-சில கருத்துக்கள்.
இரயாகரனுக்குக் கல்வெட்டுப் பாடிய சோபா சக்திக்கு என்ன நியாயமிருக்கிறதோ இல்லையோ அதை வரவேற்று நியாயப்படுத்தும் சேனனுக்கு என்ன அருகதையிருக்கு பெண்ணின் உள்ளாடை-அதிகாரம்-ஆண்மொழி குறித்துப் பேசுவதற்கென்று நாம் கேட்டு வைப்போம்!எஸ்.போ.வின் எழுத்துக்களைப் படித்த அன்றைய இளைஞர்கள்,ஒரு பெருமைக்காக அவரை அப்படியே கொப்பி பண்ணிய வரலாறு எனக்குள்ளும் ஓடுகிறது.எனது சிறுகதைகளில் பல எஸ்.போ.வை அப்படியே கொப்பி எடுத்ததென்பது உண்மை.ஆனால்,சோபாசக்தி இரயாவுக்குப் பாடிய கல்வெட்டும் அதே எஸ்.போ.வைக் கொப்பியடித்த எழுத்துவடிவமென்பதை நான் அறிவேன்!.இந்தக் கல்வெட்டை இன்று நியாயப்படுத்தும் சேனனின் அரசியல் குறித்து நாம் மௌனித்துக் கிடக்கமுடியாது!
உயிரோடிருப்பவனைக் குண்டுகள்கொண்டு கொன்றழிக்கும் இந்தத் தலைமுறையிலிருந்து சோபா சக்தி வருகிறார்.அவரது நியாயத்தின்வழி அவர் இரயாகரனை என்றோ கொன்றொழித்துவிட்டார்.இந்தக் கொலையை இன்றுவரை நியாயப்படுத்தும் சேனன் இன்னொரு கொலைக்கு அத்திவாரம் போடுகிறார்.அந்தத் தெரிவினூடாக மீளவும் இரயாகரனைப் புலம்பெயர் தமிழர்களின் "இன்றைய பெண்ணியத்தின்"வழி கொல்வதில் துணைக்கு இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தையும் கூட்டிவருபவர் மெல்ல அக்காவின் அரசியலையும் நியாயப்படுத்தப் பல்வகைக் கருத்துக்களை அதிகாரத்தின்வழி அலுசுகிறார்.எனினும்,அவரை இது எதுவுமே காத்துவிடவில்லை.அவரது மொழியைப்போலவே.
இவர்கள் செய்யும் இன்றைய "பிரா-ஜட்டி இல்லாத பெண்ணுடல்"அரசியல் இவர்களின் எஜமானர்களைக் காவுகொள்வதாக இருக்கும்போது,அவர்களால் மெல்லிய நாடாக்களில் தொங்கவிடப்பட்ட இந்த மார்புக்கச்சை இன்றைய இளைஞிகளைக் கட்டியாளும்போது இத்தகையவொரு போராட்டத்தைச் சுடலை நோக்கி நகர்பவர்கள் செய்கிறார்கள்.அவர்களது "தெரிவுகளை"அம்போவெனத் தாண்டிவிடும் அவர்களின் புதல்விகள் மெல்லப் போட்டுக் கழற்றும் இந்த வர்ணச் சங்கதிகள் நாளைய போராட்டரங்கில் மிகப்பெரும் பேசு பொருளாக உருமாறும் அரசியல் இவர்களுக்குள் இன்று தேம்பி வழிகிறது, இன்னொரு வடிவில்.அந்த வடிவத்தை அவிழ்ப்பதில் முன்னணியில் நிற்பவர்களில் சேனனும் ஒருவர்.
நமது தேசத்தில்,ஏன் எனது ஊரான சரவணையில் தோழர்களோடு கூட்டுக்கலவியை1982 ஆம் ஆண்டு நானும் பாசறையில் செய்தவர்களில் ஒருவன் என்ற அடிப்படை அறிவில் இத்தகையவொரு போராட்டம் எனக்கு அவசியமானது.ஏனெனில், எனது தெரிவுக்கிசைவாக நான் பெண்ணுடலை அநுபவிப்பதில் இன்றைய பெண்ணுடலும் அதுகொண்டிருக்கும் மரபும் எனக்குடந்தையாகச் செயலாற்றவில்லை.எனவே,நான் விரும்பும் உடலை இது மிக விகாரமாக்கிவிடுவதால் நானே,இதன் முதல் எதிரி.இது, கடந்து மீள்வதில் இன்றைய உடுதுணி உற்பத்தியாளர்களின் எளிமையான வியூகமே பதில் சொல்லியாக வேண்டும்.இல்லையேல்,"புலம் பெயர் பெண்ணியம்"நகர்த்தப்போகும் அடுத்தகட்ட அரசியல் போராட்டம் நல்லதொரு "தெளிவை"எமக்குத் தந்துவிடப்போகிறது.எனவே,இதைவிட்டு நாம் கொஞ்சம் சேனனிடம் போவோம்.
அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் ஈழத்து இயக்க அரசியல் பற்பல மனிதர்களை ஈழத்தில் போட்டுத் தள்ளிய அன்றைய-இன்றைய நிலைமையிலும்... இந்த ஈனத் தனத்தின் எதிர் விளைவுகள் நம்மைக் காடாத்தும் போரை நாம் அனுபவிக்கும்போது,இந்தச் சேனன் அவிழ்க்கும் பெண்சார் எழுத்து அல்லது குப்பை என்பது தோழர் இரயாகரனை நோக்கிய காழ்ப்புணர்வாக விரிவதின் அரசியல் என்னவென்பது சந்தேகித்துக்கொள்வதற்கிசைவானது.இன்றைய "பெண் உள்ளாடை"அரசியலுக்கு ஒத்திசைவாகப் பகலும் சேனன்வழி அரசியல் எந்தத் தர்க்க நியாயமும் இல்லாது இரயாகரனை முடிச்சுப் போடுவதும்,அதற்கேற்றபடி அம்மணி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தைக் கயிற்றில் கட்டித் தேர் இழுக்கும் அரும்பெரும் பெண்ணியத்தில் அவரது(சேனன்) அரசியலைத் தோலுரித்துக்கொள்வதற்கு அவசியமான தடயங்கள்பல.
எமது,வாழ்வுக்காகப் பயணித்த அரசியல்வாழ்வு என்றோ நாறிப்போன இன்றைய இந்திய உக்கிர நலன்களின்வழி,உழுதுபோடும் அரசியலுக்கு எப்பவும் முகவர்கள் இருந்தபடியே.அதுள் பற்பல வடிவங்கள் நமக்குள் விரைந்து குருதிச் சுற்றோட்டதை மேன்மேலும் உயர்த்த பற்பல சேனன்கள் உண்டு.இதுள் முக்கியமாக அக்கா இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் சேனனுக்கு அவசியமானவொரு கட்டத்தில் உட்புகும் நோக்கம் கூர்ந்து கவனிகத்தக்கது!
திருவாளர் சேனன் எப்போது அவசியத்துக்கு மாறான திசைவழிகளைத் தேர்வதில் தனது அரசியலின் விருத்தி எத்தகையதென்பதை அவரே உரைக்காதிருப்பினும் அதன் உள்நோக்கம் எடுத்துரைக்கும் "பொழுதும்-கணமும்" மிக கடினமான திசை வழியை அவருக்கேயிட்டுச் செல்வதை உணர்வதில் நாம் தவறிழைக்க முடியாது.இதன்தொடர்ச்சியில் இராஜேஸ்வரி பால(ண)சுபபிரமணியம் பிள்ளையானின் அந்தரக அரசியலுக்கு முக்காடுவிரித்ததென்பது(இரயாவின் கட்டுரைப்படி) அதன் பண்பினை மதிப்பிட்ட அரசியல் நலன் மற்றும் போக்குகளிலிருந்து எழுவதிலும்பார்க்க நிலவும் அரசியலுக்கேற்ற கருத்தியற்றளத்தை உருவாக்குவதாக முடிந்துபோகிறது!
