அவசியம்
அறிந்து கொள்வோம்.
உலகம் மிகக் கொடூரமான முறைமைகளில் மனித வதையைச் செய்வதில் குறியாக நிற்கிறது.அது பற்பல வடிவங்களில் சாத்தியப்படுத்தப் படுகிறது.
ஒரு புறம் மக்களின் அன்றாட வாழ்வைப்பறிக்கும் தொழில் கழகங்களின் புதிய இடத்தெரிவுகள்,அணைகள்-கட்டுமானங்கள் மறுபுறம் தொழிற்சாலைக் கழிவுகள்,சம்பளமற்ற மிகைவேலை-வேலையைவிட்டுத் துரத்துதல்,அரசுகளின் சமூக மானிய வெட்டு!என்ன செய்வது?கட்டுண்டு வாழ்வதா அல்லது போராடிச் சாவதா?
போராடுவதற்கான அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகிறது.ஜேர்மனிய வைத்தியர்களிள் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 14.12.2005 அன்று கடைசி சில மணி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டுள்ளது.மாக்டபேர்க் கூட்டு எனும் அமைப்புக்கு
இது தோல்வியில் முடியவில்லை மாறாக மனிதவுரிமைக்குக் கிடைத்த பாரிய தோல்வி.இது ஒரு உதாரணத்துக்காகச் சொல்லப்படுகிறது.உலகம் பூராகவும் தொழிலாளர் நலன்கள் இந்த நிலையிலேயே பறிக்கப்படுகிறது.
நர்மதா அணைக்கட்டுக்காகப் போராடும் பழங்குடி மக்களும்,
மேத்தா பட்கரும் அருந்ததி ரோயும் ஒரு புறமாக மறுபுறமோ பல் தேசியக் கம்பனிகளின் பகாசூரக் கூட்டங்களை சேட்டில் என்ன கோங் கோங் என்ன அனைத்து இடங்களிலும் தடுத்து நிறுத்த ஆர்ப்பாட்டங்களை மக்கள் நலக் காப்பாளர்கள் மக்களோடு இணைந்து போராடும் நிலையில், இத்தகைய உரிமைகளை நீதி மன்றங்கள் பறித்துவிடுவதைப் பார்க்கும்போது
பாசிசத்தின் உச்சக்கட்டம் நம் முன் விரிவது தெரிகிறது. கனடாவில் நடந்த சூழல் பாதுகாப்பு மாநாட்டை அமேரிக்கா நிராகரிக்கிறது.உலகச் சூழல் பாதுகாப்பை நிராகரிக்கும் அமேரிக்கா வளர்முக நாடுகளைத் தனது பங்குக்குத் திட்டித் தீர்க்கிறது.
உலக வங்கியோ நர்மதாவை மட்டுமல்ல தென் சூடான் எண்ணைக் குழாய்கள் வட சூடான் போர்டோ துறைமுக நகரத்தை 1600 கிலோ மீட்டர் தாண்டித் தொடுவதற்காக(1999 இல்) பல பத்து இலட்சம் மக்களை வருத்தித் திட்டம் போட்டுக் கொன்றொழிக்கிறது.அவ்கானிஸ்தானிலிருந்து துருக்கியூடாக ஜேர்மனியை வந்தடைய இருக்கும் எண்ணை-எரிவாயுக் குழாயோ சுமார் 6000 கிலோ மீட்டரைக் கடக்கப் போகிறது.இந்தப் பிரதேச மக்கள் தலைகள் பையப்பைய உருண்டு விடப்போகிறது.இதற்கெல்லாம் சூத்திரதாரி உலக வங்கி.
சூடானில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக 'எண்ணை ஆதிக்கத்துக்கான' போர் சூடானில் நடைபெறுகிறது.சூடானின் எண்ணை வளத்தைக் கொள்ளையிட முனையும் வல்லரசுகளும் அவைகளின் இராட்சத
எண்ணைக் கம்பனிகளும் இதுவரை இரண்டு மில்லியன்கள் சூடானிய அப்பாவி மக்களைக் கொன்று குவித்திருக்கிறது.32.6 மில்லியன்கள் சனத் தொகையில் 2 மில்லியன்கள் மக்களை அந்த நாடு பறி கொடுத்துள்ளது!மொத்தச் சனத் தொகையில் 6.4வீதம் செத்து மடிந்துள்ளது.4.5 மில்லியன்கள் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து அல்லப்படும் அவலம். இதை நோக்கி விட்டு உலகின் வேறு பக்கம் தலையைத் திருப்பினால் அவ்கானிஸ்தான்,ஈராக்,நைஜீரியா,கொங்கோ,அல்ஜீரியா...இது
உலகம் பூராகத் தொடர்கதையாக...வோட்டோ,காட் ஒப்பந்தங்கள் என்ன சொல்கின்றன?
