Wednesday, June 27, 2007

யுத்தமற்ற வாழ்வு: "அழகானது".

யுத்தமற்ற வாழ்வு: "அழகானது".


இந்தவுலகத்தின் இன்றைய சமூகவுளவியலானது வெறுமனமே கனாக்காணும் மனதை எல்லோருக்கும் வழங்கியுள்ளது.திட்டமிடப்பட்ட இந்த மனோபாவமானது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆரோக்கியமாக வளரும் ஒரு நிலையை எய்திடுவதற்கு எந்த வழியுமில்லை.இருக்கின்ற வழிகளெல்லாம் ஒவ்வொரு பெரும் தொழில் நிறுவனத்துக்கோ அல்லது பெரும் கட்சிக்கோ சொந்தமான வழிகளாக இருக்கின்றன.அந்தந்தக் காலங்களில் அந்தந்த அமைப்புக்குச் சாதகமானதாக இருந்த நிறுவனங்களின் காலங்கள் போய்,இப்போது ஒவ்வொரு பெரும் குடும்பங்களுக்குச் சொந்தமான உடமையாக இருப்பவைகளைக் காப்பதற்காகவே குடும்ப நிறுவனங்களாக-மேல்மட்ட அமைப்புகளாக இவை நிலை பெற்றுவிடுகின்ற சூழலில், கருத்துக்கள் கட்டியமைக்கப்படுகின்றன.மொத்தமான கூட்டு அமைப்பானது எவ்வளவுதாம் நாகரீகமான அமைப்பாண்மைக் கொண்டிருப்பினும் அது ஆண்டான் அடிமைச் சமூகத்தின் அதியுயர்ந்த அடக்குமுறையைக் கொண்ட சமுதாயமாக விரிவுற்றுள்ளது.இங்கே மனித சமூகத்தின் முழு ஆக்கத் திறமையும் மிகவும் கேவலமான சந்தையாக வடிவுற்றுள்ளது.இந்த அமைப்புள் தோற்றிவைத்துப் பூசி மெழுகும் எண்ணவோட்டமானது எப்பவும் இந்தவுலகத்தின் ஆளும் வர்க்கத்தின் இருப்பை அசைக்காத எண்ணங்களாக விரிகின்றன.இவற்றைச் செய்து முடிக்கும் பெரும் கல்விக் கழகங்கள் தமது நெறியாண்மையின் அதீத பலாபலனாகத் தயாரித்து வெளியேற்றும் மனிதர்களோ இந்தச் சமுதாயத்தின் மிகக் கெடுதியான பெரும் பொறுக்கியாக நிலைபெறுகிற உளவியலைச் சற்றும் பொருந்தாத காலத்துக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்வதில் தனது அதீத புத்திசாலித்தனத்தை ஏலம் போடுகிற தரணமே அவனது-அவளது எல்லையற்ற அறிவின் நாணயம் அம்பலத்துக்கு வரும் தரணமாக இருப்பதில் எந்த வியப்புமில்லை.

சிலருக்கு யுத்தமற்ற சமூகச் சூழல் பெரு விருப்பாக இருக்கிறது.பலருக்கு யுத்தமே வாழ்வுக்கான அடுத்த நிலையாக இருக்கிறது.அடிமையாய் இருப்பவன் தனது அடிமை விலங்கொடிக்கப் போராடாதிருக்க முடியாது.போராட்டமே அவனக்கு வாழ்வாக இருக்கிறது.அற்பமான வாழ்வுச் சுகத்துள் மூழ்கடிக்கப்பட்ட நடுத்தர வர்க்க அறிவானது எப்பவுமே தனது மொன்னைத் தனமான கருத்தியல் மனதை கடைவிரிக்கத் தயங்குவதில்லை.அந்தக் கடைவிரிப்பை அழகு நிறைச் சுகமாக இன்னொரு நடுத்தர வர்க்கத்து உறுப்பு உணரும்போது அங்கே முழுமொத்தச் சமுதாயத்தையும் ஒரு குட்டைக்குள் அடக்கும் அளப்பெரிய "அறிவு"நிலையெடுத்துவிடுகிறது.இவர்கள் போடும் "பெரும்-குறுங்"கதையாடல்கள் எல்லாமே புனைவுதாம் என்ற "பேருண்மையை"மகாபேறாகப் பெற்றதாகச் சொல்லும் அழகு தனித் தன்மையிலானதென்று நாமும் நம்பத்தாம் வேண்டும்.இல்லையோ நம்பத் தகுந்த காரணங்களாக இசங்களுக்கு வலியெடுத்த கதைகளை அவர்கள் பைபிள் பாணியில் மொழிவார்கள்.இதைச் சொல்வதற்காக அப்பப்ப அரிப்பெடுத்த மனிதர்களின் வம்பளப்புகளைக் கண்ணே மணியேயெனச் சொல்லிச் சமூக இயக்கங்கங்கள் அவற்றின் அதீத இயக்கப் பாடுகளெல்லாம் புனைவுக்குள் வந்தொதுங்கிவிடும்.அப்பாடா இந்த யுத்தமில்லாத தரணங்கள்-சூழல்கள் மிக இனிமையானதுதாம்.அந்த இனிமைக்குள்ளும்,அழகுக்குள்ளும் அழிபவர்கள் அந்தச் சமுதாயத்தின் பொருள் குவிப்புள் குருதி கொட்டிச் சாகும் பெரும் பகுதி மனிதர்களே!

