Friday, June 20, 2008

அற்புதத் தமிழீழக் குடையை வேண்டு

தமிழீழக் குடை


தமிழீழத்துக்கான
"ஆதரவை"க் கோருகிறது பொங்கு தமிழ்
வர்த்தகத் தேசியம்
ஆதரவு இருந்ததனாற்றான்
தற்கொடைப் போராளியும் அவர் தாய்ப்பாசமும்
இதுவரை இவர்களைச் செல்வர்களாக்கியும்
தேசத்தைக் குருதிக்குள் தொலைத்தபடி
குழந்தைகளைக் குண்டுடன் தொலைக்கிறது!

தமிழைச் சொல்லியே
தரணியில் சந்தைப்படுத்தப்படும்"ஈழத்துக்கு"
ஆதரவைக் காட்ட
நீ,
அழகான தமிழிச்சி
அமுகிப் பிடிக்கும்
அற்புதத் தமிழீழக் குடையை வேண்டு!

கோரிக்கைதான் இது


கொம்பு முளைத்த
தமிழ்த் தேசியத்தின் ஏக குத்தகைக்காரர்
செய்வித்துத் தரும் குடைக்களும்
தமிழீழத்தை மொத்தமாக ஏலத்தில் விட
தமிழிச்சி உடலைத் தற்கொடையாய்க் கொள்ளும்
தமிழீழத் தாகம் மட்டுமல்ல
அதைச் சொல்லி கல்லாவை நிறைப்பவர்களும்
தமிழிச்சியின் உடலைப் புசித்தபடி
வர்த்தகத்தில்"ஆதரவு"கோருகிறது!-மங்கு தமிழ்!!


இதுவும்,
தேசத்தின் விடிவுக்குத்தான்
பல்லிளிக்கும் உடலும்
பகட்டான உடையும்
பக்கா வியாபாரம்
தேசியத்தின் பெயரில்


தூ...
பெண்ணுரிமை
தேசியம்
விடுதலை
தமிழீழம் சுயநிர்ணயம்
குப்பைகளைச் சொல்லியே
கோபுரங்கள் கட்ட
தாய்மையை ஏலத்தில் விடும் புலிப்பாசிசம்

தமிழையும்
தமிழச்சிகளையும்
ஏலத்தில்விட்ட இந்தத் தேசியம்
இலட்சம் உயிர்களையுந் தேடிப் புதைத்தது
தேசிய வர்த்தகத்தில்

இதுவும் அதன் வினைப் பயனாய்...


இன்னும்
என்னென்ன கூத்துக்கள்
இந்தக் கொலைக்காரக் கோமாளிகளால்
நமக்கு விடியும்?


ப.வி.ஸ்ரீரங்கன்.
20.06.2008

Saturday, June 14, 2008

இலக்கியச் சந்திப்பு

இலக்கியச் சந்திப்பு:கைக்கூலித்தனமும்-காட்டிக்கொடுப்பும்."இது வேட்டைக்கான
கனிந்த காலமெனக் கண்ட
சில நாடோடிகளின்
அம்புகளால்
துளைக்கப்படும் மான்கள்
குறையுயிரில் சேடம் இழுத்தபடி
நம்
தோள்களில் அதன் சுமையைச் சுமக்கச் சொல்லும் அதிகாரத்தை
இந்த நாடோடிகள் தாமாகவே
எடுத்துள்ளார்கள்"இன்றைய புகலிட வாழ்வில் எந்தப் பெறுமானமுமின்றி வாழ்வு நகருகிறது.அனைத்து விடயங்களிலுமொரு வெறுப்புத் தலைதூக்கி நிற்கிறது.வேலை,குடும்பம்,பிள்ளைகளின் கல்வி,நாட்டுப்பிரச்சனை,உடல் நலம்... இப்படி எல்லா நிலைகளிலும் ஒரு வெறுப்பு! வாழ்வதில் அர்த்தமில்லையென்றவொரு வெறுப்பு மிக விரைவில் வரலாம்.


இந்தச் சூழ்நிலையை நம்மில் பலர் உணருகிறோம்.குடும்பம் ,தொழில்,பிள்ளைகளென இருக்கமுடியாது. நமது பிரச்சனை, நமது தாயகத்தால் உருப்பெற்றது.இதை மறந்து வாழாதிருக்க முடியாது அப்பப்பயேதோ காரியமாற்றும்போது, பல பிரச்சனைகளும் கூடவே வருகிறது.

கடந்த காலங்களில் நம்மில் பலர் தாயகத்தின் போராட்டத்திலும் ,அமைப்புகளிலும் ஏதோவொரு வகையில் இணைந்திருந்தோம்.இதன் விளைவாலேற்பட்ட அரசியல் சிக்கல்களால் நாம் நாட்டை விட்டோடி புகலிட வாழ்வைத் துய்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குள் வந்து விழுந்துவிட்டோம். இதனாலானது வாழ்வின் பல பரிமாணங்களுக்குமான தேடுதல் -புரிதல் இன்னபிற.எனினும் இதுகாலவரை நாமடைந்த வேதனைகள்,சோதனைகளை வெறும் வெற்று வார்த்தைகளுக்குள் அடக்கிட முடியா.


1985 இன் பிற்பகுதியில் புகலிடத் தமிழர்களால் தாம் பெற்ற அநுபவங்களின் தொடர்ச்சியாகப் படைப்புகள்,சிறு சஞ்சிகைகள் வெளிக்கொணரப்பட்டன.
இலங்கைப் பெளத்த சிங்கள ஆட்சியாளர்களின் காட்டுமிராண்டி அடக்குமுறைகளை-ஈழப்போராட்டத்தை,ஈழக்கோசத்தை, இப்படிப் பலவற்றைக் குறித்து நாமெல்லோரும் படைப்புகளை,பத்திரிகைகளை முன்வைத்தோம்.மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்துக்காய் மார்புகாட்டிப் போராடினோம்.


இதனால் நம்மெல்லோருக்கும் பொதுவாக, தொடர்பாடலுக்கானவொரு ஊடகமாக இலக்கியச் சந்திப்பை 1988 ஆம் ஆண்டு,பார்த்திபனினதும்,பீட்டரினதும்(ஜெயரட்னம்) முன் முயற்சியால் ஆரம்பித்து,வளர்த்துத் தேய்த்து-சிதறடித்து,சின்னாபின்னப் படுத்தி,ஒன்றிணைத்து... சிலகாலம்வரை இதுவே கதையாக இருந்தபோது, திடீர்த் தலைமைகள் உருவாகவும், தனிநபர்களுக்குச் சொந்தமாகவொரு தேவையேற்படவும்-தலைவர்களாகப் பலர் உலா வருவது சற்றும் எதிர்பார்த்த காரியங்களாக இருக்கவில்லை.

1992 ஆம் ஆண்டிற்குப் பின்பு மெல்லத் தலைகாட்டிய நிழல் தலைமை தம்மை முன்னிலைப்படுத்தியபோது கோஷ்ட்டிகள் உருவாகின.

இந்த வகை வளர்ச்சி(?!) இன்று ஒருவரையொருவர் கேவலமாகப் பழிவாங்கும் அரசியலாக மாறியுள்ளது.

எல்லோருக்கும் ஏதோவொரு குழுக்கட்டல் தேவையாகி,ஒவ்வொருவரும் சிறுசிறு தீவுகளாக இருந்துகொண்டே ஒவ்வொருகுழுவோடு ஐக்கியமாகியுள்ளார்கள்.

இவர்களிடம் ஒருவரையொருவர் தலைவெட்டல் நோய் அதிகரித்துள்ளதற்கான ஆதாரமாக,நம்மெல்லோருக்கும் தெரிந்த நபர் இன்று புலம்பெயர்ந்த மாற்றுக்கருத்தாளர்களின் அனைத்துப் பிரதிநிதியாகத் தன்னை முன்நிறுத்தும் கைங்காரியத்தில் பகாசூரானகக்கடமை செய்கிறார்.தனிநபர்களின் விருப்புக்கொப்பச் சமுதாயத்தின்மீதான எதிர்காலத்தைக்குறித்துக் கதையளக்கும் இந்த "இலக்கியப் பிதா மகன்"தனக்குத் தேவையான அரசியலைச் செய்வதில் முனைப்படையுந் தருணம் சந்தேகத்துக்கிடமான அரசியல் பின்னணியோடு சம்பந்தப்படுகிறது.இது குறித்த மிகவும் சாதுரியமான ஆய்வு அவசியமானது இன்றைய சூழலில்.


"புலம்பெயர் நாடுகளில்
சாவோலை படித்துக்கொண்டிருக்கும் சில
கிழட்டு நரிகள்
கருப்புத்துண்டை கக்கட்டில் சொரிகியபடி
சில்லறைக்கு
மெளனித்துக்கொள்ளும் ஒளிச் சட்டகத்துள்
ஊராரின் உயிர்கள்
தேசமென்ற அரக்கியின்
பெயரால் வேள்வியாக்பட்டு புதை குழி நிரம்பும்
கேட்பாரின்றி கோலாச்சும் மொழித்
தர்பார்
உயிரினது உச்சந் தலையில் மோதிக்கொள்ளும்"
நமது காலத்தின் அவசியமானது வெறும் மதிப்பீடுகளில் காலத்தைக் கண்டு கொள்வதில் மையங்கொள்ள முடியாது.காலத்தில் வாழாத மானுடத் தேவைகள் மக்களின் நலனினது விழுமியமாக இருக்க முடியாது.எனவே இந்தப் பெரும் கதையாடல்கள்-மனிதக் கதையாடல்களாக இனிமேலும் விருத்தியுற முடியாது.இந்நோக்கில் பழமையான நமது புனைவுகளைக் கட்டுடைத்தல் அவசியமான பணிதாம்.மாற்றத்தை வேண்டியவொரு மனித வாழ்வு அனைத்தையும் மாற்றியே தீரும்.