மக்கள் உரிமையின்-மனிதஉரிமையின் கதை கந்திரயாகிப் போனதை
இங்கே நடை பெறும் உரையாடல் நம்மை அதிர வைக்கும்.
'வணக்கத்துக்குரியவர்களே!
இன்று நடைபெறும் இந்தவுரையாடல் நமது நோக்கத்தைப் பற்றியும்,அதையடையும் வழிமுறைகளையும் பேசுவதாகும்.-
மிகத் தெளிவாக ஆதர்சத்தோடு பேசிக் கொண்டான், முதலாளிகளுக்கான ஆலோசனை மையத்தின் பிரதிநிதி.(அவனது நீண்டவுரையைக் கேட்பதற்காக கூடியவர்கள் அனைவரும் 'வர்த்தகக் கூட்டு'மையத்தின் முதலாளியச் சந்தைப் பொருளாதாரத்தைக் காப்பதற்கான 'சந்திப்பை' கோங் கோங்குக்முன் பல நாடுகளிலும் செய்தவர்கள்.இத்தாலியில் இந்தக் கூட்டின் சந்திப்பை எதிர்த்த பொதுமக்கள் சிலர் பொலிசின் துப்பாக்கிக்குப் பலியானார்கள் 2004 இல்,இது குறிப்பிடத்தக்கது.)
அந்தப் பிரதிநிதி இப்படி மேலும் தொடர்கிறான்:
வேலை!உற்பத்தத்திறன் மிகுதியாகக் கூட்டப்படவேண்டும்.ஒவ்வொரு தொழிலாளியும் தனது வேலைத்திறனைக் மிகுதியாக் கூட்டியாகவேண்டும்.அவர்களை நீண்ட உழைப்புக்குத்
தயாராக்கி உழைப்பைக் கறாராகப் பெறவேண்டும்.அத்தோடு இப்படி உடலுழைப்பைப் பெறும் நாங்கள் இதைத் தடுப்பதற்காகத் தொழிலாளர் செய்யும் போராட்டங்களை ஒடுக்கியாகவேண்டும்.
இதன் அடிப்படைக் கருத்து இதுதாம்:
அதாவது 'நுகத்தில் மாட்டிய மனிதன், தான் நுகத்தில் மாட்டியிருப்பதை உணரக் கூடாது'.இதன் அர்த்தம் அவனால் இழுக்கப்படும் வண்டி அவனாலேயே ஓடுவதை அவன் ஒருபோதும் உணரப்படாது!
எல்லா வகைக் காரணகாரியங்களும் வாழ்க்கைச் செலவுக்கும் நுகர்வுக்காகவுமே
என வகுக்க வேண்டும்.இது உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்.இத்தோடு முக்கியமானது,
சாதரண மக்களை மிகவும் பலமாகப் பிளவுப்படுத்தியாக வேண்டும்.பற்பல நிலைகளில் ஒருவரையொருவர் எதிரிகளாக்கி விடுவது மிக அவசியமாகும்!மக்களில் பலரை நாங்கள் வேலை செய்யும் மிருகங்களாகவே உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும்.இப்போது
அப்படித்தாம் அவர்களை நாம்,நமது துறைசார் மொழியில் புரிகிறோம்.
இத்தகைய மிருகங்களுக்கு நாம் மிகக் குறைந்த கூலியை அவர்களது நாளாந்த உணவுக்கும்,உறையுளுக்கும் கொடுப்போம்.இவர்கள் எமது தொழிற்சாலைகளில்,பண்ணைகளில் ,விற்பனை அங்காடிகளில்,உயர்தர நட்சத்திரக் கோட்டல்களில்,நகரப் பராமரிப்பு-சுத்திகரிப்பில் தமது உடலுழைப்பைக் கொடுத்து இந்தவூதியத்தைப் பெறுவதாக 'எப்பவும்'இருக்கவேண்டும்.இந்தத் தொழிலாள மிருகங்கள்
ஒரு போதும் தமது ஊதியத்தில் ஒரு பகுதியைச் சேமிக்கும்படியாகக் கூலி இருக்கப்படாது.இது மிக மிக அவசியம்.உண்பதற்கோ,உடுப்பதற்கோ பற்றாத கூலியைக் கொடுப்பதுதாம் இந்த முறைமையைக் காக்கும்.சேமிப்பானது சுதந்திரத்தைக் கோரவைக்கும்,அவசியம் இதை நீங்கள் இன்று புரிய வேண்டும்.இன்றைய ஐரோப்பாவுக்கு இதுதாம் சீரழிவைத் தந்தது.தொழிற் சங்கம்,வேலை நிறுத்தம்...என்னயிது?முதலாளிகளாகிய - பங்குப்
பணமிட்டவர்களைக் காப்பது ஒவ்வொரு சுப்பர் மனேச்சர்களினும் கடமை.
