுக்குப் பின்பும்...

நேற்றைய தவறும் இன்றைய விடியலும்.

"முடமாகக் கிடக்கும் காலத்துள்
நினைவு முறிக்கும் உண்மைகள்
ஏற்க மறுக்கும் தடங்களில்
இருப்பிழக்கும் மனித வெளிகள் இருண்டு கிடக்கும்

எந்தத்தேற்றமும்
ஊன்று கோல் தருவதற்கில்லை
முடங்கிக் கிடக்கும்
உருவமிழந்த இதயத்துள் எலி(உண்மை)பிராண்டும்
பூனைகளின் பசித்த தவத்துள் அது சாகக் கிடக்கிறது."

பாசிச மகிந்தா குடும்பத்து வன்னி யுத்தத்துக்குப் பின்பான புலிகளது "தேசவிடுதலைப்போர்" அரசியலில், பிணங்களை எண்ணும் போராட்டமாகத் "தமிழீழத்துக்கான"போராட்டம் வந்து நிற்கிறது.இலங்கையை ஆளும் மகிந்தா குடும்பம் பாசிசம் என்றால் என்னவென வினாவும் ஆரம்ப "அரசியற்கல்வி கற்கும்" மாணவர்களுக்கு நல்ல உதாரணமாக உலகில் தன்னை முன்னிறுத்துக்கிறது.மகிந்தாவின் தம்பி "அன்னை"இந்திராகாந்தியின் மகன் சஞ்சாய் காந்தியை நினைவுப்படுத்துகிறார்.சுடரொழிப் பத்திரிகை ஆசிரியர் குறித்த கோத்தபாயவின் கருத்தும் ;அவரது உடல் மொழியும் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.இவரது மனோபாவத்துக்கான உத்துதல் என்னவாக இருக்கும்?அந்நிய தேசங்களது ஊக்கமின்றிப் பேச முடிந்திருக்குமா?

இந்த இனவழிப்பு யுத்தத்தில் மண்ணுக்காகத் தமது உயிரைவிடுதல், மாண்டும்"உயிர் வாழ்வதாக"உருவகப்படுத்தப்பட்டு அதுவே மகத்தான"வீரமாகவும்"தியாகமாகவும்,வாழ்வின் உண்மையான அர்த்தமாகவும் கருத்துப் பரப்பப்பட்டு அதையே பண்பாட்டுத் தளத்தில் நிலையான பண்பாடாக வளர்த்தெடுத்துள்ளது இன்றைய இலங்கையினது தமிழ்-சிங்கள ஆளும் வர்க்கங்கள்.இது, தகவமைத்து வைத்திருக்கும் இந்த "மாதிரி" மனிதர்கள் கிட்லரின் சேனைகள் போலவே தமது போராட்டத்தையும் பயங்கர வாதமாக-அரச பயங்கரவாதமாக விரிவுப்படுத்தியுள்ளார்கள்.இதனால், தமிழ் மக்களின் உண்மையான "சுயநிர்ணயவுரிமை" அர்த்தமிழந்த வெறும் சொல்லாடலாக மாற்றப்பட்டுவிட்டது.

இன்றைய வன்னி யுத்தத்தில்,புலியிருப்புப் போருக்காக மக்களைப் பலிகொடுப்பதில் ஆர்வமாயுள்ள புலிகளிடம் இஃதெந்தவொரு ஜனநாயகப் பண்பையும்,மனித விழுமியங்களையும் ஏற்பதற்கு மறுக்கிறது-சாதரணமானவொருவர்-இனவாதிகள் கருத்தாடுகிற அதே பாங்கில் இந்தத் தமிழ் "மாதிரி மனிதர்களும்"தமது தலைமை குறித்து,போராட்டம் குறித்து,உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் கதையாடுகிறார்கள்.ஊர்வலங்களில் தொடரும் புலிகளுக்கான மந்திரம் வன்னியில் கொலைகள் விழுவதைத் திறந்த மனத்துடன் வரவேற்கிறது.இத்தகைய செயற்பாட்டால்-வாழ் சூழலால் எஞ்சியிருக்கும் அரசியல் பிரக்ஜைகூட மூளையிலிருந்து துடைத்தெறியத்தக்க பலவழிகளில் இவர்கள் செயற்படுவது அப்பட்டமாகத் தெரிவதும்-ஈழம் பிணங்கள் நிறையும் சவக்காலைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது.இது குறித்து வடக்குக் கிழக்கு மக்கள் வாளாது கிடக்கிறார்கள்.வன்னி அவர்களுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருப்பதாகப் படுகிறதோ இல்லையோ,மகிந்தாவின் காலடியைப் பற்றிக்கிடக்கத் தமிழ்த் தலைவர்கள் வழி செய்துள்ளார்கள்.

வன்னி யுத்தத்தைக் கண்டு,வடக்குக் கிழக்கு நிலை இப்படியிருக்கப் புலம்பெயர் மண்ணில் ஊர்வலங்களுக்கு நடுவில் தலைகாட்டும் தமிழ்த் தேசியமனதுக்குப் புலிகளது கோரிக்கைகளை உடைத்துப் பார்க்கக் காலவகாசம் இல்லை!இந்தச் சூழலில்,அதீதக் குறுந்தேசியக் கருத்தியல் ஆதிக்கம்-மனித மூளையைச் சலவை செய்தல் போன்றே தமிழ்த் தேசியக் கதையாடல்கள் தமிழ்ச் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்துள்ளது.இதற்காகத் தமிழ் ஆளும் வர்க்கமானது தன்னை முழு ஆற்றலோடு ஈடுபடுத்துகிறது.குறிப்பாகப் புலிகளது ஜீ-ரீ.வீயும்,தீபமும் இதையே செய்து முடிக்கிறது.மக்களிடம், இன்றைய போரினது கொடிய மரணவாழ்வுக்கு-தோல்விக்குப் புலிகளது அன்றைய கடந்தகாலத்துத் தவறே காரணமென்பதை எவருஞ் சொல்வதற்கோ-உரையாடவோ தயாரில்லை.இது,மேலும் தமிழ்பேசும் மக்களை அரசியற் குருடர்களாக்கிவிட்டுள்ளது.இதனால்,தமிழீழம் எனும் பொலிக் கோசத்தை அவர்கள் விடுவதற்குத் தயாரில்லாது புலிகளது குரலாக ஒலிக்கின்றார்கள்.இக் கோசத்தால் இலட்சம் மக்கள் அழிந்தும் இவர்களுக்குப் புத்தி வரவில்லை.இனவாதச் சிங்கள அரசிடமிருந்து தமிழீழத்தைப் பிரித்துவிடலாமெனச் சிந்திப்பதில் மீளவும் புலிகளது இருப்பு அவர்களுக்கு அவசியமாகிறது.ஆனால்,உண்மையானது மக்களது மரணத்தில் சுத்தமாக முகத்தில் ஓங்கி அடிக்கிறது!


புலிகளது இருப்புக்கான இக் கோசமானது சமூகத்தின் அனைத்து அறிவார்ந்த தளங்களையும் கைப்பற்றிவிட்டது.கல்வி,கலை இலக்கிய,பண்பாட்டுத்தளத்தை இது வலுவாக ஆதிக்கம் செய்கிறது.இங்கே, அந்த வர்க்கத்தின் வலு மிருகவலுவாகவுள்ளது.இதை உடைத்தெறிந்து உண்மையான மனிதாபிமானமிக்க,ஆளுமையான மனிதர்களை உருவாக்குவது மிகக் கடினமான பணியாக இருக்கிறது.எனவே, தமிழ்பேசும் மக்கள் இந்தவகைப் போராட்டங்களையும்,கபட அரசியல் முன்னெடுப்புகளையும் இனம் கண்டு, மக்கள் சார்ந்த போராட்டங்களை-இயக்க அரசியலிலிருந்து பிரித்தெடுத்து நாமே முன்னின்று போராடும் அமைப்பு மன்றங்களைக் கட்டவேண்டிய வரலாற்றுத்தேவைக்குள் இருக்கிறோம்.

"மீண்டு வரும் பொழுதொன்றில்
பொய் முகம் முறித்தெறியும்
தெருவொன்று துன்பத்துள்...
திருப்பத்தில் எகிறும் எலும்புத் துண்டத்தில்

மொய்த்திருக்கும் இலையான்களின்
குருதி நினைந்த கால்களில்
இந்த மிருகத்தின் தடமொன்று சிக்கியது
எரிந்த சாம்பலையும் அவை விட்டபாடில்லை!

கனத்த மிதப்பொன்றில்
கடுகுகளுக்குக் கால் முளைத்து
வளத்தின்மீதான பெரு விருப்பாய்
வன் பொழுதொன்றில் வர்ணமிடும் பொழிவுகள்."


வன்னியுத்த அழிவுக்குப் பின்பும்-புலிகளது தோல்விக்குப்பின்பும் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புதிய வடிவங்களில் இந்த வகைப் போராட்ட உளவியல் ஊடுருவியிருப்பது மிக,மிக வஞ்சகத்தனமானது.இந்தச் சதிவலையை இனம் காண்பதும்,நாம் நமது தேசியவாழ்வையும் வரலாற்றையும் காத்துக்கொள்வதும்-அதனூடாக,நமக்கான இருப்பை நிலைப்படுத்தும் தேசிய அடையாளத்தை(சுயநிர்ணயவுரிமை) மீட்பதும் நம் ஜீவாதாரவுரிமையாகும்.

இலங்கையின் இரு யுத்த ஜந்திரங்களுக்குமிடையில் சிக்குப்பட்ட இலங்கை வாழ் சிங்கள-தமிழ் மக்கள் சமுதாயத்துள் மரணிப்பது நிலைத்து வாழ்வதாகவும்,தியாகமாகவும்,மாவீரமாகவும் கருத்து விதைக்கப்படுகிறது.தமிழ்த்தேசியத்தின் விருத்தியானது மிகவும் பின்தங்கிய "குறுந்தேசியத்தின்"இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது.சிங்களப் பௌத்த பேரினவாதமோ முழுமொத்த சிங்களவர்களையும் சிங்களத் தேசத்தை மீட்கும் தேசபக்தர்களாகவும்,மகிந்தாவைப் புதிய துட்டக் கைமுனுவாகவும் சித்தரிக்கிறது!இதனால்,இரண்டு யுத்தப் பிரபுக்களதும் இருப்புக்குச் சரியான மனிதவலுக் கிடைக்கின்றது.இப்போது, இந்த மனிதவலுப் பல தளங்களில் இரு யுத்தக் கிரிமினல்களுக்கும்(மகிந்தா மற்றும் பிரபா) சாதகமான வேலையைத் திட்டமிட்டு நகர்த்தக்கூடியகவும்- ஆதரவாகவும் விரிந்திருக்கிறது.

மகிந்தாவின் தம்பி கோத்தபாயவின் கருத்தின்படி,நிலவுகின்ற அரச அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட"சுதந்திரத்துக்குள்"வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அரச அமைப்பைச்சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.இதனால்,அனைத்தையும் கடந்து தேசமே முதலாவதும்-பிரதானமாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இத் தேசத்துக்காக அனைத்தையும் இழக்கத் தயாராகும்படி சிங்களச் சமுதாயத்திடம் மறைமுகமாகக் கோருவதில் கோத்தபாய மிகுந்த அமெரிக்கப் பாணி-புஷ்பாணி அரசியலைக் கட்டவிழ்த்துவிடுகிறார்.


வன்னியில் மக்கள்மீது வலிந்த தாக்குதல்களுக்காக "உந்துதல் கருத்தியல்" தளத்திலிருந்து "அனுதாப"உணர்வுத் தாகமாக மாற்றப்பட்டே இத்தகைய மாபெரும் கொலைச் செயல்கள் நடந்தேறுவதாகக் கருத இடமுண்டு.நாளாந்தஞ் சாகும் மனிதர்களது உடல்களைக் காட்டியே புலிகள் தமது அரசியல்-போராட்டவாழ்வுக்கும்,தவறான தெரிவுக்கும் அனுதாபத்தைத் தேடுவதில் குறியாக இருக்கிறார்கள்.இதற்காக நாளும் பொழுதும் தமது கருத்தியல் பரப்புரைகளைக் கட்டவிழ்த்துவிட்டு,மக்களை அழிப்பதில் இலங்கைப் பாசிச அரசுக்கு உடந்தையாக இருக்கிறர்கள்.

தமிழ்பேசும் மக்களினங்களில் நிலவுகின்ற "ஊனங்களும்"(ஆண்டபரம்பரைக் கனவு)அந்த ஊனங்களைப் பொறுமையோடு எதிர்கொள்ளப் பக்குவமற்ற அரசியல் வாழ்வும் நமக்கு நேர்கின்றது.இது, மக்களையே தமது முன்னெடுப்புகளுக்கு எதிரானதாக மாற்றியெடுத்து அவர்களைப் பலியெடுப்பதில் அதிகாரத்தை உருவாக்கிறது.இந்தத் திமிர்தனமான அதிகாரத்துவம் "துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது"ஒருபகுதியுண்மை மட்டுமே.மறுபாதி அதிகாரமானது மிகக் கடுமையான"உளவியற் கருத்தாங்களால் "கட்டியமைக்கப்படுகிறது.இது, துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது.இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட "மனிதவுடலானது"அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.

தமிழ்பேசும் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது.இதனால், அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் மக்கள் வெகுஜனப் போராட்டங்களைச் செய்யமுடியாதபடி அதிகாரவர்க்கம் செயற்படுகிறது.இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை "ஜனநாயக வாதிகளாக"க்காட்டிக் கொண்டு மக்களரங்குக்கு வருகிறார்கள்.அந்த வகையில் மகிந்தாவின்-டக்ளஸ்சின்-கருணாவின் பாத்திரம் இதுள் மையங்கொள்கிறது.

இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக"மக்கள் விரோதமாக"இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பிரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.இத்தகைய புரிதலின்றி அடுத்த நகர்வு சாத்தியமற்றது.

நேற்றைய தவறே
இன்றைய இழப்புகளுக்கக் காரணமானது.
இன்றைய தவறுகள்
மேலும் நாளைய
அரசியல் வாழ்வைச் சிதைப்பதில்
எவருக்குப் பிரியமுண்டு?

ப.வி.ஸ்ரீரங்கன்
18.03.2009

Sunday, March 15, 2009

தேசியம் புலிகள் அல்ல,தேசமும் சுயநிர்ணயமல்ல

இலங்கை அரசுபுரியும் பயங்கரவாத்துக்கு எதிரான யுத்தம்.



"உலகத்தின்-அமெரிக்காவின் "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்"
என்ற கோசம், இலங்கையில் ஒரு இனத்தைப் பழிவாங்கவும்,யுத்தத்தின் மூலம் நாதிகளற்று
அடிமைகளாக்கிக்கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.இஃது, அவ்வினத்தின்
அடிமைத்தனத்துக்குப் பின் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களைச் சிங்களப்
பெருந்தேசிய வாதத்துக்குள் திணித்து இன-அடையாள அழிப்பில் முடிவடைவதில்
முடியும்."




இலங்கை அரசு சொல்லும் யுத்தம்சார் சித்தாந்தம்-அரசியல்,"அமைதிக்கானது,சமாதானத்துக்கானது,ஜனநாயகத்துக்கானது"என்பது உண்மையானதாக இருக்க முடியுமா?



இக்கேள்விக்குப் பதிலளிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமை!



