Saturday, January 27, 2007

சரி,அப்ப ஐ.பீ.சீ வானொலி கேட்போம்

தமிழ்.


"தமிழினி மெல்லச் சாகும்"என்றொரு கட்டுரையைத் தொண்ணூறின் ஆரம்பத்தில் அறிஞர் கோப்பாய் சிவம் எழுதினார்.அப்போது இலங்கைச் சூழலில் இது சாத்தியமில்லை என்றே நான் எண்ணியிருந்தேன்.நாமெங்கே ஆங்கிலக் கலப்போடு தமிழ் பேசுகிறோம்!முன்னம் கலந்த வடமொழியோடு தமிழைத் தமிழாகப் பேசுபவர்கள் நாம்.நமக்கு அந்தப் பிரச்சனை எழ முடியாதென்றும்,திரு.கோப்பாய் சிவம் அவர்கள் வரும் முன் காப்புக்காக அப்படிப் பாரதியின் வாக்கியத்தைச் சுட்டுவதாகவே கருதினேன்.இது தவறென்றாகுமா?எனக்குள் குடையும் ஒரு பெரிய கேள்வி இது.


இயலாமையைச் சொல்லுதல்...


நேற்றுத் தமிழ் வானொலி கேட்போமே-நல்ல பாடல்களைக் கேட்டு இரசிப்போமேயென்று வானொலி கேட்பதற்காக உட்கார்ந்தேன்.

சென்னையிலிருந்து ஒலிபரப்பாகும் சூரியன் பண்பலை(அவர்கள் மொழியில்:சூரியன் எப்.எம்.) வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.இதை ஒரு பத்து நிமிடம்கூடக் கேட்க முடியாதவொரு அவஸ்த்தைக்குள் நான்.என்ன நம் தமிழ்நாடு!

அந்த வானொலியில் பாடல்களைத் தொகுத்து வழங்கும் பெண்ணின் தாய் அல்லது தந்தையார் ஆங்கிலேயரோ என்னவோ,அப் பெண்மணிக்குத் தமிழ் வரவில்லை.ஆங்கிலத்தில் தொகுத்துத் தமிழ்ப் பாடல்களை வழங்குகிறார்.அற்பமான பெண்ணா இவள்!தமிழை வெறும் இணைப்புச் சொல்லாகவே பயன்படுத்தினாள்-பாவி!கேட்கவே முடியவில்லை.

உடனே ரீ.பீ.சீ வானொலிக்கு மாற்றியபடி அப் பெண்ணைச் சபித்தேன்."அவங்கள் ஆங்கிலத்தால் கொல்லுறான்கள்,இவங்கள் ஒப்பாரியால் கொல்லுறாங்கள்"என்றார் என் மனைவி.

சரி,அப்ப ஐ.பீ.சீ வானொலி கேட்போம் என்று அலையை மாற்றினேன்."உம் இவங்கள் தலைவர் வாழ்த்துப் பாடுவான்கள்" என்றார் மனைவி.ஆக அவருக்குச் சூரியன் பண்பலையில் ஒலிபரப்பப்படும் பாடல்களைக் கேட்பதில் ஆர்வம்.


எனினும்,ஐ.பீ.சீ.வானொலியின் தமிழ் இனிக்குதே!-ஆங்கிலக் கலப்பு மருந்துக்குமின்றி அவர்கள் செய்யும் ஒலிபரப்பு நமது இலங்கைத் தமிழ் வானொலியை ஞாபகப்படுத்துகிறது.

என்னவொரு கம்பீரமான வானொலி அது.எத்தனை மேதைகளை உருவாக்கிய இலங்கை வானொலி.எண்ணிப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.அந்த மேதைகளிடம் உருவானவரான அத்துல் கமீத்தின் தேன் தமிழ் உச்சரிப்பையும்,ஆங்கிலக் கலப்புமற்ற தமிழைத் தமிழ்நாட்டு வானொலி அறிப்விப்பாளர்கள் கேட்டிருப்பார்கள்.என்றபோதும்...அடிமைச் சேவகத்திலொரு மேன்மை அவர்களுக்கு.



ஐ.பீ.சீ.வானொலி தமிழைப் பயன்படுத்தும் முறையும்,அதை உச்சரிக்கும் நளினமும் மனதில் பால் வார்க்குதே.எப்படியும் மனைவியின் விருப்பத்துக்குக் குறுக்க நிற்காது வானொலி கேட்பதை விட்டுத் தொலைத்தேன்.


இன்று,இராகமாலிகாப் பாடல் நிகழ்ச்சி பார்த்தேன்.அதே தொல்லை.


தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு இவ்வளவு தாழ்வு மனமா!


ஆங்கிலத்தைத் தவிர வாயில் எதுவும் வராதா?அதைக்கூடச் சரியான உச்சரிப்போடு பேச முடியாதவர்கள், தமிழைக் கொச்சைப்படுத்தும் நரித்தனத்தோடு ஜெயா தொலைக்காட்சியில் நிகழ்வு செய்கிறார்கள்.எதையும் பார்க்கவோ,கேட்கவோ முடிவதில்லை.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.சிற்றம்பலத்தாரும் திரு.பற்றிமாகரனும் தமிழரின் மரபுவழித் தாயகம் குறித்து, ஐ.பீ.சீ.வானொலியில் உரையாடினார்கள்.அந்த உரையாடலில் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகள் குறித்து எந்தக் கவனமுமின்றித் தேசிய இனச் சிக்கல்-அடக்குமுறைகள் பேசப்பட்டன.இவற்றில் உடன்பாடில்லாதிருந்தபோதும்,அந்த உரையாடலை மிகவும் விருப்பத்தோடு செவிமடுத்தேன்.

என்ன காரணமாக இருக்கும்?

நான் அமைதியாக யோசித்தபோது,எனக்கு அவ்விரு அறிஞர்களின் தமிழ் பிடித்துப் போய்விட்டது.ஒரு ஆங்கில வார்த்தைக் கலப்புமின்றிச் சரளமாகத் தமிழ் பேசும் நம் கல்வியாளர்களை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது!அவர்கள் அரசியல் விஞ்ஞானத்தின் மிக உயர்ந்த கலைச் சொற்களைக்கூடத் தமிழில் உள்வாங்கிக் கருத்தாடும்போது மனதுக்குள் ஒரு நம்பிக்கை மிளிர்கிறது.நாம் பேசும் மொழி ஓரளவாவது இலங்கைத் தமிழரால் பாதுகாக்கப்படுமென்று மனதில் எண்ணினேன்.எனக்குத் தமிழைக் கொல்வதும்,மனிதரைக் கொல்வதும் ஒருமாதிரியானவொரு உணர்வாக இருக்கிறது.மொழி குறித்து ஆழ்ந்த புரிதலின்றித் தமிழ் நாட்டு மனிதர்கள் வாழ்கிறார்களே என்ற உணர்வு ஒரு புறமும் கூடவே நெஞ்சை வாட்ட,இந்தத் தமிங்கில மனிதர்கள் எந்த வர்க்கத்தவர்கள்-அவர்களுக்கும் நமது மரபு சார்ந்த மதிப்பீடுகளுக்கும் என்ன சம்பந்தம் என்றும் ஒரு மெத்தனம்.


இது இப்படியிருக்கட்டும்.

இங்கே நான் வாழும் ஜேர்மன் நாட்டின் இன்றைய தினசரி என்ன சொல்கிறது?


"Sprache: Deutsch im Schlussverkauf"
Der Kampf gegen das Denglisch

(தமிழில் சொன்னால் அவர்கள் நாம் சொல்லும் தமிங்கிலீசை"டென்ங்கிலீஸ்"என்கிறார்கள்.கூடவே இப்படிச் சொல்கிறார்கள்:"டென்ங்லீசுவை எதிர்த்துப் போர்"என்று பிரகடனப் படுத்துகிறார்கள்.செயலில் இறங்குகிறார்கள்.நாம்?அமெரிக்கர்களுக்குக் குண்...தொடைக்கிறோம்.)

Fremd- und Lehnwörter sind Teil einer jeden Sprache. Doch die Dominanz des Englischen geht den meisten Deutschen zu weit. Sie verstehen es nicht.


Düsseldorf. „There’s no better way to fly" heißt der Werbespruch (Die Werber selbst würden wohl sagen: Slogan) der Lufthansa. Und die ist ja bekanntlich noch ein deutsches Unternehmen. Warum heißt es dann nicht: „Keiner fliegt Sie besser"? Zugegeben: Es klänge nicht so bonusmeilenmäßig weltoffen. Aber jeder würde es verstehen.
Die Sprachfreunde der Aktion „Lebendiges Deutsch" regt diese Anglomanie auf: „Dass 60 Prozent der Deutschen gar nicht Englisch können, muss die Lufthansa nicht beunruhigen: Unter ihren Passagieren sind es vielleicht nur 30 Prozent. Und warum soll man zu allen Passagieren nett sein!", heißt es ironisch in einem – wie heißt gleich das deutsche Wort dafür ? – Handout, das die Aktion gerade deutschen Redaktionen zugeschickt hat und das nun auch in unserem Newsroom (!) liegt.


ஜேர்மன் உலகினிலேயே மிகப் பெரும் தொழில்வள நாடு.உலகத்தில் ஏற்றுமதியில் முன்னின்று மிகப் பெரும் அந்நியச் செலவாணியைக் கையில் வைத்திருக்கும் முதலிட நாடு.இந்த நாட்டின் டொச் மொழியை சுமார் நூறு மில்லியன்கள் மக்கள் பேசுகிறார்கள்.இவ்வளவு பெருந்தொகையான ஒரே இனம் ஐரோப்பாவில் மிகக் குறைவு.இந்த நாட்டுக்கே வந்தது வினை.ஆங்கிலத்தை சமீப காலமாக-அதாவது ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன் வெகுஜன ஊடகங்களில் நுழைய விட்டதன் விளைவு, பல மோசமான நிலை உருவாகியதை இப்போதிவர்கள் உணர்கிறார்கள்.


என்ன சொல்கிறார்கள்?

டொச் மொழி தள்ளுபடி விலையில் விற்பனையாகிறதென்கிறர்கள்.


அந்நிய மொழி வார்த்தைகள் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு அங்கம்தாம்-பகுதிதாம்.எனினும் ஆங்கில மொழியின் ஆதிக்கம் டொச் மொழியை அழித்துவிடுமென்று அஞ்சுகிறார்கள்.


எனவே போராட வெளிக்கிடுகிறார்கள்.அதில் அவர்கள் வெற்றியும் பெற வழி சொல்கிறார்கள்.


தங்கள் விமானச் சேவை நிறுவனத்தைச் சாடி அதன் ஆங்கில விளம்பரச் சுலோகத்தை"„There’s no better way to fly" டொச்சில் மொழியாக்கம் செய்யச் சொல்கிறார்கள்.அதை அவர்கள் செய்தே ஆகவேண்டும்-செய்வார்கள்.


நாம் என்ன செய்கிறோம்.

தமிழ்நாட்டை நினைக்க வெறுப்பாய் வருகிறது.


எனக்குக் கவிஞர் காசி ஆனந்தனைப் பிடிக்காது.ஆனால் இந்த இடத்தில் அவர்தாம் என் முன்னே வருகிறார்.அவரது பாடலான"தமிழா நீ பேசுவது தமிழா"பாடல் செவியில்பட்டுச் செல்கிறது.


புதிய வார்த்தைகள் பலவற்றைக் கொண்டது டொச்மொழி.


இது ஆங்கிலம் அளவுக்கு வளர்ந்த மொழி.


அதைவிடவும் மிக ஆழ்ந்த அர்த்தமுடைய,மிக வளர்ச்சியடைந்த டொச்மொழியில் இப்போது சுமார் ஆறு இலட்சம் வார்த்தைகளுண்டு(ஆங்கிலம் கிட்டத்தட்ட ஏழு இலட்சம் வருமா?).

ஒரு மொழி வளர்வது பொருளாதார வளர்ச்சியுடனேயேதாம்.
எனினும், உலகினிலே பொருளாதாரப் பலமுடைய முதலாம் தரத்தில் இருக்கும் ஜேர்மனிக்கே இந்தக் கதியென்றால் நமது மொழியை நினைக்கக் கவலையாய் இருக்கு.

ஜேர்மனி எந்தப் புதிய அந்நிய வார்த்தைகளையும் உடனடியாகத் தமது மொழியில் (டொச்சில்) புதிய கலைச் சொற்களைச் செய்து, உபயோகிக்க முனைகிறது.


இதோ சில உதாரணம்:


Hier weitere Beispiele:
event – Hingeher
flatrate – Pauschale
blackout – Aussetzer
call center – Rufdienst
countdown – Startuhr
display – Sichtfeld
fast food – Schnellkost
homepage – Startseite
laptop – Klapprechner
no-go-area – Meidezone
public viewing – Schau-Arena
stalker – Nachsteller
website – Netzauftritt
workshop – Arbeitstreff
benchmark – Messlatte
e-commerce – Netzhandel
junkbonds – Schrottanleihen
online/offline – im/vom Netz
pole position – Startplatz 1



நாம் என்ன செய்யப் போகிறோம்?



நமது மொழிக்குச் சமாதிகட்டும் தமிழ்நாட்டு அனைத்து ஊடகங்களையும் கேட்காமல் விட்டுவிடலாம்.எனினும், தமிழ் நாட்டில் தமிழ் செத்தால் உலகத்தில் தமிழ் செத்துவிடுவது மிகச் சுலபம்.



என்ன செய்லாம் இந்தத் தமிழ் நாட்டை?



தமிழர்களுக்கே விரோதமானவொரு தமிழ்நாடு!



கேட்கவே ஆச்சரியமாக இல்லை?

Thursday, January 25, 2007

இறுதிக் காவலர்.

னது தூக்கம் எவ்வளவு கருமையானது
கரங்களின் மீது குசாலாகக் குடியிருக்கும்
பாரத்தைப் போலவே,
நீ அவர்களை விட எங்கோ தூரத்தில்
என் குரலை நீ கேட்கமாட்டாய்?

புள்ளியான வெளிச்சத்தின் கீழே
நீ துக்கத்தோடு வயதாகிவிட்டாய்,
உனது சொண்டுகள் விகராமாக
நித்தியத்தின் நெடுந்தொலைவை முத்தமிட...

நாளை என்பது இங்கே மௌனமாகலாம்
கூடவே காற்றுந்தாம்,
எனினும்
மனித நாற்றமும்
இயற்கையின் கோரமும்
அடங்கப் போவதில்லை.

இரவென்பது வெறுமையாகிறது
விடியலைத் தொலைத்து,
வருசா வருசம்!


இது முன்னரங்கக் காவல் அரண்,
நீ முழுமையாகக் கனவுகாணத் தவறிய பொழுதொன்றில்
உனது மூச்சு மிக அமைதியாக
மெலிய சத்தமாய் அமிழ்ந்து போகும்.

தெருவோரத்துக் குடிசைகளின்
மெல்லிய சல சலப்பில்
உனது பெயரும் அறுந்துதிரும்
நீ அவர்களுக்கு நெருக்கமானவ(ள்)ன்.


காலத்தைக் கொடிய ஜந்திரமொன்று
துண்டு துண்டாய்க் கத்தரித்தது,
நெடுக்கும் குறுக்குமான அளவுகள்
சொல்லி வைத்தபடி
90,
180,
360 பாகைகளில்,
அது எப்போதாவது தேசங்களாக இருக்கும்போது.


இந்த நோக்கத்துள்
தூக்கம் தொலைத்த
உனது முகமும்
அழகிய சிறு விழிகளும் ஜொலிக்கின்றன!


இப்போது உனது தோலின் குளிர்ச்சியுள்
பெருமித எச்சமொன்று
அம்மாவாய்
முலையுதிர்த்த வெண்மைக் குருதியாய்
உறைந்து போகும்.


நாங்கள் உன் வேதனையை இரட்டிப்பாக்கி
உன்னால் உணரப்பட்ட
அனைத்து நித்தியங்களையும் திருடிக் கொண்டோம்,
சுவரில் தொங்கும் சிலந்தி வலையாக
உன்னில் படர்ந்த எமது கனவுகள்
உன்
இதயத்தை இரையாக்கியது.

எமது பயம்
உன்னைத் துப்பாக்கியோடு கட்டிப் போட்டது,
உனக்கு நீ மிகத் தூரமான பொழுதொன்றில்
என் குரல் கேட்பதற்காய்
நான் குரைக்கும் பாழ் காலம்
கட்டுக்கடங்காத
கட்டாக்காலி எருமையாக
உனது உடலில் இடறிப் புரண்டது.

நீ,
எனது கபாலத்துள் இறுதிக் காவலர்.


