மொழியின் நிலை:வாழ்வும்,சாவும்!
"என்னை அநுமதியுங்கள்.என்னுடைய சுயமும்,பாமரத்தனமும் மனித்துவத்தையும் அதன் ஆழத்தையும் புரிந்து கொள்ள.விமர்சனத்தின் வீச்சு என் அறிவையும்,என் உலகத் தரிசனத்தையும் மாற்றியமைக்கட்டும்."
இன்றைய பொழுதில் தமிழ் வாழ்வு குறித்த மதிப்பீடு என்ன?
ஏன் வாழ்கிறோம்,எதற்காக உழைக்கிறோம்?
இத்தகைய கேள்விகளுக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை!
எனது புரிதலும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சிந்தனையைத் தகவமைத்த கருத்தியல்களால் நான் முடமாக்கப் பட்டுள்ளேன்.எனக்கான புரிதல் இதுவரை என்னைச் சுற்றிய வாழ்வோடு பின்னப்பட்டு அதன் நிசத் தன்மை எனக்குள் எந்த ரூபத்திலும் தெளிவுறாத நிலையில் எனக்குள் கொட்டப்படும் கருத்துக்களால் நான் தகவமைப்பட்டுள்ளேன்.
நான் புரியும் நான் உண்மையில் நானே இல்லை.என்னை வடிவமைத்தவர்கள் எனக்கு முன் தோன்றிப் புவிப் பரப்பைத் தமது வாரீசுகளின் சொத்தாக எழுதிவிட்டுச் சென்ற கோமான்களாக இருக்கிறார்கள்.நான் சேவகன் என்பது புரிகிறது.எனினும் என்னால் எனது வாழ்வைச் செப்பனிட முடியவில்லை.ஏனெனில் நான் என்னைமட்டுமே முன் நிறுத்துகிறேன்.என்னைப் போல் பல கோடி "நான்கள்"ஒன்றொன்றாய்ச் சிதிறிக் கிடக்கிறது.இது அவர்களின் தப்பாகச் சொல்வதற்கு ஒரு அரை வேக்காட்டுக் கருத்தை எனது எஜமானர்கள் எனக்குக் கற்பிக்கிறார்கள்.இதை நான் பேராடும் கல்விக் கழககங்களுக்குள் படித்தாக வேண்டும்.எனது முகம் என்னைக் கொல்லும் விசமருந்தாக மாறுகிறது.
என்னால் இவர்களின் தேவைக்காகவே சிந்திக்க முடிகிறது.இந்தச் சிந்தனை என் நலத்துக்கென்றே நான் தெருவெங்கும் எழுதிவைக்கிறேன்.இந்த நான் எனது சுய முன்னேற்றமென்றும் இதை நம்புகிறேன்.எனக்கு வாழ்வென்பது பெற்றோரைப் பாதுகாப்பது அதன் பின்பு ஒருத்தியை-ஒருவனை மணஞ் செய்து வசதி(?)வாய்ப்போடு குழந்தை பெற்று மீள அவர்களை என் எஜமானர்களின் மொழிக்குள் வளர வைத்து, அவர்களை எனது எஜமானுக்கேற்றபடி உருவாக்குவதே அர்த்தமாக விரிகிறது.இதுதாம் நான்!
இந்த நான் மிக வேகமாக எனது வாழ்வோடும் வளத்தோடும்,இருப்போடும் கருத்தாடி வரும் அறிஞர்களை மடக்கிறேன்.
"என்ன சார் பெரிய தமிழ்?,தமிழால் சோறு போட முடியுமா இன்றைய காலத்தில்?அதையேன் படிக்க வேணும்,என் பயல்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும்?"
நல்ல கேள்விகள்தாம்!நான் இப்படியே நெடுகக் கேட்கிறேன்.என் வாழ் நாள் பூராகவும் கேட்டுக்கொண்டே எனது காலத்தை ஓட்டுக்கிறேன்.