இன்று மாற்றுக் கருத்தாளர்களாகத் தம்மைக் காட்ட முனையும் இலக்கியச் சந்திப்புக்காரர்கள் உண்மையில் இலங்கையில் நடந்தேறும் இனப்படுகொலைகளையும் அதுசார்ந்தியங்கும் புலிகளின் பாசிசச் செயற்பாட்டையும் எதிர்த்தியங்கும் ஜனநாயகப்பண்புடையவர்களாகக்காட்டும் சந்தர்பங்களில் அவர்களது அரசியல்"தெரிவு"இதுவரை எதுவென்று காட்டிக்கொவதில் தம்மைத் தகவமைத்துவரும் தளமே வெட்டவெளிச்சமாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது.அராஜகங்களுக்குத் துணைபோகும்,மனித வாழ்வுக்குக் குறுக்கே நிற்கும் அதிகார வர்க்கத்தோடு நட்புறவை வளர்த்து அவர்களை இலங்கை யுத்தத்துக்கு எதிரான சக்திகளாக்கக் காட்டிப் புலம் பெயர் நாடுகளில் திட்டுமிட்டுச் சதிவலை பின்னுவதற்கான முனைப்பை மாற்றுக் கருத்தாகக்காட்டுவதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.


மறுத்தலின் வரட்டுத்தனமான விருப்புறுதி கணித்துக்கொள்ளத்தக்க எந்தப் புறநிலை மாற்றத்தையும் மெளனமாக உதாசீனப் படுத்துவதில் முன்நிலை வகிப்பதிலும்,அதன் தொன்மைமிக்க கருத்தநிலைத் தர்க்கத்தாலும் புதியவகைப் புரிதற்பாட்டினது கட்டுடைப்பின் மீதான மறுதலிப்பையும்-அதன் தன்னுணர்வுமிக்க ஒற்றைத்துருவ வியாக்கிமான கருத்துநிலை தாண்டா திடசங்கற்பத்தாலும் தனதிருப்பின் மூலத்தையுறுதிப்படுத்தும் மனநிலையைத் தோற்றுவிக்கும் மாதிரி மனிதத்தேவைகளை -பெரும் பரபரப்பின் வாயிலாக் கொட்டி வைத்திருப்பதில் இதுகாறும் நிலை நாட்டும், புலம் பெயர் இலக்கியப் பாரம்பரியத்தின் அறிவின்மீது. இந்தத் தளத்தின் மீது எவரொருவர் அறிவாந்த தேடலையிட்டுக் கொள்ள முனைந்தாலும் அந்தத் தேடல்மீதான எதிர்போக்கான மறுதலிப்பின் வினையாற்று குறிப்பிட்வொரு தளத்தில் தன் தர்க்கத்துக்குமாற்றான கருதுகோளை -அதன் உச்சபச்ச நிராகரித்தலூடாய் இருப்பிழக்கத்தக்க பனுவல்களாக மாற்றவதிலும்,குறுகிய மனத்தளவான மதிப்பீடுகளின் மாதிரிகளைக் கொண்டு வெற்றிடத்தை நிரப்புதலில் இதுகால வரை காலத்தைக் கடத்திவருகிறது இந்த இலக்கியச் சந்திப்பும், அதன் நிழல் தலைமைகளும்.


இன்று இலக்கியச் சந்திப்பைக் குத்தகைக்கு எடுத்தவர்களிடம் சீரழிந்த-மனநோயாளிகளின் குணத்தோடு சேறடிப்பு, வம்பளப்பே மாற்றுக்கருத்தென்றும்,ஜனநாயக விழுமியமென்றும் உரக்கச் சொல்லப்படுகிறது.கலையிலக்கியத்தின் அவசியமான புரிதற் பாடு நமக்கான-நமது மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை உருவாக்கி,அதன் வாயிலான புதிய மாதிரி கருத்தமைவுகளை,சமூக மதிப்பீடுகளை-வாழ்வின் பெறுமானங்களை மீளுருவாக்கஞ் செய்தல் கடந்த கால அடிமைத்தனங்களை களைவதற்கான முன்னெடுப்பின் முகிழ்ப்புத்தாம்.எனவே இது தவிர்க்க முடியாத காலத்தின் அவசியமான பணி.பண்டுதொட்டு வாசிப்புக்குள்ளாகிய மரபுசார்ந்த மதிப்பீடுகளையுருவாக்கிய நமது புனைவுகளால் நாம் மனவளர்ச்சியற்வொரு கூட்டமாகவே இருக்கிறோம்.


இன்றும் நமது பழமைவாய்ந்த மதிப்பீடுகளால் மனிதத்தைக் குற்றுயிரோடு மரணப்போராட்டத்துக்குள் தள்ளியுள்ளோம்.


இத்தகைய பண்பினது விருத்தியே மாற்றுக்கருத்தாளர்களை மிகவும் பிளந்து குறுகிய இழிநிலைக் குழுக்கட்டல்களாக விரிந்து தனிமனித் தேவைகளை நிறைவேற்றுகிறது.பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம் தம்மைக் குறித்த புனைவில் தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்கிறது.

எந்தவொரு சமுதாயமும் தனது மதிப்பீடுகளை இன்றைய நோக்கு நிலையிலிருந்து மீளுருவாகஞ்செய்யாதுபோனால் அதன் இருப்பானது மிக மிகப் பலவீனமான நிலையையெய்துவிடும்.இன்றைய காலமானது மிகவும் கெடுதியான பொருளியல் நலனே முக்கியம் பெற்ற அதிர்வான சமூக சீவியத்தைக் கொண்டிருக்கும் காலமாகும்.எங்கு நோக்கினும் மக்கள் விரோதிகளே தம்மை மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாகக் காட்டி வருகிறார்கள்.இலக்கியச் சந்திப்பென்பது இத்தகைய மக்கள் விரோதிகளை இன்னும் தொடர்ந்துருவாக்கும் ஒரு வடிவமாக மாற்றப்பட்டு இன்று ஒரு தசாப்தமாகிறது.


கட்டுடைப்பும்அதன் வாயிலாக புதிய முன்னெடுப்புகளும் மானுடநோக்கில் அவசியமாகும்.இதைப் புறந்தள்ளும் எந்த முன்னெடுப்புகளும்,விமர்சனங்களும் இன்றைய சூழலை மிகக் கேவலமான முறையிற் புரிந்த அரைவேக்காட்டு உளப் பாங்கின் வெளிப்பாடுகளே!

யுத்தத்துக்குள் மூழ்கிய சமூகத்தின் விருப்புறுதியானது அதன் உயிராதாரமான மனித விழுமியத்தைக் கொண்டியங்கக்கூடி மறுவார்ப்பைக்கோரி நிற்கின்றது.இதைத் திடகாத்திரமான முறையிற் வளர்த்தெடுப்பதும்,வீரயிமிக்கதான- அறிவார்ந்த,மக்கள்சார்ந்த தேவைகளுக்கு வித்திடக்கூடிய எதிர்ப்புக்கூறுகளை(யுத்தத்துக்கு எதிரான-இனவாதத்துக்கு எதிரான-ஈழக்கோசப் பொய்மைக்கு எதிரான) கொணடி;ருக்கக்கூடிய தளத்தை நிறுவுதலே இலக்கியச் சந்திப்பின் பணியாக உள்ளது.ஆனால்,அந்தச் சந்திப்பைச் சொந்தங்கொண்டாடி இன்று நடந்தேறும் இந்தக் குழுக்கட்டல் கயவர்க்கூட்டம் மக்களின் எதிரிகளின் கைக்கூலிகளாக மாறியதை மறைப்பதற்கே எல்லோரையும் அழைத்து வம்பளக்கிறார்கள்.ஜேர்மனியில் இலக்கியச் சந்திப்புக்களை எடுத்து நடாத்திய சிலர் ஜெர்மனியின் பொது அமைப்புகளிடம் காசுவேண்டிப் பொக்கற்றுக்குள் போட்டதை உதாரணமாக எடுங்கள்.புலிகள் மக்களை ஏமாற்றிப் பொருள்களை மட்டுமல்ல மனித உயிர்களையும் சுரண்டும்போது நீங்கள் இதையும் செய்யாட்டித் தமிழரென்று கூற என்ன மண்ணுண்டு?


"பரதேசிக் கோலம்பூண்டு
தெருவெல்லாம்
படுத்தொழும்பி
தேசத்தின் இதயத்துள் துரோகியென்று பொறித்துவிட்ட
அப்பாவிக்
குரல்களை
அடக்கிவிடத் துடிப்பர் கைக்கூலிகள்
என்றபோதும்
தெரு நாய்கள்
குரைப்பதை நிறுத்தாவரை
"துரோகிகளும்" தூங்க மாட்டார்."எல்லோருக்கும் புரியும்படி எதைத்தான் எடுத்துவைத்தாலும் , அதுவொரு வன்னுணர்வின் மிகைச் செயலாகக் கண்டுகொள்ளப்படுமானால்- நீ எந்தத் தளத்தலிருக்கிறாயோ அந்தத் தளத்தில் நோய் இருக்கிறது.உனது(எனது) நோய்க்கான காரணியைக் கண்டுகொள்ளாத மனமானது பிறரையும் புரிந்துகொள்வதில் நாட்டங் கொள்வதில்லை.இங்குதான் பெரிய நெறிமுறைகள்,பண்பு,பண்ணாடையென்றெல்லாம் ரீல் விடுகிறோம்.எது சமுதாயத்தின் தளத்திலிருக்கிறதோ-அது சமூகத்தில் பிரதிபலிக்கிறது.சமூகமென்றால் அது தனிமனிதரின் கற்பிதங்களையொட்டியே நகருமென்பது எப்படிச் சாத்தியமில்லையோ,அதே மாதிரித்தான் பல்வகைக் கருத்தாடல்களும்,அதையொட்டிய ஆவேசங்களும்.


எந்தவொரு தனிமனிதராலும் சமூகச் சீர்கேடுகளைத் துடைத்தெறிய முடியாது.


சமூக மட்டத்தில் ஆற்றவேண்டிய தேவையானது விழிப்புணர்வைத் தூண்டுதலும் அதன் தேவையை வலியுறுத்துவதுமே. இங்கே மல்லுக்கட்ட வருபவர்கள் தாம் சார்ந்திருக்கும் எண்ணங்களுக்கப்பால் சிந்தனையில்லை என்ற மனோபாவத்தோடு,மற்றவர்களுக்கு முத்திரை குத்தும் சூரத்தனத்தை நல்லது-கெட்டதென்ற கற்பிதங்களால் நெம்பி அளந்து தீர்ப்பிடுதல் மிகத் தீங்கென்றால் மறுத்திட முடியுமோ?இத்தைதான் இலக்கியச் சந்திப்பின் பிதாமக்கள் இப்போது செய்துவருகிறார்கள்.


