Saturday, October 10, 2009

அமெரிக்கா:தனக்குத்தானே பரிசளிக்கும் பாசிசம்!

அமெரிக்கா:தனக்குத்தானே பரிசளிக்கும் பாசிசம்!
 
2009-இவ்வருடத்துக்கான, சமாதானத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிர் பெயரில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இத்தகைய விருதினது வழி புரிய முற்படும் ஒவ்வொரும் ஏதோவொரு வகையில் தத்தமது புரிதலைக் கொண்டிருக்க முடியும்.என்றபோதும்,உலக ஆளும் வர்க்கக் கண்ணோட்டம்,அதன் எதிர்கால அரசியல் நகர்வுக்குத் திட்டமிடப்பட்ட எதிர்பார்ப்பும் அதுசார்ந்த வியூகம் இருக்கிறது.இந்த வியூகம்சார்ந்த நிலைப்பாடுகளுக்கமையவே ஓபாமாவென்ற குறியீடு சமாதானத்துக்கான நோபல்பரிசைப் பெறும் தகுதியாக்கப்பட்டுள்ளது.இந்தக் குறியீடு குறித்துப் பல வகைகளில் புரிந்துகொண்டாக வேண்டும்.
 
அ):ஓபாமா, அமெரிக்காவினது மாறிவரும் உலக அரசியலை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம்,
 
ஆ):ஒபாமா,நடுநிலையானதும்,சமாதானத்துக்குமானதும் என்பதான புனைவு,
 
இ):ஒபாமா,மக்கள் நல்வாழ்வு மற்றும் மனிதவுயிர்வாழ்வுப் பாதுகாப்பு எனும் சுட்டல்
   
இந்த மூன்றுவகைக் குறிப்பானக இன்றைய அமெரிக்க ஜனாதிபதி உருவாக்கப்பட்டுள்ளார்.குறி குறிப்பானகச் செயற்பட வைக்கின்றபோது அதன் தேவையையொட்டி எழுப்பப்படும் சகலதும் ஏதோவொரு நலனுக்கு இசைவானது.
 
 
அந்த நலன் என்ன?
 
உலகத்தில் சமாதானந் தழைத்தோங்கி,உலக மானுடர்கள் சகோதரத்துவத்துடன் தத்தமது தேசத்தின் வளங்களை நெறிமுறையோடு பகிர்ந்துண்டு வாழ்வதா இதன் நலன்?அல்லது,சில தேசங்களது கூட்டோடு,உலக வளங்களைச் சுருட்டித் தமது இனத்துவ அடையாளத்தைப் பேணி,உற்பத்தியைத் தக்கவைத்து உலகைத் தமது விருப்புக்கமைய ஆளுவதா?
 
 

இத்தகைய கேள்விகள் இரண்டும் சமகால அரசியல் போக்குகளால் எழுவது.கடந்தகால ஐரோப்பிய மக்களதும்,அவர்களது இராசதானியங்களதும் மனித நடாத்தையானது இத்தகைய கேள்விகளுக்குள் நம்மைத் தள்ளிவிடுபவை மட்டுமல்ல, அதன்வழி இன்றுவரை ஐரோப்பிய-அமெரிக்க அரசியல் நடாத்தையுமே இத்தகைய கேள்வியின்பால் நம்மைக்கொண்டுசென்று இயக்குகிறது.
 
இன்றைய நோபல் பரிசுக் கமிட்டியின் முழுப்பரிணாமத்தையும், புரிந்துகொள்வதற்கும்முன் அதன் இருப்பு அவசியமாக உணரத்தக்க அரசியலைப் புரிந்துகொள்வதே நம்மெல்லோருக்குமான தேவைகளில் ஒன்று.
தற்போதைய வர்த்தகச் சூழலில்-சந்தைப் பொருளாதாரப் போக்குகளில் பாரிய நிதியளித்துக் காக்கப்படும் நோபல்பரிசு அறக்கட்டளையை தத்தமது தேவைக்கேற்பவும்,தமது அரசியல்-பொருளாதார மேலாண்மைக்குமாகவே மேற்குலக-அமெரிக்க தேசங்கள் பயன்படுத்துவதை மிகவும் நாணையத்தோடு ஒத்துக்கொள்ளவேண்டும்.அவர்கள்,தமது எதிர்காலத்தையும் அதில் தமது இருப்புத் தொடர்ந்து சிதையாதிருக்கும் பலமுறைகளில் திட்டமிட்டு இயங்கின்றார்கள்.இயற்கை விஞ்ஞானம்,மருத்துவம்,இரசயனம்,பொறியியல்,சூழலியல்,மனிதவளம்-இன இருப்பு,வர்த்தகம்,நெறியாண்மை,அரசியல் ஆதிக்கம்,அதிகாரம்,சட்டம்,தாக்குதல்வலு,பண்பாட்டு மேலாண்மை,பாராளுமன்றம்,நீதி போன்ற பலபடிகளில் ஒன்றாகத்தாம் நோபல் பரிசு அறக்கட்டளையையும் புரிந்தாகவேண்டும்.
 
அது,இத்தகைய மேற்குலக நலன்சார்ந்த பின்னணிகளோடுதாம் இயங்குகிறது.இதன் பாத்திரத்தில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட சமாதானத்துக்கான நோபல் பரிசு, அதன் இன்றையதும் கடந்தகாலத்துக்குமான நடவடிக்கைகளுக்கு மறைமுக அங்கீகரம் வழங்குவதும் அதன் வாய்ப்பாக அடுத்த தசாப்பத்தில் மேற்குலக நலன்சார்ந்த அடுத்தகட்ட ஆதிக்கத்தை மேலும் நிலைப்படுத்துவதில் மையங்கொள்கிறது.
 