புலிகளது தவறான போராட்டத்தின் முடிவில் தத்தளிக்கும் தமிழ்பேசும் மக்களை அடியோடு மொட்டையடிக்கும் அரசியலைப் பலர் முன்னெடுக்கும்போது-அந்தப் பலருள்,இந்தியாவும் ஏகாதிபத்திய உலகமும் மட்டுமல்ல அவைகளைத் தாங்கிப்பிடிக்கும் நாமுமே காரணமாக இருக்கின்றோம்.அந்நியர்களுக்கு அடியாட்படையாக மாறிய புலிகள், எங்ஙனம் தமிழ்பேசும் மக்களை அழிவு யுத்தத்துக்குள் திணித்தாகளோ-அதையே நியாயமாக்க முனையும் இன்றைய அரசியல்,சித்தாந்தங்களை வெற்றிகொள்வதும் தமிழ்பேசும் மக்களது விடுதலைக்கு முன்நிபந்தனையான அவசியமே.இந்நோக்கில் சிங்கள அரசினது இன்றைய கோசத்தினூடாக(பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் மற்றும்,"நாம் இலங்கையர்" என்ற தேசிய இனத்தைக் கடந்து வேறொரு தேசிய இனம் "இலங்கையில்" இல்லையெனும் மறைமுகச் சிந்தாந்தம்) சிலவற்றைப் பார்ப்போம்.


சமீபத்தில் இலங்கையானது மேற்குலகத்தினவர்கள்தம் நலனுக்கான மூலவளக்கொள்ளை யுத்தத்துக்கான முகமூடி அரசியற் கருவூகங்களான "அமைதி,சமாதானம், ஜனநாயகம்" எனும் உளவியல் கருத்தாக்கங்களது புனைவுகளோடு தமிழர்கள்மீது யுத்தஞ் செய்வதைப் புலிகள்மீதான யுத்தமாகக் காட்டி,அதை பயங்கரவாதத்துக்கு எதிரானதாகச் சொல்கிறது.இலங்கை அதிபர் மகிந்தாவினது உரைகளில் இத்தகைய கருத்துக்கள் மேலும் போரைத் திறம்பட முன்னெடுப்பதற்காக எப்போதும் காணக்கூடியதாக இருக்கிறது.


இலங்கையில் பொதுவாகவே ஜனநாயகத்துக்கான அரசில் சூழலோ அன்றி அத்தகைய அரசியலை முன் தள்ளும் பொருளாதார உற்பத்திச் சூழலோ இல்லை.எனினும்,இந்தக் குறைவிருத்திச் சமுதாயமான இலங்கைச் சமுதாயத்தில்,நிலவுகின்ற இராணுவ மையவாத அரசியல் போக்குகள் மற்றும், நிலவும் புத்தமதவாதத் தத்துவப் பேரவா,சிங்களப் பொற்காலத்தை மீளக்கட்டுவதில் இனவழிப்பை பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடாகக் காட்டப்படுகிறது.உலகத்தினது அதே பாணியிலான கயமைப் போரை, இலங்கையும் முன்னெடுப்பதற்கு மிக அவசியமான உலகச் சூழல் என்றுமே நிலவிவருகிறது.இத்தகைய சூழலை பெரும்பாலும் உலகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொதுமைப்படுத்தும் மேற்குலகமும் அமெரிக்காவும், நேட்டோ எனும் ஏகாதிபத்திய இராணுவவாதக்கூட்டுத்தலைமையோடு அகிலமெங்கும் மறைமுகமான உலகயுத்தத்தை நடாத்திவருகிறது.அமெரிக்காவின் புதிய அதிபரும் மேற்குலக நாடுகளது தலைவர்களும் அவ்கானிஸ்த்தானுக்கு மேலும் படைகளை அனுப்புவது குறித்து உடன்படுகிறபோது அங்கே, வலிந்துருவாக்கப்படும் யுத்தச் சூழல் மேலும் உலகத்தின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் தமது காலடியில் போட்டு நசுக்குவதற்கானவொரு அரசியல் ஆதிக்கத்தை அவர்களுக்கு வழங்குகிறது(இந்த உலகத்திடம்தாம் தமிழர்கள் கையேந்திப் பிச்சை எடுக்கப் புலிகளது போராட்டம் வழிவகுத்துள்ளது இன்று).


(அமெரிக்கன் அன்பு)


இதே பாணியிலான சிங்கள அரசியல்-இராணுவ வியூகத்துக்கு இலங்கையில் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்பு ஒரு அவ்கானிஸ்த்தானாகவோ அன்றி ஈராக்காகவோ இருக்கிறது.இலங்கை அரசுக்கு தார்மீகரீதியாக எவருமே எதிர்ப்புக்கூற முடியாதளவுக்கு இந்த யுத்த பூமி-அதாவது,அவ்கானிஸ்த்தான் அதனது உள் நாட்டுக்குள்ளேயும்,அதன் அரச ஆதிக்கத்துக்குள்ளும் இருப்பதால் இலங்கையது எந்த வகை இராணுவ அழிப்பு யுத்தத்தையும் உலகம் கைகட்டியே பார்க்க முடியும்.இது,இலங்கையின் மிக யதார்த்தமானவொரு அரசியல் வெற்றியை இலங்கைக்கு வழங்கிய சந்தர்ப்பம் 11-செம்டம்பருக்குரிய அரசியல் தெரிவோடு உருவாகிறது.இங்கே,இலங்கை தன்னை இனவாத அரசு என்ற தளத்திலிருந்து விடுவித்தபடி,பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தைத் திசைவழியாகத் தெரிவதற்கும் இந்த உலகங்களது பொருளாதார நோகத்தின் யுத்த வியூகமே அச்சொட்டான உதாரணமாக இருக்கிறது.சிறுபான்மை இனங்களது தார்மீக உரிமைகளுக்கான எந்தவகை அரசியல் முன்னெடுப்பையும் ஆளும் சிங்களப் பெருந்தேசியவாத அரசு மிகச் சுலபமாகப் பயங்கரவாதமாகச் சித்தரிக்க முடிகிறது.இது,வருங்காலத்தில் இலங்கையின் இனங்களுக்கிடையிலான பரஸ்பரவுறுவுகளைப் குழிதோண்டிப் புதைத்துவிட்டு,பெரும்பான்மைச் சிங்களவினத்தோடு கலந்து வாழும் இலங்கைத் தேசியத்தைப் பேசமுனையும்.இது,மேற்குலங்கங்களில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த-இன்றும் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு நேர்ந்த அதே அரசியல் பலவீனத்தை-தற்கொலையை இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு மேலும் அழைத்துவரும்.


இன்று,மேற்கு நாடுகளின் பொருளாதார இலக்குக்கும்,நீண்டகால அரசியல் ஸ்த்திரத்துக்கும் இத்தகைய தேசங்களுக்கு இடம்பெயர்ந்து வந்த பல் தேசிய இன-மத மக்களுக்கும் ஒரே தெரிவான கலத்தல்-கலந்து வாழுதல் எனும் இந்த வாதம் அவர்களது எதிர்கால இருப்பை அழிப்பதற்கும் பாரம்பரிய பண்பாட்டு வேர்களை நசுக்குவதற்காகவுமான அரசியல் கோரிக்கையே(இதை, ஜேர்மனிக்கு வந்த துருக்கிய இனம் சரியான தெரிவோடு உடைப்பதில் இலக்காக இருக்கிறது இங்கு).இதை,இலங்கை அரசு இன்றைய பொருளாதாரப் போக்குகளுக்கமைய புதிய உத்வேகத்தோடு"நாம் இலங்கையர்"எனும் கோசத்தின் வாயிலாக "கலந்து வாழுதல்" எனும் கருத்தாக்கம் சிங்களப் பொற்காலத்தின் மறுவார்ப்பாக மேலெழவுள்ளது.இலங்கையின் இன்றைய அரசியல் கோசத்தை மிகக் கவனமாக விளங்க முற்படாத சிறுபான்மை இனங்களது அரசியலானது மேலும் இராணுவவாதக் கண்ணோட்டத்தோடு நகர்வதில் எந்த நியாயவாதமும் இல்லை.இலங்கையினது புரட்சியை வற்புறுத்தி சிறுபான்மையினங்களின் சுயநிர்ணயவுரிமைகளை அங்கீகரிக்காத போக்குகள் அல்லது அடக்கிவாசித்தல் சாரம்சத்தில் இலங்கையினது இன்றைய வியூகத்துக்கு பலமானதாகவே இருக்கும்.இன்று,இலங்கையில் அமைதி,சமாதானம்,ஜனநாயகம் அவசியமெனினும் இவைகளை முகமூடியாக்கித் தமது அரசியல் பிழைப்புக்காக கோசமிடும் தமிழ் அரசியல் வாதிகள்-குறிப்பாக,டக்ளஸ்,புலித்தளபதி கருணா,பிள்ளையான்,மற்றும் ஆனந்தசங்கரி போன்ற மக்கள் விரோத அரசியலாளர்கள் இலங்கை அரசினது அடுத்த கட்ட-மேற்கூறப்பட்ட-நகர்வுக்கு அண்மையாகவே இருக்கின்றார்கள்.


இலங்கையில் ஜனநாயகம்,அமைதி,சமாதானம் அவசியம்.ஆனால்,இனங்களுக்கிடையிலான அவர்களது சுய கௌரவத்துக்கான உரிமைகளை இவற்றுக்காக கழுவேற்றி எவரும்அமைதி,சமாதானம்,ஜனநாயகம் மீள் உருவாக்கஞ் செய்துவிட முடியாது.போலித்தனமான அரசியல் கோசங்கள் இலங்கையில் இனங்களது சுயநிர்ணயவுரிமைக்கு ஆப்பு வைத்துப் பிழைப்புவாத அரசியலாக மாறுவது அந்தந்தவினங்களது இருப்பையே அழிப்பதில் முடியும்.இதை வெல்வதற்காகவேனும் தமிழ்பேசும் மக்களது உண்மையான அரசியல் தெரிவு தமது சுயநிர்ணயத்துக்கான அரசியலைவிடாப்பிடியாக நடாத்துவதே சரியானது.இதுவே,இலங்கையில் மற்றைய இனங்களது சுயநிர்ணயவுரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கானவொரு முன் நிபந்தனையாக இருக்கிறது.இதைப் புலிகளதுவழி போராட்டத்தால் பறிகொடுத்த நிலையில் மீளவும், இந்தச் சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை,அரசியல் போராட்டமாக விரிவுறவேண்டியுள்ளது.இதை, மறுத்தொதுக்கும் தமிழ் அரசியல்-ஜனநாயகக் குழுக்கள் மெல்ல இனங்களுக்கிடையிலான பரஸ்பரவுரிமைகளை மறுத்து, "வல்லவன் வைத்ததே சட்டமெனும்" போக்கில் இலங்கையில் சிங்களக் குடிகளே பூர்வீகக் குடிகளெனும் மகாவம்சத்துக்கு ஒத்திசைவான அரசியலை முன்னெடுப்பதாக அமையும்(இக் கருத்தைப் புலிவழிப் புரியவேண்டாம்.புலிகள் பேசுவது,செய்வது அனைத்தும் வியாபாரத்தனமானது-அது,டீலில் தமது வர்க்க நலனுக்கிசைவாகத் குறுந்தேசியவாதத்தை முன்னெடுத்து வருவது).

(மகிந்தாவின் அன்பு)

அகில உலகத்துக்கான சோசலிசமோ அல்லது ஓரு குறிப்பிட்ட நில எல்லைக்குட்பட்ட சோசலிசப் போராட்டமோ இனங்களது உரிமைகளை இல்லாதாக்கும் பெருந்தேசிய வாதத்தைத் தெரிவுகளாக்க முடியாது.இலங்கையர் எனும் கோசம் எப்போது இலங்கையில் வாழும் இனங்களது சுயநிர்ணயத்தின் இருப்போடு மட்டுமே சாத்தியமாகும்.இதுவன்றி பேசப்படும் இலங்கையர்கள் எனும் அரசியல் கோசம் சாரம்சத்தில் பெருந்தேசியவாதச் சிங்கள மேலாதிக்கத்தின் மறைக்கப்பட்ட வடிவமே.


11 செம்படம்பருக்குப் பின்பான காலம் அமெரிக்க-ஐரோப்பிய நவலிபரல்களுக்கானவொரு காலமாகும்.அவர்களது பொருளாதார முன்னெடுப்புகளுக்கு இந்தப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் அவசியமான பற்பல சாதகங்களைத் தகவமைத்துக்கொடுக்கிறது.இதன் காரணமாக அவ்கானிஸ்தானையோ அன்றி ஈராக்கையோ அல்லது எல்லை கடந்து பாகிஸ்தானின் இறைமையையோ அவர்களால் மீறமுடிகிறது.இதற்கான அரசியல் மற்றும் இராணுவ உரிமைகளை இந்த பயங்கரவாதத்துக்கு எதிரான எனும் மாய அரசியல் ஏற்படுத்திக்கொடுக்கிறது.இதனால் தங்குதடையின்றி மூலவளங்களைக் கொள்ளையடிப்பதற்கும்,பங்கு போடுவதற்கும் அவசியமானவொரு கூட்டணி தவிர்க்கமுடியாது ஏற்படகிறது.இந்தக் கூட்டணி இப்போது ஜீ-20 எனும் அமைப்பு வடிவத்தை முன்னெடுக்கும்போது இலங்கையின் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற கோசம் இலங்கையில் சிறுபான்மை இனங்களை வேட்டையாடுவதற்கும்,அவர்களை மேலும் அரசியல் அநாதைகளாக்கித் தம்மோடு கலப்படையவைக்கும் "நாம் அனைவரும் இலங்கையர்"எனும் சிங்கள அபிலாசையாக விரியும்.



இலங்கையின் அரசியல் தெரிவுகளுக்கு, மிக யதார்த்தமான உலகப் பொருளாதாரச் சூழல் நெருக்கமாக அண்மித்து வருகிறது.இதைப் பெரும்பாலும் மிகச் சரியாகக் கையாளும் இலங்கை அரசு,சிங்களப் பௌத்தமதப் பொற்காலத்தை மீட்டெடுப்பதில் பெரும் அவாக்கொண்டுள்ளது.இஃது, மிகச் சாதாரணமான அரசியல் சொல்லாடல்களின்வழி-அதாவது,பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்,இலங்கையர்,மற்றும் கலப்புறதல் அல்லது ஒன்றித்தல் எனும் கோசங்களின் வழி அடையப்படக்கூடியதே.கடந்தகால மேற்குலக யுத்தங்களின்வழி இத்தகைய ஒற்றையினவுருவாக்கம் வலுவாக வெற்றியளித்தது.இது,பல் தேசியவினங்களை முற்றாக அழித்து, ஒரு தேசத்தினது ஆளும் வர்க்கத்தினது மொழியைப் பண்பாட்டை அனைத்து மக்களுக்குமான பண்பாடாகவும்,மொழியாகவும் ஆக்கிக் கொண்டது.இலங்கை போன்றவொரு சிறிய தேசத்தில் இது மிக இலகுவாகச் செய்து முடிக்கப்படக்கூடியது.புலிகளது அப்பட்டமான விதேசியப் போராட்டத்தால் இன்று இந்த ஆபத்து நம்மை நெருங்கி வருகிறது.இதைப் பூண்டோடு அறுப்பதற்கு தடைகள் என்ன என்பது அவசியமான கேள்வியாக மேலெழ வேண்டும்.