நமக்குத் தெரிந்த அரசியல்தாம் இது,எனவே ஏமாற்றமில்லை.


ஆனால் நமது மக்கள்?

பாவப்பட்ட மக்கள், பேதமையான உள்ளங்கொண்ட பாமர மக்களை எவர் காப்பாற்றுவார்?நாளும் பொழுதும் யுத்தால் கொல்லப்படும் மக்களின்மீது எவர் கரிசனைகொண்டார்?


தமிழீழத்தின்மீதானபற்றுறுதி தம் உயிரைக்கொடுப்பதற்குக்கூடத் தயங்காத தியாக உள்ளத்தை நம் மக்களுக்கு அன்று ஏற்படுத்தியது.இவர்கள் தமது திண்ணைக்குள் முடங்கியிருந்து,தமது குடும்பம்-உறுவுகளென வாழ்ந்த சராசரி வாழ்வை- புழுதிதோய்த கல்லொழுங்கையூடாய் -கடலேரி நீரூடாய் கால் புதைத்து, ஊர்விட்டு ஊர்போய் மனிதத்தைப்புரிய வைத்தது இந்ததத் தேசக்கனவுதான்.தன் தேசத்தைப்- பெற்ற குழந்தையைவிட நேசிக்கத்தூண்டியதும் இந்தத் தியாக உணர்வே.ஆனால் அந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்புத்தாம் இங்கு ஓடிமறைந்துவிட்டது.

மனிதம் முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது.


இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் காலனித்துவ நாடுகளில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.இதற்காக ஒரு இலக்கியச் சந்திப்பு?


அனைத்து மூலையிலும் இருளின் தூதா;கள் பதுங்கிக் கிடக்கிறார்கள்!


தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பெளத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இவர்களுக்கு இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கழகங்களும்,மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் இருப்பைக் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டியுள்ளார்கள்.அது நாளாந்தம் மக்களை அழித்து,அந்நியர்களுக்கு அடிமைப்படுத்துகிறது.இத்தகைய அடிமை வாழ்வை சகஜமாக்க மக்களுக்கு "ஜனநாயகம்"சொல்கிறது இத்தக்கூட்டம்.


மனிதாபிமானமெனும் வர்ணம் பூசிய இந்தக்கபடதாரிகளின் அரசியல் தன்னளவில் மனிதர்களை ,அவர்களது உரிமைகளைத் தமது வர்க்க இருப்புக்காக புதிய பல பாணியிலான போக்குகளுக்குள் சிதைத்துக்கொள்வதில் முந்திக்கொள்கிறது.தத்தம் எஜமானர்களின் அன்பளிப்புக்காக தமது மக்களையே வேட்டையாடும் மனிதர்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்வதற்குத் தோதான சந்திப்பாகச் சிதைந்தது இந்த இலக்கியச் சந்திப்பு."புயலடித்த தேசத்தின் புழுதிகள்
ஒருபகுதி மனித முகங்களை மறைத்திருக்க
சில தெரு நாய்கள் ஓங்கிக் குரைத்தன "வெற்றி,வெற்றியென"
முன் பின் தெரியாத குருட்டு விழிகளால் இவையறியப்படாது
வீண் கற்பனைகளாற்
சில முகங்கள் மலர்ந்தன"ப.வி.ஸ்ரீரங்கன்

14.06.2008

Thursday, June 12, 2008

தேசமும் தெருச் சண்டையும்.

  • மாற்றுக்கருத்தும்,மௌனச் சொரூபமும்

    >>>கலைச் செல்வனின் 3ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம் "உயிர்நிழல்" சஞ்சிகையால் ஏற்பாடு செயப்பட்டு, எனது ஆரம்ப உரையுடன் தொடங்கப்பட்டது. எனது ஆரம்ப உரை கலைச்செல்வனுடனான நினைவுப் பகிரல் அல்ல மாறாக இலங்கைச் சமூகம் எவ்வாறான காலங்களைச் கடந்து வந்திருக்கின்றது. இந்தக் கால ஓட்டங்கள் எமக்களிக்கும் அனுபவங்களோடு இடப்பெயர்வையும் இணைத்து, புனிதங்கள் வழமைகள், மரபுகள், தொன்மங்கள் போன்றவற்றைக் கேள்விக்குள்ளாக்கியதும் வேண்டியபோது மீறியதும், புதிய அடையாளங்களை தேடிக்கொள்வதும் வாழ்வைப் பரிசோதனை முயற்சியாகவோ ஓட்டிச் செல்வதும் அதன்மூலம் ஓர் உயர் ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட ஒரு கலாசார சமூகத்தை உருவாகி நிற்பதும் சிறு அமைப்புக்கள் கூட எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்றவாறும் மிகைப்படுத்தல் எப்படித் தனிநபர் வழிபாட்டினை ஏற்படுத்துகின்றது. அதுவே அதன் தலைகீழ் வடிவத்தில் மோசமான தனிநபர் வசைக்கு இட்டுச் செல்வது...<<< தேசத்தில் நடராஜா சுசீந்திரன்.

    "உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த "தீவுகளாக" வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் "பொதுவான" வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.இத்தகைய தருணத்தில் குறிப்பிட்ட தனி நபர்களைக்கொண்டு தமக்குத் தோதான அரசியலை மக்கள்முன் விரிப்பதற்கான கைக்கூலி அரசியல் மிக வேகமானமுறையில் நடாத்தப்படும் வியூகத்துக்கு முகவர்கள் பெருகிக்கொண்டே வருகிறார்கள்."


"புரியுமா உனக்கு?
உனது இனத்தின் ஆணிவேர்
அறுபட்டுக்
கொண்டிருக்கிறது!
ஏன்,எதற்கென்று கேள்விகேட்ட
மக்களைக்
கொன்றுவிட்டு
துரோகியென்றாய் அன்று,
இன்றோ
கொன்று குவித்த உடல்களின்
மீதிருந்து
ஆட்காட்டுகிறாய்,நானில்லை அவனென்று.
என்னே ஒரு
ஈழம்?
இதற்குத்தானா இவ்வளவு சாவுகள்?"