கூடியிருக்கும் அத்தனை மனேச்சர்களும் இதைக் காதில் வேண்டவும்.
சேமிப்பு இல்லையேல்... தொழிலாள மிருகம் சிந்திக்காது!
தொடர்ந்து நுகத்தில் மாட்டப்பட்டிருக்கும்.
நுகத்தை விட்டகலா இந்த மிருகம்
நம்மைக் குதற முடியாத இயலாமையை நாம் தொடர்ந்து அதற்கு ஏற்படுத்தியாக வேண்டும்.அந்த மிருகத்தோடு எப்பவும் கதைக்கவேண்டும்:'மனிதர்கள் உயிர் வாழ்வதாக இருந்தால் தொடர்ந்து கடுமையாக உழைத்து விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்'என்று!இதுவே நாகரிமானது எனவும் கூறிக்கொண்டிருக்க வேண்டும்.இதற்காக அனைத்துக் கலை இலக்கியமும் கடுமையாக உழைக்கவேண்டும்.குறிப்பாக ஆத்மீகத் துறையில் இது வெகுவாகப் பரப்பட்டுவருகிறது.
இது மகிழ்ச்சிக்குரிய விடையமே!எனினும் தேவாலயங்களுக்குச் செல்லும் வேலைக்கார மிருகங்கள் குறைந்து வருகிறது, இது ஆபத்தானது.திட்டமிட்டு பலவர்ணக் கலவையில் தேவலாயங்கள் தம் பிரச்சாரத்தை முன்னெடுப்பது அவசியம்.
இவர்களது வருவாய்,இவர்கள்தம் சீவியத்துக்குப் பற்றாக் குறையாக இருக்கும்போது இவர்களைக் கடன் பெறத் தூண்ட வேண்டும்.வங்கிகளில் தமது கடன்களைப் பெறும் வசதியை நாம் இலகுப் படுத்திவிடுவது உசிதம்.சிட்டி பாங் இதில் நமக்கு நல்ல உதாரணமிக்க பங்காளியாகும்.இப்படிப் பணம் கடனாகப் பெற்றுவிடும் இந்தத் தொழிலாள மிருகங்கள்,தமது கடனுக்காகவும் கடுமையாக உழைப்பதை நோக்கமாகக்கொண்டு நமது நுகத்தில் தொடர்ந்து பூட்டப்பட்டிருக்கும்.
இத்தோடு நாம் தொடர்ந்து உலகம் பூராகவும் வேலையற்றவர்களை-வேலையில்லாத் திண்டாட்டத்தைச் செயற்கையாக உருவாக்கி அதைக் குறைத்துவிடாத முறைமைகளில் வருடாவருடம் வேலையற்றவர்களின் தொகையைக் கண்காணித்து வரவேண்டும்.இப்படிக் கண்காணித்து வரும்போது ஒரு வேலையில்லாப்பட்டாளம் தொடர்ந்திருக்கும்.இதன் இருப்பில் தொழில் புரியும் மிருகங்களுக்கு நாளாந்தம் அச்சம் பெருகும், தாமும் வேலையை இழந்து நடுத் தெருவுக்கு வந்து விடுவோமோவென.இத்தகைய உளவியல் சிக்கல் அவசியம்.என்னென்றால் இதை உலகம் பூராகவுமுள்ள தொழிலாள மிருகங்களுக்கு அவரவர் வித்தியாசங்களுக்கேற்றபடி இதைப் பயன்படுத்தி, அவர்களுக்குள்
விவேகமாக நாம் விளையாட வேண்டும். இவர்கள் இனிமேல் தொழிற் சங்கங்கள் உருவாக்குவதை நாம் உடைத்தெறிவதற்குத் தயங்காது உழைக்வேண்டும்.அதற்காக இந்த'வேலையற்ற-வேலையிலுள்ள'பிரிவும்,பிளவும் மிக அவசியம்.
