Sunday, July 26, 2009

கலையரசன்:ஈழநானூறும்,புலப்பெயர்வு படலமும்.

அபத்தமும்,அறிவியல் அவலமும் ஒன்றான தெரிவில்
தமிழ்ச் சமூகத்தின் தலைவிதி!
 
 
 
கலையரசன்,ஈழநானூறும் புலம்பெயர் படலமும்"என்ற உங்கள் நூலிலிருந்த இந்தத் துண்டை வாசிக்கும்போது,நீங்கள் ஒரு இனத்தின் மீது நிகழ்ந்த இனவழிப்பு அரசியலை மிக மலினப்படுத்தப்பட்ட தலையங்கத்தில் புனைவாக மாற்ற முனைகிறீர்கள் என்று உணர்கிறேன்.
 
 
இது தமிழ் பேசும் மக்களது வரலாறு.
 
புலம் பெயர்ந்தது-ஈழப்போராட்டம்-இனக் கலவரங்கள் அனைத்தும் மிக ஸ்த்தூலமான பொருளாதாரத்தை அடைப்படையாகக்கொண்ட முரண்பாடுகளாலும்-அதன் தெரிவில்-இனங்களுக்கிடையிலான மூலதனத் திரட்சி-முதலீடு மற்றும் அதன் பாத்திரம்-இடம் எனப் பற்பல கட்டங்களாக இவை இனங்களுக்கிடையில் முரண்பாடாக விரிகிறது.
 
 
இத்தகைய வரலாற்றுக் கட்டங்களை மிகவும் குறுகிய புரிதலைக்கொண்டு எவரும் எழுதிவிடமுடியாது.
 
 
மனித சமூகத்தையும் அதன் பொருளாதார வாழ்வையும்,மானுடவியல் மற்றும் மார்க்சியக் கண்ணோட்டத்தோடு புரிவதற்கு முனையாத எந்த ஆய்வும் சரியான அடைப்படை உண்மைகளைக் கண்டவைதற்கு முடியாது.நாம் வர்க்கச் சமுதாயமாகப் பிளந்து கிடக்கின்றோம்.இங்கே வர்க்க ரீதியான நலன்கள் பற்பல முரண்பாடுகளையும் அதன் வாயிலான கிளை முரண்பாடுகளையும் இலங்கைபோன்ற பல்லின மக்கள் வாழும் தேசத்தில் உருவாக்கிறது.
 
 
வெறுமனவே,மேலெழுந்த புரிதலை வைத்துத் தமிழ்பேசும் மக்களது வரலாற்று நிகழ்வுகளை எழுதமுடியாது.அதற்குப் பலபேர்களது கூட்டு உழைப்பும்,சுயதிருப்தி-விருப்புக்கடந்த மிக உயர்ந்த ஆய்வு மனப்பாண்மையும்,வரலாற்று பொருள்முதல் வாதமும்-இயக்கவியல் பொருள்முதல்வாதமும் மிகத் திறம்படக் கைவசப்பட்டவர்களே இதைக் குறித்துப் பகுப்பாய்வு செய்ய முடியும்.
 
 
 
இனக்கலவரத்தை வெறுமனவே"யாழ்ப்பாணத்தவர்களது"பதவி ஆசையைக் காரணங்காட்டியேதாம் நிகழ்த்தப்பட்டதென்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது?
 
 
இலங்கையில் 1911 இல் ஏற்பட்ட இஸ்லாமியர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் ஏற்பட்ட கலவரம் எத்தகையது?இதன் பின் தமிழ் மக்கள்மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள்-கலவரங்கள்,கண்டியச் சிங்களவருக்கும் கரையோரச் சிங்களவருக்குமுள்ள தலைவெட்டல்கள் என்பவையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.இவைகளுக்கான அடிப்படை முரண்பாடுகள் எங்ஙனம் தோற்றம் பெற்றதென்பதை மார்க்சியக் கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டாகவேண்டும்.அங்கே பொருளாதாரம் அடிப்படையாக முன்னிற்கிறது.இனங்களுக்கிடையிலான பொருளாதாரச் சுழற்சியை இனங்கண்டாக வேண்டும்.வளர்ச்சி-பங்கீடு,சந்தைப்படுத்தல் என்பவை இனங்களுக்கிடையில் எத்தகைய முறைமைகளில் முரணாக விரிந்தன என்பதெல்லாம் அவசியமான முறைமைகளில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
 
 
இலங்கையின் இனக் கலவரத்தைப் புரிந்து கொள்வதற்குக் குறைந்த பட்சமாவது குமாரி ஜெயவர்தனாவை ஆவது படித்துக்கொள்ள வேண்டும்.இது ஆலோசனை அல்ல.உங்களது கட்டுரை மிகத் தவறான முறையில் வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாட்டையும்,இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியில், ஆளும் வர்க்கங்களுக்குள் ஏற்பட்ட போட்டிகளையும் புரிய வைக்கிறது.அரச ஜந்திரத்தில் உறுப்புக்களாகவிருந்த யாழ் மேட்டுக் குடிகளது பதவி ஆசையைக் காரணங்காட்டிக் கலவரங்கள் நிகழ்ந்ததென்பது,தனிப்பட்ட இரு இனங்களுக்கிடையிலான பதிவிப்போட்டியாக விளக்கங்கொள்வது மிகக் கொடுமையானது.வரலாறு என்பது கதை எழுதும் வேலை அல்ல.அல்லது தனிநபரது ஆளுமைக்கும் உட்பட்டது அல்ல.அது ஒரு மிகப் பெரும் ஆய்வு மட்டத்துக்குள் பலபேர்களது கூட்டு உழைப்போடு மிகக் கறாரான மார்க்சியப் புரிதலோடு எழுதப்பட்டாக வேண்டும்.
 
 
இதைக் குறித்து, உலகை இனங்காண மார்க்சினது கூற்றைப் பாருங்கள்: வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலானது"என்கிறார்.
 
 
 
இன்றைய புலிகளது தோல்வியைப் பாருங்கள்!
 
 
 
இதை மனம்போன போக்கில் எழுதிவிட முடியுமா?
 
 
வரலாற்றில் புலிகளது போராட்டத்தை எழுதுவதற்கு-அதன் காரணங்கள்,தோல்வியினது பாத்திரம்,அவர்கள் கொண்டிருந்த வர்க்க அரசியல்,இவைகளை மிகக் குறுகிய வட்டத்துக்குள் வைத்து எவரும் எழுதிவிட முடியாது.இதைப் போன்றதேதாம் இனக்கலவரங்களுக்குள் நிலவிய முரண்பாடுகளை ஆய்வு செய்வதும்,அதையொட்டிப் படைப்பதும்.
 
 
"ஈழநானூறும் புலம்பெயர் படலமும்"என்று மிகக் கேலித்தனமாக நமது சமூக வாழ்வியல் பிரச்சனைகளை எழுதுவது மிகக் கெடுதியானது.அக நானூறு-புற நானூறு என்ற பண்டைய இலக்கியத்துள் நிலவிய மானுட தரிசனத்தை மானுடவியற் கண்ணோட்டத்துடன் பார்த்து ஆய்வு செய்யும் இன்றைய மாணவன்,அக் காலக்கட்டத்து சமூக நடிவடிக்கையைப் பொருளாதார வாழ்வோடு இணைத்து, அதற்கு அர்த்தங்கற்பிக்க முனைவதில் கண்டடையும் உண்மை புறநிலையின் தன்மையில் எழுந்த சிந்தனை எங்ஙனம் வாழ்நிலையைத் தீர்மானித்தென்பதும், அங்ஙனமே வாழ்நிலை-எங்ஙனம் உணர்வைத் தீர்மானித்துக் கொண்டதென்பதை வரலாற்றில் மனிதர்களை வைத்துப் பார்க்கும்போது-அங்கே பொருளாதார முரண்பாடுகளையும், மனித வர்க்க நிலைகளையும் கண்டடைய முடியும்.இவ்வண்மையேதாம் இன்றைய மனித வாழ்வையும், இன்னொரு கட்டத்தில் பார்க்க முடியும்.இவற்றைக் குறிப்பது எதற்காகவென்றால்,உங்களது பிழையான-தவறான புரிதல்கள் நாளைய சுமுதாயத்துக்குத் தவறான புரிதல்களை கொடுக்கப்படக் கூடாது என்பதற்கே.
 
 
அடுத்து,1983 ஆம் ஆண்டுக் கலவரம் என்பது வெறுமனவே சிங்களக்காடையர்களது பங்குபற்றலுடன் நடாத்தி முடிக்கப்பட்டது அல்ல.அதற்குள் பல்லினக் குழுக்கள் பங்குகொண்டுள்ளன.இவற்றை வழி நடாத்திய அரச வன்முறை ஜந்திரத்துக்கு, ஆளும் அரசினது ஒத்துழைப்பு இருந்ததென்றால் அவ்வரசுக்குப் பின்னாலுள்ள ஆளும் வர்க்கத்தினது பாத்திரம் எத்தகையது?
 
 
இவற்றைக் குறித்துப் பர்ப்பதே வர்க்கக் கண்ணோட்ட ஆய்வு.
 
 
இதுதாம் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்துடன் இயக்கவியல் பொருளாதாரப் புரிதலை சமூக இயக்கத்துள் உண்மைகளைக் காணப் பயன் படுத்துவது.இதை மறுத்தொதுக்கிவிட்டு,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் இனக் கலவரத்தைப் புனைவது கண்டிக்கத்தக்கது.
 
 
எமது புலப் பெயர்வைக் குறித்து மலினப்படுத்தப்பட்ட முறையில்"படலம்"போட்டுச் சொல்ல முடியாது.
 
 
இவைகளுக்குப் பின்னால் நிகழ்ந்த சமூகசீவியச் சிதைவு-வாழ்சூழற்பாதிப்பு அதன் காரணமாகவெழுந்த உயிர் வாழ்வு அச்சம்,அதன் வாயிலாக எழுந்த சமூக அசைவியக்கம் இப்படிப் பல படிமுறைகளைப் புரிந்தே எதையும் எழுத முடியும்.இது பாட்டி வடை சுட்ட கதை அல்ல!
 
 
மார்க்சியத்தைப் புரிந்து,சரியான ஆய்வைக்கொண்டு எழுதவும்.
 
 
அடுத்து-
 
 
இந்துக் கல்லூரியில் திரண்ட அகதிகள் அங்கே கோடு கிழித்துச் சாதியத்தை நிலை நாட்டியது என்பதெல்லாம் வெறுமனவே குறியீடுகளாகச் சொல்ல முடியாது.இதற்குப் பின்னாலுள்ள உளவியற் சூழலையும் அறிந்து எழுத வேண்டும்.அதாவது, பெரு நகரத்தில் எப்படி-எங்கே சாதிகள் இனங்காணப்பட்டன,இவையூடாக கலவரத்துள் சிக்குண்ட மானூடரது உளவியற்றாக்கத்தில் சாதியத்தின் தெரிவு சாத்தியமாகுமா என்ற வரலாற்றுத் தர்க்கம்- உண்மைகள் அவசியமானது.இதைக் குறுகிய அரசியலாக்க முனைவது கபடம் நிறைந்தது.
 
 
உங்கள் "ஈழநானூறும்,புலப்பெயர்வுப் படலத்தின"; ஒரு சிறு துண்டே இப்படியென்றால் முழு நூலிலும் என்ன அபத்தம் உண்டோ யாரறிவார்?
 
 
மீளவுஞ் சொல்கிறேன்: வரலாற்று நிகழ்வுகளை தனிப்பட்ட ஒருவர் எழுதிவிட முடியாது.அது, பற்பல ஆய்வுகளுக்குள் உட்படுத்தப்பட்டுக் கூட்டாக எழுதப்பட வேண்டியது.அதுவும் மார்க்சிய-வர்க்கப் புரிதலோடு,அன்றைய சூழலில் இயங்கிய பொருளாதாரப் போக்குகளை மிகக் கவனமாகப் புரிந்தே எழுத வேண்டும்.
 
 
இல்லையேல் இன்னொரு சாண்டில்யன் பாணியில்தாம் இது முடியும்.
 
 
இந்தத் துண்டுக் குறிப்பே மிக அபத்தமானமுறையில் வரலாற்றையும், அதன் பாத்திரத்தையும் குறித்துச் சொல்கிறதென்றால்,அச்சில் வரும் முழு நூலது உள்ளடக்கமும் எத்தகைய புரிதலைத் தரப்போகிறது நமது இளைய தலை முறைக்கு?
 
 
சமூக நடாத்தைகளை பரபரப்பு முறையில் எழுதி விற்க முடியாது.இது சுத்த சிறுபிள்ளைத் தனமானது!இத்தகைய எழுத்து, ஏன்?-என்று கேள்வி கேட்டுக்கொண்டால்,அதன் அவசியம் எதற்கென்று புரியும்.
 
 
எழுத வேண்டுமென்பதற்காக எழுதி, நமது மக்களை மேலும் மொட்டையடிப்பது சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும்.-அவ்வளவுதாம்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
26.07.09

Thursday, July 23, 2009

புலியழிப்புக்குப் பின் இலங்கையில்...

புலியழிப்புக்குப் பின் இலங்கையில்...
 
 
மிழ் பேசும் மக்களது வரலாற்று மண்ணான வடக்கு- கிழக்கு மாகணங்களை கூறு போட்டுத் தமிழர்களைப் பிரித்தெடுத்துத் தனது நோக்கத்தை நிறைவுப்படுத்துவதற்காகவே செல்வநாயகத்தின் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஓட்டுக்கட்சியை அமெரிக்க ஏகாதிபத்தியம் நிதியளித்துக்காத்து வந்தது.இத்தகைய கட்சியின் செயற்பாடு இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடு எந்தப் பொழுதிலும் தீர்ந்துவிடக்கூடாதென்பதில் அன்று மிகக் கவனமாகச் செயற்பட்டது.அதன் பாரம்பரியக் காட்டிக் கொடுத்தல்,குழிப்பறிப்புகளின் நீட்சி இன்றைய புலிப்போராட்டமாக நீண்டு மக்களைக்ப் பிளந்து கொன்றபின்,புலிகளை அழித்துக் கருணா-டக்ளஸ்,பிள்ளையான் என மேலும் விரிகிறது.
 
 
அன்று, இத்தகைய தமிழர் தலைமைகள் சிங்களக் கட்சிகளோடு செய்த ஒப்பந்தங்கள் முரண்பாடுகள் பின்பு அதையே சாட்டுவைத்து அவற்றைச் செயற்படுத்த முடியாத இனவாதச் செயற்பாடுகள்,மற்றும் தமிழ் பேசும் மக்களுக்குள் மிகக் கேவலமாகப் பிரதேசவாத ஒடுக்குமுறை,சாதிய மற்றும் பெண்ணடிமைத்தனத்தையும் மிக நேர்த்தியாக ஊன்றியபடி அந்நியர்களின் கட்டளைகளையேற்று நம்மைக் கழுத்தறுத்த வரலாறு உண்மையானதாகும். இதைத் தொடர்ந்து இருத்தி வைப்பதற்காக இன்றுவரையும் இலங்கை அரசியலில் அமெரிக்காவும்,மேற்குலகமும் மிகக் கவனமாகச் செயற்படுகிறது.
 
 
இத்தகைய பார்வை அதன் வெளியுலக நீண்டகால நலன்களின் அடிப்படையிலானது.இங்கே,உலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கி இலங்கையைத் தமது எஜமானர்களுக்குக் கீழ்படிய வைக்கும் கடன் நிதிகளால் தத்தெடுக்கின்ற சூழலில், இக்கடன் நிதிகளையும் அதைச் சுற்றிய கட்சி-அரசினது சாரங்களையும் புரிவது அவசியம்.இதன் வழி நம்மை மொட்டையடிக்க முனையும் முன்னாள் ஆயுதக்குழுக்களது இன்றைய ஓட்டுக்கட்சி அரசியலை எவர்கள் தீர்மானிக்கின்றனர் என்பதை நாம் புரியமுடியும்.இவர்களது பின்னே நிழலாக விரியும் அதிகார வர்க்கம் மேலும் நமது மக்களை முட்டாளாக்கித் தமிழ்பேசும் மக்களது உரிமைகளை அந்நியர்களுக்குத் தாரைவார்க்கிறது.இது குறித்துச் சற்று நோக்குவோம்.
 
 
உலக வங்கி-நாணயநிதியக் கடன் நிதிகளும்,அதன் நோக்கமும்:
 
 
புலிகளது இராணுவ இருப்பை அழித்தபின் இலங்கையில் மாறிவரும் அரசியற் சூழல் மிகவிரைவாகப் புரிந்துகொள்ளத்தக்க சிலகெடுதிகளை உணர்த்துகிறது.இந்தக் கெடுதிகள் யாவும் இனவாத அரசியலின் வெற்றிடத்தை மீள நிறுத்துவதற்கும்,இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நீறுபூத்த நெருப்பாக இருப்பதற்கான அரசியலாகவும் இருத்தி வைக்கப்படுவதூடாக இலங்கையின் சுயவளர்ச்சி இல்லாதாகப்படுகிறது.இந்தச் சுழற்சிக்கு ஏற்றதான அந்நியக் கடன்கள் இலங்கையை மிகவிரைவாக முற்றுகை இடுகின்றன.உலக வங்கி-நாணய நிதியத்தின் நிபந்தனைகள் பெரும்பாலும் இலங்கையின் எதிர்கால அரசியல்-பொருளாதார முன்னெடுப்பின்மீதான செல்வாக்கை தனக்குள் கொண்டதன் வியூகமாகவே இருக்கின்றது.இதன்படி இலங்கை மக்களது உண்மையான முரண்பாடுகள் மழுங்கடிக்கப்பட்டு இனங்களுக்கிடையிலான ஆதிக்க அரசியல் விருப்புகளைக் கட்சி அரசியலூடாக மக்களைக் கட்டிப்போடும் கபடம் நிலவுகிறது.
 
 
"ஈழப் போர்"முடிவுக்குக் கொணரப்பட்டதன்பின் மக்கள் தமது உண்மையான முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் சூழல் இதன்படி இல்லாதாக்கப்பட்டு, மக்களை "அபிவிருத்தி-மக்கள் நலத் திட்டம்"எனும் மாயமான்களால் கட்டிப்போடுவதற்கும்,இதனூடாகப் பாராளுமன்றச் சாக்கடையில் நீச்சலடிக்கும் இன்னொரு சுற்றை இனங்களுக்கிடையிலான முரண்பாட்டுக்குத்"தீர்வு"என வகுக்கப்படுகிறது.இதுவரை போரைச் சொல்லி இலங்கையின் பொருளாதார முரண்பாட்டையும்,அன்றாட விலைவாசி உயர்வையும் குறித்த மக்களது அதிருப்தியையும்,அதற்கெதிரான கவனத்தையும் திசைதிருப்பியது இலங்கை ஆளும்வர்க்கம். இப்போது அந்நியக்கடன்களால் தமது இருப்பை மேலும் நிலைப்படுத்த முனைகிறார்கள்.இதுவே, இலங்கை ஆளும் வர்க்கத்து அந்நிய எஜமானர்களதும் நோக்குமாகும்.
 
 
இதன் கெடுதிகள் இலங்கையில் அடுத்த மூன்று தசாப்த காலத்துக்கு மேலும் புரட்சிகர-வர்க்க உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட இலங்கையாகவும்-அந்நிய வலையில் வீழ்த்தப்பட்டு ஒட்டச் சரண்டப்படும் இலங்கை மக்களாகவும், அனைத்து இலங்கை மக்களும் தமது எதிர்காலத்தை எதிர்கொள்வதாகவே இருக்கும்.இதன்படி இன்று மையமுறும் சிலவற்றை இங்ஙனம் இனங்காண முடியும்:
 
 
உலகத்தில் வளர்ச்சியடைந்த கலாச்சாரங்கள் சமீபத்துப் பொருளாதார அதிர்வுகளால் நாசமாகப் போகும் இன்றைய நிலையில்,மேலிருந்து கீழ் பங்கீடு வற்புறத்தப்படுகிறது.உற்பத்திச் சக்திகளைத் தமது கட்டுப்பாட்டில்வைத்திருக்கும் வர்க்கத்திடமிருந்து உழைப்பவர்களுக்குச் சில சலுகைகளை தருவதற்கான முறையில் மேலிருந்து கீழ் நோக்கி செல்வப் பங்கீட்டைக் குறுக்கிறது மேற்குலக உற்பத்தி ஒழுங்கு.இலங்கையை இங்ஙனம் ஒரு திட்டத்துக்குள் அவர்கள் உள் வாங்குகிறார்கள்.இலங்கையின் நிலவும் அரச அமைப்பைக் காப்பதற்கான தெரிவினூடாக, இலங்கையைப் புரட்சிகரச் சூழல் அண்மிக்காது இருப்பதற்கான வியூகங்களே அந்நியக் கடன்களோடு வந்து சேர்கிறது.
 
 
 
(அ):இலங்கையின் பெரும் செல்வத்தை-மக்கள்மீது மறைமுக வரிச்சுமையாகக்கொண்டு பெறப்படும் பணத்தைத் தின்று ஏப்பமிடும் இலங்கை இராணுவம்,தொடர்ந்து நிலைத்திருக்க வைத்தல்.இது எப்பவும் அந்நியக் கட்டுபாட்டில் வைத்திருப்பதும்,தேவையானபோது சிதறடிப்பதற்குமான மூல உபாயம்.
 
 
(ஆ):சுய வளர்ச்சிக்கான பொருளாதார முன்னெடுப்பு இலங்கையில் குறிப்பட்ட வளர்ச்சி நிலையில், அத்தேசத்தின் சுயாண்மையைக் கொண்டியங்கும்.இந்த ஆபத்தைத் தடுத்தல்,அந்நிய ஒத்துழைப்போடு மக்களது பொருளாதார முன்னெடுப்பைத் தமது கட்டுப்பாட்டில் இயங்க அனுமதித்தல். இதனூடக, ஆசியாவினது மூலதனத்தை இலங்கையில் கண்காணிக்கும் பொறியைக் கொண்டியிக்குவதற்கான சரியான தெரிவை வகுப்பது.
 
 
(இ):இலங்கையின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார நிர்மாணிப்புகளைத் திட்டமிட்ட உலக வங்கி-நாணய நிதியக் கடன் நிதிகளின் ஒத்துடைப்போடு தமது கட்டுப்பாட்டுக்குள் உள்வாங்குதலுக்குக் கடனுக்கான வட்டியும்,வட்டிக்கு வட்டியுமான சுமையில் இலங்கை தொடர்ந்து சுரண்டி, அதனது அரசியல்-பொருளாதார சுயாதிபத்தியத்தை ஆசியாவிடமிருந்து பறித்து ஐரோப்பிய-அமெரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்தல்.சீனா-இந்தியா போன்ற தேசங்களது பிராந்தியச் செல்வாக்கை கடன் நிதிகளால் மெல்லக் குறுக்குதல்.
 
 
(ஈ): இலங்கை தழுவிய அந்நிய உற்பத்திப் பொருள்களின் படையெடுப்பும்,அதைப் பரவலாக வாங்கும் திறனை இலங்கையில் அதிகரித்தல்.இது,மேற்குலகில் குவியும் உற்பத்தி பொருள்களும்,அந்த மக்களிடம் வாங்கும் திறன் இல்லாத சூழலை மேலும் கட்டுப்பாட்டில் வைத்து, முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையைப் பேணதலுக்குமான ஊக்கத்தையும் இலங்கை சார்ந்து இயக்குகிறது(இந்திய-தமிழகத்து ரீ.வீ.களில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள்.அனைத்தும்-பல் துலக்கும் பேஷ்ட் கூட அந்நியத் தயாரிப்பே).
 
 
(உ):இலங்கையினது ஓட்டுக் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் குறிப்பிட்ட சூழலுக்குள் நிதி மூலதனத்தோடு இணைத்து, அவர்களையும் தமது உற்பத்தியை மறு பங்கீடு செய்யும் தரகு முதலாளியத்துக்குள் கட்டிப்போடுவது.இதனூடாக எந்தக் கட்சியும் தேசிய மூலதனத்துக்குத் தலைமை தாங்காதிருக்கத்தக்க முறையில் தேசிய மூலதனம் உருப்பெறாதிருப்பதற்கு முட்டுக்கட்டையிடல்.அண்ணளவான தேசியப் பொருளாதாரக் கொள்கை பெயரளவிலும் நிலைபெறமுடியாதிருப்பது இதன் உள்ளடக்கமாகும்.இதனடிப்படையிற்றாம்,இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையிலான அரசியற் கட்சிகளைப் பேரினத்தின் பொருளாதார இலக்கில் ஒன்றித்துச் செயற்படும் கட்சிகளது தந்திரமாக(பெருங்கட்சிகளுக்குள் சிறியவற்றை-இனஞ்சார்ந்த கட்சிகளைக் கரைத்தல்) இலங்கையில் திட்டமிட்டுக் காய் நகர்த்தும் அந்நிய நிறுவனங்களால் முன் தள்ளப்படுகிறது.இது பிராந்திய மற்றும் நகர்ப்புறக் குட்டி முதலாளிய வர்க்கத்தின் முற்போக்குப் பாத்திரத்தை இல்லாதாக்கும் செயலோடு தொடர்புடையது.அந்நிய மூலதனத்தால் பழிவாங்கப்படும் இவ் வர்க்கம் இறுதியாகச் சென்றடையும் புரட்சிகரப் பாத்திரத்தை,அவர்கள் இப்போது முன்னிறுத்தும் பிராந்தியக் கட்சிகளைச் செயலிழக்க வைப்பதால் வரலாற்றில் இல்லாதாக்குதல்.
 
