Monday, January 23, 2012

15 வயதுப் பாலகனது தற்கொலை!

தற்கொலை!

துகுறித்து நான் பல முறைகள் பலரைப் படித்துவிட்டேன்.எமில் துர்க்கைம் முதல் காம்யு எனப் பலரைப்படித்துவிட்டு,இப்போது பீட்டர் சிமாவையும் மேலதிகமாகவே[ Infantilisierung in der Fun-Gesellschaft] கற்கிறேன்.நேற்று எனது நண்பன் ஒருவனின் மகன் 15 வயதுப் பாலகன் இரயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்துவிட்டான்!பாடசாலையில் அழுத்தங் கூடியதாகவும்,10 ஆம் ஆண்டில் மீளவும் இருந்து கற்க வேண்டிய அவஸ்த்தையில் அவன் வதங்கியதாகவும் ஒரு பகுதிக் கதை அரும்புகிறது.

15 வயதுப் பாலகனது வாழ்வு இப்படி முடியும்போது,நான் ஒரு தந்தையாக-இரு குழந்தைகளுக்கு(19-14 வயதுக்கு குழந்தைகளுக்குத் தந்தையாக)தந்தையாக இருக்கும்போது அந்தப் பாலகனது மரணம் என்னை வருத்துகிறது.

எனது தலை குனிகிறது!

இன்றைய குழந்தைகளது தேவையைப் புரியமுடியவில்லை!

அவர்களது உலகத்தைத் தரிசிக்கத் தெரியவில்லை.அவர்கள் முற்றிலுமே வேறானவர்களென்பதை அங்கீகரிக்கவும் முடியவில்லை!

குழந்தைகளை நமது சொத்தாக,எமது பிற்காலத்து முதுமைக்கு ஒரு ஊன்றுகோலாகவே நாம் கண்டு வந்திருக்கின்றோம்.இதை எமது பெற்றோர்களிடமிருந்து நான் கற்றுவந்தேன்.எனது குழந்தைகள் என்னிடமிருந்து இதைக் கற்கக் கூடிய சூழலை நான் ஏற்படுத்தவேயில்லை!அவர்களை-அவர்களாகவே இருக்க விடுவதென்பது எனது கற்கையின் வழி நான் கண்டடைந்தவுண்மை!

இந்திய-இலங்கை மற்றும்தமிழ் சூழலில் மனிதருக்குள் என்னென்ன பிரிவினைகள் இருப்பதென்பதுவும் அவர்களுக்குத் தெரியாது. விக்கிப் பீடியாவில் சாதியக் கட்டமைவுகளையும்,இந்து மதத்தைக் குறித்த கற்கையில் கண்டடைந்த எனது மூத்தமகன், சில கேள்விகளைக் கேட்டான்.அவனுக்கு: " இந்துமதம் என்பதும்,உலக மதங்கள் யாவும் மக்களை அடிமைப்படுத்தும் அபினி " என்பதை உரைத்தபோது ,அவன் மறுப்பெதுவும் கூறாது ஏற்றான்!மரபுரீதியான எந்தத் தமிழ்ச்சம்பிரதாயமும் அவர்களுக்குத் தெரியாது!எனினும்,பயமாக இருக்கிறது.குழந்தைகளது உலகத்தையும்,அவர்களது சிந்தனைத் திசைவழிகளையும் நாம் சரிவரப் புரியவில்லை!


அவர்கள்:

1: அதீதமான சுதந்திரவுணர்வுமிக்கவர்களாக இருக்கிறார்கள்,

2:தன்முனைப்பு அதிகமான தன்நிலைகளைத் தகவமைப்பவர்களாக இருக்கின்றனர்,

3:பெற்றோர்களைக் குறித்து எந்தக் கவலையுமற்ற அந்நியர்களாக இருக்கின்றனர்.அல்லது, பெற்றோர்கள் கட்டுப்பெட்டிகளெனப் புரிந்துபோயினர்,

4:தமது நலன்சார்ந்தும்-விருப்புச் சார்ந்தும் அதிகமாகச் சிந்திக்கின்றனர்,

5: கல்வி குறித்து எந்தப் பொறுப்புமற்ற உலகத்தில் தமது போக்குக்குக்கேற்ப எதையோ தேடிச் செல்வதாக அவர்களது காலம் கழிந்துபோகிறது.படைப்பாற்றலின்றிப் பாடசாலையில் அதிகம் அவமானப்படுபவர்களுமாக இவர்களே இருக்கின்றனர்.

