>>>>>'07.07.2005 துன்பியல் நிகழ்வு நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால்
திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும்
இஸ்லாமமியத் தத்துவார்த்தம்,இனவாதம்,வேலையில்லாத்திண்டாட்டம்,ஏழ்மை,
மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்-
மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது,அவர்களின் ஆத்திரமானது
அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது,
அது விருப்பையும் ஏற்படுத்துகிறது'<<<<<
இங்கிலாந்து தேசத்து மாபெரும் இமாம்(இவர் 'யூரோ இஸ்லாத்தை' முன் மொழிபவருங்கூட) இங்ஙனம் உரைத்தார்,கடந்த இலண்டன் குண்டு வெடிப்புக்குப்பின்னரான உரையாடல் ஒன்றில்.
அதாவது பிரச்சினைகளின் ஒரு துரும்பைக்கூட தொடுவதற்கான முயற்சி அடியோடு அழிக்கப்படுதலும் அதிலிருந்து தப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை மற்றவர்களின் முதுகில் கீறி விடுதலுக்கான அறிவுஜீவி ஒருவரின் கருத்தாக இந்த இமாமின் கூற்றை மேற்குலக இடதுசாரி வட்டாரம்கூட நோக்குகின்ற பாதகமான சூழலின் விருத்தி எங்ஙனம் நிகழ்தது என்று எனக்கு நீண்ட நாளாக ஒரே கேள்வியாக எழுவதும் பின் 'ம்' கொட்டுவதாகவுமே காலம் போனதுதாம் மிச்சம்.
யோசித்துப் பார்க்கின்றபோது நமது இன்றைய 'தமிழ் அரசியலோடு' இது வெகுவாக ஒன்றிப்போகிறது.
இஸ்லாத்தின் பெயரின் வாயிலான 'தாக்குதல்கள்' நியூயோர்க்,ட்ஜேர்பா,பாலி,மாட்றிட்,மற்றும் நெதர்லாந்துத் திரைப்பட இயக்குனர்
திரு.தேயோ வன் கோக்(Theo van Gogh)- இவையனைத்தும் கண்கெட்ட பயங்கரவாதமாகவும்,பொது மக்களைப்பற்றிக் கிஞ்சித்தும்
கணக்கிலெடுக்காத நாளாந்தக் காட்டுமிராட்டித்தனமான'
இஸ்லாமியப் பயங்கர வாதம்'என்பதை இந்த மேற்குலக நாடுகள் சொல்வதும்.இத்தகைய செயல் "தற்கொலைத் தாக்குதல்" போன்ற பயங்கரவாதமெனக் கூறுகின்ற மேற்குலக அரசியலைப் பிரதிபலிப்பதுபோன்றே ஜேர்மனிய/நெதர்லாந்து இடதுசாரி வட்டமும் பிரதிபலிப்பது இனிமேல் அதி தீவிரவாதக்-குறுங்குழுவாதப் போராட்ட முறைமைக்குத் தோல்வியாகும்.
நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட'சுதந்திரத்துக்குள்'வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.தாக்குதல்களுக்காக 'உந்துதல் கருத்தியல்' தளத்திலிருந்து 'அநுதாப' உணர்வுத் தாகமாக மாற்றப்பட்டே இத்தகைய மாபெரும் கொலைச் செயல்கள் நடந்தேறுவதாகக் கருத்தாடப்படும் தளம் பூர்ச்சுவா அமைப்புகளிடமிருந்து நடைபெறுவதாகா.மாறாக மேற்குலக முற்போக்கு சக்திகளிடமிருந்து இந்த விமர்சனம் எழுகிறது.பல்தேசியக் கம்பனிகளின் பாரிய சுரண்டலின்பால் கவனத்தைக் குவித்து அதுசார்ந்த முறைமைகளோடு தொடர்புடைய இத்தகைய 'இஸ்லாமியத் தீவிரவாதப் பழிக்குப் பழி'கவனமாக ஆய்ந்துணரவேண்டிய தளத்தைவிட்டு தடம் புரள்வதுபோல் படுகிறது.