ஒரு நாள் ஜேர்மனியக் கல்விக்: கூடத்துக்கு செல்கிறேன்.பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டமாம்.
ஒவ்வொருவரும் தம்மை அறிமுகப்படுத்துகிறார்கள்.
நானும்,என்னை அறிமுகஞ் செய்கிறேன்.
"அது சரி நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?" ஆசிரியரின் கேள்வி.
இது என்னை உடைத்துப் போடுகிறது.
"நான் இப்போது ஜேர்மனியன்!"
"உங்களின் தாய் மொழி என்னவென்கிறேன்"அதே ஆசிரியர்.
"தமிழ்!"
"இதை எதற்காக் கேட்கிறீர்கள்? "ஆசிரியரிடம் வினாவினேன்.நான் டொச்சில் பேசுகிறேன்.அந்தச் சூழலுக்குள் வாழ்கிறேன்.தொழில் செய்கிறேன்.பிறகெதற்குச் சோறு போடாத தமிழ்?
"நீ"என்பது டொச்சில் இல்லை.அது உனது பாரம்பரியமென்றும் இல்லை.உனது அநுபவம் வேறாக இருக்கும்.நீ இங்கே விருந்தினன்.அவ்வளவே.உனது பிள்ளைகள் டொச்சைக் கதைக்கலாம்.அதைச் சிந்தனா மொழியாகவும் பெற்றுவிடலாம்.எனினும் அவர்களது பாரம்பரியத் தொடர்ச்சியால் அவர்கள் அந்நியர்கள்தாம் இந் நாட்டுக்கு."
என்ன கோதாரி, "இது இனவாதமில்லையா?"
ஆசிரியர் சிரிக்கிறார்.
"ஏன் சிரிக்கிறீர்கள்?"
"உனக்குப் புரியுமா மக்களினங்களின் சுமூகவுணர்வின் தோற்றுவாய்?"
"புரியாமலா இவ்வளவு நாளும் வாழ்கிறேன்?"
"வாழ்வுக்கும் புரிவுக்கும் எந்தத் தொடர்புமில்லை. மிருகங்களைப் பார்.அவை சமூகவுணர்வைப் புரிந்தா உயிர் வாழ்கின்றன.நீயும் அப்படியாக இருக்கலாம்.
அவைகளுக்குள்ளும் ஒரு தொடர்பாடல், உணர்வுத் தொடர்ச்சி இருக்குத்தாம்.அது இயற்கையின் தோற்றுவாயோடு சம்பந்தப்பட்டது.அது மனிதர்களுக்கும் பொதுவானது."
"சரி.அப்படியே இருக்கட்டும்!இங்கே, சமூகவுணர்வென்பது ஆன்மீக வாழ்க்கையில் செயற்படுகின்ற அமைப்புதானே?சமூகவுணர்வுக்கும் தனிப்பட்டவுணர்க்கும் இடைப்பட்ட செயல்,சமூகப் பிரிவுகளுக்கும் வர்க்கங்களுக்கும் இடையில் சித்தாந்தப் போராட்டம்.கருத்துக்கள்,சிந்தனைகள்,தத்துவங்களின் பரிவர்த்தனை,அவற்றின் தோற்றம்,வளர்ச்சி,பெருந்திராளான மக்களின் மீது அது தாக்கஞ் செய்யும்.இவைகள்தானே நாம் உணரும் சமூக உணர்வு?"எரிச்சலுடன் கேட்டேன்.
"இதற்கு மேலும் அதைச் சொல்ல முடியும்.நீ லெவிஸ்ராஸ்,லக்கான் போன்றவர்களைப் படித்திருப்பாய்.எனவே உன் பிள்ளைகளுக்கு அவர்களின் தாய் மொழியையும் சொல்லிக் கொடு."
ஆசிரியர் மேலும் தொடரவில்லை.
இப்போது யோசித்துப் பார்க்கிறேன்.
