Sunday, April 26, 2009

கருணாநிதியோ அல்லது புலிகளோ தத்தம் வர்க்கத்துக்கு...

ஜெயலலிதா:தமிழீழத்தைப் பெற்றுத் தருவேன்.


ரோசா வசந்தின் பதிவில் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடும் தீர்மானங்கள் நிறைவேறுகின்றன.பெரும் "படிப்பாளிகள்" தமது தரப்பு நியாயங்களை ஈழமக்கள் சார்பாகவும் சொல்கிறார்கள்.கூடவே,ஜெயலலிதாவின் "தமிழீழத்தையும்" நாம் உடைத்துப் பார்ப்போம்.டாக்டர் தங்கமணி சொல்வதையும் அங்ஙனமே...


இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போக்குக்கேற்றதான கோசமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இன்றைய கருத்துக்களைப் பலர் பார்க்கின்றனர்.இந்த மக்கள் விரோத அரசியல்வாதி, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குக் கொஞ்சமும் சளைத்தவர் இல்லை!பாசிசப்போக்குடைய தமிழகத்துக் கட்சி அரசியலில்,காலத்துக் காலம் மக்களை முட்டாளாக்கியும்-வருத்தியும்,கொலைகள் செய்தும்,தேர்தல் வன்முறையூடாகத் தம் கட்சிகளை வெல்லவைப்பதில் கட்சியாதிக்கம் ஒரு பெரும் சமூகக் குற்றத்தையே வழமையான-அன்றாட நிகழ்வாக்குவது.இன்று, இத்தகைய கட்சிகளின் தலைமைகள், தம் பின்னே திரண்டிருக்கும் நிதி மூலதனத்தை வைத்துப் பெரு வர்த்தகங்களில் ஈடுபடும் நிலையில்,கட்சித் தலைமை தாம் வாழும் மண்ணில் பெரும் ஆளும் வர்க்கமாக மாறியுள்ளது.மக்களதும்,தொண்டரதும் தயவில் கட்சி உருவாகிய காலம்போய்,இப்போது நிதி முலதனமிக்க குடும்பங்களின் கைக்கு மாறியதானவொரு சூழலில் ஜெயலலிதா-கருணாநிதி குடும்பங்கள் தமிழ்நாட்டில் ஆளும் வர்க்கமாகப் பரிணமித்திருக்கிறார்கள்-இவர்களுக்கும் அந்நிய தேசங்களுக்கும் நேரடியான தொடர்புகள் இருக்கின்றன.இக் குடும்பங்களுக்கும் உலக வங்கிகளுக்கும் பெரும் நெருக்கமான பொருளாதார வியூகங்களில் உறவுகள் இருக்கின்றன.


இவர்களது வாயிலிருந்துவரும் வார்த்தைகளை-அரசியல் கோசங்களை நம்பிக் கொள்வதற்கும்,அதையே தமிழ் நாட்டினதும்,இந்தியச் சட்டவாக்கத்துள்ளும் எதிர்கருத்தாகவும் பலர் ரோசாவசந்தின் தளத்தில் கருத்துக்கட்டுகிறார்கள்.பாசிச ஜெயாவுக்கு ஓட்டுப் போடுங்காரணங்களாக,கருணாநிதி ஈழத்தமிழருக்குச் செய்த"துரோகமும்"ஒரு காரணமாக இருக்கிறது.


இங்கே,கருணாநிதியோ அல்லது புலிகளோ தத்தம் வர்க்கத்துக்குத் துரோகமிழைக்காத நிலையற்றாம் அரசியல் செய்கிறார்கள்.இவர்களை நம்பி அரசியல்-தமிழீழப் போராட்டஞ் செய்தவர்களது இலக்கு இன்று எத்தகைய நிலையில் நிற்கிறதென்றவுண்மையிலும், கருணாநிதியைத் துரொகி என்பவர்கள் வடிகட்டிய அரசியல் குருடர்கள் என்பதுதாம் உண்மை!அதுபோல், ஜெயலலிதா தனது ஆட்சியில்-தன்னால் தமிழீழம் பெற்றுத்தரமுடியுமென்பதை இந்தியச் சட்ட எல்லைக்குள் தடைசெய்யப்பட்ட கருத்தின் எதிர்ப்பாகப் பார்ப்பவர்களும்,ஜெயலலிதாவால் சுயமாக எதுவுஞ் செய்ய முடியுமென்பவர்களும் அரசியல்-வர்க்கம்,மற்றும் பொருளாதாரம் குறித்தும்,சமூகவியலில் பூச்சிய நிலையிலுமே இருந்து கருத்துக்கட்டுகிறார்கள்.


ஓட்டுக் கட்சிகளை நம்பி, ஓட்டுப்போடும் அரசியல் ஜனநாயகமாகக் கட்டப்பட்ட பூர்ச்சுவா ஜனநாயகத்தில், குட்டிப் பூர்ச்சுவாக்கள் போடும் கோலம் மிகவிரைவிலையே ஆளும் கட்சிகளது அராஜய மழையில் அழிந்துவிடும்.இதைக் குறித்து வரலாறு பலதை நம்முன் விட்டுச் சென்றாலும் இத்தகைய மனித அகவிருப்பு எதையுமே தர்க்கத்தோடு உள்வாங்க மறுக்கிறது என்றும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்வோம்.


இன்றைய தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஈழத்துக்கான ஆதரவு என்பதைத் தங்கமணியின் கருத்தினடிப்படையில் பலர் ஏற்கிறார்கள்.ஆனால், இது மிகத் தவறானவொரு பாத்திரத்தைத் ஈழமக்களுக்கு வழங்கப் போகிறது.தங்கமணியின் கருத்து:



1. ஜே தனது சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் சில முடிவுகளை எடுக்கக்கூடியவர்; அது அரசியல்இ பணரீதியான லாபங்களைத் தாண்டியும் இருக்கக் கூடும். அப்படியான முடிவுகளை மு.க செய்யத்திராணியற்றவர். ஈழப்பிரச்சனை ஜெயின் அப்படியான ஒரு முடிவா என்பதை இப்போது சொல்ல முடியாது எனினும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதே.



2. இதனால் விளையும் உடனடி பெரும்பலன் என்பது இது வரை ஊடகங்கள் மூலம் இந்திய ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு வாய்ப்பூட்டை உடைத்திருப்பதுதான். அதாவது ஈழப்பிரச்சனையை குறிப்பாக தனி ஈழத்தைப் பற்றி பேச முயலும் போதெல்லாம் அது இந்திய இறையாண்மைக்கும் இலங்கை இறையாண்மைக்கும் எதிரானது என்ற உம்மாச்சி கண்ணைக் குத்தும் என்கிற தோரணையில் ஆன பயத்தை மெல்ல விதைத்து (அதில் ஜெக்கும் பங்கிருக்கிறது) அதை இன்று கண்டபடி வளர்த்து அதன் நிழலில் அடக்குமுறையை ஏவிவிட்டு எல்லா தனி ஈழம் குறித்த எல்லா விவாதங்களையும் இந்த ஒற்றை கெட்ட வார்த்தையில் (இறையாண்மை) கண்டனம் செய்யும் போக்குக்கு இது நிச்சயம் எதிரான குரல். இதன் மூலம் தனி ஈழம் என்ற கருத்தாக்கத்தை இந்த தேர்தல் காலத்திலாவது விவாதிக்க மற்றவர்களுக்கும் இடம் உண்டாகி இருக்கிறது. அடக்குமுறையை அரசு பயன்படுத்த யோசிக்க வேண்டி இருக்கும்.



3. ஜெயின் இந்த மாற்றத்தை ராமதாஸ் மற்றும் வைகோ பயன்படுத்தி அவருடன் ஒரு குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் உண்மையாக ஒன்றுபட வாய்ப்பிருக்கிறது. எல்லா தமிழின ஆதரவாளர்களும் நேரடியாக இதன் அடிப்படையில் ஒன்றுபட்டு இதை ஜேயின் இந்த முடிவை மாற்றமுடியாத பார்வையாகஇ நிலைப்பாடாகச் செய்யலாம். இன்றைய இலங்கையின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் தமிழர் நலன் பேணப்படும் என்ற காங்கிரஸ் தயாரிப்பு (திமுக முகவராக செயல்படும்) விளக்கெண்ணை லேகியத்துக்கு எதிரான ஒரு வலுவான மாற்றுக்கருத்தை உருவாக்க எதிர்காலத்தில் பயன்படும்.



4. இங்கு குறிப்பிட்ட படி மு.க அடையாளம் காணப்பட்டது அவரது (சொல்லிக்கொண்ட) தமிழின நலன் என்ற அடிப்படையில் தான். இனி மெல் அப்படியான ஒரு நிலை இல்லாத போதுஇ வெளிப்படையாக யார் தமிழ்ஃ தமிழர் நலனை முன்னிலைப்படுத்துகிறார்களோ அவர்கள் ஆதரிக்கப்பட வேண்டியதுதான்.



அன்பு வாசகர்களே,மேலே தங்கமணியை வாசிப்பவர்களுக்கு இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிராக ஜெயாவின் குரல் இருப்பதாகவும்,அது,ஈழம் குறித்த இந்நியாவின் நிலைக்கு எதிரானதாகவும்,இத்தகைய குரலால் சில மாற்றங்கள் வரக்கூடிய சூழல் உருவாகுமென்று அர்த்தப்படலாம்.






இஃது, முற்றிலும் தவறானதென்பதற்கு நாம் கடந்தகாலத்தில் செய்த ஈழப்போராட்டத்தில், இந்தியாவின் பங்கு என்னவென்றும்,இந்தியா வளர்த்த ஆயுதக் குழுக்களுக்கு எத்தகைய உத்தரவாதத்தை "ஈழத்தின்"பெயரில் செய்ததென்றும் நன்றாகவே தெரியும்.இந்தியாவானது "தமிழீழம்" வென்றுதர முனையும் இயக்கங்களுக்குப் பக்கப்பலமாக இருக்கும் என்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் குரலின்பின்னே, இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது இனவாத அராஜகத்துக்கு எதிரான தமிழ் பேசும் மக்களது விடுதலை வீறுகொண்டெழுந்த நிலையில், அதைத் திசைதிருப்பித்"தமிழீழம்"எனும் கோசத்தின்வழி புரட்சியைக் காயடித்தது இந்திய ஆளும் வர்க்கமாகும்.இது, வரலாறு!ஒவ்வொரு இயக்கத்தையும் ஒன்றுக்கொன்று பகையாக்கி நமது புரட்சிகரச் சக்திகளைப் பூண்டோடு அழித்த இந்திய ஆளும் வர்க்கமும், அவர்களது வளர்ப்புப்பிராணி ரோவும் இன்று மீளவும் அதே திருவிளையாடலுடன் ஜெயலலிதாவின் குரலாக நம்மை நெருங்குகிறார்கள்.


இது,ஏன்?:


1):ஈழமக்களது இன்றைய அழிவுக்கு இந்திய ஆளுங் காங்கிரஸ் ஆட்சியாளர்களே காரணமென்ற உண்மையில் தமிழக மக்கள் கொதித்துப் போய் உள்ளனர்.இதை வெல்வதற்கானதும்,ஓட்டு வங்கியுமாக உபயோகிக்க ஆளுங்கட்சியோடு கூட்டணியற்ற ஜெயலலிதா மீளவும் ஈழ ஆதரவு பேசியாக வேண்டும்.


2):கருணாநிதியின் கட்சி ஆளுங் காங்கிரஸ்கட்சியுடன் மத்தியில் கூட்டணி வைத்திருப்பதால் அது தனது வர்க்க நிலையில், இந்தியப் பெரும் தரகுமுதலாளித்துவத்துடன் ஒத்துப்போவதைத் தவிர அதற்கு வேறுவழியில்லை.எனவே,ஈழத் தமிழருக்கு எதிராக இந்திய மத்திய அரசு செய்யும் பிராந்திய நல அரசியலை அது தலைசாய்தத்து வரவேற்கிறது.இந்த நிலையில் கருணாநிதியை மிக இலகுவாகத் தோற்படிப்பதற்கு இக்கோசம் தமிழகத்தில் மீளவும் உற்பத்தி செய்யப்படவேண்டும்.இது,இந்திய ஆளும் வர்க்கத்து ஒரு பிரிவினரின் எதிர்பார்ப்பு.


3):இன்றைய ஈழமக்களின் அரசியலில் புலிகளது அழிவுக்குப் பின்பான காலத்தைச் சரியாக மதிப்பிடும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நோக்கம்.அதாவது, நாம் அட்டைக்கத்தி வீசிப் புரட்சி பேசதவர்கள்.குறுகிய காலத்துக்குள் இலட்சம் மக்களைப் பலியெடுத்துப் போராட்டஞ் செய்தவர்கள்.எமது மக்களது விடிவு இன்னும் கைகூடவில்லை.முரண்பாடுகள் அப்படியேதாம் இருக்கின்றன.அம் முரண்பாட்டைக் கையிலெடுத்த இந்திய,அந்நியக் கைக்கூலி இயக்கத்தின் அழிவோடு,பாடங்கற்கும் புதிய தலை முறை, புரட்சிகரமாகச் சிந்திக்கும்.அது,போலித்தனமான அந்நிய நலன்களின் முன்தள்ளப்பட்ட தமிழீழக் கோசத்தை மறுதலித்து இலங்கை தழுவிய புரட்சிகரப் பணியை முன்னெடுக்கும்.இது,இந்நியாவின் தலைக்மேல் இருக்கும் நேபாளத்தின் நிலைக்கு இலங்கையை இட்டுச் சென்று, அதனது காலடியிலும் ஒரு நேபாளத்தை உருவாக்கும்.இதைத் தடுப்பதற்கு,மேலும் தமிழீழக் கனவு இளையவர்களிடம் பரப்பப்படவேண்டும்.தமிழீழத்தை ஜெயலலிதா பெற்றுத் தருவதென்ற கூற்று, இங்கே இவ் நோக்குக்கிணங்க இன்று முன் தள்ளப்படுகிறது(இது குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்).


4):இந்திய ஆளும் வர்க்கத்தின் இரு பிரிவுகளில் ஒன்று காங்கிரசையும், இன்னொன்று பாரதிய ஜனதாவையும் ஆட்சிக்குக்கொணரத் துடிக்கின்றன.இதில்,காங்கரஸ் ஆட்சியில் பழிவேண்டப்பட்ட ஈழமக்களைச் சொல்லி தமிழ்நாட்டில் தமது வேட்டையை ஆரம்பிக்கும் பாரதிய ஜனதாவின்பின்னே நிற்கும் இந்திய ஆளும் வர்க்கதின் ஒரு பிரிவு,தொடர்ந்து தனது இருப்புக்கும் இலங்கையென்ற ஒரு அரசு தம்மைச் சார்ந்தியங்கவைப்பதற்கும் மீளவும், ஈழக்கோசமும் அதன் குழிபறிப்பு அரசியலும் அவசியமாகவே இருக்கிறது.இத்தகை போலித்தனமான பிரச்சாரம் முற்றிலும் இலங்கைப் புரட்சிகரச் சக்திகளின் பின்னே தமிழ்பேசும் இலங்கை மக்களை அணிதிரளாதிருக்க எடுக்கும் முயற்சி.இதனால், மீளவும் இந்திய ஆளுங்கட்சிகளை நம்பி அவர்களது தயவில் நமது விடுதலை குறித்துச் செயற்பட வைக்கும் திட்டம் இது.


5):ஜெயலலிதா பேசுவது இந்திய-அமெரிக்க உளவுப்படைகளது திட்டமிடப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்.இது,உலக வங்கியினது ஆசியப் பொருளாதார வீச்சுக் குறித்த பார்வையில் எழுந்த கோசமாகும்.இக் கோசத்தை முதனமைப்;படுத்தித் தமிழ் பேசும் தமிழக மக்களை ஏமாற்றி அவர்களை ஒட்டச் சுரண்டும் ஆளும் வர்க்கங்களின் கோசமே இவை.



6):புலிகளது அழிவோடு,இலங்கை அரசியற் சூழல் மேலும்பல படிப்பினைகளைப் புரட்சிகர மட்டத்துக்குள் தருகிறது.இந்தியாபற்றிய சரியான தெரிவு இங்கே ஆழமாகப் பரிசீலனைக்குள்ளாகிறது.இந்தியாவென்பது தென்னாசிய மற்றும் தென்கிழக்காசியாவிலுள்ள ஒடுக்குமுறைக்குள்ளாகும் தேசிய இனங்களுக்கு எதிரி என்பது உண்மையானதாக இருக்கிறது.இதனால், அத்தகைய பாத்திரத்தையும் அது குறித்த ஆழமான புரட்சிகர நடாத்தையையும் பின்தள்ள ஜெயலலிதா மட்டுமல்ல பாரதிய ஜனதாவும் ஈழத்து மக்களுக்காவும் தமிழீழத்துக்காவும் குரல் கொடுப்பார்கள்.இது,புலியல்லதா புரட்சிகரச் சூழலின் எதிர்வு குறித்த இந்திய ஆளும் வர்க்கத்தின் அச்சத்திலிருந்து முன் தள்ளப்படுகிறது.



ஆக,தமிழீழம் என்பது எங்கே-எப்படி அர்தங்கொள்கிறது பாருங்கள்?


நமது மக்களைப் பூண்டோடு வேட்டையாடும் இந்தியப் பிராந்திய நலன், மீளவும் நம்மை அடக்கிப் புரட்சிகரமாகச் சிந்திப்பதைத் தடுத்து நிறுத்துவதற்குத் தமிழீழக் கனவை மேலும் எமக்குள் திணிக்கிறது.இது,நமது மக்களது கண்ணீரோடு தனது கட்சி-வர்க்க நலனை அறுவடை செய்கிறது.இங்கே,கருணாநிதிக்கு எதிரான ஓட்டுக்களை ஜெயலலிதாவுக்குப் போடும்படி சொல்பவர்களது அரசியல் பயங்கரமானது.ஆளும் கட்சிகளும் அவர்களது எஜமானர்களும் தத்தமது நலனுக்காகப் பூர்ச்சுவா ஜனநாயகத்தில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் திருவிழாச் செய்யும்போது, அது சாதாரண மக்களுக்கு உரிமையானதாகவும் காட்டப்படுகிறது.ஒவ்வொரு கட்சிகளினதும் பின்னே மக்களைத் தள்ளி அவர்களது உண்மையான வரலாற்றுப்பணியை ஒட்ட மொட்டையடிப்பதே தேர்தல் முறைகளாகும்.


எனவே,


*ஓட்டுப் போடாதே!


*ஏமாற்றும் கட்சிகளை நிராகரி,


*மக்களது சுமைகளுக்காகப் போராடு,


*வீதியில் இறங்கித் தேர்தலைப் புறக்கணி,


*புரட்சகரக் கட்சிகளோடு இணைந்து, உழைப்பவர்கள் உரிமைக்காகவும்,தமிழ்நாட்டின் விடுதலைக்காவும் போராடு.



இதுவே,இன்றைய சூழலில் முக்கியமான பணி.



ஓட்டுக்கட்சிகளை நம்புவது நமது விடுதலைக்கு நாம் போராடுவதைத் தடுப்பதாகவே முடியும்.



ஓட்டுப்போடப் போகாதே!
அதை நிராகரி.
ஓட்டுக்கட்சிகளை அடியோடு
மறுத்து ஒதுக்கு.
புரட்சிகரமாக அணி திரள்.



ப.வி.ஸ்ரீரங்கன்

26.04.09

கரிகாலன் காலத்தில் தமிழீழஞ் சாத்தியம்!

உண்மைகளின் முன்னே எந்த வெக்கங்கெட்ட சமரசமும் கிடையாது.




"குருதியின் நெடில் மூக்கைத் துளைக்கும்
அகோரமான பொழுதுகளின் நெடிய காற்றோ
மூளையை விறைப்பாக்கிறது,
இந்தக் கொடிய காற்றுள் அள்ளுண்டு போகாதிருக்க
உனக்காகவும்
எனக்காகவும்-எமக்காவும்
நாம்,எதையேனும் செய்தே ஆகவேண்டும்!"


இன்று,தமிழ் பேசும் மக்களது பாரம்பரிய பூமி, பிராந்தியங்களாகப் பிளந்து தமிழ்பேசும் மக்கள் சிதறியடிக்கப்பட்ட சமுதாயமாக வடக்கேயும்,கிழக்கேயும் இராணுவ ஆட்சிக்குள் சிக்குண்டு கிடக்கிறார்கள்.வன்னியில் மக்கள் என்றுமே அனுபவிக்காத யுத்தக் கொடுமைக்குள் சிக்குப்பட்டுச் சீரழிந்து போகின்றார்கள்.தமிழீழப் போராட்டத்துக்குப் பின்பான இன்றைய சமூகச் சூழலில், தமிழ்ச் சமுதாயத்துள் உட்புறம் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் முன்னெடுப்பும்,அது சார்ந்த சிந்தனா முறையும் ஜனநாயகத்தின் அதிகபட்சக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத சமூகப் பொருளாதாரத்தைக் கோரிக்கொண்டிருக்கிறது.இது, தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய அவலமான சூழலுக்கு முக்கியமான காரணியாக விருத்தியாகும்.

