Wednesday, May 14, 2008

மகெஸ்வரி வேலாயுதம் மற்றும் கொலைகளும்!

பாசிசத்தின் உச்சக்கட்டம் இலங்கைத் தீவெங்கும்...


நேற்றுப் படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரி வேலாயுதம் போன்று பல்லாயிரம் உயிர்கள் "தேசிய விடுதலையின்"-இலங்கைத் தேசத்தின் பாதுகாப்பின் பெயரால் அந்நிய நலன்களுக்காக இலங்கையரசாலும் ஆயுததாரித் தமிழ் குழுக்களாலும் பறிக்கப்பட்டுவருவது மக்களின் எதிர்கால வாழ்வைக் கேள்விக்குறியாக்குகிறது! இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டினது "அரசியல் தீர்வு" எவ்வளவு நடத்தைகெட்ட ஆளும் வர்கத்தால் தமது இருப்புக்காக இழுத்தடிக்கப்பட்டு வருவதும் அதன் வாயிலாகக் கொலைகள் அரசியலாக மாற்றப்பட்டதென்பதை நாம் உணரும்போது,உண்மையில் தமிழ்பேசும் மக்களோ அல்லது சிங்களம் பேசும் மக்களோ இலங்கையில் எதுவித உரிமையுமற்ற மக்கள் கூட்டமாக மாற்றப்பட்டு, குடிசார் சமூகத்துக்குரிய அனைத்துப் பண்புகளையும் இழந்து வருகிறார்கள்.


இந்த நிலையில் நடந்தேறுகிற அரசியல் கொலைகள் நமது மக்களின் உண்மையான விடுதலையைக் கொச்சைப்படுத்தும் பாரிய சதியுடன் நடந்தேறுகிறது!தினமும் கொல்லப்படும் மனித உயிருக்கு விடுதலையின் பெயரால் "துரோகி"எனும் பட்டம் கொடுக்கப்படுகிறது.பாசிசத்தின் உச்சக்கட்டம் இலங்கைத் தீவெங்கும் படர்ந்து மனித இனத்தின் மகத்துவத்தையே வெறும் இனவாத-தேசியவாதப் புனைவுகளுக்குள் குறுக்கித்"தேசத் துரோகி"எனும் கருத்தாக்கத்தைத் திணிக்கிறது.இதை எந்த முறையிலும் தக்க வைப்பதற்காக எவரையும் "துரோகியாக்கும்"அரசியல் சூழ்ச்சியை இலங்கையரசும் அதைச் சுற்றி நக்கிப் பிழைக்கும் தமிழ் கட்சி-ஆயுததாரிகளும் நடாத்தி வருவதை இன்னும் உச்சத்தில் இனங்காண்பதாக இருப்பின் அது புலிகளின் அழிப்பு யுத்தத்தில் மிக இலகுவாக இனம் காணத்தக்கது!எத்தனை அரசியல் வாதிகளை மற்றும் சமூக நலத் தொண்டர்களை-கல்வியாளர்களை இந்த அரசியல் நடத்தை கொன்று குவித்துள்ளது!இனிமேலும் தொடரும் இந்த அரசியல் தந்திரம் தன்னை இனம் காட்டும் "தேசிய விடுதலை" மற்றும் சுயநிர்ணயவுரிமை என்பதலெல்லாம் வெறும் வெற்றுக் கோஷம் என்பதற்கு மேற்காணும் கொலைகள் சாட்சி.

கெடுதியான காலத்துக்குள் தமிழ்ச் சமூகம் மூழ்கியுள்ளது.இந்தச் சமுதாயமானது எந்தவொரு தர்க்க நியாயத்துக்கும் இடம் கொடுக்காது தன்னைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.இதன் எந்த நகர்வும் அறிவார்ந்த மக்கள் பிரிவால் அங்கீகரிக்க முடியாதவொரு இடர் நிறைந்த,முட்டுக்கட்டையிடும் செயலூக்கமாக மாற்றப்படுகிறது.



இங்கே பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும் அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு 'அரசியல்'செய்கின்றன.இந்த மக்கள் நலன் மறுத்த குழுக்கள் தமக்குள் முட்டிமோதும் 'அரசியல் இலாபத்துக்குள்'மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்து தமிழ் மக்கள் சமுதாயத்தைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கிறது. எந்தக் காரணத்தையும் கொலைகளுக்குச் சொல்ல முடியாது.

மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 'மக்களை'மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிகத் தயாராகிறது.இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.


