Skip to main content

சிவாஜிலிங்கம் அவர்களின் மரணமும் நம் அரசியல் நினைவுகளின் மறு(மீள்) எழுதலும்

 சிவாஜிலிங்கம் அவர்களின் மரணமும் நம் அரசியல் நினைவுகளின் மீள் எழுதலும் —ஓர் நீண்ட குறிப்பு ! 


—ப.வி.ஶ்ரீரங்கன் 


ஓர் , நீண்ட , நெடிய குரல் . தமிழ் , சிங்களம் மொழிகளுள் சரளமாக உரையாடிய குரல் நம்மிடமிருந்து விடை பெறுகிறது . 


இந்தவொரு மனிதரின் மரணத்தை மட்டுமல்ல எந்த ஒரு மனிதரின் மரணத்தையும்  மதிப்போம்; ஆனால்,  வரலாற்றை மன்னிப்புப் பத்திரமாக மாற்ற வேண்டாம் என்பதே என் வாதம் . 


வரலாறு ,தமிழ்த் தேசிய அரசியல் , சிங்களப் பேரினவாதம் , ஆயுத இயக்கங்களின் அதிகார அரசியல் , ஜனநாயக விமர்சனம் என்றெல்லாத் தரப்புக்குள்ளும் சுழியோடியவர் சிவாஜிலங்கம் அவர்கள் என்பதுள் இருவேறு கருத்து இல்லை . 


எனவே, 

சிவாஜிலிங்கத்தின் மரணமும் நம் அரசியல் நினைவுகளின் மீள்  (மாற்று) எழுதலும் என்று நாம் இந்த மனிதரின் சமூகப் பாத்திரம் குறித்துத் துல்லியமாக அணுகவேண்டும் . வரலாற்றில் , சம்பந்தனின் அரசியற் பாத்திரத்துக்கு இல்லாத கடமை இவர்குறித்து நாம் பேச வைக்கிறது . 


ஆக , ஒரு மனிதரின் மரணத்தை மதிப்போம்; ஆனால் , வரலாற்றை மன்னிப்புப் பத்திரமாக மாற்ற வேண்டாம்! ; இது, வரலாற்றுக் கடமை ! 


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமான செய்தி வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதும், அவரது குடும்பத்தினரின் துயரத்தில் மனிதநேயத்துடன் பங்கெடுப்பதும் இயல்பானது. ஒரு மனிதரின் மரணம் தனிப்பட்ட துயரமாக மதிக்கப்பட வேண்டியது.


ஆனால், மரணம் என்பது வரலாற்றுக்கான முடிவல்ல. அதிலும் குறிப்பாக, அரசியல் வாழ்க்கையைத் தனது அடையாளமாகக் கொண்ட ஒருவரின் மரணத்துக்குப் பின்னர், அவருடைய அரசியல் வரலாற்றை விமர்சனமின்றிப் புகழ்மாலைகளால் அலங்கரிப்பது வரலாற்று நேர்மையாகாது.


இன்று , சிவாஜிலிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளிவரும் சில பதிவுகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன. அவர் மக்களையும் மண்ணையும் இனத்தின் விடுதலையையும் நேசித்த போராளி என்றும், தன்னுடைய எதிர்காலத்திற்காக எதையும் தேடிக்கொள்ளாத தன்னலமற்ற மனிதர் என்றும், இனத்தின் வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார் என்றும் , எழுதப்படுகின்றது.


இத்தகைய கூற்றுகள் , ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட மதிப்பீடுகளாக இருக்கலாம். ஆனால் அவற்றை முழுமையான வரலாற்றுத் தீர்ப்புகளாக ஏற்றுக்கொள்ள முடியாது.