கடந்த காலங்களில் நிலவிய விசும்பு நிலையான இந்தச் சிக்கல் இப்போது சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகொள்ளப்பட்ட நிலையில்-சூழலில் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் தன்வயப் படுத்தியுள்ளது.வன்னியில் மக்களை அடிமைகொண்ட சிங்கள இராணுவ ஆட்சி அந்த மக்களுக்காக வெளிநாடுகளிடம் உதவி கோருவதனூடாகத் தன்னைத் தமிழ்பேசும் மக்களது நண்பனாகவும்,மக்களுக்காகச் செயற்படும் ஜனநாயகக் காவலனாகவும் உலகத்திடம் காட்டிக்கொள்கிறது.புலிகளால் ஒடுக்கி ஆளப்பட்ட மக்களுக்குத் தன்னால் "மீட்பு யுத்தம்" நடத்ப்பட்டதாகவும், இதுன்வழியாக அது பரப்புரை செய்கிறது.

சிங்கள்ப்பேரினவாத அரசு மிக நேர்த்தியாகச் சிங்களப் பேரினவாதத்தை முன்னெடுக்கிறது.அதற்கு உலக நாடுகளில்,குறிப்பாக ஐரோப்பியாவில் நிகழ்ந்த கடந்தகால இனவழிப்பு யுத்தங்கள் பாடமாக இருக்கிறது.தமிழ்ச் சமுதாயம் இன்னும் இவ்வரசியலில் ஆரம்பப்பாடத்தையே கற்காது தமிழ்த் தேசிய மாயைக்குள் கட்டுண்டு கிடக்கிறது.



கடந்த காலங்கள்போல் இனிவரும் காலங்கள் இருக்கப்போவதில்லை!


சமுதாயத்துள் அங்கமுறும் ஒவ்வொரு குடும்பமும் ஏதோவொரு வகையில் உயிர் ,உடமையிழப்புகளுக்கும்,இடப்பெயர்வுகளுக்கும் உள்ளாக்கப்பட்டதன் பின்பு,அந்தச் சமுதாயத்தின் நெறியாண்மை மிகவும் பாதிப்படைந்துள்ளது.இந்தச் சந்தர்பங்கள் பொருளாதாரச் சிக்கலுக்குள்ளாகும் ஒரு சமுதாயத்தை, எந்த வகையிலும் சமூகப் பிறழ்வுகளுக்குள் திணித்து,அதைச் சிதைப்பதில் முடிவுறும்.


இலங்கை அரசினது இன்றைய அரசியல்-இராணுவ வெற்றிகள் யாவும் இதிலிருந்துதான் திட்டமிடுப்பட்ட சரியான அத்திவாரமாக தமிழ்மக்களை அடிமைகொள்கிறது.ஏனெனில், எமது சமுதாயத்துள் உள்ளும் புறமும் இருக்கும் "எதிரிகளை"நாம் இப்போது மிகத் தெளிவாக இனம் காணுகிறோம்.புலிகளும் அவர்களுக்கு அரசியல் முன்னுதாரணமாக இருந்த தமிழ்த் தலைவர்களும் சேர்ந்து நடாத்திய தமிழீழப் போராட்டப்பாதை பேரினவாதத்திடம் மக்களை அடிமையாக்கி ஓய்ந்துவிடுகிறது!இந்த எதிரிகள்தான் எமது மக்களின் அனைத்துத் துறைகளையும் அலங்கரித்து வருபவர்களாக இனிவரும் காலங்கள் அமையுமானால்,இந்தத் தமிழ் மக்களின் அனைத்து வளர்ச்சியிலும் ஒரு தேக்கம் தொடர்ந்து நீடிக்கவே செய்யும்.இது பல்லாயிரம் உயிர்களைப் பலி கொடுத்தவொரு இனத்துக்கு எந்த வகையிலும் நன்மை செய்வதாக இருக்க முடியாது.இது குறித்த கட்டுரை ஒன்றைத் தினக்குரலில் கோகர்ணன் எழுதியுள்ளார்.கடந்தகாலத்துத் தமிழ்த் தலைமைகள்தம் அரசியல் குறித்து விமர்சிக்கும் எழுத்துக்கள் நமக்கு இன்று அவசியமானதாகும்.இதைப் பீஷ்மரின் இக்கட்டுரையும் ஓரளவு குறித்துரைக்கிறது.



பிரபாகரன் குறித்த பிரமை:


"கரிகாலன் காலத்தில் தமிழீழஞ் சாத்தியம்"என்று ஓலமிட்டவர்கள்,இப்போது தமது தலைவரின் சுத்தலை மற்றவர்களின் தவறாக்கிப் புலிகள் அழிந்துவிட்டனர்,இனியென்ன?-புலிகளை எதிர்த்த எட்டப்பர்கள்,காக்கை வன்னியர்கள்"தமிழீழத்தை"த் தமது போராட்டத்தின் மூலம் கண்டடையலாம் என்கின்றனர்!

ஐயோ,இன்னும் இலட்சம் உயிர்களைப் பறித்தாகணுமா?

யாரு சொன்னார்கள் இவர்களுக்குத் தமிழீழஞ்சாத்தியமென?

பிரபா தனது கொடுமுடித் தசாப்தத்தில் கூறிக்கொண்டார்.அவரை நம்பிய அவரது பால்குடிகள்,கரிகாலனுக்குக் காவடி தூக்கினர்.நாம் அன்றிலிலிருந்து இவர்களோடு முட்டிச் சொன்னோம்,இது சாத்தியமில்லை!,புலிகள் மக்கள் போராட்டத்தைச் செய்யவில்லை.தோல்வியடையும் என்றோம்.நம்மைப்பார்த்துத்: துரோகியென்றனர்.இப்போது ஒப்பாரி வைக்கின்றனர்.புலிகள் அழிவு அரசியலை அந்நியச் சக்திகளுக்காச் செய்வதாகவும் சொன்னோம்.துரோகி என்றார்கள்!

இன்னுஞ் சிலர்,"எழுதி வைத்துக்கொள்ளுங்கள் புலிகள் வெல்வார்கள்"என்றார்கள்.கூடவே,மக்கள் பொல்லுத் தடிகளோடு பயிற்சியெடுக்கும் படத்தைப் போட்டு-அதை மக்கள் போராட்டமென்றுஞ் சொன்னார்கள்.இதுதாம் நமது அரசியல் அறிவு.அதன் தொடராக இப்போது இந்தியா துரோகஞ் செய்துவிட்டதாகவும்,அது பிணந்தின்னி அரசு என்கின்றனர்.இதையே புலிகள் தம்மை நிலைப்படுத்துவதற்காகத் தமிழ்பேசும் மக்களில் பலரைத் துரோகியாக்கிக் கொன்றார்கள்.இது பிணந்தின்ற அரசியலாக"துரோகிகள்"குடும்பத்துக்குத் தெரிகிறது.புலிகள் முஸ்லீம் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து கருவறுத்தபோது அது இனவழிப்பு அல்ல-துரோகிகளுக்கான தண்டனை என்றனர்.இது,இன்றுவரை தொடர்கிறது.ஆனால்,யாரூ துரோகிகள் என்பது புலிகளது அநுதாபிகளுக்கு இன்னும் புரியவே இல்லைப் புலிகளது போராட்டத்தைப் போலவே!

ஈழத்துக்கான போராட்டமென்பது இலங்கைத் தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது சமூகசீவியத்தையும் பலநூற்றாண்டுகள் பின் தள்ளிய பாரதூரமான சமூகவிரோதமாகும்,இது இன்றைய வரலாறாக இருப்பதை நாம் இருட்டடிப்புச் செய்யமுடியாது.சமுதாயத்தின் மொத்த விருப்பானது இழந்தவுரிமைகளை மீளப்பெறுவதாக யாரும் குறிப்பிட முடியாது.ஏனெனில், யாரு எதை இழந்தார்களென்று சாதாரணப் பொதுமக்களுக்கு இதுவரை புலப்படவில்லை.


கடந்த கால்நூற்றாண்டுக்குமுன் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும்,இன்றைய சிதிலமடைந்த வாழ்க்கைக்கும் எந்தெந்தக் காரணம்கூறினாலும் தமிழ் மக்களுக்கு ஒப்பீட்டுரீதியான புரிதலுண்டு.இன்று வன்னிமக்களது வதைமட்டுமல்ல அவர்களது அழிவிலிருந்தும் பாடங்கற்க முடியாத புலிவிசுவாசம் மக்களையும்,அவர்களது விடுதலையையும் பிரபாகரனுகு;கூடாகக் கனவுகாணுவதில் தொடர்ந்து தமது இயலாமையைத் "துரோகிகளின்"ஈனத்தனத்தால் புலிகள் தோற்பதாகக் காரணம் தேடுகிறார்கள்!இவர்களை எவராலும் திருத்த முடியாது-தாமாகக் கேள்வி,கல்வியினால் திருந்தாதவரை!


புலிப் போராட்டத்தின் பரிசு:


மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டுமென்ற கருத்தும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக இருக்கிறது.இதை மீளவும் புதிய தலைமுறைக்குப் புரியவைப்பதற்குக் கடந்தகாலப் புரட்டல் அரசியலைத் தமிழர்களது தலைவர்களது வழியில் எப்படி-எங்கே தமிழர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டார்களெனச் சொல்லியாகவேண்டும்.


இதற்குத் தினக்குரலின் மறுபக்கம் பத்தி எழுத்தாளரது குறிப்புகள் ஓரளவு நமது தலைமையின் பிழைப்புவாத அரசியலைப் புரிய உதவுகிறது.இது புரியப்படவேண்டும்.புலிகளது மிகக் கெடுதியான போராட்டச் செல்நெறி குறித்தும் நாம் புரியவேண்டிய தருணம் இது.இன்றைய சிங்கள அரசினது இராணுவவெற்றியானது அடிப்படையான தமிழ்ச்சமூக ஆண்மையைக் குலைப்பதிலும், மையங் கொள்ளும்.இது, இந்திய-இலங்கை நலன்சார்ந்த தந்திரங்களோடு உறவுடையதாகிச் செல்கிறது! இவர்களின் அரசியல்.இத்தகைய தேசங்களினது அரசியல் முகத்தில் இப்போது மிகக் குசாலாக உட்கார்ந்திருக்கும்"ஜனநாயக" முகமூடிக்குப் பின்னால், மிகக் கொடூரமான கொலைக்கார முகம் புலிகளைப் போன்றே இன்னொரு வடிவில் இருக்கிறது.அது நமது மக்களையும் மற்றும் இலங்கைவாழ் சிறுபான்மை இனங்களையும் பெரும்பான்மைச் சமுதாயத்துக்கு முட்டுக்கொடுக்கும் ஒருவகைச் சார்பு இனமாக மாற்றுகிறது.


"நீ,
நுகத்தில் பூட்டிய எருதாகவே
செக்கைச் சுற்றுகிறாய்,
புரியுமா உனக்கு?


உனது இனத்தின் ஆணிவேர்
அறுபட்டுக் கொண்டிருக்கிறது!


புரட்சியாளர்களையும்,
கல்வியாளர்களையும் கொன்றுவிட்டு
துரோகியென்றாய் அன்று.

இன்றோ,
கொன்று குவித்த
மக்களின் உடல்களின் மீதிருந்து
ஆட்காட்டுகிறாய்,
நானில்லை அவனென்று."


"..................." வெட்கித் தலைகுனிவதில் உணர்வு முந்திக்கொண்டாலும் இத்தகைய மனிதர்களைப் பார்த்துப் பரிதாபப் படத்தாம் முடியுமா அல்லது மாற்றுச் செயற்பாடுகளுண்டா? ஆம் உண்டு! ஆனால் அது மானுடநேசிப்பால் மட்டுமேதாம் முடியும்.அதன்வழி ஏன்-எதற்கு- எப்படி என்ற கல்வியினாற்றாம் முடியும்.தமிழ்ச் சமுதாயத்தின் ஆற்றலையே அழித்த ஒரு இயக்கம், இன்று அந்த மக்களையே சிங்களப் பேரினவாதத்துக்கு அடிமையாக்கி அழிந்துபோகிறது.எனினும்,அதன் எச்சசொச்சம் இன்னமும் பிரபாகரனுக்கு மாவீரர் பட்டயம் கொடுக்கக் காத்துக்கிடக்கிறது.

இந்தநிலையில் எமது மக்களை வேட்டையாடும் இலங்கை அரசும்,அந்நியச் சக்திகளும்,குறிப்பாக இந்தியாவாலும்,எமது மக்களின் முரண்களை பிரதேசம்,மதம் சார்ந்த கோசங்களால் வலுவேற்றப்பட்டு,அனைத்துப் பக்கத்தாலும் உந்தித் தள்ளும் பாரிய எதிர்ப்புச் சக்திகளாக இந்தச் சமுதாயம் தனது முரண்பாடுகளை எதிர்கொள்வது தவிர்க்க முடியாது திணிக்கப்படுகிறது!


இன்று தமிழ்பேசும் மக்களுக்குத் தீர்வு சொல்லும் சிங்கள அரசினதும்,இந்தியாவினதும் செல்வாக்குக்குட்பட்ட கட்சிகள்-இயக்கங்கள்,தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளியஅந்நியச் சக்திகளை மற்றும் சிங்கள மையவாதத்தைக் கேள்விக் குட்படுத்தாத இந்தத் திடீர் தமிழர் "ஜனநாயகவாதிகள்"இதுவரை தொடர்ந்த போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திரணியற்றவர்கள்.இது, சிங்கள இனவெறி அரசினது எந்த வரலாற்றுப் பயங்கரங்களையும், சிறுபிள்ளைத் தனமாக விவாதிக்க முனையும் இன்றைய காலத்தில், நாம் மீளவும் அடிமைப்படுத்தும் கருத்தியல் மற்றும் அரச வன்முறை ஜந்திரங்களுக்கும் ஒத்திசைவாக இருக்கும் அரசியல் சித்து விளையாட்டாகிறது.இதனால் இலாபம் அடையும் இயக்க-கட்சி அரசியல் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சூழலில்,மக்களின் உண்மையான வாழ்வியல் தேவைகளைக் தமது எதிர்கால இருப்புக்குக் கோசமாக்கிறது.இதுவே இன்றைய தமிழர்களின் தலைவிதி.


எமது நலத்தில் விருப்பமற்ற சக்திகள் இத்தகையவொரு அரசியல் அமுக்கத்தைத் திட்டமிட்டு செயற்படுத்தி வந்து,அது செயலூக்கம் பெறும் காரணியாக முற்றிய நிலையில், ஒரு இனவழிப்பு யுத்தத்தின் மூலம் புலிகளது அழிவைத் துரிதப்படுத்தி மக்களை அடிமைகொள்கின்றனர்.இந்த இராணுவத் தீர்வு எமது மக்களுக்குள் தம்மைத் தாமே காவு கொள்ளும் பாரிய பழியாக விரிந்து மேவுகிறது.இது, தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் வலுவாகப் பாதித்து, அந்த இனத்தை வேரோடு சாய்த்துவிட முனைவதும்,எதிர்காலத்தில் எமது இனத்தை அங்கவீனர்களாக்குவதற்குமான முன் தயாரிப்பாக இன்று அரசியல் அரங்குக்கு வந்துள்ளது.இதை நாம் மிக முக்கியமாக உள்வாங்கி,எமது மக்களின் உரிமைகளுக்கான நியாய வாதங்களைக் கருத்தியல் தளத்தில் விரிவாக ஊன்றியாக வேண்டும்!சிங்கள அரசினது இனவழிப்பு யுத்தத்துக்கு நாம் பல வடிவங்களில் சாதகமான சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம்.இங்கே,புலிகளது அரசியல்-போராட்டப்பாதை அதை மிகவும் சாத்தியமாக்கியதென்பதை நாம் அறியாதவரை எமக்கு விமோசமில்லை.இது குறித்து ஆரம்பப் புரிதலுக்குத் தினக் குரலின் மறுபக்கம் அடியெடுத்தத் தருகிறது இதை இப்படத்தின்மீது அழுத்திப்படிக்கவும்.






ப.வி.ஸ்ரீரங்கன்
26.04.09

Sunday, April 19, 2009

நமது மக்களது அழிவில் எதை முன்னிறுத்துகிறோம்?

"புலிகளது போராட்டம் மேலும் மேலும் இலங்கையை அரை
இராணுவத்தன்மையிலான அரசினது பிடிக்குள் தள்ளியுள்ளது.இதைத் திட்டமிட்டுப்
புலிகளுக்கூடாக நடாத்தி முடித்தவர்கள் அமெரிக்காவும்,
மேற்குலகங்களுமாகும்.பாகிஸ்தான்போன்றவொரு தேசம் இந்தியாவுக்கு இன்னொரு பக்கத்தில்
உருவாவது அவசியமானவொரு பூகோள அரசியல் வியூகமாகும்.இதை இனங்கண்ட ஆசிய மூலதனமானது
புலிகளை அழித்து உருவாக்க முனையும் இலங்கை சாரம்சத்தில் அதன் இராணுவ வலுவைச்
சிதைத்தே உருவாகிறது.இதை இந்தியப் பிராந்திய நலன் செய்தபடிதாம் புலியழிப்பில் தமது
பாத்திரத்தை இறுக்கி வருகிறது.இங்கே,உருவாக்கப்படும் இலங்கை மேலும்பல உள்
முரண்பாடுகளை நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்கப் போகிறது.இது இலங்கையின்
சுயவளர்ச்சியை இல்லாதாக்கும் அந்நியச் சகதிகளது கனவு."



நெருக்கடிக்குள்ளாகும் அரசியலும்,அரசியல் பார்வகைகளும்,புலிகள் பினாமிகளும்.

பகுதி:3 -(இப்போதைக்கு இறுதிப் பகுதி இஃது.)


>>>அவித்த மீன் துடிக்கிறது அம்மியும் கவி பாடுகிறது<<<


ப்போது, புலிகளின் தரப்பில் யுத்தமென்பது தவிர்க்க முடியாத காரணியாகக் கருத்துக்கட்டப்படுகிறது.புலிகள் போராடி மடிவது தியாகம் என்றும் அழிவு யுத்தத்துக்கு வரைவிலக்கணங் கற்பிக்கப்படுகிறது!வன்னி மக்களது அழிவுக்குப் புலிகளும் சிங்கள அரசும் காரணமானாலும் புலிகளது போராட்டத்துக்குத் தியாகங்கற்பிக்கும் அரசியலே மிகக் கடைந்தெடுத்தப் புலி அரசியலின் நீட்சியாக மக்களைக் கருவறுக்கிறது.இது,புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழர்முதல் புரட்சிபேசும் புலிப்பினாமிகள்முதல் "ஒரு தமிழன் இருக்குவரை போராடி மடி"எனும் பாசிச மொழிக்கொப்ப ஆளும்வர்க்கக்களின் அடவாடித்தனமான யுத்தம் மக்களுக்கான விடுதலைக்கான புறவயச் சூழலை ஏற்படுத்தும் காரணத்துக்காகத் தலைவணங்கி வரவேற்கப்படுகிறது.


நாம் தேசிய விடுதலைப்போரைப் புலிகளது குழுவாத-அந்நியச் சக்திகளுக்கான எதிர்புரட்சிப் போரால் புரிந்துகொள்ள வைக்கப்படுகிறோம்.புலிகளது தவறுகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகிறது.நாம் இலட்சம் மக்களைக் கொன்று குவித்த அரசியல்-அழிவு யுத்தத்தைப் பற்றிய சரியான புரிதலைச் செய்யாதிருக்கப் புலிகளது அழிவைத் தியாகமாக்கும் மிகக்கெடுதியான திரிபுவாதத்தை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.இன்று,வன்னிக்குள் தினமும் செத்து மடிபவர்களுக்கு புலிகள் சரணடைவது துரோகம் என்று கூறும் புலிகளாலும், இறுதிவரை போராடி மரிப்பது என்ற அதன் அழிவு அரசியலாலும் ஆபத்தான சூழலையே மேலும் அழைத்துவருகிறது.


மக்கள் சாவதற்கு விருப்பமின்றி இருக்கும்போது அவர்களைத் தேசத்தினதும்,தியாகத்தினதும் பெயரால் கட்டாயப்படுதித் தயாராக்கும் புலி-இலங்கை அரச பயங்கரவாதத்துக்கும் கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் செத்து வருகிறார்கள்.இந்த இரண்டு பயங்கரவாதத்துக்கும் பெயர்"தேசிய விடுதலை-ஜனநாயகம்-பயங்கரவாதத்துக் எதிரானபோர்"இன்று.



