Sunday, March 01, 2009

புலிகளின் தாகம் தமிழீழம்:சரணடைகிறது?

புலி இயக்கக் இருப்புக்கான அரசியல்:

"The lessons of history are that actually there is nothing called ethnicities winning and losing. It is always forces of oppression and liberation losing and winning."-tamilnet


இன்றைய நமது அரசியல் வாழ்வு ரொம்பத்தான் கேணைத்தனமாகப் போச்சு!எவரெவரோ தமிழ் மக்களது நலம்,விடுதலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள்-எழுதுகிறார்கள்.தமிழ் மக்களுக்காகச் சிங்கக் கொடிகளோடு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஊர்வலம் எடுக்கிறார்கள் பல தமிழர்கள்!புலம் பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் "தமிழரின் தாகம் தமிழீழம் "எனக் குரலெடுத்துப் புலிக் கொடியோடு வன்னியில் மக்களைக் கொல்கிறார்களெனச் சொல்லி ஊர்வலஞ் செய்வதில் உந்தியபடி, "எழுக தமிழ்-பொங்கு தமிழ்"எடுத்த அநுபவத்தோடு எகிறிக் குதிக்கினம்.இன்னுஞ் சிலர் தீயுள் கருகிச் சாம்பாலாவதில் தமீழீழத்தின் விடிவைக் குறித்துக்கடிதங்கள் எழுதித்தள்ளுகினம்! வன்னியில் யுத்தக் கிரிமினல்களால் பாதிக்கப்படும் மக்களோ ஒருசில நேரமாவது உயிர்த்திருக்க முடியுமாவெனப் பேயாய் அலையும் நிலையில்.

புலம் பெயர் நாடுகளில்"இப்படித்தாம் ஊர்வலம் நடாத்த வேண்டுமென"க் கட்டளைபோடுகிறார் கஜேந்திரன் என்ற புலிப்பினாமி எம்.பி.
இவர் யாழ்பாணத்தில் நின்று எம்.பீ.ஆனாவரென்கிறார்கள்.இவர் சொல்லும்"இப்படித்தான்"என்னது?:

1)புலிகள் மட்டும்தான் தமிழர்களது ஏகப் பிரதிநிதிகள்,
2)எமக்குத் தமிழீழம்தான் வேண்டும்,
3)யுத்தத்தை நிறுத்து


இவ் மூன்று கோசங்களோடும், புலிக்கொடிகள்,தலைவரது படங்களைக் காவி ஊர்வலுஞ் செய்ய வேண்டுமென்கிறார்.கூடவே,தாம் கடந்த 2004 இல் இருந்து இதே கோசத்தைத்தாம் உலக நாடுகளில் சமாதானம் பேசியபோது வலியுறுத்தினார்களாம் என்கிறார், T.R.T தமிழலை வானொலியில்;நேற்று முன் தினம்.அதாவது,27.02.09 அன்று.


ஆம்!இவ்வளவும் புலிகளது நலனுக்கானதென்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை!


இதுள் தமிழ்பேசும் மக்களது நலன் எது?

தமிழீழம்?


நல்லது!

கடந்த காலத்து இவ்வரசியல் இன்று வன்னியில் புலிகளைக் காடாத்தும் இந் நேரத்திலையும்,அது சரியான தெரிவாக இந்தக் கசேந்திரன் சொல்லும் அரசியலை எங்ஙனம் புரிவது?அதாவது புலிகளை அரசியல் நீக்கஞ் செய் என்பதன் உள் நோக்கங் கொண்டதாக?



ஏகப் பிரதிநித்துவமென்பதன் சாபக்கேடு,வன்னியில் மக்களைப் பலியெடுப்பதற்கு முன் கணிசமான சொந்த மக்களையே ஆயிரக்கணக்கில் உயிரோடு புதைத்தது!-"துரோகி"யெனச் சொல்லி மண்டையில் போட்டது!!இதை, இதுவரை நகர்த்தும் புலிகள் ஜனநாயகச் சூழலுக்குப் பொருத்தமற்றவர்கள் என்பதைக் கசேந்திரன் சொல்லாமற் சொல்கிறார்?இன்று,புலம்பெயர் மக்களோடு தானும் புலிப்பிரமுகராக ஒண்டியபடி ஐரோப்பாவைப் பார்க்கும் இந்த "கௌரவ எம்.பீ."க்கு பன்முகத் தன்மை,பன்மை அரசியற்போக்குகள்,கட்சி வடிவங்கள்,தேசங்களது பன்மைத்துவக் கட்சிகளது எதிர்கால நகர்வுகள் குறித்துப் புரிவது கடினமானதா?கஜேந்திரனின் மண்டை வீங்கிய பாசிச மனதுக்குப் புலிகளது பினாமியான அவரது நிலை உந்து சக்தியாக இருக்கிறது.