மொழிக்காக,இனத்துக்காக,தேசத்துக்காக 'உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு'எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டே மனித ஆளுமையைக் காவு கொள்கிறது.இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற 'வர்க்க'அரசியலானது மண்ணையும்,மொழியையும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு மனித விழுமியத்தை ஒருநாளும் முதன்மைப் படுத்துவதில்லை.இது இந்தச் சிந்தனையை உயர்வாகவெண்ணுவதுமில்லை.வடிவமைக்கப்பட்ட நெகிழ்வுத் தன்மையற்ற ஒரு மனிதவடிவைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கும் இந்தத் 'தேசிய' அனுமானங்கள் மக்களின் உரிமைகளின் எல்லையில் தனது வலுக்கரத்தைப் பதிக்கிறபோது அங்கு அராஜகத்துக்கான முளை முகிழ்க்கிறது.இது எதனை முதன்மைப் படுத்த முனைகிறதென்ற புரிதலற்ற சாதாரணக் குடிமக்கள் தமது வாழ்வாதாரத்தைத் தொலைப்பதற்கானவொரு சூழலை, இங்ஙனம் இழப்பதைக்கூட ஒரு கட்டத்தில் 'வடிவ மனிதர்களாகி'பற்பல கதைகளைப் பேசிக்கொள்ளும் தியாகியாக(ஆற்றலுற்ற மனிதவுறுதி) மாறிப் போகிறார்கள்.இந்த ஆற்றலைப் பிழிந்தெடுக்கக் காத்திருக்கும் அதிகாரத்துவத்தின் கனவானது அந்தத் திசையை மிக ஆழமாகப் புரிந்து கொண்டு மக்களின் -இனத்தின் புற வாழ்வைப் பற்றியவொரு 'பொற்காலக் கற்பனைகளைத்'தயாhப்படுத்திக் கைவசம் வைத்துக் கொள்கிறது. இது மனித இயக்கத்தையே கட்டுப்படுத்தும் அல்லது அவர்களது சிந்தனையைப் பிம்பங்களின்(தேசம்,தேசியம்,இனம்,பண்பாடு,மொழி) பண்புக்கமையத் தயார்ப்படுத்தும் கருத்தியல் மனதை அவர்களிடம் தோற்றுகிறது.உண்மையான 'இருப்பானது'நிசத்தில் அழிக்கப்பட்டபின் எஞ்சுவது சுமைகாவும் ஒரு ஜந்திரமே,இந்த ஜந்திரமானது பல வர்ணக் கனவுகளோடு,பெருமிதங்களோடு உயிர் வாழக் கற்றுக் கொண்ட சூழலுக்குள் வந்துவிடும்போது இதன் 'வியாபித்த'மனிதமற்ற சமூகப்பங்களிப்பானது 'வர்க்க'அரசியலுக்கும் அதன் மிதமான எதிர் பார்ப்புகளுக்கும் எந்தப் பங்கமும் விளைவிக்காத பாதகமற்ற சமூக நிர்ணயத்தைக் உள்வாங்கிக் கொள்கிறது.


இங்கே எது நடந்தாலும்'தப்பித்தல்'சாத்தியமாகிறது.அல்லது ஏலவே 'தீர்மானிக்கப்பட்ட'அனுமானங்களுக்காகச் சகிப்புத் தன்மையை(ஜால்றா)மனமுவந்து ஏற்றுக் கொள்கிறது.இது புத்திஜீவிகளிடம் மிகுதியாகக் காணக்கூடியது.எது நடந்தாலும் இந்த மனம் மௌனித்துக்கிடக்கிறது.அல்லதுகவனத்தைத் திசை திருப்பி வேறுபக்கம் தன் ஆற்றலைத் திருப்புகிறது.இதுதாம் நடப்புப் பிரச்சனைகளைப் புறந்தள்ளிவிட்டு உலகக் கலைகளையும்,அவர்களின் உன்னதங்களையும் பேசுகிறது.தன்வீட்டில் சாக்கடை வழிந்து உட்புகப் போகும்போதுகூட இவர்கள் மாற்றானின் மகிமை பேசுவார்கள்.கிட்லார் காலத்தில் கூட அறிஞர்கள் இவ்வளவு கேவலமாகக் காயடிக்கப்படவில்லை. அந்தக்காலத்தில் ஐயன் ஸ்ரையின்(Albert EINSTEIN)
இப்படிக் கூறுகிறான்:


>>Die Welt ist
viel zu gefaehrlich,
um darin zu leben-
nicht wegen
der Menschen,
die Boeses tun,
sondern wegen
der Menschen,
die daneben stehen und
sie gewaehren lassen.<< -Albert EINSTEIN