 
இன்றைய மேற்குலகத்து உடமை வர்க்கத்துக் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை உலக நாணய நிதியமும்,உலக வங்கியும் மேற்சொன்ன முறைமைகளில் தணிப்பதற்கு முனைகின்றன.இதே அமைப்புகள் தமது எஜமானர்களுக்கு மேலிருந்து கீழ் நோக்கிய பங்கீட்டை வற்புறுத்திக் கென்றி போர்ட்டினது(Henry Ford) மிகப் பெரும் அறிவுறுத்தலை நினைப் பூட்டுகின்றனர்:
"நான் எனது தொழிலாளர்களுக்கு நியாயமான கூலியைக்
கொடுத்தாவேண்டும்.இல்லையேல் எனது கார்களை அவர்களுக்கு விற்க முடியாதுபோகும்.நான்
கண்டிப்பாக அரசுக்கு வரி கட்டியே ஆக வேண்டும்.இல்லையேல் அரசிடம் பணம் இல்லாது
போகும்,எனது கார்கள் ஒடுவதற்கான வீதிகளை அமைப்பதற்கு."
இது,மிகச் சிதறந்த உதாரணம் மேற்குலகப் பூர்ச்சுவா வர்க்கத்துக்கு.இதற்குள் முதலாளித்துவ உற்பத்திப் பொறி முறையின் இன்றைய நெருக்கடிக்கான பல பதில்கள் அடங்கிக் கிடக்கிறது.
 
 
மார்க்ஸ் பொருளதார விவாதத்தில் ஒரு முறை இப்படி எழுதுகிறார்:
 
 
"முதலாளித்துவத்தின் முடிவின் இறுதிக்கட்டத்தில் கிட்டங்கிகளில் பொருட்கள் நிறைந்துபோய்க் கிடக்கும்.ஆனால், அதை நுகர்வதற்கு எவரிடமும் பணம் இருக்காது".
 
 
இதன் அறிகுறியை இப்போது நாம் மேற்குலகில்-குறிப்பாக ஜேர்மனியில் இனங்காண்கிறோம்.இங்கே, கென்றி போர்ட்(Henty FORD) குறித்த அவரது இலக்கு மார்க்சினது சரியான ஆய்வில் இருந்து கட்டப்பட்டதாகும்.இலங்கையினது இன்றைய அந்நியக்கடன்களுக்கு இந்த இலக்கே முதன்மையானது.எனவே,மேற் காணும் பொறிக்குள் இலங்கையை வீழ்த்தும் அந்நியக் கடன் நிதிகள் இறுதியில் இலங்கையின் ஆளும் வர்க்கத்தை காத்துத் தமது இலக்கை எட்ட முனைகிறது.இது புரட்சியையும்,உழைக்கும் வர்க்கத்தையும் இலங்கையில் மிக நேர்த்தியாக ஒடுக்கும் வியூகத்தில் புலிக்குப் பதிலாகக் கடன் நிதியாக வருகிறது.
 
 
கட்சி ஆதிக்கமும்,அரசினது சாரம்சமும்:
 
 
ஓட்டுக் கட்சிகள் யாவும் இலங்கையில் முட்டிமோதும் ஆதிக்கமானது இலங்கையில் இருபெரும் கட்சி ஆதிக்கத்துள் இலங்கையின் அரசியல் நடாத்தைகளை முடக்க முனைகின்றன.இருபெரும் சிங்களக்கட்சிகளாக ஆளும் மகிந்த அரசினது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும்,எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் நிலவுகின்ற சிங்களப் பேரினவாதத்துக்குத் தலைமை தாங்க முற்படுகின்றன.இதன் தொடராக மெல்ல அரசியலாகும் இனவாதக் கண்ணோட்டமானது இலங்கைப் பொருளாதார நகர்வுகளுக்குக் குறுக்கே கோடுகிழிப்பதைத் தவிர்த்தபடி எல்லோரையும் உள்வாங்கின்ற கட்சியாதிக்கத்துள் சிறு கட்சிகள்-சிறுபான்மை மக்களது அடிப்படைப் பிரச்சனைகளைப் பேச முற்படுபவையாக இருப்பவைகூடக் கட்சியாதிக்கத்தின் வெறித்தனமான அரசியல்பரப்புரையில் மெலினப்படுத்தப்பட்டுக் பெருங்கட்சிகளோடு கரையும் அபாயமானது இலங்கையின் அரசு குறித்த சாரம்சத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
 
 
இன்றைய இலங்கை அரசியலில் இலங்கையில் வாழும் பல்லின மக்களது அடிப்படை அரசியல் உரிமைகள் மற்றும் குடிசார் அமைப்புகளை மறுப்பதற்கான அரசியல் நடாத்தையாகப் பெருங் கட்சியாதிக்தின் பிடியுள் சிக்குண்டுபோகும் ஓட்டுக் கட்சி நலனாக இலங்கையின் ஜனநாயகப் பொதுச் சூழல்
மாற்றப்படுகிறது.இதன் தொடராக, ஐக்கிய தேசியக் கட்சியினது அடுத்தகட்டத் தேர்தல் நகர்வுக்குள் பூர்வீகக் குடிகளது பொருளாதார அபிவிரித்திக்கான திட்டமெனும் போர்வையில் "பூர்வீகக் குடிகள் யோசனைத் திட்டம்"எனும் அரசியல் வியூகம் பெருத்த தேர்தல் வெற்றிக்காகச் சிங்கள ஆளும் வர்க்கத்துள் மையங் கொள்கிறது.இது,-மேற்குலகச் சார்புடைய பகுதி-ஐக்கிய தேசியக் கட்சிக்கு முண்டுகொடுத்து எதிர்காலத்தில் தமது நலன்களை எட்டுவதற்கானவொரு ஆட்சியைக் கொணரத் துடிக்கிறது.
 
 
மேற்குச் சார்புடைய இப்பிரிவு,இலங்கையினது உழைக்கும் மக்களை எந்தவுரிமையுமற்ற வெறும் கொத்தடிமைகளாக்கும் இனவாதக் கருத்தமைவுகளுடன், முழுதும் அவர்களது(உழைக்கும் வர்க்கம்) நலனுக்கான அரசியலாகக் காட்டப்பட்டு வருகிறது.பெரும்பான்மையின் ஓட்டுக்களைக் குறிபார்க்கும் கட்சிகளது தேர்தல் வியூகத்தில் சிறுபான்மை மக்களது எந்தவகைக் குரலும் பெருங்கட்சியாதிகத்துள் மூழ்கடிக்கப்படுகிறது.இதைத் தட்டிக் கேட்கத் துப்பற்ற டக்ளஸ் போன்ற மக்கள் விரோதத் தலைமையால் பரப்புரை செய்யபப்படும் பொய்மையானது "அரசோடு பகைக்கப்படாது-பெரும் கட்சிகளோடு முரண்படப்படாது" எனும் சந்தர்ப்பவாதமாக இருக்கிறது.இத்தகைய சந்தர்ப்பவாத அரசியலில் அறுவடையாகும் கட்சியாதிக்கமானது இலங்கையில் இருபெரும் கட்சிகளது தெரிவில் ஆட்சி-ஜனநாயக நடாத்தை மிக மோசமாகப் பாதிப்படைவதில் அனைத்து அதிகாரமும் சில கட்சித் தலைவர்களது குடும்பத்தைச் சுற்றியும் அவர்களது பொருளாதார நலனை முதன்மைப்படுத்தியும் குறுகி,மக்களைக் கொத்தடிமைகளாக்கும் சதிவலைக்குள் வீழ்த்தப் போகிறது.இத்தகைய வலையானது மேலும் சிங்களப் பேரினவாதத்தை மீள் மலர்ச்சியடைய வைப்பதற்கான சாத்தியப்பாட்டை கட்சி அரசியலுக்குள் மெல்ல உள்வாங்குவதாகவே இருக்கிறது.
 
 
இலங்கையின் அரச தந்திரமானது மிக நேர்த்தியாகத் தமிழரின் அரசியல் வாழ்வைப் படுகுழியில் தள்ளித் தமிழ்பேசும் மக்களை மீள முடியாத அரசியல் வறுமைக்குள் இட்டுள்ளது.புலிகளின் அழிவோடு தமிழ்பேசும் மக்களுக்குச் சோற்றுப் பார்சலை வழங்கிப் பெரும் புரட்சிகரமான விடுதலையை மக்கள் பெறுவதற்குத் துணை நிற்கிறது இந்தியா!ஆரம்பத்தில் பற்பல குழுக்களை உருவாக்கி இலட்சம் மக்களைக் கொல்லத் தூண்டிய இந்திய அயலுறுவுக் கொள்கை, இன்று தமிழ்பேசும் மக்களை வெறும் கையாலாகாத இனமாக்கி விடுகிற அதே தளத்தில், இலங்கையின் மற்றைய சிறுபான்மை இனங்களான முஸ்லீம் மற்றும் மலையக மக்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தி உளவியல் அச்சத்தைச் செய்கிறது இன்றைய கட்சி ஆதிக்கம்.இத்தகைய ஆதிக்கத்தை நிலைப்படுத்திச் சிறுபான்மை இன மக்களது அரசியல் கோரிக்கைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் சதியில் வல்லாதிக்கத் தேசங்களே இலங்கைக்கு வகுப்பெடுக்கின்றன.
 
 
இதை ஜனநாயக விரோதமான செயலாகவே நாம் பார்க்கிறோம்!
 
 
இந்தக் கட்சி ஆதிக்க இராஜ தந்திமானது தமிழ்பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் நிர்மூலமாக்கும் பாரிய அழிப்பு அரசியலை முன்னெடுப்பதாக இருக்கிறது.இதன் உள்ளார்ந்த நடவடிக்கையாக ஜனநாயகத் தற்கொலை இலங்கையில் நடந்தேறுகிறது. இதைத் தேச ஒருமைபாடு என்ற கோதாவில் பிரிவினைக்கு எதிரான அரசியல் நடாத்தையாகச் செய்யக்கூடிய நிலையில், இலங்கை அரசியல் உள்ளது.இலங்கையின் இராணுவமானது தவிர்க்க முடியாத அனைத்துக் குடிசார் உரிமைகளையும் தனது நேரடியான கண்காணிப்பின்கீழ் கொணர்ந்து, மக்கள் மத்தியில் தீர்க்கமானவொரு அடக்குமுறைய நிரந்திரமாக விதைத்து பாசிசமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது இலங்கை அரசு.
 
 
இந்நிலையில்,பெரும் கட்சியோடு பகமையை வளர்க்காத அரசியலைச் செய்வதாகவும்,இதன்மூலம் "தம்மையும் காத்துத் தமது மக்களையும் காக்கும்" வியூகத்தைக் கொண்டிருப்பதாக டக்ளஸ் ஒரு பேடித்தனமான சந்தர்ப்பவாத அரசியலைத் தொடக்கி வைத்துப் பேசுகிறார்.இவர்களுக்குத் தமது தலையைக் காப்பதில் பெரும் வேட்கைகொண்ட இலாப நோக்கு இருப்பதால், இங்ஙனம் பேச வைக்கிறது அவர்கள் பின்னாலுள்ள மூலதனம்.
 
 
கட்சி அரசியல் பகமையைக் காரணமாக வைத்துத் தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவுரிமையையும் பெரும் கட்சிகள் தந்துவிடாதுபோகும் சூழலைத் தடுப்பதற்குப் பெரும் கட்சிகளோடு இணைந்து அவர்களது தயவில் பாராளுமன்றஞ் சென்றுவிட்டால் தமிழுர்களுக்குத் தீர்வு முன்வைக்கப்பட்டு,அவர்களது அரசியல் வாழ்வும் சிறந்து-உரிமையும் எட்டப்பட்டு விடுவதுமாகத் தமிழ் தலைமைகளெனும் போர்வையில் உலாவரும் மாற்றுக் குழுக்கள்-கட்சிகள் சிங்கள அரசிற்குத் துணைபோகிறது.இந்த அரசியலில் தமது கட்சி-இயக்க நலன்களை எட்ட முனைதல் முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும் எதிரான வரலாற்றுத் துரோகத்தை மீளச் செய்வதைத் தமிழ் பேசும் மக்களுக்கு "ஜனநாயகம"; கொணர்வதாகச் சொல்வது முற்று முழுதான சுத்துமாத்து அரசியலாகும்.இதை டக்ளஸ்-கருணா போன்ற மிகக் கெடுதியான பதவி-பணவெறிபிடித்த முன்னாள் ஆயுததாரிகள் மக்களது பெயரால் தமது துரோகத்தனத்தை ஒப்பேற்றி வருகின்றார்கள்.இந்த நிலையில் ஓட்டுக்கட்சிக்கும் அரசுக்குமான உறவுகள்,இலங்கைச் சூழலில் மிக நேர்த்தியாக அறியப்பட்டாகவேண்டும்.
 
 
எனவே,இன்றைய இலங்கை அரசினது சாரம்சத்தை வெளிப்படுத்துவது மிகமிக அவசியமானது.அதாவது, அதன் நடவடிக்கைகள் மற்றும் ஸ்தாபனத்தின் மிகவும் முக்கியமான-பிரதானமானகூறுகளைச் சுட்டிக்காட்டுவதே அதன் சாரம்சமாகும்.சிங்களப் பூர்ச்சுவாக்கள் தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்காக அரசினது பாத்திரத்தை நியாயப்படுத்துவதற்கான கருத்தியலைச் சதா திணித்து அதை அம்பலப்பட்டுப்போகாதபடி காத்துவருகின்றார்கள்.இதற்கு ஓட்டுக்கட்சி அரசியலானது மிகப்பெரும் ஒத்துழைப்பை நல்கி மக்களது ஓட்டுப்போடும் சுதந்திரமே இந்த அரசினது மக்கள் சார்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகப் பொய்யுரைக்கின்றனர்.இவர்களது பின்னே அந்நிய மூலதனம் வழி காட்டுகிறது.
 
 
இதனால்தான் நாம் இந்தப் பாராளுமன்றச் சாக்கடையை நம்பி ஏமாறுகிறோம்-அரச சட்ட நிர்ணயத்தை நம்பியும்,நீதிமன்றங்கைளை நம்பியும்"சட்டத்தின் முன் அனைவரும் சமம்"என்று கனவுகாண்கிறோம்.இந்தக் கனவை இன்னும் ஒருபடி மேலே இலங்கையில் எடுத்துச் செல்லும் மகிந்தாவினது கட்சிக்கும் அதற்குப் பின்னாலுள்ள அதிகார வர்க்கத்துக்கும் ஒத்தூதுவதையே கருணா-டக்ளஸ் போன்றவர்கள்அரசோடு இணைந்து புதிய இலங்கையைப்படைப்பது என்று பூசிமெழுகிவிடப்பார்க்கின்றனர்.இந்தப் பிராடுகள் செய்யும் அரசியலானது இனிவருங்காலத்தில் இலங்கைச் சிறுபான்மை இனங்களை அரசியல் ரீதியாகப் பலமற்ற மக்கள் கூட்டமாக்கும்.
 
 
இந்த அரச அமைப்புச் சொல்லும் "தேசிய ஒருமைப்பாடு,இன-மத ஒற்றுமை" என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்திச் சுரண்டி ஒடுக்கும் கருத்தியல்களே!நாமிதில் கவனமாக இருப்பது உழைக்கும் வர்க்கத்தின் விடுதலையைத் துரிதப்படுத்தும்.
 
 
இலங்கையினது நீண்டகாலக் கனவானது தற்போது பொதுவரங்கத்தில் நிசமாகிறது!
 
 
 
அரசியல் ஆதாயங்கள் மக்களின் அழிவுகளில் எட்டப்படுவதாக மாறிப்போனது இன்று நேற்றல்ல, இலங்கையில்.எனினும், இத்தகைய சூழலில் இழப்புக்குள்ளாகும் அப்பாவி மக்கள்தம் வாழ்வும் சாவும்,நேர்மையற்ற முன்னாள் இயக்கங்களால்-இந்நாள் கட்சிகளால்,அந்நியத் தலையீடுகளால்- அரசியல் வாதிகளால் மீளரசியலாக(ஓட்டுக் கட்சி அரசியல்) மாற்றப்படும்போது நாம் பொறுமையிழக்கிறோம்.மாறிமாறிப் பதவிக்குவரும் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து அப்பாவி மக்களை ஏமாற்றும் அரசியலை முன்னெடுப்பதற்குப் புதிய புதிய விளக்கங்களை பூர்ச்சுவாக்கள் தமது ஏவல் நாய்களான கட்சிகள் மூலம் தருகிறார்கள்.இலங்கையின் கட்சியாதிகத்துள் நேரடியாகவே பூர்ச்சுவாக்கள் தமது அதிகாரத்தை நிலைப்படுத்தி இலங்கையிலிருந்த பெயரளவிலான மனிதவிழுமியங்களையும் இல்லாதாக்கி, இந்தத் தேசத்தை மக்கள் விரோதத் தேசமாக்கியுள்ளார்கள்.
 
 
 
இங்கே, அரசின் செயற்பாட்டை விளங்க முற்படும்போதுஅதன் எடுபிடி அரசியல் பிழைப்புவாத நாய்களையும் புரிந்திட முடியும்.
 
 
வர்க்க உணர்வு குறித்த புரிதல்:
 
 
 
இந்த மனித சமூகமானது வர்க்க சமுதாயமாகப் பிளவுண்டு கிடக்கிறது.எனவே, இந்த மனிதக்கூட்டு வர்க்கச் சமுதாயமாக இருக்கிறது. வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை.இதை முதலில் புரியாதவர்கள் "தாம் சார்ந்த" குட்டிமுதலாளிய இயக்கங்களை,மற்றும் தேசிய விடுதலை,தனிநாடு என நீலிக் கண்ணீர் விடுவது அவர்களது அறிவிலிப்போக்கால்தான்.இல்லையென்றால் புலம் பெயர்ந்து வாழும் மேற்குலகில் புலிகள் எடுக்கும் இப்போதைய புதிய வேடங்களையும் "தேசத்தினதும்-ஈழத்தினதும்" பெயரால் நம்புவதற்கும் ஒரு கூட்டம் தயாராகவே இருக்குமா?இதை நோக்கித் தேசபக்தர்கள்(அன்றைய தமிழீழச் சஞ்சிகையினது இன்றைய பாத்திரம் இஃது) கட்டுரைகளை எழுதிப் புலிகளுக்கு மீளவும் ஒரு இருப்பு உணர்த்த வெளிக்கிடுகிறார்கள்.இதன் மூலம் அனைவரையும்-அனைத்துத் தரப்னையும் ஐக்கியப்படுத்தி "தேசிய விடுதலையை"ச் சாதிக்க முனைய வேடங்கள் தயாராகிறது.இங்கே,இவர்களுக்குப் பின்னால் பெரும் நிதியும் அதைக் குறித்த அரசியலும் இருக்கிறது.இவர்களது பின்னணி தமிழ் பேசும் மக்களது நலனைக் காயடிப்பதாகவே இருக்கும்.
 
 
இந்த நிலையில்,சுரண்டுபவர்களுக்கும்,சுரண்டப்படுபவர்களுக்கும் சமமாக எந்த அரசும் காரியமாற்றுவது உண்டா?
 
கிடையாது!
 
 
இதை மனிதில் இருத்தும்போதே அடுத்த கட்டத்தைப் புரிவீர்கள்.
 
 
அரசு மக்கள் சமூகத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஒடுக்கும் ஒரு மாபெரும் வடிவம்.இதைப் பூர்ச்சுவா அரசு என்பார்கள் சமூக விஞ்ஞானிகள்.அரசினது வர்க்கத் தன்மையைப் புரியாதவர்களே குட்டி முதலாளிய இயக்க-ஓட்டுக் கட்சி அரசியல்வாதியை நம்பி ஏமாறும் இளிச்சவாயர்களாக இருக்கிறார்கள்.இதனாற்றாம் இலங்கையில் கருணாவையும்-பிள்ளையானையும்கூட மக்கள் தமது மீட்பர்களாகக் கருதும் ஒரு இருண்ட அரசியல் விரிகிறது.இத்தகைய அரசியல் இப்போது முன்வைக்கும் தீர்வு-அரசியல் உரிமை என்பதெல்லாம் வெறும் ஏமாற்று முடிச்சுகளாக முன் தள்ளப்பட்டு மக்களை ஏமாற்றும் தந்திரங்களாக இவை இலங்கைச் சூழலில் நடந்தேறுகிறது.இதைச் சட்வாக்கத்துள் திணித்து வசதியாக மறைத்து நாட்களை நீடித்தபடி காலத்தை ஓட்ட முனைவதில் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கனவுகள்(இலங்கையில் சிறுபான்மை இனங்களை அடிமை கொள்ளல்-அரசியல் அநாதைகளாக்குதல்.) மெல்ல நிறைவேறுகின்றது.
 
 
என்றபோதும்,எவ்விதமான அரசினது சாரம்சமும் அதன் பொருளாதார மற்றும் சமூக அடிப்படையினால் மட்டுமே நிர்மாணிக்கப்படுகிறது.இதன் வெளியில்தான் அதன் சாரம்சம் தீர்மானிக்கப்படுகிறதென்பதை மறைப்பதுதான் இன்றைய இலங்கைத் தரகு முதலாளியத்தின் சூழ்ச்சியாகும்.இங்கேதான் "சமஷ்டி,அரசியல் யாப்பு,குடியரசு,பாராளுமன்றம்,நீதிமன்றங்கள்-ஜனநாயகம்,மனிதவுரிமை"என்ற முகமூடிகளோடு தரகு முதலாளித்துவக் கட்சிகள் நம்மை ஏமாற்றி வருகின்றன.இன்றைய கட்சிகளே-இயக்கங்களே பெரும் உடமை வர்க்கமாக மாற்றப்பட்டு இலங்கை-இந்தியப் பூர்ச்சுவா நலன்களைப் பேணும் நம்பத்தகுந்த அடியாளக இருக்கிறது சிங்கள மற்றும் அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு.
 
 
பூர்ச்சுவா அரசானது உடமை வர்க்கத்தின் நலனைக் காக்கும் வடிவமாக இருக்கும்போது,அதை அங்ஙனம்மின்றி மொத்த மக்களுக்குமானதாகக் காட்டும் கைங்காரியத்தைச் செய்வதுதான் இந்த வலைப் பின்னலுடைய ப+ர்ச்சுவாக் கட்சிகள்-இயக்கங்களின் வேலை.இன்றைக்குக்-டக்ளஸ் வகையறாக்கள் பேசும் கருத்துக்களும்,கட்டமுனையுங் கருத்தும்-கட்சி அரசியலும் இதன் பன்முகத்தன்மைகளைத் தொடர்ந்து கயமைத்தனத்துடன் விளக்கித் தமது எஜமானர்களுக்கு இசைவாகச் செயற்படுகிறது.இது நல்ல உதாரணம் நமக்கு.அரசின் சிக்கலான பன்முக நிகழ்வுப்போக்கைப் புரிந்து கொள்வதற்கு அதைப் பற்றிய தெளிவான விஞ்ஞானப் புரிதல் அவசியமாகும்.இந்த அறிவைப் பெறாத பெரும்பான்மையான மக்கள், கட்சி அரசியல்வாதிகளை நம்பி அவர்களால் தமக்கு நல்லது நடப்பதாக ஏமாந்துபோகிறார்கள்.
 
இலங்கையின் மகிந்த தலையிலான அரசு இலங்கை மக்களின்-சமூகத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது,சமூக முரண்பாட்டைத் திசைதிருப்பி சமூக வளர்ச்சிக்கட்டத்தை மட்டுப்படுத்துவதில் பூர்ச்சுவா வர்கத்துக்குத் துணைபோகிறது.அதன் தாக்கத்தால் பொருளாதார உறவுகளில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.உற்பத்திச் சக்திகளுக்கும்,உற்பத்தி உறவுகளுக்குமிடையிலான முரண்பாடு தீவிரமாக ஒடுக்கப்படுகிறது.இது வலு கட்டாயமாக உற்பத்தி உறவுகளை அந்த உற்பத்திச் சக்திகளோடு ஜந்திரத் தனமாக இணைத்து அடிமைகளாக மக்களைக் கட்டி வைத்திருக்கிறது.இங்கே, தொழிலாள வர்க்கத்தைப் பற்பல கூறுகளாகக் கூறுபோட்டுத் தமது வக்கிரமான அரசியலைக் காத்துவருகிறார்கள்.இனங்களுக்கிடையிலான பிரத்தியேகக் கூறுகளை(அதீத தேசியவாத முனைப்புகள், மொழிசார்ந்த,பண்பாடு சார்ந்த,மதம் சார்ந்த மதிப்பீடுகள்) முன் தள்ளி ஒருவரையொருவர் மோதவிட்டுத் தமது எஜமானர்களைக் காப்பதிலிருக்கும் கயமைத் தனத்தைப் புரிவது அவசியம்.
 
இலங்கை அரசுப் பொறிமுறையென்பதே அரசுச் செயற்பாட்டை நிறைவேற்றுவதற்கு நிறுவப்பட்ட அரசு உறுப்புகளான இந்த வடிகட்டிய பொறுக்கி அரச தலைவர்,நாடாளுமன்றம்,அரசாங்கம்,அமைச்சர்கள்,பொது ஒழுங்கை நிலைநாட்டுவதாகக் கூறப்படும் அரச சட்ட நிர்ணயம்- வன்முறை வடிவங்கள்(பொலிஸ்,இராணுவம்,(அ)நீதி மன்றங்கள்...)இப்படி அதன்கட்டுப்பாட்டிலுள்ள செய்தித்துறை,மற்றும் புலம் பெயர் அரச சார்ப்பு எடுபிடிகளென இது நீண்டுகொண்டே போகிறது.இவைகளைக் கட்டுப்படுத்தித் தமது இலக்குக்குள் வீழ்த்துவதே அந்நியக் கடன் நிதிகளது உள்ளார்ந்த இலக்கு.இதை வெற்றிகொள்ளும் கருத்தியல் யுத்தம் இப்போதைக்கு இதன் பாதகங்களை அலசுவதில் மையமுறும்.இதை மறுத்துவிட்டு இலங்கையினது புரட்சிகர அரசியல் இலக்குக் குறித்து நகர முடியாதென்பது எனது தீர்மானகரமான நம்பிக்கை.
 