ப.வி.ஸ்ரீரங்கன்
25.01.2007







Friday, January 19, 2007

சிறு உரையாடல்

குழந்தைகளின் உலகம் மிகப் பெரியது.அந்தவுலகத்தை நாம் அநுபவித்து வளர்ந்தபின் மறந்து விடுகிறோம்.அற்புதமான அந்த உலகத்தை அப்பா,அம்மா என்ற உரிமையில் தகர்த்தும் விடுகிறோம்.குழந்தைகளை நமக்குச் சமமான மனிதர்களாக நம்மால் புரிந்து கொள்ளப்படுவது மிகக் குறைவாகும்.இந்தப் பருவத்தில் எத்தனை வண்ணமயமான எண்ணங்கள் ப+த்துக் குலுங்கும்!


காகத்தையும்,குயிலையும் கண்டு பாட்டுக்கற்கும் குழந்தை,மலர்களையும் பச்சைப் புற்களையும் கண்டு துள்ளிக் குதிக்கும் மழலை.நம்மை அண்டி நமக்குள் வாழும் அது நம்முடமையல்ல.அதுகள் முற்றிலும் வேறானவர்கள்.அவர்களை உரித்துக் கொண்டாடி, உருமாற்றாமல் நம்மில் எத்தனை பெற்றோர்கள் அவர்களைச் சிறப்புற நடாத்துகிறோம்?

படி,படி என்ற ஒரே கழுத்தறுப்பில், அவர்கள் தமது குழந்தைத் தனத்தையே இழந்து வருகிறார்கள்.

இந்தவுலகத்தின் உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கின் தேவைக்கேற்பக் குழந்தைகளை இப்போதே வாட்டியெடுக்கும் கல்விக் கூடங்கள்,அந்தக் குழந்தைகளின் பிஞ்சுக் கனவுகளை அழித்தே விடுகின்றன.

அந்தக் குஞ்சுகளின் அற்புதமான உணர்வுகளை இந்த ஆக்கம் பேசுகிறது.தந்தையும் மகளும் சக தோழர்களாக உரையாடுவது நம் தமிழ்ச் சூழலுக்கு அந்நியமானது.


நத்தார் பண்டிகைக்காகச் சோடிக்கப்பட்ட அறையினுள் சிறு உரையாடல்


ஏர்ணஸ் கைமேறான்;(Ernst HEIMERAN)

(இரண்டாவது கொண்டாட்ட தினம்(நத்தாருக்கு அடுத்த நாள்.ஜேர்மனியில் நத்தார் பண்டிகை இருதினங்கள் விடுப்புவிட்டுக் கொண்டாடப்படுவது).நேலயின் வியாபாரக் கடையுள் காணுமிடமெல்லாம் அன்பைக் குறிக்கும் "பிஸ்கட்கழுத்தணி" தொங்கியபடி (கழுத்தில் தொங்கப்போட்டுக்கொள்ளும்) இருக்கிறது.)

நேல: (உரத்துப் பாடுகிறாள்)

ஓ... நீ மகிழ்ச்சிகரமான,ஓ...நீ ஆசீர்வதிக்கத்தக்க,"கினாப்பன் பிறிங்கென்ட்"(இளம் பையனைக் கூட்டிவரும்) நத்தார் தினமே,(பாட்டு இடை நிறுத்தப்பட்டு):என்ன சிரித்துக் கொண்டு பார்க்கிறாய்?,இது சிரிக்கத் தக்க பாட்டில்லை.இதுவொரு புனிதமான நத்தார்ப்பாட்டு!"

தந்தை: நீ மட்டும் தொடர்ந்து பாடேன் பார்ப்போம்.அது ரொம்ப இரம்மியமானது,அழகானது.

நேல: இல்லை.நீ என்னைப் பார்த்துச் சிரிதாய் அப்பா.

தந்தை: நான் உன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை.அதற்காக மட்டும் நான் சிரித்தேன்.நீ பாடிய பாட்டுக்காச் சிரித்தேன்."கினாப்பன் பிறிங்கென்ட"நத்தார் தினமே என்பதற்காகச் சிரித்தேன்.அதன் பெயரைச் சரியாகச் சொன்னால் "கினாடன் பிறிங்கென்ட(மகிழ்ச்சியைக் காவி வரும் நத்தார் தினமே."கினாப்பன் பிறிங்கென்ட"-இளம் பையனைக் கூட்டிவரும் நத்தார் தினமெனும் அர்த்தமாகிறது.).

நேல: நான் "கினாப்பன் பிறிங்கென்ட" வார்த்தையை அழகாக உணர்கிறேன்.அப்பா நீ எனக்கு ஏதாவது கொண்டு வந்தியா?

தந்தை: நான் வெளியில் எங்கேயும் போகவில்லை.தனியே ஒரு மணி நேரம் காட்டுக்குள் உலாவிவிட்டு வந்தேன்.

நேல:நீ அங்கொன்றும் எனக்காகக் காணவில்லை,ஒன்றுமில்லை?(தண்டனை தரும் பார்வையோடு) மனிதர்கள் தேடும் போதெல்லாம் ஏதாவது கண்டெடுப்பார்கள்.இது நெடுக,நான் இப்படி ஏதாவது நெடுகக் கண்டெடுப்பேன்-வீட்டுக்குள்ளும் தாம்.எனக்கு விருப்பமிருந்தால் மறைந்திருப்பனவற்றைப் பார்ப்பேன்,அவ்விடத்தில் எதையாவது காண்பேன்.அது சரி,இன்றைக்கு மத்தியானம் என்ன சாப்பாடென்றாவது உனக்குத் தெரியுமா?

தந்தை:இல்லை.ஆனால்,வெளிப்படையாகச் சொன்னால் கொஞ்சம் நல்ல சாப்பாடு.ஏனென்றால் நீ இதே மகிழ்ச்சியோடு இருக்கவேண்டுமென்று.


நேல:சிங்கன்!(பண்டியிறைச்சியில் செய்த உணவு.)இதனால்தாம் நானும் சிரித்தபடி பார்த்தேன்.இதுவும் விளையாட்டுக்குத்தாம்.வீணை வாசிப்பால் எனது கைகள் நிறைய விற்றமீன்களைக் கொண்டிருக்கின்றன,முதலில் கட்டாயம் நான் கைகளைக் கழுவி விடவேண்டும்.

தந்தை: வீணை வாசிக்கின்றாய்? இது எப்போதிருந்து நீ வாசிக்கின்றாய்?

நேல: சற்று முன்தாம்."குழந்தைகளே வாருங்கள்"எனும் பாட்டிலிருந்து ஆரம்ப இராகத்தை எடுத்தேன்.என்னால் இதை மிக இலகுவாகச் செய்யக் கூடியதாக இருந்தது.பின்பு,தேன் பூசிய பாணோடு(ரொட்டி)மல்லக்கட்ட அது வீணைமீது விழுந்து... கைகளிலெல்லாம் அப்பி விட்டது.இப்போது அது ஒட்டிக்கொள்கிறது.

தந்தை:நீ சரியானவொரு செல்லம்(செல்லப் பண்டிக் குட்டி).கிறிஸ்ரியானி(தாய்) தேவாலயத்திலிருந்து வீட்டுக்கு வந்து, வீணையில் பயிற்சியெடுக்க முனைந்தால் அவளுக்கும் ஒட்டும்படியாக உன்னால் நேரிடப்போகிறது.


நேல: இப்போது எத்தனை மணி? எங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது,அதைத் துடைத்துக் கழுவி விடுவதற்கு.நாங்கள் இருவருமே அதைச் செய்வோம்.அப்பா,நீ செத்த பின்பு உனது மணிக்கூட்டை எனக்கு முதிசமாகத் தருவாயா?

தந்தை:சிலவேளை செய்வேன்.அது சரி நான் மிக விரைவாகி(விரைவாக இறுந்து போதல்) விட வேண்டுமா?

நேல: ஐயோ அப்பா!இல்லை.எனக்கு நீதான் வேணும்.நீ வாழ வேண்டும்,நான் சாகும் வரை நீ வாழ வேண்டும்.அம்மாவும் அப்படியே.அத்தோடு எல்லோரும்,எல்லோரும்,எல்லோரும் வாழ வேண்டும்!(உணாச்சிப் பெருக்கோடு சக்தி பெருகத்தக்க இறுகிய கட்டியணைப்பு).



பிற்குறிப்பு:
ஏர்ன்ஸ் கைமேறான்(Ernst HEIMERAN) பிறப்பு 1902,இறப்பு 1955.வால் முன்ஸ்னர் எனும் ஜேர்மனியச் சிற்று}ரில்(அன்று) பிறந்து வளர்ந்த இவர் பதிப்பக நிறுவனரும் எழுத்தாளருமாவார்.குழந்தைகளின் அகவுலகை மிக இலாவகமாகப் படம் பிடிப்பதில் மிக ஆர்வமாக எழுதியிருக்கிறார்.இதற்கு இச் சிறு உரையாடலே சாட்சி.இது Sonntagsgespraeche mit Nele எனும் அவரது தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டு, என்னால் தமிழாக்கம் செய்ப்பட்டது.-
ப.வி.ஸ்ரீரங்கன்.

-------------------------------------------------------------------------
மூலம்:

Gespraech im Weihnachtszimmer




Von ERNST HEIMERAN




Zweiter Feiertag. Ueberall tritt man auf Liebesperlen aus Neles Kaufladen.


Nele: (laut singend)

O du froehliche, o du selige knaben bringende Weihnachtszeit (abbrechend):Warum schaust du denn so laecherbar? Das ist kein Lachlied , das ist einWeihnachtslied!



Vater:
Sing nur weiter. Es war sehr schoen.

Nele:

Nein, du hast mich ausgelacht, Dati.

Vater:

Ich hab dich nicht ausgelacht, ich hab nur darueber gelacht, daß du gesungen hast k n a b e n bringende Weihnachtszeit. Es heißt naemlich gnadenbringende.


Nele: Ich finde knabenbringende schoener. Hast du mir etwas mitgebracht, Dati?


Vater:

Ich war doch gar nicht fort, ich war doch nur eine Stunde im Waldspazieren.


Nele:


Und da hast du gar nichts fuer mich gfunden, gar nichts? (Strafend):Wenn man sucht, findet man immer etwas, Dati, immer! Ich immer!Auch daheim, wenn ich Lust habe. Da schau ich in alle Verstecke, findich schon was. - Weißt du, was es heute mittag zu essen gibt?
Vater:
Nein.Aber offenbar etwas sehr Gutes,weil du dich so freust.
Nele:
Schinken!Drum hab ich so gelaechelt geschaut.Und spielgetti. Ich muss mir aber erst die Haende waschen.Sie sind noch voller Vitamine vom Klavierspilen.
Vater:

Vom Klavierspielen? Und seit wann spielst du denn Klavier?


Nele:


Seit vorhin. Den ersten Ton von "Ihr Kinderlein kommet" Kann ich schoen.Aber dann ist mir das Honigbrot auf die Tasten gefallen,und jetzt klebt's so.

Du bist schon ein rechtes Ferkel. Wenn jetzt die Christiane von der Kirche heimkommt und ueben will, dann wird sie dir eine kleben.


Nele:


Wieviel Uhr ist es denn:? Da haben wir noch genuegend Zeit mir dem Putzen Dati, wir zwei. Erb ich deine Uhr, wenn du einmal tot bist?


Vater:

Vielleicht. Soll ich mich beeillen?

Nele:


Nein, ich moecht, daß du lebst, bis ich tot bin. Und die Mami auch. Und alle, alle, alle! (Stürmische, vitaminreiche Umarmung)




Titel: Sonntagsgespräche mit Nele / Ernst Heimeran. Hrsg. von Margrit HeimeranVerfasser: Heimeran, Ernst Ausgabe: Ungekürzte Ausg. Verleger: München : Dt. Taschenbuch-Verl. Erscheinungsjahr: 1991 Umfang/Format: 124 S. ; 19 cm Gesamttitel: dtv ; 25055 : dtv-Grossdruck Anmerkungen: Lizenz des Hanser-Verl., München, Wien ISBN: 3-423-25055-6 (falsche ISBN)Einband/Preis: kart. : DM 9.80 Sachgruppe: 59 Belletristik




Wednesday, January 17, 2007

வென்றது அவர்கள்தானே?

வென்றது அவர்கள்தானே?


"ரோம் எரியும்போது நேரோ(Nero)மன்னன் பிடில் வாசித்தானாம்"என்று மனிதவுணர்வின் வக்கிரத்தைக் குறித்துச் சொல்வதற்குத் தமிழ்ச் சூழலில் சொல்வார்கள்!அப்போதெல்லாம் அவன் ஏன்-எதற்காக மகிழ்ந்து, இசைத்தான் என்பதற்கான காரணம் அறிய விருப்பு இருக்கவில்லை.அதையும் நமது தமிழ்ச் சூழல் சொல்லவுமில்லை.


இப்போது நேரோ மன்னன் மகிழும் அந்தத் தரணம் இலங்கையில் உருவாகி வருகிறது.



ரோமானியச் சாம்ராஜ்சியத்தில் ஏற்பட்ட தேக்கம்,பொருள் வளர்ச்சிக்குரிய சூழல் ஸ்த்தம்பித்திருந்தபோது, கட்டுமானத் துறையில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி நேரோ மன்னனுக்குத் தலை வலியாகியது.அவனது பரிவாரங்கள்,பல் துறை விற்பனர்கள்,பொருளாதார மேதைகள் அவனுக்கு அறிவுறுத்தியது "அந்த நேரத்தில் தப்பிப் பிழைக்க முயிற்சித்த" கட்டுமானத்துறையின் நலனுக்கானதாக இருந்தது.

ரோமை எரி.

எரிப்பதன் பலனாகக் கட்டமானத் துறை மீளவும் வீரியத்துடன் வெற்றியீட்டிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறும் என்றார்கள்.

நெருப்பிட்டான் நேரோ.

எரிந்தது ரோமபுரி.

பிடிலெடுத்து வாசித்தான் நேரோ,மகிழ்ந்தான்:கூத்தாடினான்.

சிறப்பாக ஆதாயமடைந்தார்கள் கட்டுமானத்துறை முதலாளிகள்.மற்றும் ஆளும் பெருமான்கள்!-அப்பாடா நல்ல சந்தோசம்.


இது வரலாறு.

இன்று இலங்கை?


வாகரையில் மக்கள் யுத்தத்தில் சாக,கிழக்கு மாகணம் எங்கும் யுத்தம் விரியப் புலிகள்"தந்துரோபாயப் பின் வாங்கலாக"ஓடித்தப்ப உலகத்துக்குச் சில செய்திகள் கஞ்சிகுடிச்சாறு பற்றிக் கசிகிறது.மனிதவிரோதமான முறையில் நடந்துகொண்ட காலடிகள் தென்படுகின்றன.

ஐயோ மக்கள்...


யாழ்ப்பாணம்: உணவுக்காக ஏங்கிக் கிடக்க,பொருள்களின் விலைகள் ஐரோப்பியச் செலவுப் புள்ளியில் விற்கப்படுகின்றன.வருமானம் பூச்சியம்.வாழ்பவர்கள் தமது உறவுகள் புலம் பெயர்ந்திருக்கும்போது,அவர்களை வதைக்கிறார்கள்-வெருட்டுகிறார்கள்:


"மருந்து குடித்துச் சாவோம் பணம் உண்டியலில் அனுப்பு!-வெஸ்ரன் யூனியன் வங்கிமூலமாக உடனே அனுப்பு."


அனுப்பிய அரை மணிக்குள் காசு கையில்!


கடை விரித்தவர்கள் வாயில் தோசை,புலம் பெயர்ந்தவர்களின் தோளில் சுமை!வங்கியில் கடன்- பெரும் சுமை.வீட்டு வாடகை கட்ட முடியாதென்று கடிதம் வீட்டுக்கு வருகிறது.யுத்தத்தின் சுமை எங்கே முட்டி மோதுகிறது?


யுத்தம்-பொருளாதாரத்தடை!


மில்லியன்கள் டொலருக்குக் கப்பல் வேண்டும் எம்.பி. மகேஸ்வரன்.

யாழ்ப்பாணத்துக்குப் பொருள் அனுப்பி மக்களுக்குச் சேவை செய்வதும் நோக்காம்.
//He said that this was his second ship and the first ship ‘Jans Clipper MV’ is already chartered by the Sri Lanka Government to ferry goods and food items to the restive Jaffna Peninsula. He told that already there are more than eight cargo ships belonging to Sinhalese owners are under the charter of the Sri Lanka Government for transporting food and other items to Jaffna.//

புல்லாரிக்கிறது.

ஒரு கப்பல் காவிச் செல்லும் பொருள்களை விற்றால் ஆறு கோடி ஆதாயமாம்!

ஆருடைய பணம்?

மேற்குலகில் கோப்பை கழுவும் தமிழனின் பணம்.தன்னைக் கடனாளியாக்கித் தமது உறவின் உயிரைப் பிடித்து வைப்பவ(ள்)ன் புலம் பெயர்ந்த தமிழன்.

...ம்...

போகட்டும்!

யுத்தம்,பசி,நோய் நொடி!