ஒரு அரசியல்வாதியின் தனிப்பட்ட எளிமை, பொருளாதாரச் செல்வச் சேர்க்கை இல்லாமை அல்லது,  சிலருக்கு அவர் செய்த உதவிகள் ஆகியவை அவரது அரசியல் நிலைப்பாடுகளையும் வரலாற்றுப் பொறுப்புகளையும் தீர்மானிப்பதில்லை. தனிப்பட்ட நற்பண்பும் அரசியல் ஜனநாயகப் பண்பும் ஒன்றல்ல.


TELO அரசியலிலிருந்து தொடங்கிய பயணம்


சிவாஜிலிங்கம் தனது அரசியல் வாழ்க்கையைத் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) வழியாகத் தொடங்கியவர். அவரது சொந்த நேர்காணலின்படி, தனது பதினாறு வயதில் TELO அமைப்பில் இணைந்த அவர், அதன் அரசியல் பிரிவில் பணியாற்றினார். ஆயுத நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கெடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.



TELOவின் ஆரம்பகால அரசியல் மற்றும், ஆயுதச் செயல்பாடுகளைப் பற்றிய அவரது சொந்த விளக்கங்களும் கவனிக்கத்தக்கவை. அந்த அமைப்பின் இளைஞர்கள் வங்கிகள், கடைகள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்து நிதி திரட்டியதாகவும் அவர் நேர்காணலில் கூறியிருக்கிறார்.


இது ஓர் அமைப்பின் ஆரம்பகாலச் செயல்பாடுகள் குறித்த முக்கியமான சுயசாட்சியமாகும். ஆயுதப் போராட்டம் என்ற பெயரால் எல்லா நடவடிக்கைகளையும் புரட்சிகரச் செயல்களாகப் புனிதப்படுத்த முடியாது.


ஒரு இயக்கம் மக்களின் விடுதலைக்காகச் செயல்படுவதாக அறிவித்துக்கொள்வதால் மட்டுமே அதன் வழிமுறைகள் விடுதலை அரசியலாகிவிடுவதில்லை. அதன் அரசியல் நோக்கங்கள், அமைப்பு உறவுகள், நிதி திரட்டும் முறைகள், மக்களுடனான உறவுகள், ஜனநாயக நடைமுறைகள் ஆகிய அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


1986: தமிழர் அரசியலின் இரத்தக் கறை


1986’ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை இயக்கங்களின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாகும்.


தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காகப் பல்வேறு ஆயுத அமைப்புகள் உருவாகியிருந்த சூழலில், அவற்றுக்கிடையே அரசியல் வேறுபாடுகளும் அதிகாரப் போட்டிகளும் வளர்ந்தன ; திட்டமிட்டு வளர்க்கப்பட்டன. இவ்வேறுபாடுகளை ஜனநாயக விவாதத்தின் மூலமாகத் தீர்ப்பதற்குப் பதிலாக ஆயுத வன்முறையால் தீர்க்கும் போக்கு மேலோங்கியது.


1986 ‘ஆம் ஆண்டு ஏப்ரல்–மே மாதங்களில் LTTE, TELO மீது நடத்திய தாக்குதல்கள் இதன் உச்சமாக அமைந்தன. TELO’வின் மேல்நிலைத்  தலைவர் சிறீ சபாரத்தினம் கொல்லப்பட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் 1986’ஆம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையின்படி, மே மாதத்தில் புலிகாளல்(LTTE)  150 முதல் 170 ரெலோ(TELO) உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.


இந்தத் தாக்குதல்கள் வெறுமனே இரண்டு ஆயுத அமைப்புகளுக்கிடையிலான மோதலாக மட்டும் பார்க்கப்பட முடியாது. தமிழர் அரசியல் வெளியில் மாற்றுக் கருத்துகளுடன் இயங்குவதற்கான உரிமை ஆயுத அதிகாரத்தால் நசுக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவமாகவும் பார்க்கப்பட வேண்டும்.




இங்கு ஒரு முக்கியமான உண்மையை மறக்கக்கூடாது.


TELO உறுப்பினர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று சிலர் கூறுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. அதேபோல், சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என்பதற்காகப் பிரபாகரனால் பாதுகாக்கப்பட்டுப் புலிகளில்  இணைக்கப்பட்டார் என்பதற்கும் ஆதாரம் இல்லை.


