வரண்ட தரையும்.
(பகுதி:1)
மண்ணோடு பொருத்த முனையும் பயணத்தில்...
வாசிப்பதற்கான சூழல் வலுவற்ற பொழுதகளாகவும்,வாழ்வதற்கான முனைப்பில் உழைப்பில் உயிர்வாழும் இந்தப் பொழுதுவரையும் ஒரு நூலை முழுமையாக வாசித்துவிடுவதில் பல சிக்கல்கள்.நேரம் குறித்தான முடக்கத்திலும் வாசிப்பதற்கான அக மகிழ்வைத் தரத்தக்கத்தான புனைகதைகளை நாம் ஏலவே அறிந்தோம்.அந்த மகிழ்வும் எமக்கானதாகக் கட்டப்பட்ட அதிகாரங்களது திணிப்பென்பதும் இதன்வழி புரிந்துகொள்ளவும் முடிந்தது.அறிதல்,எனது விலங்கை எனக்கே காட்டி,உடைப்பதற்கானவொரு திசையைச் சொல்ல மேலும் அறிய வைக்கிறது.இது,வாசிப்பால் மட்டுமே நடைபெறுகிறதெனினும் எமது அனுபவப்பட்ட வாழ்வு எம்மைக்கடந்து செல்லும்போது அதை மீளவும் வழிமுன்னே நடாத்திக்காட்டுவதில் படைப்பிலக்கியம் மனித வாழ்வாழ்வின் இரண்டாவது இயற்கை என்பது உண்மையாகிறது.
அறிதலிற்றாம் அனைத்தும் வெற்றிகொள்ளப்பட்டன.இயக்கத்தையும் அதன்வழி மாறுவதையும் அறிவதே இயற்கையை வெற்றிகொண்ட அனுபவம்-கல்வி!
இந்த நோக்கத்தில் இன்னொரு குறுநாவற்றொகுப்பை(பசுந்தீவுக் கோவிந்தனது"வாடாத றோசா"குறு நாவற்றொகுப்பு) உள் வாங்கிக்கொள்வதற்கும் அதையொத்த வாழ்வை எனக்குள் வாழ்ந்து பார்ப்பதற்குமான இடைவெளியில் சிலவற்றை இங்கே கருத்துக்களாகச் சொல்வதைத்தவிர,மேட்டிமைப் புரிதலெனச் சொல்வதற்கு அல்ல.வாழ்வும்,மனிதவிருப்பும் முரண்பட்டுக் கிடக்கும் தருணங்கள் மலினப்பட்டவுணர்களாக மனிதமனங்களைக் காவுகொண்ட இந்த நிமிஷம்வரை எமது வாழ்நிலையே எம்மை ஆட்டிப்படைக்கிறது.
வாடாத இரோஜா:
வாடாத இரோஜாவோடு தன்னைச் சொல்லும் கோவிந்தன் மனதும் இதிலிருந்து புறத்தே இயங்க முடியாது.
நமது வாழ்வனுபவங்கள்மீது கட்டப்பட்ட கனவுகள் மீளவும் நமது விழிமுன்னே மோகனாகவும்,செல்வியாகவும் விரிகின்ற வாடாத ரோஜாவுக்கும் அதன் தரையானது வரண்டதே.
கதை நமக்குள் உலாவரும் மனித விருப்புகளோடுறுவுவது.மோகனது கனவும் செல்வியின்மீதான மோகனது எதிர்ப்பால்லீர்ப்பும்-வினையும் பெற்றோர்களது தயவோடு காதற்றிருமணமாக நடந்தேறி,மாமிக்கேற்ற மருமகளைத் தயார்ப்படுத்தி நம்மையும்,நமது நடுத்தர வர்க்க இருப்பயையும் மேலும் உறுதிப்படுத்துவது.கதை மாந்தர்களது அகவெளியில் இந்தச் சமுதாயத்தின் அனைத்துத் தளமும்(நிறுவனவயப்பட்ட சமுதயா நடத்தைகள்)கொலுவுற்றிருக்கிறது.அதற்கு மோகனது வாழ்வைச் சித்தரிக்கும் இடங்களும், அவன் அரசாங்க உத்தியோகத்தனாகவும்,பல்கலைக்களகத்து கல்வியின் பட்டத்தில் பெருமையுறுபவனாகவும் இருக்குந் தருணத்தில் செல்வியைத் துணையாக்குவதோடு, அவனது வாழ்வுப் பெரும் பயன் இனிதே நிறைவுருவாவதில் எனது தலைமுறையின் மொத்தக் கனவும் திரு.கோவிந்தனது அநுபவத்தின் வெளியில் நமக்குமுன் விரிகிறது.
