ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில்...
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும்,எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.அவற்றைக் களைந்துவிடும் புரட்சிகரமான அரசியல் நம்மிடமிருந்து முன்னெடுக்கப் படவில்லை.நாம் ஏதோவொரு சதி அரசியலைப் புரட்சி சொல்லி நகர்த்துகிறோம்.குழுவாதிகளாகவும் சீரழிந்து மொக்குத்தனமாக ஒவ்வொரு முகாமுக்குள் நின்று, இருப்புக்கான அரசியலைச் செய்கின்றோம்.இந்த நாம்தாம் புலம்பெயர் தளத்தில் மீளவும் காய்நகர்த்தும் புலிப்பினாமிகள்-வியாபாரிகள் கோரிக்கையின்வழியிலான ஐ.நா. முன்றலில் நாளை கூடும் மக்களைப்பாத்து அறைகூவல் இடுகிறோம்!
மீளவும் பிழைப்புவாத புலிவழி வியாபாரிகளால்,சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இனவாதம் தூக்கி நிறுத்தப்படுகிறது.இது நமக்கு வெற்றியைத் தரமுடியாது.
கடந்த காலத்தில் புலிகளது வளர்ச்சியும்,அழிவும் அவர்களைமட்டும் பாதிக்கவில்லை!
புலிகளாலும்-சிங்கள அரசாலும் செத்தவர்கள்-அழிக்கப்பட்டவர்கள் இலங்கையின் அனைத்துப்பகுதி மக்களுமே.இனவாத அரசியலது பங்கு இஃதென்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.எதிரெதிர் இனக்குரோத அரசிலானது இலங்கையின் அனைத்துப் பகுதி யையும்பாதித்து,அந்தத் தேசத்தின் மக்களை மிகக் கேவலமாக அடக்கி ஒடுக்கியபடி யுத்துத்துக்குள் தள்ளி அவர்களது எதிர்காலத்தையே நாசமாக்கியது.2009 முள்ளி வாய்க்கால் புலி அழிப்பு அரசியலோடு பெரும்பகுதி அப்பாவித்தமிழர்களும் சேர்த்தே அழிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இலங்கை அரசினது ஓரவஞ்சக அரசியலானது,மக்களைக்கொன்றாவது புலிகளைப் பூண்டோடழிப்பதில் அந்நியத் தேசங்களது ஒத்துழைப்போடு அனைத்தையும் கைச்சிதமாக நடாத்தி வெற்றிகொண்டது, தமிழ் மக்களையும்கூடவே!
இந்த வரலாறைத் தொடர்ந்து கணிக்கும்போது,ஈழத்துக்கான போராட்டமென்பது இலங்கைத் தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது சமூகசீவியத்தையும் பலநூற்றாண்டுகள் பின் தள்ளிய பாரதூரமான சமூகவிரோதமாகும்,இது இன்றைய வரலாறாக இருப்பதை நாம் இருட்டடிப்புச் செய்யமுடியாது.சமுதாயத்தின் மொத்த விருப்பானது இழந்தவுரிமைகளை மீளப்பெறுவதாக யாரும் குறிப்பிட முடியாது.ஏனெனில், யாரு எதை இழந்தார்களென்று சாதாரணப் பொதுமக்களுக்கு இதுவரை புலப்படவில்லை.இந்த நிலையிற்றாம் நாளை(27.02.2012) ஜெனிவாவில் கூடி மனிதவுரிமை குறித்து மேற்குலகத்துக்கு உணர்த்தப்போகிறார்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள்!ஐ.நா.வின் மனிதவுரிமைப் பித்தலாட்டமெல்லாம் ஆதிக்கவாத அமெரிக்க-ஐரோப்பிய யுத்தங்களால் நாடுகளைக்கொள்ளையிடும் வியூகத்துக்கானதென்பதை லிபியாவின்மீதான பயங்கரவாத நேட்டோவின் ஆக்கரமிப்பிலும் வெளிப்படையாகவுணர்ந்தோம்.இத்தகைய கபடக் கூட்டுத்தொடர்களுக்குள் மீளவும் நசிந்து ஏமாந்துபோகும் மக்களாக நாம் மாற்றப்படுவது யாரால்?