இதையிங்ஙனம் புரிந்துகொள்வது அவசியம்:
 
1):வெறும் ஆலோசனைகளும்,அபிப்பிராயங்களும் சொல்பவருக்கும்,
 
2):ஆணு ஆயுதமற்ற உலகைக் குறித்து வெறும் கனவு காண்பவருக்கும்,
 
3):அவ்கானிஸ்த்தானைப் புதிய வியாட்னாமாக்கிப் போர் நடாத்துபவருக்கும்
 
சமாதானத்துக்கான நோபல் பரிசு-கீரிடம் வழங்கப்படுவதானது அவரது அரசியலுக்கு அங்கீகாரம் அளிப்பது,அடுத்த கட்ட அனைத்துவகை அமெரிக்க அரசியல்-ஆதிக்க நடவடிக்கைகளை நியாப்படுத்துவது-நிலைப்படுத்துவது,முடிந்தால் அதை உலகு தழுவிய வகையில் விஸ்த்தரித்து ஒற்றைத் துருவ ஆதிக்கத்தை மற்றைய குடிசார் சமூகங்களுக்குள் திணிப்பதுவரை நிகழ்த்துவதே இதன் புரிதலாகும்.இதன்வழி அமெரிக்கா முன்னெடுக்கும் அனைத்துவகை விஸ்த்தரிப்பும் உலக சமாதானத்துக்கான முன்நிபந்தனையென்பதை இப்பரிசின்வழி நியாயமுறுத்துவதாகும்.
   
கடந்த காலத்தில்-இருஷ்சிய உடைவுக்கு முன் அமெரிக்கா செய்த அரசியல்-போர் நடவடிக்கைகள் ஒற்றைத்துருவத்திலிருந்து செய்யப்பட்டதல்ல.அங்கே, இரண்டு துருவங்களாக மூலதனச் சழற்சியும் அது சார்ந்த அரசியல்-ஆதிக்கமும் இயங்கியது.எனினும்,சோசலிச நாடுகளது இறையாண்மையைப் பல வழிகளிலும் தோற்கடித்த அமெரிக்க மற்றும் மேற்குலகங்கள் 90 களின் மத்தியிலும்,2000 த்தின் ஆரம்பம்வரை இந்த ஒற்றைத் துருவ அரசியல்-பொருளாதார ஆதிக்கத்தைச் சுவைத்துத் தமது இராணுவ மேலாண்மையை உலகெங்கும் நிலைநாட்டின.குறிப்பாக,,ராக்கில்,அவ்கானிஸ்த்தானில்.ஆனால்,இது நிலைத்திருக்கும் வாய்ப்பை அவை தமது அரசியல்-பொருளாதாரப் பலத்தின்வழியாகத் தக்கவைக்கும் சூழலொன்று 2002 ஆம் ஆண்டுக்குப்பின் மெல்ல இல்லாதாகிறது.
   
இருஷ்சியா-சீனாவுக்கிடையிலான நேட்டோவுக்கு மாற்றான சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம் 2002 ஆம் ஆண்டு சென் பீட்டர்பேர்க்கில் ஆரம்பித்துக் கைச்சாத்தாகியபின், இன்னொரு வார்சோ அணியாக இந்தச் சங்காய்க் கூட்டு உருவாகிறது.இத்தகைய தருணத்தில் அமெரிக்கச்சார்பு நாடுகளது தலைமைத் தேசமான அமெரிக்காவினது ஒற்றைத் துருவ அரசியல் மெல்லச் சிதறுகிறது.அதுமட்டுமின்றிக் கடந்தகாலத்து சோசலிச-முதலாளிய முகாங்களெனும் இருபெரும் எதிரெதிர் நிலையைக்கடந்து, முதலாளித்துவ முகாம் இரு துருவங்களாக உலகை வேட்டையாடப் பிரிந்தன.இவற்றுள் மிகவும் மூலப்பொருள்கள் நிரம்பியதும்,சந்தையில் மலிவாக உற்பத்தியைச் செய்யக்கூடியதும்,இராணுவ-மனிதவலுவில் பலம்கூடியதுமாக இந்தச் சங்காய்க் கூட்டே இன்று உருவாகியுள்ளது.
 
ஐரோஆசியன் வலயத்தில் இருஷ்சியாவினது இறையாண்மை மற்றும் செல்வாக்குட்பட்ட பிரதேசமாக கஸ்பிஸ் எண்ணையூற்றத் தேசங்கள் இருக்கின்றன.என்னதாம் ஜோர்சியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் நேட்டோ உள்வாங்கினாலும், அஃது இருஷ்சிய இராணுவ ஆதிக்கத்திலிருந்து தப்பிடவிட முடியாதளவுக்கு அதன் தரைத்தோற்றம் இருக்கிறது.இதையுறுதிப்படுத்த 2008 இல் நடந்த யுத்தம்தாம் ஒசித்தியாவைக் காக்கும் இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தம்.அவ்வண்ணமே,சீனாவினது மிகப்பெரும் மனித ஆற்றல் அத்தேசத்தை உலகு தழுவிய உற்பத்தித்திறனுடைய தேசமாக மாற்றியுள்ளது.இது,சீன உற்பத்தி மற்றும் அதன் நிதியாதார வலுவோடு அமெரிக்க ஆதிக்கம் நிலவிய அனைத்து மண்ணிலும் சீனாவையும் அதன் ஆதிக்கத்தையும் திணிக்கும் சூழலை உருவாக்கியது.அது,கொங்கோ முதல் அங்கோலா,நைஜீரியாவெனத் தொடரும்.
 
சீனா, ஆபிரிக்காவின் கட்டுமானப்பணிகளில் பெரும் பங்கெடுத்தபடி அரேபியத் தேசங்களில் இருஷ்சியவோடிணைந்து காரியமாற்றுகிறது.இது,அமெரிக்கக்கூட்டினது கணிசமான ஆதிக்கவலுவைத் தோற்கடித்தபடியேதாம் சாத்தியமாகிவரும் இன்றைய சூழலில்,ஓபாமாவுக்கான சமாதான நோபல் பரிசு அமெரிக்கா முன்னகர்த்தும் இன்றைய "பதுங்கிப்பாய்தல்-நட்பாகிக் கொல்லல்,உட்புகுந்து தாலியறுத்தல்"போன்ற அதன் வெளியுலக அரசியலுக்குத் தர நிர்ணயமாகும்,அதை நியாப்படுத்தி உலகை ஏமாற்றிக்கொள்ளவும்,அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னைச் சமாதானப்பிரியனாக வேடம் இட்டுள்ளது.இதை வலுப்படுத்தி மேலும் கட்டியமைக்க இன்றைய நோபல் பரிசின்வழி அமெரிக்க மூலதனம் முயன்றுவருகிறது.
 