இது,புலிகளது சரணடைவுக்குப் பின்னான அரசியற் போக்கில் தம்மை மக்களுக்குள் நிலை நிறுத்த முனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் புலிப் பினாமிகளின் அடுத்தகட்ட அரசியலாகவிரிகிறது.தம்மைத் தமிழீழத்துக்காகவே போராடுவதாகச் சொல்லி நிலைப்படுத்தித் தமிழ்பேசுவோரைத் தொடர்ந்து ஏமாற்றிப் பிழைக்க முனையும் கபடத்தனத்தோடு முன்நிறுத்த இடப்படும் வியூகமாக-தந்திராமக நாம் கஜேந்திரனின் கூற்றுக்களை-நகர்வை இனம்காணலாம்!புலிகள் எதைச் செய்தாலும் அது தமிழர்களது நலத்துக்கானதாகவே "தமிழ்த்தேசியம்" கருத்துப் புனைகிறது.இந்நிலையில்,தமது சரணடைவைக்கூட அவர்கள் இங்ஙனம் பேச முற்படுவர்.

இந்தவகைப் புலி அரசியல்தான் இந்தத் தமிழ்ச்சனத்துக்கு விடிவு தரும்?


சரணாகதிக்குப் பூசப்படும் தமிழர் குருதி:

தமிழீழம்!,புலிகளின் தாகம் தீர்ந்து போய்த் தமிழீழத்தை 1987 ஆம் ஆண்டுச் சங்கதிக்கு ஏற்ப அரசியல் செய்யப் புலித் தலைமை தமது உயிரோடு ஆசைகொண்டுள்ளதாகச் சொல்வதற்கானவொரு யுத்தச் சுற்றிவளைப்பில், இப்பேது,இலங்கை அவர்களைக்கொணர்ந்துள்ளது.இது,இன்னொரு வகையில் "துரோகி"எனும் அவர்களது(புலிகளின்) கோசத்தை-தண்டனையை-கொலை அரசியலை,"மக்களுக்காக"அவர்களது நலனுக்காகத் தமது தலைமையின்கீழ் புதிய-காலத்தின் தேவையோடான தேசநலன் ராஜதந்திரீக முன்னெடுப்பாகச் சரணாகதியடைந்து,இலட்சம் மக்களது கொலையில் வென்றெடுக்கும் "தமிழீழத்துக்கான"புலிகளது முன்னெடுப்பாக இனி உருவாகும்!
புதுக்குடியிருப்பில்"பொட்டு அம்மானின்"நேரடி வழிகாட்டலில்-கட்டளையில் யுத்தஞ் 'சூடுபிடித்துள்ளதாக ஜீ-ரீ.வீ சொல்கிறது.அன்று,ஐ.பீ.சீ.வானொலியின்"கருணா அம்மான் இப்படிச் சொன்னார்"என்ற செய்திக்குப் பின்பான சில நாட்பொழுதில் கருணா அம்மான் துரோகியாகித் தன்னைப் புலியிலிருந்து சிங்கத்துக்கு மாற்றிக்கொண்டார்.எப்போதும், ஒப்பாரும் மிக்காரமற்ற தேசியத் தலைவரது நேரடி வழிகாட்டலில் கீழ்படிந்து போராடும் இவர்கள் முன்னிலைக்கு வருவதில் ஏதோவொரு அரசியல் சூழ்ச்சி இருக்கும்.தேசியத் தலைவருக்குக் காவடி தூக்குபவர்கள் எப்போது அவரது எடுபிடிகளைத் தூக்க ஆரம்பிக்கிறார்களோ அங்கே அடுத்த சூதாட்டம் ஆரம்பித்ததாகப் பொருள்.