"இவ்வுலகமானது
ரொம்ப அபாயகரமானது,
அதற்குள் வாழ்வதற்கு-
இந்நிலை
மனிதர்களாலோ,
போக்கிரிகளாலோ அல்ல,
மாறாக,
மனிதர்கள்
அருகினிலிருந்து
அவர்களை அநுமதித்து விடுவதாலேயே." -அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்





நம்ம சமூகத்தில் இன்று நிகழும் 'வன் கொடுமைகளை'இந்த ஸ்த்தானத்தில் இருக்கும் மனிதவுள்ளத்திடம் ஆப்பு வைத்தும் எடுத்துரைக்க முடியாது.இந்த வன்கொடுமை தவிர்க்க முடியாத 'அத்துமீறிய'அறமாகப் பண்பாக எடுத்துரைக்கக் காத்திருக்கும் இந்த மனித மனம்.



இன நலனுக்குக்காக எதுவும் செய்யலாம் எனும் ஒரு 'மொன்னைப் பேச்சு'அறிவுத்தளத்தைக் காவுகொண்ட பின் இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது.இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும்.சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது.இத்தகைய சந்தர்ப்பத்தில் மனிதவுயிருக்கான பெறுமானம் வெறும் அடியாட்படைக்குரிய பெறுமானமாகவும், தமது அரசியலுக்கு உடந்தையான மந்தைக் கூட்டமாகவே பயன்படுத்தப்படுகிறது!எனவே இன்னும் பல நூறு கொலைகளை இந்தத் தமிழ்ச் சமுதாயம் "தேசியவிடுதலை-தனிநாட்டுக்"கனவோடு "துரோகி"என்று அங்கீகரித்துக் கொலைகளை நியாப்படுத்தித் தொடர்ந்து கொலைகளையே செய்து வரும்.மக்களின் வாழ்வென்பது பாசிஸ்டுக்களிடம் மண்டியிடுவதாகவே இருக்கப் போகிறது.
ப.வி.ஸ்ரீரங்கன்
14.05.2008

Monday, May 12, 2008

உளமொடு ஊனும் நோக உனக்கெனப் பணிந்தேன் அன்று


எந்தையும்
தாயும் எனத் தொடர...


"இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்"
இன்னமுமே புரியா இது அத்தான்-ஆசான் தாயுமாகி
இன்னதெனக் கூறுவதற்குள் இதயமொடு சமரசஞ் செய்யுந் தருணத்தில்
இதுதானோ உற்றார்க்கு உடம்பு மிகை, பிறப்பு அறுக்கல்?

காற்றே கவிந்திருக்கும் கருமுகில் அறுத்து
காவிச் செல்லு என் கண்ணீரை
கட்புலம் நோகிய நினைவொடு நெஞ்சு
அத்தானாய் வந்தாய் ஆசானாய் இருந்தாய்

தந்தையுமாகி நின்று
தமிழ் செய்யும் எனது மனதில்
நிலைத்தாய் தாயுமாகி தாங்கொணாத் தவிப்பு
தர்க்கத்துள் நிலைக்காத உறவில்

என்னத்தைச் சொல்ல?எத்தனையோ பகைகொண்டேன்!
பக்குவமாய் உறவுறுந் தருணமொன்றிற்காய் நாம் காத்திருக்க
காற்றிடையுறவுண்டாய் கவிதையானது உனது நினைவு
நெருப்பிடும் கணத்திலும் நின் பெருமிதம் எனது நினைவாய்

தளையறு வாதத்திலும் தவப் பெரும் தர்க்கத்திலும்
தமிழாய்ச் சொல்லும் உணர்வினுடு தவித்தவொரு வாழ்வும்
போரிடை அன்ன தன் புதல்வச் சுற்றமும் சுற்றப்
பொருவில் மேருவும்,பொரு அரும் வாழ்வு புக்கான்

நிலவொடு வானம் பொருந்தும்?
முகிலொடு பொழிவு நள்ளும்
புகழ்தரும் பொலிவும் அமிழ்தின் அகமும்
அந்தமிலா அமைதிகொள்ள வாயிடை மொழியுமானாய்

தக்கதே செய் என்பாய்
தகமையாய் வளர்க என்பாய்
தாயினும் மேலாய் இருந்தாய்
தந்தையே எனக்கும் ஆனாய்!

இன்றோ என் சொல்லுக்குச் சுகமுமில்லை
நீ இல்லா நினைவுக்கு உருவமுமில்லை
கனத்த உணர்வினுள் கண்ணீரொடு மோதும் நான்
கண்ட மாத்திரத்தில் நீ காலமுமானாய்?