சிங்களப்பாசிச இனவாத அரசோ புலிகளைக் கொல்லுவதாகச் சொல்லித் தமிழ்பேசும் மக்கள் அனைவரையுமே கொல்லுகிறது.வலுகட்டாயமாக வன்னிமக்களைத் தம்மோடு அழைத்துச் சென்ற புலிகள் தற்போது அதே மக்களுக்குள் ஒளிந்திருக்கிறார்கள்.இதனால் தமது தலைமையைக் காப்பதற்கான கேடயமாக மக்கள் பயன்படுத்தப்படும்போது இவர்களது "இறுதிவரையான போராட்டத்தை-போராடி மரி"ப்பதை ஊக்குவிக்கும் புலிச் சிந்தாந்த வல்லுனர்கள் புலிகளிடம் "மக்களை விடுவிக்கும்படியும்,போராட விருப்பமற்றவர்களை விட்டுவிட்டுப் போராட்டத்தோடு இணைந்து போராடுபவர்களோடு இணைந்து, இறுதிவரை சரணடையாது போராடி மரிக்கத் தயாருகும்படி" கோருகிறார்கள்.இது, அன்று தொட்டுக் கட்டாயப் போராளிகளாக்கிய ஒரு இயக்கத்துக்குச் சிறார்களை அவர்களது பெற்றோரின் அனுமதியின்றி இயக்கத்துக்குப் பிடித்துச் சென்றவொரு இயக்கத்துக்கு விடுவிக்கும் கோரிக்கையென்பதை நாம் முதலில் புரிவோமானால் இந்தப் புலிப்பினாமிகளது சித்தாந்தத்துக்குள் புலிகளது அழிவு அரசியலே புரட்சிகரமானதாகவும்,தேசிய விடுதலைக்கானதாகவும் கட்டியமைக்கப்படுவதை மிக இலகுவாக நாம் அறிய முடியும்.



மக்களால் முன்னெடுக்கப்படாத எந்தப் போராட்டமும் மக்களுக்கானதாக இருப்பதற்கில்லை.மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைப்பதைச் "சரணடையாது போராடி மடிதல்" என்றுரைக்கப் புலிகளது சித்தாந்தம் இப்போது புரட்சிகர வேடங்கலைத்துத் "தியாகம்-துரோகம்" என்கிறது.



பாசிசம் என்பது ஒரு கொடிய நோய்.அது,மனிதப்பரப்பில் எத்தனையோ உயிர்களைத் தேசத்தின் பெயராலூம்,இனத்தின் பெயராலும் அழித்து மனித வரலாற்றையே கொலைகளது வழி கற்பிக்கிறது.நாம்,கிட்லரையோ அல்லது முசேலினியோ அல்லது ஸ்டாலினையோ பாசிசத்துக்கான புரிதலுக்குள் உள்வாங்குவதைவிட இவர்களையும் கடந்து இன்றைக்குச் சிந்திக்க வரலாற்றில் பல நிகழ்கின்றன-நிகழ்ந்தன.



இதுள்,புலிகளது இயக்கவாதம்-போராட்டச் செல்நெறி,அவர்களது இயக்க நலன் மற்றும் தலைமையின் நலனுக்கானதும்,அந்நியச் சேவைக்குமான இந்த "தமிழீழப் போராட்டம்"மிகவும் புரிந்துகொள்ள முடியாதளவுக்கான பாசிசக் குழப்பத்தால் "தியாகம்-துரோகம்"எனும் பாரிய உளவியல் நெருக்கடியை நமக்குள் உருவாக்குகிறது.மக்களது அறிவைக் காயடிப்பதற்குப் புரட்சிகர வேடமிட்டவொரு புலிக் கும்பல் எப்போதுமே தயாராகக் கணினிமுன் கிடந்து தமது தொழிலைச் சுத்தமாக முன்னெடுக்கிறது.இங்கே, மக்களது அழிவைத் தமக்கு முடிந்தவரை எதிர்ப்பதாகக்காட்டி அவர்கள் செத்து மடிவதைத் தியாகமெனவும் புலிகளுக்கூடாகக் கருத்தை வடிவமைக்கிறது.இந்தச் சமூகவிரோத அரசியல் நடாத்தையைக் கேள்வி கேட்பவர்களைச் சிங்கள அரசினது கைக்கூலிகளாகவும் இந்தக் கும்பல் வசைபாடுகிறது!


நாம்,எங்கே போகிறோம்?


நமது மக்களது அழிவில் எதை முன்னிறுத்துகிறோம்?


புரட்சிகரமான அரசியல் வேலைத் திட்டமென்பதற்கான கருத்துப் பகிர்வில் புரட்சிகரப் புறவயச் சூழலையே காயடித்து அழிவு யுத்தத்தைத் தியாகமானதாகவும்-இலட்சியமுடையதாகவும் கருத்துக்கட்டி யாரது-எந்த வர்க்கத்து நலனைக் காக்க முனைகிறோம்?



இது மிக அவசியமாகப் புரியவேண்டிய தருணம்!



எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.இங்கே நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதை முன்னின்று நடாத்தும் புலிகளது சிந்தாந்தத் தலைமை மேலும் போராடிச் செத்துப் போவதற்குப் போராளிகளையும் மக்களையும் ஊக்கப்படுத்துகிறது.இது கடந்த காலத்தில் புலிகளது இராணுவக்கட்டமைப்பை "தேசிய விடுதலை இராணுவமாகவும்"தமிழீழத்தின் படையணியாகவும் கருத்துக்கட்டியது.இப்போது இப்பிழையான போராட்ட நெறியைத் தியாகமாக்க முனையும் ஒவ்வொரு பொழுதும் புரட்சிக்கான புறவயச் சூழலுக்குப் புலியைத் தியாகத்தின்வழி அழிப்பதாகப் பாசிச உரையாடலைப் புரட்சிகரமாக்குகிறது.



இது,ஆபத்தானது!



இவர்களை எங்ஙனமும் வெற்றிகொளவது அவசியம்.



போலித்தனமாகப் புரட்சி பேசுகின்ற புலிகளது கைக்கூலிகள் நமது மக்களது அழிவை-போராளிகளின் சாவை புரட்சியின்பால் தியாமெனச் சொல்வது மனித நடாத்தைக்குப் புறம்பானது.இங்கே,மனிதாபிமானம் என்பது கிடையவே கிடையதென்றும் இவர்கள் கூறுகிறார்கள்.இதன் உள் அர்த்தம் இதுவரை புலிகளால் காயடிக்கப்பட்ட அனைத்துக் கொலைகளுக்கும் தேசத்தினதும்,விடுதலையினதும் பெயரால் நியாயங் கற்பிப்பதும்,தியாகத்துக்காக-விடுதலைக்காக அவர்கள் செய்வதாகச் சொல்லும் பாசிச யுத்தத்தை நியாயப்படுத்துவதில் மிக நாசுக்காக இந்த மக்கள்விரோதிகள் சித்தாந்த எல்லைக்குள் ஒளிந்தபடி மிக நேர்த்தியாகச் செஞ்சோற்றுக் கடனை ஆற்றுகிறார்கள்.



தமது நடாத்தையைக் கடந்தவொரு மாற்றுக்கருத்தெழுவதற்கானவொரு சூழல் வலுமூர்க்கமாக அழித்தொழிக்கப்படுகிறது.



இதற்காகத் தேசத்தினது பெயரால்-தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டபடி"புலிகளைச் சரணடையச் சொல்பவர்களை,அரசினது கைக்கூலி"என்றும் கருத்துக் கட்டுகிறது.இத்தகைய கருத்துக்களின் பின்னே மறைந்திருக்கும் அதிகார மையம் பாசிசத்தால் தன்னை இருத்திக் கட்டிக்காத்து வருகிறது.இங்கே,மக்களின் துயரங்கள் துன்பங்கள் யாவும் சிங்களப் பாசிச அரசுக்கும் புலிகளுக்கும் மற்றும் குழுக்களுக்கும் அரசியல் செய்வதற்கானவொரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பரிதாபம் நிலவுகிறது.




அப்பாவி மக்கள் உயிர்வாழ்வதற்காகத் தமது எதிர்கால விடிவை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.அவர்களது வாழும் விருப்பத்தை அழித்துத் தத்தமது எஜமான விசுவாசத்துக்காகக் கூஜா தூக்கும் ஒருகூட்டம் நாளாந்தம் தத்துவ விளக்கக்கட்டுரை போடுகிறது.இதையும் மக்களுக்குச் சார்பான மொழிகளுடாகப் புனைகிறது.இத்தகைய கொடியவொரு சூழலில் மக்களைப் பலியாக்கும் புலிகளதும், இலங்கை அரசினதும் பரப்புரைப் பீரங்கிகள் மக்களது நலனையே திரித்துத் தமது தரப்பை நியாயப்படுத்துகிறார்கள்.இவர்களது நோக்கம் எப்படியும் நிறைவேறுவதற்குச் சாதாரண மனிதர்களது யுத்த எதிர்ப்பு உணர்வை ஏதோவொரு பக்கத்துக்குச் சார்பாக்கி இக் கொடியவர்கள் அரசியல் செய்கிறார்கள்.
அன்பு வாசகர்களே,பரந்துபட்ட புரட்சியின் சமூக அடிப்படைகள் எதுவுமற்ற இன்றைய சூழலில்,ஒப்பீட்டளவில் சமாதானத்துக்கான(சரணடைவு அல்லது இருதரப்பும் யுத்த நிறுத்தஞ் செய்வது) முன்னெடுப்பே இலங்கையில் பாட்டாளிய வர்க்கத்துக்கும், அதன் முன்னணிப்பாத்திரத்துக்கும்,மக்கள் ஜனநாயக(புதிய ஜனநாயக)வடிவத்தினது பொது அம்சத்தை நிர்ணயிக்கிறது.இந்த உண்மையைத் திரிக்கும் ஓடுகாலிகள் இறுதிவரைப் போராடி மடி என்பது புலிகளது தலைமையைக் காப்பதற்கானதாக மாறுகிறது.மக்களதும்,போராளிகளதும் தியாக உணர்வைக் கொச்சைப்படுத்தி மனித இருத்தலையே கீழாக மதிக்கும் உளபாங்கைப் புரட்சியின் பெயரால்-பாட்டாளிகளின் பெயரால் சரியானதென வாதிட்டுப் புலிகளைத் தியாகிகளாக்கி முழு மக்களையும் வேட்டையாட முனைகிறார்கள்.



இதைக் குறித்து நிறைய விவாதித்தாகவேண்டும்.



தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டப் பாத்திரத்தில் புலிகளது போராட்டச் செல்நெறி தவறானதென்பதும்,அது அந்நியச் சக்திகளால் வழிநடாத்தப்பட்டவொரு எதிர்புரட்சிகர அணியென்பதும் மறைக்கப்பட்டு, மக்களுக்காகப் போராடி மறையும் ஒரு இலட்சிய அமைப்பாக வரலாற்றில் பதியமிடப் புலிப்பினாமிகள் தமது வலுவுள்ளவரை சித்தாந்தைத் திரிக்கிறார்கள்.



இன்றைய சூழலில் யுத்தமற்ற இலங்கையும் அதன் பாராளுமன்ற போலி ஜனநாயச் சூழலும் அவசியமானதாகவே இருக்கிறது.இந்தப் பூர்ச்சுவா ஜனநாயகத்தின்மீதுதாம் நாம் அடுத்த கட்டத்தை நாடும் புதியஜனநாயகப் புரட்சிக்கான மக்கள் முன்னணி எனும் ஸ்தாபனம் கட்டியமைக்க முடியும்.இது,இலங்கைத் தொழிலாளிவர்கத்தையும்(அனைத்து இனங்களுக்குள்ளும் உருவாகியுள்ள பாட்டாளிகள்),விவசாயிகள் மற்றும் ஏகாதிபத்தியத்தாலும் தரகு முதலாளிகளாலும் பழிவாங்கப்பட்ட நகரக் குட்டிமுதலாளிய வர்க்கம்,இதுசார்ந்து சிந்திக்கும் அறிவுத்துறையினரின் கூட்டோடே சாத்தியமாவதாகும்.இந்த மக்கள் முன்னணியின்றி இலங்கையில் ஒரு துரும்பைக்கூடப் புரட்சியின் பெயரால் ஆற்றமுடியாது.இங்கே, இலங்கைவாழ் அனைத்து இனங்களும் பரஸ்பரம் இன ஐக்கியத்தைக் கடைப்பிடிக்குமொரு குறைந்தபட்ச ஜனநாயகச் சூழல் அவசியமாகிறது.இது,இலங்கையில் இராணுவ முனைப்புடைய அரசுகளாலும்,இயக்ககங்களாலும் அழிக்கப்பட்டு, இலங்கை அரை இராணுவ ஆட்சியாக மாற்றப்பட்டபின் புரட்சிகர முயற்சிக்குப் பாதகமான சூழலே இப்போது நிலவுகிறது.



புலிகளது போராட்டம் மேலும் மேலும் இலங்கையை அரை இராணுவத்தன்மையிலான அரசினது பிடிக்குள் தள்ளியுள்ளது.இதைத் திட்டமிட்டுப் புலிகளுக்கூடாக நடாத்தி முடித்தவர்கள் அமெரிக்காவும் மேற்குலகங்களுமாகும்.பாகிஸ்தான்போன்றவொரு தேசம் இந்தியாவுக்கு இன்னொரு பக்கத்தில் உருவாவது அவசியமானவொரு பூகோள அரசியல் வியூகமாகும்.இதை இனங்கண்ட ஆசிய மூலதனமானது புலிகளை அழித்து உருவாக்க முனையும் இலங்கை சாரம்சத்தில் அதன் இராணுவ வலுவைச் சிதைத்தே உருவாகிறது.இதை இந்தியப் பிராந்திய நலன் செய்தபடிதாம் புலியழிப்பில் தமது பாத்திரத்தை இறுக்கி வருகிறது.இங்கே,உருவாக்கப்படும் இலங்கை மேலும்பல உள் முரண்பாடுகளை நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்கப் போகிறது.இது இலங்கையின் சுயவளர்ச்சியை இல்லாதாக்கும் அந்நியச் சகதிகளது கனவு.குறிப்பாக அமெரிக்கா.


தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பகுதியைப் பிளந்த அமெரிக்க நலன் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை ஒருபோதும் தீர்க்க முனையாது.எனவே,யுத்தம் நிறுத்தப்பட்டு அல்லது புலிகள் சரணடைந்து இலங்கையின் இனங்களுக்கிடையிலான பரஸ்பர ஒற்றுமைக்கான சூழல் உருவாக்கப்பட்டாக வேண்டும்.இதற்காக இன்றைய புலிகளது அழிவுப் போராட்ட ஜந்திரம் தோற்கடிக்கப்பட்டு (இங்கே,கவனியுங்கள்:நான் சொல்வது புலிகளது யுத்த ஜந்திரமாகும்,அவர்களைப் பூண்டோடு கொல்வதல்ல.இது அவர்கள் மீளவும் இலங்கை அரசியலில் தமது தரப்பு அரசியலை ஜனநாயவழிக்குள் முன்னெடுத்து இயங்க அனுமதிப்பதுதாம்.பூர்ச்சுவா ஜனநாயகத்தில் தமது ஆயுதங்களை இழக்கும் புலி, மக்களிடம் அம்பலமாக இதுவே சரியானதொருவழி,அவ்வியக்கம் தவறானவழியில் தமிழீழப் போலிக்கோசத்தால் இலட்சம் மக்களது அழிவுக்குக் காரணமானது.இவ்வியக்கம் அதற்குப் பொறுப்பேற்று வரலாற்றில் தண்டிக்கப்பட மக்களது வலுவுக்குள் வாழ்ந்தாக வேண்டும்,அரசிலை முன்னெடுத்தாகவேண்டும்.இங்கே,இன்னுமொரு புலிகளது அரசியல் நடாத்தையையும் கவனியுங்கள்.அதாவது,புலியைப் பிளந்து கருணா "ஜனநாயக"ச் சூழலுக்குள் இழுத்துவரப்பட்டு இலங்கைச் சட்டவாக்கத்துள் அரசியல் செய்யும்போது,கருணா தனது கடந்தகால அனைத்து நடவடிக்கைகளையும் பிரபாவினது தலையில் சுமத்துவதும்,அதைக் கண்ட புலிப்பினாமிகள் பிரபாகரனை ஒரு அப்பாவியாகக் கட்டுரை புனைந்ததையும்.இங்கே தத்தமது கொலை அழிவு யுத்தத்தைப் பொறுப்பெடுக்காததும்,தண்டைனுக்குள்ளிருந்து தப்பிக்கொள்ளவும் இவர்கள் மிக அவதானமாக இருக்கிறார்கள்.இதன் உச்சக்கட்டம் புலியினது அழிவுக்குத் தியாகங் கற்பிக்கிறது.தூ...என்னவொரு பிழைப்பு.இதைவிடப் பிச்சையெடுத்து வாழுங்கோடா!), அந்நியச் சக்திகளது நலன்கள் இலங்கையில் வீரியமற்றதாக்கப்படவேண்டும்.அங்ஙனம் உருவாகும் இலங்கையில் தொழிலாள வர்க்கத்துக்குப் பிரதான எதிரியா இலங்கை அரசே முன் நிற்கிறது.இது,புலிகளையும்,இலங்கை அரசையும் எதிர்கொண்ட சூழல் இல்லாதாக்கப்பட்டு,இலங்கை அரசையும் ஏகாதிபத்தியங்களை வலுக்குன்றிய குழுக்களுக்குள் மற்றும் கட்சிகளுக்கூடாக எதிர்கொள்வதாகவே இருக்கும்.இப்போது இலங்கை வாழ் தொழிலாள வர்க்கம் மிகப் பெரும் இரு எதிரிகளைப் பிரதானமாக எதிர்கொள்கிறார்கள்.இவை இரண்டுமே போட்டி போட்டு அந்நிய நலன்களை இலங்கைக்குள் திணிக்கும்போது இலங்கையில் புரட்சி காட்டிக்கொடுக்கப்பட்டு முற்போக்குதளம் நிர்மூலமாக்கப்படுகிறது.



இந்த உண்மை புரட்சியினது புறவயச் சூழலைச் சரியாக மதிப்பிடும் அரசியல் தத்துவார்த்தத் தளத்திலிருந்து உருவாகிறது.குறுந்தேசிய வாதப் பரப்புரை செய்யும் புலிப் பினாமிகள் புரட்சியைக்காட்டிக் கொடுக்கும் புலிக்கு வக்காலத்து வேண்டுவது அவர்களது தொழிலாகப் புலிகளால் நிறுவப்பட்டது.இது,கக்கும் புரட்சிகரத் தத்துவமென்பது திரிவுவாதமாகும்.இதைத்தாண்டி நாம் இலங்கையில் குறைந்தபட்ச ஜனநாயகச் சூழலின் அவசியத்துக்காகவும்,மேற்சொன்னபடி அரசியலை முன்னெடுக்கவும் புலிகள் தமது அந்நியச் சேவைப் பாத்திரத்தைவிட்டு ஒதுங்குவதற்குச் சரணடைவதால் மக்களைக் காப்பதும்,போராளிகளைக்காப்பதும் கூடவே இலங்கைப் பாட்டாளியவர்க்கத்தின் எதிரியைத் தகுந்த முறையில் எதிர்கொள்வதற்குமான புரட்சியின் புறவயச் சூழலை முன் தள்ளவே இதை ஒரு அரசியலாக முன்வைக்கிறோம்.எனவே,புலிகள் தமது பாசிசக் கட்டமைக் குலைத்துச் சரணடைவதும் அந்நியச் சேவைக்காகக் காரயமாற்றும் அவர்களது வெளியுலகப் பிரமுகர்கள் மேலும் தமது குருதிக்கறைபடிந்த கரத்தைத் தமிழ்பேசும் மக்கள்மீது திணிப்பதைத் தவிர்ப்பதும் அவசியமானவொரு பணியாகிறது.



யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களும் மற்றைய இனங்களும் தமது ஐக்கியத்னூடாகப் பொது எதிரியானதும் அந்நியச் சக்திகளுக்கு உடந்தையானதுமான இலங்கை ஆளும் வர்க்கத்தை எதிர்கொள்ள, இலங்கையின் அனைத்து இனமக்களும் ஒன்றிணைந்து போராடும் சூழலின்றி இலங்கையில் புரட்சிகரப் போராட்டமும் இனங்களுக்கிடையிலான சுயநிர்ணய உரிமையும் நிலைக்கமுடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்
19.04.09

Wednesday, April 15, 2009

ஒய்யாரக் கொண்டையாம்,உள்ளே ஈரும்,பேனுமாம்.