இந்நிலையில்,


"மாநில சுயாட்சியும்-மத்தியில் கூட்டாட்சியும்"கனக்காணும் டக்ளஸ் தலையில் ஆயிரம் கேள்விகள்.வன்னிக்குள்ளிருந்து வரப்போகும் இன்னொரு பிள்ளையான் யார் என்பதில் அவருக்குச் சிக்கலானவொரு எதிர்காலம்.அவர் யாழ்ப்பாணத்தில் "பெரியாஸ்பத்திரி"என்ற போதான வைத்தியசாலையை ஐந்துமாடிவரை உயர்த்துகிறார்,மேலும் வீரசிங்கம் மண்டபம் ஆறுமாடிக்கு உயர்கிறது.அபிவிருத்திக்கு அபிவிருத்தியென டக்ளஸ் செய்து முடிக்கிறார்.அன்று, புலியினது கை யாழ்ப்பாணத்தில் படிந்திருந்தபோது மக்களுக்கு டக்ளசை போற்றவும் முடியவில்லை-தூற்றவும் முடியவில்லை.ஆனால்,இன்று யாழ்ப்பாணத்திலிருப்பவர்கள் டக்ளசுக்குச் சார்பான எண்ணத்தோடு இருப்பதாகவே அவர்களது குரல்கள் மேலெழுகின்றன!

இப்படியான குருதிதோய்ந்த அரசியல் நகர்வுகளுடே,பொது மன்னிப்புக்குத் தலைவணங்கித் தலைமைக் குணங்கொண்ட தானைத் தலைவர்-தேசியத்தலைவர் தமிழீழத்தைக் கைவிட்டால் தன்னைக் கொல்வதற்கு எவருக்கும் உரிமை இருப்பதாகச் சொன்னதைப் பெரிய மனது பண்ணிக் காற்றோடு கலக்க விடவேண்டுமென இனியுரைப்பார்?இதை எப்போது ஐ.பீ.சீ,ஜீ-ரீ.வீ போன்றவை செய்திகாகச் சொல்லும்?


இந்தியாவோடு பஜனை பாடப் புலிகள் ஆயுதம் தொலைத்துக் காத்திருக்கும்போது,இந்தியாவோ இன்னும் "தலைவர்" குறித்த தமிழ்ப் பெருங் குடிகளின் கேள்விக்குப் பதிலைத் தள்ளிப் போட்டபடி போக்குக் காட்டுகிறது!எனினும்,தலைவருக்குக் கருணை காட்டப்பட்டு அவரைக் கரை சேர்க்க முடிவுகள்-ஆணைகள் எட்டப்படும்!பிரபாகரனின் ஆயுளுக்குள் புலிகளின் சரணடைவு சாத்தியமே!-அடச் சீ,தமிழீழம் எண்டதன் தேய்வு இதுவா?
அதுக்காக,ஐயா ஆனந்தசங்கரி பலமாகக் காய் நகர்த்துகிறார்.இந்தியா ரொம்பத்தான் தெம்படைகிறது!"தலைவா,நீ வாழ்க மகனே-வாழ்க!நின் புண்ணியத்தால் தானைத் தலைவன் உயிர்கொண்டெழுந்தான் தரணியெங்கும் தமிழாய்!"-இப்படியும் இனிச் சொல்வார்கள் புலிகளது வால்கள்-குறிப்பாகக் கஜேந்திரன்.

புகலிடத் தமிழர்களைப் புலிகள் ஒருபுறம் தொடர்ந்து சுரண்ட மறுபுறம் இலங்கைச் சிங்கள அரசும்,இந்தியாவும் கூடவே அவர்களின் நம்பகமான கூட்டாளிகளும் மூளைச் சலவை செய்வது கண்கூடாக நடக்கிறது.வன்னியில் மக்களின் அவலத்தோடு இனியும் போராட முடியாது!தலைவர் முற்காலமும் அறிந்து சரணாகதியடைவதில் தனது இன்னுயிரைத் தமிழர்களுக்காகக் கொடுத்தாவது சரணடைவைச் செய்து,வன்னி மக்களுக்கான விடிவை வெகுவிரைவில் எட்டுவார்.இதைத் தனது ஆயுளுக்குள் அவர் கண்டாகவேண்டும்.இல்லையேல் அவர் அம்போவெனச்செத்துத் தொலைந்துபோவார்.