மாமுனி மனையோடு மருவிய கால வெளியொன்றில்
விழி எறிந்து வரவுக்காய் நான் மிதந்த பால்யம்
பக்குவமாய் பொத்திய புதுவுணர்வுக்கு நீ உறவென்றாய்
உளமொடு ஊனும் நோக உனக்கெனப் பணிந்தேன் அன்று

மைத்துனர் முறைமையால் மனதுடைந்து
மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம்
நேற்றைய நினைவுமுறிக்க
நீ நெடுந்தொலைவில் நிற்கக் கண்டேன்!

"கெட்டேம் இதுஎம் நிலை என்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகுபவர் சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிது இகழ்ந்து ஆற்றவும்
எட்டவந்து ஓர் இடத்து ஏகி நிற்பவே"என்பதும் அறிவாய்

இற்றையில் வெம்பி வெந்தழுது வீங்கி நிற்கும்
நினைவுடை நெஞ்சுகொண்டேன்
உற்றது உறவென்பாய் அற்றது அறமுமின்றி
அழிவது இயல்பென்பாய், அர்த்தமும் ஆசானாய் ஆனவனே!

முற்றத்து வாழை குலையீந்த
முத்தனும் பெண்டிரும் கூத்தாட
மெத்தமும் நித்தம் இது தொடர
அந்தமும் ஆதியும் பொய்த்திருக்க

எந்தையும் தாயும் எனத் தொடர
சிந்தையில் சிறப்புடை சேர்த்த நினைவிடை
நெஞ்சறி நன்றி நானுரைக்க-என்
இதயத்துள் எங்கோ நிறைந்திருப்பாய்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
13.05.2008

Wednesday, May 07, 2008

ஞானம் மற்றும் பிள்ளையான்:கிழக்கின் மாற்றுச் சக்திகள்?

பாரீஸ் பங்களா கிழக்கிலங்கைக்கு ஜனநாயகத்தைச் சொல்கிறது!


இலங்கை அரச ஆதிக்கமானது தமிழர்களின் தாயகமான வடக்குக் கிழக்கைத் தனித்தனியாகப் பிரிப்பதற்கு பல முனைகளில் போராடி வெற்றியை அறுவடை செய்யும் தருணமாகக் கிழக்கில் தேர்தல் நடைபெறுகிறது.ஈழப்போராட்டமெனப் புலிகள் யுத்தஞ்செய்து இலட்சம் மக்களைக் கொன்றுதள்ளித் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தைத் துண்டாடிய நிலையில், யாழ்ப்பாணம்-வடக்குச் சிங்கள ஆதிகத்துள் வீழ்ந்தபின் கிழக்கு முதல் மன்னார்வரை ஒவ்வொன்றாகச் சிங்கள ஆதிக்கத்துள் வீழ்ந்து வருகிறது!புலிகள் ஈழத்தை கடந்த 25 வருடமாக விடுவிப்பதன் அழகு இந்த இலட்சணத்தில்...இன்று,கருணாவின் பிளவுக்குப் பின்பான கிழக்கிலிருந்து வெருட்டியடிக்கப்பட்ட புலிகள் கிளிநொச்சிக்குள் மரணப்பொறிக்குள் சிக்குண்டபின் கிழக்கில் தேர்தல் வேட்டை சூடுபிடிக்கிறது!