தமிழர்களையும்,தமிழர்களது உரிமைக்கான குரலையும் எந்தத் தேசங்களது நலனுக்கான லொபிகளாக மாற்றப்பார்க்கிறார்கள்? இதைத் திட்டமிட்டு நடாத்துவது யாரு?
ஜீ.ரி.வி. விளம்பரத்துள், சினிமா நடிகன் சத்தியராஜ்வரை எமது மக்களிடம் வேண்டுகோள்விட்டுக் " கூட்டத்தொடருக்குமுன்கூடி ஆர்பாட்டஞ் செய்யும்படி" வேண்டுமளவுக்கு நமது பிரச்சனை சினிமாத்தனமாக மாறிவிட்டது!
சினிமாத்தனமாக நமது மக்களது உரிமை குறித்துச் சீமான் வகுப்பெடுப்பதும்,அதையே சத்தியராஜ் அறைகூவல் செய்வதும் தமிழகத் தமிழரைக் கனவுக்குள்வைத்தா? அல்லது இந்திய அரசினது வியூக முன் நகர்வுக் காரணியத்தின் ஒரு நிபந்தனையாகவாக? இங்கு இத்தகைய கோமாளிகளால் சொல்லப்படும் நமது அபிலாசை என்பது என்ன?
தமிழ் மக்களின் அபிலாசைகளென்பவை அதிகாரத்துவத்தை உள்ளார்ந்து நேசித்த தமிழ் மேட்டுக்குடிகளின் கோரிக்கையென்பதை நாம் பல முறைகள் கூறியிருக்கிறோம்.இந்த அதிகாரத்துக்கான நேசிப்பிடம் மக்களின் வாழ்வியல் சார்ந்த மதிப்பீடுகள்,அவர்களது உயிராதாரமான பொருள் வாழ்வு சார்ந்த கோரிக்கைகள் சிறிதளவும் அவர்களது நோக்கு நிலையிலிருந்து முன்வைக்கப்படவில்லை.இத்தகைய ஒரு அவலமான அரசியலைக் கடந்த காலத்துத் தமிழர்களின்ஆயுத இயக்கங்கள்போரரசியல் செய்து வந்ததின் தொடர்ச்சியாகப் பற்பல அழிவுகள் நமக்கு வந்து சேர்ந்தன.புலியோடுசேர்ந்து அழிக்கப்பட்டது மக்களது அனைத்து வாழ்வாதாரமும்தாம்!
என்றபோதும்,இனவாத அரசியலது தெரிவில் காசுபல கண்ட தமிழ் வியாபாரிகள் இயக்கமாகவும்,குழுக்களாகவும் "தமிழீழ விடுதலை" சொல்லிச் சேர்த்த காசுகள் கோடி கோடி டொலர்கள்.
இதைக்கொண்டு பெரு வர்த்தகஞ்செய்யும் இவர்களே மீளவும், இனவாத அரசியலோடு ஆட்சேர்ப்பதில் தீவிரமாகப் பிரச்சாரஞ் செய்கின்றனர்.மக்களைப் பிளக்கும்இனவாத்தை, தமிழ்- சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அங்கீகரிக்கப்பட்ட அரசுகளும்,அவைகளின் வர்த்தக-வர்க்க நலன்களும் முன் நகர்த்துகிறது. இத்தகைய நலன் நம் இனத்தின் மத்தியிலுள்ள ஓட்டுக்கட்சி அரசியல் வாதிகளை,இயங்கங்களை தமக்குச் சார்பாக அணைத்தெடுத்து நமக்கு எதிராக முன் நிறுத்துகிறது.இவர்களேதாம் இப்போது ஐ.நா.முன்றலில் நாளை 27.02.2012 அன்று நம்மைக் கூட்டத்தோடு கோவிந்தா போட அழைக்கின்றனர்.
