தமிழக -இந்திய ஆளும் வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் தமிழ்பேசும் ஈழமக்கள் :ஈழத் தமிழ் அகதி இரவியின் (தற்)கொலை -சில குறிப்புகள்
இலங்கை அரச பாசிசத்தின் உச்சக் கட்டமான இனவொடுக்குமுறையின் சாட்சிகள் நாம்! ;உலகெல்லாம் இடம் பெயர்ந்து அகதிகளானோம். ;மேற்குலகத்தில் அகதிகளாகக் குடியேறிய நாம் ,மேற்குலகத்துப் பூர்வீகக் குடிகளுக்குள்ள அனைத்துரிமையுடனும் வாழும் மேற்குலகச் சனநாயகச் சூழலினுள் ,தம்மைப் போல் நாமும் மனிதர்களாகவேனும் வாழ அநுமதித்திருக்கும் இந்த மேற்குலகம் நமக்கு எந்தவிதத்திலும் ஒட்டோ -உறவோ கிடையாது.எனினும்,நம்மைக் காத்துத் தமது குடிகளாக அநுமதித்த தேசங்கள் நமக்கு அந்நியரே!
ஆனால்,இந்தியா ? ; தமிழ் நாடு?? நமது தொப்புட்கொடி உறவாமே? ;ஒரே இரத்தமாமே! ; பூர்வீகத் தாயகமாமே?
என்ன செய்கிறது நம்மை?
அடிமைகளாக -கொத்தடிமைகளாக நமது மக்களைச் சொந்தச் சகோதர இனமே நடாத்துகிறதென்றால் ,அத் தேசத்தின் அரசியல் -சனநாயகச் சட்டவாதத்தின் கோலம் என்ன?
இலங்கை அரச பாசிசத்தின் உச்சக் கட்டமான தமிழின அழிப்பிலிருந்து தப்பி ,உயிர்வாழ்வதற்காய்த் தமிழகஞ் சென்ற சுமார் 3 இலட்சம் தமிழ்பேசும் ஈழமக்களும் தமிழகக் காவற்றுரையினதும் -தமிழகப் பாசிச அரசினதும் சட்டத்து இரும்புப் பிடிக்குள் இறுக்கப்பட்டு ,அவர்களின் அடிப்படைச் சுதந்திரங்கள் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன.
மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை, ரொயோற்ரா ஷொ ரூம் [ Toyota showroom ]பின்புறமுள்ள உச்சம்பட்டி ,ஈழ அகதிகள் முகாமில் வாழ்ந்த இரவியின் படுகொலையானது(இரவி தற்கொலை செய்தாலும் இது படுகொலையே அரசியல் ரீதியாக : https://www.youtube.com/watch?v=nuh… )இந்தத் தமிழக அரசினது அரசவொடுக்குமுறையின் திட்டமிடப்பட்ட கொலையே இது ! ;கடந்த பல ஆண்டுகளாக அகதியாகவே வைத்திருந்து நமது மக்களைக் கொத்தடிமைகளாக்கிய இந்தத் தமிழக -இந்திய அரசுகளது மனிதவுரிமை துஷ்பியோகமே இந்த நூற்றாண்டின் மிகப் பெருங்கொடுமை ; இது மனித நாகரீகத்துக்கே இழுக்கானது!
அரசியல், பிராந்திய பூகோள இராணுவ, பொருளாதார நலன்களுக்காக ஈழமக்களைத் தமிழகத்துள் திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கொடிய ஒடுக்குமுறையானது உலகெங்கும் காணமுடியாத ஒன்று!இது ஐ.நா. அகதிகள் குறித்த சட்டவிதிகளுக்கே முரணானது!
சதந்திரமாக நடமாடவும் ; வாழவும் ;தனி -மனிதவுரிமையை வழங்கித் தமிழகத் தமிழனுக்கு என்னவுரிமையுண்டோ அதைத் தாம் பொறுப்பேற்ற -தஞ்சஞ்கொடுத்த மக்களுக்கு வழங்க மறுத்த அரசியல் என்ன?;இது, இலங்கைப் பாசிச அரசானது ஒரு நூற்றாண்டாக மலையகத் தமிழ் மக்களுக்குச் செய்த இனவொடுக்குமுறைக்கு ஒப்பானதில்லையா?; அல்லது, அதன் எதிர் விளைவா இஃது?
தமிழக அரசு -இந்திய அரசு நமது மக்களுக்குப் பிராஜாவுரிமையை வழங்க மறுப்பதன் அரசியல் என்ன?
அவர்களைத் தீண்டத் தகதவர்காக்கிய அரசியலானது இந்திய மக்கள் தொகையில் 230 மில்லியன்கள் மக்களோடு மக்களாக்கிய அரசியலென்பதைப் புரிந்தாகவேண்டும்.அந்த 230 மில்லியன்கள் மக்கள் விடுதலையடையாதவரை -அவர்களை மானுடர்களாக இந்திய ஆளும் வர்க்க நிறுவனங்கள் அங்கீகரிக்காதவரை ஈழத் தமிழர்கட்குத் தமிழகத்தில் ஒருபோதும் மானுட சுதந்திரங் கிடைக்காதென்பதே உண்மையானது!
உணவு , உடை , உறையுள், மருத்துவம் , கல்வி , தொழில், பாதுகாப்பு, சமய வழிபாடு , போக்குவரத்து உட்பட சாதாரண ஒரு மனிதனுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படைச் சுதந்திரங்கள் அனைத்தும் ஈழத் தமிழ் மக்களுக்கு அறவே தமிழகத்துள் -இந்தியாவுள் மறுக்கப்பட்டுள்ளன. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் சார்ந்த அச்சு ஊடகங்களும் முழுமையாக செயலிழக்கும் அபாய நிலை தமிழகத்துள் ஏலவே ஏற்பட்டுருக்கிறது!
அனைத்துக்குமே பிறரிடம் கையேந்தும் அடிமைத்தனம் ,அவல வாழ்வு, வெளிப்படையாக எதையும் பேச முடியாத நிலை, இன்னும் சொல்லப்போனால் ஒரு வேளை உணவுக்கு கூட கையேந்த வேண்டிய பிச்சைக்கார வாழ்வு என, இன்றைய ஈழத்தமிழ் மக்களின் வாழ்வு தமிழகத்து அரசால் -இந்திய ஆளும் வர்க்கத்தால் சூறையாடப்பட்டுள்ளது! ; இந்த ஈனமிக்க அரசியலது காட்டுமிராண்டிச் சட்டத்தையும் ,அதன் சனநாயகப் போலிப் புரட்டல்களையும் ; தமிழகத்துப் போலி அரசியற் தலைவர்களையும் அம்பலப்படுத்தும் இரவியின் இந்த மரணத்தின் அரசியலானது இந்தியாவில் கொத்தடிமையாகவிருக்கும் அனைத்து மக்களதும் விடுதலையின் அரசியலாகும்; இலங்கைப் பாசிச அரசின் தமிழின ஒடுக்குமுறைக்கெதிரான அரசியலாகும்!
ப.வி.ஶ்ரீரங்கன்
06.03.2016