இத்தடைகள் பற்பல வடிவத்திலுள்ளன:


1: புலிகளது விதேசியவாதம்,

2:புலிகள் கற்பித்த துரோக அரசியல்,

3:புலிகளைச் சுற்றிய இயக்கவாத அரசியல் மாயை,

4:புலி எதிர்ப்பு ஜனநாயக அரசியல்(உதாரணம்:டக்ளஸ்,புலித்தளபதி கருணா-பிள்ளையான் வகை அரசியல் தெரிவு)

5:புரட்சிகர முற்போக்குச் சக்திகள் எனும் வடிவிலள்ள புலிப் பினாமிகள்(உதாரணம்:சேரன் அவரது மைத்துனன் விக்கி,சிவகுமார், பாலகுமார்,மு.திருநாவுக்கரசு, மற்றும் புலம் பெயர் சூழலில் மாற்றுக் குழுக்களாகக் கருத்தாடும் ரீ.பீ.சீ.வானொலி,இன்னும்பல முற்போக்கு முகமூடிகள்.)

6: அடையாளத்தை மறுத்து,பின்-முன் நவீனம் பேசும் முகமூடிகளாக இருந்து இனங்களுக்கிடையிலான சுயநிர்ணயக் கோரிக்கைகளை வெறும் செல்லாக் காசாகக் கருத்துக்கட்டும் எதிர்ப்புரட்கரச் சக்திகள்.


இத்தகைய தடைகளை எங்ஙனம் வெற்றிகொண்டு,இலங்கையில் இனங்களுக்கிடையிலான பரஸ்ப்பர நட்புறவோடுகூடிய உரிமைகளுக்கான போரை முன்னெடுப்பது?


சுயநிர்ணயத்தை வலியுறுத்தி, அதை முன் நிபந்தனையாக வைத்துப் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான வேலைத் திட்டம் அவசியமாகிறது.இங்கே,இலங்கை அரசுதாம் முதலாவதும்,பிரதான எதிரியென்பதும்,அதன் இன்றைய அரசியல் சித்தாந்தத்துக்கு உலகு தழுவிய பலமும் ஒத்துழைப்பும் உண்டென்பதும் அவசியமாகப் புரியப்படவேண்டும்.புலிகளது தவறான வழிகாட்ல்களால் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயத்துக்கான போராட்டம் தோல்வியில் முடிவடைகிறது.இது,இன்னொரு வடிவத்தில் மேலெழுவது அவசியம்.அதைச் சாதிப்பதற்கான போராட்டத்திசையமைவுக்குச் சுத்த இராணுவவாதமோ அன்றிப் பழையபாணி இயக்கவாத அறிவோ எப்போதும் உடன்பாடானது அல்ல.


நாம் பற்பல உலகத்துக்குள் வாழ்கிறோம்.எனினும்,உலகம் இப்போது ஒரே திசைவழியில் தன்னை அடையாளம் காட்டுகிறது.இது,பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனும்போது அதை இலங்கையிலிருந்துமட்டுமல்ல மேற்குலக நாடுகளிலிருந்தும் அம்பலப்படுத்திப் போராடவேண்டும்.இங்ஙனம் போராட முடியாது அரசுசாரா அமைப்புகளுக்குக் காவடி தூக்கி இலங்கையில் ஜனநாயகத்தை அமைதியை,சமாதானத்தை ஏற்படுத்துவதென்பது, சாரம்சத்தில் ஒற்றைத்துருவ ஒழுங்கமைப்பில் உலகத்தை வேட்டையாடும் ஏகாதிபத்தியத்தின் அரச ஆதிக்கமுடைய அடியாட்கள் தாம்சார்ந்த இனத்துக்குள் மற்றைய இனங்களை முடக்கும் அரசியலுக்கு உடந்தையாக இருப்பதே.அதை மிக நேர்த்தியாகப் புலிகளின் தளபதி கருணா-பிள்ளையான்,டக்ளஸ் போன்றோர் செய்து முடிக்கின்றார்கள்.



இன்று,இந்த ஜீ-20 கூட்டினது பொருளாதார இலக்குகள் யாவும் உலகத்தில் மேல்நிலை வகிக்கும் அரசுகளது சொந்த முரண்பாடுகளுக்கு ஒரு வடிகாலான அரசியலை முன்னிறுத்தும்.இது,தேசங்களில் வாழும் அரசியல் உரிமைகளற்ற இனங்களை அரச ஆதிக்கச் சமுதாயங்களோடு கலப்படைய வைப்பதில் முனைப்படையும்.அதன் அவசியமான நோக்குப் பொருளாதாரச் சந்தைக்கு ஒரு மொழி,ஒரே மதம்,ஒரே இனம் எனும் ஒன்றைத் துருவ குவிப்புறுதியூக்கத்துக்கிசைவான உலகத்தைவேண்டிய அரசியல்-இராணுவ நகர்வாகவே அமைகிறது.இது,இன்றுள்ள தேசங்களுக்குள் பல்வகைக் பண்பாட்டு விழுமியங்களை அந்தந்தத் தேசப் பண்பாட்டு மேலாத்திக்கத்துக்கு முதலில் பலியாக்கும்.


நவலிபரல்களது அரசியலுக்கு இவை அவசியமானது.அவர்களால் முன்தள்ளப்பட்ட பொருளாதாரத்தின் அரிச்சுவடிக்கு கெய்னிஸ் சித்தாந்தக் குருவாக இருந்து இவற்றைய வற்புறுத்தும்போது, நாம் மார்க்சைச் சொல்லி மேலும் சுயநிர்ணயத்தை-தேசியத்தை மறுப்பதாக அமையும்போது,அங்கே,சுயநிர்ணயவுரிமைக்கான போராட்டம் புலிகள்போன்ற பாசிச வாதிகளிடம் தஞ்சமடைகிறது.அவர்கள் அதைத் தமது வர்க்க நலனுக்கான முறையில் முன்னெடுக்கும்போது அதுவே ஒரு கட்டத்தில் தோல்வியாகி இலட்சம் மக்களை அழித்துவிடுகிறது.இங்கே,இந்த வரலாறு நன்றாகக் காணக்கூடியதாக இருக்கிறது.


நாம் முதலில் அணித்திரட்சிக்கேற்ற முறையில் தடைகளை அகற்றிக்கொண்டு ஐக்கியப்படவேண்டும்.


இந்த ஐக்கியம் புரட்சிகரக்கட்சிக்கான கருவூலத்தோடு உண்மையாக மக்களைச் சார்ந்து அரசியல் செய்ய நிபந்தனையாக வர்க்க உணர்வுள்ள தோழர்களுக்குள் கேட்கப்படுகிறது.புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் சதிகாரர்கள் பழைய இயக்கவாத அரசியல் தெரிவிலிருந்து நமக்குள் விதைக்கும் அரசியலை அம்பலமாக்குவது அவசியம்.இவைகளின்றிச் சிங்கள அரசுக்குத் தோதான இந்த உலக அரசியல் வியூகத்தைத் தோற்கடித்துச் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பது கல்லில் நார் உரிபதாகவே முடியும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
15.03.09

Wednesday, March 11, 2009

புலம்பெயர் குழுக்களின் அரசியல்.

மூன்றாவது அணியும்,மூக்கணாங் கயிறும்.


மாத்தறையில் தற்கொலைக் குண்டு வெடிக்கிறது,வன்னியில் போர் மக்களைக் கொல்கிறது,நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொன்று, அவர்களது உடலைக் கைப்பற்றுகிறது இனவாதச் சிங்கள அரசு.அவைகளைப் பயங்கரவாதிகளது உடலாக இணையத்தில் காட்டுகிறது.மக்கள் சாவதைச் சொல்லும் தமிழ் ஊடகங்கள் நூற்றுக்கணக்காகப் பலியாகும் தேசபக்த இளைஞர்களை அம்போவென மறைக்கிறது.புலியினது தலைமையின்பின்னே திரண்டதால் அவர்களுக்கு இந்த அவமரியாதை.இது,தொடர்கதையாகிறது.

நமது அரசியலின் சூழ்ச்சிகள் யாவும் வர்க்கஞ்சார்ந்த நலன்களோடு நம்மோடு உறவாடுகிறது.இது,குறித்து எமது நிலையென்ன?ஆளும் சிங்கள அரசைத்தாங்குபவர்கள் ஒருபுறும்,புலிகளைத் தாங்குபவர்கள் மறு புறமுமாக நம்மைச் சூழ்ந்து அரசியல் நடாத்தும்போது,இந்த மூன்றாவது அணி தனக்குள் அடிபட்டுச் சாவதில் ஆயுதங்களுக்காகக் கருத்தைப் பயன் படுத்துகிறது?


இலங்கையில்-தமிழ்ப்பிரதேசங்களில்,கடந்தகால அரசியற்றெரிவில் உருவாகிய இயக்க அரசியலானது பாரிய பிளவுகளைத் தந்து இளைஞர்களை வேட்டையாடியது.இலங்கை அரசினதும்,அதன் எஜமானர்களதும் தமிழ்பேசும் மக்களுக்கெதிரான இனவழிப்பு அரசியலில் அணிதிரண்ட தமிழ்பேசும் இளைஞர்களைத் தடுத்தாட்கொண்ட இந்தியா,இலங்கையிலொரு புரட்சிகரச் சூழல் உருவாகாதிருப்பதற்காகப் பற்பல இயக்கங்களைக் கட்டிப் பராமரித்து, நம்மை இன்றைய நிலைமைக்குள் தள்ளியுள்ளது.


இதிலிருந்து மீளும் புரட்சிகர அரசியல் என்ன?


இன்றிருக்கும் மாற்றுக் கருத்துச் சூழலின் தெரிவு என்ன?


நாலு பேர்கள் சேர்ந்து இயங்க முடியாது உதிரிகளாகச் செயற்படுவதுன் அரசியல்தாம் என்ன?


இதன் தத்துவார்த்தப் போக்கு மீளவும் குழுவாதத்தை உற்பத்தி செய்து எதிரிகளைப் பலப்படுத்தி நம்மை-நாம் அழிப்பதில் முடியப்போகிறது.இங்கே,தனிநபர் முனைப்புத் தலைவிரிகோலமாக மேலோங்குகிறது.பரிபூரணத் தூய்மைவாதம் கடந்தகாலத்துப் போராட்டத்தை அழிவுயுத்தமாக மாற்றிய புலிகளுக்கு உடந்தையான பணியில் போய் முடிந்த வரலாறு நமக்குத் தெரியும்.இது, இறுதிக்காலக்கட்டத்தில் "புலிகளை மதிப்பிடுகிறோமெனும் பாணியில்" அரசியல் செய்ததை நாம் மறப்பதற்கில்லை.இன்றைய சூழலும் இதைக்கடந்து மேலெழுந்ததாகவில்லை.


மீளவும்,குழுவாதம்,குட்டிமுதலாளியப்பண்புடைய பூரணத் தூய்மைவாதம்,சேறடிப்பு,நிலைமைகளைச் சீர் தூக்கி அலசி ஆராயும் தோழர்களை மேலும் சிக்கலாக்கி அவர்களுக்குத் தாம் விரும்பிய முத்திரையிடல்,இவையெல்லாம் எந்த அரசியலை நமக்குத் தரப்போகிறது.ஒவ்வொருவரும் மாறி,மாறித் துரோகிகள் என்று கத்துவதன் கடந்தகால அரசியல் இலட்சம் மக்களைக் கொன்றபின்பும் இந்தத் துரோகமென்பதன் அர்த்தம்தாம் என்ன?

இனஞ்சார்ந்த உரிமை:

இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் இந்தியாவும்,ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.இன்றுவரை நடந்தேறும் படுகொலை அரசியலுக்கு இலங்கையை ஆளும் கட்சிகளுக்குப் பின்னாலும்,தமிழ் மக்களின் விடுதலைப்படைகளென்ற குட்டி முதலாளிய இயக்கங்களுக்குப் பின்னாலும் நிற்கும் இந்திய-ஏகாதிபத்தியங்களே முழுமுதற்காரணமாகும்.கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது.அவை முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள்.இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் தலையில் மாலைகளைக் குவிக்க விரும்பும் இலங்கை அதிபர் ராஜபக்ஷ தொடர்ந்து இலங்கையிலுள்ள சிறுபான்மை இனங்களது இருப்பை அசைத்தபடியே உலக நாடுகளது தயவில் ஆட்சியைத் தக்கவைக்கின்றார்.கூடவே புலிகளின் தளபதி கருணாவை,பிள்ளையானை தனது இருப்புக்கு அவசியமான சக்திகளாக இனம் காணுவது தமிழ்பேசும் மக்களது தன்னெழிச்சியான போராட்டங்களை முடக்குவதற்கே.




இன்றையபொழுதில்-அதாவது, புலிகளது முழுமையான அழிவு நெருங்கும் தறுவாயில்(இது,இன்னுஞ் சில வாரத்தில் நடந்தேறிவிடும்),நமது மக்களின் சுயகௌரவத்துக்கான சுயநிர்ணயவுரிமை குறித்த கேள்விகளுக்கு இலங்கை ஆளும் வர்க்கம் இதுவரை தலை சாய்க்கவில்லை.இதைப் பயன்படுத்தி மேலும் தமிழ்பேசும் மக்களுக்குள் எழிச்சிகள் வலுவடையுமென்பதை உணர்கின்ற தென்னிலங்கை அரசியற்கட்சிகள் புலிகளது ஒரு பிரிவைப் பூண்டோடு அழிப்பதும் மறுபகுதியைத் தமது ஏவல் நாய்களாக்கியதும் இன்றைய அரசியல் யதார்த்தமாகியுள்ளது.இது,புதுடெல்லியின் அரசியல் தந்திரோபாயத்தோடு களத்துக்குவந்த அரசியல் தெரிவே.இப்போது,புலிகளின் தளபதி கருணா மற்றும் பிள்ளையான்கள் தேசிய நீரோட்டத்தில் மந்திரிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள்.இவர்களே கிழக்கின் விடிவெள்ளிகளாகவும், இவ் வெள்ளிகளை உருவாக்கிய தேவன் மகிந்தாவாகவும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.இனங்களது குடிசார்வுரிமைகளையும்,அரிசியல் அபிலாசைகளையும் ஒன்றுடனொன்றுபோட்டுக் குழப்பி சுயநிர்ணயவுரிமை எனும் இனஞ்சார்ந்த அரசியல் கௌரவத்தை இல்லாதாக்குவதில் இலங்கை மிகத் தெளிவாக வெற்றியீட்டிவருகிறது.இனமுரண்பாட்டை வெறும் மதம்,மொழி,பண்பாட்டுப் பிரச்சனையாகக் குறுக்குவதில் மகிந்தா அரசு மிக நேர்த்தியாகக் காரியமாற்றுகிறது.அது,மதஞ்சார்ந்த கொண்டாட்டங்களை மற்றும் மொழிசார்ந்த விழாக்களை முன்னிலைப்படுத்தி அவைகளைச் சிங்களத்துக்குச் சமமாக நடாத்துவதாகக் காட்டுகிறது.இதற்காக ஜனாதிபதி ஆதரவு வழங்கி வாழ்த்துவதில் இனங்களது சுயநிர்ணயவுரிமையை "என்ன சாமான் அது?" எனும்படி ஆக்கியுள்ளார்.

இப்போது தேசியமீலாத் விழா,அந்தவிழா,இந்தவிழாவென மதஞ்சார்ந்த அரசியல் மிக நேர்த்தியாகி இனங்களுக்கிடையில் சுயநிர்ணயமென்றால் என்னவெனவெண்ணும் சூழலை உருவாக்கிறது இலங்கை ஆளும் வர்க்கம்.இனவாதத்தை மறைக்கமுனையும் இலங்கைச் சிங்கள மேலாதிக்கம்,மெல்ல அதன் விஸ்தரிப்புக்கும் ,இருப்புக்கும் இத்தகைய அரசியலை முன்வைத்து இனங்களுக்கிடையிலான அரசியல் உரிமைகளை இல்லாத்தாக்கியும், அனைத்தும் இலங்கையர்களது அரசு எனச் சிங்கள மேலாத்திக்க அரசை முன்னிறுத்துகிறது.இதற்கு இனங்களுக்கிடையில் அரசியல் செய்து பிழைக்கமுனையும் கயவர்கள் புலிவடிவிலும்,இன்னும் எத்தனையோ வடிவிலும் இருக்கிறார்கள்.இவர்கள் குறித்துப் புதுவிளக்கம் அவசியமில்லை!