அமெரிக்கா இனி முன்னகர்த்தும் உலக அரசியலானது மிகவும் தந்தரமானதாகும்.சமாதானவேடம் பூண்ட குள்ளநரிக்குப் புதிய முகமூடிகள் அவசியமாகிறது.அன்றைய காலத்தில் புஷ் வகையறாக்கள் சொல்லிய"ஜனநாயக"ப்படுத்தல் எனும் முகமூடிக்கு இப்போது "சமாதானம்-பயங்கரவாதத்தை முறியடித்தல்"என்று பெயராகிறது.சமாதானத்துக்கான பரிசைப்பெற்றவர் செய்வதெல்லாம் இனி உலக அமைதிக்கானதென்ற புலம்பலில் பலிகொள்ளப்படும் வலிமையற்ற தேசங்களது இறையாண்மை, அமெரிக்கக்கூட்டினது அடுத்த ஐம்பதாண்டு ஆதிக்கவலு நிலைப்படுத்தலின் தொடராகும்.என்றபோதும்,இருஷ்சிய-சீன வல்லரசுகளின் அரசியல் ரீதியான நகர்வையும் அவை கொண்டியங்கும் தூர நோக்கையும் முடக்குவதற்கான பரிந்துரையாகவே அமெரிக்கா தனக்குத் தானே பரிசளிக்க முனைந்துள்ளது.
 
 

கடந்த 23.09.2009 அன்று ஐ.நா.வில்(GENERAL DEBATE OF THE 64TH SESSION OF THE UNITED NATIONS GENERAL ASSEMBLY )உரையாற்றிய இருஷ்சியத் தலைவர் மெட்வேடேவ் தனது உரையை மிக நிதானமாகச் செய்திருக்கிறார்.அவர் உலகத்துக்கு அச்சுறுத்தலாகவிருக்கும் வெள்ளையின நாசியப் பயங்கரவாதம்வரை தனது உரையின் இறுதியில் சுட்டிக்காட்டி, அமெரிக்க-மேற்குலக நிறவாத அரசியல் தகவமைப்புகளையுஞ் சாடியபோது மாற்றுக்கருத்தற்ற மேற்குல வெள்ளையினவாதம், மிகச் சாதுரியமாகத் தமது நடாத்தைகளைச் சமாதானத்துக்கான முன் நிபந்தனையாகவும், அமெரிக்க அதிபர் வடிவினில் அமெரிக்காவை முன்நிறுத்துகின்றன.இந்த வகை அரசியலது தொடரில் இந்தச் சமாதானத்துக்கான நோபல் பரிசை தனியே "ஸ்க்கன்டால்"(Scandal: Obama gets the "peace prize)என்ற மொழிவுக்கூடாகத் திசை திருப்ப முடியாது.ஈராக்,அவ்கானிஸ்த்தான் யுத்த நடவடிக்கைகளை முன்னிறுத்தி அமெரிக்காவின் அடுத்த நாடகத்தை மறைக்க முனையக்கூடாது.ஆனால்,ஜார்ன் ஓபேர்க்(Jan Oberg ist Leiter des Friedensforschungsinstituts TFF in Lund, Sweden )செய்து முடிக்கிறார்.
 
புதிய ஆதிக்கத் தெரிவுகளின்வழி,அமெரிக்க எடுக்கும் அரசியல் நகர்வுக்கான அங்கீகாரமே இப்பரிசினது நோக்காக இருப்பதற்கு வலுவான காரணிகளாக இருப்பது இன்றைய அமெரிக்க வியூகமே.
 
இனிவரும் கால அமெரிக்க அரசியல் நகர்வில் ஒபாமா அரசு செய்யும் அரசியல்:
 
1:உலக மூலவளத் தேவைக்கான போட்டியில் யுத்தத்தைச் சமாதான எல்லையில் வைப்பது,
 
2:வளர்ந்துவரும் பொருளாதார நகர்வில் ஐரோஆசியன் வலயத்தில் தனது நிலையைத் தக்வைத்து அதன் எண்ணை வளத்தைக் குறைந்தளவாவது மேற்குலகக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்வது,
 
3:அர்டிக்ஸ்-வடதுருவப் பனிவலயத்தில் கரையும் பல சதுரக் கிலோமீட்டர் கடல் நிலப்பரப்பில் பதுங்கிக்கிடக்கும் போட்டி வள அவகரிப்பில், அமெரிக்கா முதன்மையாக இருக்க முனைதலில் நடந்தேறும் அரசியலில் இருஷ்சியாவை தனிமைப்படுத்தல்.
 
4:தென்கிழக்காசிய வலயத்தில் மாறிவரும் சீனா-இருஷ்சியப் பொருளாதார ஆதிக்கம் மற்றும் கடற்போக்குவரத்து முரண்பாடுகளில் குறைந்தளவாவது அமெரிக்க நலனைப் பாதிக்காத நட்பு-பகை அரசியல்-ஆதிக்க வியூகத்தைக் கொண்டியங்குதல்.இதன் முரண்பாட்டில் சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கத்தையும் அதன் உறுப்பு நாடுகள் தவிர்ந்த செல்வாக்குக் உட்பட்ட பார்வையாளர்கள் தகுதிபெற்ற ஈரானைத் தாக்குவதற்கான தகுதியை அவ்கானிஸ்த்தானைத் தளமாக்கி எடுத்துபடி, இருஷ்சிய-சீன ஒப்பந்தத்துக்கு யுத்த நிர்ப்பந்தம் வழங்குவது,
 
5:இத்தகைய யுத்தத்தை, சமாதானத்தின் மூலமாக இருக்கும் அமெரிக்காவினது தலைமைப்பாத்திரத்தில் தவிர்க்கமுடியாது மனிதகாப்புக்கான நிபந்தனைகளில் ஒன்றாக்குவது.
 