மாறாக, சிவாஜிலிங்கம் 2017’ஆம் ஆண்டு இலங்கையின் டெய்லி மிரருக்கு (Daily Mirror) வழங்கிய நேர்காணலில், புலிகளின் அச்சுறுத்தலால் கொழும்பில் தங்கியிருந்ததாகவும், பிரபாகரன் தன்னைக் கொல்ல விரும்பியதாகவும் கூறியிருக்கிறார்.


எனவே, அவருடைய உயிர் தப்பிய வரலாற்றை அவர் பிறந்த ஊரின் அடிப்படையில் மட்டும் விளக்குவது வரலாற்று ஆய்வாகாது.


ஆனால் , இங்கு எழும் பெரிய அரசியல் கேள்வி வேறொன்று.


ஒரு விடுதலை இயக்கம் என்று தன்னை அறிவித்துக்கொண்ட அமைப்பு, ஏன் தனது சொந்த அரசியல் வெளியில் இருந்த மற்றொரு தமிழர் இயக்கத்தை ஆயுத வன்முறையால் அழித்தது?


இதற்கான பதில் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அதிகார அரசியலை ஆராய்வதில்தான் இருக்கிறது.


இதுவரை நடந்தது ; நடப்பவை , விடுதலைப் போராட்டமா, ஏகபோக அதிகாரப் போராட்டமா?


புலிகளின் (LTTE)  வரலாற்றை ஆய்வு செய்யும்போது, இலங்கை அரசின் தமிழர் மீதான தேசிய ஒடுக்குமுறையையும் அதற்கெதிராக உருவான ஆயுத எதிர்ப்பையும் முதலில் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.


பெளத்த செளனிசச் சிங்களப் பேரினவாத அரசின் மொழி, கல்வி, நிலம், அரசியல் அதிகாரம் சார்ந்த ஒடுக்குமுறைகள் தமிழர் மத்தியில் ஆயுத எதிர்ப்புக்கான சமூகச் சூழலை உருவாக்கின. அந்த வரலாற்று உண்மையை நாம் (இடதுசாரிகள்) மறுப்பது தவறு.


ஆனால் , அரச ஒடுக்குமுறைக்கு எதிராக உருவான ஆயுத இயக்கம் என்பதாலேயே அதன் அனைத்துச் செயல்களுக்கும் அரசியல் நியாயம் கிடைத்துவிடாது.


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தன் போட்டி இயக்கங்களை ஒழித்தது. மாற்றுக் கருத்துகளை ஒடுக்கியது. தன்னைத்தவிர வேறு எந்தத் தமிழ் அரசியல் அமைப்புக்கும் சுயாதீனமாக இயங்குவதற்கான உரிமையை ஏற்க மறுத்தது.


1986’இல் TELO மீதான தாக்குதல்களும், பின்னர் EPRLF உள்ளிட்ட அமைப்புகள் மீதான நடவடிக்கைகளும் இதற்கான வரலாற்றுச் சான்றுகளாகும்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை விசாரணை ஆவணங்களும் புலிகள்(LTTE) எவ்வாறு மற்ற ஆயுத இயக்கங்களை விடத் தனக்கே ஏகபோக அரசியல் அதிகாரத்தை நிறுவியது என்பதைப் பதிவு செய்கின்றன.


இதனைப் புரிந்துகொள்ளாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை(LTTE) ஒரு புரட்சிகர விடுதலை இயக்கமாக மட்டும் சித்தரிப்பது வரலாற்றின் ஒரு பகுதியை மறைப்பதாகும்.


மார்க்சிய அரசியல் பார்வையில், ஒரு அமைப்பின் புரட்சிகரத் தன்மை அதன் முழக்கங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது மக்களின் அரசியல் பங்கேற்பை எவ்வாறு நடத்துகிறது, உழைக்கும் மக்களின் நலன்களை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகிறது, உட்புற ஜனநாயகத்தை எவ்வாறு பாதுகாக்கிறது, விமர்சனத்தையும் மாற்றுக் கருத்தையும் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பவற்றாலேயே தீர்மானிக்கப்படுகிறது.