கப்பல்,
கொள்முதல்,
சந்தை,
பேரம்,
ஆயுதத் தரகு,
கோடிகளுக்குள் புரளும் அரசியல் தலைவர்கள்:
மகிழ்ச்சி,
மப்பு,குடி,கும்மாளம்!


பாதைகள் திறக்கமாட்டோம்,-புலிகள் வரிமூலம் வருமானம் பெறும் வழி அது!

கப்பல்மூலம் உணவு போவது ஆமிக்கு,அது தேசத் துரோகம் நாம் தடுப்போம்,அழிப்போம்.

எல்லாம் நடக்கலாம்.

என்றாலும் யாழ்ப்பாணம் பொன் முட்டையிடும் வாத்து இப்போது!


இந்த அரசியலில் இழந்தவர்கள் புலம் பெயர் தமிழர்கள்தாம்!ஊரை,வாழ்வை,நிம்மதியை,பொருளை!

இறுதியாகச் சுமக்கும் கடன்பளு எப்போது உயிரைப் பறிக்கும்?இதுதாம் புலம் பெயர்ந்த தமிழன் கேள்வி!

சொல்லமுடியாது!

யுத்தம் எதற்கு?

நாலு பணம் சம்பாதிப்பார்கள் தலைவர்கள்,தளபதிகள்,முதலாளிகள்.

பொருளாதாரத் தடை:பொருள் தேடுவதற்கு நல்லவொரு வழி!தொடரட்டும்.


யுத்தத்துக்குக் காரணங்கள் பல.அவை மக்களைச் சொல்லி மாமனிதர்கள் மனம் மகிழ்ந்து பொருள் சுமக்க,-பதவிச் சுகம் காண... சொல்லித் தெரிவதில்லை இவைகள்.


நேரோ மன்னன் பிடில்...

போதும்!

எல்லாம் பொன்னான பொருள்-ஆதாரத்தின் அரிச்சுவடி புரிந்தால் பொய்மை பிடரியைத் தட்டும்.

பேதமையான மனது சொல்கிறது: "எல்லாம் எங்கட தலைவர் வெல்வார்! "

வென்றது அவர்கள்தானே?

இராஜ பக்ஷ மட்டுமல்ல எல்லாத் தரப்பும் வென்றே வருகிறது.-மக்களைத் தவிர!

ப.வி.ஸ்ரீரங்கன்
17.01.2006

Monday, January 15, 2007

மலையகப் பரிசுக் கதைகள்


மலையகப் பரிசுக் கதைகள்.


"மலையகச் சிறுகதைத் தொகுப்புள்"வாழ்வு"-ஒரு தேடல்"


மலையகச் சிறுகதைத் தொகுப்பை விரித்து அணிந்துரைகளைக் கண்ணுற்றவேளை, திரு.தெளிவத்தை ஜோசெப்பின் விளக்கங்களோடு,திரு.விக்கிரமசிங்காவின் கூற்றுக்களையும் துணைக்கழைத்து-

"மலையக வாழ்வுக்குள் என்னைத் தொலைக்கிறேன்".

முதலில் "விரக்தி" சிறுகதையை என் வசமாக்கிறேன்...சமீபகாலமாகப் புலம் பெயர்ந்து வாழும் எனக்குள் வெறுமையும்,வெறுப்பும்,விரக்தியும் நெஞ்சுள் நிறைந்து உணர்வுகளைக் கேலிக்குள்ளாக்க நான் விரக்தி சிறுகதையை என்னுள் செலுத்தினேன்.

ஒரு தடவை...

இரு தடவைகள்...

மூன்று...நான்கு...

தடவைகள் பலவாகின.எனினும் அடுத்த சிறுகதைகளுக்குள் கவனதைச் செலுத்த முடியவில்லை.விரக்திக்குள்ளேயே வாழ முற்படுவது மிக இயல்பாகிறது!

முயன்று,முயன்று தோற்றேன்!

விரக்திக்குள் மீண்டும்,மீண்டும்...

"தாயோடு அறுசுவை மட்டுமா போகும்?"


தாய் ஒரு வார்த்தை,ஒரு வாழ்வு.பெற்றவள்,
பிறந்து வளர்ந்த மண்:தாய்!


இவளை விட்டு...நெடுந்தூரம் வந்தாச்சு.ஓடோடி வந்து,வந்த பாதைகளின் பின்னே மூச்சிறைக்கத் தடங்களை உற்று நோக்கிறேன்,அவைகள் அழிந்து,மறைந்து விட்டன.இவ்வளவு விரைவில் இது சாத்தியமாகுமா?,கேள்வியோடு தலை குனிவு-தவிப்பு!


வந்தமர்ந்த இடத்தின் தற்காலிக நிறைவுகள்,என்னைப் பெருமளவு மாற்றித்தான் விட்டன.இப்போதும் தாய் ஒரு வாழ்வு!


"மருமகளின் அன்பளிப்புகளால் உடல் பூரித்தது.தான் சமைத்தவற்றை மூத்த மகனும்,பேரனும் உண்டதால் பெற்ற வயிறு குளு குளுத்தது.இரு (இ)லயத்தார்களும் வந்து முறைவைத்துக் கதைத்துச் சென்றதால் மனம் பெருமிதப்பட்டது.நள்ளிரவு நெருங்குமுன் முச்சந்தி மண் களவெடுத்து வந்து திட்டி சுற்றிப் போட்டதால் கலக்கமும் அறுந்தது."


அம்மா:பெற்றவள்.


மனதில் உணர்வுகள் வெள்ளமாய்ப் பிரவாகமெடுக்கக் காட்சித் திரைகளாய் சம்பவங்கள் நேரெதிரே தோன்றுகிறது!


அம்மா கல்லைக் கொடுத்தாலும்,புல்லைக் கொடுத்தாலும் அவைகண்டு மகிழ்பவள்.


என் அம்மா,உங்கள் அம்மாக்கள்,அசூமத்தின் அம்மா,இப்படிப் பல அம்மாக்கள்.அம்மா ஒரு பொதுவுணர்வு,எல்லா அம்மாக்களும் ஒரு அம்மாவேதாம்!


அம்மாவின் சந்தோசம்,எங்கள் சந்தோசம்:தேசத்தின் சந்தோசம்!அசூமத்துக்கு ஒன்பதாண்டுகளுக்குப்பின்"அம்மா"வைப் பார்க்க முடிந்தது.இன்றெமக்குப் பல பத்தாண்டுகள் சென்றாலும் அம்மாவைப் பார்க்க முடியுமா?-அந்தப் பாக்கியம் கிடைக்குமா?-எல்லாம் "அவன்" செயல்!,இன்ஷா அல்லா!!


இக் கேள்விகளும்,என் தாயாரின் நிழலுருவமும் சதா என் விழிகள்முன்...


தொடர்ந்து தொடர்ந்து முயன்றேன்,அடுத்த சிறுகதைகளை வாசித்து விடுவோமென,எட்டித்தாவ முயன்றால் அசூமத்தும்,அவரது மோட்டார் சயிக்கிளும்,மகனும் கண்ணெதிரே வருகிறார்கள்.


உணர்ச்சி பொங்குகிறது,ஏற்றமாகிறது.ஒரு கொதி நிலையில் மனம் கொதிக்கிறது,ஒரு தவிப்பு.மீண்டும் மீண்டும் எதையோ இழந்த தவிப்பு.உள்ளத்தை இழந்து,கடந்த கால வாழ்வின் மிச்சசொச்ச உணர்வுகளைச் சுமந்து,நினைவு முச்சிறைக்க ஓடோடி வந்து தொலைக்கிறது.


பனங்கூடல்.


கங்கு மட்டைகள்,பனையடியில் கிடக்கும் மூரிகள்,சூப்பிய பனங்கொட்டைகள்,ஆடுகள்,மாடுகள்... அம்மா அடுப்படிக்குள் உட்கார்ந்து அடுப்பூதுவதுபோன்றும்,தம்பிமார்களின் கைகளைப் பிடித்தபடி நான் ஒற்றையடிப் பாதையில்...


தென்னை வளவு.


பெய்தோய்ந்த மழையால் ஈரலிப்பான நிலம்.தென்னங்கீற்றுகளிலிருந்து உருளும் மழைத் துளிகள் குண்டு,குண்டாய் உடலில் பட்டுத்தெறிக்க-நாங்கள் தென்னையுதிர்த்த பாளைகளை,ஓலைகளை,செத்தல் தேங்காய்களை பொறுக்கியெடுக்கிறோம்.அம்மாவிடம் ஒப்படைக்கிறோம்.அப்போதும் அம்மா அடுப்படியில்...


இந்த அம்மா என் அம்மா,உங்கள் அம்மா,அசூமத்தின் அம்மா.அம்மாவின் மகிழ்ச்சி முக்கியம்.அம்மா:தாய்=தேசம்?


ஈரலிப்பான உணர்வு நெஞ்சிலே மேவ நான் மீண்டும் விரக்திக்குள் வாழ்கிறேன்.இப்போது ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த நான்-நாம் தேசம் தொலைத்தவர்களாகிறோம்.


ஆம்!


அம்மாவைத் தொலைத்தவர்கள் நாம்!


இப்போது அசூமத்தின் வலி,எங்கள் வலியாகிறது.


"தினசரி என் சேப்புகளை(சேட்டுப் பை)மேய்தே மாமிக்கென்று சில புடவை அநாமதேயங்களை வாங்கி வைத்துக்கொண்டு,"போய்யிட்டு வாங்களேனப்பா"என்று புடுங்கி எடுத்தாள்."


அதிகமான பெண்கள்,குடும்பப் பெண்கள் இன்றும் சுய பொருளாதாரத்தில் சார்ந்து வாழவில்லை.அவர்கள் தகப்பனினதோ,புருஷனினதோ,சகோதரனினதோ வருமானத்தில் தங்கியுள்ளனர்.இலங்கைபோன்ற நாடுகளின் சமூக வாழ்வின் உண்மை உருவத்தை நன்றாகவே அசூமத் கேலி செய்கின்றார்.எனினும்,மாமிமார்களைக் கடித்துத் தொலையும் மருமகள் பிள்ளைகள் மத்தியில் மனைவியை அன்பின் குறியீடாக்கி,திட்டுவதும் துன்புறுத்துவதும் இருதரப்புக்குமுரிய செயலாய் இருப்பதையுணர்ந்து,அவற்றைப் போக்கவும் முனைகிறார்.இங்கே அன்பைத் தவிர எந்த விண்ணாணங்களும் இருப்பதில்லை.



உழைத்துண்ணும் மனிதர்கள் கட்டுப்பட்டித்தனமான நடுத்தர வர்கக்கத்தின் தன் முனைப்புச் சார்ந்த அதீத தனி நபர் வாத மனிதர்களாக இருப்பதில்லை.அவர்களின் அன்பும்,அறிவும் "தன்னையும் தான் வாழும் சுற்றத்தையும்" பிணைத்தபடியேதாம் உலகை எதிர்கொள்ள வைக்கிறது.இதுதாம் வாழ்வு.இதன் நிசம் போலியான அசத்தல்களுக்கும் அன்பளிப்புகளுக்கும் அப்பால் "எள்ளாய் இருப்பினும் ஏழாய்ப் பிரித்துண்ணும்" உண்மை மானுடப் பண்பாய் விரியும்.அசூமத்தின் மாந்தர்கள் அன்பையே பொழியும் உண்மை மானுடர்கள்.இவர்கள் கூடியுழைத்துண்ணும் பொதுப் பண்போடு வளர்ந்தவர்கள்.பொன்னான மனிதர்களாக நம்மை நெருங்குகிறார்கள்.நாவலாசிரியர் ஜெயகாந்தன்,இயக்குனர் மகேந்திரன் போன்றோரின் கதை மாந்தர்களிடமிருக்கும் "மானுட அழகு" இந்த அசூமத்தின் மாந்தர்களிடம் மிளிர்வதைக் காணும்போது, மகத்துவம் என்பதெல்லாம் மனித வாழ்வின் அனுபவத்துக்கு அப்பால் இல்லையென்பதை உணர்வதும் அந்த அநுபவத்தை அர்ப்பணிப்போடு பெறுவதே வாழ்வின் சுகானுபவம் என்பதை இத்தகைய கதை மாந்தர்கள் மூலமாகச் சொல்லும் அசூமத் கதை சொல்லிகளுள் மிகச் சிறப்பாகத் தோற்றம் பெற்றுவிட்ட நல்ல கதாசிரியர் என்பதை விரக்தி சிறுகதையூடாக நிரூபிக்கிறார்.


இங்கு அசூமத்தின் தாயாரின் மருமகள் மாமிக்காக அன்பையும்,ஆதரவையும் பிடவை மூட்டையாய் கட்டிப் புருஷன் பிள்ளையோடு அனுப்புகிறாள்.இவள் தாய்.தாய்குத் தாய்மை பொழியும் தாலாட்டு இப்படித்தாம் இருக்கிறது நிசத்தில்.


அன்பு.


இந்த ஈரமே இதுவரை இந்த உலகத்தை இயக்கி,மாபெரும் மாற்றங்களைச் செய்தவண்ணமுள்ளது!இது தன்னையும் தன் சுகத்தையும் மறுத்து தன் விழிகளுக்குமுன் தன்னொத்த மானுடர் படும் வேதனைக்காகக் குரல் எறியும்.அது எத்தனை இழப்புகள் நேரிடினும் மனித அவலத்தைப் போக்கப் போராடும்.அந்த உணர்வே அன்பென்ற மகத்தான மனித அழகிலிருந்து தோன்றுகிறது.இது நாடு,மொழி,இனம் என்று மானுட அவலத்துக்குக் கற்பிதங்களைச் சொல்லிக்கொண்டு கண்டும் காணாததாக இருக்காது.எங்கு அநீதி கண்டாலும்,அது தாயே ஆனாலும் தட்டிக் கேட்கும்.இதுவே அன்பின் அர்த்தம்.இதுதாம் ஒரு மார்க்சையும்,லெனினையும்,செகோராவையும் மனிதர்களுக்காகச் சாகத் தூண்டியது.இதுதாம் இறுதிவரையும் ஏங்கல்சுக்கும் மார்க்சுக்கும் இடையிலான அற்புத நட்பாக இருந்தது.


தாயை நேசித்தால் தேசத்தை நேசிப்பது கடினமில்லை.தேசத்தை நேசித்தால் உலகை நேசிப்பதில் போய் முடியும்.இங்கே தாய் என்பவளே மக்களாகவும் மனிதர்களாகவும் நமக்கு உறவுறுகிறார்கள்.தாய் ஒரு குறியீடு, உலகின் அனைத்து உறவுகளுக்கும்.இந்தத் தாயேதாம் தேசத்தை எனக்கு அறிமுகமாக்கிறாள் அவளைவிடவா எனக்கு என் சுய விருப்புகள்,தேவைகள் பெருதாகும்?இல்லை,இல்லவே இல்லை!நான் முதலில் தாய்க்குப் பிள்ளை.உலகத்து உறவுகளுக்கு உறவு சொல்லும் அற்புத அழகு எனக்காக அன்னை தந்தது.


இது உயிரையும் உடலையும்கூட அன்பளிக்கும்!ஈழத்தவர்களான எமக்கிது தெளிவான வரலாறு. வாழ்வின் யதார்த்தத்தில் காணும் வரலாற்று நிகழ்வுப் போக்கில் நாமதையுணர்வது கடினமன்று.



கூட்டுக் குடும்பங்களைச் சிதைத்த பொருளாதாரவுறுகள் மானுடப் பண்பையே மாற்றிமைத்து,மனிதர்களை ஒற்றை மானுடர்களாக்கி சமூகத்திலிருந்து பிரித்தெடுத்து, உற்பத்தி ஜந்திரத்தினொரு உறுப்பாக்கிய இன்றைய காலத்தில், மனித வாழ்வை மீண்டும் மனிதத் தன்மையோடு மாற்றியமைக்க நமக்கு படைப்பிலக்கியமுமொரு ஆயுதமே.எனவேதாம் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கிறோம்.இன்றைய உலகில் மனிதர்கள் மிதமான தனிநபர் வெறிக்குள் கட்டுண்டு கிடப்பதற்கும் இதுவே(இன்றைய சமூக நிலைமை) காரணமாகிறது. தன்னையே குறியீடாக்கி உலகத்தைத் தரிசிப்பதற்குமான தன்முனைப்பு எந்தவொரு படைப்பாற்றலையும் மனிதரிடம் பொதுமையாக வளர்க்கவில்லை.அது(படைப்பாற்றல்) சோதனைக்கூடத்து முதிசமாகக் கிடப்பதற்கும் அதுள் ஓரிரு மனிதர்களே தம்மை முன்னிறுத்துவதற்கும் இந்த அமைப்பே உறுதுணையாகிறது.உலகத்தின் அனைத்து நிகழ்வுக்கும் பண்டுதொட்டுப் பெறப்பட்ட நம் முன்னோரது உழைப்போடு கூடி வரும் மனித உறவின் மகத்தான அழகுதாம் காரணமே தவிர, தனிநபர் செயற்பாடோ அல்லது சுப்பர் மூளையோ காரணமில்லை!இதுதாம் அசூமத்தின் கதைகளுடே நாம் காண முனையும் அன்பாய் கதையெங்கணும் விரிந்து கிடக்கிறது.