அப்பாவி மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பலி கொடுத்துவிட்டுக் கண்ணீரோடு அவர்களின் கல்லறையில் கட்டுண்டு அழுதபடி?...

இருந்தாலென்ன?


தத்தம் பிள்ளைகளைப் பறிகொடுத்தாலும் தமிழர்களுக்காகத் தேசியத் தலைவர் தனது பிள்ளைகளை ஆசையாய் வளர்த்துவருகிறார்.அவரது கருணைமிகு இச் செயலால்,தலைவரது குழந்தைகளை ஒவ்வொரு தமிழர்களும் தத்தமது பிள்ளைகளாகக் கண்டு மனம் மகிழ்ந்து, அவர்களது சேமத்துக்காகக் காவடி தூக்குவது குறித்து வன்னிக்குள் உருவாகும் பிள்ளையான் உத்தியோக பூர்வமாக அறிவிப்புச் செய்வார்.-இன்னொரு பொழுதில்.

இது,அவர்களுக்கு வாழ்வு பற்றிய ஓரளவு எதிர்பார்ப்பை நிறைவு செய்யும்.தேசியத் தலைவர் நிச்சியம் இதற்கு உடன்படுவார்!

அரசியல் நடத்துபவர்களுக்குத் தமது பதவி,சுகம்,பணம் இயக்கம்-கட்சி என்ற எதிர்பார்ப்பும் மக்களை அடக்கி ஆட்சி புரியும் கனவும்,இனி மேல் தேசியத் தலைவரது கருணையின் வாயிலாக ஏற்படமுடியாது!மக்களது நலனே அவர்களது நலனாக விரியும்.


இதை எப்படியும் அனுமதிப்பது மக்களது கடமை!


"இன்றைய உலக நடப்பில்,தமிழீழத்துக்கான போராட்டம் புதியதொரு பரிணாமத்தை எடுத்திருக்கிறது.முதலில்,அரசியல் ரீதீயான வெற்றியைப் பெற்று,ஒரு நிலையெடுத்தபடி அடுத்த பாய்ச்சலில் ஆயுதப்போராட்டம்-ஒரே தடைவையில் ஈழத்தை விடுவிப்பதில் நோக்கமாக-போராட்டப்பாதையைத் தீர்மானித்துத் தொடரும் என்பதைச் சொல்லிக்கொள்கிறோம்.எனவே,இதற்காகப் புலம்பெயர்ந்த மக்கள் இன்னும் அதிகமாகப் பொருளாதார உதவி செய்யவேண்டும்.மக்கள் கடந்தகாலத்துத் தேசக் கட்டுமானப் போராட்டத்தால் அனைத்தையும் இழந்துள்ளார்கள்.ஆதலால்,அவர்களுக்கு உயிர்வாழும் ஆதாரங்களை ஏற்படுத்திக்கொடுத்துக் காக்க புலம் பெயர்ந்த மக்கள் தொடர்ந்து புலிகளது இத்தகைய அரசியல் நகர்வைப் புரிந்து, உதவ வேண்டும்.அங்ஙனம் உதவுவதே தேசக்கட்டுமானத்துக்கான அடுத்தகட்ட நகர்வு!இதுவே,தமிழரது தாகமான தமிழீழத்தின் பிறப்புக்கான கருவைக் கொண்டியங்கும் என்பது யதார்த்தமாகும்."


-இது,தேசியத் தலைவரது அதியுயர்ந்த மதி நுட்பத்தால் கண்டறியப்பட்ட இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான உண்மையாகும்!