புலம்பெயர் குழுக்களின் அரசியல்,குண்டுவெடிப்பு,புலி அரசியல்:


மாத்தறையில் குண்டுகள் வெடித்தாலென்ன வன்னியில் குண்டுகள் போடபட்டு மக்கள் இறந்தாலென்ன,அனைத்தும் புலிகளது அரசியலுக்கு அண்மையிலேயே இருப்பதாக உலகத்தில் பேசப்படுகிறது-கருத்துப் பரப்பப்படுகிறது.புலிகளது அரசியல் வரலாற்றுப் பாத்திரத்தில் இது மிக இலகுவாக அவர்களது கணக்கில் வரவுவைக்கப்படக்கூடியதாகவே இருக்கிறதென்றவுண்மையில்,வன்னியில் அவதியுறும் மக்களது தலைகளில்வீழும் குண்டுகளையும் நியாயப்படுத்திப் புலயழிப்புக்கான அடுத்த முகாந்திரம் உருவாக்கப்படவேண்டிய தேவையில் இலங்கை அரசுக்கு முண்டுகொடுப்பவர் இயங்க முடியும்.எதுவெப்படியமைவதெனினும்,இன்றைய சூழலைப்பயன்படுத்திப் புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களில் அரசியல் முனைப்புடையவர்கள் தமது விருப்பு வெறுப்புகளுக்கமைய ஒவ்வொருவரும் சிண்டைப்பிடித்து அடிபடுவதில் உலகத்தை தத்தமது மேலாண்மைக்குக்கொணரத்துடிக்கும் உலக அரசுகளுக்கேற்ற அரசியலை நாம் முன்தள்ளுவதில் காலத்தைச் செலுத்துகிறோம்.

மேற்குலக நவ லிபரல்களது கூற்றோ:"நாம் முன்வைக்கும் பொருளாதாரப் பொறிமுறை ஒரு வாழ் நிலைவடிவம்.அனைத்து மக்களும் பெருங்கம்பனிகளுக்கு நுகர்வோராகவும் உரிமையாளர்களாகவும் உருவாகவேண்டும்,கூடவே போட்டியாளர்களாகவும்"என்று கூறுவதை இன்றைய பங்குச் சந்தைப் பாதாளப் போக்கிலிருந்து மீளத் துடிக்கும் உலக வங்கி உருவாக்கிக்காட்டத்துடிக்கிறது.அது,இனிவரும் பொருளாதாரச் சூறாவளி அபிவிருத்தியடைந்தவரும் நாடுகளையும்,ஏழை நாடுகளையும் கடாசிவிடப்போவதாகச் சொல்கிறது.இலங்கையில் யுத்தத்துக்குள் மூழ்கியிருக்கும் கட்சிகளது இருப்பு இனி மிகவும் உலகக் கம்பனிகளைச்சார்ந்தே இருக்கப்போகிறது.




உலகவங்கியின் உத்தரவின்பேரில் இலங்கை போன்றவொருதேசம் காலங்கடத்தும் அரசியல்வாழ்வில் இலங்கையின் எந்தச் சமுதாயம் சுயநிர்ணயவுரிமையோடும் சுய கௌரவத்தோடும் வாழமுடியமென்ற கேள்வி மிகவும் அகோரமாக நம் முன் நிற்கிறது.

இந்தப் பாதாளவுலகப் பொருளாதாரவுறுவுகள் இலங்கையினது மண்ணில் வாழும் சிறுபான்மை இனங்களை மட்டுமல்ல பெரும்பான்மைச் சமுதாயமான சிங்கள மக்களையுந்தாம் பாதிக்கிறது.இது,மேலும் இலங்கையில் யுத்தத்தை விருத்தியாக்கி இலங்கையை கொந்தளிப்புத் தேசமாகவும் சமூக இயக்கங்களை மெல்ல நசித்து,அந்நிய மூலதனத்துக்கெதிரான இயக்கப்பாட்டை தடுப்பதிலேயே தமிழர்களது தலையில் இப்பேது குண்டுகளைக் கொட்டுகிறதென்பதற்குப் புலிகள் பகடைக்காய்களாக இருக்கவில்லை!புலிகளேதாம் இன்றைய நமது போராட்டச் சீரழிவுக்கான முதற்தரமான எதிரிகளாகவிருந்து காரியமாற்றியுள்ளனர்.புலிகளைத் திட்டமிட்டே வளர்த்த அந்நியச் சக்திகள் அவர்களது தயாவால் இலங்கைச் சிறுபான்மை இனங்களது சுயநிர்ணயவுரிமைகளைப் பூண்டோடு நசித்துவிட்டது.இப்போது, புலிகளது அரசியலை இத்துடன் கடந்து,இலங்கையில் இனிவரப்போகும் அரசியல்-பொருளாதாரச் சூறாவழியில் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை இனங்களின் அரசியல்-பொருளாதாரவாழ்வும் அதுசார்ந்த குடிசார்வுரிமைகளும் எத்தகைய பண்பைக்கொண்டிருக்கும்?இக் கேள்வி குறித்து மிகவும் சிந்தித்தாகவேண்டும்.

இலங்கையை மிகவும் பின்தங்கிய ஜனநாயக மறுப்புத் தேசமாக்கிய இந்த அந்நிய தேசங்களும் அவர்களது உள்ளுர் அடியாட்களும் தத்தமது இனத்துக்குள் மீளவும் அமைதி,சமாதானம்-ஜனநாயகமெனும் பெயரில் ஒளிந்துகொண்டு, தமது எஜமானர்களுக்கேற்ற அரசியலை முன்னெடுக்கத் துடிக்கின்றார்கள்.இதுள், மிகவும் சாதுரியமாகக் காய் நகர்த்த முனையும் கட்சிகள் இன்று இலங்கையில் மிகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களுக்குப் பூச் சுத்தி அவர்களது வாழ்வாதாரத்தேவைகளை அழித்த அரசிடமிருந்து-அந்நியச் சக்திகளிடமிருந்துபெறப்படும் அதிமானுடத்தேவைகளைத் தமது தயவால் வருவதாகப் பிரச்சாரமிட்டத் தத்தமது இருப்பையும் பலப்படுத்தி மீளவும் மக்களைக் கருவறுக்கத் துடிக்கிறார்கள்.


இங்கே, ஏ-9 பாதையூடாக அனுப்பப்படும் உணவு யாழ்ப்பாண மாவட்டத்தை எட்டுவதற்குமுன்,அஃது, தனது தலைமையிலேயேதாம் சாத்தியமாச்சு என்று ஐயா டக்ளஸ் ஊரையாற்றுகிறார்.சிங்கள அரசால் சிதைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை புனரமைப்பதிலும் டக்ளஸ் தனது அரசியலின் பரபோவுபகாரமாகவே தமிழ்பேசும் மக்களக்குச் சொல்கிறார்.இது,கடைந்தெடுத்த அந்நியக் கம்பனிகள்,அரசுகளின் ஆர்வத்தைப் பூர்த்திசெய்ய முனையும் புதிய கூட்டுக்களின் அரசியல் நகர்வாகவே பார்க்கப்படவேண்டும்.




இலங்கையில் மேலும் அரசியல்-மற்றும் குடிசார்வுரிமைகள் யாவும் மிகவும் கவனமாக மட்டுப்படுத்தப்பட்டு, மக்களை வெறும் திறந்தவெளிச் சாறச்சாலைகளுக்குள் தள்ளி அவர்களைக் கையாலாகதவர்களாக்கும் இந்தவகை அரசியல் -பொருளாதாரப் போக்குக்கெதிராகக் காரியமாற்றமுடியாதவர்கள் தத்தமக்குள் அடிபட்டு தமது தகமைகளை அவற்றுக்குள் சிதறடிப்பதுகூட ஒருவகையில் இனிவரப்போகும் இலங்கை அரசியலுக்கு அவசியமே.

இன்றைய மாற்றுக் கருத்துவட்டம் ஒருவரையொருவர் பழிசொல்லிப் பாய்வதில் இலங்கையில் வாழும் மக்களுக்கும்,அழிவுயுத்தத்துள் மாட்டுபட்ட மக்களுக்கும் என்னத்தைப் பெரிதாகச் செய்துவிடப்போகிறார்கள்.இன்றைக்கு இலங்கை அரசைப் பலப்படுத்துவதென்பது இங்கிருக்கும் ஒருசில கருத்து நிலையாளர்களோ அல்லது மாற்று அமைப்புகளெனும் பெயர்ப்பலகை அமைப்புகளோ அல்ல.மாறாக இலங்கையைத் தாங்கும் அந்நியச் சக்திகளான பெரும் தொழிற்கழகங்கள் அவர்களது தேச நலன்கள்தாம் இலங்கையர்களது வாழ்வைச் சூறையாடுகிறது.நாமோ நாலு நண்பர்களை அடியோடு மொட்டையடிக்கும் கருத்துக்களோடு ஒருவரையொருவர் சிண்டைப்பிடித்து உலுக்குகிறோம்.இலங்கையினது அரசியல் வரலாற்றில் இவ்வளவு குழப்பமும் எங்கே-எப்படி மக்கள் அழிவு அரசியலாக மாற்றப்படுகிறதென்பதைக் கணித்து அதை உடைப்பதற்கான வழிமுறைகளைக்காணாது ஒருவரையொருவர் வசைபாடுவதில் நமக்கு நாமே எதிரிகளாகிறோம்.


பாதாளவுலக அரசியல்:


இலங்கையினது இன்றைய யுத்தச் சூழலுக்குப் பின்பான காலம் பெரும் குழறுபடியான காலமாக உருவாகிவருகிறது.அங்கே, பாதாளவுலக் கோஷ்டிகள் புலிகள் மற்றும் இயக்கங்கள் பார்த்த வேலைகளைச் செய்யப்போகின்றன.இது,இலங்கையின் அனைத்துக் குடிசார் உரிமைகளுடனும் நேரடியாகவும்,அரச சட்டம் மறைமுகமாகவும் மோதப்போகிறது.இதைத் தடுத்து இலங்கையில் அமைதியான வாழ்வைத் துய்க்கவிரும்பும் மக்களில் பெரும்பாலனவர்களுக்கு ஒரு நேரக்கஞ்சிக்கே பெரும் பாடான வாழ்நிலை உருவாகி, அவர்களை இத்தகைய மாயாக்களுக்கு அடிமைப்படுத்தப்போகிறது.இதன் முதல் தலைமைய மாபியாவான டக்ளஸ் உருவாக்கிச் செயற்படுத்துவதை எவராவது மறுக்கமுடியுமா?




நாம் செய்யவேண்டிய பணி நிறையவே இருக்கிறது.உலக அரசியல்மற்றும் புவிகோள நலன்களின் அடிப்படையில் இலங்கையை வேட்டையாடும் அந்நியச் சக்திகளோடு கைகோர்த்துள்ள கட்சி மற்றம் இயக்க அரசியல் மற்றும் ஆதிகத்தைக் குறித்து நாம் என்ன நிலைப்பாடுகளோடு இருக்கிறோம்.இன்றைய இலங்கைக்குள் நிலவும் கட்சிகள் யாவும் அதனதன் தலைவர்களைத் தொண்டர்களை முதலீட்டாளர்களாகவே இலக்குகளைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றன.ஒவ்வொரு கட்சிக்குப் பின்னும் பலகோடி பெறுமதியான மூலதனம் திரண்டு,அதுவே ஒரு கட்டத்தில் கள்ளச் சந்தையைத் தக்கவைப்பதில் மாபியாக்களை உருவாக்கி ஒரு நிழல் அரசை நடாத்துகின்றன.இவைக்குள் நிலவும் முரண்பாடுகளே இன்று கொலைகளாகவும்,குண்டுத்தாக்குதலாகவும் இலங்கையில் மக்களைவேட்டையாடுகிறது.தற்கொலைக் குண்டுகளைப் புலிகளால் காயடிக்கப்பட்ட மனிதர்கள்மட்டுமல்ல பாதாளவுலகத்தால் இயக்கப்படும் கட்சிகளது தொண்டர்களும் செய்வார்கள்.தமிழகத்தில் தீக் குளித்துக் கட்சியைக் காக்கமுனையும் தொண்டர்கள் இங்கே,குண்டுகள் கட்டிவெடிப்பதற்குப் புலிகள் உதாரண புருஷர்கள்தாம்.அது,தென் இலங்கையில் புலிவடிவில் வெடிக்கிறதென்கிறார்கள்.


இலங்கையில் "புரட்சி,விடுதலை,ஐயக்கிய இலங்கைப் புரட்சி,புதிய ஜனநாயகப் புரட்சி"எனும் அரசியலைப் பேசுபவர்கள் இது குறித்து என்ன ஆய்வுகளை,எழுத்துக்களை-விவாதங்களை நம் முன் நகர்த்தியுள்ளார்கள்?.


வெறுமனவே வரும் வெற்றிடங்களில் தாமே புலியினதும் மற்றும் இயக்க-கட்சிகளது கொப்பியாக அமர்வதற்கான அரசியலைச் செய்ய முனைவதில் அக்கறைகொள்ளும் நரவேட்டை அரசியலைக் கடந்து நாம் உலகத்தின் புதிய பொருளாதார இலக்குகளை-வியூகளைப் புரிந்து,இலங்கையில் இவர்களை வெற்றிகொண்டு குறைந்தபட்சமாவது இலங்கையில் ஒரு ஜனநாயக்ச் சூழலைத் தக்கவைத்தாகவேண்டும்.இதைக்கடந்து திடீர் புரட்சியெதுவும் இலங்கையில் சாத்தியம் இப்போது இல்லை.


இலங்கையில் குறைந்தபட்சமாவது குடிசார்வுரிமைகளைக்காக்கும் ஜனநாயகச் சூழலின்றி எவரும் புரட்சிகரமான நகர்வைக் கொண்டியங்கமுடியாது.இது,மிகமிக அவசியமான பணி.இலங்கைத் தீவு முழுவதும் ஒரு சோஷலிசச் சமுதாயம் கட்டியெழுப்பப்படவேண்டும்.அது, உலகு தழுவிய சோஷலிசக் கட்டுமானத்தின் பகுதி வேலைத்திட்டமாகும்.இது,புதிய ஜனநாயகப் புரட்சியின் தெரிவு.இந்த இலட்சியம் நீண்டகால வேலைத்திட்டத்துடன் பரம்பரைபரம்பரையாக முன்னெடுக்கப்படவேண்டிய பணி.இதையெட்டுவதற்கு நமக்கு தடையற்ற அரசியல்-பொருளாதாரச் சூழலோடு(மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் அரசியலைச் சொல்கிறேன்,யுத்தத்தால் அகதிகளாகப்பட்ட மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு, அவர்கள் அழிந்தவாழ்வை மீளக்கட்டித் தாம் உயிர்த்திருப்பைத் தமது பூர்வீக மண்ணுடன் பிணைப்பது இது)உடனடியான அமைதி,சமாதானம்,சகவாழ்வு,அடிப்படை ஜனநாயகம்,இனங்களுக்கிடையில் ஒற்றுமை,புனர்வாழ்வு,புனரமைப்பு, முற்போக்குச் சக்திகளுக்குள் குறைந்தபட்சமாவது புரிந்துணர்வை வளர்ப்பது,புரட்சிகரச் சிந்தனையை மேலும் பரப்புவதற்கான பணி,புரட்சிகரமானவொரு கட்சியைப் பரந்துபட்ட மக்களோடு இணைப்பதென்ற பாரிய வேலைத்திட்டத்துக்கு அவசியமானவொரு சூழலை இலங்கையில் உருவாக்குவது அவசியம்.இது,கடந்தகாலத்தில் பகிடிக்குச் சோசலிசம்பேசிய ஈ.பீ.ஆர்.எல்.எப். இன் அரசியல் துரோகத்தனம் போன்றுருவாக முடியாது!இதைக் கவனத்திலெடுத்துச் செயற்படுவதுற்கு இன்றைக்கு நாம்,நமக்குள் ஒற்றுமையை வலியுறுத்தவேண்டும்.இதற்கு அவசியமற்ற எந்தத் தனிநபர் வாதங்களும் எமது மக்களுக்கு எதிராக இயங்கி,மக்களைப் பாதாளவுலக மாப்பியாக்களிடம் மண்டியிட வைக்கும்!