நான் என்பது எனது பெளதிக இருப்போடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல! எனக்கும்,எனது பெளதிக இருப்புக்கும் அப்பால் என்னை எதுவோ உருவாக்கிறது.அதுவே என்னை மற்றவர்களோடு சமப்படுத்த-கெளரவப்படுத்த முனைகிறது.நான் எவ்வளவுதாம் ஆங்கிலத்தையோ அன்றி டொச்சையோ சிந்தனா மொழியாக்கினாலும் "நான்"எனும் அடையாளும் என்னுடலை பலதரப்பட்ட சமூகப்படி நிலைகளோடு தகவமைத்திருக்கிறது.அதை இன்னொரு மொழிக்குள் என்னால் திணிக்க முடியாது.அவர்களுக்கு நான் அந்நியன்.அவர்கள் என்னை என் சுயத்தோடும்,மரபோடும் அங்கீகரிக்க முனைகிறார்கள்.எனக்கு இப்போது என் வேர் குறித்துச் சரியான ஏக்கம்.நான் யார்? ஏன் ஜிப்பிசிகளை உலகம் வெறுத்தொதுக்கிறது?அவர்களின் இன அடையாளம் எப்படியிழக்கப்பட்டது?அவர்களைப் போன்றா நான் மாறுவது?
எனது அடையாளமானது,என்னை உடல் ரீதியாகக் கூறுபோடுகிறது.என் மரபு என்னை எவரது தேவைக்கோ பயன் படுத்துகிறது.எனினும் அந்த வேர்,மரபு இன்றி என்னை உலகில் ஏற்பது கிடையாது.என்னை டொச்சுத் தேசிய இனத்துக்குள் ஏற்கிறார்களில்லை.நான் ஆங்கிலத்தைப் பேசினாலும் அவர்களும் என்னை ஆங்கிலேயனாக ஏற்கிறார்களில்லை.அப்போ அவர்களது மொழியைப் பேசி,அவர்களது வாழ்க்கைத் தேர்வுகளைச் செம்மையாக ஏற்று,அவர்களது பண்பாட்டோடு அண்மித்தும் அவர்கள் ஏற்பதில்லை.இது எதற்காக?
இன்றைய சினிமா தயாப்படுத்தி வைத்திரும் மனிதவுருவம்,இன்றைய தமிழ்த் தொலைக்காட்சிகள் தகவமைத்து வைத்திருக்கும் மனித முகங்கள்-அவர்களின் தமிங்கிலம் இரண்டுங்கெட்டான் முகங்களாகவா அலைகின்றன?
அல்ஜீரியனான காம்யூ தன் "கொள்ளை நோய்"என்ற நாவூலாடாக முகமின்றி அலைகிறானே!அப்படியொரு அலைச்சல் எனக்கும் உருவாகிறது.அல்ஜீரியனாகவும் அல்லாமல் பிரஞ்சுக்காரனாகவுமல்லாமல் மனிதானக இருக்க முடியாது, அடையாளம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.இங்கேதாம் மொழியின் மிகப்பெரும் வலு முகத்தில் ஓங்கியடிக்கிறது.
அதை என்னவென்று நாம் நினைக்கிறாம்?
ஒரு மொழியின் பாத்திரமென்ன?,அதைக் கற்ப்பது சோறு போடுமென்ற நோக்குக்காகவா?,அல்லது ஒருசில மண்டை வீங்கிகள் சொல்வது போன்று மொழி தொடர்பாடலுக்கான ஊடகம் மட்டுமா?
இன்று தீபம் தொலைக்காட்சியில் ஒரு உரையாடல்.மொழி ஆய்வாளர் என்றொருவர்.சிவகுருநாத பிள்ளை என்ற பெரியவரிடம் கேட்படுகிறது"தமிழ் மொழியைக் கற்றால் சோறு போடுமா?"மொழி ஆய்வாளர் சிவகுருநாத பிள்ளை பதிலளிக்கிறார்:"தமிழ் மொழி இப்போது சோறு போடாவிட்டாலும் பின்பு போடும்.தமிழ்நாடு-இந்தியா தொழிலில் முன்னேற்றம் காணுகிறது.இதனால் தமிழால் சோறு போடும் வாய்பு உருவாகும்.அதைவிட இலண்டனில் 150.000.தமிழர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது."தமிழ் தெரிந்த வைத்தியாரா இவர்" எண்டு பார்த்தே மக்கள் அவரிடம் செல்வார்கள்.எனவே தமிழைப் படியுங்கள்."