இது ஒரு கட்டத்தின் மனித வாழ்நிலைகள்மீதான புரிதற்பாட்டுக்கும் அதுசார்ந்த சமூக உளவியலைப் புரிவதற்கும் ஒரு ஊடகமாக இருக்கும்.நடந்து முடிந்துவிட்டதும்,கடந்துவிட்டதுமான காலத்தில் அவரது உணர்வுகள் சிதைந்து, காலத்தில் பாத்திரங்களை வைத்துப் பார்க்காத தவறுகளோடு நம்முன் வாழ்ந்து பார்க்க மோகனும்,செல்வியும் திரு.கோவிந்தனால் அனுப்பப்பட்டபோதும், அவர்களை ஆரத் தழுவியும், அணைத்தும் உற்சாகப்படுத்துவதற்கு மாறாக,அவர்களோடு உரையாடுவதே என் செயலாகும்.இது,அவசியமானது.
சமூக சீவியம் சிதைந்துகொண்டுவரும் ஒரு கட்டத்தில் சிதைந்துபோகும் கூட்டுவாழ்வின் யாழ்ப்பாணிய இருப்பின்மீது சொல்லப்படும் இந்த மலர்வு, மீளவும் அதே சிதைவுகளுக்குள் வாடாத மலராக இருக்க முனைகிறது."காதல்" குறித்த பொருளாதாரக் கனவுசார் எதிர்மறை நடாத்தை,அதைச் சாகடிக்கத்துடிக்கும் எமது தலைமுறைசார் புரிதலில் கற்பிதங்களோடு வாழும் பெற்றோர்களுக்காக மோகன் செல்வியை உருவாக்கி விடுகிறான்.இஃது, வரண்ட மண்ணெனும் நமது சமூக இருப்பில் அதன் வேர்களைப் பதிக்க முனையும் ஒவ்வொரு தருணத்திலும் கோவிந்தன் பழைமைக்கேற்ற பதுமையாகவே மாறிக்கொள்கிறார்.இது,அவர் அறிந்து செய்யும் பாதுகாப்பு வலையம்.கூட்டுக் குடும்பத்தின் வழி அவர் சிந்திக்க முனைவதும்,பெற்றோருக்கு ஏற்ற மருமகளைத் தகவமைப்பதிலும் புனைவை வாழ்வாக்க முனைவதைவிட சம்பிரதாயங்களுக்குப் பாத்திரத்தை இரையாக்குகிறார்.இஃது, அவரது ஆற்றலை மேலும் பலவீனமாக வாசகர் புரிவதற்குத் தோதாகிவிடுகிறது.தனது படைப்புகள் அன்றாடம் சுமைகளாக விரியும் நிஜ மனிதர்களது காயங்களுக்கு-வலிகளுக்கு நிவாரணியாகாதுபோனாலும் ஒரு கணத்திலாவது அந்த இரணங்களை மறக்கடிக்க வைத்தால் அதுவே அவரது வெற்றி என்று பிரகடனப்படுத்துகிறார்.இது தப்பில்லை.ஆனால், அந்த இரணங்களையேதாம் விழிமுன் நிறுத்தும் பாத்திரங்களை அதற்கு மருந்தாக்குவதில் "செலக்சன்"எனும் நிலையில் மனிதர்களைப் பொருள் நிலைக்குள்ளும் குறுக்கிவிட்ட அபாயத்தில் கோவிந்தன் அவர்கள் எம்மை நோகடிக்கின்றார்.