இத்தகைய'இஸ்லாமியப் பயங்கரவாதம்'எனும் மேற்குலகக் கூற்றை நாம் 'இஸ்லாமிப் பழிக்குபழி' நடவடிக்கையென அழைப்பதையே விரும்புகிறோம்.இந்தச் செயலூக்கத்தை ஜேர்மனியப் புத்திஜீவிகள் ' இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல இலட்சக்கணகான டொச் மக்களின் கருத்தியல் மனதைக் கடந்த காலத் தலைமையால் துஷ்ப்பியோகம் செய்ததை மறுபடி ஞாபகப்படுத்துவதாகவும்-இது தலைமைத்துவத்தால்(கிட்லர்) துஷ்ப்பிரோயகம் செய்யப்பட்டது-,இது குறித்து ஜேர்மனியர்கள் இஸ்லாமியர்களின் பழிக்குப்பழி நடவடிக்கைகளுக்கு அநுதாபிகளாக இருப்பதே தவறு என்கிறார்கள்'ஏனெனில் ஜேர்மனியையும் மேற்குலகத்தையும் இன்று வரை பாலாத்தகாரப்படுத்தி வைத்திருப்பதாக இஸ்லாமியப் பழிக்குப்பழி நடவடிக்கையைக் காணுகின்றனர்.
1989 இல் ஈரானிய அதிபர் அயுத்துல்லா கொமேனியால் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு- அவரது'சாத்தானின் வேதம்'எனும் நூலின் கருத்துகளால் ஆத்திரமுற்று (மேற்படி ஆசாமியால்)- மரணத்தண்டனை மொழியப்பட்டு ருஷ்டியைக் கொல்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்தத் தளத்தை
மேலும் விரிவுப்படுத்துவதைப் பார்க்கிலும் அந்த நிலைக்குள் ஊடுருவியுள்ள அடிப்படை வாதமானது தனது வியாபகமான அதிகாரத்தை உலகு பூராகவும் நிறுவியுள்ளதை இனம் காண்பதுதாம் சாலப் பொருத்தமானது இன்றைய நமது சூழலில்.
கொய்மேனியின் அதிகாரத்துவ மொழிவுக்குப் பின்பாக மேற்குலக இடதுசாரிகளால் ருஷ்டிக்குத் தோள் கொடுத்த தோழமை- மேற்குலக இடதுசாரிகள் நிச்சியமாக இந்த இஸ்லாத்தின்'"Fatwa"வை இங்ஙனம் பார்க்கலாம்:'இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்பான பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் கொய்மேனி நடந்த பாதையானது 'ஸ்சறியா'(Sharia) குறித்துரைக்கும் கொள்கைகளோடு தொடர்புடையது.இது இஸ்லாம் குறித்துரைக்கும் சட்டதிட்டங்களையும் உலகத்துக்குப் பொதுமைப்படுத்துகிறது.அதாவது ருஷ்டியைக் கொல்பவன் கொலைக்காகத் தயார்ப் படுத்தப்பட்ட கைக்கூலியல்ல.மாறாக ஒவ்வொரு இஸ்லாமியப் பற்றுள்ள இஸ்லாமைச் சேர்ந்தவரும் ருஷ்டியைக் கொல்ல உரித்துடையவர்.இங்ஙனம் கொல்ல நாட்டமுற வேண்டியது அல்லாவுக்கு விருப்புடையதாகக் கருத்தியல் விதைக்கப்பட்டது.'இந்தக் குடிசார் மனது நெதர்லாந்தின் திரைப்படக் கலைஞர் திரு.வன் கோக்கைக்(Theo van Gogh) கொன்று தனது "Fatwa" வை வெளிப்படுத்தியது!