வேலையற்றவர்களுக்கும் வேலையில் இருப்பவர்களுக்கும் நிரந்தரமான பொறாமையையும்,எரிச்சலையும்ஆத்திரத்தையும் ஏற்படுத்தி
வளர்தெடுப்பதை யாரும் நீங்கள் மறக்கப்படாது.இவர்கள் தங்களுக்குள் அடிபடும்போது அதற்கான காரணத்தில்
நாம் பின்னிருந்து வெற்றி பெறுவதை அவர்கள் அறியமாட்டார்கள்.
இத்தகைய நிலைமையில் நாம் இன்னொரு சிறிய குழுவை ஏற்படுத்தி அவர்களுக்கான வேலைகளை இப்படி ஒப்படைக்கணும்: அதாவது இந்த மாபெரும் கூலிப்பட்டாளத்தை எந்த ஓட்டைகளுமற்ற முறைமையில் தொடர்ந்து வேவு பார்க்கணும்!, எமக்குத் தொந்தரவு கொடுத்திடுதலும்
கூடவே எம்மை அச்சப்படுத்தி வருவதும், எமது செல்வத்தை வேலைக்கார மிருகங்களில் சிலரைப் பயன்படுத்தி தாக்கி அழிப்பதைச் செய்விக்கணும்,11 செப்டம்பர் தாக்குதல் போன்று... கூடவே எமக்கெதிராக நெடுகக் குரல் கொடுத்து வருவதைச் செய்தாக வேண்டும்.(கூட்டத்தில் எதுவித இரைச்சலுமின்றி பேரமைதி நிலவுகிறது.எல்லோர் முகங்களிலும் ஆச்சரியம் மேலிட்டுக்கிடக்கிறது!)இதைவிட மிகப் பெரும் வேலைக்கார மிருகப்பட்டாளத்தை-அதன் மாபெரும் பலத்தைத் தொடர்ந்து பிளவுப்படுத்திப் பிரிக்கவேண்டும்.இங்ஙனம் நாம் செய்விக்கும்போது வேலைக்கார மிருகங்களின் ஒற்றுமைப்படுதலும்,அதனூடாகப் புரட்சிசெய்யத் தோழமைப்படுதலும் வெகுவாகத் தடுக்கப்படுகிறது(இப்போது சபையில் பலத்த கரகோசம் வானை அதிர வைக்கிறது).
அமைதி,அமைதி! மினறால் வோட்டரைப் பருகியவண்ணம் கைகளைத் தூக்கிச் சபையை வேண்டிக் கொண்டான்.சபை நிசப்தமாகியது!
அவன் மேலும் தொடர்ந்தான்:
அன்பான செல்வந்தர்களே!,இந்தவுலகத்தின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்றவர்களே!!,உலகத்தின் பெரும் பகுதி மனிதர்களுக்கு உணவளிக்கும் கொடை நிறைந்தவர்களே!!! நாங்கள் வேலைக்கார மிருகங்களில் சிலரைக் கருங்காலிகளாக்குவதைக் கண்டோம்.இப்போது
அதே பட்டாளத்தில் வேலையற்றோரையும், ஒப்பந்த நிறுவனங்கள் வழங்கும் தினக்கூலிகளையும் தொடர்ந்துருவாக்கி அவர்களைத் தொழிலாள மிருகங்களுக்கு எதிராக நிறுத்தவேண்டும். அமேரிக்காவின் அதிபெரும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான போர்ட்டை உதாரணத்துக்கு எடுங்கள்!அங்கே 70 வீதமான வேலைக்கார மிருகங்கள் ஒப்பந்தத் தினக்கூலிகள்.வாவென்றால் வருவார்கள்,போவென்றால் போவார்கள்.இந்த மிருகங்களுக்கு அங்குமிங்குமாகவே நமது முகவர்கள் வேலை வழங்குவார்கள்.அதனால் ஒற்றுமைப்படுதுல் தவிர்க்கப்படுகிறது.கூடவே இவர்களால் மற்றைய நிரந்தரத் தொழிலாள மிருகம் தொடர்ந்து அச்சமுறும்,போராடத் துணியாது-சம்பள உயர்வுக்கு வாயே திறக்காது!வேலை இழப்பதுக்கரிய மாபெரும்