இவற்றை, இந்த வர்த்தகச் சமூகமே படைத்து இவர்களைத் தமக்கேற்பவும் தயாரித்துவிட்டபின்,நம் குழந்தைகள் நம்மவர்கள் இல்லை!அவர்கள்,இந்த நுகர்வடிமைச் சமுதாயத்தின் வாரீசுகளாகிப்போயிருக்கிறார்கள்.மீள, வேருக்கு அழைப்பதும் முடியாது போகிறது.அப்படி அழைக்காதவரை இந்தச் சமுதாயத்தின் அற்பத்தனங்கள் அவர்களைச் சிறுபருவத்திலேயே கொலைக்குத்தூண்டுகிறது-தற்கொலை சாதாரணமாக நிகழ்கிறது.வாழ்வு பரிகாசத்துக்குரியதாகப் படைக்கப்பட்டவெளியில் [Das Leben ist es wert gelebt zu
werden, da ein Gott oder eine Weltvernunft den grundsätzlich positiven Charakter menschlichen Daseins im Normalfall garantiert. ]அவர்கள் தம்மைத் தாதாவாக்கி வைத்து ஊர்கோலம் போகின்றனர்.குறிப்பிட்ட காலத்தில் தாதாவுக்குரிய மகுடஞ் சரியும்போது தமது வாழ்வை முடிப்பதில் ஒரு எதிர்நிலையான கற்பனை வீரத்தைக்காண்பதோடு,மரணத்துள் தமது தோல்வியைப் புதைக்கின்றனர்!

இந்த நிலையில்,இந்த மாதம் ஜனவரி 2012 க்குள் இரண்டு இளைஞர்கள் நானறியத் தற்கொலை செய்துவிட்டனர்.

ஒருவனுக்குப் பதினெட்டு வயதாகிறது.அவன் வீட்டைப் பெருக்கச் சொன்ன தாய்கு வாய்காட்ட,அவனது தந்தை அவனை மெல்லத் தட்டிவிட்டுத் தாயும் தந்தையும் கடைத்தெருவுக்குச் சாமான்கள் வேண்டச் சென்றபோது, அந்தப் பையன் சொன்ன வார்த்தைகள்:"நீங்கள் வீட்டுக்கு வரும்போது வீடு எப்படி இருக்குமென்று பாருங்களேன்"என்பதே!

கடைத்தெருவிலிருந்து வீடுமீண்ட அப்பாவிப்பெற்றோர்கள் அந்தப் பதினெட்டு வயது இளந்தாரியின் உடலைத் தொங்கிக்கொண்டிருக்கும் சூழலில் பார்க்கும்போது வாழ்வில்-குழந்தைகளோடான அணுகுமுறையில் நமது தவறென்ன-குழந்தைகள்கொண்டிருக்கும் சுதந்திரவுணர்வென்ன-புரிதலென்னவெனக் கேட்டு வைப்பது சாத்தியமாகிறதா?
Kierkegaard: „Entweder-Oder“ sagen:„Ein Selbstmord ist der negative Ausdruck für die unendliche Freiheit"கீர்கேகோட் வாதத்தின்படி வாழ்வு தேர்வாகிறது."அதுவா-அல்லது இதுவா"தற்கொலையென்பதாவது எதிர்மறையான பொருட் குறித்துரைப்பினும் அது முடிவற்ற சுதந்திரத்தை வழங்கிவிடுவதென்பதில் எனக்குச் சிக்கல்கள் அதிகமாகிறது.

நேற்றுப் பச்சப்பாலகன்,15 வயது ஆரம்பிக்கும் சிறுவன் தாயிடம்கூறிப் படம்பார்க்கச் செல்கிறான்.இரவு படம் முடிந்து நண்பர்களோடு வரும் அந்தப் பாலகன்,இம்பிஸ்[Imbiss] கடையில் டொனர்(Döner) வேண்டிச் சாப்பிட்டபடி அம்மாவுக்கு போன் செய்கிறான்:"அம்மோய் நான் டோனர் [ Döner ]சாப்பிடுகிறேன்.அடுத்த பஸ்சுக்கு வீட்டை வந்துவிடுவேன்." என்னவொரு ஊழ்வினை?இரவு பத்து மணிக்கு மகனின் தொலைபேசி மணியைக்கேட்ட பெற்றோருக்கு இப்போது, இரவு 11 மணிக்கு வீட்டு மணி ஒலிக்கிறது.

மகன் வந்துவிட்டானென ஓடோடிச்சென்று கதவைத் திறக்கும் தாய்க்கு, ஜேர்மனியப் பொலிசாரே கண்களில்படுகிறார்கள்.

பதை பதைத்துப் போனவர்களிடம்,"இது உங்கள் பையனின் ஜெக்கற்றா,இது அவனது மணிபேர்சா,இது அவனது பாடசாலை அடையாள அட்டையா"எனப் பொலிசார் விசாரித்துவிட்டு,மகன் ஓடும் இரயிலின்முன் பாய்ந்து இறந்துவிட்டான் எனும் செய்தி சொல்லப்படுகிறது.