இஸ்லாமானது கருத்தியல் தளத்திலும் அரசியல் திட்டமிடலிலும் ஒரு திடமான பிரேரணைகளை முன் மொழிகிறது.இது நாசிகளின் பாசிச இனவாதக் கொலைகள்,கருத்துக்களிலுமிருந்து மிகத் தெளிவாக வேறுபடுகிறது.இஸ்லாத்தின் இந்தக் கருத்தியலானது ஒரு குறிப்பிட்ட இனவாதாக் கொள்கையை நிராகரித்துவிட்டு,முழு மனிதர்களையும் தனது கருத்தியல் தளத்தில் கவனிக்கிறது.இதுதாம் தமது கடவுளாரான'அல்லாவுக்கு'எதிராகச் செயற்படுபவர் எவராயினும் இஸ்லாத்தை தழுவிய எந்தப் பொது மனிதராலும் கொல்வதற்கு உருத்தாக்கி விடுகிறது.இங்ஙனம் கொல்கின்றவர்-இஸ்லாமுக்காகத் தனது ஆயுளை அற்பணிக்கும்போது 'சொர்கத்துக்கு'நேரடியாகப் போகின்றார்.இது உலகியல் வாழ்வில் அநுபவிக்கும் நரக வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறையாகவும் குறித்துரைக்கப்பட்டு இஸ்லாமிய மனிதரை உருவாக்கிவிடுகிறது.இஸ்லாமானது உடோபிசம் இல்லை.அது குறித்துரைக்கும் கருத்துக்கள்,நடவடிக்கைகள் யாவும் மனிதனைக் கடைந்தேற்றும் செயல் முறையாக அன்றாடம் வாழக் கற்றுக் கொடுத்துள்ளது.எனவே இது கற்பனாவாதாக் கருத்து நிலையிலிருந்து வேறுபடுகிறது.இது ஈரானிலுள்ள மாசாத் எனும் நகரில் கடந்த ஜுலாய் 2005 இல் இரண்டு பதின்ம வயதுப் பாலகர்களுக்கு 'வெளியரங்கில்'மரணத்தண்டனை வழங்கியது.கழுத்தில் சுருக்குப்போட்டு மக்களின் பார்வைக்கு முன்னால் கழுமரத்தில் தொங்கவிட்டது.அவர்களுக்கான மரணத் தண்டனை எதனால் வழங்கப்பட்டது?இச் சிறார்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதற்கான தண்டனைதாம் இஃது!
ஐரோப்பாவில் தடைகளுக்குள்ளாகும் இஸ்லாமியத் தீவிரவாதம்,பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணயப் போரையே மிகவும் பலயீனப்படுத்திவிட்டது.இந்த நிலையில் எந்தத் தீவிரவாதத்துக்கும்,தேசியவாத முன்னெடுப்புகளுக்கும் மேற்குலக'வெகுஜன மட்டம்'எதிராகவுள்ளது. 'பயங்கரவாதச் செயல்களைச் சர்வசாதரணமாக்கிய இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்களால்,குடிசார் மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் சூழல் உருவாகிறது.உயிர்த்திருத்தல் என்பது நிசத்தில் சாத்தியமற்றவொன்றாகப் போயுள்ளததை இது வலியுறுத்துகிறது...' இங்ஙனமே ஐரோப்பிய வெகுஜனங்கள் கருதும்போது யூத ஒடுக்கு முறைக்கு முகங்கொடுக்க முடியாத பாலஸ்தீனத்தின் நியாயமான போராட்டத்தைப் போன்ற எமது 'சுயநிர்ணயப'; போராட்டம்கூட தமிழ்த் தேசியத்தின் அதீத பயங்கர வாதத் தாக்குதல்களால்,கொலைகளால் இந்த மக்களிடம் எமக்கு ஆதரவான மனநிலையைக் காண முடியாத சூழலையுருவாக்கி விட்டுள்ளது.ஏன் நாம் பல தூரம் போவான்?நமது போராட்டத்துக்கு,வெற்றிக்கு மிகவும் அவசியமான 'உந்துதல்'எங்கிருந்து வரவேண்டுமோ அதுவே நம்மைத் தடை செய்யுமளவுக்கு நமது பயங்கரவாதம் தமிழகத்தை அந்நிய மண்ணாக்கி விட்டுள்ளது.
இங்கே நாம் மேலே குறித்துச் சொன்ன தமிழ் அரசியலோடு நெருங்கி வருவதென்பது 'கருத்தியலால் உந்தும் மனிதர்களை'உருவாக்குதலும்,அவர்களைப் பின்னிருந்து தூண்டும் தத்துவார்த்தத்தையுமே பொதுமைப் படுத்துவத்தைச் சொல்கிறோம்.
