Tuesday, November 22, 2005

எச்சம்!

எச்சம்!

பனியுதைக்கும் அதிர்வில்
விறைத்தொதுங்கிய உணர்வும்
இளமைக்கு விடைகொடுக்கும் உடலும்,
இழப்பினது கனவுகளுமாக
இந்தக் குளிர் காலம்.
சற்று முன்
நிலாவின் ஒளியை
நுகர்ந்த என் மனது மௌனித்துக் கிடக்கிறது!

மாலை நேரத்துப் பொலிவுகளை
சிறார்களின் துள்ளலிலும்,
சிரித்தொதுங்கும் 'அம்மாக்களின்'
விழித்துடிப்பிலும் சுவைப்பது ஒரு நிலை!

இந்தக் குளிர் சுமக்கும் பொழுதுகளுக்கு
எந்தப் பொலிவுமில்லை!
இது
கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில்
மௌனித்த காலத்தின் அதிருப்தியாய்
மனதைக் கிளறிவிடும்

கார்த்திகையில் விளக்கிட்டு
தேவாரம் பாடிய மனதும்,
வாழைமரத்தண்டில் சிரட்டை வைத்துக் கொளுத்திய
எனது தீபமும்
நெடுநாளாய்த் தீந்த பொழுதுகளில் தனித்திருக்கு.
அந்த மனதின்
நினைவுத் தோப்பில்
தீராத வடுவாய்
நெருஞ்சியாய் குத்தும் முதிய பருவம்.

தரையில்பட்டுத் தெறிக்கும் உயிரும்
பேசவெழுந்த நாவின் முனகலும்
குருதியின் அதிர்வில்
நிலைமறுத்திருக்கு
என் தேசத்து முற்றத்தில்.

இருண்டவெளியின்
நெடும்பாதையில்
தேசத்தை நோக்கிய
நெஞ்சு
வனப்பிழந்து கிடக்க,
பார்த்துப் பழகிய பூமியும்
பாய்விரித்துப் படுத்த முற்றமும்
பாட்டுச் சொன்ன குயிலும்,
பக்குவமாய் கட்டிய வீடும்
பால் குற்றிய ஆலமரமும் தொலைத்து
சிலநொடியில்
முளையெறிந்த'தேசக் கனா'
என்னைப்
பரதேசம் அனுப்பியது ஒரு காலம்.


இன்றோ
விழித்திருக்கையில் மரணமும்
தூக்கத்தில்
ஆத்தையும்,அடுப்படியும்
பிடரிக்குள் வருகின்றன.

உடல்வியர்க்கும்
சூடான வானத்தையும்
சுகமாய்த் திரியும் மெல்லிய தென்றலையும்,
மேனியெங்கும் பட்டுவிலகும் வண்டுகளையும்
கால்வலிக்கத் துணைவந்த
தோழமையையும்-
தோளில் தொங்கிய துணிப்பையையும்
எங்கோ தொலைத்துவிட்டேன்!

--<-<--@ எவருமறியா இந்தப் பொழுதுகளின் 'எச்சில் இரவுகள்' எதற்கெடுத்தாலும் வெருட்டிக் கொண்டிருக்கு. குளிர் ஒரு புறமும், புறத்தியான் என்பதாய்ப் புகல் தேசமும் பால்யப் பருவத்து மார்கழித்'திருவெம்பாவை'யையும் திருநீற்று நெற்றியையும் சங்கின் ஒலியையும் உணர்வின் ஒரு மூலையுள் துரத்துகிறது. ஆத்தைபிடித்த "புதிய" அடுப்பும் அப்பன் சூடடித்த சிவப்பரிசியும் தையில் பொங்க, அண்ணன் சுட்ட வெடிகளும், பூந்திரிகளில் பூத்த எங்கள் "மனமும்"(பன்மையொழிந்த ஒருமை ;-( .) அன்றைக்குத் 'தம்பி',தங்கை, அக்கா,அண்ணன் உறவிருந்த தடயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கு! ===~ கனவு வாழ்வு குருதியுறையும் குளிர் பொழுதில் தொண்டைக் குழியில் சிக்கித் தவிக்கும் போசனத்து எச்சமாக... ப@ :-0 ப.வி.ஸ்ரீரங்கன் 22.11.2005

No comments:

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...