அட,அநியாமே!இதுவொரு வாழ்வா?

ஏன்-ஏன்?

உனக்குக் குறை வைப்பவன் எனது நண்பனில்லை!அவனது குமாரனான நீ-ஏன் இப்படி?

கொஞ்சம்,இந்தத் தருணத்தை உள்வாங்கிச் சிந்திக்கின்றேன்.

அவனது பெற்றோர்,மிக நடுநிலையானவர்கள்.பொதுவாக எவரோடும் சோலி சுரட்டுக்குப்போகாத மென்மையான இதயமுடையவர்கள். எனினும்,அவர்களது பையனும் தற்கொலைக்குப் போகும் சந்தர்ப்பம் எதனால் உருவாகியது?

கல்விக்கூடத்தின் அதிகாரத்துவ நிலைக்கு,அல்லது குடியேற்றவாசிகளைக் குட்டும் ஆசிரிய மனோ நிலைக்கு[ fatalistischer Selbstmord ] இந்த மாணவன் பலியானான்?புரியவில்லை!


அல்பேர்ட் காம்யு குறித்த " Das Gefühl des Absurden[உலகத்தின் _அபத்தமாகும் உணர்வு ] "இந்த மாணவ மனநிலையில் உலகத்தின் பொருள் [Es gibt nur ein wirklich ernstes philosophisches Problem: den Selbstmord ]எதுவுமில்லையென உணர்ந்திருப்பதால் இந்த அதிவேகப் பயணம்? பெற்றவர்கள் நாம்.மனம் வேதனையாலும்,தோல்வியாலும் அவஸ்த்தைப்படுகிறது.

எப்படி இவற்றை விளங்க முற்படுவது?.

ஒவ்வொன்றாக எழும் முரண்பாடுகள்,இறுதியில் பாலகர்களது உலகத்தில் அர்த்தமற்ற உலகமென [ die Welt sei absurd ]விரிவதா?

எமில் துர்க்கைமை மீளவும் வாசித்துப் பார்க்கிறேன்.என்ற போதும் மனம் ஒருமைப்பட மறுக்கிறது.

சாவை [Freitod ]அரவணைக்கும் பாலகனின் தோல்வி என்னவாக இருக்கமுடியும்?

தற்கொலைபற்றிய கூட்டு மனப்பாங்கை இந்தவயதில் இவன் உள்ளத்தில் உருவகப்படுத்திய சந்தர்ப்பம் எப்படியுருவாகிறது?


அவனது மனிதிலே உணரப்பட்டது எது?

Das Gefühl des Absurden:
Egoismus_தன்முனைப்பு(-), Anomie_ஒழுங்கு பிறழ்வு நிலை(-)

Fatalismus_விதிமுனைவாதம் (+), Altruismus_பொதுமைச்சார்பு (+ ),


அவனது உலகம்,அவனுக்கு வசப்படவில்லையா?

அந்தவுலகத்தை அவன் வெற்றிகொள்ள முடியாததன் வெளிப்பாடாக இந்த மரணம் இருக்கமுடியுமா?

அல்லது,அவனது உலகத்தை மறுக்கும் இந்த வாழ்நிலையை எதிர்த்து அவனது கலகமாக விரியும் பரிகாசமா [Egoistischer Selbstmord -altruistischer Selbstmord ? ]இந்த மரணம்?

இரு குழந்தைகளுக்கு அப்பனான நான் அச்ச முறுகிறேன்.

குழந்தைகளது உலகத்தைப் புரியாத நிலையில், அந்த மரணம் பெற்றோராகிய எமது தோல்வியெனக் கருதுகிறேன்.

பிள்ளைகளது உலகத்தைத் தரிசிக்க முனையாதவொரு சூழலில் பெற்றோர்கள் இழப்பது,அந்தப் பிள்ளையை என்றால் [anomischer Selbstmord ]அதையொட்டி மிக ஆரோக்கியமாகச் சிந்திக்கவேண்டும்-அததீவிரமாக நம்மை நாம் கேள்விக்குட்படுத்திச் சிறார்களது உலகத்தைத் தரிசித்துக் குழந்தைகளைப் புரிந்தாகவேண்டும்.

எனக்கு,இந்த அச்சம் எப்பவுமே இருக்கிறது.

குழந்தைகளை எமது சொத்தாக எண்ணுவதை நான் எப்பவோ தவிர்த்துவிட்டேன்.ஆனால்,அவர்களது உலகத்தைப் புரியவே முடியவில்லை!

இதைப் புரிந்துகொள்ள முனைந்தால் இத்தகைய சிறார்களது தற்கொலையைத் தடுத்துவிடலாம்? புரியவில்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.01.2012

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...