மனிதவுறவுகள் குலைந்து சிதறும் இன்றைய சமூகத் தளத்தில்,ஒரு அரும்பாய் அன்பைத் தக்க வைக்கிறாள் இந்த மருமகள்.


இது தேவை.


இதன் அரும்பு அகல வேர்களைப் பரப்பி விருட்சமாகணும்.


"மகனும்,பேரனும் கொழும்பிலிருந்து வந்துசேர்ந்த மோட்டாரும் தன் காம்பறா வாசலில் நிற்பதையிட்டு மகிழாத தொழிலாளத் தாய் யாராவதுண்டா?"


அசூமத்துக்கு இந்தக் கவலை வேண்டாம்.


அம்மாவானவள் எப்போதுமே தன் தொப்புள் கொடியுடன் தொடர்புடையவள்.தொப்புள் கொடியை அறுத்துக் குழந்தையைப் பிரித்தெடத்தாலும்,இவள் உள்மனம் தொப்புள் கொடியாய் விரிந்துகொண்டே இருக்கும்.



இவளுக்குக் குழந்தையை மட்டுமல்ல குழந்தையின் பொருட்களையும்,அதன் சிறப்புகளையும் காக்கத் தெரியும்.அதையொட்டி மகிழ்வுறத் தெரியும்.இதுதாம் தாய்மை?


சாதரணச் சயிக்கிள் வண்டியைக் கண்டே மகிழ்வுறும் தொழிலாளத் தாயானவள் மோட்டார் வண்டியைக் கண்டு மகிழ்வதுமட்டுமல்ல அதைச் சாக்கினாலோ பாயினாலோ மூடிப் பாதுகாத்து,இது பிள்ளையின் வண்டியென ஓங்கிக் குரலெடுத்து உரக்கக் கத்திப் பூரிப்பாள்.ஏனெனில் துன்பத்தில் துவளும் தொழிலாளித்தாய் தன்னுடன் துன்பம் முடிவுற்று தன் குஞ்சரங்கள் இன்புற்று வாழ வேண்டுமென்ற பெரு விருப்போடு கனவு கண்டு, உழைப்பவள்.அவள் இதை உணர்வு பூர்வமாக விரும்புகிறவள்.இவளே ஒரு கட்டத்தில் எதிர்காலச் சந்ததிக்காக தன் கருவையே அதா;மத்துக்கெதிராய் ஆயுதமாக்குபவள்.இவள் ஓடும் வரலாற்று வெள்ளத்தில் உயிரூற்றாய் பெருகுபவள்.இப்போது இவள் தாய்:தேசம்!


எண்பதுகளுக்குமுன் இச்சிறுகதைத் தொகுப்பை வாசிக்க நேர்திருந்தால் நிச்சியம் இந்த் யாழ்ப்பாணத்துத் தமிழனால் இத் தொகுப்புக்குள் தன் வாழ்வைக் கண்டிருக்க முடியாது.தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லாததுபோல் தூரத்தில் நின்று-வாசித்திருப்பான்.


இப்போது வாழ்வும்-சாவும் சுமப்பவனாய்,உலகெங்கணும் தெருவோரச் சருகாய் அலையும் இவனால்-இவளால் இக் கதைகளைத் தன்னுள்ளே நிகழும் வாழ்வாய்க் காணமுடியும்.அதற்கெதிராய்ப் போராடத் தெரியும்.உயிரைப் பணயம் வைக்கத் தெரியும்.


இதுவொரு ஆச்சரியப்படத் தக்க விந்தையே!யாழ்ப்பாண மண்ணின்(சமூகத்தின்)கட்டுக்கோப்பில் இப்படி உருப்பெறுவது ஒரு மகத்தான மாற்றமே.


நூற்றி ஐம்பதாண்டுகளுக்கு மேலாக உழைத்து,உருக்குலைந்த மலையக மக்களின் சோகச் சுவட்டை-இன்றைய புலம் பெயர்ந்த தமிழர்களால் புரிந்துகொள்ள முடிகிறது!இது நமது வாழ்வென்று ஓங்கிக் குரலெடுத்து அழுகிறோம்.தாயைத் தொலைத்த வாழ்வு-தேசத்தை இழந்து தூர நின்றுறவுகளோடு தோள் சேரத் துடிக்கும் இந்த வாழ்வில்- நம்மை ஜந்திரம் தின்று துப்பும் இன்னொரு பொழுதில்- அனைத்தையும் தொலைத்து அழியும் நமது வாழ்வே மலைய மக்களின் வாழ்வாயும் விரிகிறது.இங்கே பொருள் வயப்பட்ட சம நிலைதாண்டிச் சோகம் தரும் வலி,உறவுகளைத் தொலைத்துச் சுற்றத்தையிழந்து தவிக்கும் வலியையே நாம் குறிப்பிடுகிறோம்.


துடிக்கின்றோம்.தொண்டைக்குள்ளிருந்து ஏதோவொரு பொருள் கேருகிறது,விழிகள் அப்பப்ப பனித்துக் கொள்கிறது-அல் அசூமத்தின் விரக்த்திக்குள் வாழும்போது.


"சத்தியக் கடதாசிக்காரர்களை நொந்துகொள்வது புத்தியில்லை.அவர்களுடைய வாழ்க்கைப் பாதையைவிட இந்த மண் பாதை அவர்களுக்கு மேலானதாக இருக்கலாம்."


மனித வாழ்வின் சோகச் சுவட்டை இத்தனை நாளும் இலக்கியங்கள் தூரத்தில் நின்று துரத்திப்பிடிக்க முனையும் படைப்புகளை நாம் இதுவரை அநுபவித்திருக்கிறோம்.இதிகாசம்,புராணம் இத்தகைய இடர்களை நமக்குத் தந்தவை.ஆனால,; இன்றைய இத்தகைய சிற்றிலக்கியங்கள் நமது வாழ்வின் வலி சொல்லி,நமது வாழ்வை அதன் குருதியோடும் சதையோடும் சொல்லும் பண்பைக் கொண்டிருக்கிறது.துன்பத்தை அனுபவித்து அதைச் சொல்வது அனைத்தையும்விட மேலானது.இன்றைய படைப்பாளிகளை இத்தகைய வாழ்வின் நெருக்கடியேதாம் உற்பத்தியாக்கி நமக்கு தருகிறது.இந்தப் படைப்பாளிகளின் உற்பத்தியானது சமூகத்தில் நிலவும் கொடுமைகளுக்கெதிரான நியாயத்தின் ஜனனமாகவும்,நியாயத்தை நிறுவுவதற்கான போர்க் குரலாகவும் எடுக்கப்பட வேண்டும்.பெயருக்கு இலக்கியம் படைக்கும் சூழல் போய்,வாழ்வின் அனைத்து அடக்கு முறைகளையும் மீறும் எதிர்ப்புக் குரல்களே இவை.இவைகளுக்கு எந்த இடமோ,எந்த மொழியோ கிடையாது.இவை எங்கெங்கு அநீதியுண்டோ அங்கே பிறப்பெடுக்கின்றன.எங்கே மனிதத் துயர் நிலவுகிறதோ அங்கே இவை எதிர்ப்புக் குரலாக நமது வாழ்வோடு இரத்தமும் சதையுமாக ஒட்டி வருகின்றன.


இங்கே அல் அசூமத்தோ விரக்தி சிறுகதையூடாக மலையக மக்களின் அவதியுறும் வாழ்வு நெருக்கடிக்குள் தன்னை முழுமையாகப் புதைத்து,அந்தத் துயரை அநுபவித்து-அதன் தாக்கத்தால் அமிழ்ந்துபோனபோது,குரல்வளைவரையும் நெருக்கடிகளின் வீரியம் வலுக்கரத்தைக் கொணர்ந்தவேளை, அதை எதிர்ப்பதற்காகவும், தன்னை-தான் சார்ந்த மனிதரை-உழைப்பாள வர்க்கத்தை விடுவிப்பதற்கான ஒரு சிறு பொறியாய் மேலெழுப்புகிறார்.அப்பொறியை ஊதிப் பெருக்கி பெரும்ஜுவாலையாக்கிவிட்டு அதற்குள் தன்னைமட்டுமல்ல எல்லோரையும்-சமுதாயத்தில் மனித விரோதிகளாக வாழும் சந்தர்ப்பத்தைத் தூண்டும் அனைத்து ஆதிக்கவாதிகளையும் சேர்த்துக் கட்டியிழுத்துவந்து திணித்துப் பொசுக்கிறார்.இது ஒருவகையில் சமுதாய ஆவேசமாக எழுந்து மனித விடுதலைக்கானவொரு பக்குவப் பண்பைப் பெறும் முன் முயற்சியாக மனம் கொள்ளத் தக்கது.


ஒருவகையில் இதுவொரு வேள்வி!இவ்வேள்வியில் எரிந்து,கருகிச் சாம்பலாகி இறுதியில் எஞ்சும் கரித்துண்டமாய் உணர்வு கேலி செய்கிறது.


"ஆக,யாதும் ஊரே யாவரும் கேளிர்...இடுகாடு சொல்கிறது,புல் முளைக்கும் வரை ஆறடிதாம் என்று.ஆனால் தோட்டக்காட்டுச் செக்றோல் சொல்கிறது,ஒரு மில்லி மீட்டர்கூட இல்லை-போடா!,என்று."


அல் அசூமத்தின் இந்தக் கேலியானது மிக நியாயமானது.இன்றைய நமது வாழ்வின் நிலையில் இத்தகைய கேலிகளை சமுதாயத்தின் ஆதிக்கச் சக்திகளை இனம் காட்டத்தக்கவொரு எளிய வடிவமாக நாம் காணலாம்.இத்தகைய எளிமையான நையாண்டிகளால் மனித துயரத்தின் தொடக்கப் புள்ளி எங்கே வேரிடுகிறது,அது எங்ஙனம் கிளை பரப்புகிறதென்பதையும் நாம் சொல்வதற்கான ஒரு முறமையாக இவற்றைப் படைப்புகளுக்குள் சொல்வது எந்த வகையிலும் மனித வாழ்வின் நேர்த்தியை நோக்கியே.இதைக் கையாளுவதில் அசூமத் சிறந்திருக்கிறார்.


சொந்தமாய் உறவுறும் மண்ணை எவரும்,எவருக்காவும்-எந்த ஆதிகச் சக்திக்காவும்,அதன் வலுவான அடக்குமுறை வன்கொடும் ஜந்திரத்தின் யுத்தத்துக்காவும் விட்டுவிட முடியாது.தான் பிறந்து வளர்ந்த மண்ணை தாய்க்கு நிகரா மதிப்பதும்,உறவு கொள்வதும் மனித வாசிகளின் நியாயமான ஜீவாதாரவுரிமையே!பிறந்த முற்றத்தை எவரும் விட்டுக் கொடுக்க முடியாது,சட்டங்கள்போட்டுப் பறிக்கலாம்,திட்டங்கள் போட்டுத் துரத்தலாம்.ஆனால் உளப்பூர்வமான உரிமையை- அந்தவுரிமையால் எழும் பிணைப்பைப் பாசத்தை யாராலும் பறிக்கவோ -அழிக்கவோ முடியாது!


"கடுங்கந்தை!எட்டு வருஷங்களாக என்னை வளர்த்த பூமி...!உள்ளே ஓர் ஓலை தோன்றி மறைந்தது."


அல் அசூமத்தின் இந்த வார்த்தையும்,உணர்வும் "என்னை"உறுதி செய்கிறது.யாழ்ப்பாணம்... எனது பிறந்த மண்.இதைவிட்டு வெகு தூரம் வந்தபின்பே இதன்மீதான எனது.எமது வாழ்வனுபவமும் அது தந்த வாழ்வுறுதியும்-வனப்பும் அன்னையின் மடிபோன்று இதமாக இருக்கிறது.அந்த் தீவு மண் இன்று தின்னக் கொடுத்து வைக்காது மக்களால் பாவப்பட்ட பூமியாகச் சபிக்கப்படுகிறது!வஞ்சிக்கப்பட்ட மண்ணாய்போன நமது மண்ணில் மழைகூட இறங்குதில்லை.என் தாயின் உடலெங்கும் உயிர் கொல்லி ஜந்துக்கள் சுதந்திரமாக ஊருகிறது.தடி கொண்டு அடித்துவிரட்ட முடியாத தற்குறியாக்கப்பட்ட எனது நிலையை நான் யாரிடம் நோக?இப்போதே அகதிய வாழ்வின் ஐரோப்பியச் சுகமும் என்னை விழுங்கியிருப்பினும்,இந்தத் தேசத்தின் ஜந்திரமென்னைத் தினம் தேசம் நோக்கி உந்தித் தள்ளியபடியே என்-எமது வாழ்வைத் தின்று ஏப்பமிடுகிறது!


நாளை ஒருவேளை அவள் ஜீவகாருண்யம் மெருக்கேறி புதிய காற்றைச் சுவாசிக்கலாம்.


இந்தச் சூழலில்தாம் விரக்தி மிகச் சாதரணமாக நம்முள் ஒரு காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.அந்தத் தாக்கம் தரும் அதிர்வு மிகச் சாதரணமன்று.அந்த அதிர்வின் அதியுச்சமான விசை ஒரு சுனாமியாக மனத்தில் அலைகளை எழுப்பினாலும்,இன்றைய நமது போராட்டச் சூழல் நமக்கேன் வம்பை என்று குடும்பத்துக்குள் முடக்கி விடுகிறது.ஆத்திரமுடைய அவசரக்காரருக்கு ஆத்தைகூடத் துரோகியாகிப்போன சூழலில் எல்லாம் நடக்கும்.


விரக்தி சிறுகதையல்ல.அது நமது வாழ்வு.அதை வாசிக்க,வாசிக்க ஒரு பெரும் பொறி நெஞ்சில் மோதிக் கிளம்புகிறது.நான் கேட்க விரும்பாத வார்த்தை நாடற்றவர்கள் என்பதே!


"நாடற்றவர்கள்?"



இவ் வார்த்தை எல்லாத் தார்மீகக் கோட்பாடுகளையும்(முதலாளிகளின்)கேள்விக்குள்ளாக்கி"குருட்டார்த்தம்"பேசும் அரச சட்டங்கள்,தேசம்-தேசிய இனம்-மனிதர்களுக்கெல்லாம் சாட்டைகொண்டு முதுகினில் சொடுக்கிறது.இதுதாம் அசூமத்தின் கடைசி ஆயுதமாக இருக்கிறது.


இங்கே அல் அசூமத் உயர்ந்து நிற்கிறார்.


வார்த்தைக்கு வார்த்தை உணர்ச்சிகளை தத்துவமாய்ச் சொருகி வைத்து-விரக்தியை-வாழ்வாக்கி நமது விழிகள் முன்"நீ வாழும் வாழ்வு இதுதாம்"எனப் பறையடிச்சுச் சொல்கிறார்.இதுதாம் அவரது படைப்பின் மிகப் பெரும் அழகியல் வலு.


விரக்தியின் கரு ஒரு சிறு பயணக் குறிப்பே,அதை எவ்வளவு சிறப்பாக-வாழ்வாய் மலர்விக்கிறார்!இது உண்மை வாழ்வு.இதன் இயல்பான சோக வடுவாய்-வரலாறாய் விரியும் இலங்கை அரசின் கொடூரம்-உழைப்பவரையொடுக்கும் வக்கிரம் மலையகத் தமிழரின் வாழும் உரிமையை எங்ஙனம் பாதிக்கின்றதென்பதை சிறு பொறியாய்ச் சொல்லி பெரும் தீயாய் நமது உணர்வைத் தனது படைப்பால் வளர்த்துச் செல்கிறார்,அல் அசூமத்.




"இங்கேதாம் உதைக்கிறது.பழைய மாணவர்களாகப் பெருமைப்பட்ட எங்களுக்கு விதியில்லை.காலாகாலத்தில் போய்ச் சேர்ந்துவிட்ட கந்தசாமியாரின் இலட்சியத்தையும்,எங்களின் உரிமையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள் மண்ணாசைக்காரர்கள்."-விரக்தி.


ஆம்!


அல் அசூமத் வரலாற்றை நன்றாகவே புரிந்துள்ளார்.



"...மண்ணாசைக்காரர்கள்."


ரொம்பவும் நிதானமானதொரு வார்த்தைக்கூடாக ஒரு பெரும் வரலாற்றுத் துரோகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.பல இலட்சக்கணக்கான மலையகத் தமிழ்பேசும் மக்களின் வோட்டுரிமைக்கு வேட்டுவைத்து "கப்பலில்" ஏற்றியவர்களும்-ஏற்றுபவர்களும் இந்த மண்ணாசைக்காரர்கள்தாம்.