என்னவொரு கேணைத்தனமான கருத்து!இவருக்கு மொழி ஆய்வாளரென்று வேறு குறிப்பிடுகிறார்கள்.
அரை வைத்தியன் கொலைகாரன்.என்றொரு முதுமொழியுண்டு.இங்கே இதுதாம் எனக்கு ஞாபகம் வருகிறது.
தமிழ் பேசும் இனத்தவர்கள் தமிழைக் கற்பதற்குமுன் அது சோறு போடுமா என்று பார்க்கும் இழி நிலையை என்னவென்பது?இத்தகைய கருத்து எவர்களால் உருவாக்கப்பட்டது?ஆங்கிலம் பேசத் தெரிந்த மனிதர்கள் ஒருவரும் தெருவோரத்தில் விளிம்பு மக்களாக வாழவில்லையா?ஆங்கிலேயப் பிரித்தானியாவில் மான்செஸ்ரர் என்றொரு பழைய தொழில் நகரம் இருக்கிறது.அங்கு வாழுகின்ற அறுபது வீதமான ஆங்கில இனத் தொழிலாளர்கள் பஞ்சப் பரதேசிகளாக வாழ்கிறார்கள்.இவர்களின் ஆங்கிலம் இவர்களுக்குச் சோறு போடுகிறதில்லை.எதற்காக?
ஆக இந்தப் பிரச்சனை வேறொரு கோணத்தில் பார்க்கப்பட வேண்டியிருக்கிறது.
சயந்தனும் சோமியும்(வலைப் பதிவாளர்கள்) தமது வானொலியுரையாடலில் தமிழ் தொடர் பாடலுக்குரிய மொழியாக இருக்க வேண்டுமென்று சோமி சொல்கிறார்.தமிழ் ஏலவே தொடர்பாடலுக்குரிய மொழியாக இருப்பதனால்தாம் அது பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நிலைக்கிறது.அப்படியில்லாதிருந்திருந்தால் இலத்தீன்,சமஸ்கிருதம் போன்று எப்போதோ செத்தே இருக்கும்.இதை இப்படியே விட்டு,மேலே தொடர்வோம்.
மொழி தொடர்பாடலுக்குரிய ஊடகம் மட்டுமா?
இல்லை!
மொழியின் நிலை:
மார்க்சியச் சிந்தனையூடாக நாம் மொழி குறித்துப் பலவகையாகப் புரிகிறோம்.
மொழி மேல்மட்ட அமைப்பைச் சார்ந்ததென முன்னர் கற்றோம்.தற்போதைய அறிஞர்கள் சொன்னமாதிரி, மொழியானது மேல்மட்ட மற்றும் அடிமட்ட அமைப்பைச் சாராதது என்றும் பார்த்தாகி விட்டது.எனினும் மொழி தொடர்பாக நாம் கருத்தாடும் போது"இன அரசியலெனும்போது நாம் இனவாதிகளாக மாறுகிறோம்"என்றொரு குற்றச் சாட்டு நம்மில் தொடுக்கப்படுவதால் நாம் இப் பிரச்சனைக்குள் மூக்கை விடாதிருப்பதில் பல காலம் அவதானமாக இருந்து வருகிறோம்.என்றபோதும் மொழியின் நிலை பற்றிய புரிதலில் அது எப்படி நமது சிந்தையுள்ளும்,வாழ்வோடும் தொடர்பாடுகிறதென்று அறியும்போது மொழியென்பது வெறும் ஊடகமல்ல.அது நமது இருப்போடு சம்பந்தப்பட்டதென்கிறோம்.இங்கே நாம் இலட்சம் மக்களை இந்த அடிப்படையில் இழந்தும் வருகிறோம்.