ஏகத் தலைமையின் முகிழ்ப்புக்கு இரையாகும் மாற்றுக் கருத்துச் சூழல்:


இந்த நிலையில்,இனிப் புலிகள் குறித்த விவாதமோ இல்லை இலங்கை அரசினது பாசிப்போக்குக் குறித்த விவாதமோ இலங்கையை விழுங்கிவரும் பாசிசத்தைத் தடுத்து நிறுத்தமுடியாது.எனவே,உலகத்தில்-இலங்கையை ஆளும் மகிந்த அரசை மட்டுமல்ல சகல இயக்க-கட்சி ஆதிகத்தையும் அவர்களது ஜனநாயக மறுப்பு அரசியல் சித்தாந்தப் போக்களையும் அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டவூர்வலங்கள் செய்வதும், அத்தகைய ஊர்வலங்களோடு இணையும் உலக முற்போக்குச் சக்திகளோடு கைகோர்த்து நாம் எமது தேசத்தின் அராஜக அரசியல் சூழலை வென்று, மக்களது உரிமைகளைக் கவனிக்கும் அரசியலை முன்னெடுக்க வேண்டும்.இதுவே,இன்றைய அவசியமான அதீத பணி.


இதைத் தடுத்தபடி,ஒவ்வொருவரும் கடந்தகால இயக்கவாத மாயைக்குள் தம்மையறியாது பலிகொடுப்பது, எதிர்கால அரசியலையும் மீளக் குருதிதோய்ந்த வரலாறாக்கிவிடும்.இன்றைய இந்தத் துர்ப்பாக்கிய நிலைக்கு மாற்றுக்குழுக்களிடம் தாம் சார்ந்த குழு நலன்களே காரணமாக இருக்கிறது.இவர்களிடம் பரந்துபட்ட மக்களின் நலனும்,அதுசார்ந்த வேலைத் திட்டமும் இருந்திருந்தால் நிச்சியம் தமக்குள் ஒரு அணிச் சேர்க்கைக்கு வந்திருக்கமுடியும்.பொதுவான தளத்தில் தம்மை முன்னிறுத்தாது,மக்களது நலனின் அடிப்படையில் ஒரு பொது வேலைத் திட்டத்துக்கான பணியைக் கூட்டாக முன் தள்ளியிருக்க முடியும்.இவற்றையெல்லாம் பொதுவாகக் கணக்கெடுக்காது,தம்மைத்தாமே புரட்சிக்காரர்களாக்கி முன்தள்ளும் கருத்துக்கள் பழைய இயக்கவாதத் தெரிவிலிருந்து தனிநபர் தூய்மைவாதமாக குறுகிக்கொண்டு,எவர்மீதும் முத்திரை குத்திப் பிளவு அரசியல் நடாத் முனைகிறது.இதுதாம் இன்றைய இலங்கையினதும் அதன் பின்னாலிருந்து இயக்கப்படும் பிராந்திய நலன்சார்ந்த தேசங்களுக்கும் தமிழ்பேசும் மக்களை மேய்க்கும் அரசியலுக்குப் பக்கப் பலமாக இருக்கிறது.இதைக் கடந்து சிந்திப்பவர்களே உண்மையில் மக்களது நலனோடு தமது அரசியல் வாழ்வை உரைத்துப்பார்த்துப் புரட்சிகரமான பணிக்குப் பங்காற்றமுடியும்.


குறைந்தபட்சமாவது பொதுத்தளத்தில் ஒன்றித்துக் காரியமாற்றமுடியாது,ஒருவரையொருவர் தாக்குவதில் வெற்றிபெறும் கருத்தியல் மீளவுமொரு புதியவகை தனிகாட்டுத்தார்ப்பார் அரசியலையே முன் தள்ளமுடியும்.இது,பன்முகத்தன்மைகளை அடியோடு மறுத்துத் தனித்த இயக்க-கட்சிவாதமாக மாற்றமுற்றுப் புலிப்பாணி ஏகக்கட்சி-தலைமையை உருவாக்கும் குறுகிய-புரட்சிக்கு எதிரான அரசியலையே முன்வைக்க முடியும்.மாற்றுச் சக்திகளின் மக்கள் நலன்சார்ந்த செயற்பாடுகளை-அது உண்மையாக மக்களைக் குறித்து இயங்கும்போது- எதன் பெயராலும்-தூய்மையினது பெயராலும் எவரும் துடைத்தெறிய முனைவதாயின் அது,உண்மையிலேயே மீளவும் நம்மையும்,நமது மக்களையும் அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக்கும் கொடுக்கும் செயலே.


இதை,எதன் பெயராலும் எவரும் நியாயப்படுத்தத் தம்மைப் பரிபூரணத் தகுதியுடையவர்களாகவும்,தாம் மட்டுமே மக்களது அரசியலையும்,புரட்சிக்குரிய பணியையும் முன்னெடுப்பதாகக் கூறுவார்களாயின் அவர்களே மக்களுக்குச் சமாதிகட்டும் புலிப்பாணி அரசியலை மீள முன்னெடுப்பதாக நான் இனம் காண்கிறேன்.இன்றைய சூழலில் பொதுவேலை என்பது,மக்களது வாழ்வாதாரத்தைப் புனரமைக்கும் நியாயமான அரசியல் கோரிக்கைகளோடு,யுத்தத்தை நிறுத்தி ஜனநாயகபூர்வமான அரசியல் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கும் அதுசார்ந்து மக்களைத் தத்தம் பூர்வீக நிலப்பரப்பில் மீளக்குடியமர்த்திச் சிவில் சமூகக் கட்டுமானங்களை முன்னெடுக்கத்தக்கபடி இராணுவத்தை குறிப்பட்ட முகாங்களுக்குள் முடக்கும்படியும்,இராணுவப் பரம்பலைத்தடுத்து,இராணுவம் குடிசார்வுரிமைகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதை இதனூடாகத் தடுப்பதுமே முதல் வேலையாகும்.இதைச் செய்வதற்கு ஓரணியில் திரண்டெழ முடியாத-முனையாத இந்த மூன்றாவது அணி-மாற்றுச் சக்திகள் உண்மையிலேயே மக்களது வாழ்வோடு மீளவும் சாவு விளையாட்டைத் தொடங்குபவர்களாகவே நான் கருதுகிறேன்.


இவர்களது மூக்கணாங் கயிறு எவரிடம் உண்டு? எனுங் கேள்வியே இப்போது வலுக்கத் தொடங்குகிறது.மக்களைக் கேடயமாக யுத்தில் பயன்படுத்தும் புலிகளுக்கும்,மக்களையே-மக்களது உயிராதார உரிமைகளையே தமது அரசியல் பிழைப்புக்காகப் பயன்படுத்தும் இந்தச் சக்திகளுக்கும் என்னவேறுபாடுண்டு?



ப.வி.ஸ்ரீரங்கன்
11.03.09

Sunday, March 08, 2009

வாருங்கள் தமிழீழக் கோசத்தை...

இளையோரே,தமிழீழக்கோசம் போடுவதற்கு முன்...




அன்பு வாசகர்களே,மீளவும் ஒரு கட்டுரையூடாக உங்களோடு பேசுவதற்கு நெருங்கி வருகிறேன்.உங்கள் மனங்களைத் திறந்து என்னை அணுகுங்கள்.இது,தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான அரசியற்றெரிவில்லை.இன்று, நமது அரசியற் பலம் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டு அநாதையாக விடப்பட்டுள்ளது.இந்த அநாதைக் குழந்தையை எவரெவரோ தத்தமது விருப்பத்துக்கமையக் கைகளில் எடுத்துக் கிள்ளி விளையாடுகிறார்கள்.இக் குழந்தையின் நிலையோ மிகவும் பரிதாபகரமானது.இதன் பின்னே தத்தளிக்கும் முப்பது இலட்சம் தமிழ்பேசும் மக்கள் தமது கையலாகாத அரசியல்-சமூகவாழ்வையெண்ணிக் கவலையுறுவதைத் தவிர அவர்களால் எதுவும் முடியவில்லை.



நுகர்வு மறுப்புப் போராட்டம்:



கிழக்கிலும்,வடக்கிலும் மக்கள் வாளாது கிடக்கின்றார்கள்.டக்ளசும்,பிள்ளையானும் இவர்களது விடிவெள்ளிகள் அல்ல.இவர்களது தயவில், இழந்த தமது உரிமைகளை மக்கள் பெற்றுவிடவும் முடியாது.இலங்கையில் வாழும் அனைத்துச் சிறுபான்மை இனங்களும் சிங்களம் பேசும் பெரும்பான்மை மக்கள் சமுதாயத்தோடு தோள்சேர்ந்து இந்தத் துயரமான அரசியல் வாழ்வைத் துடைதெறிவதற்கானவொரு சூழல் இப்போது நெருங்கிவரவேண்டும்.இந்த அரசியல் பார்வையானது அவசியமானது.இதுகுறித்துப் பேசுவதென்றால் தொடர்ந்து புலிகளதும் ஆளும் மகிந்தா அரசினதும் பாசிசப் போக்கைப் பற்றிச் செய்தி பதிவதல்ல.மாறாக,இன்றைய உலகப் போக்குகள்,அவர்களது பொருளாதார இலக்குகள்,ஐரோப்பிய நவலிபரல்களின் பொருளாதார முன்னெடுப்புக்குப்பின்பான இன்றைய ஐரோப்பியக்கூட்டு(http://www.eu-vertrag-stoppen.de/),அது சார்ந்த லிசபொண் ஒப்பந்தம் Lissabon "EU-Reformvertrag" http://de.wikipedia.org/wiki/Vertrag_von_Lissabon இதனூடாக ஐரோப்பிய யூனியனின் அரசியற்பாத்திரம்(http://www.eu21.willensbekundung.net/)-ஐரோப்பியக் கண்டத்திலுள்ள நாடுகளது பரிதாப அரசியல் http://www.uni-kassel.de/fb5/frieden/themen/Europa/verf/baf.html நிலைகள் குறித்தும் மிக நேர்த்தியான பார்வைகள் அவசியம்.



ஒபாமா தலைமையிலான அமெரிக்காவினது புதிய உலக அரசியல் நகர்வுகளது வெளியில்,ஐரோப்பாவும் அதன் கூட்டு இராணுவ வலுவான நேட்டோ மற்றும் இதற்கு முகம்கொடுக்க முடியாது திண்டாடும் இருஷ்சிய ஆளும் வர்க்கம் குறைந்தபட்சமாவது நோட்டோவோடு இணைந்து அவ்கானிஸ்தான் பிரச்சனையை அணுகுவதாக இப்போது முடிவெடுக்கிறது(Allerdings sei die Krise um Georgien damit noch nicht ausgestanden: „Wir haben ein schweres Jahr 2008 hinter uns mit dem Südkaukasuskonflikt. Der Konflikt wirkt fort", sagte Steinmeier. Nato-Generalsekretär Jaap de Hoop Scheffer plädierte ebenfalls für eine Wiederaufnahme der Beziehungen: „Wenn wir auch die ernsten Meinungsunterschiede zwischen der NATO und Russland vor allem über Georgien nicht verdecken wollen, so müssen wir doch anerkennen, dass wir auch gemeinsame Interessen mit Russland haben", sagte er. De Hoop Scheffer nannte Afghanistan, den Kampf gegen Terrorismus und die Nichtweiterverbreitung von Atomwaffen.).இத்தைய முடிவினது இறுதிவடிவத்தில் இருஷ்சியா நோட்டோவினால் உள்வாங்கப்பட்டு மேலுமொரு அரசியல் புதிய உத்வேகத்தோடு உலகைப் பந்தாடப்போகிறது.எனவே,இது, குறித்த எந்தப் புரிதலையும் தள்ளி வைத்துவிட்டு இன்றைய தமிழ் இளைஞர்கள் தமது அரசியலைப் பேசமுடியாதென்ற விதி நமக்கு முன் உள்ளது.இன்றைய புலம் பெயர் தமிழ் மக்கள் தமது இளைய தலைமுறையை மீளவும் விவஸ்த்தையற்ற கோசங்களுக்கு இரையாக்கியபடி ஐரோப்பிய வீதிகளில் இறுக்கிவிட்டுள்ளார்கள்.







இவர்களே இப்போது இலங்கையினது உற்பத்திப் பொருட்களை நுகரவேண்டாமென நம்மை மின்ஞ்சலூடாகக் கேட்டு இன்னொரு அரசியல் விபத்தை முன்னெடுக்கிறார்கள்.இலங்கையின் பொருளாதாரம் வங்குரோத்தாகும்போது சிங்கள மக்கள் வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்பட்டு,தமது இனவாத அரசியலைத் தவிர்த்து ஆளும் இலங்கை அரசினது பக்கம் தமது எதிர்ப்பைக் காட்டுவார்களென புலிகளது வங்குரோத்து அரசியலை முன் தள்ளும் இவர்கள்,உலகினது பாத்திரத்தையும் அங்கே இலங்கையினது இருப்பையும் புலிவழி புரிவதில் மீளவும் நம்மைப் படுகுழிக்குள் தள்ளிவிடப் போகிறார்கள்.இலங்கை அரசானது தனது உள் நாட்டு உற்பத்தியைக்கொண்டு இதுவரை இலங்கை வாழ் தனது மக்களைக் காக்கவில்லை.இலங்கையினது பாத்திரமும் தென்கிழக்கு ஆசியாவினது பாத்திரமும் மேற்குலக மற்றும் ஐரோப்பிய அரசியல் நகர்வுகளோடு மிகவும் பிணைந்தவை. இதன் இலகுவான விளக்கம் என்னவெனில்:காத்திரமான உதவிகளோடு இலங்கை அரசு எனும் அந்த அமைப்புக் காக்கப்படுகிறது என்பதாகும்!இலங்கையில் பொருளாதார நெருக்கடி எட்டும்போதெல்லாம் ஆளும் அரசைக் காக்க மீட்பர்கள் பற்பல வடிவுகளில் வருவார்கள்.இலங்கையில் புரட்சிகரமானவொரு சூழலைத் தடுப்பதன் நோக்கத்தில் மேற்குலக வர்த்தகத்தின் உள் நோக்கம்(http://www.parlinkom.gv.at/PE/DOKU/Dokumentation_Portal.shtml) இருக்கிறது.இந்தியப் பிராந்தியத்தின் பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்திருக்கும் ஆசியப் பெரு முதலாளியக் குடும்பங்களின் இருப்பு இலங்கை ஒடுக்குமுறை அரசோடு பிணைந்திருக்கிறது.எனவே,உங்களது "நுகர்வு மறுப்புப் போராட்டம்" அந்த அரசை ஒருபோதும் பாதிக்காது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.