இவ்வகை மண்ணாசைக்காரர்கள் பல தளங்களில் அகலத் தங்கள் வேர்களைப் பரப்பியுள்ளார்கள்.பலர் சூட்சுமமாக நமக்குள்ளேயும்,வெளியேயும் இருக்கிறார்கள்.
இவர்கள் என்றுமே நமக்கு ஆபத்தானர்வர்கள்.மனிதவுரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் சதிகாரக்கூட்டம்.


இப்போது கோவிந்தராஜனிடம் போகிறேன்.


"கப்பல் எப்பங்க...?"


நன்றாகவே கேட்கிறார்?


வீரையாவை மலையக விடுதலையின் விதையாய் மண்ணாசைக்காரர்களால் அபகரிக்கப்பட்ட தங்கள் சொந்த மண்ணில் ஊன்றுகிறர்ர்.


அது முளைவிடுகிறது.


மண்ணாசைக்காரர்கள் சுடு நீரை அதன்மேல் வாரிக் கொட்டுகிறார்கள்.


முளை வாடுகிறது!


பட்டுப்போகவில்லை.மீண்டும் துளிர்க்கிறது.மண்ணாசைக்காரர்கள் முன் தன் கிளைகளைப் பரப்புகிறது.


"எதுக்குக் கத்தியைத் தீட்டினோம் என்பது உங்களுக்குத் தெரியும்.இனி எதற்காகத் தீட்டுவோம் என்பதும் உங்கள்போன்ற தலைவர்மாருக்குத் தெரிந்தால் சரி."


காலவோட்டத்தில் இவ் "விதை"துளிர்த்துக் கிளைபரப்பி, மரமாய் விழுதெறிதலை மண்ணாசைக்காரர்களால் சகிக்கமுடியவில்லை.


சதி செய்கிறர்ர்கள்.


தங்கள்"பலங்கொண்ட"மூளைகளைக் கசக்கித் துளிர்த்துக் கிளைபரப்பிய மரத்தைச் சாய்க்க வழி வகுக்கிறர்ர்கள்-வழிகண்டாச்சு!


இனியென்ன?


கோடாரியுடன் வருகிறார்கள்.


கே.கோவிந்தராஜிடம் இப்போது வாழ்வின் மெய்ப்பாடு உண்மைகளை ஊடறுத்துச் சொல்கிறது.


சிதறிப்போயுள்ளோம்.சின்னாபின்னப்பட்டுத் தனிமைப்பட்டுள்ளோம்.


பி.வடிவேல் சொல்வதுபோல."தொடர்ச்சியில்லாது ஆங்காங்கே தொட்டம் தொட்டமாகப் பரந்து கிடக்கும் தோட்டங்கள்,தொடர்பில்லாது அறுபட்டுக்கிடக்கும் உறவுகள்.தீர்வேயின்றி நீக்கமற நிறைந்து கிடக்கும் பிரச்சனைகள்,ஓயாத உழைப்பு,இவற்றின் கூட்டுக் கலப்புத்தாம் நாங்கள்."(ஈழப் போரின் பலம் உடைபடுவது இங்ஙனம்தாம்.வடக்கை,கிழக்கைப் பிரித்து,மக்களை அகதியாக்கி,வெளி நாடுகளுக்கு இடம் பெயர வைத்து,மாவட்டங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு,பொருளாதாரத் தடையால் மக்கள் உணர்வுகளைச் சிதறடித்து...யுத்தத்தால் கொன்று குவித்து-வான்வழித் தாக்குதல்களால் தமிழரை அச்சப்படுத்தி,போராட்டத்தையும்,சுய நிர்ணயவுரிமையையும் நீர்த்துப் போக வைத்து...)



கோவிந்தராஜனும் நிசவுலகுக்கு வருகிறார்.


முடிவு?


"கப்பல் எப்பங்க...?(இதைத்தாம் நமது விடுதலைப் போராட்டத்திலும் போராட்டச் சக்திகள்-அரசுகள் செய்து-"சமஷ்டி எப்ப கிடைக்கும்...?")


அப்பவும் எங்களுக்கொரு நப்பாசை.


"சாடின் அடைப்பின் நெரிசலில் விழி பிதுங்கி நின்றாலும்,மிதிபலகையில் கால் வைத்தவரை இறங்கித் திரும்பிப்போ என்று, மறுக்காமல் உள்ளே அடைபட்டிருப்போரை திட்டி,ஏசி இடம் எடுத்து வந்தவரையும் உள்வாங்கி அணைத்துக் கொள்ளும் மினி பஸ்சின் தாராள மனசு,நம்மனைவருக்கும் இருந்துவிட்டால் உலகில் எத்தனையோ பிரச்சனைகளுக்கே இடம் இல்லாமல் போய்விடுமே!"


இதை யாரு சொல்கிறார்கள்?


நம்மைப்போல் போரின் கொடுமையால் அகதியாகி ஒண்ட வந்து,வேண்டா விருந்தாளியாக மேற்குலகில் வதைபடுவதற்காக, இடம் பெயர்ந்த மக்களில்லை!கடந்த நூற்றி ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக இலங்கை வந்து,அந்தத் தேசத்தின் முதுகெலம்பான தேயிலை வருமானத்துக்குத் தமது குருதியை கொட்டிப் பசளையிட்ட மனிதர்கள் சொல்கிறார்கள்.காலாகாலமாகத் தமது உழைப்பால் இலங்கைச் செழிப்பாக்கும் மலையகத்தின் மைந்தர்கள் சொல்கிறார்கள்.பாழாய்ப்போன சிங்கள தேசம் எவரைத்தாம் வாழவிட்டது?தன் இனத்தையே கருவறுக்கும் சிங்கள-அந்நிய ஆளும் வர்க்கமா தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும்?இத்தகைய உழைத்து ஓடாய்ப்போன மக்களுக்கே தண்ணிகாட்டும் சிங்களச் சியோனிஸ்டுக்களா இலங்கையின் உழைப்பாள வர்க்கத்துக்குக் கருணைகாட்டும்?


அது காட்டவே காட்டாது.


மண்ணாசைக்காரர்கள் விடுவதாகவில்லை.



சட்டம் ஒழுங்கு,கோடு கச்சேரி என்று பயங்காட்டுகிறார்கள்.வடிவேலு நியாயம் கேட்கிறார்.


"தலைக்கொரு கூரை முக்கியமுங்க!"


அதெல்லாம் உங்களுக்கில்லை.சட்டம்,ஒழுங்கின் பதில் இப்படி...


மலையகத் தமிழர்களின் வாழ்வோடு பின்னப்பட்டுள்ள இச் சிற்றுலக்கியத் தொகுப்பு இங்கேதாம் சிறந்தும் இருக்கு.இயல்பாய் வாழ்வைக் கண்முன் கொணர்ந்து,தான் வாழும் வாழ்வையும் அதன் அடித்தளத்திலிருக்கும் வேதனைகளையும் இத் தொகுப்புச் சிறப்பாக எடுத்தியம்புகிறது.இதில் அல் அசூமத்துகஇகுப் பிறகுதான் மற்றைய படைப்பாளில் சிறந்திருக்கிறார்களென்றில்லை!


ஒவ்வொருவரும் தத்தம் ஆளுமையுடன் இக்கதைகளுக்குள் தம் வாழ்வைத் தொலைக்கிறார்கள்,தேடுகிறார்கள்,வாழ்கிறார்கள்.


"இனி எங்கே...?"


சிவலிங்கம் தேடியலைகிறார்.


"எந்தப் பண்ணையர்களுக்கும்,ஜெமிந்தார்களுக்கும் கூலி விவசாயிகளாக பண்ணையடிமைகளாக உழியம் செய்ய முடியாமல் பயந்து ஓடீவந்தார்களோ...அதே பண்ணையடிமைகளாக மீண்டும் தள்ளப்பட்டுவிட்டார்கள்."




ஆண்டாண்டு உழைத்து வளமாக்கிய மண்ணைவிட்டுத் துரத்தியடிக்கும்"மண்ணாசைகாரர்கள்"தம் கொடூரத்தைச் சிறப்பாகச் சொல்லும் சிவலிங்கம்,பென்சர் கிழவர் பெருமாள் ஊடாக, மண்ணின் மைந்தர்களின் உரிமைத் தாகத்தை நாம் அனுபவிக்க வைக்கிறார்.



"காணி நிலம்,வீடு என்று சொந்தமே இல்லாமல் தோட்டமெனும் அறைக்குள்ளே வியாபாரஸ்தானங்களுக்கும்,நிலச் சொந்தக்காரர்களுக்கும் கூலிகளாகவே வாழ்வதற்கு நிற்பந்திக்கப்பட்டிருக்கும் அந்த மக்கள் வாழ்வுபெறும் காலத்தைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்."(இனி எங்கே...?-சிவலிங்கம்)



ஆம்! இன்று உலகத்தின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும்-அவர்கள் உழைக்கும் மக்களாக இருக்கும் பட்சத்தில்-இவர்களின் நிலை இ·தே!மேற்குலகுக்குப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் நிலையும்,மலையக மக்களின் வாழ்வு நிலையும் அடிப்படைப் பிரச்சனையில் சம அளவு ஒன்றுபட்டாலும்,மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் புலம் பெயர் தமிழரின் வாழ்கைத் தரத்தோடு ஒப்பீட்டு ரீதியில் மிகவும் பின்தங்கியது என்பதை நாம் உணர்கிறோம்.


உலகத்தில் எங்குமில்லாத கொடுமை மலையகத்தில் தலைவிரித்தாட,இந்த மண்ணாசைக்காரர்கள் காரணமாக இருக்கிறார்கள்.


"உழைப்பவனுக்கே இந்தவுலகம் சொந்தமெனும்போது,உழைத்துண்ணும் இந்த மக்களின் உண்மை வரலாறு இலங்கையில் பொய்ப்பித்துப் போகுமா?"என்று சிவலிங்கம் கேட்பதன் நியாயம் புரிகிறது!


ஜானகியைத் தேடும் மல்லிகை சி.குமாரை நெருங்குகிறேன்.


மரபுகளுக்கும்,சம்பிரதாயங்களுக்கும் இரையாகிப் போகும் பெண்களின் சுவட்டில் ஜானகியை உருட்டிப் புரட்டாமல்,"தாத்தா நான் கணவனையிழந்ததால வெதவக் கோலத்தில நிக்கேல்ல,நேசித்தவனை அடைய முடியாமப் போயிரிச்சேன்னுதான் நெனைச்சி வெதவையா நிக்கிறேன்..."


ஜானகியை உணர முடிகிறது!


எனினும்,இந்த மரபுகளுக்குள்ளும்,இந்து மதக் கருத்தியல்களுக்குள்ளும் கட்டுண்டு வாழ்ந்தனுபவப்பட்ட என் மிச்சசொச்ச கற்பிதங்களுக்குச் சற்றுக் கூச்சம் ஏற்படுகிறது.



தாலி கட்டியவனைவிடவா? என்று என்"வளர்ப்பு"ச் சமூக ஒழுங்கு கேள்வி கேட்டாலும்-தனிநபர் உரிமை,சுதந்திரம் என்ற மகத்தான மனிதநேயச் சிந்தனை என் சுயத்தை வெருட்டி,கற்பிதக் கருத்தின் உணர்வு நிலையின் உச்சியில் ஓங்கி உதைக்க,ஜானகியை-அவள் உணர்வுகளை என் சுயத்தைக் கடந்து, அவள் நிலைக்குள் என்னை அழைத்துச் செல்கிறது.அவளைப் புரிந்து கொள்ள முனைகிறேன்.அவளாக மாறுவதற்கு முனையும் ஒவ்வொரு தடவையும் துக்கம் தொண்டையை அடைக்கிறது.நானே ஜானகியாகத் தொலைத்த காதலுக்காகக் கண்ணீர் மல்கிக் காலத்தைக் கடைந்தேற்றுவதும் ஒரு கடுமையான தியானம்தாம்!
இந்தக் கண்ணீருக்குள் குவிந்திருக்கும் எதிர்ப்புக் குரல் கலகத்தின் உச்சிக்குச் செல்கிறது.நமது மரபுகளுக்காகவும்,சமூக ஒழுங்குகளுக்காகவும் மனிதவுணர்வுகளைப் பலியிட முடியுமா?



இல்லை!


இன்றைய சின்னதிரை நாடகங்கள் கற்பிதப்படுத்தும் பெண்மைக்கு அப்பால் உலகம் விரிகிறது.ஆனால், சினிமாவும்,சின்னத்திரை நாடகங்களும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கான பெண்மையைப்படைக்க முனையும் இன்றைய சூழலில், இந்த ஜானாகி பாரதிகண்ட புதுமைப் பெண்ணைவிட நம் தேசத்து நங்கைகளின் அக்கினிக் கரங்களோடு உறவாடத்தக்க பண்புகளோடு நம்மோடு உறவாடுகிறாள்.இவள்தாம் இந்த நூற்றாண்டின் பெண் மொழியாக நிமிர்ந்து, எம் ஈனத்தனத்துக்கு எதிரான குற்றப்பத்திரிகையோடு நம்மை எதிர் கொள்கிறாள்.இதுவே சமூக மாற்றத்தின் அவசியத்துக்கான எதிர்வைக் கூறுகிறது.



வார்த்தைகளுக்கு-சடங்குகளுக்குச் சம்பிரதாயங்களுக்குக் கொடுக்கும் முக்கியமானது ஒவ்வொரு பொழுதும் மானுட வளர்ச்சிக்குக் குறுக்கே நின்று கல்லெறிவதுதாம்.இங்கே மகத்தான மாற்றங்களைக் கோரி நிற்கும் இந்தப் புரட்சிகரமான மனிதவுணர்வு எந்தப் பொழுதிலும் அடக்கியொடுக்கப்பட்டே வருகிறது.அது பெண்களைப் பூசையறைச் சாமியாக்கி ஆண் மனத் தேவைகளைப் பூர்த்திப்படுத்தும் வெகுளித்தனமான ஆணியச் சமுதாயத்தின் அரிப்புக்கு உடந்தையாகவே பண்டு தொட்டுத் தொடர்கிறது.இதை நாம் பெண்களின் மீது சுமத்தப்பட்ட"அச்சம்,நாணம்,மடம்,பயிர்ப்பு"என்று ரீல்விட்டுக் காரியவாதிகளாகப் பெண்மையைச் சுரண்டிக்கொண்டிருக்கிறோம்.



இதை மிக நேர்த்தியாகப் படம் பிடித்தமாதிரி மல்லிகை சி.குமார் அழகான காதல் ஓவியத்தை நம் முன் வரைந்து காட்டுகிறர்ர்.



இங்கே சக்திவேல் நம்முன் மிக உயர்ந்து நிற்கிறார்!தான் நேசித்தவளுக்கே-அவள் விதவையாக இருந்தும்-தாலிக்கொடி,பொட்டிடும் அவர்,சிறப்பாய் உருப்பெறும் சமூகமாற்றத்திற்கான வெகுஜனக் கருத்தியல்-பண்பாட்டு முகிழ்ப்பின் அரும்பில் ஒருவர்."தாலியும்,பொட்டும்" விதவைக்குக் கிடையாதென்றுரைக்கும் இந்த ஆணாதிகச் சமூக அமைப்பில் இவை பெண்ணையொடுக்கும் வடிவங்களாகவே இருக்கிறது.மனதைச் சித்திரைவதை செய்யும் பண்பாட்டு ஒடுக்குமுறையானது பாரிய உளவியல் யுத்தமாகத் தொடர்கிறது.எனினும், இத்தகைய ஒடுக்குமுறை ஆயுதத்தையே கையில் எடுத்து, விதவைக் கோலத்துக்கு விடைகொடுப்பதற்காக அதையே ஒரு குறியீடாக்கி அதை அணிவிக்கிறார்.எனினும் பழையபடி அந்த ஆயுதம் அவளைக் கட்டிப்போடும் கண்ணியாக மாறும் அபாயத்தையும் மல்லிகை சி.குமார் புரிந்திருப்பாரென்றே நம்புவோம்.


சந்தனம் கண்களைக் குளமாக்கி விடுகிறாள்.-அவள் சாகமாட்டாள்!


உழைப்பால் உயர்வுறாத அவள்,இறுதிவரையும் சுகமாய்,நிம்மதியாய்த் தூங்க முடியவில்லை.அவள் நோய்,இந்தச் சமூகத்தின் நோய்!


மனிதவுரிமைகள் எதுவுமேயில்லாது உழைப்பவர்களைக் கிள்ளுக்கீரையாய் வைத்திருக்கும் இலங்கை அரசின் நோய்-அதிகார வர்க்கத்தின் உள நோய் இது.


இது இலகுவில் தீராத நோய்!


இந்த நோய் சந்தனத்தை மட்டுமல்ல இச் சமூகத்தையே பிடித்தாட்டுகிறது.