இங்கே மரணிப்பது நிலைத்து வாழ்வதாகவும்,தியாகமாகவும்,மாவீரமாகவும் கருத்து விதைக்கப்படுகிறது.தமிழ்த்தேசியத்தின் விருத்தியானது மிகவும் பின்தங்கிய 'குறுந்தேசியத்தின்'இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது.அது ஆண்டுக்குப் பல முறை ஒவ்வொரு புதிய வார்த்தைகளைக் கண்டுபிடிக்கிறது.உதாரணத்துக்கு'மாவீரர் தினம்'இந்தாண்டு'தேசிய மாவீரர் தினம்'என்றாகிறது.இது மக்களிடம் ஆயுத சாகசங்களையும்,தனிநபர் வழிபாடுகளைங் காட்டுவது மட்டுமல்ல கூடவே சிறார்களைப் பலி கொடுத்த பெற்றோர்களைக்கூட விட்டுவைக்காது-தமது சின்னஞ்சிறு குழந்தை பலியானது சரியானதாகவும்,அவர்கள் இறந்து போகவில்லையென்றும்,வீரத்தில்-தேசத்தில் உயிராகத் தம்மோடு வாழ்வதாகக் கருத்துக் கூறுமளவுக்கு அந்தப் பெற்றோர்களைத் தயார்ப்படுத்திக் கேவலமாக்கிறது.இந்தத் 'தேசியத்துக்குள்'சிக்குண்ட இந்தப் பெற்றோர்கள் தேசியத்தை முன்னெடுப்பவரின் ஊடககங்களில்,தொலைக்காட்சிகளில் மலர்ந்த முகத்தோடு தமது மழலகைள் 'வீரச்சாவடைந்தது'மகத்தானது என்றும்,அந்தச் சிறார்களை'அவர்,இவர்' என்று அழைத்துக்கொள்வதும்,தேசத்தின் விடுதலையில் பற்றுள்ளவராகவும்,இலங்கையரசின் அட்டூழியங்களைப் பற்றியும்,தமிழர்கள் விடுதலையடைய வேண்டுமென்ற நியாயப்பாடுகளையும் தினம் தமக்குக் கூறுபவராகவும் ,மாணவராகவும் இருந்தார் என்றும்,இதனால் தேசத்துக்காப் போராடித் தெய்வமாகினார் என்கிறார்கள்.பதின்ம வயதுச் சிறார்கள் வாழ்ந்து கெட்ட பெரிசுகளுக்கு,பெற்றோருக்கு'சிங்கள அரசின்'அட்டுழியங்களைச் சொன்னார்களாம்!-அப்போ இந்தத் தடிமாடுகள் எந்தவுலகத்தில் வாழ்ந்தார்கள்?தமக்கு அநுபவப்படாத இந்தக் கொடுமைகளை,இன்னல்களை,நியாயப் பாடுகளைச் சிறார்கள் சொல்லித்தாம் தெரிந்துகொள்ளும் நிலையிருந்தவர்கள் எப்படித்தாம்'பிள்ளைகளை' மட்டும் மண்ணை நேசிக்கும் மகத்தான மனிதர்களாக வளர்த்தார்களோ தெரியவில்லை!
இன்றிருக்கும் தமிழ்க் கருத்தியல் தளமானது இஸ்லாமிய அடிப்படைவாதத்தோடு மிகவும் பொருத்தப்பாட்டோடு நகர்கிறது.இஸ்லாத்தின் அதீத கருத்தியல் ஆதிக்கம்-மனித மூளையைச் சலவை செய்தல் போன்றே தமிழ்த் தேசியக் கதையாடல்கள் தமிழ்ச் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்துள்ளது.இதற்காகத் தமிழ் ஆளும் வர்க்கமானது தன்னை முழு ஆற்றலோடு ஈடுபடுத்துகிறது.சமூகத்தின் அனைத்து அறிவார்ந்த தளங்களையும் இது கைப்பற்றிவிட்டது.கல்வி,கலை இலக்கிய,பண்பாட்டுத்தளத்தை இது வலுவாக ஆதிக்கம் செய்கிறது.இங்கே அந்த வர்க்கத்தின் வலு மிருகவலுவாகவுள்ளது.இதை உடைத்தெறிந்து உண்மையான மனிதாபிமானமிக்க,ஆளுமையான மனிதர்களை உருவாக்குவது மிகக் கடினமான பணியாக இருக்கிறது.