இராஜேஸ்வரிக்குப் பெண்ணியத்தின்வழி பட்டங்களைக் கழுத்தில்கட்டி ஊர்வலமாக இழுப்பதிலுள்ள அரசியலானது அவரது இலங்கை அரசியலின்மீதான பார்வைகள்-ஒத்துழைப்புகள் குறித்துக் கருத்துக்களை-விமர்சனங்களை எழுப்புவதாக இருக்கவில்லை.சேனனுக்கு அதுவல்ல நோக்கு.ஜென்னியின் கட்டுரையைச் செழுமைப்படுத்துபவர் இராஜேஸ்வரியை இக்கட்டுரைக்குள் இழுத்துவருவதற்கு இரயாகரனையும்,சோபா சக்தியின் கல்வெட்டையும் மட்டுமல்ல சுகனினது மதிப்பு மறுப்பறிக்கைவரை இழுத்துவந்து, தனது "உள்ளாடை அரசியலை" மிகக் கவனமாக நகர்த்தி அக்காவின் இன்றைய அரசியற் தற்கொலையை நியாயப்படுத்த முனையும் இன்றைய நெருக்கடியில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தை வெறும் அப்பாவியாகவும்,அவர் ஒருவரே பெண்ணியத்தில் ஊன்றி,நிலைத்த போராளியாகவும்- புகலிடத்தில் "முற்றும் புரிந்துகொண்ட" பெண்விடுதலைப் போராளியாக ஏற்றம் பெறுகிறார்."அவருக்கு வயது அறுபது,அதிலும் அவர் செக்ஸ்சியாக இருப்பதாக" தனக்குச் சுயதம்பட்ட நியாயத்தைக் கட்டமைக்க அக்கா முனைவதின் ஒரு துளி நியாயமாவது தனது இன்றைய அரசியல் குறித்துக் கருத்துரைக்கமுடியாத இவர்,மகிந்தாவின் பின்தொடரும் பிள்ளையானின் அரசியலில் எந்தமக்களின் விடுதலையை வென்று குவித்துள்ளார்.பிள்ளையானின் காட்டாட்சியில் கிழக்குமாகாணப் பெண்கள் படும் உடல்-உள ரீதியான பாலியற்பலாத்தகாரத் தாக்குதல் முதல் பொருளாதார ஒடுக்குமுறைவரை இவரது அரசியல் என்ன நிலையெடுத்திருக்கிறது?
பிள்ளையானை நியாயப்படுத்துவதென்பது மறைமுகமாக மகிந்தாவை நியாயப்படுத்திச் சிங்களப் பாசிச அரசை நிலைப்படுத்திக்காப்பதென்பதன் உண்மை இங்கே மறைக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாகச் சேனன் அக்காவுக்கு அருமையான பட்டுக் குடையொன்றைத் தைத்து வழங்குகிறார்.
இன்றைக்குப் புலிகளைச் சாட்டுவைத்து இலங்கைவாழ் முழுமொத்தச் சிறுபான்மை இனங்களின் அரசியல் கோரிக்கைகளையும் பயங்கரவாதமாகச் சித்தரிக்க முனையும் சிங்கள ஆளும் வர்க்கமானது தொடர்ந்து இராணுவரீதியான பலாத்தகாரத்துக்கூடாகச் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்க முனைவதன் அரசியலை பிள்ளையான்-கருணா போன்ற விடுபேயர்களுடாகச் செய்து முடிக்கும்போது, அதற்குக் காவடி தூக்கும் இராஜேஸ்வரிக்கு புகலிடத்திலுள்ள மாற்றுக் கருத்தாளர்கள் எதிர்வினையாற்றுவதென்பது அவரைத் தூசிப்பதாக முடிகிறது-அன்பர் சேனனுக்கு!
இன்றைய இலங்கை அரசபயங்கரவாதமானது இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கு எந்த வகையில் நியாயமான அரசியல் நடாத்தையூடாகக் காரியமாற்றியிருக்கிறது?அரச பயங்கரவாதம் என்பது எப்பவும் நிலவும் அரச அமைப்பைக் காப்பதற்கெடுக்கும் பலாத்தகார இராணுவ நடவடிக்கையில் தனது அரசியல் ஆதிக்கத்தை மறுசீரமைப்புச் செய்கிறது.இதுவரையிலான எல்லாவகைக் கண்துடைப்பு ஜனநாயக விழுமியங்களையும் கடைந்தெடுத்துத் தூரவெறிந்துவிட்டுக் குடும்ப ஆதிக்க-கட்சி ஆத்திக்க-இராணுவ ஆதிக்கச் சகதியினூடாக ஒற்றைக் கட்சி-சர்வதிகாரத் தலைமையை நிறுவ முனையும் மகிந்தா குடும்பத்துக்குக் காக்கா பிடிப்பது, கிழக்குக்கு ஜனநாயகமோ அல்லது யாழ்பாண ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் முன்னெடுப்போ அல்ல.மாறாக,இதுவொரு மோசடி அரசியல்.