புலிகள் இதுவரை எந்தவொரு தமிழ்பேசும் மக்களுக்கும் உணவிடவில்லை,உறைவிடம் வழங்கவில்லை,உடைகள் வழங்கவில்லை.மக்களது அதிமானுடத்தேவைகளைப் புலிகள் தமது இயக்கச் சொத்தாக்கிய பாரம்பரியத்தினது மிகக்கெடுதியான இவ்வுளப் பாங்கே இன்று இலங்கையினது பொருளாதாரத்தைச் சிதறடிப்பதென்கிறது.இங்கே,சிங்கள மக்களோடு இலங்கையில் வாழும் முப்பது இலட்சம் தமிழ்பேசும் மக்களும் மற்றும் சிறுபான்மை இனங்களும்தாம் இலங்கையின் பொருளாதாரம் சிதைந்தால் மிகம் அவதிப்படப்போகிறார்கள்.இலங்கை அரசாவது கொஞ்ச நஞ்ச உணவாவது புலிக்குப் போட்டதால்தாம் அவர்கள் இதுவரை தமது உயிரோடு உலாவுகிறார்கள் என்பதை இப் புலப்பெயர்வுச் சமுதாயத்துக்குப் புரிவது இருக்கட்டும்.நாம்,இவர்களது அரசியலில் மீளவும் ஈழமெனும் கனவு ஏன் சாத்தியமில்லை என்பதைத் தெளிவாக்குவோம்.



தமிழீழம் மாய மான்:


"தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற இந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள் அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போரை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்கிறோம். உழைப்பவர் நலன் முன் வைக்கப்படும் அரசியல் ஈழக்கோசத்தை முன்னெடுக்க முடியாது. அங்கே பெருந்தேசிய வெறிக்குப் பதிலாகக் குறுந்தேசியம் முன் தள்ளப்பட முடியாது.இரண்டும் சாரம்ஸத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதாம்."இது, கடந்தகாலத்தில் ஈழப் போராட்டத்தைக்குறித்த எமது மதிப்பீடு.இந்த மதிப்பீட்டிலிருந்து இன்றைய இலங்கையினது அரசியல் நகர்வைப் பார்க்கும்போது "ஈழப்போராட்டத்தை"முன்னெடுத்த புலி மற்றும் அனைத்து இயக்கங்களது நிலைமைகளையும்,அவர்கள் இன்று வந்தடைந்திருக்கும் அரசியற்பாதையையும் நாம் மிக இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்.







இலங்கைபோன்ற பல் தேசிய இனங்கள் வாழும் ஒரு சிறு நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீமாக இருக்காது.இஃது, உண்மையிலேயே இப்போது சாத்தியமில்லை.ஆனால், இலங்கையில் புரட்சிக்குரிய சூழல் நிலவுகிறது:இது, இனங்களுக்கிடையிலான ஐயக்கியத்தை வலியுறுத்திப் பாரிய வேலைத் திட்டத்துடன் நகரவேண்டும்.மீளவும் போராட்டம்தாம்.ஆனால்,சிங்களவர்களோடல்ல.சிங்கள-தமிழ்,இஸ்லாமியத் தரகு முதலாளிகளுடனும்-உலக,பிராந்திய ஏகாதிபத்தியங்களுடனும் போராடவேண்டியதுதாம்.இதுவல்லாத இன்றைய அரசியலில்,புலிகள் வந்தடைந்த அழிவு அரசியல் நிலை தமிழ்பேசும் மக்களுக்கு மிக நீண்ட அரசியற் பாதிப்பை தந்துவிடப்போகிறது.அதற்கு வழிசமைக்கும் காரியத்தில் புலம்பெயர்ந்து அநாதைகளாக வாழும் தமிழ் இளஞ்சிறார்கள் வழிவகுக்கப் போகிறார்கள்.


அழிந்து போவதற்குமுன் புலிகள் மீளவும் தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட சாதிகளைக் கருவறுக்கும் அரசியலோடு உழைப்பாளருக்கு விலங்கிடும்அரசியலையே தமிழ் இளையோரிடம் பரப்பிவிட்டுச் செல்ல முனைவது அவர்களது இயக்க நலனிலிருந்தல்ல.மாறாகப் புலிகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஐரோப்பாவெங்கும் புதுப்பணக்காரர்களான புலிப்பினாமி மேட்டுக்குடித் தமிழர்களது தெரிவே இது.இதன் வாயிலாகத் தமது அரசியல் பலத்தைப் பிரேயோகித்துத் தமிழ் பேசும் மக்களை மீளவும் அரசியல் அநாதைகளாக்கும் பாரிய சதியில் இவர்கள் காரியமாற்றுகிறார்கள்.இந்தச் சதியூடாக இலங்கையில் தமது வளங்களை(இவ் வளங்கள் யாவும் அப்பாவிகளிடம் நிதியாகத் திரட்டியது,இப்போதும் திரட்டப்படுகிறது) மூலதனமாக இடவும்,அதுசார்ந்து அரசியல் பலத்தைப் பெறவும்,இவர்கள் இப்போது புதிய தெரிவுகளுக்காக அரசியல் செய்கிறார்கள்.இது,உலக அரசியல்-பொருளாதாரபோக்குகளுக்குக் குறுக்கே நிற்பதாக எவரும் கருத முடியாது.இது,உலக மேலாண்மைச் சமுதாயத்துக்குச் சேவகஞ் செய்யும் தரகு வேலையைச் செய்வதில் தமது அரசியல் ஸ்த்தானத்தைத் தக்கவைக்க முனையும் அரசியலே!


தமிழீழமே தமிழருக்குப் பாதுகாப்பென்று புலப்பெயர்வு வாழ்வில் வளர்ந்துவரும் இளைஞர்கள் கூறுகிறார்கள்.இவர்களுக்கு இலங்கை மண்ணது குணமோ அல்லது நிறமோ தெரிந்திருக்காது.புலிகளது "ஈழப்போராட்டம்" என்பதைத் தமிழர்களுக்கான நலனாகக்காட்டிய புலிகளது அரசியலிலிருந்து இவர்கள் வந்தடைந்த இன்றைய நிலை மிகவும் மோசமான இனவாத நிலையாகும்.இவர்களுக்கு ஒரு அரசினது பாத்திரம் மக்களோடு எத்தகையது என்பதைப் புரிய வைக்க நாம் கடந்த இலங்கை வரலாற்றில் ஜே.வி.பீ.க்கு நடந்த சம்பவங்களைக் குறித்துச் சுட்டிக்காட்டுவது அவசியம்.


1969/70 களில் ஸ்ரீமாவினது தலைமை பல பத்து ஆயிரம் சிங்கள இளைஞர்களை அழித்தது.அவர்கள் சிங்களம் பேசும் சிங்கள இனமாக இருந்தபோதும்.1989/90 காலப்பகுதியில் களனி ஆற்றில் கொன்று வீசப்பட்ட சிங்கள இளைஞர்களின் தொகை அண்ணளவாக 80.000. என்பது இப்போதைய தகவல்.


இளையவரே சில கேள்விகளை இங்ஙனம் கேட்போமா?:


பிரேமதாச ஆயிரக் கணக்கான சிங்கள மக்களைக் கொன்றானே எதற்காக?அவன் சிங்களவருக்கான சிங்கள ஆட்சிதானே செய்தான்!இருந்தும் கொன்றானே எதற்காக?பிரேமதாசவின் பின் இருக்கும் அரசியலை நகர்த்துபவர்கள் எவர்?சரி தமிழருக்கான தளத்துக்குப் போவோம்,தமிழ் நாட்டில் பேரளவுக்கான மாநிலசுயாட்சி தமிழர்களின் கீழ்த்தானே நடைபெறுகிறது? இஃது, ஏன் தமிழகத் தமிழ்பேசும் மக்களை அடக்கியாளுகிறது?தமிழகப் பொலிஸ் ஏன் தமிழக மக்களை வேட்டையாடுகிறது? தமிழக அரசியல் வாதிகள் எப்படி பல்லாயிரம் கோடிகளைச் சொத்தாகப் பெற்றார்கள்?தமிழகத்தில் இன்னும் கொத்தடிமைகளாக அப்பாவி உழைக்கும் தமிழர்கள் இருக்கிறார்களே-இது,எவ்வகையில் சாத்தியமாகிறது?தமிழீழம் என்பதன் கதையும் இந்த நலன்களோடு இணைவுறுவதைப் புரியும்போது அது எவரது அபிலாசையென்பது புரியுமல்லவா?இப்போது வன்னி மக்களது வாழ்விடங்களையும்,புலிகள் வாழ்ந்த வாழ்விடங்களையும் உற்று நோக்கும்போது இவ்வுண்மை இன்னும் பலபடி புரிகிறது.இலங்கை இராணுவத்திடம் பறிகொடுத்த ஆயுதங்களுக்குக் கொட்டியதில் ஒரு பங்கையாவது வன்னி மக்களுக்குக் கொடுத்திருந்தால் அவர்கள் ஒரு நேரக் கஞ்சியையாவது வயிறாரக் குடித்திருப்பார்கள்.பறிகொடுத்த அவ்வளவு ஆயுதங்களும் மேற்குலகத்தின் குப்பைக்குப் போவதற்குத் தகுதியானவை.இவையாவும் தமிழீழத்தின் பெயரால்தாம் நடந்தேறியவை.இவையெல்லாம் பறுவாயில்லை.ஆனால்,தமிழர்களை தமிழீழத்தின் பெயரால் துரோகி சொல்லிக் கொன்றதும்-கொலைக்களத்துக்குப் போராளிகளைத் தள்ளிக் கொன்றதுமே மிகக் கொடுமையானது.இலட்சம் மக்களது உயிரைப் பறித்த இந்தப் புலிப் போராட்டம் சமூக விரோதமானது.இங்கே,இலங்கை அரசினது பாத்திரம் இனவொடுக்குமுறை அரச பாத்திரம்தாம்.என்றபோதும்,அதை அணுகியவிதம் சொந்த மக்களைக் கொல்லும் போராட்டமாக மாறியதில் புலிகளது பாத்திரம் என்ன?









இன்றைய உலக-பிராந்திய பொருளியல் நலனின் அரசியலில் தனித் தமிழீழம் சாத்தியமாகுமா? என்னுடைய பதில் சாத்தியமேயில்லை.காரணம:; பலவுண்டு இப்போதைக்குத் தேவை குறைந்தபட்சம் எமது மக்களது வாழ்வாதாரத்தையும் அதன் சிதைவையும் இதனூடாக அழிக்கப்பட்ட இலட்சக் கணக்கான மக்களது சாவையும் செய்த இன்றைய புலிகளது அழிவைக்குறித்து ஆய முனையுங்குள்.இதன் வாயிலாகத் தென்னாசியப் பிராந்தியத்தின் அரசியல்-பொருளியல் நலன்களைப் பிரதிநிதிப்படுத்தும் மேலாண்மைச் சமுதாயங்களையும் அவர்களது தயவில் அரசியல் செய்யும் இலங்கை அரசையும் ,ஈழப்போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களின் இருப்பையும் மிக இலகுவாக உணர முடியம்.இதன் வாயிலாகத் தமிழீழம் என்பது பகற்கனவு என்பதல்ல.அது,தமிழ் மக்களை முட்டாளாக்கிக் கொன்று குவித்த பெரும் நாசகார அரசியல் என்பது புரியும்.எனவே, நான் கூறும் தீர்வுநோக்கிய பாதையானது"நீண்டதொடர்ச்சியான, முழு இலங்கைக்குமான புதியஜனநாயகப் புரட்சியாகும்.இதுதாம் மனிதவிடுதலையையும்,இனங்களுக்கிடையிலான உண்மையான ஐக்கியத்தையும்பேணி சமத்துவ அரசியலைத் தரும். இது,குறித்து நீண்ட விவாதம்தேவை இப்போது இதைவிட்டுவிடுவோம்.


புரட்சிகர அரசியல் பார்வையும்,வரலாற்றுப் புரிதலும்:


இளையோரே,ஈழமென்பது குருதி தோய்ந்த பொய்க்கோசமானது.இது, கனவிலும் சாத்தியமாகாது.வேண்டுமானல் அவரவர் விருப்புக்கேற்றவாறு தரைத்தோற்றத்தை-நில அமைப்பை வரைந்து கனவை வளர்க்கலாம்!இளைஞர்களே,நீங்கள் ஐரோப்பிய மொழிகளில் அந்ததந்த மூலமொழிகளில் கற்பவர்கள்.உங்கள் அரசியல் வாழ்வைச் சகதியான தமிழீழக் குருதி தோய்ந்த கொலைக் கோசத்துக்குள் திணிக்கமால் உலக அரசியலில் புதிய லிபரல்களின் பொருளாதார முன்னெடுப்பையும் அது சார்ந்த அரசியல் மற்றும் குடிசார் முறைமைகளையும் படிக்கத் தொடங்குங்கள்.ஐரோப்பியக் கூட்டமைப்பு என்பது என்ன?அதன் தேவை என்ன?,லிசபொண் ஒப்பந்தம் குடிசார் உரிமைகளோடும் முதலாளித்துவ ஜனநாயக்த்தோடும் விளையாடும் புதிய லிபரல்களின்வழி புரிய முனையும் உலகு என்ன?என்பதையும் பாருங்கள்.நேட்டோவினது பாத்திரமும், உலக எண்ணைவள உலகங்களின் அரசியலுக்கும் குறிப்பாக இருஷ்சியாவின்அரசியலுக்கும் உள்ள முரண்பாட்டை கவனியுங்கள்.இதை தவிர்த்துவிட்டுத் தமிழீழக் கோசம் போடுவதால் நீங்கள் தமிழ்ச் சமுதாயத்துக்கு எதுவுமே செய்துவிட முடியாது.



இன்றைய நமது அரசியல் வாழ்வானது-பிரச்சனையானது இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் இல்லை.அது டெல்லியூடாய் நீங்கள் வதியும் நாடுகளது பெரும் கம்பனிகள்வரை கிடப்பதை நீங்கள் அறிவீர்கள்.அப்போ நாம் நாடென்றவொரு அமைப்புக்குள் வாழமுடியவில்லை.மாறாக, நாடுகளென்ற அமைப்புகளுக்குள் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.எமது பிரச்சனை அந்நிய நாடுகளோடு சம்பந்தப் படுகிறது.இலங்கை பிளவுபட உலகப் பொருளியல் நலன் விடவே விடா.புலிகள் இதைப் புரிந்து விட்டார்கள்?


உலக நாடுகள் தத்தம் எல்லைகளைத் தகர்த்துக்கொண்டு இப்போ கண்ட-உலக அரசவடிவத்துக்குள் வந்து விடுகின்றன,இதுதாம் இன்றைய நிதிமூலதனத்தின் அதிகூடிய உற்பத்திப்பொறி முறை.புதிய லிபரல்களின் இந்த வியூகம் வெறும் தேங்காய்ச் சிரட்டை அரசியல் வியூகமில்லையென்பதை நீங்கள் முதலில் புரிந்தாகவேண்டும்.இது, வர்க்கச் சமுதாயம்,இங்கு வர்க்க அரசியலே அடிப்படையானது.இதைவிட்ட எந்த மாயமுமில்லை.