6:இவற்றைச் செய்வதற்காக பனிப்போர் முகாந்திரத்தில் மையமாக இருந்த போலன்-செக்காய் ஏவுகணைப் பாதுகாப்பைத் தற்காலிகமாகக் கிடப்பில் போடுவது,
 
7: ஆர்மேனியாவுக்கும்,துருக்கிக்குமிடையிலான நட்புணர்வு-அரசியல் உறவு ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை முதன்மைபடுத்துவது,
   
8:இதனூடாக துருக்கியை ஊடறத்துவரும் நபுக்கா(Nabucco) எண்ணைக் குழாயை இருஷ்சியாவிடமிருந்து தனிமைப்படுத்தியும், இருஷ்சியாவினது எரிபொருளில் தங்கியிராத (South Stream எண்ணைக் குழாய்க்கு எதிராக) மேற்குலகச் சார்பான சுதந்திரத்தை எரிவாயுப் பொருளாதாரத்தில் நபுக்காவை நிலைப்படுத்துவது.இதன்தொடரில் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துள் உள்வாங்கும் நெகிழ்வை மரபுசார்ந்த ஐரோப்பிய மேன்மைக்குள் மெல்ல உருவாக்குதல்,அதற்காகத் துருக்கிய அரசியலையும், இஸ்லாமிய மதவாத அடிப்படையையும் தனிமைப்படுத்திவிடத் தேவையான பண்பாட்டுக் கருத்தியலைத் தகவமைப்பது,
 
9:இதற்காக இருஷ்சியாவை நேட்டோவுக்குள் உள்வாங்க முனைவதும்,சீன-இருஷ்சியப் பலக்கூட்டை உடைப்பதும்,ஆப்பிரக்காவிலிருந்து சீனாவைத் தனிமைப்படுத்துவதும்,
 
10:உலகத்தின் எப்பாகத்தில் இனவிடுதலைப் போராட்டம் நிகழினும் அவற்றைத் துடைத்தெறியும் முயற்சியில் சங்காய் கூட்டுழைப்பு இயக்கத்துக்கும்,நேட்டோவுக்கும் இடையில் பாரிய முரண்பாடில்லை.எனினும்,சீனாவைத் தனிமைப்படுத்துவதற்கு இருஷ்சியாவை மேற்குலகச் சார்பாக்குவது,மேற்குலக நபுக்கா எரிவாயுக்கு குழாயை இதற்காகப் பயன்படுத்துவது(இது,ஒரு கட்டத்தில் யுத்தமாக வெடிக்கும்போது இருஷ்சியா சீனாவிடமிருந்து அந்நியப்பட்டிருப்பதும் அவசியமான அமெரிக்கத் தெரிவாக இருக்கிறது.இனவிடுதலைப் போராட்டங்கள் தத்தமது பொருளாதார நிலைகளுக்கமைய ஆதிரித்தும்-அழித்தும் வருவது சமீபகால நிகழ்வாக இருப்பினும்,இப்போதைய நிலைமையில் புதிய தேசங்களை உருவாக்குவதை ஏகாதிபத்தியங்கள் தமது வேலைத்திட்டத்திலிருந்து பின்தள்ளுகின்றன).
 
இன்றைய அதீத தேவையாக மேல்காணும் நிகழ்சிநிரல் அமெரிக்க மூலதனத்துக்கு இருக்கிறது.இதன் உச்சபட்சத் தெரிவானது உலகில் அமெரிக்க ஆதிக்கத்தைச் சமாதானத்துக்கான முன்னெடுப்பாகவும்,இதுவே உலக அமைதிக்கான பணியாகவும் காட்ட முற்படும் அமெரிக்க மூலதனம்,உலகில் தனக்கெதிரான அனைத்தையும் தனிமைப்படுத்தும் முதன் தெரிவாகத் தன்னைத்தானே உலகச் சமாதான அரசாக இந்த நோபல் பரிசின்வழி சொல்கிறது.அதையே அமெரிக்க அதிபர் ஒபாமா இப்போது சொல்லி வருகிறார்.இது,அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்காவது அமெரிக்காவின் தலைமையை உலகத்தில் நிலைநிறுத்துவதற்கான புதிய தெரிவுகளாகின்றன.இதை உறுதிப்படுத்தும் அமெரிக்க மூளை சீப்பினிக் பிறசென்ஸ்கி (Zbigniew Brzezinski )என்பது உலகறிந்த உண்மை.
   
உலகை ஏப்பமிட முனையும் ஏகாதிபத்தியம்,பாசிசத்தின் கடைக்கோடி நிலையாக இத்தகைய நோபல் பரிசின்வழி உலகைத் துடைக்க முனைவதை போராட்ட இயக்கங்கள்-ஒடுக்கப்படும் இனங்கள்சார்பாக எழும் எழிச்சிகள் புரிந்துகொண்டாக வேண்டும்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
10.10.2009

Thursday, October 08, 2009

இந்தப்பரிசு இலக்கியக் கொலையாகும்.

நோபல் பரிசு இலக்கியத்துக்கு?
 

"கம்யூனிசத்தின் பிழையான பக்கத்தை" ஆகக்குறைதளவுக்கு இல்லாது
ஆக்கியவர் இந்தக் கேர்த்தா முல்லரெனப் புகழ்ந்து பாடுகிறது பத்திரிகைகள்.
 
ன்று ஜேர்மனியில், "இலக்கியத்துக்கான நோபல் பரிசு" கிடைக்கப்பெற்ற கேர்த்தா முல்லருக்குத்(Herta Müller) தடாலடியான கட்டுரைகள் மற்றும் இலக்கியப் பிரமுகர்களதும்,அரச அதிபர் அங்கேலா மேர்க்கலதும் பாராட்டுக்கள் தொடர்ந்தவண்ணமுள்ளது-இவை,சிலவேளை விண்ணை எட்டினாலும் எட்டும்.
 
 
அப்படி என்னதாம் இந்தக் கேர்த்தா முல்லர் எழுதித்தள்ளியுள்ளார்?
 
இவரது எழுத்துக்கள் எத்தகைய இலக்கியத் தரமுள்ளதோ இல்லையோ, அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்ததான செய்தியில், பெரும் பத்திரிகைகள் அவரது கடந்தகால மேற்குலகச் சேவகத்தை நன்றி பகிர்ந்தே பாராட்டுக்களாகக் கட்டுரைகள் எழுதுகின்றன.
 