விஷயமாக எண்ணிக்கொண்டு அதை விட்டகலாது தொடர்ந்து பணிவோடு உற்பத்தி செய்யும்.நாங்கள் தொடர்ந்து வித்தியாசங்களையும் அது சார்ந்த நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி வருவோம்!அதாவது வாழ்க்கைத் தரத்தில் ஏற்ற இறக்கங்களைச் செய்யும்போது வேலைக்கார மிருகத்திடம் தொடர்ந்து பொறாமையும்,காழ்ப்புணர்வும் நீடிக்கும்.அது ஒருபோதும் தனக்குள் ஒன்றுபடாது.இதுதாம் நாம் கார்ல் மார்க்ஸ் என்ற எங்கள் துரோகிக்கு நாம் கொடுக்கும் பாரிய அடி-அவன் கூறினானே'உலகெங்கும் இருக்கும் தொழிலாளர்களே உங்களுக்குள் ஒன்றுபடுங்கள்'என்று!அதை நாம் உடைத்துவிட்டோம்.(சபையில் மீண்டும் பரத்த கரகோசை,விசில் அடி,எல்லோரும் எழுந்து நின்று கரகோசை செய்துவிட்டு அமர்ந்தனர்.) இத்தகையவர்களில் ஒரு நிறுவன அதிகாரி ஆர்வ மேலீட்டால் இப்படியுரைத்தான்:
'ஓ, இது சிறப்பபாக இதுவரை நடக்கிறது!,இதையெப்படித் தொடர்ந்து காத்து வருவது?'கேள்வியோடு அசடுவழிய அமர்ந்துகொண்டான்.
நாங்கள் பலமானவொரு அரச அமைப்பை முன்னமே வைத்திருக்கிறோமல்லவா?இதை உலகச் சிறுசிறு அரசுகளோடு கூட்டாகி,அவர்களின் சகல அரச வடிவங்களையும் நாமே கட்டுப்படுத்த, அத்தகைய நாடுகளின் வறுமையைப் பயன்படுத்துவோம்.அதுக்காக நமது கட்டுப்பாட்டிலுள்ள உங்களது பணத்தால் இயங்கும் உலக நாணய நிதியத்தை,உலக வங்கியைப் பயன் படுத்தி விடுவோம்.அப்போது சகல அரசுகளும் நமது கட்டுபாட்டுக்குள் வருகிறது.இது தொடர்ந்து வர்த்தகக் கூட்டால், வோட்டோ,காட் ஒப்பந்தம் மூலமாக நிர்வாகிக்கப்படுகிறது.எனவே தொடர்ந்து கடுமையாக வரி அறவிடப்படுதலும்,மானியக் குறைப்பையும் நாம் செய்து வருவோம்.இதனால் நமது அழுத்தமே தெரியாது மூச்சுவிடும் இந்த அமைப்பு.இதுதாம் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறை.
எமது அடுத்த குழு... இதுவும் வேலைக்கார மிருகம்தாம்!என்றபோதும் இதைக் கொஞ்சம் விரிவாக உங்களுக்கு விளக்கவேண்டும்.இன்றைய அதிகாரிகள்,மனேச்சர்கள்,முதலாளிகளுக்கு பணம் சம்பாதிக்குமளவுக்கு நமது அரச அமைப்புப்பற்றி விளங்குகிறதில்லை.அதனால் அரசோடு மோதுவது நடக்கிறது.வரிகொடுப்பதில்லை...அப்பிடிச் செல்கிறது உங்கட நடவடிக்கை.எனவே இதையும் கொஞ்சம் பார்ப்போம்.
எதுவுமற்ற பட்டாளத்துக்குள்ளிருந்து நமது அடுத்த சிறு குழுவானதை இப்படிப் பெற்றோம்:அது அரச பணியாளர்களாகவும்,நீதீவான்களாகவும்,பொலிஸ்,
சிறையதிகாரிகள்,
சிறைக் காவலாளிகள்,புலானாய்வுத் துறையாளார்கள்,இராணுவத்தினர்கள் என்று!இவர்கள் எமது அரசு ஜந்திரத்தை மிக நேர்த்தியாக நிர்வகித்து எமது'பொடிக் காட்டாக'-அடியாளாக எந்த நேரமும் இருக்கிறார்கள்.