இலங்கையின் வடக்குக் கிழக்கில் மக்கள் படும் வேதனையும் துன்பத்தையும் கேவலமான முறையில் மறைத்தொதுக்கும் ஒரு அரசியலானது இன்று கோலாச்சுகிறது.இதைத்தான்ஆனந்தசங்கரி-டக்ளஸ் முதல் இந்தப் பிள்ளையான்-கருணா மற்றும் சின்னமாஷ்டர் என்ற ஞானம் வகையாறாக்களின் அரசியலும் தனிநபர் தேவைகளும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தமக்குள் பிரதிபலிப்பதைக் காட்டிக்கொள்கிறார்கள். விடுதலையின் பெயரால்,ஈழத்தின் பெயரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வருஷமொன்றுக்குச் சமூகவிரோதிகளாகக் கொல்லப்படுகிறார்கள்.இவர்களை எந்தச் சமூக ஒழுங்கு விரோதிகளாக்குகிறது?சிங்கள அரசியலை இனவாத அரசியலாக மாற்றமுறவைத்த மேட்டுக்குடித் தமிழரின் பொருளியல் நலன்கள் இப்போது அந்த அரசியலைத் தமிழருக்குள் திணிக்கிறது.ஒருபுறம் சிங்களப்பாசிசமும்,மறுபுறம் தமிழ்ப் பாசிசமும் ஒரே பாதையில் இப்போது கூடுகின்றன-கைகுலுக்குகின்றன.அழிவு மக்களுக்குத்தான்!தமிழர்கள் ஜனநாயத்தைச் சுவாசித்தவர்களில்லை.எந்தவொரு சூழலிலும் எவரிடமும் தங்கி,அடிமைகளாய்கிடக்குமொரு கூட்டமாகவே வாழ்ந்தவர்கள்.சாதியின் பெயரால் அடக்கிவைக்கப்பட்டுக் கொத்தடிமையாக வாழ்ந்தவொரு இனக் குழுவிடம் ஒருபெரும் புரட்சி திடீரெனப் பத்திவிட முடியாது.இந்த மக்கள் கூட்டத்தைத் தமது தேவைக்கான அரசியலுக்கு எவர்வேண்டுமானாலும் பலியாக்கலாம்.அதைத் தமிழின் பெயரால் புலிகளும்,பிரதேசவாதத்தின் பெயரால்,தலித்தின் பெயரால் இந்தக் கேவலாமான சுயநலமிகளும் இதுவரை பல மக்கள்விரோத அரசியல் செய்து வருகிறார்கள்.இவர்கள் எமது வாழ்வின் அனைத்து விஷயங்களையும் இப்போது குத்தகைக்கு எடுத்துவிடுவதில் உலகெங்கும் மூச்சோடு போரிட்டு வருகிறார்கள். வெளிநாடுகளிலிருந்து உல்லாசமாக இலங்கை போய்த் திரும்பும் இவர்கள்தான் அங்குள்ள மக்களைப் போராட அறைகூவல் விடுகிறார்கள்;பாரீஸ் பங்களா கிழக்கிலங்கைக்கு ஜனநாயகத்தைச் சொல்கிறது!



வடக்கிடம் இருந்து கிழக்கைப் பிரித்த,இந்திய-அமெரிக்க நலனுகுகந்த அரசியலை முன்னெடுக்கும் இந்தக் கேடுகெட்ட மக்கள்விரோதிகளுக்கு இலங்கை மற்றும் உலக ஏகாதிபத்தியமும் கணிசமான முறைகளில் நிதியாதாரங்களைக் கொடுப்பதால் இத்தகைய ஞானம்-குமாரதுரைப் பெருச்சாளிகள் தமக்கான அரசியலை மக்களுக்குப் புலிகளைப்போலவே துரோகமிழைப்பதற்கான தெரிவாக முன்வைக்கின்றார்கள்.இது அவர்களினது எஜமானர்களின் கட்டளையே.அதைக் கடுகளவும் மீறாது செவ்வனவே செய்து முடிப்பதற்கான தேர்வாகக் கிழக்குக்கான தேர்தல் முன்னரங்குக்கு வருகிறது.இதையும் மக்களின்பேரால்,மக்களது ஜனநாயக வாழ்வுக்கானதாகவே பிரச்சாரமிட்டு அந்த மக்களைக் கெடுத்து வாழ முனையும் இத்தகைய அரசியலை இவர்கள் மக்களின் பிணங்கள்மீது நின்று செய்து முடிக்கிறார்கள்.


ஈழவிடுதலையென்ற போர்வையில் யார்மீதும் சவாரிசெய்த அரசியலானது இன்று எந்தவொரு மனிதரையும் துப்பாக்கிக்குண்டுகளுக்கோ அல்லது எதன் பெயராலோ கொல்லுகிறது.இந்தப்படு பயங்கரமான அரசியல் வாழ்வில் அவதியுறும் மக்களை எந்தக் கவனமுமின்றிச் சில,பல மனிதர்கள் தங்கள் வக்கிரக் கண்ணோட்டத்தோட யாருக்காகவோ வாலாட்டுகிறார்கள்.இத்தகைய மனித்துவமற்ற மக்கள் கூட்டமானது உலகத்தின் எந்த மூலையிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே அற்பத்தனங்களுக்கு அடியெடுத்துக் கொடுப்பதில் தன்னை முன்னிலைப் படுத்திவிடுகிறது. இதுதான் இன்றைய அவலமான சமூகஉளவியல்!எந்தப் பித்தாலாட்டமும் நியாயத்துக்கான இருப்பை அசைத்துவிடுமானால் ...வளர்க்கின்ற மனிதநாகரீகமானது இந்தப் பிழைப்புவாத ஆயுததாரிகளின் உளப்பெருக்காகவே சமூகத்தில் வேர்எறிகிறது!இத்தகையவொரு உளவியல் போக்காக்கானது தான் வாழும் சமூகத்தில் அனைத்து விஷயங்களையும் எதன் பெயராலும் காவுகொடுத்துவிடும்.இன்று நம்மிடமுள்ள சமூக விழிப்புணர்வு எங்ஙனம் ஆயுத அமைப்புகளினது அதியுயர் பொய்ப் பரப்புரைகளால் காவுகொள்ளப்பட்டதோ அதையே மனிதர்கள்-தமிழர்கள் தமது விடுதலைக்கான கோஷமாகப் பம்மிக்கொள்வதில் முடிந்துள்ளது.இங்கே தமிழ் மக்களின் அனைத்து வளமும் ஒரு சில குடும்பங்களின் தேவைகளுக்காகத் தியாகத்தின் மறு அவதாரமாக்கப்பட்டுவிட்டென.இதற்குப் புலிகளும் உமா மகேஸ்வரனுமே முன்னோடிகள்!