இங்கே புலம்பெயர் பினாமிப்புலிகனில்ஒருபகுதியும்,மறுபகுதி முன்னாள்ஆயுதக் குழுக்களையும் அவர்களின் ஊடககங்களையும்,நாடுகடந்த தமிழீழ அரசையும் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிக் கட்சிகளையும் மேற்குலக ஏகாதிபத்தியங்கள்பயன் படுத்துகிறார்கள்.
மக்களின் எந்தவுரிமையையும் பொருட்படுத்தாது தமது தேவைகளின் பொருட்டு அபல அரசியலைச் செய்யும் பிழைப்புவாதத் தமிழர்களால் நிலத்திலுள்ள மக்களது தார்மீகவுரிமைகள் யாவும் இலங்கை அரசாலும்,இந்திய நலத்தின் பொருட்டாலும் அழித்துக்கொள்ளப்படுகிறது.
சாதாரணமாகப் புலிவழிப்போர் மனித நாகரீகத்தையே தமிழ்ச் சமுதாயத்திடம் இல்லாதாக்கி அவர்களைக் காட்டுமிராண்டிகளாக்கியபின்னும் நாம் நமது தேசத்தின்-மக்களின்பால் கவனஞ் செய்தும் இத்தகைய வியாபாரிகளால்நமது மக்கள் கட்டுண்டுபோகிறார்களே-இது ஏன்,எப்படிச் சாத்தியமாகிறது?
இலங்கை அரச பயங்கரவாதத்துக்குமுன்மக்கள் வாய் திறந்து எதிர்வார்த்தை பேசமுடியாது திணறிக்கொண்டிருக்கிறார்கள்.எனினும் மரணப்பயம் மக்களின் மனதைக் கட்டிப் போடுகிறது.
சமுதாயத்தை இவ்வளவு கொடுமையாக அடக்கித் தமிழ் மக்களின் வரலாற்றைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாக மாற்றி அழித்துவரும் கொடிய வன்முறையாளர்களை அழிப்பதற்கு நம்மால் இரும்புக் கம்பிகளை எடுக்க முடியாதுபோனாலும்,குறைந்த பட்சமாகவேனும் இத்தகைய அழியுறும் சமுதாயத்தைக் காத்தாகக் கதைத்தோ,பறைந்தோ-பேசிப் பறைந்து கொடுமையான இந்தப் பிழைப்புவாத அரசியலை அம்பலப்படுத்தியாக வேண்டும்.
ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஆட்பிடிக்கும் பிழைப்புவாதச் சினிமாக்கூட்டமோ தமது இந்தியாவென்ற தேசத்தால் தமது மக்கள் ஒடுக்கப்படுவதுகுறித்து வாயே திறக்காது பிழைப்புவாதிகள்-கோமாளிகள்!இந்தியவென்றவொரு நாடு சிறுபான்மைத் தேசியினங்களின் சிறைக்கூடமென்று திரு பணிக்கர்,அசீஸ் நந்தி போன்ற இந்திய சமூவியலாளர்கள் எப்பவோ கருத்துக் கூறியுள்ளார்கள்.இதைக்கூட நாம் நமது அரசியல் பிழைப்புக்காக ஒழித்து மக்களைக் கருவறுக்கத் தயாராகிறோம்.இதை இந்திய நலன் தன்னாலான அனைத்து வழிகளிலும் கச்சிதமாகச் செய்கிறது.
முள்ளிவாய்க்கால்வரை இரண்டு இலட்சம் மக்கள்ஈழக்கோசத்தால் பலியிடப்பட்டுள்ளார்கள்.சுமார் 9 றில்லியன் ரூபாய் பெறுமதியான வளங்கள் போரினால் நாசமாக்கப்பட்டும்,முப்பதினாயிரம் பெண்கள் விதவைகளாகவும்,கிட்டத்தட்ட அதே தொகை சிறுவர்கள் முடமாக்கப்பட்டும் இந்தத் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்கு யாரூ காரணம்?