வரண்ட மண்ணில் மலவுற்ற இந்தப் புனைவு மனதைப் புரிந்துகொள்வதில், எந்தச் சிக்கலையும் எமது பொதுப்புத்திக்கு ஏற்படுத்தப் போவதில்லை!என்றபோதும், எம்மைக்கடந்த வாழ்வை எமது வழிகளின் முன்னே மீள நிகழ்த்திக ;காட்டுவதற்குச் சில தடைகள் இருக்கின்றன.அந்தத் தடைகளைத் திரு.கோவிந்தன் அறியமுற்படவில்லை.இந்த குறைபாடுதாம் கதையோட்டத்தின் முழுமையை-பாத்திர வளர்ச்சியை மறுக்கும் தடைக்கற்களாக இந்தத் தொகுப்பிலுள்ள நான்கு குறுநாவல்களுக்குள்ளும் செயற்படுகிறது.
அது-கதைசொல்லும் உத்தி,அழகியற் பாங்கு,வர்ணனை,வடிவம்,உள்ளடக்கம,பாத்திரத் தேர்வு போன்றவற்றில் மிகப்பெரும் தாக்கதைச் செய்வதில் மோகனதும்,செல்வியதும் அந்நியப்பட்டதான அகப் பிரமைகளை இயற்கை வாதத்துக்குள் திணித்துப் புனைவினது கவிதைக் குணத்தை(பாத்திரங்களுக்கு வெளியில்,மூன்றாம் நபர் வர்ணனை-சம்பாஷணை தவிர்த்தல்.இதுதாம் பாத்திரங்களைக் கவிதையாக்கும்.) குறுக்கும் நெடுக்குமாக அறுத்தெறிய முனையும் ஒவ்வொரு தடவையும் திரு.கோவிந்தன்,
"இராமனுஞ் சீதையும் போன்று அமர்ந்திருந்தனர் என்றால் மிகையாகாது"
"மின்னிடையாள் அன்ன நடை நடந்து..."
"கயல் விழியாள்,கொடியிடையாள் அழிகுச் சிலையாட்டம்..." என்றும்,
புத்திசாலித் தம்பியின் "செலக்சன்"குறித்து மோகனது அத்தான் செல்விக்குப் புனையும் பொதுபுத்தி"அழகு"பாத்திரத்தைக் கொச்சைப்படுத்துவதில் எம்மை நோகடிக்கும்.
அதே வலி மேலும் தொடரும் என்பதற்கு சமூகத்தைக் குறித்தான பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டால் நாம் வாழும் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல்பத்தில் வாழ்ந்தபடி இருபதாம் நூற்றாண்டின் ஏழாவது பத்தில் கதை நகர்கிறது.அங்கேதாம் உந்துருளியைச் சொல்லும் எழுத்தாளர்ரது இடைவெளி,தலைமுறை இடைவெளியை இனங்காணாத பாத்திருத்தை நம்முன் உலாவிடுவதில் தனது அநுபவங்களை மோகனாகவும்,செல்வியாகவும் எம் விழிகள் முன் கொணர்கிறார்.இப் பாத்திரங்கள் தமது சுயத்தை இழந்து கதாசிரியரின் விலங்குப் பிடிக்குள் வலு கட்டாயமாகச் சிறைபிடிக்கப்பட்டதை உணர,
"சீவரத்தினம் வாத்தியாரின் மகள் இவளுடைய புறங்காலுக்கும் நிற்க முடியாது"
"இவள் குணமான பெண்ணாக இருப்பாள்..."எனும் கதாசிரியரின் அக விருப்பு மேலும் உதவும்.
