ஆச்சி அமுக்கிய இறுகிய நெற்றியும்
அப்பு அணைத்த பிஞ்சு நெஞ்சும்
ஆத்தை முலையின் கனவொடு சேர்ந்து
நெடுக அழிந்தது பேரப்பூச்சி
அழலிக்கையோடு அமர்ந்திருந்தவர்கள்
அடக்கிப் பழகிய அர்த்த பொழுதுகளில்
அப்பனின் சாக்குக் கட்டிலுக்குத் தீ வைத்தவர்கள்
அவன் நாட்டிய பயிரரிந்து அப்பால் அள்ளிச் சென்றதும்
அம்மாவின் முலையில் பல்லைப் புதைத்து
அல்குல்லில் துப்பிய இச்சைக் கழிவு
இதயம் சிதைத்துக் கொன்றது அவளை
கச்சை வலிக்கக் கடுந்தவமிருக்கும்
அப்பனின் அசையாத பொழுதுகள்
அள்ளிய சிறு நீர் கைகளில் வற்ற
முகம் தொலைத்தான்
முந்தைய வினையில்
மூப்பாகிய எனது உணர்வுகளுக்கு
அன்னை மண்ணின் அபலைக் கோலம்
ஆத்தையின் கனவில் அள்ளிச் சென்ற
அவள் இதயத்தின் துடிப்பாய்
அடி மனதெங்கும் குடிதுவங்க
வெடிச் சத்தம் ஒடித்தது முகத்தை!
பேரப்பூச்சி பாதியில் இழந்த முகத்தை
இன்னொரு பொழுதுகளில் எங்கோ புதுப்பிக்க
இடியிடியாய் வான் அதிரும் சிங்கக் கனவில்
ஆச்சி காலில் எண்ணை தடவிக் கண்ணை மூடி
மெல்லச் சிதறியது
அல்லகண்டம் தொலையா இலங்கை
இழவோலை வரையும் ஈழம்
அவகடமுடையச் சிங்களச் சினம்
அழிகடை எல்லாம்!
என்ன நம் இழுதை!
ஏங்கிக் கிடக்கும் எம் தாய் முலையும்
எண்ணை பிசிறும் ஆச்சியின் கரமும்
வான் முட்டும் அப்பர்களின் ஏரும்
இன்னொரு வினைக்கும்
மீள் வருகைக்கும் நேரம் குறிக்க
மீண்டும் உருளும் "கொமிசன்" கண்ட குண்டுகள் எங்கும்.
ஊழகம் கண்ட மேனிச் சிலிர்ப்பும்
மெல்ல விரிந்த சில்லறைச் சிரிப்பும்
கபாலத்து வெடிலில்
ஒளியின் வேகத்தோடு மறையும்
யுத்தப் பொழுதாய் மேவிய விடியல் எங்களது!
இன்னொரு பொழுதில்
ஆச்சியின் காலில் மெல்லக் கிடந்து
மேனி வளர்க்கும் பேரப்பூச்சி
ஆத்தையின் முலையில் அருவி கொட்டும்
அப்பன் அடைக்கும் அந்த வெள்ளம்
அள்ளித் தரும் வெள்ளைச் சோற்றை
அடுப்பில் அமரப் பூனையின் தவமும்
கனவில் தொடரும் அகதியின் முகத்தில்.
No comments:
Post a Comment