பல வருடங்களாக உலகம் பரவலாக தமிழ் தேசியத்தால் உந்தப்பட்ட மனிதர்களால் 'தமிழ்தேசியத்தை'விமர்சிப்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்,சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.இது மிகவும் மௌனிக்கத்தக்க செயலில்லை.நெதர்லாந்தில் புகலிடம் கோரிய மொரக்கோ நாட்டு இஸ்லாமியனுக்கு என்ன நடந்ததோ அதே நிலையில்தாம் தமிழர்களில் பலர் உள்ளர்கள்.தேயோ வன் கோக் இஸ்லாத்தைப்பற்றி பொய்யுரைக்கவில்லை.கடந்த பல வருடங்களாகப் பெண்ணிய வாதிகள் கூறிவந்தவற்றையே தனது "Submission"திரைக்கதையூடாக முன் வைத்தவர்.பெண்ணியவாதியான அன்யா மொய்லன்பெற்;(Anja Meulenbelt)இதுவரை காலமாக இஸ்லாத்தின் கருத்தியலையும்,அது குறித்துரைக்கும் பெண் தன்மையையும் விமர்சித்தளவுக்குக்கூட தேயோ வன் கோக்கின் திரைப்படம் முன் வைக்காது போயினும்'விசூவல் மீடியாவின்'வலு அந்த மொரோக்கோ நாட்டினனைச் சொர்க்கத்தின் கனவுக்குள் மூழ்கடித்துள்ளது.நமது நிலையும் இஃதே.மாற்றுக் கருத்தாளர்கள் -தமிழ்த் தேசியத்தை விமர்சிப்பவர்கள் சிறுசஞ்சிகைகளோடு நின்றபோதே சகிக்க முடியாத இந்தத்'தேசியமயப்படுத்தப்பட்ட மனிதர்கள்'வானொலிகளில் கருத்தாடும் நிலைக்குச் செல்லும் மாற்றுக் கருத்தாளர்களை உயிரோடு வாழ அநுமதிப்பதில்லை.இங்கே தேயோ வன் கோக்'கு நடந்த அதே பயங்கர வாதம் மக்கள் மயப்படுத்தப்பட்டு பல வருடங்களாச்சு!
தமிழர்களுக்கு மகத்தான நாளாகவும்,நன்றி கூறத்தக்க நாளாகவும் ஆக்கப்பட்ட'27.11.'(கார்திகை 27)இந்த வகைப்பட்டவொரு'மாதிரி'தமிழ் மனிதர்களை உருவகப்படுத்தும் தந்திரத்தை தன்னகத்துள் வைத்திருக்கிறது.இது மண்ணுக்காகத் தமது உயிரைவிடுதல், மாண்டும்'உயிர் வாழ்வதாக'உருவகப்படுத்தப்பட்டு அதுவே மகத்தான'வீரமாகவும்'தியாகமாகவும்,வாழ்வின் உண்மையான அர்த்தமாகவும் கருத்துப் பரப்பப்பட்டு அதையே பண்பாட்டுத் தளத்தில் நிலையான பண்பாடாக வளர்த்தெடுத்துள்ளது தமிழ் ஆளும் வர்க்கம்.இது தகவமைத்து வைத்திருக்கும் இந்த 'மாதிரி மனிதர்கள்'இஸ்லாமியப் பழிக்குப்பழி போராட்டத்தைப் போலவே தமது போராட்டத்தையும் பயங்கர வாதமாக-தனிநபர் பயங்கரவாதமாக விரிவுப்படுத்தியுள்ளார்கள்.இதனால் தமிழ் மக்களின் உண்மையான 'சுயநிர்ணயவுரிமை' அர்த்தமிழந்த வெறும் சொல்லாடலாக மாற்றப்பட்டுவிட்டது. இது எந்தவொரு ஜனநாயகப் பண்பையும்,மனித விழுமியங்களையும் ஏற்பதற்கு மறுக்கிறது. சாதரண இஸ்லாமியர் ஒருவர் கருத்தாடுகிற அதே பாங்கில் இந்தத் தமிழ் 'மாதிரி மனிதர்களும்'தமது தலைமை குறித்து,போராட்டம் குறித்து,உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் கதையாடுகிறார்கள்,தலைவரின்'மாவீரர் தின'உரையில் வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும்-இஸ்லாமியனுக்கு 'புனிதக் குரான்'போன்று இங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டு,அர்த்தமாகிறது.இவர்களே தமது தலைமையை-தலைவரைத் தெய்வமாக்கி வழிபடும் அளவுக்குக் கருத்துக்களால் வார்த்தெடுக்கப்பட்டபோது தலைவரின் "51வது" பிறந்த நாளுக்கு 51 பொங்கற் பானைகளில் பொங்கிப் படைத்து மகிழ்வதுவரைச் செல்கிறது.வாழ்க தமிழ்ப் பண்பாடு!