ஏனெனில், அந்நிய நிதிக்கடன்கள் யாவும் தமக்குச் சார்பான குழுக்களைப் "பிரேதச நலன்,சாதிய நலன்,பெண்ணடிமை விலத்தல்-விடுதலை,ஊடகவியலாளர்களைக் காக்கும் அமைப்பு,தலித்துவ முன்னேற்றம்-உரிமை வென்றெடுத்தல்" என வகைப்படுத்தி இயங்க அனுமதித்தே இலங்கைப் புரட்சிக்கு ஆப்பு வைக்கிறது.மேற் சொன்ன முரண்பாடுகளை ஒரு புரட்சிகரக் கட்சி தனக்குள் உள்வாங்கித் தனது தலைமையில் இதை வழிநடாத்தும்போதுதாம் அந்நிய நலன்களைத் தடுத்துவிடமுடியும்.இல்லையேல் இத்தகைய அவசியமான போராட்டங்களுக்கூடாக அவை நம்மை மொட்டை அடிக்கும் சாத்தியமே நிலவும்-இப்போது அதுவே உண்மையாகவும் இருக்கிறது.இது வர்க்க உணர்வைச் சிதைத்தே மேலும் அரசியல் அமுக்கத்தைக் கொண்டியங்குகின்றன.இது புரட்சிகரச் சூழலை மிக நேர்த்தியாக மறுப்பதில் நியாயத்தை உரைக்கும்-நண்பர் சுகன் இலங்கையின் தேசிய கீதத்தை மெட்டுக்கட்டிப் படிப்பது போன்றென்றும் வைத்துக்கொள்ளுங்களேன்.
 
இறுதியாக...
 
இந்த இலங்கை அரச அமைப்பில் எந்த உழைப்பாளிக்கும் எதுவும் கிடையாது என்பதை வன்னிக்குள் மூன்று இலட்சம் மக்களை நாயிலும் கேவலமாகக் கட்டிவைத்து அடிமைப்படுத்தும் சிங்களவெறித் தனமிக்க இலங்கை அரசு நிரூபித்தே வருகிறது.இதைத்தாம்"நாங்கள் புதிய இலங்கையைக் கட்டி அமைக்கிறோம் மகிந்தா தலைமையில்"எனக் கருணாவென்ற பொறுக்கி பல முறைகள் ஓலமிடுகிறான்.இதையே டக்ளஸ் இன்னும் சதி மிக்க அரசியல் மொழியில்"தமிழ்பேசும் மக்களது உரிமைகளை பெரிய கட்சிகளோடு பகைக்காமல் அரசியல் செய்து"நம்மையும் காத்து,நமது மக்களையும் காப்பது"என்று தமிழர்கள் சார்பாக தனது இருப்பை-வர்க்கச் சார்பை மிகத் திட்டமிட்டபடி மறைக்கின்றார்.இது,அரசை நேரடியாக ஆதரிக்கும் கருணாவைவிட மிகக் கெடுதியானவொரு சூழ்ச்சிமிக்க போக்கு.நம்மைக் கருவறுக்க நமக்குள்ளேயே முரண்பாடுகளை வளர்த்து அவற்றைத் தமது அரசியல் அறுவடைக்காகக் காரியமாற்ற அந்நியர்கள்-அவர்களது கடன் நிதிகள் நமது மக்கள்சார்ந்து இயங்கும் அரசியலை அழித்துள்ளார்கள்.இதற்கு, இத்தகைய அரசியலில் பல முரண்பாடான விளக்கங்களை இத்தகைய மக்கள்விரோதிகள் சதா எமக்குள் விதைக்கிறார்கள்.
 
 
தமிழர்களுக்குக் கால்வயிற்றுக்குக் கஞ்சியே மேலென்பதுதான் இன்றைய அந்நியத் தேசங்களதும், இலங்கையில் மகிந்தா அரசினதும் பதிலாகும்!இந்த அந்நிய மயப்படுத்தப்பட்ட இலங்கை அரச அமைப்பில் தமிழர்களுக்குச் சேவை செய்வதா தமிழ் ஓடுகாலி அரசியல்வாதியன் வேலை? இவர்களை ஒட்ட வேரறுக்க வேண்டுமானால் முதலில் அந்நியக் கடன் நிதிகளையும் அவர்களது அரசியல் இலக்ககளையும் தோற்கடிக்கும் அரசியலைப் புரட்சிகரக் கட்சிகளென்பவை முன்னெடுத்தாக வேண்டும்.ஆனால்,புரட்சிகரக் கட்சிதாம் இப்போதைக்கு நம்மிடம் இல்லை.எனவே,தனிநபர்கள் தமது எல்லைக்குட்பட்ட கதையாடல்களாக இவ்வுண்மைகளைக் குறுக்கிச் செல்வதும்தாம் இன்றைய துர்ப்பாக்கியம்.இதனால் பிரபாகரனை நம்பிய தமிழர்கள் டக்ளஸ்-கருணா,பிள்ளையானையும் நம்புவது மட்டுமல்ல அவர்களால் முன் தள்ளப்படும் அரசியலையும் நம்பிக்கொள்வது வருங்காலத்தில் நடைபெறும்.இதுதாம் அந்நியக் கடன்களதும் இலக்கு.அவர்களுக்கு விரும்பிய இலங்கை இதனூடாகத் தகவமைக்கப்பட்டும் விடும்.இந்த அபாயம் அவசியமாகக் கவனத்தில் எடுக்கப்பட்டு புரட்சிகரமாகப் போராடுவது அவசியமானது.
 
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
23.07.09

Sunday, July 19, 2009

டக்ளஸ் தேவனந்தா உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்

டக்ளஸ் கூறுகிறார்:
 
 
"உரிமைக்குக் குரல் கொடுப்போம்
உறவுக்குக் கரம் கொடுப்போம்!"

-நல்ல வேளை உயிர் கொடுப்பதாகச் சொல்லவில்லை,அந்த வகையில் மக்கள் தப்பித்தார்கள்!
 
லங்கையின் இன்றைய அரசியல் போக்குகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?
 
 
மேற்க்காணும் கேள்விக்கு விடை மிக எளிதானதும்,தர்க்கமானதாகும்.எங்கள் மக்களது உரிமைகளை நிலைப்படுத்துவதற்கு-தக்கவைப்பதற்கு இந்தியாவென்ற சகுனித் தேசம் ஒருபோதும் விட்டுவைக்காது என்பதாகும்.இதற்கான பல உதாரணங்களை நாம் சுட்ட முடியும்.எனினும், உதாரணங்களைத் தள்ளி வைத்துவிட்டு நமது இனத்துக்குள்ளேயே இருக்கும் அரசியற் கைக்கூலிகளை இனம் காணும்போது, இந்திய மேலாதிக்கத்தினதும்-மேற்குலக நலத்தினதும் முரண்கள் எங்ஙனம் நமது தேசத்துக்குள் முட்டிமோதுகின்றன என்பதை மிகத் தெளிவாக உணர்ந்துகொள்ளமுடியும்.இந்தவகையில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன.தென்னாசியப் பிராந்தியத்தின் புவிசார் கேந்திர அரசியலில் கடந்த முப்பதாண்டாகக் கட்டி வளர்க்கப்பட்ட நமது குழந்தைகளின் தியாகம் சிதறிடிக்கப்பட்டு,அச்சிறார்களது தலைமையின் அந்நியச் சேவகத்தின் விளைவாக முழுச்சிறார்களும் கிட்டமுட்ட அழிக்கப்பட்டுப் புதைக்கப்பட்ட நமது மண் இன்று அந்நியகர்களது அரசியல் வேட்டைக்குட்பட்டுக் கிடக்கிறது!-இது குறித்தும் நாம் விபரமாகச் சொன்னோம்.
 
 
எங்கள் குழந்தைகளால் அன்று நிர்மூலமாகப்பட்ட இலங்கைச் சிங்களப் பாசிச இராணுவத்தின் இன்றைய வெற்றிக்குப் பின்னால் தென்னாசியப் பிராந்தியப் புவிசார் அரசியலின் உந்துதலும்,அதன்பொருளாதார நலன்களும் இருத்திருக்கிறது.இதன் தொடராக இன்றைய இலங்கையில் பேசப்படும் தமிழ்பேசும் மக்களது அரசியல் எதிர்காலமென்பது அம்மக்களது உரிமைகள் குறித்த-அவர்களது நோக்கு நிலையின்பாற்பட்டதல்ல என்பதை,தற்போது ஆளும் மகிந்த அரசினது பின்னால் நிற்கும் முன்னாள் ஆயுதக்குழுக்களது இன்னாள் ஓட்டுக் கட்சிவடிவமும்,அவர்களது சொந்த ஆதாயத்துக்கான நலன்கள் சார்ந்த கோரிக்கைகளும் தெட்டத் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன.
 
 
யாழ்-வன்னி மாநகராட்சிமன்றத் தேர்தல்களுக்கான அரசியல் நகர்வில், டக்ளஸ் தேவாநந்தாவினது வெற்றிலைச் சின்னத்துக்கான விளக்கமும்,கோகர்ணனின் மறுபக்கக் கருத்துகளும் இலங்கையினது இன்றை அரசியலைப் புரிவதற்கான இரு துருவங்களாக விரிகின்றபோது,"கலாநிதி"கீதபொன்கலனது"அரசியல் ஆய்வு"இடையினில் சட்டவாக்கத்துக்குள் முடங்கி, கடந்த ஐம்பதாண்டுகளுக்குமுன்னால் நடந்த"பேச்சுவார்த்தை-வட்டமேசை மாநாடு"எனும் பாராளுமன்ற அரசியல் சதுரங்கத்தைப் புதிப்பிப்பதில் காலத்தை திருப்ப முனைகிறது.
 
 
இதை, முழுமையாக விளங்கிக்கொள்வதற்கான அரசியல் கட்டுரையை மறுபக்கத்தில் மிக நேர்த்தியச் சொல்லும் கோகர்ணன் நமது இன்றைய அரசியலை மிகத் துல்லியமாகச் சொல்லி அதன் ஈனத்தனங்களைக் குறித்துக் குறிப்புணர்த்துகிறார்.மௌனித்துக்கிடக்கும் பலரது கபடத்தனங்களை அவர் அம்பலப்படுத்துகிறார் இங்கே.
 
 

பாராளுமன்றத்துக்குள்ளும் அரசியல் சட்டவாக்கத்துள்ளும் பிரச்சனைகளை திணிக்கும் அன்றைய கட்சி அரசியலின் தொடர்ச்சியை டக்ளஸ் ஆரம்பித்திருக்கிறர்.அவரது அரசியலின் சட்டரீதியான நீட்சியை வற்புறுத்துவதில் கீதபொன்கலனது கட்டுரை தொடர்கிறது.இவை அனைத்தும் நமது மக்களது உரிமைகளுக்கு மேலாக அவர்களுக்குள் ஒட்டுரக அரசியலை முன்னெடுக்கும் திரவிடப்பாராம்பரியத்து அரசியலை வற்புறுத்தும் கட்சிகளது நலனுக்கான கோரிக்கைகளாகவே இவை பெரும்பாலும் குறுகிவிடுகின்றன.இன்றைய புதிய பொருளாதார நகர்வுகளில் ஏலவே, தமது இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட புதிய பணக்காரர்களான கட்சித்தலைவர்கள் தமது பொருளாதார நலன்மீதான கவனத்தைக்கொண்டே ஆளும் கட்சிகளோடு மிகவும் நட்பார்ந்து அரசியல் செய்கிறார்கள்.அதை மேம்போக்காக மறுப்பதற்கான அவர்களது கோரிக்கைகள் மிகக்கெடுதியான முறையில் இலங்கையின் தமிழ்க்குடிகளை ஏமாற்றமுனைகிறது இப்போது!
 
//அரசாங்கத்துடன் பகைமை பாராட்டி ஒரு எதிர்ப்பு அரசியலை நடத்துவதற்கு நாம் தயாரில்லை.//
 
வெற்றிலைச் சின்னமான மகிந்தாவின் ஆளுங்கூட்டணிக்கட்சியின் சின்னத்தில் டக்ளஸ் கட்சி போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "மாண்மிகு" அமைச்சர் இங்ஙனம் பதிலளிக்கிறார்.அதாவது, ஒரு முதலாளித்துவ ஜனநாயக நாட்டில் பல்கட்சித் தேர்தல் முறை-எதிர்கட்சி நகர்வுகள் அரசாங்கத்தோடு பகமைபாராட்டுஞ் செயலாகக் கற்ப்பிக்கப்படும்போது,அந்தத் தேசத்தில் உண்மையில் ஜனநாயம் நிலைத்திருக்கமுடியுமா?
   
இத்தகைய நிலையில், அவரது கருத்தின்படி மாற்று அரசியல் கோரிக்கை-ஆளும் கட்சியினதும் அதன் இன்றைய அரசினதும் மக்கள்விரோத அரசியலைக் கேள்விக்குட்படுத்தி மக்களிடம் நேர்மையான அரசியலையும்,முதலாளித்துவ ஜனநாயக்துக்குட்பட்ட-அதுவுரைக்கும் செழுமைப்படுத்தபட்ட முதலாளித்துவ மனித விழுமியங்களையும் கோருவதற்கு ஆளுங்கட்சியிக்கு மாற்றான அரசியலை முன்வைப்பது எங்ஙனம் பகைமை-விரோதம் என்ற உட்பொருளைக்கொண்டியங்குகிறது?
 
இது,தமிழ்பேசும் மக்களது அரசியல் எதிர்காலங் குறித்துப் பேசும்வேளை"நாட்டின் ஒருமைபாட்டிற்குப் பங்கமற்ற அரசியல் தீர்வு"என்று குழையடிக்கும் அரசியல் சூழ்ச்சிவகைப்பட்டதாகவே விரிகிறது.இத்தகைய டக்ளஸ், தான் நடத்தும் அரசியலில் எதிர்கருத்துக்கு-பன்முகத்தெரிவுக்கு-பாதைகளுக்கு மறுப்புடைய ஆளும்கட்சி ஆதிகச் சூழலில்,இலங்கையில் நிலவிய குறை ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் மகிந்தாவுக்குப் பின்னாலுள்ள ஆளும்வர்க்கத்துப் பாசிசச் சூழலில் எங்ஙனம் ஜனநாயகம் நிலை பெறுவதாகச் சொல்கிறார்? ஏனெனில்,அவர் சொல்கிறார்:
 
 
//தம்மையும் காத்து தம் மக்களையும் காப்பவர்களே தமிழ் பேசும் மக்களுக்கான உண்மையான ஒர் அரசியல் தலைமையாக இருக்க முடியும். நாம் வீணைச் சின்னத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்திலும் எதிரும் புதிருமாக போட்டியிடுவது என்பது ஆரோக்கியமான விடயமல்ல. எதிர்காலத்தில் அரசுக்கும் எமக்கும் இடையில் பகைமை உணர்வு ஏற்படுமேயானால் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேசி தீர்ப்பதற்கான தளம் இல்லாது போவிடும். அபிவிருத்திக்கான தேர்தலாக இதைப் பார்ப்போமேயானால் அபிவிருத்தியை முன்னெடுப்பது யார் என்பதை சிந்திக்க வேண்டும். அல்லது அபிவிருத்திக்கான நிதி ஓதுக்கீடு செவது யார் என்பதை சிந்திக்க வேண்டும். அரசாங்கமே அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும்.//
 
இங்கே, அபிவிருத்தி-மக்களுக்கான அரசியல் தீர்வு என்பதெல்லாம் ஒரு அரசு என்ற செயற்பாட்டிலிருந்து ஒரு கட்சிக்குட்பட்ட நடாத்தையாகக் குறுக்கும் டக்ளஸ் உண்மையில் முதலாளித்துவ அரசியல் விஞ்ஞானத்தின் அரிச்சுவடியைக்கூடக் கடாசுபவராக இருக்கிறார்.கட்சிக்கும் அரசுக்குமான உறவில் அதன் அதிகாரவர்க்கத்தைக் கட்சிக்குள் குறுக்கிவிடுவதால் இலங்கையில் நிலவும் பாசிசத்தின் கடைக்கோடிச் சர்வதிகாரத்தைத் திட்டமிட்டு மறைத்து அதை நிலைப்படுத்துவதில் இலாபமடைய முனைகிறார்.
 
இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கட்சி அரசியலுக்குள் நட்புகளை வளர்த்து அதனோடு ஒன்றித்துப்போவதால் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதன் தொடர்ச்சி, அடுத்த தேர்தலில் எதிர்கட்சியின் ஆட்சி வருமானால் அதனுடன் கூட்டுவைத்துக் கும்மாளம் அடித்து, மக்களை ஒட்ட மொட்டையடிப்பதில் கவனமுறும் அரசியல் நடாத்தையாக விரிகிறது.உலகத்தில் நிலவும் ஓட்டுக்கட்சிகளது உண்மையான நிலைகள் இதுவே.ஆனால்,
வெவ்வேறு தேசங்களின் வெவ்வேறு முரண்கள் முன்னிலை வகிப்பதில் கோரிக்கைகள் மாறுபடுமே தவிர உள்ளடக்கம் ஒன்றே!
 
 
இதே டக்ளஸ், பல் கட்சி அரசியலுக்கே குறுக்கே நிற்கும் மகிந்தா குடும்பத்தினதும்,கட்சியினதும் ஆதிக்கம் முழுமொத்த ஜனநாயகத்தையுமே குழிந்தோண்டிப் புதைக்கும் இன்றைய இலங்கைச் சூழலில், தமிழ்பேசும் மக்களுக்கு இன்னொரு பாடத்தையும் கற்பிக்கிறார்.இதைக் கவனமாகப் பாருங்கள்.அவர்கூறுகிறார்:
 
 
//சில சமூகவிரோத சக்திகளே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செது சட்டத்தின் முன் நிறுத்துவதோடு எமது தமிழ் சமூகத்தை ஐனநாயக மயப்படுத்தப்பட்ட சமூகமாக மாற்றியமைக்க வேண்டிய தேவையே இன்று எழுந்துள்ளது. //
 
 

 
இது எப்படியிருக்கிறதென்றால், ஊர் முழுக்கத் திருடுபவன் திருட்டைத் தடுப்பதுகுறித்துப் பிரசங்கஞ் செய்வதுபோன்றல்லவா இருக்கிறது?
 
இலங்கை பூராகவும் பாதாள உலகப் பயங்கரவாதிகளை உற்பத்திபண்ணி,அவர்களது தயவில் மகிந்தா குடும்பம் தமது எதிரிகளை வேட்டையாடித் தமது கட்சியின் ஆதிக்கத்தை நிலைப்படுத்திவரும்போது,அத்தகைய பாதாளவுலகப் பேர்வளிகள் மக்களையும்,கிராமங்களையும் மொட்டையடிப்பதில் அரசே உடந்தையாக இருக்கும்போது,இதையே வடக்கிலும்,கிழக்கிலும் அரச கைக்கூலிக் கட்சிகள்-குழுக்கள் "டக்ளஸ்-கருணா-பிள்ளையான் என்றதுமான மற்றும் முன்னாள் ஆயுதக்குழுக்கள்"செய்யும் மக்கள் விரோதக் கொலை-கொள்ளைத் தார்ப்பாரில் முழுமொத்தத் தமிழினத்தையுமே குற்றமாக்கி, அதை மறைப்பதில் தமிழ்ச் சமூகத்தை "ஜனநாயக" மயப்படுத்துவது அவசியமெனச் சொல்கிறார்கள். தங்களை ஜனநாயகக் காவலர்களாகக் காட்டுவதால்,தமது அரசியலையும் தம் எஜமானர்களையும் காப்பதை மறைக்க முடியாது என்பதை இவர்களுக்கு மக்கள் விரைவாக உணர்த்துவார்கள்.
 
முழு இலங்கையையும் பாசிசத்துக்குள் வீழ்த்திய மகிந்தா அரசுக்கு இங்ஙனம் ஜனநாயகவேடம் கட்டும் டக்ளஸ், நயவஞ்சகமாகத் திரவிட அரசியலின் தாரக மந்திரத்தையும் பயன்படுத்தித் தான் சுத்த மக்கள் விரோதி என்பதைத் சொல்கிறார் .கடைந்தெடுத்த மக்கள் விரோதியின் கூற்று இங்ஙனம் வருகிறது:
 
//உரிமைக்குக் குரல் கொடுப்போம்,உறவுக்குக் கரங் கொடுப்போம்//
 
இங்கே ஓட்டுக்கட்சிச் சீரழிவானது,திரவிடப்பாரம்பரியத்தின் மக்கள்விரோதக் குரலைச் சொல்கிறது.இது, நமது மக்களது உரிமைகளையே தனது அரசியலில் குழிதோண்டிப் புதைத்துப் புதியவகை சதியை, தமிழ் மக்களை ஜனநாயக மயப்படுத்துவதுதென்ற போர்வையில் மறைத்துக்கொள்வதில் டக்ளஸ்-கருணாபோன்றவர்கள் திராவிடக்கட்சிகளையே விஞ்சி விடுகிறார்கள் என்பதன் உண்மை விளங்கப் போதுமானது!இதற்கு எதிராகப் போரிடுபவர்களை அவர்கள் தமது ஆயுதக் குழுக்களால் இதுவரை கொன்றும் வேட்டையாடுகின்றனர்.ஏனெனில்,இவர்களிடம் இன்னும் ஆயுதம் தரித்திருக்கும் அடியாட்கள் உண்டு.இந்த நிலையில் இவர்கள் தமிழ்ச் சமூகத்தை"ஜனநாயக மயப் படுத்துவது"அவசியமென்று சாத்தான் வேதம் ஓதுவதாகச் சொல்வதில், மகிந்தாவுக்கு ஜனநாயக வேடம் கட்டுகின்றனர்.இது கருணாவை வென்ற அரசியல்!
 
இவர்களது மிகக் கேவலமான அரசியலை,தினக்குரல் பத்திரிகையின் மறுபக்கத்தில் கோகர்ணன் மிக நிதானமாக இனங்காட்டுகிறார். இதை,இங்கே படியுங்கள்.இல்லை பதிவில் இணைத்திருக்கும் மின்பத்திரிகைத் துண்டை அழுத்திப்படிக்கவும்.
 
சதிகாரர்கள் வடிவமைக்கும் அரசியல், தமிழ்பேசும் மக்களை ஆயுதத்தால் மொட்டையடித்த புலிகளது கடந்தகாலத்து வரலாற்றின் புதிய வரவாக நமது மக்களைக் கட்டிப் போடுகிறது.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
19.07.09


Friday, July 17, 2009

இலங்கை சென்று திரும்பிய குழு

அந்நிய வேட்டைக்காடு இலங்கை:

அதற்கான தெரிவில்"இலங்கை சென்று திரும்பிய குழுவின் மாநாடு" ஜேர்மனியில்!
 
மது அரசியற் சூழலில் புதிய புதிய அணிதிரட்சிகளும்,சேர்க்கைகளும் தோன்றிக்கொள்ள வியூகங்கள் அமைக்கப்பட்டாச்சு.இதன் முதற்கட்டமானது புலிகளின் தலைமையை-இராணுவவலுவை அழித்தாகிவிட்டது.இங்கே, தமிழ்பேசும் மக்களைக் கூறுபோட்டுப் பிரித்தெடுப்பதில் இலங்கையின் முஸ்லீம் மக்களையும் அவர்களுள் இருக்கும் பிழைப்புவாதத் தலைமைகளையும் பயன்படுத்தும் இந்தியா, ஜே.வி.பியை அடுத்த காய்யாகப் பயன்படுத்தித் தமிழர்களுக்கு அற்ப சலுகைகளைக்கூட வழங்கமுடியாத சூழ்நிலையைச் சிங்களமக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது.இதை எந்தச் சந்தர்பத்திலும் வெற்றிகொள்ள முடியாத கருத்தியற்றளமாக உருவாக்குவதில் இந்திய மேலாண்மை கச்சிதமாக் காரியஞ் செய்ய நமது மக்களுள்(தமிழ்-சிங்கள) உறைந்துபோய்கிடக்கும் மனமுடக்கமும்(இன ஐக்கியமின்மை) அவர்களுக்கு வாய்பாக இருக்கிறது.
 
இனவாதச் சிங்கள அரசானது தனது பாரளுமன்றக் கட்சி நலனுக்காகப் போட்ட அரசியல் வியூகத்தில் செயற்கையாக வளர்த்தெடுக்கப்பட்ட இனவாதமானதுஇனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியில் பாரிய முரண்பாடாகியது. அதுவே,ஒரு கட்டத்தில் இதுவரையான யுத்த அரசியலாகவிரிந்து இலட்சம் தமிழ் மக்களை-முஸ்லீம் மக்களை-சிங்கள மக்களை வேட்டையாடியுள்ளது. இலங்கையை அந்நிய வேட்டைக்கு உட்படுத்தி அதை முழுமையாக மொட்டையடிப்பதிலும் இஃது முடிந்துள்ளது.இதை, இலங்கை ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான கடந்தகாலப் புனைவுகளால் இலங்கையினது முழு உழைக்கும் வர்க்கமும் சந்தித்தே ஆகவேண்டியுள்ளது.ஒரு புறம் இனவழிப்பு, மறுபுறும் அபிவிருத்தி என்று சிங்கள ஆளும் வர்க்கத்தோடிணைந்து அந்நியச் சக்திகள் செய்யும் மோசடியோ தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களையும் வேட்டையாடப்போகிறது.
 