 
செவ்செஸ்கோவினது(Ceausescu-Regimes) இருமேனியாவில் வாழ்ந்த கேர்த்தாவுக்கு, கம்யூனிசக் கொடுமை சகிக்கவில்லையாம்.செவ்செஸ்கோ கம்யூனிசத்தின்வழி பரப்பப்பட்ட பரப்புரைகளது எதார்த்தம் ஐரோப்பாவின் சதிகளோடு நிரம்பியிருந்த அன்றைய காலத்தில், இத்தகைய கேர்த்தா முல்லர்களே மிகச் சாதுரியமாகக் கடமைகள் செய்திருக்கின்றார்கள்.இதை இன்றைய பத்திரிகைகள் நன்றியோடு பகிர்கின்றன.
 
 

 
 
இவரது நீடருங்கன்("Niederungen" (1984), Erzählungen)எனும் கதைத் தொகுப்புக்குப் பரிசு எட்டியாதானது அத்தொகுப்பு வீழ்ச்சிகள் குறித்த கதையாடலாக இருப்பதால்மட்டுமல்ல என்பது,ஜேர்மனிய முன்னணிப் பத்திரிகை வாயிலாக நாம் கண்டடையமுடியும்.
 
 
கம்யூனிசத்துக்கு எதிரான பரப்புரைகளை செய்ததும்,செவ்செஸ்கோவைக் கம்யூனிச ஆட்சியாளராகப் பரப்புரை செய்ததிலும், கேர்த்தாவுக்குப் பெரும் பங்கிருக்காது போனாலும், அவர் மேற்குலகத்துக்குக் குறிப்பாக ஜேர்மனிக்கு மிக நெருக்கமாக இருமேனியாவை வேவு பார்த்துக் கொடுத்தவர்களுள் ஒருவர் என்பது சரியானதாகும்.
 
 
அன்றைய காலக்கட்டத்தில், அதிகமான கிழக்கைரோப்பியப் போலிச் சோசலிச நாடுகளைக் கவிழ்ப்பதில் அமெரிக்காவுக்குப் புலனாய்ந்து கொடுத்த தேசம் ஜேர்மனியாகும்.சமீபத்தில், ஈராக் குறித்தும் புலானாய்ந்து ஜேர்மனிய உளவுத்துறை அமெரிக்காவுக்குத் தகவல்கள் கொடுத்து உதவியது.இத்தகைய உறவுகளுக்கமையப்பெற்ற ஜேர்மனிய அரசின் நிபந்தனைகள்,பரிந்துரைகள் வெறுமனவேயான இலக்கியத்துக்கான தெரிவில் கேர்த்தாவுக்குப் பரிசு கிடைத்ததாகக்கொள்ள வாய்ப்பில்லை.அவரைவிட ஆளுமையான ஜேர்மனியப்படைப்பாளிகளை நான் அறிவேன்.
 
 
இன்று,மாறிவரும் பொருளாதாரச் சூழலானது பெரும் முன்னெடுப்போடு இருமேனிய மண்ணில் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கிறது.மேற்குலகத்துக்கு அத்தேசம் அனைத்துச் சலுகைகளையும் கொடுத்துத் தமது தொழிலாளரை ஒட்டச் சுரண்டுவதுவரை ஒத்துழைக்கின்றது.எனினும்,இருமேனிய மக்கள் குறித்த ஜேர்மனியை ஆளும்,C.D.U.கட்சியின் தலைவர்களில் ஒருவரான ருட்காரது (Rütger) இனவாதக்கருத்து அத்தேசத்து மக்களை மேலும் அந்நியப்படுத்திய சூழலில்,இத்தகைய விருதுகளின்வழி இருமேனியாவின் சார்பு நிலையை-மேற்குலகுக்கு உடந்தையாக இருப்பதென்பதுக்கான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் தேவையோடு இணக்கமுறுகிறது.
 
 
இன்னும் சொல்வதென்றால்,கேர்த்தா முல்லர் கைன்றிக் கையின(Heinrich Heine) போன்ற படைப்பாளிகளின்வழி வந்தவரென்று சையிட் ஒன்லையின்ட் எழுதுகிறது.
 
 

அதற்காகக் கையின(H.Heine) தனது புரிதலில் பிரான்சினது கம்யூனிசக்கட்சியையும்,அதன்போராட்ட முறைகளையும் குறித்து எழுதும்போது,"காலத்துக்கு முந்திய பாட்டாளிய வர்க்கச் சர்வதிகாரம் வெற்றி பெற்றிருந்தால் அது முழுமொத்த மனித இனத்துக்கும் பெரும் கெட்ட காலமாகி இருக்கும்."என லுற்ரேற்றியா(Lutetia) பதிவேட்டில் எழுதுகிறார்.
 
 
தொழிற்சாலைப் புரட்சிகளின் காலக்கட்டத்தில் வாழ்ந்த கையினே பாட்டாளிய வர்க்கத்தின் சிதைவுகண்டு வருந்தும் பாடல்களை எழுதியவர்.அவரை கம்யூனிசத்தின் விரோதியாக்க முனையும் இன்றைய காலம்,கேர்த்தா முல்லரது இன்றைய நிலைக்கு அவரது கருத்தைப் பயன்படுத்துவது மிகப்பெரும் அயோக்கியத்தனம்.
 
 
இத்தகைய அயோக்கியத்தனத்தின்வழியேதாம் இவர்கள் உலகைச் சூறையாடும்போது,கேர்த்தா முல்லர் கடந்த காலத்தில் தமது நோக்கை நிறைவேற்ற இருமேனியாவின் ஆட்சிக்கவிழ்ப்பில் ஒரு துரும்பாகவும் இருந்திருக்கிறார்.அதன் சம்பளம் இப்போது பரிசாக வருவதில் எவராவது மையல்கொண்டு, அவர் இன்னல்படும் மக்களுக்காக் குரல் கொடுத்தவராக எவரும் உணர முடியுமா?
 
 
"கம்யூனிசத்தின் பிழையான பக்கத்தை" ஆகக்குறைதளவுக்கு இல்லாது ஆக்கியவர் இந்தக் கேர்த்தா முல்லரெனப் புகழ்ந்து பாடுகிறது பத்திரிகைகள்.
 
 
அந்தளவுக்கு ஏகாதிபத்தியங்களது நலனுக்கு உடந்தையான முல்லருக்குக் கிடைத்த இந்தப்பரிசு நோபல் பரிசினது இன்றைய பக்கச் சார்பையும்,அது,போப்பாண்டவர்களது வேலையையே வேறொரு வடிவில் செய்வதாகவும் கொள்ளமுடியும்.
 