புருஷனை இழந்தவளிடம் "விதவை"யென இருப்பதையும் தட்டிப் பறிப்பது:


இன்றைய இலங்கை அரசியலில் பற்பல சக்திகளின்,வர்க்கங்களின் நலன்கள் முட்டிமோதுகின்றன.இங்கே பிராந்தியத் தரகு முதலாளித்துவ நலன்கள் ஒவ்வொரு வழிகளில் தத்தமது நலனின் பொருட்டுப் புதிய புதிய கூட்டைப் பெறுகின்றன.அவை தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சனையைத் தமக்குச் சாதகமான முறைகளில் பயன் படுத்தித் தமது நலனைப் பெறத் துடிக்கின்றன.புலிகள் தமது தவறுகளை மேலே சொல்லப்பட்ட மிக மலினப்பட்ட வார்த்தைகளோடு நியாயப்படுத்துவார்கள்.இதற்காகத் தாம் செய்த ஆயிரக்கணக்கான"துரோகி"இரகக் கொலைகளை அவர்கள் மிகவும் சாதுரியமாகத்"துரோகம்"எனும் அரசியலோடு ஒப்பேற்றி விடுவார்கள்.ஒருகட்டத்தில் "துரோகமாக"அவர்கள் சொன்னதைத் தாமே செய்யும்போது அஃது,தியாகமாகும்!

அன்றாட வாழ்வில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அராஜகச் சூழலை-இயக்கப் பயங்கரவாதத்தை,புலிகளின் தனிகாட்டு ராஜாங்கத்தை,மற்றைய ஆயுதக் குழுக்களின் அட்டகாசத்தைப் பாரிய அளவில் தூண்டிவிட்டுச் சிங்கள அரசு தமிழ் மக்களின் உண்மையான பிரச்சனையை நீற்றுப்போக வைத்துள்ளது.இன்றைய உடனடிப் பிரச்சனையானது இனப்பிரச்சனையல்ல,சுயநிர்ணயப் பிரச்சனையல்ல. மாறாக, புலிகளின் அடக்குமுறையே தமிழ் மக்களின் பிரச்சனையென்று உலகத்துக்குக் காட்டும் இராஜதந்திரத்தில் இந்தியாவும்,இலங்கையும் வெற்றி பெற்றுப் புலிகளது சரணடைவுவரை "ஈழப் போராட்டம்"வந்துள்ளது.இதற்காக இலட்சம் பேர்கள் செத்தவர்கள், செத்தவர்களே!சுனாமியை எண்ணிக்கொள்ளவும்.

வடக்கும் கிழக்கும் தமிழரின் தாயகமென்ற கோட்பாட்டை எப்பவும் நிராகரித்த இலங்கையின் ,இந்தியாவின் ,அமெரிக்காவின் விருப்பமானது தமிழ் மக்களைப் பிரதேசவாரியகப் பிரித்தெடுத்துவிட்டது.ஒவ்வொரு தமிழ் மாவட்டங்களிலும் பற்பல ஏற்ற தாழ்வுகள் உண்டு.தமிழ்ச் சமுதாயத்தில் பாரிய பிளவுகள் சாதியாகவும்,பிரதேச ரீதியாகவும் நிலவுகிறது.அதைப் பெரும்பாலும் சரிவரப் பயன்படுத்தும் இந்தியாவின் இராஜதந்திரமானது முதல் தடவையாகப் புலிகளின் படையணியைப் பிரித்தெடுத்து இதை வலுவாகச் சாதித்துள்ளது.இந்த வெற்றியானது இன்று புலிகளின் இயக்க நலனை பாரிய முறையில் சிதைத்து அவர்களை வெறும் குறுங்குழுவாக்கும் தந்திரத்தைக் கொண்டு யுத்த்தின் மூலம் அவர்களைச் சரணாகதிக்குத் தள்ளியுள்ளது!

இலங்கையில் தனது இராஜதந்திரத்தை வெகுவாகக் கடைப்பிடிக்க முனையும் இந்தியா, வருங்காலங்களில் இந்தப் பிரச்சனையைத் தூண்டி வளர்த்தெடுத்துக் காய் நகர்த்தும்.தமிழ் பேசும் மக்களின் அடிப்படையான பிரச்சனையை முற்றுமுழுதாகப் புதைத்துவிடும் அரசியல் காய் நகர்த்தலே இனிமேல் வலுவடையும்.அதற்காக இந்த இனப் பிரச்சனை இன்னும் இழுத்தடிப்புக்குள் கொண்டு செல்லப்பட்டு வருடங்கள் பல கடக்கப்படலாம்.இப்படிக் காலம் கடக்கும்போது புலிகளின் மறைவு நிச்சியமாகும்.இன்றைய சூழலில் மங்கு காலத்தில் இருக்கும் புலிகளின் அமைப்பாண்மை வன்னியுத்தத்தில் சரணடைவாக உருவாகிறது.இதைக்கடந்த அவர்களுக்கு வாழ்வு இனியில்லை!