இது,முழுக்கமுழுக்க உழைக்கும் மக்களையே வேட்டைக்குள் உட்படுத்தி அவர்களுக்குச் சிறைக்கூடமாக இலங்கையை மாற்றியுள்ளது.இதன் புரிதலிருந்து புலிகளின் அழிவுக்குப்பின் சிலவற்றைச் சுருக்கமாகப்பார்ப்போம்.அப்படிப்பார்க்கும்போதுமட்டுந்தாம் இந்த"இலங்கை செல்லும்-சென்று திரும்பும் குழுக்கள்"பற்றித் தெளிவான பார்வை கிடைக்கும்.
 
தமிழ் மக்களது அரசியல் அபிலாசையென்ற பொய்மை:
 
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளென்பவை அதிகாரத்துவத்தை உள்ளார்ந்து நேசித்த தமிழ் மேட்டுக்குடிகளின் கோரிக்கையென்பதை நாம் பல முறைகள் கூறியிருக்கிறோம்.இந்த அதிகாரத்துக்கான நேசிப்பிடம் மக்களின் வாழ்வியல் சார்ந்த மதிப்பீடுகள்,அவர்களது உயிராதாரமான பொருள் வாழ்வு சார்ந்த கோரிக்கைகள் சிறிதளவும் அவர்களது நோக்கு நிலையிலிருந்து முன்வைக்கப்படவில்லைஇத்தகையவர்களின் இருண்ட அரசியல் சூழ்ச்சிகளால் பலிகொள்ளப்பட்ட தமிழ்பேசும் மக்களின் பொருளாதார உயிர்வாழ்வானது சிதைந்து சின்னாபின்னமாகியபோது, நாம் அதைத் தொடர்ந்து அநுமதித்து வருவதற்கானவொரு அரசியலைப் புலிகளது தலைமையில் ஏற்படுத்திக்கொண்டது அந்நியச் சக்திகள்.அதே அந்நியச் சக்திகள் மக்களை வேட்டையாடியும்,அரசியல் அநாதைகளாக்கியும் தமிழ்ச் சமுதாயத்தின் அறிவுப்பரப்பையும்,சமூகவுணர்வையும் ஒட்டக்காயடிக்கப் புலிகளது இருப்பைப் பலமாக விரும்பிக்கொண்டது.இதன் இறுதிக்கட்டத்தில் புலிகள் பயணித்தபோது அவர்களது பாத்திரம் இல்லாதாகவேண்டிய பொருளாதார வியூகமானது கணிசமான மக்களை அழித்துப் புலியையும் வேட்டையாடியது இன்றைய புதிய கூட்டுக்களைப் புரிவதற்கான வரலாறாகும்.
 
 
ஒரு அவலமான அரசியலைக் கடந்த காலத்துத் தமிழர்களின் ஓட்டுக் கட்சி-இயக்கப் போராட்ட அரசியல் செய்து வந்ததின் தொடர்ச்சியாகப் பற்பல அழிவுகள் நமக்கு வந்து சேர்ந்தன.அவை தனித் தமிழீழப்போராட்டம் என்ற கோதாவில் இலட்சம் மக்களது உயிர்பறிப்போடும்,தமிழ்பேசும் அனைத்து மக்களினதும் சமூக சீவிச்சிதைவோடும் ஒரு முடிவுக்குவந்து, புதிய குழிப்பறிப்புகள் தமிழர் சமுதாயத்தின் குருதி குடிக்கும் முன்னாள் ஆயுதக்குழுக்களது தலைமையில் மீளவும் தொடர்கதையாகிறது. நமது மக்களில் மிக மிகக் கரிசனையான தலைவர்களாகவும்,அமைப்புகளின் செயற்பாட்டாளர்களாகவும் ஒளிவட்டம் கட்டிக்கொண்டு உலாவருகின்றனர்.இந்தத் தளபதிகளையும்,தலைவர்களையும் தத்தெடுத்துக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம் தனது பிராந்திய நலனை புலிகள் அழிப்பில் இலங்கைக்குள் உறுதிப்படுத்திய நிலையில்,இப்போது புதிய ஓடுகாலிகளை உருவாக்கித் தனது அபிலாசைக்குகந்த தமிழ்க்கட்சிகளை இலங்கையில் ஏற்படுத்தி,அதன் வாயிலாகத் தமிழர்களது உரிமைகளுக்கு அற்ப சலுகைளால் வேட்டுவைக்கும் காரியத்தில் இறங்கியுள்ளது.இத்தகைய மக்கள்-சமூகவிரோதிகள் "இலங்கை சென்று திரும்பிய குழுவின் மாநாடு" ஜேர்மனியில் செய்து பார்க்க வெளிக் கிளம்பியுள்ளனர்.இவர்கள் தமது எஜமானர்களுக்கான அரசியலில் இலங்கைமட்டுமல்ல அனைத்து உலகத்துக்குஞ் சென்று திரும்ப முடியும்.
 
இவர்களைப் புரிவதற்கு முதலில் மாறிவரும் இலங்கையின் பொருளாதார ஊக்கங் குறித்துப் புரிந்தாகவேண்டும்-மகிந்தா குடும்பத்து பொருளாதார வலைப்பின்னல்கள்,பிராந்திய நலன்கள் குறித்துப் புரிந்துகொண்டாற்றாம் இந்தத் தமிழ்மக்களது துரோகத் தலைமைகளைக் குறித்துச் சாதரண மக்கள் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
 
 
இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் அந்நிய மூலதனத்தின் வரவுகளோடு தம் மக்களின் அதீத உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பொருளாதார நகர்வாகவே இன்று மாற்றப்பட்டிருக்கிறது.இலங்கையின் முழுமொத்தச் சமூக உற்பத்தியும் அந்நியர்களின் தயவில்(கடனுதவி மற்றும் அந்நியத் தனியார் நிதிமூலதனம்.குறிப்பாக, மைக்ரோ சொவ்ற் 450 மில்லியன் டொலர்கள் கடன் வழங்குவதுவரை நடந்தேறுகிறது.) உயிர்வாழும் தகமையுடைதாகவே யுத்தத்தின் பின்னான அரசியலில் இருத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
நமது நாட்டில் நடைபெறும் எந்தப் போராட்ட விய+கங்களும் வெளிநாட்டுச் சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு யுத்தமாக விரிவடைவதை நாம் எல்லோரும் ஓரளவேனும் நம்பித்தாம் ஆகணும்.இந்தவுண்மை மிகவும் நேர்மையான அரசியல் அறிவினூடாகவே புரிந்துகொள்ளத் தக்கதாகும்.இங்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி(இயக்க வாத-தமிழ்த் தேசியவாத மாயைகள் மற்றும் முஸ்லீம் தேசிய வாத- தலித்துவ வாதங்கள்) வர்க்கச் சமுதாயத்தின் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவே இலங்கையின் இன்றைய இனப் பிரச்சனையுள் அந்நிய சக்திகளின் மிகவும் கீழ்த்தரமான யுத்த மேலாதிக்கத்தைப் புரிய முடியும்.
 
"இலங்கை சென்று திரும்பிய குழு":
 
நாம் வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லுகிறது.இத்தகைய அரசியல் காயடிப்பைச் செய்த புலிகளின் அழிவில் தமிழர்களைச் சொல்லி-வன்னிய அவலத்தைச் சொல்லி இலங்கைப்பாசிச அரசினது நிகழ்கால இனவழிப்பு அரசியலை "அபிவிருத்தி-உதவி-புனரமைப்பு"எனப் பற்பல பெயரிட்டு நிறைவேற்றப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் முன்னாள் இயக்க அழிவுவாதிகள் இலங்கைக்கு-மகிந்தா குடும்பத்துக்கு ஆதரவு வழங்கித் தமது அரசியல்-பொருளாதார-உத்தியோக ஆதயங்களைப் பெற முனைகின்றனர்.இவர்கள் இப்போது உலகு தழுவி அகதியாக விரிந்துள்ள தமிழ்த் தரித்திரவாழ்வை இன்னுஞ் சிதைத்துத் தமது எஜமானர்களுக்கேற்ற அரசியலை நியாயப்படுத்த அமைப்புகள் உருவாக்குகிறார்கள்.இதன் அடிப்படையில் இன்னொரு நிதிதிரட்டல் மற்றும் சிந்தனை மழுங்கடித்தல் இலங்கை-இந்திய நலன்களுக்கிசைவாக நடந்தேறும் அபாயம் நம்மை நோக்கிப் படையெடுக்கிறது.இதற்குத் தோதான முறைகளில் முன்னாள் சகல ஆயுதக் குழுக்களது உறுப்பினர்களும் மிக வேகமாக இணைகிறார்கள்.அவர்களுள் நன்கு அறியப்பட்ட புளட் ஜெகநாதன்-சிவராசா மற்றும் இலக்கியச் சந்திப்புக்கூட்டம் ஜேர்மனியில் துடிப்பாகத் தமது துரோகத்தை எமது மக்களை நோக்கி நகர்த்துகிறார்கள்.இவர்களே ஐரோப்பா தழுவித் தமது கூட்டை இலங்கை அரசின் உதவியோடு மிக நேர்த்தியாக் கட்டுவதற்கு கூட்டங்கள் ஏற்பாடு செய்கின்றனர்.
 
இலங்கை சென்று திரும்பிய குழுவின் மாநாடு ஜேர்மனியில். என இந்தத் தமிழ் மக்கள் விரோதக்கூட்டு இலங்கையினதும்,இந்தியாவினதும் நேரடியான மேற்பார்வையில் இன்னொரு புலித்தனமான சதியில் ஈடுபடுகிறது.இதற்குள் உலகு தழுவிய அரசுகளது உளவு முகவுர்கள் நமது மக்களது முகங்களோடு உறுவுகளை வலுப்புடுத்தியுள்ளனர்.இலங்கையையும் அந்த மக்களது வாழ்வையும் சூறையாடுபவர்கள் தத்தமக்கான முகவர்களைத் தமது நிதியுதவியோடு நமக்குள் தேடிப் பிடித்துள்ளார்கள்.இவர்கள் தமிழர்கள் வடிவிலுள்ள அந்நியச் சேவகர்கள் என்பதை வரலாற்றில் புலிகளது கடந்தகாலத்து நிகழ்காலத்து அரசியலில் இருந்து புரிவது சுலபம்.வன்னி மக்களைச் சொல்லியே இவர்கள் இப்போது நமக்குள்-புலம்பெயர் தமிழர்களுக்குள் தமது நரித்தனமான அரசியலைச் செய்வதற்கு நாயாய் அலைகிறார்கள்.இவர்களது அரசியலுக்குப் பின்னால் இலங்கையை வேட்டையாடும் அந்நியச் சதி இருக்கிறது இதைப் புரிவதற்கு இன்றைய இலங்கையினது பிராந்தியப் பாத்திரம் புரியப்பட வேண்டும்.
 
இலங்கையும் பிராந்தியக் கேந்திர வியூகமும்:
 
இலங்கைத் தீவில் எண்ணை வளமோ அன்றிக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குக் கனிப் பொருள் வளமோ கிடையாது.எனினும், இலங்கையின்மீது அமெரிக்காவுக்கும்,சீனாவுக்கும் நீண்ட நாள் கனவொன்றிருக்கிறது.இது,இலங்கை, இந்தியாவினது செல்வாக்கு மண்டலம் எனும் அந்தப் பிராந்திய உரித்தையும்தாண்டிய கனவு.இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் நிறைந்த துறைமுகங்களும் இலங்கையின் புவிகோள இருப்புமேயாகும் இந்தக் கனவுக்கான காரணி.
 
இந்தக் கனவில் அமெரிக்காவுக்கான நலனை முதன்மைப்படுத்தும் அந்தக் காரியம்(அமெரிக்க ஆதிக்கம் வலுத்த இலங்கையும் அதன் துறைமுகங்கள் அமெரிக்கக் கடற்படைத் தளங்களாவதும்) நிகழ்ந்துவிட்டால் அமெரிக்காவினதும் மற்றும் மேற்கு ஐரோப்பாவினதும் வணிகத்துக்கு இன்னும் வலுக்கூடிவிடும்.இந்த வலு இலங்கையின் இராணுவ முக்கியத்துவம் பெற்ற துறைமுகங்கள்மீதான ஆதிகத்தைச் சார்ந்தே இருக்கிறது.இது,அவ்கானிஸ்தானில் ஆட்டங்காணும் அமெரிக்க-ஐரோப்பிய இராணுவத் தோல்விக்கு முண்டுகொடுத்து இப் பிரதேசங்களைக் குறைந்தபட்சமாவது வளர்ந்துவரும் ஈரான்-சீனா பொருளாதார கூட்டு ஒத்துழைப்பைக் குலைப்பதற்கான தெரிவில் அமெரிக்க-ஐரோப்பிய சதி எமக்குள் ஒரு கைக்கூலிகளைத் தேடிக்கொண்டுள்ளது.இதில் இன்னொரு பிரிவு இந்தியாவினது நலனோடு இலங்கையில் மகிந்தவினதும்,அவர் குடும்பத்தின் பின்னால் நிற்கும் சீனாவையும் காப்பதற்கான அரசியலை இந்த அமெரிக்க-ஐரோப்பிய முகவர்களோடு முட்டிமோதி முன்னெடுக்க முனைகிறார்கள்.முன்னாள் ஆயுதக்குழுக்கள் இந்திய-சீன மற்றும் மகிந்தா குடும்பத்துக்குக்கூஜாத் தூக்க மறுபுறும் புலிகளது பினாமிகளும்,புலிகளால் மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியைத் தமது கட்டுப்பாட்டில்கொணர்ந்துள்ள முன்னாள் புலிவிசுவாச மேட்டுக்குடித் தமிழர்களும் மேற்குலக-அமெரிக்கக் கூஜாத் தூக்கிகளுமாக மாறியுள்ளனர்.இவர்களால் நடாத்தப்படும் கூட்டங்கள்-சந்திப்புகள் யாவும் அந்தப் பெரும் வன்னி அழிவில் வதைப்பட்ட மக்களது பெயரினாலேயே நடாத்தப்படுகின்றன.இதன் சாதகமானது அப்பாவி மக்களுக்கு அவசரமாகத் தேவைப்பொடும் வரிழ்வாதாரத் தேவைகளோடு புலம் பெயர் மக்கள் மனங்கள் இசைவான ஒப்புதல் வழங்கும் மனிதாபிமானத்தை அரசியலாக்கும் வலு இதற்குள் நிலவுவதைக் குறிவைத்திருப்பதானாலேயே இலகுவாக நடந்தேறுகிறது.
 
இன்றைய உலக-பிராந்திய பல்தேசக் கம்பனிகளது வியாபாரப் போட்டியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்து துறைமுகங்களே நாளையச் சந்தையைத் தீர்மானிக்கும் வலுவுடையவை.உற்பத்தியானது இப்போது மேற்குலகை விட்டு வெளியேறி மூன்றாம் மண்டல நாடுகளின் கனிவளத்தையும்- குறைய+தியத்தையும் நீண்ட வேலை நேரத்தையும் குறி வைத்து இலங்கைபோன்ற நாடுகளுக்கு மாறி விட்டன.இத்தகைய நாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை கடற்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும்போது மட்டுமே சந்தையில் ஆதிக்கம் பெறும்"மார்க்" வெற்றியோடு இலாபத்தைக் குவிக்கும்.இங்கே இந்த அரசியல் மிகவும் அவசியமான தேவையாகப் பல் தேசியக் கம்பனிகளுக்கு இருக்கிறது.இதற்கான காரணம் வளர்ந்துவரும் சீனாவினது பாரிய உற்பத்தி ஊக்கத்திலிருந்து பரவலாக அறியப்பட்ட அவர்களது அதிவேகத் தயாரிப்புகளால் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.சீனா அம்பாந்தோட்டையில் தனது ஆதிகத்தை நிறுவியுள்ளது.அதன் துறைமுகக் கட்டுமானமானது அம்பாந்தோட்டையில் நடந்தேறுவதாகச் செய்திகள் வருகின்றன.இதிலிருந்து இந்த முக்கியத்தை நாம் புரிய முடியும்.
 
புரட்சிக்கான உணர்வைக் காயடித்தல்:
 
அந்நிய மூலதனத்துக்கு எதிரானதும் இலங்கையின் அந்நிய எடுபிடி ஆளும் வர்கத்துக்கு எதிரானதுமான இன்றைய இலங்கையின் உழைப்புப் பிரிவினையானது அந்த நாட்டில் தொழிலாள வர்க்க ஒருங்கிணைவுக்கும் அது சார்ந்த எழிச்சிக்குமான சூழலைக் கொண்டிருப்பதாலும் இந்தச் சூழலை உடைப்பதும் அந்நிய அமெரிக்க-ஐரோப்பிய ஆர்வமாகவும் இருக்கிறது.இதில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது.இந்தத் தெரிவில்,இடதுசாரிய முகாங்கள் மற்றும் வர்க்கக்கண்ணோட்டமிக்க அரசியல் நகர்வை உடைப்பதிலும் அதை இல்லாதாக்கவும் இந்தக் கூட்டுக்குள் முன்னாள் ஆயுதக்குழுக்களது உறுப்பினர்கள் வந்து சேர்வது மிகச் சாதகமான அம்சங்களைக்கொண்டிருக்கிறது.இது கருத்தியல்மட்டத்தில் புரட்சிகரமான கருத்துக்களை முன்தள்ளவும் அதே தருணத்தில் புரட்சிகர நடவடிக்கைக்கான புறநிலைகளை அழிக்கவும் இவர்களை வைத்துக் காரியமாற்றப்படுகிறது.இந்த அரசியல் இன்று புலிகளது தோல்வியில் புரட்சியை நலமடித்த புலிகளது வேலையினது வெற்றிடத்தை நிரப்பும் அதி அவசரத்தேவையாகவே நகர்த்தப்படுவதென்பதை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.இதுபெரும் பொறியை புரட்கரச் சக்திகளுக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
 
 
இந்தியாவுக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்குமான இலங்கை மீதான அரசியல் இலாபங்கள்-எதிர்பார்ப்புகள் முற்றிலும் முரண்பாடானது.இதில் இத்தகைய நாடுகள் முரண்படும்போது முன்னாள் புலிகள் பினாமிகளது அல்லது இலங்கை-இந்திய அரசுகளினது எடுபிடிகளது வலுக்கள் கூடும் குறையும்.இதை நாம் பற்பல வடிவங்களில் கடந்த காலத்துள் எதிர் கொண்டோம்.இந்தியா இலங்கையைத் தனது வழிக்குள் கொண்டுவருவதற்காக விடுதலை இயக்கங்களைத் தனக்காகப் பயன்படுத்தியதும் பின்பு இலங்கையோடு ஏற்பட்ட உடன்பாடுகள்-தேன் நிலவோடு இயக்கங்களை நிராயுதபாணிகள் ஆக்கியதும் வரலாறு.
 
இதுபோலவே இன்று, "புலிகளை மேற்குலகமும் அமெரிக்காவும் நிதி கொடுத்துத் தமக்கு வாலாட்ட வைத்தபோது" புலிகளைப் பூண்டோடு ஆசிய மூலதனம் அழித்து விட்டதும் இந்த முரண்பாடுகளது உச்சம்தாம்.இஃது, இலங்கையினது பிராந்திய முக்கியத்துவம்குறித்த அரசியலிலிருந்து எழுந்த அரசியல் என்பது உண்மையானது.அவ்வண்ணமே, புலிகளை வைத்துப் புரட்சிகரச் சக்திகளைக் கண்காணித்து அழித்தும் வந்தது.
 
"வளர்ப்பதும் பின்பு முதுகை உடைப்பதும்" முற்றிலும் அழிந்து போகாதிருக்க அப்பப்ப குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட யுத்த வெற்றிகளுக்குள் மிதக்க வைப்பதும் கூடவே இலங்கையில் இராணுவச் சமமின்மையை ஏற்படுத்துவதும், அதையே சாக்காக வைத்துத் தனது ஒத்துழைப்போடு இந்தியாவைக் கை கழுவ வைப்பதுமாக இந்த ஆர்வங்கள் புலிகளை வைத்துக் கடந்த காலத்தில் நடந்தேறிய வாரலாறு.இது, ஆயுதப்போராட்டத்தில் இங்ஙனம் நடந்தேற இப்போது புலிகளது இராணுவத்தைத் தோற்கடித்த ஆசிய மூலதனத்தைப் பழிவாங்க அமெரிக்க-மேற்குலகம் புலிப்பினாமிகளை வைத்துக் காரியமாற்ற முன்னாள் புலிச் சித்தாந்தவாதிகளையும், புலிகளுக்குப் பின்னாலிருந்த தமிழ் மேட்டுக்குடிகளையும் தமக்குச் சார்பாகக் காரியமாற்ற "வைக்கற் போர் நாடுகடந்த அரசாங்கம்" வைத்துச் சிலம்பாட்டாஞ் செய்வதில் பற்பல குழிப்பறிப்புகள் நமக்குள் நடந்தேறுவது வரலாறாகப் போகிறது.கண்டம்விட்டுக் கண்டம் பாயும் மூலதனமானது மத்திய ஆசியாவின் எரிவாயு-மற்றும் மசகு எண்ணையோடும் மற்றும் கனி வளங்களோடும் சம்பந்தப்பட்ட இராணுவக் கேந்திர வலயமொன்றை இலங்கையைச் சுற்றி பின்னிவைத்திருக்க விரும்புகிறது.இது வளர்ந்துவரும் இந்திய மற்றும் சீனப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தித் தமது உற்பத்திக்கு எதிரான போட்டியிலிருந்து தோற்கடிக்கப்பட வேண்டிய அரசியலோடு பின்னப்பட்ட விய+கமாகும்.இங்கே,தத்தமது இலாபங்களுக்காகத் தமிழ் மேட்டுக்குடிகள் இந்தத் தரப்புகளை அண்டித் தமிழ்பேசும் மக்களுக்குக் காயடிப்பு அரசியலை செய்து அவர்களைப் புரட்சிகரமாகச் சிந்திப்பதிலிருந்து தடுத்து வருவதற்கு முனைகிறது.இது,தமிழ்மேட்டுக்குடிகளது மூலதனத்துக்கு அவசியமான பணியாகவும் இருப்பதால் இனம் இனத்தோடு(வர்க்க நலனைக் குறிக்கிறேன்) nசுர்ந்து முழு இலங்கை உழைப்பவர்களுக்கும் வேட்டு வைக்கிறது.
 
முன்னாள்ஆயுதக் குழு மக்கள் விரோதிகள்:
 
இந்திய ஆமியோடு சேர்ந்து மண்டையன் குழுவைத் தொடக்கி அப்பாபிவிகளின் கழுத்தையறுத்துச் சாக்கு மூட்டையில் திணித்த துரோகக் கும்பலெல்லாம், மக்கள் இயக்கங்களாக இப்போது தலைகாட்டுகின்றனர்.நமது மக்களையின்னும் உயிருள்ள ஜீவிகளாகக் கணிக்காத இவர்கள் நம் மக்களை இளிச்ச வாயர்களாகவெண்ணிக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இன்றைய காலம் தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.புலிகளை அந்நியர்களோடிணைந்து பூண்டோடு அழித்த கையோடு,நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்.
 
சரியான திசைவழியின்றிப் போரிட்ட அமைப்புகள் தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றத் தலைப்பட்டுள்ளார்கள்.இதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட வேஷம் புலிகளால் யுத்தத்தில் (வன்னி மக்கள் அழிக்கப்பட்டற்கு மகிந்தாவும்-அந்நியச்சக்திகளுக்கும் பங்குள்ளது என்பதை மறைத்தபடி)அழிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு உதவுவது-அபிவிருத்துக்கு உதவுவது-கல்விக்கு உதவுவது.இவையெல்லாம் ஒரு அரசு தமனது மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமை.எனினும், இன்றைய அந்நிய வேட்டையில் இதைத் தனிபட்ட அமைப்புகளுக்கூடாகச் செய்வதுபோன்று இலங்கை-இந்திய அரசுகள் தமது அடுத்தகட்ட அரசியல் போராட்டத்தை மிக நேர்த்தியாக முன்னெடுக்கின்றனர்.
 
இஃது போராட்டத்தால் நாசமாக்கப்பட்டு மிகக் கனலாகக் கொந்தளித்துள்ள மக்களை உணர்வு ரீதியாக மொட்டையடிக்கும் செயலாகவே விரிகிறது.மக்களைத் தமது இன்னல்களிலிருந்து காத்த அமைப்புகளெனும் போர்வையில், மக்களுக்குள் சதி அரசியலை விரிக்கும் இன்றைய இலங்கை அரசியலில் இன்னும் எத்தனை துரோகிகள் மக்களை வேட்டையாடுவார்களோ அவ்வளவுக்கும் நேர்மையான அரசியலைக்குறித்து வாய்திறக்காத கற்றறிந்த கயவர்களைச் சார்ந்ததே.இதை உடைத்து மக்களது நலனுக்கான நேர்மையான அரசியலைக் கோருவது எமது கடமையாகும்.
 
மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கவைத்தபடி அவர்களது வாழ்வாதாரங்களை அவர்களைவைத்தே போராடிப் பெறும் அரசியலானது முதலில் அந்நியச் சக்திகளின் சதியை முறியடித்தே எழும்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
17.07.2009

Thursday, July 16, 2009

கார்ல் போப்பரும் (Karl Raimund Popper) ,மனிதாபிமானமும்.

//அண்ணர்,உங்கள் ஜன்நாயக உரையாடல் வாழும் இன்னொருவரை
சாகடிப்பது தான் என்றால் தாராளமாக செய்யுங்கள். உதைத்தானே காலம்காலமாகச்
செய்கின்றீர்கள். //
-உரையாடலுக்கான வெளியில் எவனோவொருவன்.