"ஈழம்"குறித்த கனவுகள் தகரத்தொடங்குகிறது.இத்தகைய தகர்வில் மக்களே தமது உறுதியானவொரு நிலைப்பாட்டைத் தமது வாழ்வியல் நம்பிக்கைகளுடாகச் சாதிக்கும் சமூக அபிலாசையாக இது விருத்தியாகி போருக்கு அகப் புறமாக எதிர்ப்பிடும் தருணம் தோன்றுகிறது.இது வலியது!இதைத் தடுத்து மக்களின்மீது மீளவுமொரு போர்ச் சுமையைத் திணிக்கும் இயக்கவாதத் தந்திரங்கள் நிலைத்த வெற்றியை அடைவதற்கில்லை.இதுவே, ஈழக் கோசத்தின் பொருள்வயப்பட்ட தோல்வியாகவும் கருத்தியல் தளத்திலான தகர்வாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் உட்புறத்தே பாரிய வெறுப்பாகவும் நிலவிக்கொண்டிருக்கிறது.இந்தச் சமூக உளவியலைத் தடுத்தாகவேண்டுமானால் மீளவும் இனங்களுக்கிடையிலான இனவாதம் மேலெழுந்தியங்க வேண்டும்.இனவாதத் தீயுள் மக்களின் உணர்வுகள் திணிக்கப்பட்டு இலங்கைவாழ் மக்களினங்களுக்குள் தொடர்ந்து பதட்டமான கொதி நிலை அரசியலைத் திட்டமிட்டு நடாத்தியாகவேண்டும்.இத்தகைய நிலையினால்மட்டுமேதாம் இயக்க இருப்பானாலுஞ்சரி அரச-பாராளுமன்ற இருப்பானாலுஞ்சரி இனிமேல் தொடரமுடியுமென்ற அரசியல் சூழல் இலங்கையின் பொருளாதார நிலைமையினால் உருவாகிறது.இத்தகையவொரு சூழலின்பால் உந்தித்தள்ளப்பட்ட இலங்கையின் எதிர்காலமானது அந்தத் தேசத்து மக்களுக்கான இருண்ட இராணுவப் பாசிச அரசாக விருத்தியாகிவருகிறது.இதுவே புலிகள்போன்ற அரசஜந்திரத்தைக்கொண்ட எந்தவொரு இயக்கத்துக்கும் அவசியமானதாகும்.இன்று இலங்கையில் இருவேறு அரச வன்முறை ஜந்திரங்கள் நிலைபெற்றுவிட்டன.இவை இருவேறு நிலப்பரப்புகளை ஆதிக்கத்துக்குள் கொணர்வதற்கான கடும் முயற்சியில் கட்சி-இயக்க ஆதிக்கமாக உருவாகிறது.இராணுவவாதத்தையே சார்ந்தியங்கும் ஓட்டுக்கட்சிகள் ஒரு புறமாகவும் மறுபுறம் இராணுவக் கட்டமைப்பையே தமிழர்களின் விடுதலைப் பரிணாமமாகப் பரப்புரை செய்தபடி ஆதிக்கத்தை நிலைப்படுத்த மக்கள் உரிமைகளைவேட்டையாடியபடி அராஜகத்தைக் கட்டவிழ்க்கும் வன்முறைஜந்திரமாக இயங்கும் புலிகள் மற்றும் குறுங்குழுக்களுமாக இலங்கையின் அரசியல் வரலாறே மாறிப்போயுள்ளது.ஈழத்துக்கான போராட்டமென்பது இலங்கைத் தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது சமூகசீவியத்தையும் பலநூற்றாண்டுகள் பின் தள்ளிய பாரதூரமான சமூகவிரோதமாகும்,இது இன்றைய வரலாறாக இருப்பதை நாம் இருட்டடிப்புச் செய்யமுடியாது.சமுதாயத்தின் மொத்த விருப்பானது இழந்தவுரிமைகளை மீளப்பெறுவதாக யாரும் குறிப்பிட முடியாது.ஏனெனில், யாரு எதை இழந்தார்களென்று சாதாரணப் பொதுமக்களுக்கு இதுவரை புலப்படவில்லை.கடந்த கால்நூற்றாண்டுக்குமுன் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும்,இன்றைய சிதிலமடைந்த வாழ்க்கைக்கும் எந்தெந்தக் காரணம்கூறினாலும் தமிழ் மக்களுக்கு ஒப்பீட்டுரீதியான புரிதலுண்டு.இன்றைய வாழ்வானது தமிழர்கள் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் வாழ்ந்ததைவிடப் பன்மடங்கு தாழ்ந்த வாழ்வாகும்.மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டுமென்ற கருத்தும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக இருக்கிறது.தமிழ் பேசும் மக்களை அரசியல்ரீதியாக வேட்டையாடிய தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட அரசியல் வங்குரோத்தே, சிங்களஅரசை- பயங்கரவாத அரசாக்கும் மூலகாரணத்தைக் கொண்டிருந்திருக்கிறது.இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளெல்லாம் தாமும் வன்னிக்கு வெளியில் வாழும் தமிழ்பேசும் மக்களைப்போன்று சமூக சீவியத்தைப் பெறுவதாகவே உணரப்படுகிறது.இனியுமொரு ஏமாற்றுப் போரை புலிகளின் நலனுக்காகச் செய்வதற்கு மக்கள் குறுக்கே நிற்கிறார்கள்.ஆனால்,மக்களின் ஜீவாதாரவுரிமைகளைக் கொச்சைப்படுத்தும் புலிகளின் அராஜக நடவடிக்கையானது இளஞ் சிறார்களை மீளவும் போருக்குத் தயார்ப்படுத்தும் ஈனத்தனமாக விரியும்போது,சமூக அக்கறையுடைய மனிதர்கள் இனியும் விட்டேந்திகளாக,விடுபேயர்களாக இருக்கமுடியாது.அப்படியிருத்தல் புலிகளின் தயவில் பதவி,பணம்,அந்தஸ்த்துப் பெற்றுச் செல்வச் செழிப்பில் புரளும் தமிழ்ப் பாசிஸ்டுக்களுக்குத்தான் முடியும்."நேற்றையவுறவும்
இன்றைய கூட்டும்,கும்மாளமும்
புதிதல்ல
ஆடுகள் எருதுகளோடு இணைவதில்லை
நாய்கள் பூனைகளோடு
சேர்வதில்லை"நெருக்கடிக்குள்ளானது தமிழ்பேசும் மக்களின் உயிர்வாழ்வு.அது, மீளவும் சிதைவுற்றத் தமிழ்பேசும் மக்கள் சமுதாயமே போர்ச்சுமையினால் பெருமளவில் அழிந்து சிறைப்படும் தருணத்தைச் ஸ்ரீலங்காவின் சிங்கள ஆளும் வர்க்கம் கனவுகாண்கிறது.இந்த இலங்கையின் எதிர்பார்ப்பை மீளவும் யுத்தத்துக்கூடாகச் சாதிக்கத்தக்க அரசிலைப் புலிகளினது இராணுவ முகாம்-கடற்படை முகாம் தகர்ப்புப் போரட்டம் மெல்லச் செய்துவரும்போது,அந்த வியூகத்தைப் பலப்படுத்தும் அரசியலை மிக வலுவான தளத்தில் எடுத்துச் செல்பவர்கள் இலங்கை அரசின் பின்னும் இந்திய உளவுப்படையின் ஆதரவோடும் இயங்கும் குறுங்குழுக்களாகும்.இன்று,பிள்ளையான் தலைமையில் மீளமுடியாத பகை முரண்களை அறுவடைசெய்யும் குழப்பகரமானவொரு அராஜக அரசியலைக் கிழக்குமாகண மக்கள் அனுப்பவித்துவரும்போது அந்த மக்களுக்கு ஜனநாயகம் மெல்ல வழங்கப்படுவதாகப் புலம் பெயர்ந்த புலியெதிர்ப்பு அணியின் ஒருபகுதி சொல்லித் திரிகிறது.ஆனால்,கடந்த முப்பது ஆண்டுகளாகக் கொடிய யுத்த அரசியல் முன்னெடுப்பால் அழிந்து நாசமாகிவரும் மக்களின் வாழ்வாதாரங்கள் இன்றுவரையும் அந்த மக்களின் உயிர்வாழ்வுக்காகக் காத்து,அவர்களின் உரிமையாக்கப்படவில்லை.மக்கள் திறந்த சிறைக்குள் அடைக்கப்பட்டு, இலங்கையரசின் ஆதிக்கத்துக்கான கைதிகளாக்கப்பட்டு அடிமைகளாக உயிர்வாழ நிற்பந்திக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த யதார்த்தத்தில் ஏழை பாழைகளின் குழந்தைகளோ போருக்காகத் தமது குழந்தைத் தனத்தையிழந்து கொடும் துப்பாக்கி காவி-குண்டுகாவி வெடித்துச் சாகவேண்டும்!இத்தப் பெரும் அநீதியை இனிமேலும் மெளனமாகவிருந்து நாம் பார்க்கமுடியாது.இந்த "அற்பத்தனமான" சமூக விரோத ஈழப்போரானது ஒருசில நூறு தமிழரின் வசதிக்கும்,வாய்புகளுக்குமானதென்பதை நாம் பெரும்பாலும் மக்களரங்குக்கு கொண்டு செல்லவேண்டிய நேரத்தில்-அவற்றைச் செய்யாது, தவறுவிட்டுள்ளோம்.அதற்கான காரணம் நாமறிந்ததுதான்.அராஜமான படுகொலைகளால் புலிகள் இந்தவொரு வேலைத் திட்டத்தையும் செய்யமுடியாதபடி நம்மைச் சிதைத்து வருகிறார்கள்.மக்களின் உரிமைகளை மறுக்கும் இலங்கை அரசின் அதே காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைப் புலிகளும் தகவமைப்பதானால் இங்கே அதிகாரங்களைக் கைமாற்றும் போரே தொடர்கிறதென்ற உண்மையை மக்கள் அறியும் சூழலொன்று உருவாகிறதென்பதுண்மை.இந்த உண்மைகளைச் சிதைப்பதில் இனவாதம் ஆற்றும் அரசியலானது மிகப் பெரிதானது புலிவகைப்பட்ட இலங்கை அரசியலுக்கு.இதுவே தொடர்ந்து குண்டுகளாக இலங்கைவாழ் முழுமொத்த மக்களையும் அச்சுறுத்திக்கொண்டு ஆங்காங்கே வெடிக்க வைக்கப்படுகிறது.இந்த மக்களிடம்"ஈழக்கனவு"இனியொரு பொழுது எடுபடுவதற்கான எந்தத் தார்மீகப்பலமும் அவர்களிடம் இல்லை.அவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டு இதுவரை ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.யுத்தம் என்பது எந்தத் தரப்பாலும் நியாயப்படுத்தப்பட்டு மக்களிடம் உயிர்பறிக்கும் ஒரு அரசியலாக மாற்றப்படுகிறது.இது முழு இலங்கை மக்களுக்குமே பெரும் ஆபத்தாக மாற்றப்பட்டு கொடிய இனவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது.இத்தகையவொரு இனவாதப் பிளவு அரசியலை மிகவும் விரும்புகின்ற அந்நியத் தேசங்கள் இலங்கையினதும் புலிகளினதும் யுத்த ஜந்திரத்துக்குத் தொடர்ந்து நிதியாதாரத்தை வழங்கி வருகிறார்கள்.மறுபுறமோ குறுங்குழுக்களை வைத்து மக்களின் உரிமையை மக்களே உணராத கருத்தியல்போரை நடாத்தி மக்களின் சுயவெழிச்சியை அடக்கி அழித்துவருகிறார்கள்.இதன் தொடர்ச்சியான அரசியல் பாச்சலானது மக்கள் மத்தியில்தொடர்ந்து கொலைகளையும் கட்டவிழ்த்துவிட்டு மக்கள் மனங்களை அச்சத்துக்குள் தள்ளி இலங்கையில் உயிர்வாழ்தலே சாத்தியமில்லையெனும் அளவுக்கு உணர்வோடு விளையாடி அவர்களை இலங்கைத் தீவிலிருந்து இடம்பெயரவைத்துச் சிங்கள ஆட்சியாளரின் பெருங்கனவைத் தமது நலன்களுக்கான தெரிவில் நிலைப்படுத்த விரும்புகிறார்கள்.


இதுவே,நமது மக்களின் அன்றாட வாழ்வாக இருக்கும்போது புலிகளின் விசுவாசிகள் இன்னும் "ஈழம்,விடுதலை,சுயநிர்ணயம்"எனும் கோதாவில் கதைவிட்டுப் புலம் பெயர் தமிழரிடம் உண்டியல்கிலுக்கித் தமது வரும்படியைப் பெருக்கி வருவதில் மிக முனைப்பாகவே யுத்தம் துணைபுரிகிறது.மொத்தத்தில் மக்களின் அன்றாடக் குருதி சிந்தும் பயங்கரமான கொடிய யுத்தம்,யுத்தத்துக்கு வெளியில் இருக்கும் பெரும்பாலான இலங்கையருக்கு ஏதோவொரு முறையில் நன்மை பயக்கும் ஊடகமாக இருக்கிறது.இந்தவொரு நிலைமையின் வெளிப்பாடாகவே இறுத்தித் தமிழன் இருக்கும்வரை "விடுதலைப் போர் தொடரும்"எனும் பாசிச யுத்தக் கோசம் மக்களின் உரிமைவடிவில் நமக்குள் மீளவும் விதைக்கப்படுகிறது.


"பாருங்கள்
இவர்களுக்கு
பசிப்பது தேசிய
நலனாம்
மற்றவர்களுக்குப் பசிப்பது துரோகமாம்!
தூ..."