மொழியைப் பேசமுடியாத நிலையில் மிருங்கள்கள் மற்றும் மனிதக் குழந்தைகள் ஒழுங்கீனமாக வாழ்கின்றன.உலகைப் பற்றிய புரிதலை உணர்வு நிலையை ஏற்படுத்துவதும்,ஒழுங்குகளை நிலை நாட்டுவதும் மொழி.மொழியானது சிந்தனையின் ,மனிதவுணர்வு நிலையின்,பிரதிபலிப்பின் அங்கமாக(அங்கங்கள் பல,அதிலொன்று இது.)இருக்கிறது.மொழியின்றிச் சிந்திக்க முடியாது.உலக அறிவைப் பெற முடியாது.மனிதர்களுக்குள் தொடர்பாட முடியாது.சமூக வாழ்வு,பண்பாடு(இங்கும் இதை அவதானமாகச் சொல்கிறேன்.நேரடியாக எடுக்காதீர்கள்.பண்பாடு ஆளும் வர்கத்துக்கு ஒன்றும்,ஆளப்படும் வர்க்கத்துக்கு ஒன்றுமாக இருக்கிறது),சட்டதிட்டங்கள் என்பனவற்றின் வாகனமாக மொழியிருப்பதாக மொழியியலாளர்கள் சொல்கிறார்கள்.
நினைவிலி மனம்:
குழந்தைப் பருவத்திலிருந்து மொழி ஒலி வடிவாக நினைவிலிமனதில் பதிகிறது."மனிதர்களின் நினைவைக் கட்டுப்படுத்துவது மொழி"என்போரும்,"மொழியே நினைவிலி மனதைக் கட்டுப்படுத்துகிறது"என்று சில அறிஞர்களும் ஒரேவுண்மை வெவ்வேறு வாக்கியங்களில் சொல்லி அந்தவுண்மைக்கு வலுச் சேர்த்திருப்பதை நாம் அறிகிறோம்.
இங்கே இந்த உண்மை நிராகரிக்க முடியாதென்பதற்கு திருவாளர்கள் லெவிஸ்ராஸ்,மற்றும் லக்கான் போன்றவர்களின் அமைப்பியல் ஆய்வுகள் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.ஆகவே ஒரே மொழியைப் பேசுபவர்கள்-கிரகித்தவர்கள் ஒரு சமூகமாக,கூட்டமைப்பாக வாழ முற்படுகிறார்கள்.காரணம் அவர்களின் நினைவிலி மனம்,சிந்தனை,பண்பாடு ஒன்றாக இருக்கிறகிறது-இணைகிறதென்பதே உண்மையாகிறது.இந்த அடிப்படையான காரணங்கள் பிற அந்நிய மொழியைக் கற்றுவிட்ட படிப்பாளிகளுக்கு அந்த மொழிச் சூழலுக்குள் இணைந்து வாழ நேரிடினும் அவர்களால் அந்த மொழியினது பண்பாட்டுருவாக்கத்தின் தொடர்பை முழுமையாகத் தமது வாழ்வுக்குள் இணைக்க முடியாது.அப்படி இணைத்துவிட்டதாக அவர்கள் தம்மை ஏமாற்றியபடி தமது குழந்தைகளைப் பார்த்து"செல்லா டோன் கோ டவுண்"என்று கண்ட இடத்தில் மூத்திரம் அடிப்பார்கள்.அதைப் பார்த்து நாம் நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
எப்பவும் நாம் கவனிக்க மறுப்பது நமது வாழ்வு சார்ந்து சிந்திப்பதையே.இதுதாம் அனைத்துக்கும் காணமாகிறது. மொழியானது ஒலி மூலமாகவே நினைவிலி மனதில் பதிகிறது-கிரகிக்கப்படுகிறது.ஒரு குறிப்பிட்ட மொழியின் ஒலிகளைச் சிறு பிராயம் தொட்டுக் கிரகித்து வைப்பவர் அந்த மொழியின் பண்டுதொட்டுக் கடத்தப்படும் பண்பாட்டுக் கோலங்களையும் கிரகிப்பவராகவே மாற்றப்படுகிறர்ர்.இங்கே நாம் காண வேண்டிய உண்மையானது ஒரு மொழிக்குரிய ஒலியின் உட் கிடந்து நம்மைக் கட்டுப்படுத்தும் உணர்வுக்குள் ஒரு இயக்கம் நிகழ்கிறது.அந்த இயக்கம் மனித உணர்வின் அர்த்தப்பாடுகளைச் சுமந்து வருகிறது.இது என்னவென்றால் ஒவ்வொரு மொழிக்கும்,அதன் சொற்கட்டுகளுக்கும் பாரம்பரியம்,பண்பாட்டு அடிப்படைகள் உண்டு என்கிறோம்.இதை எந்தக் கொம்பரும் மறுத்தொதுக்க முடியாது.