இந்த இருள்சூழ்ந்த யுத்த அரசியல் அவலத்தைத் தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் தமிழ் அரசியல் கிரிமனல்கள்(ஞானம்-பிள்ளையான் போலவே அனைத்து ஆயுதக்குழுக்குழுக்களும்-புலிஉட்டபட,ஆனந்தசங்கரிமாமா உட்படக் கிரிமனல்களே)"கிழக்குக்கு ஜனநாயகம்"என்றும்,அதைத் தத்தமது தேவைக்கேற்றவாறு அரசியல் விடையமாகக் குறுக்கி அரசியல் செய்வது,"எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம்"என்பதுபோல் இருக்கிறது. அப்பாவி மக்கள் கிழக்கிலும் வடக்கிலும் அழிவுயுத்தால் தமது வாழ்விருப்பிடங்களையிழந்து,உயிரையிழந்து-உடமைகளையிழந்து,அகதிகளாக இடம்பெயர்ந்து வாழும்போது-அவர்களுக்கெந்த உதிவிகளையும் செய்யமுடியாத போக்கிரி இயக்கங்கள்-குழுக்கள்-கட்சிகள் அந்நியத் தேசங்களிடும் நிதியைப் பங்கீடுசெய்து தமது பணப்பெட்டிக்குள் திணிக்கப்படும்பாடோ பெரும்ஜனநபயத்துக்கான போராகத் தேர்தலாகக் கிழக்கில் விரிந்துள்ளது.உண்மையில் இத்தகைய நரித்தனமான மனிதர்கள்(ஞானம்-பிள்ளையான்) திட்டமிட்டுத் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளோடு விளையாடுகிறார்கள்.இவர்கள் அந்நியச் சக்திகளின் நலனுக்காக வளர்தெடுக்கப்பட்டு வேட்டைக்கு அனுப்பப்பட்ட வேட்டை நாய்கள்.இவர்களிடம் பொதிந்திருக்கும் மக்கள் நலன்கள் என்ற கபடம் நிறைந்த விய+கங்கள் முற்றிலும் ஆதிக்க சக்திகளின் ஆர்வங்களின் மிகப் பெரும் தந்திரோபாயத்துடன் சம்பந்தப்பட்டது.இதை மக்கள் புரியதிருக்கவே "புலிப் பாசிசத்தின்" அனைத்துப் பரிமாணங்களும் நம் முன் கொட்டப்பட்டு,ஊதிப் பெருக்கப்படுகிறது.புலிகளினது நலத்தோடு பின்னிப் பிணைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் தேசிய இன முரண்பாடானது புலிகளைச் சிதைப்பதால் தோற்கடிக்கப்பட்டுவிடுமென்பது இல்லை.இது அந்நிய சக்திகளுக்குத் தெரியும்.இத்தகையவொரு புற நிலை யதார்த்தமே இவர்களுக்கு அவசியமாக இருப்பதால், இந்த முரண்பாடுகள் இன்னொன்றின் மூலவ+ற்றுக்குக் காரணமாக இருப்பதற்கான இன்னொரு தளத்தை உருவாக்குவதில் இலக்கைக் கொண்டிருக்கிறது.இதன் நீட்சியே கிழக்கைப் பிரித்து அதற்கான மாகாண ஆட்சி-தேர்தல்-முதல்வர் என்ற அரசியல்!