அன்புத் தம்பி,உனது மடல் கண்டு மனமுடைந்ததில் இது மடலாகவே எழுதப்படுகிறது.உமது நியாயமான மனதைப் புரிந்துகொண்ட நான்,சிலவற்றைச் சொல்வதற்கு அவசியம் இருக்கிறது.இந்த அவசியம் உம்மைப்போன்ற சிந்தனை ஆற்றலுடைய எமது குழந்தைகளுக்கு முக்கியமானது.

நாம் இதுவரை மக்களுக்கு விரோதமான அதிகாரத்தின்மீதே கேள்வி எழுப்புகிறோம்.இந்த அதிகாரத்துக்கு நிகரான இன்னொரு அதிகாரம் பாட்டாளியவர்க்கச் சர்வதிகாரம் என்பதை நீ குறித்துச் சொல்வாய் எனவும் என்னால் உணரமுடியும்.இன்றைய முதலாளித்துவச் சர்வதிகாரமானது நமது மக்களைக் கணிசமாக வேட்டையாடிவிட்டு,இப்போது அந்த அதிகாரம் மகிந்தாவுக்குப் பின்னால் ஒளிந்தபடி பல்வேறு வடிவடிமெடுத்து நமது மக்களைப் பூண்டோடு அழிக்க முனைக்கிறது-அல்லது பெரும்பான்மைச் சிங்களச் சமுதாயத்தோடு கரைந்து சிங்களச் சமுதாயமாக மாற்ற முனைகிறது.இது,நாளடைவில் நடைபெற்றுவிடும்.இத்தகைய திட்டம் வளர்ச்சியுற்ற முதலாளிய நாடுகளில் நடைபெற்றுவிட்டது.நான் வாழும் ஜேர்மனி இதற்கு முன்னுதாரணம்.இந்நிலையில்,நமது போதாமை-இயலாமை நம்மைக் கொன்று வருவதென்ற உனது வாதம் சரியானதே.எனினும்,உழைப்புக்கு எந்த இனமும்-மொழியும்-மதமும் இல்லை-மனித ஆற்றலென்ற ஒன்றைத் தவிர.

என்றபோதும்,எமது அரசியல்-கருத்தியல் போராட்டம் எப்போதும் இன்னொரு மனிதரைக் கொல்வதற்கானதல்ல என்பதை உனக்குச் சொல்வேன்."எதிரியையும் அவன் வாழ்ந்த மண்ணில் வாழவிடு" என்பது எமது-எனது தெரிவு.அவன், தான் செய்த மக்கள் விரோத அரசியலுக்காக மனம் நொந்து திருந்துவது அவசியமானது.இதுவும் வர்க்க உணர்வினது அடிப்படையில் சாத்தியமின்றிப்போகலாம்.உடமை வர்க்கம் தனது அதிகாரத்தின்வழியே சிந்திக்க முனையும் சிக்கலில் தமது இருத்தலைக் குறிழவைத்துச் சிந்திப்பது.இதனிடம் எந்தத் திருத்தமும் நடைபெறுவதற்கான சூழலை அவர்களது வாழ்நிலை வழங்காது.சமூக வாழ்நிலையே மனித உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.இதன் அடிப்படையை நீ இன்னும் விபரமாக அறிவாய்.இது, குறித்துப் பெரும்பாலும் பேசப்பட்ட நிலைமைகளைக் கடந்த நூற்றாண்டை நோக்கிய உனது புரிதலில் நீ அனுபவப்பட்டிருப்பாய்.
இன்று,இந்தச் சிக்கல் வர்க்க உணர்வு என்ற தளத்தில் மனிதர்கள் எவரும் ஒரே மொழியைப் பேசினும் ஒன்று இல்லை என்பதாக விரிகிறது.ஆனால், பௌதிக இருத்தலுக்கும் அதன் அடிப்படையான உறுவுக்கும் குறுக்கே இந்தப் புரிதல் வருவதற்கு மனித வாழ் நிலைக்குள் வந்து சேர்ந்த தனியுடமையே காரணமாகிவிடுவது உனகுத் தெரியும்.

உற்பத்திச் சக்திகளது தனியுடையானது மனிதர்களைக்கூறுபோட்டு வர்க்ககங்களாக்கி வைத்திருக்கும்போது,உன்னைப் போன்று பொது மனிதாபிமானம் பேச முடியவில்லை எனக்கு!

நீ ஒரு முறை-கார்ல் போர்ப்பரது நிலையில்-அவுஸ்திரியப் பொலிஸ்காரர்கள் 8 பேரது மரணத்துக்காக(கம்யூனிச கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டவர்கள்-wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker.) அவர் கம்யூனிசத் தத்துவத்தையும், கட்சியையும் விட்டோடியதைக் குறித்து-நான் பொலிஸ்"நாய்கள்"மரணமெனச் சொன்னதற்காய்-ஆத்திரப்பட்டாய்.இங்கே, பொது மனிதாபிமானங் குறித்துப் பேசினாய்.அனால்,இது பெரும்பாலும் தவறென்பது எனது வாதமாக இருந்தது.இதுதாம் உண்மையுமாக இன்றுவரை இயங்குகிறது.ஏனெனில்,நாம் வர்க்க சமுதாயத்தில் வர்க்க அதிகாரங்களுக்குள் வாழ்கிறோம்.இங்கே,மனிதர்களது தேவைகள் உடமை சார்ந்தும் அதிகாரங்களைக் கடைப் பிடிக்கிறது.இது, பொதுவான மனிதர்களுக்கானவொரு அதிகாரத்தை மானுட நோக்குக்காகக் கடைப்பிடிப்பதில்லையென்பது உண்மையானது.இது பொருட்காப்பு-அதிகரிப்பு,சந்தையாக்கல்-மறுவுற்பத்தி எனத் தனது அதிகாரத்தைக் கட்டியுள்ளது.

இவை, நிலவுகின்ற இந்தப் பொருளுற்பத்தித் தனியுடமையென்ற அடிமட்டத்தைக் காப்பதற்காக மேல்மட்டமாக அனைத்தையும்(மனித வாழ்கை-மற்றும் அது சார்ந்து இயக்கம்)அது நிறைவேற்றுவதால் ஒடுக்குபவர்களும்,ஒடுக்கப்படுபவர்களுமாக நாம் எதிரெதிர்ப் பக்க்கம்-பக்கம் நிற்கிறோம்.இங்கேதாம் நமது வர்க்கச் சார்பு வந்து மனிதர்கள் என்ற அடிப்படையில்-பௌதிக ஒற்றுமை பல இருந்தும்-எதிரிகளாக நின்று ஒருவரையொருவர் கொல்கிறோம்.எதிரிகளாக நின்று உடமையாளர்களாகவும்,பாட்டாளிகளாகவும் மாறுபட்ட நலன்கள் சார்ந்து அரசியல் பேசுகிறோம்.ஒருவரையொருவர் கொல்வதற்கான அடிப்படையை அரசியலாக்கிப் போராடுகிறோம்.இந்தச் சிக்கலில் எமையெல்லாம் கொணர்ந்த இந்த உலகத்தின் உழைப்பானது இன்னொருவரிடம் உபரியாகக் குவிந்ததன் விளைவே நீ பார்ப்பது போன்று மனிதாபிமானத்தைப் பொதுவான மனித இருத்தலுக்கு இணைக்க முடியவில்லை.

எனினும்,நீ சுட்டிக்காட்டிய"உங்கள் ஜனநாயக உரையாடல்...இன்னொருவரை சாகடிப்பதுதான் என்றால் தாரளமாகச் செய்யுங்கள்,இதைத்தானே காலாககாமாகச் செய்கின்றீர்கள்"என்ற தீர்ப்பு என்னைச் சுட்டெரிக்கிறது.இதுவரை நான் கடந்தகாலத்து எனது அமைப்புப்பணியிலிருந்தும் எந்தவொரு மனிதரையும் வேட்டையாடியது இல்லை.அரசியல்-கருத்தியில் யுத்தத்தையே கிராமம் கிரமமாகச் செய்தவன்.ஆயுதம் என்பது மக்களுக்குள் பணியாற்றும்போது எமக்கு எப்பவுமே அவசியமில்லாதிருந்தது.நான் சார்ந்த அன்றைய எனது அமைப்பின் தாரக மந்திரமே"மக்களே எமது ஆயுதும்,அவர்களுக்குள் பணியாற்றும்போது அவர்களே தமது எதிரியை இனங்காண்பர்-அதிகாரத்தை உடைப்பதற்கு அவர்களே ஆயுதம் தரிப்பர்"என்பது எங்கள் செயற்றிறனோடு இணைந்தது.இது,பெரும்பாலும் பின்னாளில் தாறுமாறாகி,மண்டையன் குழுவாகவும் உருப்பெற்றது.இங்கே மனிதாபிமானத்தை எது சிதைத்தது?

உனக்குப் பெரிதாக இவற்றை விளக்கப்படுத்துவது அவசியமில்லை!

நீ பல்துறைசார்ந்து வாசிப்புடையவன்.

உனது தெரிவில் நீ காணும் மனிதாபிமானம் இன்றைய உனது தெரிவில் சரியாக இருக்கலாம்.ஆனால்,வர்க்கங்களாகப் பிளவுண்ட மனிதக் கூட்டில் அவர்களது அரசியல் வர்க்க நலனோடு பிணைந்தது.அது, பொதுவான எல்லா மனிதருக்கும் மனிதாபிமானத்தைக் கொண்டியங்குவதில்லை.இன்றைய எமது மக்களது அழிவைப் பாத்திருப்பாய்!பல்லாயிரம் மக்களைக் குண்டுகள் போட்டுக்கொன்ற சிங்கள அரசை,வாழ்த்தி வெடி கொளுத்தி வரவேற்கும் சிங்களச் சமுதாயமானது தம்மைப்போல் வாழ்ந்து, தம்மால் கொல்லப்பட்ட தமிழர்களது அழிவிலிருந்துதாம் மகிழ்வைத் தேர்ந்துகொண்டது.
 
ஆசையே அனைத்துக்கும் காரணமென்ற புத்தனைக் கடவுளாகக் கொண்ட சமுதாயத்தை இங்ஙனம் செயற்பட வைத்தது எது?
 
பொருள் சார் நலனும்-உடமைக்கான(நிலம்-நீர்-வளம்)அதிகாரமும்தானே அவர்களது உணர்வை-சிந்தனையேத் தகவமைத்தது!?
 
இங்கே,அன்பு,கருணை,மாண்பு,எல்லாம் வெறும் கட்டுக்களாய்-புனைவாய் உதிர்ந்துபோயின.இதற்கு மாறாக வர்க்கத்தின் வாழ்நிலையே அவர்களது உணர்வுகளைத் தீர்மானித்தன.இவ்வண்ணமே புத்தரினது"ஆசையைத் துற-ஆசையே அனைத்துக்கும் காரணமென்பது"அநாதையாகக் கிடக்கிறது.இது,இந்த வர்க்க மனிதவுறக்குள் எந்தப் பொழுதிலும் செயற்கரிய பொருளைத் தருவதற்கில்லை.
 
"மாறும் பொருளின்றி,மாற்றமே நிரந்தரம்"என்றுஞ் சொன்னான் புத்தன்.
ஆனால், சொன்னவனையே மாறாத கடவுளாக்கியது இந்த உடமை வர்க்கம்.
 
எனவே,நாம் வர்க்கஞ் சார்ந்துதாம் பேச முடியும்-எழுதமுடியும்.
 
முடிந்தவரை உடமை வர்க்கத்தின் பொய்யுரைப்பில் தம்மைத் தொலைக்கும் அப்பாவி மக்களை,அவர்களது குழந்தைகளைக் காப்பதில் எமது அரசியல் கவனங்கொள்ளும்.மற்றும்படி, அப்பாவிகளை-இழப்பதற்கு எதுவுமே இல்லாதவர்களைத் தமது தேவைக்கு-உடமைகளை-அதிகாரத்தைக் கையப்படுத்த அணிதிரட்டுபவர்கள்மீது நாம் மனிதாபிமானத்தோடு அரசியல் பேச முடியாது!

என்றபோதும்,எமது செயற்பாடு ஒருபோதும் "...இன்னொருவரைச் சாகடிப்பதற்கானதல்ல"மாறாக, அவர்களையும் வாழ வைப்பதற்கானது.
 
இந்தப் போராட்டத்தில் நாமே களப்பலியாகவும் போகலாம்.இஃது, பொதுவான மனித நேயத்தைக் கடைப்பிடிக்காது உடமை வர்க்கத்து அதிகாரத்தால் நிகழும்.ஆனால்,நமது மரணங்கள்கூட அடுத்த சந்ததி வர்க்கபேதமின்றி வாழ்வதற்கான ஊக்கத்தைக் கொடுப்பதிலும்,உந்துதலைக்கொடுப்பதிலும் மையமுறும் அரசியல் அரும்பி, அடுத்த பல நூற்றாண்டின்பின்னே சிறப்புறும் ஒரு சமுதாயத்தைப்படைக்கும்.அப்போது, பூமியில் மனிதம் வாழ்வதற்கான அறிகுறியை இந்த அணுவிஞ்ஞானம் விட்டுவைத்தால்...
 
ப.வி.ஸ்ரீரங்கன்
16.07.2009

Wednesday, July 15, 2009

எது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்?

சொன்னது: புதுவையா இல்லைப் புலிகளது வேறு கவிஞரா?
 
//யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு அரச
கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டுப் புனர்வாழ்வு முகாம்களில் தங்க
வைக்கப்பட்டுள்ள மக்கள், பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக வெளியான செய்தியால்
மகிழ்ச்சியுற்றதாகத் தெரிகிறது. அந்தளவுக்குப் புலிகள் மக்களை மிக மோசமாக
நடத்தியுள்ளனர். இளம்பிள்ளைகளைப் பலவந்தமாகப் பிடித்துச்சென்று கட்டாய ஆயுதப்
பயிற்சி வழங்கி யுத்தத்திற்குப் பலியாக்கியுள்ளனர். இந்நிலைப்பாடானது மக்களிடம்
புலிகளின் மீதான வலுவான எதிர்ப்புணர்வு தோன்றக் காரணமாகியுள்ளது. நான்
எதிர்பாராதவிதமாக ஒரு குறுகிய நேரத்தில் புலிகளின் அரசியலாய்வாளரும் முக்கியக்
கவிஞருமாக இருந்து இப்போது புனர்வாழ்வு முகாமில் தங்கியுள்ள ஒருவரைச் சந்திக்க
நேர்ந்தது.
அவர், ‘அங்கே எல்லாமே முடிந்துபோய் விட்டது. தலைகீழாக மாறிவிட்டது.
தமிழீழத் தேசியத் தலைவர் இப்போது முள்ளிவாய்க்கால் என்ற மிகக் குறுகிய
நிலப்பரப்பிற்கு ஒரு விதானையாராக இருக்கிறார். நினைத்துப் பார்க்க முடியாத ஒரு
சர்வாதிகாரியிடமிருந்து தப்பி வந்துள்ளேன்’
எனக் குறிப்பிட்டார். //
http://www.kalachuvadu.com/issue-115/page17.asp

புதுவை இரத்தினைதுரை பிரபாகரனைச்"சர்வதிகாரி"எனச் சொன்னாலென்ன அல்லது பிரபாகரனுக்கு வால்பிடித்துத் தமிழர்களைக் கொலைக் களத்துக்கு அனுப்பிய எந்த நாய் சொன்னாலென்ன-உங்கள் அமைப்பினதும்,புலம்பெயர் பணச் சேகரிப்பு துரோகிகளின் கடைந்தெடுத்த காரியவாதத்தில் "பிரபாகரனுக்கு எதுவுமே ஆகவில்லை அவர் உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறார்"என்று வாழ்வதாகப் பொய்யுரைத்துத் தமிழ்ர்களை ஏமாற்றிப் பிழைத்தாலென்ன-அனைத்தும் பெருமைப்படத்தக்க விஷயமே!ஏனெனில், இவ்வளவு துரோகத்தையுமே மக்கள் சீக்கரம் புரிவதற்குப் புலிக்குப் பின்னாலிருந்து இயக்கிய தமிழ் மேட்டுக்குடியினது அரசியல் அம்பலப்பட்டு,மக்கள் தமது தலைவிதியைத்தாமே தீர்மானிக்க காலம் வழிவகுக்கிறது.
 
இங்கே,எனது வேலை கடைந்தெடுத்த புலிப் பினாமிகளையும் அவர்களது கொலைக்கார நடாத்தையையும்,இன்று, "பிரபாகரனுக்குள்" தவறுகள் அனைத்தையும் புதைப்பதற்கு அவரைச் "சர்வதிகாரியாக்கும்" அரசியலைக் கேள்விக்குட்படுத்துவதே.இதன், அடிப்படையில் புலியினது "முக்கிய"கவிஞர்-அரசியல் "ஆய்வாளராக" இருந்ததும் புதுவை இரத்தினதுரையே! நானறிய வன்னியில்-புலிகளுக்குள் இத்தகைய பாத்திரத்தை வகித்தவர் அவர்தாம்.ஏனெனில், அவரே"முக்கியமான"என்றதுக்குள் அதிகமாகப் பேசப்பட்டவர்.இலக்கியத்துள்,அதாவது போராட்ட இலக்கியத்துள், அவர்தாம் ஒரு பிரபாகரன் அங்கே.இதை அவரே பலதடவைகள் தனது விமர்சன நடாத்தையூடாகச் சொன்னவர்.ஆதலால், இங்கே முக்கிய"கவிஞர்"அவரெனக் கொண்டேன்.இது கடந்து அவர் எமக்கு அவசியமில்லை.அங்கே மையங்கொள்ளுஞ் சதி அரசியலே முக்கியமானது.இதை மறுதலிக்க கொழுவிகளுக்கு அவசியம் எங்கிருந்து வருகிறது?புதுவையின் தலைமை விசுவாசத்திலிருந்தா அன்றி பரந்துபட்ட ஒடுக்கப்படும் மக்கள்சார்ந்தா என்பதும் புரியப்பட வேண்டியது.வரலாற்றில் புலிகளது பாத்திரம் ஒடுக்கப்படும் தமிழ்மக்களுக்கு விரோதமானது-காட்டிக்கொடுப்புத் துரோகம் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை.இங்கே புதுவையின் பாத்திரம் எந்தவகையிலும் வரலாற்றில் துரோகந்தாம்.அதை எவரும் புதிதாகச் செய்யவேண்டியது அவசியமில்லை.அவரே தனது வர்க்கச் சார்பில் நிரூபித்துவிட்டார்.
 
"நினைத்துப்பார்க்க முடியாத சர்வதிகாரியிடமிருந்து தப்பி
வந்துள்ளேன்"என புனர்வாழ்வு முகாமிலிருக்கும் ஒரு முக்கிய புலிக் கவிஞர்
உரைக்கிறாரென்றால் அவரது கடந்தகால முக்கியம் எந்தவகையில் அமைந்தது என்பதே எமது
அரசியல் கேள்வி.இது மக்களை முட்டாளாக்கும் அவரது குரல்.எல்லாம் நடந்து
முடிந்தபின்-பிரபாகரனது பாத்திரம் மக்கள் விரோதமெனச்
சொல்பவன்-சொல்பவள்,கடந்தகாலத்தில் ஒரு கொடிய ஒடுக்குமுறையாளனை மக்கள் தலைவனாக்கி
மக்களை ஒடுக்குவதற்கு உடந்தையாகியுள்ளது மன்னிக்கத்தக்கதா?
இதுவரை இலங்கை இராணுவத்தை எதிர்த்துப்போராட மக்களது குழந்தைகளைக் கட்டாயமாகப் பிடித்துக் கொலைக்கு அனுப்பியவர்கள்-அதே இலங்கை இராணுவத்தின் ஆதிக்கத்துள் வந்துசேர்ந்தபோது "சர்வதிகாரியிடமிருந்து தப்பிய சுதந்திரத்தைப் பெறுவதாக" உணர்ந்தால்,இதுவரை இலங்கை அரசு-இராணுவம் குறித்துப் புலிப் போராளிகளுக்குச் சொன்னவை பொய்யாக மாறுகிறது-உலகத்துக்கும் அங்ஙனமே இது உரைக்கப்படுகிறது.இங்கே,எமது நிலை,ஒரு பெரும் இனவழிப்பையே செய்த மகிந்தா அரசையும் அதன் நிகழ்கால இனவழிப்பு அரசியலையும் இந்தக் கவிஞன் பிரபாகரனது "சர்வதிகாரத்துக்கு"முன் நியாயப்படுத்துகிறான் என்பதே!
 
இந்தத் துரோகத்தை, அவர்(புதுவை)செய்யாது போனால், இதைச் செய்த
அந்தக்"கவிஞர்-அரசியல் ஆய்வாளர்"மக்களையும் போராளிகளையும் முட்டாளாக்கிக்
கொலைக்களத்துக்கு அனுப்பியது மட்டும் துரோகமில்லை.கூடவே,பிழையான பாதையைச்
சரியானதாகவும்,பிழையான தலைவரைத் "மேதகு தேசியத் தலைவர்"என்றும் புலிகள் இயக்கம்
மக்களது உரிமைக்காகவே தியாகஞ் செய்வதுமாகச் சொல்லி ஒரு தலைமுறையையே அழித்த
அரசியல்-போராட்டம் சமூக விரோதமானது.
இதிலிருந்து தப்புவதற்கான அனைத்து நடவடிக்கையும் பிரபாகனைச் சொல்லி,வரலாற்றில் துரோகியாக்கி-சர்வதிகாரியாக்கித் தம்மைப் புனிதர்களாக்குவதுதாம் இங்கே பிரச்சனை!இதை புதுவைக்கு வக்காலத்து வேண்டுபவர்கள் உணரக்கடவர்.
 
இங்கே புதுவை அதைச் செய்திருக்க முடியாதென்பதற்கான துணிபு எவ்வளவோ-அதே அளவுக்கு அந்தக் கோஷ்டி(புலிகளும் அவர்களது தலைவர்களும்)இதை(துரோகத்தை-மக்களை ஏமாற்றிக் கொன்றதை) வரலாற்றில் செய்தே வந்திருக்கிறார்கள்-வருகிறார்கள்.
இல்லையென்றால், தனதும்-தமதுமான தலைவனின் இறுதி வாழ்வுக்கட்டம்
என்ன ஆனது-அவரைக் காட்டிக்கொடுத்துக் கொன்ற சரணடைவு பகிரங்கமாக மக்களுக்குள்
பேசப்பட்டு,இதுவரை போராடியவர்களுக்கும் அதன் தலைவருக்கும் நியாயமாகச் செய்வேண்டிய
அஞ்சலியைக்கூட செய்யமுடியாத கபோதிகள்-உங்களுக்கு கடைந்தெடுத்த
"அயோக்கியம்"குறித்துப் பேச என்ன அருகதையுண்டு?
 
அனைத்தையுமே தமிழின்பெயராலும்-தமிழீழத்தின் பெயராலும் புதைத்துவிட்டுப் "புதுவை சொன்னாரா-இல்லைப் புண்ணாக்குச் சொன்னாரென்று" என்ன பட்டி மன்றமா இங்கே நடாத்துகிறீர்கள்?
 
செய்தாலுஞ் செய்வீர்கள்!
 
ஏனெனில், "தலைவர் சரணடைந்து பலியானாரா இல்லை வீரமரணமடைந்தாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா"என்ற பட்டிமன்றமே உங்களுக்குள்(புலிகளுக்குள்)முடிந்தபாடில்லை.இந்நிலையில், சரணடைந்தவர்களின் மனிதவுரிமை குறித்து "மக்களாகிய மந்தைகள்" பேசுவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா?இந்த அரசியலை எமது கட்டுரையோடு உரைக்கும் சூழலில் கொழுவிகளது பாத்திரம் அவர்களுக்குள் உணரப்படமலேயே முன் தள்ளப்படுகிறது.நாம் இதையும் கவனத்தில்கொள்வது அவசியம்.
 
நாங்கள் உண்மையிலிருந்துதாம் நமது அம்பலப்படுத்தல்களைச்
செய்கிறோம்.அதையும் மக்களது விடிவுக்கான நிதானமான அரசியல்பாதையில்
நின்றே.மற்றும்படி பொய்யுரைத்தலும்,பித்தாலாட்டஞ் செய்வதும்,சதி அரசியல்
செய்வதும்,திரைமறைவுப் பேரங்களுடாகத் தலைமையை அழிப்பதும், அதற்காக கூலி பெறுவதும்
புலித்தனமான புலிப் பினாமிகளுக்கும் அவர்களது வால்களுக்குமே கைவந்த கலை.
அதை, நாம் கடந்த மே ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நேரில் கண்டும், கேட்டும் அநுபவிக்கிறோம்.இதையெல்லாம் தட்டிக் கேட்க வக்கற்ற கொழுவிக்கு,இங்கே புதுவைக்கு பல்லக்கு தூக்குவது அவசியமாகிறது.
 
இன்று, புலிகளுக்குள் இருந்துகொண்டு மக்களை உயிராகவும்-உடமையாகவும் வேட்டையாடிய இத்தகைய நயவஞ்சகர்கள், புதுவை வடிவில் மட்டுமல்ல தளபதிகள் வடிவிலும்,இன்னபிற எல்லாவடிவினுள்ளும் நாம் இனங்காண்கின்றோம்.அவர்களே தலைவர் பாதுகாப்பாக இருப்பதாகவும்,இல்லை வீரமரணமடைந்து விட்டதாகவுஞ் சொல்லிப் பெரும் செல்வங்களைச் சுருட்டும் கடைந்தெடுத்த அயோக்கியத் தனத்தோடு, அரசியல்-பரப்புரை செய்யும்போது அங்கே புதுவைக்கும் பங்கு இருக்கிறது.இதுவரை, அவரதும் அவர் கூட்டத்தினதும் அரசியல் நடாத்தைகளே இன்றைய உண்மைகளாக விரிகிறது.
 