நெருக்கடிக்குள்ளாகும் அரசியலும்,அரசியல் பார்வகைகளும்,புலிகள் பினாமிகளும்.

பகுதி:(2)


ஒய்யாரக் கொண்டையாம்,உள்ளே ஈரும்,பேனுமாம்.



அன்பு வாசகர்களே,விட்டால் இரயாகரன் கோஷ்டி எல்லோர் காதிலையும் புரட்சிப் பூ வைத்துவிடுவார்கள்.இப்போது, எனக்கு வேலை தொடங்கிவிட்டது.அவரைப்போல் முழுநேரத் தொழிலாகப் புலிப்பரப்புரை செய்வதல்ல எனது வேலை.எனவே,அப்பப்ப(உடனுக்குடன்)பதிலளிக்க முடியாது.நான் ஒரு எழுத்தைக்கூட விரயமாக்க முடியாது.இதுதான் எனது நிலை.

எனவே,நேரடியாக விஷயத்துக்குள் போவோம்:


தமது, புலி முகமூடி கிழியும் தருணங்களில் இவர்கள் விவாதம் என்று வரும்போது, "தத்துவார்த்த விவாதத் தொடரென"ப் புரட்டுவார்கள்.ஆனால்,இவர்களது தத்துவம் மிகவிரைவில் ஊத்திக்கொண்டுபோய்விடும்.


தத்துவம் என்பது நாலு புருடாக் கேள்வியைச் சுற்றிப் புனைவதில்லை!


இவர்கள்,எல்லோரையும் குதறும்போது-மற்றவர்கள் மௌனமாக இருக்கும்போது, தமது தரப்புக்கான தளம் உறுதிப்பட்டதாகவெண்ணிக்கொள்கிறார்கள்.இஃது, அவர்களது கள்ளத்தனமான செயலுக்கு மேலும் தங்குதடையின்றி வலுச் சேர்க்கிறது.எனினும் இவர்களை, இப்படியேவிட்டால்,தாம் காட்டுவது-கட்டுவதே புரட்சியெனப் பம்மாத்துப்பண்ணி, அனைவரது குரல்வளைகளையும் முறித்துவிடுவார்கள்.








எனவே,உடனடியாக புலிப் பினாமிகளின் கருத்துக்களுக்கும், அவர்கள் "தத்துவம்"என்று புரட்டும் கருத்துக் குவியலுக்கும் நேடியாகச் செல்வோம்.

"புலிகள் இறுதி முடிவு எப்படி அமையும்?"


"புலிகள் துரேகத்தைச் செய்வார்களா,சரணடைவார்களா?"


"புலிகள் போராடி மடிவார்களா?"


மேலே இவர்களது கேள்விக்குப் பதிலளிக்காது நாம் ஓடி மேய்கிறோமாம்.அரசியல் பம்மாத்து(அவர்கள் தம் அனுபவத்தை மற்றவர்களுக்குப் பொருத்தும் அவசரத்தில்...),வர்க்கம் என்று முத்திரைகுத்தி விவதத்தை; தவிர்க்கிறோமாம்.குண்டுச்சட்டியிலும் குதிரை ஓடுகிறோமாம்.


நல்லது.

நீங்கள் கேட்கும் கேள்வி எமக்கு அவசியமானதில்லை.


இதை முதலில் புரியவும்.



ஏனெனில்,புலிகள் குறித்த சரியான மதிப்பீடு இருக்கும்போது இக் கேள்வி எழமுடியாது.மாறாகப் புலிகளுக்கு இலக்கணம் வகுத்து அவர்களை"வலுதுசாரியத் தேசிய வாதிகள் என்றும்,தமது வர்க்கத்துக்கு இன்னும் துரோகஞ் செய்யாதவர்கள்"எனக்கூறிப் புலிகளைத் தமிழ் பேசும் மக்களுக்குள் தேசியச் சக்திகளாக(வலதுசாரி)க் காட்டவேண்டிய புலிகளது நிர்பந்தம் உள்ளவர்கள் மட்டுமே இக் கேள்வியைத் தொடுப்பர்.


நாம் புலிகளது வருகையே தவறானதென வகுத்து,அவர்கள் அழிவு அரசியலை முன்னெடுக்கும் விதேசிய வாதிகளென விள்க்கியும்,மேலும் அவர்களை அந்நிய அடியாட்படை என்று வரையறை செய்து ,தமிழ்பேசும் மக்களது விடுதலைக்கு எதிரான மாபியாக் குழு என முடிவு செய்தபின் அவர்களது முடிவை ஏலவே கணித்துள்ளோம்.அது, குறித்துப் பல பத்துக்கட்டுரைகளும் போட்டாச்சு.எனவே, இக் கேள்வியோ புலிகளோ அவசியமானவர்கள் இல்லை.வரலாற்றில் அவர்களது அழிவு அரசியலை நாம் பார்க்கிறோம்தானே?அது,தத்துவார்த்த உண்மைகளைச் சொல்லப் போதுமானது.


இப்போது,விதேசிய வாதமென நாம் கூறுவதைப் புலிப் பினாமிகள்"மக்கள் நலனை மறுத்த தேசியம்"என்கின்றார்கள்.

இங்கே,திரிபு என்று அடிக்கடி இவர்கள் நம்மைப்பாத்துக் கூறும் அதே அர்த்தத்துக்கு இவர்களது இந்த வாக்கியம் நல்ல உதாரணமாகும்.இது,திரித்துப் புலிக்குத் தேசியவிடுதலைப்பாத்திரம் கற்பிக்கும் சுத்தலுக்காக"மக்கள் நலன் மறுத்த தேசியம்"என்று கரடியாக ஓலமிடுவதை வாசகர் புரியணும்.



புலிகளது வார்த்தையில் அகராதியில்"ஒரு தமிழன் இருக்கும்வரை போராடி வீழ்வோம்"என்பது உலகறிந்து மொழியாகும்.


இதைப் புரிய முனையும்போது, இந்தப் புலிப் பினாமிகள் மக்களுக்கூடாகப் புகந்து வைக்கும் கோசங்களான "அவர்களை(மக்களை) விடுவித்தல்-தப்பிப்போகவிட்டுப் போராடுங்கள்-சரணடையாது போராடி மரியுங்கள"; எனும்கோசங்களை மிக இலகுவாகக் கணிக்க முடியும்.இது,இரயாகரனது பெயரில் புலி மொழியாக நம்மை வந்தடைகிறது!ஆக,இதை"நாம் மட்டுமே துரோகத்தை மறுத்துப் போராடிச் சாகும்படி கூறுகிறோம்"என இரயா கருத்துரைப்பது ஒன்றும் தத்துவார்த்தப் பெரும் தேடுதலில்லை. கூடவே, புரட்சிகரக் கோசமும் இல்லை!இது, புலிகளது அழிவு அரசியலுக்கு அலங்காரமாகக் கருத்துக்கட்டி வரலாற்றில் புலியினது துரோகத்துக்குத் தியாகங் கற்பிக்கும் குள்ளநரி வேலை!






புலிகளது போராட்டப் பாத்திரம் துரோகமாக இருக்கும்போது, அத்தகைய துரோகிகள் இறுதிவரை போராடி அழிவதென்பது மாபியாக்களின் நடாத்தைக்கு ஒப்பானது.ஏனெனில், புலிகள் தேசியவிடுதலைச் சக்திகள் இல்லை.தேசியம் என்பது எப்பவும் முதலாளியக் கோட்டைக்குள் இருந்து வருவது.அங்ஙனம் பார்த்தோமானால்-விளங்கிக் கொள்வோமானால் புலிகளுக்கு வலுதுசாரியத் தேசியம் கற்பிக்கும் புலிப்பினாமிகளைப் புரிய முடியும்(இவர்கள் புலிகளைச் சொல்லித் திரட்டிய மக்கள் பணத்தில் புதிய ஆளும் வர்க்கமாக மாறியவர்கள் என்பதைப் பிறிதொரு கட்டுரையில் மிக விரிவாகப் பார்ப்போம்).

"புலியல்லாத சூழல்மீதான அரசியல் எதிர்காலம் குறித்தும் தத்துவ மாமணிகள் கேள்விகள் தொடுக்கும்போது புலிகளுக்கும்,தமிழீழத்துக்கும் இவர்கள் விசுவாசமாகக் கருத்தூண்டுவதிலும் அதன் இருப்புக்கும் அர்த்தங் கற்பிக்கிறார்கள்.

அத்தோடு தாம் கேட்ட கேள்விகளைத் தனித்தும்,பிரித்தும் பார்க்கும்படியும் எமக்கு வகுப்பெடுக்கிறார்கள்.

இது, எதற்கு?


புரட்சிக்காம்!-புதியஜனநாயகப் புரட்சிக்காம்!!


புலிகள் சரணடையாது செத்து மடிவது புலியழிப்புக்கான-அவர்களை இல்லாதாக்கும்(இதுதாம் புலிகளது இன்றைய நிலை.மக்களையும்,அவர்களது குழந்தைகளையும் அழிவு யுத்தத்துக்குள் திணித்துத் தம்மைக் காப்பதற்காகச் செய்யும் இவ் யுத்தத்தைப் புரட்சிகர-ஜனநாயகச் சக்திகள் வரவேற்றுக் கொலைக் களத்துக்கு இசைவாக இருப்பதற்கு முனையும் புலிகளது தந்திரம்,இதைப் புரட்சிக்குச் சாதகமானதாகச் சொல்லி,மற்போக்கு அரசியலைக் காயடிப்பது- முற்போக்குச் சக்திகளுக்கு வரலாற்று அவதூறுகளைக் கற்பிப்பது.இது, நீண்டகால நோக்கில் நடந்தேறுவது.உடனடியான நலனாக வருவது, புலிக்கான மக்கட் கவசமும்,ஆளணியுமாகும்.இதைப் புலிப்மினாமிகள் புரட்சியின் பெயரால் நியாயப்படுத்துகிறார்கள்)புரட்சிகரக் கோசமென்று புரட்சியை இழிவுப்படுத்தும் புலிப்பினாமிகளைக் குறித்துப் புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.இத்தகைய தந்திரத்தை நியாயப் படுத்தப் புலிகளது பினாமிகள் சரணடைவை-யுத்த நிறுத்த்தைக் கோரும் நம்மைப் புலிகளது இருப்புக்குத் துணைபோவதாகச் சொல்கிறார்கள்.அவர்களது மொழியில் சொன்னால் திரிக்கிறார்கள்.


தமது கோணலான கேள்விகள் யாவும் தத்துவார்த்த விவதமாம்."கேட்கின்றவன் கேனையானாலும் கேள்வரகில் நெய்வடியுமாம்"எனத் தமிழ் நாட்டிலொரு பழிமொழி உண்டு.



புலிகள் தம்மையும்,தமது அழிவு அரசியல் முடிவையும் குறித்துக் கவனமாக இருக்கிறார்கள்.அவர்கள் ஆடுகிற ஆட்டத்துக்குப் பல வடிவங்கள் உண்டு. அதில் ஒரு வடிவம் இரயாகரன் குழுவாகும்.இதுபோன்று பற்பல வடிவங்கள் உண்டென்பதை உணரச் சமீபத்தில் இலங்கை இராணுவத்தோடு இந்திய இராணுவம் சேர்ந்து போரிடும் படங்களை ஆதாரமாகப் போடுவதாகச் சொன்ன "சக்(ங்)கடத்தார்" ஒரு வார்த்தை சொன்னார்.அதைக் கவனமாக வாசித்திருப்பவருக்கு அவ் வார்த்தையின் அர்த்தம் புரியும்.


அவர் கூறுகிறார்"ஆழ் கடலில் அலைகள் இல்லையாமே ஆனால், அங்கும் புலிகள் இருப்பார்கள்"என்று.இதுதாம் உண்மை!


புலிகளைப் பாதுகாக்க உள்ள ஒரே வழியை(சரணடைவு)அடைத்துத் தியாக வழியுடாக அவர்களை இல்லாதாக்கின்றார்களாம்.இதுதானே புலியினது இறுதி நிலை.அது, அடையப் போகும் இறுதி நிலையைத் தியாகத்தினூடாகக் கற்பிக்கின்றார்கள்.இதன் வழி மீளக் குறுந்தேசியவாதப் புலிகளது வருகை தியாகத்தின் திசை வழியாக உட்புகுதலாக இருக்கும்.இங்கே, துரோகம் என்றும்-தியாகமென்றும் கூறித் தமிழ் மக்கள் பெயரால் "வலது சாரிய அரசியலைத் தக்க வைக்காதிருப்பதற்காக"ப் புலிகள் இறுதிவரை போராடி மரிக்க வேண்டுமென்றவுடன் புலிகள் அதைச் செய்வார்களாம்.புலியினது இறுதி நிலை அழிவுதாம்.இதை முடிந்தளவு தடுத்து நிறுத்தித் தலைவர்களைக் காக்க எடுக்கும் முயற்சிக்கு இளைஞர்களை-மக்களைக் களப்பலியாக்குவதற்குப் பெயர் புரட்சிக்காகப் புலிகளை இல்லாதாக்கும் தியாகத்தினூடான பொறிமுறை.


இதற்குப் பெயர் தத்துவார்த்த விவாதம்?


அவித்த மீன் துடிக்கிறது அம்மியும் கவி பாடுகிறதென்ற தலைப்பில் அடுத்த கட்டுடைப்புத் தொடரும்.


...ம்,தொடர்வோம்.


ப.வி.ஸ்ரீரங்கன்

15.04.09

Monday, April 13, 2009

புலிகளது இறுதிவரையான சாவு அரசியலூடாக...


நெருக்கடிக்குள்ளாகும் அரசியலும்,அரசியல் பார்வகைகளும்,புலிகள் பினாமிகளும்.

பகுதி:(1)


மிழ் மக்களைச் சுற்றிய புலித் (வி)தேசியவாதம் அரசியலற்றரசியல்(இது,அந்நியச் சக்திகளுக்கு அடியாளாக இருந்து விடுதலையைக் காட்டிக்கொடுப்பது) மாபியாத்தனமான கெடுபிடிகளுக்கு மத்தியில், தனது ஈவிரக்கமற்ற கொலை அரசியலூடே படுபாதகமான துரோகத்தைத் தியாகமாக்க முனையும் இன்றைய நிலையில், நாம் மிகக் கெடுதியான புலிப்பினாமிகளின் பரப்புரைக்கு இரையாகுவதா இல்லை அதை மீறித் தமிழ்பேசும் மக்களது அரசியல் விழிப்புணர்வைத் தொடர்ந்து விருத்தியாக்கிப் புலிவழித் தேசியத்தை மறுத்துப் புதிஜனநாயகப் புரட்சியை இலங்கையில் தொடர்ந்து நடாத்துவதா, என்பதைப் புலிகளது தவறுகளிலிருந்து கற்பதா என்று பாரிய நெருக்கடிக்குள் தமிழ்ச் சமுதாயம் மட்டுமல்ல முழு இலங்கைவாழ் இனங்களும் எதிர் கொள்கின்றன.


இங்கே, மக்களைக் காயடித்த புலி அரிசியல் மாபியாத் தனத்தை மேலும் தேசியவாதச் சாயம் பூசித் தமிழ் பேசும் மக்களை மேலும் ஓட்டச் சுரண்டுவதற்குப் புலிக்கு முண்டுகொடுக்கும் அவர்களது பினாமிகள் தொடர்ந்து மக்களை ஏமாற்ற எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்துப் புலிகளது மக்கள் விரோதப் பக்கங்களை இனம் கண்டு, அதை மறுத்தொதுக்கி இலங்கையில் இனங்களுகிடையிலான ஒற்றுமையுடன்கூடிய ஒத்துழைப்புடன், ஆளும் மகிந்தாவின் அரசையும்,பாசிசப் புலிவழி அரசியலையும் ஓட்ட வேரறுக்கவேண்டிய வரலாற்றுத் தேவை முற்போக்குச் சக்திகளிடம் உண்டு.எனினும்,நிறுவனமயப்பட்ட புலிப் பினாமிகள், புரட்சிகர வேலைத் திட்டத்துக்கு எதிராக மீளவும் புலிவழி அழிவு அரசியலை நியாயப்படுத்தி, மக்களைத் தொடர்ந்து குறுந்தேசிய எல்லைக்குள் முடக்கிப் பாசிசப் புலிகளது அழிவில் தமது நலன்களை அறுவடைசெய்யத் திடமாகக் காரியமாற்ற முனைகையில் நாம் மௌனமாக இருக்க முடியாது.

ஏனெனில்,இவ் வகைப்பட்ட அரசியலானது இன்று பல்லாயிரம் மக்களைப் பூண்டோடு அழித்து, அவர்களது உறவுகளை அகதிகளாக்கி நாடோடிகளாக்கிய பின்பும் அந்நிய நலன்களுக்கிசைவாக எமது மக்களின் குருதியை மேலுஞ் சிந்தவைக்கப் புலிகளதுவழிப் போராட்டத்தில் நியாயம் இருப்பதாகக் கற்பிக்கப் புலிகள் கையிலெடுத்த குறுந்தேசிய வாதத்தை மெருக்கூட்டி, அதையே மக்களது விடிவுக்கான மூலாதாரமாகக் காட்டுவதே சுத்த மோசடியாகும்.


இதை எங்ஙனம் முறியடிப்பது?:


1: புலிகளது அரசியல் நடாத்தையை விமர்சனத்துக்குள்ளாக்குவது,


2:புலிகள் கூறிய தமிழீழத்தை மீள் பிரிசீலிப்பது,


3:தமிழீழம் என்பதன் பொய்மைக்குள் பலியெடுக்கப்பட்ட மக்களையும்,அவர்களது இழப்புகளையும் குறித்து மிக நீண்ட அரசியல் விவாதத்தைத் தொடர்வது,

4: தமிழீழம் எனும் பொய்க் கோசத்துக்கு எதிரான அரசியல் தீர்வை முன்னெடுக்கும் முகமாக ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைப்பது,அழிக்கப்பட்ட வாழ்வாதாரங்களை இலங்கைப் பூர்ச்சுவா அரச சட்டவரைவுக்கொப்பக் கட்டியெழுப்புவது,அதன்வழி சிங்களப்பாட்டாளியவர்க்கத்தோடு இணைந்து பொருளாதாரவாதப் போர்களோடு சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை இணைப்பது,

5:இலங்கை தழுவிய புரட்சிக்கான முன் நிபந்தனைகளை உருவாக்கும் முகமாகச் சிங்களப் பாட்டாளிய வர்க்கத்தை அணுகுவதும்,புரட்சிகரக்கட்சிக்கான பணிகளை அவர்களோடு இசைந்து ஆற்றுவதும,அந்நியச் சக்திகளது பொருளாதார இலக்குகளுக்கு எதிரான போராடாட்டங்களைச் சிங்களப்பாட்டாளிய வர்க்கத்தோடு இணைந்து உள்ளக-மற்றும் வெளிய அரசுகளுக்கு எதிராகக் கட்டியமைப்பதும்; உடனடித் தேவைகளாகும்.


இவை உடனடித்தேவையாகத் தமிழ்ச் சமுதாயத்தில் இருப்பினும்,



அ): நாம் இலங்கையில் வாழும் மற்றைய சிறுபான்மை இனங்களான மலையத் தமிழ் மக்கள்
மற்றும் முஸ்லீம் மக்களோடான உறவை மேலும் வலுப்படுத்தும் முகமாக அவர்களது அரசியில்
கோரிக்கைகளை எமது வரலாற்று முரண்பாடுகளோடு உள்வாங்குவதும், அதன் முதல் தெரிவாக
அவர்களது அரசியல் அபிலாசைகளை எமது அரசியல் அபிலேசைகளோடு இணைத்துக் கை கோற்பதும்
அவசியமாகிறது.

இ): இதன் தொடராக முதலில் நாம் புரிந்துகொள்ள முனைவது இதுகாலவரையான
புலிகளது தமிழீழப்போராட்டதை அரசியல்ரீதிய விளங்க முற்படுவதும் அதை எங்ஙனம் புலிகள்
தவறான அரசியல் தெரிவினூடாக முன்னெடுத்துக் கொலைக்கள அரசியலை நமக்குள் திணித்தார்கள்
என்பதே அவசியமான அரசியலை முன் தள்ளுகிறது.