 
 
கேர்த்தா முல்லருக்குக் கிடைத்த இந்தப்பரிசு இலக்கியக் கொலையாகும்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
08.10.2009







Saturday, October 03, 2009

வெந்து மண்ணாகினாலென்ன?


சிந்தனை மையமே சிறந்ததென...
 
 
வ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவதொரு தேவைக்கேற்றவாறு மானுடத் தரிசனங்கள் எழுகின்றன.அங்கே தம்பட்டம் அடித்து இதுதான் "உண்மையாய் வாழ்தல்"என்ற முடிச்சு மேலெழுகிறது.இது நிலவும் தத்தமது வாழ்நிலையை உறுதிப்படுத்தும் மனித விருப்புத்தான்."ஆன்மாவின் தவிப்பு"என்னிடம் உதிர்வு நிலையுள் ஓடுகிறது.அஃது, எப்பவுமே மகிழ்ச்சியைக் கோலமிடும் விழிகளுக்குள் போட்டுடைக்கிறது.குமிழிபோன்ற அந்தப் பேரிரைச்சல் என்னைத் தொலைக்கின்றபொழுதுகளில் எங்கோவொரு மூலையிற்கிடந்து நெஞ்சில் என்னைத்தொடுகிறது.
 
இத்தகைய தொடுபொழுதுகளில் நான் புறவுலகத்தோடு தொடர்பாடுகிறேன்.
 
அஃது, என்னையும் மற்றைய மனிதர்களையும் இணைத்துப் பொதுமைப்படுத்திப் பிணைக்கிறது.இஃது, எனக்குள் நித்தியமானவொரு நிகழ்வோட்டமாகவே தொடர்கிறது.இது, பெரும்பாலும் எதிர்பால்வினையோடு தனது நித்தியத்தின் எல்லைதேடிச் செல்ல முனைதலில், புதியதைத் தோற்றுவிக்கிறது.எனது நித்தியத்தின் நெருங்கிய உலகு இதுவே!
 
 
இந்தவுலகு குறித்துப் பேசுவதற்கு எனக்கெதற்குக் கூச்சம்?
 
எப்போதும் போலவே வானத்து விண்மீன்கள் பொருதுகின்றன, தகர்கின்றன-பிறக்கின்றன.இன்னதிலிருந்து இன்னதுதாம் வருமென எல்லாக்காலத்துக்கும் பொதுவாகக் கூவிச் சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை.
 
உயிர்த்திருக்கும் ஒவ்வொரு கணமும் என்னைப் புரிவதற்குள் எனது காலமே தொலைந்து போகிறது.நீண்ட,உணர்வு சிதைந்த இந்த வாழ்வின் ஏதோவொரு புள்ளியில் நான் ஊசலாடுகிறேன்.இந்த"நான்"அழிவதிலிருந்து அந்த ஊசலாட்டம் தொடர்ந்து என்னைப் பின் தொடர்கிறது.காலத்தின் பதியத்தில் இத்தகைய அனைத்தும் பிரதிகொண்ட வாழ்வையேதாம் நாம் வாழ்ந்து முடிக்கும்போது,தனித்துவமான"நான்"சிதிலமடைந்து காலிப் பெருங்காய டப்பாவாகவே கிடக்கின்றது.எனினும்,அதற்கும் ஒரு இருப்பைத் தேடி இப்படியும் எழுதுவதில் முடிகிறது ஆயுள்.
 
"பெய்த மழையில் பேயின் எச்சம் போனதென்ற
பிரமை கொள் பீலி சூனியம் வைத்தபடி
நெற்றியில் தேசிக்காய் நறுக்க
குருதிகொட்டிய பற்கள் அது பேயெனப் பகல
 
மென்று தொலைத்த தசைகளின்
மொச்சை மூக்கின் வழி
வாழ்வுக்கொரு குருதிக் கதை விளம்ப
மண்கொள் மூளை வரம்பிட்ட கணமோ..."
 
 



 
இப்பிடித்தான் இப்போதைய இலக்கியமென்றால் இப்பிடித்தான்,கவிதையென்றால்,கத்தரிக்காய் என்றால்...
 
புத்தம் புதிய முகங்களாக உலாவரும் சிறுசுகளது முகத்துள் நம்மைப் புதைத்துவிட்டுக் என் கௌரியினது பின்னால் கடந்த காலத்தை நோக்கிப் பின் நகர்வதும்,அடிபட்ட நாயாகக் கல்லடி கொடுப்பதற்கே காலத்தில் சில தடைகள் மெல்லப் புதிய உறவுகளாகவும்,சொந்த பந்தங்களாகவும்.எல்லாந்தொலைந்து,உருச் சிதைந்து மெல்லப் பொசுக்கெனப் போகும் உயிரைப் பிடித்துவைத்திருக்க இன்னும் ஏதோ இருந்துகொண்டே இருக்கு.அது,"மக்கள் நலம்-ஏதாவது செய்தாகவேண்டும்"மெனப் போடும் கோலமும் புயலடித்து ஓய்ந்த பெரு மழைகாணும்வரையென்றால் உயிர்த்திருப்பதும் எதுவரை? மேலும்,"விரித்தியாகச் செல்லும் உலகம் மனிதப் பெருவிருப்பான வாழ்தலில் தன்னைத் தொலைத்தல்" எனும் கோட்பாட்டில் அமிழ்கிறது.இதுகூட ஒருவகையில் தேவைதாம்.நெடுக,நெடுக நாம் விட்ட ரீல்களைத் தாண்டி வாழ்வினது விருப்பம் எழிச்சி கொள்வதில் நாம் அமைதியை மனித வாழ்வின் நித்தியத்தில் காண்பது சாத்தியமே.
 