எதிர்ப்பவர்களைக் கொலை செய்து அரசியல் ஏகபோகத்தை நிறுவுவது விடுதலை அரசியலின் அடையாளமல்ல.


அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மக்களின் அரசியல் உரிமைகளைப் பறிப்பது புரட்சிகர ஜனநாயகமாகாது.


இங்குதாம் , சிவாஜிலிங்கமும் பிரபாகரன் அரசியலும் முக்கிய புள்ளியைத் தொடுகின்றன .


சிவாஜிலிங்கத்தின் அரசியல் வாழ்க்கையில் காணப்படும் முக்கியமான முரண்பாடு இதுதான்.


ஒரு காலத்தில் தன்னை அழிக்க முயன்றதாக அவரே கூறிய LTTE தலைமையுடன் பின்னர் அரசியல் உறவை ஏற்படுத்திக்கொண்டார்.


2002’ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபாகரனைச் சந்தித்தபோது சிவாஜிலிங்கமும் அதில் பங்கேற்றார். அச்சந்திப்பில் தங்களுடைய கடந்தகால முரண்பாடுகளைப் பேசாமல் அரசியல் தீர்வு பற்றியே விவாதித்ததாக அவர் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.


இந்தச் சந்திப்பைத் தனிப்பட்ட முறையில் குற்றமாகக் கருத வேண்டியதில்லை. ஆயுத மோதலுக்குப் பின்னர் அரசியல் பேச்சுவார்த்தை நடத்துவது இயல்பான அரசியல் நடவடிக்கையாகும்.


ஆனால் , பின்னாளில் பிரபாகரனைத் தமிழ் மக்களின் தலைவராகத் தொடர்ந்து முன்னிறுத்தியதும், புலிகளின் நினைவேந்தல் அரசியலில் தீவிரமாகப் பங்கேற்றதும் அவரது அரசியல் நிலைப்பாட்டின் ஒரு பகுதியாகும்.


இங்கு நாம் கேட்க வேண்டியது:


TELO உறுப்பினர்களின் படுகொலைக்கு வரலாற்று நீதி எங்கே? மாற்று இயக்கங்களின் அழிவுக்கு அரசியல் பொறுப்புக் கூறல் எங்கே? தமது சொந்த இயக்கத்தினரையும் போட்டி இயக்கத்தினரையும் இழந்த தமிழ் மக்களின் துயரத்துக்கு ஒரே அளவுகோல் எங்கே?


ஒரு இயக்கத்தின் தலைவர் என்பதற்காக ஒருவருக்கு வரலாற்று விமர்சனத்திலிருந்து விலக்கு அளிக்க முடியாது.


அதேபோல், ஒரு காலத்தில் தன்னைத் தாக்கிய அமைப்புடன் பின்னர் அரசியல் உறவு கொண்ட ஒருவரின் அந்த மாற்றத்தையும் வரலாற்று ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம்.


2009’க்குப் பிந்தைய அரசியல்: நினைவேந்தலும் தேசியவாதமும்


முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் சிவாஜிலிங்கம் வடக்கு–கிழக்கில் பல்வேறு போராட்டங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் பங்கேற்றார்.


இங்கு , அவருடைய அரசியல் பங்களிப்பை ஒரே கோட்டில் சிலர் நிராகரிப்பதுபோன்று என்னால் நிராகரித்துவிட முடியாது.அது , குருட்டுப்பார்வை ! 


இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கை ஆகியவை ஜனநாயக உரிமைகளாகும். இத்தகைய போராட்டங்களில் அவர் பங்கேற்றது அவரது அரசியல் வரலாற்றின் ஒரு பகுதியாகும்.