மக்களைக் காட்டிக் கொடுத்து, அவர்களின் உரிமைகளை ஏலம்போடும் இவ்வரசியல் போக்கிரித்தனமானதாகும்,இதன் வாயிலாக இலங்கையில் பாசிச ஆட்சியை நிலைப்படுத்தி,நியாயப்படுத்தும் பக்காப் பரப்புரையாகவே இவர்களது"இணைவு-பக்கச்சார்பு-ஒத்துழைப்பு"காட்டி நிற்கிறது.இதற்காக இவர்களுக்கு வந்துவிழும் எலும்புகள் அந்நிய தேசங்களின் அரசியல் மற்றும் ஊடக மட்டத்தில் மகிந்தா அரசை மக்களின் ஜனநாயகத்துக்கான ஒரு மக்கள் முன்னணி அரசாக நிலைநிறுத்த முயற்சிக்கிறது.(உதாரணமாக: வூப்பெற்றால் இராமச்சந்திரனும்,ரீ.பீ.சீ. வானொலியும் முன்னெடுக்கவிரும்பும் ஜேர்மனிய ஊடகங்களுக்குத் தகவல் வழங்கும் வானொலிச் செயற்பாடு-இது, இன்னும் செயற்பாடுகளில் இருக்கிறது.இதுவும் மிகவிரைவாக நம்மைக் கொல்லும் இலங்கையை நியாயப்படுத்தும்)இதுவே,இலங்கைச் சிறுபான்மை இனங்களின் தோல்வியுமாகவிரிகிறது.குறிப்பாக தமிழ்பேசும் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளைப் புலிகளின் அரசியல் நீர்த்துப்போக வைத்தது ஒருபகுதி உண்மையென்றால், மறுபகுதி இத்தகைய பிள்ளையான்-கருணா அணிகளுக்கு வக்காலத்து-ஆலோசனை வழங்கும் இந்த ஞானம்-இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்போன்ற இழி மனிதர்களின் செயற்பாடுமென்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
இத்தகைய நிலையில் புலிகளின் அராஜகம் குறித்துப் இவர்களுக்கு வரும் தும்மல் மக்கள் நலன்பிணைந்த ஆத்ம தாகமில்லை!மாறாக, இலங்கை அரசியலில் இவர்களது பாத்திரம் இலங்கைச் சிறுபான்மை இனங்களின் விடுதலையைக் காட்டிக்கொடுக்கும் இன்னொரு வகையான பாத்திரமாகும்.இப்பாத்திரம்,புலிகளின் அரசியலிலிருந்து விருத்தியான எதிர்ப்பாத்திரமாகும்.இந்த நிலையுள், எந்தப் பெண்ணிய முகமூடி தரித்தாவது அக்காவைக் காக்க முனையும் தம்பிக்கு இரயாவின் அரசியல் விமர்சனத்தைக் கேள்விக்குட்படுத்தும் அரசியல் விவேகம் கைகூடவில்லை!இதற்கு மாறாக, இரயாவைப் பெண்ணொடுக்கு முறையாளனாக வர்ணிப்பதில் சுயதிருப்தியடைகிறார் சேனன்.இதுவும், ஒருவகையில் இரயாவினது அரசியலின் காத்திரமான-நேர்மையான பாத்திரத்தை மேலும் வலுப்படுத்தவே செய்துவிடுகிறது.
புலம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்களுள் பரவலாக அறியப்பட்ட அராஜகமானது இன்று, பற்பல வடிவங்களில் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் மீளவும் நிலையெடுக்கிறது.அதன்வழி கல்வெட்டுப் பாடுதலும்,காடாத்துச் செய்வதும் இந்தச் சேனன்வழி அரசியலுக்குக் கைவந்த கலையெனினும் இவர்களே அம்பலப்பட்டுப்போகும் அரசியல் தற்கொலை இவர்களுக்கு நேர்கிறதென்பதை இவர்களது அக்காமாரும்,தோழிகளும்"உள்ளாடை கழற்றும்"அரசியலில் மிக இலகுவாகவே இவர்களைக் காட்டிக் கொடுத்துவிடுகிறார்கள்.
ப.வி.ஸ்ரீரங்கன்.
21.09.2008