ஏனெனில்,வன்னிக்குள் வளர்க்கப்பட்ட கவிஞர்களைத் தானே வளர்த்ததாகப் புதுவை இரத்தினதுரை அதிகம் பேசித்திரிந்தவர்.அவரது வளர்ப்பிலுள்ள ஒரு கவிஞர் இங்ஙனம்"நினைத்துப் பார்க்க முடியாவொரு சர்வதிகாரியிடமிருந்து"தப்பி இலங்கை இராணுவத்திடம் வந்ததைக் குறித்துரைக்கிறாரென்றால் இந்த வளர்ப்புக்குள் ஒரு துரோகம் தலைமைக்குப் போலியாக நடித்தது அம்பலத்துக்கு வருகிறது.சிஷ்சியனது நிலை இங்ஙனமென்றால், குருவினது நிலை பிரபாவுக்கு-இதுவரையான அவரது தலைமைக்குப் போராட்டத்துக்கு அதிவிசுவாகமென இருந்தால்-இங்கே எது உண்மையானது?
 
இங்கே எவர் கடைந்தெடுத்த துரோகஞ் செய்கிறார்?
 
மீளவுஞ் சொல்கிறேன்.இங்கே, புதுவை இரத்தினதுரை,பிரபாகரன் என்ற
பெயர்களுக்குள் எதுவுமே இல்லை என்ற கோணத்தில் அரசியலைப் புரிய முற்படுவதே
அவசியமானது.இவர்களுக்குள் நிலவிய குறியீட்டு அரசியலையே நாம் உடைத்துப்
பார்க்கிறோம்.இஃது, இத்தகைய மனிதர்களுக்குப் பின்னாலிருந்து இயக்கப்பட்ட சக்திகள்
குறித்த புரிதற்கானதும் அவர்களது துரோகத்தை மக்களுக்குள் அம்பலப்படுத்திச்
சரியானவொரு பாதையைத் புலிகளது தவறுகள்-துரோகங்களிலிருந்து கற்றுக்கொண்டு,
ஒடுக்கப்படும் வர்க்கஞ் சார்ந்து சிந்திப்பதே முக்கியமானது.
அதற்கான அரசியல் பிரபாகரனது பெயரால் தப்ப முனைவர்களை முதலில் அம்பலப்படுத்தி அவர்களிடமிருக்கும் சதியை முறியடிப்பதே.இதற்கு கொழுவியென்ற முகமூடியிடம் என்ன மொழி-பெயர் இருப்பினும் அது எமக்கு அவசியமில்லை.
 
கொழுவி வகைப்பட்ட "புதுவையாருக்காக வக்கலாத்துவேண்டும்" மனதுக்கு, தலைவரின் காலத்தில் வாழ்ந்ததாகப் பெருமைப்படும் தருணத்தில் தம்மால்-தமது அமைப்புக்கும் அதன் தலைவருக்குமான அழிவில் எதைக்குறித்து மக்களுக்குச் சொன்னார்கள்?அல்லது, கடைந்தெடுத்த அயோத்தனத்தை தமது அமைப்பும்,அதன் தலைவர்களுஞ் செய்தபோது ஏன் அவர்களது "புத்திசாலி"த்தனத்தில் இவை உறைக்கவில்லை?
 
இங்கே,பிரபாகரனுக்குள் அனைத்தையும் புதைத்துவிட்டு,அவரைக் கடைந்தெடுத்த துரோகியாக்கி-சர்வதிகாரியாக்கிவிட்டும்,புலிகளது அனைத்துத் தோல்விக்கும்,துரோகத்துக்கும்-தவறுகளுக்கும் பிரபாகரனே பொறுப்பெனும் அரசியலுக்குள், தாம் தப்புவதும்-புலிப் பணக்காரத்தலைவர்களையும் அவர்களது கடந்தகால-நிகழ்காலத் துரோகத்தையும் தமிழீழத்தின் பெயரால்,தேசியத்தின் பெயரால் காப்பதற்கெடுக்கும் முயற்சியில் இத்தகைய கொழுவிவகை மனதுக்குப் பாரிய பங்கு உண்டு. "புலிகளை அம்பலப்படுத்துபவர்கள் என்ன செய்கிறார்கள்?"எனப் பாக்கும்-கருத்தாடும் இந்தக் கூட்டம் தமது தலைமையினது முடிவு குறித்தும்,சரணடைவு-இலங்கை அரசினது சர்வதேசச் சட்ட மீறல் குறித்து எதுவும் நடக்காதமாதிரி முகமூடிபோட்டுத் திரிகிறது.இதுதாம் இன்றைய கடைந்தெடுத்த அயோக்கியத் தனமென்பதை இத்தகைய கொழுவிகள் மறந்துபோய்விடுகிறார்கள்.
 
 
 
இதுவரை தங்களது அமைப்பு சார்பான அரசியல் நடாத்தையில் தங்கள்
பாத்திரம் எதுவென்பது எமக்குப் புரிந்துகொள்ளத் தக்க அரசியலாக இருப்பதால்,
கொழுவிகளது எந்தக் கருத்திலும் எனக்கு-எமக்கு முரண்பாடுகிடையாது.ஏனெனில், அவை
மக்கள்-உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரானதே என்பது எமது நிலைப்பாடு.இங்கே,புதுவை
மட்டுமல்ல நீங்களுமே மக்கள் நலத்தில் சார்ந்து சிந்திக்காது, தலைமை-இயக்க
விசுவாசத்திலிருந்து சிந்திக்கும்வரை நீங்கள் அனைவரும் மக்களுக்குக் கடைந்தெடுத்த
அயோக்கியர்களே!
 
புதுவை மட்டுமல்ல எந்தப் புலியும் இன்றைய தமது துரோகத்தைப் பிரபாகரனுக்குள் திணித்துவிட்டுத் தம்மைக் காக்கவே முனைகிறார்கள்.ஏனெனில்,பிரபாகரனது பெயர் இனி அவசியமில்லை.அதைக்கடந்து புதிய கூட்டுக்கள் புதிய துரோகத்தோடு அரங்கேறுவதற்குப் பிரபாகரன் எனும் பெயர் வரலாற்றில் "சர்வதிகாரி-துரோகி-தவறான வழிகாட்டி"என்பதிலிருந்தே ஆரம்பமாகிறது.இதற்காகவே அவர் புலிப்பினாமிகளால் காட்டிக்கொடுத்துக் கொலை செய்விக்கப்பட்டார்.இதுதாம் அயோக்கியத்தின் அயோக்கியத்தனம் என்பதை உணர்க.இன்று, தம்மைக் காப்பதற்குப் பிரபாகரனது உண்மை நிலையைச் சொன்ன இந்தத் தமிழினத் துரோகிகள் அன்று மக்களது விடிவுக்காக நாம் பிரபாகரன் குறித்து இந்த மேற் சொன்ன பாத்திரத்தைச் சொன்னதற்காக "துரோகி"களாக்கப்பட்ட வரலாற்றில் இவர்களது அயோக்கியத்தனம் இன்று அம்பலப்படுவதை எதிர்கொள்கிறோம்.இதுதாம் பாசிசத்தின் தெரிவு.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
15.07.09

Tuesday, July 14, 2009

உண்மைகளின் முன்னே...

புதுவையாரும்,புலிகளும் பிரபாகரனைச் சொல்லிப் புனையும் புதிசு... 
 
"நம்மிடம் எந்த நம்பிக்கைகளும் கைவசமில்லை. நாம் வாழ்வு மறுக்கப் பட்ட சூழலுக்கு மறுப்பும்,நமது குடியிருப்புகளை இராணுவ உயர் பாதுகாப்பாக்கிய யுத்தத்தையும்- இலட்சக்கணக்கான மனித அழிவையும் வெறுக்கிறோம்.இதனால் பாதிப்புக்குள்ளானது மட்டுமல்ல வேரோடுபிடுங்கியெறியப் பட்ட உயிர் வாழ்வின் விழுமியங்களை மீட்பதற்கு யுத்தம் குறுக்கே நிற்பதால் அதை உடலில் உயிருள்ளவரை எதிர்ப்போம். "ஏதிலிக்குழந்தைகள்"(!) அழகான தமிழ்.இப்படிக் கூறுவதால் அந்தக் குழந்தைகளுக்கு எந்த நிறைவும் வந்நு விடாது.முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள அவகாசம் தேவை.எதற்கெடுத்தாலும் மறுப்புச் சொல்லாதீர்கள்.ஈழப்போராட்டத்தைப் புரிந்துகொள்ள தமிழ்பேசும் மக்களுக்கு சுமார் இருபதாண்டுகள் சென்றது.மக்கள் இழந்த அனைத்தும் மண்ணுக்காகவென்ற கருத்தியல் தளத்தை இனியும் நாம் மௌனமாக 'ம்'போடமுடியாது.மழலைகள் எப்படி அநாதைகளானார்கள்?அவர்களது வாழ்வை எந்தப்பூதம் தின்று ஏப்பமிட்டதது? எதன்பொருட்டு அவர்தம் பெற்றோர்கள் அழிந்தார்கள்? ஊனமானது அவர்தம் வாழ்வு மட்டுமல்ல ஒரு சந்ததியே போராடிச் செத்த பின் நீங்கள் கதைசொல்கிறீர்கள்.

யுத்தத்தால் முடமாக்கப்பட்ட சிறார்களை முல்லத்தீவுக்குள்ளும் வன்னிமண்ணுக்குள்ளும்தாம் உங்களுகுத் தெரிகிறது.நமக்கோ தமிழ்பேசும் மக்கள் வாழும் முழு இலங்கைக்குள்ளும் தெரியும்.தொடார்புகள் உண்டு.இவர்களது வாழ்வை எந்த அமைப்பு சீராக்குகிறது?வெட்கங்கெட்ட இயக்கங்கள் தத்தம் தேவைக்காகச் சிறார்களைப் போருக்கு அனுப்பிக் கொன்றும்-ஊனமாக்கியும்-அநாதவராக்கிவிட்டும்,இப்போது காப்பகங்கள் நடாத்துகின்றனவாம்.பேருக்குச் சில விளம்பர நாடகங்களைச் செய்பவர்களுக்காக- இப்படி ஓட்டுமொத்தச் சிறார்களுக்காகக் குரல் கொடுப்பதுபோல் பாயும்போது-எந்த விளம்பரமுமின்றிக் காரியமாற்றும் மனிதர்கள் இந்தக் கண்றாவித்தனங்களை இனியும் மூடிமறைக்கத் தயாரில்லை.புலிகள்தாம் தமிழர்கள்,தமிழர்கள்தாம் புலிகள் என்பதெல்லாம் முன்னோருகாலத்தில் சாத்தியமாகலாம்.இப்போது ஜனநாயக அரசியலுக்கு வருகிறார்களா வாருங்கள்-பன்முக அரசியலோடு-பன்முகத் தலைமைத்துவங்களோடு கலந்து நமது விடிவைத் தேடி விவாதிப்போம்-செயற்படுவோம்.அதை விட்டுவிட்டு விசமத் தனம்-திரிபுவாதம் என்பதை அவிட்டுவிட வேண்டாம்.இவற்றைக் கடந்த கால் நூற்றாண்டாய் கேட்டுக்கேட்டு நமது வாழ்வே நாசமாகிவிட்டது..." -அன்று(01.04.2005), அன்பர் ஈழநாதனோடான விவாதத்தில் ஸ்ரீரங்கன்.
 
 
ஆல்பிரேட் துரையப்பா முதல் கந்தசாமி,இராஜினி திரணகம,விஜிதரன்,கிருஷ்ணானந்தன்,செல்வி இப்படி இந்தத் "துரோகிகள்" பட்டியல் நீளமானது!தமிழ்ச்சமூகத்தின் அவலத்தை கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப்பிலிட்டுக்கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.இன்று புதிதாகப் புதுவையாருக்கு ஞானம் பிறந்து அவர் தான்போற்றிய நெருப்புக் கடவுள்-சூரியதேவனைச் சர்வதிகாரியாக்கித் தன்னை "மக்கள் கவிஞனாக்க" இடைத்தங்கல் முகாமிலிருந்து முணுமுணுக்கிறார்.இதையும் "அநாமதேயன்"என்று காலச்சுவட்டில் இனவாதக் குண்டு தயாரிக்கும் இன்னொரு முகமூடி(நம்மால் அறியப்பட்ட அவலம்)சாம்பல் பூத்த தமிழ்க் குறுந்தேசியத்தை ஊதிப் பார்க்கிறது.இதற்குச் சர்வதிகாரியாகிப்போன பிரபாகரனது போராட்டம் நினைத்தே பார்க்க முடியாத வேகத்தில் தலைகீழாகப் போய்விட்டதாம்.வரலாற்றில் புலிகளது வரவுக்கும்,பிரபாகரனது பாத்திரத்துக்குமான சரியான புரிதல் இங்ஙனம் குறுக்கப்பட முடியாது.நமது மக்களது சுயநிர்ணயப் போரைச் சிதைப்பதற்குப் பிரபாகரனுக்குப் பின்னால் நின்றவர்கள், இப்போது பிரபாகரனை அழித்துவிட்டுத் தம்மை எம் மக்களது மேய்ப்பர்களாக்குவதில் மையமுறும் அரசியலை"அநாமதேயன்"எழுத்துக்களுக்குள் இனங்காண்பது ஒன்றுஞ் சிரமமான காரியமில்லை!
 
 
இவர்கள்தாம் கடந்தகாலத்தில்"ஆய்வாளர்கள்"-அறிவுமேதைகள்.தேசியச் சக்திகள் குறித்துக் கரிகாலன் காதை நமக்குச் சொன்னவர்கள்.இன்று,புலிகளது அழிவு திடீரென நிகழ்ந்துவிட்டதாம்.சிந்திப்பதற்குள் நடந்த "தலைகீழ்"வரலாறாகிறதாம்.புலிகளது தோற்றத்திலேயே அது அழிவு யுத்தத்தைச் செய்வது குறித்துப் பேசியவர்களை எல்லாம்"துரோகி"எனச் சொல்லிக் கொன்ற கூட்டம் இலட்சம் மக்களை அழித்துவிட்டுத் தமிழ்பேசும் மக்களை உலக எஜமானர்களுக்கும் உள்ளுர் தமது பங்காளிக்களுக்கும் அடிமையாக்கிவிட்டுப் பிரபாகரனே இவற்றுக்குப் பொறுப்பென்று தம்மை தமிழ்மக்களது மீட்பர்களாகக் காட்டுகிறது இப்போது.இந்தச் செயற்பாடு மிகக்கொடுமையானதொரு இன்னொரு அரசியல் நாடகத்தை-துரோகத்தைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கிறது.இத்தகைய சதிகாரர்களைக் குறித்து அன்று,2005 மட்டில் இங்ஙனம் எனது அகதிப்பதிவில் எழுதினேன்:
 
 
"அப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய்
அன்னையைக் கொன்று அடுப்பினுளிட்டாய்
அண்ணனைத்
தம்பியை
அக்காளைத் தங்கையை
மாமனை மச்சானை
மடிதிறந்த மனைவியைப் பேரனைப் பூட்டனை
குருவை
அறத்தைச் சொன்ன ஆசானைத் தோழனை
இன்பிறவெல்லாம் கொன்றாய்
தேசத்தின் விடுதலையின் பெயரால்."
 
 
 
இன்று,நாம் சந்திக்கும் இந்த வலைப்பதிவு "வாசகர்களையும்"அவர்களின் பார்வையையும் பற்றிப் பெரிதும் கவலைகொள்வதற்கில்லை.ஆனால்,புலிகள் தமது இராணுவத்தையும்,அதன் தலைமையையும் உலக எஜமானர்களோடு சேர்ந்து அழித்தபின் நடாத்தும் அரசியல்சதியே நமது மக்களை மேலும் மொட்டையடிப்பதாகும்.இவர்கள் இலங்கையில் புரட்சிகரமான உணர்வு அரும்புவதற்கே தடையாக இருக்கின்றார்கள்.அல்லது அங்ஙனம் விடப்பட்டு,அவர்களது எஜமானர்களால் கண்காணிக்கப்பட்டு ஊதியம்-உபயம் பெற முனைவதில் இன்னொரு சதிவலை பின்னுகிறார்கள்.இவர்களது அன்றைய எதிர்ப்புரட்சிப்பாத்திரத்தில்
"ஈழமென்றும்,தமிழ்க் கலாச்சாரமென்றும்,தாம் உலகில் "அதியுன்னத"மக்கள் பிரிவென்றும் ஆலவட்டம் பிடிக்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமெனத் தம்மை சொல்லி வரும் புலிகள் இயக்கத் தலைவர்கள்,பதவிக்காகவும்,சுகத்துக்காவும் நாயாய்ப் பேயாய் அலைந்தும் சரணடைந்தும்- வார்தைகளினால் தமது வேசத்தைக் கலைத்தபோது"அவற்றைப் பிரபாகரனது சர்வதிகாரத்துக்குள் திணித்துவிட்டுத் தம்மைக் குறித்து மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாகப் புலிப் பினாமிகள் ஊளையிடுவது மக்களை மேலும் இனவாதிகளாக்கி அவர்களைத் தொடர்ந்து அழிக்கவே.இதை அனுமதிப்பதென்பது தற்கொலைக்கு நிகரானது.
 
 
"குருதியின் நெடில் மூக்கைத் துளைக்கும்
அகோரமான பொழுதுகளின் நெடிய காற்றோ
மூளையை விறைப்பாக்கிறது,
இந்தக் கொடிய காற்றுள் அள்ளுண்டு போகாதிருக்க
உனக்காகவும்
எனக்காகவும்-எமக்காவும்
நாம்,எதையேனும் செய்தே ஆகவேண்டும்!
 
 
இருள் சூழ்ந்த நாளிகையிலே
பலரைத்தின்றுவிட்டு
இடைத்தங்கல் முகாமிலிருந்து இரை மீட்கிறாய்"
-இன்று.
 
 
புதுவை இரத்தினதுரை அன்று,தனது வார்த்தைகளால் எத்தனையோ அப்பாவிகளது கொலைகளை நியாப்படுத்திய அவரது மக்கள் விரோதம்,இன்று பிரபாகரனைப் பெரும் சர்வதிகாரியாக்கும் அரசியலோடு மக்களிடம் வருகிறது.இதையேதாம் "அநாமதேயன்"கூடச் செய்கிறார்.அன்று புலிகளைத் "தேசியச் சக்தி-தேசிய இராணுவம்"எனக் கருத்துக்கூறியவர்,இன்றோ அனைத்துக்கும் பிரபாகரனது தவறே காரணமென்று புலிகளுக்குப் பின்னாலிருந்து இயக்கிய சக்திகளை மறைத்து மீளவும் தமிழர்களுக்கு ஆப்பு வைக்கிறார்.ஒரு தலைமுறையையே கையாலாகாத கூட்டமாக்கி அவர்களைக் கொன்றுதள்ளிய புலிப்பரப்புரையாளர்களெல்லோரும் இனிமேல் இதே தமிழ்ச்சமுதாயத்துள்தாம் வாழப்போகின்றார்கள்.தம்மால் அநாதைகளாக்கப்பட்டு ஒட்டக் காயடிக்கப்பட்டவொரு இனத்தின் அழிவைச் செய்த இதே நபர்கள் எந்த முகத்தோடு மேலும் உயிர்வாழ்வார்கள்?"உண்மை மனிதர்களக்கு நிச்சியம் உறுத்தும்.அவர்கள் தமது தவறுகளுக்காக வருந்துவதுமட்டுமல்ல தமக்குத் தாமே தண்டனையைக் கோருபவர்களாகவும் இருப்பார்கள்." கூட்டாகக் கோழியடிச்சு உண்டு,தலைமுறையையே நாசங் செய்துவிட்டு,அதைத் தமது தலைவனுக்கு மட்டும் பொறுப்பாக்கும் எவனும்-எவளும் மனிதவிரோதிகளே.தமது தவறைத் தார்மீக அடிப்படையிற்கூட ஏற்கமுடியாத மனித விரோதிகள்.இவர்கள் பிரபாகரன் குறித்துக் கருத்துச் சொல்லவே அருகதையற்ற ஜென்மங்கள்!இதோ உனக்கும் உனது இராணுவ வாதத் தலைமைக்கும் அன்றே இங்ஙனம் உரைத்தோம்:
 
"எச்சங்களில்
"எந்த எலும்பு" உனது உறவினதென ஒருநாள் நீ அலைவாய்!
இவையெல்லாம்
எதன் பெயரால்,
எதன் பெயரால்,
எதன் பெயராலெனப் பிதற்றுவாய்.
அன்று,
உன் பிதற்றலுக்குச்
செவியெறிய நானோ அல்ல உன் வம்சமோ
இல்லாதிருக்கக் காண்பாய்!"
 
 
புலிகள் நமது வரலாற்றில் "தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது, நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது" பலரிடம் உண்டு.எனினும், அஃது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத்தினதும்,இந்திய ஆளும் வர்க்கத்தினது பிராந்தியக் கனவினதும் விளைபொருளாகத் தன்னை வெளிப்படுத்தி இறுதியில் மேற்குலகிடம் சரணடைந்தது.இந்தப் புலிகள் தமிழர்களது உரிமைப்போராட்டத்தில் திடீரென வந்தவர்களே!இது இலங்கையில் அந்நியர்களது அடியாட்படையாகவே தோற்றம்பெற்று இறுதியில் எதிர்ப்புரட்சிகரச் சக்தியாகவே மக்களை யுத்தத்தில் கொன்று புரட்சிகரப் போராட்டத்தை அழித்தது.இந்த வரலாறு எழுதப்பட்டேயாகவேண்டும்!புதுவை உரைப்பதுபோல இது பிரபாகரனென்ற தனிநபரது விருப்பு-வெறுப்புக்குட்பட்டதல்ல.
 
பிரபாகரனென்ற பொம்மையைக் கடந்து சிந்தித்தால்,வர்க்க அடிப்படையாகப் புரிவதில் இவர்கள்,இலங்கையில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில்,சந்தித்த முரண்பாட்டில் தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய பிராந்தியவல்லரசின் புவியியற் அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம் புலிகள் அமைப்புக்குப் பின்னால் நின்று, தமிழ் மேட்டுக்குடிகளின் நலனுக்குகாகத் தமிழ்பேசும் மக்களைக் கட்டாயப்படுத்தி இராணுவப்படையாக்கிக் கொன்றுள்ளார்கள்.
 
இன்று,இவர்களது வர்க்க ஊசாலாட்டம் மேற்குலகச் சார்ப்பு-இந்தியச்சார்பு என எல்லா வகை ஊசாலாட்டைத்தையும் தமது வர்க்க நலனிலிருந்து அறுவடையாக்கிப் பிரபாகரனைச் சர்வதிகாரியாக்கி"ஈழப்போரை"இலட்சம் மக்களைக் கொன்று-கொலையாக்கி முடித்துள்ளது.இவர்களைத் தண்டிப்பார் எவர்?புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் மேலும் தவறுகளையே நியாப்படுத்தும் கூட்டமாகப் புலிகளது பினாமிகள் இன்று புலம்பெயர்ந்த தமிழருக்குள் புதிய கதை பேசுகிறார்கள்.பங்குச் சண்டையில் ஒவ்வொருவரும் புதிய வேடம் பூண்டு மக்களுக்காகக் குரல்கொடுப்பதாக் கருத்துக்கட்டுகிறார்கள்.
 
இந்தப் புலிப்பினாமிகளின் வால்களது வெறும் தமிழ்ப் பாசம் இங்கு யாரையும் காப்பாற்றாது.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு "அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாக"க் கிடக்கிறார்கள்.இங்கே, ஒவ்வொருவரும் தத்தமது வர்க்கம் சார்ந்து சிந்தித்தல் சாத்தியமாகிவிடுகிறது. நாம் புலிகளையும்,அவர்களுக்குப் பின்னால் நின்ற தமிழ் மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தையும் வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்டு ஆராய்ய முடியாது. அது, விஞ்ஞானப+ர்வமற்று வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பான திராவிட அரசியல் மாதிரித்தாம் முடியும்!இன்று, கேவலம் இந்தக் கேடுகெட்ட நாய்கள் போடும்"நாடுகடந்த அரசாங்கம்"என்ற கூச்சல் மக்களைச் சொல்லித் திரட்டப்பட்ட நிதியைத் தக்கவைக்கவும் தம்மை இலங்கை அரசியலில் ஏதோவொரு முறையில் தவிர்க்க முடியாத சக்திகளாய் உருவாக்கவதற்கு முனையும் கபடத்தனத்தின்மீது கட்டப்பட்டதாகும்.தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறுதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற எந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.
 
இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்; அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போர் என்ற அழிவுயுத்தத்தை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்றும்,அந்நிய அடியாட்படை ஊழியம் என்றும் அன்றே வரையறுத்துப் புலிகள் அழிவார்கள் என்று குறித்துரைத்தோம்! உழைப்பவர் நலன் முன் வைக்கப்படும் அரசியல் "ஈழக்கோசத்தை முன்னெடுக்க முடியாது. அங்கே பெருந்தேசிய வெறிக்குப் பதிலாகக் குறுந்தேசியம் முன் தள்ளப் பட முடியாது.இரண்டும் சாரம்ஸத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதாம்"என்றும் வரையறுத்துச் சொன்னோம்.இதுவே இன்று நிஜமாக நம்முன் நடந்தேறினாலும் இதை மறைத்து மாய்மாலஞ் செய்யப் புலிப்பினாமிகளே புதிய கதை பேசிப் பார்க்கிறார்கள்.அவர்கள் இதுவரை தம்மால் போற்றப்பட்ட ஒரு மனிதனுக்குள் அனைத்துத் தவறுகளையும் புதைத்துவிட்டுத் தம்மைப் புனிதர்களாக்குவதில் மிகத் துடிப்போடு இயங்குகிறார்கள்.கடந்த காலத்தில் தாம் இயங்கிய அரசியலானது தமிழ் மக்களுக்கு விரோதமானதென்று தெரிந்தும் தவறிழைத்த இந்தக்கூட்டம் பெருவாரியான தமிழ்மக்களைக் கொல்வதற்கு உடந்தையானது.இவர்களை வரலாற்றில் தண்டிக்கவேண்டிய பொறுப்புத் தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையில்வாழும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் உண்டு!
 