ஆனால்,  இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை ஒரு குறிப்பிட்ட ஆயுத இயக்கத்தின் அரசியல் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டும் முயற்சியுடன் ஒன்றாக்கிவிடக் கூடாது.


முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்கள் அனைவரும் ஒரே அரசியல் அமைப்பின் உறுப்பினர்கள் அல்ல. அவர்களுடைய உயிரிழப்புகளை ஒரு இயக்கத்தின் அரசியல் சொத்தாக மாற்றுவதும் சரியல்ல.


தமிழர் தேசிய உரிமைப் போராட்டம் என்பது எந்தவொரு ஆயுத அமைப்பின் தனிப்பட்ட சொத்தும் அல்ல.


அது , பல தலைமுறைகளின் அரசியல் அனுபவங்கள், உழைப்புகள், இழப்புகள், போராட்டங்கள் ஆகியவற்றின் வரலாற்றுச் சேர்க்கையாகும்.


அந்த வரலாற்றை ஒரு குறிப்பிட்ட ஊரின், குடும்பத்தின் அல்லது,  அரசியல் குழுவின் தனியுரிமையாக மாற்றும் முயற்சிகளையும் விமர்சிக்க வேண்டும். இங்குதாம் நாம் சரியான ஆய்வை நோக்கி நகரமுடியும் ! 


கிலாரி கிளின்டனுக்காக உடைக்கப்பட்ட 1,008 தேங்காய்கள் கூறும் வரலாற்று அரசியல் என்ன ? 


2016’ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் கிலாரி கிளின்டன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நல்லூர் கந்தசுவாமி கோவிலில் 1,008 தேங்காய்கள் உடைக்கப்படும் என்றும், யாழ்ப்பாணப் பேராலயத்தில் 1,008 மெழுகுதிரிகள் ஏற்றப்படும் என்றும் சிவாஜிலிங்கம் அன்று, அறிவித்திருந்தார்.


இந்தச் செய்தி அன்றைய சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகியது.


அமெரிக்கத் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றிபெறுவது இலங்கைத் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்துக்கு முக்கியமானது என்று அவர் நம்பியிருந்தார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


இங்கு , நாம் விமர்சிக்க வேண்டியது தனிப்பட்ட மதநம்பிக்கையையோ வழிபாட்டு உரிமையையோ அல்ல.


ஒரு தேசிய இனத்தின் அரசியல் எதிர்காலத்தை இன்னொரு நாட்டின் தேர்தல் வெற்றியோடு இணைத்துப் பார்க்கும் அரசியல் மனப்பான்மையைத்தான்.


அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை என்பது அமெரிக்காவின் அரசியல், பொருளாதார மற்றும் புவிசார் நலன்களால் தீர்மானிக்கப்படுவது. அந்நாட்டின் ஜனாதிபதி மாற்றம் மட்டுமே இலங்கைத் தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை உருவாக்கிவிடாது.


இதனைப் புரிந்துகொள்ளாமல் வெளிநாட்டு அதிகார மையங்களின் தேர்தல் வெற்றிகளைத் தமிழர் விடுதலையின் நம்பிக்கையாக முன்வைப்பது அரசியல் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத அணுகுமுறையாகும்.


புலம்பெயர் அரசியலும் நினைவுகளின் வணிகமயமாக்கலும் எதுவரை ? 


முள்ளிவாய்க்கால் -2009’க்குப் பின்னர் புலம்பெயர் தமிழர் அரசியல் பல்வேறு பிரிவுகளாக இயங்கியது. அவற்றில் சில அமைப்புகள் தமிழர் உரிமைகள், சர்வதேச நீதி, போர்க்குற்ற விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டன.


அதேவேளை, சில புலம்பெயர் அரசியல் வட்டாரங்களில் ஆயுதப் போராட்டத்தின் கடந்தகாலத்தை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனித வரலாறாக மாற்றும் போக்கும் காணப்பட்டது.


