Sunday, August 05, 2007

வேரோடு அறுத்தெறியவேண்டிய"NGO""க்கள்!



வேரோடு அறுத்தெறியவேண்டிய"NGO""க்கள்!


இலங்கைப் பிரச்சனையில் அதியுயர்ந்த இழப்பாக இருப்பது மக்களின் அன்றாட உயிர்வாழும் உரிமை மட்டுப்படுத்தப்பட்டதும்,வாழ்வாதாரப் புறநிலைகள் அழிக்கப்படுவதுமே.போராடும் இரு தரப்பும்(அரசு,புலிகள்)இதுவரை எந்தவொரு நிலையிலும் மக்களுக்கான நலன்களைக்கொண்டு போராடுவதாகவில்லை.இரு தரப்புக்கும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தத்தமது போருக்கு நியாயம் கற்பிக்கும் ஒரு விசயமாக இருக்கும்போது, இதைத் தாம் மட்டுமே தூக்கிப்பிடிப்பதாக அரச சார்பற்ற அமைப்புகள்;(non-governmental organization) என்ற இந்த என்.ஜீ.ஓ.க்கள் கதையளப்பதும், கூடவே தமது பிற்காரணங்களுக்காக இலங்கை,சோமாலியா,சூடான்,இன்னபிற ஆபிரிக்கக் கண்ணடத்து நாடுகளென விரிந்தும்(Chancen und Risiken von NGOs -
Die Gewerkschaften in Guinea während der Unruhen 2007-Adama Sow,)நேபாளம்,வங்காளதேசம், என்று இவர்களின் கால்கள் எங்கும் மிக அழுத்தமாக வைக்கப்படுகின்றன.


இந்த என்.ஜீ.ஓ.க்களை ஊட்டி வளர்த்தெடுக்கும் சக்திகள் பெரும்பாலும் தொழில்வளமுடைய நாடுகளாகத்தான் இருக்கிறது.இத்தகைய நாடுகளின் சந்தையை விரிவுப்படுத்தியும்,அந்தச் சந்தைக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான கச்சாப் பொருட்களையும்,அதன் இருப்பையும் கண்காணித்து, அந்த வலயங்களைக் கட்டுப்படுத்தித் தமது எஜமானர்களுக்குக் கையகப்படுத்துவதற்காகப் புதிய பாணியில் செயற்படுபவர்களே இவர்களாக இருக்கிறார்கள்.இவர்களில் மிக முக்கியமானவர்கள் அற்றாக் மற்றும் உலகுக்குப் பாண்(ரொட்டி) என்று கூத்தாடுபவர்கள்.இவர்கள் போன்று 2400 க்கு மேற்பட்ட non-governmental organization (NGO) கள் இன்றுவரை செயற்படுகின்றன.இவர்கள் எல்லோருமே இந்தப் புதிய உலக ஒழுங்கில் மேற்குலகத்தின் அரசியல் அபிலாசைகளை கனிவளம் நிரம்பிய மூன்றாம் உலகத்துள் நிலைப்படுத்த முயற்சிப்பவர்களாகவே இருக்கிறார்கள். எல்லைகளற்ற வைத்தியர்களாக இருக்கட்டும் அல்லது உலகமயத்தை எதிர்க்கும் அற்றாக்காக இருக்கட்டும் எவருமே பாதிக்கப்படும் மக்களின் இந்த நிலைமைக்கு காரணமென்ன என்பதை மிக இலகுவாக அறிந்துகொண்டு அதைப் போக்குவதற்காச் செயற்படுவதாக ரீல் விடுகிறார்கள்.அவலப்படும் மக்களை அந்த நிலைக்குத் தள்ளிய இந்தப் பொய்யர்களின் எஜமானர்களேதான் இவர்களுக்குப் படியளப்பவர்களாக இருக்கும்போது, இவர்கள் எங்கே நமது தேசத்தின் பிரச்சனைகளைப் போக்கப்(தீர்த்தல்) போகிறர்கள்?


ஜேர்மனியில் நடாத்தப்பட இருக்கும் இந்த என்.ஜீ.ஓ'க்களின் கூட்டம்-விவாதத் தொடர் சந்திப்பு ஏதோ மக்களின்மீது அவர்களுக்கிருக்கும் கரிசனையால் நடப்பதாகக் காட்டப்படுகிறது.இதற்கு, ஜேர்மனியில் அன்று 1990 மட்டில் தோற்றுவிக்கப்பட்ட இலங்கையர் சங்கமும் அதன் தலைவர் நம்ம இரஞ்சித்தும் ஒளிவட்டம் கட்டுவது அவ்வளவும் பொய்யானதாகும்.இலங்கையர் சங்கத்தின் இருப்பே இந்தப் பொல்லாத என்.ஜீ.ஓ'க்களின் கைகளிலேயே இருக்கிறது.என்.ஜீ.ஓ.க்களின் எஜமானர்களோ புலிகள் போன்ற இயக்கங்களுக்கும் இலங்கைபோன்ற அரசுகளுக்கும் ஒரே மாதிரியாகப் படியளந்து போர்களைத் தூண்டியபடி,மறுபுறம் இந்த என்.ஜீ.ஓக்கள் மூலமாகக் காயப்படும் மக்களுக்கும்,கொல்லப்படும் அப்பாவிகளுக்கும் மருந்தும்,இறுதியடக்கமும் செய்கிறது.இதனடிப்படையில் ஒரு நாட்டுக்குள் ஊடுருவித் தேசத்தின் அனைத்து விசயங்களிலும் தனது இரும்புப் பிடியைச் செய்து அந்நிய மூலதனத்தின் இருப்புக்கும் அதன் விருத்திக்கும் வளர்முக நாடுகளைப் போண்டியாக்கிறது.