இக் குறு நாவற்றொகுதியிலுள்ள அனைத்து கதைகளுக்குள் நிலவும் வாக்கியங்களுக்கிடையில் பின்புலமாக விரியும் விலங்குகள் எம்மை நோக்கியும் பாய்வதைப் புரிய முடியும்.எனினும்,இவ் விலங்குகளைக் கோவிந்தன் உருவாக்கவில்லை.அது, எமது தலைமுறைத் தொடர்ச்சி.எனது தவறு எனக்கு முன் வாழ்ந்தவர்களது தொடர்ச்சி,என் தவறு இன்னொருவரின் தொடர்ச்சியாக மேலெழப்போகிறது.இங்கேதாம் இலக்கியத்துக்கானவொரு பொதுத் தத்துவார்த்தப் போக்குக் குறித்துப் பேச சோஷலிச யதார்த்தவாதம் முனைந்தது.குறிப்பட்டவொரு சம்பவத்தை குறிப்பட்ட பாத்திரத்துக்கூடாக வெளிப்படுத்தும்போது அங்கே ஒரு நோக்குச் சமூகஞ்சார்ந்து இருப்பதும் அதன்படி பாத்திரத்தை விலுங்குகளுக்குள் சிதைப்பதைத் தடுத்து அவர்களைப் பொது மனிதக்கூட்டில் கால்பதித்த மாந்தர்களாக்கி உலாவிட வேண்டும்.இது இன்னொரு வகைச் சிறையை அவர்களுக்கு இடுவதில் குறியாகவின்றிப் பாத்திரங்களை அவர்களது சுதந்திரமான தேர்வுகளோடு உள்வாங்குவதன் முயற்சியாகும்.
கண்டதையும்(காண்பதை)கேட்டதையும்(கேட்பவை),அநுபவப்பட்டத்தையும் அப்படியே சொல்வதல்ல படைப்பிலக்கியத்தின் வேலை.இது,இயற்கை வாதத்தை உள்ளடக்கியதான புரிதலில் மேலும் பலராலும் விளக்கப்பட்டது.வானவயிலில் பிரதிபலிப்புக் கோட்பாடென்பது,எங்கோ இருக்கும் பொருள்-மண்டலம்,கோளம் இன்னொன்றில் தெறித்துப் பிரதியாகித் தனது இருப்பை இன்னொரு இடத்தில் காண்பிப்பது.அத்தகையவொரு நிலையில் அதன் பாங்கு அப்படியோதாம் இருக்குமென்றில்லை.அது சார்ந்த பொருளது பண்பையும் கொண்டே துலக்கமுறுவதுபோன்று இங்கே கோவிந்தனின் பாத்திரங்கள் கோவிந்தனாக விரியும் பலவீனமே குறு நாவல் மாந்தர்கள் ஊடாகவும் விரிகிறது.இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய"அரசியல்-பொருளியல்"வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய"அலகுகளை"உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் "பொருளாதாரச் சிக்கல்கள்" அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் பாரிய தாக்கஞ் செய்கிறது.மோகன்,செல்விக்கிடையிலான உரையாடல் இதை மேலும் உறுதிப் படுத்தும்.கதை மாந்தர்கள் காலத்தை மறுத்து சமகால அரசியலோடும் எழுபதுகளின் இறுதிப்பகுதி அநுபவங்களோடும் ஒரு பாலத்தை அமைக்கின்றார்கள்.
இது கதாசிரியரின் கதை சொல்லலினதும்,நிகழ்கால அரசியலைத் தனது அநுபவங்களுக்குள் கொணர்வதிலுள்ள ஆர்வத்தினாலும் நிகழ்ந்துவிடுகிறது.