உதாரணத்துக்கு:தாலி,குங்குமம்(இவற்றை உதாரணத்துக்குச் சொல்கிறேன்.பெண்ணுரிமை வாதிகள் அடக்குமுறைச் சின்னம் அப்பிடியென்று உதைக்க வராதீர்கள்.நான் தாலி கட்டாமல்,ஐயர் அறுகரிசி இல்லாமல் மணம் முடித்தவன்)போன்ற சொற்களின் பின்னே வாழ்வின் மதிப்பீடுகள் இருக்கின்றன.இவற்றை ஆங்கிலேயர்களால் புரிய முடியாது.அவ்வண்ணம் அவர்களின் மொழிகளுக்குள் இருக்கும் அர்த்தங்களை நம்மால் புரிய முடியாது.ஆகவே மொழிக்குரிய இடம் வெறும் தொடர்பாடலுக்குரியதன்று.
அது நமது வாழ்வோடும்,இருப்போடும் சம்பந்தப்பட்டது.இதைக் கற்பதற்குச் சோறு போடுவது பற்றிப் பார்த்துத்தாம் கற்போமானால் இறுதியில் சோறு கிடைக்கலாம் ஒரு தெரு நாய்க்குரிய மதிப்போடு அவ்வளவுதாம்.
இதனால்தாம் மொழியின் அடிப்படையாகத்தாம் ஒரு சமூகமாக,கூட்டமாக குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர்கள் இணைகிறார்கள்.இவர்களுக்குள் ஆக்கம் பெறும் பொருளாதார உறவுகள் வர்க்க அரசியலை உருவாக்கி விட்டன.இங்கே வர்க்க அரசியல் முன் தள்ளப்படுகிறது.குறிப்பிட்ட ஆளும் வர்க்கம் தனது பொருளாதார வலுவைக் காப்பதற்கும் இத்தகைய மொழியின் அடிப்படையிலும் கோடு கிழிப்பதை நாம் இன்றைய பல் தேசியப் பெருளாதார முன்னெடுப்புகளோடு நம்மை எதிர் கொள்ளும் வர்த்தக மொழியான ஆங்கில ஆத்திகத்திலிருந்தும் பல படிப்பினைகளைக் காணலாம்.
கடைசியாக, சமூக உணர்வு சமூ நிறுவனங்களுடன் கூட்டாகச் செயற்படுகிறது.அவற்றின் மூலம் மெய்யான சித்தாந்த உறவுகளின் வடிவத்தை அடைகிறதென்பது உண்மை.
இங்கே சமூக வாழ்நிலையே சமூக உணர்வைத் தீர்மானிப்பதென்பதை,கருத்துக்களானவை உற்பத்தியிலிருந்து,உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்து மட்டும்தாம் நேரடியாகத் தோன்றுகிறதென்ற வாதமும் இருக்கிறது.அது பற்றி நாம் இன்னொரு கட்டுரையில் விவாதிப்போம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
11.02.2007
வூப்பெற்றால்.