இன்றெமது காலச் சூழலானது மெலினப்பட்டவொரு கருத்தியற்றளத்தையும்,புரிதற்தடுப்புக்கான மாறாட்டங்களையும் கொண்டிருக்கிறது.இதன் பன்முகத் தாக்குதலானது பின் தங்கிய சமூகச் சக்திகளிடம் மிகவும் மோசமாவொரு உள-உடலரசியல் வகைப்பட்ட "மாதிரி பரப்புரைகள்"மலிந்து கிடக்கிறது.இந்தக் கருத்தியற் தளத்தின் எல்லையிலிருந்துகொண்டு மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை அணுகுவது மிகப் பெரும் ஆபத்தானது.(இதை முன் நிபந்தனையாகக் கொள்வோமானால் கருத்துகளின் மைய வலுவானது அந்தந்தச் சமுதாய இருப்பை ஆட்டிப் படைக்கும் அனைத்துக் கூறுகளையும் மட்டுப்படுத்துவதும்-புரட்டிப்போடுவதும் உணரப்படும்.எனவே இதன்பாலான புரிதல், மீள் கருத்தியற் சுதந்திரம்,மக்களாண்மைத்துவ திரட்சிப் பெருங்கூட்டக் கருத்தாளுமை,பன்மைத்துவ வெளிபாட்டுச் சுதந்திரம்போன்ற ஜனநாயகக் கூறுகளையும்,அதன் விளைவாகவெழும் தெளிந்த அறிவுக்கட்டமைப்பையும் வலியுறுத்தி நாம் செயலூக்கம் பெறவும்-மாற்றுச் சிந்தனைக்கும் வழிதோன்றும்)குறைவிருத்திச் சமுதாயங்களில் பழைய பூர்சுவாக்கருத்தாக்கங்களும்-படிமங்களும் இன்னும் மலினப்பட்டுக் கிடப்பது இங்கெல்லாம் வெறும் குறுந்தேசிய வெறிச் செயற்பாடுகளும், இனவாத அரசியற்போக்கினதும் திட்டவட்டமான அரசியற் சூழலின் வெளிப்பாடே.


இது மேற்குலக மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியாகவெழுந்த மதிப்பீடுகளினது வடிவமே.இந்தச் சிக்கல் சந்தைவாய்பின் இருப்புக்காக மாற்று மொழிபேசும் மானுடர்களையும் தமது சொத்தாகப் பயன் படுத்த முனையும் போதும்- பாரிய நிலம் வலிந்துருவாக்கப் பட்டு அதை ஆயுதம் தரித்த வன்முறை ஜந்திரத்தால் காக்க முனையும்போது, அந்த அரசும் நாடும் குறிப்பிட்ட மாற்று மொழிமக்களுக்குச் சிறைக்கூடாமாகி விடுகிறது.திமிர்தனமான அதிகாரத்துவம் "துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது"ஒருபகுதியுண்மை மட்டுமே.மாறாக, அந்த அதிகாரமானது மிகக் கடுமையான"உளவியற் கருத்தாங்களால் "கட்டியமைக்கப்படுகிறது.இது துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது.இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட "மனிதவுடலானது"அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக"மக்கள் விரோதமாக"இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் நாம் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.
இங்கு,நிலம் சார்ந்த-மொழிசார்ந்த-மதம் சார்ந்த புனைவுகளாற் மனிதவுடல்கள் இனம் காணப்பட்டதும்,பயிற்றுவிக்கப்பட்டததும் நடந்தேறியது.அது மானுடர்தம் வாழ்வை பொருள் சார்ந்த குவிப்புறுதியூக்கத்துக்கேற்வாறு மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு முதலாளிய நலன்களைக் காக்கிறது.இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனையும்போது இத்தகைய கெட்டிதட்டிய உடலரசியலும்,உளதேசபக்தத் நெறிமுறைமைகளும் மனிதவுடல்களைக் காவுகொள்கிறது.


ஈழவிடுதலை இயக்கங்களின் எழிச்சிகள் அன்னிய சக்திகளால் பாழடிக்கப் பட்டு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கு வேட்டுவைப்பதில் இந்தியாவும்-அமெரிக்காவும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் செயற்பட்டு வருகின்றன என்பதைப் பலதடவைகள் சொல்லியே வருகின்றோம்.இயக்கங்களின் சுயவளர்ச்சியை மட்டுபடவைத்து தத்தம் உதவியால் அவற்றை வீங்க வைத்து பின் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது உண்மை.இன்று புலிகள் இயக்க உடைவென்பது மிகச் சாதுரியமான இந்தியாவின் அரசியல் நடத்தையைச் சொல்வதற்கான எடுகோளாக இருக்கிறது.வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் செல்லும் பிள்ளையான்-கருணா போன்ற அராஜகவாதிகள் கிழக்குக்கு ஜனநாயகத்தைக் காட்டும் விடி வெள்ளிகளான அரசியலில் எத்தனை வகையான "துரோகங்கள்"மலிந்துகிடக்கிறது!


தமிழ்பேசும் மக்களை சிங்கள சியோனிச பொளத்தமதவதமும்,அவர்தம் தரகு முதலாளியமும் மிகக் கொடுரமான முறையிற்றடக்கியபோது அந்த ஒடுக்குமுறைக் கொதிரான தமிழ்பேசும் மக்களின் தார்மீகப்போரை இலங்கைப் போலிப் பொதுவுடமைவாதிகளும்-பாராளுமன்ற சகதியில் வீழ்ந்த கம்யூனிஸக் கட்சியும் ."அது சாத்தியமல்ல, அதுபொருளாதார ரீதியில் நடைமுறைச் சாத்தியமல்ல,அது புவியியல் ரீதியில் சாத்தியம் அல்ல, அது அரசியல் ரீதியில் சாத்தியமல்ல.தமிழ்த் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும்,சிங்களத்தொழிலாளர்களுக்கும்-விவசாயிகளுக்கும் அதனால் நன்மையில்லாததால் நாம் தனிநாட்டை எதிர்க்கிறோம்."
இந்த வகையில் எதிர்தார்கள். இதனால் இனவொடுக்குறைக்கெதிரான முற்போக்குத் தன்மைவாய்ந்த போராட்டம் குட்டி முதலாளித்து இயக்கங்கள் வாயிலாக முன்னெடுக்கும் வராலாற்றுத் தவறுக்கு அவர்கள் ஒத்திசைவானார்கள்.புலிகளின் இருப்புக்கு இன்றைய இலங்கையின் இனவொடுக்குமுறைமட்டுமல்ல காரணம்.போலி இடதுசாரிகளினதும் தவறும் காரணமாக இருக்கிறது.இத்தகைய தவறேதாம் இன்று புலிகளால் கொல்லப்படும் ஒவ்வொருவருக்கும்"துரோகி"எனும் பாசிசப் பொய் சொல்லித் துரோகமிழைக்கப்படுகிறது.இன்றைய அரசியலில் இலங்கை அரசை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓரளவு ஜனநாயகப் பூர்வமான அரசென்றும் கூறுவோர் உளர்.இவர்களினது மதிப்பீடு இலங்கை அரசின் கடந்தகால மதிப்பீட்டிலிருந்தெழுகிறது.எனினும்,இத்தகைய அரசைப் பின்னின்றியக்கும் இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் அந்நியத் தொடர்பு மற்றும் புலிகளுடான தேன் நிலவு யாவும் இன்று முழுமையான சர்வதிகார அரசவன்முறை ஜந்திரத்தை இனங்களுக்கிடையிலான அதிகாரப்பரவலாக்கலெனும் வடிவில் உற்பத்தி செய்கிறது.இதுள் புலிகளே மிகப்பெரும் துரோகிகளாகி மக்களை ஒடுக்கும் இலங்கை அரசின் ஓட்டுண்ணிகளாகவும் இந்தியக் கைக்கூலியாகவும் இருக்கிறார்கள்.இதற்குக் பிரபா-கருணாவழி தோன்றிய புலிகள் நல்ல உதாரணமானவர்கள்."தீட்டுப்பட்ட
மனிதவுடல் தீக்காக
வெளுத்துக்
கிடக்கிறது
மீள் நோக்கா வீரவணக்கமோ
மீட்டுவதற்கு முந்திக் கொண்ட
உணர்வுக்
கிடங்கில் உருக்குலைந்தது"
இன்று புலம் பெயர்ந்த மாற்றுக் கருத்தாளவட்டமானது பெரும் நெருக்கடிக்குள் வலிந்து வீழ்ந்துள்ளது.அன்று, மனிதப்படுகொலைகளை மறுத்து ஓடிய இந்த வட்டம் பெரும்பாலும் யுத்தத்துக்கு எதிரானதாகவும்,இலங்கை-இந்தியச் சதியையும் புலிகளின் அராஜகத்தையும் வன்மையாகக் கண்டித்து மக்களின் அதீத மானுடத் தேவைகளுக்காக் குரல் கொடுத்தது.இத்தகையவொரு தளத்தில் பல்தரப்பு வர்க்க நலன்களைக்கொண்டவர்கள் இணைந்து கருத்தாடியது யுத்தத்துக்கு எதிரானதென்ற மானுட அவசியத்துக்கான கருத்துநிலைகளால்தாம்.அங்கே, மானுட அழிவைத் தடுத்து நிறுத்துவதும் இலங்கையின் இனப்படுகொலையைத் தடுத்து மக்களுக்கான அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக மக்களைச் சார்வதென்று நோக்கிருந்ததாகக் காட்டினார்கள்.என்றபோதும், இவர்களிடம் மண்டிக்கிடந்த அராஜக மனோபாவம் இயக்கவாதத்தைத் தொடர்ந்து விசுவாசிப்பதிலும் அதன் வாயிலாக வந்ததடையும் நிதி-பதவி எனும் இரட்டை ஆதாயங்களால் மனித விழுமியத்துக்குக் குறுக்கே நிற்பதென்ற முடிவில் அவர்களை இயங்க அநுமதித்தது, இந்திய-இலங்கை மற்றும் புலிகளின் ஆதிக்கம்.