கதை மாந்தர்களின் உளவியில் யுத்தகாலத்து மனிதர்களதும்,தமிழீழம் நிலவரையறையிலும்,புலிகளது நிர்வாக-அதிகாரத்துக்குட்பட்ட பகுதியிலுமாக முரண்பட்ட தன்மையில் விளக்கப்படுகிறது.இக்கதையின் கருவே அதற்கு மறுப்பான சூழலில் நகரும்போது-அதன் காலத்து அரச உத்தியோகத்துக் கச்சேரி அலவல்களை வர்ணிக்கும்போது நம்மை ஏமாற்றி விடுகிறது.அப்போது தமிழீழம் எனும் புலிகளது நிர்வாகப்பகுதி பெயரிளவிற்கூட அரும்பவில்லை.அன்றியும், தமிழ்மக்களது வாழ்விடங்களை-மாவட்டங்களையும் தமிழீழமாக அழைக்கும் அரசியல் கருத்தாக்கம் உளவியல் ரீதியாக எவரையும் ஆட்டிப்படைக்கவுமில்லை என்பதை உணரும்போது, கதை மாந்தர்களது பொருத்தமற்ற உரையாடல்கள் கதைக்கும் காலத்துக்கும் பொருத்தமற்ற திசையில் நம்மை அநாதையாகவிட்டுச் செல்கிறது.இன்றைய உலக வாழ் நிலையானது அதீத தனிநபர்வாதக் கற்பனைகளையுங் காலம் கடந்த மிதவாதக் கனவுகளையும் கலந்து புதிய பாணிலானவொரு "வாழ்வியல் மதிப்பீட்டைக்"கட்டிக்கொண்டுள்ளது.இந்த ஒழுங்கமைந்த கட்டகம் நிலவுகின்ற அமைப்பாண்மை வர்க்கத்தின் நலனை மையப்படுத்திய நெறிமுறைமைகளால் தீர்மானிக்கப்பட்ட "தாய்நாடு-சுதந்திரநாடு" எனும் கருத்தாக்கத்தால் தீர்மானிக்கப்பட்டதாக உலகு தழுவிய ஒப்பாண்மையாக எடுத்துரைக்கப்படுகிறது.இந்தச் சுகமான அரசியல் "ஒப்பாரி" எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூகத்தின் விளிம்பில் உந்தித் தள்ளப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகவில்லை!இது நடவாத காரியமும்கூட.எந்த வர்க்க மக்கள் கூட்டைப் "பிரதிநித்துவப்படுத்தும்" ஆட்சியதிகாரமுள்ளதோ,அதைத்தாம் அந்த ஆட்சி கருத்தியற்தளத்திலும் விதைத்துக் கொண்டிருக்கும்.இதுவே அதன் விழுமியமாகவுமிருக்கிறது.தமிழீழத்தில் கதைவிரிக்கும் செல்வி பெண்கள் அச்சமின்றி வெளிச்செல்லும் பாடம் நடாத்துகிறாள்.வரலாற்றில் ஆயுதரீதியாகக் கட்டப்படும் கட்டாயக் கோட்டைகள் தகர்ந்து சின்னபின்னமாகும்போது, சமூகத்தின் உறுபினர்களாக இருப்பவர்களின் உண்மையான முகம் மேலெழுகிறது.பண்பாட்டு மாற்றத்தைக் கோராத எந்த ஆயுதப்பலாத்தகாரச் சமூகச் சீராக்கமும் மக்களது வாழ்வில் பாரிய மாற்றங்களைச் செய்வதற்கில்லை.இன்றைய பின் போராட்டச் சூழலில் இதை உணரமுடியும்.
செல்வியினது காதல் இறுதியில் திருமணத்துக்கான காலமாகக் கசியும்போது, அவளது வாழ்க்கை துNணையாக வரவிருக்கும் பல்கலைக்களகப் பட்டதாரியான கிளிநொச்சி மகாவித்தியால ஆசிரியர் இராணுவத்தால் சுடுபடுவதும்,அதுசார்ந்த அவளது எதிர்வினையும் வலுகட்டாயமாகப் புனைவுக்குள் கொணரப்பட்ட செயற்கையான பிரச்சாரமாக நம் முன் வலுவிழக்கிறது.இது, இக் குறு நாவற்றொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளிலும் விரவிக்கிடக்கிறது.எனினும்,மோகன் தனது அகப் பயணத்திலும் அது சார்ந்த எதிர்பார்ப்பிலும் தனது சமூகத்தின் கூறுகளாகவிருக்கும் சில ஒழுங்குகளை உடைக்க முனைகிறான்.அதுவும் முதல் காதலுக்கும்,அவ் மரணத்துக்கும் இடையில் தலைவிதி-இறைவன் செயலெனச் சமூகம் சொல்லிக்கொள்ளுமென ஆலோசனை-ஆறுதல் சொல்பவன்,ஒருகட்டத்தில் செல்வியின் காதலுக்கான தவக் கோலத்தை-விதவைக் கோலத்தைத் தகர்த்து அவளை விரும்பத் தளைகளை உடைக்க விரும்புகிறான்.அங்கே,மோகனது சமூகப் புரிதலின் இரட்டைப் பண்பு விமர்சனத்துக்கானது.நாம் வாழும் காலத்தில் இலக்கியத்தின் தேவை என்ன?அதன் வரலாற்றுப் பாத்திரம் என்ன?எதை நோக்கிய தேடலில் நம்மைக்கடந்து செல்லும் நமது வாழ்வை மீளவும் நமது விழிமுன்னே கொணர்ந்து இரண்டாவது முறை வாழ்ந்து பார்க்க வார்க்கப்படுகிறது.மோகனும், செல்வியும் இறுதியில் திருமணப் பந்தத்தில் கணவன் மனைவியாகுவதில் அவர்களுக்கு நிறைவிருக்கிறதோ இல்லையோ, ஆனால், அவர்கள் கொண்டுள்ள சமூக ஒழுங்குக்கு அதையொட்டிய பொதுப் புரிதலுக்கும் அத்தகைய புரிதலில் வாழும் நமக்கும் சந்தோஷமே!