முழுமொத்தமக்களுக்குமான விடுதலை சுதந்திரமென்பதெல்லாம் வெறும் போலிக்கோசமானதாகும்.தேசியக் கோசமானது-தேசிய விடுதலைக்கோசமானது எப்போது முற்போக்கானதாக இருக்குமென்றால் அது தேசிய முதலாளியம் ஏகாதிபத்தியத்துடன் முரண்படும்போது.நமது நாட்டிலோ தேசிய முதலாளியம் முளையோடு கருகிவிட்டது.இப்போது வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட இது கிடையாது. அப்போ எமது தேசிய விடுதலைக்கோசமானது தரகு முதலாளிகளின் கோசமாக விருப்பினும்,அது சிங்கள இனவொடுக்குமுறைக்கு எதிரானதாகவும்,தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமைக்கானதாகவும்(கவனிக்க:இது தமிழீழத்தைக் குறிப்பதல்ல) கோசமாக வளர்த்தெடுக்கப்பட்டது.இந்த நிலையில் இது முற்போக்கானது.ஆனால்,பாருங்கள் இந்தக்கோசம் எப்படிப்பட்ட இயக்க நலத்துடன் பிணைவுற்று அது குறிப்பிட்டவொரு இயக்க நலனாக மாறுகிறது.இதன் வாயிலாக மாற்று அரசியற் பாதையுடைய அமைப்புகள் அழிக்கப்படும் நிலைக்கு குறிப்பிட்ட இயக்க நலன் உந்தித் தள்ள, இந்த முக்கியமான முரண்பாட்டை நம்மையொடுக்கமுனையும் அந்நிய நாடுகள் தமது நலனுக்கேற்றவாறு பயன் படுத்தி ஈழத்தில் குருதியாற்றைத் தோண்டி விட்டார்கள்.நிலைமை மோசமாகி யாருக்கெதிராகப் போராட நாம் திரண்டோமோ அவர்களிடமே நம்மில் ஒருபகுதி சரணடையவேண்டிய இழிநிலை தோன்றுகிறது.இங்கே,கிழக்குப் பிரிகிறது.வடக்கு இராணுவத்தின் காலடியில்,வன்னியில் சிக்கியவர்கள் புலிகளாலும்,சிங்கள இராணுவத்தாலும் மாறிமாறிக் கொல்லப்படத் தமிழீழக்கோசத்தை நீங்கள் மேற்குலக வீதிகளில் வைப்பதால் இந்த நிலை மாற்றமடையாது.


கடந்த சில தினங்களுக்குமுன் நெதர்லாந்த அரசியல்வாதி உங்களுக்குச் சொன்ன அரசியல் புரிந்ததா?"தமது கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவிக் கொடுத்து யுத்த நிறுத்தத்துக்குச் சம்மதிக்க மறுப்பதால் தாம் எதுவுஞ் செய்வதற்கில்லை"என்பதன் பொருள் என்ன? ஐரோப்பியக் கூட்டமைப்பினது முடிவையே தடுக்க முடியாத ஐரோப்பிய நாடுகளது அரசியலில் புதிய லிபரல்களது பொருளாதார இலக்குக்கு („Uns steht bevor, die weiteren Schritte (in den Beziehungen Russland-NATO), inklusive einer möglichen Wiederaufnahme der Arbeit des Russland-NATO-Rates, zu besprechen", sagte Scheffer.) முதலாளித்துவ ஜனநாயகமே தடைக்கல்லு.இதைப் புரியும்போது இலங்கையினது அரசியல் போக்குக்குப் புலிகளது பாத்திரம் என்னவென்பதைப் புரிந்துகொள்ளப் போகிறீர்கள்.உலகம் புலிப்பாணி அரசியலுக்குள் விரியவில்லை.சிந்திக்க முனையுங்கள்.கோசங்களின் பின்னே அணிவகுக்காது கோசங்கள் உருவாகும் அரசியலைப் புரிய முனையுங்கள் முதலில்!இதுவே,புரட்சிகர அரசியலின் முதற்படி.


இன்றெமது காலச் சூழலானது மெலினப்பட்டவொரு கருத்தியற்றளத்தையும்,புரிதற்தடுப்புக்கான மாறாட்டங்களையும் கொண்டிருக்கிறது.இதன் பன்முகத் தாக்குதலானது பின் தங்கிய சமூகச் சக்திகளிடம் மிகவும் மோசமாவொரு உள-உடலரசியல் வகைப்பட்ட "மாதிரி பரப்புரைகள்"மலிந்து கிடக்கிறது.இந்தக் கருத்தியற் தளத்தின் எல்லையிலிருந்துகொண்டு மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை அணுகுவது மிகப் பெரும் ஆபத்தானது.இதை முன் நிபந்தனையாகக் கொள்வோமானால் கருத்துகளின் மைய வலுவானது அந்தந்தச் சமுதாய இருப்பை ஆட்டிப் படைக்கும் அனைத்துக் கூறுகளையும் மட்டுப்படுத்துவதும்-புரட்டிப்போடுவதும் உணரப்படும்.எனவே இதன்பாலான புரிதல், மீள் கருத்தியற் சுதந்திரம்,மக்களாண்மைத்துவ திரட்சிப் பெருங்கூட்டக் கருத்தாளுமை,பன்மைத்துவ வெளிபாட்டுச் சுதந்திரம்போன்ற ஜனநாயகக் கூறுகளையும்,அதன் விளைவாகவெழும் தெளிந்த அறிவுக்கட்டமைப்பையும் வலியுறுத்தி நாம் செயலூக்கம் பெறவும்-மாற்றுச் சிந்தனைக்கும் வழிதோன்றும்.


எனவே கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதும் அதன் வாயிலாகவொரு நீண்ட வலுவுள்ள சிந்தனைக்கான தோற்றுவாயைத் திறப்பதும்(http://www.eu-buergerbegehren.org/wp/ ) சமுதாய வளர்ச்சிக்கும்,அதன் இருப்புக்கும் அவசியமானது.இந்தப் பொறுப்புணர்வை நோக்காகவுணர்வோமானால் எமது செயற்பாடுகளில் அறிவைப் "பெறுதலும்-வழங்குதலும்" சமூக சீவியமாக உருப்பெறுவதும்,அதற்காக நீண்ட திட்டங்கள்-படிப்பு வட்டங்கள்(http://www.mehr-demokratie.de/),செயற்கூட்டு முன்மாதிரிகள் தோன்றிக் கொண்டேயிருக்கும்.


வாருங்கள் தமிழீழக் கோசத்தை அப்படியே விட்டெறிந்துவிட்டு.நம்மால் முடியும் இளைஞர்களே!நாம் யாருக்கும் குடியல்லோம்.இதிலிருந்து தொடங்கும் அரசியலை மிக நேர்த்தியாகக் கற்கவில்லையானால் நாம் உலகத்தில் அடிமைப்படுவதென்பது இலங்கை அரசால்மட்டும்தானெனக் கருதிவிடுவோம்.அடக்குமுறை புதிய புதியவடிவில் உலகத்தின் பொது ஒத்துழைப்போடு நம்மையும் நெருங்குகிறது.கவனியுங்கள் நம்மையும் என்பதை!

வேறென்ன?

மீண்டும் தொடருவோம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
08.03.2009

Sunday, March 01, 2009

புலிகளின் தாகம் தமிழீழம்:சரணடைகிறது?

புலி இயக்கக் இருப்புக்கான அரசியல்:

"The lessons of history are that actually there is nothing called ethnicities winning and losing. It is always forces of oppression and liberation losing and winning."-tamilnet


இன்றைய நமது அரசியல் வாழ்வு ரொம்பத்தான் கேணைத்தனமாகப் போச்சு!எவரெவரோ தமிழ் மக்களது நலம்,விடுதலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள்-எழுதுகிறார்கள்.தமிழ் மக்களுக்காகச் சிங்கக் கொடிகளோடு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஊர்வலம் எடுக்கிறார்கள் பல தமிழர்கள்!புலம் பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் "தமிழரின் தாகம் தமிழீழம் "எனக் குரலெடுத்துப் புலிக் கொடியோடு வன்னியில் மக்களைக் கொல்கிறார்களெனச் சொல்லி ஊர்வலஞ் செய்வதில் உந்தியபடி, "எழுக தமிழ்-பொங்கு தமிழ்"எடுத்த அநுபவத்தோடு எகிறிக் குதிக்கினம்.இன்னுஞ் சிலர் தீயுள் கருகிச் சாம்பாலாவதில் தமீழீழத்தின் விடிவைக் குறித்துக்கடிதங்கள் எழுதித்தள்ளுகினம்! வன்னியில் யுத்தக் கிரிமினல்களால் பாதிக்கப்படும் மக்களோ ஒருசில நேரமாவது உயிர்த்திருக்க முடியுமாவெனப் பேயாய் அலையும் நிலையில்.

புலம் பெயர் நாடுகளில்"இப்படித்தாம் ஊர்வலம் நடாத்த வேண்டுமென"க் கட்டளைபோடுகிறார் கஜேந்திரன் என்ற புலிப்பினாமி எம்.பி.
இவர் யாழ்பாணத்தில் நின்று எம்.பீ.ஆனாவரென்கிறார்கள்.இவர் சொல்லும்"இப்படித்தான்"என்னது?:

1)புலிகள் மட்டும்தான் தமிழர்களது ஏகப் பிரதிநிதிகள்,
2)எமக்குத் தமிழீழம்தான் வேண்டும்,
3)யுத்தத்தை நிறுத்து


இவ் மூன்று கோசங்களோடும், புலிக்கொடிகள்,தலைவரது படங்களைக் காவி ஊர்வலுஞ் செய்ய வேண்டுமென்கிறார்.கூடவே,தாம் கடந்த 2004 இல் இருந்து இதே கோசத்தைத்தாம் உலக நாடுகளில் சமாதானம் பேசியபோது வலியுறுத்தினார்களாம் என்கிறார், T.R.T தமிழலை வானொலியில்;நேற்று முன் தினம்.அதாவது,27.02.09 அன்று.


ஆம்!இவ்வளவும் புலிகளது நலனுக்கானதென்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை!


இதுள் தமிழ்பேசும் மக்களது நலன் எது?

தமிழீழம்?


நல்லது!

கடந்த காலத்து இவ்வரசியல் இன்று வன்னியில் புலிகளைக் காடாத்தும் இந் நேரத்திலையும்,அது சரியான தெரிவாக இந்தக் கசேந்திரன் சொல்லும் அரசியலை எங்ஙனம் புரிவது?அதாவது புலிகளை அரசியல் நீக்கஞ் செய் என்பதன் உள் நோக்கங் கொண்டதாக?



ஏகப் பிரதிநித்துவமென்பதன் சாபக்கேடு,வன்னியில் மக்களைப் பலியெடுப்பதற்கு முன் கணிசமான சொந்த மக்களையே ஆயிரக்கணக்கில் உயிரோடு புதைத்தது!-"துரோகி"யெனச் சொல்லி மண்டையில் போட்டது!!இதை, இதுவரை நகர்த்தும் புலிகள் ஜனநாயகச் சூழலுக்குப் பொருத்தமற்றவர்கள் என்பதைக் கசேந்திரன் சொல்லாமற் சொல்கிறார்?இன்று,புலம்பெயர் மக்களோடு தானும் புலிப்பிரமுகராக ஒண்டியபடி ஐரோப்பாவைப் பார்க்கும் இந்த "கௌரவ எம்.பீ."க்கு பன்முகத் தன்மை,பன்மை அரசியற்போக்குகள்,கட்சி வடிவங்கள்,தேசங்களது பன்மைத்துவக் கட்சிகளது எதிர்கால நகர்வுகள் குறித்துப் புரிவது கடினமானதா?கஜேந்திரனின் மண்டை வீங்கிய பாசிச மனதுக்குப் புலிகளது பினாமியான அவரது நிலை உந்து சக்தியாக இருக்கிறது.







இது,புலிகளது சரணடைவுக்குப் பின்னான அரசியற் போக்கில் தம்மை மக்களுக்குள் நிலை நிறுத்த முனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் புலிப் பினாமிகளின் அடுத்தகட்ட அரசியலாகவிரிகிறது.தம்மைத் தமிழீழத்துக்காகவே போராடுவதாகச் சொல்லி நிலைப்படுத்தித் தமிழ்பேசுவோரைத் தொடர்ந்து ஏமாற்றிப் பிழைக்க முனையும் கபடத்தனத்தோடு முன்நிறுத்த இடப்படும் வியூகமாக-தந்திராமக நாம் கஜேந்திரனின் கூற்றுக்களை-நகர்வை இனம்காணலாம்!புலிகள் எதைச் செய்தாலும் அது தமிழர்களது நலத்துக்கானதாகவே "தமிழ்த்தேசியம்" கருத்துப் புனைகிறது.இந்நிலையில்,தமது சரணடைவைக்கூட அவர்கள் இங்ஙனம் பேச முற்படுவர்.

இந்தவகைப் புலி அரசியல்தான் இந்தத் தமிழ்ச்சனத்துக்கு விடிவு தரும்?


சரணாகதிக்குப் பூசப்படும் தமிழர் குருதி:

தமிழீழம்!,புலிகளின் தாகம் தீர்ந்து போய்த் தமிழீழத்தை 1987 ஆம் ஆண்டுச் சங்கதிக்கு ஏற்ப அரசியல் செய்யப் புலித் தலைமை தமது உயிரோடு ஆசைகொண்டுள்ளதாகச் சொல்வதற்கானவொரு யுத்தச் சுற்றிவளைப்பில், இப்பேது,இலங்கை அவர்களைக்கொணர்ந்துள்ளது.இது,இன்னொரு வகையில் "துரோகி"எனும் அவர்களது(புலிகளின்) கோசத்தை-தண்டனையை-கொலை அரசியலை,"மக்களுக்காக"அவர்களது நலனுக்காகத் தமது தலைமையின்கீழ் புதிய-காலத்தின் தேவையோடான தேசநலன் ராஜதந்திரீக முன்னெடுப்பாகச் சரணாகதியடைந்து,இலட்சம் மக்களது கொலையில் வென்றெடுக்கும் "தமிழீழத்துக்கான"புலிகளது முன்னெடுப்பாக இனி உருவாகும்!
புதுக்குடியிருப்பில்"பொட்டு அம்மானின்"நேரடி வழிகாட்டலில்-கட்டளையில் யுத்தஞ் 'சூடுபிடித்துள்ளதாக ஜீ-ரீ.வீ சொல்கிறது.அன்று,ஐ.பீ.சீ.வானொலியின்"கருணா அம்மான் இப்படிச் சொன்னார்"என்ற செய்திக்குப் பின்பான சில நாட்பொழுதில் கருணா அம்மான் துரோகியாகித் தன்னைப் புலியிலிருந்து சிங்கத்துக்கு மாற்றிக்கொண்டார்.எப்போதும், ஒப்பாரும் மிக்காரமற்ற தேசியத் தலைவரது நேரடி வழிகாட்டலில் கீழ்படிந்து போராடும் இவர்கள் முன்னிலைக்கு வருவதில் ஏதோவொரு அரசியல் சூழ்ச்சி இருக்கும்.தேசியத் தலைவருக்குக் காவடி தூக்குபவர்கள் எப்போது அவரது எடுபிடிகளைத் தூக்க ஆரம்பிக்கிறார்களோ அங்கே அடுத்த சூதாட்டம் ஆரம்பித்ததாகப் பொருள்.


இந்நிலையில்,


"மாநில சுயாட்சியும்-மத்தியில் கூட்டாட்சியும்"கனக்காணும் டக்ளஸ் தலையில் ஆயிரம் கேள்விகள்.வன்னிக்குள்ளிருந்து வரப்போகும் இன்னொரு பிள்ளையான் யார் என்பதில் அவருக்குச் சிக்கலானவொரு எதிர்காலம்.அவர் யாழ்ப்பாணத்தில் "பெரியாஸ்பத்திரி"என்ற போதான வைத்தியசாலையை ஐந்துமாடிவரை உயர்த்துகிறார்,மேலும் வீரசிங்கம் மண்டபம் ஆறுமாடிக்கு உயர்கிறது.அபிவிருத்திக்கு அபிவிருத்தியென டக்ளஸ் செய்து முடிக்கிறார்.அன்று, புலியினது கை யாழ்ப்பாணத்தில் படிந்திருந்தபோது மக்களுக்கு டக்ளசை போற்றவும் முடியவில்லை-தூற்றவும் முடியவில்லை.ஆனால்,இன்று யாழ்ப்பாணத்திலிருப்பவர்கள் டக்ளசுக்குச் சார்பான எண்ணத்தோடு இருப்பதாகவே அவர்களது குரல்கள் மேலெழுகின்றன!