இன்றைய இழி நிலையான கருத்தாடல்களுக்குக் காரணமான அரசியல் காரணிகளைத் தேடுமிடத்து இந்த வட்டத்தின் அழிவுக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் ஆரம்பமான முடிச்சை அவிழ்த்தவர்கள் புலிகளே என்பது மிகச் சாதுரியமாக அறியவேண்டியுள்ளது.எங்கே,மக்கள்நலன்சார்ந்த கோசங்கள் எழுகிறதோ அங்கே ஆப்பு வைக்கும் அரசியல் சூழ்ச்சியைப் புலிகள் செய்த வரலாறு நாம் அறிந்ததுதாம்.அன்றைக்கு புளட்டிலிருந்து பிரிந்த "தீப்பொறிக்கு"என்ன நிகழ்ந்ததென்பது பலருக்குத் தெரியும்.அந்தத் தீப்பொறிக்குள் ஊடுரிவிய புலிகள் அதையே மக்களிடமிருந்து அந்நியப்படத்தும் பாரிய செயலுக்கமாக அந்த அமைப்புக்குள்(குழுவுக்குள்) ஊடுருவி அதையே முற்போக்காய்க் காட்டி, உலகத்தின் மூலைகளில் இடம்பெயர்ந்து இலங்கை மற்றும் புலிகளின் மக்கள் விரோதத்தை அம்பலப்படுத்திய முற்போக்காளரை வேவு பார்த்த கதைகளும் ஏராளம்."தீப்பொறிக்குள்"உள்நுழைந்த புலி உளவுப்படையானது புலம்பெயர்ந்த மாற்றுக்கருத்தாளர்களைக் கடந்த பதினெட்டாண்டுகளுக்குமுன்பே வேவு பார்த்த வரலாறு நீண்டது.இதுதாம் இன்று மாற்றுக்கருத்தாளர்களை-இடதுசாரிகளை கருத்தியில் ரீதியாகத் "துரோகியாக்கும்"பாசிசக்கருத்தமைவுக்கு வழிசமைக்கும் வியூகத்தைப் புலிகளுக்கு இட்டது.இடதுசாரிகளைப் பிளந்து,அவர்களை இந்திய-இலங்கையின் கைக்கூலிகளாக்கியதும், பின் இன்னுஞ் சிலரைப் புலிகளின் எடுபிடிகளாகவும் கருத்துக்கட்டிய வியூகம் புலிகளின் மிகச் சாதுரியமான உளவுத் திறமைக்கே சாத்தியம்.


இன்று தெருக்களில் நின்று தெரு நாயைவிட மிகமோசமாகக் குரைக்கும் மாற்றுக் கருத்தாளர்கள் வந்தடைந்த இறுதியிடம் ஒன்று புலிக்கோ அன்றி அந்நியச் சக்திகளக்கோ சேவை செய்வதில் முடிவடைகிறது.விரல்விட்டு எண்ணத் தக்க தோழர்கள் இன்றுஞ் சளையாது இவர்களை அம்பலப்படுத்தினாலும் அவர்களையும் புலிகள் தமது எடுபிடியாளர்களாக வடிவமைப்பதில் தீவிரமாச் செயற்படுகிறார்கள்.ஆக,மொத்தத்தில் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் இடதுசாரிய எண்ணமுடையவர்களைப் பூண்டோடு காவுகொள்ளும் படுபிற்போக்கான கருத்தியல் யுத்தமொன்று மெல்ல உருவாகியுள்ளது.இதற்குத் தேசம் இணையம் மிக வசதியாகக் காய் நகர்த்துகிறது.இது இனித் தொடரப்போகும் மக்கள் விரோத அரசியலுக்கு நேரடியான எதிர்க் கருத்து நிலையொன்று உருவாகுவதைத் தடுக்கும் அதேவேளை, மக்களின் சுயாதீனமான முன்னெடுப்பை முடக்குவதாகும்.யுத்தத்துக்கெதிரான மக்களின் சமூக ஆவேஷம் அரசியல் முன்னெடுப்பாகவும் அதுவே போராட்டத் தெரிவை முன்வைத்து அமைப்பாவதையும் தடுக்கும் நரித்தனமான செயற்பாடே இன்று மாற்றுக்கருத்தாளர்களை வலிந்து வீழ்த்திய சதியாக மாறியுள்ளது.இது அழிந்துவரும் இனவாதத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தி இனவாதத் தீயில் குளிர்காயும் அற்ப இயக்க நலனையும் அதன் இருப்பையும் காப்பதற்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாகவே உள்ளது.இங்கே இலங்கை-இந்தியச் சதிகளின் மிக விவேகமான பரப்புரைதளமாகப் புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளின் தமிழ் ஊடககங்கள் பல மாற்றப்பட்டு புலிகளுக்கோ அன்றி அந்நியச் சக்திகளுக்கோ சாதகமான ஊடகங்களாக உருவாகிறது.இதுள் தேசம் நெற்றின் இடம் எதுவென்பது நாம் எல்லோரும் புரிந்துகொள்ளதக்கதே.


இன்றைய அரசியல் சூழ்ச்சிகள் புலம் பெயர்ந்த மக்கள்மத்தியில் மாற்றுக் கருத்தாளர்களைத்"துரோகிகள்"எனும் கருத்தியில் கட்டமைவில் மிக நுணுக்கமாக வீழ்த்தி என்றைக்குமே புலிகளை நியாயப்படுத்தும் அரசியலுக்கு வலுச் சேர்க்கிறது.கணிசமான புலம்பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்களை இலங்கை மற்றும் இந்திய உளவுப்படைகளின் முகவர்களாக்கிய கொடூரமான அரசியலுக்கு எந்த அமைப்பின் விவேகம் காரணமென்றால்?அது நிச்சியமாகப் புலிகளே என்பது விடையாக விரியும்.புதிய புதிய தெரிவுகளையும் அதுசார்ந்த குளறுபடிகளையும் ஊக்கப்படுத்திய இத்தகைய அரசியல் சூழ்ச்சி இறுதியில் செய்வது மக்களைக் கொலைக்குத் தயாரிப்பதே.இத்தகையவொரு அரசியலை உடைப்பதாக இருந்தால் முதலில் இலங்கையில் யுத்தத்துக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தாகவேண்டும்.யுத்தம் தடுத்து நிறுத்தப்பட்டு மக்களின் குரல்களுக்கு முக்கியம் கொடுக்கும் ஒரு ஜனநாயகச் சூழலின்றி இலங்கையில் இனங்களுக்கிடையிலான எந்தத் தீர்வும் சாத்தியமாகாது.ஈழத்துக்கான தார்மீக மக்கள் ஆதரவென்பது இனியொரு பொழுதும் சாத்தியமில்லை.மக்களின் அமைதிக்காக- வாழ்வாதாரத் தேவைகளே இதைத் தகவமைத்தது.இதைப் புரிந்துகொண்டு ஈழப்போரை நிராகரிப்பதும் அதே சாக்குவைத்து மக்களை அழிக்கும் இந்திய-இலங்கைச் சதியை முறியடிப்பதும் இன்றைய முற்போக்கு சக்திகளின் தலையாய முதற்கடமையாகும்.இதற்காக புலம்பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்கள் தமக்குள் ஐக்கியமுறவது அவசியம்.ஆனால்,இந்த ஐக்கியத்தை உடைப்பதில் மக்களின் எதிரிகளின் கைகள் புலம்பெயாந்த மண்ணில் ஓங்கியுள்ளது.இதை மெளனமாக அங்கீகரித்தல் மக்களுக்குச் செய்யும் இன்னொரு துரோகம்தாம்.ப.வி.ஸ்ரீரங்கன்

12.06.2008

படங்கள் தேசத்துக்குச் சொந்தமானது:நன்றி.

Sunday, June 01, 2008

கிட்டலரின் புனிதம் ஜேர்மனியர்களை மட்டுமல்ல...

மாற்றுக் கருத்துத் தேசத் துரோகம்:

>>சில கருத்துக்கள்<<


இன்றைய தினத்தில் முதலாளியச் சமுதாயமானது மிகவும் பலமான பாதுகாப்புக் கவச்தோடு தன்னைப் பாது காத்துக் கொள்வதில் பாரிய வெற்றீயீட்டியுள்ளது.இது தன் மூலதனவிருத்திக்கான தேடுதலில் படு பயங்கராமாக இந்த உலகைக் கூறுபோட்ட காலம்போய் அதை முற்று முழுதாகக் கவர்ந்து கொள்வதில் தமது கூட்டாளிகளோடு இணைந்து வியூகமமைத்துச் செயற் படும் இன்றைய நிலையில் தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலைகீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.பாசிசத்தின் கருத்தியல் மனது:


எங்கள் அறிவு மாற்றானிடம் தஞ்சமடைவதில் பெரு மகிழ்வு கொள்கிறது.தமிழீழத்தைச் சொல்லியே"துரோகம்-தியாகம்"என்னுங் கருத்தாங்கங்களை மலினப்படுத்துகிறோம்.மாற்று என்பதைப் புரியாதவர்களாக மாற்றுக் கருத்தென்பது"தமிழீழத் தேசத்துக்கு"(புலிகளுக்கு) எதிரானதென்கிறோம்.உலகில் எதிர்க்கட்சிதாம் உண்டு மாற்றுக் கட்சி இல்லை என்றும் எழுதுகிறோம்! மாற்றைப் புரிந்துகொண்ட அழகைப் புலிகளினூடாகப் புரியும் ஆபத்தால் இத்தகைய அடாவடித்தனமான புத்தி பாசிசத்தின் மிகக் கொடுமையான பக்கங்களைத் "தமிழீழத் தேசம்"எனும் கருத்தாக்கத்துள்-புனைவுள் மறைத்துக்கொள்ளும் "தமிழ் மனது"இதுவரை போட்டுத்தள்ளிய தமிழ்பேசும் மக்களின் உயிரோடு தேசக்கனவைத் தொடர்ந்து நிலைப்படுத்த எத்தனிக்கிறதுஇதன் தொடர்ச்சியாகப் புலிகள் இன்றுவரை தமிழ் மக்களின் தன்னெழிச்சியை மறுத்துவருகிறார்கள்.மக்களே தமது வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகப் போராடவேண்டிய இன்றைய போர்காலச் சூழலில் மக்கள் எந்தவுரிமையுமற்ற வெறும் மந்தைகளாகக் காலத்தையோட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த அவலமான சூழலில் மக்களை அணிதிரட்டி அந்த மக்களின் பிரச்சனைகளை வென்றெடுப்பதற்கு வக்கற்ற புலிகள் தம் இருப்புக்கும்,தமது இயக்க நலனுக்குமாக மக்களைப் பற்றிப் புரிந்துள்ளார்கள் என்பதைப் புலிகளின் நலனுக்காகக் கண்ணீர்வடிக்கும் புலிப் பினாமிகளின் எழுத்துக்களில் அப்பட்டமான புலியரசியல் வெளிப்படுகிறது.அதற்குக் குருவிகள் மறுபிரசுரஞ் செய்த யாழின் கட்டுரையே போதுமான உதாரணமாகக் கொள்ள முடியும்.வர்க்கங்களாகப் பிளவுண்ட மகள் சமூகமாகவும்,சாதி ரீதியாகப்
பிரிந்த மக்கள் சிறு,சிறு இனக்குழுக்களாகவும் இலங்கையில் பல்வேறு நாடுகளின்
விருப்புக்குட்பட்டுத் தமது விடுதலைக்கான வேட்கையுடன் போராடும் "தெரிவுகளில்"நம்மை
நாம் சாகடித்து வருகிறோம்.அல்லது அடிமைப்படுத்தி வருகிறோம்.