மாக்சீம் கோர்க்கியின் தாய் நாவலை வாசித்தவர்களுக்குத் தெரியும் அதன் சமூக ஆளுமையை இலக்கியச் சிறிவை.அந் நாவிலில் தாயினது பாத்திரத்தைக்கொண்டு நம் அனைவரினதும் தாய்களை சமுதாயத்தில் வைத்துப்பார்க்கத்தூண்டும் கார்க்கி ஒரு மகத்தான படைப்பாளியாகத் தன்னை நிலைப்படுத்துவதிலும்பார்க்கத் தனது சமூகக் கடமையை அத் தாயினது உருவில் நிறைவேற்றுகிறார்.அவளைத் தரிசிக்கும் நாமோ ஒருபொழுதில் மனித நிலையிலிருந்து விடுபட்டு மோன நிலையால் முடிச்சிடப்படும் தருணங்களில் கற்பிதமாக எமது உணர்வில் எழுந்தருளியிருக்கும் இறை நிலைக்குச் செல்வதுண்டு.அதாவது, அவளை இறைவனது அவதாரமாகப் பார்க்கிறோம்.அவள் உழைப்பவர்களது தாய்-உண்மைக்குத்தாய்-நியாயத்துக்குத் தாய்!
மாக்சீம் கோர்க்கியின் தாய் நிலை, மனத்தில் பற்பலவானவொரு மகிழும் தருணங்களைத் தந்துவிடுகிறது.போராட்டமே வாழ்வு என்பதைத் தியாகத்தோடு நிரூபணமாக்கிறது.அவள் ஒரு கட்டத்தில் தலைமைப் போராளியாகி எம்மைக் காக்கும் தெய்வமாகிறாள்.உயர்ந்து அர்த்தங் கற்பிக்கும் அப்பாத்திரம் அழியாத நிலையெடுத்த வரலாற்றுப் பாத்திரம்!
கோர்க்கியின் தாய்,சார்ளிச் சப்பிளீன் காட்டும் மொடோர்ன் ரைம் சினிமா மாந்தர்கள், ர.சு.நல்ல பெருமாளின் கல்லுக்குள் ஈரத்து திரிவேணி,குன்ரர் கிறாஸ் காட்டும் பொன்ரி,ஓஸ்கார்,மீரா நாயரின் சலாம் பம்பாய் கிருஸ்ணா,சுந்தர இராமசாமியின் ஜே.ஜே.சோபாசக்தியின் கொரில்லாவின் அந்தோனிதாசன், ம்...இல் காட்டப்பட்ட பக்கிரி, நம்மை மகிழவும்,அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தவும்-சாகவும்-போராடவும் தூண்டுபவை.அப்படி கலங்கவும்-போராடவும்,அவர்களோடு வாழ்ந்து மகிழுந் தருணங்களை நாம் துறவு நிலை,அனைத்தையுங் கடந்த நிலை,தியான நிலை என்றெல்லாம் சொல்லி வருகிறோம்.ஆனால், எனக்கு அந்த நிலையெல்லாம் அற்புதமான மனித நிலையாக,மனதிற்கிசைவான உறங்கு நிலையாகவும், அதுவே ஒருகட்டத்துள் மனித ஆற்றலில் பேரெழிச்சியாகவும், மனிதர்கள் உண்மையாக இருக்கும்(இருத்தல்)உண்மையாகவும் இருக்கிறது.