இங்கு சதாசிவம் சந்தனத்தை மனசாட்சியுடையோரின் முன் நிறுத்தியுள்ளார்.


இங்கேதாம் அசூமத்தின் அம்மா,என் அம்மா,உங்கள் அம்மாக்கள் எல்லோரும் மரணப்படுக்கையில்...


"பொறுத்தது போதும்...!"


இனியுமா? முடியாது!


அம்மாவாய்,நோயாளியாய்,வேலைக்காரியாய்,விதவையாய்,

காமுகர்களால் குதறப்படும் பதுமையாய் எங்கள் அம்மாக்கள்...


இனியும் பொறுக்க முடியாது!


இராஜதுரை கோபக்கத்தியுடன் புறப்படுகிறார்.அதில் அவர் வெற்றியும் பெறுகிறார்.


"இது வெறும் முணுமுணுப்பா?இல்லவேயில்லை!ஒரு சமூகம் முழுவதும் தனக்குள் எரிமலைபோல் அடக்கி வைத்துள்ள அவல வாழ்வின் ஒரு சிறு துளியே!இது பீறிட்டு வெளிக் கிளம்பாதவரை பாதுகாப்புத்தாம்!"(பொறுத்து போதும்...!-பெ.இராஜதுரை)


எச்சரிக்கை!


இது எல்லோரதும் எச்சரிக்கை.


இனியும் ஒரு சமூகம் தன் அறியாமைக்கும்-அடங்கிப் போகும் மனோபாவத்திற்கும் பலியாகுமென்று காரியமாற்றுபவர்கள் கொஞ்சம் நில்லுங்கள்.நிதானியுங்கள்!!-ஒரு ஈழமல்ல,மலையகமும் அதன் தொடர்ச்சியேதாம்.தமிழ் பேசுவோர் இனியும் பொறுக்கத் தயாரில்லை.குட்டக்குட்டக் குனிந்த காலம் மலையேறிவிட்டது.இது இன்னொரு தொடக்கத்தின் முன்னுரை.



மூட நம்பிக்கைக்கும், அறியாமை இருளுக்கும் ஒரு இராமாயி இல்லை,பல இராமாயிக்கள் பலியாகிவிட்டார்கள்தாம்.



இனியும் அது நடக்கப்படாது.



"விடியல் எப்போது?"



ஈழம் பதில் கூறுவதுபோல் மலையகமும் கூறியே தீரும்!அப்போது கேள்விகள் நீறாய் நீர்த்துப்போகும்.



அதுவரையும்,சமூகத்தின் மொத்த இருள்சூழ்ந்த நிலைமைகளுக்காக சுகந்தி,பரமேஸ்வரன்,மெய்யன் நடராஜன்,பாலச்சந்திரன்,நளாயினி சுப்பையா,பா.ரஞ்சினி,த.மயில் வாகனம்,செல்வி.இ.இம்மானுவேல் போன்ற சகல எழுத்தாளர்களும் சிலுவை சுமக்கட்டும்.சுமக்கிறார்கள்.இவர்களில் நளாயினி சுப்பையா,செல்வி.இ.இம்மானுவேல்,த.மயில்வாகனம்,மெய்யன் நடராஜன் போன்றோர்கள் ரொம்ப நிதானமாகவே சிலுவை சுமக்கிறார்கள்!



இவர்களின் நிதானம் போன்றே மற்றவர்களும் தம்மைத் தோற்றுவிக்க வேண்டும்.-இது காலப்போக்கில் நிகழவே செய்யும்!



ஏனெனில், இவர்கள் கதைகளுள் ஜீவனாய் வாழ்கிறார்கள்.தங்கள் வாழ்வை அதற்குள் தொலைக்கிறார்கள்,தேடுகிறார்கள்.இப்படித் தம் வாழ்வை கதைகளுக்குள் காணும் இவர்கள்,மிக நிதானமாகத் தோற்றம் பெறுவார்கள்.



இவர்களோடு நாமும் சிலுவை சுமக்க முனைகிறோம்?


ஈழத்திற்காக,
மலையகத்திற்காக!


புலம் பெயர் வாழ்வும் இதையே எமக்கு உணர்த்தியுள்ளது.



"மலையகப் பரிசுக் கதைகள்"தொகுப்பு இறுதியாகச் சிலவற்றைச் சொல்ல வைக்கிறது:



"இது-இருள் சூழ்ந்த மலையக மக்களின் வாழ்வின் அவலங்களை ஆயிரம் வோல்டேஜ் மின்னொளியில் வெளிச்சமிட்டுக் காட்டாது போனாலும்,ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னையுருக்கி வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டேயிருக்கும்".



இந்த என் நம்பிக்கை வீண்போகாது.


ப.வி.ஸ்ரீரங்கன்.


(1996 இல் இக் கட்டுரை தினகரன் மற்றும் ஈழமுரசில் பிரசுரமானது.இப்போது போராட்டச் சூழ்நிலைக்கொப்ப சில இடைச் செருகலோடு மீள் பதிவாகிறது.)

Monday, January 08, 2007

மக்கள் விழிக்கின்றார்கள்?

மக்கள் விழிக்கின்றார்கள்?


மக்களின் அதீத மானுடத் தேவையான உணவு,உடை,உறையுள் யாவும் இலங்கையின் யுத்தப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கைக்கெட்டாத கனியாக்கப்பட்டுள்ளது.இதனால் யுத்தத்துக்குள் வாழும் தமிழ் பேசும் மக்களின் அதீத மனிதாயத் தேவையாக இருப்பது அவர்களது உயிர்வாழும் வாழ்வாதாரங்களே.

இங்கே அந்த ஆதாரங்களை யுத்த அரசியலூடாகத் தட்டிப் பறிக்கும் இலங்கைச் சிங்கள மற்றும் தமிழ்ப் புலிகளின் யுத்த ஜந்திரங்கள் மக்களின் விடிவுக்காகப் போரிடுவதாகக் கூறிக்கொண்டே அவர்களை பொருளாதாரத் தடையால் போராட்ட வலுவற்றவர்களாக்கித் தத்தமது இருப்புக்கேற்ற அடிமைக் கூட்டமாகவும்,தமது எஜமானர்களின் தேங்கிய சந்தைகளை மீளவும் உயிர் பெற வைப்பதற்காவும் தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து யுத்தத்துக்குள் இருத்திவைக்கின்றார்கள்.இதிலிருந்து மீளமுடியாதபடி இனவாத அரசியல் முன்னெடுப்பை இலங்கையூடாகவும் அதை எதிர்ப்பதற்கானவொரு அரசியலையும், போராட்டத்தையும் மட்டுப்படுத்திப் புலிகளிடம் வழங்கியுள்ளது,அந்நியச் சக்திகள்.



இதை நோர்வே ஊடாகச் சிறுப்புறச் செய்து முடித்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கையில் மக்களை இருவேறு முனைகளாகத் தாக்குகிறது.



ஒன்று பொருளாதாரத்தடை மூலமாகவும்,மற்றது வலிய யுத்தத்தாலும் மக்களின் அனைத்து உரிமைகளையும் இல்லாதாக்கித் தமது ஆர்வங்களுக்கும்,பொருளாதார முன்னெடுப்புகளுக்கும் இசைவானவொரு இலங்கையை மெல்லத் தகவமைத்து வருகிறது.அதற்காகப் புலிகளை தேசியச் சக்திகளாகவும்,தமிழ்பேசும் மக்களுக்கான பிரதி நிதிகளாகவும் மக்கள் மத்தியில் செயற்பட அநுமதிப்பதிலும்,மக்களைத் துரோகி சொல்லி புலிகளை வைத்தே அழிப்பதிலும் அந்நிய நலன்கள் வெற்றி பெற்றே வருகிறது.அதன் அப்பட்டமான முன்னெடுப்பே இன்றைய யாழ்ப்பாண வாகரை நிலைமைகள்.ஒருபுறும் பொருளாதாரத்தடை,மறுபுறும் யுத்தம் இடப்பெயர்வு,அகதிய வாழ்நிலை.




இலங்கையின் இன்றைய முதலாளிய வளர்ச்சியானது கோரி நிற்கும் சமூகப் பொருள் உற்பத்தியானது இலங்கைத் தேசத்தின் தேசிய உற்பத்தியைச் சிதைத்த இறக்குமதிப் பொருளாதாரத் தரகு நிலையே.இந்தத் தெரிவில் அந்தத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தைத் தகவமைத்த அந்நியச் சக்திகள் மென்மேலும் இலங்கையின் இனப்பிரச்சனையில் தமது ஆர்வங்களைப் பிணைத்துக்கொண்டு,தமிழ் பேசும் மக்களின் நிலையிலிருந்து,அவர்களின் சார்பாக எந்தப் பிரச்சனையையும் அணுகவில்லை.மாறாக ஈழப் போரை முன்னெடுப்பதாக மார்பு தட்டும் புலிகளைத் தமது ஆர்வங்களுக்கமையவே போரிடத் தூண்டுகிறது.அந்த ஆர்வங்களானது புலிகளுக்கான குறைந்தபட்ச இருப்பையும்,அதன் அரசியல் ஆதிகத்தையும் தமது முதலாளிய நலன்களுக்கிசைவாகவே வழங்கிக் கொள்கிறது.



இதனால் இலங்கைச் சிங்கள அரசினதும்,சிங்கள ஆளும் வர்க்கத்தினதும் பேரினவாதத் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கும் இலங்கைச் சிறுபான்மையினங்கள் தம்மீது இனவாத அரசியலை ஏவிவிடும் இந்த அரச கட்டமைப்¨புயும் அதன் வன்முறை ஜந்திரத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான சூழலுக்குள் தள்ளப்பட்டபோது,அந்த மக்கள் மத்தியில் மலர்ந்த எதிர்ப்புச் சக்திகள் இலங்கைமீது வலைவிரித்துள்ள அந்நிய அரசுகளால் கையகப் படுத்தப்பட்டு,அந்நிய நலன்களைக் காப்பாற்றிக் கொள்ளும் முறைகளைக் கருவாகக்கிக் கொண்ட அமைப்புகளை மேலும் உருவாக்க முனைகிறது,இந்த அந்நியநச் சக்திகள்!

அதிலொன்று புலிகளைப் பிளந்து கட்டப்பட்ட "கருணா அம்மான் என்று புலிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட" புலிகளின் தளபதியான மட்டக்களப்பைச் சேர்ந்த கருணா குழுவாகும்.இது இலங்கை அரசோடிணைந்து புலிகளுக்கும் கிழக்கு மக்களுக்குமான அனைத்துத் தொடர்புகளையும் அறுத்தெறியவும்,கிழக்கு மாகாணத்தை நிரந்தரமாகப் பிரிக்கவும் முனைந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கனவை இன்று சாத்தியமாக்கி வருகிறது.



இனங்களுக்கிடையிலான இனத்துவ முரண்பாடு மிகச் சாதுரியமாகத் தகவமைப்பட்டு வளர்தெடுகப்படுகிறது.இதன் தேவை இந்த அமைப்பு முறைக்கு அவசியமாக இருக்கிறது.இந்தத் தேவையினது ஒரு வெளிப்பாடாகவே புலிகள் தமிழ் மக்களின் ஒடுக்குமுறைக் கெதிரான போராட்டத்தில் மாற்றியக்கங்களைத் துரோகிகளென்ற நாசியப் பிரச்சாரம்போன்று மக்களின் மனங்களைக் காயடித்து அவர்களின் பிள்ளைகளைக் கொன்றார்கள்.

இவர்களின் இந்தத் தீயவினையானது திட்டமிட்ட அந்நியச் சக்திகளின் மேற்பார்வையோடும்,தூண்டுதலோடுமே நடந்தேறியது.இப்போது மக்கள் மத்தியில் தாமே நிற்பதாகவும்,இலங்கை இனப்பிரச்சனைக்கும்,இனவொடுக்குமுறைக்கும் எதிராகத் தாமே போராடுவதுமாக அறைகூவலிட முனைவதும் அந்நியச் சக்திகளின் ஆர்வங்களின் தூண்டுதலாகும்.



இது,புலிகளை ஒரு மட்டுப்படத்தப்பட்ட குறுகிய நிலப் பரப்புக்குள் தள்ளி அதன் உயிர்வாழும் தகுதியைத் தமது கண்காணிப்புக்குள்ளேயே வைத்திருக்கும் இன்றைய பூகோள அரசியல், தமிழ் மக்களின் அனைத்துத் துயரத்துக்கும் காரணமாக ஈழவிடுதலைப் போரே என்பதையும்,அந்தப் போராட்டம் மக்களின் அனைத்து அடிப்படையுரிமையையும் இல்லாதாக்கிய மெய்ப்பாட்டை மிகவும் வலுவாக மக்களுக்கு அறியப்படுத்தும் நகர்வில் வெற்றியுற வைத்து, மக்களின் போராட்ட உணர்வை மெல்ல அழித்து வருகிறது.இதுவே மூன்றாம் உலகில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை முளையில் கிள்ளியெறியும் இராஜ தந்திரம்.



புலிகள் சாரம்சத்தில் ஒரு விடுதலை அமைப்பல்ல.அது எப்போதும் மக்களைப் பலியிட்டுத் தமது அதிகாரத்தைத் தக்கவைக்கும் ஒரு சமூக விரோதக் கும்பல்.அந்த இயக்கம் மக்கள் இயக்கமாக இருந்திருந்தால் தமிழ் மக்களின் உண்மையான விடுதலைக் கூறுகளைத் தமது இயக்கத்துக்குள் கடைப்பிடித்து அந்த இயக்கத்தை மக்கள் சார்ந்து கட்டியிருக்கும்.ஆனால் அந்த அமைப்பு அத்தகையவொரு வளர்ச்சியை எட்ட முடியாத நிலைக்கு அதைப் பின் தள்ளிய சக்திகள் இந்திய-அமெரிக்கக் கூட்டுச் சக்திகளாகும்


அந்நியச் சக்திகள் புலிகளுடாகவே தமிழ் மக்களின் பிள்ளைகளை நாசியக் கட்சியைப் போன்றே இனவாதத் தீயில் வாட்டியெடுத்துப் போருக்குத் தயாராக்கினார்கள்.புலிகளின் எந்தவொரு அரசியல் இலக்கும் மக்களைச் சார்ந்த அவர்களின் நலன்களைப் பிரதிபலிப்பதில்லை.மாறாகப் புலித் தலைமையின் இருப்புக்கூடாகவே அவை பிரதிபலிக்கின்றன.இத்தகைய வடிவத்தோடுதாம் புலிகள் அமைப்பை உருவாக்கும் தகமையைப் பாலசிங்கத்தின் மதியுரைப்பூடாக வளர்த்தது அந்நிய சக்திகள்.

இதனால் குறுகிய இயக்கத் தலைமையின் அதிகாரத்துக்கான யுத்தமாகவும் அந்த யுத்தின் வாயிலாக இலங்கைத் தமிழரின் ஏகப் பிரதிநிதிகளாகவும்,அவர்களின் அனைத்து வளங்களையும் அனுபவிக்கும் சட்பூர்வக் கிரிமனல் அமைப்பாகவும் இருக்க முனைகிறார்கள்.இதற்காக இலங்கை அரசின் அதீத இனவாதச் செயற்பாட்டை இவர்கள் தூண்டுகிறார்கள்.இதற்காகவே திட்டமிட்ட சிங்களப் பிரதேசக் குண்டுவெடிப்புகளைச் செய்கிறார்கள்.இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை இனவாதத்தூடாக வளர்ப்பதன் மூலம் இலங்கை அரசைக் காத்தும் வருகிறார்கள்.



மீளவும் அந்நியச் சக்திகளின் கண்காணிப்போடு புலித் தலைமை புதிய இலக்கு நோக்கித் தள்ளப்படுகிறது.இது மிகவிரைவில் இன்னொரு முகத்தோடு ஏகாதிபத்தியத்துக்கு விரோதமில்லாதவொரு அரசியலை விரைவில் பேசும்.அது ஈழத்துக்கு நேர் எதிராக இருக்கும்.



பல் தேசியக் கம்பனிகளின் மலிவுத் தொழிலாளரின் நீண்டகால வேலைச் சந்தையை இதனு}டாக உறுதிப்படுத்தும் இந்த நடவடிக்கை சமீபத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் வெற்றி பெற்று வருவதற்கு இத்தகைய விடுதலைப் போர்களென்ற ஏகாதிபத்திய யுத்தங்கள் உதவி வருகின்றன.ஆனால் மக்களோ அனைத்தையும் இழந்து செத்து மடிகிறார்கள்.சமத்துவத்துக்கான போராட்டம் மிகவும் கண்காணிக்கப்பட்டு தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது.


இத்தகைய அழிவில் மக்களின் துன்பம் இருமடங்காகிறது.அது உயிர்வாழும் தகமையை வலிய வடிவில் இல்லாதாக்கி வரும் சூழலில் இலங்கையைத் தொடர்ந்து இருத்திவைக்க முனைகிறது.