எந்த அழகும் எல்லோருக்கும் பொதுவானதாகத் தோன்றமுடியாது.

பசியோடிருப்பவர்களுக்குக் கருவாட்டுக் குழம்பும் ஒரு தட்டுச் சோறுமே மிக அழகானதாக இருக்கும்.

இதுவல்லாத பேர்வழிக்கு இஞ்சி இடுப்பு அழகாக இருக்கும்.இந்த இரண்டுமே ஒரே நேர் கோட்டில் சந்திக்கும்போது,ஒன்;றை இன்னொன்று தாழ்த்திச் சென்று தத்தம் வர்க்கத் தளத்தைக் காப்பதற்கெடுக்கும் முயற்சியே யுத்தமாக வெடிக்கிறது.

ஆக யுத்தம் என்பது தொடர் நிகழ்வு.அது வர்க்கங்களாக மக்கள் பிளவடையும் அந்தப் பொருள் வளத்தின் பெரு நிலையெடுப்பில், ஒரு சமுதாயம் எதைக் கூவி விற்க முடியும்?

சமீப காலத்து ஈழத்து மனிதர்களுக்குச் சவம் பார்த்தே சலித்துவிட்டது.

அவ்வளவு மோசமான சமூக வாழ்வு இவர்களுக்கு மட்டுமல்ல.இந்தவுலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தச் சீவியம் நிலைபெற்;றேயிருக்கிறது.ஒரு நேரக் கஞ்சிக்காகவும் உடலைக் குளிரிலிருந்து காப்பதற்காகவும், ஒதுங்கும் கொட்டிலுக்காவும்,தாகம் போக்கும் நீருக்காவும் உழைப்பவன், உருப்படியாய் வாழ்வதென்பதை யுத்தமற்ற சூழல் ஒரு போதும் அனுமதிக்காதிருக்கும்போது,அந்தச் சூழல் அவனுக்கு-அவளுக்கு யுத்தச் சூழலே!இங்கிருந்து அழகிய மனதையோ அல்லது விருப்புடைய அக வளர்ச்சியையோ அவர்கள் பெறுவதான நிச வாழ்வு கற்பனையில் நிலைப்படுகின்ற ஒவ்வொரு தரணத்திலும் இந்தச் சமுதாயத்தின் வீரீயம் எந்தக் கோடியில் இருக்கிறது?

கடைக் கோடியில் என்று சொல்லிவிடலாம்.ஆனால் அங்கே மனித உழைப்பும் மானுட தரிசனமும் அல்லவா அந்தக் கடைக் கோடி நிலைக்குள் உறைந்து போகிறது!இந்த உறைவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இடம் வலம் தெரியாது அழகு குறித்து ஏங்குகிறது.இதற்கான திசைவழியாக அது நிறுவ முனையும் காரணங்கள் அற்ப ஆசையின் விளைவாக விரிகிறது.இது அறிவு நாணயத்தைப் பேணும் ஓரிரு சந்தர்ப்பங்கள் தன்னைக் குறித்த மட்டுப்படுத்தப்பட்ட புரிதல்களில் மையமுறும் தரணங்களே அதிக பட்ச அறிவாகத் தோற்றமுறும்.

கடந்த காலமானாலுஞ்சரி இல்லை நிகழ்காலமானாலுஞ்சரி மனிதாண்மை மறுத்தொதுக்கப்பட்டு பொருள் குவிப்பின் அதீத வேட்கை, எந்தச் சந்தர்ப்பத்திலும் யுத்தமற்ற பூமியையும் மனித வாழ்வையும் அனுமதிப்பது கிடையாது.அங்கே யாரை யார் எதிர்த்து யுத்தஞ் செய்கிறார்கள் என்பது பெரும் கேள்வியாக முன் நிற்கும் சந்தர்ப்பத்தில் இந்த"ஜனநாயகம்-சுதந்திரம்-மனிதாபிமானம்"போன்ற ஆயுதங்கள் முன் வந்து, நியாப்படுத்தப்படும் கொலைகள் ஏராளம் இந்தப் பூமில் தினம் விழுகிறது.இதைப் பெரிதுபடுத்தாமல் மெளனமாக அங்கீகரித்த குழந்தைகள் இன்று பாடும் சங்கீதமோ"யுத்த மற்ற வாழ்வு அழகானது"என்று நீளும் போது சிலர்"ஆமாம்"போடுவதில் என்ன கரிசனை இவர்களுக்கு அப்பாவி மக்களில்- வாழ்வில்?


வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் எந்த இயக்கத்தில் நாம் இருக்கிறோம்?

தேசத்துக்காகவெனத் திருடப்படும் மனிதவுயிர்களின் அழகு புரிந்துகொள்ளப்பட்ட எல்லா அழகையும் போன்ற அழகுதாம்.அத்தகைய அழகைத் திருடும் யுத்தம் வலிந்துருவாக்கப்படும் தரணங்கள் மிகச் சாதரணமான யுத்தமற்ற அழகைத் தின்றுவிடுவது எல்லா மனிதர்களினதும் தேவையோடு நிகழ்பவையல்ல.அது மனிதவுணர்வுகளுக்குக் கட்டுப்படாத(உழைப்பாளர்களின் உணர்வுகளுக்கு) பொருளாதாரத்தின் "இயக்கம்-இருப்பு-பெருக்கம்"எனும் பொறி முறையால் உந்தப்பட்ட ஒரு ஜந்திரத்தனமான ஊக்கத்தால் நிகழ்கிறது.அங்கே நிகழும் தொடர் யுத்தம் பொருளைக் குவித்து உழைத்து வரும் உடல்களைச் சல்லடையாக்கும் ஆளும் வர்க்கத்தின் கனவோடு தொடர்கிறது.மனித சக்தியை ஜந்திரத்தின் உறுப்பாகவும்-உதிரிப்பாகமாகவும் கணித்த இன்றைய பொருளாதார விஞ்ஞானம் மற்றையவொரு புதுமையான உலகைக் கற்பனையுள் கட்டிப் போட்டிருக்கும் தரணம் நமக்கு யுத்தமற்ற சூழலாக விரியும்.அது இன்றைய மூலதனத்தின் ஒரு பகுதி வெற்றிக்கான திறவு கோலாக இருக்கிறதென்பது வாழ்க்கையின் மெய்ப்பாடு.

அந்தரித்து,அல்லற்படும் மக்கள் கூட்டத்துக்கு அப்பன் ஜேசுநாதர் வானத்திலிருந்து குதித்துவந்து விடுதலையளிப்பதாகச் சொல்லும் தினகரனும் அவனது மாமிசப்பிண்டங்களும் பெறும் கூலியோ அமெரிகச் சன்மானமாக அவனது குடும்பத்தைக் கோடிகளில் நீந்த வைக்கிறது.கூனிக் குறுகிச் சவங்களாய் கிடந்துழலும் கூட்டமோ பாவ விமோசனத்துக்காக ஏங்கும்போது, இவன் வர்ணத் தொலைக்காட்சியுள் வடிவமைக்கப்பட்ட தோரணத்தை இறையின் தூதுவனாகத் தருவதில் பெரு நாடகத்தை அருங்கேற்றும் தரணமும் யுத்தமற்ற சூழலின் அழகைத்தாம் பேசுகிறது.இந்தச் சந்தர்ப்பம் மிகவுந் திட்டமிட்ட பொருள் வளத்தின் மிகுதியான உற்பத்தியூக்கத்தை,அதன் சந்தையை நிலைப்படுத்தும் பொறியையும் பின்னால் பாவச் சுமையாகவே காவி வருகிறது.

ஆக யுத்தமற்ற வாழ்வு மட்டுமல்ல பூமியும் அசிங்கத்தின் அதீத உச்சமாகவே உதிர்ந்து போகிறது.அடிமை தன்னை விடுவிப்பதற்காகப் போராடிக்கொள்ளும் ஒவ்வொரு தரணமும் மிக அழகானது.அந்த அடிமை உயிர் துறக்கும் அந்தக் கணம் மனிதாற்றலின் உச்சபச்ச வெளிப்பாடாகும்.இது தியாகமல்ல.வாழ்வின் இருப்பு-வதையின் இருப்பு.நான் இருப்பதற்காக அழிவதும் ஒவ்வொரு தரணத்திலும் படைப்பாளுமையோடே மறுவார்ப்பாகிறது!

ப.வி.ஸ்ரீரங்கன்
27.06.2007


No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...