நிச்சியமாக இந்த வேலைக்கார மிருகங்களுக்கு நாம் கொஞ்சம் சிறப்பாகக் கூலியைக் கொடுக்கவேண்டும்.சாதரண வேலைக்கார மிருகத்தைவிட இந்த மிருகத்துக்கு நாம் பாதுகாப்பான வேலை உறிதிப்பாட்டை வழங்கவேண்டும்.எப்போதும் துரத்தப்படாது அவர்களுக்கு வேலை நிரந்தரமாக்கப்படுவதை செயலில் காட்டவேண்டும்.இவர்களுக்குச்
சலுகைகள் கொடுத்து,இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திவிடவேண்டும்.இதனால் இந்த வாழ்க்கைத் தராதரம் வேலை மிருகங்களுக்குள் இந்த இரண்டு பிரிவையும் மிக மிக அந்நியப்படுத்தி அவர்களுக்குள் பதட்டத்தை,பிளவை வலுப்படுத்தித் தம்மைத்தாமே ஒடுக்குவது சுலபமாகும்.இந்தப் பாதுகாப்புப்பிரிவை
உளவாளிகளைக்கொண்டு வலுவாகக் கண்காணித்து
ஆபத்து வராதவரையும் நம்பவேண்டும்.இவ்வளவு இருந்தால் போதுமா நமக்குப் பாதுகாப்பு?
இல்லை!,அப்போது? இதையுங் கேளுங்கள்.நம் முன்னோரின் அறிவை இன்னும் மேம்படுத்திவைப்போம்.நாங்கள் இன்னுமின்னும் ஒழுங்குகளையும் அதைச் செயற்படுத்தும் பல்லாயிரக்கணக்கான சட்டங்களையும் ஏற்படுத்துவோம்.இதை எவரும் படித்துப் புரியாதபடியும்,
அதையொட்டியொழுக முடியாதபடியும் இவைற்றை எழுதிவைப்போம்.இதன்படி எவரையும் எந்த நேரத்திலும் கிரிமனல்,பயங்கரவாதியென கைது செய்யமுடியும்.அல்லது கொல்ல முடியும்.இது வேலைக்கார மிருகங்களிடம் பயத்தையும்,பணிவையும் ஏற்படுத்தி நவீன அடிமைகளாக நாம்கூறும் ஜனநாயகத்தில் வாழ்ந்து- இல்லையில்லை எமது நுகத்தில் மாட்டுப்பட்டு எமக்காகச் சாகும் இந்த வேலைக்கார மிருகங்கள்!இத்தோடு பிரத்தியேகமாக
மிக நேர்த்தியான நமது விஞ்ஞானிகளின் துணையோடு நுட்பம் நிறைந்த தொழில் நுட்பத்தின் வாயிலாக அனைத்தையும் வேவு பார்க்கும் திட்டத்தை ஒழுங்காகச் செய்வோம்.இங்கே செய்மதிகளையும் அதனால் இயக்கப்படும் கமராக்களையும்,கட்டளைகளையுமே நான் முன் மொழிகிறேன்.
'இந்த வேலைக்கார மிருகங்களுக்கு முன்புபோல் கொத்தடிமை மாதிரி வாழ்க்கையில்லையே?அதுகளுக்குக் குடும்பம் இருக்கே,அங்கு இவைகள் திரும்பும்போது சுதந்திரத்தை அநுபவித்துத் தம்மைப் பலப்படுத்தினால்?...' கேட்டுக் கொண்டான் ஒரு பயாந்தாங்கொள்ளி முதலாளி.
உரையாற்றியவன் மெள்ளப் புன்னகைத்தான்.தலையை அங்குமிங்குமாக ஆட்டிவிட்டுத் தோள்பட்டையை மேலே அசைத்து,இதழைக் கடித்துவிட்டுத் தனது செக்கிரிட்டிப் பெண்ணை வரவழைத்தான்.அவளைப் பக்கத்தில் வரவழைத்துத் தோளில் கைகளைப் போட்டுக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தான்: இதுதாம் எமது மையப் புள்ளி.(அந்தப் பெண்ணைச் சுட்டிக்கொண்டான்.அவள் தனது மெல்லிய இடையை அவனோடு உரசிக் கொண்டாள்.அந்த நளினமான சூழல் எல்லோரதும் வயிற்றுக்குள் ரொக்கட்டைச் செலுத்தியது காதலுணர்வு).அவன் தொடர்ந்தான்.நாங்கள் ஆண்,பெண் உறவை ஒரு பம்பரத்தை ஆட்டுவிக்கும் விசை நூலின் முறமைக்குள் வைத்திருக்கிறோம்.இதனால் ஒருவரையொருவர் வருத்துவதை நுட்பமாக்கி வைத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா? இது என்னவென்றால் ஆண்கள் பெண்களை ஆண்டாண்டு காலமாக ஒடுக்கி வருவதாகக் கருத்தியல் தளத்தில் ஒருவகையான
பூர்வீக மனதை உருவாக்கி வைத்துள்ளோம்.இதை எமது குடும்பமெனும் அமைப்பால் செயற்படுத்தி வருகிறோம்.ஆண்களால் மட்டுமே அவர்களது கடுமையான உடற்பலத்தால் முன்னேற முடியுமென நாம் கருத்துக்களை விதைப்போம்.அப்போது நிரந்தரமான ஆண்,பெண் பொறாமை நிலைக்கும்.