இன்று, புலிகளது அரசியலற்ற மாபியத்தனமான குழுவாதத்தின் தொடர்ச்சியில் உருவாக்கப்படும் பரப்புரைகள் புலிகளைத் தேசியச் சக்திகளாக வரையறுப்பதற்காகப் புலிப் போராளிகளை முற்றாகப் போராடியழியும்படி வற்புறுத்துகிறது.இது,அவர்களது அழிவில் தமிழ்பேசும் மக்களுக்குள் தம்மை மீளவும் புதிய புலிகளாகத் திணிப்பதற்கும், புலிகளற்ற வெற்றுடத்தைப் புலிவழிப்பாதைகளுடாக நிறுவுவுதற்குமான குறுகிய பாதைகளை மிகக் கொடூரமான பேர்வழிகள் நமக்குள் திணிக்கின்றார்கள்.இவர்களே,இன்றைய புலம்பெயர் மண்ணிலுள்ள தமிழ்பேசும் மக்களது சிங்கள அரசுக்கெதிரான உணர்வைத் தமக்கிசைவாக்கி, மீளவும் படுகொலை அரசியலை முன்னெடுக்கப் படாதபாடுபட்டுப் புலிகளை முற்றுமுழுதாகப் போராடிச் சாகச் சொல்கின்றனர்.இதன் அர்த்தம் எதிரியிடம் சரணடையாது போரிடும்படிகூறிப் புலம்பெயர் மக்களது வீதிக்கிறங்கிப் போராடும் உணர்வை, மேலும் கிளறி அவர்களை வைத்தத் தமது அரசியலை முன் தள்ள எடுப்பதற்குப் புலிப் போராளிகளின் இறுதிவரை சாவுக்கான போர் அவசியமாகிறது.


எனவே,இதை அம்பலப்படுத்திப் போருக்கான அனைத்துக் காரணங்களையும் அம்பலப்படுத்திப் போரை முடிவுக்குக்கொணர்ந்து புலிகளது அடிமட்டப் போராளிகளை நாம் காத்தாகவேண்டும்.அவர்களோடு அழியக் காத்திருக்கும் தமிழ் மக்களையும் நாம் காத்தாகவேண்டும்.இதுவே,புரட்சிகர முற்போக்குச் சக்திகளது இன்றைய கடமையாகிறது!


புலிளது அடிமட்டப் போராளிகள்,நமது மக்களது குழந்தைகள்.அவர்களை எக்காரணங்கொண்டும் வலிய உலக வல்லாதிக்க இராணுவத்திடம் பலி கொடுக்க முடியாது.புலிகள் இன்று சிங்களச் சேனைகளை மட்டும் எதிர்கொள்ளவில்லை.மாறாக, உலக-இந்திய வல்லாதிக்க இராணுவங்களால் வேட்டையாடப்படும்போது அதைத் தேசியத்தின் பெயரில் அங்கீகரித்து, இறுதிவரை போராடி மரணிக்கும்படி வற்புறுத்துவது மிக மோசமான கடைந்தெடுத்த அயோக்கியத் தனமாகும்.புலிகளது சரணடைவில்/அழிவினில் அவர்கள் கட்டியமைத்த தேசியம் அம்பலமாவதும் /வலிவுறுவதும் அறிவியலுக்கு முரணானது.அவர்கள் தாம் கற்பித்த (வி)தேசியத்துக்காக இறுதிவரை போராடி மரிக்கும்போது அது மக்கள் மத்தியில் உண்மையான அரசியல் கோரிக்கையாக வலுவுறுகிறது.இது,புலிக்கு வக்காலத்து வேண்டும் புரட்சிகரப் புரட்டு இல்லையா?


இது, அந்நியச் சக்திகளுக்கும்,புலித் தலைமைக்கும் உள்ள அதே பழையபாணி அரசியலை வரிந்துகொள்வதாகவே நாம் இனங்காண்பதால் முதிலில் இப் போருக்கான அனைத்து எதிர்ப்புக் குரல்களையும் இணைக்க விரும்புகிறோம்.

போர் உடனடியாக நிறுத்தப்பட்டுப் புலிகளது சரணடைவில் மக்களது வாழ்வும், அவர்களது குழந்தைகளும் காப்பற்றப்படவேண்டும்.இதன் அடுத்த அரசியல் நகர்வாக அவர்களது வாழ்வாதாரங்களைச் செப்பனிடும் அரசியல் மக்களது தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படவேண்டும்.இது,டக்ளஸ்-கருணாவிடமோ அல்லது புலிகளது புதிய கருணாப் பாணியிலான சக்திகளிடமோ கையளிக்கத் தக்க அரசியலல்ல.மாறாக, மக்களே தமக்காக தமது அரசியலை முன்னெடுப்பதற்கான சூழலை நாம் வகுத்தளிக்கக் கடமைப்பட்டவர்கள்.

தேசியத்தைச் சொல்லியோ அல்லது சுயநிர்ணயத்தைச் சொல்லியோ மீளவும் புலிப்பாணி அரசியலைப் புலிகளது அழிவில் தொடர விரும்பும் சமூகவிரோதிகளை நாம் இனங்கண்டாக வேண்டும்.இவர்கள், புரட்சிகரமான அரசியல் முலாம் பூசிப் புலிகளது மறுவடிவாமாக நமது மக்களுக்குள் ஊடுருவ முனைவது கண்டிப்பாக இனங்கண்டு முறியடிக்கப்படவேண்டும்.இல்லையேல் மீளவும் புலிப்பாணி அரசியலுக்காக மக்கள் செத்தாகவேண்டும்.


புலிகளது இருப்பு ஆட்டங்காணும் தறுவாயில் அதையே தமது வருகைக்கான தெரிவாகப் புலிப்பினாமிகள் புரட்சிகர மொட்டாக்கின்வழி காத்திருக்கின்றார்கள்.இவர்கள் மக்களை மீளவும் அதே புலிப்பாணி அரசியலுக்கிசைவான ஒரு வகைப்பண்டமாக இனங்காண்பதால் புலிகள் கூறிய-செய்த விதேசிய அரசியலின்வழி மக்களை அணுக முனைவதன் தொடர்ச்சியில்,பாட்டாளிய வர்க்க அரசியலைப் பின்தள்ளுவதற்காவும்,முற்போக்குக் குணாம்சமுடைய அரசியல் கோரிக்கைகளை-அரசியல்முன்னெடுப்புகளை "மானசீக வாதம்"எனக் குறுக்கிப் புலிகளுக்கு முண்டுகொடுப்பதில் மேலும் தமது இருப்பைப் புலிகளது அரசியலின்வழி உறுதிப்படுத்துர்கிறார்கள்.இதை முறியடிப்பதற்கான புரட்சிகர வேலைத் திட்டமானது முதலில் ஆளும் சிங்கள அரசுக்கெதிரான சிங்களப்பாட்டாளிகளது கரங்களோடு நமது மக்கள் தமது கரங்களைப் பிணைப்பதனூடாகவே சாத்தியம் என்பதை நாம் இனங்களுக்கிடையிலான பரஸ்பர உறுவுகளின் வழி தெரிவாக்குகிறோம்.


"புலி-புலி எதிர்ப்பு வெளிப்படையாக இல்லாத"என்றொரு தளம் எங்கேயும் இல்லை.புலிகளது அரசியல் கோசமானது தமிழ்பேசும் மக்களது அனைத்துத் தளத்திலும் தனது கருத்தியல் வலுவை மிகக் கணிசமாக ஊன்றிப் படுகொலைகளை நியாப்படுத்தும் இந்தத் தருணத்தில் புலி எதிர்ப்பு அரசியலானது அதன் பாதகமான பக்கத்திலிருந்து புலிக்கு எதிரான சாரம்சத்தில் மக்களுக்குச் சாதகமான அரசியல் கோரிக்கைகளின்வழித் தமது அரசியல் இலாபங்களை மீட்டெடுக்க முனைகின்றன.இது,இன்றைய புலி-புலிப்பினாமிகளது அரசியல்-போராட்ட நகர்வுக்கும்,அவர்களது(டக்ளஸ்-கருணா.பிள்ளையான்) நகர்வுக்கும் எவ்விதத்திலும் வித்தியாசமானதில்லை.


கடந்தகாலத்தில் தமிழ்பேசும் மக்களது நியாயமான கோரிக்கைகளை எங்ஙனம் புலிகள் தமது இருப்புக்காகவும் அரசியல் பேரத்துக்காவும் பயன் படுத்தினார்களோ, அதே தெரிவோடு புலி எதிர்ப்பு இலங்கை அரசுசார்பு குழுக்கள் தற்போதைய மக்களது வாழ்வாதாரத் தேவைகளைத் தமது கைகளில் எடுத்து மக்களை அண்மிக்கின்றார்கள்.இவை எதுவும் நமது மக்களுக்கு விமோசனம் அளிக்க முடியாது.மாறாக, அதே பழைய அரசியலின் தொடர்ச்சியைப் புரட்சி என்றும்,ஜனநாயகம் என்றும் முன்னெடுக்கின்றன.இது, சாரம்சத்தில் புலிகளது புதி இருப்பாகவே மாற்றமுறுகிறது.


எனவே,மக்களே தமது தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்காக, அரசியல் பாதைகளைத் தமது அநுபவத்தின் வாயிலாகத் தெரிவது அவசியமாகிறது.


தமிழ்பேசும் சமுதாயத்தில் வர்க்க அரசியலை முன்னெடுக்க முடியாத "தமிழீழப் போராட்ட"அரசியலானது முழு மொத்த மக்களுக்குமான குறுந்தேசியவாத அரசியல் நகர்வை இலங்கையில் "ஈழஞ்"சாத்தியமெனும் போராட்டச் செல் நெறியூடாக வளர்த்தபோது, அங்கே வலதுசாரிய வர்க்கக் கண்ணோட்டமே சமுதாயத்தின் மொத்த இருப்பிடமும் நிலவியது.தொழில் வளர்ச்சியற்ற ஒரு மக்கட்டொகுதியிடம் பாரிய பாட்டாளியவர்க்கப் பண்பு அறவே அற்றுக்கிடக்கும்போது இது மேலும் அச் சமுதாயத்திடம் சமுதாய ஆவேசமாகக் கருக்கொள்கிறது.இந்த அழிவு அரசியலை இப்போது அழிந்துபோகும் புலியிடமிருந்து தட்டிப்பறிப்பதற்குப் புரட்சிகரத் தேசியமெனப் புரட்டு அரசியலாக நம்மை அண்மிக்கிறது.


பரந்துபட்ட மக்களது நலன் தனியே இலங்கையில் தமிழ்பேசும் மக்களது நலனோடு அநாதவராகக் கிடக்கவில்லை.மாறாகப் பரந்துபட்ட மக்களது நலன் பொது எதிரிகளான புலி மற்றும் சிங்கள யுத்த ஜந்திரங்களை எதிர்கொள்ளத் திரணியற்று, அவர்களது பொய்யுரைப்பில் கண்டுண்டு போய்க் கிடக்கும்போது சில அதிமேதாவிகள் தமிழ்ச் சமுதாயத்துக்கள் இவ் வார்த்தையைவைத்து விளையாடிப் புலிகளது விதேசியவாத்துக்கு முண்டுகொடுக்கிறார்கள்.இவர்கள் தம்மை மார்க்சியத்துக்குத் தத்துப்பிள்ளைகளாகக் கற்பனைசெய்து, புரட்சிகரமான கருத்துக்களை அடியோடு சாய்த்துத் தமது புலிவிசுவாச அரசியலை முன்னெடுப்பதில் அதி தீவிரமாகச் செயற்படுவது புரட்சிகர அரசியல் பாத்திரமாக வரலாற்றில் நிலவ முடியாது.

தமது புலிவழி அரசியலுக்கிசைவாகக் கருத்துக்கட்டத் தேசியத்தை பாடுபொருளாக எடுத்தபடி, தமிழில் உலாவரும் மார்க்சிய ஏடுகளை நகல் எடுப்பதில் அவசரக் குடுக்கைத் தனமாகக் கருத்துக்களை முன் தள்ளுகிறார்கள்.இவர்களை அம்பலப்படுத்துவது மிக அவசியமான புரட்சிகரப்பணியாக இன்று நம் முன் இருக்கிறது.

புலிகளை முண்டுகொடுப்பதற்காக, புலிகள் சொல்லும் (வி)தேசியத்துக்கு அவர்கள் விரோதமாகித்தாம் மக்கள் தமது உண்மையான தேசியவிடுதலையை முன்னெடுக்க வேண்டுமெனக் கூறுவது அரசியல் ரீதியாக மிகவும் கேடுவிளைவிக்கும் மோசடியாகும்.புலிகளது அரசியல் பாத்திரத்தை அடியோடு வீழ்த்தமுடியாது, எதிர்புரட்சிப்பாத்திரத்துக்குக் கதவு திறந்துவிட்ட"புரட்சிகர"அணி, இப்போது புலிகளது பூண்டோடு அழிவை வைத்துச் சரியான தேசியத்தை மக்களுக்குச் சொல்வதாகப் பூச்சுற்றும் புலிப் பினாமிகள், தமது தலைமையைக் காப்பதற்கான புலம்பெயர் மக்களது ஆர்ப்பாட ஊர்வலத்தையும் அதையொத்த போராட்ட வடிவத்துக்கும் முண்டுகொடுக்க, அங்கே போராளிகள் அழிவதைப் புரட்சி-வர்க்கம் எனக் கருத்தாடி மக்கள் விரோத அரசியற்றிரையை மக்கள் முன் கட்டுகிறார்கள்.

இப்போது,புலிகளது வலதுசாரியத் தேசியத்தை மக்கள் தோலுரித்து இனங்காணுவதற்காக"தமிழ்பேசும் மக்கள் மத்தியிலேவுள்ள உற்பத்திச் சக்திகளது வளர்ச்சி அபரிதமாக இருப்பதால்-அதன்மீது உறவுகொள்ளும் அனைத்துத் தரப்பும் தனது வர்க்கத்தளத்திலிருந்துகொண்டு", புலிகளது அழிவில்-இறுதிவரை யுத்தஞ்செய்து, மரிப்பதிதாம் அல்லது சரணடைவது அவர்களைத்(புலிகளை) துரோகமாக இனங்காணப்போவதாகப் புருடாவிடப் புரட்சிகர முகமூடி புலிப்பினாமி அரசியலாக விரிகிறது.

புலிகளது இறுதிவரையான சாவு அரசியலூடாக, மக்கள் புலிவழித் தேசியத்தையே சரியானதாக நிறுவும் அரசியல்மனதைக் கணிக்காத கோமாளிப் புரட்சி பேசுவது ஆபத்தான அடித்தளத்தை மேலும் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கிறது.இன்று, மக்கள் எதைத் தேசியமெனப் புலிகளுடாக உணர்கின்றனரோ அதற்காகப் புலிகள் இறுதிவரை போராடும்போது, அத்தகைய தேசிவாதத்தை மேலும் அதே புலிவழி அரசியலாகத் தொடரும் சில மோசடிக் கும்பலுக்கு அல்லது புலிப்பினாமிகளுக்கு இப்போது முன்னெடுக்க நமது பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் புலிகளது கட்டாய இராணுவச் சேவையின்வழி போராடிச் சாவது அவசியமாகிறது.

இந்த அற்ப அரசியல் புரட்டுக்களை மேலுந் தோலுரிப்போம்.

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
13.04.09

Sunday, April 12, 2009

கண்ணைத் திறந்து பாருங்கள்

வன்னிமக்கள்:புதுவருடத்துக்காக இருநாள் உயிர் நீடிப்பு.

வன்னியுத்தம், அங்கு வாழ் மக்களைக் கொன்று குவிப்பதிலிருந்து தன்னைப் புதுவருடத்துக்காகத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது!கொல்வதற்கான ஓய்வினால் சாகப்போகும் மக்கள் இரு நாட்கள் தமது ஆயுளைக்கூட்டத் தக்கதாக இருக்கிறது,இலங்கை வரலாற்றில்.பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தகு மகிந்தாவினதும்,பிரபாவினதும் இராஜதந்திர முயற்சியின் தொடராக, உயிர்த்திருப்புக்கான சலுகை வருஷத் தள்ளுபடியில்.

இந்தச் சிங்கள-புலிகளது யுத்த ஜந்திரங்களுக்கான உறக்கம் மக்கள்மீதான கரிசனையின்பொருட்டுத் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை!அல்லது, அளப்பெரிய மனித உயிர்த்திருப்புக்காக யுத்தத்தை நிறுத்த முடியாத யுத்தப் பிரபுக்கள்,தமது மதச்சார்பு ஐதீகங்களுக்குக்கொடுக்கும் மரியாதையை மக்கள் உயிருக்கு வழங்க முடியவில்லை!என்னவொரு தேசமும்,அதன் தலைமைகளும்!

மானுட நேசிப்புக்கு நிகராக எந்த பொருள்சார் மதிப்பீடுகளும் சமுதாயத்தில் நிலைபெறமுடியாது!அங்ஙனம்,மக்களது மாண்பு குறித்து இதுவரை இப்பொருளாதார உலகஞ் சிந்திக்கவுமில்லை.மனித சமுதாயமென்பது முழுக்கமுழுக்கப் பொருளாதார இலக்குகளை நோக்கித் தமது வளர்ச்சிப்போக்கைத் தகவமைத்தன் விளைவாக இன்றும் போர்கள் தொடர்கின்றன.இப்பிரபஞ்சத்தில் மனிதர்கள் இருப்பதற்கான-வாழ்வதற்கான அனைத்து வளங்களையும் இப் பூமி வைத்திருக்கிறது.எனினும்,கொடியவர்கள் அதைத் தத்தமது சொத்தாக மாற்றியபின் மானுட இருப்புக்கு எந்த மகத்துவமும் வந்தபாடிலில்லை!

இது,குறித்து மணிமேகலையில் சாத்தனார் இங்ஙனம் அழுதுவடிகிறார்:

"ஆரும்இலாட்டியேன் அறியாப்பாலகன்
ஈமப் புறங்காட்டு எய்தினான்-தன்னை
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது
உறங்குவான் போலக் கிடந்தனன் காண்"என-

"அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா
பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்"-மணிமேகலை,சக்கரவாளக் கோட்டம்:145-150-சார்த்தனார்.

யாருடைய ஆதரவுமில்லா என் அறியாப் பாலகன்(இன்று,உலகே கைகழுவிய தமிழ் மக்களைப்போல) ஈமத்தையுடைய சுடுகாட்டு வழியே(தமிழீழப் போலிக்கோசத்தினூடாகப் பயணித்தது போன்று)சென்றனன். அணங்கோ அல்லது பேயோ அவனது ஆருயிரை உண்டுவிட்டது."இங்கு நோக்கு,இந்தா உறங்குபவன் போலச் செத்துக்கிடக்கிறானே-அவனைப்பார்!" என்று தாயான பேதை கோதமை அழுது புலம்ப,"அடியேய் பேயும்,அணங்கும் உயிருண்ணாதடி பேதையே,பெண்ணே,இஃது,நெருங்கிய முப்புரி நூலை அணிந்த மார்புனுடைய சார்ங்கலனது அறியாமையே பற்றுக் கோடாக,அவனது ஊழ்வினையானது வந்து உயிரைக் குடித்து நீங்கியது.ஆதலால் பெண்ணே நினது மிகப் பெருந் துயரை நீக்குவாயாக!"என்றது சம்பாபதி தெய்வம்.





அறியாமை,
அறியாமை,
அறியாமை!


ஆம்!,அறியாமை, கேடு விளைவிக்கும்!!அன்றே புனைவினூடாகப் பக்குவமாகச் சொன்னார்கள் பெரியோர்?

"ஆமா,சொன்னார்கள்!அதற்கென்ன இப்போது?"கேள்வி எழுகிறதா? நல்லது!

கேள்விதானே அறிவினது மூலவூற்று?

கேள்விகள் தோன்றணும்!

நமது மூடர்களது தழிழீழப் போர் குறித்துக் கேள்வி எழுந்தே ஆகணும்.

இது,இலட்சம் உயிர்களை உண்டு கழிகிறது!

இந்த ஊழ்வினைக்கு யாரு சொந்தக் காரர்?

இப்போது,தமிழீழம் கானல் நீராகக் காடு தாண்டும்போது,அதைச் சொல்லிக் கொலைக்களத்தை ஆரம்பித்தவர்கள், அடுக்கடுக்காகத் தாமும் உயிரழித்து மறையும்போது,தமது தவறுகளைப் பொதுமைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.ஏகப் பிரதிநிதிகளாக மாறுவதற்கு எல்லோரையும் வேட்டையாடி தின்றோய்ந்தவர்கள்,அதிகாரத்தைச் சுவைக்கும்போது தமக்குமட்டுமே அதைக் கையகப்படுத்தினர்.இப்போது,உழ்வினை திரண்டு அவர்களைப் பதம்பார்க்கும்போது:

"ஐயோ,இன்றைய இவ்விழி நிலைக்கு நாம் மட்டுமா பொறுப்பு?இல்லையே,நீயுந்தாம் காரணம்"எனப் புலம்ப அறியாமைப் புலிக்குப் பலபேர் போட்டியாக...

அட சிவனே,ஆர்க்கெடுத்துரைப்பேன் இவர் மோசடிகளை?

அறியாமை,பகட்டு,பேரவா,பதவி வெறி,பிடித்துக்கொண்ட பிரபாகரன் அப்பாவி ஆகிவிடுகிறான் இவர்களிடம்.