"இதற்கு முன்
போ,போ,
போய் உன் பெற்றோரைச் சுற்றோரைக் கேள்
சுதந்திரமென்றால் என்னவென்று?"
 
 
ஈழவிடுதலை இயக்கங்களின் எழிச்சிகள் அன்னிய சக்திகளால் பாழடிக்கப் பட்டு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கு வேட்டு வைப்பதில் இந்தியாவும்-அமெரிக்காவும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் செயற்பட்டுள்ளன.இயக்கங்களின் சுயவளர்ச்சியை மட்டுபடவைத்து தத்தம் உதவியால் அவற்றை வீங்க வைத்து பின் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது உண்மை.ஆனால், தமிழ்பேசும் மக்களை சிங்கள சியோனிச பொளத்தமதவாதமும்,அவர்தம் தரகு முதலாளியமும் மிகக் கொடுரமான முறையிற்றடக்கியபோது, அந்த ஒடுக்குமுறைக் கொதிரான தமிழ்பேசும் மக்களின் தார்மீகப்போரைப் புலிகளை வைத்துக்காட்டிக்கொடுத்த இந்தியாவும்,மேற்குலகமும் இன்று தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதைகளாக்கியதற்குப் பொறுப்பானவர்கள்.
 
இவர்களது அரசியல் சதியைத் தமது இலாபங்களுக்காகச் செய்து, தமிழ் பேசும் மக்களை இரத்த வெள்ளத்தில் நீந்தவைத்த புலிப் பிரமுகர்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும் தமிழ் மேட்டுக்குடிகளும் இன்றும் பிரபாகரனைச் சொல்லித் தாம் தப்புவதற்கான அரசியலைச் செய்யப் பற்பல "அநாமதேயன்கள்"அவசியமாகி நமக்குள் புனைவுகளைச் செய்கின்றார்கள்.இதைக் குறித்து மௌனித்திருக்க முடியுமா?
 
புலிகளை அன்று ஏதோவொரு அம்சத்துக்காக ஏற்றுக் காவடி தூக்கியவர்களின் இன்றைய புலம்பல் மேலும் எம்மை முட்டாளாக்கும்.இவர்கள் சொன்னதெல்லாம் புலிரூபத்தில் முடிந்திருக்கிறது.இவர்களைக்கடந்து நாம் மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கத் தூண்டுவது அவசியம்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
14.07.09

Sunday, July 12, 2009

பெய்த மழையில் பேயின் எச்சம்

காலம்.
 
 
 
எரித்தலில் விரிந்த கொடும் யுகத்தோடு
பங்கு பிரித்த பகற் பொழுதொன்றில்
பிசாசுக்குப் பிரித்துவிட்ட உடலம்
பொய் உரைத்துத் துப்பிய எச்சில்
 
 
பெய்த மழையில் பேயின் எச்சம் போனதென்ற
பிரமை கொள் பீலி சூனியம் வைத்தபடி
நெற்றியில் தேசிக்காய் நறுக்க
குருதிகொட்டிய பற்கள் அது பேயெனப் பகல
 
 
மென்று தொலைத்த தசைகளின்
மொச்சை மூக்கின் வழி
வாழ்வுக்கொரு குருதிக் கதை விளம்ப
மண்கொள் மூளை வரம்பிட்ட கணமோ


மேகத்துள் மெல்ல விரியும் இருப்பிழந்த
துகளுக்குக் கால்கள் மண்டை வழி முளைத்தபடி
முதுகைக் குப்புறப் படுத்தபடி
சொறிவதற்கு நாட்குறித்த கனவில்
 
 
 
தெருவோரத்து நாய்களில் ஒன்று
திடங்கொண்டு தேடிய எதிர்ப்பால்
மல்லுக்கட்டிய கணத்தை சுருந்த சிதளொடு
மெல்ல முகர்ந்த கணத்தை மோகித்து
 
 
 
என்னைக் காவு கொள் கனவொடு
வரம்பின்றி மோகித்து மனமொடு மிரண்டது
மீள் வருகை ஒன்றில் மோதிய
உடலை தூக்கி நகர்ந்தது காலம்
 
 
 

Tuesday, July 07, 2009

இலக்கியச்சந்திப்புக்காரர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் அவை...

இலக்கியச்"சந்திப்புக்காரர்கள்" மற்றும் "சிந்தனையாளர்களின் அவை" ஒன்றிற்கான கருவூலப்பத்திரம் போதிப்பவர்களும்.
 
 
ஒருவகை உடைப்பினது இயங்கு தளம் தமிழரைச் சொல்லி-சிறு குறிப்பு.
 
 
 
ன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனையும்போது சிங்கள உறுமைய,ஜே.வி.பி. எனப் பல் வகை இனவாதக்கட்சிகளும் அதே அந்நியச் சக்திகளால் வழி நடாத்தப்படுகிறார்கள்.குறிப்பாக இந்தியாவால் என்றுங் கூறமுடியும்.புலி அழிப்புக்காக பல பத்தாயிரம் மக்களைப் பலி கொண்ட இந்திய நலனானது,உலக-பிராந்திய நலன்களோடிணைந்து உருவாக்கும் கட்சிகள்,குழுக்கள் இலங்கை வாழ் உழைக்கும் வர்க்கத்தை மிக நேர்த்தியாகப் பிளவுபடுத்துவதில் குறியாக இருக்கிறது.இதன் உச்சக்கட்டம் புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் ஓராயிரம் குழறுபடிகளை இன்னபிற நடிவடிக்கைகள் ஊடாகச் செய்துவருவதை நாம் சமீபகாலமாக இனங்காணலாம்.
 
 
இங்கே,இனவாதக் கட்சிகளையும், அதே வடிவத்தில் பக்கா"ஜனநாயக"ச் சக்திகளையும் ஒரோ பாதையில் இருவேறு திசைகளில் அது உலாவிட்டுப்பார்க்கிறது.இதன் தொடர்ச்சியான வேகமானது "இலக்கியச் சந்திப்பு,சமாதானப் பட்டறை,அபிவிருத்திப்பட்டறை,தீர்வுத்திட்ட ஒன்றுகூடல்,சிந்தனையாளர்களது அவைக்கான கருவூலம் அமைத்தல்,என்றும் இன்னபிற வடிவங்களிலும் மிக நேர்மையின்றிப் பொய்யுரைத்துத் தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதைகளாக்கிவிட முனைகிறது.எங்கு நோக்கினும் அந்நிய உளவு முகவர்களின் அணிவகுப்பே நமக்கு முன் நிகழ்கிறது.இது கொள்ளும் முகமூடிகளானது மேற்சொன்ன நிகழ்வுகளாக விரிகிறது.இலங்கையின் கட்சிகள்- இயக்கங்களின் எந்தப் பக்கத்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது.இதை மூடிமறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.
 
 
எனவே இன்றைய புதிய உலகவொழுங்கில் நாம் அரசு என்ற அமைப்புக்குள்ளிருந்து விடுபட்டுவிட்டோம்.இங்கு அரசுகளெனும் வடிவம் நம்மையும் நமது நலன்களைத் தவிர்க்க முடியாது சர்வதேச நலன்களுடன் பின்னிப்பிணைந்துள்ளது.இதன்தொடராக நாம் ஏமற்றப்பட்ட வரலாற்றில் இழந்தவை மிகப் பெரியதாகும்.நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழிபறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது.இதன் குறைந்தபட்சத் தேடுதலாவது புரட்சிகரப்பாத்திரத்தில் நமது மக்களைக் காப்பதற்கான முன் நிபந்தனைகளாக இருக்கும்.எனவே,இன்றைய சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே.
 
 
"வில்லேருழர் பகை கொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழர் பகை." -குறள்:872, பக்கம்:347
 
 
வள்ளுவர் பேனா முனையை எதிர்க்காத அரசியல் சொல்ல,சாணாக்கியன் அதனையும் கடந்து மேலே செல்கிறான்.இவனது தந்தரமே மிகக் குள்ள நரித்தனமானதும்,நயவஞ்சகமானதும்கூட!சாணாக்கியனின் உலகத்தில் தடுக்கி விழுபவர்கள்கூட ஒரு உளவாளியின்மீதே விழும் அளவுக்கு உளவுப்படைகள் அவசியமென்கிறான் சாணாக்கியன்.இன்று நமது புலம்பெயர் வாழ்வில் எங்கு நோக்கினும் உளவு அமைப்புகளுக்குத் தொண்டூழியஞ் செய்யவே "இலக்கியச் சந்திப்பு"ச் செய்பவர்களாகவும்,"சிந்தனையாளர்களின்" அவை அமைப்பவர்களாகவும் தமிழ் மக்களது துரோகிகள் தமது அரசியலைத் தமிழ்பேசும் மக்களது பெயரில் முன் தள்ளுகிறார்கள்.இவர்களது எஜமானர்களால் பழிவாங்கப்பட்டுத் தமது உறவுகளைப் பலிகொடுத்தும் தமது வாழ்வை இழந்தும் தடுப்பு முகாமுக்குள்ளும் திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் பரதவிக்கும் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீளவும் துரோகமிழைத்திட தமக்குள் ஒன்றிணைகிறார்கள்.இதிலிருந்து தமது எஜமானர்களது அரசியலுக்கு வெளியில் மாற்று அரசியல் மையமுறுவதைக் கண்காணிக்கவும்,தடுத்து உடைத்தெறியவும் எதிரிகள் மிக நிதானமாகத் தமக்குள் வலுவடைகிறார்கள்.இது குறித்துப் பரவலாக விளங்க முற்படுவோம்.
 
 




 
 
உதிர்ந்த புலிகளும் உள்வீட்டுக் குரல்களும்:
 
 
கடந்தகாலத்தில் பிரான்சின் வரலாற்றியலாளர் Alexis de Tocqueville தனித்துவமான சுதந்திரத்துக்காக-விடுதலைக்காகப் போராடிய முன்னிலையாளர் என்பதை நாம் அறிவோம்.இத்தகைய தனித்துவமென்பது தமது இனத்துக்கானதாகவே இருக்கும் என்பதை Olivier Le Cour Grandmaison அல்ஜீரிய நடவடிக்கைகளில் பார்க்க முடியும், 1840 களில் அல்ஜீரியக் குடிகளை-குழந்தைகளைப் பெண்களை மிருகங்களிலும் கேவலமாக வருத்திய வரலாறை எவரும் இலகுவில் மறந்திட முடியாது.என்றபோதும், இன்றைய இந்திய-இலங்கை அரசுகளது கூட்டு வன்னிப் படுகொலை யுத்தம் மற்றும் தமிழினப் படுகொலை நெட்டூரம் எந்தவொரு வரலாற்றுத் துரோகத்தோடும் ஒப்பிட முடியாதவையாகவே நான் கருதுகிறேன்.
 
 
 
ஜனாதிபதி இராஜபக்ஷ தமிழ் மக்களை ஏமாற்றியபடி அவர்களைப் பூரணமாகக் கையலாகாதவர்களாக்கப் போடும் அரசியல் சுழிகளில் அகப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும், இனிமேற்காலத்தில் இலங்கையில் அடிப்படை உரிமைகளைபெறுவதற்கான எந்த அரசியற்பலத்தையும் பெற்றுவிடமுடியாதளவுக்கு இலங்கையின் இராணுவவாதம் இருக்கிறது.இதைக் கவனிக்காது நாம் புலிகளின் அழிவில் இலங்கைக்கு விமோசனமெனக் கருத்தாடமுடியாது.அது,மிகவும் கேவலமாக இலங்கையின் அரச தந்திரத்துக்குப் பலியாகிப்போவதாகவே இருக்கும்.
 
 
 
இலங்கைக்குள் இரண்டு தேசங்களை உருவாக்கப் புறப்பட்ட பிரபாகரனது தேசியத்தலைமை உலகத்தின் பொருளாதார இலக்குக்காக உருவாக்கப்பட்டு,இறுதியில் அதன் தேவையோடு இல்லாதாக்கப்பட்ட அரசியலில் புலிகளது மிச்சசொச்சங்கள் மக்களையும் குழப்பித் தம்மையும் குழப்பித் தமது வளங்களைக் குறித்தே இயங்குகிறார்கள்-அரசியல் செய்கிறார்கள்.
 
 
 
இதன் தாத்பரியம் தமிழர்களைப் படுகொலைசெய்து குவித்ததுபோகச் சிங்கள அரசினது கொலைக்காரக் குண்டுகளுக்கும் கொத்துக்கொத்தாக அழிந்து போவதுவரை தமிழீழம் முடிந்த முடிவு என்று அவர்கள் சொல்வதைக் கேட்டுப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பூரிப்படைந்தார்கள் அன்று.இன்றும் அதே புலிகள் தமது பிளவுகளுக்குள் நின்றபடி போராட்டத்தையும் தமது இயக்கத்தின் தோல்வியையும் குறித்து-"அந்நியச்சதி,துரோகம்,உள்வீட்டுச்சதி"என்றெல்லாம் கருத்தாடுகிறார்கள்.
 
 
 
தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்தில்,எவரெவாரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும் தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.இதுவரை நடக்கும் இலங்கை இனப் போராட்டத்தில் நடைபெறும் அரச தந்திரங்கள்-போராட்ட நெறிகள் யாவும் பாசிசப் போக்கினது வழிப்பட்டதாகும்.இதை மிக இலகுவாகச் செயற்படுத்தும் இந்தியாவே நமது மக்களின் வாழ்வோடு மிகக் கேவலமாக யுத்தம் மற்றும் மனித விரோத அரசியலைக் கட்டி வளர்த்து வந்தது-இன்னும் தொடர்ந்து வருகிறது.இதற்காக அமெரிக்காவும், மேற்குலகமும் ஒரு புறமும்,இந்தியாவும்,சீனாவும் மறு புறமாகக் காய் நகர்த்தி எமது தேசத்தை அந்நிய நலன்களின் வேட்டைக் காடாக்கியுள்ளது.இந்நிலையுள்,தமிழ் பேசும் மக்களது அடிப்படைப் பிரச்சனைகளைப் புலியழிப்பிலிருந்து விளங்க முற்படுபவர்கள் மீளவும் வரலாற்றில் உண்மைகளையும் புலிகளுக்கூடாகவே கற்பிக்க முனைகின்றனர்.புலித் தலைமையினது பாதையிலும் மீளவும் நடக்கக் கற்பிக்கின்றனர்.
 
 
"மாற்று"க் கருத்தாளர்களும்,மலிந்த துரோகமும்:
 
 
இன்றைய இலங்கை அரசியலில் தமிழ்பேசும் சமுதாயத்தினது தலைவிதியானது கயமைமிக அரசியலுக்குள் சிக்குண்டுள்ளது.இதை இந்திய-இலங்கை அரசியல் நலன்களுக்குள் கட்டுண்டுபோன தமிழ்க்கட்சிகள்-முன்னாள் ஆயுதக்குழுக்களெனச் செவ்வனவேயான திட்டத்துக்குட்பட்ட அடக்குமுறை அரசியலுக்கேற்ற நடாத்தையால் நமக்கு நிரூபித்து வருகிறார்கள்.இங்கே "அழிந்துபோன புலிகளது" சர்வதேசச் சீமான்களும் அதே பாதையில் நடைபயில இந்தியாவினது இலக்கு மிக விரைவாக எட்டப்பட்டு வருகிறது.
 
 
எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.
 
 
இன்று மாற்றுக் கருத்தாளர்களாகத் தம்மைக் காட்ட முனையும் இலக்கியச் சந்திப்புக்காரர்கள் உண்மையில் இலங்கையில் நடந்தேறும் இனப்படுகொலைகளையும், அதுசார்ந்தியங்கும் சிங்கள ஆளும்வர்க்கப் பிரதிநிதி மகிந்தாவின் பாசிசச் செயற்பாட்டையும் எதிர்த்தியங்கும் இடதுசாரி அரசியலைக் கையிலேந்திக் கறாராகப் போராடும் தோழர் இரயாகரனுக்கும் அவரது கால் நூற்றாண்டுத் தத்துவார்த்தப் போராட்டத்துக்கும் எதிராகவே இயங்கியவர்கள்.புரட்சியைக் காயடிக்க முனையும் இவர்கள் அன்று புலிகள் செய்த அதே சதி அரசியலோடு இந்தத் தளத்தைக் குறித்தும், அதை இல்லாதாக்கவும் தொடர்ந்து இந்திய-இலங்கை அரசுகளோடிணைந்து புலம்பெயர் தளத்திலும் தமது கைவரிசையைக்காட்டுபவர்கள்.
 
 
மக்களது நலனிலிருந்து கிஞ்சித்தும் விலத்தாத அரசியலை முன்தள்ளும் தோழர் இராயவினது அரசியல் பாத்திரம், இன்றைய சதிநிறைந்த தமிழர்களது அரசியல்வரலாற்றில் மக்களுக்கான நியாயமான அரசியலை முன்வைப்பது.தமிழ்பேசும் மக்களது அடிமை விலங்கொடிப்புக்கான தத்துவார்த்தத்தைக் கருத்தியற்றளத்திலும், போராட்டத் தளத்திலும் முன்னெடுக்கும் இந்த மூன்றாவது அணியைக் குதறுவதில் ஒரு பெருஞ் சதியைத் தொடரவிரும்பும் இந்திய உளவுத்துறைக்கு ஒத்துதூதும் "இலக்கியச் சந்திப்பு" ஓடுகாலிக்கூட்டம் தமது அழிப்பு அரசியலை மேலும் ஜனநாயகப் பண்புடையவர்களாகக்காட்டும் சந்தர்பங்களில், அவர்களது அரசியல்"தெரிவு"இதுவரை எதுவென்று காட்டிக்கொள்வதில் தம்மைத் தகவமைத்துவரும் தளமே வெட்டவெளிச்சமாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
 
 
அராஜகங்களுக்குத் துணைபோவதும்,மனித வாழ்வுக்குக் குறுக்கே நிற்கும் அதிகார வர்க்கத்தோடும் நட்புறுவை வளர்த்துக்கொண்டுள்ள இந்தக்கூட்டம் தம்மை இலங்கை அரச யுத்தக் கிரிமினல்களுக்கு எதிரான சக்திகளாக்கக் காட்டிப் புலம் பெயர் நாடுகளில் திட்டுமிட்டுச் சதிவலை பின்னுவதற்கான முனைப்பை மாற்றுக் கருத்தாகக்காட்டுவதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.அன்று புலிகளது அராஜகத்துக் எதிராகப் புலிகளை நேரடியாக எதிர்த்துக் கருத்தாடியும்,அவர்களது தவறான போராட்டப்பாத்திரத்தைக் கேள்விக்குட்படுத்தியும் இறுதிவரை போராடிய நாம், புலிகளது அழிவின்பின்னே இதுவரை மௌனித்திருந்துவிட்டு அரசியல் நடாத்தவரும் இந்தக் குழுக்களை மிக இலகுவாகவே இனங்கண்டாக வேண்டும்.இவர்கள் புலிகளது அழிவுக்கான அரசியலை அன்றே திணித்த இந்திய உளவு நிறுவனத்துடன் மிக நெருக்கமாக இயங்கிய நிலையில், இப்போது நேரடியாக அதே அரசியல் நிகழ்ச்சியை மக்கள் நலன்சார்ந்த அரசியல் தீர்மானமாகக்காட்டுவதில் தமது ஈனத்தனத்தை மறைக்க முற்படுகிறார்கள் என்பதை நாம் தோலுரித்துகாட்ட வேண்டும்.
 
 


 
 
இதுவரை இலங்கை அரசினது இனப்படுகொலையை எதிர்காது புலியழிப்புக் குறித்து உரையாடியவர்கள்,திடீரெனப் பஜனைகளை மாற்றிப்பாடுவதற்கானவொரு தளமாக இலக்கியச் சந்திப்பில்"தீர்மானங்கள்"நிறைவேற்றுகிறார்களாம்.இந்தத் தீர்மானத்தினுடாகத் தமிழ்பேசும் மக்களது அடிப்படை உரிமைகளைக் காப்பதற்கான முயற்சியிலும் தாம் ஈடுபடுவதாகக் காட்டுவதில் மகிந்த அரசினது அரசியல் நிகழ்ச்சி நிரலை புலம் பெயர் மக்களுக்குள் திணிப்பதிலும், அதனை உடைக்க முனையுஞ் சக்திகளைப் பிளப்பதற்கும் நித்தியானந்தன்-ராகவன்,நிர்மலாக் கூட்டத்தோடு நோர்வே சரவணன், பேர்ளின் ந.சுசீந்திரன் குடும்பமும் முழுமூச்சாகவே முனைவது அவர்களது இன்றை எஜமானர்களது தெரிவுக்கு அடிபணிவதாகவே இருக்கிறது.
 
 
இக்கூட்டம் இதுவரை தமிழ்பேசும் மக்களது துயரைச்சொல்லி உலக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி அமைப்புகளினது அரசியற்றேவைகளைச் செய்தபடி, தமது வருமானத்தைக் குறித்து இயங்கியவர்களென்பது நிரூபணமானவுண்மையாகும்.இத்தகைய அரசியல் மாபியாக்கள் மீண்டுமொருமுறை தமது கயமைமிகு நோக்கங்கட்கமைய இலக்கிச் சந்திப்பில் "தீர்மானங்"கொள்வதாகச் சொல்லுஞ் சதியில் இலங்கை அரசுக்குமிக அண்மையாகத் தமது கரங்களை இணைத்துப் புலம்பெயர் மக்களுக்குள் வேட்டையை ஆரம்பித்திருக்கிறார்களென்பது மிக நேர்த்தியாகச் சொல்லவேண்டிய செய்தி!இலங்கை அரசினது திட்டமிடப்பட்ட தமிழினப்படுகொலையை எந்தச் சந்தர்ப்பத்திலுங் கேள்விக்குட்படுத்தாத இக்கூட்டத்தின் திட்டமிடப்பட்ட அரசியல் சூழ்ச்சியானது தீர்மானங்களினூடாக மிகக் கறாராக இலங்கை-இந்திய அரசியல் அபிலாசைகளின் தெரிவாகவே நம் முன் கொட்டப்படுகிறது.இதன் உச்சமான தெரிவு இயற்கை மரணமெய்திய இ.முருகையனுக்கு அஞ்சலியாகவும் விரிகிறது!தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இவர்களுக்கு இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கழகங்களும்,மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் இருப்பைக் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டியுள்ளார்கள்.அது நாளாந்தம் மக்களை அழித்து,அந்நியர்களுக்கு அடிமைப்படுத்துகிறது.இத்தகைய அடிமை வாழ்வை சகஜமாக்க மக்களுக்கு "ஜனநாயகம்"சொல்கிறது இத்தக்கூட்டம்.
 
 
 
கடந்த ஆறு கிழமைகளுக்குமுன் இலங்கைப் பாசிச இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பல பத்தியாரும் மக்களது அழிவுகுறித்துப் பேசித் தீர்மானஞ் செய்யமுடியாத கபோதிகள்,அழிந்த மக்களது பிணங்களின்மீது காறி உமிழும் அரசியலை மகிந்தாவின் துணையுடன் நடாத்தி முடிக்கின்றார்கள்!"இலங்கையில் இனப்படுகொலையே நடக்கவில்லை"யெனத் தனது எஜமானர்களுக்கேற்ற அரசியலைப் பேட்டிகளுடாக முன்னெடுக்கும் சுசீந்திரன் போன்ற தனநபர்களின் விருப்புக்கொப்பச் சமுதாயத்தின்மீதான எதிர்காலத்தைக்குறித்துக் கதையளக்கும் இந்த "இலக்கியப் பிதா மக்கள்"தமக்குத் தேவையான அரசியலைச் செய்வதில் முனைப்படையுந் தருணம் சந்தேகத்துக்கிடமான அரசியல் பின்னணியோடு சம்பந்தப்படுகிறது.இது குறித்த மிகவும் சாதுரியமான ஆய்வு அவசியமானது இன்றைய சூழலில்.இலங்கையினது ஆளும் வர்க்கத்தோடு-அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது கணித்துக்கொள்ளத்தக்க எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிப்பதிலும்,அதன் தொன்மைமிக்க கருத்தநிலைத் தர்க்கத்தாலும், புதியவகைப் புரிதற்பாட்டினது கட்டுடைப்பின் மீதான மறுதலிப்பையும்-அதன் தன்னுணர்வுமிக்க ஒற்றைத்துருவ வியாக்கிமான கருத்துநிலை தாண்டா திடசங்கற்பத்தாலும்-தமது இருப்பின் மூலத்தையுறுதிப்படுத்தும் மனநிலையைத் தோற்றுவிக்கும் மாதிரி மனித்தேவைகளை -பெரும் பரபரப்பின் வாயிலாக் கொட்டி வைத்திருப்பதில் இதுகாறும் நிலை நாட்டி வருகிறது!இது,தமிழ்பேசும் மக்களது அரசியல் பிரச்சனை குறித்துப் பட்டறைகள் செய்வதென்ற போர்வையில் நிர்மலா(முன்னாள் நித்தியாநந்தன்) கொண்டியங்கும் அந்நிய ஏகாதிபத்தியத் தொண்டூழியத்தைப் புலம்பெயர் மக்கள் மத்தியில் மிக நாசூக்காகப் பரப்புவதில் இலக்கியச் சத்திப்பு உலகு தழுவி நடந்தேறுகிறது!
 