இறுதியாக:



இந்த வலைப் பதிவில் தினமும் இலங்கை அரசியலை விமர்சிப்பவர்கள் நாம்.எமது அரசியல் விமர்சனமானது,இலங்கை அரசியலில் ஆதிக்கச் சக்திகள் யாவையும் அம்பலப்படுத்தி,இலங்கை மக்களின் இன முரண்பாடானது இலங்கையின் இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியின் பங்குப் பிரச்சனையால் எழுவதாகவும்,அது திட்டமிட்ட இனவழிப்பைச் செய்வதற்கான கால அவகாசத்தைக் கோருவதற்கான அரசியல் வலுவைச் சிறுபான்மை இனங்களுக்குள் உருவாகியுள்ள தரகு முதலாளிய ஆர்வங்களைக்கொண்டே ஏற்படுத்தியுள்ளதையும் நாம் மிக அவதானமாக அறியவேண்டும்,என்கிறோம்.

இங்கே இனங்களின் சுய நிர்ணயவுரிமையை இத்தகைய முரண்பாட்டை வளர்ப்பதனூடாக மெல்ல அழித்து வருகின்றார்கள்.


ப.வி.ஸ்ரீரங்கன்
08.01.2007

Sunday, January 07, 2007

புலனாகும் பிரபஞ்சம்

புலனாகும் பிரபஞ்சம்

புனைவும்
பிராண்டலும்...

பெருவெடியின் முன்கதை:

இரண்டாம் உலக யுத்தத்திற்குப்பின் இன்னொரு யுத்தத் தாண்டவம் வரமுடியாது,அதுவும் மகாயுத்தமாக உலகு தழுவி வரமுடியாது என்பதில் என் மகிழ்ச்சி கரை புரண்டோடியது.
இருக்காதா பின்ன?

செல்களும்,குண்டுகளும்,தோட்டாக்களும் பொலு பொலுவென்று உடம்பெல்லாம் பட்டுத் தெறித்து, உயிர் குடிக்கும்போதும்,அந்த இயக்கம் துரோகிகள்-இந்த இயக்கம் துரோகிகள் என்று எல்லாத் தமிழ்ப் பாலகர்களுக்கும் சாவோலையெழுதித் "தமிழ் வீரர்கள்" மண்ணெண்ணையும்,இரயரும் கொண்டலைந்தபோது"ஐயோ கடவுளே வரந்தரமாட்டீயா உயிர் தப்ப?" என்று பெருமூச்சு விட்டெல்லே அகதியாக ஜேர்மனிக்குள் கால் பதித்தது!(இப்படித்தாம் யாழ்ப்பாணப் பிரபஞ்சப் பந்து இறுகி-அமுங்கி"Big Bang"கண்டது.)

இந்த யுத்த சாட்சியங்களிலும்,ஈழவிடுதலைப் போராட்டத்திலும் கொலைக்களத்தைத் தவிர எந்தச் சாரமும் இல்லாது போனதாக நான் உணர்ந்தபோது-அட கடவுளே! என்னால் ரொம்பக் காலத்துக்கு உயிர் வாழமுடியாது என்பதில் ஒருவிதக் கோபமும் இருந்து கொண்டே வந்தது.

(1)

அம்மாவுக்கு இருத்திவைச்சுச் சோறு போடவேணுமெண்டு அடிக்கடி யோசிப்பதில்,என்னைவிட வேறொருவரும் இருக்க முடியாது.அப்பன்தாம் எனக்குப் பதினொரு வயதாகும்போது-ஒரு நாள் காய்ச்சல்,மறு நாள் மஞ்சள் படர்ந்த உடம்பாய் மாறி,அடுத்த நாள் உடல் வீங்கி,யாரும் யோசிப்பதற்குள் பொதுக்கென நாற்பத்தியொன்பதே வயதோடு"வேண்டாமடா சிவனே இந்தச் சீவியம்"எண்ட கதையாய்ச் செத்துப் போக... கஷ்ட்டப்பட்டு உழைச்சுத் தந்த மனுசனுக்குச் சோறு போட முடியேல்ல-அம்மாவுக்காவது சோறு போட வேணுமெண்டு யோசிச்சதுதாம் நிசமாய்ப் போனது...

"அட ராசா,என்ர செல்ல ராசா,எப்படியடி இருக்கிறாய்?"என்றெழுதிய அம்மா,ஒரு நாள்:"சோத்துக்கு வழியில்லை ராசா.யாழ்ப்பாணத்துக்க ஆமி வந்து கொடியேற்றி,விலையெல்லாம் கொடி உயரத்தில் பறக்குது ராசா,பாதையையும் திறக்கப் போறதில்லையெண்டுது அரசு.இந்தியாவும் வேடிக்கை பாக்குது.பிளேனால சாப்பாடு போட்ட இந்தியா இப்ப கண்ணைக் கட்டிக்கொண்டிருக்குது ராசா,கப்பலாலையும் சாமன்களைக் கொண்டுவரப் புலியளும் விடுகிறான்களில்லை.எண்ணைக்கும்,தண்ணிக்கும்,
சவுக்காரத்துக்குமே பிரச்சனையெண்டால் மனுசர் வாழுமுடியுமா தம்பி?உன்னால காசு அனுப்பமுடியாதெண்டால் நாங்கள் தற்கொலை பண்ணத்தான் வேணும்.நீயாவது கொஞ்சமேதன் அனுப்பு குஞ்சு..."என்று ரெலிபோனில் அழுது மன்றாடப்போய், நானும் நரம்பு புடைக்க உணர்ச்சி வசப்பட்டு-அடடா அம்மா பாவம்,கொஞ்சம் அனுப்புவமெண்டால்"இந்த நாயள் தாற சம்பளம் வீட்டு வாடகைக்கே போதுதில்லை,இந்த இலட்சணத்தில்...சோசல்ல1 போய் பிச்சை எடுத்து வந்ததில் ஒரு கொஞ்சம்"அம்மாவுக்கு ஏதாவது அனுப்புவோமாப்பா"...எண்டு இழுக்க,"இரண்டைப் பெத்துப்போட்டு,அதுகளுக்கு ஒழுங்கான துணிமணி இருக்கா? வெளியில நாய்க் கோலத்தில போறம்.வாறா மாதம் கிண்டர் கார்டன்2 பெரியவனுக்கு,அவனை ஒழுங்கா அனுப்ப வேண்டாமோ?"எண்ட எதிர்ப்பாட்டில்,சரியான சங்கீதம் முறைப்படி கற்றது தெரிய...

பெருவெடியின் முன் கதைத் தொடர்ச்சி:

பெட்டிச் சாப்பாடும்,கூழ்,கஞ்சி, என்றபடி ஜேர்மனிய அகதியக் கோல அடையாளங்களுடன் உலக நாடுகளெல்லாம் அலையோ அலையென்றலைந்து(துகள்கள் விரிவடைவதாக எடுக்கவும்),சுவரிலடித்த பந்தாய் மீளவந்து(பிரபஞ்சம் இதற்குள் சுருங்கி விடுகிறதா?)ஜேர்மனிக்குள் குந்திக்கொண்டு,உலக மகா மார்க்கம் தேடிய பெரு மூச்சில் நசிந்து போன ஆசைகளோடு (நிறையீர்ப்பு)-"அம்மாடி ஒரு பெட்டை சுகம் கிடைக்க மார்க்கமுண்டா கந்தா!"என்ற கும்மியடிப்போடு அங்குமிங்கும் அலைந்து,அரியோ அரியென்று அரிந்து...(என்னத்தை அரிந்திருப்பேனென்று நீங்கள் யோசிப்பீர்கள்,அதற்காக நானே சொல்லியும் போடவேணுமில்லையா? மற்றவர்களின் தொண்டைகளை அல்ல,பொறுமையைத்தாம்!,வேலை கேட்டுத் துளைப்பதும் மறுபுறும்...),ஒரு மாதிரியாகச் சுப்பற்ற கொல்லைக்குள்ள தூண்டில் போட்டு ஒட்டி மீனொன்டை பிடிச்சுப் போட்டதற்கு...
(2)

"... அம்மாவும் ஆட்டுக் குட்டியும்,தன்ர சொந்த நாட்டு மக்களுக்கே சோறுபோட முடியாத நாட்டுக்கொரு பெயர் "ஸ்ரீலங்காவும்,மசிரும்"என்ற என்னியல்புக்குள்
எல்லையில்லாத் திருப்தி முட்டிமோத,அம்மா எப்பவோ மறந்துபோய்..."கழுதைக்கு உபதேசம் காதிலுரைத்தாலும் "அது"அபயக் குலென்றெண்ணியாவ துண்டோ?"என்ற போக்கில் அம்மா மூன்றுமாத இடைவெளிக்குப் பின் ஞாபகத்தோடு...

"இனியும் உன்ர கதையைக் கேட்டால் அங்கயிருந்து கடிதமில்லை காடாத்தி வரும்"என்ற என் குரைப்பில்-சோளப் பொரியாய் நானிருப்பதில்,அவள் அச்சமோ இல்லை எதுவோ பெற்றாளோ தெரியாது.மறைந்திருந்து தாக்கும் பாணியில் பின் வாங்க,"ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணிக்கு ஏற்பட்ட மகிழ்வை விட(அதை நானெங்கே பார்த்தேன்?)என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாதிருக்க,ஓடோடிப்போய் முன்னூறு யுரோ அனுப்பி வைத்துவிட்டு"அப்பாடா என்ன பெரிய சாதனை!-இதைவிடவுலகத்தில் என்ன பெரிய சாதனையுண்டு?-இவான் (இ)லென்டிலும் விம்பிள்டோன் வென்றால்கூட என்ர மகிழ்ச்சிக்கு-சாதனைக்கு,ஈடாகமுடியாததுபோல் ஒரு நினைப்பில் வீடு வந்து மீண்டபோதுதாம்"ஆடினாள், பாடினாள்,பாடிப் பழமுறத்தால் சாடினாள் ஓடோடத்தான்"என்ற கதையாய்...

பெருவெடியின் முன் கதைத் தொடர்ச்சி:

"என்னடாப்பா இந்த பஸ் இல்லாட்டி இன்னொரு பஸ்சில ஏறிப்போட்டு போவன்ரா!"என்றுரைத்த என்ர கூட்டாளி,"இவன் போட்ட தூண்டிலில நல்ல புழு இருக்கு,நீ தின்றுவிட்டால்-கொழுவோ,கொழுவெண்டு கொழுப்பாய்,கூடவே நல்ல நல்ல கலர்க் கனவுகள் நித்திரையில் வருமெண்டு சொன்னதாலோவென்னவோ ஒட்டி மீனும் வலு குசாலாய் வந்து மாட்டிப்போட்டு,எவ்வளவு போராடியும் தன்னை விடுவிக்க முடியாது திண்டாடியபடி...

இந்தச் சரியான விடாப்பிடியில்,நியூட்டன் போட்டவிதியாய் ஒன்றும்,ஐயன் ஸ்ரைன் போட்டவிதியாய் ஒன்றும் உருவாகிச் சிக்கலிட்ட சமாச்சாரத்தைஎன்று குவன்ரன் பிசிக்ஸ் சொறுடிங்கர் விளக்குகிற பாணியில் சொல்லிப்போடுவதற்குப் பதில் பிரபஞ்சமாம்-அறிக:புலனாகும் பிரபஞ்சம் என்று!

வீறுகொண்ட என்ர ஆண் மனசு"சாண் பிள்ளையெண்டாலும் ஆண் பிள்ளை"என்று அம்மா சொல்லி வளர்த்த வார்த்தை கண்முன் விரிய,"அடியேய் இனியும் பொறுக்க மாட்டேன்"என்று நான் கருணாநிதிப் பாணியில் வீரவசனம் பேசித் தொலைக்க,அவள் ஜெயலலிதா பாணியில் கலைகொள்ள,இறுதியில்சட்டசபை-பாரளுமன்றப் பாணியில் உருண்டு,புரண்டு எழும்ப,நாங்கள் உருவாக்கிய விதிகள் இரண்டும் கூடியிருந்து பார்த்துப் பார்த்து அழுத காலம் தொட்டு தூக்கியதைத் தூக்கியதாய்த் தொடர"நாசமறுப்பான்,நல்ல வளர்ப்பில் வளரேல்ல,வங்கோலை,ராஸ்க்கோல்"என்று பாடிக்கொண்டிருந்தவளை"குஞ்சு,குட்டி,என்ர செல்லம்"என்று நல்லவொரு பப்பாமரமாகப் பார்த்து ஏற்றிவிட, அடுத்த அரை மணி நேரத்துக்குள் "குஞ்சுகள் நீங்கள் போய் ரீ.வீ.பாருங்கோ,பாருங்கோ"என்றென் "விதிகளுக்கு"க் கூற,அவர்களும் அப்பனிட்ட கட்டளையை செப்பனிட்டபடி செய்யக் கட்டிலும் "கிறீச் கிறீச்" என்று ஆடி ஓய்ந்துவிட...
"என்னப்பா இந்த பெட்சீட்டெல்லாம்...ச்சீ..."

"அதை மாத்தினால் போச்சு"என்று நான் ஏப்பமிட"தோய்க்க நானொருத்தி இருக்கிறேன்தானே?"என்றவள் செல்லம் பொழிய"நீ எங்கே தோய்க்கிறாய்?அது வோஷிங் மெசின்தானே?..."என்பாட்டுக்கு வாயை வைத்திருக்கத் தெரியாமல் வைத்திருக்க,"இனிமேல் வருவாயா பாப்பம்"என்ற பாணியில் அவள்.
இந்தவிடத்தில் பெருவெடியின் அனைத்து ஈர்ப்புகளும் வலுவிழக்க தனக்குள் சுருங்கும் பிரபஞ்சம்.

(3)

இன்னெர்ரு அமுக்கம் மறுவெடிப்போடு வெளியொன்று தோன்றவும்,அங்கே சில துகள் இடமெடுத்து ஒன்று கூடவும் விரியவும்,மறுக்கவும் ஏற்கவும்,சுழரவும் சுற்றவுமாய் காலம் தோன்ற...

இன்றைக்குச் சுமார் பதினொரு ஆண்டுகளுக்கு முன் எந்தத் தோற்பையோடு அவனிடம்(எனக்குத் தெரிந்தவன்) போனேனோ,அதே தோற்பையோடு(கைபிடி அறுந்த வித்தியாசம் மட்டும்) சில ஆவணங்களுமாக(இன்னும் கொஞ்சம் வித்தியாசம் சொந்தமாய் ஒரு ஓட்டைக் காரும் இருக்க)அவன் முன் போய் நின்றேன்.

அவனுக்குத் தெரிந்திருக்கும்-புரிந்திருக்கும் என் வருகையின் காரணம்.மதியமே கோல் போட்ட ஆட்டத்தை அவனுக்குச் சொன்னதன் பொருட்டு "என் விஜயம் அவனுக்குப் புதிராக இருக்கவில்லை"என்பதை அவன் விழிகளிலிருந்து நான் தெரிந்து கொண்ட விதமொன்றும் கோவூரின் மனோதத்துவக் கலைமாதிரி இல்லை.

"இனிமேல் சரிப்பட்டு வராது நான் பிரியப் போறன்,Seidung 3 செய்யப் போறன்" என்று சொல்லியும் அவன் எந்தச் சலனமுமின்றி,விசுவாமித்திரன் தவக்கோலம் பூண்டு இருந்தான்.நான் இரதியாக மாறி வித்தைகள் போட்டாலும் அவன் கிறுங்கமாட்டான்.அப்படி அவன் ரொம்பப் பழுத்த ஞானப்பழம்.என் தரப்பு நியாயங்களை அடுக்கிப் போட்டுவிட்டால்"நல்ல பிள்ளை இவன்,ஒன்றும் மோசமானவன் இல்லை"என்று நினைப்பானவன் என்பதற்கும் எந்த உறுதிப்பாடும் இல்லை...என்றாலும்...
(4)

"பிரச்சனை ஒரு சின்ன விசயம்."உப்புச் சப்பு இல்லாத பிரச்சனைதாம்.உருப்படியாய்ச் சொன்னால் ஒரு சிகரட்டு(நான் புகைத்தது சிகரட்டல்ல,சுருட்டு-வனிலாப் போட்ட சுருட்டு.சிகரட்டென்பதில் ஒரு கெளரவம் இருக்கிற மாதிரி...)புகைத்தலின் வினை.அம்மாவுக்கு அரிசி வேண்டுவதற்கும்,யாழ்ப்பாணத்துக்கு வரும் கப்பல் ஒரு பயணத்தில் ஒரு கோடி இலாபம் தேடவும் நம்ம கடிதப் பொருளாதாரக் கடமையின் உள் புகைவு உருமாற்றம் பெற்றதின் வெளிப்படைக் காரணம் சுருட்டில் போய்முடிந்து யுத்த நிறுத்த மீறல் இரு தரப்பாலும்(எனக்கும்,மனைவிக்குமிடையில்) செய்யப்படுகிறது.