இந்தப் போக்கில் தனிநபர் வழிபாடும், ஊர் சார்ந்த அடையாள அரசியலும், குடும்ப மற்றும் உறவுமுறை வலையமைப்புகளும் அரசியல் செல்வாக்கைப் பெறுவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படலாம்.


சிவாஜிலிங்கத்துக்கு புலம்பெயர் வட்டாரங்களிலிருந்து நிதியுதவி கிடைத்தது என்ற குறிப்பிட்ட குற்றச்சாட்டைப் பலர் நம்தலப்பில் முன் வைக்கின்றனர் . இதை, உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாமல் அதை உண்மையாக அறிவிக்க முடியாது. ஆனால் , புலம்பெயர் அரசியல் அமைப்புகளின் நிதி, ஆதரவு, அரசியல் செல்வாக்கு ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை.


ஒரு அரசியல்வாதியின் நிதி ஆதாரங்கள், அவர் யாரிடம் அரசியல் ஆதரவு பெறுகிறார், அந்த ஆதரவுக்குப் பின்னால் என்ன அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன என்பவை ஜனநாயக ஆய்வின் பகுதிகளாகும்.


புலம்பெயர் சமூகத்தின் நிதியுதவி என்பது தானாகவே குற்றமல்ல. ஆனால் , அந்த நிதி அரசியல் பொறுப்புக்கூறலின்றி தனிநபர் அல்லது குழு அதிகாரத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டால் அது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.


இவைகள் சார்ந்து மார்க்சியம் முன்வைக்கும் கேள்வி என்னவென்றால், 


மார்க்சியத்தின் அடிப்படையான அரசியல் நோக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையையும் மனிதர்களின் சமத்துவத்தையும் சமூக நீதியையும் முன்னிறுத்துவதாகும்.


ஒரு தேசிய இனத்தின் மீதான ஒடுக்குமுறையை எதிர்ப்பது மார்க்சிய அரசியலுக்கு முரணானதல்ல. மாறாக, தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் சமூக விடுதலை அரசியலின் முக்கியமான பகுதியாகும்.


ஆனால்,  தேசிய விடுதலை என்ற பெயரில் உருவாகும் அதிகார அமைப்புகள் தங்களுக்குள் ஜனநாயகத்தை மறுத்து, மாற்றுக் கருத்துகளை ஒழித்து, மக்களின் அரசியல் உரிமைகளைப் பறித்தால் அவற்றை விமர்சிப்பதும் அதே அளவு அவசியமானது.


ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது அந்த இனத்தின் பெயரால் பேசும் ஓர் ஆயுத அமைப்பின் விடுதலையாக இருக்க முடியாது.


தமிழ் மக்களின் அரசியல் உரிமை என்பது புலிகளின் அரசியல் உரிமை மட்டுமல்ல. TELO, EPRLF, PLOTE, ஜனநாயக இடதுசாரிகள், சமூக இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், மதச் சிறுபான்மையினர் மற்றும், சுயாதீன அரசியல் குரல்கள் ஆகிய அனைவருக்கும் அரசியல் வெளியில் இடமளிக்க வேண்டிய உரிமையாகும்.


அதுவே உண்மையான ஜனநாயக அரசியலின் அடிப்படை.


இறுதியாக , எவரது மரணமும் வரலாற்றைத் தூய்மைப்படுத்துவதில்லை என்பதை மீளவும் கூறி வைப்போம் : 


சிவாஜிலிங்கம் இன்று உயிருடன் இல்லை. அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.


அவருக்கு இரங்கல் தெரிவிப்பவர்கள் தெரிவிக்கட்டும். அவருடன் தனிப்பட்ட உறவு கொண்டவர்கள் தமது நினைவுகளைப் பகிரட்டும். அவரிடம் உதவி பெற்றவர்கள் நன்றியுணர்வுடன் எழுதட்டும்.


ஆனால்,  அதற்காக அவரது அரசியல் வரலாற்றில் உள்ள முரண்பாடுகளை அழித்துவிட முடியாது.


