"நேர்மையாய் வாழவேண்டுமாயின் வதைபடுதலும்,
குழம்பிக்கலங்குதலும்,தொடங்குதலும்,தூக்கியெறிதலும்
எந்நேரமும் போராடுதலும்,இழப்புக்கு உள்ளாகுதலும்
இன்றியமையாதவை..."-டோல்ஸ்டோய்.
நடக்கின்ற இந்த நூற்றாண்டில் எங்கு பார்த்தாலும் யுத்தம்,மனித அழிவு- பயங்கரவாதம்,பேச்சுவார்த்தைகள் என்ற கதைகள்...நாம் இவற்றுக்குள் வாழ்ந்து,போராடி, முகம்கொடுத்து உயிர்தப்பி...அகதியானபின் இவைகள் தினமும் நமது விழி, செவியோரம் வந்து போகின்ற கதையாகியாகி...
என்னதாம் நமது பிரச்சினை?
எதனால் யுத்தம்- பயங்கர வாதம் என்ற கதைகள் அரங்கேறுகின்றன?எது பயங்கரவாதமென்று எந்தத் தேச அரசாவது வரையறை செய்திருக்கா?
எதனால் நாம் அகதிகளானோம்? எப்போது நமது அகதிவாழ்வுக்கு முடிவு வரப்போகிறது-எங்கள் குழந்தைகள் அகதி முகமிழந்து வாழ்வது?
மனித சமூகத்தின் உயிர்நாடியே உழைப்பைச் சுற்றியே இயங்கிக்கொண்டிருக்க,அந்த உழைப்பை நல்கும் உடல்கள் தினமும் ஒருபகுதி மரணித்தபடியும்,மறுபகுதியோ ஒரு குவளை சோற்றுக்கு அல்லாடும் நிலை மூன்றாம் மண்டல நாடுகளில்மட்டுமல்ல.மாறாகச் செல்வம் கொழிக்கும் மேற்குலகத் தொழில்வள நாடுகளிலும்தாம்!என்றபோதும் இந்த உழைப்பால் சேர்ந்த செல்வமானது கடந்த நாற்பது ஆண்டுகளுக்குமுன் சேர்ந்த செல்வத்தைவிட, 23 பங்கு அதிகமாகச் செல்வம் சேர்ந்துள்ளது இன்று.எனினும் அன்று கட்டிய கட்டங்களை,சமூகச் சொத்துக்களை மறுசீரமைக்கக்கூட இன்றைய அரசுகளால் முடிவதில்லை.அப்போ சேர்ந்த செல்வமெல்லாம் எங்கே?
தமிழ் மக்களுக்கு எதற்காக யுத்தம் அவசியமாகிறது?
போரின்மூலம் நமக்கு எது வந்து சேருவதாகச் சொல்கிறார்கள்?
தமிழீழம் என்ற தனியரசானது தமிழ்பேசும் மக்களின் உழைப்பை நியாயமாகப் பங்கிட்டும்,அவர்களது வாழ்வை எந்த வகையிலும் சுரண்டாமல் பாதுகாப்பதற்கும் நிச்சியம் உண்டா?இதைவிட இத்தகைய அரசு சாத்தியமானதா? நாம் எந்தத் தளத்திலிருந்து கருத்தாடுகிறோமென்பதை எல்லோரும் அறிந்தோமா?
தனி நபர்களை வழிபடுவதும்-தூற்றுவதம் அற்புதமான மனித- தேசப்பண்பல்ல.எனவே மீளவும் கேட்போம்:
எதற்காக யுத்தம்?
எதற்காப் பேச்சுவார்தை?
எதன்பொருட்டுச் சமாதானம்?
உழைத்தோய்ந்து வீடுமீளும் நம் கனவுகளுக்கெட்டாதபடி உலகத்தில் நிகழ்வுகள் நடந்து முடிகின்றன!நாம் காணும் உலகானது நமது கற்பனைகளுக்கெட்டமுடியாதவொரு திசையில் நகர்ந்தபடி.எத்தனையோ சிக்கல் நிறைந்த புனைவுகளால் இந்த உலகத்தை நாம் எதிர்கொள்வதாக இருக்கிறது.அந்தச் சிக்லை "உற்பத்தி,உபரி"-உழைப்பு,உழைப்புச் சக்திகள்"எனும் பொறிமுறைகளே உருவாக்கின்றன.மனித உழைப்பின் திறனே உபரியாகி அந்த உழைப்பை நாறிடிக்கின்ற சிக்கலில் நாமெல்லோரும் நலிந்து போகின்றோம்.இந்த நலிவானது உபரியின் திரட்சியில் பலரைப் பட்டுணிச் சாவுக்குள் தள்ளிச் சிலரைப் பிரபுக்களாக்கின்றபோது அங்கோ அந்தப் பிரபுக்களே நமது வாழ்வைத்தீர்மானிக்கின்றார்கள்.
இவர்களின் இருப்பில் நமக்கென்றொரு நிறுவனப்பட்ட சமூக இயக்கம் சாத்தியமாகிறது.அது கிரமமாக நமது உழைப்பைத்திருட வெளிக்கிடுகின்றபோது அங்கே பல கூறுகளாகச் சமுதாயக்கட்டுமானங்கள் எழுகின்றன:

இந்த நிலையில் ஒரு மனிதர் தாம் கொண்டுணரும் அறிவானது திட்டமிட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட அறிவென்பதை முதலில் உணர்தல் அவசியமாகிறது.அங்ஙனம் உணராதவரை தான் சார்ந்துகொள்வதும் அதனூடாகத் தனது நகர்வை அத்தகைய சார்பு நிலைக்குள் அடைவு வைத்தலும் நிகழ்கிறது.இங்கேதாம் நமது உருவாக்கம் அவசியமாகிறது!
நாம் யார்?
நிறுவனங்களின்,இயக்கங்களின்,அரசுகளின் அடிமைகளா?
அல்லது நம்மைப் புரிந்துகொண்டு நமது விடுதலைக்குகந்த கல்வியின்,கேள்வியின்மூலம் நம்மை வளர்த்தெடுத்து, இத்தகைய நிறுவனங்களுக்கெதிராகப் போராடப் போகின்றோமா?
இவை கேள்விகள்.ஆனால் நாம் சிந்தித்துச் செயற்படும் காலமே நமது விழிகள்முன் நிழலாடுகிறது.
தொடரும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
24.02.06
தமிழ்ப்பதிவுகள்
2 comments:
நல்ல பதிவு சிறீரங்கன், ஆனால் எத்தனை தூரம் செயல்படுத்த முடியும் என்பதுவே எனது சந்தேகம்.... யாரையாவது எங்கேயாவது எதற்காகவோ துதிக்க வேண்டிய நிலை உள்ளதே!!!
நன்றி குழலி அவர்களே!
தனிநபர் துதியானது இந்தப் பிரபுத்துவச் சமுதாயங்களில் இருந்தே இன்றைய முதலாளிய அமைப்புவரைத் தொடர்கிறது.
அது புரட்சியின் பின் பண்பாட்டு மாற்றத்தில் இல்லாது போகலாம்.
எனினும் நாம் இன்றைய அமைப்புக்குள் சிந்தித்து அதன்மீது விமர்சனத்தை முன்வைத்து முன்னேறுவோம்.
அடுத்து, நான் வரைபடத்தின்மூலம் இவ்வமைப்பின் படிநிலைகளை விளக்கப்படுத்த முனைகிறேன்.எனினும் அது தெளிவாகத் தெரியுதில்லை.
அதை எங்ஙனம் தெளிவாக்குவது?
Post a Comment