இந்த அப்பாவியின் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்ந்துபோகும்போது, அதற்கு அவன்மட்டுமே அல்லப் பொறுப்பு.ஆயுதத்தை வழிபட்டுக் கண்கடை தெரியாத கொலைக்காரனாக ஊரெல்லாம் உயிர்குடித்தவன், இன்று இதற்குத் தான்மட்டும் பொறுப்பில்லை என்கிறான்!அதற்காக, ஆங்காங்கே அவனது ஊதுகுழல்கள் ஒலிக்கின்றன!

என்ன சாமான்-மானுட நேசிப்பா?
அப்படியாகவா-நல்லது.

அதென்ன மானுட நேசிப்பு?

கொலைகளைத் தேசத்தின் பெயரால்-மனிதர்களின் பெயரால்,தேசியத்தின்பெயரால் ஊக்குவிக்கும் அரசியல், மானுட நேசிப்பென்று பம்முவது எதனால்?

நாம் கணியன் பூங்குன்றனிடம் போவோம்.

மானுட நேசிப்பென்பது(இஃது, வர்க்கஞ்சார்ந்தது.என்றபோதும்...) வெறும் மொழிசார்ந்த உடல்களை மையப்படுத்திய பார்வையாக-உணர்வுத்தளமாக இருக்கமுடியாது.அரசியல் ஊடறுக்கும் உடல்சார்ந்த மதிப்பீடுகளும்,மொழிவாரியாக உள்வாங்கப்பட்ட உடல்களுமே அந்தந்த அரசியற்-பொருளியற் கட்டுமானதிற்குத் தேவையாகப்பட்டுள்ளது.

இது, கடந்தவொரு மானுட நேசிப்பானதை கணியன் பூங்குன்றனார் இப்படிப் பாடுகிறார்:

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று.


இந்த வாசகமானது மானுடர்களை மொழிவாரியாக-இனவாரியாகப் பிரிப்பதை எதிர்த்த கலகக் குரலாகும்.

எல்லையே இல்லா
மானுட உறவுகளைத் தமிழர்கள்
கொண்ட உறவினது அண்மைய
தடமாய்க் கணியன் மகத்துவம்
புரியாத இனமாச்சு அவன் வம்சம்!

நாம் மனிதர்களாக இருப்பதினால் மட்டுமே மானுடப் பண்பு உருவாகிட முடியாது,மனிதர்கள் உழைப்பால் உயரும் ஒவ்வொரு பொழுதினிலும் மானுடவொற்றுமை உண்டாகிறது.

உழைப்பின் பயனே மொழியும்-அரசும்-தேசிய இன அடையாளமும் வந்து சேர்கிறது.இதன் வாயிலாக உருவாகிவிடும் குறுகிய மொழிசார்ந்த அடையாளப் படுத்தல் மனித உடல்களை அரசியல் மயப்படுத்துவதில் பொருளாதாரக் காரணிகளுடாய் காரியவுலகம் செயற்படுத்துகிறது.

இந்த உணர்வுத்தளமானது குறிப்பிட்டவொரு இனமாக-குழுவாக மானுடரைக் கூறுபோடுகிறது.

இந்த நிலையின் ஒரு வடிவமாக மொழி உயிரினும் மேலாகப் பேசப்படுகிறது.

அதுவே, மானுட வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும்கொண்ட முற்றுமுழுதான குறியீடாகக் காட்டப் படுகிறது.இதன் வாயிலாகவெழும் சமூக உளவியற்றளம் தான் சார்ந்த மதிப்பீடுகளை குறிப்பிட்ட அடையாளப்படுத்தல்களுக்குள் வலு கட்டாயமாகத் திணிக்கிறது.

இங்கு, அந்தத் திணிப்பானது குறிப்பிட்டவொரு பொருளியல் நலனின் நோக்கை மையப்படுத்தி அதன் காப்பு-குவிப்பு எனும் தளங்களின் வியூகத்தோடு பரப்புரையாக்கப்பட்டு அரசியல் வடிவங் கொள்கிறது.


இந்தக் குறுகிய பொருளாதாரக் கயமைத்தனம் மானுடரை-அவர்தம் வரலாற்றுறவைக் காவுகொண்டு இன அழிப்புக்கிட்டுச் செல்கிறது.இந்த நிலையின் விருத்தியே இன்று நம்மைப்போட்டு ஆட்டிப்படைக்கிறது.

இங்கே,மத ஐதீகங்களுக்குக்கொடுக்கும் மதிப்பை வாழும் ஆசைக்காக, வன்னியில் அழுது மடியும் அந்த மக்களுக்கு எவருமே கொடுக்கவில்லை!

"இறுதிவரை-ஒரு தமிழன் இருக்கும்வரை நாம் போராடிச் சாவோமென" ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழன் சொல்கிறான்.இவனுக்கு வன்னியில் இருக்கும் மக்கள்சார்பாய்-அவர்களது உயிரைப் போராட்டத்துள்-கொலைக் களத்தில் திணிக்க எவர்கொடுத்தார் அவ்வுரிமையை?

மொழியா,இன உணர்வா,தேசமா?-தெரிந்தவர்கள் உரைக்கக் கடவீர்!


"வேட்கை சார்ந்து பற்று ஆகுமே
பற்றின் தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு"-மணிமேகலை:பவத்திறம் அறுகெனப் பாவை நோற் காதை:115

தமிழீழம்,தனி அரசு,பதவிமோகம்,அதிகாரச் சுவையோடு அள்ளுப்பட்டவர்கள் அமைத்த கோட்டைகள் யாவும் மக்களுக்குப் புதைகுழியாகின இன்று.வரியும்,தொகையும் ஏந்திய கரங்களின்று"மக்களே,மக்களே"என ஓலமிடுகிறது.


"கண்ணைத் திறந்து பாருங்கள்
கண்ணைத் திறந்து பாருங்கள்
கண்ணைத் திறந்து பாருங்கள்" என்று,

தொலைக் காட்சியில் உருகுகிறது.இதை, ஏலவே உணராத தலைமை மரணத்தைச் சந்திக்கும் பொழுதே அதற்கும் மானுட மகத்துவம் புரிகிறது!என்ன செய்ய எல்லாம் காலந் தாழ்ந்த ஞானம்.


"பொய்யன் மின்புறம் கூறன்மின் யாரையும்
வையன் மின்வடி வல்லன சொல்லிநீர்
உய்யன் மின்உயிர் கொன்றுஉண்டு வாழுநாள்
செய்யன் மின்சிறி யாரொடு தீயன்மின்."-வளையாபதி.

இதுதான் நாம் கொள்ளதகு அறிவு.


ப.வி.ஸ்ரீரங்கன்
13.04.09

Friday, April 10, 2009

ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவனை முட்டாளாக்கலாம்...

"புலிகள் இன்று துரோகஞ் செய்தால்,என்ன நடக்கும்?"


ந்தக் கேள்வியை,அரசியல் கேள்வி என்பதைவிட-இஃது,குறித்துச் சமுதாயமட்டத்தில் அதன் உளவியலோடு பொருத்தினால்-அஃது, தர்க்கத்துக்கு இடமளிக்கிறது!காகம் கருப்புத்தாம்,ஆனால்,கருப்பெல்லாம் காகமாகுமா?அப்படித்தாம் இக் கேள்வியும் பொத்தென்று மண்ணில் வீழ்ந்து நொருங்குகிறது!


"புலிகள் இன்று துரோகஞ் செய்தால்..."எனும்போது, அவர்கள் ஏலவே துரோகமிழைக்காத,மக்கள் விடுதலைப்படையெனக் கணிப்பிடப்படுகிறது.அங்ஙனம் இன்றி அவர்கள் ஏலவே துரோகத்தனமான எதிர்ப் புரட்சிப்பாத்திரத்தோடு போராட்டத்தைக் கைப்பற்றி, மக்களுக்கு எதிரிகளாக மாறினால்-மாறியிருந்தால் புதிதாகவொரு துரோகஞ் செய்ய வேண்டுமென்பதில்லை!


அடுத்து-துரோகம் என்று காது குத்தும்போது, புலிகளிடம் ஒரு இலட்சியம் இருப்பதாக உணரப்படுகிறது.அஃது,தமிழீழம் என்றாகவும் மாறுகிறது.எனவே,இலங்கையில் தமிழீழம் சாத்தியமெனப் புரட்சிகரச் சக்திகள் குறிப்பதாக நாம் கொண்டோமேயானால்,உலக அரசியல்போக்குகளிலும் அதன் உள்ளார்ந்த பொருளாதார நலன்களிலும் இலங்கையில் தனிநாடு சாத்தியமாவெனுங்கேள்வி அடுத்தாக எழுகிறது.புரட்சிகரச் சக்திகள் இலங்கையில் சிங்களத் தொழிலாளர்களை பகைத்தபடி, இலங்கையில் ஈழஞ்சாத்தியமாக்குவதாக எண்ணுமிடத்துப் புரட்சிக்கு எதிரான குறுந்தேசியவாத எல்லைக்குள் வீழ்ந்து, புலிகளுக்கு இலட்சியம் கற்பிப்பதாக முடிகிறது.


இங்கு,எனது நிலை,தமிழீழம் என்பது போலிக்கோசமாகும்.அது,சாரம்சத்திலேயே பிழையான அரசியல் தெரிவு.


அது,எப்போதுமே புதியஜனநாயகப் புரட்சிக்கு எதிரான யாழ்மேட்டுக் குடியினது அரசியல் கோசம்.இஃது,இலங்கையில் இனங்களுக்களுகிடையிலான முரண்பாட்டைத் திசைதிருப்பி, மக்களை அழிவுகிட்டுச் சென்று தத்தமது வர்க்க நலனைத் தக்கவைக்கும் முயற்சியாக, இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படுத்தியது.எனவே,இது,போலியான கோசம்-பேரத்துக்கான அரசியல் ஆட்டம்.


இந்த அழிவு அரசியலும்,யுத்தமும் இவைகளின் மறுவிளைவும் இலட்சம் உயிர்களைப் பறகொடுப்பதில் முடிவடைகிறதா?


இருந்தும்,புலிகள் சுயவிமர்சனஞ்செய்து தம்மைப் புரட்சிப்பாதைக்கு தகவமைப்பது சாத்தியமில்லையென்பது அவர்களது வர்க்க நலன்சார்ந்ததென்பதால் அவர்கள் போராடிச் சாவது மக்களுக்குச் சார்பானதா?


இக்கேள்விக்குப் பதிலெளிப்பதைவிட,முதலில் எவர் சாகிறார்கள் என்பதற்கு முதலில் விடைகண்டாகவேண்டும்.


புலித்தலைமையோடு கூடக்கிடந்த குற்றத்துக்காகச் சாகின்றவர்கள்போக,புலிகளால் கட்டாயமாகக் கடத்திப் போராடத்துக்கு அனுப்பப்படும் இளைஞர்கள்,யுவதிகளின்சாவு எங்ஙனம் மக்களுக்குச் சார்பானதாகிறது?


புலிகள் தமது அழிவோடு மக்களையும் நாளாந்தும் சிங்கள இராணுவத்துக்குப் பலிகொடுக்கும்போது,இஃது, எங்ஙனம் போராடிச் சாவதாக மாற்றமுறுகிறது?சாரம்சத்தில் கட்டாயத்தின் பேரில் கொலைக் களத்துக்கு மக்களைத் தள்ளியும்,அவர்களது குழந்தைகளை "தமிழீழத்தின்"பெயரில் காயடித்துத் தமது அரசியல் பேரத்தைச் செய்வதில், சாவை முன்னெடுப்பவர்களைக் குறித்து இலட்சியம் என்ற கோசம் எங்கே தோற்றம் பெறுகிறது?


புலிகள் கடந்தகாலத்தில் செய்த துரோகத்தால்,அதாவது பாசிச மக்கள்விரோதப் போராட்டத்தால் அவர்கள் மேலும் சரணடைந்து அல்லது ஏகாதிபத்தியங்களின் அரை குறைத் தீர்வை ஏற்றால் அது, அடுத்த முப்பது வருடத்துக்கு(இவ் வருட அளவுகோல் எந்த அடிப்படைசார்ந்து கணிப்பாகிறது?) துரோகத்தைத் தியாகமாக்கிவிடும் என்பதற்காக,அவர்கள் பின்னால் கட்டாயமாகக் கடத்திப் போராட்டத்தோடு இணைக்கப்பட்ட சிறார்களும் செத்தேயாகவேண்டுமா?


புலிகளது இன்றைய போராட்டத்தின் விளைவாக இவ்வளவு மக்கள் சாகவேண்டுமென்பதன் இயங்கியல் என்ன?


புலிகள் ஆயுதங்களைப்போட்டுச் சரணடையும்போது மக்களது இழப்புகள் குறைந்தும்,மற்றும், புலிகளின் பின்னே போராடும் போரளிகளது உயிர்கள் காக்கப்படுவதில் எந்தத் துரோகம் மக்களைக் கருவறுக்கும்?நாம், புலிகளது அழிவுக்குப் பின்பு துரோகங்களுக்கு மக்களைத் தள்ளாது இலங்கை,இந்திய அரசியல் ஆதிக்கச் சக்திகளிடமிருந்து மக்களைக்காத்துப் புரட்சிகரப்பணிக்கான தெரிவில் அவர்களுக்குப் புதிய அரசியலை அளித்து வாழ்வாதாரத்தைச் செப்பனிட்டு,மக்களை வர்க்கவுணர்வுள்ள சூழலுக்குள் அழைக்க முடியுமா?


புலிகளது துரோகத்துக்குப் பதில் அத்தலைமை போராடி மடிகின்றது என்றால், அது ஏன் இந்த நிலைக்கு வந்தது என்றும் கேட்டுப்பார்த்தோமா?


அதனது அடியாட்பாத்திரமானது தேசங்கடந்து அரசியல் சேட்டையாகவும்,அராஜகமுமாக மாறும்போது புலிகளெனும் அமைப்பு அழிக்கப்படவேண்டிய சக்தியாக மாறுகிறது.இதில் தலைமை தனது கடந்தகாலப் பயங்கர நடவடிக்கைகளால் சர்வதேசக் குற்றத்துக்குள் வலுகட்டாயமாகப் போய்ச் சேர்ந்தபின் அது போராடித் தானும் அழியவே விரும்பும்.எதிரியின் கையில் சிக்கி அழிவதைவிடத் தாமே போராடி அழிவது அவர்களுக்கு அவசியமாகிறது.சாவைத் தாம் விரும்பியபடித் தேர்வதே இதன் உள்ளடக்கம்.அங்கே,மதிப்பதற்கு என்ன இருக்கிறது?போலியான கோசத்துக்குக்காக அழிவு அரசியலைச் செய்தவர்கள் அதே அரசியலுக்குப் பலியாகும்போது,இது மக்களுக்குச் சார்பானதென்றுரைக்கும்போது,அங்கே-தமிழீழத்துக்கான போராட்டம் நியாயமென்று உரைக்கப்படுகிறது.இது,சுத்தாமான அரசியல் மோசடி!

புலிகள் செய்யும் போராட்டத்தை,அவர்கள்,இலங்கை அரச இராணுவத்தால் தேடியழிக்கப்படும்போது,அவர்களது மரணத்தை பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டத்தில் எங்ஙனம் அணுகுவதென்று சொல்வதற்குப் புலிகளது போராட்டத்தில் எந்த வர்க்க நலன் இருப்பதென்பதிலிருந்தே அக்கண்ணோட்டம் ஆரம்பமாகிறது!


புலிகளது வர்க்க நலன் இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தோடு-அரசோடு முட்டிமோதவில்லை.மாறாகச் சிங்கள அரசுடன் பங்கு கேட்கிறது.அதாவது,"நீ தமிழ்பேசும் மக்களை அடக்குவதற்குப்பதில், நானே அதைச் செய்வதற்கு தா" என்கிறது.அங்கே,அதிகாரத்துக்கான பங்குப் போட்டியானது சிங்கள அரசுக்கு நிகாராக அங்கீகரிக்ககோருவதாகவிருந்தால் புலிகள் நோர்வேயோடான பேச்சுக்குப் போய் இடைக்கால நிர்வாக சபை,உள்ளகச் சுயநிர்ணயவுரிமை பற்றிக் கதைத்திருக்க முடியாது.இது,அதிகாரத்தில் பங்கு கேட்கும் போராட்டம்.அங்கே,பாட்டாளிவர்க்கம் எதற்காகத் தனது அணுகுமுறையைப் புலிகள்மீது செலுத்தவேண்டும்?

பாட்டாளிவர்க்கமானது இலங்கையில் நிலவும் இரண்டு இராணுவ ஜந்திரத்தையும், அதன் ஆதிக்கத்தையும் தமது எதிரிகளாக்கருதும்போது,அத்தகைய நிலையில் இருவரும் அடிபட்டுச்சாவதிலுள்ள யுத்த சூழலில் மக்களின் அழிவு குறித்தே சிந்திக்கவேண்டும்.இங்கே,புலிகள் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு எதிரிகளில்லை.மாறகத் தமிழ்பேசும் உழைக்கும் வர்க்கத்துக்கும் சிங்கள உழைக்கும் வர்க்கத்துக்கும் எதிரானவர்கள்.சிங்கள ஆளும் வர்க்கத்தோடு பங்காளிச் சண்டையிடும் புலிகளது அழிவில் தலைவணங்க எதுவுண்டு?


ஏகாதிபத்தியத்தால் ஏமாற்றப்பட்ட புலிகள்,என்றாவது ஒருநாள் உலக ஏகாதிபத்தியங்களை அல்லது இந்தியாவை நமது மக்களின் எதிரிகளாக வரையறுத்தார்களா?சிங்கள அரசு குறித்து இனவாதத்தைச் சொன்னவர்கள், சிங்கள ஆளும் வர்க்கத்தால் பாதிப்படைந்த சிங்கள உழைக்கும் வர்க்கத்தோடானவுறவைத் தமிழ்பேசும் மக்களது உரிமைகளைவென்றெடுக்கத்தக்க முறையில் அணுகினார்களா?


புலிகள் இலங்கை அரசுக்கு நிகராகத்தாமே தமிழர்களை அடக்கியாளவேண்டுமெனப் போராடி, மடிவது எங்ஙனம் பாட்டாளிய வர்க்கத்துக்குச் சாதகமாக இருக்கமுடியும்?


புலிகள் இங்கே, இலங்கை அரசை எதிர்த்தும்,உலக ஏகாதிபத்தியங்களை எதிர்த்தும் போராடவில்லை!


அவர்கள் இன்றும் யுத்த நிறுத்தத்துக்குத் தூதுபோய்க்கொண்டும்,"இந்தியா நமது நண்பர்கள்,அமெரிக்கா-இங்கிலாந்து,நோர்வே நமது தோழமை நாடுகளென்றே" கூறிக்கொண்டு சாகிறார்கள்.அதாவது,இலங்கை அரசால் தேடியழிக்கப்படுகிறார்கள்.அங்கே,தமது கடைசி உயிர்வாழ்வுக்காக எதிர்த்துவரும் இலங்கை-இந்தியக் கூட்டு இராணுவத்தைத் தடுக்கப் பார்க்கிறார்கள்.அங்கே,எப்படி ஏகாதிபத்தியத்துக் எதிரான போராட்டமும்,சுரண்டும் வர்க்கத்தின் பொது நலனுக்குமான எதிர்ப்புக் கூறுண்டு?

அதாவது, புலிகள் அவர்களை எதிர்த்துப் போரிடவில்லை.புலிகளை வளர்த்த ஏகாதிபத்தியம்,வளர்ப்புப் பிராணியைத் தேவையில்லையென அழிக்கும்போது-அங்கே,"ஏகாதிபத்தியத்தினதும்,இலங்கைச் சுரண்டும் வர்க்கத்தினதும் பொது நலனுக்கு எதிராகப் புலிகள் மாற்றுமுறுகிறார்கள்"-அப்பாடா கேட்க நன்றாகத்தாம் இருக்கு!இது,சந்தனக்கடத்தல் வீரப்பன் தான் அழிக்கப்படும்போது, தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்குமான சில கோரிக்கைகள் வைத்ததுபோன்று இல்லையா?


நம்மால் எப்படியும் புரட்சிகரப் பாத்திரத்தைப் பேசமுடியும் என்பதற்காக இப்படியும் பேசுவதால் புலிகளது மாபியத்தனத்துக்கு ஒரு மக்கள் சார்பு நலனையும் பூட்டிவிடலாம்.இதற்குச் சர்வதேசப்பாட்டாளிய வர்க்கத்தை ஏன் துணைக்கழைப்பான்?

புலிகளைப் போராடிச் செத்துப் போய்விடுங்கள் என்றதன் பின்னால்,போராடி மரிக்கும் புலிகளது அடிமட்டப் போராளிகளுக்குக் கௌரமும் கொடுத்தாகவேண்டுமா?