எங்களை இணைக்கும் தமிழ் எனும் மொழியானது அடிப்படையில் நம்மைக் கழுத்தறுக்கிறது.இது ஒடுக்குமுறையை ஏவி விடும்,துரோகி சொல்லி அழித்துவிடும்.மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லாதாக்குவதற்கான முன் நிபந்தனையாக "உயிர்ப்பலியெடுக்கும் தமிழீழப் போராட்டத்தை"ப் புலிகள் செய்துவரும் இந்தத் தருணம்வரை நம்மால் இழக்கப்பட முடியாத மானுட இழப்பு நடந்தேறியுள்ளது.நாம் மனிதர்களாகச் சிந்தித்தலென்பது அடியோடு மறந்துபோன விசயமாகப் போய்யுள்ளது.

"தமிழீழத் தாயகம்"நமது மக்களில் பலரை நரவேட்டைக்குத்
தயார்ப்படுத்தியபோது சகோதர இயக்கப் படுகொலைகளிலிருந்து உட்கட்சிப்படுகொலைகள்வரையும்
தொடர்ந்து இப்போது சாதாரணமான மக்களின் அதிருப்த்தியைத்"துரோகம்"எனும் நிலைக்குள்
உணரும் ஒரு பெரும் பாசிச மனம் கொலைகளை நியாயப்படுத்தியும், அத்தகைய
கொலைகளுக்கெதிரான கருத்துக்களைத் தேசத்துக்கு எதிரானதாகவும் கட்டியமைக்கும் இந்த
ஊனமிகு நடாத்தை நம்மைப் பயங்கரமான முறையில் அழித்துவிடத் துடிக்கிறது!


கடந்த நமது தேசிய இனச் சிக்கலானது வெறும் மொழிவழி தோன்றிய ஒன்றுமில்லாத இனவொடுக்குமுறையில்லை.இது முதலில் கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கிய விடையம்.ஓட்டுக்கட்சிகள் முன்தள்ளிச் சொன்ன கருத்தியற்றளத்தை மனதிலிருத்திக் கொண்டு யாரும் போராட வெளிக்கிளம்பிவிடவில்லை.போராட்ம் என்பதே பாரிய உந்து சக்தியான மக்கள பங்கு கொண்டே நடைபெறுகிறது. எனினும், இந்தப் நடவடிக்கையானது ஒவ்வொரு தனிமனிதரின் பங்கில்லாது இயங்கவும் முடியாது.இத்தகைய நிலையில்தாம்"தேசியத் தலைவர்"எனும் ஒளிவட்டம் புலிகளின் தலைவருக்கு ஏற்றப்பட்டு அவர் தமிழ்பேசும் மக்களின்"வெடி வெள்ளி"ஆகிறார்!அனைத்துப் பிரச்சனையும் தமிழ் தேசியத்துக்கூடானதாகப் பார்க்கப்பட்டு அதன் வழி"தேசத் துரோகம்-தியாகம்"எனும் மந்திரம் பாசிசப் பாச்சலாக மக்கள் சமுதாயத்தில் அராஜகத்தைக்கடப்பிடிக்கிறது.இத்தகைய நிலையில்தாம் புலிகளுக்கு-சிங்கள அரசுக்கு எதிரான கருத்துக்கு இலங்கையில் சாவு மணி அடிக்கப்படுகிறது.இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு அராஜகம் தலைவிரித்தாடும் இன்றையபொழுதில் புலிகளின் அப்பட்டமான அராஜக அரசியலைச் சிங்களக் கட்சிகளில் முதன் முதலாகச் சிங்களத் தலைவரான மகிந்தா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இன்றைய மக்கள் கூட்டணி அரசே தத்தெடுத்துச் சிங்கள மக்கள் மத்தியிலும் மற்றும் சிறபான்மை இனங்கள் மத்தியிலும் கட்டவிழ்த்துவிடும் பாசிச அரசியலானது இன்று எவரையும் நிம்மதியாக உறங்கவிடுவதில்லை.இத்தகைய அரசியலின் விருத்தியே இலங்கையில் இன்று பத்திரிகையாளர்கள்மீதான அதீதக் கண்காணிப்பும் அதன் அடுத்தகட்டமாகப் பத்திரிகையாளர்களை அழித்தொழிப்பதுமாக நடந்தேறுகிறது.
இது அப்பட்டமாகப் புலிகளோடு சம்பந்தப்பட்ட மிகக்கெடுதியான
அராஜகமாகும்.கடந்த காலத்தில் இத்தகைய அரசியலுக்குக் கிட்லரின் அரச நடவடிக்கையே
உதாரணமாகக்கொள்ளத் தக்கதாக இருந்தது.இன்று புலிகளே கிட்லரின் அனைத்துவகையான அரசியல்
நடாத்தைகளையும் ஒழுங்குறக் கடைப்பிடிக்கும்
குறுந்தேசியவாதிகளாகவும்,பாசிசவாதிகளாகவும் இருக்கிறார்கள்.இவர்களின் வழி முழு
இலங்கையும் இத்தகைய அரசியல்போக்குக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டுவிட்டது.
மக்களின் வாழ் நிலை என்ன?:இலங்கையில் நம்மை இன்னொருவினம் அடிமை கொண்டு பல தசாப்தமாகிறது.நாமும் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.இந்தக் காரணத்தால் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் வியூகத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான்(ள்).நாமோ நமது மக்களுக்கு எதிராகக் காரியமாற்றியபடி அந்தகைய நொண்டித் தனமான அரசியலைக் கேள்விக்குட்படுத்தும் கருத்துக்களை"துரோகம்"என்று தீர்ப்பு எழுதி இன்னுமொரு நரவேட்டைக்குத் தயாராகிறோம்.மக்களைத் தொடர்ந்து அந்நியமாக்கும்"தமிழீழப் போராட்டம்"சாரம்சத்தில் தவறானவர்களால் தவறான நோக்கத்துக்கமைய நடாத்தப்பட்டு வருகிறது.பேராசை,பதவி வெறி பிடித்த புலிகளின் பினாமிகள் தமது அற்ப வருவாய்க்காகவும்,மேற்காணும் பதவிச் சுகத்துக்காவும் மக்களையும் அவர்களது ஆன்ம விருப்பையும் அடியோடு மறுத்தொதுக்குவது என்றைக்கும் மகத்தான செயலாக இருக்கமுடியாது.இவர்களே இன்று மாற்றுக்கருத்தென்பதையும்,மாற்றுக் கட்சியென்பதையும் புலிகளின் ஏகப் பிரதிநித்துவ அரசியல் வியூகத்தின் அடிப்படையில்"தேசத் துரோகம்"எனும் பாசிசச் சிந்தனைவழி வசவாடி வருகிறார்கள்.

உண்மையில் புலிகளும்,அவர்கள் வழி குறுங்குழுக்களுமாகவுள்ள
தமிழ் ஆயுதக்குழுக்களும் செய்யும் இந்த யுத்தமும்,அதைச் செய்வதற்காக
வேட்டையாடப்படும் சிறார் பிடிப்புமேதாம் "தேசத் துரோகம்"ஆகிறது!இளைஞர்களை ஆயுதத்
தாரிகளாக்கி அவர்களின் வருங்கால வாழ்வையே யுத்தத்தில் கருக்கி,ஒரு தலைமுறையை
அழித்தவர்கள் அடுத்த தலைமுறையையும் அதே அரசியல் தெரிவோடு நடாத்த முனையும் இந்த
அடாவடித்தனமான யுத்தம் மிகக் கெடுதியான அராஜகமாகும்.

இதற்குத் "தியாகம்"எனும் முலாம் பூசும் புலிகளினது பினாமிகள் தமது குழுந்தைகளைப் பத்திராமாகப் படிக்க வைத்து க்கொண்டபடி மேலும் புலிகளினது அராஜகத்துக்குத் தத்துவ விளக்கம் அளிப்பதில் இலங்கையில் ஒரு தலைமுறை காணாது போகப்போகிறது.

இலங்கையில் சிங்கள அரச-கட்சியாதிக்கப் பயங்கரவாதத்தை நிலைப்படுத்திய "ஈழப்போராட்டம்"உண்மையில் இலங்கையின் இனப் பிரச்சனைகளுக்கு மாற்றுத் தீர்வாகவே ஆயுதக் குழுக்களால் முன்வைக்கப்பட்டதாகப் புலிப் பினாமிகளும் இன்றுஞ் சொல்லுகிறார்கள்.இங்கே,மாற்று என்பதைத் தெரிவு செய்தவர்கள் இந்த அடாவாடித்தனமான யுத்தத்துக்கு எதிரான கருத்துக்களை-அறைகூவல்களை "மாற்று"என்பதே கிடையாது-அது "தேசத் துரோகம்" என்றும் பாசிசத் தனமாக எழுதுகிறார்கள்.

புலிகளால் முன் வைக்கப்படும்"தீர்வுகள்" மற்றும் யுத்த நிறுத்தங்கள்,இடைக்கால நிர்வாக ஆலோசனைகள் குறித்த அவர்களது வியாக்கியானங்கள் அனைத்தும் இந்த யுத்த அரசியலுக்கான மாற்று என்கிறார்கள்.ஆனால்,"போரை-யுத்தத்தை நிறுத்து,அதன்வழி அரசியல் பேச்சினூடாகத் தீர்வை எட்டும் வியூகத்தைச் செய்",மக்களின் அடிப்படை வாழ்வை மேம் படுத்தும் முன் நிபந்தகைகளின்வழி யுத்தத்தை நிறுத்தும் கருத்துக்களைத் தேசத் துரோகமென மொழியும் மனதே இன்றைய புலிகளின் அழிவுக்கு முக்கிய காரணியாகவும் இருக்கிறது.