இப்படியான குருதிதோய்ந்த அரசியல் நகர்வுகளுடே,பொது மன்னிப்புக்குத் தலைவணங்கித் தலைமைக் குணங்கொண்ட தானைத் தலைவர்-தேசியத்தலைவர் தமிழீழத்தைக் கைவிட்டால் தன்னைக் கொல்வதற்கு எவருக்கும் உரிமை இருப்பதாகச் சொன்னதைப் பெரிய மனது பண்ணிக் காற்றோடு கலக்க விடவேண்டுமென இனியுரைப்பார்?இதை எப்போது ஐ.பீ.சீ,ஜீ-ரீ.வீ போன்றவை செய்திகாகச் சொல்லும்?


இந்தியாவோடு பஜனை பாடப் புலிகள் ஆயுதம் தொலைத்துக் காத்திருக்கும்போது,இந்தியாவோ இன்னும் "தலைவர்" குறித்த தமிழ்ப் பெருங் குடிகளின் கேள்விக்குப் பதிலைத் தள்ளிப் போட்டபடி போக்குக் காட்டுகிறது!எனினும்,தலைவருக்குக் கருணை காட்டப்பட்டு அவரைக் கரை சேர்க்க முடிவுகள்-ஆணைகள் எட்டப்படும்!பிரபாகரனின் ஆயுளுக்குள் புலிகளின் சரணடைவு சாத்தியமே!-அடச் சீ,தமிழீழம் எண்டதன் தேய்வு இதுவா?
அதுக்காக,ஐயா ஆனந்தசங்கரி பலமாகக் காய் நகர்த்துகிறார்.இந்தியா ரொம்பத்தான் தெம்படைகிறது!"தலைவா,நீ வாழ்க மகனே-வாழ்க!நின் புண்ணியத்தால் தானைத் தலைவன் உயிர்கொண்டெழுந்தான் தரணியெங்கும் தமிழாய்!"-இப்படியும் இனிச் சொல்வார்கள் புலிகளது வால்கள்-குறிப்பாகக் கஜேந்திரன்.

புகலிடத் தமிழர்களைப் புலிகள் ஒருபுறம் தொடர்ந்து சுரண்ட மறுபுறம் இலங்கைச் சிங்கள அரசும்,இந்தியாவும் கூடவே அவர்களின் நம்பகமான கூட்டாளிகளும் மூளைச் சலவை செய்வது கண்கூடாக நடக்கிறது.வன்னியில் மக்களின் அவலத்தோடு இனியும் போராட முடியாது!தலைவர் முற்காலமும் அறிந்து சரணாகதியடைவதில் தனது இன்னுயிரைத் தமிழர்களுக்காகக் கொடுத்தாவது சரணடைவைச் செய்து,வன்னி மக்களுக்கான விடிவை வெகுவிரைவில் எட்டுவார்.இதைத் தனது ஆயுளுக்குள் அவர் கண்டாகவேண்டும்.இல்லையேல் அவர் அம்போவெனச்செத்துத் தொலைந்துபோவார்.

அப்பாவி மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பலி கொடுத்துவிட்டுக் கண்ணீரோடு அவர்களின் கல்லறையில் கட்டுண்டு அழுதபடி?...

இருந்தாலென்ன?


தத்தம் பிள்ளைகளைப் பறிகொடுத்தாலும் தமிழர்களுக்காகத் தேசியத் தலைவர் தனது பிள்ளைகளை ஆசையாய் வளர்த்துவருகிறார்.அவரது கருணைமிகு இச் செயலால்,தலைவரது குழந்தைகளை ஒவ்வொரு தமிழர்களும் தத்தமது பிள்ளைகளாகக் கண்டு மனம் மகிழ்ந்து, அவர்களது சேமத்துக்காகக் காவடி தூக்குவது குறித்து வன்னிக்குள் உருவாகும் பிள்ளையான் உத்தியோக பூர்வமாக அறிவிப்புச் செய்வார்.-இன்னொரு பொழுதில்.

இது,அவர்களுக்கு வாழ்வு பற்றிய ஓரளவு எதிர்பார்ப்பை நிறைவு செய்யும்.தேசியத் தலைவர் நிச்சியம் இதற்கு உடன்படுவார்!

அரசியல் நடத்துபவர்களுக்குத் தமது பதவி,சுகம்,பணம் இயக்கம்-கட்சி என்ற எதிர்பார்ப்பும் மக்களை அடக்கி ஆட்சி புரியும் கனவும்,இனி மேல் தேசியத் தலைவரது கருணையின் வாயிலாக ஏற்படமுடியாது!மக்களது நலனே அவர்களது நலனாக விரியும்.


இதை எப்படியும் அனுமதிப்பது மக்களது கடமை!


"இன்றைய உலக நடப்பில்,தமிழீழத்துக்கான போராட்டம் புதியதொரு பரிணாமத்தை எடுத்திருக்கிறது.முதலில்,அரசியல் ரீதீயான வெற்றியைப் பெற்று,ஒரு நிலையெடுத்தபடி அடுத்த பாய்ச்சலில் ஆயுதப்போராட்டம்-ஒரே தடைவையில் ஈழத்தை விடுவிப்பதில் நோக்கமாக-போராட்டப்பாதையைத் தீர்மானித்துத் தொடரும் என்பதைச் சொல்லிக்கொள்கிறோம்.எனவே,இதற்காகப் புலம்பெயர்ந்த மக்கள் இன்னும் அதிகமாகப் பொருளாதார உதவி செய்யவேண்டும்.மக்கள் கடந்தகாலத்துத் தேசக் கட்டுமானப் போராட்டத்தால் அனைத்தையும் இழந்துள்ளார்கள்.ஆதலால்,அவர்களுக்கு உயிர்வாழும் ஆதாரங்களை ஏற்படுத்திக்கொடுத்துக் காக்க புலம் பெயர்ந்த மக்கள் தொடர்ந்து புலிகளது இத்தகைய அரசியல் நகர்வைப் புரிந்து, உதவ வேண்டும்.அங்ஙனம் உதவுவதே தேசக்கட்டுமானத்துக்கான அடுத்தகட்ட நகர்வு!இதுவே,தமிழரது தாகமான தமிழீழத்தின் பிறப்புக்கான கருவைக் கொண்டியங்கும் என்பது யதார்த்தமாகும்."


-இது,தேசியத் தலைவரது அதியுயர்ந்த மதி நுட்பத்தால் கண்டறியப்பட்ட இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான உண்மையாகும்!



புருஷனை இழந்தவளிடம் "விதவை"யென இருப்பதையும் தட்டிப் பறிப்பது:


இன்றைய இலங்கை அரசியலில் பற்பல சக்திகளின்,வர்க்கங்களின் நலன்கள் முட்டிமோதுகின்றன.இங்கே பிராந்தியத் தரகு முதலாளித்துவ நலன்கள் ஒவ்வொரு வழிகளில் தத்தமது நலனின் பொருட்டுப் புதிய புதிய கூட்டைப் பெறுகின்றன.அவை தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சனையைத் தமக்குச் சாதகமான முறைகளில் பயன் படுத்தித் தமது நலனைப் பெறத் துடிக்கின்றன.புலிகள் தமது தவறுகளை மேலே சொல்லப்பட்ட மிக மலினப்பட்ட வார்த்தைகளோடு நியாயப்படுத்துவார்கள்.இதற்காகத் தாம் செய்த ஆயிரக்கணக்கான"துரோகி"இரகக் கொலைகளை அவர்கள் மிகவும் சாதுரியமாகத்"துரோகம்"எனும் அரசியலோடு ஒப்பேற்றி விடுவார்கள்.ஒருகட்டத்தில் "துரோகமாக"அவர்கள் சொன்னதைத் தாமே செய்யும்போது அஃது,தியாகமாகும்!

அன்றாட வாழ்வில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அராஜகச் சூழலை-இயக்கப் பயங்கரவாதத்தை,புலிகளின் தனிகாட்டு ராஜாங்கத்தை,மற்றைய ஆயுதக் குழுக்களின் அட்டகாசத்தைப் பாரிய அளவில் தூண்டிவிட்டுச் சிங்கள அரசு தமிழ் மக்களின் உண்மையான பிரச்சனையை நீற்றுப்போக வைத்துள்ளது.இன்றைய உடனடிப் பிரச்சனையானது இனப்பிரச்சனையல்ல,சுயநிர்ணயப் பிரச்சனையல்ல. மாறாக, புலிகளின் அடக்குமுறையே தமிழ் மக்களின் பிரச்சனையென்று உலகத்துக்குக் காட்டும் இராஜதந்திரத்தில் இந்தியாவும்,இலங்கையும் வெற்றி பெற்றுப் புலிகளது சரணடைவுவரை "ஈழப் போராட்டம்"வந்துள்ளது.இதற்காக இலட்சம் பேர்கள் செத்தவர்கள், செத்தவர்களே!சுனாமியை எண்ணிக்கொள்ளவும்.

வடக்கும் கிழக்கும் தமிழரின் தாயகமென்ற கோட்பாட்டை எப்பவும் நிராகரித்த இலங்கையின் ,இந்தியாவின் ,அமெரிக்காவின் விருப்பமானது தமிழ் மக்களைப் பிரதேசவாரியகப் பிரித்தெடுத்துவிட்டது.ஒவ்வொரு தமிழ் மாவட்டங்களிலும் பற்பல ஏற்ற தாழ்வுகள் உண்டு.தமிழ்ச் சமுதாயத்தில் பாரிய பிளவுகள் சாதியாகவும்,பிரதேச ரீதியாகவும் நிலவுகிறது.அதைப் பெரும்பாலும் சரிவரப் பயன்படுத்தும் இந்தியாவின் இராஜதந்திரமானது முதல் தடவையாகப் புலிகளின் படையணியைப் பிரித்தெடுத்து இதை வலுவாகச் சாதித்துள்ளது.இந்த வெற்றியானது இன்று புலிகளின் இயக்க நலனை பாரிய முறையில் சிதைத்து அவர்களை வெறும் குறுங்குழுவாக்கும் தந்திரத்தைக் கொண்டு யுத்த்தின் மூலம் அவர்களைச் சரணாகதிக்குத் தள்ளியுள்ளது!

இலங்கையில் தனது இராஜதந்திரத்தை வெகுவாகக் கடைப்பிடிக்க முனையும் இந்தியா, வருங்காலங்களில் இந்தப் பிரச்சனையைத் தூண்டி வளர்த்தெடுத்துக் காய் நகர்த்தும்.தமிழ் பேசும் மக்களின் அடிப்படையான பிரச்சனையை முற்றுமுழுதாகப் புதைத்துவிடும் அரசியல் காய் நகர்த்தலே இனிமேல் வலுவடையும்.அதற்காக இந்த இனப் பிரச்சனை இன்னும் இழுத்தடிப்புக்குள் கொண்டு செல்லப்பட்டு வருடங்கள் பல கடக்கப்படலாம்.இப்படிக் காலம் கடக்கும்போது புலிகளின் மறைவு நிச்சியமாகும்.இன்றைய சூழலில் மங்கு காலத்தில் இருக்கும் புலிகளின் அமைப்பாண்மை வன்னியுத்தத்தில் சரணடைவாக உருவாகிறது.இதைக்கடந்த அவர்களுக்கு வாழ்வு இனியில்லை!

இதைத் தடுப்பதற்கான புலிகளின் எந்த இராஜதந்திரமும் உலக அரங்கில் செல்லுபடியாகாது. "வன்னிப் போரைத் தமக்குச் சாதகமாக்கி,அதை உடைத்து முற்றுகையைத் துண்டித்துத் தம்மை மீளவும் பழைய நிலைகளுக்குள் திணித்துச் சிங்கள இராணுவத்தை வெற்றிகொள்ளும் திரணியற்றச் சரணடைவு" என்பதை வரலாற்றில் எழுதப்படும் "சொல்-செயல்" எதுவாக இருக்கும்?


தோழர் இரயாகரன் சொல்வதுபோல்,மக்களைப் பாதுகாப்பாக இடம்பெயர வைத்துவிட்டுத் தமது அமைப்பாண்மையையும்,படையணியின் உளவியலையும் தெம்படைய வைப்பதற்குப் புலிகளுக்கு அவசியமாகும் முற்றுகை உடைப்புப் போர் இனிமேல் தொடராது போகலாம் .ஆனால்,இந்த உபாயம் அவர்களின் தற்கொலைக்கு வழி சமைப்பதில் முடியும்.எனவே இந்த வழியும் இறுக மூடிக்கிடக்கும்போது அவர்களிடம் துரோகச் சரணடைவு எனும் நிலை மட்டுமே மிஞ்சிக்கிடக்கிறது.

இந்த இறுக்கமான சூழலானது புலிகளின் இயக்க நலனை முதன்மைப் படுத்தும் எந்தக் காய் நகர்வையும் அவர்களுக்குச் சாதகமாக்கமுடியாது போகும்.இதைப் புலிகளின் பின்னாலுள்ள அவர்களது எஜமானர்கள் நன்றாக உணரத்தலைப்பட்டுள்னர்.எனவே,பிரபாகரனது சரணடைவை அவர்கள் கோரியபடி,பிரபாகரனுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கும் கருணையைக் காட்டும் அரசியலில் இந்தியாவிடம் மடிப் பிச்சை எடுக்கின்றார்கள்.இந்தியா இதற்கானவொரு பதிலை ஏலவே தயாரித்து வைத்திருப்பதால் தேசியத்தலைவர் இயற்கை மரணம் அடையும்வரை உயிரோடு இருப்பார்.அவர் பறித்த"துரோக"இரகப் பிசாசுகளால் அவருக்கு ஆபத்து இருக்குமே தவிர இனி இலங்கையால்-இந்தியாவால் அவருக்கு ஆபத்தில்லை!

அப்பாவி மக்கள் மீளவும் கொட்டாவி விட்டு,இவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டியதுதான்.

இதுதான் புலி அரசியல் தந்திரம்-தேசியத் தலைவரது மதி நுட்பம்!

இதை மீறிய வாழ்வு தமிழ் பேசும் மக்களுக்கு இனி வருவது பகற்கனவே!

மாநிலமும் இல்லை,தமிழீழமும் இல்லை!மாறாக, மாகாணமென்பதே இந்தியாவினதும்,அமெரிக்காவினதும் விருப்பாகும்.இங்கே, இதைச் சாதிக்க சிங்கக் கொடிகளுடன் தமிழ்க் கூலிகள் தயாராகி வருகிறார்கள்.புலிகளும் தமது கூலியை சரணடைவுக்கூடாகப் பெற்று தமது வாலை இந்தியாவுக்கு-இலங்கைக்கு மற்றும் மேற்குலகுக்கு ஆட்டுவதில் கரிசனை காட்டுவதால் இனிவரும் காலம் இந்தியாவுக்கே வெற்றியைத் தேடித் தரும்.

இதுவே பூகோள அரசியலின் விதி.

இதைத்தாண்டி மேற்குல எஜமானர்கள் புலிகளுக்கு விமோசனமிட முடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்
01.03.2009

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...