"ஓராமாய் அரும்பிய ஆசையில்
துப்பட்டா செல்விகளது சின்னப் பாதம் கண்டதும்
சிரித்திருக்கும்போது மேரிகளது விழிகளுக்குள்
வந்துபோன கனவுகளில்
நாங்களும் இருந்திருக்கிறோம்"
 
எனது வாழ்வினது மிக உன்னதமான அந்த முதற்காதற் காலத்தைத் தரிசித்துக்கொள்வதற்கும்,இன்றைய இள நங்கையின் உடற்பாங்கின் அழகுகண்டு, உளக்கிளர்ச்சியை எனது அகத்தில் பெரூவூற்றாய்த் தோற்றுவித்துக்கொள்வதில் வெற்றிக் கொடிநாட்டுகிறது!நான் தவிப்போடு இருக்கிறேன்.எனது குழந்தைகளும் காதற்கீதம் இசைத்தபடி தமது உலகத்தில் தவழும்போது நானும் அத்தகைய நிலையில் இன்னும் இருக்கிறேன்.எனது காதலின் மொத்தவடிவவுமே காமத்தால் கட்டிப்போடப்பட்டது.இதை நானாக எங்கிருந்தும் பெற்றதில்லை.அதை மிகப்படுத்தும் எந்தக்கோலமும் எனக்குள் நித்தியமாக இருந்ததும் இல்லை.என்றபோதும், இந்த அழதைத் தரிசிப்பதில் நான் எனது முன்னோடிகளை மிக நன்றாகவே அறிவேன்.
 
 
"மூப்பாகிய எனது உணர்வுகளுக்கு
அன்னை மண்ணின் அபலைக் கோலம்
ஆத்தையின் கனவில் அள்ளிச் சென்ற
அவள் இதயத்தின் துடிப்பாய்
அடி மனதெங்கும் குடிதுவங்க
வெடிச் சத்தம் ஒடித்தது முகத்தை!"
 
 
அடிமைப்பட்டுக் கிடப்பவர் விடுதலைபெறுவதற்குப் போராடித்தான் விடுதலைபெற வேண்டுமென்றால், பிறகு நீ எதற்கு அந்த அடிமையைக் கொல்வதற்கு முனைந்தாய்?உன் இருப்புக்கு இடுப்புடைய அவன்(ள்) காரணமென்றா?ஞாபகத்தின் கோட்டையில் கொலுவுற்றப் பால்யப்பருவத்துக் கடந்துபோன அநுபவங்களைச் சுவைப்பதற்கு ஊர்விட்டுப்பிரிந்த வலியுஞ் சுவை அதிகமாக்க...
 
இதுவரை,இலங்கையினது போர் வெற்றிக்கும்,அதன் பாரிய அரசியல் வெற்றிக்கும்பின்னால் நிற்கின்ற உண்மைகள் மலைபோன்றவை.வெட்டவெட்டப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குள் நிகழ்ந்ததும்,நிகழ்தப்படுவதுமான அரசியல்-சமூகச் செயற்பாட்டில் இலங்கை அரசினது கைகள் எங்கெல்லாம் வீழ்ந்திருக்கிறதோ அவையெல்லாம் நம்மிடம் மனித நேயம்-மதப்பிரச்சாரமென்று உலாவந்திருக்கின்றன.இன்று, இவைகளது அகண்ட கால்கள் வன்னி அகதி முகாமுக்குள் மக்கள் தலையில் எண்ணைவைப்பதுவரை போயிருக்கிறது.மக்களுக்கு,மக்களுக்கென சுவிஸ்சிலிருந்து புனையும் "ஈரனல்"ஜேர்னலிசத்துக்கும் இலங்கைச் சம்பளப்பட்டியலின்படி எமது மக்களை வேவு பார்ப்பதுவரை சமூகச் செயற்பாடு இருக்கிறது.இப்படியாக எல்லாப் பகுதிகளிலும் கால்களைப் புதைத்த இலங்கையை, வெறுமனவே சிங்கள அரசாக இனங்கண்ட நமது மடமை எல்லையிட்டுக்கொண்டு "துரோகி"சொல்லி மண்டையில் போட்டதைவிட, வேறெதையும் இலங்கைக்கு எதிராகச்செய்ததாகக் கொள்ள முடியுமா?
 
உருபடியற்ற உணர்வுக்குள் உந்துகிற மனிதர்களாக நாம், ஒவ்வொரு நிலையிலும் அது அப்படியிருக்கவேணுமென்றும்,இது இப்படியிருக்க வேண்டுமென்றும் இரைமீட்கும் சந்தர்ப்பத்தில்,நம் இயலாமையை வெளிப்படுத்தியபோது,அந்நியர்களே நம்மைக் காவுகொண்டு வருவதைத்தானும் உணரவில்லை!"எல்லாந்தெரிந்தவர்கள்"தமக்குத் தெரிந்தை எழுதிவைத்துக்கொண்டு, வாழ்த்துப்பா பாடுவதற்கு அலைந்த பொழுதுகளைத்தவிர நம்மிடமிருந்து உருப்படியாக எதுவுமே வரவில்லை.
"ஆத்தையின்
இடுப்பிலிருக்கும் நீர்க் குடமும்
அள்ளிய நீரும்
ஆச்சியின்
சோறூட்டும் சூம்பிய விரல்களும்
அப்புவின்
சுருட்டு மணமும்
அந்தச்
சாக்குக் கட்டில் குட்டித் தூக்கமும்
சித்திரை நிலவும்
சின்னமடுமாதாவின்
பூசை மணியும்
சங்கு ஊதியதற்காகவும்
தேவாரம் பாடியதற்காகவும்
வைரவர் கோவிலில்
ஐயரிட்ட பொங்கல் அழிந்த காலத்துள்
பதியமிட்ட உணர்வு"
 
 
இவற்றைத் தவிர நாம் எதையும் கண்டதுமில்லை-பிடித்ததுமில்லை!
 