இது புதிய நுகத்தை இந்த கூட்டத்துக்கு கட்டுவதாகும்.இந்தப் பொறி பூர்வீகமான பெண்ணின் பாதுகாப்புப் பிராணியான ஆணை அவர்களிடமிருந்து பிரித்து ஒடுக்கு முறையாளர்களாகவும்,போட்டியாளர்களாகவும் உருவாக்கிவிடும்.அப்போது பெண்கள் தம்மை விடுதலையடைய வைப்பதற்காக ஆண்களையே எதிரிகளாக்கி நம்மைக் காத்துவிடுவார்கள்.சண்டை வேறுதிசையில் செல்லும்போது நம்மீதான நேரடி எதிர்ப்பு இல்லாது கவனம் வேறு திசையில் செல்லும்.அப்போதும் நாம் செய்யவேண்டியது இதை வளர்தெடுப்பதற்காக பெண் சிந்தனையாளர்களைப்'பெண்ணியலாளர்களாக'உருவாக்கிப் புதுப்புது ஒடுக்கு முறைகளையும்,அதனால் பெண்விடுதலையடைவதே முதற் பிரச்சினையாகவும் அவர்களுடாகப் பறைசாற்றுவோம்.கூடவே பாலியல் திருப்த்தி பற்றியும் ஓப்பிணாகக் கதைக்க வைப்போம்.
பெண்களே பெண்களைப் பற்றிப் பேச வேண்டுமெனச் சொல்லும் கருத்தியலை அவர்களது குரலினூடாகவே பேச வைப்போம்.
அப்போது ஆண் வேலைக்கார மிருகம் தாளாத சிக்கலில் பல பக்கத்துக்கு முகங் கொடுக்கணும்.அதனால் நம்மை எதிர்க்கத் திரணியேற்படாது.தொடர்ந்து வேலையில் இருப்பதே மேலெனச் சிந்தித்து வீட்டை மறந்து நுகத்தில் கட்டுண்டு கிடக்கும்.பெண்ணும்
தனது சுமைகளை ஆண்தாம் வழங்குவதாக நம்மை மறந்து
தமது கணவனின் பக்கம் சதா போர்தொடுப்பாள்.இது எப்படியிருக்கு?இதோடு நமது திட்டம் முடிவதில்லை.புதிய விவாகரத்துச் சட்டங்களை அவளுக்குச் சொல்லி ஆணிடமிருந்து நிரந்திரமாகப் பெண்ணை பிரித்திடவேண்டும்.ஒரு பெண்ணை மனம் நோகாது பாதுகாத்து வர பணம் அதிகம் வேண்டுமென ஆண் உணரும்படி வைப்போம்.அப்போது பெண்ணுக்காக மீளவும்
கடுமையாக உழைப்பான்.அதோடு சமூகத்தில் பெண் பற்றாக் குறையாக இருத்திவைப்போம்.பெண்மீது அளவுகடந்த தாகம் ஆணுக்கு ஏற்படும்போது அவன் தலையில் பெண்ணே சஞ்சரிப்பாள்.இதனால் அவன் சிந்தனையாற்றல்,எதிர்ப்பாற்றல் குன்றிவிடும்.பெண்ணை அடைவதற்காகவே முயற்சிகள் நடக்கும்.அதனால் நாமே நலமடைவோம்.இன்றைய பின் நவீனத்துவ மூலவர்களான தெரிதாவையும்,பூப்காவையும் மட்டுமல்ல அருந்தி ரோயையும்,அற்றாக்கையும்-உம்பேர்ட்டே எக்காவையும் உளுத்துப் போன இனப் பிரச்சினைகளையும், அதைவலுவாக்கிப் போராடும் மூன்றாமுலக அரசியலையும்,அங்குள்ள சேவை நிறுவனமான நமது 'வேர்ல்ட் விசன்'நிறுவனத்தைப் போல ஆயிரம் தன்னார்வ அமைப்புகளையும் நாமே வழி நடத்துகிறோம்.