இத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமனலாக இருக்கும்அரசுகள்-இயக்கள் மனிதவுரிமைச் சட்டவரைவுகளுக் கொப்பத் தண்டிக்கப்பட வேண்டியவை-வேண்டியவர்கள்.இதுவன்றி மக்கள் அராஜகத்துக்குப் பயந்து முடங்குவதற்கான ஒரு சூழல் இனிமேல் நிகழ்வதற்கு எந்த ஜனநாயகச் சக்திகளும் இடமளிக்க முடியாது.ஆனால்,இதை இந்த ஐ.நா.செய்யுமெனக்கொள்வதற்கான எந்த நியாயமானவொரு நடாத்தையைக் கொஞ்சமாவது இனங்காட்டுங்கள்!உலகமெல்லாம் யுத்தத்தை நடாத்த ஒப்புதல் அளிக்கும் ஐ.நா.வுக்கு இலங்கையைத் தண்டிக்கும் எந்த நியாயமான தார்மீகவுரிமையுங் கிடையாது!இந்த இலட்சணத்தில் நாளை 27.02.2012 இல் நாம் கூடிக் கத்துவதால் மேற்குலகினது நலன்களுக்கிசைவாகவே கத்திவிடப்போகிறோம்.மற்றும்படி, நமது மக்களது தலைவிதி அடிமைத் தனமானதாகவே இருக்கப்போகிறது. ஏனெனில்,இலங்கையில் அவர்களது வாழஇவுக்கான எந்தப் போராட்டத்தையும் இந்த அரசியல்-பிழைப்புவாதிகள் அனுமதிக்கவேயில்லை.இதை அங்கு மகிந்தாவின் மடியில் உட்கார்ந்திருக்கும் முன்னாள் புலிகள் நன்றாகவே அறிவர்!
காலாகாலமாகத் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்ட அரசியல் வரலாற்றில் புலிகளும் தமக்கான பங்கை உயிர்ப்பலிகளினூடே ஆற்றியுள்ளார்கள்! இந்த "அற்பத்தனமான" சமூக விரோத ஈழப்போரானது ஒருசில நூறு தமிழரின் வசதிக்கும்,வாய்புகளுக்குமானதென்பதை நாம் பெரும்பாலும் மக்களரங்குக்கு கொண்டு செல்லவேண்டிய நேரத்தில்-அவற்றைச் செய்யாது, தவறுவிட்டுள்ளோம்.இதனால்,மீளவும்,தமிழ்பேசும் மக்களது உரிமையென இந்திய உளவுப்படைகளது பினாமிகளே நமது மக்களுக்குள் அரசியல் செய்யவும்,போராடவும் முனைப்போடு குழிபறிக்கின்றனர் தமிழ் புலிவழி வியாபாரிகள்.
நம்மை நடாற்றில் தள்ளிவிட்ட புலிகளின் அரசியல் வியூகமற்ற ஆயுதப் போராட்டம்முள்ளி வாய்க்காலில்அழிந்துபோனது மட்டுமல்ல இனிமேல் இந்தியாவின் எந்தச் சதியை ஒருபோதும் வெற்றிகொள்ளமுடியாது தத்தளித்துக்கொண்டேயிருக்கும். இனியாவது,தமது தவறுகளைப் பகிரங்கமாகப்பேசியும்,விமர்சித்தும் புலம்பெயர் புலிப்பினாமிகள் மக்கள் சொத்தை அவர்களிடமே கையளித்து, மக்களை ஜனநாயக வழிகளில் இயங்க அனுமதித்து அவர்களை வெகுஜனப்படுத்தி மக்கள்திரள் போராட்டுத்துக்கு வழிகோலட்டும்.இத்தோடு, கூட்டோடு கோவிந்தாப் போடும் இந்த ஐ.நா. முன்றலில் கூடிக் கத்துவதை நிறுத்துங்கள் மக்களே!இது உங்களைச் சொல்லித் தமிழ் வியாபாரிகள் பிழைக்கும் வழி.
இதைவிட வேறு மார்க்கத்தை நீங்கள் கண்டடையும் வழிவகைகளைத் தேடுங்கள்!
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.02.2012
Monday, February 27, 2012
Subscribe to:
Posts (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின்...