நமது மக்களின் வாழ் நிலை என்ன?இன்றுவரை இலட்சம் மக்களின் உயிர் பறிக்கப்பட்டு வருகிறது.உயிர்வாழ்வுக்கு ஆதாரமான அதிமானுடத்தேவைகள் அனைத்தும் யுத்த யந்திரத்துக்கான தீனீயாகப்பட்டு மக்களின் வாழ்வாதாரங்கள்மீது மிகக்கொடுமையான இயக்க-அரச ஆதிக்கம் நிலைப்படுத்தப்பட்டு யுத்தப் பிரபுகளின் குடும்பச் சுகத்துக்கான எடுபிடிகளாக மக்களின் வாழ்வு நிர்பந்தப்படுத்தப்படுகிறது.இதற்காக இல்லாத தேசங்களை இருப்பதாக உழைக்கும் மக்களுக்குச் சொல்லப்படுகிறது.இதைச் சொல்வதற்கு ஆயுதமே முன்னணிக்கு வருகிறது.இந்த வருகையோடு அப்பாவி மக்களின் தலைகள்"தேசத் துரோகம்"என்ற போர்வையில் நாளாந்தம் உருண்டு வீழ்கிறது!அதையும் நியாப்படுத்த சிங்கள அரசின் அரசியல் வியூகம் மெல்லக் காரியமாற்றுகிறது.இலங்கை மக்களின் வாழ்வு இன்று இந்த அழகில் இருக்கும்போது,இதற்கு எதிரான அம்பலப்படுத்தல்களை"தேசத் துரோகம்"என்று பாசிசிஸ்டுக்கள் சொல்லி மாற்றுக் கருத்தாளர்களை அன்றிலிருந்து இன்றுவரையும் வேட்டையாடுகிறார்கள்.இது மிகப்பெரும் சமூக வியாதியாகித் தமிழ்பேசும் மக்கள் சமூகத்தையே காட்டுமிராண்டிச் சமுதாயமாக மாற்றியுள்ளது.இத்தகைய சமுதாயமானது எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னை உலக விழுமியங்களோடு இணைக்கும் ஜனநாயகப் பண்பை ஏற்பதற்கு முரண்டு பிடித்தே வருகிறது.எளிதில் ஏமாற்றப்படும் ஒரு இனமாக இருக்கும் இந்த அடிமை மனதுக்குத் "தமிழீழத் தேசம்"என்பது கனவாக இருக்கிறது.அது எப்படிச் சாத்தியம்-ஏன் அவசியம் என்பதற்கு அதனிடமிருக்கும் விளக்கம் சிங்களப் பயங்கரவாதத்திடமிருந்து தமிழர்கள் நிம்மதியாக வாழ்வது என்று சொல்கிறது.ஆனால்,அதே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துத் தமிழ் மக்களில் கணிசமானர்வளை வேட்டையாடி வரும் இயக்கப் பயங்கரவாத்தை"தேச நலன்"எனும் வரையறைக்குள் அது ஏற்கிறது.விசித்திரமாக இல்லையா?


இது தவறானபாதை.ஏனெனில்,இதுவரை அழித்தொழிக்கப்பட்ட அப்பாவிப்
போராளிகளினதும் மக்களினதும் சாவுகள் நமக்கு ஆயுதக் குழுக்கள் குறித்தும்,பாசிசச்
செயற்பாடு குறித்தும் உரிய வடிவில் புரிய வைத்திருக்கிறது.இது நல்லதொரு
படிப்பினையாக இருக்கும் இன்றைய ஈழப்போராட்ட வரலாற்றில், போராட்டம் உச்சம் பெற்றுச்
சிங்களத் தரப்பு மேல் நிலை வகிப்பதற்கும்,சிங்களவர்களின் கைகள் உயர்வதற்குமான
சாத்தியத்தைப் புலிகளே செய்து கொடுத்துள்ளார்கள்.

இங்கே, புலிகள் செய்வது(மாற்றுக் கட்சி,கருத்து தேசத் துரோகம் என்பது) தம்மைத் தவிர வேறெந்த மேய்ப்பனும் தமிழர்களுக்கு விசுவாசமாக இல்லையென்பதைக் கருத்தியற்றளத்தில் ஆழவூன்றுவதற்கே.இதனூடாகத் தமது இயக்க நலனைப் பேணுவதற்கும் தம் இயக்கத்தின் பின்னாலுள்ள எஜமானர்களுக்கு விசுவாசமான அடியாளாக இருப்பதற்கும் அது தொடர்ந்து தமிழ்பேசும் மக்களைத் துரோகிகளாக்கிக் கொன்று குவிக்கிறது.இதை வேறொரு வடிவில்(பயங்கரவாதிகள்)இலங்கை அரசு செய்கிறது.சாரம்சத்தில் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை!


உண்மைகளை உரக்கச் சொல்லல்:


விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டு எமது சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள் உலக எஜமானர்கள்.அதாவது, தேசிய விடுதலைப் போரில் பிரவேசித்த அமைப்புகளைத் தோழமையோடு அங்கீகரித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டிய தருணம் முன்னிருக்கும்போது,ஏதோவொரு அரசின் நலனுக்காக அந்தந்த அமைப்புகளை அழித்ததென்பது சகோதர இயக்கப் படுகொலையில் அதி உச்சம் பெற்றுப் புலிகள் ஏகாதிபத்தியங்களின் ஏவல் நாய்தாம் என்று உறுதிப்படுத்தியது.எமது கண்கள் முன்னாலேயே சரிந்த ஏகப்பட்ட மாற்றியக்கப் போராளிகளின் குருதி இன்றுவரையும் இந்தக் கொடூரத்தைப் மறக்காது வைத்திருக்கிறது.ஈழத்தில் பலவாறாக முகிழ்த்த இயக்கங்கள் நடுத்தர வர்க்க இளைஞர்களின் அதீத ஆர்வத்தாலும் ,இலங்கைப் பாசிச வன் கொடுமைச் சிங்கள அரசாலும் முகழ்த்திருப்பினும் அவைகளைக் கையகப்படுத்தித் தனது தேவைக்கேற்ற வடிவத்தில் தகவமைத்த அந்நியச் சக்திகள் இறுதியில் ஒவ்வொருவரையும் மோதவிட்டுத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்குக் குறுக்கே நிற்கின்றன.இங்கே புலிகள் என்பது அந்நியச் சக்திகளால் ஆட்டி வைக்கப்படும் பொம்மைகளாகவும்-பிசாசுகளாகவுமே இன்றுவரை இருக்கிறார்கள்.இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்கிறது என்பதைப் புரியாத இயக்கவாத மாயைக்கு முகம்கொடுப்பது பாரிய உபத்திரமானது.

புலிகளினது அனைத்துக்கொலைகளையும்,அடக்கு முறைகளையும் மக்களின்
விடிவுக்கானதாகவும் தேசத்தின் உரிமைக்கானதாகவும் கதைவிடும் இன்றைய இயக்கவாத மாயை
மக்களைப் பூண்டோடு அழிக்கும் உலக அந்நிய ஆர்வங்களுக்கு இசைவான கருத்தியலை நமக்குள்
விதைத்து எஜமான விசுவாசத்தைக் கடப்பாட்டுணர்வோடு செய்யும்போது அழிவது இன்னுமொரு
தலைமுறையே!கடந்த இரண்டாவது உலகமகாயுத்தத்தில் கிட்டலரின் புனிதம் ஜேர்மனியர்களை மட்டுமல்ல உலகத்தில் பலகோடி மானுடரை அழித்த வரலாறை நாம் மறத்தலாகாது.கிட்லரின் அரசியலுக்குப் பின்னால் நின்ற மூலதனம் இப்போது மிகப்பெரும் வலுவோடு புதிய தெரிவுகளோடு உலகை வேட்டையாடும் இன்றைய அரச வியூகத்துக்குப் புலிகளும் ஒரு அடியாட்படையே.பிள்ளையானோ அல்லது கருணாவோ தம்மை நேரடியாகவே அந்நிய ஏவல்படைகள்தாமென உறுதிப்படுத்தும்போது புலிகளோ தம்மைத் தியாகிகளாகச் சொல்லியபடியே உள்ளே இருந்து நம்மைக் கருவறுக்கிறார்கள்.இங்கே, இலங்கையில் அந்நியச் சேவை செய்யும் குறுங்குழுக்காளக இருக்கும் ஆயுதக் குழுக்களைவிட ஆபத்தானவர்கள் புலிகள் என்பது நிரூபணமானது.

ஏனெனில்,அவர்கள்"துரோகி"சொல்லியே அழித்துவரும் உயிர்களுக்குத்
தேச நலனே காரணமெனக் கருத்தாடித் தத்துவ நியாயம் கற்பித்துக் கொலைகளை இன்டஸ்றீயல்
முறையில் நடாத்தி வருகிறார்கள்!இவர்களே, மாற்று என்பது தேசத் துரோகமென்று சொல்லித்
தமது இயக்கச் சர்வதிகாரத்தைத் தமிழ்பேசும் மக்களின் விடுதலையாகச் செய்து
வருகிறார்கள்.இதனால் முழுமொத்த மக்கள் சமுதாயமே அராஜகத்தின் முன்
மண்டியிட்டு,"புலிகளின் தாகம் தமிழீத்தாயம்"என்று கொலைக்கு உடந்தையாகிக்
கிடக்கிறது.
எங்கள் தேசத்தின் வாழ்சூழல் எந்த வர்க்கத்தால்-எந்தெந்தத் தேசங்களால் பாதிப்புக்குள்ளாகி நாம் கொலையுண்டோம்-கொலையாகிறோம்?இத்தகைய வர்கங்கங்களும் அவர்களது எஜமானர்களும் இலங்கையில் சதா கொலை அரசியலை வளர்த்து வரும்போது கொலைகளைச் சொல்வதாலும்-அவற்றை வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதனாலும் ஒரு பெரும் மாற்றம் வந்துவிடுமா?


மாற்றமென்பது நமது மக்களால்தாம் உருவாகவேண்டும்.என்றபோதும், அங்கே நடந்தேறும் மக்கள் விரோத"தமிழீழப் போராட்டம்"அராஜகத்தை மக்கள்மீது திணிப்பதற்கான நியாயமாக முன்வைக்கப்படும் "தேசத் துரோகம்"எனும் பாசிசச் சர்வதிகார முன்னெடுப்பை நிறுத்துவதற்கான ஒரு உந்துதலை வெளியுலக மக்களின் தோழமையோடு அடைய முடியுமெனும் உண்மையின் உறுதி வழியே நாம் இவற்றை அம்பலப்படுத்தியாக வேண்டும்.இதற்காகவேனும் உண்மைகளை உரக்கச் சொல்லல் வேண்டும்.ப.வி.ஸ்ரீரங்கன்.
01.06.2008