Thursday, January 08, 2015

நாளை மகிந்தாவுக்கும் ,மைத்திரிக்கும் ஓட்டுப் போடுவோம்!


ன்றுவரை சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குள் இன்னல் படும் தமிழ்பேசும் மக்களது பிரதான முரண்பாடு சிங்களப் பேரினவொடுக்குமுறையாகும்.அதையொட்டிய இராணுவ ஆட்சியாகும்.இதன் தெரிவில் சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரச ஜந்திரமும் பிரதான எதிரியாகவும்,சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இட்டுக்கட்டப்பட்ட  பௌத மாதவாதத்தோடான சிங்களத் தேசியப் பெருமிதமும் அதன் வழியான தமிழ்பேசும் மக்கள்மீதான சிங்களப் பாட்டாளிகளது உளவியற்றாக்குதலும்,பழிப்பும்-ஒதுக்குதலும்கூடிய பண்பாட்டு ஒடுக்குமுறையும் இரண்டாவது பெரும் முரணாகவும்,எதிரியாகவும் இருக்கிறது.தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக, மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் மக்களே போராட்ட அணியாக மாறிவிடுவதைத் தடுப்பதில் மகிந்தாவை ஆதரித்தும் ,மைத்திரிபால சிறீசேனாவை ஆதரித்தும் தமிழ்த் தலைமைகள் செய்யும் பெருந்துரோகம் தமிழ் மக்களுக்கானவொரு அரசியல் வெளியை இல்லாமற் செய்ததே!அடையாள அரசியலை மறுத்த  தெரிவில் தமிழ்மக்கள் தமது அரசியலைத் தீர்மானிக்கவே முடியாதபடி நம்மை அரசியல் அநாதைகளாக்கிவிட்டு, நாளை நடைபெறும் இலங்கை அதிபர் தேர்தலில் மைத்திரியின் பின்னால் நம்மை அழைத்துச் செல்லும் நரித்தனமானது, மேற்குலக நலன்கட்கமைய கணிசமானமுறையில் வியூகத்தைச்செய்கின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்!

இதைவிட தமிழ்-சிங்கள இனத்துக்குள் முகிழ்க்கும் புதியவகை மாதிரியான இடதுசாரிய வேடம் பூண்ட எதிர்ப்புரட்சிகரச் சக்திகள் சுய நிர்ணயவுரிமையைச் சிறுபான்மை இனங்களுக்கு மறுப்பதன்வழி தமது இலக்கைச் சரியகவே நிலவும் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தின் வியூகத்துக்கமையவும், அதன்அரசியல்ஆதிக்கத்தை நிலைப்படுத்தவும் அதிகார அமைப்பு களோடிணைத்துள்ளனர். இவர்களது அன்றைய அரசியல் தெரிவானது நாளை 08.01.2015 அன்று,  நடைபெறும்இலங்கை அதிபர்த் தேர்தலுக்கான தெரிவுகளை இலக்காகக் கொண்டிருந்ததென்பதை நாம் இப்போதாவது உணர்கிறோமா?






தமிழ்பேசும் மக்களது இயல்பு வாழ்வுக்குள்ளும்,பொருளாதாரத் துய்புக்குள்ளும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் திமிரைக் கட்டவிழ்த்துவிடும் சிங்கள இனத்தின் பாசிச வன்முறைசார்-கருத்தியல்சார் ஒடுக்குமுறையே பிராதான முரண்பாடாகவிருக்கிறது. இதுமேலும் இனங்களுக்கிடையில் இனவாத முரண்பாடாகி அரச ஆதிக்கமும்-உரிமையுமுடைய சிங்களப் பாட்டாளிகளையும் ஆட்டிப்படைக்கும்போது நம் மக்களின் பிராதான முரண்பாடு சிங்களப் பேரினவாத வொடுக்குமுறையே அன்றி முதலாளித்துவச் சட்டவாத அல்லது நல்லாட்சி-ஜனநாயக மறுப்பு முரண்பாடல்ல!


சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையானது வெறுமனவே சிங்கள ஆளும் வர்க்கத்தால் மட்டும் தூண்டப்படுவதில்லை.இதற்குள் வரலாற்று ஐதீக மனமும்-பெருமிதக் கனவும் சரிசமனமாகச் சிங்கள இனத்தை ஆட்டிப்படைக்கின்றதென்பதால் பெரும் பகுதிச் சிங்கள மக்களது ஒத்துழைப்புடனேதாம் சிங்கள ஆளும் வர்க்கம் தமிழ்பேசும் மக்களை வேட்டையாடுகிறது.இதிலிருந்து தப்புவதற்குத் தமிழ் பேசும் மக்களக்குள்ள ஒரே அரசியல் ஆயுதம் சுய நிர்ணயவுரிமைக்கான தொடர் கோரிக்கையும் அது சார்ந்த அடையாள அரசியல்  வெகுஜனப் போராட்டமுமே!இதைத் தடுப்பவர்கள் சிங்களப் பேரினவாதத்தை மூடி முறைத்து இலங்கையின் ஆளும் வர்கத்துக்குத் துணைபோபவர்களாக மாறுகிறார்கள்-மாற்றப்படுகிறார்கள்.இதைத்தாம் தமித் தேசியச் கூட்டமைப்பு மைத்திரியை அல்லது மகிந்தாவை ஆதரிப்பதென்ற "அரசியல்" நகர்வில் மேற்குலச் சதியின் இலங்கை முகவர் மைத்திரியை ஆதரிப்பதன் போக்கில் நாம் பலமாக வரையறுக்க வேண்டும்.இவர்கள் இப்போது தமிழ் மக்கள்சார் அரசியற் கோரிக்கை அனைத்தையும் கைவிட்டு ஜனநாயகம்,நல்லாட்சி,சட்டத்துக்குட்பட்ட அரசு என்று தமிழ் மக்களது தலைவிதியை அதே புலிப்பாணியில் முட்டுச் சந்தியில் நிறுத்தியிருப்பது தற் செயலானது அல்ல!இது திட்டமிடப்பட்ட மேற்குலக வியூகமாகும்.


தமிழ் மக்கள்மீதான சிங்கள ஆளும் வர்க்கத்தின் பல்லாண்டுகால "திமர்த்தனமான" இனவொடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் இனத்தின் இருப்புக்கும்-தற்பாதுகாப்புக்குமான ஒரே அரசியல் அயுதமாகவேதாம் சுயநிர்ணயவுரிமைக் கோரிக்கையும் அதுசார்ந்த அடையாளமும் - வெகுஜன அரசியலும் தமிழ்பேசும் மக்களது அரசியலாக வருகிறது.இதை மையப்படுத்தி இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களது வாக்குரிமையைத் தமிழ் அரசியலது அடையாள எதிர்ப்பாக்க மறுக்கும் மேற்குலக லொபி அரசியலது தெரிவே நமது சாபக் கேடாகிறது.அதை(அடையாள அரசியல்) மறுப்பதன்வழி இலங்கையின் ஆளும் வர்க்கத்தைக் காத்து, அவர்களது அடியாளகவே இந்தத் "தமிழ்த் தலைவர்களது" "வகை மாதிரி" அரசியல் இலங்கையில் சட்டவுரிமை பெற்றுச் செல்வாக்குச் செலுத்துகிறது.இதைத் தயார்ப்படுத்துபவர்கள் பெரும்பாலும் அந்நியத் தேசத்து இராஜதந்திரிகளாகவே இருக்கும்போது நாம் ஏலவே அந்நிய நலன்களுக்காகக் குருதி சிந்திய வரலாற்றின் இன்னொரு "மாதிரி துரோக அரசியலை" இப்போது காண்கிறோம்.இதுவே நமக்கு இனிவரும் காலுத்துள் மிகப் பெரும் ஆபத்தாக மாறப்போகிறது.


ஸ்ரீரங்கன்
07.01.2015

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...