இவர்களின் அதீதத் தேவையானது அந்தத் தேசத்துப் புத்திஜீவிகளைக் கைகளுக்குள்போட்டு அவர்கள் மூலமாகப் பெருந்திரளான மக்கள் கூட்டத்தைப் பிடிப்பதாகும்.இத்தகைய தரணங்களுக்கு மிக அருகினில் இருப்பவர்கள் மூன்றாம் உலகத்து நாடுகளின் வரிகளில் படித்துவிட்டுப் பின்பு அந்தந்தத் தேசத்துக்கு"டாட்டா"காட்டிச் சென்று, மேற்குலப் பல்கலைக் கழகங்களுக்குள் ஆய்வுகளைச் செய்யும் நம்"பேராசிரியர்கள்"தான்.இவர்களே இன்றைய non-governmental organization (NGO)களின் பெரும் புரவலர்கள்.இவர்கள் வாயிலாக நம்மை வந்தடையும் இத்த அமைப்புகள் நமது கொஞச்நஞ்சவுரிமைகளையும் பறித்தெடுத்துத் தமது எஜமானர்களின் உணவுத் தட்டில் வைப்பதற்காகப் பொதுக்கூட்டம் எனும் பெயர்களில் ஊரூராய்ப் பொட்டலம்கட்டிக் கண்ணீர் விடுகிறார்கள்.


நமது இறையாண்மையென்பது எம் தேசங்களின் எல்லைகளைக் காப்பதல்ல.அது அந்தந்தத் தேசங்களின்-மக்களின்-இனங்களின் பரஸ்பர ஒற்றுமையோடுகூடிய பொருள் உற்பத்தியிலும் அதைத் தக்க வைத்தபடி மற்றைய தேசிய அலகுகளைக் காப்பதுமே இறையாண்மையின் முதற்படியாக இருக்கிறது.எம்மைப் பிரித்து ஒவ்வொரு இனத்துக்கும் எதிரியாக்கியபடி அரசியல் செய்யும் இவர்களின் எஜமானர்கள் இருக்கும்போது,இலங்கைத் தேசத்துக்குள் ஒற்றுமையைக்கொணர்வதற்காக இந்த என்.ஜீ.ஓக்கள் செயற்படுகிறார்களாம்.அதையும் நமது பேராசியர்கள் ஒத்துப் பேசியபடி நம்பும்படி சொல்வது எதனால்?


நோர்வே-ஓஸ்லோ விவசாயப் பல்கலைக்கழகம்-பேராசிரியர் என்.சண்முகரெத்தினம்-வ.ஐ.ச.ஜெயபாலன் வகையறாக்கள் நமது மக்களின் கண்ணீருக்குக் காரணமான இந்தப் பெரும் குற்றவாளிகளை புலிகளை நியாயப்படுத்துவதுமாதிரியே நியாப்படுத்த முனையுந்தறுவாயில், நாம் இந்தப் பயல்களிடமிருந்து நம்மை முதலில் விடுவிப்பதற்காகவேனும் இத்தகைய சந்திப்புகள்,கூட்டங்களை நாடிச் சென்று, இவர்களை இவர்களது பாணியிலேயே அம்பலப்படுத்தியாக வேண்டும்.இதைச் செய்யாதிருக்கும் ஒவ்வொரு தரணங்களிலும் இந்த என்.ஜீ.ஓ.க்களின் புரவலர்களே நம்மை மேய்பதற்காகவும்,அவர்களது பிச்சையில் புசிப்பதற்காவும் நமது போராட்டச் சாவைத் தினமும் உற்பத்தி செய்வார்கள்.இவர்களை நம்பி எந்த முன்னெடுப்பையும் நமது தேசத்தில் செய்வதற்கானவொரு தரணம் நமக்காக உள்ளிடப்பட்டால் அது அந்தந்தத் தேசத்தின் மக்கள் வாழ்வுக்குச் சாவுமணியடிப்பதே.இவர்களை அம்பலப்படுத்தி நாம் புரட்சிகரமான வழிமுறையில் ஒன்றுபடாதபோது,நம்மை இவர்கள் இலகுவில் சீரழிப்பது மிக நிதர்சனமாகிவிடும்.நாம் இந்த என்.ஜீ.ஓ'க்கள் மீது ஒரு கண்ணை வைத்திருப்போம்.அவர்களை( non-governmental organization (NGO)வேரோடு அறுத்தெறிவதற்காக.


ப.வி.ஸ்ரீரங்கன்
06.08.2007


போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...