மனதில் எழும் சுதந்திரமானவொரு உணர்வின் தெரிவில் கற்பிதங்கள் மறையும் பொழுதாக கோர்கியினது தாயினது பாத்திரம் என்னால் உணரப்படும்போது, நான் நானாக இருக்கிறேன்.இந்தச் சுயத்தை நான் எந்தப் புறநிலையிடமுமிருந்து பெறாதவொரு தவநிலையை உணர்வதென்பது மிகைப்படுத்தலல்ல.சமுதாயத்தில் வர்க்கங்களாகப் பிளவுபட்ட மக்களது வாழ்வுக்கான போராட்டத்தில் அவள் தலைமைப் போராளியாகிறாள்.அங்கே பாத்திரம் வெறும் அகவிருப்புக்காக வாழ்வதில் அர்தம் கொள்ளவில்லை.
இன்றும்,எத்தனையோ படைப்பாளிகளை அவர்களது மனித நோக்குக்காக நாம் மதிக்கிறோம்.அவர்கள் தாம் வாழும் உலகத்தில் கால்பதித்துச் சிறந்தபடைப்புகளைச் சொல்லியிருக்கிறார்கள்.அவர்களில் எனக்கு அதிகமாகப் பிடித்தவர்கள் டோல்ஸ்ரோய்(Tolstoi: Anna Karenina)அனா கறினினா,டோஸ்ரோஜேவிஸ்க்கி(Dostojewskij: Der Idiot) முட்டாள்,மற்றும்அலெக்ஸ்சாண்டர் புஷ்கின்(Alexander S.Puschkin:Erzaelungen)கதைகள்.இத்தகைய படைப்பாளிகளுக்கு நிகராக எழுதிவந்தவர் அல்பேர்ட் காம்யு(Albert Camus:Die Pest,Der Mythos des Sisyphos,Der Fremde...),அவரது அன்னியன் படைப்பைத்தவிர மற்றெல்லவற்றையும் குப்பைகள் என்று ஒதுக்கியவன் நான்.இதன் காரணத்தை மிக இலகுவாக அறியத்தரமுடியும்.காம்யுவின் எந்தப்பாத்திரமும் பூமியிற் கால்பதிப்பது கிடையாது.தனது வேரை மறந்து தன்னையொரு பிரஞ்சியக்காரன சிந்தித்து இருந்த காம்யு அல்ஜீரியாவைச் சுரண்டும் பிரான்ஸ்சுக்குக் குடைபிடித்தவர்.இன்று, தமிழ்பேசும் இலங்கையர்களாகிய நாம் நமது போராட்ட வாழ்வின் அனைத்து முகங்களையும் சோபாசக்தி காட்டும் கொரில்லா அந்தோனிதாசன்,ம்... பக்கிரியூடாகப் புதிய கதை மாந்தர்களை அவர்களது மண்ணினிது நிறத்தோடும்-ஆற்றலோடும் சந்திக்கிறோம்.இந்தச் சூழலோடு வாழும் எமது உணர்நிலைக்குள் இப்போது எனது அன்புக்குரிய திரு.கோவிந்தன் அவர்கள் என்ன சொல்கிறார்?
அவருக்கு யாருடைய வாழ்வைப் படைப்பாக்கிறர்ர் என்பதில் மிகவும் கவனமிருக்கிறது.அவர் தமிழீத்துக்காக மாந்தர்களை உருவாக்குகிறார்.அங்கே செல்வியை மட்டுமல்ல காஞ்சனாவையும் உருவாக்கிப்பார்க்கிறார்.காஞ்சனா அவரது தொகுப்பிலுள்ள இராண்டாவது குறு நாவலான இலட்சியத்தின் நாயகி.