அவர் மக்களுக்காகப் போராடியவர் என்று ஒருவர் எழுதினால், அவர் எந்த அரசியல் வழிமுறைகளை ஆதரித்தார் என்பதையும் கேட்க வேண்டும்.


அவர் தன்னலமற்றவர் என்று ஒருவர் எழுதினால், அவரது அரசியல் நிலைப்பாடுகள் எந்த சமூக விளைவுகளை ஏற்படுத்தின என்பதையும் ஆராய வேண்டும்.


அவர் இனத்தின் வரலாற்றில் நிலைத்திருப்பார் என்று ஒருவர் எழுதினால், அந்த வரலாற்றில் அவர் சார்ந்திருந்த அரசியல் அதிகார அமைப்புகளின் வன்முறைகளையும் சேர்த்தே எழுத வேண்டும்.


வரலாறு என்பது ஒருவரின் மரணத்திற்குப் பின்னர் அவருக்காக எழுதப்படும் இரங்கல் மடல் அல்ல.


அஃது , மனிதர்களின் செயல்கள், அரசியல் முடிவுகள், சமூக விளைவுகள், அதிகார உறவுகள், வர்க்க முரண்பாடுகள் மற்றும் ஒடுக்குமுறைகள் ஆகியவற்றின் விமர்சனபூர்வமான பதிவாகும்.


ஒரு மனிதரை மதிப்பதற்காக அவரது அரசியலை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு மனிதரின் மரணத்தை மதிப்பதற்காக அவரது அரசியல் வரலாற்றை மறைக்க வேண்டியதுமில்லை.


தமிழ் மக்களின் வரலாறு எந்த ஓர் இயக்கத்திற்கும், எந்த ஓர் தலைவருக்கும், எந்த ஓர் ஊருக்கும், எந்த ஓர் குடும்பத்திற்கும் சொந்தமானதல்ல.


அது பல தலைமுறைகளின் உழைப்பாலும், கண்ணீராலும், எதிர்ப்பாலும், உயிரிழப்புகளாலும் உருவான பொதுவான வரலாறு.


அந்த வரலாற்றைச் சொந்த அரசியல் தேவைகளுக்கேற்ப மடைமாற்றி எழுதும் உரிமை யாருக்கும் இல்லை.


மனிதர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்போம். ஆனால் , வரலாற்றின் உண்மைகளுக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டிய நிலையை உருவாக்கிவிட வேண்டாம்.


— ப.வி. ஶ்ரீரங்கன்

15.11.2026 

Comments

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

கருப்பு நாசிகளும்,தமிழகமும்...

கருப்பு நாசிகளும்,தமிழகமும்... >>>தமிழகத்தில் தமது அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தையும்,கேடுகெட்ட அதி வலதுசாரிய அரசியற் கருத்துக்களையும் பரப்பி மக்களைத் திசைதிருப்பிக்கொள்வது கேவலமானது. மண்ணின் மக்களுக்கே வேலை ஈரோட்டில் எழுச்சி மாநாடு வெளியாரை வெளியேற்றுவோம், மண்ணின் மக்களுக்கே வேலை என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில், ஈரோடு, கருங்கல்பாளையத்தில் 21.05.2005 அன்று பேரணியும், மாநாடும் நடைபெற்றன. இராசேந்திர சோழன் தலைமையில் நடைபெற்ற பேரணி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. மாலை நடைபெற்ற மாநாட்டிற்கு ச.அர.மணிபாரதி தலைமை தாங்கினார். மாநாட்டில் பெ.மணியரசன், தியாகு, கி.வெங்கட்ராமன், கண.குறிஞ்சி, கோவை ஞானி, நாவைகறை, அ.பத்மநாபன், ஈகி.பெரியசாமி, சா.பேகன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். மாநாட்டில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொழி வழி மாநலமாகத் தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நவம்பர் 1956க்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் வந்த வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்பது முதல் தீர்மானமாகும். வேலை இல்லாத த...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...