மீளவும் அந்தப் பிரித்தானிய இமாமின் வார்த்தையை நினைத்துப் பார்க்கிறேன்,
>>>>>'07.07.2005 துன்பியல் நிகழ்வு நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால்
திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும்
இஸ்லாமமியத் தத்துவார்த்தம்,இனவாதம்,வேலையில்லாத்திண்டாட்டம்,ஏழ்மை,
மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்-
மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது,அவர்களின் ஆத்திரமானது
அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது,
அது விருப்பையும் ஏற்படுத்துகிறது'<<<<<
தமிழ் மக்களின் இன்றைய நிலையை மேற்சொன்ன அவரது
கூற்றிலிருந்து நிதானமாக விளங்கிக்கொள்ள முடிகிறது.
********************************************************
ஒப்பாரி,
ஒப்பாரி இது ஈழப்போர் தந்த ஒப்பாரிங்கோ!
பானையிலே போட்டரிசி
பாடையிலே போட்டழ பாதகர்கள் தரவில்லை
பாதகர்கள் தந்திருந்தால்
பால்வார்த்துப் பார்திருப்பேன்!
பாவீ நானும் பட்டழ
பரதவித்துப் போனாயோ?
மாவீரர் மகனென்ற மமதையிலே மடி மறந்து போனதுவோ?
* மந்திகைக்குப் போன கதையாய்
மாசம் சுமந்த கதை போச்சு
மக்களில்லா வீட்டிற்கு மகத்துவமுண்டோ?
மடைச்சி நானும் மயங்கிப்போனேன்
மாவீரர் கதைகேட்டு
மகனே உனைமறந்த மரக்கட்டையை மன்னிப்பாயோ
என்ர குஞ்சரமே கொழுக்கட்டையே!
2
குஞ்சரமே குளத்தடியே
கொப்பனுக்குக் கற்கண்டே
கொட்டி வைத்த முத்தெல்லாம் மோதுண்டு சிதறியதோ?
மோடர் மலம் மிதித்திட்டால் மூன்றிடத்தில் நாசமென்று
சீலைக்குள்ள தவம் கிடந்து சிக்கனமாய் பெத்த குஞ்சே!
சண்டாளி நானெருத்தி சகதிக்குள்ளே கிடந்தழ
சாய்த்துவிட்டார் உனையல்லோ!
சாய்த்து வைத்த சுளகுபோல சாய்ந்தாயோ நீயுமங்கு?
ஏழை பெத்த பிள்ளையெல்லாம் எதிரயிடம் செத்துப்போக
கட்டுடலாய் காத்துவிட்டார் தத்தமது உடலையெல்லாம்
காயடித்த கடுகுப்பிஞ்சுகள் கருகிவிழ
காலிப்பயல்கள் கதைபோட்டார் மாவீரர் திரைபோட்டு
கால்வலிக்க நடக்கின்றோம் மகவுகளின் உடல் புதைத்த குழி தேடி
காலமெல்லாம் கனவுகளாய் அவர் முகங்கள்
3
நாசமாய்ப்போனவங்கள் தேசத்தை ஆளயிங்கு
நாயிலும் கேவலமாக நான் கிடந்து அழுந்திடவோ?
நாதியில்லை நக்குவதற்கு
நமக்கிங்கு நல்வாழ்வாம் கடவுளிட்ட கற்கண்டே
கனியமுதே தேனமுதே
கக்கூசு கழுவவைக்கும் காலிப்பயல்கள்
சாதியப் பெருந்தடிப்பில் சதிராடி தமிழீழக் குரலெடுக்க
நாடுவொன்று வேண்டுமென்று நாங்களிங்கு செத்துப்போனோம்.
சின்னவயசுப் பயல்களெல்லாம் இப்போ
சீட்டியடிச்சுப் போகையிலே
சித்திரமே பத்திரமே
சிணுங்குகிறேன் உனை நினைத்து
கூட்டிவைத்துக் கதை சொன்னார்
கும்மியடி தமிழ் என்றார்
குரைத்து நின்ற எதிரொலியில் குறைகளெல்லாம் குறையுமென்று
குனிந்து நாங்கள் கும்பிட்டோம்
குனிந்த தலை நிமிர்வதற்குள் குடிகுலைந்துபோக
குளமாடி நின்ற கண்கள் குளிருடலில் புதைந்தனவே
குஞ்சரமே குண்டலமே நீ
வெஞ்சமரும் வேதனையாய் உணர்ந்தாயோ?
4
ஆருதாம் இருந்தென்ன
ஆனை கட்டி வாழ்தென்ன?