தமிழரின் குருதியில் கும்மாளமடித்த காலங்களையெல்லாம் மறந்து- அவர்தம் கொஞ்சநஞ்ச பொருளாதாரவலுவையும் உங்கள் தேவைக்கேற்றவாறு காசாக்கிய கயமையை மறைத்து,இப்போது கிழக்குத் தேர்தலில்-மாகாண ஆட்சியில் பன்முகத்துவ கட்சிகளின் பங்கை வலியுறுத்தும் நீங்கள், மக்களின் உயிர்வாழ்வின் அதிமுக்கியமான வாழ்விடங்களைச் சிங்களஆதிக்க ஜந்திரம் அதியுச்சப்பாதுகாப்பு வலையமாக்கி, இராணுவச் சூனியப் பிரதேசமாக்கிவைத்துள்ள அவலத்தைப்பற்றி பேசாது-கிழக்குக்கு ஜனநாயகம்,மாகாண ஆட்சி,தனிப்பிரதேசமெனக் கருத்தாடுவது நியாயமா?மக்களைக் குழப்பியெடுக்கும் காரியத்தில் தமிழர் நலனை மறுக்கும் சக்திகள் முயல்வது நமது சாபக்கேடா?பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும்தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.தமிழர்களை இராணுவத்தோடு சேர்ந்தழித்த ஈ.பி.ஆர்.எல:எப், ஈ.பி.டி.பி. புளோட் மற்றும் கருணா-பிள்ளையான் கும்பல்கள் ஒரு புறமாகவும்,புலிகள் ஒருபுறமாகவும் தமிழ்மக்களுக்கான விடுதலை-உரிமையெனக்கூறி பைத்தியகாரத்தனமாகக் கருத்தாடி நம்மக்களைக் கேவலமாகச் சுரண்டிக்கொள்ள முனைதல,; மிகக் கேவலமானதாகும். இந்தப் பிழைப்புவாதக் கிரிமினற் கும்பல்கள் இப்போது மக்களிடம் கொள்ளையிட்ட பணதிலும்-அன்நிய நாடுகள் கொடுத்த பணத்திலும் புதிய புதிய ஆயுதகக் குழுக்களை உருவாக்கியும்-கட்சிகளைக் கட்டியும் மக்களிள் உரிமைகளுக்கு வேட்டு வைக்கும் காரிமானது மன்னிக்கமுடியாதது!இது, நமது மக்களை அன்நியச் சக்தியிடம் பேரம்பேசி விற்றுப் பிழைப்பு நடத்தும் அரசியலாகும்.இங்கே,பாசிசச் சிங்கள அரசின் இராஜதந்திரத்துக்கு இந்தப் பிழைப்புவாதத் தமிழ் தலைமைகள் பாதையிட்டுக் கொடுக்கிறார்கள்.இந்தப் பாதையெங்கணும் தமிழரின் உடல்கள் அழுகி நாறுகிறது!பாசிசமென்பது ஒரு கொடிய நோய்!அது சில அதிகாரத்துவ ஆணவத் தலைமைகளை உருவாக்குவதுமட்டுமல்ல,முழு மக்களையும் அடிமை கொள்கிறது.இன்று இலங்கையெங்கணும் இதுவே தலைவிதியாக...


நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, சிங்களப் பாசிச அரசுக்கு-அன்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை பன்முகக் கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடிக்கத் தயாராகியபடி.இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை தமிழரின் பிரமுகர்களாகவும்-தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம் கட்டுகிறார்கள்.கிழக்குக்குப் பிள்ளையானோ அல்லது கருணாவோ இல்லை டக்ளஸ் தேவாநந்தனனோ, ஆனந்த சங்கரியோ பிரபாகரனுக்கு மாற்றான மக்கள் சார்ந்த அரசியலைத் தரப்போவதில்லை! இவர்களும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அன்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் கிழக்குக்குச் சுதந்திரம்-ஜனநாயம்,சுயநிர்ணயவுரிமையென்பதெல்லாம் வெறும் ப+ச்சுற்றலாகும்.



சிங்கள பௌத்த சியோனிஸ ஆட்சியாளர்களுக்கு உடந்தையாகவும்,அன்நிய மூலதனத்துக்கும் அதன் எஜமானர்களுக்கும் கூஜாத் தூக்கிகளாக மாறிய அனைத்து இயக்கங்களும்,குறுங்குழுக்களும்-கட்சிகளும் ஒருபோதும் நமது மக்களுக்கு விடுதலைக்குரிய போராட்ட வடிவங்களைத் தரப்போவதில்லை.இவர்கள் தமது நலனுக்கேற்றவாறு நம்மைப் பயன்படுத்தும் விய+கத்தோடு கிழக்குக்கான தேர்தல் வன்முறையிலீடுபடுவதை-வடக்குக்கான நிர்வாகசபை எனும் வன்முறையில் இறங்குவதை நாம் இனம் கண்டு,நமது பரிப+ரணமான விடுதலைநோக்கி நமது கருத்தியல் நிலையை வளர்த்தெடுப்போம்.இதற்காக நமது அகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு,இந்தப் பயங்கரவாதப் புனைவுகளை வேரறுப்போம்!