 
புலம் பெயர் எதிர்ப்பிலக்கியப் பாரம்பரியத்தின் அறிவின்மீது,மொத்தக் குத்தகைச் செய்தவர்கள் இந்தத் தளத்தின் மீது எவரொருவர் அறிவாந்த தேடலையிட்டுக் கொள்ள முனைந்தாலும் அந்தத் தேடல்மீதான எதிர்போக்கான மறுதலிப்பின் வினையாற்று குறிப்பிட்வொரு தளத்தில் தன் தர்க்கத்துக்குமாற்றான கருதுகோளை -அதன் உச்சபச்ச நிராகரித்தலூடாய் இருப்பிழக்கத்தக்க பனுவல்களாக மாற்றவதிலும்,குறுகிய மனத்தளவான மதிப்பீடுகளின் மாதிரிகளைக் கொண்டு வெற்றிடத்தை நிரப்புதலில் இதுகால வரை காலத்தைக் கடத்திவருகிறது இந்த இலக்கியச் சந்திப்பும், அதன் நிழல் தலைமைகளும்.இவர்களுக்கும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் புலம்பெயர் மக்கள்மீதான காயடிப்பு அரசியலெனும் வியூகத்துக்கிணையவே தொடர்கிறது.இது, அடக்குமுறையாளர்களோடு,அ ஒடுக்கப்படும் மக்களைக் கட்டிப்போடும் அரசியலை ஜனநாயகத்தினும்,அபிவிருத்தியினதும் பெயரில் தொடர்கிறது.இதற்கான திட்டமிடப்பட்ட பரப்புரைகளுக்கிசைவாகவே"தீர்மானங்களும்"-உரையாடல்களும்,பயிற்சிப்பட்டறைகளும் கட்டியமைக்கப்படுகின்றனர்.இத்தகைய பண்பினது விருத்தியே மாற்றுக்கருத்தாளர்களை மிகவும் பிளந்து குறுகிய இழிநிலைக் குழுக்கட்டல்களாக விரிந்து தனிமனித் தேவைகளை நிறைவேற்றுகிறது.பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்லிக்கொண்டு,இலங்கையினது இனப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.இத்தகைய சதிகாரர்களுடுடன் ஒரே மேசையில் உட்காருவதற்கு மேலுங் சிலர் நமக்குள்ளும் இருக்கத்தாம் செய்கிறார்கள்.அவர்கள் உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களது மறைக்கப்பட்ட செய்திகளையும் தொடர்ந்து கொணர்வதே தமது கடமையென்றும் தம்பட்டம் அடிப்பதில் திருப்திப்பட்டும் இருக்கட்டும்.
 
 
"சிந்தனையாளர்களின் அவை" ஒன்றிற்கான கருவூலப்பத்திரம் போதிப்பவர்களும்,அவர்களது நடுநிலையும்:
 
 
 
நமது மக்கள் பாவப்பட்ட மக்கள். பேதமையான உள்ளங்கொண்ட பாமர மக்களை எவர் காப்பாற்றுவார்?,புலியழிப்பு யுத்தத்தில் நாளும் பொழுதும் கொல்லப்பட்ட மக்களின்மீது எவர் கரிசனைகொண்டார்?இது குறித்து இலங்கையில் இனப்படுகொலையே நடக்கவில்லையென மூடி மறைத்த கபோதிகள்தாம் இப்போது"சிந்தனையாளர்களின் அவை"ஒன்று தேவையெனப் பசப்பு வித்தை காட்டுகிறது.தமது எஜமானர்களது வியூகங்களை ஆங்கிலத்தில் எழுதித் தமிழ்ப்படுத்துகிறது தமிழ்ச் சமுதாயத்தின் விடிவுக்காகவாம்.தேவை ஏற்படும்போது வெளிநாட்டு நிபுணர்களினது உதவியோடு சிந்தனையாளர்களின் அவை பற்பல திட்டங்களைச் செயற்படுத்துமாம்.அதுவும் பக்கச் சார்பற்று.கேட்கவே புல்லாரிக்கிறது.
 
 
கடந்த முப்பதுவருடமாகப் புலிகளது போராட்டத்தில் காணாத புதுமைகளெல்லாம் இங்கு நடந்தேறுகிறது.ஆனால் ஒரு ஒற்மை என்னவென்றால் வெளிநாட்டு நிபுணர்களின் உதவி என்பதில் புலிகளது போக்குள் இவர்களும் முனைப்புறுவது சாட்சியாகிறது.அடுத்து இவர்களோடு இணைபவர்கள் தமது கடந்தகாலத்து நடவடிக்கைகள் குறித்துக் கேள்வியெழுப்புவது அமைப்பைச் சிதைப்பதில் முடிவுறும் என்பதால்-அதைத் தவிர்த்தபடி கூட்டாகக் கோவிந்தா போடும்படி வற்புறுத்தப்படுகின்றனர்.
 
 
ஆம்!,இவர்கள் யார்?
 
 
இவர்களுக்கும்,ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்களுக்கும் என்ன தொடர்பு?
 
 
பக்கச்சார்பு அற்ற நடுநிலைமையாகச் சிந்திக்க முடியுமா?இலங்கை ஆளும் வர்க்கம் உலக ஆளும் வர்க்கத்தோடிணைந்து விடுதலைவேண்டிப் போராடும் தேசிய இனங்களை இலங்கையில் ஒடுக்கிறது.அது முஸ்லீம் சமுதயாத்தை,மலையகத் தமிழர்களை,ஈழத்தமிழர்களை பூண்டோடு நசுக்கி வருகிறது.நீண்டகால அடிப்படையில் தேசிய இனங்களை வேட்டையாடிச் சிங்களத் தேசிய இனத்துக்குள் திணிக்கும் முயற்சில் அரசியலைக் கொண்டியங்குகிறது.இத்தகைய அதிகாரத்துக்கும்-ஆட்சிக்கும்,ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் இடையில் நடு நிலைமை ஒன்று உண்டா?
 
 
ஒடுக்குபவனும் நோகமால்,ஒடுக்கப்படுபவனும் நோகமால் நிடுநிலைமை ஒன்று உண்டென்றால் அதையேன் ஒடுக்குமுறையாளன் கைக்கொள்வதில்லை?
 
 
பொய்யர்கள் தமது அடிமைச் சேவகத்தூடாகத் தமது பதவிகளைப் பணத்தைக் குறித்து இங்ஙனம் மக்களை வேட்டையாடுவதில் தமது பிழைப்புக்காகப் பொய்யுரைக்கின்றனர்."நடுநிலை-பக்கச் சார்பில்லாத" என்ற துரோகப் பாதையில் இதுவரை தமது பாத்திரத்தை உறுதிப்படுத்தி முன்னாள் புலிகள் இந் நாள் "ஜனநாயகச் சிந்தனையாளர்கள்"என்ற ஓடுகாலிகள் தமது அரசியலை இத் துரோகத்தின்வழி நிறுவுவதற்காகத் தமது கடந்தகாலத்துரோகத்தை-வர்க்கச் சார்பை மறைக்கக் கடந்தகாலத்தைப்பற்றிப் பேசாத "நடுநிலை"குறித்து"சிந்தனையாளர்களது அவை"கட்டுகிறார்கள்.இங்கே,சிந்தனையைத் தவிர மற்றெல்லாச் சதியும் நிறைந்தே காணக்கிடைக்கிறது.
 
 
இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் போராட்டச் சூழலில் இலங்கையில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.தமிழ்பேசும் மக்களின் பிரச்சனையுள் மிக நெருங்கிய உறவுடைய நாடான இந்தியாவின் கபடத்தனமான பொருளாதார ஆர்வங்கள் இலங்கையைக் கூறுபோட்டுக் காரியமாற்றுவதல்ல.மாறாக, இனங்களின் -பிரதேசங்களின் முரண்பாடுகளைக்கூர்மைப்படுத்தி அந்தந்த இனத்தின் வீரியத்தை-படைப்பாற்றலை முழுமையாக அழித்து அந்தத் தேசத்தை முழுமையான தனது அரசியல் ஆதிக்கத்துக்குள் நிலைப்படுத்துவதே அதன் நோக்கமாகும்
 
 
 
இதற்காகப் புலம்பெயர் தளத்தில் இத்தகைய கைக்கூலி மேட்டுக்குடித் தமிழர்கள் மும்மரமாகச் செயற்பட்டுவருகிறார்கள்.இவர்கள் தமது வர்க்க நலனது அடிப்படையில் போடும் திட்டங்கள் கடந்த மே வாதம்வரை இலட்சம் மக்களைப் பலிகொண்ட அரசியல் வரலாற்றில் இப்போது சிந்தனையாளர்களின் அவை எனும் அரசியில் போக்கிரித்தனத்துடன் நடுநிலை-பக்கச்சார்பற்ற போக்கக் குறித்துப் புனைகிறது."கேட்பான் கேனையனானால் கேழ்வரகில் தேன் வடியும்" என்பதுபோற்றாம் இவர்களது அதிரடிக் கொன்செப்ற் நடந்தேறுகிறது.முகத்தை நன்றாக மூடியபடி ஓடுகாலி சிவராஜன் வழி இது மின்னஞ்சலாகப் பலரிடம் சுற்றுக்கு வருகிறது.
 
 
இன்றைய உலக நடப்பில் யுத்தங்களின் பின்னே ஒளிந்திருக்கும் அந்நிய நலன்கள் தமது பொருளாதாரத்தைக் குறைந்தளவாவது காப்பாற்ற முனையும் அரசியலைக் கொண்டியங்குகிறது.இன்றைய நிலவரப்படி மேற்குலகப் பொருளாதாரம் கனரக வாகனங்களினதோ அன்றிக் கார் உற்பத்தியையோ நம்பிக் கிடக்கவில்லை!முழுக்கமுழுக்க யுத்த ஆயுதத் தளபாடவுற்பத்தியை நோக்கியே அது விரைவாகக் காரியமாற்றுகிறது.இன்றைய இனப்பிரச்சனைகள் முடிவுக்குவராத தேசங்களை நோக்கி உற்பத்தியாகும் ஆயுதங்கள் நகர்ந்தாகவேண்டும்.எனவே,இத்தகைய தேசங்களில் இனங்களுக்கிடையிலான பிரச்சனைகள் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கவேண்டும் என்பது எழுதாத மேற்குலக நலன்சார்ந்த தீர்ப்பு.இன்று உலகு தழுவிய ஆயுதக்கொள்வனவு வருடத்துக்கு 1464 பில்லியன்கள் டொலராகும்.தற்போதைய பொருளாதார நெருக்கடியை ருஷ்சிய தனது ஆயுத ஏற்றுமதியால் தணித்து வருகிறதென்று ஜேர்மனிய முன்னணிச் சஞ்சிகைகள் எழுதுகின்றன.இந்த நிலையில் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்குள் அடக்கம்பெறும் மனிதவுரிமை வாதிகளெனும் போர்வையில் நம்மையும் உலகையும் ஏமாற்றும்"நிபுணர்களான"டாக்டர் இயன் மாட்டின்,மற்றும் "சேர்" நைஜைல் றொட்றி போன்றவர்கள் இந்தத் தமிழ் துரோகச் "சிந்தனையாளர்கள் அவை"கட்டவிரும்பும் இந்திய இலங்கைக் கைக்கூலிகளுக்கு விடிவெள்ளிகளாகிறார்கள்.
 
 
இத்தகையவர்களை அழைத்து என்ன பேசுவார்கள்?
 
 
 
ஓடுக்குமுறையாளகளான தமது எஜமானர்களை எங்ஙனம் ஒடுக்கப்படும் வர்க்கத்து மக்களிடமிருந்து காப்பதென்ற அரசியல் ஆய்வுகளா?பெரும்பாலும் நமது மக்களுக்கு இப்போது எவரெவரோ அரசியல் சாசனம் எழுதுகிறார்கள்.இப்படித்தாம் ஒடுக்குமறையாளர்களான மகிந்தா குடும்பமும் நமது மக்களுக்குத் தேவ தூதர்களாகப்பட்டுப் பக்கச் சார்பற்ற சிந்தனை அவசியமாகப்படுகிறது.இது கடந்தகாலத்தைப் பற்றி எவரொருவரிடமம் கேள்வி கேட்காது அவர்கள் சொல்வதை அப்படியே சிரமேற்று நம்பச் சொல்கிறது.நம்மைக் கருவறுக்க நமக்குள்ளேயே முரண்பாடுகளை வளர்த்து அவற்றைத் தமது அரசியல் அறுவடைக்காகக் காரியமாற்ற அந்நியர்கள் நமது மக்கள்சார்ந்து இயங்கும் அரசியலை அழித்துள்ளார்கள்.இதன் தொடரில் இலக்கியச் சந்திப்புக்குள் தமது எஜமானர்களைக் காக்கும் கூட்டம் இன்னொரு வகையில்"சிந்தனையாளர்களின் அவை"ஒன்றை நிறுவுவதில் தமது அதிகாரங்களைக்காத்துக்கொள்வதற்கும் அதன் இரூபத்தில் அந்நிய எஜமானர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தமது நலன்களைக் காக்கவும் முனைகின்றார்கள்!;இதன் வாயிலாக நமது மக்களின் ஒருமைப்பாட்டைக் குலைத்துத் தனிமைப்படுத்தித் தம்மைப் பலப்படுத்துகிறார்கள்.இதன் வாயிலாக அதிகாரமையங்களைத் தமது அரசியல் நட்பு சக்திகளாக்கி இலங்கை மக்களின் முதுகில் குத்தி வேட்டையாட இந்தக் கைக்கூலிக்கூட்டம் பற்பல வடிவங்களில் நம்முன் வருவதென்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.இது புரட்சிக்கு எதிராக இயங்கிய அந்நிய ஏவற்படையான புலிகளது பாத்திரத்தைப் புதிய வடிவிலும் கருத்தியற்றளத்திலும் ஏற்கத் தயாராகும் அறிகுறியாகவே இனங்காணவேண்டும்.புலிகள் எப்படி எதிர்ப்புரட்சிகரச் சக்தியாக உருவானர்களோ அங்ஙனமே அதன் வெற்றிடத்தில் இத்தகையவொரு கூட்டம் மிக விரைவாக அந்நியச் சக்திகளால் நமக்குள் முன் தள்ளப்படுகிறார்கள்.இத்தகைய மக்கள்விரோதிகளுக்கு அந்நியத் தேசங்களது உளவு நிறுவனங்களே நிதியீடும் செய்து இவர்களைத் தமது நம்பகமான கையாளகவும் பயன்படுத்தித் தமிழ்பேசும் மக்களை மிக நுணுக்கமாகக் கண்காணிக்க முனைகிறது.இதன் தொடராக நமக்குள் கொட்டப்படும் கருத்துகள்,நமது மக்களது விடிவுக்கானதாகவும் பரப்புரை செய்யப்படுகிறது!
 
 
இலங்கை உழைக்கும் மக்களினது உரிமைகளைக் குதறி இலங்கையின் சுய வளர்ச்சியை முடுக்கி அதன் அரசியலை மிக இழிவான பாசிச நிலைக்குள் இருத்திவைத்து, மக்களின் சகல படைப்பாற்றலையும் கட்டுப்படுத்தித் தமது பொருள்களையும்,அத்தகைய பொருள்களை உற்பத்தி செய்யும் கூலிகளையும் இலங்கையில் பெற்றுக்கொண்டு கூடவே நீண்ட கால நோக்கில் இலங்கையைத் தமது இராணுவக் கேந்திரப் பரப்பாக்குவதில் வெற்றீயீட்டி வருகிறது ஏகாதிபத்தியங்கள்.இவர்களுக்குச் சேவகஞ் செய்யவும்,இலங்கைப் புரட்சியை ஒடுக்கவும் ஆயுதமற்ற புலிகளை நமக்குள் முன்தள்ளும் இந்த அந்நிய உளவு அமைப்புகள்"சிந்தனையாளகளின் அவை"கட்டவும்,இலக்கியச் சந்திப்புச் செய்யவும் குறிப்பட்ட கயவர்களுக்கு அனைத்து வளங்களையும் கொடுத்து நம்மை மொட்டையடிப்பதில் குறியாக இருப்பதென்பதை நாம் இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.இவர்களை வேரோடு கருவறுக்க இன்னுமின்னும உறுதியோடான வர்க்க உணர்வோடு புரட்சிகர அரசியலை நாம் முன்னெடுபபதே அவசியமானதாகும்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
 
07.07.2009

(இலக்கியச் சந்திப்புப் படங்கள் தலித்துநெட்டுக்குச் சொந்தம்.அதற்கு நன்றி!)


P/S:கீழ்வரும் குறிப்பானது ஓடுகாலிகள் வரைந்த குறிப்பாகும்.இவர்கள் இந்திய-இலங்கை உளவு அமைப்புகளோடு நேரடியான முறைகளில் இயங்கும் தள அரசியலைக் கொண்டியங்குவதென்து உண்மையானது.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் அவலநிலைக்கு விடிவுகாண,வழிவகை செய்ய புலம்பெயர் தமிழர்களுள் சிந்தனையாளர்களின் அவை ஒன்றிற்கான கருவூலப்பத்திரம்.


ஐ. அறிமுகம். (திருத்தம்) யுத்தத்தின் பின் இலங்கைவாழ் தமிழரின் நிலைமையும் அவர்களின் எதிர்காலழும் கவலைக்குரியதாக இருக்கிறது. ஆதனால் இவ்விடையத்;தில் அக்கறை கொண்டுள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள அறிவாற்ரல் மிக்கோரின் சந்திப்பு ஒன்று அவசியமானது. இந்த அவசியத்தை நிறைவேற்ர ஒர் அவை தேவை. அப்பேர்பட்ட அவையின் நிர்மாணத்தன்மைபற்றி இவ் ஆவணம் முன்கூறமுனைகின்றது. அச்சந்திப்பில் அக்கற்றறிந்தவர்கள் இலங்கைத் தமிழ் மக்களின் தற்போதய நிலையில் உதவ எப்படிப் பங்களிக்கலாம் என்பதை ஆராயமுற்படுவதும் இந்த கருவூலப்பத்திரத்தின் நோக்கமாகும்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்களுள் கடந்த கால நிகழ்வுகளின் சரி, பிழை பற்றி விமர்சிப்போர் எம்மத்தியில் உள்ளனர் என்ற நிலையை ஏற்றுக்கொண்டு அப்பேற்பட்ட அனைவரையும் ஒன்றிணைத்து பக்கச்சார்பற்ற நடுநிலைமையைக் கொண்ட கற்றறிந்த தமிழர்களின் அவை தமிழர்களுக்காக செயற்பட வேண்டியது அவசியம் எனக் கருதப்படுகின்றது.


ஐஐ.இலக்கு.


இலங்கைத் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த பாரம்பரிய பூமியில் சுயகௌரவத்துடனும் ஒரு ஜனநாயக சமூகத்தில் பிரஜைகள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் கொண்ட ஒரு சமூகம் ஆக வாழ்வதற்கு வழிவகை செய்தல்.


ஐஐஐ.நோக்கம்.


1. ஆரம்ப கட்டமாக ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சகலரையும் பிரதிநிதிப்படுத்தக்கூடிய பக்கச்சார்பற்ற சிந்தனையாளர் அவை ஒன்றை அமைத்தல்.


2. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தமிழர்களின் விடயங்கள் பற்றிய கருத்து வேறுபாடற்ற விடயங்களை அடையாளம் காணல்.


3. அங்கத்தவர்களைப் பிளவு படுத்தக்கூடிய கருத்து வேற்றுமை உள்ள முக்கியமான விடயங்களை வேண்டுமென்றே கலந்துரையாடுவதைத் தவிர்த்துக்கொள்ளல். அவ்வாறு செய்வதன் மூலம் குறித்த கருத்து வேற்றுமை உள்ள விடயங்கள் பற்றிப் பேசுவதில்லை என்பதில் இணக்கம் கொண்ட ஒரு ஐக்கிய அவையை உருவாக்குதல்.


4. குறித்த அவை தமது இலக்கை அடைவதற்கு சர்வதேச நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று குறித்த இடைவேளைகளில் சந்தித்து தமது இலக்கை அடைவதற்கான வழிவகைகளை நிர்ணயித்துக்கொள்ளல்.


5. மேற்குறித்த இலக்கைக் கொண்ட வேறு அமைப்புக்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுதல்.


ஐஏ. வழிமுறைகள்.


1. மேலே குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்கு ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் கற்றறிந்த தமிழர்களைக் கொண்ட ஒரு நடுநிலைமையான சிந்தனையாளர் அவை ஒன்றை உருவாக்க ஊக்குவித்தல். இவ்வகையான சிந்தனையாளர் அவை உச்சநிலை சிந்தனையாளர் அமைப்பொன்றிற்கு கருத்தூட்டும் “தளநிலை அமைப்பு” ஆக இருக்கும்.
2. இவ்வகையான ஒவ்வொரு “தளநிலை சிந்தனையாளர்” அமைப்பும் தெரிவு செய்யப்பட்ட செயற்குழு ஒன்றையும், தலைவர் ஒருவரையும் கொண்டதாக இருக்கும்.


3. இவ்வகையிலான தளநிலை அமைப்புக்கள் குறித்த இடைவேளைகளில் சந்தித்து சொல்லப்பட்ட இலக்குகளோடு சம்பந்தப்பட்ட விடயங்களைக் கலந்துரையாடித் தீர்மானம் எடுக்கும்.


4. அவ்வாறு எடுக்கப்போகும் தீர்மானங்களை தமது பிரதிநிதிகள் மூலம் உச்சநிலை சபைக்கு அதன் அடுத்த கூட்டத்தில் முன்வைக்கும்.
5. ”தளநிலை சிந்தனையாளர்களின்” செயற்குழுவில் இருந்து 3 உறுப்பினர்கள் ஐரோப்பாவின் உச்சநிலை அமைப்பின் குறித்த நாட்டின் சிந்தனையாளர் குழுவின் பிரதிநிதிகளாக இருப்பர்.


6. இவ்வகையில் உருவாகும் உச்சநிலை அவை குறித்து இடைவேளைகளில் சந்தித்து அவ்வப்போது எழும் விடயங்களைக் கலந்தரையாடி இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை நிர்ணயிக்கும்.
ஏ. பொதுக்குறிப்புகள்.


இக்கருத்தில் நுட்பங்களை அலசி ஆராய ஏதேனும் ஒரு நடைமுறையில் உள்ள அமைப்பு வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருத்திற்கு இணக்கம் ஏற்படின் அதற்கென ‘கருத்துப் பரிமாற்றப் பட்டறை’ ஒன்றை நடாத்தி இவ் ஆலோசனைகளின் நுட்பங்களை ஆராய்ந்து நிறுவன நடைமுறை ஒழுங்குகளையும் தயாரித்து குறித்த அமைப்புக்களை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும்.


கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:


1. ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒவ்வொன்றிலும் சகல தமிழர்களுடைய கருத்துக்களையும் பிரதிநிதித்துவப்படக்கூடிய சிந்தனையாளர்களை ஒன்றிணைத்துக் குழுக்களை அமைக்க முயற்சித்தல். இவ்வகையில் உருவாகும் ஐரோப்பாவின் உச்சநிலை அமைப்பு ஏனைய கண்டங்களில் வாழும் தமிழர்களின் சிந்தனை அமைப்பு அமைய முன்மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


2. குறித்த சிந்தனையாளர் குழுக்களை அமைக்கும் போது தள மட்டத்திலும், உச்ச மட்டத்திலும் இக்குழுக்கள் புலம்பெயர்ந்த தமிழ் பேசுபவர்களுள் போதிய எண்ணிக்கையிலான மகளிரையும் சேர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.


3. இவ் அமைப்புகள் சகலவற்றிலும் தமிழர்களின் பிரச்சினை தொடர்பான கடந்த காலத்தில் நடைபெற்ற எந்த ஒரு விடயத்தைப் பற்றியும் பேசுவதோ, கலந்துரையாடுவதோ இல்லை என்ற ஒழுங்கு விதியை கடைப்பிடித்தல் வேண்டும். இவ்வாறு ஒழுங்கத்தவறின் எமது நோக்கத்தை அடைவதற்கான செயற்பாடுகளில் பாதகம் ஏற்படும்.


4. கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல் முதலியவைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ நடத்தக்கூடியதாக இருத்தல் வேண்டும். ஆங்கிலத்தில் தேவைப்படின,; தமிழில் சமகாலத்தில் மொழிபெயர்ப்பதற்கான ஒழுங்குகள் இருத்தல் வேண்டும். கூட்டப்பதிவுகள் ஆங்கிலத்தில் இருந்தால் சர்வதேச தொடர்புகளுக்கு இலகுவாக இருக்கும்.


5. தேவையேற்படும் தருணத்தில் கருத்துப் பட்டறைக்கோ அல்லது வேறு எந்தக் கூட்டத்திற்கோ அனுபவம் வாய்ந்த சர்வதேச நிபுணர்களைப் பங்கு கொள்ளச் செய்யலாம்.


6. எத்தறுவாயிலும் எக்கூட்டத்திற்கும் சிறப்பு சொற்பொழிவாற்ற கலாநிதி இயன்மாட்டின், சேர் நைஜல்றொட்றி போன்ற நிபுணர்களை அழைத்துக்கொள்ளலாம். (இப்பத்திரத்தில் உள்ளவை ஆக்கியோனின் சிந்தனையே. தேவையேற்படின் கூட்டிணக்கத்தின் மூலம் வேறு கருத்துக்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.)



மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...