உயிர் வாழ்வைக் கொச்சைப்படுத்தித்தாமே செத்துப்போகச் சொல்லப்படுகிறது?


பின்பு,"புலிகளின் அடிமட்டப் போராளிகளை வழிநடத்திய தலைமையின் ஒருபகுதி,சரணடைவுக்கும்,துரோகத்துக்கும் பதிலாகப் போராடி மரிக்கின்றது.இதைக் கொச்சைப்படுத்த முடியாது"-இது,நீங்கள் கற்பிப்பது.


புலிகளது தலைமை தன்னைக் காப்பதற்காகப் போராளிகளையும், மக்களையும் பலியிட்டு,இறுதிக்கட்டத்தில் வேறுவழியின்றித்தானுஞ் செத்துப்போகும்போது,மக்களுக்கு அவர்கள் செய்து கெடுதிகளை(தமது இருப்புக்காக மக்களைக் கேடயமாக்கியும்-பலியிட்டும்,அப்பாவிக் குழந்தைகளைக் கட்டாயமாகத் தம்மோடு இணைத்துப் போராட்டக்களத்தில் தமக்குமுன் நிறுத்திக்கொல்வது...)மறைத்துப் புலித் தலைமையின் அழிவு அரசியலுக்கும், அவர்களது சாவுக்கும் கொச்சைப்படுத்தாத பாட்டாளியவர்க்க மொழியை நீங்கள் தொடர்ந்து தேடுங்கள்.


போராடி மடியும் புலித்தலைவர்களைத் திரும்பத் திரும்ப அணுகுவதில்தாம் உங்கள் பாட்டாளியவர்க்க அரசியலே சூழல்கிறது.


நல்லது.


"சொகுசு வாழ்வு,அதிகாரம் நிறைந்த தலைவர்கள்தாம் சாவதால் அது துரோகம் எனும் ஏகாதிபத்தியத்தின் எலும்புத் துண்டை நக்காது போகிறதாம்"-அதை "நிராகரித்துப் போராடியும் சாகிறது."வரலாறு புலிகளுக்கேற்றபடியில் தவழ்வதில்லை.அந்நியச் சக்திகளிடம் மில்லியன்கணக்காய்க் காசு வேண்டியவர்கள்,உலக ஏகாதிபத்தியத்துக்கும்,ரோவுக்கும் தோதாகக் கொலைகளை அந்நியத் தேசங்களிலேயே செய்த இந்த வளர்ப்புப் பிராணியை, இப்போதய ஆசியப் பொருளாதாரப்போக்குக் கொல்வதால் அது,தான் நம்பிய,தான்கட்டமைத் தேசியத்தின்பெயரில் தமது மரணத்தைவிட்டுச் செல்வதாக நீங்கள் சொல்ல நாங்க கேட்கணும்.நல்லது. :-)


"இவர்களது மரணம் வெறுமனவே துரோகிகளின் மரணமெனக் கொச்சைப்படுத்தமுடியாது.வர்க்கஞ்சார்ந்தும் ஏன்-எதற்கென மறுத்து நிராகரிக்கவும் முடியாது!"ஏனென்றால்,"இந்த வர்க்கம் இன்னொரு துரோகஞ் செய்து வாழ்ந்திருக்க முடியும்.அந்தச் சந்தர்ப்பம் இருந்தும் அவர்கள் அதை நிராகரித்துப் போராடி மரிக்கிறார்கள்..." இது,உண்மையிலேயே கதை சொல்வதற்கு ஏற்ற புனைவாகிறது.


ஆனால்,உலக அரசியலென்ற ஒன்றில் சட்டவரம்புகளெனப் பூர்ச்சுவா வர்க்கத்திடம் நிறைய ஆயுதங்கள் இருக்கு.சர்வதேசக் குற்றவாளியான பிரபாகரன் ஏகாதிபத்தியத்துக்கு வால் ஆட்டினாலும் இந்தியா அவரை வேட்டையாடாதிருக்காது.எனவே, அவர்,எங்கே ஓடினாலும் மரணந்தாம்.ஆக,இப்படித்தான் சாக வேண்டுமென அவர் விரும்புகிறார்.சுகபோக வாழ்வு வாழ்ந்தாச்சு.இனியும் ஒரு சுகபோக வாழ்வை நாடி,இந்தியாவிடம் மாட்டித் தூக்கில் தொங்குவதைவிட மக்களைப்பலிகொடுத்து,இளையோரைப் பலிகொடுத்து,தமது அடிமட்டப்போராளிகளைப் பலிகொடுத்து, முடிந்தவரை புலம்பெயர் சமூகத்தை ஐரோப்பியத் தெருக்களில் கொன்றுதான் உயிரைவிடப்போகிறார்.இதை,கொச்சைப் படுத்துவது பாட்டாளிய வர்க்கப்பண்பில்லை.



ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவனை முட்டாளாக்கலாம்,
இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னொருவனையும் முட்டாளாக்கலாம்.
ஆனால்,எல்லாச் சந்தர்ப்பத்திலும் எல்லோரையும் முட்டாளாக்க முனைவது கடினம்.நான்,இதை அறிந்தும் அதைச் செய்வதற்கில்லை!



சுபம்.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5605:2009-04-10-10-55-12&catid=277:2009


ப.வி.ஸ்ரீரங்கன்
11.04.09

Tuesday, April 07, 2009

"துரோகமிழைக்காது போராடி மரணிக்கும் புலிகள்..."- இரயாகரன்.


"யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்
வாய்மையின் நல்ல பிற."-
குறள்:300.



"துரோகமிழைக்காது போராடி மரணிக்கும் புலிகள்..."- இரயாகரன்.


அப்போ, எது துரோகம் எனும் கேள்வி அசியமாகிறது.


"எது துரோகம்" எனும் இக்கேள்வி குறித்து நீண்ட ஆய்வு அவசியமாகிறதா?


அதையும் நாம் செய்யத் தயாராகவே இருக்கின்றோம்.


புலிகளைத் தூக்கி நிறுத்தப் புரட்சிப் பரப்புரை எனக்கு அவசியமில்லை!


எனவே,புலிகளது பாத்திரம் என்னவென்பதைத் தொடர்ந்து கால் நூற்றாண்டாக நாம் குறித்துரைத்துள்ளோம்.


ஈழப்போராட்டம் என்பது அழிவு அரசியலின் விபரீத விளையாட்டாகும்.அது,இதுவரைத் தேசியவிடுதலைப் போராட்டமென்றும்,தடுப்பு யுத்தமென்றும் பற்பல மொழிகளுடாகப் பரப்புரைக்குள்ளாகியது.எனினும்,இவ் யுத்தம் மொத்தத்தில் சமூகவிரோதமானதென்று வரலாறு இன்றுரைக்கும்போது,இராயாகரன் அதற்குத் தார்மீக நியாயங் கற்பிக்கின்றாரா?


புலிகள் தமிழ் மக்களது குழந்தைகளைப் களப்பலிகொடுத்துத் தலைவரைக் காப்பது தியாகமென உரைக்க, இரயா எமக்குத் தேவையில்லை!


அதைப் புலிகளே சொல்லப் போதும்.

அவர்களது ஊடகங்களே சொல்லப்போதும்.


எனினும்,இலங்கை தழுவிய புதியஜனநாயகப் புரட்சிபேசும் தோழரிடம் இப்படியான ஊசலாட்டம் எங்ஙனம் தோன்றுகிறது."இங்கேயும்,அங்கேயும்" ஊசலாடுவதாக என்னைச் சொன்னவர்கள்,இப்போது தமது தரப்பு நியாயத்தைப் புலிகளது அழிவு யுத்தத்தினூடாக வரையறுப்பதுதாம் கொடுமை!

புலிகள் செய்த யுத்தமானது சாரம்சத்தில் தேசியவிடுதலைப்போராட்டமோ அன்றித் தடுப்பு யுத்தமோ இல்லை.மாறாக,யாழ்ப்பாண மேட்டுக் குடிகளின் அழிவு அரசியல் நடாத்தையின் நேரடி விளைவாகத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட யுத்தமாகும் இஃது!


இது,மக்கள் போராட்டத்துக்கு எதிரான தமிழ் ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான நடாத்தை.இதைத் தகவமைத்துக்கொடுத்த தமிழ் ஆளும்வர்க்கத்தினது அந்நிய எஜமானர்கள் இலங்கையின் புரட்சிக்கு எதிரான அழிப்பு-அழிவு யுத்தத்தைத் தமிழர்களது இன பிரச்சனையூடாகக்கட்டியமைத்துக் கொலைகளை நடாத்தி முடித்தார்கள்.இங்கே,இதே தொடர்கதையோடு தொடர்ந்து மக்களைப் பலிகொடுக்கும் நாசகார யுத்தம்,அதைச் செய்து வந்த புலிகளையே வேட்டையாடும்போது, புலிகள் தமது தலைமையைக்காப்பதற்காக அப்பாவி மக்களது குழந்தைகளைக் கட்டாயமாகப் பிடித்துச் சென்று இதுவரை பலியாக்குவது தியாகமாக இருக்க முடியுமா?

இது கேள்வி,நாம் மனசாட்சியோடு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள்.

ஏனெனில், நாம் இலட்சம் உயிர்களோடு விளையாடியவர்கள்;


அவர்களது அளப்பரிய வாழும் ஆசையைக் குழிதோண்டிப் புதைத்தவர்கள்.


இதை மறக்காது-எந்த வகைத் தத்துவங்களுக்குள்ளும் திணித்துப் புரட்டாது,நியாயமாக நெஞ்சைத்தொட்டுப் பதிலளிக்க வேண்டும்.இப்பதில் புலிகளைத் தியாகிகளாவும் மாற்றுக் குழுக்களைத் துரோகிகளாக்கவும் எமக்கு இரயா அவசியமே இல்லை.இது,துணிந்த முடிவு!


புலித் தலைமை சமூகக் குற்றவாளிகள்.


அவர்கள், தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல முழு இலங்கை உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரானவர்கள்.


புரட்சியைக் காட்டிக்கொடுத்த அந்நிய கைக்கூலிகள்.


இவாகள், போதாதற்கு எமது மக்களின் பாலகர்களை போலிக் கோசத்தின் வாயிலாகக் காயடித்தும், கடத்தியும் அழிவு யுத்தத்துக்கு அனுப்பிக் கொன்று குவித்தவர்கள்.இவர்களது இறுதிவரையான இந்த அழிவுப் போராட்டம் தியாகமெனும் போர்வையில் துரோகத்தை மறைக்கும் அழிவு அரசியல்.இது,கைக்கூலி அரசியல்-காட்டிக்கொடுக்கும் அரசியல்.கயவர்களின் கூட்டோடு நடாத்தப்படும் துரோக யுத்தம்.இது,சொந்த இனத்தையே கருவறுத்த அந்நியச் சகத்திகளுக்கு உடைந்தையான தமிழின விரோதிகளது அழிவு அரசியலின் விளைவு.




புலிகள் தமது தவறான வரலாற்றுப்பாத்திரத்துக்கு இப்போது தியாகங் கற்பிக்கத் தோழர் இரயாவைப் பயன்படுத்துகிறார்களாவென நாம் ஐயுற வைக்கும் கட்டுரையை அவர் புலிகளைத் தலைவணங்கிச் செய்கிறார்-எழுதுகிறார்.இதில், எங்கே தோழர் மக்கள் நலம் இருக்கு?


எஞ்சியுள்ள போராளிகளைத் தப்பவைக்காது, அவர்களை இறுவதிவரைக் கொலைக்கு அனுப்பும் புலித்தலைமைக்கு என்ன கொள்கை-இலட்சியும் உண்டு?


இந்த இலட்சியம் குறித்து நாம் அவர்கள் வாயால் கேட்பதை இனித் தோழர் இரயா வாயிலாகக் கேட்க முடியுமா?


புரட்சிகரச் சக்திகள் நமக்குள் வரலாற்று மோசடிகளைச் செய்வது இன்னும் நம்பகத் தன்மையைக் கடாசி, அந்நியச் சக்திகளின் நோக்குக்குச் சார்பாகவே இருக்கிறது.


பாவம் இலங்கைத் தமிழ் மக்கள்!


அவர்கள் தமது கரங்களை நம்பிக்கொள்ள முடியாதளவுக்கு அதிகாரத்தின் தொங்குசதைகள் மக்களை இன்னும் மொட்டையடிக்கும் பாத்திரத்தை எடுக்கின்றார்கள். இஃது,ஏனிங்ஙனம் நடந்தேறுகிறது?



"தமிழீழம்"எனும் பொய்க்கோசத்தை தமிழ் மக்களுக்குள் கட்டாயமாகத் திணித்தும்,அவ் மக்களது சமூகவுளவியலாக்கி அதையே அரசியல் முன்னெடுப்பாகச் செய்த புலிகள், இதுவரை ஒரு இலட்சம் மக்களைப் பலிகொடுத்துள்ளார்கள்.பல இலட்சம் கோடிச் சொத்துக்களையும்,பாரம்பரியமாக வாழ்ந்த பூமியையும்விட்டுத் தமிழ்பேசும் மக்கள் நாடோடிகளாகியிருப்பதற்கும் இவ்வீழப்போராட்டமே காரணமானது.ஈழமென்பது சாத்தியமற்றதென்று தெரிந்தும் அதைத் தமது இருப்புக்காக உசுப்பேத்தி இதுவரை ஏழைமக்களின் குழந்தைகளைப் பலியாக்கிய புலிகள் துரோகிகளா இல்லைத் தியாகிகளா?


தமிழ்ச் சமுதாயத்தில் வாழ்ந்த அனைத்துப் புத்திஜீவிகளையும் அந்நியச் சக்திகளுக்காகத் துரோகிகளெனக் கொன்று குவித்த புலிகள் துரோகிகளா அல்லது தியாகிகளா?


மாற்றியக்கங்களைத் தமது எஜமானர்களது வேண்டுகோளுக்கிணங்கவும் தம்மைத் தாமே நிலைநிறுத்தவும்,புரட்சியைக் காட்டிக்கொடுக்கவும் அவ்வமைப்புகளைக் கொன்றழித்துத் தமிழ்பேசும் மக்களைப் பலவீனப்படுத்திய புலிகள் துரோகிகளா அல்லது தியாகிகளா?



ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக:இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிக்கத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்கள் தமிழ்த் தேசியத்தின் வாயிலாகப் புரட்சிபேசக் கற்றுக்கொண்டவர்கள்.ஈழஞ்சாத்தியமெனப் புரிந்துகொண்டவர்கள்.முழு இலங்கைக்குமான புரட்சியை நிராகரித்தவர்கள்.சோசஷலித் தமிழீழம் சார்ந்த கருத்தியல் தளம் உருவாக்கிவிடும் "மனத்தளத்திலிருந்து" நோக்கின் இது மிக நேர்த்தியவுணரத்தக்க ஆரம்பப் படிமங்களை உள்ளடக்கியதாக, அந்த மனிதத் "தனித்தன்மையை" நாம் அறிவது சுலபம்.


எங்கிருந்தோ ஆட்டுவிக்கும் சூத்திரதாரியைப் பற்றியும்,அந்தச் சூத்திரதாரியை உலகத்தின் முதல் தர எதிரியாகக் கண்டு,அதை எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடத்தும் அமைப்புகளே,அந்தச் சூத்திரதாரியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், போலித் தேசியம் பேசி மக்களைப் பலியிடும் ஆளும் வர்கத்தின் கயமைக்கும்-உள் நோக்குக்கும் உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன?நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.மாறாக, அவர்களையின்னும் அந்நியப்படுத்தி,புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது


மனித சமூகத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனூடாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே, நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.இஃதே புலிகளுக்குத் தியாகிப்பட்டம் கொடுக்க அழிவு யுத்தத்துக்கு இலட்சியம் கற்பிக்கிறது!


சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்தே!சமீப காலமாகச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலைகீழாக்கிவிட்டு வாழ்வது-புலிகளை ஆதரித்துக்கொண்டு புரட்சி பேசுவது,கயிறு திரிப்பது நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.


இது, பல புரட்சிகர அமைப்புகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.இவர்களை நாம் ஓடுகாலியென்று கூவிக்கொண்டோமேயொழிய அதன் தர்க்கமான இயக்கப்பாட்டைக் கணிப்பதில் தவறிழைத்து வந்திருக்கிறோம்.தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்பு, மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக மனிதர்களின் அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது, ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.அல்லது இலட்சியம்-தியாகமெனத் தனக்குத் தானே தீர்ப்புக் கூறுகிறது!


யுத்த பூமியான இலங்கையைவிட்டுப் புலம்பெயர்ந்து வாழும் மண்ணில் உதிரிகளாக வாழ்ந்துவரும் சூழலில்,பௌதிக மற்றும் மனோபாவ அடிப்படைக் கட்டுமானம் சிதிலமடைந்தவொரு வெளியில் உருவாகும் மனிதர் எத்தனை கருத்துக்களை, உண்மையைச் சொன்னாலும் அதை உள்வாங்கி ஒப்பீடு செய்து, ஆய்ந்தறியும் மனத்தைக் கொண்டிருப்பதில்லை.இதை நாம் தெளிவாகப் புலம்பெயர் தமிழ்ச் சமுதாயத்திடம் உணரமுடியும்.



இந்தச் சமூகத்தின் அண்ணளவான தனித் தன்மையானது தொங்குநிலையானது.அதாவது ஒரு அதீத மனிதருக்கு விசுவாசமாக அல்லது அவரைக் கடவுளாக ஏற்கும் மனநிலைக்குள் கட்டுண்டுகிடப்பதாகும்.தனிநபர்கள், இயக்கவாத மாயையில் கட்டுண்டு இத்தகைய தன்னார்வச் செயற்பாட்டைத் "தியாகம்-இலட்சியம்"என்றும் மறுமுனையைத் "துரோகம்"என்ற அடைமொழியில் நிறுவிக்கொள்கிறார்கள்.இங்கே, புலிகள் கூறும் அல்லது செய்யும் அரசியல், தமிழ் மக்களுக்குள் அவற்றியாவதற்கான நிலைமைகள் இங்ஙனமே கட்டப்படுகின்றன.இதுவே, யுத்தத்தைச் சொல்லியே முழுமொத்த மக்களையும் ஒட்ட மொட்டையடிக்கும் சூழலுக்கும் ஒரு வகையான உள ஒப்புதலை அவர்களுக்கு மறைமுகமாக அங்கீகரித்திருக்கிறது.கூடவே,இறுதிவரை போராடி இலட்சியத்தோடு சாகச் சொல்கிறது.இது,மக்களது குழந்தைகளை யுத்த ஜந்திரத்துக்கு ஒரு உப பொருளாக மனித இருத்தலைக் கீழ்மைப்படுத்துகிறது!இதற்கு முலாம் பூச போராட்டமே வாழ்வெனப் புரட்சி பேசவும் தலைப்படுகிறது.


புலிகளின் அதீத அரசியற் குழு வாதமானது ஒற்றைத் துருவ இயக்கமாக அதை வளர்த்தெடுத்தபோது,இதை நிலைப்படுத்திய அதன் அரசியல் தலைமையானது தமிழ் மக்கள் நலனைத் துவசம் செய்வதில் முனைப்புறும் இன்னொரு பகுதியைத் தோற்றுவிக்கும் இயக்கப்பாட்டை அந்நியச் சக்திகள் உருவாக்குவதை மிக நேர்த்தியாக இனம் கண்டு, அவர்களைத் "துரோகிகள்"எனச்சொல்லித் தம்மைத் தியாகிகளாக்கித் தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடிப்பதில் "தமிழீழப் போராடம்"செய்துகொண்டார்கள்.


துரத்தியடிக்கப்பட்ட ஈழப்போராட்டக் குழுக்களைத் துரோகியாக்கிய அரசியற் பரப்புரைகளைப் புலிகள் உருவாக்கிக்கொண்ட சூழலை மிகவும் கவனமாக அவர்கள் மறுத்தொதுக்குவதும், அதன் நீட்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாசிசக் கொலைகளும் இதனூடாக வலுப்பெற்ற புலியெதிர்ப்பு முகாமும் தமிழரின் சுயநிர்ணயவுரிமையைக் களைந்தெறிவதற்கானவொரு சதிவலையை கருத்தியல் தளத்தில் மெல்லவுருவாக்கிக்கொண்டுள்ளது.இதன் உச்சபட்ச நீட்சியே மாற்றுக்குழுக்களை ஒட்டுக் குழுக்களெனும் சதியுடைய மொழிவாகும்.இன்றிவர்கள் மக்களுக்குத் தம்மைத் தவிர வேறெவரும் காப்பர்களாகமுடியதென்ற கதையாகப் பரப்புரையிட்டுக்கொள்கிறார்கள்-தாம் செய்யும் யுத்தம் இலட்சியத்துக்கானதென்றும் அதுவே,தியாமென்றும் எதிரியிடம் சரணடைவது துரோகமென்றும் கருத்துக்கட்டி, முழுமொத்தப் போராளிகளையும் சாவின் விளிம்பில் நிறுத்தியுள்ளார்கள்.


அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் புரட்சி-விடுதலை, ஜனநாயகம் பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.இவைகளே இலட்சம் மக்களை அந்நியச் சக்திகளுக்காகப் படுகொலை செய்த அழிவு அரசியலை முன்னெடுப்பவர்கள்.


மக்களின் உயிரோடு-வாழ்வோடு விளையாடிய இந்தப் போர்கள் ஏதோவொரு கட்டத்தில் அந்த மக்களின் நலன்களைக் காப்பதற்கான போராக உருமாற்றம் கொள்ளும்போது,சிங்கள-தமிழ் தேசிய வாதத்தின் மிகக் குறுகலான உணர்வு சிங்கள-தமிழ் யுத்தக் களமுனையின் உச்சத்தைத் தத்தமது வெற்றியின் அடையாளமாகவும்,உரிமையின் வெற்றியாகவும் பார்க்கத் தக்க மனநிலையை உருவாக்கும் காரியத்தை இந்த "ஈழப்போராட்டம்"செய்து முடித்தது.அதைக் குத்தகைக்கு எடுத்த புலிகள் இதுவரை பலியாக்கும் போராளிகள், தியாகிகளாகவும்,இலட்சியவாதிகளாகவும் உருவாக்கங் கொள்ளும் அரசியல் இங்ஙனமே நடந்தேறுகிறது.இது,மறுதளத்தைத் துரோகமென வர்ணிக்கும் செயலே இன்றைய புலிவழித் தேசியத்தின் மறுவுருவாக்கமாக மாறும் அபாயம் நமக்குள் அரும்புகிறது!


ப.வி.ஸ்ரீரங்கன்
07.04.2009


துரோகமிழைக்காது போராடி மரணிக்கும் புலிகளின் நிலை மதிப்புக்குரியது



அரசுடன் ஒட்டுண்ணியாக இருந்து பிழைக்கும் பிழைப்புவாத துரோகிகளை விட, புலிகள் மேலானவர்கள்;. தமிழ்மக்களை கூட்டம் கூட்டமாக கொல்லும் பேரினவாத அரசை நக்கும் ஓட்டுண்ணிகளை விட, தமிழ்மக்களைக் கொன்றபடி மரணிக்கும் புலிகள் மேலானவர்கள். ஒப்பீட்டில் மட்டுமல்ல, தமிழ்மக்களுக்கு புதிய துரோகியாக மாறாது, தாம் கட்டியமைத்த ஒரு இலட்சியத்துக்காக மரணிப்பதும் மேலானது.



மனித வரலாறு தொடர்ச்சியான துரோகத்துக்கு பதில், தவறான ஆனால் வீரம்செறிந்த போராட்டத்தை தன் வரலாறாக பதிவு செய்கின்றது. எம் வரலாறு சரணடையாத, துரோகமிழைக்காத ஒரு போராட்ட மரபை கற்றுக்கொள்ளும் வகையில், புலிகள் மரணங்கள் தன் தவறுகள் ஊடாக எமக்கு விட்டுச்செல்ல முனைகின்றது.


இந்த வகையில் துரோகிகளின் வழியை, புலிகள் தம் அரசியல் பாதையாக தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக அவர்கள் போராடி மடிகின்றனர். எந்தத் துரோகியை விடவும், எந்த எட்டப்பர் கூட்டத்தை விடவும், புலித்தலைவர்கள் தம் தவறுகள் ஊடாக வானளவுக்கு உயர்ந்துதான் நிற்கின்றார்கள். கிடைக்காத சந்தர்ப்பம், சூழல் என எது எப்படி இருந்த போதும், அவை தவறுகளை அடிப்படையாக கொண்டு, போராடி மடியும் வரலாற்றை இந்த உலகுக்கு விட்டுச் செல்லுகின்றனர்.


புலிகள் அரசுடன் கூடி நிற்கும் துரோகிகள் போல் துரோகமிழைத்து, அரசுடன் கூடி நிற்க மறுப்பது, இங்கு மதிப்புக்குரியது. இங்கு அவர்கள் துரோகிகளுக்கு மேலாக, உயர்ந்து நிற்கின்றனர்.



அன்று புலிகள் இயக்கங்களை அழித்தபோது, அதன் தலைவர்கள் அரசுடன் சேர்ந்து துரோகிகளானார்கள். புலியைப்போல் தம் இலட்சியத்துக்காக போராடி மடியவில்லை. அவர்கள் துரோகம் தான், தீர்வு என்றனர். இன்று புலியை அழிக்கும் அரசு, புலியை துரோகிகள் போல் சரணடையக் கோருகின்றனர். ஆனால் இதை மீறி அவர்கள் துரோகிகள் போல் அல்லாது போராடி மடிகின்றனர். இதில் உள்ள வீரம், நேர்மை எங்கே! துரோகிகளின் கோழைத்தனமும் நேர்மையற்றதனமும் எங்கே!!



தமிழ்மக்களின் எதிரியை புலிகள் எதிர்த்து நின்று மடிகின்றனர். ஆனால் துரோகிகள் தமிழ் மக்களின் எதிரியின், செல்லப்பிள்ளையாக மாறி எட்டப்பர் வேலை செய்கின்றனர். ஓரு வரலாற்று போக்கில் புலிகள் அரசுடன் சேர்ந்து துரோகமிழைக்காது, தாம் கொண்டிருந்த கொள்கைக்காக போராடி மடிகின்றனர். நாம் எதிரியை முன்னிறுத்தி, இதை சரியாக மதிப்பிட வேண்டிய காலத்தில் உள்ளோம். தமிழினத்தின் துரோகிகளை இனம் காணவேண்டிய, காட்ட வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வரலாறு புலிகளின் மாபெரும் தவறுகளுக்குள், இதை மிகச் சரியாகவே வழிநடத்தியுள்ளது.


புலிகள் தமிழ்மக்களின் போராட்டத்தைச் சிதைத்து, தமிழ்மக்களுக்கு இழைத்த தவறுகள் வரலாற்றில் மன்னிக்க முடியாதவை. பாசிச வழிகளில் தமிழ் மக்களை ஓடுக்கி, தம்மைத்தாம் தனிமைப்படுத்தி, தற்கொலைக்குரிய வகையில் தம் போராட்டத்தை அழித்தனர். பாரிய உயிர்ச்சேதத்தை, பாரிய பொருட்சேதத்தை தமிழ்மக்கள் மேல் சுமத்தியதுடன், தமிழ்மக்களை ஒடுக்கினர். மொத்தத்தில் ஒரு போராட்டதையே அழித்தனர்.



இந்தப் பாரிய தவறுகளுக்கு மத்தியில், துரோகத்தை தம் அரசியல் வழியாக அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. சரணடைவுக்கு பதில், போராடி மரணிக்கும் பாதையையே அவர்கள் தேர்ந்தெடுத்தனர். இவை எந்தத் துரோகியையும் விட, மேலானதும் மகத்தான வீரம்செறிந்த செயலமாகும்.
போராடி மடியும் வீரத்திலும் தியாகத்திலும், துரோமிழைக்காத நிலைப்பாட்டிலும், ஒரு நேர்மை உண்டு. அரசுசார்பு நிலையெடுத்து நக்கும் புலியெதிர்ப்;பு கும்பலிடம் இருக்காத ஓன்று அது. அதற்கு நாம் தலைவணங்குகின்றோம்.



பி.இரயாகரன்

06.04.2009

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5584:2009-04-06-21-31-03&catid=277:2009

Monday, April 06, 2009

புலிகளது அழிவோடு போகாது தமிழருரிமை.

"வட போர்முனைக் கட்டளைத் தளபதி,

புலனாய்வுத் தலைவர் தளபதி,பொட்டு அம்மான்-கருணா அம்மான்...

தேசியத் தலைவர்" ,பன்னாடை,தேசத்தின் குரல்-நாட்டுப் பற்றாளர்,பணியாரம்...



ன்றவர்களெல்லாம் இப்போது தமது சகாக்களின் மரணத்தையே பேசமுடியாது மரணப்பயத்தில் கிடக்கிறார்கள்.புரட்சியைக்காட்டிக் கொடுத்த துரோகக் கும்பலுக்காக வக்கலாத்து வேண்டுவதற்கு மக்கள் நலனெனப் பெயரில்லை!

இன்று,இவ் நிமிடம்வரைத் தன் சொந்த இனத்தையே ஒட்ட மொட்டையடித்த மாபியாக்குழுவொன்று செத்துத் தொலையும்போதுகூடத் தமிழ்பேசும் மக்களைக் கொலைக்களத்தில் வைத்துப்படுகொலை செய்யும்போது,அவ் மாபியாக் குழுவிடம் என்ன மக்கள் நலன் உண்டு?

பின்பு, எதற்குப் புலிகளது அழிவோடு தமிழர்களது உரிமையும்,அழிந்துவிடுவதெனப் புலம்புவது?

புலிகள், எங்கே தமிழர்களுக்கு உரிமைகளை விட்டுவைத்தார்கள்?

அனைத்து வகையான தமிழ்பேசும் மக்கள்தம் குடிசார்வுரிமைகளையும் தமது இயக்க இருப்புக்காவும் அதன் நலனுக்காவுமட்டுமல்லப் பிரபாகரன் என்ற மோசமான மனிதருக்காகவும் கையிலெடுத்துச் சிதைத்த இந்தப் புலிகளது அழிவில் தமிழ்பேசும் மக்கள் எங்ஙனம் உரிமைகளை இழப்பார்கள்?

இன்று,சிங்களப்பாசிச அரசு தமிழ்பேசும் மக்களை அடிமையாக்கும் அரசியலுக்குள் பலமான ஒடுக்குமுறையைச் செய்வதற்குத் துணைபோனவர்களே இப் புலிகள் அமைப்பு என்பதை நாம் தர்க்கரீதியாக முன்வைக்க முடியும்.இதை மறுத்துவிட்டுப் புலிகளது அழிவில் தமிழ்பேசும் மக்களது இருப்பே ஆடிவிடுவதாகக் கதைவிடுவது சுத்த மோசமான அறிவுமோசடி.இன்றைக்கு நமது மக்களது தியாகத்தைத் தமது இயக்கவாத அரசியலுக்காகச் கொச்சைப்படுத்தும் அரசியலைப் புலிகளது அரசியலைத் தேசியத்துக்குள் உள்வாங்க முனைபவர்கள் செய்து முடிக்கமுனைவது மீளவும் மக்களை மேய்க்கும் அரசியலுக்குத் தமது தலைமையை முன் தள்ளவே!இங்கே,புலிகள் குறித்த வரலாற்றுப்பாத்திரம் பாசிஸ்டுக்களின் பாத்திரமாகும்.

உலகத்தில் பாசிசவாதிகளின் அழிவு எங்ஙனம் நமக்கு வரலாறாகவுள்ளதோ அங்ஙனமே புலிப்பாசிஸ்டுக்களின் அழிவும் வரலாறாகிறது.சாதரண அப்பாவி மக்களையும்,தமிழ்க் கல்வியாளர்களையும் துரோகிகளெனச் சொல்லி, ஆயிரக்கணக்கில் கொன்ற பாசிஸ்டுக்கள் இன்று தமது அழிவைக்கூடச் சொல்லமுடியாது காலடித்தடமே தெரியாதபடி செத்துப் போகிறார்கள்.இது,வரலாற்றுவிதிக்குட்பட்டது!


நாம்,புலிகளது அழிவில் எவ்வித வெற்றிடத்தையும் உணரவில்லை!

புலிகள் இலங்கையின் புதியஜனநாயகப் புரட்சிக்கு எதிராகச் செயற்பட்டவர்கள்.அந்நியச் சக்திகளது கூலிப்படையாகச் செயற்பட்டுத் தமது சொந்த இனத்தையே ஒட்ட வெட்டிச் சாய்த்தவர்கள்.நம்மிடமிருந்து பலநூறு அதிசிறந்த கல்வியாளர்களைக் கொலைசெய்து, நம் சமுதாயத்தை மூடர்களாக்கியவர்கள்.அதிசிறந்த மேதைகள் எல்லோரும் புலிகளது அரசியல் வரலாற்றில் துரோகிகள்.மக்களது சுயமான எழிச்சிகளைக் காயடித்து,அவர்களை வெறும் மந்தைக்கூட்டமாக்கியே தமது இருப்பைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணித்தார்கள்.இதன் வாயிலாக அந்நியச் சக்திகளுக்கு நமது தேசிய விடுதலைப் போரைக்காட்டிக்கொடுத்துப் புரட்சிகரச் சக்திகளை அழித்தார்கள்.இதை விளக்கப் புதியபாதைச் சுந்தரத்தின் கொலையைப் புரிவதில் எவருக்காவது சங்கடம் உண்டா?

தோழமை அமைப்புகளை அந்நியச் சக்திகளுக்காக வேட்டையாடி அவர்களைச் சிங்கள அரசினது பக்கஞ் சாயவைத்துத் துரோகிகளாக்கி, நமது மக்களது விடுதலையைவேட்டையாடிய இந்தப் புலிகளே முதற்தரமான இனத் துரோகிகள்.இவாகளது போராட்டச் செல் நெறியைத் தகவமைத்தவர்களே இவர்தம் எஜமானர்களான இந்திய ரோவும், உலகச் சதிகாரச் சி.ஐ.ஏ.யும்தானெனச் சொல்வதற்கும் நம்மிடம் சரியான வரலாற்று உண்மைகள் உண்டு.புலிகள் நமது மக்களது சுயநிர்ணயவுரிமையைச் சிதைப்பதற்கேற்ற சூழலைச் சக தோழமை அமைப்புகளைக் கொன்றழித்தபோதே தீப்பொறி அமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

பின்னாளில்,அதே தீப்பொறி அமைப்பையும் தமது அடிவருடிகளைவைத்துக் கைப்பற்றிச் சிதைத்தார்கள் புலிகள்.

இதுவும்,பின்னாளில் அம்பலமானவுண்மை!


இப்போதும், இதே புலிகள் புலம்பெயர் மாற்றுக்குழுக்களுக்குள் புகுந்து அவர்களையும் பிளந்து சிதைத்ததுமட்டுமல்ல தமிழ்பேசும் மக்களது விடுதலைக்காக ஒரு உன்னதமான புரட்சிகரக்கட்சியினது உருவாக்கத்துக்கெதிராகச் செயற்பட்டுள்ளார்கள்.இதன் வாயிலாகப் புலம் பெயர் மாற்றுக் குழுக்கள் யாவும் துரோகிகள் எனப் புதுப் பெயர் தரிக்கவேண்டிய அரசியலுக்குள் வந்து சேர்கிறார்கள்.

இந்தத் தருணத்தில்,புலிகளது அரசியலுக்கு முண்டுகொடுப்பதில் எவர் முனைப்பாக இருக்கிறார்களோ அவர்களே புலிகளது பாத்திரத்தைத் தமதாக்கி வைத்திருக்கிறார்கள்.மாற்றுக் குழுக்களுக்குள் வந்துசேர்ந்த அந்நியச்சதியினது அரசியல், பற்பல வேடத்தோடு இப்போது மக்களது நலன் குறித்துப் பேசுகிறது.இது,புலிவகைப்பட்ட அரசியலது தொடர்ச்சி.இதை இனங்கண்டு அம்பலப்படுத்தாமல் தமிழ்பேசும் மக்களது அரசியல் வாழ்வு ஒளிமிக்கதாக இருக்க வாய்பில்லை!

புலம் பெயர் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பலதரப்பட்ட அரசியற்போக்குகள் உண்டு.இவைகள், ஐரோப்பியச் சிந்தனை மரபுக்குட்பட்டதே!


"தமிழ்த் தேசியத்தின் வெற்றியானது தலித்துக்களின் தோல்வி"யெனக் கடந்த இருபதாண்டுகளுக்குமுன் ப்ரன்லைன்ட் இதழில் பிரையன் என்ற சமூவியலாளர் எழுதினார்.அந்தவுண்மையை இனங்கண்ட அந்நியச் சக்திகள் அத்தகைய சாதகமானவொரு சந்தர்பத்தை மேலும் உந்தித் தள்ளினார்கள்.இது,தமிழ்பேசும் மக்களுக்குள் உள்ள மிக முக்கியமான பிரச்சனை.எனினும்,தலித்திய விடுதலையை மறுப்பதற்கெடுக்கும் உரிமை எந்தக்கொம்பருக்கும் இல்லையென்பதைப் புலிகளது அழிவில் உரக்கச் சொல்லியாகவேண்டும்.தமிழ்த் தேசியத்தின் தோல்வியானது புலிகளால் நடாத்தி முடிக்கப்பட்டது.எனவே,தலித்திய மக்கள் புலிகளுக்கு நன்றி சொல்லக்கடப்பாடுடையவர்களே!

இன்று, புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டார்கள்!


என்றபோதும்,புலித் தலைமையில் எஞ்சியிருக்கும் பிரபாகரன் ஒரு வெற்றுவேட்டு என்பேன்.இது,செல்லாக்காசு.இதை முன்வைப்பதால் தேசியம் களவாடப்பட்டைதைப் புரிக என்பதன் உட்கூற்றே உங்கள் முன் இருக்கிறது!

புலிகளைச் சொல்லிப் பிழைப்பவர்கள்,புலிகளது அழிவில் தமிழ்பேசும் மக்கள் அடிமையாகிவிடுவதாகப் புனைவுகளைச் சொல்லலாம்.எனினும்,புலிகளது போராட்டப் பாதையில் கடந்த இருபதாண்டாகக் கூனிக்குறுகிய தமிழ்பேசும் மக்களுக்குத் தெரியும், தமது தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்குப் புலிகள் அழிந்தே ஆகவேண்டுமென்பது.இங்கே,புலிகளது அழிவின் பின்னே புரட்சிகரச் சக்திகள் டக்ளஸ்சையே அன்றிக் கருணாவையோ பின்தொடரமுடியாது.எனினும்,இன்றைய புலம்பெயர்வுத் தமிழ்க் குழுமத்துள் பற்பல சக்திகள் தமது விடுதலைக்கு எதிரான அரசுகளோடு மிகச் சாதுரியமாக உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.இவர்கள்,தமது பதிவி-பொருள் நோக்குகளைக் கடந்து அரசியலை முன்னெடுப்பதென்பது முடியாத காரியம்.
இது,புலிவழி அரசியலாகவுள்ள வியாபாரத்தனமானது.

எனவே,இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் புலம்பெயர் மாற்றுக் குழுக்களையோ அன்றி அந்நிய தேசங்களையோ நம்பாது, தமது சுய ஆளுமைக்குட்பட்ட அரசியல் முன்னெடுப்பைச் செய்வதற்குத் தென்னிலங்கையிலுள்ள முற்போக்குச் சக்திகளோடு கரங்கோர்த்துப் பாசிச இலங்கை-இந்திய,உலகக்கூட்டை வென்றாகவேண்டும்.புலிகளது அழிவு மக்களது சுயவெழிச்சியை நிச்சியம் தூண்டும்.

இது,மகத்தானவொரு மாற்றத்தை இலங்கையில் உண்டுபண்ணிவிட முடியாது.

எனினும்,குறைந்தபட்சமாவது இனங்களுக்கிடையிலான குரோதங்களைக் குறைக்கும்.இதன் வாயிலாக இலங்கையின் பொது எதிரி அவர்களது கண்களுக்கு மிக இலகுவாகப் புலப்படும்.அங்கே,இலங்கையினது பாராளுமன்றத்துக்குள் பிரச்சனைகள் இல்லையென்பதும், அஃது, வெளியிலேதாம் உள்ளதென்பதும் புரியும்போது ஓட்டுக்கட்சித் தலைவர்களைக் கடந்து இலங்கைமக்கள் போராடத் தயாராவார்கள்.

புலம் பெயர் மாற்றுக் குழுக்கள்-கருத்தாளர்கள் அதுவரைத் தத்தமது விசுவாச அரசியலைக் குறித்தும்,வரும்படியைக் குறித்தும்"மக்கள் நலன்,மக்கள் நலன்"எனக் கத்தித் தத்தமது வர்க்கத் தளத்தின் அரசியலைத்தாம் முன்னெடுப்பார்கள்.அதற்காக ஒருவரையொருவர் புலிப்பாணியில் துரோகி என்பார்கள்.நல்ல காலம் இவர்களிடம் ஆயுதம் இல்லை!

தூ... துப்புக்கெட்ட பிழைப்பு.

ப.வி.ஸ்ரீரங்கன்
06.04.09

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...