இலட்சியம்:
பசுந்தீவுக் கோவிந்தன் அவர்களது "வாடாத றோசா"தொகுப்பிலுள்ள இராண்டாவது குறு நாவல் இலட்சியம்.இக் குறு நாவல் கனடாவிலிருந்து "முன்னாள் போராளிப் பெண்ணொருத்தியை"க் கல்யாணஞ் செய்யும் நிலையை இலட்சியமாகக் கொண்ட சோழன், தமீழத்தை நோக்கிப் புறப்பட்டு, அங்கே, பெண்கொள்ளும் கதையையே இலட்சியம் என்கிறது.இதன் நாயகியும் அவனுக்கு மனைவியுமாகும் காஞ்சனவே கோவிந்தனது சமகால அரசியல் புரிதலாக நம்முன் கொட்டப்படுகிறது.இக் குறுநாவலை கதை என்பதை விட அல்லது நாவலென்பதைவிட, அது-அவர்கொண்ட அரசியல் புரிதலுக்கானவொரு பிரச்சாரக மேடையை உருவாக்கிய வாகனம் என்பதே சரி.படைபிலக்கியத்துள் பிரச்சாரம் நிகழலாம்.ஆனால்,பிரச்சாரம் படைப்பாக மாறமுடியாத நிலையென்பதால் இலட்சியம் முழுமையானவொரு நாவலெனும் கட்டமைப்பைவிட்டு ஒதுங்க முனைகிறது.இதை இங்ஙனம் ஒதுக்குவதைவிட நமது சமகாலத்துப் புரிதலில் இலங்கைப் படைப்பாளிகளது படைப்புச் சுதந்திரம் குறித்த தேடாலாக விவரிப்பது சிறந்தது.
இலக்கியம்,புனைவு,கதை,படைப்பிலக்கியம் என்ற சொற்கோர்வைகளைக் கடந்து கதை சொல்வதற்கானதான தருணங்களில் அது எங்ஙனம் சொல்லப்பட முடியும் என்ற சமகாலத்தும்,கடந்தகாலத்தும் தத்துவார்த்தப் புரிதல்களை இதற்குள் கொணர்வது அவசியமானது.எனது கல்வியில் மிகவும் பெரும் பங்காற்றிய ஜேர்மனிய இலக்கியப் போக்குகள், அதுசார்ந்த தத்துவார்த்தப் போக்குகளைக் குறித்த புரிதலில் வைத்தே திரு.கோவிந்தனது இலட்சியம் சிறுகதையை விவாதிக்க விரும்புகிறேன்.
கிறிஸ்த்தோப் மார்ட்டின் வீலான்ட்(Christoph Martin Wieland, 1733-1813)அகத்தோன்,Agathon-der Gute என்ற நாவலானது அடிப்படையில் நல்லவர் எனும் பொருளில் கதை சொல்லப் புறப்பட்டது.இது,1762 இல் முதன் முதலில் வெளியாகியபோது, டொச் மொழியில் முதல்முதலாக வெளிவந்த நவ இலக்கியம்-நாவலெனும் அந்தஸ்த்தைப் பெறுகிறது.கதையில் கதைக்குரிய உயரிய நடைகள் கதை மாந்தர்களது அகவிருப்புக்கமைய வெளிப்படுவதும் அதன் பேசுபொருளாக மனித நடத்தை இருப்பதும் அந்த இலக்கியத்தின் இருப்பை இதுவரை உறுதி செய்கிறது.கிறித்தோப் மார்ட்டின் வீலான்ட் தான் வாழும் காலத்து சமூகத்தைத் தனது விசாரணைக்கான தளமாக மாற்ற முனையும்போது தான் கொண்ட அனுபவங்களை அதலிருந்து புறத்தே வைத்து விசாரிக்கிறார்.இதனால் படைப்பிலக்கியத்துக்கான ஒரு தத்துவார்த்தப் போக்கை இவருக்குப் பின்னால் வந்த கோதேக்கும்,பிரிடீரிக் சில்லருக்கும் தகவமைக்கும் கடமையைவிட்டுச் செல்வதில் ஜேர்மனிய இலக்கியவுலகம் தலைசிறந்த மேதையான தோஸ்மானையும்,பெற்றெடுத்தது.
தொடரும்...
ப.வி.ஸ்ரீரங்கன்
23.08.2009