இதைத் தடுப்பதற்கான புலிகளின் எந்த இராஜதந்திரமும் உலக அரங்கில் செல்லுபடியாகாது. "வன்னிப் போரைத் தமக்குச் சாதகமாக்கி,அதை உடைத்து முற்றுகையைத் துண்டித்துத் தம்மை மீளவும் பழைய நிலைகளுக்குள் திணித்துச் சிங்கள இராணுவத்தை வெற்றிகொள்ளும் திரணியற்றச் சரணடைவு" என்பதை வரலாற்றில் எழுதப்படும் "சொல்-செயல்" எதுவாக இருக்கும்?


தோழர் இரயாகரன் சொல்வதுபோல்,மக்களைப் பாதுகாப்பாக இடம்பெயர வைத்துவிட்டுத் தமது அமைப்பாண்மையையும்,படையணியின் உளவியலையும் தெம்படைய வைப்பதற்குப் புலிகளுக்கு அவசியமாகும் முற்றுகை உடைப்புப் போர் இனிமேல் தொடராது போகலாம் .ஆனால்,இந்த உபாயம் அவர்களின் தற்கொலைக்கு வழி சமைப்பதில் முடியும்.எனவே இந்த வழியும் இறுக மூடிக்கிடக்கும்போது அவர்களிடம் துரோகச் சரணடைவு எனும் நிலை மட்டுமே மிஞ்சிக்கிடக்கிறது.

இந்த இறுக்கமான சூழலானது புலிகளின் இயக்க நலனை முதன்மைப் படுத்தும் எந்தக் காய் நகர்வையும் அவர்களுக்குச் சாதகமாக்கமுடியாது போகும்.இதைப் புலிகளின் பின்னாலுள்ள அவர்களது எஜமானர்கள் நன்றாக உணரத்தலைப்பட்டுள்னர்.எனவே,பிரபாகரனது சரணடைவை அவர்கள் கோரியபடி,பிரபாகரனுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கும் கருணையைக் காட்டும் அரசியலில் இந்தியாவிடம் மடிப் பிச்சை எடுக்கின்றார்கள்.இந்தியா இதற்கானவொரு பதிலை ஏலவே தயாரித்து வைத்திருப்பதால் தேசியத்தலைவர் இயற்கை மரணம் அடையும்வரை உயிரோடு இருப்பார்.அவர் பறித்த"துரோக"இரகப் பிசாசுகளால் அவருக்கு ஆபத்து இருக்குமே தவிர இனி இலங்கையால்-இந்தியாவால் அவருக்கு ஆபத்தில்லை!

அப்பாவி மக்கள் மீளவும் கொட்டாவி விட்டு,இவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டியதுதான்.

இதுதான் புலி அரசியல் தந்திரம்-தேசியத் தலைவரது மதி நுட்பம்!

இதை மீறிய வாழ்வு தமிழ் பேசும் மக்களுக்கு இனி வருவது பகற்கனவே!

மாநிலமும் இல்லை,தமிழீழமும் இல்லை!மாறாக, மாகாணமென்பதே இந்தியாவினதும்,அமெரிக்காவினதும் விருப்பாகும்.இங்கே, இதைச் சாதிக்க சிங்கக் கொடிகளுடன் தமிழ்க் கூலிகள் தயாராகி வருகிறார்கள்.புலிகளும் தமது கூலியை சரணடைவுக்கூடாகப் பெற்று தமது வாலை இந்தியாவுக்கு-இலங்கைக்கு மற்றும் மேற்குலகுக்கு ஆட்டுவதில் கரிசனை காட்டுவதால் இனிவரும் காலம் இந்தியாவுக்கே வெற்றியைத் தேடித் தரும்.

இதுவே பூகோள அரசியலின் விதி.

இதைத்தாண்டி மேற்குல எஜமானர்கள் புலிகளுக்கு விமோசனமிட முடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்
01.03.2009

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...