உலகத்தின் உண்மை தேடி அலைந்து ஆட்கொண்டதுமென்ற சரித்திரமெல்லாம் நமக்கு இருப்பதான சித்திரம் பொருளோடு சம்பத்தப்பட்டதெனினும்,நாம்,தேசத்துள் சிறகுவிரித்த காலத்துள் பல கற்பிதங்களைத்தவிர வேறு விஷேசமாக எதுவும் இருப்பதாக நான் உணரவில்லை.வேளைக்கு, எல்லைச் சண்டையில் மண்டை உடைபடும் மனிதர்களைத்தவிர உலகவுய்க்காக உருகுலைந்தவர்களெனும் நாமம் நமது தலைமுறைக்குமுன் இருந்ததாகவும் ஞாபகம் இல்லை!இப்படியாக எல்லாம் அழிந்து,தடையங்களற்ற கொலைகளாக விரிந்த எமது வாழ்வுப் பள்ளியில், ஒரு கருமையம் இப்பவும் இருந்தே வருகிறது.அது, உண்மையென ஒப்புவிக்கும் ஏதோவொன்று உண்மையைத் தேடியலைவதற்கும், புறத்தே ஒதுக்குவதற்கும் இன்னுமொரு வழியைத் திறந்துவிடுவதால் உருக்கொள்ளும் நம்பிக்கை-வாழ்வுக்கான தெரிவாக வினையுறும்.
 
 
"கால் நூற்றாண்டு கடந்தாலென்ன
இல்லைக்
கட்டை
வெந்து மண்ணாகினாலென்ன?
கள்ளிக்கும்
ஆமணக்குக்கும்
கதை சொன்ன அந்தக் காலம்
கண்ணீரில் படரும்
கூடுவதும்,சேர்வதும் நாளைய விடியலுக்காவே
நமது கரங்களுக்கும் நட்பும்
தோழமையும் தெரிந்தே இருக்கிறது
சிந்தனைக்கு மையமாக
நாம் சிந்திப்போம்-எதைக்குறித்தும் கேள்வி கேட்டு."
 
 
குப்பறப் புரண்டவனின் வாரீசுகள் இன்றுவரையும் அகதியாகவும்,அடுப்பெரிக்க வக்கற்றவர்களாகவும் உலகெல்லாம் பிச்சையெடுப்பதைவிட ஊருக்குள்ளேயே கையேந்துகிறார்கள்.அகதியாக அலைந்து,ஐரோப்பியத் தெருக்களில் குப்பை பொறுக்கும் நம்மைக் காவு கொடுப்பதற்காகவே கடவுள் பெயரில் மதம்பரப்பிக் காசு சேர்ப்பவர்களோ,கட்டுக்கட்டாகக் கடவுள் பெயரில் சேகரிக்கும் பணம் நம்மைக் காவுகொடுத்துப் பையத்தியங்களாக்கிவிட்டு, தமது எஜமானர்களிடம் அரசியலைக் கொடுக்கிறது.நாம், மெல்லத் தொலைகிறோம்.
 
இனிமேலும்,தொலைந்து காணாமற் போவதற்குள்ளாவது எமது அடுத்த தலைமுறைகளை இவர்களிடமிருந்து காத்துவிடுவதில் மனது விருப்புறுகிறது.ஒரு பக்கம் கடந்தகாலத்து வாழ்வின்மீதான ஏக்கம் மறுபுறும் நிகழ்காலத்துக் கையாலாகாத வாழ்நிலை.இவற்றையுடைத்து மேலெழுவதற்கான எமது சந்திப்புக் கடந்த 26-27 ஆம் தேதி(26-27.09.2009) பிரான்சில் நிகழ்ந்தது.தோழமையோடு சந்தித்துக்கொண்ட இருபதுக்குட்பட்ட நம்மில் பலர், நம்பிக்கைக்கு உரம் சேர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.கடந்தகாலத்து அநுபவங்கள்மீதான நமது விமர்சனங்கள் நம்மைக்குறித்துச் சுயவிமர்சனமாகவே அமைந்தது.இது, ஊக்கமிக்க செயற்பாட்டுக்கு உரமாகும்.
 
பாரீசின் ஏதோவொரு தெருவில் மிக எளிமையாகவும்,ஐரோப்பிய வாழ்நிலையோடு ஒப்பிடும்போது வறுமைக்கோட்டுக்குக்கீழே வாழ்ந்துவரும் தோழர் இரயாகரன். அவரை எண்ணும் போது எனது அகங்காரம்,திமிர்,நடத்தரவர்க்கக் குணமெல்லாம் கரைந்துபோகிறது(வருடத்துக்கு வருடம் வரும் புதிய கார்கள்மீது இச்சைகொண்டலையும் என் மனது, என்னைக் கேலி பண்ணுகிறது.காருக்காகக் கடனாளியாகிச் சுருங்கும் என் பையிலிருந்து வட்டிக்காகவே பல தாள்கள் போகின்றது.வாழ்வுக்கு எதுவரை வரம்பிட்டுக்கொள்ளலாம்?).
 
இப்படியும் மக்களுக்காகத் தமது வாழ்வை அற்பணித்த பல தோழர்களை நான் முன்னமே இழந்திருக்கிறேன்.அவர்கள்,மாற்றியக்க-இலங்கைத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார்கள்.காலம் ஏதோவொரு வகையில் மீளவும் உயிர்த்துடிப்புள்ளவர்களை எனக்குச் சமீபத்தில் அழைத்துவருகிறது.நாம்,உண்மையாய் உழைப்பது உயிர்த்திருப்பதின் முதற்படிதானே!எனவே,புத்துயிர் பெறுவதும்,அது குறித்துப் பேசுவதும் காலந்தாழ்த்தும் ஐரோப்பியச் சூழலை வெல்வதற்கே-அதுவும் அகதியச் சூழலை என்றால் நன்மையே.
 
"சித்திரை நிலவுக்குச்
சேர்த்து வைத்த பனித்துளிகளோடு
மினுங்கும் புற்களும் பழுத்த ஆலம் பழங்கண்டு
பதுங்கும் காக்கைகளும் பனிகொட்டும் பொழுதினிலும்
பக்கத்தில் படுத்துறங்கும் பூனையும்
சின்னமடுக் கோயிலது எச்சங்களாகவாது மிஞ்சும்?" என்றேங்கிய பொழுதுகள் பல.
 
 
நமது கைகளில் ஏந்திய கனவுகளுக்குத் தாரைவார்த்த அராஜகப் புள்ளி, மீள்வதை இனிமேலும் வளரவிடாதவொரு கனவு எங்கும் விருட்ஷமாகட்டும்.நமது எல்லா வலிகளையும்குறித்துச் சிந்திப்பது அனைத்துக்குமான முதற்படியெனில் நாம் தொடுவதற்கும் வானம் அருகிலென்பேன்.


ப.வி.ஸ்ரீரங்கன்
03.10.2009

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...