'ஓ சபாஷ்!நல்ல திட்டம்.நாங்கள் புரிந்து கொண்டோம்!'கூட்டத்திலிருந்தவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கிடக்க,ஒரு கஞ்சன் தன்னை வெளிப்படுத்தினான்:
'ஓம் நல்லது!இத்தகைய அரச வடிவம் நல்லதுதாம்.இதுவரை அதுக்குப் போடும் தீனீ அதிகமாகுதே?இதையின்னும் எப்படிச் சாத்தியமாக்க முடியும்?'-அவன் கேள்வியை நிறுத்து முன்பே உரையாற்றிவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.அவன் இப்படிக் கூறினான்:
'நீங்கள் எங்கே அரசுக்கப் பணம் கொடுக்கிறீர்கள்?சும்மா கதைவிடுவதை இத்தோடு நிறுத்துங்கோ உங்கள் மாய்மாலங்களை.இது அதிகமாகச் செலவாகும் காரியமாகிப் போனது உண்மை.ஆனால் செலவை நீங்கள் கொடுக்கவில்லை, அரச வடிவத்துக்கு!'
'அப்போ யாருதாம் இதுக்குப் பணம் போடுகிறார்கள்?'அதிசயமாக இன்னொரு முதலாளி கேட்டான்.அவனது பார்வையில் வெகுளித்தனம் தெரிந்தது.
சகலாகலா வல்லோனான அந்த உரையாளன் மெல்லக் குரலெடுத்து அமைதியாகச் சொன்னான்:'நாங்கள் செய்திருக்கும் சட்டதிட்டங்கள் வேலைக்கார மிருகங்களே தம்மை வேவு பார்க்கும்,ஓடுக்கும் தமது ஒரு பிரிவுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் பணம் செலுத்திவிடுவதற்கு வழி செய்கிறது.அந்த மிருகங்கள்தாம் இதுவரையும் பணம் கொடுக்கிறார்கள்-இனியும் அந்தமிருகங்களே வழங்குங்கள்.அந்த வகையில்தாம் நமது வரிமதிப்புத்திட்டங்களும்,நுகர்வுச் சந்தையும் கட்டப்பட்டுள்ளது.இதைத்தாம் சந்தைப் பொருளாதாரமென்று நுட்ப வார்த்தையில்-கலைச் சொல்லில் என்னைப்போன்ற வல்லுனர்கள் சொல்கிறோம்! இப்படிப் பல சுமைகளை இந்த மிருகங்களுக்கு நாம் ஏற்றிவிடுவதால் இந்த மிருகங்கள் ஒருபோதும் சிந்திக்காது.கூடவே நமது பொழுது போக்குத்துறை அவர்களுக்குச் சொல்வதும்,வழிநடத்துவதும் நமது பாதுகாப்புக்கேற்ற முறைமைகளே.இதையெல்லவற்றையும்விட நமது மதங்களும் அவைகளின் அற்புதமான மூளைச் சலவையும்,அதுபோல நாம் உருவாக்கிய கல்வியும் நாம்மால் கட்டுப்படுத்தப்படுகிறது.எனவே எமது பாதுகாப்பு அரண் பாரியது இதை மீறி இந்த மிருகங்கள் நம்மை நெருங்க முடியாது.
'அற்புதம்' எல்லோரும் வழிமொழிந்தார்கள்.
நன்றி அன்புக்குரிய நிர்வாகிகளே,செல்வந்தர்களே!நான் கூறியபடி தொடர்ந்து இந்த முறைமைகளை வலுப்படுத்தி உலகம் பூராகவும் நமது வலுவைப் பலப்படுத்த நீங்கள் ஒத்துழைக்க ஒப்புதல் தந்ததாகவே உங்கள் குரலைப் பதிவு செய்கிறேன்.இதுவே எமது அடுத்த வர்த்தகக்கூட்டின் இலக்கு.முடித்துக் கொண்டான் உரையை அந்த நிபுணன்.
கோங் கோங்கின் நகர மைதானத்தில் அற்றாக்கின் துணையோடு "உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள்" அணி திரளும் இன்றைய பொழுதில் அவர்களை அந்த அமைப்புத் தனது எஜமானர்களுக்குக் காட்டிக் கொடுக்கத் தனது உளவாளிகளின் மூளையை உசார் படுத்தியது.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.12.2005.
தமிழ்ப்பதிவுகள்