எல்லோரும் தூங்கப் போய்(கழு மரத்தில் அல்ல)நடு இரவு தாண்டிய பின்னிரவுப் பொழுதில் யன்னலைத் திறுந்து புகையை வெளியில் ஊதிக் கொண்டிருக்க,ஈழத்துக் கொலைக்காரப் போராட்டத்தை வரலாற்றிலிருந்து மறைக்க முனையும் தேசியம் அம்பலமாவது போல... அவளுக்குப் பாழாய்ப் போன மூத்திரம் முடுக்க,வந்தது வினை.காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதையாய்...

"என்ன சுருட்டும் பத்திறியோ?பரதேசி.(அப்பாடா என்ன புருஷ கரிசனை!) நல்ல வளர்ப்பில வளர்ந்திருந்தால் சுருட்டுப் பத்துவியோ?-நாய்.விடியட்டும் பாப்பம,,உன்னை ரெண்டில ஒண்டு பார்க்கிறன்."சொல்லிக்கொண்டே கட்டிலுக்குப் போனவளை இடைமறித்து,"நானென்ன பில் கிளின்டன் மாதிரியா சுருட்டை அமுக்கியெடுத்துப் பத்தினனான்?இல்லையே?இதுக்குப்போய்..."என்றிழுக்க "நீ,பேசாதே நாயே"என்று என்னிருப்புக்குச் சான்றிதழ் தந்து படுத்துக் கொள்ள விடுவேனா¡? இருக்குத்தானே கைவசம் நல்ல கசாயம்!எடுத்துக் கலந்து கொடுத்தால் எல்லா வகை விசமும் இறங்கி விடுமே.

"என்ர குட்டி,குஞ்சு, அம்மா,ஏனிப்படித் துள்ளுறாய்?"வாயால் சவாடால் போட்டு,கையால் தடவிக்கொள்ள"எடடா நாயே கையை."இதற்கு மேலும் இந்தப் பருப்பு அவியாது.இது இரு நீர்க் கலப்புத் தண்ணீர்.
இதற்கு வேறு வகை மருந்தைத் தேடிக் கொண்டேன்.
(5)

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒரு இலங்கையும்,ஈழமும் இருக்கு.புலியாகப் புருஷன்கள் மாறும்போது,பெண்டுகள் சிங்கமாக மாறுகிறார்கள்.ஆள் அணி திரட்டிய பூரிப்போடு"ஏதோ செய்வது போல்" குசினிக்குள் அவள் பாசாங்கு செய்ய-அவள் அப்பன்"என்ன நீங்கள் சுருட்டும் பத்திறீர்களாம்?"(யார் கொடுத்த உரிமையோ? நாற்பது வயது முழுகிய எனக்கு எஜமான் கோலத்திலொரு மாமா!)

"ஆரு சொன்னது?,அவள் கண்டவளே?"எடுத்த எடுப்பிலேயே துக்ளக் சோ இராமசாமியாய் மாறியிருந்தேன்.

"நீர்(நீங்கள் இப்போ நீர் ஆகிறது) எப்படி அவளுக்கு அடிப்பீர்?"
"அடிப்பேன்.இப்ப உங்களுக்கு முன்னாலும் அடிப்பேன்.நீர்(என் தரப்பும் நீங்களைச் சுருக்கி நீர் ஆகிறது) முதலில் இடத்தைக் காலிபண்ணும்.இது என்ர வீடு(வரலாற்றுத் தாயகம்)."இப்படி உறுமிக் கொள்ளும்போதும் எஜமான் விடுவதாகவில்லை."எங்கே முடிஞ்சால் அடியும் பார்ப்பம்"என்றபடி எஜமான்...

"என்ன செய்ய அடிக்கிறது என்ர தொழிலாய்ப் போச்சு(இல்லாதுபோனால் என் இருப்பு நிலைக்காது.என் தலையைக் கொய்தும் போடுவார்கள் என்னால் உருவாக்கப்பட்ட என்ர எதிரிகள்).இந்தக் கொலைக் கூத்தை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என் "விதிகளுக்கு"த் தொழிலாய்ப்போச்சு.இப்பவே கண்ணில் போட்டு வதைத்தால்தாம் அவர்களும் நாளைக்கு "ஆண்"பிள்ளையாக இருப்பார்கள்!

இறுதியில் சூரியக் கதிருக்குப் பின்னான யாழ்ப்பாணமாய்ப் போனது வீடு.

(6)

"நிச்சியமாகப் பொம்பிளையளுக்கு அடிக்கிறதை நான் ஏற்கமாட்டன்" அவன்-என்ர கூட்டாளி கூறிக் கொண்டான்.ஆனால் இந்த விசயத்தில் சண்டை தொடங்கிறபோது நாங்க போடுகிற "புரிந்துணர்வு ஒப்பந்தங்களெல்லாம"; ஐயன் ஸ்ரையினின் "On a Stationary System with Spherical Symmetry Consisting of Many Gravitating Masses"எண்ட நிகழ்வுகள் போல ஒண்டுக்கொண்டு எங்கோ ஈர்ப்பதிகமாகிச் சண்டை வலுக்குதோ?

"இண்டைக்கு இந்த இரவை இஞ்ச கழிசுப்போட்டு விடியச் Seidung செய்ய இறாத்கவுசுக்குப் (Rathaus 4) போகப் போறேன்.எங்கட முடிவை நாங்கள்தாம் தீர்மானிப்பது."என்ற என் கருத்தை அவன் இந்தியாவின் நிலையிலிருந்து கொண்டு பார்க்காமல்,"சரி"என்று தலையாட்டினான்.

இரவும் விடிந்தது,நானும் தூக்கம் விட்டெழுந்ததும் உண்மை.


பிற்குறிப்பாய்ச் சில:

1:ஓரிரவு புருஷன் இல்லாத சூழல் அவளை வாட்டியிருக்கும்,பிள்ளைகள் "அப்பா"பாட்டு நன்றாகப் பாடியுள்ளார்கள்.

2:வெளி நாட்டுச் சக்திகள்(ஆள் அணிகள்: அண்ணன்,தம்பி,அக்கா, தங்கை,தகப்பன்,தாய் அத்தான்...)தத்தம் ஆர்வங்களால் வந்த பிழைகளெனச் சிலவற்றைக் கொட்டியுள்ளார்கள்(நானில்லாதா வீட்டின் சூழல் நல்ல காரியம் செய்திருக்கு).

3:மீண்டும் வீடுமீண்ட நான் முதல் செய்த வேலை: வக்கீலுக்குப் போன் செய்து"விவாக ஒப்பந்தத்தை"(புரிந்துணர்வு ஒப்பந்தத்தை) இரத்து செய்ய நேரம் குறித்தெடுதது,இதற்குப் பின்பு ஒரு விவாதம்(பேச்சு வார்த்தை)வந்து வடிவாய்க் கதைத்து,அவரவர் உரிமையை(சுய நிர்ணயவுரிமையை)மதிக்கத் தக்கபடி பிரிந்துபோகும் உரிமையுடன் வாழ்வது அல்லது மறுபடியும் சண்டை போடுவது என்ற நோக்கு எனக்கு.

4:இறுதியில் நடந்தது: கொஞ்சம்,கொஞ்சமாகக் கிட்டே நெருங்கி"பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு பிரிந்து போ,நான் என்ர வாழ்வை முடிக்கிறன்"என்ற பச்சோதாபத்தைப் படர விட்டு,"உரசல்,கிள்ளல்,முத்தம்"பின் நானே தொடங்கி,நானே முடித்து வைக்க-தொடர்ந்தும்:மீள்வதும், குலைவதும்,கூடுவதும்,தொடர்வதுமாய்
யுத்தம்...


1=சமூக உதவிக் காரியாலயம்.
2=பாலர் பாடசாலை.
3=மணமுறிவு.
4=பதிவுக்காரியாலயம் அல்லது கச்சேரி.




ப.வி.ஸ்ரீரங்கன்

(எல்லாக் காலத்துக்குமானவொரு புனைவு.)

Saturday, January 06, 2007

என்ன சொல்கிறீர் கொழுவி?

கொழுவி,என்னைப்பற்றிய உங்கள் கோஷ்டிகளின் எந்தப் பதிவுக்கும் நான் பதிலளிப்பதில்லை என்ற முடிவோடிருக்கிறேன்.

எனினும், உம்மைப் பேடியென்றெழுதியது பற்றியும்,நீர் என்னைக் குறித்து- புலிகளின் கள நிலைவரம் பற்றிய பார்வையையும் வைத்தெழுதியது பற்றி, நான் சில வற்றைச் சொல்வது அவசியம்.

முதலில் பேடியென்று உம்மை கடிந்தது ஏன்?

நீர் சுட்டியது போன்ற என்னைக் குறித்த உமது எதிர் எழுத்துக்கல்ல!

அதை நான் உண்மையில் எதிர்க்கவில்லை.

அதில் நீர் குறித்த எதையும் தவறாக எடுக்கவில்லை.நீர் போடும் பதிவுகளை முதலில் வாசித்து உமது சகோதரத்துவக் கண்ணோட்டத்தை விரும்புவது வழமை.


ஆனால் உம்மைக் கடிந்தது எதனால்?


நீரே கிண்டலாக எழுதிய பின்னூட்டுக்காகவே!

//At Sun Dec 24, 11:33:00 AM 2006, கொழுவி said...
ஏற்கனவே புலிகளின் பாசிசத்துக்கு Google துணை போகுது எண்டு பெடியன்கள் எழுதியிருந்தவங்கள். ஒரு வேளை புலிகள் தான் Google காரரிடம் சொல்லி உங்கடை பதிவோடை விளையாடுறாங்களோ தெரியாது.. வடிவா விசாரிக்கவும்.//



கூகிள் கணக்கிற்கு நான் மாறிய பின்,பதிவினில் பல தவறுகள் நேர்ந்தன.

அது குறித்தெழுதியதைப் பெடியன்களின் பதிவினில் வந்த நையாண்டியைக் காரணம் காட்டிப் புலிகள் அழித்ததாகக் கிண்டல் செய்தீர்.இதனால் எனக்கு உம்மையும் திட்ட மனம்கூடியது.எனவே திட்டினேன்!


அடுத்துப் புலிகள் என்னைத் தேடுவது குறித்து...
நீர் நெடுகக் கிண்டல் போடுகிறீர்.

அது குறித்து உமக்கு என்ன தெரியும்?
அல்லது எவரிடம் விசாரித்தீர்?

உமக்கு ஏதாவது தெரியுமா?

கடந்த மேதினத்தில் எனக்கும் புலிப்பொறுப்பாளர் சங்கருக்குமிடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தின் பின்பு,அவர்களால் பதியப்பட்ட "எட்டப்பா"டொட்.கொம் எனது புகைப்படத்தைப் போட்டு,என்னைத் துரோகியாக்கியது ஊரறிந்தது.

அதன் பின்பு,வூப்பெற்றாலில் இருக்கும் ஸ்ரீரங்கனை கிவுல்ஸ்பேர்க்கிலிருக்கும் தமிழர்கள் இன்ரநெற் கபேயில் நகல் எடுத்து வைக்கப்பட்ட எனது படத்தோடான எட்டப்பர்(ஓபர்கவுசன் புலிப் பொறுப்பாளிரின் பதிவு)இணையத்தின் எழுத்தோடு,என்னிடமே வந்து,"அண்ணே உங்களையும் இப்படிப் போட்டுள்ளான் உண்மையா"வென வினவியவர்கள் பலர்.

அவர்களுள் என்னோடு வேலை செய்த கிவுள்ஸ்பேர்க் பொய்யாமணியும் ஒருவர்.

அதைவிட கிவுள்ஸ்பேர்க் பொறுப்பாளர் சங்கர் என்னைத் தேடியதும்,என் சகலனிடம்-அவர் தொழில் புரியும் தொழிற்சாலையில் தனது பரிவாரங்களுடாக எச்சரிக்கை-தண்டனையென்று வாக்கு வாதப்பட்டதும் உண்மை.அதைவிட இந்தச் சங்கர் இன்றோ மக்களிடம் பெற்ற நிதியினை மோசடி செய்து, தலை மறைவாகிய இன்றைய கதையும் எமக்குத் தெரியும்.அது போலவே எட்டப்பர்.கொம் நெருடலாக மாறி, இன்னும் சொறியிற வேலையும் தெரியும்.இது குறித்து வடிவாக உமது இயக்கத் தொடர்பூடாக் விசாரித்து, எழுதும்.

இல்லையேல் என்னிடம் வரவும்.

நாம் உங்கள் புலிப் பொறுப்பாளர்களோடு சந்தித்து உண்மையைக் கதைப்போம்-அறிவோம்.இதைவிட்டு, திரைக் கதை எழுதியதென்று இட்டுக் கட்டாதேயும்.இதைத் தெளிவுறுத் தெரிவேண்டுமாக இருந்தால் நீர் என்னோடு தொடர்பு கொண்டு,ஜேர்மனிக்கு வாரும்,புலிகளைச் சந்திப்போம்.இதைவிட்டுக் கேவலப்படுத்த முனைவது அறிவுடையதாகத் தெரியவில்லை!

இந்த விஷயமாக நான் எவருடனும் ஓபகவுசன் புலிப் பொறுப்பாளர் குறித்தும்,அவருடன் நான்பட்ட வாக்குவாதம் குறித்தும்-அந்தச் சங்கரை வைத்தே விவாதிகத் தயாராக இருக்கிறேன்.நான் மெளனமாக இருப்பது இந்தப் புலிப் பிரச்சனையை மறப்பதற்கே!உமக்கு அது அவலாக இருந்தால் வாரும், பல உண்மைகளை அவர்களுடாகவே கதைத்துத் தெரிந்து கொள்வோம்.இதைவிட்டு,சுவிசிலிருந்து கொண்டு,கை நீட்டும் வேலையைச் செய்தீர் நண்ப!
அடுத்து, என்ன சொல்கிறீர்?


"சிறிரங்கன் அகரன் போன்ற பதிவர்களுக்கிடையிலும் இராயகரன் போன்ற பதிவர்களுக்கிடையில் என்னளவில் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. இராயகரனின் எழுத்துக்களில் நேர்மை இருக்கும். வாசிக்கும் போது அதனை புரிந்து கொள்ள முடியும்.


ஆனால் மற்றவர்கள் தாம் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களோ அது நடக்கும் வரை காத்திருந்து நடந்ததும் அது பற்றி காரசாரமாக எழுதுகிறவர்களாகத் தான் தோன்றுகிறார்கள். இதோ கிழக்கில் புலிகளுக்கு, அல்லது ஒட்டு மொத்தமாகவே புலிகளுக்கு இராணுவத் தோல்வி ஏற்பட்டு விடும் என்பதனை முன் கூட்டியே இவர்கள் தீர்மானித்த பிறகு மிகுந்த மன உற்சாகத்துடன் எழுதித் தள்ள காத்திருக்கும் இவர்கள் இது போலவே இன்னும் நிறைய விடயங்களில் ஒன்று படுகிறார்கள்."


இங்கே மடத்தனமாகத் தனி நபரான என்னைப் புலிகளுக்கு மீண்டும் கை நீட்டும் காரியத்தில் ஈடுபடுகிறீர்.

கிழக்கில் புலிகளுக்குத் தோல்வி வந்தால்,அதையொட்டி மகிழ்வது இலங்கையரசுக்குக் காவடி தூக்கும் புலிகளுக்கு(கருணா குழு)மற்றும் இயக்கங்களுக்கு உகந்ததாக இருக்கலாம்.எனக்கல்ல.என்னையும் இதில் இணைக்கும் உமது நரித்தனமான நயவஞ்சக எழுத்தை இத்துடன் நிறுத்தும்.இது மற்றவனுக்குப் பொட்டிட முனையும் கைங்காரியம்!

எனது எழுத்துகளுக்கும் அகரனுக்கும் இணைப்பிட முனைந்த உமக்கு எழுத்துகளின் பரிணாமம் புரியாதிருப்பதுதாம் காரணமா அல்லது தீர்த்துக் கட்டுவது நோக்கா?

இன்னும் கொஞ்சம்:பிரபாகரனோ அல்லது பாலசிங்கமோ தனிப்பட்டவர்களாக இருக்கும்போது நமக்கு விமர்சிக்க அவசியம் இருக்காது.அவர்கள் இருவரும் தமிழர்களின் இதுநாள் வரையான அனைத்து அழிவுகளுக்கும் பொறுப்பான அரசியலில் தலைவர்களாக இருப்பதால் அதை நாம் விமர்சிப்போம்.மக்களைக் கொல்பவர்களை மோடன் எண்டுதாம் கூறுகிறோம்.ஆனால், அவர்களை அழித்துக் கொன்றிடவேண்டுமென்று கூறவில்லை!அவர்களோ மக்களைக் கொல்வதில் தேச நலன் என்றும்,துரோகியென்றும் கதைவிட்டு வருவது நமக்குப் புரிந்ததுதாம்.

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...