அமெரிக்கா சொன்னவுடன் அத்தனையும் பறந்துவிடும்
அப்பனுக்கு வைத்தநேத்தி அம்போவென்று போனதுவே!
பெட்டகமே புத்தகமே
பேதையிங்கு தவிக்கையிலே
போண்டியான கோசங்களும் போடும் வரி கொஞ்சமல்ல
வாழ்ந்து நீயும் பார்திருந்தால் நிம்மதிக்காய் வாய்திறப்பாய்
போட்டிருப்பார் உன் கழுத்தில் தமிழினத்தின் துரோகியென்று
அம்மாவின் அருமருந்தே அப்பனுக்குப் பொக்கிசமே நீ
கச்சைக்குள்ள வெடி சுமந்த காலமெல்லாம்
கற்பம் கரைந்த கதையாச்சு
கண்மணியே கடைக்குட்டியே நீ
கால்தெறிக்கப் போனயோ அன்றி
போகுமிடம் தெரியாது பொழுதெல்லாம் அலைந்தாயோ?
வெஞ்சமரும் வேதனையும்
நீ சுமந்த காலமெல்லாம் நான் கலங்கி
நிம்மதிக்காய் அம்மனிடம் மோதிக்கொண்டு
நெஞ்சு நோக வீடுமீளும் காலமதை நீயறிவாய்
இன்றோ நித்தமொரு குண்டுபோட்ட ஆமிக்காரன்
நெஞ்சளக்கும் நேசமானாம் கண்ணியத்தின் காவலனாம்
கட்டிப்போட்டுக் கதைசொல்லும் காரியக்குட்டிகளும்
கனவானாய் மாறிவிட்ட தமிழீழத்தாகமும்
சேர்த்துக்கொண்ட சொத்துகளின் சொந்தக்காரர்
காட்டிக்கொடுத்தார் பட்டியலில்
காவுகொண்ட குஞ்சரங்கள் ஆயிரமாயிரமாம்
கொண்டைபோட்ட பெண்டுகளின் கோவணத்துள் வெடியமுக்கி
கொலைகொண்ட கோரமெல்லாம் கோசங்களின் கோவணத்துள்!
5
கட்டிவைத்து உதைத்தவர்களும்
கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்
சிரட்டையிலும் போத்தலிலும் நீரருந்த வைத்தவர்களும்
கட்டிவைத்த மனைகளுக்குள் நாம் எட்டிப்பார்க்க மறுத்தவர்களும்
தமீழக்கோட்டைக்குள் சோடிசேர அழைத்தார்கள்
சேர்ந்து தோள் கொடுத்த நம்மை
அடக்கிவிட துடிக்குமிவர் ஈழமெனும் கோசத்தால்
ஈட்டியெய்தார் எம் முதுகில்
சொந்த வாழ்வின் சுகத்துக்காய் இன்னுமெமை ஏய்த்தபடி
ஐயா குஞ்சரமே!
மாலைவேளை மதியை கருமேகம் காவுகொள்ள நீ
மிதமான கனவோடு மிதிவெடியும் தாட்டு வைத்து
காத்தருந்த காலமதை பெத்தமனம் பித்தாகி
பேசும் வாய்க்கு மொழியில்லை
கள்ளமனம் படைத்த காசுக்கார கூட்டமின்று
சிங்களத்துச் சந்தையிலே கடைவிரித்துச் சமாதானம் விற்க
கட்டுக் கட்டாய் பணம் சேரும் அவர் கணக்கில்
வறிய நாம் வாடுகிறோம் வாழ்விழந்த எங்கள் மழலைகளுக்காய்
தொட்டிலுக்குள் போட்ட குழவி
தொலைந்துவிடும் ஒரு நொடியில்
தோள்கொடுக்கப் போனதாகச் சேதி வரும் மாலைதனில்
மாறி மாறிப் பார்த்துவிட்டு மயங்கிவிடும் தாய்மனது!
மடிகடித்த நினைவுகளும் மங்கலாக வந்துபோகும்
வார்த்தையின்றிச் சோர்ந்துவிடும் வந்து போகும் உணர்வுகளும்
வானுயர்ந்த நோக்குக்காகவா
வாழ்விழந்தோம் இன்றுவரை?.
*(மனநோய் வைத்திய சாலை
மந்திகையெனும் ஊரில் இருப்பதால் மந்திகை குறியீடாகிறது.)
ப.வி.ஸ்ரீரங்கன்
26.11.2005
தமிழ்ப்பதிவுகள்