நமது வாழ்வு இனியும் அழிந்து போகாதிருக்கவும்,நமது சமூக உயிர்வாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகாதிருக்கவும், நாம் யுத்தங்களையும்,ஏமாற்று அரசியலையும் மறுப்போம்.அடிப்படை மனிதவுரிமைகளுக்காகவும்,ஜனநாயகத்துக்காகவும் மக்களாகிய நாம் இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தோடும் கைகோர்த்து இந்த அரசியலை அம்பலப்படுத்தி, நேர்மையானவர்களை போராட்ட அரசியலரங்குக்குக் கொண்டுவருவோம்.இவர்களுடாய் குறைந்த பட்ச அடிப்படையுரிமைகளையாவது பெறுவதற்குப் போராடி,அதன் வாயிலாக அடுத்தகட்டத்தைத் தாண்டமுனைவோம்.இந்த தேவைகளை வலியுறுத்தும் புலிகளோ அல்ல மற்றெந்த இயக்கங்களோ ஜனநாயகப+ர்வமாக இதுவரை காரியமாற்றத் தவறுவது எதனால்? பழைய பெரிச்சாளிகள், மானுடவிரோதிகள்-யுத்த தாசர்கள்,அரசியல் கிரிமினல்கள்,இன்னபிற பிழைப்புவாதிகள்-கொலைகாரர்களால் பரப்புரையாக்கப்படும் அரிசியல் கருத்துரைகள், எம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.இந்தக் கொலைக்காரர்கள் ஜனநாயகம்,பன்முக அமைப்புகள்,மனிதவுரிமைகள் என்ற மிக,மிக அழகான முகமூடிகளோடு நம்மையணுகிறார்கள்,இது நம்மையின்னும் ஏமாற்றிக்கொள்வதற்கே!நாடறிந்த நயவஞ்சகர்கள் நல்ல மனிதர்களாம்-ஆலோசகர்களாம்!இன்று, இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் விய+கத்தைக் கொண்டிருக்கிறது.பிணம் தின்னிகளான இந்த ஆயுததாரி மனிதர்கள்-அரசியல் பிழைப்புவாதிகள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள்.டக்ளஸ் தேவாநந்தாவைப் போலவேதான் பிள்ளையானும்-கருணாவும் கிழக்கில் உருவாகிறார்கள். இந்தப் பயங்கரவாதிகளும்,புலிகளும் இப்போது நடாத்தும் அரசியலில் நமது மக்களின் நலன்கள்தாம் பலியாகிவிட்டது!இந்தியவோடுசோந்து இலங்கையும்,இந்த மக்களின் (வடக்குக் கிழக்குத் தமிழ்பேசும் மக்கள்) உரிமைகளைச் சிதைத்து எம்மை நிரந்தரமாக அடிமைக்கூட்டமாக்கி விடுவதில் அதன் வெற்றி,இந்தக் கேடுகெட்ட அரசியலால் உறுதியாகிவருகிறது.



இத்தகைய கயவர்களின் ஜனநாயக முழக்கமானது போலியானது.இதற்கும் புலிகளின்"கொடூர அராஜக" அரசியலுக்கும் வித்தியாசம்"அடியாட்"படையில் மட்டுமே நிலவமுடியும்.இத்தகைய கயவர்கள் புலிகளுக்கு மாற்றுக் கிடையாது.இன்றைய வடக்குக்-வன்னி மற்றும் கிழக்கின் நிலையில்,அராஜகம் மக்களைக் காவுகொண்டு, தன்னை முன் நிறுத்திய அரசிலூடாக நமது மக்களுக்கு-கிழக்குக்கு"மாகாண சுயாட்சி"சொல்லிக் கொண்டு தமது வருவாய்கு ஏற்ற பதவிகளோடு ஒன்றிவிட்டு,மக்களைக் கொன்று குவித்து வருவதை இப்போதைக்கு எவராலும் தடுக்க முடியாது. இங்கே,இலங்கையின் மக்கள்தம் ஒன்றிணைந்த தொழிலாளர் ஒற்றுமை சிதைந்து உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்குப் பலிபோவது இலங்கை ப+ராகவுமுள்ள சாபக்கேடாக இருக்கிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்

07.05.2008

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...